Nallai05

அந்த ப்ளாக் ஆடியைப் பார்க் பண்ணிவிட்டு இறங்கினான் கௌதம். கையில் லேப்டாப் அடங்கிய பையைத் தூக்கிக் கொண்டு லிஃப்டை நோக்கிப் போனான். நவநாகரிகம் அவன் அணிந்திருந்த ஷூ நுனியில் கூடத் தெரிந்தது. அவன் அணிந்திருந்த அந்த விலை உயர்ந்த ஷூவில் முகம் பார்க்கலாம்.

 

ஐந்தாவது மாடியில் போய் இறங்கினான் கௌதம். கட்டடம் முழுவதும் இதமான ஏஸி. மெல்லிய லாவண்டர் வாசம் நாசியை நிரப்பியது. அந்தப் புத்துணர்ச்சியுடன் தனது கேபினில் போய் அமர்ந்தான்.

 

“சைந்தவி! என் கேபினுக்கு வாங்க.” அவன் சொன்ன இரண்டொரு நொடிகளில் அந்தப் பெண் வந்து நின்றாள்.

 

“குட்மார்னிங் சார்.”

 

“குட்மார்னிங்… பல்லவி எங்க?” அந்தத் திடீர் தாக்குதலை எதிர்பாராதது போல அந்தப் பெண் திணறினாள்.

 

“உங்களைத்தான் கேக்குறேன் சைந்தவி… பல்லவி எங்க?”

 

“தெரியலை சார். பழைய நம்பர் வேலை செய்யலை. அவங்க வீட்டு நம்பரும் எனக்குத் தெரியாது. ஒரு தரம் அவங்க வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டி இருந்தது சார்.” அவசர அவசரமாக ஒப்புவித்தாள் பெண்.

 

“அவங்க உங்களைக் கான்டாக்ட் பண்ணலையா?”

 

“இல்லை சார்.”

 

“பல்லவிக்குக் கல்யாணம் ஆச்சு. அதாவது உங்களுக்குத் தெரியுமா?”

 

“சார்!” சைந்தவி இப்போது தன்னை மறந்து சத்தம் போட்டாள்.

 

“அவ்வளவு க்ளோசாப் பழகினீங்க ரெண்டு பேரும். உங்களுக்குக் கூட பல்லவி இதையெல்லாம் தெரியப்படுத்தலையா?” அவன் குரலில் லேசான சந்தேகம்.

 

“சத்தியமாத் தெரியாது சார். தெரிஞ்சிருந்தா நான் எதுக்கு சார் உங்கக்கிட்ட மறைக்கணும்?”

 

“ம்…” அவன் அத்தோடு பேச்சை முடித்துக் கொள்ளவும் சைந்தவி போய் விட்டாள். கௌதம் ஏஸி யின் அளவை இன்னும் கொஞ்சம் கூட்டினான். அந்த அதீத குளிர் உடலை ஜிவ்வென்று தாக்கியது. மூன்று மாதங்கள் கனடா வாசம்.‌ போன வாரம்தான் தாய்நாடு திரும்பி இருந்தான். 

 

கனடாவின் பனி அடர்ந்த பகுதியில்தான் அவனது மூன்று மாதங்களும் கழிந்தன. சிலநேரங்களில் அவர்களைப் பணிக்காக அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வருவதுண்டு. இது போன்ற வித்தியாசமான அனுபவங்களை கௌதம் வெகுவாக ரசிப்பான்.

 

அவனுக்கு மேலே இருந்த அதிகாரி கொஞ்சம் வயதானவர். இது போன்ற குளிர்ப் பிரதேசங்களுக்குப் போக அவர் பிரியப்படுவதில்லை. அதனாலேயே இதுபோன்ற அரிதான வாய்ப்புக்கள் கௌதமை நோக்கி வரும். 

