MMV – 27 Pre – Final

MMV – 27 Pre – Final

அத்தியாயம் – 27

அவர்கள் வந்த கார் வீட்டின் முன்னாடி நின்றிருக்கவே காரைவிட்டு இறங்கியவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன்னரே மீண்டும் இரண்டு கார்கள் வந்து நிற்க அதில் மொத்த குடும்பமும் வந்து இறங்கியது.

அவர்களைப் பார்த்தும், “வாங்க..” என்று மரியாதையோடு அழைத்த பாரதி, “அவளுக்கு குடிக்க ஏதாவது ஜூஸ் கொண்டு வா..” என்றான். நிலா, ரேணு, ரித்து மூவரும் சமையலறைக்கு சென்றனர்.

கலையரசன் – மாலதி இருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வந்திருந்தனர் .வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு திரும்பிய நாதன் பாரதியைப் பார்த்தும், “பாரதி தம்பி வந்தாச்சு..” என்றார்.

சசிதரனும், வித்யாவும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு அமைதியாக இருக்க, “வாங்க உட்காருங்க..” என்ற பாரதியின் குரல்கேட்டு நிமிர்ந்தனர்.

அவனின் பின்னோடு வீட்டிற்குள் நுழைந்த பட்டாளத்தைப் பார்த்த வித்யா, “அண்ணா நீங்க எல்லாம் இங்க எப்படி..” என்று அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிடவே பாரதிக்கு உண்மை நொடியில் விளங்கிவிட, ‘ஓஹோ இவங்களும் சுமிம்மா பட்டாளத்தை சேர்ந்தவங்கதான்..’ என்று நினைத்தான்.

“நீங்க டாக்டர் வீட்டிற்கு போறேன்னு சொல்லிட்டு வந்த..” நிரஞ்சன் அவளின் கேள்வி எழுப்பிட, “இவருதான் ரஞ்சன் டாக்டர்..” என்று பாரதியைக் கைகாட்டியவனின் மனதில் அந்த சந்தேகம் எழுந்தது.

“ஆமா சுமிம்மாவைத் தேடி போறேன்னு சொன்னீங்க. இப்போ எல்லோரும் இங்கே வந்திருக்கீங்க..” என்று கேட்டான் சசிதரன்.

அவர்களை உட்கார வைத்து அவன் இயல்பாக பேசிக்கொண்டிருக்க நிலா அவர்களுக்கு ஜூஸ் கலந்து வந்து கொடுத்தாள். ரித்துவும், ரேணுவும் அமைதியாக நின்றிருக்க அவர்களுடன் ஓட்டிக்கொண்டது இரண்டு வாலுகளும்!

“சுமிம்மா இங்கதான் அண்ணா இருக்காங்க..” என்ற சங்கரியை மற்றவர்கள் கேள்வியாக நோக்கிடவே இனியும் மறைக்க முடியாது என்றுணர்ந்தவால் உண்மையைச் சொல்லிவிட்டாள்

அதைகேட்ட மற்றவர்கள் கோபத்துடன் அவளைப் பார்க்க, “இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல..” என்று அவளை அதட்டினாள் அனிதா.

“சும்மா அவளை திட்டாதே..” என்று மனைவியை அதட்டினான் மகேஷ்.

“அண்ணனுங்க எல்லாம் சேர்ந்து அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்கீங்க..” என்று கார்த்திகாவும் தன் பங்கிற்கு பேசவே, சங்கரி மறுபேச்சு இன்றி அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அதையெல்லாம் கவனித்த நிலாவின் பொறுமை காற்றில் பறந்தது.

“அவளை திட்டாதீங்க. நாங்கதான் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி அனுப்பினோம். அவமேல தவறில்ல..” என்றவளை மற்றவர்கள் கேள்வியாக நோக்கிட, “நிலா நீ அமைதியா இருக்க மாட்டா..” என்று மனைவியை அதட்டினான் பாரதி.

“நீங்க ஏன் அப்படி சொல்ல சொன்னீங்க..”  சசிதரன் அவளிடம் கேள்வி எழுப்பினான்.

