vav12

vav12

வா… அருகே வா! –  12

மண்டபத்தில் கதிரேசனை பார்த்தபடி பளிச்சென்று வெள்ளை சேலை உடுத்தி, நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு,  மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார் முத்தம்மா ஆச்சி. அவர் அருகே பார்வதி ஆச்சியும் அமர்ந்திருந்தார். எத்தனை நெருக்கமான உறவாக இருந்தாலும், விதவை பெண்களுக்கு மணமேடையில் இடம் தரும் பரந்த மனம் இன்னும் இந்த குடும்பத்திற்கு வரவில்லை.

 

அவர்களே இடம் கொடுத்தாலும், முத்தமா ஆச்சி அதை ஏற்றுக் கொண்டு மணமேடையில் நிற்பாரா என்பது கேள்விக்குறி தான்! மனதில் வேரூன்றி போன விஷயங்கள் அல்லவா?

 

“என்ன ஆச்சி, பூங்கோதையை அழைச்சிட்டு வரலியா?” என்று பக்கத்திலிருந்த நடுத்தர வயது பெண்மணி கேட்க, மூத்தம்மா ஆச்சி பதில் சொல்வதற்குள் மற்றோரு பெண்மணி முந்திக் கொண்டார்.

 

“பூங்கோதை மனசு நோவுமில்லை. அதுதேன் கூட்டிட்டு வந்திருக்க மாட்டாக…” என்று ஒருத்தி இழுக்க, “இதுல மனசு நோவ என்ன கிடக்கு? எல்லா இடத்துலயும், நம்ம நினைச்ச மாதிரியா கல்யாணம் நடக்கு? பூங்கோதையை கட்டிக்கலைனா, இந்த உறவு இல்லைனு ஆகிருமா?” என்று பலமாகக் கருத்து தெரிவித்தார் மற்றொரு பெண்மணி.

“நீங்க கூட்டிட்டு வந்திருக்கணும்.” என்று இருவர் கூற, முத்தமா ஆச்சி மனம் நொந்து அவர்களை பார்த்தார்.

 

“எதுக்கு? அவ அத்தைக்காரி ராசி இல்லைன்னு சொல்லுவா! அதை அந்த பச்சை பிள்ளை கேட்கணுமா? நீங்க கூட்டிட்டு வராம இருந்தது சரித்தேன். எல்லாரும் அவளை பாவமாக பார்ப்பாக… அவளுக்கு கஷ்டமா இருக்கும்.” என்று சமாதானம் கூறுவது போல் முத்தமா ஆச்சிக்குச் சாதமாகப் பேசினார்.

 

அனைத்து பேச்சுக்களும், முத்தமா ஆச்சியை ரணமாக அறுத்தது.

 

முத்தமா ஆச்சியின் வருத்தத்தை அவர் முகம்

பிரதிபலிக்க, தன் நீண்ட கால தோழியைச் சமாதானம் செய்வது போல், “என் பேரனுக்கு, உன் பேத்தியை கொடுக்கறியா?” என்று கேட்டார் பார்வதி ஆச்சி.

 

அவர் கேட்ட கேள்வியில், முத்தமா ஆச்சி, அவரை அதிர்ச்சியாகப் பார்த்தார்.

 

“என் பேரனை பத்தி உனக்கு தெரியும். ராணுவத்தில் இருக்கான்னு யோசிக்கரியா? நாட்டுக்கு சேவகம் பண்றது ஒரு குத்தமா?” என்று கேள்வியாக நிறுத்தினார் பார்வதி ஆச்சி.

 

‘நாட்டுக்கு சேவகம் பண்றது குத்தமில்லை. இருந்தாலும், ஒரு மிலிட்டரிகாரனுக்கு…’ என்ற யோசனை அவர் மனதில் ஓட மௌனித்தார்.

 

‘எப்ப என்ன ஆகுமுன்னு தெரியாதே?’ என்ற கேள்வி முத்தமா ஆச்சியின்  மனதில் எழுந்தது.