 

ஆனால் இந்த முறை அப்படியொரு அரிதான வாய்ப்புக் கிட்டியதாலேயே அரிதான ஒன்றை இந்தியாவில் இழந்திருந்தான். இப்போது கௌதம் முகத்தில் லேசானதொரு கேலிப்புன்னகை அரும்பியது. அந்தப் புன்னகை முடிந்த போது சத்தமாகச் சிரித்தான் இளவல்.

 

நேற்று மாலைதான் அந்தப் பட்டிக்காட்டானைப் பார்த்திருந்தான் கௌதம். வேஷ்டி சட்டையில் டவுன் வரை வந்திருந்த அந்த ஸ்கோடாவைப் பார்த்த போது கௌதமிற்கு முதலில் சிரிப்புத்தான் வந்தது. இந்த மூஞ்சிக்குப் பல்லவி கேட்கிறதா? 

 

நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். கௌதமோடு ஒப்பிடும்போது மாதவன் கறுப்பு நிறந்தான். எத்தனை நாளைக்கு இந்த முட்டாளோடு அந்தப் பட்டிக்காட்டில் குப்பை கொட்டுவாளாம்! இல்லையென்றால் கட்டி வைத்துவிட்டார்களே என்று சகித்துக் கொள்கிறாளா? 

 

கையோடு கொண்டு வந்திருந்த பொருட்களை அவன் பார்வைப் படும்படி வைத்துவிட்டு, கொஞ்சம் பேசிவிட்டுத்தான் வந்திருந்தான் கௌதம். ரோஷமுள்ளவன் என்றால் அந்தப் புள்ளியிலேயே விலகி விடுவான்.

 

ஆனால் அந்த மகா ரோஷமுள்ளவன் இவற்றையெல்லாம் அறிந்த பிற்பாடுதான் இதுவரை தான் ஆரம்பிக்காத வாழ்க்கையையே ஆரம்பித்தான் என்பது இவனுக்குத் தெரியாது.

 

ஆனாலும் அநியாயம் சொல்லக்கூடாது. அத்தனை அதிர்ச்சியான விஷயத்தை ஆதாரத்தோடு சொல்கிறேன். கல்லுளிமங்கன் போல எத்தனை திடகாத்திரமாக நிற்கிறான்! பற்களை நறநறவென்று இப்போது கடித்தான் கௌதம்.

 

இப்போது வந்து போன சைந்தவியும் பல்லவியும் ஒன்றாகத்தான் வேலைக்குச் சேர்ந்தார்கள். அவர்களை வேலைக்குத் தெரிவு செய்யும் குழுவில் அன்று கௌதமும் இருந்தான். கல்வித் தகைமைகள் அனைத்தும் இவர்கள் எதிர்பார்த்தது போலவே இரு பெண்களிடமும் இருந்தன.

 

ஆனால் முன் அனுபவம் இருக்கவில்லை. கௌதமிற்கு அது ஒரு பெரிய குறையாகத் தெரியாததால் இரு பெண்களும் தெரிவு செய்யப்பட்டு அவன் குழுவிலேயே சேர்க்கப்பட்டார்கள்.

இளம் வயது, புதிதாக வேலையில் சேர்ந்த ஆர்வம், எல்லாவற்றிலும் தேர்ந்து விடவேண்டும் என்ற முனைப்பு எல்லாமாகச் சேர்ந்து பெண்களை சுறுசுறுப்பாக வைத்திருந்தது.

 

கௌதமும் தட்டிக்கொடுத்து வேலை வாங்கும் இளம் லீடர் என்பதால் இன்னும் ஆர்வமாக வேலைப் பார்த்தார்கள். என்னதான் லீடர் என்றாலும் கண்ணிற்குக் குளிர்ச்சியாக இருக்கும் இளையவர்களை ஆண்கள் மட்டுந்தான் ரசிப்பார்களா என்ன?! பெண்களும் நிறையவே ரசிப்பார்கள்.

