mem219

மறந்துபோ என் மனமே(2) – 19:

க்ரிஷ் மனதில் ஒன்றை மட்டும் நினைத்துக்கொண்டான். ‘சுஷிக்கு தேவையான நேரத்தை அவளுக்கு தரவேண்டும்’ என்று.

அன்றைய தினம் இருவரும் வெளியில் கழித்தனர். இரவு இருவரும் இந்திய பயணத்திற்காக ஆயத்தமானார்கள்.

சுஷி முகத்தில் உற்சாகத்துடன்… “க்ரிஷ் நம்மகிட்ட இருக்க சேவிங்ஸ் யூஸ் பண்ணிக்கலாம். எப்படியோ ஆண்ட்டி அங்கிள் என் வீட்லயும் சொல்லிட்டாங்க. சோ இனி நம்ம ப்லான்ஸ் என்னனு தான் யோசிக்கணும்”

பின் “ஹோட்டல் ரூம் கண்ஃபர்ம் ஆயிடுச்சுல்ல” அவள் கேட்க…

“ஹ்ம்ம்… ட்வின் ஷேரிங் ஒகே தானே? இல்ல தனி ரூம்ஸ் போடவா சுஷி?”

“ட்வின் ஷேரிங் போதும். மொதல்ல நம்ம ஆண்ட்டி அம்மாவ பாக்கபோறமா க்ரிஷ்?”

“ஆமா சுஷி. பாட்டி, மாமா பாருவோட அண்ணா, அத்தை எல்லாம் சென்னைல தான் இருக்காங்க”

“சோ ஒரு ரெண்டு மூணு நான் சென்னை… அப்புறம் திருச்சில இருக்க இன்னொரு தாத்தா பாட்டி. அப்படியே அங்கேயிருந்து மதுரைல ப்ரியா கல்யாணம். இது முடிஞ்சப்புறம் எங்க போகலாம்னு டிசைட் பண்ணலாம்” என்றான் பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டு.

“ஹ்ம்ம் எனக்கு தான் அங்க பார்க்க யாரும் இல்ல. எங்க வீட்ல கேக்கறதுக்கு கேக்காமலே இருக்கலாம். அத விடு” கொஞ்சம் வருத்தத்துடன் சொன்ன சுஷி, சற்று நிறுத்தி…

“எனக்கு இந்தியன் வியர் அங்க போய் எடுக்கணும் க்ரிஷ். இந்த டிரஸ்லாம் போட்டுட்டு எப்படி பாட்டிலாம் பாக்கறது. இப்போ ஜீன் டீ மட்டும் எடுத்துக்கறேன்”

“கண்டிப்பா சுஷி. பட் நீ இதெல்லாம் போட்டுட்டாலும் அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க. பாரு அம்மா ஆச்சே” என்றான் சிரித்துக்கொண்டு.

பின், “அப்புறம் நான் இந்த கிடார் எடுத்துக்கவா. ரொம்ப நாள் கழிச்சு ஏதோ ஒரு நல்ல ஃபீல். It brings back my old memories” க்ரிஷ் கேட்டவுடன், புன்னகையுடன் சரி என்றாள் சுஷி.

——-

இருவரும் இனிதே இந்திய பயணத்தைத் துவங்கினர். அடுத்த 22 மணிநேரத்திற்குப் பின் சென்னை வந்தடைந்தனர்.

ஹோட்டலில் இருந்து அனுப்பிய டிரைவர் இருவரையும் pick up செய்துகொள்ள, ஹோட்டல் வந்தடைந்தனர்.

கொஞ்ச நேர ஓய்விற்கு பின் பக்கத்தில் இருந்த Soch ஷோரூம் சென்றனர் அவளுக்கு தேவையான உடைகள் எடுக்க.

சுஷி உடைகளை எடுத்துக்கொண்டு ட்ரை செய்ய செல்ல… அவன் அங்கிருந்த மற்ற உடைகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

“க்ரிஷ் இது நல்லா இருக்கா…” என்று கேட்டுக்கொண்டே வந்த சுஷியை திரும்பி பார்த்த க்ரிஷ், ஒரு சில நொடிகள் கண்கள் விரிந்து அப்படியே நின்றான்.

“எப்படி இருக்கு” என்று அவன் முகத்தின் முன் கைகளை ஆடி கேட்டாள்.