 

யோசனையோடு தலை குனிந்து அமர்ந்தார் முத்தமா ஆச்சி.

 

அவர் கண்ணில் அவர் அணிந்திருந்த வெள்ளை சேலை பட்டது. ‘வீட்டுப் பக்கத்தில் நிலம். விவசாயம் என்றுதான் கொடுத்தார்கள். திருமணமான இரண்டே ஆண்டில், குழந்தைகளைக் கொடுத்துவிட்டு ஏதோ விஷக் காய்ச்சலில் இறந்து விட்டார். அது தான் விதி என்றால் யார் மாற்ற முடியும்?’ என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது.

 

‘எத்தனை மனிதர்கள் ராணுவத்தில் சேவகம் செய்து, பெரிய நிலையை அடைந்து நீண்ட காலத்துடன் வாழ்கிறார்கள்?’ என்று முத்தமா ஆச்சியின் அறிவு முற்போக்காகச் சிந்தித்தது.

 

அதே நேரம், திலக் பூங்கோதையின் சண்டையும் நீண்டு கொண்டே இருந்தது.

 

“மிலிட்டரி நீ திறக்க மாட்ட… அப்படித்தானே? வேண்டாம்… நீ போய்டு… நான் வரலை. எங்க ஆச்சி, உங்க ஆச்சி எல்லாரும்  என்னை வரவேண்டாமுனுத்தேன் சொன்னாக… நான் இப்படியே இருந்திக்குறேன்.” என்று கோபமாகக் கூறி அங்கிருந்த தரையில் மொந்தென்று அமர்ந்து தன் முகத்தை தன் முட்டியில் புதைத்துக் கொண்டாள் பூங்கோதை.

 

‘நான் சொல்லுத மாதிரி என்னை கூப்பிட்டால், இவ குறைஞ்சி போயிருவாளா?’ என்ற கேள்வி திலக் மனதில் எழ, அவன் பூங்கோதையை கோபமாகப் பிடிவாதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“நான் நினைச்சது, ஆசை பட்டது என்ன நடந்திருக்கு?” என்று பூங்கோதை கோபமாக தனக்கு தானே புலம்பினாள்.

 

அந்த வார்த்தையில் மனமுருகி, அதே நேரத்தில் தன் மெட்டையும் விடமுடியாமல், “சரி… சரி… புலம்பாத. நான் கூட்டிட்டு போறேன். ஆனா, என் பொஞ்சாதி தாவணியில் வரது எனக்கு பிடிக்கலை. சேலை மாத்திட்டு வா.” என்று அதிகாரமாகக் கூறினான் திலக். அவன் கோபத்தில், பியூட்டி என்ற அழைப்பு காணாமல் போயிருந்தது.

 

திலக் வார்த்தையை முடிப்பதற்குள், பூங்கோதை மாயமாக மறைந்திருந்தாள்.

 

“இதெல்லாம் கேட்பா…” என்று முணுமுணுத்தாலும்  அவன் முகத்தில் மெல்லிய புன்னகை.

 

சேலையில் பூங்கோதை தேவதையாகக் காட்சி அளிக்க, கதவைத் திறப்பதை மறந்து அவளை விழுங்குவது போல் பார்த்தான் திலக்.

 

“கதவை திறக்கேன்னு சொன்னீக.” என்று பூங்கோதை சிணுங்க, எதுவும் பேசாமல் பூட்டை திறக்க, அந்த இரும்பு கதவைத் திறந்து கொண்டு வெளியே  வந்தாள் பூங்கோதை.

 

‘பியூட்டி…’ என்று அழைக்க அவன் உதடுகள் துடித்தாலும், அவள் முகத்தில் கோலமிட அவன் விரல்கள் பரபரத்தாலும், அவளை அணைக்க அவன் கைகள் மேலே எழுந்தாலும் தன்னை அடக்கிக் கொண்டு, “போலாமா?” என்று ஒற்றை வார்த்தையாகக் கேட்டான் திலக்.