“எங்க அம்மாவை அனுப்ப எங்களுக்கும் மனசு வரணுமில்ல அண்ணா. அதுக்குதான் கொஞ்சம் பொறுமையாக இரும்மா. நாங்க முடிவெடுத்துட்டு சொல்றோம் என்று சொன்னோம் இது ஒரு குத்தமா?” ரேணுவும், ரித்துவும் அவனிடம் சண்டைபோட கிளம்பிவிட்டனர்.

கொஞ்சம் விட்டால் அங்கே பெரிய பூகம்பமே வரும் என்று உணர்ந்த பாரதி, “நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேளுங்க..” என்றதும் மற்றவர்களின் கவனமும் அவனின் பக்கம் திரும்பியது.

சுமிம்மாவை சந்தித்த நாளிலிருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் அவர்களிடம் கூறிய பாரதி, “ஒரு வாரம் இணைந்திருந்த உங்களுக்கே அவங்கமேல இவ்வளவு பாசம் இருக்கே. ஐந்து வருடம் அவங்களோட இருந்திருக்கோம். எங்களோட பாசம் மட்டும் எப்படி உடனே மாறும்..” என்றவனின் கேள்விக்கு மற்றவர்களிடம் பதில் இல்லை.

அவர்கள் அனைவரும் அமைதியாக இருக்கவே, “திடீரென்று வந்து சங்கரிதான் அனைத்து உண்மையையும் சொன்னா. சுமிம்மா மருமகள் ஹெல்த் பற்றிக் கேட்டதும் எங்களோட மனசும் பதறியது..” என்றவன் அந்த நாளின் நினைவில் மௌனமாக இருந்தான்.

அவனின் நிலையுணர்ந்த நிலா, “அன்புக்கு எங்கும் மனங்களுக்கு உலகில் பஞ்சமில்ல. அந்த அன்பை எங்களுக்கு கொடுத்த சுமிம்மாவை உங்களோட அனுப்பிவைக்க எங்களோட மனசு ஏத்துக்கணும் என்ற முடிவில் தான் சங்கரியிடம் உண்மையைச் சொல்ல வேண்டாமென்று சொன்னோம்.” என்றவள் தெளிவாகக் காரணத்தைக் கூறினாள்.

அதன்பிறகு அங்கே பலத்த அமைதி நிலவிட பாரதியின் தோளில் கைபோட்ட நிரஞ்சன், “சுமிம்மாவை அனுப்ப யாருக்கே மனசு வராது பாரதி. சோ நீங்க ஃபீல் பண்ணாதீங்க. கன்னியாகுமரி ரொம்ப தூரமில்ல ஒருநாள் டிராவல் தான்..” என்றான் புன்னகையுடன்.

“அம்மாவை பார்க்க நாங்க வருவோம். அதுக்கு நீங்க தடை சொல்லாமல் இருந்ததே மனசுக்கு நிறைவாக இருக்கு அண்ணா..” திவாகரின் குரலில் கண்டிப்புடன் கூறினான்.

அதுவரை நாதனை மறந்திருந்த பாரதி அவரின் பக்கம் திரும்பி, “அப்பா இவங்க எல்லாம் சுமிம்மாவைத் தேடி வந்திருக்காங்க..” என்றான்

அஜய் அவரிடம் அனைத்தையும் சொல்லியிருந்த காரணத்தால், “அஜய் சொன்னான் பாரதி..” என்றார்.

அதன்பிறகு வித்யாவின் பக்கம் திரும்பி, “நீங்க அனுப்பிய ரிப்போர்ட் எல்லாமே செக் பண்ணிட்டேன்.  உங்களுக்கு ஹெல்த் கொஞ்சம் வீக்காக இருக்கு. நான் எழுதி கொடுக்கும் மாத்திரைகளை விடாமல் கன்டினியூ பண்ணுங்க. உங்க பிரச்சனை சரியாவிடும்..” என்றதுமே வித்யாவிற்கும், சசிதரனுக்கும் மனதிலிருந்த பாரம் கொஞ்சம் இறங்கிவிட நிம்மதியாக பெருமூச்சு விட்டனர்.

“வித்யாக்கு குழந்தை இல்ல என்ற கவலை எங்களுக்கும் இருக்கு அண்ணா. இன்னைக்கு நீங்க சொன்னதைக் கேட்டு மனசுக்கு நிம்மதியாக இருக்கு..” என்றாள் நித்தி நிம்மதியுடன்.

