mp6a

மது பிரியன் 6A

 

அஞ்சனாவிற்கு தன் சுயஅறிவின் மூலமாக, தனது தேவையின் நிமித்தமாய், இதுவரை அவள் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுத்ததில்லை.  ஒரு காலகட்டம் வரை பெற்றோர் அவளின் முடிவுகளை எடுத்தனர்.  அதன்பின் அவளது எதிர்காலம் என அவள் மலைபோல நம்பியிருப்பவன் அவளை வழிநடத்தினான்.

பள்ளியிறுதி வரை பெற்றோரை மட்டுமே அணுகி வளர்ந்திருந்தவள், அதன்பின் கல்லூரி சென்ற இரண்டு வருடங்களிலும், அவன் சொல்லை மட்டுமே வேதவாக்காகக் கொண்டு வாழப் பழகியிருந்தாள்.

அவன் சஞ்சய்! அவளைக் காட்டிலும் வயதில் மூத்தவன்.  விருந்தினர் வீட்டிற்கு வந்திருந்தவன், எதேச்சையாக பள்ளியிறுதி ஆண்டில் இருந்தவளைக் கண்ணுற்று, பளிங்குச் சிலையாக இருந்தவளின் மீது மோகம் கொண்டு, அதனைக் காதல் என அவளை நம்பச் செய்திருந்தான்.

சஞ்சய், சென்னையில் ஒரு கணினி தொழில்நுட்ப மையத்தின் மேலாளராய் இருந்தான். ஐந்து இலக்கத்தில் சம்பளம். உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு வந்தவன், பள்ளிச் சீருடையில் பவளமேனியாய் இருந்த அஞ்சனாவை எதிர்பாரா விதமாய் சந்தித்திருந்தான்.

‘இந்தப் பட்டிக்காட்டுல இவ்ளோ அழகா ஒருத்தியா?  கோடம்பாக்கத்தில பாத்தானுங்கன்னா அடுத்த படத்துக்கு இவதான் ஹிரோயின்! ஆபிஸ்ல இருக்கறது அத்தனையும் அறையும் குறையுமா அரை இன்ஞ் மேக்கப்போட தெரிஞ்சாலும், வந்து மேல விழுந்து வழிஞ்சாலும், கண்ணால கூப்பிட்டாலும், அதுகட்ட இருந்து தப்பிச்சு ஓடத்தான் தோணும்.  இவளைப் பாத்தா.. பாத்ததுமே அவளோட ஒட்டிக்கற அளவுக்கு காந்தமா இழுக்கறா! வேற எதையும் நினைக்க முடியாதளவுக்கு மனசக் கொல்லுறா! அவளைப் பாத்தலே ஏதேதோ தோணுதே!’ மனம் குரங்காய் அஞ்சனாவின் பின்னே சென்றது.

நண்பன் திரைப்படத்தில் வரும் விஜய்யின் சாயலில் நல்ல நிறத்தோடு இருந்தவனை, அஞ்சனாவிற்கு கண்டதுமே பிடித்துப் போனது.  அத்தோடு அவளைச் சுற்றிச் சுற்றி வந்து, காதலை யாசமாகக் கேட்டவனை, கண்ட நொடியைக் காட்டிலும், முன்னூறு மடங்கு அவளுக்குப் பிடித்திருந்தது.

பெண்ணை அடிமையாகவே வீட்டில் நடத்தியிருக்க, இவனோ அவளை உச்சியில் நிறுத்தி, தன்னை அடிமையாக்கி நின்றான்.  புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு என உலகம் தெரியாத கிணற்றுத் தவளையாகவே இருந்தாள் அஞ்சனா.

“உன்னைப் பாத்ததில இருந்து, தூக்கமில்லை.  சாப்பிட முடியலை.  எந்த வேலையையும் செய்ய முடியலை.  எனக்குள்ள உன் நினைப்பு வந்ததுல இருந்து, உன்னைத் தவிர வேற எந்த சிந்தனையும் இல்ல! நீ இல்லாத வாழ்க்கையே, என்னால நினைச்சுப் பாக்க முடியலை!”

