Mk 27(2)
Mk 27(2)
” இதுல இனியா எங்க இருந்து வந்தா வெற்றி ?” விஜயா மகனிடம் கேட்க ,
” அந்த லெட்டர் எழுதி அனுப்பியது எல்லாம் இதோ என் கண்ணு முன்னாடி நிக்கிறாளே இவ தான் ம்மா . அது கூட உண்மையான்னு எனக்கு தெரியல . அதுமட்டுமல்ல இசையும் இவளும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் வேற ” என்று அனைவரது முன்பும் அவள் மறைத்திருந்த உண்மையை போட்டுடைத்தான்.
அனைவருமே இவன் சொன்னதில் ஸ்தம்பித்து நின்றனர்.இனியாவாள் எதுவுமே பேச முடியவில்லை குற்றஉணர்வால் தவித்து கொண்டிருந்தாள் .
” என்னைய ஏமாத்திடாங்க பா. உங்க பையன் ஏமாந்து நிக்கிறான். மனைவிக்கிட்ட தோல்வி அடையலாம் பா அதுல எந்த ஒரு தப்பும் கிடையாது. சொல்ல போனா அது அவனை வாழ்க்கையில எங்கோ உயர்த்தி செல்லும் . ஆனா இங்க நான் மனைவினால தோத்து போய் நிக்கிறேன் பா ” உணர்வு ஒடுங்கி போன மெல்லிய குரலில் வெற்றி அனைவரிடத்தும் கூறினான்.அவனது ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவன் அனுபவிக்கும் வலி அப்பட்டமாக தெரிந்தது .
” மாறா ” என்று அவனின் காலிலே விழுந்து கதறிவிட்டாள் இனியா.
அதில் மொத்த குடும்பமும் பதறிப்போக , விஜயா தான் மருமகளை தூக்கி நிறுத்தினார்.
” அத்தை நான் அவரை ஏமாத்த நினைக்கலை ” என்று கதறும் மருமகளை அணைத்து கொண்டார்.
யாரை தேற்றுவது என்று ஒன்றும் புரியவில்லை. இருவருக்குமே வலிகள் இருக்கத்தான் செய்யும் , ஆனால் இதில் யாரையும் விட்டு விட முடியாதே. அதிலும் இவர்களது உறவு விட கூடிய உறவா என்ன ?
“நான் நான் எல்லாத்தையும் சொல்லிறேன் தரு. நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க ” என்று கண்களில் கண்ணீரோடு கெஞ்சினாள் .
” இல்ல , எனக்கு இப்போ எதையும் கேக்க வேண்டாம். நீயா சொல்ல நினைச்சிருந்தா எப்படி வேணாலும் சொல்லியிருக்கலாம். இது தானாவே தெரியவந்தது அது அப்படியே இருக்கட்டும். ஆனா உன் தோழி பேரை வச்சி என்னை நீ ஏமாத்திருக்க வேண்டாம் இனியா . நான் கிளம்புறேன் ” என்று தனது பையை எடுத்து கொண்டு நகரபார்த்தவனை தடுத்து நிறுத்தினார் பரமசிவம்.
” காப்பு கட்டிருக்கு வெற்றி. ஊரைவிட்டு எங்கேயும் போக கூடாதுன்னு உனக்கு தெரியாதா “
” தெரியும் பா , அதான் தோட்டத்து வீட்டுக்கு போறேன். காப்பை பிரிச்சதும் கிளம்பிடுவேன் பா ” மரித்து போன குரலில் கூறியவன் மெல்ல நடக்க தொடங்கினான்.
இங்கே நடக்கும் பிரச்சனையை கண்ட மணி , யாருக்கோ அழைத்து பேசினான்.
” தரு தரு ” என்று ஓய்யாது அவனை அழைத்தபடி அழுகையில் கரைய , அதுவே ஒரு கட்டத்தில் மூச்சு விட சிரமத்தை கொடுத்திருந்தது.
” மாறா ” மூச்சு வாங்கிய படி கீழே சரிந்தாள் இனியா .
