mu5

6

பூமாரி பொழிந்தது

வைத்தீஸ்வரி உடல் நலம் குன்றியதாக அவளின் தந்தை சோமசுந்தரத்திற்கு செய்தி வந்தது. ஆதலால் வைத்தீஸ்வரியின் தாய்  கண்ணாம்பாள் ரொம்பவும் பதற்றமடைந்தாள். இருவரும் நீலமலை அடிவாரத்தில் உள்ள ஆதுர சாலை அருகில் உள்ள வைத்தீஸ்வரியின் குடிலுக்குப் புறப்பட, அக்னீஸ்வரியும்  வருவதாகப் பிடிவாதம் பிடித்து அவர்களுடன் சென்றாள்.

பல நோய்களைக் குணப்படுத்தும் சிறப்பான வைத்தியர் சுவாமிநாதன் எனினும் தாயிற்கு நிகரான அரவணைப்பையும் அக்கறையையும் எந்த மருந்தும் தர முடியாது. அந்த எண்ணத்தொடே விஜயவர்தன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான்.

வைத்தீஸ்வரிக்குதான் உடல் நிலை சரியில்லை என்ற பொழுதும் உண்மையிலேயே நோயுற்றவனாக காட்சியளித்தது விஜயவர்தன்தான். போனமுறை சந்தித்த போது அவனிடம் இருந்த குறும்புத்தனமும் புன்னகையும் துளி கூட இல்லை. வைத்தீஸ்வரியின் மீது அவன் கொண்ட அன்பும் காதலும் அளவற்றது. அவன் அத்தனை தூரம் வேதனையுடன் காட்சியளிக்கக் காரணமும் இருந்தது.

அவனின் தாய் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு உயிர் துறந்தாள். அவள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு முன்னமே இரட்டைக் குழந்தையை பிரசவிப்பது சிரமமென  சுற்றி இருந்தவர்கள் அவள் மனோதிடத்தைத் தகர்த்துவிட, பிள்ளைப் பேற்றின் போது அச்சம் கொண்டதால் விஜயவர்தனின் தாய்க்கு அத்தகைய நிலை ஏற்பட்டது.

வைத்தீஸ்வரி கருவுற்ற போது சுவாமி நாதன் நாடிப் பிடித்து இரட்டைக் குழந்தை எனக் கணித்துவிட்டார். அவர் தன் மனைவிக்கு நேரிட்டது போல் மருமகளுக்கும்   நிகழக் கூடாதென ரொம்பவும் அக்கறையாய் கவனித்துக் கொண்டார்.

விஜயவர்தனும் இரட்டைக் குழந்தை என யாரிடமும்  சொல்லாமல் அவளைப் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான். அக்னீஸ்வரியிடம் மட்டும் மூலிகை எடுத்து வர பயணம் மேற்கொண்ட போது உரைத்திருந்தான். வைத்தீஸ்வரிக்கு மனதளவில் இரட்டைக் குழந்தைகளை பிரசவிப்பதால் ஆபத்து என்ற அச்சம் தலை தூக்கினால் தன் தாய்க்கு நேர்ந்த நிலை மனைவிக்கும் நேரிடுமோ என அவன் ரொம்பவும் பயந்திருந்தான்.

தன் அத்தானுக்கு அக்னீஸ்வரி தைரியம் சொல்லி அவனைச் சமாதானம் செய்தாள். அதேநேரம் கண்ணாம்பாளும் வந்ததில் இருந்து மகளுக்கு அவருக்குத் தெரிந்த கை வைத்தியங்களெல்லாம் செய்து கொண்டிருந்தார். அவரின் கவனிப்பில் வைதீஸ்வரியின் உடல்நிலையும் ஒருவாறு முன்னேற்றம் அடைந்திருந்தது.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க அக்னீஸ்வரி விஷ்ணுவர்தன் மீது கொண்ட கோபத்தை கிஞ்சிற்றும் மாற்றிக் கொள்ளவேயில்லை. அவள் நடந்த நிகழ்வை மனதில் கொண்டு விஷ்ணுவர்தனிடம் பேசுவதையே தவிர்த்தாள். அவன் இயல்பாய் பேச வரும் போதெல்லாம் பேசுவதற்கான வாய்ப்பைத் தராமல் அந்த இடத்தை விட்டு விலகி வந்தாள்.

