Megathootham-16

Megathootham-16

மேகதூதம் 16

 

 

            பிரபு காலையில் எப்போதும் போல ஆபீசுக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, காமாட்சி அவனுக்கு டிபன் செய்து கொடுத்தார்.

 

நேற்று முழுவதும் யோசனையில் இருந்தவர் இன்று சுறுசுறுப்பாக எப்போதும் போல வேலை செய்ய, பிரபுவிற்குப் புரிந்தது, அவரது மனது தெளிந்து விட்டதென்று.

 

“அம்மா..” அடுப்படியில் தோசை செய்து கொண்டிருந்தவரின் அருகில் வந்து நின்றான்.

 

“என்ன டா, இன்னும் ரெண்டு வேணுமா?” கிண்டலாக கேட்க,

 

“அதில்ல மா. என்ன கேஷுவலா  இருக்க?”

 

“வேற எப்படி இருக்க சொல்ற?

 

“நேத்து ரொம்ப யோசிச்சுட்டு இருந்தியே..இன்னிக்கு தெளிவா இருக்க, என்ன முடிவு பண்ணிருக்க?” நேரடியாகக் கேட்டான்,

 

“இங்க பாரு டா. இதுல முடிவெடுக்க ஒண்ணுமே இல்ல. அவரு வந்ததும் உடனே அவர சேத்துக்கணுமா? உனக்கு உங்க அப்பாவ பாத்ததும் பாசம் பொங்கிடுச்சோ?” சற்று கடுப்பானார்.

 

“அவரோட முகமே எனக்கு எப்பவோ பாத்தா போட்டோவ வெச்சு தான் அடையாளம் கண்டுகிட்டேன். என் லைஃப்ல அவரோட பங்கு ரொம்ப கம்மி. உனக்கு அப்பறம் தான் எல்லாமே. நீயும் அக்காவும் எவ்வளோ கஷ்டப்படீங்கன்னு புரிஞ்சிக்கற வயசு கூட அப்போ எனக்கில்ல. அதுனால அவர் மேல பாசம் பொங்கற அளவு எனக்கு எதுவும் தோனல. நான் உன்னோட முடிவு என்னனு கேட்டேன். இத்தனை நாள் அப்பா இல்லாம நீ ரொம்ப கஷ்டப் பட்டிருப்ப. வெளிலயும் சரி மனசுக்குள்ளயும் சரி. அவர் இல்லாததால தான் அக்காக்கு கூட கல்யாணம் தட்டி போய்கிட்டே இருந்தது.

 

இப்போ நீ அக்காவ நினச்சு கூட அவர சேத்துக்கலாம். அதுனால தான் கேக்கறேன். நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம் தான்.” அவன் பாட்டுக்கு சொல்லிவிட்டு , கல்லில் காய இருந்த தோசையை எடுத்துப் போட்டுக் கொண்டான்.

 

அவனை இத்தனை நாள் விவரம் இல்லாதவன் என்று நினைத்திருந்தவருக்கு, அவனது தெளிவான பேச்சு ஆச்சரியத்தை அளித்தது. அது ஒரு புறம் இருந்தாலும், அவனுக்கு பதில் சொல்லும் பொருட்டு,

 

“ அவர திரும்ப சேத்துக்கற முடிவை நான் எடுக்கல. இத்தனை நாள் வாழ்ந்தவளுக்கு இனிமேலும் வாழத் தெரியும். நீயா எதுவும் நினைச்சுக்காத. அவரு திரும்ப வீட்டுக்கு வந்தா உள்ள சேக்காத.” சொல்லிக்கொண்டிருக்கும் போதே காலிங் பெல் அடித்தது.

 

காமுவிற்கு இதயம் ஏனோ வேகமாக துடித்தது.

 

அவசரமாக ஓடிப் போய் கதவின் துவாரத்தின் வழியாக எட்டிப் பார்க்க, அங்கே எதிர் வீட்டு பையன் நின்று கொண்டிருந்தான்.