அதில் தன்னிலைக்கு வந்த க்ரிஷ், அவன் வழிந்ததை மறைக்க “ஹ்ம்ம் நல்லா இருக்கு. பரவால்ல சுஷி நீ கூட ஹாட் இந்தியன் சிக் போல இருக்க” அவன் சொன்னவுடன், தன்னை கிண்டல் செய்கிறான் என்று முறைத்துக்கொண்டே அடுத்த உடையை ட்ரை செய்ய சென்றாள்.

நீண்ட நாட்கள் கழித்து இந்திய உடையில் அவளை பார்க்கிறான். அந்த அழகிய உடை அவளுக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. பெண்மைக்கே உரிய அழகை முதன்முதலாக அவளிடம் பார்த்தான். இதற்கு முன் அவளை அப்படி பார்க்கத் தோன்றவில்லை. இப்போது ஏற்பட்ட மனமாற்றம், அதனால் ஏற்பட்ட தடுமாற்றம் அவளின் அழகை ரசிக்க வைத்தது.

அவள் சென்ற பின்னும் அவள் முகம் கண்முன்னே தெரிந்தது. எப்பொழுதும் துருதுருவென பரபரக்கும் கண்கள், பற்களை காட்டி சிரித்தால் தான் அழகு என்பதற்கு எதிர்மறையாக அவளுடைய சிரிப்பு, நலிமான உடல் அமைப்பு என்று அவன் மனம் அலைபாய…

மற்றொரு உடை அணிந்துகொண்டு அவன் முன் வந்து நின்றாள். அதில் இன்னமும் அழகாகத் தெரிந்தாள் அவனுக்கு. கடையில் இருக்கும் சிலரின் கண்கள் அவளை நேராகவோ அல்லது ஓரக்கண்ணில் பார்த்தவாறோ இருந்தது.

அதில் இரு ஆண்மகன்கள் “பாஹ் யார்ரா அந்த foreign figure” க்ரிஷ் காதுப்படவே ரசித்தனர். அதை கேட்டவுடன் க்ரிஷ் திரும்பி அவர்களை பார்த்த பார்வையே போதுமானதாக இருந்தது, அவர்கள் அந்த இடத்தில் இருந்து நகர்வதற்கு.

ஒருவழியாக தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு இருவரும் அவனுடைய மாமா அத்தையின் வீட்டிற்கு புறப்பட்டனர்.

———-

அவன் மாமா பார்வதியின் அண்ணா, ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தொழிலதிபர். ECR’றில் பெரிய வீடு. அம்மா மனைவி மகன் மகளுடன் வசித்துவந்தார்.

“வாங்க வாங்க மாப்பிள, வா மா” என்று உற்சாகத்துடன் அவனின் மாமா க்ரிஷயும் சுஷியையும் வரவேர்த்தார்.

“நீ வருவனு இன்னிக்கி தான் உன் அம்மா போன் பண்ணி சொல்றா. தெருஞ்சிருந்தா நானே ஏர்போர்ட் வந்துருப்பேனே” என்றார் அவர்களுடன் சோபாவில் உட்கார்ந்து.

“இல்ல அங்கிள். நானும் சுஷியும் இங்க மதுரைல ஒரு கல்யாணத்துக்கு வந்துருக்கோம். சரி அப்படியே சென்னைல ரெண்டு நாள் இருக்கலான்னு” க்ரிஷ் சொல்ல… அவன் அத்தையும் அங்கே வந்தார்.

அவர்களை வரவேர்த்துவிட்டு… “உன் பேரு என்ன மா” என கேட்க…  “சுஷீலா” என்றாள் சுஷி.

“நல்ல பேரு. ஆமா எங்க உங்க லக்கேஜ்’லாம் கார்ல இருக்கா?” அவன் அத்தை கேட்க… “இல்ல ஆண்ட்டி ஹோட்டெல்ல வெச்சுட்டு வந்துருக்கோம்”

“என்னது ஹோட்டெலா? நம்ம வீடு இருக்கப்ப, எதுக்கு ஹோட்டல்லாம். நாம போய் எடுத்துட்டு வந்துடலாம்” என்றார் அவன் மாமா.

அவன் மாமா வீடு அவன் தங்கலாம்… சுஷியால் எப்படி முடியும் என்று யோசித்தே ஹோட்டல் புக் செய்திருந்தான்.

“இல்ல அங்கிள் பரவால்ல. எதுக்கு சிரமம்” அவன் சொல்லிமுடிக்கும்முன்… “இதுல சிரமம் என்ன இருக்கு? சுஷீலா அவன் அப்படி தான் சொல்வான். நீ சொல்லு” அவன் அத்தை சுஷியிடம் கேட்க, அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தாள்.