விஷ்ணுவர்தனைக் கண்டாலே வெறுப்பைக் காட்டியவள் மனதளவில் யாரும் அறியா வண்ணம் ருத்ரதேவனை ஆராதித்துக் கொண்டிருந்தாள். நிலமகள் அருகாமையில்  சுழன்று வரும் சந்திரனை கவனிக்காமல் தொலைவில் இருக்கும் சூரியன் மீது மையல் கொண்டு சுற்றி வருவதுதானே இயற்கையின் படைப்பு!

இந்தச் சூழ்நிலையில் விஜயவர்தன் விஷ்ணுவர்தனை அக்னீஸ்வரி தவிர்ப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவளிடம் எப்படியாவது தன் தம்பியின் மனதைச் சொல்லி புரிய வைக்க அவன் எண்ணிய போது, விஷ்ணுவரதன் இடைபுகுந்து அவள் மனதைக் காயப்படுத்தியதிற்காக  தானே அவளிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனப் பிடிவாதமாய் உரைத்து தன் தமையனை அவளிடம் பேசவிடாமல் தடுத்துவிட்டான்.

அன்று காலை சூரியன் உதித்து இளஞ்சிவப்பு நிறத்தால் வான் வீதியை வண்ணமயமாய் மாற்றிக் கொண்டிருக்க, அக்னீஸ்வரி ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ருத்ரதேவனின் சந்திப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.  அவளின் எண்ணம் அன்று ஈடேறியது. அக்னீஸ்வரியின் செவிகளில் வெகுதூரத்தில் கேட்ட குதிரையின் கனைப்பு சத்தம் ருத்ரதேவனை அவளுக்கு நினைவுபடுத்தியது.

முதல் முறையாய் தான் அவனைக் குளக்கரையில்தான் சந்தித்தோம் என்பதை நினைவுகூர்ந்தவள் குதிரையின் சத்தம் அந்தத் திசையில் ஒலிப்பதை எண்ணி அவ்விடத்திற்கு விரைந்தாள்.

யாரிடமும் சொல்லாமல்  ஓட்டமும் நடையுமாய் முட்கள், கற்கள் என்றும் பாராமல் அவள் குளக்கரையில் மூச்சிறைக்க வந்து நிற்க, அங்கே யாருமே இல்லை. அந்த இடம் வெறிச்சோடியிருந்தது.  அவள் மனம் எந்தளவுக்கு ஏமாற்றம் கொண்டது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அவள் விழிகளில்  நீர் பெருகிவிட, அந்தத் தருணத்தில் அவளின் தலை முதல் பாதம் வரை பூமாரி பொழிந்தது. வண்ணமயமான பூக்கள் அவள் தேகத்தை வருடி பாதத்தில் சமர்ப்பணமாகிட, ருத்ரதேவன்தான் இவ்வாறு  பூக்களை தன் மீது தூவினான் என்பதை உணர்ந்து நெகிழ்ந்து போனாள்.

ருத்ரதேவன் அப்போது தன் குதிரையிலிருந்து தாவி இறங்கி கம்பீரமாய் அக்னீஸ்வரியின் அருகில் வந்து நிற்க,

அவளோ தன் தேகத்தின் மீது தங்கிவிட்ட மலர்களைத் துடைத்து விட்டபடி, “இதென்ன விளையாட்டு” என்றாள்.

ருத்ரதேவன் முகமலர, “என் காதலியைக் காண வரும் போது வெறுங்கையோடு வருவதா?! அதனால்தான் நான் வந்த வழித்தடம் எல்லாம் அழகாய் மலர்ந்திருந்த பூக்களை  உனக்காகப் பறித்து வந்தேன்” என்றான்.

“நீங்கள் ஆசையாய் பறித்த மலர்களை  என் மேல் கொட்டி இப்படி வீணடித்துவிட்டீர்களே!” என்றாள்.

அவன் சத்தமாய் சிரித்து, “வீணடித்தேனா… இந்த மலர்களை எல்லாம் உன்னைப் போல் அழகான மாலையாய் என்னால் கட்ட முடிந்திருந்தால் கோர்த்து உன் தோள்களில் சூடியிருப்பேன்… ஆனால் அவ்விதம் எனக்குத் தெரியாது என்பதால் என் மனதில் குடிகொண்ட அழகு தேவதையான உனக்கு… மலர்களால் அர்ச்சனை செய்துவிட்டேன்” என்று உரைத்தான்.

