MEMM21B

மறந்துபோ என் மனமே(2) – 21b

“என்ன க்ரிஷ்? வேணாம்னு எவ்ளோ டைம் சொல்றது. நேத்து பைக்ல வெயில்ல போனதுனால தான் தலைவலி. இப்போ அஞ்சு மணிநேரம் ட்ராவல். வேணாம்டா” சுஷி க்ரிஷிடம் பைக்கில் செல்ல வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

“கார் போர் சுஷி. ஜெர்ஸி போனப்பறம் டெய்லி கார் தான். இது டிஃபரென்ட்’டா இருக்கு” என அவள் பேச்சை கேட்காமல் வண்டியை எடுத்தான்.

அவள் அவனை முறைத்து நிற்க… “தலைவலி வந்தா நீ ட்ரீட்மெண்ட் குடுக்க மாட்டயா என்ன?” புருவம் உயர்த்தி க்ரிஷ் கேட்க… தலையில் அடித்துக்கொண்டு புன்னகையுடன் உட்கார்ந்துகொண்டாள்.

தேவையான உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவையை அவன் மாமா வீட்டில் வைத்துவிட்டு புறப்பட்டனர்.

—–

அடுத்த ஆறு மணி நேரத்தில் திருச்சியை அடைந்தனர்.

வீட்டைத் தேடி சரியாக அவனுடைய தாத்தா வீட்டிற்கு சென்றனர். எழுபது வயதை கடந்த இருவரும் வாயிலில் இவர்களுக்காக காத்திருந்தனர்.

தாத்தா பாட்டியை பார்த்த சந்தோஷத்தில் அவர்களை சென்று கட்டி தழுவிக்கொண்டான்.

அவன் பாட்டி அவன் நெத்தியில் முத்தமிட்டு… “எவ்வளவு நாள் ஆச்சு என் பேரன பாத்து” என சொல்லும்போது… சுஷி பக்கத்தில் சிரித்துக்கொண்டு நிற்பதை பார்த்தார்.

“இப்போ எனக்கு பேத்தியும் வந்தாச்சு” அவர் சொன்னவுடன்… சுஷி புன்னகைத்துக்கொண்டே அவரை கட்டிக்கொண்டாள்.

“பார்வதி உன்ன பத்தி சொன்னா… எப்படி இருக்க சுஷீலா?” அவள் கையை பற்றி உள்ளே அழைத்துச்சென்றார். க்ரிஷ் தாத்தாவிடம் பேசிக்கொண்டே உள்ளே சென்றான்.

அழகான பழமையான வீடு. ஆங்காங்கே தூண்கள். நடுவில் வானம் பார்த்த திறந்தவெளி. இரண்டு தளங்கள். வேலைக்கு இருவர்… என அமைதியாக ரம்மியமாக இருந்தது அந்த வீடு.

அவர்களுக்கு தனித் தனி அறையை காட்டிய பாட்டி… “எப்போ சாப்டீங்களோ தெரியல. போய் முகம் கழுவீட்டு வாங்க. சாப்பிடலாம்” என சொல்லிவிட்டு வேலை செய்பவரை சாப்பாடு எடுத்து வைக்கச்சொன்னார்.

—–

அங்கு தரையில் பாய் விரித்து வாழையிலை போடப்பட்டிருந்தது.

ரெஃப்ரெஷ் ஆகி… அங்கு வந்த சுஷிக்கு புதிதாக இருந்தது அந்தப் பழக்கம். அவள் தரையில் ஒரு கால் மடித்து குத்த வைத்து உட்கார… அதைப் பார்த்த க்ரிஷ் அவளிடம் சம்மணமிட்டு உட்காரச் சொல்லி செய்து காட்டினான்.

அவர்கள் எதிரில் உட்கார்ந்த பாட்டி… “என்ன பா. எப்படி உட்கார்ந்தா என்ன?” என்றவர் அவள் பக்கம் திரும்பி “உனக்கு எப்படி சௌகர்யமா இருக்குமோ அப்படி உட்காரு சுஷீலா. நாங்க அந்த காலத்துலயிருந்து கீழ உட்காந்து சாப்பிட்டே பழகிட்டோம். உனக்கு வசதியா இல்லன்னா நீ சேர்ல உட்கார்ந்துக்கறயா?” என கேட்க…

“பரவால்ல பாட்டி. இதுவும் வித்தியாசமா இருக்கு” புன்னகையுடன் சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

“கீழ உட்கார்ந்து சாப்பிடும்போது, நம்ம அசைவுகள்… சாப்பிடற சாப்பாட்ட சீக்கிரம் செரிமானம் செய்ய உதவும்னு சொல்வாங்க. ஆனா இப்போ எல்லாரும் டைனிங் டேபிள் அப்படினு போய்ட்டாங்க. இதை மறந்துட்டாங்க” என்றார் தாத்தா சாப்பிட்டுக்கொண்டே.

