Nallai08
Nallai08
புடவையைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள் பல்லவி. மாதவனின் கண்கள் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தது. அவன் கண்களில் ஏதோ ஒரு திருப்தியின்மை.
“என்னங்க, புடவை நல்லா இல்லையா?”
“புடவை ஓகேம்மா. ஆனா… நாம போகப்போற இடத்துக்கு இது போதாது.”
“ஓ… வேற மாத்திக் கட்டட்டுமா?”
“ம்…” சொன்னதோடு நிற்காமல் அவனே அலமாரியைத் திறந்து அந்த சந்தன நிறப் பட்டுப் புடவையை எடுத்துக் கொடுத்தான்.
“உன்னோட நிறத்துக்கு இது சூப்பரா இருக்கும்.” கணவன் ரசித்துச் சொல்ல பல்லவியின் முகம் சிவந்து போனது.
“ஏய் நில்லு.” நகரப் போனவளைக் கைப்பிடித்து நிறுத்தினான் மாதவன்.
“எதுக்கு இப்போ முகம் இப்பிடிச் சிவந்து போச்சு? அப்படி என்னத்தைச் சொல்லிட்டேன் நான்?!”
“சும்மா போங்க அத்தான்.”
“வாட்! அத்தானா?” ஆச்சரிய மிகுதியில் அவன் கத்த பல்லவி பொங்கிப் பொங்கிச் சிரித்தாள்.
“ஆமா… இனிமே அப்பிடித்தான் உங்களைக் கூப்பிடணுமாம். அத்தையோட ஆர்டர்.”
“நீ ஒரு பார்வைப் பார்த்தாலே நான் முழுசா சரண்டர் ஆகிடுவேன். இதுல நீ அத்தான்னு வேற கூப்பிட்டா அவ்வளவுதான். மாதவன் செத்தான் பல்லவி.”
“ஷ்… என்னப் பேச்சு இது? நான் புடவையை மாத்திட்டு வர்றேன். நீங்க கீழே போய் வெயிட் பண்ணுங்க.” கோபமாகச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய் விட்டாள் பல்லவி. மாதவன் முகத்தில் இப்போது புன்னகை விரிந்தது. தலையைக் கோதியபடி வெளியே போய்விட்டான்.
கணவன் மனைவி இருவரும் இன்று திருமண வீடு ஒன்றிற்குப் போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் வசதியான இடம் என்பதால் மாதவனும் கொஞ்சம் நகைகள் அணிந்திருந்தான். பல்லவி புடவையை மாற்றிக் கொண்டு கீழே வரவும் கணவனின் கண்கள் சிரித்தன.
“அத்தை! உங்கப் பையன் என்னைக் கேலி பண்ணுறாரு.” மருமகளின் குரலில் என்னமோ ஏதோ என்று வந்த பவானி அவள் புகாரில் சிரித்து விட்டார். அம்மாவும் மகனும் அத்தனைத் தூரம் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்பதால் மாதவனின் முகம் லேசாக வெட்கப்பட்டது.
“நீங்கதானே அத்தை அத்தான்னு கூப்பிடச் சொன்னீங்க?”
“ஆமா பல்லவி.”
“அதுக்கு உங்கப் பையன் கேலியா சிரிக்கிறாரு பாருங்க.”
“அப்பிடியா? அப்போ டவுன் ஸ்டைல்ல நீ பேரு சொல்லிக் கூப்பிடு பல்லவி. அதான் பிடிச்சிருக்கோ என்னவோ?” இப்போது அம்மாவும் மகனை வாரினார்.
“ஐயையோ! அதுவும் கூடாதாம். அதுக்கு ஏற்கனவே மிரட்டியாச்சு அத்தை.”
“ஏய் வாலு! நீ வர்றியா கிளம்பலாம்?” கணவன் புன்னகையோடு அழைக்க பல்லவியும் ஒரு சிரிப்போடு கிளம்பினாள். பவானியின் மனம் நிறைந்து போனது. தனது பிள்ளையின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி அந்தத் தாய்க்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
====
திருமண வீட்டிலிருந்து வந்த கையோடு மனைவியை வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான் மாதவன். டவுனில் ஏதோ வேலை இருக்கவும் மனைவியிடம் சொல்லிக்கொண்டு போய்விட்டான்.