இவன் வீரம், அறிவில் மட்டும் சிறந்தவனல்ல, காதல் புரிவதிலும் வல்லவன் என்று எண்ணி வியந்த அக்னீஸ்வரி, இத்தகைய அழகான காதலை பெற தான் பெரும் பாக்கியம் செய்தோம் என உள்ளுர  மகிழ்வுற்றாள்.

“சரி… உன் தமக்கைக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன்… இப்போது நலமா?!” என்று அவன் விசாரிக்க  அவன் எல்லாத் தகவல்களையும் அறிந்தே இங்கு தன்னை காண வந்திருக்கிறான் என்பதை எண்ணி அவள் மேலும் வியப்படைந்து,

“ம்… நலம்தான்…” என்றாள்.

“சரி அக்னீஸ்வரி… நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்… அது யாதெனில்…” என்று ருத்ரதேவன் பேசி முடிக்கும் முன்னரே,

அக்னீஸ்வரி முந்திக் கொண்டு “தங்கள் தந்தையிடம் நம் காதலைக் குறித்துப் பேசி விட்டீரா?!” என்று கேட்டாள்.

அவள்  ஆர்வத்தைப் பார்த்து பேச வந்ததை உரைக்காமல் மீண்டும் யோசித்துவிட்டு, “இல்லை அக்னீஸ்வரி தந்தையிடம் எதுவும் சொல்லவில்லை… இப்போது நிலைமை சரியில்லை… வேறு ஒரு செய்தி பற்றி உன்னிடம் தெரிவிக்கவே வந்தேன்” என்றான்.

“எதைக் குறித்து?!” என்றவள் அவனைக் கேள்வி குறியோடு நோக்க,

“நான் நம் படைகளோடு உம்பல் காடு வரை போகிறேன்… அங்கே அந்நியப் பிரவேசங்கள் நிகழ்வதாகத் தகவல்… அதனை முன்னமே நாம் தடுத்து நிறுத்த வேண்டும்… இல்லையெனில் நம் ஆரை நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற சிற்றரசுகளுக்கும் ஆபத்து நேரிடும்… ஆதலால்   நம் நாட்டின் பாதுகாப்பு நிமித்தமாய் சில சிற்றரசர்களோடு சேர்ந்து நானும் நம் படைக்காவலர்களோடு அங்கே செல்ல இருக்கிறேன் ” என்று அப்போதைய மோசமான சூழ்நிலையை அவளிடம் தெளிவுபடுத்தினான்.

இதனைக் கேட்ட மாத்திரத்தில் அக்னீஸ்வரியின் விழிகளில் நீர் தேங்கி நின்றது. உடனே ருத்ரதேவன் தன் கரங்களால் அவள் முகத்தை நிமிர்த்தி,

“என்னவாயிற்று… நான் என்ன போருக்கா செல்கிறேன்… வெறும் பாதுகாப்புக்காகத்தான் படைகளைத் திரட்டி செல்ல இருக்கிறேன்… அப்படியே போருக்கு சென்றால்தான் என்ன… என் வீரத்தின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?!” என்று வினவ அக்னீஸ்வரி அவனிடம் இருந்து விலகி வந்தாள்.

“தங்கள் வீரத்தைக் குறித்து எனக்குச் சந்தேகம் இல்லை… நீங்கள் சொன்னதைக் கேட்டு என்னையும் அறியாமல் ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் எனக்குள்  கண்ணீரை வரவழைத்துவிட்டது” என்றாள்.

“கவலை கொள்ளாதே அக்னீஸ்வரி… நான் விரைவில் வந்து விடுவேன்… வந்த பிறகு நம் திருமணம்தான்… தயாராக இரு” என்று ருத்ரதேவன் தீர்க்கமாய் உரைத்து, தைரியம் சொல்ல ஏனோ மனதில் ஆட்கொண்ட சோகம் அக்னீஸ்வரிக்கு அகலவேயில்லை.