கண்டதும், திரைப்பட நடிகனைப்போல இது யார்? என யோசித்தபடி நடந்தவளின் முன்னே, திடுதிப்பென எதிரே வந்து மறைத்து தன்னைச் சிலாகித்துச் சொன்னவனைக் கண்டு, மலைத்து நின்றவளுக்குள் குற்றால மலைச்சாரல் மனதில்.

“ஒன்னுமே பேசமாட்டீங்கற.  ஒரே ஒரு வார்த்தை பேசு.  இல்லைனா இந்த உசிரு இருந்தாலும், நடைபிணமாத்தான் நான் இருப்பேன்” காதல் எனும் கிறுக்குத்தனத்தை அவளின் முன்னே அரங்கேற்றத் துவங்கியிருந்தான்.

பார்த்திராத படத்தை புதிதாகப் பார்க்கும்போது தோன்றும் பிரமிப்பு போல, அவன் பேசியதை உண்மை என பேதை மனம் நம்பியது.

படத்தில் இதுபோன்ற காட்சிகளைக் கண்டிருந்தவளை, தன்னை நெருங்கி ஒருவன் காதல் வசனம் கூறுவது, உல்லாச வானில் சிறகடிப்பது போன்றிருந்தது.

ஊருக்குள், உலகநாதனின் பெண் என யாரும் அவளை நெருங்கவே அஞ்சுவார்கள்.  அப்படிப்பட்டவளை யாசிக்க வெளியூரிலிருந்து வந்தவனை, யட்சினியாகவே எதிர்நோக்கினாள்.

“யோசிச்சு சொல்லவா?” தயங்கிக் கேட்டாள் அஞ்சனா.

“நாளைக்கு வரதான் நான் இங்க இருப்பேன்” கவலையாகச் சொன்னான்.

“அப்ப, நீங்க இந்த ஊரில்லையா?” அதுவே அவளுக்கு அப்போதுதான் தெரிய வந்தது.

“நான் சென்னை. இங்க கசின் மேரேஜ்கு வந்திருக்கேன்”

“ஓஹ்” என்றவாறு திரும்பித் திரும்பி பார்த்தவள், யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, “எங்க வீட்ல இதையெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க!”

“ஹேய்! எந்த வீட்லயும் இதை டக்குனு ஒத்துக்க மாட்டாங்க.  நாமதான் பொறுமையாப் பேசி சம்மதிக்க வைக்கணும்.  உனக்கு ஓகேன்னு சொன்னா, அடுத்து வர எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்” நம்பிக்கை கொடுத்தான்.

“நான் இப்போதான் ஸ்கூல் படிச்சிட்டுருக்கேன்”

“யூனிஃபார்ம் பாத்தாலே தெரியுது” அவளைக் கூசச் செய்தது, அவனது கண்ணின் பாசை.

“நீங்க சென்னைன்னு சொன்னீங்க.  உங்களை இனி எப்டிப் பாக்கறது” சட்டென தைரியமும், நம்பிக்கையும் அவளிடம் ஒட்டிக் கொண்டது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. பருவத்தின் அசட்டுத் துணிச்சல்.

“அதுலாம் அடுத்த பிரச்சனை.  இப்போ உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கானு மட்டும் சொல்லு”

“எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க”

“எனக்கு உன்னைப் பாத்ததுமே, காலங்காலமா உன்னோட வாழ்ந்த ஃபீல் வருது.  உனக்கு அப்டித் தோணலையா?” ஏக்கமான குரலில் அஞ்சனாவிடம் கேட்டான்.

தன்னை இந்த அளவு நேசிப்பவனிடம் இல்லை என்று சொல்லி அவன் மனதைக் காயப்படுத்த அஞ்சனா மனம் அஞ்சியது. “பாத்த மாதிரி தோணுது. ஆனா..”

