mu- epilogue

mu- epilogue

மாயாஜால வித்தை

மும்பை மாநகரத்தில் அரண்மனை போன்றிருந்த அந்த வீட்டின் முகப்பறை வெறிச்சோடி இருந்தது. அதனுள் கீழ்தளத்தில் இருந்த விசாலமான அறையில் நுழைந்தால்,

இரவெல்லாம் விழித்து கொண்டிருந்ததிற்கு சான்றாய் அந்த மெழுகுவர்த்தி புகையை கிளப்பிக் கொண்டிருக்க பின்புற கதவின் வழியே அமைந்த பசுமை படர்ந்திருந்த அந்த தோட்டத்தில் விடியலை அறிவித்த கதிரவனோ, வானில் மங்கைகளின் நுதல்களை அலங்கரிக்கும் வட்டமான செந்நிற திலகமென காட்சியளித்தான்.

அந்த கதிரவனுக்கு துணையாய் அப்போது தோட்டத்தில் ஈஷ்வர்தேவ்வின் தோற்றத்தில் இருக்கும் அபிமன்யு உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தான்.  அவனின் மேனியின் கட்டுடல் வசீகரமாகவும் கம்பீரமாகவும் எல்லோரையும் ஈர்க்கவல்லதாய் இருக்க, ஒருவாறு அவன் தன் பயற்சிகளை முடித்து விட்டு அறையினுள் நுழைந்தான்.

அவனின் பார்வை அறையை சுற்றிலும் நோட்டமிட, சூர்யாவோ படுக்கையில் முழுவதுமாய் போர்வைக்குள் சுருண்டிருந்ததை கவனித்தான். அவன் பார்வை சுவற்றின் கடிகாரத்தின் புறம் திரும்ப, அது மணி ஆறு என்பதை அறிவித்தது.

அபிமன்யு குறும்புத்தனமான பார்வையோடு, ‘ஒரு நாளாவது இயர்லி மார்னிங் எழுந்திருச்சிருக்கிறாளா?… இன்னைக்கு உன்னை விடுறதா இல்ல…  ஒரு வழி பன்றேன்’ என்று தனக்குத்தானே சொல்லிவிட்டு  அவளின் அருகில் நெருங்கியவன்,

“சூர்யா” என்று பலமுறை அழைத்தும் அவளிடம் பதில் இல்லை. அத்தனை ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இருக்க, இறுதியாய் முகத்திலிருந்த போர்வையை விலக்கி சூர்யா என்று அவன் காதில் கத்த,

“போடா இடியட்… நீ சீக்கிரமா எழுந்து எப்படியோ நாசமா போ… என்னை டிஸ்டர்ப் பண்ணாதே” என்று விழிகளை மூடியபடியே சொல்லிவிட்டு முகத்தை போர்வைக்குள் புகுத்திக் கொண்டாள்.

‘நான் இடியட்டா? ‘ என்று அவன் கோபம் கொண்டபடி  அருகிலிருந்த மேஜையின் மீதுள்ள தண்ணீர் ஜக்கின் நீரை அவள் முகத்தில் ஊற்ற, அவளோ துடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள். அவளின் விழிகள் கடிகாரத்தை பார்த்து விட்டு அதிர்ந்து போக அவனோ, “குட் மார்னிங்” என்று சொல்லி புன்னகைத்தான்.

அவனை எரித்து விடுவது போல் பார்த்து, “இட்ஸ் ஜஸ்ட் சிக்ஸ்… இவ்வளவு காலையில எழுப்பி விட்டுவிட்டு குட் மார்னிங்கா… ?  கொஞ்சங் கூட உனக்கு மூளையே இல்லயா ?” என்று கேட்க அவன் புன்னகையோடு,

“என்கிட்ட இப்போதைக்கு அது ஒண்ணுதானே மிச்சம் இருக்கு” என்று சொல்லி மீண்டும் அவன் புன்னகையிக்க

“இருந்து என்ன யூஸ்?… போடா… ஐம் கோயிங் டூ ஸ்லீப்… தண்ணி கிண்ணி ஊத்துன… ஐ வில் கில் யூ ராஸ்கல்” என்று சொல்லி மீண்டும் படுத்துக் கொண்டாள்.

