MM7
MM7
மயங்காதே மனமே 7
காலையில் பரபரப்பாக ரெடியாகிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. இன்றைய விடியலின் போது எழுவதற்கு கொஞ்சம் தாமதமாகி இருந்தது. நேற்றைய இரவின் மிச்சங்கள் இன்னும் முகத்தில் தெரிந்தது.
எத்தனை மணிக்குத் தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. அழுதழுது ஓய்ந்து போனவள், அப்படியே கண்மூடி இருந்திருக்க வேண்டும்.
மனது கொஞ்சம் பாரமாக இருந்தாலும், வாழ்க்கையை சந்திக்கும் தைரியம் வந்திருந்தது. முகத்திற்கு லேசாக இன்னும் கொஞ்சம் அலங்காரங்கள் பண்ணிக் கொண்டாள். அப்படியிருந்தும் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது.
ஃபோனின் மெல்லிசை அவளைக் கலைத்தது. எடுத்துப் பார்க்க, கதிர் அழைத்துக் கொண்டிருந்தான். விசிட்டிங் கார்டில் இருந்த அவன் நம்பரை ஃபோனில் ஏற்றியிருந்தாள். யோசனையோடே ஆன்சர் பண்ணினாள் கீதாஞ்சலி.
“சொல்லுங்கண்ணா.”
“கீதாம்மா, ஹோட்டல் ‘க்ரௌன் ப்ளாசா‘ ல தான் இப்போ நிக்குறேன். நீங்க சொன்ன டேட்டுக்கு ஒரு ஹால் அவைலபிளா இருக்கு. நீங்க பாத்துட்டு ஓ கே பண்ணினா, நான் புக் பண்ணிடுவேன்.”
“ஓ… இப்போ நான் என்னண்ணா பண்ணனும்?”
“மித்ரன் சார், மிஸஸ். ஜான்ஸன் கிட்ட பேசிட்டாங்க. அதனால நீங்க நேரா கிளம்பி இங்க வந்திடுங்கம்மா. நான் வெயிட் பண்ணுறேன். ஹோட்டல் வாசல்லையே நிக்குறேன். நீங்க தைரியமா வாங்கம்மா.”
கீதாஞ்சலிக்கு சிரிப்பு வந்தது. விட்டால் தன்னை தொட்டிலில் போட்டு ஆட்டுவார் போல இருக்கிறதே, என்று எண்ணிக் கொண்டாள்.
“சரிங்கண்ணா, இதோ கிளம்புறேன்.” சொன்னவள், மள மளவென்று தேவையானவற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்பினாள். கீழே இறங்கி வரவும், மஞ்சுளா டிஃபனை டைனிங் டேபிளில் வைக்கவும் சரியாக இருந்தது.
“அம்மா, எல்லாம் ரெடியா? கொஞ்சம் சீக்கிரம் போகனும்மா.” சொல்லியபடி அவசரப்பட்ட மகளை கூர்ந்து பார்த்தார் மஞ்சுளா.
“என்னாச்சு கீத்து? முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?” அம்மாவின் கேள்வியில் இட்லி இறங்க மறுத்தது கீதாஞ்சலிக்கு. தாயறியாத சூல் உண்டா என்ன?
“ஒன்னுமில்லைம்மா. நைட் கொஞ்சம் தூங்க லேட் ஆகிடிச்சு. யூ டியூப்ல வீடியோஸ் கொஞ்சம் பாத்துக்கிட்டு இருந்தேன். சரியான தூக்கம் இல்லை. அதனால இருக்கும்.” ஏதேதோ சொல்லிச் சமாளித்தாள் மகள்.
“அப்போ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமேம்மா? எதுக்கு இப்பிடி அடிச்சுப் பிடிச்சுக் கிளம்புற?”
“இல்லைம்மா, இந்த வருஷம் கிறிஸ்ட்மஸை கொஞ்சம் பெருசா, க்ரான்டா பண்ணப் போறோம். பெரிய ஸ்டார் ஹோட்டல் புக் பண்ணுறாங்க. வேலை கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்.” சொல்லியபடியே சாப்பிட்டு முடித்தவள், கை கழுவிக் கொண்டு வெளியேறினாள்.