 

“ம்…” என்று பூங்கோதை தலை அசைக்க, திலக் ஜீப்பை ஓட்ட, பூங்கோதை மௌனமாக அமர்ந்திருந்தாள்.

 

‘பேசாம வர மாட்டானே மிலிட்டரி. என் மேல் கோபமோ?’ என்ற சந்தேகம் பூங்கோதையின் மனதில் எழ, அவன் முகத்தைப் பார்த்தாள் பூங்கோதை.

‘இவன் கோபம் என்னை என்ன செய்யும்?’ என்ற எண்ணம் தோன்ற, தன் முகத்தைச் சாலை நோக்கித் திருப்பிக் கொண்டாள் பூங்கோதை.

 

திலக்கின் கோபம் சிறிதும் குறையவில்லை.

 

‘நான் ரொம்ப தங்குதேன்னு, இவ ரொம்ப பண்ணுதா…’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு, ‘இவளை என்ன பண்ணலாம்? கொஞ்சமாவது அலறவிடனும்…’ என்று தனக்கு தானே சூளுரைத்துக் கொண்டான் திலக்.

 

மண்டபத்திற்குச் சென்றதும், திலக்கை சிறிதும் திரும்பிப் பார்க்காமல், சிட்டாகப் பறந்தாள் பூங்கோதை.

 

பூங்கோதையை பார்த்ததும் கதிரேசனின் கண்களில் மலர்ச்சி. அதைக் கவனிக்கத் தவறவில்லை வள்ளியின் கண்கள்.

 

“அத்தான்…” என்று அழைத்துக் கொண்டு மணமேடையில் ஏறினாள் பூங்கோதை.

 

கதிரேசனின் தாய் ஏதோ கூற வருவதற்கு முன், கதிரேசனின் முறைப்பில் தன் வாயை இறுக மூடிக் கொண்டார் செல்லமா.

 

தான் ஏதாவது சொல்ல, மகன் திருமணத்தை நிறுத்தி

விடுவானோ என்ற பயம் செல்லமாவிற்கு.

 

“வள்ளி…. பூங்கோதை.” என்று பூங்கோதையை அறிமுகப்படுத்தினான் கதிரேசன்.

தன் வருங்கால கணவன் பேசிய முதல் விஷயம். வள்ளியால் கதிரேசன் மனதில்  பூங்கோதைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.

 

மேலும் வள்ளியின் காதில் ஏதோ முணுமுணுத்தான் கதிரேசன். வள்ளி மௌனமாகத் தலை அசைத்தாள்.

 

“நீங்க நிறைய படிச்சிருக்கீக. இன்னும் படிச்சிட்டு இருக்கீகன்னு அத்தான் சொன்னாக! ரொம்ப அழகாகவும் இருக்கீக…” என்று பூங்கோதை புன்னகையோடு கைகுலுக்க, வள்ளி அந்த நட்புக் கரத்தை பற்றிக் கொண்டாள் ஆனால் மெல்லிய பொறாமை உணர்வோடு.

 

 

தாம்பூலம் மாற்றி, மணப்பெண் மாப்பிள்ளை வீட்டில் வாங்கி கொடுத்த சேலை, நகை அணிந்து  நிச்சயதார்த்த விழா சிறப்பாக முடிந்தது.

 

முத்தமா ஆச்சி, வள்ளியை ஆசிர்வதித்தார். கதிரேசன் சரலென்று அவர் காலில் விழுந்து எழுந்தான். முத்தமா ஆச்சியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

“நீயும் என் பேரன் தாண்டா? எல்லாரும் நல்லாருக்கணும்.” என்று கண்ணீர் மல்க விபூதி பூசினார். கதிரேசனின் கண்களும் கலங்கியது.