அபிமன்யு யோசனையோடு அவளை பார்த்தவன், ‘தண்ணி ஊத்தக்கூடாதோ?’ என்று சொல்லிவிட்டு அவளை நெருங்கி போர்வையை அவசரமாய் விலக்கிவிட்டு படுக்கையில் இருந்தவளை தம் கரங்களில் தூக்கி கொள்ள, “ஏ இடியட்…  விடுடா” என்று கதறினாள். அவன் கரங்கள் அவளை  விடுவதாகயில்லை.

“நான் தூங்கினா உனக்கு என்னடா போச்சு விடுடா?” என்றவளிடம்,

“சீக்கிரம் எழுந்திருச்சா ஆரோக்கியமா இருக்கலாம்னு சொல்லிருக்கேன் இல்ல” என்றான் அதிகாரமாக.

“நீயும் உன் ஆரோக்கியமும்… உன் சித்தா புராணத்தை கேட்டு கேட்டு என் காது புளிச்சு போச்சு… டோன்ட் அகையின்” என்றாள்

“அப்போ நான் சொல்றதை நீ கேட்க மாட்ட?” என்று அவன் அழுத்தமாய் கேட்க,

“நோ… கேட்க மாட்டான்” என்றாள் பிடிவாதமாக.

“அப்போ அனுபவி” என்று அவளை தூக்கிவந்து தடலாடியாய் அந்த நீச்சல் குளத்தில் போட்டுவிட அவள் சற்றும் அதை எதிர்பார்க்கவில்லை. அவளோ நொடி பொழுதில் மூச்சு முட்டி மேலே எழும்பி வந்தவள் ஆடை முழுவதும் நனைந்து கோலத்தோடு நின்றாள்.

அவனோ அலட்சியமாய்  பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்தான். அவனை வாயில் வந்த வார்த்தை எல்லாம் சொல்லி கடிந்து கொண்டவள் மேலும் எரிச்சல் மிகுதியால், “அந்த ஈஷ்வர் உடம்பில இருக்க இல்ல… உன்கிட்டயும் அந்த அரெகன்ஸ் இல்லாமலா இருக்கும்” என்றாள்.

“ஆமான்டி அரக்கென்ஸ்தான்… உன் வாழ்க்கையில ராமனும் நான்தான், ராவணனும் நான்தான்” என்றான்.

“அதென்னவோ உண்மைதான்டா… என் விதியை டிசைன் பண்ணவன் இருக்கான் பாரு… அவன் ஒரு ஸேடிஸ்ட்” என்றாள்.

அப்படி பார்த்தா அந்த ஸேடிஸ்ட் நீதான்” என்று அபிமன்யு கிண்டலாய் சிரித்து கொண்டே சொல்ல,

“என்ன சொன்ன?” என்றுமுறைத்தாள் அவள்.

“ஆமாம்… அவன் அவனோட விதியை…  அவன் அவனேதான் டிசைன் பன்னிக்கிறான்… அப்படி பார்த்தா அந்த ஸேடிஸ்ட் நீதான்” என்று அவன் அவளை சுட்டிக் காட்ட,

அவளோ மெல்ல நீச்சல்குளத்தில் இருந்து வெளியேறியபடி,  “அப்போ அபிமன்யுவில் இருந்து ஈஷ்வரா மாறி இருக்கிற உங்க விதியை யார் சார் தீர்மானிச்சது” என்று கேட்டாள்.

“ம்ம்ம்… நானேதான்” என்றான்.

சூர்யா ஆடைகளை உதறிக் கொண்டபடி நின்றிருக்க அவன் மேலும், “நடந்தது பிரெயின் டிரான்ஸ்பிளேன்ட்டேஷன்னு நினைச்சியா… நோ… உண்மையில் நடந்தது வேற” என்று சொல்லி நிறுத்த அவள் அலட்சியமாய்,

“அப்படி என்ன சார் நடந்தது ?!” என்று கேட்டாள்.

“உனக்கு மட்டும் அந்த சீக்ரெட் சொல்றேன்… கிட்ட வா” என்றான்.

“நோ… கிட்ட வந்தா நீ கடிச்சிருவ… அங்கிருந்தே சொல்லு ” என்று அவள் கன்னத்தில் கைவைத்து கொள்ள

“மாட்டேன் வாடி” என்று சொல்லி அவளை வலுகட்டாயமாய் அருகில் இழுத்து காதோடு ஒரு விஷயத்தை சொல்ல, அப்படியே அவள் விழிகள் அகல விரிந்தன.