“நான் கிளம்புறேன்மா.” வாசலில் நின்று குரல் கொடுத்த மகளிடம் லன்ச்சை நீட்டிய மஞ்சுளா, தலையசைத்து விடை கொடுத்தார். ஆனால் அவர் முகம் யோசனையைக் காட்டியது.
அவசர அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து பதினைந்து நிமிடங்களுக்குள் போய் சேர்ந்து விட்டாள் கீதாஞ்சலி. வாசலிலேயே காத்திருந்த கதிரைப் பார்த்த போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
“எதுக்குண்ணா இங்கேயே நிக்குறீங்க? உள்ளேயே வெயிட் பண்ணி இருக்கலாமே?”
“இல்லைம்மா, ஏதோ ப்ரெஸ் மீட்டிங் நடக்குது போல. உள்ளே பிரபலமான புள்ளிகள் எல்லாம் வந்திருக்குதாம். போலீஸ், பாதுகாப்புன்னு அமக்களப்படுது. பொம்பிளைங்க எதுக்கு தனியா நடமாடனும். அதுதான் நான் இங்கேயே நின்னுட்டேன்.” பேசியபடியே இரண்டு பேரும் ரிசப்ஷனுக்கு வந்திருந்தார்கள். ஆங்காங்கே கூட்டமாக வெள்ளை வேட்டி, சட்டைகளும், காக்கிச்சட்டைகளும் பேசியபடி நின்றன. பார்வையை ஒரு முறை சுழல விட்டவள் கதிரை நன்றியாகப் பார்த்தாள்.
“ரொம்ப தாங்ஸ்ண்ணா.”
“அட, இதுக்கு போய் தாங்ஸ் சொல்லிக்கிட்டு. உங்க வயசுல எனக்கொரு தங்கை இருக்கா. அவளா இருந்தா நான் இப்பிடித் தனியா விட்டிருவேனா? நீங்களும் எனக்கு அப்பிடித்தானேம்மா?” உரிமையாகச் சொன்ன கதிரைப் புன்னகையுடன் பார்த்தாள்.
“ஓ…! தங்கையோட பேரென்ன? ஒரு நாளைக்கு எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வாங்கண்ணா.” அவள் சொல்லவும், அந்த அன்பில் நெகிழ்ந்து போனான் கதிர்.
“கண்டிப்பா கூட்டிட்டு வர்றேன்மா. தாமரையும் உங்களைப் பாத்தா சந்தோஷப்படுவா.”
“தாமரை, ரொம்ப அழகான பெயர். உங்க அம்மா… அப்பா… எல்லாம்?” அவள் கேள்வியில் கசங்கியது கதிரின் முகம்.
“இப்போ எங்க கூட இல்லைம்மா. நானும், தாமரையும் மட்டும் தான். அனாதையா விட்டுட்டுப் போயிட்டாங்க.” நினைக்கவும் விரும்பாத பழங்கதைகள் கதிரைக் கலங்கச் செய்தது.
“சீச்சீ… என்ன வார்த்தைண்ணா சொல்லுறீங்க? ஏன்? நாங்கெல்லாம் இல்லையா உங்களுக்கு?” அந்த வார்த்தைகளில் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனான் கதிர். இதே வார்த்தைகளை சில நாட்களுக்கு முன்பாக மித்ரன் சொன்னது ஞாபகம் வந்தது.
‘சாத்தானை நினை, அது உடனேயே வந்து நிற்கும்‘, என்று கதிரின் ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதுபோல, மித்ரன் என்று அவன் நினைத்ததுதான் தாமதம், அங்கு வந்து சேர்ந்தான் மித்ரன்.
ரிசப்ஷனில் இருந்த பெண் இவர்கள் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஹாலை காட்டவும், பேச்சின் சுவாரஸ்யத்தில் இருவரும் பின்னால் வந்த மித்ரனைக் கவனிக்கவில்லை. ஹாலை பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள். கீதாஞ்சலியின் வாய் பேசிக் கொண்டிருந்தாலும், கண்கள் அந்த ஹாலை அளவிட்டுக் கொண்டிருந்தது. எங்கே, எதை, எப்படி வைக்கலாம் என்று அவள் மனது திட்டமிட்டுக் கொண்டிருந்தது.
