Nee Enaku Uyiramma–EPI 15(Final)

189613085_863389437581725_4803627891963141566_n-be17aa74

Nee Enaku Uyiramma–EPI 15(Final)

அத்தியாயம் 15

இரண்டு வாரத்துக்கு பிஸ்னஸ் ட்ரிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தான் நேதன். வீடே வெறிச்சோடிப் போய் விட்ட மாதிரி உணர்ந்தாள் வேணி. சின்னவனும் நேதன் எங்கே என கேட்கத் தெரியாமல் அடிக்கடி அழுதான். வீட்டைச் சுற்றி கண்களை சுழற்றி உதட்டைப் பிதுக்கி அழுதான்.

“சும்மா சும்மா அழக்கூடாது கேஷ்! எனக்கும் கஸ்டமாத்தான் இருக்கு நம்மாளு இல்லாம. அதுக்குன்னு அழுதுட்டே இருக்க முடியுமா? சீக்கிரம் வந்துடுவாங்க, சரியா?” என சமாதானப்படுத்திக் கொண்டிருந்த நேரம் வீடியோ கால் வந்தது.

அவன்தான் கால் எடுத்திருந்தான். தாறுமாறாக கிடந்த முடியை அவசர அவசரமாக ஒதுக்கி விட்டவள் அழைப்பை ஏற்றாள்.

ஹலோ கூட சொல்லாமல்,

“ஐ மிஸ் யூ அண்ட் லவ் யூ காய்ஸ் சோ மச்” என சொன்னவனின் முகமும் ஏக்கத்தில் ஏகமாய் வாடியிருந்தது.

இவள் அமைதியாக அவன் முகத்தைப் பார்த்திருக்க, இவள் மடியில் இருந்த மகனோ போனில் இருந்து வெளியே வா என அழைப்பது போல,

“வா, வா!” என கூப்பிட்டான்.

“கேஷவ்! கின் கின் வோ டே பவ் பெய்” (கிஸ் கிஸ் மை பேபி) என மகனை செல்லம் கொஞ்சினான் நேதன்.

போனில் இருந்து வெளியே வராதவனை பார்த்து கோபம் வர, உதட்டைப் பிதுக்கியவன்,

“வா, வா!” என குரல் எடுத்து கத்தி அழ ஆரம்பித்தான்.

“இரு நேதன், அப்புறம் கூப்பிடறேன்” என போனை வைத்துவிட்டாள் வேணி.

இவளுக்குமே கண் கலங்கியது. எப்படி இப்படி இவனது அன்புக்கு அடிமையானோம் இருவரும் என மனம் தவித்தது. நேதன் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை இவளால். மகனின் பிணைப்பைப் புரிந்துக் கொள்ள முடிந்தது வேணியால். தந்தையின் ஸ்தானத்தில் நின்று பாசம் காட்ட யாரும் இல்லாததால், நேதனின் அன்பு கிடைக்கவும் அப்படியே அவனிடம் அட்டைப் போல் ஒட்டிக் கொண்டான் சின்னவன்.

ஆனால் தாம் எப்படி இப்படியானோம்? இவ்வளவு சீக்கீரம் பழைய மணவாழ்க்கையை எப்படி மறந்தோம்? அப்படி என்றால் கேஷவின் அப்பாவின் மேல் தான் காட்டிய அன்பு பொய்யா? நேதனின் பணத்திலும், பகட்டிலும், அவன் கொடுக்கும் சுகத்திலும் மயங்கிக் கிடக்கிறேனா என பல கேள்விகள் மனதை வாட்டி வதைத்தன.

அழுது கொண்டிருந்த மகனை சமாதானப்படுத்திக் கட்டிலில் படுக்க வைத்தாள் வேணி. தேம்பியப்படியே தூங்கிப் போனான் அவன். அதற்குள் பல மேசேஜ்கள் வந்திருந்தன நேதனிடம் இருந்து.

“ஆல் ஓகே?”

“அழுகையை நிறுத்திட்டாரா?”