 

மூச்சை இறக்கி விட்டவர், கதவைத் திறந்து “ என்ன கதிர்?” என்றார்.

 

“ஆண்ட்டி உங்க வீட்டுக்கு காய்கறி வேணுமான்னு அம்மா கேட்டுட்டு வர சொன்னாங்க. கீழே வண்டி வந்திருக்காம்.” தகவல் சொல்ல,

 

“ இப்போ வேணாம்னு சொல்லிடு தங்கம், ஆண்ட்டி சாயந்திரம் வரப்ப வங்கிக்கறேன்னு சொல்லு. தேங்க்ஸ் பா.” என்றார்.

 

“ஆண்ட்டி உங்க வீட்டு பெல்லை இன்னொரு வாட்டி அடிக்கட்டுமா?” கெஞ்சினான் பொடியன்.

 

“ஏன் கதிர்?” சிரிப்பு வந்தது காமுவிற்கு,

 

“உங்க வீட்டு பெல்லில பாட்டு பாடுது, எங்க வீட்டுது பல்லி கத்துது எனக்கு புடிக்கல. உங்களது தான் நல்லா இருக்கு அதான்.” சொல்லிக்கொண்டே இரண்டு முறை அடித்தான்.

 

காமு சரியென உள்ளே சென்றுவிட,

 

பிரபுவிற்கு எரிச்சல் வந்தது.

 

“டேய் கதிர். தல கீழ கட்டி தொங்க விடவா?” உள்ளிருந்தே குரல் கொடுக்க,

 

ஓடிவிட்டான் அவன்.

 

ஆனால் கீழே நடந்து கொண்டிருப்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

 

காலையில் காமு கிளம்பும் முன் அவரைப் பார்த்துவிட வேண்டுமென்று கிளம்பி வந்திருந்தார் பாண்டியன்.

 

முழுக்கை வெள்ளை டிஷர்ட்டை முக்கால் கை வரை இழுத்துவிட்டு, நீல நிற ஜீன்ஸ் பேன்ட் போட்டு அந்த வயதிலும் வசீகரமாக அந்த அப்பார்ட்மென்ட் வாசலில் வந்து நின்றார்.

 

வம்புக்கென்றே அலையும் சில பேர் நேற்றே அவரைப் பார்த்திருக்க,

 

“காமாட்சி வீட்டுக்கு வந்தீங்களா?” என அங்கேயே அவரை மடக்கினாள் எதிர் வீட்டு ஆண்ட்டி.

 

“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்? உங்கள இதுவரை பாத்ததில்லையே?” இன்னொருத்தியும் சேர்ந்து கொள்ள,

 

“சார் நீயே வேணும்னா காய் எடுத்துட்டு போ சார். அவங்க வந்து வாங்க லேட் ஆகுது. நான் நாலு எடத்துக்கு போகணும்” என்றான் கறிகாய்க்காரன்.

 

‘காமுவை ஏற்றுக் கொள்ள வைக்க இதுவும் உதவும்’ மனதில் திட்டம் போட்டவர். வண்டியில் இருந்த சில காய்களை பார்த்து பொறுக்கிக் கொண்டிருந்தார்.

 

“என்ன சார் பதில் சொல்லாம இருக்கீங்க?” மீண்டும் துருவினாள் எதிர்வீட்டுக்காரி.

 

“நான் யார்ன்னு நீங்க நெனைக்கறீங்க?” சிரித்தபடியே பாண்டியன் வம்பளக்க,

 

“யாரா இருந்தா இன்னா சார் ..பாக்க சோக்காகீற ..” காய்கறிக் காரன் புகழ்ந்தான்.

 

“ஹா ஹா…” பாண்டியன் அழகாக சிரித்தார்.

 

“அட சொல்லுங்க சார். இந்த பிளாட்ல இருக்கற எல்லாரும் ஒரே குடும்பம் போல தான். எங்ககிட்ட சொன்னா என்ன” ஆளாளுக்குத் துறுவ,

 

“நான் மிஸ்டர் காமாட்சி” என்றார் கம்பீரமாக.