 

வள்ளியால், எதையும் முழுதாக புரிந்துகொள்ள முடியவில்லை. காலத்தின் போக்கில் புரிந்து கொள்ளலாம், என்ற முடிவோடு மௌனமாக அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்தாள்.  அனைவரும் உணவருந்திவிட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்.

 

“பூங்கோதைக்கு சீக்கிரம் நல்ல மாப்பிள்ளை வீடு அமையும்.” என்று முத்தமா ஆச்சிக்கு ஆறுதல் கூறுவது போல்,  நடுத்தர வயதினர் ஆரம்பிக்க, “அதெல்லாம் அமைஞ்சிருச்சு.” என்று ஒரே போடாக போட்டார் முத்தமா ஆச்சி.

 

அவர் சொல்லில் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக, பூங்கோதை, திலக், கதிரேசன் மூவரும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர்.

 

“மாப்பிள்ளை… நம்ம திலக்த்தேன்.” என்று முத்தமா ஆச்சி கூற, பார்வதி ஆச்சியின் முகத்தில் மகிழ்ச்சி.

 

அனைவரும் யோசனையாகப் பார்க்க, கதிரேசன் சந்தோஷமாக தன் நண்பனின் தோள்களைத் தட்டிக் கொடுத்தான்.

 

பூங்கோதை திலக்கை சந்தேகமாகப் பார்க்க, ‘தனக்கு எதுவும் தெரியாது…’ என்பது போல் உதட்டைப் பிதுக்கினான் திலக்.

 

பல பேச்சுகளுக்குப் பின் நிச்சயதார்த்தம் முடிந்து வீட்டுக்குச் சென்றனர்.

 

திலக் வீட்டின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

 

“ஆச்சி! என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீக? என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேணாமா? அவ திமிர் பிடிச்சவ… உங்களுக்கு அவளைப் பிடிக்க வேற செய்யாது. எதுக்காக இந்த கல்யாணத்தை பேசி முடிச்சீக?” என்று திலக் வானத்திற்கும், பூமிக்கும் குதித்தான்.

 

“ஏல! உன் முகத்தில் கல்யாணக் களை தெரியுது. நடிக்காத…” என்று பார்வதி ஆச்சி சமையல் வேலை பார்த்தபடி கூற, அகப்பட்டுக் கொண்டவனாக திருதிருவென்று முழித்தான் திலக்.

 

“என்னல நடிக்க? நீ ஜன்னல் வழிய அந்த பிள்ளையை பாக்குறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?” என்று பார்வதி ஆச்சி திலக்கின் முகம் பார்த்து கேட்க, திலக் தர்மசங்கடமாகப் பார்த்தான்.

 

“நீ பையை வச்சிட்டு போன்னா, அதுல என்ன இருக்குன்னு நான் பார்க்க மாட்டேனா? அவுக வீட்டுக்கு போய், கிளம்புறேன்னு சொல்றதும்… அந்த பிள்ளையை டேசனுக்கு வர சொல்றதும்… அணில் குட்டியை பாக்குதானும்… அணில் குட்டி… ” என்று பார்வதி ஆச்சி கழுத்தை நொடிக்க, திலக் தன் கண்களைப் பெரிதாக விரித்தான்.

 

அகப்பட்டுக் கொண்டாலும், பல பேச்சுக்கள் அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்தாலும், திலக்கின் முகத்தில் அத்தனை ஆனந்தம்.

 

பூங்கோதை எதுவும் பேசவில்லை. ஆச்சி சந்தோஷமாகக் கல்யாண வேலையில் ஈடுபட ஆரம்பித்தார். எப்பொழுதும்  பூங்கோதை,  அவள் கருத்தைப் பெரிதாகத் தெரியப்படுத்தியதில்லை. தெரியப்படுத்தும் நிலையிலும் அவள் இல்லை என்பது பூங்கோதையின் கருத்து.