“இந்த ஹால் ஓ கே வா கீதாஞ்சலி?” அந்த ஆழ்ந்த குரலில் திரும்பிப் பார்த்தாள் கீதாஞ்சலி. கதிருக்கும் கொஞ்சம் வியப்பாக இருந்தது. தன்னைப் போய் வேலையை முடிக்கச் சொல்லிவிட்டு, எதற்காக இவரும் கூட வந்திருக்கிறார்?
“சார், நீங்க எங்க சார் இங்கே? அதான் நான் வேலையை முடிச்சுட்டு வந்திருப்பேன் இல்லை. எதுக்கு நீங்களும் அலையுறீங்க?” சொன்னவனை ஒரு பார்வை பார்த்தான் மித்ரன். கதிரின் வாய் தானாக மூடிக்கொண்டது.
“ஹலோ சார்.” புன்னகைத்தாள் பெண்.
“ம்… ஹாலை புக் பண்ணிடலாமா கீதாஞ்சலி?” லேசாகப் புன்னகைத்தபடி கேட்டான் மித்ரன்.
“ஓ கே சார். புக் பண்ணிடலாம், சூப்பரா இருக்கு. டெக்கரேட் பண்ணுறதுக்கு, ரிஹர்ஸல் பாக்குறதுக்கு எல்லாம், எனி டைம் வரலாமா? இல்லை ஏதாவது ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கான்னு மட்டும் கேட்டு சொல்லுங்க சார்.”
“ம்… போகும் போது கேட்ரலாம்மா. வேற ஏதாவது…” மித்ரன் கொஞ்சம் இழுக்கவும் அவசரமாகத் தலையசைத்தாள் கீதாஞ்சலி.
“உங்க சைட் எல்லாமே பக்காவா பண்ணிக் குடுத்துட்டீங்க சார். இனி எங்க வேலைதான் பாக்கி.”
“ம்… அப்போ கிளம்பலாமா?” அவசரமாக அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான் மித்ரன். அரசியல் சம்பந்தப்பட்ட மீட்டிங் ஒன்று அந்த ஹோட்டலில் நடப்பதாக அப்போதுதான் அவனுக்கு தகவல் கிடைத்திருந்தது. அவசரமாகப் புறப்பட்டு வந்திருந்தான். எந்த நேரமும், எதுவும் நடக்க வாய்ப்பிருந்தது.
“சரி சார்.” கதிர் பின் தொடர, இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் கீதாஞ்சலி கேட்ட விஷயத்தை தெளிவு படுத்திக் கொண்டிருந்த மித்ரனைக் கலைத்தது அந்த ஆர்ப்பாட்டமான குரல்.
“ஹலோ மித்ரன்.” பரிட்சயமான அந்தக் குரலில் திரும்பிப் பார்த்தான் மித்ரன். மகேந்திரன் நின்று கொண்டிருந்தார். அவர் கண்கள் கீதாஞ்சலியை கொஞ்சம் அளவெடுத்தாற் போல தோன்றியது மித்ரனுக்கு.
“ஹலோ மகேந்திரன். என்ன இந்தப் பக்கம்?”
“எல்லாம் பொழப்பைப் பாக்கத்தான் மித்ரன். மீட்டிங்குக்கு வந்திருந்தேன். நம்ம வாழ்க்கையில பாதி நாள் இது மாதிரி இடங்கள்ல தானே கழியுது.” பேச்சு பேச்சாக இருந்தாலும், அவர் கண்கள் அடிக்கடி கீதாஞ்சலி வசமே இருந்தது. ஆராய்ச்சியாக கீதாஞ்சலியை பார்த்த அந்தப் பார்வையில் தெரிந்த ஏளனத்தை மித்ரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு சொல்லத் தெரியாத உணர்வு அவன் உடல் முழுவதும் வியாபித்து நின்றது. தன் முழு உயரத்திற்குமாக நிமிர்ந்தவன்,
“எக்ஸ்கியூஸ் மி மகேந்திரன்.” அந்தப் பெரிய மனிதரிடம்(?) சொல்லிவிட்டு, கதிரிடம் திரும்பினான்.