“இன்னைக்கு சாயந்திரம் நான் கோயிலுக்கு வரேன்.  அப்ப நீயும் அங்க வந்து உன்னோட ஒப்பீனியன் சொல்லு”

அன்று மாலைவரை யோசித்தவளுக்கு, தன்னை ஒருவன் யாசிக்கும்போது, அதனை ரட்சிக்க பருவ மனம் ஆணையிட, மாலையில் தனது காதலை பிகு பண்ணாமல் உடனே ஒப்புக் கொண்டாள்.  அப்போதே கையில் திறன்பேசியை அஞ்சனாவின் கையில் ஒப்படைத்தவன், “இதுல இனி டெய்லி பேசிக்கலாம்”

“அய்யய்யோ.. வேணாம்” பதறியவளை, ஒரே முறைப்பில் அடக்கியவன், “நான் யாரு உனக்கு?”

என்ன கேள்வி இது என்பதுபோல அலங்கமலங்க விழித்தவளிடம், “எல்லாம் என் தப்புதான்.  பாத்ததுமே ஓவரா எக்ஸ்பெக்ட் பண்ணது தப்புதான்.  சாரி” அவளது கையில் இருந்த திறன்பேசியை சட்டெனப் பறித்துக் கொண்டவன், நகர முனைய, “என்னாச்சு“ பதறினாள் அவனது செயலில்.

“நான் யாரோ தானா உனக்கு” முகத்தை மிகவும் ஓய்ந்துபோன தோற்றத்தில் வைத்தபடிக் கூறியவனைக் கண்டு, மனம் உடைந்தவள், “தப்பா நினைக்காதீங்க.  இதை வீட்டுக்குக் கொண்டுபோனா யாரு குடுத்தாங்கனு கேப்பாங்களே” பாவமாய்க் கூறினாள்.

தனிவகுப்பு எடுத்தான். இதை யாரும் அறியாமல் எப்படி கையாளுவது என்று. சமாதானம் செய்து, அதன்பின் அவள் மேல்நிலைக் கல்வி முடித்ததும், கல்லூரிக் கல்வி படிக்க வேண்டுமென வற்புறுத்திக் கூறி, மதுரை, திருச்சி அல்லது சென்னையில் உள்ள ஏதேனும் கல்லூரியில் சேரச் சொல்லி வழி நடத்தினான்.

அவளும் அவனது மகுடிக்கு கட்டுண்டு ஆடினாள். வீட்டில் உள்ளவர்கள் எடுத்த முடிவின்படி, இறுதியாக மதுரையில் உள்ள விடுதியோடு கூடிய கல்லூரியில் சேர்த்து விட்டிருந்தனர்.

ஆனாலும், சஞ்சய்யின் எண்ணம் ஈடேறவில்லை.  அடுத்தகட்ட யோசனை பரிமாறப்பட்டது. பத்தே நாளில் அந்த விடுதியில் இல்லாத குறைகளையெல்லாம் வீட்டில் கூறி, வெளிவிடுதியில் வந்து தங்கிக் கொண்டாள் அஞ்சனா.

அதன்பின், வாரயிறுதியில் விடுதி மேற்பார்வையாளரின் ஒப்புதலோடு, வெளியே செல்லும்போது, அவனும் சென்னையில் இருந்து மதுரை வந்து, அவனோடு சேர்ந்து சலிக்காமல் ஊர் சுற்றுவது என நன்றாகச் சென்று கொண்டிருந்தது அஞ்சனா, சஞ்சய் இருவரின் காதல்.

வெளியில் சுற்றும்போது அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைப்பான்.  அவள் வளர்ந்த சூழல் அதனால் உடன் செல்லத் தயங்குவாள்.

“எப்பங்க நம்ம கல்யாணம்”

“இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்?”

“எந்த நேரத்தில எங்க வீட்ல என்ன முடிவு, எப்டி எடுப்பாங்கன்னே தெரியாது”

“அதுலாம் நாம் பாத்துக்குறேன்” என்று கூறியே இரண்டு வருடங்களைக் கடத்தியிருந்தான் சஞ்சய்.

ஆகையால் அவளின் கல்லூரிக் கல்வி என்பதே, திருமணத்தைத் தள்ளி வைக்க ஒரு சாக்கு.  காதலின் பெயரில் தனது எண்ணத்திற்கு அவளை இசையச் செய்ய அவன் செய்த நேக்கு.