“உன் கவலை தோய்ந்த முகத்தையும் உன் கண்ணீரையும் காணவா நான் இத்தனை தூரம் வந்தேன்” என்று அவன் சூசகமாய் சொல்லி அவளைப் பார்வையால் அளவெடுத்தான்.

“நீங்கள் வெகுதூரம் செல்லப் போகும் செய்தியை சொல்லி என்னை வேதனைப்படுத்ததானே இங்கு வந்தீர்கள்” என்றவள் அவனை நிமிர்ந்து நோக்காமல் கோபத்தோடு உரைத்தாள்.

“இல்லை அக்னீஸ்வரி” என்று அவன்  பாதங்கள் அவளை நோக்கி கம்பீரமாய் நெருங்கி வர,

“வேறு எதற்கு வந்தீர்கள்?” என்று கேட்டு அவனை அவள் நிமிர்ந்து நோக்கிய போது அவன் தன் பாதங்களை முன்னெடுத்து வைத்து கொண்டே,

“நான் உன் மான் விழிகளில்  மயக்கம் கொள்ள… உன் செவ்விதழ்களில் தேன் பருக… மென்மையான உன் தேகத்தை என் வன்மையான கரங்களால் சிறை எடுக்க” என்றபடி இறுதியாய் எட்டி அவளை அணைக்க முற்பட்டான்.

அவள் சுதாரித்து அவனிடம் இருந்து விலகி நின்று கொள்ள அவன் ஏமாற்றத்தோடு,

“நானே வெகு தூரம் உன்னை விட்டுச் செல்ல இருக்கிறேன்… இப்போதே விலகிச் செல்வானேன்” என்று கெஞ்சலோடு சொல்லி மீண்டும் அவள் அருகில் வர எத்தனித்தான்.

“எட்டி நில்லுங்கள் இளவரசே… என்னை நீங்கள் காதல் சிறையில் ஆட்படுத்தி விட்டீர்கள்… இப்போதைக்கு அது போதும்” என்றவள் அவனை நெருங்கவிடாமல் மீண்டும் விலகி ஓட,

“இளவரசரின் ஆணை… அவ்விடமே நில்” என்று அவன் கட்டளை விதித்தான்.

“இளவரசர் அல்ல… ஈரேழு லோகங்களை ஆளும் அரசர்களே வந்தாலும் என் பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலை நான் செய்யத் துணிய மாட்டேன்” என்றாள்.

அவன் அதிர்ந்த பார்வையோடு, “உன் காதலனாகிய நான் உன்னை அணைப்பது உன் பெண்மைக்கு இழுக்காகிவிடுமா?!” என்று கேட்க,

“காதலனுக்கு என் மனதின் மீது மட்டுமே உரிமை… கணவன் என்ற உறவிற்குத்தான் சகல உரிமையும்” என்றாள்.

ருத்ரதேவன் முகத்தில் புன்னகை அரும்பியது. அவளின் பண்பை எண்ணி பெருமிதம் கொண்டவன், “ஆகட்டும்… அத்தகைய உரிமை எனக்குக் கிட்டும் போது உன்னை இது போன்று தப்பிச் செல்ல விட மாட்டேன்”  என்றான்.

“நான் அப்போது நிச்சயம் தப்பிச் செல்ல முயலமாட்டேன்” என்று அழகாக இதழ்கள் விரியப் புன்னகை செய்தவளை ஏக்கத்தோடு பெருமூச்செறிந்தபடி பார்த்தவன், “என்னை ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும்… நீ வழியனுப்புகிறாய் அக்னீஸ்வரி” என்றான்.

“ஆகட்டும்… நீங்கள் மேற்கொள்ளும் பணியை செவ்வனே முடித்துவிட்டு வாருங்கள்… என் கரங்களால்  பல வண்ண மலர்களால் மாலை கோர்த்து உங்கள் தோள்களில் சூடக் காத்திருப்பேன்” என்றாள்.

“உன் அழகிய வளை கரங்களால்  மாலையை சூடிக் கொள்ள நானும் விரைந்து திரும்புவேன்” என்று உரைத்த ருத்ரதேவன் தன் குதிரை மீது தாவி ஏறி அவளின் அழகை பார்த்து  ரசித்தவாறு அதன் கயிற்றை பிடித்து இழுத்து ஓடச் செய்தான்.