 

“அப்புடீனா சார்?” கறிகாய்காரன் குழம்ப,

 

மற்ற ஆன்ட்டிக்கள் வாய் பிளந்தனர். ‘காமுவுக்கு இவ்வளோ அழகான புருஷனா?’ ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் மறுபுறம் புகைந்தது.

 

“காமு இது வரை உங்கள பத்தி சொன்னதே இல்ல. வீட்டுக்காரர் வெளியூர்ல இருக்கறதா சொல்லிருக்காங்க. ஆனா இப்போ தான் இங்க வரீங்களா? ஏன் உங்களுக்குள்ள சண்டையா?” கறிகாய் வண்டி கதை பேசும் வண்டியாக மாறி இருந்தது.

 

“மிஸ்டர் னா இங்கிலீஷ்ல புருஷன்னு ஒரு அர்த்தமா சார். இவ்வளோ நாள் எனக்குத் தெரியாம போச்சே” புதிதாக ஏதோ கற்றுக் கொண்டதாக நினைத்துக் கொண்டான்.

 

“சண்டையெல்லாம் இல்ல. நான் வெளிநாட்டுல இருந்தேன். அதுனால என்னால இங்க அடிகடி வர முடியாத படி வேலை. இப்போ ரிடையர் ஆயிட்டேன்.” சுருக்கமாக கதை சொல்லி முடித்தார்.

 

கறிகாயை எடை போட்டு வாங்கியவர், அவனுக்கு பணம் கொடுக்க, “வேணாம் சார். மாசாமாசம் மொத்தமா பாத்துக்கறது தான். வரேன் சார்.” நடையைக் கட்டினான்.

 

“அப்போவே நெனச்சேன். வெளிநாட்டுக் காராங்க தான் இப்படி ட்ரிம்மா உடம்ப மெய்ண்டைன் பண்றாங்க. எங்க வீட்டுலயும் ஒன்னு இருக்கே! நாலு வேளை சாப்டுட்டு பண்ணி மாதிரி உடம்ப வெச்சிருக்கு.” ஆண்ட்டிக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

 

பாண்டியன் அப்பார்ட்மெண்ட்டுக்குள் செல்ல,

 

“ம்ம்.. காமு அதிர்ஷ்டக் காரி தான். கொஞ்சம் கூட வெளிநாட்டுல இருந்து வந்த கர்வமே இல்லாம பொண்டாட்டிக்கு காய் வாங்கிட்டு போறாரு. எங்க வீட்டுல இருக்கறது தண்ணி தீந்துடுச்சுன்னா, தண்ணி போடறவனுக்கு கூட போன் பண்ணாது. நம்ம தலை எழுத்து.” தங்களையே நொந்து கொண்டு சென்றனர்.

 

காமுவின் வீட்டு வாசலை அடைந்ததும், காலிங் பெல் அடித்தார்.

 

காமுவோ அது மீண்டும் கதிர் என்று நினைத்து, பிரபு அவனை மீண்டும் திட்டுவதற்குள் அவனை ஓடிவிடச் சொல்லி எச்சரிக்கலாமென்று கதவைத் திறந்தார்.

 

பாண்டியனைக் கண்டதும் எந்த ஒரு ஆர்ப்பாட்டமுமின்றி நிற்க, அதற்குள் எதிர் வீட்டு ஆண்ட்டியும் அங்கே வந்தார்.

 

பாண்டியனுக்கு நல்ல நேரம் தான்.

 

“காமு, இவரு தான் உங்க வீட்டுக்காரருன்னு சொல்லவே இல்லையே. காய் எல்லாம் வாங்கிருக்காரு பாரு, சீக்கிரம் உள்ள வை. அவன் குடுக்கற காய் இந்த ஊர் வெயிலுக்கு பத்து நிமிஷம் வெளில இருந்தாலே ஃப்ரை ஆயிடும்.” பாண்டியனுக்கு முன்னால் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு அவள் சென்று விட,

 

காமு இப்போது பார்வையால் தீயைக் கக்கிக் கொண்டிருந்தாள்.