“சாரிடாம்மா! ரொம்ப ஏங்கிப் போயிட்டாரோ? நானும் உங்க ரெண்டு பேரையும் பார்க்காம தவிச்சிட்டுத்தான் இருக்கேன் வேணிம்மா”

“சமாதானப்படுத்திட்டு வாய்ஸ் கால் போடுடா! ப்ளீஸ்”

எல்லாவற்றையும் பார்த்தாள் இவள். ஆனால் பதிலும் போடவில்லை, அழைப்பும் எடுக்கவில்லை. கட்டிலில் சரிந்து அமர்ந்து சுவற்றில் மாட்டியிருந்த தங்கள் மூவரின் போட்டோவைத்தான் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் வேணி.

இரண்டாவது திருமணம் என்பது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கவே செய்யும். அதுவே முதல் திருமணம் மகிழ்ச்சியான திருமணமாக இருந்தால், அதன் மிச்ச சொச்சங்கள் மனதின் ஓரத்தில் என்றுமே பசுமையாய் பாய் விரித்துப் படுத்திருக்கும். நிம்மதியற்ற திருமணம் என்றால் கசப்பும், வெறுப்பும் மனதின் மூலையில் முக்காடிட்டு அமர்ந்திருக்கும். எந்த வகை முதல் திருமணம் என்றாலும், அதன் எச்சங்கள் இரண்டாவது திருமணத்தில் தொடராமல் போகாது. வாய் திறந்து சொல்லாவிட்டாலும் மனதின் உள்ளேயாவது அந்த ஒப்பிடுதல் இருக்கவே செய்யும். மனித மனம் குரங்கல்லவா!

முதல் கணவன் மீது இவளுக்கு அளவுக்கடந்த அன்பிருந்தது. இடி சோறு உண்டுக் கொண்டிருந்த வீட்டில் இருந்து திருமணம் எனும் உறவு தந்து விடுதலையளித்தவன் மேல் நன்றியுணர்ச்சி இருந்தது. நோயின் பிடியில் போராடிக் கொண்டிருந்தவனை தாங்கிப் பிடித்து பணிவிடைகள் செய்யும் அளவுக்கு பரிவு இருந்தது. பேசி, சிரித்து பழகும் அளவுக்கு நட்பிருந்தது. ஆனால் காதல் இருந்ததா? அவள் மனம் மடக்கி மடக்கிக் கேள்விக் கேட்டது!

கணவன் இறந்து இரண்டு வாரம் அழுதவள், வயிற்றில் இருக்கும் குழந்தைக்காகவும் வயிற்றுப் பாட்டுக்காகவும் தன்னையே தேற்றிக் கொண்டாள். அதன் பிறகு அடிக்கடி அவன் நினைவு வந்து நெஞ்சைப் பிசைந்தாலும், அவளால் கடந்து விட முடிந்தது.

ஆனால் நேதனின் பிரிவு இந்த அளவு அவளை வாட்டுவது ஏன் என மனம் கேட்ட கேள்விக்கு காதல் என பதில் வந்தது! முதல் கணவனிடம் வராத காதல் இவனிடம் மட்டும் ஏன் என மனம் வினவியது! இவன் கொடுக்கும் கட்டில் இன்பமா? அப்படி என்றால் மணவாழ்க்கைக்கு அது மட்டும்தான் ஆதாரமா? என்னவோ தான் கேவலப்பட்டுப் போனது போல கூனிக் குறுகிப் போனாள் வேணி. கண்களில் கண்ணீர் அதன் பாட்டுக்கு வழிந்தது. சற்று நேரம் மனபாரம் தீரும் மட்டும் அழுதாள். பின் எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தவளின் பார்வை ரூமில் ஓரமாய் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும், தாங்கள் அந்தரங்க நேரத்துக்குப் பயன்படுத்தும் புது மெத்தையின் மேல் விழுந்தது.