“காஃபி குடுக்கட்டுமாங்க?”
“வேண்டாம்மா… அனேகமா நான் வர லேட்டாகும். வீணா கண் முழிக்காமத் தூங்கணும், புரியுதா?”
“ம்…” மனைவி தலையை ஆட்ட உடையை மாற்றிக்கொண்டு போனான் மாதவன்.
ஆனால் இரவு பத்தைத் தாண்டிய பிறகும் கணவன் வீடு திரும்பாமற் போகவே பல்லவி கலங்கிப் போனாள். ஃபோனுக்குப் பல முறை முயற்சி செய்தும் எந்தத் தொடர்பும் கிடைக்கவில்லை.
“அத்தை! எனக்குப் பயமா இருக்கு.”
“எதுக்கும்மா? அவனென்ன சின்னக் குழந்தையா? வந்திடுவான்.”
“ஃபோனைக் கூட எடுக்கலையே!”
“ஏதாவது வேலை வந்திருக்கும்.” மருமகளுக்கு ஆறுதல் சொன்ன பவானி கூட நேரம் பதினொன்றைத் தாண்டவும் தவித்துப் போனார். இரு பெண்களும் உறங்காமல் விழித்திருந்த போதும் சோமசுந்தரத்திடம் எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே உடம்பிற்கு முடியாமல் இருக்கும் மனிதர். இதை வேறு சொன்னால் என்னத்துக்கு ஆகும் என்று மறைத்து விட்டார்கள்.
பொழுது லேசாகப் புலர ஆரம்பிக்கவும் பவானி மகளுக்குத் தகவல் சொல்லிவிட்டார். வீடே ஒரு வகையான பதட்டத்தில் இருக்க வாணியே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அண்ணீ!” வீட்டிற்கு வந்த அற்புதாவைக் கட்டிக்கொண்டு பல்லவி அழவே ஆரம்பித்து விட்டாள். பவானியும் அதிர்ச்சியோடு நிற்க மேற்கொண்டு என்ன செய்வதென்று யாருக்குமே புரியவில்லை.
அற்புதாவின் கணவர் போலீசில் புகார் பண்ணலாமா என்று கேட்க மூன்று பெண்களுமே திகைத்துப் போனார்கள்.
“இல்லைங்க… நம்ம ஆளுங்களை விட்டு முதல்ல தேடிப் பார்க்கலாம். அதுக்கப்புறமா மத்ததைப் பார்ப்போம். அண்ணீ… நீ என்ன சொல்றே?” கண்ணீரோடு அற்புதா கேட்க மலங்க மலங்க விழித்தபடி அசைவற்று உட்கார்ந்திருந்தாள் பல்லவி.
“அண்ணீ… இங்கப்பாரு, என்னைப்பாரு அண்ணீ.” அற்புதா பல்லவியை உலுக்கவும்தான் நிஜத்துக்கு வந்தாள் பெண்.
“இங்கப்பாரு, மாதுக்கு ஒன்னும் ஆகியிருக்காது. கவலைப்படாத.”
“அப்போ உங்கத் தம்பி எங்க அண்ணி?” பல்லவி வெடித்து அழவும் அங்கிருந்த மற்ற மூவரும் கலங்கிப் போனார்கள்.
“இப்பிடியே இருந்தா வேலைக்கு ஆகாது அற்புதா. அப்போ நான் ஆளுங்ககளைக் கூட்டிக்கிட்டு டவுன் வரைப் போய்ட்டு வர்றேன்.” அற்புதாவின் கணவர் கிளம்பிப் போக அங்கே ஒரு அசாத்திய அமைதி நிலவியது.
சற்று நேரத்திலெல்லாம் அற்புதாவின் கணவர் ஃபோன் பண்ணி மாதவனின் காரைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூற, இருந்த பதட்டம் இன்னும் அதிகரித்தது. அப்படியென்றால்… மாதவன் எங்கே?
விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை என்பது மட்டும்தான் இப்போதைக்கு அவர்களுக்கு இருந்த ஆறுதல். அப்படியென்றால் மாதவன் என்ன ஆனான்? காணாமற் போக அவன் என்ன சின்னக் குழந்தையா?
டவுனில் அவர்கள் வழமையாகக் கொள்முதல் செய்யும் கடையில் விசாரித்த போது மாதவன் அங்கு வந்த தகவல் கிடைத்தது. அப்படியென்றால்… திரும்பி வீடு வரும் வழியில்தான் ஏதோ ஆகியிருக்க வேண்டும். இதையெல்லாம் இவர்கள் பேசிக்கொள்ளும் போதே பல்லவி மயங்கி வீழ்ந்து விட்டாள்.
“ஐயையோ! பல்லவி!” பவானி பதறிக் கொண்டு மருமகளை மடியில் தாங்கிக் கொண்டார்.
***
உடம்பெல்லாம் ஒரு வலி ஊடுருவ மாதவனுக்கு லேசாக நினைவு திரும்பியது. இரண்டு நாட்கள் கடந்து போயிருந்தது, அந்த இரண்டு நாட்களும் அவன் அந்த அறையிலேயே இருந்தது எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.
கைகளும் கால்களும் கட்டிப் போடப்பட்டிருக்க உடம்பை அசைக்க முடியாமல் தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்தான். சிகரெட்டின் வாசனையை அவன் நாசி உணர்ந்தது.
“ஹலோ ஸ்கோடா!” அந்த வார்த்தைகளில் புருவம் சுருக்கி நிமிர்ந்து பார்த்தான். இரண்டு நாட்களும் மயக்கத்திலேயே இருந்ததால் மூளையும் கண்களும் அவனுக்குச் சட்டென்று உதவி செய்யவில்லை.
மங்கிய அவன் உலகம் சீரான போது எதிரே ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டுகொண்டு கௌதம் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் அந்த அரை மயக்கத்திலும் மாதவனின் இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகை.
“ஏய்! என்னடா உனக்கு எப்பப் பார்த்தாலும் என்னைப் பார்த்தாச் சிரிப்பு வேண்டிக் கிடக்கு?” கோபத்தின் உச்சத்திற்குப் போன கௌதம் தன் எதிரியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். மனம் அடங்க மறுத்தது. அன்றைக்கும் இதுபோலத்தான் ஒரு சிரிப்புச் சிரித்தான், ஏளனமாக. தன்னை அவமானப்படுத்த என்றே சிரிக்கும் சிரிப்பு அது.
மாதவன் இப்போது இருமினான். கண்களில் மின்மினிப் பூச்சிகள் பறந்தன.
“என்ன திமிரா? பார்க்கிறப்போ எல்லாம் இப்பிடியே சிரிக்கிறே?” அடியை வாங்கிக் கொண்டும் மீண்டும் அதேபோலச் சிரித்தான் மாதவன். நடந்தது எல்லாம் ஓரளவிற்கு இப்போது ஞாபகத்திற்கு வந்தது.
ஆளரவமற்ற சாலையில் ஊருக்குப் புதிதாக ஒரு மனிதர் நின்று கொண்டு உதவி கேட்டது நினைவில் வந்தது. அதன்பிறகு ஒரு கைக்குட்டை இவன் முகத்தில் திணிக்கப்பட்டது. அவ்வளவுதான் தெரியும்.
“நீ அடங்க மாட்ட இல்லைடா?”
“எதுக்கு அடங்கணும்?” நிதானமாகக் கேட்டான் மாதவன்.
“அது சரிதான். நீ எதுக்கு அடங்கணும்? எனக்கு நீ வெறும் கருவிதானே. நான் என்னோட கணக்கை உம் பொண்டாட்டிக்கிட்ட வச்சுக்கிறேன்.” கௌதம் சொல்லி முடிக்கும் போது மாதவன் பெரிதாகச் சிரித்தான். இப்போது கௌதமின் முகத்தில் ஒரு எரிச்சல் பாவம் தோன்றியது.