 

கதிரேசன் முன் போல் வீட்டிற்கு வந்தான்.  திருமண வேலையை  மும்முரமாகக் கவனிக்க ஆரம்பித்தான். கதிரேசனின் தலைமையில் திருமண வேலைகள் கடகடவென்று நடக்க ஆரம்பித்தது.

 

பூங்கோதை திலகிற்கு அலைபேசியில் அழைத்தாள்.

 

பூங்கோதையின் அழைப்பைப் பார்த்ததும், திலக்கின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி.

 

“பியூட்டி…” என்று ஆசையாக, காதலோடு அன்பான குரலில் ஆர்வமாக அழைத்தான் திலக்.

 

அந்த குரலை ஒதுக்கிவிட்டு, “மிலிட்டரி நான் உன்னை நேரில் பார்த்து உன் கிட்ட பேசணும். ” என்று பூங்கோதையின் குரல் தெளிவாகப் பொறுமையாக ஒலிக்க, திலக் தன்னை தானே சுதாரித்து கொண்டான்.

 

“அஸ்க்க்கு புஸ்க்கு ஆசை தோசை… என்னால உன்னைப் பார்க்க வர முடியாது. என்னை ஆசையா கூப்பிட சொன்னேன்… நீ மட்டும் நான் சொன்னதைக் கேட்டியா பியூட்டி?” என்று திலக் தீர்மானமாக மறுப்பு தெரிவித்தான்.

 

 

“மிலிட்டரி…” என்று பூங்கோதை இறங்க, “நீ அன்னைக்கி பண்ணதுக்கும், நான் இன்னைக்கி பண்ணதுக்கும் சரியாப்போச்சு.” என்று திலக் அவளிடம் வம்பு வளர்த்தான்.

 

 

“யோவ் மிலிட்டரி, சின்ன புள்ளை மாதிரி விளையாடிகிட்டு? ஒரு மிலிட்டரிகாரன் மாதிரி பேசுதியா?” என்று கடுப்பாக கேட்டாள் பூங்கோதை.

 

“நா அப்படி பேசினா, நீ மிலிட்டரிகாரன் பொஞ்சாதி மாதிரி பேசுவியா பியூட்டி?” என்று திலக் இழைய, ‘இவுக கிட்ட பேசினேன் பாரு… என்னை….’ என்று முணுமுணுத்தபடி மேலும் எதுவும் பேசாமல், அலைபேசி பேச்சை முடித்துக் கொண்டாள் பூங்கோதை.

 

‘என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி திலக்கின் மனதில் தோன்ற, “என்னவா இருந்தா என்ன? கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சிப்போம்.” என்று கூறிக்கொண்டு கல்யாண வேலையில் மூழ்கினான் திலக்.

 

திலக்கிற்கு விடுமுறை நாட்கள் குறைவு என்பதால், திருமணத்தை விடுமுறை நாட்களுக்குள் முடித்துவிட முடிவு செய்திருந்தனர்.

 

திருமண நாளும் வந்தது.

 

திலக் பட்டுவேஷ்டியில், கம்பீரமாக பூங்கோதையின் வரவுக்காக மணமேடையில் காத்திருந்தான்.

 

பார்வதி ஆச்சி சொன்னது அவன் செவிகளில் இப்பொழுது ஒலித்தது.

 

‘யாரும் இல்லாம, ஆச்சி வளர்ப்பில் தனியா வளர்ந்த பொண்ணுடா. அவ கண் கலங்கக் கூடாது. எனக்கும், அவளுக்கும் இடையில் ஆயிரம் இருக்கும். அதெல்லாம் நாங்க பார்த்துப்போம். அதை எல்லாம் தாண்டி, எனக்கு பூங்கோதையும், உன்னை மாதரித்தேன்.’ என்று பார்வதி ஆச்சி, அவனை மிரட்டியது நினைவு வர மணமேடையில் புன்னகைத்துக் கொண்டான் திலக்.