அக்னீஸ்வரி  அவனைத் தன் விழிகளில் இருந்து மறையும் வரை பார்த்து விட்டு, பின் குடில் நோக்கி மெல்ல நடந்தாள். அவள் எண்ணமெல்லாம் அவனின் காந்தமான புன்னகை ஒளிர்ந்த வதனத்திலேயே நிலைப்பெற்றுவிட்டது.

7

அக்னீஸ்வரியின் திருமணம்

அக்னீஸ்வரி குடிலின் வாசலை நெருங்க விஷ்ணுவர்தன் அவள் முன்னே வந்து நின்று “இத்தனை நேரம் எங்கே சென்றிருந்தாய்?!” என்று கேட்டான்.

அக்னீஸ்வரியோ அவன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல், “இந்த அகந்தை பிடித்தவள் எங்கு சென்றால் தங்களுக்கு என்ன?” என்றாள்.

“எல்லோரும் உன்னைக் காணாமல் தேடிக் கொண்டிருந்தார்கள்… அதனால்தான் கேட்டேன்?” என்று அவன் பொறுமையாகவே பேச, அவளோ அவன் சொன்னதைக் கேட்டும் கேட்காதவள் போல முன்னேறிச் சென்றாள்.

“அக்னீஸ்வரி”  என்றழைத்து விஷ்ணுவர்தன் அவளைப் போகவிடாமல் தடுத்து முன்னே வந்து நிற்க அவள் முகம் கோபக்கனலாய் மாறியது.

அவன் அப்போது, “நான் அன்று உன் மனம் காயப்படும்படி பேசிவிட்டேன்… என்னை மன்னித்து விடு அக்னீஸ்வரி” என்று உரைக்க,

அவள் அலட்சியப் பார்வையோடு, “என் மனம் காயப்பட வேண்டும் என்பதற்காகத்தானே தாங்கள் அவ்விதம் பேசினீர்கள்… அப்படி இருக்க இப்போது மன்னிப்பு கேட்பானேன்” என்றாள்.

“நான் இழைத்தது தவறென்று உணர்ந்ததினால்தான் நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்” என்றான்.

“தவறு செய்த பின் அதை உணர்ந்து என்ன பயன்?” என்று உரைக்கும் போது அவளின் முகத்தில் கோபம் மாறாமல் இருந்தது. அவன் இத்தனை தூரம் இறங்கி வந்த போதும் அவள் ஒரு அடி கூட இறங்கி வரத் தயாராக இல்லை.

ஆனால் விஷ்ணுவர்தன் புன்னகையோடு, “மன்னிக்க விரும்பாவிட்டால் தண்டித்து விடு… என்ன தண்டனையாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்”  என்றான்.

“தங்களைத் தண்டிக்க எனக்கு உரிமையில்லை… அதே நேரத்தில் மன்னிக்கவும் விருப்பமில்லை” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் விரைந்து விட்டாள்.

விஷ்ணுவர்தன் பெருமூச்செறிந்து, ‘இவள் பிறக்கும் போதே இத்தனை கர்வத்தோடே பிறந்திருப்பாளோ… நுனிமூக்கில் கோபத்தை வைத்துக் கொண்டே சுற்றுகிறாள்… திருமணம் ஆனப்பின் என்னை என்ன பாடு படுத்தப் போகிறாளோ?!’ என்று தன்னிலையை எண்ணித் தானே வருத்தமுற்றான்.

விஷ்ணுவர்தன் அவ்விதம் எண்ணிக் கொண்டதற்கு காரணம் அக்னீஸ்வரி இல்லாத நேரத்தில் அவளின் திருமணப் பேச்சு நிகழ்ந்ததுதான். அதுவும் விஷ்ணுவர்தனுக்கும் அவளுக்குமான திருமண நாளை கூட சுவாமிநாதனும் சோம சுந்தரரும் சேர்ந்து முடிவெடுத்துவிட்டனர். அதேநேரம் இது பற்றி யாருமே அக்னீஸ்வரிக்குத் தெரிவிக்கவில்லை. அவளிடம் தெரிவிப்பது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக யாரும் கருதவில்லை.