விவரம் தெரிந்து இது போல் உறவினர்கள் என்று அவள் பார்ப்பதெல்லாம் இதுவே முதல் முறை.

“இல்ல ஆண்ட்டி அது…” தயக்கத்துடன் அவள் சொல்லும்போது, க்ரிஷின் மாமாவின் மகள் ரம்யா “ஹய் க்ரிஷ்” என ஓடி வந்து க்ரிஷ் அருகில் உட்கார்ந்தவுடன், சுஷி அவளை பார்க்க அவளும் பார்த்தாள் சுஷியை.

சுஷி மெல்லியதாக புன்னகைக்க ரம்யாவும் புன்னகைத்தாள்.

“ஹே ரம்யா எப்படி இருக்க. இது என் ஃபிரன்ட் சுஷீலா” என்றான் ரம்யாவையும் சுஷியையும் பார்த்து.

பரஸ்பர புன்னகைக்கு பின், “ஆமா உன் அக்கா பது, அண்ணா ராகேஷ் எங்க?” கேட்டான் க்ரிஷ்.

அதற்கு ரம்யா, “அவ பையனுக்கு vaccination போட போயிருக்கா. ராகேஷ் அவளை கூட்டிட்டு போயிருக்கான். வந்துடுவாங்க” என்றாள்.

“சரி நீங்க போய் பாட்டிய பாத்துட்டு வந்துடுங்க. ராமாயணம் படிச்சு முடிச்சிருப்பாங்க. ரம்யா கூட்டிட்டு போ” அவன் மாமா சொன்னவுடன், க்ரிஷும் சுசியும் ரம்யாவுடன் சென்றனர்.

அறையில் வைக்கப்பட்டிருந்த சாமிபடத்தின் முன் உட்கார்ந்திருந்தார். க்ரிஷை பார்த்ததும், கண்களில் பூரிப்புடன் “வா டா கிருஷ்ணா” என அன்போடு அழைத்தார்.

‘பாட்டி’ என அவன் அவரை கட்டிக்கொள்ள… சுஷி அவன் பக்கத்தில் நின்றிருந்தாள். பின் க்ரிஷ் சுஷியை அறிமுகம் செய்தான்.

“எனக்கு தெரியுமே. பாரு சொன்னா” என்றவர் “சுஷீலா. எவ்ளோ அழகான பேரு. இங்க வா” என்றவுடன் அவர் அருகில் சென்று மண்டியிட்டாள்.

அவள் தலை முடியை கோதி… “உன்ன பத்தியும் இவனப்பத்தியும் நிறைய சொன்னா. ரெண்டு மூணு நாள் இருக்கணும் புரியுதா” என்றவர் இருவரையும் பார்த்து “இங்க தானே தங்கறீங்க?” என கேட்க “இல்ல பாட்டி நாங்க ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிட்டோம்” என்றான்.

“எதுக்கு ஹோட்டல் இந்த பாட்டி வீடு இருக்கப்ப. அதெல்லாம் முடியாது எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்க” என்றார் இருவரையும் பார்த்து.

என்ன சொல்வதென்று தெரியாமல்… மறுக்கவும் முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, க்ரிஷ் அவரிடம் “இல்ல பாட்டி நாளைக்கு ஒரு முக்கியமான வேல…” என இழுக்க… “சரி இன்னிக்கி நைட் கண்டிப்பா இருக்கனும். எவ்ளோ நாள் கழிச்சு பாக்கறேன்” என்றவுடன், சுஷி க்ரிஷியை பார்த்து ‘சரி என்று சொல்’ என்பதுபோல் கண்ணசைத்தாள்.

க்ரிஷ் சரி சொன்னபின், இருவரும் பாட்டியுடன் சிறிதுநேரம் பேசினார்…

சரியாக அதேநேரம் பது, அவள் மகன், மற்றும் ராகேஷ் வர, “நீங்க போய் பேசுங்க” என்று பாட்டி சொன்னவுடன் இருவரும் வெளியே வந்தனர். 

பின், “என்னடா மூணு மாசம் முன்னாடி பாத்ததுக்கும் இப்பைக்கும் பெரிய விதயாசம் இருக்கே” என நக்கல் அடித்தாள் பது. “என்ன கிண்டல் பண்றதே வேல” என்றவன் சுஷியை அறிமுகம் செய்தான் அவர்களுக்கு.