“கதிர், மேடத்தை அவங்க நர்சரியில ட்ராப் பண்ணிடு. அவங்களுக்கு லேட் ஆகுதுன்னு நினைக்கிறேன். மிஸஸ். ஜான்ஸன் கிட்டயும் வேற ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டுக்க.” சொல்லி முடித்தவன், கீதாஞ்சலியிடம் திரும்பினான்.
“நீங்க கேட்ட டீடெயில்ஸை நான் அப்புறமா உங்களுக்கு கால் பண்ணி சொல்லுறேன் மேடம். வேற ஏதாவது…”
“இல்லை சார். ரொம்ப தாங்ஸ், இவ்வளவு பண்ணியிருக்கீங்க! இதுக்கு மேல என்ன சார்?” சொல்லிவிட்டு கதிரோடு கிளம்பினாள் கீதாஞ்சலி. அவர்கள் கிளம்பும் வரை பொறுத்திருந்தவன்,
“சாரி மகேந்திரன். இந்த வருஷம் அவங்க நர்சரிக்கு எங்க ‘மித்ரன் க்ரூப்ஸ்‘ தான் ஸ்பான்ஸர் பண்ணுது. அது சம்பந்தமா வந்திருந்தாங்க. ஷி இஸ் அ டீச்சர்.” அவசர அவசரமாக விபரங்கள் கொடுத்தான் மித்ரன். அவளை எதிலிருந்தோ காப்பாற்றிய உணர்வு தோன்றியது.
“ஓ… அப்பிடியா?” கண்களில் யோசனையோடு சொன்னவர், கொஞ்ச நேரம் மித்ரனோடு அளவளாவி விட்டுக் கிளம்பிப் போனார்.
மித்ரன் கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தான். சற்று உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் போல தோன்றவே, அந்த ஹோட்டலில் இருந்த ‘பார்‘ இல் போய் அமர்ந்து கொண்டான். ஒரு ‘ஹாஃப் அ பைன்ட்‘ ஐ ஆர்டர் பண்ணி விட்டு நிதானமாக யோசித்தான்.
மகேந்திரனின் அந்த ஏளனப் பார்வை அவனை என்னமோ செய்தது. அந்தப் பெண்ணிற்கு தன்னால் ஏதோ இழுக்கு வந்துவிட்டது போல் மனம் கிடந்து தவித்தது.
பெண்களைப் பற்றி என்றைக்குமே அவன் கவலைப்பட்டது கிடையாது. ஏன்? ஸோனாவைக் கூட அவன் தேவைக்காக பத்திரிகை வரை இழுத்து விட்டவன் தானே? அன்று கவலைப்படாத மனம், இன்று ஏனோ பரிதவித்தது.
தன்னோடு ஒரு பெண் வந்தால், இந்த சமுதாயத்தின் பார்வையில் அவள் நிலை ஏளனத்திற்கு உரியதுதானா என்று நினைத்த போது, மித்ரனுக்கு வலித்தது. அப்படியென்றால் தான் இத்தனை வருட காலம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன?
ஏனோ சட்டென்று பாட்டியின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. அம்மா, அப்பாவை எப்போதும் அவன் அன்னியோன்யமாக பார்த்தது கிடையாது. அப்பாவிற்கு அவர் தொழில்தான் உலகம். அம்மாவிற்கு அவரின் லேடீஸ் க்ளப், நகைகள், பட்டுப்புடவை இதைத் தவிர வேறொன்றும் தெரியாது. ஆனால் தான் பார்த்து வளர்ந்த தாத்தா பாட்டியின் வாழ்க்கை கண்டிப்பாக வேறு. கண் மூடி நாற்காலியில் தலை சாய்த்துக் கொண்டான் மித்ரன்.