அவளது இந்த அழைப்பில் திரும்பி இனியாவை பார்த்தவன் , அவளது நிலையை கண்டு துடித்து விட்டான்.
பேக்கை அப்படியே போட்டுவிட்டு வேகமாய் ஓடி வந்தவன் , இனியாவை தாங்கி நின்றான்.
” மாறா ” அத்தனை கஷ்டப்பட்டு அவனை அழைக்க ,
” ஒன்னுமில்ல இனி மா சில் . நான் உன் கூட தான் இருக்கேன். அழக்கூடாது டா ” என்றவனுக்குமே கண்ணில் நீர்த்திவலைகள் தேங்கிய மலங்க செய்தது.
அவன் சட்டை இறுகப்பிடித்து கொண்டு மாறா என்ற பெயரை சிரமப்பட்டு சொல்லிக் கொண்டிருக்க , கேட்ட கணவனுக்கு வலியை தந்தது.
மனைவியை இந்த நிலைக்கு ஆக்கிவிட்டோமே என உள்ளுக்குள் கதறினான்.
” அண்ணி , சீக்கிரமா தண்ணி எடுத்துட்டு வாங்க ” என்று பதறியவன் அவளை தூக்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
சோஃபாவில் அமர்த்தியவன் தானும் அவள் பக்கத்தில் அமர்ந்து தோளில் அவளை சாய்த்து கொண்டான்.
” ஒன்னுமில்ல டா ” சமாதானம் படுத்த முயன்றான் வெற்றி.
அதற்குள் பூங்கோதை தண்ணி எடுத்து வரவும் , அவளுக்கு புகட்டினான் கணவன்.
சிறிதளவு தண்ணீரை குடித்தவள் , அவன் கைகளை விடாது பற்றி கொண்டாள்.
” தரு “
” என்னடா மா ?”
” நான் உங்களை ஏமாத்தனும்னு ஒருநாளும் நினைச்சதில்லை . அப்படி ஒரு நினைப்பு எனக்கு வராது ” என்றதும் அவனது இதழ்கள் வருத்தமாய் புன்னகைத்தன .
” புரியுது டா .நானுமே லூசு மாதிரி எல்லாத்தையும் நம்பியிருக்க கூடாது தானே விடு பார்த்துக்கலாம் . இது எனக்கு கிடைச்ச ஒருவகையான பாடம் ” என்றதும் பாவையவளாள் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவள் ஏதோ பேச வருவதற்குள் வேறு ஒரு குரல் வந்தது .
” இல்லவே இல்லை இங்க லூசா இருக்கிறது நீங்க இல்ல அவ தான். அவ மட்டும் தான் ” என்ற குரல் வாசலில் இருந்து கேட்கவும் மொத்த குடும்பமும் வாசலை நோக்கியது.
அங்கே காந்திமதியும் அவர் கூடவே பலராமனும் நின்றிருந்தான்.
” என்ன சொல்ல வரீங்க அத்தை?” புருவமுடிச்சுடன் மாமியாரை பார்த்து கேட்டான் வெற்றி.
” அவள் லூசு தான். அவளுக்கு இப்படி யாரையும் ஏமாத்த தெரியாது. நாங்க அப்படி வளர்க்கவும் கிடையாது. நான் பாசத்தை காட்டி வளர்க்களைனாலும் கண்டிப்புடன் தான் வளர்த்தேன்.அவளுக்கு தெரிஞ்சது எல்லாமே வெற்றுமாறன் மட்டும் தான்.”
” அம்மா ” அழுகையுடன் அன்னையை அழைத்தாள்.
” மூச் , நீ பேசாத . உன்னோட காதலை சொல்லாது போனதாலா தான் யார் யாரோ உன் வாழ்க்கையில நுழைஞ்சி உன்னை விளையாட்டு பொம்மையா யூஸ் பண்ணிக்கிறாங்க ” கண்டனத்துடன் கூறியவர் மருமகனை ஏறிட்டார் .
அவனுமே மாமியாரை ‘இது என்ன அடுத்த கட்ட நாடகமா ‘ என்பது போல் பார்த்தான்.