அக்னீஸ்வரி ருத்ரதேவனைப் பற்றிய நினைப்பிலேயே இருக்க, அவள் திருமண பேச்சுகள் நிகழ்வதைச் சரியாக புரிந்து கொள்ளாமலும் கூர்ந்து கவனிக்காமலும் விட்டுவிட்டாள். நாட்கள்  நகர்ந்து செல்ல அக்னீஸ்வரிக்கு நடப்பது இன்னதென எல்லாம் புரிந்து போனது. திருமணம் என்பதே அதிர்ச்சிக்குரிய தகவலாய் இருக்க, அதுவும் விஷ்ணுவர்தனுடன் என்பது அவளை இரு துண்டுகளாய் பிளந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

எல்லோரும் அவள் கனவுலகில் சஞ்சரிப்பவள் என்று கருத, தான் இப்போது இளவரசர் ருத்ரதேவனைக்  காதலிக்கிறோம் என்று சொன்னால் தான் கனவு கண்டு பிதற்றுகிறோம் என்று எண்ணிக் கொண்டு பரிகாசம் செய்வர். அவள் உருவாக்கிவிட்ட சிக்கலான முடிச்சுகளில் அவளே சிக்குண்டாள். யாரிடம் அவள் திருமணம் வேண்டாம் என உரைத்தாலும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

விஷ்ணுவர்தன் மீதுள்ள கோபம் அல்லது பருவ வயதில் பெண்களுக்கே திருமணம் குறித்து ஏற்படக் கூடிய பயம் என அவர்களாகக் காரணம் கற்பித்துக் கொண்டனர். அக்னீஸ்வரியின் தவிப்பை அவள் தமக்கை வைத்தீஸ்வரியும் புரிந்து கொள்ளவில்லை.

விஷ்ணுவர்தனிடம் தான் ருத்ரதேவனைக் காதலிப்பது பற்றி உரைத்தால், நிச்சயம் அவன் கோபம் கொண்டு திருமணத்தை நிறுத்திவிடுவான் என்று எண்ணினாள். அதனால் வரப் போகும் விளைவு எதுவாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து  அவனை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்தாள். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு அவளுக்குக் கிட்டவே இல்லை.

ருத்ரதேவனாவது சீக்கிரம் ஊர் திரும்பி விடக் கூடாதா என எதிர்பார்த்தாள். அந்த எதிர்பார்ப்பும் நொறுங்கிப் போனது. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட கிட்டதட்ட மரணத்தை நோக்கிப் பயணிப்பது போல் அவள் திருமண நாள் நெருங்கி வந்து கொண்டே இருந்தது.

அக்னீஸ்வரி விரும்பாத எதிர்பார்க்காத அவள் வாழ்வையே புரட்டிப் போடப் போகும் அந்த நாள் வந்தது. திருமணத்தின் ஏற்பாடுகள் முடிந்து சடங்குகள் தொடங்க அக்னீஸ்வரி தன் தமக்கையின் மடியில் படுத்துக் கொண்டு திருமணம் வேண்டாம் எனக் கதறி அழுது பிடிவாதம் பிடித்தாள்.

விஜயவர்தன் அன்று விளையாட்டாய் சொன்னது போலவே இன்று அவள் உரைக்க, அவளின் அண்ணன்மார்களும் பெற்றோர்களும் அவள் மனவேதனையின் காரணம் புரியாமல் கோபம் கொண்டும், பின் அறிவுரை கூறியும், இறுதியாய் இந்தத் திருமணம் நடந்தே தீர வேண்டும் எனச் சொல்லி  அவள் பிடிவாதத்தை உடைத்தெறிந்தனர்.

அரங்கநாதன் திருக்கோவிலில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்னீஸ்வரிக்கு அலங்கரித்துக் கொள்வதில் அத்தனை ஆர்வம். ஆனால் இன்று அவளுக்கு வைத்தீஸ்வரி அத்தனை அழகாய் அலங்காரம் செய்து அவள் அழகை மேலும் மேலும் அழுகுப்படுத்தியிருந்தாள். ஆனால் அவள் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. எந்தப் பிம்பத்தை ஓயாமல் ரசிப்பாளோ அந்தப் பிம்பத்தை அன்று அவள்  பார்க்கக் கூட விருப்பப்படவில்லை.

