MMOIP (E)

1650508912096

அத்தியாயம் 24 எபிலாக்

 

ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு…

குலைதெய்வக் கோவிலில் குடும்பம் கூடியிருக்க, அன்றைய பூஜைக்கு ஒரு பக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கவும், இன்னொரு பக்கம் பொங்கல் வைக்க கோவிலின் முன்னிருந்த இடத்தை சுத்தம் செய்து, கருங்கல் வைத்து அடுப்பாக்கி ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

கோவில் மரத்தடியின் திட்டில் வெற்றி அமர்ந்திருக்க, அவன் கைகளில் ரோஜா மலர் குவியலாய் அவனின் மகள் இருந்தாள்.

ஆம் வெற்றி, தேனிற்கு நான்கு மாதங்கள் முன்தான் அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது.

பாட்டி நல்லபடியாக குழந்தை பிறந்ததும் குலதெய்வத்துக்கு குடும்பத்தோடு பொங்கல் வைத்து கும்பிடுவதாக வேண்டுதல் வைத்திருக்க, அதற்குதான் இந்த பூஜை நடைபெறுகிறது.

‘தாமரைச் செல்வி’… அவனின் தாயே மீண்டும் பிறந்து அவனிடம் வந்துவிட்டது போல அவ்வளவு மகிழ்ச்சி அவனுக்கு.

குழந்தையை கையிலிருந்து விலக்க மனம் வராது வெற்றிக்கு. மற்றவர்கள் ‘அட விடுடா குழந்தைய கையிலயே வச்சிக்கிட்டு. அப்பறோம் அதே பழகிடும்.’ என திட்டியப் பிறகே மனமே இல்லாமல் கட்டிலில் படுக்க வைப்பான்.

இப்போது கூட, “இங்க பாருடா… அப்பா பாரு.” என விளையாட்டு காட்டிக் கொண்டிருக்க, பொக்கை வாயைத் திறந்து சிரித்துக்கொண்டு அவன் மனதை உருக வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, “ம்ம்… ஆரம்பிச்சாச்சு அப்பா மகள் கொஞ்சல்.” என சொன்னவாறே அங்கு வந்தாள் தேன்மொழி.

குழந்தை பேரினால் சற்று பூசிய உடல்வாகோடு தாய்மை மிளிரும் அழகோடு இருந்தாள்.

சலித்துக் கொள்வது போலச் சொன்னாலும், அவள் முகம் முழுதும் புன்னகை மட்டுமே இருந்தது.

நிமிர்ந்து மனைவியைப் பார்த்தவன், “இங்க பாரு மொழிமா எவ்ளோ அழகா சிரிக்குறா… கண்ணு வச்சுட போறேன் நானே… சுத்தி போடணும் குட்டிக்கு.” என அவன் சொல்ல,

“நீங்க பாத்தா கண்ணு போடுறதா ஆகாது த்தான்.” என்றாள்.

ஒரு புன்னகை செய்தவன் மீண்டும் மகளிடம் சஞ்சரித்துவிடவும், லேசாக மனம் சுணங்கிப் போனது அவளுக்கு.

மனைவி, மகள் இருவருக்குமே பாசத்தை அருவியாக கொட்டுகிறான்தான் வெற்றி. ஆனாலும் ஏனோ மகள் மீது கொஞ்சமே பொறாமை வரவே செய்தது.

தலையை உலுக்கி அதை விரட்டியவள், “த்தான் வாங்க அங்க அங்க உங்கள கூப்பிடுறாங்க.” என அழைக்க,

மனமே இன்றி மனைவியிடம் குழந்தையைக் கொடுக்கவும், அவனை இப்போது தேன் கொஞ்சம் முறைத்துப் பார்க்க, அதை வெற்றி கவனித்துவிட்டான்.

“ஏன் மொழி முறைக்கற, அதான் பாப்பாவ கொடுத்துட்டேன்ல.” என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு புரியாமல் கேட்க,

“ம்ம்… இவ்ளோ நேரம் உங்க பொண்ணு கூடதான இருந்தீங்க. ஆனா இப்போ எங்கிட்ட கொஞ்ச நேரம் அவள கொடுக்க உங்க முகம் சோகமாகுது.

இவ்ளோ நேரம் நானும்தான உங்க பக்கத்துல இல்ல. என்ன தேடவே இல்ல. வர வர நீங்க என்ன கண்டுக்கறதே இல்ல த்தான். பொண்ணு வந்ததும், பொண்டாட்டிய மறந்தாச்சு.” என நீளமாக பொரிய, வெற்றி பட்டென சிரித்துவிட்டான்.