 

‘என் பியூட்டியை, நான் பார்த்துக்க மாட்டேனா?’ என்ற இறுமாப்போடு மணமேடை நோக்கி நடந்து வரும் பூங்கோதையை பார்த்தான் திலக்.

 

இளம் சிவப்பு நிற பட்டு சேலை. பூக்கள் வடிவத்தில் ஒட்டியாணம், அதே பூ வடிவத்தில் மாலை, பூ வடிவத்தில் வளையல், பூ வடிவத்தில் கம்மல் எனத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு கொலுசு சலங்கை அசையத் தரையைப் பார்த்தபடி நடந்து வந்தாள் பூங்கோதை.

 

சுற்றுப்புறம் மறந்து திலக்கின் உதடுகள், “பி… யூ… ட்… டீ…” என்று உச்சரித்தது.

 

உற்றார் உறவினர் சூழ, ஊர் முன்னே தாலியை அவள் கழுத்தில் கட்டினான் திலக்.

 

திலக் தாலியைக்  பூங்கோதையின் கழுத்தில் கட்ட, அவள்  உடல் நடுங்கியது.

 

‘அம்மா… அப்பா… யாரும் என் கூட இல்லை. இவுக தான் காலத்துக்கும் என் கூடவா?’ என்ற எண்ணம் அவள் மனதில் மின்னல் போல் தோன்றியது.

 

அவன் சுவாசம் அவளைத் தீண்ட, தம் மூச்சை உள்ளே இழுத்து நிதானமாகச் சுவாசித்தாள் பூங்கோதை.

 

“இந்த தாலி ஊருக்காக… நாம ஏற்கனவே புருஷன், பொஞ்சாதி தானே?” என்று திலக், பூங்கோதையின் காதில் கிசுகிசுக்க, பூங்கோதை அவனை மிரட்சியோடு பார்த்தாள்.

 

“பியூட்டி… ஏன் இப்படி பயப்புடுத?” என்று திலக் அவள் அருகே சாய்ந்து கேட்க, “உங்களை பார்த்துதேன்.” என்று முணுமுணுத்தாள் பூங்கோதை.

 

“நம்புத மாதிரி எதாவது சொல்லு பியூட்டி.” என்று அவன் மேலும் பேச, “எலே… உம் பொஞ்சாதி கிட்ட அப்புறம் பேசலாம். இப்ப எங்களை கவனி.” என்று ஒரு பெரியவர் கூற, அங்குச் சிரிப்பலை பொங்கியது.

 

வெட்கம் பிடுங்கித் தின்ன, பூங்கோதை தன் தலையைக் குனித்துக் கொண்டாள்.

 

திலக்கிடம் அப்படி எதுவும் தெரியவில்லை. கம்பீரமாக அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

திலக் திருமணம் முடிந்த கையோடு, பூங்கோதையின் கால்களில் மெட்டி அணிய வேண்டும் என்று கூற, “நம்ம சனத்தில் இது வழக்கமில்லை. மாப்பிள்ளை, பொண்ணு காலை தொட்டுக்கிட்டு… ச்ச… ச்ச.. நேத்தே பொண்ணு கிட்ட கொடுத்து போட சொல்லிருக்கணும். இப்பவும் ஒண்ணுமில்ல. பொண்ணு கிட்ட குடுத்து போட சொல்லுங்க.” என்று வயதில் முதிர்ந்த பெண்மணி கூற, திலக் மறுப்பாக தலை அசைத்தான்.

 

“எம் பொஞ்சாதிக்கு நான் போடுதேன்… இதுல என்ன இருக்கு?” என்று திலக் பிடிவாதம் பிடிக்க, “ஐயோ… ஊரு முன்னாடி ஏன் என் மானத்தை வாங்குதீக?” என்று பூங்கோதை சிடுசிடுத்தாள்.