ருத்ரதேவனை மணமுடிக்க அவள் கண்ட கனவுகள் எல்லாம் சில நொடிகளில் கரைந்து போகப் போகிறது.

ருத்ரதேவனை மனதில் சுமந்தபடி விஷ்ணுவர்தனுக்கு  மாலையைச் சூடுவது மரணத்திற்கு நிகரான வேதனை எனும் பட்சத்தில்  யாருக்கும் தன் நிலையைப் புரிய வைக்க முடியாமல் அக்னீஸ்வரி தனக்குள்ளேயே மருகினாள்.  இதுதான் நடக்க வேண்டும் என்ற நிலையில் அது நிகழ்ந்தே தீரும்.

அக்னீஸ்வரி தன் கரங்களால் ருத்ரதேவனுக்கு மாலையிட எண்ணி இருந்தாள். ஆனால் அது விஷ்ணுவர்தனுக்காக என்று விதிக்கப்பட்டிருக்கையில் அக்னீஸ்வரியின் கனவுகளும் காதலும் அந்த அக்னி குண்டத்திற்குள் சிதைந்து சாம்பலாய் போனது.

திருமணம் நிகழ்ந்து எல்லோர் முகத்தில் சந்தோஷம் நிறைவாய் இருக்க அக்னீஸ்வரி உணர்ச்சிகளற்றவளாய் திருமண சடங்குகளை விஷ்ணுவர்தனோடு சேர்ந்து செய்து முடித்தாள்.

வெகுதூரம் சென்றிருக்கும் இளவரசர் ருத்ரதேவன் கோட்டைக்குத் திரும்பும் போது இதனை அறிந்து கொண்டால் என்ன நேரும்?  அவன் இந்தச் செய்தியை எவ்விதம் எடுத்துக் கொள்வானோ என்ற எண்ணம் அக்னீஸ்வரியின் மனதை ஆட்கொண்டு அப்போது அவளைக் கலவரப்படுத்தியது

அழகிற்கே இலக்கணமாய் திகழும் அக்னீஸ்வரியின் முகத்தில் புரியாத சோகம் படர்ந்திருந்ததை விஷ்ணுவர்தனும் கவனித்தான். தன் மீது அவள் கொண்ட கோபத்தால் அவ்விதம் இருக்கிறாளோ என்று எண்ணினாலும் அது அவனுக்குள்ளும் குழப்பத்தை விதைத்தது.

வைத்தீஸ்வரி தன் தங்கைக்கு திருமண வாழ்க்கை பற்றி ஏதேதோ அறிவுரைகள் கூற அவை எல்லாம் அக்னீஸ்வரியின் செவிகளில் விழவில்லை. அறிவுரைகளைவிட அனுபவம் அவளுக்கு வாழ்வின் நிதர்சனத்தை ரொம்பவும்  அழுத்தமாகவே கற்றுக் கொடுத்துவிட்து.

அவள் தன் அழகின் மீது கொண்ட கர்வம் எல்லாம் அன்றே காணாமல் போனது. விதியின் வசம் நடந்த நிகழ்வை எண்ணி மனதை  மாற்றிக் கொள்வதா இல்லை நடக்காத ஒன்றை எண்ணி ஏதும் அறியாத விஷ்ணுவர்தனையும் காயப்படுத்துவதா என்று புரியாமல் குழம்பினாள்.

விஷ்ணுவர்தனை தனிமையில் சந்தித்து உண்மையைக் கூற எண்ணி இருந்தாள். அந்த வாய்ப்பு திருமணம் நடந்தேறிய பின்னே கிடைக்கப் பெற்றது. இப்போது அவள் காதலைப் பற்றி எவ்விதம் உரைப்பாள். அப்படி உரைத்தால் அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் அவளுக்குள் சுழன்று கொண்டிருந்தன.

அந்த அறையினுள் விளக்கு பிரகாசமாய்  ஒளி வீசிக் கொண்டிருக்க அக்னீஸ்வரி முதன்முறையாய் விஷ்ணுவர்தன் முன்னிலையில் தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருக்கிறாள். ஆனால் அது நாணத்தால் இல்லை. அவனை எவ்விதம் எதிர்கொள்வது என்ற குற்ற உணர்ச்சியால்!