 

வேறு வழியே இல்லாமல், “உள்ள வாங்க” பல்லைக் கடித்துக் கொண்டே சொல்ல, தயக்கமின்றி சென்றார் பாண்டியன்.

 

பிரபு அவரைப் பார்த்ததும் சற்று ஷாக் ஆக,

 

“ஆபீஸ் கிளம்பிட்டியா பிரபு?” சகஜமாகக் கேட்டார்.

 

பிரபு பதில் சொல்வதா வேண்டாமா என தாயைப் பார்க்க, அவர் கோபமாக இருப்பது புரிந்தது.

 

“ கிளம்பனும்” ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

 

“நீ கிளம்பு பிரபு” அவனை துறத்தினார் காமு. அவன் செல்லும் வரை எதுவும் பேசாமல் இருந்தார்.

 

பிரபு குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல், “பை” என்று கிளம்பினான்.

 

“ஹேவ் எ நைஸ் டே மை சன்” பாண்டியன் வாழ்த்தினார்.

 

கதவை மூடும் வரை பொறுமை காத்த காமாட்சி, அவன் சென்றதும்,

 

“என்ன டிராமா இதெல்லாம். இங்க இருக்கறவங்க கிட்ட நீங்க தான் என் புருஷன்னு சொல்லிட்டா நான் வேற வழி இல்லாம உங்கள ஏத்துப்பேன்னு நினைப்பா?” சீறினார்.

 

“ச்ச ச்ச அப்படி நினச்சு நான் சொல்லல. ஏற்கனவே நேத்து நான் வரப்ப ரெண்டு மூணு பேர் பாத்தாங்க. இனிமே அடிக்கடி வந்தா அவங்க தப்பா பேசக் கூடாதுல, அதுனால தான் சொன்னே. யாரும் அனாவசிய கேள்வி கேட்க மாட்டங்கல” அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார்.

 

“அனாவசிய கேள்வியா… அப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியே நான் பழக்கப் பட்டுட்டேன். தப்பா இனிமே பேசறதுக்கு என்ன இருக்கு. பதினாறு வருஷம் அனுபவிச்சாச்சு. பட்ட வலி நான் சாகற வரைக்கும் ஆறாது. இப்போ அதுக்கு நீங்க மருந்து போட பாக்கறீங்களா?” ஈட்டியால் அவரது நெஞ்சை குத்தினார்.

 

பாண்டியனுக்கு காமுவின் வேதனை புரிய , “என்னை கொல்லாத காமு. நீ அனுபவிச்சது ஜாஸ்த்தி தான். அதுக்கு தான் நான் திரும்ப வந்துட்டேன். மேலும் என்னை பாவம் செஞ்சவனா ஃபீல் பண்ண வைக்காத காமு. பிராயச்சித்தம் செய்ய ஒரு வாய்ப்பு கொடு.” நேற்று போல் இன்றும் கெஞ்சினார் பாண்டியன்.

 

“இங்க பாருங்க. இனிமே வீட்டுப் பக்கம் வர வேலை எல்லாம் வேணாம். எனக்கு டைம் ஆச்சு. வேலைக்குக் கிளம்பனும். வீட்டை பூட்டனும்” படபடக்க,

 

“வெளிய போ ன்னு சொல்றியா காமு?” பரிதாபமாகக் கேட்டார்.

 

காமுவிடமிருந்து பதில் வராது போகவே, இருக்கையிலிருந்து எழுந்தார்.