“இப்போ இதெல்லாம் பெரிய பிரச்சனையே இல்லம்மா..” என்றான் பாரதி புன்னகையுடன்.

“அம்மா எங்கே அண்ணா..” என்று நித்தி தயக்கத்துடன் கேட்டாள்.

“அவங்க மாலுக்கு போயிருக்காங்க. அஜயும், பிரவீனும் அவரை அழைச்சிட்டு வர போயிருக்காங்க..” என்றதும் மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்.

அவர்களுக்கு தன்னுடைய குடும்பத்தை அறிமுகபடுத்திய பிறகு அவர்கள் எல்லோரும் அமர்ந்து கலகலப்பாக பேசிக்கொள்ள திவாகர், ரேணு, ரித்தி மூவரும் சுமிம்மா இந்த ஐந்து வருடம் செய்த லூட்டிகளை எடுத்துவிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சுமிம்மாவுடன் வீட்டிற்குள் நுழைந்தான் அஜய்.

தன்னுடைய மகன், மகள், மருமகள், மருமகன் மற்றும் அவர்களோடு நின்றிருந்த பட்டாளத்தை கவனித்த சுமிம்மாவின் கண்கள் தானாக கலங்கியது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர்களை பார்த்தவர் கால்கள் அங்கேயே வேரூன்றி போனது..

ஒரு பக்கம் தன்னுடைய குடும்பம், இன்னொரு பக்கம் இவர்கள் என்று இரண்டு கரைகளுக்கு நடுவே அவரின் மனம் கிடந்து தவித்தது. இருபக்கமும் இருப்பது அவரின் குடும்பம் தான். ஆனால் இப்பொழுது யாரையும் உதறிவிட்டு விலக அவரால் முடியாது.

அவர் அமைதியாக நின்றிருக்க திவாகர் அவரின் அருகில் வந்து, “எங்களோட அம்மா எதுக்கு கலங்க மாட்டாங்க..” என்றவன் அவரை அணைத்துக் கொண்டான்.

அவனின் கன்னத்தை பாசத்தோடு வருடிய சுமிம்மா, “அம்மா மேல கோபம் வரல..” என்று கேட்க அவன் மறுப்பாக தலையசைத்தான்.

ரேணு அவரின் கைப்பற்றி, “சுமிம்மா இன்று நீங்கதான் முடிவெடுக்க வேண்டும்..” என்றதும் அவரின் பார்வை அஜயின் மீது கேள்வியாக படிந்தது. அவனும் அவரையே இமைக்காமல் பார்த்தான்.

நிலா தன்னுடைய கண்ணீரை மறைக்க பாரதியின் மார்பில் முகம் புதைக்க அவனுக்கும் அவளின் வலி புரிந்தது. அதற்குள் சுமிம்மாவை கண்ட நித்தி, “அம்மா..” என்று அழுகையுடன் ஓடிவந்து கட்டியணைத்து கதறியழுதாள் நித்தி.

“நித்தி என்னடா குழந்தை மாதிரி பண்ற..” என்ற சுமிம்மாவும் மகளை அணைத்து ஆறுதல்படுத்துவதற்குள் மற்றவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அருகில் வர பாரதியின் பார்வையின் கட்டளைக்கு இணங்கி இவர்கள்கள் விலகி நின்றனர்

“என்னோட செல்லம் அனிக்குட்டி..” என்று அனிதாவின் நெற்றியில் இதழ் பதித்தவர், “ஹாய் ஜெனிபர்..” என்று குறும்புடன் அழைத்த சங்கரியை மற்றொரு கரத்தால் அணைத்துக் கொண்டார். அவர் சோபாவில் அமர்ந்த மறுநொடியே அவரின் மடியில் தலைவைத்து கதறினாள் வித்யா.

அவளின் தலையை பாசத்துடன் வருடியவர், “என்ன சசி என்னோட மகளை இப்படி கோழையாக்கி வெச்சிருக்க. பொள்ளாச்சியில் உன்னை வெட்ட அருவாள் எடுத்த என்னோட வித்யாவை எங்கே காணோம்..” என்று குறும்பு பேசிட, “அது நான்தான்..” என்றாள் அவள் அழுகையின் ஊடே.