 

சைந்தவி வசதியான வீட்டுப் பெண். நடை உடை பாவனைகளில் நாகரிகம் அப்பட்டமாகத் தெரியும். ஆனால் பல்லவி அப்படியல்ல. நாகரிகத்தை வெளிக்குக் காட்டிக் கொண்டாலும் அவளுக்குள் சின்னதாக ஒரு கிராமத்து மணம் வீசும். 

 

புதிதாக ஒரு க்ளையண்ட் வரும் போது கைகுலுக்கிப் பேசும் அவளால் அதைத் தாண்டிப் போக முடியாது. புதியவர்கள் யாராவது அவளை நெருங்கிப் பேசினால் அவள் கண்கள் மருண்டு போகும். சைந்தவி இதையெல்லாம் இலகுவாகக் கடந்து விடுவாள். ஆனால் பல்லவி தடுமாறுவாள்.

முதலில் இதை கௌதம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தான். ஆனால் அதுவே அவள் இயல்பு என்று பட்டபோது பல்லவியை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தான்.

 

அந்த அக்கறையே ஒரு புள்ளியில் காதலாகிப் போனது!

***

 

“ம்…” அந்தக் குளிர்ந்த கரத்தின் ஸ்பரிசத்தில் சிணுங்கினாள் 

 

“வீட்டுக்கு வந்த மருமக இப்படி டெய்லி ஏழு மணிக்கு எந்திரிச்சா நல்லாவா இருக்கும்?” மாதவன் கேட்க சற்றுத் தள்ளிப் படுத்திருந்தவள் நெருங்கி வந்து அவன் மார்புக்குள் புகுந்து கொண்டாள்.

பட்டுப் புடவையில் கலைந்து போயிருந்தாள் பெண். அவள் கல்யாணப் புடவை அது. அன்று சரியாகப் பார்க்க முடியவில்லை என்று நேற்று இரவு அவளை வற்புறுத்திக் கட்ட வைத்திருந்தான்.

 

“நல்லா இல்லைத்தான். என்னப் பண்ண? அது என்னோட வீட்டுக் காரருக்குப் புரிய மாட்டேங்குதே!” தூக்கக் குரலில் அவள் சிரித்தபடி சிணுங்கினாள். மாதவன் இப்போது சத்தமாகச் சிரித்தான்.

 

“இன்னும் பத்து நிமிஷத்துல ரெடியாகிக் கீழே போகணும் பல்லவி எந்திரி.”

 

“இன்னும் கொஞ்ச நேரங்க.” சொன்னவளை அப்படியே அலாக்காகத் தூக்கியவன் பாத்ரூமிற்குள் கொண்டு விட்டான்.

 

“பத்து நிமிஷத்துல குளிச்சிட்டு வரணும். தேவையான ட்ரெஸ் எல்லாம் அங்க வச்சிருக்கேன்.” சொல்லிவிட்டு அவன் நகர்ந்து விட புன்னகைத்தாள் பல்லவி.

 

அவன் அப்படித்தான். அவனுக்கென்று ஒரு சில பழக்க வழக்கங்களை வைத்திருந்தான். எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும் டைமிற்கு எழும்பி விடுவான். பல்லவிதான் திணறிப் போவாள்.

 

இத்தனைக்கும் பவானி எதுவும் சொல்லும் மாமியாரே கிடையாது. மருமகள் மகனோடு வாழும் வாழ்க்கைப் பார்த்து அவருக்கு அப்படியொரு ஆனந்தம். 

 

பிரச்சனையின் மூலப் புள்ளியை அறிந்தவர் என்பதால் முதலில் வெகுவாகக் கவலைப் பட்டார். ஆனால் பெண் தன் மகனைச் சமாளித்த விதம் அவரைத் திருப்திப் படுத்தி இருந்தது. பிழைத்துக் கொள்வாள் என்று நினைத்துக் கொண்டார்.

 

குளித்து முடித்து விட்டு அவள் வெளியே வர இருவரும் கீழே இறங்கிப் போனார்கள். பவானி சமையலறையில் மும்முரமாக நின்று வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். பல்லவிக்குக் குற்ற உணர்ச்சியாகிப் போனது.