அவள் புருவங்கள் நெறிய அவனை பார்க்க,”என்ன புரிஞ்சுதா?” என்று  கேட்டான்.

“சத்தியமா குழப்பமா இருக்கு… பட் இதெல்லாம் சாத்தியமா?” என்று கேட்டாள்.

“அபிமன்யுவால் எதுவும் சாத்தியம்…” என்றான் கர்வபுன்னகையோடு.

சூர்யா யோசனை குறியோடு நிற்க அவன் அவளிடம், “அன்னைக்கு நடந்ததை நல்லா யோசிச்சு பாரு… எனக்கிருந்த கோபத்துக்கு அந்த ஈஷ்வரை குத்தி, நான் சாகடிச்சிருக்கணும்… பட் நான் அப்படி செய்யல… ஏன்னு யோசிச்சியா?” என்று கேட்டான்.

சூர்யா திகைப்போடு, “அதானே… ஏன்?” என்று கேட்க  அபிமன்யு அவளை நோக்கி, “அதுதான் சூட்சமம்…” என்று சொல்லி

“பந்த காரண சைதில்யாத் ப்ரசாரஸம் வேத நாச்ச சித்தஸ்ய பரசரீரா வேச” என்று  ஏதோ சில வித்தியசாமான அர்த்தம்புரியாத வார்த்தைகளாய் உரைக்க,

அவள் தலையை பிடித்து கொண்டு, “நிறுத்து அபி… நீ சொல்றது ஒண்ணும் புரியல… உன் சீக்ரெட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்… தூக்கத்தை கலைச்சதில்லாம… காலங்காத்தால  பைத்தியம் பிடிக்க வைக்கிற… போடா” என்று சொல்லி அவனை விட்டு விலகி முன்னேறி நடந்தாள்.

அவன் அவளை பின்புறம் வந்து தன் கரங்களால் பிணைத்தபடி, “கோசிக்காதடி… சும்மா கொஞ்சம் விளையாடினேன்” என்றான்.

அவள் அவன் புறம் திரும்பி கோபமாய் முறைக்க அபிமன்யு அவளிடம்,

“சாரிடி என் அழகி” என்று அவள் கன்னத்தை கிள்ளவும், “போடா” என்று அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

“இன்னுமும்  இந்த முகத்தை பார்க்க உனக்கு அருவருப்பா இருக்கா? போயும் போயும் இவனை போய் காதலிச்சோம்னு தோணுதா?” என்று அபி கேட்க அவள் அதிர்ந்து அவன் புறம் திரும்பி,

“நோ… நாட் அட் ஆல்” என்றவள் இடைவெளிவிட்டு, “இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மட்டுமே காதலிக்கணும்” என்று உரைத்த மறுகணம் அவன் இதழ்களில் மின்னல் கீற்றாய் ஒரு முத்தத்தை பதிக்க அவள் வெட்கமாய் அவன் மார்பில் அடிக்கலம் புகுந்து கொண்டாள்.

அவள் அவனைஅணைத்து கொள்ள, “நிஜமாவே எனக்கு ஆச்சரியமா இருக்கு… எப்படிறா இந்த முகத்தை பார்த்துட்டு… காலம் முழுக்க வாழ்க்கையை ஓட்டப் போறேன்னு நினைச்சேன்… பட் மாயாஜால வித்தை மாதிரி என் மனசு முழுக்க இப்ப இந்த முகம்தான் இருக்கு… அப்படி என்னடா பண்ண?” என்று அவள் வியப்பாய் கேட்டு அவன் முகத்தை ஏறிட்டாள்,

“அதுக்கு ஒரு மருந்து இருக்கு… எல்லாத்துக்கும் அதுதான் காரணம்” என்றான்.

“என்ன மருந்து… அதை பத்தி நீ என்கிட்ட சொல்லவே இல்ல”

“காலம்ங்கிற மருந்துதான்… காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்… அதால மட்டும்தான் எல்லா ரணத்தையும் மறக்கடிச்சு நாம சந்திக்கிற எல்லா மோசமான நிகழ்வுகளையும் கடந்து  மீண்டும் நம்மை இயல்பான நிலைக்கு  கொண்டு வரும்… அதெல்லாம் விட முக்கியமா… என்கிட்ட இன்னொரு மாய வித்தையும் இருக்கு” என்றான்.