அதில் இன்னும் சினம் கொண்டவள், “போங்க… மொழிமா மொழிமானுட்டு எங்கிட்ட வருவீங்கள, அப்போ உங்கள பாத்துக்கறேன்.” என மிரட்டல் விடுத்து நகர,

“மொழி நில்லு நில்லு…” என அவள் கைப்பிடித்து நிறுத்தியவனுக்கு இன்னும் சிரிப்புதான் நிற்கவில்லை.

சில வாரங்களாக மனைவி அவ்வப்போது இதுபோல பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயன்று, தெரியாமல் குழம்பியவனுக்கு விடை கிடைத்துவிட்டதல்லவா!அதுவும் அவனுக்கு அந்த விடை மிகவுமே பிடித்தது.

“ஓஹ்… என் பொண்டாட்டிக்கு பொண்ணு மேலயே பொறாமை!” அவன் சொல்ல,

“அப்டிலாம் ஒன்னும் இல்ல.” அவள் முறுக்கிக் கொண்டு கூறினாள்.

உண்மையில் அவளுக்கு இது போன்ற எண்ணங்கள் அசட்டுத் தனமானதாகவும், கண்பட்டு விடுமோ என பயத்தையும் கொடுக்க, இந்த எண்ணம் தோன்றிய உடனே விரட்டியடிப்பாள்.

ஆனாலும் உள்ளே பல நாட்களாக இருந்த சுணக்கத்தை இன்று அவனிடமே வெளிப்படுத்திவிட்டாள்.

அவனிடம் சாந்த ஸ்ரூபமாக இருந்ததெல்லாம் கனவு போல தோன்றியது. அவனின் சரிபாதியான பின், அவனின் அன்பில் திளைத்தவள் நன்றாக அவனிடம் வாயாட ஆரம்பித்திருந்தாள்.

வெற்றிக்கோ மனைவி மனது புரிய, அவளருகே சென்று மெல்ல அவள் கூந்தலை ஒதுக்கிவிட்டவன், “என்ன மொழி அப்படி சொல்லிட்ட?உன்ன எப்படி நான் மறப்பேன்?” எனக் கேட்டு அவள் நெற்றியோடு நெற்றி முட்டி,

“இனி மறந்துட்டேன்னு இல்ல, அச்சோ கொஞ்சல் தாங்க முடில கம்முனு இருங்க த்தான் ன்னு சொல்ற அளவுக்கு கொஞ்சிட வேண்டியதுதான். அதான் இனி என் முதல் வேலை.” எனக் கூற,

கோபத்தை மறந்தவள், வெட்கச் சிரிப்போடு, ‘பார்க்கலாம்’ என்பதுபோல தலையசைத்தாள்.

அந்த சிரிப்பில் எப்போதும் போல மயங்கியவன், மனைவியைக் அளவில்லா காதலாக பார்த்து வைக்க, அவளும் கணவனை இமைக்காமல் நோக்கினாள்.

அப்போது, “ம்க்கும்…” என்ற செருமல் சத்தம் கேட்க, இருவரும் டக்கென விலகி நின்று, யாரென பார்க்க, கதிர்தான் நின்றிருந்தான்.

தேன்மொழி ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகரவும்,

தமயன் அருகே வந்தவன், “ண்ணா இங்க என்ன லவ் சீன் ஓட்டிட்டு இருக்கீங்க? குழந்தையே பெத்துட்டு.” என வார,

“டேய்…” என வெற்றி பல்லைக் கடிக்கவும்,

அதில் அசடு வழிந்து ‘ஈ’ என சிரித்தவன், “சரி அத விடுங்க ண்ணா. வாங்க அங்க கூப்பிடுறாங்க உங்கள…” என அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகாத குறையாக முன்னே செல்ல,

“கைய விடுடா… குழந்தையா நான் வழி தெரியும் எனக்கு.” என அவன் சொன்னதைக் கதிர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

தலையிலேயே அடித்துக் கொண்டவன், தம்பியுடன் பேசியபடியே நகர்ந்தான்.

அதன்பின் சற்று நேரத்தில் பூஜை ஆரம்பமாக, தேங்காய் பழம், பொங்கல் என படைத்து தெய்வத்தை மனமார வணங்கியவர்கள், பிரசாதத்தோடு அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர்.

வள்ளியம்மையும், மீனாட்சியும் உட்கார்ந்து பேசியவாறு இருந்தனர். இப்போதெல்லாம் அவர்கள் இருவருக்கும் நல்ல பேச்சு இருந்தது.

கனகம், தர்மா இருவருமே எப்போதும் போல… சந்தோசமாக வலம் வரும் தேன்மொழியை பார்த்து மகிழ்ச்சியுற்றனர்.