 

“அத்தை…” அவள் நலிந்த குரலில் சட்டென்று திரும்பினார் பவானி.

 

“பல்லவி எந்திரிச்சுட்டியா? தம்பியும் வந்துட்டானா?”

 

“ம்…”

 

“அப்போ இந்தா காஃபி. தம்பிக்கும் குடுத்திட்டு நீயும் குடிம்மா. இன்னும் ஒரு அரை மணி நேரத்துல டிஃபன் ரெடியாகிரும்.” 

 

“ம்…” தலையைத் தலையை ஆட்டியவள் அப்பால் நகர பவானி வாய்க்குள் புன்னகைத்துக் கொண்டார்.

 

கணவனைப் பல்லவி தேட அவன் ஆஃபீஸ் அறையில் உட்கார்ந்து கொண்டு ஏதோ கணக்கு வழக்கில் இறங்கி இருந்தான். இவள் காஃபியை நீட்டவும் ஒரு இளஞ்சிரிப்போடு வாங்கிக் கொண்டான்.

 

“உனக்கு?”

 

“இதோ இருக்கு.”

 

“ம்…” அதன்பிறகு அவன் வேலையில் மூழ்கிவிட பல்லவி யோசனையில் ஆழ்ந்து விட்டடாள். 

 

எதற்காகவோ நிமிர்ந்த மாதவன் பார்த்தது மனைவியின் யோசனை முகத்தைத்தான்.

 

“பல்லவி!”

 

“ஆ…”

 

“என்ன யோசனை?”

 

“இல்லை… இங்க வந்ததுல இருந்து ஒரு யோசனை மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. நான் அதைச் சொல்லுவேன். ஆனா… நீங்க கோபிக்கக் கூடாது.” அபிநயத்தோடு பெண் சொல்ல மாதவன் அழுத்தமாகச் சிரித்தான். 

 

“சொல்லு.”

 

“உங்களுக்கு வயல் மட்டுந்தானே ஏக்கர் கணக்குல இருக்கு?”

 

“நமக்கு.”

 

“சரி நமக்கு.”

 

“இல்லை பல்லவி. தென்னந்தோப்பும் இருக்கு.”

 

“நாம சின்னதா காய்கறி பயிரிடலாமா?” அவள் ஆசையாகக் கேட்க பெண்ணை வினோதமாகப் பார்த்தான் மாதவன்.

 

“பல்லவி!?”

 

“ஐயையோ! ஏதாவது தப்பாச் சொல்லிட்டேனா?”

 

“இல்லையில்லை… மேல சொல்லு.”

 

“இல்லைங்க, இந்த டீவியில எல்லாம் சின்னதாத் தோட்டம் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு ஆசையா இருக்கும். ஆனா எங்க வீட்டுல அதுக்கு அவ்வளவு இடம் இருந்ததில்லை. மொட்டை மாடியில பண்ணலாமான்னு அம்மாக்கிட்டக் கேட்டேன். மொதல்ல ஒழுங்கா வேளையோட எந்திரிச்சு சமையலைக் கத்துக்கிற வழியைப் பாருன்னு திட்டிட்டாங்க.” இப்போது மாதவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். பல்லவியின் முகம் சுண்டிப்போனது.

 

“ஏய்! உக்காரு உக்காரு.” கணவன் சிரிக்கவும் அவன் தன்னைக் கேலி பண்ணுகிறான் என்று நினைத்தவள் சோஃபாவை விட்டு எழுந்தாள். மாதவன் மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

 

“சொல்லுடா… என்ன ஓடுது இந்தத் தலைக்குள்ள?”

 

“நிஜமாத்தான் கேக்குறீங்களா? இல்லைக் கேலிப் பண்ணுறீங்களா?”

 

“நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்லுவேனா?” கணவனின் குரல் கீழ் ஸ்தாயியில் வந்தது.