“என்னது ?” என்று கேட்டு அவள் புருவங்கள் நெறிய,

“நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்கிற காதல் சூர்யா…  அது எல்லாத்தையும் சாத்தியப்படுத்தும்” என்றான்.

அவன் இவ்வாறு சொன்ன நொடி இருவரின் விழிகளும் ஒரு புள்ளியில் சங்கமித்தது. சூர்யாவிற்கும் அபிமன்யுவிற்கும் இடையில் இருந்த அவர்களின் காதல் கண்களில் இருந்த அல்ல, மனதிலிருந்து உருவானது. அவர்களின் அந்த ஜென்மாந்திர பந்தம் அவர்களை அப்படி வெகுநாட்கள் விலகி இருக்கவும் விடவில்லை.

அப்போது ரீங்காரமிட்ட  கைப்பேசியின் ஒலியில் அவள் மீண்டபடி,

“அபி ஃபோன் ரிங்காவுது” என்றாள்.

“ப்ச்… பரவாயில்ல விடு” என்றான்.

” முக்கியமான போஃனா இருக்க போகுது”  என்று அவள் சொல்லிவிட்டு மறுகணம் தன் கைப்பேசியை எடுத்து பேசினாள்.

அவளின் முகம் பிரகாசமடைய அபியிடம், “அபி… அர்ஜுன் மாமாதான்… அக்காவுக்கு டெலிவரிகிடுச்சாம்… அதுவும் இரட்டை ஆண் குழந்தைகளாம்” என்றாள்.

அபிமன்யு ஆனந்தத்தில் உற்சாகமடைய வெகுநேரம் இருவரும் கைபேசியில் அளவளாவினர். பின்னர் அபி உற்சாகத்தில் சூர்யாவை தன் கரத்தில் தூக்கி சுத்த, “ஐயோ! விடு அபி… தலை சுத்துது” என்று சொல்ல அவனோ , “முடியாது … இன்னைக்கு பூரா இந்த சந்தோஷத்தை நான் உன் கூட செலிபரேட் பண்ணனும்” என்று அவன் அவளை படுக்கையில் கிடத்தினான்.

“இன்னைக்கு பூராவா… மீட்டிங் இருக்கு… கிளம்ப வேண்டாமா?” உரைக்க, “போஸ்ட் போன் பண்ணிடலாம்” என்று சொல்லி அவன் அவளை நெருங்கினான்.

அப்போது, “பாஸ்” என்று மதி கதவிற்கு வெளியே இருந்து குரல் கொடுக்க அவன் சலித்து கொண்ட நொடி சூர்யா புன்னகையோடு, “உன்னோட அசிஸ்டென்ட்” என்றாள்.

“அவனுக்கு நேரங்காலமே இல்லை” என்று முனகி விட்டு, “வெயிட் பண்ணு மதி… ஐம் கம்மிங்”  என்றான்.

மதிக்கும் நடந்த மாற்றங்கள் எதுவும் தெரியாது. எந்தவித சந்தேகமும் அவனுக்குள் எழும்பவில்லை காரணம். அந்தளவுக்கு யூகிக்கும் புத்திசாலித்தனம் அவனிடம் இல்லை.

இருவருமே அலுவலகத்திற்கு அவசரம் அவசரமாய் தயாராக…  நடை, உடை என அபிமன்யு ஈஷ்வர் தேவ்வாகவே முற்றிலுமாய் மாறி நின்றான். ஒவ்வொரு முறை அப்படி அவனை பார்க்கும் போது பழைய மோசமான நினைவுகள் தவிர்க்க முடியாமல் மேலெழும்பினாலும் அபிமன்யுவின் தேஜஸ் நிரம்பிய புன்னகை அந்த எண்ணங்களை ஒதுக்கிவிட்டது.

“ஒகே கிளம்பலாமா ?” என்று அவன் கேட்க அவள் அவனை நெருங்கி “எத்தனை முறை இந்த தப்பை செய்வ?!” என்று சொல்லி அவன் வாட்ச்சை வலது கையிலிருந்து கழட்டி மாற்றி கட்டினாள்.

பின்னர் சூர்யா அவனிடம், “கேட்க மறந்திட்டேன்… டீ7 ரிசர்ச் பத்தின மேட்டெரெல்லாம் மதிகிட்ட கேட்டியா?” என்றாள்.