“கமலா நீயும் சாப்புடு. நம்ம பசங்க தான” என பரிவாக பாட்டியைப் பார்த்து சொன்னா தாத்தாவிடம் “கொஞ்சம் நேரம் போகட்டும்ங்க. நெஞ்சு எரிச்சலா இருக்கு” என சொல்லிவிட்டுப் பரிமாறினார்.

“சொன்னா கேட்க மாட்ட. சரியான நேரத்துல சாப்பிடணும். கொஞ்சமா மோர் சாதம் சாப்பிடு” என அவர் இலையில் சாதத்தை வைத்தார் தாத்தா.

“நீங்க தான் சொன்னா கேட்க மாட்டேங்கறீங்க” என்ற பாட்டி அவர்களுடன் சாப்பிட்டார்.

இருவரையும் பார்த்து புன்னகைத்துக்கொண்டே சுஷியும் க்ரிஷும் சாப்பிட்டனர்.

——-

“கிருஷ்ணா. நீங்க வருவீங்கன்னு விக்ரம் சொன்ன உடனே, ஒரு சின்ன பூஜை நாளைக்கி காலைல திருவானைக்காவல்ல ஏற்பாடு பண்ணிருக்கோம். போய்ட்டு வந்துடலாம்” தாத்தா சொல்ல… க்ரிஷ் சரி என்றான்.

“ஏன் கிருஷ்ணா… இந்த வெயில்ல தான் ரெண்டு பேரும் பைக்ல வரணுமா? தல எவ்ளோ சூடாகி இருக்கும். தலவலி தான் வரும்” பாட்டி சொன்னவுடன்… பக்கத்தில் இருந்த சுசியைப் பார்த்து புன்னகையுடன் கண்ணடித்தவனை செல்லமாக முறைத்தாள் சுஷி.

“கமலா ரெண்டு பேருக்கும் உச்சந்தலைல எண்ணெ வெச்சு விடு. சூடு தணியும்” என தாத்தா சொல்ல… பாட்டி வேலையாளிடம் எண்ணெய் எடுத்துவரச் சொன்னார்.

அதற்கு க்ரிஷ்… “பாட்டி எதுக்கு உனக்கு கஷ்டம். அதெல்லாம் வேணாம்” என்க…

“இதுல என்ன பா இருக்கு. என் பேரன் பேத்திக்கு வெச்சுவிடறதுல எனக்கு ஆனந்தம். கஷ்டம் இல்ல” என்றார் பலகைமேல் உட்கார்ந்து.

பாட்டியிடம் மறுப்பு சொல்ல முடியாமல் க்ரிஷ் அவர் முன் உட்கார்ந்தான்… அவர் வைத்துவிட்டார்.

அப்போது அவன்… “பாட்டி அவளுக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. எனக்கு மட்டும் போதும்” என்றவுடன்… சுஷி பக்கம் திரும்பிய பாட்டி …

“உடம்புக்கு நல்லது சுஷீலா. வெச்சுக்கோ. சாயங்காலமா குளிச்சிக்கோ” என்றார் பாட்டி. அவளும் மறுப்பு சொல்லாமல் சரி என்றாள்.

——

இருவரும் மொட்டை மாடிக்கு சென்றனர். “சாரி சுஷி. பாட்டி எப்பவுமே இப்படி தான்” என்றவனிடம்…

” எதுக்கு க்ரிஷ் சாரி? இதெல்லாம் எனக்கு யாருமே பண்ணதில்ல. அவங்க எனக்கு செஞ்சப்ப எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா? I feel blessed” கண்கள் கலங்கி சொன்னவளை தோள் சுற்றி அணைத்துக்கொண்டான்.

“எனக்கு இவங்கள ரொம்ப பிடிச்சுருக்கு க்ரிஷ். ரொம்ப ஸ்வீட் ரெண்டு பேருமே” என்றாள் மனதார.

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கீழே வர, அங்கு தாத்தா பாட்டிக்கு தோள் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த க்ரிஷ்… “இதுக்கு தான் சொன்னேன். உன்னால முடியாது பாட்டினு… கேட்டா தான… இப்போ பாரு கை வலிக்குதா” என கேட்டுக்கொண்டே இறங்கினான்.

“என்னப்பா என்னைக்காச்சும் தானே செய்றேன். இந்த மாதிரி பிடிச்செல்லாம் விடவேணாம்ன்னு சொன்னா இந்த மனுஷன் எங்க கேக்கறார்” என நொடிந்துகொண்டார் பாட்டி.