சுந்தரம், மாணிக்கம் இருவரும் வந்திருக்கவில்லை.

அது மற்ற அனைவர் மனதுக்கு ஒருபோல இருந்தாலும், அவர்களை ஒரேயடியாக யாரும் ஒதுக்கி வைக்கவில்லை.

ஆனாலும் அவர்களுக்கே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது போலும். தள்ளியே நின்றனர்.

வசதியாக சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்து புவி பொங்கலை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருக்க, கதிர் அவளருகே அமர்ந்து கண் சிமிட்டக் கூட தோன்றாமல், மனைவியை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

‘மொஜுக் மொஜுக்’ என்று அவள் பொங்கலை சாப்பிட… அதைக் காண அவனுக்கு இரு கண்கள் போதவில்லை.

“மெதுவா சாப்பிடு புவி. நான் புடுங்கிக்க மாட்டேன்.” என இடையே கிண்டல் செய்து அவள் முறைப்பை பெறவும் மறக்கவில்லை அவன்.

அவளை வம்பிலுக்காவிட்டால் கதிருக்கு தூக்கம் எப்படி வரும்?

அதில் கணவனை முறைத்துவிட்டு, “நீங்க என்ன புடுங்கி சாப்பிடறது, அத குடுங்க.” என அவன் கையிலிருந்த பாக்குமட்டை தட்டை பிடுங்கப் பார்க்க, 

“புவி… இப்போவே நெறய சாப்பிட்ட. வாந்தி வந்துர போகுது. கம்முனு இரு.” என்று அவன் கண்டிப்பும்… அக்கறையுமான குரலில் மறுத்தான்.

“அதுலாம் வராது த்தான்.” என்றவள்,

“நான் கொஞ்சம்தான் சாப்பிட்டேன்.” என நான்கு கரண்டி பொங்கலை அசால்ட்டாக விழுங்கிவிட்டு மனசாட்சி இல்லலாமல் அடித்துவிட,

அதிர்ந்தவன், “கொஞ்சமா? நீ சாப்பிட்டது கொஞ்ச…மா?” எனக் குரலில் ஏற்ற இறக்கம் போட்டு கிண்டலாக கேட்டான்.

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவனை முறைத்தவள், “நான் சாப்டது எனக்கு கொஞ்சம்தான்.” என்று உதட்டை சுழித்தவள்,

“எனக்கு அது போதும். நம்ம பாப்பாக்கும் வேணும்ல த்தான். அதான்…” என தன் ஐந்துமாத கருவை வெளிப்படுத்திய வயிற்றை தொட்டுக் காட்ட, அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. 

இப்போதெல்லாம் எதை உண்டாலும் இதையேதான் சொல்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுகிறாள்.

அது அவனுக்கு பிரச்சனையில்லை. ஆனால் கொஞ்சம் ஆசைக்கு அதிகம் உண்டாலும், மசக்கையால் வாந்தி வந்து அவளை படுத்தி எடுக்க, அதன்பொருட்டே வேண்டாம் என்றான்.

ஆனால் அவனிடம் கெஞ்சி… கொஞ்சி அதையும் உண்ட பிறகுதான் அவளுக்கு திருப்தியாக இருந்தது.

உள்ளே இருந்த குட்டிக்கும் பொங்கல் பிடித்தது போலும், அவளுக்கு வாந்தி வரவில்லை.

சற்று நேரம் உண்ட களைப்பில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்தனர்.

அவள் தோளை மெல்லப் பற்றியவன்… எப்போதும் போல மனைவியின் கர்ப்பம் தரித்திருக்கும் வயிற்றை லேசாக வருடி… சிசுவினை உணர்ந்து சிலிர்த்துவிட்டு அழைத்து வர, அதில் புன்னகையாக அவனிடம் நெருங்கி நின்றவள் மெதுவாக உடன் நடந்தாள். அங்குக் கோவிலிலிருந்து கிளம்பும் பொருட்டு குடும்பமே கூடியிருந்தது.

வெற்றி, தேன் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு நிற்க… கதிர், புவனாவை கைவளைவில் பாதுகாப்பாக பிடித்தபடி நின்றான்.

இரு ஜோடியும் அத்தனை அழகும், அந்நியோன்யமுமாக நின்றிருந்தனர்.

பாட்டி யார் கண்ணும் பட்டு விடக்கூடாது என அவர்களுக்கு சுற்றிப் போட்டார்.

இன்று போல என்றும் அவர்கள் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத நிறைவான வாழ்வு வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.

 

சுபம்