காமம் மட்டுமா இந்தக் காதலின் அடித்தளம் என மருகி நின்றவளுக்கு,அது ஒரு பகுதி மட்டுமே என தெளிவாக சொல்லியது மூளை. மேசேஜ் வந்த ஒலியில் போனை எடுத்துப் பார்த்தவளுக்கு, மெல்லிய புன்னகைப் படர்ந்தது உதட்டில்.

“வேணி, டார்லிங்!”

“ஆர் யூ ஓக்கே? என்னம்மா ஆச்சு?”

“அவர் இன்னும் தூங்கலியா? ஏன் எனக்கு இன்னும் போன் செய்யல?”

“இஸ் எவிரிதிங் ஓகே? சொல்லுடி!”

“நான் பிஸ்னஸாச்சு மண்ணாச்சுன்னு நாளைக்கே கிளம்பி வரப் போறேன்.”

அவனின் அக்கறையும் பதட்டமும் மனதில் இதமாய் சாரலை வீசியது. இதுதான் உன் காதலின் காரணம் என மனமும் ஒத்துக் கொண்டது.

‘அவன் பணமோ, பதவிசோ, கொடுக்கும் பரிசுகளோ, முத்தமோ, கட்டில் யுத்தமோ, இது எதுவும் காரணமில்லை நான் காதலில் கவிழ்ந்துக் கிடப்பதற்க்கு! அவன் காட்டும் அக்கறை, பரிவு, பாசம், இவள் மட்டுமே ஸ்பெஷல் என நினைக்க வைக்கும் பாங்கு, மகனிடம் காட்டும் அன்பு, தன் சுயத்தை மாற்றாது அவளை அவளாய் இருக்கவிட்ட மனப்பான்மை, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் வீட்டில் அவளுக்கு உதவும் பாங்கு, அடிக்கடி செய்யும் செல்லக் குறும்பு என அவள் மனதைக் கொள்ளைக் கொண்டிருந்தான் இந்த சிண்டியன். எதிரியாய் அறிமுகமாகி, நண்பனாய் மாறி, கணவனாய் உயர்ந்து, இப்பொழுது காதலனாய் நெஞ்சில் நிலைப் பெற்றிருந்தான் நேதன்.

போனை எடுத்து வீடியோ கால் போட்டவள், அவன் அழைப்பை ஏற்றதும்,

“இச்சு, இச்சு, இச்சு, இச்சு, இச்சு! ஐ லவ் யூ சோ சோ மச் நேதன்” என எண்ணிலடங்கா முத்தங்களைக் கொடுத்து போனை நிறுத்தி இருந்தாள்.

அவள் அதிரடியில் சுகமாய் அதிர்ந்துப் போனவன், மறுபடி அவளை அழைத்து அழைத்து ஓய்ந்துப் போனான்.

“ராட்சசி!” என சிரிப்புடன் சொல்லியவன் நிம்மதியாக உறங்கிப் போனான்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாகிப் போக, இவனை தனியாக சமாளிப்பது கஸ்டமென மாமனாரின் வீட்டுக்குக் கிளம்பி விட்டாள் வேணி. கபேவுக்காக காய்கறி வாங்கும் வேலையை ரைடர் என அழைக்கப்படும் இந்த மாதிரி பொருள் வாங்கிக் கொடுத்து சர்விஸ் சார்ஜ் வாங்கிக் கொள்ளும் ஆட்களிடம் விட்டிருந்தான் நேதன். வேணியின் பட்ஜெட் இடிக்காத அளவுக்கு அவர்களின் கட்டணம் இருக்க, அதையே ஏற்றுக் கொண்டாள் இவள். மார்க்கேட் வேலை நின்றுப் போக, ஞாயிறு மூவரும் மெல்லத்தான் எழுந்துக் கொள்வார்கள். ரூமை சுற்றி ஓடி, விளையாடி, குளித்து மூவரும் கீழே இறங்கி வர பத்து கூட ஆகிவிடும்.