“ஓஹோ அது நீதானா?” என்றவரின் பார்வை மற்றவர்களின் மீது படிந்திட, “சசி, மகேஷ், கௌசிக் நீங்க எல்லாம் எப்படிப்பா இருக்கீங்க..” என்று விசாரிக்க, “நாங்க நல்லா இருக்கோம் அம்மா..” என்றனர்.

கலையரசனும், நிரஞ்சனும் அமைதியாக நின்றிருக்க, “என்னப்பா என்னை தேடி ரொம்ப சோர்ந்து போயிட்டீங்களா..” என்றவரின் கேள்விக்கு இருவரும் மௌனத்தை மட்டும் பரிசாக கொடுத்தனர்.

வித்யாவை விலக்கிவிட்டு மகனையும், மருமகனையும் இரு கரங்களால் தழுவிக்கொண்டவர், “எங்களைவிட்டு எங்கேயும் போகாதீங்க அம்மா.. எங்களால் உங்களைவிட்டு இருக்கவே முடியல..” என்றனர் ஆண்கள் இருவரும்.

அவர்களை கண்ட மகிழ்ச்சியில் அவர்களுடம் குறும்பு பேசி சிரித்த சுமிம்மாவின் முகத்தை ஒதுங்கி நின்று ரசித்தனர்.

அஜய் மற்றும் நிலாவிற்கு கண்கள் கலங்கிட, “அது அவங்க குடும்பம்.. அவங்க சந்தோசம் நமக்கு முக்கியம் கண்ணு கலங்க கூடாது..” என்று கண்டிப்புடன் கூறிய பாரதி அவர்களை ஆறுதல்படுத்தினான்.

அப்பொழுது நிமிர்ந்த சுமிம்மாயின் பார்வை அவர்களின் மீது நிலைக்க, “எனக்காக தியாகம் பண்ணக்கூட தயாரா இருக்கீங்க இல்ல..” என்றவர் இருகரங்கள் விரித்து அவர்களை அழைக்க ஏழு பேரும் ஓடிவந்து அவரை சுற்றி அமர்ந்து கொண்டவர்களின் கண்கள் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி கலங்கியது.

சங்கரி வியப்புடன் பிரவீனைப் பார்த்தாள். அவனுடைய வயதிற்கு அவன் பெரிய ஆண்மகன் என்றாலும் தாயின் தோளில் சாய்ந்து அவன் அழுகும் பொழுது குழந்தை போலவே தெரிந்தான் அவளின் கண்களுக்கு மட்டும்!

“நான் அவங்களோட போகட்டுமா.. நீங்க எல்லோரும் பத்திரமாக இருப்பீங்களா..” என்று சுமிம்மா அவர்களிடம் கேள்வி கேட்டார். சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

இவர்களின் பாசம் புரிந்த மற்றவர்கள் விலகி நின்றிருக்க, “எனக்கு பிறந்த வீடுன்னு ஒன்னு இருந்த அது உங்க வீடு தான் சுமிம்மா. எனக்கு தாய்வீடு வேணும். அங்கே வந்து இரண்டு நாட்களாவது நான் நிம்மதியா தங்கணும்..” நிலா கலங்கிய விழிகளுடன் கூறவே, “புருஷனை இங்கே விட்டுட்டு உனக்கு அங்க என்ன வேலை..” என்று குறும்புடன் அவளை அதட்டினார் சுமிம்மா.

“அவரோட சண்டை போட்டுட்டு வந்தாவது உங்களோட வீட்டில் தங்குவேன்..”

“ஆமா அவ சொல்வதில் என்ன தப்பு இருக்கு..” ரேணுவும், ரித்தும் அவளுக்கு சப்போர்ட் போட்டனர்.

“புருசனோடு வந்து தங்குவதாக இருந்தால் கன்னியாகுமரி மண்ணில் காலை வைங்க.. இல்ல தனியாகத்தான் வருவோம் என்றால் நான் வீட்டிற்கு போகாமல் உங்களோட காஞ்சிபுரத்திலேயே இருந்துக்கிறேன்..” என்று அவர்களை மிரட்டினார்.

அவர் கன்னியாகுமரி செல்வதாக முடிவெடுத்ததை உணர்ந்த அஜய், “அம்மா பிரவீன் அண்ணாவை மட்டும் டீலில் விடுறீங்க.. இது உங்களுக்கே நியாயமா?” என்று கேட்டான்.