காலையில் பூஜை செய்யும் பாட்டி, தாத்தாவிற்கு காஃபி கொடுக்கும் பாட்டி, கணவருக்குப் பார்த்துப் பார்த்து பரிமாறும் பாட்டி, ஓய்வாக உட்கார்ந்து தன் துணையோடு பேசிச் சிரிக்கும் பாட்டி, சில பொழுதுகளில் முடியாதென்று மறுத்தாலும், தாத்தாவிற்கு அது நன்மை என்று தெரிந்தால் அதை செய்யத் தூண்டும் பாட்டி, என ஜெயந்தி அவனை ஆக்கிரமித்துக் கொண்டார்.
அந்த நினைவே சுகமாக இருந்தது மித்ரனுக்கு. அப்படியென்றால், அப்பாவும் அம்மாவும் சந்தோஷமாக இல்லையா? இப்படி எதுவும் அம்மா செய்து அவன் பார்த்ததில்லையே. ஏனோ பாட்டியின் இடத்தில் கீதாஞ்சலியை வைத்துப் பார்க்கத் தோன்றியது.
அவளும் இப்படித்தான் இருப்பாளா? பாட்டியைப் போல, தன் கணவன், குடும்பம் என வாழ நினைக்கும் பெண்ணா அவள்? கதிர் இதற்காகத் தான் தன்னோடு போராடுகிறானா? மிடில் க்ளாஸ் என்றானே? தன் பாட்டி மிடில் க்ளாஸ் இல்லையே? அப்படியென்றால், ஒரு பெண் சமுதாயத்தின் எந்த நிலையில் இருந்தாலும், அவளுக்கு அவள் குடும்பம்தான் முதன்மையா? எத்தனை உயர்ந்த பதவியில் பெண்கள் இருந்தாலும், அவர்கள் வீட்டில் அவர்களது சந்தோஷம் இந்த குறுகிய வட்டத்திற்குள் தானா?
அடங்க மறுத்த மனது எங்கெங்கோ தறிகெட்டு அலைந்தது. ‘ஒரு குடும்பத்தைக் கலைத்து விடாதீர்கள்‘ என்று கதிர் சொன்னதின் அர்த்தம் லேசாகப் புரிந்தது. அப்படியென்றால் அந்தப் பெண் தனக்கு வேண்டாமா? அவளை மறந்து போக தான் தயாரா?
‘இல்லை‘, காலதாமதம் இன்றி அவனது ஆழ்மனது கூச்சலிட்டது. அவள் எனக்கு வேண்டும். எப்படியாவது அந்தப் பெண் எனக்கு வேண்டும். மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு பிசைய, தனக்கு முன்னால் இருந்த அந்தத் தங்க நிறப் பானத்தை கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினான் மித்ரன்.
* * * * * * * * * *
அந்த black Audi அமைதியாக போய்க்கொண்டு இருந்தது. இளையராஜாவின் மெல்லிய காதல்ப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, ஸ்டியரிங்கில் தாளமிட்டுக் கொண்டிருந்தான் அபிமன்யு.
ரஞ்சனிக்கும், ஈஷ்வரனிற்கும் சொந்தத்தில் ஒரு திருமணம் இருந்ததால், நர்சரி முடிந்ததும் தருணை பாட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு ரஞ்சனியிடமிருந்து தகவல் வந்திருந்தது.
அம்மா கால் பண்ணி சொல்லவும், கம்பெனியிலிருந்து நேராகக் கிளம்பி வந்திருந்தான் அபி. ட்ரைவரை அனுப்பி இருக்கலாம். நல்ல நம்பிக்கையான மனிதர். இருந்தாலும் மனது அடம்பிடித்து அவனைக் கிளம்ப வைத்திருந்தது.
அந்த முகத்தைப் பார்க்கும் ஆவலில் கிளம்பி வந்திருந்தான். மித்ரனை பார்க்கப் போவதாக அன்று அவள் சொன்னபோது, முதலில் கொஞ்சம் யோசனையாக இருந்தாலும், பிற்பாடு சுறுசுறுவென கோபம் மூண்டது. ‘அந்தக் குடியைக் கெடுக்கும் பயலோடு இவளுக்கு என்ன வேலை?’ என்று கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது. ஆனால் மிஸஸ். ஜான்ஸனின் உத்தரவின் பேரில் அவள் போவது தெரிந்த போது, அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது அவள் தொழில் சம்பந்தப்பட்டது. அதனால் எச்சரித்தே அனுப்பி வைத்தான்.