 

“இல்லைங்க… சின்னதா ஒரு காய்கறித் தோட்டம் பண்ணலாம்னு ஆசை. ரொம்ப இடமெல்லாம் வேணாம். சின்னதாப் போதும்.”

 

“ம்…” அவன் ஆர்வமாகக் கேட்கவும் அவள் தொடர்ந்தாள்.

 

“வீட்டுக்குத் தேவையான காய்கறி… இந்த தக்காளி, கத்தரி, பச்சைமிளகாய் இதுமாதிரி.”

 

“சரி…”

 

“அங்கேயே…”

 

“சொல்லு.”

 

“நீங்க சிரிக்கக் கூடாது.”

 

“மாட்டேன் சொல்லு.”

 

“சின்னதா ஒரு ஹட். போனா ரெஸ்ட் எடுத்துக்கிற மாதிரி. ரொம்ப ஆடம்பரம் இல்லாம பழைய ஸ்டைல்ல.”

 

“ஓ…” சொல்லிவிட்டுக் கணவனின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள் பல்லவி. அந்த எதிர்பார்ப்பான முகத்தைப் பார்த்த போது மாதவனின் முகம் கனிந்து போனது.

 

“தோராயமா ஒரு ஏக்கர் போதுமா?”

 

“அப்படின்னா எவ்வளவு?” 

 

“ம்… நம்ம வீட்டைச் சுத்தி இருக்கிற நிலம் மாதிரி ஒரு நாலு மடங்குன்னு வெச்சுக்கலாம்.”

 

“ஐயையோ! அவ்வளவு எதுக்குங்க? நம்ம வீடளவே போதும்.”

 

“பல்லவிம்மா!” இவர்கள் பேச்சைக் குறுக்கிட்டது வாணியின் குரல். 

 

“என்ன வாணி?” வெளியே எட்டிப் பார்த்துக் கேட்டாள் பெண்.

 

“எல்லாம் ரெடியா இருக்கும்மா.” மேஜையில் அனைத்தப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

 

“இதோ வர்றேன்.” கணவனின் காலிக் கப்பையும் எடுத்துக் கொண்டவள்,

“சாப்பிடலாங்க.” என்றாள்.

 

கணவனும் மனைவியும் வெளியே வர வாணி நகர்ந்து விட்டாள். பவானியின் தலை லேசாக கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தது. பல்லவி பரிமாற உண்டு முடித்திருந்தான் மாதவன். அவள் இன்னும் இரண்டு இட்லிகளை வைக்கப் போக அவன் கை அவள் மணிக்கட்டைப் பிடித்துத் தடுத்தது.

 

“போதும்மா, நீயும் உக்கார்ந்து சாப்பிடு.”

 

“நான் அத்தையோட சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன்.”

 

“ஏன்? எங்களோடயெல்லாம் சேர்ந்து சாப்பிட மாட்டீங்களா?” அவன் விளையாட்டாகக் கேட்க பல்லவி சிரித்தாள்.

 

“எனக்கு… ரொம்ப கில்டியா இருக்குங்க.”

 

“ஏன்?”

 

“அத்தை என்னைக் குறையே சொல்றதில்லை.” இதேதடா வம்பாக இருக்கிறது என்பது போல மனைவியைப் பார்த்தான் மாதவன்.

 

“ஆமாங்க… ஏழு மணிக்கு எந்திரிச்சுக் கீழே வர்றேன். சமையல்ல மும்முரமா நிக்குறாங்க. வேற வீடா இருந்தா… அது எதுக்கு வேற வீட்டுக்குப் போகணும்! எங்க அம்மாவா இருந்தாக்கூட, ஏன்டீ உனக்கு இப்போதான் விடிஞ்சுதான்னு கேப்பாங்க. ஆனா அத்தை ஒன்னுமே சொல்றதில்லை. கைல காஃபியைக் குடுக்கிறாங்க.” சொன்னவளின் குரலில் ஏகத்துக்கும் கவலை. மாதவன் புன்னகைத்தான். அவன் அம்மாவை அவனுக்குத் தெரியாதா?