 

“ஊருக்கு முன்னடித்தேன் தாலி கட்டினேன்? யார் இருந்தா என்ன?” என்று திலக் அனைவரிடமும் வாதிட, ‘இவுகளை சமாளிப்பது ரொம்ப கஷ்டமோ?’ என்ற கேள்வி பூங்கோதையின் மனதில் எழுந்தது.

 

திலக்கின் பிடிவாதம் வென்று, அவன் பூங்கோதையின் மருதாணியில் ஜொலித்த விரலுக்கு மெட்டி அணிவித்தான்.

 

பூங்கோதை குனிந்து, தரையைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

 

கருமமே கண்ணாக திலக் மெட்டி அணிவித்து நிமிர்ந்து பார்க்க, அவன் கண்கள், அவள் விழிகளை ஆழமாகப் பார்த்தது.

 

இது வரை காணாத ஏதோ ஒன்றை பூங்கோதையின் விழிகளில் கண்டுகொண்டான் திலக்.

 

ஒரு நொடிக்கும் குறைவான நேரம், திலக் அவளைக் காண, சரேலென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பூங்கோதை.

 

இந்த செயலில் திலக்கின் புருவங்கள் சுருங்கியது.

 

‘தான் பார்த்தது நிஜமா? இல்லை பிரமையா?’ என்ற கேள்வி அவன் மனதில் எழ, மௌனமாக அவள் அருகே நின்றான் திலக்.

 

அதன் பின் பூங்கோதை தனிமையைத் தொலைத்திருந்தாள். திலக் அவளை, தன் கண் வளைவில், கை வளைவில் வைத்திருந்தான்.

 

பல சடங்குகள் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தன.

 

திலக் காட்டிய அக்கறையில், அனுசரணையில் ஊர் மக்கள், கதிரேசனின் தாயார் இன்னும் பலர் வாயைப் பிளந்தனர்.

 

 

 

“ராசி என்ன ராசி? நாம இந்த பொண்ணை என்னவெல்லாம் பேசினோம்? இப்ப பார்த்தியா, இவளை இப்படி தாங்குத மாப்பிள்ளை?” என்று நடுத்தர வயது  பெண்ணொருத்தி, அவள் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

 

“நல்ல நேரமுன்னு நாமதேன் காத்திருப்போம். காலத்தின் சுழற்சி, எல்லாருக்கும் நல்ல நேரமும் வரும், கெட்ட நேரமும் வரும். ஆனால், அந்த அளவு போன ஜென்மத்திலும், இந்த ஜென்மத்திலும்  நாம செய்த புண்ணியமும், பாவமும்தென். ” என்று அங்கிருந்த முதியவள் கூற, “அது சரி…” என்று கழுத்தை நொடித்துக் கொண்டனர் அந்த பெண்மணிகள்.

 

“கிழவி சொல்றது உங்களுக்கு வேடிக்கையா இருக்கு? எல்லா நேரத்தையும், உங்க உழைப்பாலும், நம்பிக்கையாலும் கடந்து வந்திறலாம். என்  அனுபவத்தில் சொல்லுதேன்.” என்று கூறிக் கொண்டே, அந்த முதியவள் தன் பேரன் அழைக்க, அவனோடு சென்றார்.

 

அன்றிரவு, திலக் அவன் அறையில் பூங்கோதைக்காக காத்திருந்தான்.

 

‘இவன் சும்மாவே சாமி ஆடுவான். இதில் தாலி வேற கட்டிருக்கான். இவனை ஒண்ணுமே பண்ண முடியாதே?’ என்ற எண்ணத்தோடு அவன் அறைக்குள் நுழைந்தாள் பூங்கோதை.

 

திலக் ஜன்னல் வழியாகி பூங்கோதையின் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

‘எப்படி அழைப்பது? இல்லை அழைக்காமல் பேசாமல் படுத்துவிடலாமா?’ என்ற எண்ணத்தோடு பூங்கோதை மெல்ல நடக்க, “பியூட்டி…” என்று அவள் பக்கம் திரும்பி, கண்ணசைத்து அவளை அவன் அருகே அழைத்தான் திலக்.