“ம்ம்ம்…கேட்டேன்… அந்த ஈஷ்வர் பயங்கரமா பிளான் பண்ணிருக்கான்… ஏதோ மனநல காப்பாகத்தோடு உதவியோடு டீ7 மருந்தை டெஸ்ட் செய்ய  பிளான் பண்ணிருந்தானா?” என்றான் அபி.

“இஸ் இட்… பட் அப்படி எதுவும் அவன்  பண்ணல இல்ல” என்று அவள் படபடப்போடு கேட்க

“இல்ல… அதுக்குள்ளதான் அந்த இன்ஸிடென்ட் நடந்திருச்சே” என்றான்.

“எனி வே… எல்லாமே நல்லதுக்குதான்… பட் அந்த ஈஷ்வருக்கு இன்னும் மோசமான தண்டனை கிடைச்சிருக்கணும்… பாஸ்டட்” என்று சொன்னவளின் விழிகளில் அத்தனை வெறி இருந்தது.

அபிமன்யு சூர்யா தோளில் தட்டி அவளை ஆசுவசப்படுத்தியபடி,

“இதுவே அவனுக்கு பெரிய தண்டனைதான் சூர்யா… உலகத்தையே அவன் கன்ட்ரோல்லை வைச்சிருக்கணும்னு நினைச்சான்… பட் இன்னைக்கு அவன் உடம்பையே அவனால கன்ட்ரோல் பண்ண முடியலியே… ” என்றான்.

அபிமன்யு இன்று ஈஷ்வராய் இருக்க முக்கிய காரணம் அவன் ஆளுமையில் இருக்கும் மருத்துவ உலகை முடிந்தளவு மக்களிற்கு நலனாய் மாற்ற வேண்டும் என்று எண்ணத்தில்தான். அத்தகைய ஒன்றை இந்த உலகில் சாத்தியப்படுத்தும் விதமாய் சூர்யாவும் அபியும் ரொம்பவும் முயன்று கொண்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி சித்த மருத்துவத்தை உலக மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுவதாக அவந்திகா அபிமன்யுவிற்கு உறுதியளித்திருந்தார். ஏனெனில் சித்த மருத்துவத்தின் மூலமாக இப்போது அவருமே பயனடைந்து பழையபடி தன் சொந்த காலூன்றி நடந்து கொண்டிருந்தார்.

மருத்துவ துறையை வியாபாரமாக்கி அந்த கயிற்றால் இன்று உலகை பிணைத்து வைத்திருக்கும் பல ஜாம்பவான்ககளிடம் இருந்து நாம் மீள வேண்டுமெனில், நம்முடைய பழமையை நாம் தேடி கற்க வேண்டும்.

நம் முன்னோர்கள் நமக்காக படைத்த அற்புதமான சித்த மருத்துவத்தை  உலகின் நலனுக்காகவும் வருங்கால சந்ததிகளின் ஆரோக்கியமான வாழ்விற்காகவும் மீண்டும் உயிர்த்தெழ செய்ய வேண்டும். அதுவே இனி நம் ஆரோக்கியமான வாழ்விற்கும் வழி வகுக்கும்.

இந்த அண்டத்தில் நிற்காமல் சுழலும்…  சூர்யன், பூமி, சந்தரனின் பிணைப்பை யாருமே பிரிக்க இயலாது. அவ்விதமே சூர்யா, அபிமன்யு, ஈஷ்வர் ஆகிய மூவருக்குள் ஏற்பட்ட பந்தத்தினால் உண்டான முடிச்சியை மாற்றவோ பிரிக்கவோ முடியாது.

மீண்டும் உயிர்த்தெழுவின் பயணம் இங்கே முடிவுறுகிறது.

**********************சுபம்*****************

முடிவுரை

மீண்டும் உயிர்த்தெழு கதையை நான் அக்டொபர் 24 அன்று எழுத தொடங்கி இப்போது கிட்டதட்ட மூன்று மாதங்கள் முடிவுற்றன. நான் ஒவ்வொரு பதிவுகளை கொடுக்க ரொம்பவும் தாமதப்படுத்திய போதும் நீங்கள் எல்லோரும் என் நிலைமையை அறிந்து, பொறுமை காத்து படித்ததிற்கு நன்றி.

பல நேரங்களில் நீங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கு நன்றி கூட உரைக்க முடியாமல் போயிருந்தால் அதையும் தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள். உங்களின் மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கி கதையை படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிகுந்த நன்றி.