“ஏன்டா ஸ்கோடா? எதுக்கெடுத்தாலும் எதுக்கு இப்பிடி லூசு மாதிரிச் சிரிக்கிறே?”
“இல்லை… என்னோட கையைக் காலைக் கட்டிப் போட்டுட்டு எம் பொண்டாட்டியோட மோதப் போறியே, அதை நினைச்சுச் சிரிச்சேன்.” இப்போது மீண்டும் ஒரு அடியை வாங்கிக் கொண்டான் மாதவன்.
“பட்டிக்காட்டுப் பரதேசி! உனக்கு இவ்வளவு ஆங்காரமா? நான் யாருன்னு உனக்குத் தெரியுமாடா?”
“நீ யாரா வேணா இருந்துட்டுப் போ. அதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனா என்னோட வாழ்க்கையில குறுக்க வராதே.”
“அது நான் வாழ வேண்டிய வாழ்க்கைடா.”
“தப்பு… உனக்கு அதுக்குத் தகுதியில்லைன்னு அவளே சொல்லிட்டாளே.”
“அவ என்னடா சொல்லுறது என்னோட தகுதியைப் பத்தி. நான் சொல்றேன் எனக்குத் தகுதி இருக்கா இல்லையான்னு. எங்காலடியில அவளை நான் விழ வைக்கிறேன். ரெண்டு நாளா உங்களைப் பார்க்காம உங்க கிளியோபாட்ரா அப்பிடியே துரும்பாப் போனாங்களாம்!” நாடக பாணியில் கௌதம் சொல்ல மாதவனின் முகம் இப்போது கசங்கியது.
“வேணாம் கௌதம்! பல்லவிக்கு ஏதாவது ஆச்சு… உன்னை உயிரோட கொளுத்துவேன் நான்.”
“அடப்போடா! உம் பொண்டாட்டியை வெச்சு நான் என்னப் பண்ண? இந்த உலகத்திலேயே அவதான் கடைசிப் பொண்ணுன்னாலும் இனித் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன். ஆனா அவளை சாவடிக்கணும்டா!”
“கௌதம்! வேணாம்!” மாதவனின் குரலில் சுருதி ஏறியது.
“நீ வேணாம்னு சொன்னா ஆச்சா? அப்பிடி என்னத்தைடாப் பெரிசாத் தப்புப் பண்ணிட்டேன்? எல்லாரும் பண்ணுறதுதானே? ஆனா என்னைக்கு அவதான்னு முடிவு பண்ணினேனோ அன்னையில இருந்து வேற யாரையும் திரும்பியும் பார்க்கலையே? எல்லாம் நல்லாத்தானே போச்சு?” தன்னிடமே நியாயம் கேட்கும் கௌதமைப் பார்த்த போது இப்போது மாதவனுக்கு லேசாக வருத்தம் வந்தது.
“எங்க வீடு தெரியுமா ஸ்கோடா உனக்கு? யாருமே இவளை ஏத்துக்கலை. ஸ்டேட்டஸ் பார்த்தாங்க. ஆனா நான் எதையுமே பார்க்கலை. எனக்கு இவதான் பெருசாத் தெரிஞ்சா. ஆனா நான் மூனு மாசம் கனடா போன கேப்பில என்ன பண்ணியிருக்கா பார்த்தியா? என்னோட வீடே என்னைப் பார்த்துச் சிரிச்சிச்சு. போதாக்குறைக்கு நீ வேற சிரிக்கிறே!” அங்கலாய்த்தவனைப் பார்த்தபோது மாதவனின் மனம் அவனுக்காக இரங்கியது.
பல்லவி இவனுக்கு நியாயம் செய்யவில்லை என்றுதான் தோன்றியது. சொல்லப்போனால் என்னைவிட பல்லவிக்கு இவன்தான் வெகு பொருத்தமாக இருந்திருப்பான்.