“நாங்க அங்க ட்ரிப் வந்தப்போ இவங்கள பார்கலயே க்ரிஷ்” கேட்டாள் ரம்யா. “ஆமா… ராம் நந்தினி தான் பார்த்தோம்” என்றாள் பது.

க்ரிஷ் சுஷியை பார்த்துவிட்டு பதில் சொல்லும் முன் “நான் நெவார்க்’ல ஒர்க் பண்றேன். அதான் நீங்க வந்தப்ப நான் அங்கே இல்ல” என்றாள் சுஷி புன்னகையுடன்.

“அடப்பாவி நியூயார்க்ல யாராச்சும் தெரிமானு கேட்டப்ப நீ சொல்லவே இல்லையே சுஷீலாவ பத்தி” என்றாள் ரம்யா.

‘இதை இப்படியே விட்டால் இவர்கள் துருவித் துருவிக் கேட்டு, அது சுஷியின் மனநிலையை மாற்றிவிடும்’ என்று நினைத்த க்ரிஷ்…

“ஹே அவளே அங்க தனியா இருக்கா. நீங்க போய் தொல்லை பண்ணுவீங்கனு சொல்லல. இப்போ எதுக்கு அந்த மேட்டர்லாம்” என்றான் க்ரிஷ் ‘போதும் இந்த சமாச்சாரம்’ என்பதுபோல்.

பதுவின் மகன் அவள் மடியில் இருந்து இறங்கி, மெல்ல மெல்ல அடி வைத்து சுஷியிடம் வந்தான். அவள் கால்களை பிடித்துக்கொள்ள… சுஷி அவனை தூக்கி, “ஹே குட்டி” என கொஞ்சினாள். குழந்தையும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விளையாடினான்.

“பாரேன் ரம்யா. யாருகிட்டயும் போக மாட்டான்… சுஷீலா கிட்ட எவ்ளோ ஈஸியா ஓட்டிட்டான்” என்று ஆச்சர்யத்தில் பார்த்தனர்.

ராகேஷ் க்ரிஷிடம், “உங்களுக்கு தேவையான ஐட்டம்ஸ் ஹோட்டல்ல இருந்து எடுத்துட்டு வர சொல்லி பாட்டி சொன்னாங்க” என்றவுடன் க்ரிஷ் சுஷியை பார்த்தான் போகலாமா என்பது போல்.

அவள் மடியில் இருந்த குழந்தை அவளை விட்டு வராமல் இருக்க, பது அவனை கூப்பிட்டும் விலகவில்லை சுஷிடம் இருந்து. வலுக்கட்டாயமாக பது கூப்பிட… அவன் அழுகத் தொடங்கினான்.

க்ரிஷிடம் மெதுவாக சுஷி… “நீ போய்ட்டு வா… நான் இருக்கேன். எனக்கு நைட் டிரஸ், நாளைக்கி போட ஏதாச்சும் நீயே எடுத்துட்டு வந்துடு. அப்புறம் அதுவும்…” என சொல்ல… “ஒகே நான் சீக்கிரம் வந்துடறேன். ஸாரி சுஷி” என்றவுடன்…  “எதுக்கு இப்போ ஸாரி க்ரிஷ். நான் தான் இருக்கலாம்னு சொன்னேன்” என்றாள் புன்னகையுடன்.

க்ரிஷ் புறப்படுவதை பார்த்த ரம்யா “நானும் போறேன்” என்று அவர்களுடன் சேர்ந்து சென்றுவிட்டாள். ஏனோ ரம்யாவின் மேல் கோபமாக வந்தது சுஷிக்கு.

சுஷி பதுவுடனும் அவள் அம்மாவுடனும் பேசிக்கொண்டே குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து…

“க்ரிஷ்கும் ரம்யாக்கும் எப்படியாச்சும் பேசி முடிச்சிடலாம்னு இருக்கோம் சுஷீலா. பார்வதிட்ட கூட பேசியாச்சு. க்ரிஷ் பிடி குடுத்து பேச மாட்டேங்கறான். அங்க லவ் அப்படினு ஏதாச்சும்…” அத்தை க்ரிஷைப் பற்றி தெரிந்துகொள்ள கேட்க…

சட்டென திரும்பிய சுஷி “அது அப்படி…” என்ன சொல்வதென்று யோசித்து… பின், “அப்படி எதுவும் என்கிட்ட அவன் சொல்லல” என்றாள் தடுமாறி.