அதை காதில் போட்டுக்கொள்ளாத தாத்தா… “இதுல என்னடா கிருஷ்ணா இருக்கு. உங்களுக்கு செய்றதுல எங்களுக்கு சந்தோஷம். சின்னவன் குடும்பம் மாசம் ஒரு தடவ பெங்களூருல இருந்து வருவாங்க. அப்போவும் இப்படி தான்” என சொல்லிக்கொண்டே பிடித்துவிட்டார்.

அவர்களின் புரிதல், அன்பு இந்த வயதிலும் கூட என்பது… சுஷிக்கும் க்ரிஷுக்கும் பார்க்கும்போது இனிமையாக இருந்தது.

—-

இருவரையும் திருச்சி சாரதாஸ் அழைத்துச் சென்றார்கள் தாத்தாவும் பாட்டியும். அவனுக்கு தாத்தா பட்டு வேஷ்டி சட்டை என எடுத்துத்தர… சுஷிக்கு பாட்டி மூன்று பட்டு புடவை எடுத்துத் தந்தார்.

“நீ கல்யாணத்துக்கு மதுரை போரல்ல? இதுல ஒரு புடவையை நீ கல்யாணத்துக்கு கட்டிக்கோ. அப்புறம் நாளைக்கி இந்த புடவைய கட்டிக்கோ” என்ற பாட்டியிடம் சுஷி தயங்கித் தயங்கி…

“பாட்டி… எனக்கு புடவைலாம் கட்ட தெரியாது” தலைகுனிந்து சொன்ன சுஷியை பார்த்த பாட்டி, சிரித்தார்.

அதே நேரம், தாத்தாவும் க்ரிஷும் அங்கு வர… “என்ன பாட்டிக்கும் பேத்திக்கும் ஒரே சிரிப்பு” க்ரிஷ் கேட்ட… “அது அவளுக்கு புடவ கட்ட தெரியாதாம்” என்ற பாட்டி, சுஷியிடம்… “நான் கட்டிவிடறேன் உனக்கு” என்றார் புன்னகையுடன்.

சுஷி க்ரிஷை பார்க்க… அவன் குறும்புத்தனமாக பார்த்தான் அவளை.

——-

இரவு இருவருக்கும் மதியம் சமைத்த சாதத்தை பாட்டி உருட்டி கையில் போட… பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் உண்டனர்.

——-

“பெரியவனுக்கு க்ரிஷ் மட்டும் தான். சின்னவனுக்கும் ரெண்டு பசங்க. பொண்ணுக்கு அலங்காரம் பண்ணணும் எவ்ளோ நாளா ஆசை பட்டேன்” என்ற பாட்டி… சுஷிக்கு புடவை கட்டி தலை வாரி பூ வைத்து விட்டார்.

தன்னுடைய சில நகைகளை அவள் மறுத்தும் போட்டுவிட்டார்.

“எனக்கும் யாருமே இதெல்லாம் பண்ணதில்ல பாட்டி” என்றவளிடம்… “இனி அப்படி சொல்லக் கூடாது. நான் இருக்கேன். இங்க வர்றப்பெல்லாம் நான் பண்ணிவிடறேன்” என்றவர் அவளைப் பார்த்து…

“என் கண்ணே பட்டுடும் போலயே” என திருஷ்டி எடுத்து… அவளின் நெற்றியில் முத்தமிட்டார்.

இருவரும் வெளியே வர, க்ரிஷும் அவனுடைய அறையில் இருந்து வெளியே வந்தான்.

அவளைப் பார்த்த அந்த தருணம், க்ரிஷ் கண்கொட்டாமல் அப்படியே நிற்க… புடவையில் இருந்தவளை அங்குலம் அங்குலமாக ரசித்தான்.

அவளோ அவனைப் பார்த்தவுடன் சிலையென நின்றாள். வெள்ளை வேஷ்டி சட்டையுடன் பார்க்க மிடுக்காக இருந்தவனை பார்த்து மெய்மறந்து நின்றாள்.

இருவரையும் பாட்டியின் அழைப்பு நிகழ்வுக்கு கொண்டு வர… ஒருவரை ஒருவர் நிமிடத்துக்கு ஒரு முறை பார்த்துக்கொண்டே கோவிலுக்குப் புறப்பட்டனர்.

——–

“வாங்க சுந்தரம். எல்லாம் தயாரா இருக்கு” என்று அங்கிருந்த குருக்கள் தாத்தாவிடம் சொல்லிக்கொண்டே வர, க்ரிஷயும் சுஷியையும் பார்த்தவர்…

“என்ன சுந்தரம் பேரனுக்கு கல்யாணம் ஆனத சொல்லவே இல்லையே…” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட சுஷிக்கும் க்ரிஷுக்கும், என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க…

பாட்டியோ… “இன்னும் ஆகல. சீக்கிரம் பண்ணிட வேண்டியது தான்” என்றவுடன் இருவரும் மறுபடியும் விழிகள் அகல… ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.