“இங்கப்பாரு கௌதம், மூனு மாச கேப்பில காய் நகர்த்தினது நான். அவ எதுவுமே பண்ணலை. நீ தண்டிக்கிறதா இருந்தா என்னைத்தான் தண்டிக்கணும். பல்லவியை விட்டுரு.”
“நான் எதுவுமே பண்ணலை ஸ்கோடா. உன்னைத் தூக்கிட்டேன். அதுக்கே உம் பொண்டாட்டி பாதியாகிட்டா. இப்போ இன்னொரு செக் வச்சிருக்கேன். அனேகமா இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு என்னைத் தேடி உங்க அருமைப் பொண்டாட்டி கட்டாயம் வருவா.” சொல்லிவிட்டு கௌதம் போய்விட்டான். மாதவனுக்கு இப்போது தலை வலித்தது.
***
போலீசிலும் தகவல் சொல்லி விட்டார்கள். ஊரில் பெரிய குடும்பம் என்பதால் சட்டபூர்வமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் காவல்துறை உதவி செய்தது. ஆனால் மாதவனின் சுவடையே கண்டுபிடிக்க முடியவில்லை.
சோமசுந்தரத்திடம் மகன் வேலை விஷயமாக வெளியூர் போயிருப்பதாகச் சொல்லிச் சமாளித்து விட்டார்கள். அற்புதாவின் குடும்பம் அங்கேயே தங்கிவிட்டது. இரண்டு நாட்கள் கடந்த போதும் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை.
அன்று மதியம் போல பல்லவியின் ஃபோன் அலறியது. அக்கா ஜெயா அழைத்துக் கொண்டிருந்தாள். பல்லவியும் பவானியும் மாத்திரம்தான் அப்போது அங்கே அமர்ந்திருந்தார்கள். பல்லவியைப் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
“அத்தை… அக்கா எதுக்கு இப்போக் கூப்பிடுறா?” பல்லவியின் குரலில் அவ்வளவு பதட்டம். ஏனென்றால் இதுவரை பல்லவி வீட்டிற்கு எந்தத் தகவலும் இவர்கள் சொல்லவில்லை.
எதை யாரிடம் எப்படிச் சொல்ல?! தொழில் முறையில் எதிரியென்று யாருமே கிடையாதே. அப்படியிருக்க யாரைச் சந்தேகிக்க!
“எடுத்துப் பேசும்மா. எதையும் காட்டிக்காமப் பேசு.”
“ம்…” ஃபோனை எடுத்த பல்லவி அழைப்பை ஏற்றாள்.
“அக்கா… சொல்லுக்கா.”
“பல்லவி, நல்லாருக்கியா?”
“ம்… நல்லா இருக்கேன். அத்தான் பசங்க எல்லாரும் சௌக்கியமா?” பல்லவி கேட்டு முடிக்க ஜெயா விசும்ப ஆரம்பித்தாள்.
“அக்கா… என்னாச்சு? எதுக்கு இப்போ அழுறே?” பல்லவியின் பேச்சில் பவானியின் முகமும் சுருங்கியது.
“பல்லவி… எல்லாம் முடிஞ்சு போச்சு.” ஜெயா ஓவென்று அழுதாள்.
“அக்கா, அழுறதை நிறுத்திட்டு பிரச்சனை என்னன்னு சொல்லு.”
“அத்தான் வேலைப் பார்க்கிற பாங்க்ல பிரச்சனை பல்லவி. பத்து லட்சத்தை யாரோ கையாடல் பண்ணி இருக்காங்க. ஆனா மானேஜர் அதுக்கு அத்தான்தான் காரணம்னு சொல்றாங்க.”
“என்ன?!”
“பல்லவி, உனக்கு அத்தானைப் பத்தி நல்லாத் தெரியுமில்லை. மனோகர் எவ்வளவு நியாயமான ஆளுன்னு. அவரு இப்பிடியெல்லாம் பண்ணுவாரா பல்லவி?” பல்லவி இப்போது தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டாள்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அவளுக்குப் புரியவில்லை. மலையிலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாக இருந்தது அவள் நிலைமை.