“அவனோட ஜோடி புறா இங்கேதான் இருக்கு அஜய்..” என்றவரின் பார்வை சங்கரியின் மீது படிந்தது. ‘எப்படி எங்கம்மா..’ என்று பிரவீன் பார்வையில் கேள்வி கேட்க, வெக்கத்துடன் தலைகுனிந்தாள்

“அண்ணனுங்க மொத்தம் அஞ்சு பேரு இருக்கீங்க. சங்கரி வீட்டில் பேசி நல்ல முடிவு சொல்லுங்கடா. பையன் நம்ம பிரவீன்தான்..” என்றார்

“அதுக்கு என்னம்மா நாங்க சங்கரி வீட்டில் பேசறோம்..”என்று கலையரசன் சொல்ல, “தேங்க்ஸ் அம்மா..” என்று சுமிம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டான் பிரவீன்.

“என்னடா சின்ன பையன் மாதிரி முத்தம் கொடுக்கிற. உன்னோட ஆளு அங்க இருக்கு அவளுக்கு கொடுக்க இப்போவே கணக்கு எடுத்து வெச்சுக்கோ..” என்றவர் கேலி பேசிட மற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.

“பாரதி..” என்றவனின் கன்னத்தை பாசத்துடன் வருடியவர், “இது நம்ம குடும்பம் கண்ணா. உன்னை நம்பித்தான் அம்மா ஊருக்குப் போறேன். எக்காரணத்தைக் கொண்டும் நீங்க உங்களுக்குள் சண்டைப்போடாமல் இருக்கணும்..” என்றார்.

“சரிம்மா நான் அவர்களை பத்திரமாக பார்த்துக்கிறேன்..” என்று அவன் உறுதியாக கூறினான். சுமிம்மா அறிவுரை சொல்வதையும், மற்றவர்கள் அதற்கு உடனே சரியென்று சொல்வதை கவனித்தான் நிரஞ்சன். அவனின் பார்வை அங்கிருந்தவர்களை சுற்று வந்தது.

எங்கோ ஒரு நாள் ரயிலில் சந்தித்தவர்கள் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதே போல ஒரு நாள் பயணத்தில் உருவான மற்றொரு குடும்பம் சுமிம்மாவின் அருகிலே.

இங்கே பாசத்தை எந்த அளவுகோல் வைத்து அளப்பது. சுமிம்மாவின் அனைவரின் மீது வைத்த பாசத்திற்கு முன்னால் மற்றவர்களின் பாசம் தோற்றுப்போனது உண்மைதான்.

சுமிம்மா அவர்களுடன் இயல்பாக பேச, “என்னை மன்னிச்சிருங்க அத்த..” கடைசியாக மாலதி அவரின் காலில் விழுந்தாள்.

“ஏய் என்னடா இவ கண்ட இடத்தில் எல்லாம் காலில் விழுகிற..” என்று மகனிடம் கேள்வி கேட்ட சுமிம்மா மாலதியின் பக்கம் திரும்பி, “நீ இன்னொரு முறை காலில் விழுந்த நான் திரும்ப வீட்டைவிட்டு ஓடி போயிருவேன்..” என்று மருமகளை மிரட்டினர்.

“என்னது திரும்பவும் ஓடி போவீங்களா. உங்களை இத்தனை நாள் லூசில் விட்டுத்தான் இங்க ஒருத்தி லூசாகி உட்கார்ந்திருக்கிற..” என்று கலையரசன் அவரிடம் சண்டைக்கு வந்தான்.

“அண்ணா நீங்க அம்மாவை மிரட்டி மிரட்டியே அம்மாவை பயமுறித்தி வெச்சிருக்கீங்க. அதன் அவங்க வீடு என்று சொன்னாளே அலறாங்க..” என்றாள் நிலா புன்னகையுடன்.

“நீ சொன்னதும் ஒரு வகையில் உண்மைதான்..” என்றான் நிரஞ்சன் குறும்புடன். மற்றவர்கள் வாய்விட்டுச் சிரிக்க கலையரசனின் நிலைதான் மோசமானது.

“தங்கச்சி நான் இனிமேல் பேசவே மாட்டேன் போதுமா..” என்று கலையரசன் வாயை மூடிக்கொள்ள, “அத்தை நீங்க இன்னும் என்னை மன்னிக்கல..” என்று அழுவதற்கு தயாரானாள் மாலதி.