” இவ உங்கக்கிட்டயும் காதலை சொல்லல ,எங்க யார்க்கிட்டயும் சொல்லல . அது தான் பிரச்சனைக்கு முதல் காரணமே.”
” உங்களுக்கு அவளை கல்யாணத்துக்கு முதல் நாள் தானே தெரியும். ஆனா அவளுக்கு உங்களை மூனு வருஷமா தெரியும்றதை விட , உங்களை மட்டும் தான் தெரிஞ்சி வச்சிருக்கா. நீங்க சென்னையில இருக்கிறது தெரிஞ்சி காலேஜ் சென்னையில படிக்க முடிவெடுத்தா. இத்தனைக்கும் இந்த மூனு வருஷமா இதோ நிக்கிறாளே இவ உங்க எதிர்த்த வீடு தான் “
” அவளோட காதலை தெரிஞ்சிக்கிட்ட நானும் மணியும் ப்ளான் பண்ணி அங்க தங்க வச்சோம். காலையில இருந்து உன்னை கண்காணிக்கிறது தான் அவளுக்கு வேலையே. உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு ஒன்னு விடாம தெரிஞ்சி வச்சிருக்கா . ஏன் உனக்கு தெரியாததை கூட உனக்காக தெரிஞ்சி வச்சிருக்கவளை பார்த்தா ஏமாத்திட்டான்னு சொல்ற ” என்றதும் தமையனையும் மனைவியையும் முறைக்கலானான்.
” அங்க என்ன முறைப்பு , ஃபோன் பண்ணி சொன்னது வேணா உன் அண்ணனா இருக்கலாம். இங்க நடந்ததை கேக்கவச்சது எல்லாம் உன் நண்பன் கௌதம் தான் ” மாமியார் கூறியதை]கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது .
” இவ்வளோ நாள் இல்லாத அக்கறை இப்போ என்ன புதுசா ?” கேள்வியாக அவரை பார்த்தான்.
” நான் அவ மேலை பாசம் வைக்களைன்னு யார் சொன்னா , பாசம் இருக்கு ஆனா நெருங்க விடல அவ்வளவு தான். அவளோட ஒவ்வொரு அசைவையும் நான் கவனிச்சிட்டே தான் இருந்தேன் ” என்றதும் திடுக்கிட்டு அன்னையை பார்த்தாள் பெண்.
” இத்தனை காதலிச்சவ உங்க கிட்ட அதை சொல்ற மாதிரியே தெரியலை. அதான் என் அண்ணன் வீட்டை கூப்பிட்டு பெண் பார்க்க வரவச்சேன் . ஆனா இவ இப்படி ஒரு அழுத்தக்காரியா இருப்பான்னு நினைக்கல . அதான் எல்லாத்தையும் நானும் மணி மாப்பிள்ளையும் ப்ளான் பண்ணி உங்க கல்யாணத்தை நடத்த ஏற்பாடு பண்ணா , மேடம் அவங்க காதலை லெட்டர் மூலமா சொல்ல என்னவோ பண்ண முயற்சி செஞ்சாங்க ” என்றவர் மகளை முறைக்கவும் தவறவில்லை.
அதை பார்த்த வெற்றி , தன்னவளை பார்த்து அவர் எப்படி முறைக்கலாம் என்று மாமியார் மீது கோபம் கொண்டான்.
” அங்க செஞ்சது தான் பெரிய தப்பே. எப்படியோ உங்கக்கிட்ட காதலை சொன்னா சரிதான் என்றப்பதான் இசை உங்களோட வாழ்க்கையில இவளா நுழைஞ்சா. அது கூட இந்த கிறுக்கச்சிக்கு தெரியல , தெரியவரும் போது நீங்க ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டிங்க . ஆனா உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியல காதல் தோல்வின்னு வந்து நின்னப்ப உங்க மேல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை ” என்று அவர் நிறுத்த ,
” அதுனால தான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டிங்களா ?” காட்டமாக கேட்டாலும் அவர் செய்த செயலை மற்றவர்கள் முன்னிலையில் சொல்ல அவன் விரும்பவில்லை.