 

“இனிமேலும் நீ ஏன் வேலைக்கு போகணும். பசங்க தான் வளந்துட்டாங்களே, நிம்மதியா வீட்ல இருக்க வேண்டியது தான.” மனதில் பட்டதைக் கேட்டுவிட,

 

“எனக்கு இருக்கற ஒரே வென்ட் அவுட் இது தான். இதுவும் இல்லனா நான் பைத்தியம் ஆயிடுவேன்.” தன் பையை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்து நின்றார்.

 

வேறு வழியின்றி பாண்டியனும் வெளியே வந்தார்.

 

காமுவிற்கு ஆபீஸ் போனால் தான் மனம் சற்று மட்டுப்படும் என்று கிளம்பிவிட்டார்.

 

“நானும் உன் ஆபீஸ் வரை வரட்டுமா? நான் டிராப் பண்றேன். ஒரு நாள்.ப்ளீஸ்.” பாண்டியன் இறைஞ்சினார்.

 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் ஆட்டோ ல போய்க்கறேன். நீங்க உங்க ஊற பார்க்க கிளம்புங்க” விடு விடு வென நடையைக் கட்டினார்.

‘அவ்வளவு சீக்கிரம் உன்ன விட்டு போறதுக்கா வந்தேன்!’ பின்னாலேயே அவருக்குத் தெரியாமல் தன் காரில் தொடர்ந்தார்.

 

அவர் உள்ளே செல்லும் வரை மறைந்திருந்தவர், பிறகு தன் காரிலிருந்து இறங்கினார்.

 

அங்கிருந்தவர்கள் அவரை ஆச்சரியமாகப் பார்க்க,

 

வாட்ச்மேன் “யார பாக்கணும் சார்” என்றான்.

 

“காமாட்சி இருக்காங்களா?” தெரியாதவர் போலக் கேட்டார்.

 

“இப்போ தான் சார் வந்தாக. அவங்கள கூப்டட்டுமா?”

 

“இல்ல வேண்டாம். அவங்க கிட்ட இந்த கவர குடுத்துடுங்க” தன் கையில் இருந்த ஒரு கவரை நீட்டினார்.

 

அவன் பெயர் கேட்பதற்குள் சென்று விட, அவனோ அதைக் காமுவிடம் கொடுத்தான்.

 

“என்ன இது?” காமு அதை வாங்கிக் கொண்டு ஏற்க,

 

“ஒருத்தர் வந்து குடுத்தாரு மேடம். ஆனா பேர் கேட்கறதுக்குள்ள போய்ட்டார்” என்றான்.

 

கவரைப் பிரித்ததும் அது ஒரு கிரீடிங் கார்ட் என தெரிந்தது.

 

மலர் கொத்து படமும் அதன் கீழே ஐ அம் சாரி என்ற வாசகமும் இருந்தது.

 

‘சின்ன புள்ளைங்க மாதிரி இன்னும் என்ன கார்ட் குடுத்துகிட்டு கருமம்’ மனதிற்குள் வைந்த்தாலும், அதைப் பிரித்து விட,

 

‘ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன், உனை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா!’ ஆண் குரலில் பாடும் அந்த வரிகள் ஒலித்தது.

 

அது சத்தமாக அங்கிருப்பவர் அனைவர்க்கும் கேட்டுவிட, எல்லோரும் காமுவைப் பார்த்தனர்.

 

அங்கிருப்பவர்கள் காமுவிற்கு நெருக்கம் என்பதால், அவரின் கதை தெரியும்.

 

அனைவரும் அருகில் வந்து “பாண்டியன் வந்துட்டாரா?!” துக்கம் விசாரிப்பது போல கேட்க,

 

காமுவிற்கு அவர் மேல் இன்னும் எரிச்சல் வந்தது.

 

இதில் அவரை ஏற்றுக் கொள்ளும்படி சிலர் அறிவுரையும் கூற, அந்த கார்டை கிழுத்துப் போட்டார்.

 

கோபத்தில் வெளியே வந்தார். வழக்கமாக அவர்கள் டி காபி குடிக்கும் கேண்டீனுக்கு வர, பாண்டியனும் அங்கு தான் அமர்ந்திருந்தார்.