“இப்போ அத்தான் எங்கக்கா?”
“இடிஞ்சு போய் உக்காந்திருக்காங்க பல்லவி. அம்மா அப்பா கூட இங்கதான் இருக்காங்க. உங்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்னு சொன்னாங்க.”
“அத்தான் என்னச் சொல்றாங்க? எப்பிடிக்கா இதெல்லாம் நடந்துச்சு?”
“பணம் அத்தான் பொறுப்புலதான் இருந்திருக்கு. கீ கூட அத்தான்கிட்டத்தான் இருந்திருக்கு.”
“அப்போ எப்படிக்கா பணம் காணாமப் போகும்?”
“அதுதான் மாயமா இருக்கு பல்லவி. ஒன்னுமே புரியலை. கண்ணைக் கட்டிக் காட்டுல விட்ட மாதிரி இருக்கு. பணத்தை இன்னும் ரெண்டு நாள்ல கட்டலைன்னா போலீசுக்குப் போவாங்களாம்.”
“என்ன? ரெண்டு நாளா? ரெண்டு நாள்ல எப்படிக்கா பத்து லட்சத்தைக் கட்ட முடியும்?”
“ஒன்னுமே புரியலைடீ பல்லவி. மானம் மரியாதை எல்லாம் போகப் போகுது.” வெடித்து அழும் தன் தமக்கையை வேடிக்கை பார்ப்பது மட்டுமே இப்போது அவளால் முடிந்தது.
“பல்லவி… நான் ஒன்னு கேட்டாத் தப்பா எடுத்துக்க மாட்டியே?”
“சொல்லுக்கா.”
“உன்னோட வீட்டுக்காரர்… ஏதாவது உதவி…” ஜெயா இழுத்த போது பல்லவியின் தலைக்குள் வண்டு குடைந்தது.
“அக்கா, நான் உன்னை அப்புறமாக் கூப்பிடுறேன்.” ஃபோனைத் தூக்கித் தூரப் போட்டவள் முகத்தை நான்கைந்து முறை அழுந்தத் துடைத்தாள்.
“பல்லவி?”
“ஒன்னுமே புரியலை அத்தை. நம்மைச் சுத்தி என்ன நடக்குது?” மருமகள் பேசியதை வைத்து விஷயத்தை ஓரளவு யூகித்த பவானி,
“மனோகர் ஆள் எப்பிடி பல்லவி?” என்றார்.
“தங்கம் அத்தை. அத்தானுக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.”
“அப்போ எப்பிடி பல்லவி?”
“அதான் ஒன்னும் புரியலை அத்தை. எந்தப் பக்கம் போனாலும் முட்டிக்கிட்டு நிக்குற மாதிரியேத் தோணுது. என்ன நடக்குது அத்தை? எதிரின்னுக் கூட யாரும் கிடையாது. அப்போ யாரன்னு சந்தேகப்படுறது.”
பவானி சற்று நேரம் அமைதியாக இருந்தார். பல்லவியின் முகத்தை இப்போது அவர் பார்த்த போது அவர் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.
“மாதவனுக்கும் மனோகருக்கும் எதிரி கிடையாது. ஆனா…”
“அத்தை…” பல்லவிக்கு அப்போதும் எதுவும் புரியவில்லை.
“பல்லவிக்கு எதிரி உண்டில்லையா?”
“அத்தை?!” பல்லவி எழுந்து நின்று விட்டாள். இப்படியொரு வழியில் அவள் சிந்தனைப் போகவேயில்லை. பவானியும் அதன்பிறகு கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை.
“நிதானமா யோசிச்சா எனக்கு இப்பிடித்தான் தோணுது பல்லவி. இது உனக்கு விரிச்ச வலை. அதுல அநியாயமா மாதவனும் மனோகரும் மாட்டி இருக்காங்க.” பவானியின் குரலில் தெரிந்த பேதத்தைக் கவனிக்கும் நிலையில் பல்லவி இல்லை. பித்துப் பிடித்தது போல நின்றிருந்தாள்.