இருந்தாலும் மனது கொஞ்சம் சஞ்சலப்பட்டது. அந்தப் பெண்ணின் தைரியம் அவனைச் சமாதானப் படுத்தினாலும், ஏனோ ஒரு படபடப்பு உள்ளுக்குள் இருக்கவும் பின்னோடு கிளம்பிப் போனான்.
அது மித்ரனின் கோட்டை என்று நன்றாகத் தெரிந்திருந்த போதும், அவன் எதைப்பற்றியும் யோசிக்காமல், காரை பிஸ்கட் ஃபாக்டரிக்குப் பக்கத்திலேயே நிறுத்திவிட்டுக் காத்திருந்தான். உள்ளே நுழைந்த பைக் திரும்பி வெளியே வரும் வரையிலும் இரண்டு, மூன்று முக்கியமான ஃபோன் கால்களை பேசி முடித்துவிட்டுக் காத்திருந்தான். பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் அந்த பைக் வெளியே வரவுமே, அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. தன்னைக் கடந்து போன பைக்கையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அபிமன்யு.
சட்டெனத் திரும்பிப் பார்த்த அந்த முகம் தன் காரை ஆராயவும், அவனுக்கு சுவாரஸ்யம் பிறந்தது. அவள் கண்கள் தன்னை ஊன்றிப் பார்த்த விதத்தில் அவள் தன்னைக் கண்டு கொண்டது தெளிவாகப் புரிந்தது. ஆச்சரிய மிகுதியில் மிரண்டு விழித்த அந்தக் கண்களை மீண்டும் பார்க்கவே இப்போது வந்திருந்தான்.
காரைப் பார்க் பண்ணிவிட்டு காத்திருந்தான் அபிமன்யு. ரஞ்சனி ஏற்கனவே கால் பண்ணி நர்சரிக்குச் சொல்லி இருப்பாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் உள்ளே போகாமல் அவள் வெளியே வரட்டும் என்று எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தான்.
அவனை ரொம்ப நேரம் காக்க வைக்காமல், தருணை அழைத்தபடி வந்து கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. அம்மானைக் கண்ட மாத்திரத்தில் குழந்தை மகிழ்ச்சியோடு கை காட்டியது. பதிலுக்குக் கை காட்டியவன் புன்னகையுடன் அவள் முகம் பார்க்க, அந்தக் கண்கள் அவனைப் பார்க்க மறுத்தது.
கேள்வியாகப் புருவங்கள் நெளிய, அவளை உற்றுப் பார்த்தான் அபிமன்யு. இல்லை, அன்று ‘லிபர்ட்டி ப்ளாஸா‘ வில் தான் பார்த்த முகம் இல்லை இது. தன் கண்ணொடு கண் கலந்து கதை பேசிய அவள் இல்லை இவள். அமைதியாக அவளையே பார்த்தபடி காரை விட்டு இறங்காமல் உட்கார்ந்திருந்தான் அபிமன்யு.
அவன் இறங்கமாட்டான் என்று புரியவும் அவளே காரைத் திறந்து, பின் சீட்டில் இருந்த ‘பூஸ்டர் சீட்‘ இல் தருணை உட்கார வைத்து, சீட் பெல்ட்டை பொருத்திவிட்டாள்.
“பை தருண், ஸீ யூ ட்டுமோறு“. அங்கொருவன் இருப்பதையே கண்டு கொள்ளாமல் குழந்தைக்கு பை சொன்னவளை எரிச்சலுடன் பார்த்தான் அவன். கோபம் வந்த போதும் அடக்கிக் கொண்டான்.
“பை கீதா.” சொன்ன தருண் அபியைப் பார்த்துச் சிரிக்கவும்,
“கண்ணா, வெயிட் அ மினிட். கீதாக்கிட்ட மாமா கொஞ்சம் பேசிட்டு வந்தர்றேன்” என்றான் அபி.