கதையை பற்றி சில வரிகள்,

இந்த கதை என்னுடைய நாலாவது கதை. கொஞ்சம் சரித்திரமாய் எழுத வேண்டுமென்ற சிறு நப்பாசையை இதில் தீர்த்து கொண்டுவிட்டேன். தூய தமிழாய் எழுதுவதில் இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் நிறைய தவறுகளும் நிகழ்ந்திருக்கலாம்.

மேலும் இந்த கதையின் முடிவு அதிர்ச்சியையோ கோபத்தையோ சில வாசகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம். என்னை பொறுத்த வரை இந்த கதையின்  மூன்று கதாபாத்திரங்களுமே முக்கியமானவை. ஆதலால் பாகுபாடின்றி மூவருமே இந்த கதையின் முடிவில் இருந்தால் மட்டுமே இது நிறைவடையும். அதே போல் சூர்யன் சந்திரன் பூமி என மூன்றும் பிரித்தறிய முடியாத கலவை என்பதுமே மறுக்க முடியாத உண்மைதானே.

மேலும் இந்த கதை அவசரமாய் முடிவுற்றதாய் பலரும் நினைப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. கொஞ்சம் சந்தோஷமாகவும் கொஞ்சம் மனவருத்தமாகவும் இருந்தது.  நான் அதிகப்படியான பக்கங்களோடு எழுதிய கதை இதுதான்.

இன்னும் நிறைய விஷயங்களை குறித்து சொல்லியிருக்கலாமே என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பிற்கு நான் ஏமாற்றத்தை தந்துவிட்டேன் என்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். எனக்கு இன்னும் இந்த கதையை வளர்க்க திறமை போதவில்லையோ என்றே கருதுகிறேன்.  மற்றபடி எந்தவொரு அவசரகதியிலும் நான் இந்த கதையை முடிக்கவில்லை. நான் எப்படி கட்டமதைத்தேனோ அவ்வாறே கதைகளத்தை நிறைவு செய்தேன்.

ஏன் அபிமன்யு ஈஷ்வரை புத்திசாலித்தனமாய் வீழ்த்தியிருக்க கூடாது. அவனின் மோசமான முகத்தை இந்த உலகத்திற்கு காட்டி கொடுத்திருக்க கூடாது என்ற பலரின் கேள்விகளுக்கான பதில் ‘நான் படைத்த ஈஷ்வர் என்ற கதாபாத்திரம் வியாபாரத்தால் உலகை ஆட்டுவிக்கும் ஜாம்பாவான்.’

என்னதான் அபிமன்யு கதாநாயகனாகவே இருந்தாலும் அந்த சாம்ராஜ்ஜியத்தினை உடைத்தெறிவதெல்லாம் சாத்தியமே இல்லை. அது நம்மை ஆளும் பல வியாபார முதலைகளோடு ஒப்பிட்டு பார்த்தாலே பொருந்தும். இங்கே ஈஷ்வரின் ஒரே பலவீனம் அவனின் காதல்தான். அந்த ஒன்றுதான் அவனை உணர்ச்சிவயப்பட வைத்து அவன் மூளையை மழுங்கடிக்கும் என்பது என்னுடைய கருத்து.

மற்றபடி நான் என்னால் முடிந்த வரை என்னவெல்லாம் கருத்தை இந்த கதையில் புகுத்த நினைத்தேனோ அவை எல்லாவற்றையும் ஆங்காங்கே சொல்லிவிட்டேன் என்ற நினைக்கிறேன்.

அடுத்த முறை பலரும் எதிர்பார்த்தது போல ஒரு ஆழமான கதை கருவை கொண்டு நீண்டதொரு தொய்வில்லாத கதையை வடிவமைத்து உங்களின் ஏமாற்றத்தை வேறொரு கதைகளத்தில் பூர்த்தி செய்ய முயல்கிறேன்.

இந்த கதையை குறித்த கருத்தை அல்ல, எத்தகைய விமர்சனமாய் இருந்தாலும் அதை என்ன காயப்படுத்திவிடுமோ என்றெல்லாம் யோசிக்காமல் நீங்கள் நேரடியாக வெளிப்படுத்துங்கள். அவை வளர்ந்து வரும் என்னை போன்ற எழுத்தாளினியின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியலாம். ஆதலால் உங்கள் கருத்தோடு விரைவாய் வாருங்கள். கேள்விகளாய் இருந்தாலும் பதிலுரைக்க காத்திருக்கிறேன்.