 

“ஒரு காபி கொண்டு வாங்க” என்றுவிட்டு அருகில் இருந்த மேசையில் அமர்ந்தார். பின்னால் பாண்டியன் அவருக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தது தெரியாமல்.

 

அப்போது தான் அவரது செல்போன் ஒலித்தது. புது எண்ணாக இருந்தது. அதுவும் ஃபாரின் நம்பர்.

 

ஒரு வேளை அஞ்சலி எண்ணை மாற்றிவிட்டாளா என்று எடுத்தவர்,

 

“ஹலோ” என்றது ரிஷியின் குரல்.

 

“ஹலோ யாரு?” என்றார் தயக்கத்துடன்.

 

“ஆன்ட்டி என் பேரு ரிஷி. நானும் உங்க பொண்ணு அஞ்சலியும் ஒரு ஆறு வருஷமா காதலிக்கறோம். அவ பெங்களூர்ல இருந்தப்ப தான் எங்களுக்குள்ள பழக்கம் ஆச்சு.” என்று தொடங்கி நடந்து முடிந்த பிரச்சனைகளையும் சொல்லி, இன்று இருவரும் ஒரே வீட்டில் இருப்பதை மட்டும் கூறாமல் தவிர்த்தான்.

 

அவன் சொல்லச் சொல்ல மலைப்பாக இருந்தது காமுவிற்கு.காமுவின் போன் சற்று பழைய மாடல் என்பதால், அதன் உபயத்தில் நடந்த அனைத்தையும் பாண்டியனும் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்.

 

காமு என்ன சொல்வதென்று தெரியாமல்,

 

“இது வரைக்கும் அஞ்சலி என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல பா” குழப்பத்தில் இருந்தார்.

 

“அதான் சொன்னேனே ஆண்ட்டி, நான் எங்க இருக்கேன்னு அவளுக்குத் தெரியல, அவ எங்க இருக்கான்னு எனக்கு தெரிஞ்சாலும் என் அம்மா பண்ண கூத்துல நானும் விடாப்படியா இருந்துட்டேன். இப்போ எங்களுக்குள்ள எல்லா பிரச்சனையும் தீர்ந்தது. உங்க சம்மதம் கிடச்சா போதும். நான் எங்க அம்மாவ சமாளிச்சுப்பேன்.” அவன் அவளை இப்போதே சம்மதம் சொல்லுபடி செய்து கொண்டிருக்க,

 

என்ன சொல்வதென்று புரியாமல் திணறினார் காமு.

 

அப்போது சரியாக பின்னாலிருந்து அவரது போனைப் பிடுங்கினார் பாண்டியன்.

 

“உங்க அம்மா நம்பரை எனக்கு அனுப்புங்க..நான் பேசிக்கறேன்..” தன்னுடைய எண்ணை அவனுக்குக் கொடுத்தார். ரிஷி ஒரு நொடி ஆச்சரியம் அடைந்தான்.

 

“ஹலோ அங்கிள். நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?” இப்போது பாண்டியன் ஆச்சரியம் அடைந்தார்.

 

“என்ன பத்தி தெரியுமா? அதுவும் நான் இங்க வந்தது..” அவர் இழுக்க,

 

“பிரபு நேத்து அஞ்சலிக்கு பேசறப்ப தெரிஞ்சுக்கிட்டேன்” சுருக்கமாக சொன்னான்.

 

“குட். இனிமே எனக்கு போன் பண்ணுங்க. நாம பேசுவோம். காமுவுக்கு இப்போ எதையும் டக்குனு முடிவெடுக்கும் மனநிலை இல்ல.” பொண்டாட்டியின் மனமறிந்து சொல்ல,

 

“எஸ்.. ஐ நோ.. அதுனால தான், அவங்களுக்கு அதுலேந்து கொஞ்சம் வெளிய வர இந்த விஷயத்தை இப்போ சொன்னேன். சோ உங்க விஷயமும் கொஞ்சம் தள்ளி வைக்கப் படுமில்லையா..” சமயோஜிதமாக ரிஷி நினைத்ததை கூறினான்.