 

பூங்கோதை மறுப்பாகத் தலை அசைக்க, “நீயா வரியா? நான் தூக்கிட்டு வரணுமா பியூட்டி?” என்று அவன் குரல் பிடிவாதமாக ஒலிக்க, அவள் அவன் அருகே சென்று அவன் முன் எங்கோ பார்த்தபடி நின்றாள்.

 

திலக் அவள் தோள்களில் மாலையாக கைகளைக் கோர்த்தபடி, “உங்க அத்தானுக்கு நம்ம கல்யாணத்தில் அவ்வுளவு சந்தோசம்.” என்று அவள் விரும்பும் கோணத்தில் பேச்சை ஆரம்பித்தான் திலக்.

 

“அத்தானும், நீங்களும் கூட்டு தானே? என் பக்கம் யார் இருந்திருக்கா? நான் என்னைக்கும் தனி தானே?” என்ற கேள்வியோடு பூங்கோதையின் குரல் ஏமாற்றமாக ஒலித்தது.

 

“நான் இல்லையா பியூட்டி?” என்று அவன் குரல் அவளிடம் கெஞ்ச, கொஞ்ச அந்த குரல் அவள் ஆழ் மனதைத் தாக்க, பூங்கோதையின் கண்கள் கலங்கியது.

 

தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் பூங்கோதை.

 

“சந்தோஷமோ, துக்கமோ அழுகை வந்தா அழணும் பியூட்டி. நெருக்கமானவங்க கிட்டயாவது அழணும் பியூட்டி.” அவள் தலை கோதி அவன் கூற, “அப்படி எனக்கு யாரும் கிடயாது.” என்று பூங்கோதை உதட்டைச் சுழித்துக் கூறினாள்.

 

“ஹா… ஹா…” என்று பெருங்குரலில் திலக் சிரித்தான்.

 

பூங்கோதை அவனை விசித்திரமாகப் பார்க்க,  “உனக்கு யாராவது நெருக்கமா, இல்லையான்னு பார்ப்போமா?” என்று கூறிக்கொண்டே, அவளை தன் அருகில் சேர்த்து அவன்  அவள் இடையைத் துழாவ வெட்கத்தில் அவள் நெளிந்தாள்.

 

பூங்கோதை விலக முயற்சிக்க, விலக முடியாமல் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான் திலக்.

 

“இத்தனை நாள், என் கிட்ட மறச்சிட்ட… இன்னைக்கு முடியுமா? எனக்கு தெரிந்தாகணும்…” என்று அவன் மீண்டும் அவள் கட்டியிருந்த சேலைக்கு  இடையில் தெரியும் வெற்றிடையை தீண்ட  துள்ளிக் குதித்து விலகினாள் பூங்கோதை.

 

“சரி… நீயே சொல்லு… நான் கட்டின மணி அங்கன தானே இருக்கு? அப்படினா, நான் உனக்கு நெருக்கம். அதையும் நீயே சொல்லு, இல்லை நான் தான் தேடி கண்டுபிடிக்கணும்.” என்று கூறிக்கொண்டே திலக் அவளைச் சுவரோடு சாய்த்து, அவள் தலையை முட்டி உரிமையோடு கேட்டான்.

 

பூங்கோதை கண்களைச் சிமிட்டி, தன் கண்களை பெரிதாக விரித்து  அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

 

திலகிற்கோ கண்முன் காலையில் பூங்கோதை அவன் அறியாமல், அவனை பார்த்த நொடி நினைவு வர… அவள் விழிகளில் வெளிப்படுத்திய சொல்ல முடியாத உணர்வை அவள் வார்த்தைக்காகக் காத்துக் கொண்டே அவள் விழிகளில் தன் விழிகளை பதித்து தேட ஆரம்பித்தான் திலக்.

வா… அருகே வா!  வரும்….

 

error: Content is protected !!