***************************

மீண்டும் உயிர்த்தெழு- என் கண்ணோட்டம்

வாசகர்களின் வருத்தங்களையும் கருத்துக்களையும் பார்த்த பின் நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த எண்ணுகிறேன்.

பலரால் ஏற்க முடியாத கதையின் முடிவு என்ற சில கருத்துக்கள். ஈஷ்வரை அபிமன்யு கொன்றிருந்தால் அது ஏற்ககூடியதாக இருந்திருக்குமா? அத்தனை சுலபமாய் அவனை   கொன்றுவிடுவதாக காண்பித்திருந்தால் அது ஏற்கவல்லதா? அது சாத்தியமா?  என்னை பொறுத்த வரை அது சாத்தியமற்ற ஒன்று.

மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பது இது வரை மருத்துவ உலகில் ஆராய்ச்சியளவிலேயே இருக்கிறது. சாத்தியப்பட்டதில்லை. காரணம் அது ஒருவன் மனநிலையை வாழ்க்கை முறையை முற்றிலுமாய் பாதிக்கும். இப்படி ஒருவனை காப்பாற்றுவது கிட்டதட்ட கொலை செய்வதற்கு சமானம். அதனாலயே  மருத்துவ உலகில் இது செயல்படப்படுத்தபடவில்லை.

ஆனால் நிச்சயம் அதுவும் ஒரு நாள் நடைபெறலாம். அதற்கு முன்னாடி அதை நம் கதையில் காண்பித்துவிட்டேன். முக்கியமா சொல்ல வேண்டுமெனில் ஒருவன் தன் அங்கிகாரத்தை அடையாளத்தை தேகத்தை தொலைத்து வேறு பரிமாணம் எடுப்பது.மனோதிடம் அதிகம் கொண்டவனால் மட்டுமே அதை ஏற்றுகொள்ள இயலும். அது அபிமன்யு என்ற கதாபாத்திரத்தால் நிச்சயம் முடியும்.

சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நின்று பார்த்து வருத்தப்படும் வாசகர்களே. அன்று ருத்ரதேவனை காதலித்து பின் விஷ்ணுவை மணந்து மனதளவில் அவனை ஏற்று வாழவும் தயாராயிருந்தால் என்பது அப்போது தவறா?

இது பல பெண்களின் வாழ்க்கையில் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அங்கே உண்மையான காதலை விடவும் ஒரு உறவிற்காக அதை ஏற்று கொண்டு இயந்திரத்தனமாக வாழவும் நேரிடும் நிலைமை சாத்தியப்படுகிறது. ஆனால் நம் கதையில் நிற்பவர்கள் இருவரும் மனதால் இணைந்தவர்கள். தேகம் என்பது எப்போதுமே அர்த்தமற்ற ஒன்றுதான். ஆதலால் அவள் அவனை ஏற்று கொள்ளாமல் போனால் அந்த உறவு பொய்த்து போகும். முகம் அகத்தோடு தொடர்புடையது. நாம் பலரை பார்த்த மாத்திரத்தில் சிலரை பிடிக்காமல் போகும். ஆனால் பழகிய பின்  ஏற்பட்ட எண்ணம் மாறி பிடித்து போகும். அதுதான் மனதிற்கே உண்டான சக்தி. அபிமன்யு ஏற்கனவே சொல்லியிருப்பான். இரண்டாம் அத்தியாயத்தில். கண்களால் பார்க்காமல் மனதால் உணர்ந்து பார் என்று.

அக்னீஸ்வரி ருத்ரா மீது கொண்ட காதல் உண்மையில் ஈர்ப்புதான். ஆனால் ருத்ரா கொண்டது ஈர்ப்பல்ல. அப்படி ஈர்ப்பாக இருந்தால் திருமணம் ஆனதும் அவளை மறந்தோ அல்லது வெறுத்தோ இருப்பான். அந்த தோல்வி அவனை மொத்தமாய் அவனை மாற்றுகிறதெனில் அதன் உள்ளார்ந்த ஆழம் ரொம்பவும் அபிரமிதமானது. சூர்யனின் சக்தி போல. சூர்யனால் பூமிக்கு நன்மையும் செய்ய முடியும் கெடுதலும் செய்ய முடியும். ஆனால் நிலவின் நிலைபாடு எப்போதும் ஒன்று. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். சூர்யன்… பூமி நிலவென எதையும் அழிக்கவல்ல சக்தி படைத்தவன். ஆனால் சந்திரனோ பூமியோ சூர்யனை எதுவும் செய்ய முடியாது. இந்த முடிவை அவ்விதம் ஒப்பிட்டு பாருங்கள்.