 

“வெல்…கிரேட்.. ஐ லைக் யூ” பாண்டியன் மெச்சினார்.

 

“ஆனா அஞ்சலி இன்னும் உங்க மேல..” ரிஷி சொல்லத் தயங்க,

 

“ஐ நோ.. அது வேற டிபார்ட்மென்ட்..நான் அத பாத்துகறேன். நாம அப்பறம் பேசுவோம்.”

 

“பை அங்கிள்” வைத்துவிட்டான்.

 

“நாம நினச்சது மாதிரி இல்ல.. இவரும் நல்லவர் தான் போல..அப்பறம் பேசுவோம்” என அவர் சொன்ன எண்ணை குறித்து வைத்துக் கொண்டு, அவருக்கு ஒரு மெசேஜும் அனுப்பி வைத்தான்.

 

அத்தனை  நேரம் அவரைக் கோபப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த காமாட்சியை, பாண்டியன் எப்படி மறந்தார் என்று தான் புரியவில்லை.

 

அவர் பேசி முடித்ததும் கையிலிர்ந்து போனைப் பிடுங்கிக் கொண்டு ஆபீசுக்குள் நுழைந்தார்.

 

“காமு..” பாண்டியனின் குரலுக்கு அங்கே ஆளில்லை.

 

போனவேகத்திலேயே திரும்பி வந்தவர், “வீட்டுக்கு வாங்க” என்று விட்டு ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டார்.

 

உடனே வால் பிடித்தபடி அவரும் தன்னுடைய காரில் சென்றார்.

 

வீட்டிற்குள் வந்ததும் கட கட கடவென ஐஸ் வாட்டரை குடித்து, பொங்கிய கோபத்தை சற்று கட்டுப் படுத்தினார்.

 

தட்டும் வாய்ப்பை பாண்டியனுக்குக் கொடுக்காமல் கதவைத் திறந்தே வைத்திருந்தார். அடுத்த இரண்டு நிமிடத்தில் பாண்டியனும் உள்ளே வந்து கதவை மூடினார்.

 

‘நிச்சயம் தாம் தூம் என்று குதிக்கப் போறா’ என்று நினைத்தவருக்கு மாறாக, அமைதியாகவே இருந்தார் காமு.

 

“உக்காருங்க”

 

அவரும் எதிரே வந்து அமர்ந்தார்.

 

“உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்தே வராது. புரியுதா? நீங்க அன்னிக்கு போறேன்னு சொன்னப்ப நான் உங்கள தடுக்கவே இல்ல. ஏன்னா எப்போ நீங்க விட்டு போகணும்னு நெனசீங்களோ, அப்போவே உங்க மனசும் எங்கள விட்டு போய்டுச்சுன்னு அர்த்தம். இனிமே அது நிச்சயம் ஒட்டாது.” காமு ஆரம்பிக்க,

 

“ நீயும் நானும் நிம்மதியா சந்தோஷமா தான் வாழ்ந்தோம் காமு. நான் போகணும்னு  முடிவ எடுக்கறதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி கூட, நாம எவ்வளவு அன்பா இருந்தோம்னு உனக்கு நல்லா தெரியும்.அப்படி இருந்தும் நான் போனேன்னா அதுக்கு காரணம் இருக்கும்னு நீ புரிஞ்சுப்பன்னு நான் எதிர்ப்பார்த்தேன். உங்க மேல பாசம் இல்லாம நான் விட்டு போகல. வச்ச பாசத்தால நம்ம பியூச்சருக்கு பணம் சேர்க்க முடியாம போயிடுமோன்னு தான் நான் போனேன். அத புரிஞ்சுக்கோ.” பதில் சொல்ல,

 

“நீங்க சொல்ற காரணத்த யார் கிட்ட வேணாலும் சொல்லிப் பாருங்க. சிரிப்பாங்க. குடும்பத்த விட்டு போனா தான் பணம் சேர்க்க முடியுமா?”