 

“மண்ணோட சாம்பிளை டெஸ்ட் பண்ணுறதுக்கு இன்னைக்கே அனுப்புறேன்.” கையைக் கழுவிய படி சொன்னான் மாதவன். அவள் துண்டை நீட்ட அதைத் தவிர்த்து அவள் சேலைத் தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டான்.

 

“நான் கிளம்பட்டுமா?” கேட்டவன் கண்களில் காதல் கொட்டியது. தலையை ஆட்டினாள் பல்லவி. அவன் பார்வைப் பார்த்து முகம் சிவந்து போனது பெண்ணிற்கு. அவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன் வெளியே போய்விட்டான். வாசற்கதவு வரைப் போனவள் கணவன் கிளம்பும் வரை நின்றுவிட்டு உள்ளே வந்தாள்.

 

“அத்தை…” தனக்கு முன்னால் சங்கடப்பட்டுக்கொண்டு நின்றிருந்த மருமகளை நிமிர்ந்து பார்த்தார் பவானி.

 

“என்னம்மா?”

 

“மிச்ச வேலையை நான் பார்க்கிறேன். நீங்க உக்காருங்க.”

 

“அதையெல்லாம் வாணி பார்த்துக்குவா.‌ தம்பி கிளம்பிட்டானா?”

 

“ம்…”

 

“அப்போ நாம சாப்பிடலாம்.” மருமகளோடு சேர்ந்து உணவருந்திய பவானி அதன் பிறகு பல்லவியை மாடிக்கு அனுப்பி விட்டார்.

 

“நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா. தம்பி மத்தியானம் சாப்பிடத்தானே வருவான். அப்போ வந்தாப் போதும்.”

 

“ம்…” தலையை ஆட்டியபடி மாடியில் இருந்த அவர்கள் ரூமிற்கு வந்தாள் பல்லவி. உடம்பு ஓய்விற்காக ஏங்கியதென்னவோ உண்மைதான். ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளச் சங்கடமாக இருந்தது.

 

கட்டிலில் சாய்ந்து கொண்டாள் பெண். மூடிய கண்களுக்குள் மாதவன்! இந்த இரண்டு நாட்களும் பல்லவியைப் புரட்டிப் போட்ட நாட்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

திருமணம் முடிந்த இந்த ஒரு மாத காலத்தில் தன் வாழ்க்கை இப்படி எல்லாம் மாறும் என்று பல்லவி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆரம்பத்தில் எரிச்சலாகத் தான் பார்த்த கணவன் மேல் இப்படியொரு எதிர்பார்ப்பு வரும் என்று அவள் கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை.

 

அந்த எதிர்பார்ப்போடு அவள் காத்திருக்க பூகம்பம் அல்லவா புறப்பட்டு வந்தது! அதை நினைத்த மாத்திரத்தில் பல்லவியின் கண்களில் குபுக்கென்று நீர் திரண்டது. 

 

“சே!” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பெண். பல்லவி திக்குமுக்காடியது அன்றைக்குத்தான். தான் ஒன்று எதிர்பார்த்திருக்க இன்னொன்று நடந்த போது வலித்ததுதான். ஆனாலும் பொறுத்துக் கொண்டாள்.

 

நிதானமாக இன்று சிந்தித்த போது மாதவன் மேல் ஒருவித மரியாதைதான் தோன்றியது. இதுவே அவனிடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் எவ்வளவு ரசாபாசமாகிப் போயிருக்கும்.

 

தன்னைத் தூக்கி எறிய நினைக்காமல் உறவைப் பலப்படுத்த நினைத்தவன் மேல் அன்பு, பாசம், கருணை எல்லாம் தாண்டி ஏதோவொன்று உருவானது. அதை இன்றைய இளைஞர்கள் சொல்லும் காதல் என்ற வார்த்தைச் சொல்லிக் கொச்சைப் படுத்த பல்லவி விரும்பவில்லை. காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே காலில் தேள் கொட்டியது போல இருந்தது.