“ஓ கே மாமா.” சமர்த்தாகச் சொன்னது குழந்தை. காரை விட்டு சட்டென்று இறங்கிய அபி,
“அஞ்சலி.” என்றான். உள்ளே போகத் திரும்பியவள், அந்தக் குரலில் சர்வாங்கமும் அதிர அப்படியே நின்றாள். இப்படித் தன்னை யாரும் அழைத்ததுமில்லை, அழைக்க அவள் அனுமதித்ததும் இல்லை. பள்ளி நாட்களில் தோழிகள் வேண்டுமென்றே ‘அஞ்சு எலி‘ என கேலி பண்ண இப்படி அழைப்பதால், யாராவது இப்படி அழைத்தால் அவளுக்கு அத்தனை கோபம் வரும். இன்று அனைத்தும் மறந்து நின்றிருந்தாள்.
மெதுவாக அவள் அருகே நடந்து வந்தவன், அவள் முகம் பார்க்க, அப்போதும் அந்தக் கண்கள் அவனை சந்திக்க மறுத்து நிலம் பார்த்தது. அவள் மௌனம் அவனை சங்கப்படுத்தப் பொறுமை இழந்தான்.
“என்ன ஆச்சு?” கேட்டபடி அவளையே பார்க்க, மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.
“என்ன ஆச்சுன்னு கேட்டேன்.” அவன் குரலில் இப்போது இறுக்கம் கூடியிருந்தது.
இதற்கு என்னவென்று பதில் சொல்வது? ஏதோ பலகாலம் பழகியது போல், ‘என்ன ஆச்சு?’ என்றால் அவள் எதைச் சொல்வாள்? உன் பக்கம் சாயும் என் மனதை நான் தடுக்க நினைக்கிறேன். அதனால்தான் இந்த மௌனம் என்று அவனிடம் சொல்லி அழவா முடியும்? அவள் முகத்தில் தோன்றி மறைந்த பாவங்களைப் பார்த்தபடி இருந்தவன்,
“அஞ்சலி, என்னைப் பாரு.” என்றான். அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் லேசாக நீர் கோர்த்தது. இப்போது அவன் முகத்தில் குழப்பம் தெரிந்தது.
“என்னாச்சு?” மீண்டும் அவன் அழுத்திக் கேட்க, தலையை மறுப்பாக ஆட்டினாள்.
“ஏன், வாயைத் தொறந்து பேசினா முத்தா கொட்டிரும்? எதுக்கு இப்போ இந்தக் கண்ணீர்?”
“ஒன்னுமில்லை.”
“பாத்தா அப்பிடித் தோணலையே?”
“உங்களுக்கு என்னை எத்தனை நாளாத் தெரியும் சார்? அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லுறேன்ல. அதுக்கப்புறமும் இல்லை, என்னமோ இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்?” இயலாமையில் அவள் கோபமாக கத்தவும், காரில் ஓங்கி ஒரு குத்து குத்தினான் அபி. அந்த அடியில் அதிர்ந்து போனாள் கீதாஞ்சலி.
“ஆமா, தெரியாதுதான். ரொம்பத் தெரியாதுதான். ரெண்டு தடவை தான் பாத்திருக்கேன். ஆனா ஏதோ ஒன்னு சொல்லுது, உங்கிட்டே எதுவோ சரியில்லைன்னு.” அந்த உரிமையான குரலில் ஆடிப்போனாள் கீதாஞ்சலி. கண்களில் நிறைந்து நின்ற கண்ணீர் கோடு தாண்டியது.
“ம்ப்ச்… எதையுமே சொல்லாம இப்பிடி அழுதா அதுக்கு என்ன அர்த்தம் அஞ்சலி?”
“ஒன்னுமில்லை சார், தருண் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கான். நீங்க கிளம்புங்க.” அவள் சொல்லவும், குழந்தையைத் திரும்பிப் பார்த்தான் அபிமன்யு. இவர்களையே பார்த்தபடி இருந்தான் தருண்.