 

“ஏன் இப்போ எத்தனையோ பேர் , குடும்பத்த விட்டு வெளிநாட்டுல வேலை பார்க்கலையா?”

 

“அவங்க உங்கள மாதிரி ஒரேடியா போகல.”

 

“அதுக்கும் காரணம், நான் உன்னை நேசிக்கறது தான் காமு.” குரல் கலங்கியது.

 

காமுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 

“நம்பற மாதிரி எதாவது சொல்லுங்க”

 

“உன்ன நான் பாத்தா கண்டிப்பா நான் திரும்பிப் போக மாட்டேன். அதுனால தான் நான் வரவே இல்ல.நம்ம பிள்ளைங்க பியூச்சர்..”

 

 

 

“போதும் நிறுத்துங்க. வளர்ற கொழந்தைங்க நல்லா வளர வேண்டிய சமயத்துல போயிட்டு, இப்போ அவங்களே அவங்க வாழ்க்கைய பாத்துக்கற அளவு வளந்தப்பறம் அவங்க பியூச்சர்க்கு நீங்க எதுவும் செய்ய வேண்டாம். அதுக்கு அவசியமும் இல்லை.”

 

 

 

“இப்போ நம்ம பொண்ணுக்கு கல்யாணம் செய்யணும். தெரிஞ்சோ தெரியாமலோ அவ ஆசைபட்ட பையன கட்டி வைக்கணும்னா அதுக்கு மொதல்ல நாம எதையும் ஃபேஸ் பண்ற லெவல்ல இருக்கணும். இப்போ அந்த பையன் சொன்னத கேட்டல. அவங்க அம்மா நம்ம குடுபத்தை நினச்சு தான் நம்ம பொண்ண சேர விடாம செஞ்சிருக்காங்க.

 

இப்போ நம்ம நிலமைய பாத்தா கண்டிப்பா சம்மதிப்பாங்க. சம்மதிக்கறது என்ன, கால்ல விழுந்து பையன கட்டிகுடுப்பாங்க” நியாயம் பேச,

 

 

 

“இப்படி ஒரு நிலைமை வரதுக்கு காரணமே நீங்க தான.” சுள்ளென சுட,

 

“அதுக்கு தான் அத நானே சரி பண்றேன்னு சொல்றேன்.” உடனே பல்டி அடித்தார்.

 

 

 

‘லூச ஆ நீ’ அந்த அளவுக்கு பாண்டியனைப் பார்த்தார் காமு.

 

“இங்க பாரு. நீ என்னை இப்போ ஏத்துக்க வேண்டாம். என்னோட கடமைய செய்ய எனக்கு சந்தர்ப்பம் குடு. எனக்கும் அவங்க பசங்க தான். அவங்களக்கு கல்யாணம் பண்ணி வைக்கற பொறுப்பு எனக்கும் இருக்கு. அது வரைக்கும் நான் வந்து போயிட்டு தான் இருப்பேன்.” இனிமேல் அவரிடம் கெஞ்சினால் ஒன்றும் ஆகாது என்று இப்படி அஞ்சலியின் கல்யாணத்தை முன் நிறுத்தினார்.

 

காலையில் பிரபுவும் இதையே தான் வேறு மாதிரியாக சொன்னான். அஞ்சலியின் கல்யாணத்திற்காக அவரை ஏற்றுக் கொள்வதானால் சரியென்று.

 

அவருக்கும் பிள்ளைகளின் பொறுப்பு இருக்க வேண்டும் தான். உடன் இல்லை என்பதர்க்காக இவர் தான் தந்தை என்பது மாறிவிடவா போகிறது.

 

காமுவின் சிந்தனை இப்போது வேறு திசையில் சென்றது.

Leave a Reply

error: Content is protected !!