” ஆமா “
” இது எல்லாமே சரி. ஆனா எதுக்காக வேற ஒருத்தியோட பெயரை வச்சி எனக்கு எழுதனும். இசையை பார்த்த பின்பும் தெரியாத மாதிரியே ஏன் நடிக்கணும். அதுனால தான கண்டவங்க எல்லாம் உள்ளே வந்து பித்தலாட்டம் பண்ணியிருக்காங்க “
அதுவரை அமைதியாக அம்மா பேசட்டும் என்றிருந்த இனியா ,” நான் ஒன்னும் வேறயாரோடோ பெயரையோ யூஸ் பண்ணல . இசையும் என்னோட பேரு தான் ” அவனை பார்த்து கூறினாள்.
” என்ன ?” அதிர்ந்து போய் அவன் கேட்டான் .
” ஆமா முழு பெயர் இன்னிசை இனியா . ஸ்கூல் காலேஜ் எல்லாத்துலையும் இனியா தான் , வெறும் பெர்த் சட்டிஃபிக்கேட்ல மட்டுமே இந்த பெயர் . நீங்க என்னை உணர்வு பூர்வமா உணரனும்னு நினைச்சேன். அதுக்கு தான் இசையா உங்க வாழ்க்கையில நுழைந்தது. மத்தப்படி உங்களை ஏமாத்துறது என்பது என்னையே ஏமாத்திக்கிற மாதிரி ” என்று வேதனையோடு கூறியவள் அவன் தோளில் ஆதரவிற்காக சாய்ந்து கொண்டாள்.
அவனுமே அவள் தோளில் கை போட்டு தட்டி கொடுத்து ஆறுதல் படுத்தினான். அதுவரையிலும் இருவரது கைகளும் ஒருவரையொருவர் விடாது பிடித்திருந்தது.
” சாரி மச்சான் ! யாழி இப்படி பண்ணுவானு நான் நினைக்கலை . இவங்க சொல்லவும் தான் புரிஞ்சதே .என்னை மன்னிச்சிடு மச்சான் ” பலராமன் நண்பனிடம் மன்னிப்பு கோர ,
” விடு டா , எல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு ” என்று அவளோடு எழுந்து நின்று கொண்டான்.
மனைவியின் நிலை அறிந்து கொண்டவன் அவளை இதற்கு மேல் காயப்படுத்த விரும்பவில்லை .அதிலும் தனக்காக இத்தனை செய்து வைத்திருக்கிறவள் மீது கொள்ள ஆசை வந்தது.
‘இனியாவிற்கு இப்போது மன அமைதி தேவை ‘என நினைத்தவன் ,கெஸ்ட் ரூமிற்கு அவளை அழைத்து சென்று படுக்க வைக்க , அவளோ அவனை மிரட்சியுடன் பார்த்தாள்.
” எங்கேயும் போக மாட்டேன் . நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு மா கண்ணெல்லாம் வீங்கி போச்சி பாரு ” என்று பக்கத்திலே அமர்ந்து அவள் தலையை கோதி விட்டான்.
சிறிது நேரத்திலே இனியா உறங்கிடவும் , கீழே வந்த வெற்றி மொத்த குடும்பமும் அங்கே இருப்பதை கவனித்து காந்திமதியிடம் சென்றான்.
” உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கா இல்லையான்னு தெரியல. ஆனா அவளை நான் இனி பத்திரமா பார்த்துப்பேன். அவளோட காதல் தெரியாத போதே , அவ தான் எனக்கு உலகமே. அதான் இனியா மறைச்சதை என்னால தாங்க முடியல ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன். இனி பொறுமையா பேசி எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு சந்தோஷமா அவளோடானா என் வாழ்க்கையை நான் வாழுவேன் ” என்றதும் அவன் தலை மீது கை வைத்து ” வாழ்க வளமுடன்” சொல்லி சென்றார்.
பின்பு அறைக்கு சென்று உடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அறையை சுத்தம் செய்ய துவங்கினான்.