 

கணவனைச் சுலபமாகப் புரிந்து கொண்டவள் சின்னதாக அவனுக்கு விட்டுக் கொடுத்தாள். எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்த போதும் கணவன் அன்றைய மனநிலையில் அவர்களது வாழ்க்கையை ஆரம்பித்தது அவளுக்குப் பிடிக்கவில்லைதான். ஆனாலும் மறுக்க முடியவில்லை. 

அன்று அவள் விவாதம் பண்ணி இருந்தால்… அது நியாயமானதாக இருந்த போதும் விபரீதமான விளைவுகளை உருவாக்கி இருக்கும். பல்லவி நிலைமையை வெகு சாமர்த்தியமாகக் கையாண்டிருந்தாள்.

 

ஒரு சிறு இணக்கமான செயல். அது அவர்கள் வாழ்க்கையை இறுக்கிப் பிணைத்தது. மாதவனின் தன்மானம் ஏற்கனவே பலமாக அடிவாங்கி இருந்தது. அந்த சமயத்தில் மனைவியின் மறுப்பு அவனை இன்னும் காயப்படுத்தி இருக்கும்.

 

“பல்லவிம்மா!”

 

“என்ன வாணி?” கட்டிலில் சாய்ந்திருந்த பல்லவி எழுந்து உட்கார்ந்தாள்.

 

“உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க.”

 

“என்னைப் பார்க்கவா?”

 

“ஆமா, டவுனுல இருந்து வந்திருக்கிற மாதிரித்தான் தெரியுது.” 

 

“ஓ…” புடவையைச் சரிபண்ணிக் கொண்டு சட்டென்று கீழே வந்தாள் பல்லவி. சோஃபாவில் சைந்தவி அமர்ந்திருந்தாள். இவளைக் காணவும் பெண் எழுந்து நின்றாள். முகத்தில் அதிர்ச்சி!

 

“பல்லவி!”

 

“வா சைந்தவி.” தோழியை வரவேற்றவள் இவர்களையே பார்த்திருந்த பவானிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

 

“அத்தை, இது சைந்தவி. என்னோட ஃப்ரெண்ட். நாங்க ஒன்னாத்தான் வேலைப் பார்த்தோம்.”

 

“அப்படியா பல்லவி, ரொம்ப நல்லது. இந்நேரத்துக்கு சூடா எதுவும் குடிக்க முடியாது. ஜில்லுன்னு ஏதாவது அனுப்புறேன். நீங்கப் பேசிக்கிட்டு இருங்க. மத்தியானம் சாப்பிட்டுட்டுத்தான் போகணும்மா.” விருந்தோம்பலை முடித்துவிட்டு பவானி உள்ளே போக சைந்தவி தோழியை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

 

“என்ன பல்லவி இதெல்லாம்?”

 

“எதைக் கேக்குற சைந்தவி?”

 

“இவ்வளவு விஷயம் நடந்திருக்கு. நீ இவ்வளவு சுலபமா எதைன்னு கேக்குற. உனக்கு என்னையெல்லாம் ஞாபகமே வரலையா?”

 

“உங்களையெல்லாம் விட்டுத் தூரப் போனதுக்கு அப்புறமும் வில்லங்கம் வீடு தேடி வருதுன்னா… நீங்கெல்லாம் பக்கத்துல இருந்தா என்ன ஆகும்?”

 

“பல்லவி! நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியலை. நீ என்னைத் தப்பா நினைக்கிறியா?”

 

“இல்லை சைந்தவி. தள்ளி நிக்கிறேன்.” பல்லவியின் முகத்தில் இப்போது அவ்வளவு கடினம். இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.

 

“நீ சந்தோஷமா இருக்கியா பல்லவி?”

 

“அதிலென்ன சந்தேகம்? ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

 

“ஆனா உன்னோட முகம் அப்படிச் சொல்லலையே பல்லவி.”