நான் சித்த வைத்திய குறிப்புகளை படிக்கும் போது பல விஷயங்களை படித்து வியந்தேன். அதில் ஒன்று நம் ஒவ்வொரு உறுப்பையும் ஒரு வானின் கோளோடு ஒப்பிட்டிருந்தது. அதில் சூர்யன் இதயத்திற்கும் சந்திரன் மூளைக்கும் ஒப்பிடப்பட்டிருந்தது. அதுவுமே இந்த முடிவை பிரதிபலிப்பதுதான். அண்டத்தில் பிண்டம் பிண்டத்தில் அண்டம்.

இந்த முடிவிற்காக ஆரம்பத்திலிருந்தே உங்களை தயார் செய்திருக்கிறேன். சூர்யன் அழியமாட்டான் என்றும் சொல்லியிருப்பான். விஷ்ணு சிரம் துண்டித்து சாகும் போது  அவன் சொன்ன சபதங்களில் அக்னியை மணப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிரம் துண்டிக்கப்பட்டுவிடும். இவ்வாறாக வரிசையாய் நிறைய விஷயங்கள் அதாவது முடிவை பற்றீய க்ளு கதைக்குள் இரூந்தது. முதலில் இருந்து படித்ததை யோசித்து பாருங்கள்.

கூடு விட்டு கூடு விட்டு பாயும் கலை. பராகய பிரவேசம். அது எவ்விதம் சாத்தியம். எப்போது நிகழ்ந்தது போன்ற கேள்விகள் கொஞ்சம் விடையில்லா ரகசியங்களாக இருப்பதே சுவராசியம். பிரெயின் டிரான்ஸ்பிளேன்டேஷன் சாத்தியமற்ற ஒன்று எனும் போது அந்த சிகிச்சை முடியும் போது அவன் அபிமன்யுவாய் ஈஷ்வரின் உடலில் இருந்து உயிராய் போராடி தன்னை மீட்டு கொள்வது அப்போதுதான் சாத்தியம். அங்கே அந்த உயிரின் சக்தி தேவைப்பட்டது. மனோபலம் எதையும் சாதிக்கவல்லது.

முடிவை நோக்கி செல்லாமல் அவசரமாய் முடிந்துவிட்டது. அப்படி அல்ல. கொங்குநாட்டிற்கு அழைத்து செல்லும் போதே முடிவை நோக்கி செல்வதை உரைத்துவிட்டேன். அபிமன்யு ஈஷ்வரின் கட்டுக்காவலை மீறி நுழைந்தது சக்கரவீயூகத்தில் நுழைந்தாகவே அர்த்தம்.

இன்றைய மருத்துவ முறை மற்றும் சித்த மருத்துவத்தை ஒப்புமை செய்யவே சில காட்சிகளை கதையில் புது யுகத்தில் சேர்த்து உங்களுக்கு சில விஷயங்களை புரிய வைக்க நினைத்தேன். மற்றபடி கதையின் பயணம் அதனை சார்ந்ததல்ல.

இந்த கதை முடிவு அவசரமான முடிவோ அல்லது, யோசனையின்றி எடுக்கப்பட்ட முடிவோ அல்ல. பல நாட்கள் இந்த முடிவை இந்த கதையில் சாத்தியப்படுத்த நிறைய யோசித்திருக்கிறேன். ருத்ர தேவனை நடுநாயமாய் வைத்தே இந்த கதை. இரண்டாவது பகுதியும் அவனிலிருந்தே தொடங்கியது. அவனே நம்மை கதை முழுக்க அழைத்து செல்கிறான். அவனில் தொடங்கி அவனோடே முடிந்தது.

கட்டாயப்படுத்தி நான் எழுதியதே முடிவு என உங்களை ஏற்க வைக்க விருப்பமில்லாமலே இந்த விரிவான விளக்கம். இதற்கு பிறகும் இந்த முடிவை நீங்கள் ஏற்க முடியாமல் நிச்சயம் நான் கதையின் முடிவை சரியாக உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் தவறிழைத்திருக்கிறேன்.

கருத்தை பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி

 

error: Content is protected !!