பள்ளியிறுதியிலேயே பருவத்தின் பகட்டால், தன்னைச் சுற்றி வந்தவனின் வலையில் விழுந்து, காதலெனும் மாயையினால் அது வழிநடத்தியவாறு என்பதைக் காட்டிலும், அவன் வழிநடத்தியபடி சிலகாலமாகவே வாழத் துவங்கியிருந்தாள் அஞ்சனா.

ஆனால் அதனை அறியாத வீட்டின் பெரியோர்கள், அவளின் விருப்பத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், விஜயரூபனுடனான திருமணம் என முடிவு எடுத்ததை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், அதனை நிறுத்தவும் முடியாமல் திணறினாள்.

விசயத்தை சஞ்சய்யிடம் பகிர, “உன்னோட திறமைதான்.  இப்பவே வீட்டைவிட்டு எங்கிட்ட கிளம்பி வந்தாலும் சரிதான்.  இல்லைனா விசயத்தை வீட்டுல சொல்றதா இருந்தாலும் எனக்கு ஓகேதான்” என்றிருந்தான்.

நம்பிக்கை வார்த்தை கூறி, அவளை மேலும் நம்பச் செய்து, தனது எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள இலவு காத்த கிளியாய் காத்திருந்தான்.

வீட்டில் தனது காதலைப் பேச தைரியமில்லாதவள், சஞ்சய்யின் வீட்டை விட்டுக் கிளம்பிச் செல்லும் வழியை யோசிக்க, அடுத்து கல்லூரிக்கே செல்லக் கூடாது என வீட்டில் பெரியவர்கள் தடைபோட்டிருந்தனர்.

அதையும் சஞ்சயிடம் பகிர, “அப்போ மாப்பிள்ளைகிட்டயே பேசிரு” என ஐடியா தந்திருந்தான்.

அதனால் விஜயரூபன் நம்பரை யாரிடம் கேட்டு வாங்குவது என்று தெரியாமல் சஞ்சய்யிடம் புலம்பியவளை, “இதையெல்லாமே நாந்தான் உனக்குச் சொல்லணுமா?  யோசி.  கண்டிப்பா எதாவது வழி கிடைக்கும்.  இப்டியே பேசிட்டே இருந்தா, அந்த ஏஈ தாலியக் கட்டி அவன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருவான்” எனக் கத்தி வைத்திருந்தான் சஞ்சய்.

அஞ்சனாவிற்கு சஞ்சயின் கத்தல் புதிது.  அதனைக் காட்டிலும் விஜயரூபனைக் கண்டது முதலே அஞ்சனாவிற்குப் பிடிக்கவில்லை.  ‘அவன் மூஞ்சியும் முகரையும்.  பாத்தாலே ரவுடிப்பய மாதிரி இருக்கான்.  அவனுக்குப் போயி என்னைக் கட்டிக் குடுக்கணும்னு எப்டித்தான் இந்த வீட்டு ஆளுங்களுக்கு மனசு வந்துதோ’ என மனதிற்குள் புலம்பித் தீர்த்திருந்தாள்.

வீட்டு அரசியல் புரியாமல் வளர்ந்தவளுக்கு, காதல் அரசியலின் கனல் குழப்பத்தைக் குடுத்திருந்தது.

இதற்கிடையே பதற்றமும், மனஅழுத்தமும் அஞ்சனாவை விழிப்போடு செயல்படவிடாமல் தடுக்க, திறன்பேசியை யாருமறியாமல் இதுவரை கையாண்டது நினைவில் மறந்திருக்க, தவறுதலாக மறந்திருந்த வேளை, முதன் முதலாக அவளின் அப்பத்தாவின் கண்களில் திறன்பேசி பட்டிருந்தது.

“இது யாருவுட்டு.  இங்ஙன வச்சிட்டுப் போனது யாரா இருக்கும்.  அடியே, ராசம். நம்ம உலகுதான் இப்டி ஒன்னை கையில வச்சிட்டே, அப்பப்போ அதுல பேசிட்டு சுத்துவான்.  அவம்புட்டானு பாரு” என எடுத்ததைக் கொண்டுபோய் அஞ்சனாவின் தாயார் கையில் ஒப்படைத்திருந்தார் அப்பத்தா.

……………………………………………………….