“ஹ்ம்ம். ரொம்ப நல்ல பையன். எப்படியும் அவன் கிளம்பரத்துக்குள்ள பேசிடலாம்னு இருக்கேன்” என்றார் யோசனையுடன்.

கண்கள் கலங்கி கண்ணீர் வரும் முன், அதை வரவிடாமல் போராடி நிறுத்தினாள். அத்தை அவர்களுக்கு காபி போட சென்றார். பது குழந்தைக்கு டயபர் மாற்ற எடுத்துச்சென்றாள்.

‘ரம்யா க்ரிஷ் கூட பேசறது, வெளிய போகறது எனக்கு பிடிக்கமாட்டேங்குது. என்னால அவன வேற ஒருத்தருக்கு விட்டுகொடுக்க முடியுமா? ஏன் என் மனசு படபடனு அடுச்சுக்குது அவங்களுக்கு கல்யாணம் பேசப்போறாங்கனு சொல்றப்ப’

‘நான் தான் சொன்னேன் ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்’ஸா தான் இன்னும் இருக்கோம்னு. அப்போ ஏன் இதை என்னால ஏத்துக்க முடில’ என்று அவள் மனம் இதயனைத்தையும் எண்ணி குழம்பியிருக்க, சரியாக க்ரிஷ் வந்தான்.

அவள் பின் இருந்து “பூஊஊ” என்ற சத்தம் கேட்டு பயந்து திரும்பியவள் கண்கள் சோர்ந்து இருந்தன.

அதை பார்த்த க்ரிஷ் உடனே… “என்ன ஆச்சு சுஷி” என சற்று சத்தமாகக் கேட்க… அவனை அமைதியாக இருக்கும்படி கையசைத்து “ஒன்னும் இல்ல” என்றாள் அமைதியாக.

“என்ன ஆச்சு. கண்ணே சரியில்ல” குரலில் அழுத்ததுடன் கேட்டான் மறுபடியும்.

ஏற்கனவே மனது பல விஷயங்களை யோசிக்க, இவன் விடாமல் கேட்டவுடன்… “இப்போ எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற க்ரிஷ்” கொஞ்சம் எரிச்சலுடன் கேட்டாள்.

அவள் சரியில்லை என்பது புரிந்தவுடன், ஒரு நொடி யோசித்து, பின் “ராகேஷ், நான் போகப்போறோமே கல்யாணத்துக்கு… அந்த பொண்ணு எனக்கூட பேசணும்ன்னு சொன்னா. திங்க்ஸ் இங்கயே இருக்கட்டும். நாங்க கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடறோம்” என்றவுடன்…

ராகேஷ் க்ரிஷிடம் “டெரஸ் வேணா போங்க. கொஞ்சம் நல்லா இருக்கும் இப்போ” அவனுக்கு சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு சுஷியை மேலே அழைத்துச்சென்றான் க்ரிஷ்.

“சொல்லு சுஷி என்ன நடந்துச்சு?”

“ஒன்னும் இல்லையே” என அவள் மழுப்ப… “போதும். சொல்லு” என்றான் அழுத்தமாக.

“உனக்கு ரம்யா பிடிக்குமா?” சம்மந்தமே இல்லாமல் சுஷி கேட்டவுடன், அவளைப் பார்த்து சட்டென சிரித்தான்.

அதே சிரிப்புடன், “இப்போ எதுக்கு இந்த கொஸ்டீன்” என கேட்க, சுஷி நடந்தது அனைத்தையும் சொன்னாள்.

அவள் சொல்ல சொல்ல, அவளின் மனநிலையை புரிந்துகொண்ட க்ரிஷுக்கு, இதழோரத்தில் புன்னகை எட்டிப்பார்த்தது.

“சரி நீ என்ன நினைக்கற? நான் ரம்யாக்கு ஒகே சொல்லிடவா?” என சிரிக்காமல் அவன் கேட்க, சட்டென அவனைப் பார்த்த சுஷி, வேறுபக்கம் திரும்பிக்கொண்டு… “உனக்கு பிடிச்சா ஒகே சொல்லிடு… ஆண்ட்டிட்ட கூட பேசிட்டாங்களாமே” என்றாள் மெல்லிய குரலில்.

அவனை பார்க்கும் படி அவளை திருப்பிய க்ரிஷ், அவள் முகம் பார்த்து “ஆனா அந்த பாரு ஆண்ட்டி உன்கிட்ட தானே யோசிக்க சொன்னாங்க. ரம்யாட்ட இல்லையே” என்றான் புன்னகையுடன்.