 

“எனக்குன்னு புதுசா ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு சைந்தவி. நான் பழசு எதையும் பேசப் பிரியப்படலை.”

 

“அவசரப் பட்டுட்டியோ?”

 

“சத்தியமா இல்லை. நான் தெளிவாத்தான் இருக்கேன்.”

 

“நான் உன்னோட ஃப்ரெண்ட் பல்லவி. எதுக்கு ஒரு விரோதிக்கிட்ட பேசுற மாதிரியே பேசுறே?”

 

“பயமா இருக்கு சைந்தவி. யாரு எந்நேரம் எந்த குண்டைத் தூக்கிப் போடுவாங்களோன்னு பயமா இருக்கு.”

 

“புரியலை.”

 

“விட்டுடு. நாம இதுக்கு மேல பேச வேணாம்.”

 

“நீ கௌதமைச் சொல்லுறியா?”

 

“சைந்தவி… ப்ளீஸ். எதுவும் பேசாதே.” பல்லவியின் குரலில் தெரிந்த உஷ்ணம் வந்திருந்தவளை வாய் மூடச் செய்தது. 

 

“எதுக்கு இப்படியொரு அவசர முடிவு பல்லவி? அதுவும் யாருக்கும் எதுவும் தெரியாம. நீ இங்க எப்படி இருக்கே? கிராமத்துல கிராமத்து மனுஷங்களோட… எனக்குப் புரியலை.” சைந்தவி பேசிக் கொண்டிருக்கும் போதே மாதவனின் பைக் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. பெண்கள் இருவரும் வாசலைத் திரும்பிப் பார்த்தார்கள். 

 

“இவர்தான் என்னோட ஹஸ்பென்ட் சைந்தவி.” சொல்லிவிட்டு பல்லவி எழுந்து வாசலை நோக்கிப் போய்விட்டாள். ஆனால் உட்கார்ந்திருந்தவள் திகைத்துப் போனாள்.

 

என்ன?! இந்த மனிதர் பல்லவியின் கணவரா? அவர்கள் ஆஃபீஸும், அதில் பல்லவியின் சீட்டும், கௌதமும் என அனைத்தும் சைந்தவியின் கண்களுக்குள் வந்து கொல்லென்று சிரித்தன. 

 

பார்க்க நன்றாகத்தான் இருந்தார். ஆனால் பல்லவியின் அழகிற்கும் நிறத்திற்கும் இந்தப் பட்டிக்காட்டுப் பண்ணையாரா? கௌதம் எத்தனைப் பொருத்தமான ஜோடி இந்தப் பெண்ணிற்கு!

 

“இது சைந்தவி. என்னோட ஃப்ரெண்ட். நம்ம கல்யாணத்தப்போ வெளியூர் போயிருந்தா. அதான் இப்போ வந்திருக்கா.” பல்லவியின் கதையில் சைந்தவி மிரண்டு போனாள்.

 

“அப்படியா? இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்கீங்க. கண்டிப்பாச் சாப்பிட்டுட்டுத்தான் போகணும்.” மாதவன் சொல்லிவிட்டு நகர,

 

“ஒரு நிமிஷம் சைந்தவி.” என்றுவிட்டு பல்லவியும் கணவன் பின்னோடு நகர்ந்து விட்டாள். அதன்பிறகு பகல் சாப்பாடு என்ற பெயரில் அங்கு பரிமாறப்பட்ட விருந்தையும் உண்டு விட்டுத்தான் கிளம்பினாள் சைந்தவி. அதற்குள்ளேயே மூச்சு முட்டியது பெண்ணிற்கு. பல்லவியை நினைத்த போது ஏனோ மனதின் ஒரு மூலையில் கவலை வந்து உட்கார்ந்து கொண்டது. ஒரு பொழுதைக் கடக்கவே நான் இத்தனைச் சிரமப்பட்டேனே. அப்படியென்றால் பல்லவியின் நிலைமை? கண்ணைக் கட்டியது சைந்தவிக்கு.