“அம்மா தங்கமே. நான் உன்னை மன்னிச்சிட்டேன். என்னை ஆளைவிடு. இன்னொரு முறை காலில் விழுந்து என்னை கொலைகாரி ஆக்கிவிடாதே..” என்றார்.

“இல்ல காலில் விழ மாட்டேன்..” என்றாள் அவள் பயத்துடன் சொல்ல அதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க இறுதியாக வந்த ராகுலும், ஆதியும், “பாட்டி..” என்றழைக்க அவர்களை வாரியணைத்த சுமிம்மா இருவரின் கன்னத்திலும் அளவில்லாத முத்தம் பதிக்க அவர்களும் இருமடங்காக அதை திருப்பிக் கொடுத்தனர்.

அனிதா அவளின் குழந்தையை சுமிம்மாவின் கையில் கொடுத்தாள். மொத்த குடும்பமே அவரைச்சுற்றி நிற்பதைக் கண்ட நாதனின் கண்கள் தானாக கலங்குவதைக் கவனித்த பாரதி, “ஏன் அப்பா கண்ணு கலங்குறீங்க..” என்று கேட்டான்.

“வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பார்த்த மாதிரி இருக்கு. பலவிதமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வது போல சுமித்ராம்மா உங்களுக்கு பாசத்தை கட்டி ஒரு பெரிய வேடந்தாங்கலையே உருவாக்கிட்டாங்க. எல்லோருக்குமே இந்த மனசு வராதுப்பா..” என்றவன் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

“உலகிலேயே விலைமதிப்பற்ற ஒரே விஷயம் மற்றவர்கள் மீது எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செலுத்தும் தூய்மையான அன்புதான். அந்த அன்புதான் உங்களை எல்லாம் இங்கே ஒன்று சேர்த்திருக்கு..” என்றார்.

சுமிம்மாவின் பரந்த மனம் அந்த பாசப்பறவைகளுக்கு வேடந்தாங்கலாக மாறிப்போனது. அவரின் பாசம் வற்றாத ஜீவா உற்றாக பொங்கி பெருகி வெள்ளமாக ஓடிக்கொண்டே இருக்கிறது.

சுமிம்மா வின் கண்கள் பாசத்தால் கலங்கிட பேரபிள்ளை இரண்டும் இணைந்து, “பாட்டி நாங்க ஒரு பாட்டு பாடட்டுமா..” என்று அவரிடம் அனுமதி கேட்டனர்.

“ம்ம் பாடுங்க..” என்றவர் அனுமதி கொடுக்க மற்றவர்களின் கவனம் அவர்களின் பக்கம் திரும்பியது.

கல்லூரி மலரே மலரே கைவீசி ஆடம்மா..

காற்றோடு சிறகு விரித்து கச்சேரி பாடம்மா..

சாலை ஒரு வாசகசாலை வாசித்து பாரம்மா..

ஒவ்வொரு பூவும் கானம் யோசித்து பாரம்மா..

ஆனந்தம் வெளியே இல்லை நம்மில் தானம்மா..” என்று பாடிய மழலையின் குரலில் சுமிம்மாவின் மனம் மயங்கியது. சுமிம்மாவைப் பார்த்துக்கொண்டே மொத்த பட்டாளமும் தங்களின் குடும்பத்துடன் நிற்பதைக் கண்டு அவரின் மனம் நிம்மதியடைந்தது.

மறுநாளே இந்தியா திரும்பியவர்கள் பிரவீன் – சங்கரியின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க குறிப்பிட்ட நல்ல சுபமுகூர்த்த நாளில் இரு குடும்பங்கள் ஒன்றிணைந்து, சுமிம்மாவின் தலைமையில் அவர்களின் திருமணம் நடந்தது. சங்கரியின் கழுத்தில் தாலியைக் கட்டி அவளை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டான் பிரவீன்.

இதைப் பார்த்த பாரதியின் மனம் கடமையை சரிவர செய்துவிட்டதாக தன்னுடைய தாயை நினைத்து கண்கலங்கி நின்றான். அதைக் கண்ட நிலாவின் கண்களும் கலங்கியது.

பாரதியை முழு மனதாக ஏற்றுக்கொள்வாளா நிலா?

error: Content is protected !!