ஏற்கனவே போன் செய்திருந்ததால் வீட்டில் எல்லோரும் இவர்கள் இருவருக்காக காத்திருந்தனர். மிஸ்டர் லிம்மைப் பார்த்ததும் அவரிடம் தாவினான் சின்னவன். அவன் தந்தையைப் போலவே கொஞ்சம் வயதான தோற்றத்தில் இருந்த அவர் மேல் நல்ல ஒட்டுதல் இவனுக்கு. ஜானகியிடம் இன்னும் கூட நெருங்க மாட்டான். அவரும் எல்லா வித சாகசமும் செய்துப் பார்த்து விட்டார். ஐந்து நிமிடம் கையில் இருப்பவன், உடனே மிஸ்டர் லிம்மிடம் தாவுவான்.

“அந்த சொட்டை மண்டையிலத்தான் என்னமோ மந்திரம் வச்சிருக்காங்க ரெண்டு பேரும்” என புலம்புவார் ஜானகி.

நேட்டலி கையில் இருக்கும் போனைக் காட்டி ஏமாற்றி கொஞ்ச நேரம் தூக்கி வைத்திருப்பாள் கேஷவை. சின்ன வாண்டுகளோ இவன் வந்து விட்டால் விளையாட்டுப் பொருட்களை கடைப் பரப்பி விடுவார்கள். வீடே அல்லோலகல்லோலப்படும். தாய் வழி சொந்தங்களிடம் அனுபவிக்காத பாசத்தை நேதன் வழி சொந்தத்திடம் திகட்ட திகட்ட அனுபவித்தான் கேஷவ்.

காலை உணவை முடித்துக் கொண்டு, பெண்கள் மூவரும் ஏதேதோ பேசி சிரித்திருந்தனர். பழைய ஆல்பங்களை எடுத்து வந்த நேட்டலி ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கமேண்ட் அடித்தாள். அதில் நேதனின் பள்ளிக் காலத்து நிகழ்வுகளுக்கென்றே ஒரு தனி ஆல்பம் இருந்தது. அதை எடுத்து திறந்தாள் நேட்டலி.

“உன் ஆள பாரேன் இதுல! எலும்புக் கூடு மாதிரி இருக்கான். ஆனா பெரிய ஹீரோன்னு நெனப்பு”

“பெரிய ஹீரோதான். ஸ்கூல் கேர்ள்ஸ் எத்தனை பேர் ப்ரோப்போஸ் பண்ணாங்க தெரியுமா!” என புன்னகைத்தாள் வேணி.

“ஏய் இங்க பாரேன்! இது நீயா?” என நேட்டலி கேட்க,

அந்தப் புகைப்படத்தை இவளும் உற்றுப் பார்த்தாள். அது பள்ளியின் சாரணியர் இயக்கத்தின் கேம்ப்பில் எடுக்கப்பட்டிருந்த போட்டோ. நேதனின் பின்னால் அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள் இவள். அதைப் பார்த்ததும் தானாகவே இதழ்கள் மலர்ந்தது வேணிக்கு.

“சிரிச்சு சிரிச்சு மயக்குவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்! நீ என்னன்னா எங்கண்ணாவ முறைச்சி முறைச்சி மயக்கிருக்கே!” என ஓட்டி எடுத்தாள் நேட்டலி.

அந்த நேரம் போன் வர எடுத்துப் பேசினாள் வேணி. அவளது பெரிய தம்பிதான் கால் செய்திருந்தான். நீரடித்து நீர் விலகி விடுமா என்ன! அவர்களோடு கோபமாய் இருந்தவள், இப்பொழுதெல்லாம் பேச ஆரம்பித்திருந்தாள். அவளுக்கும் ரத்த சொந்தமென இருப்பது அவர்கள் இருவர்தானே. தன் வீட்டுக்கு அவர்கள் வந்தால் நல்லபடி கவனித்து அனுப்பினாள். நேதனும் அவர்களுடன் நல்லபடி தான் நடந்துக் கொண்டான்.  

மாலை தேநீர் முடித்து கிளம்பலாம் என இவள் நினைத்திருக்க, வீட்டின் முன்னே டாக்சி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினான் நேதன்.

‘ட்ரீப் முடிய மூனு நாள் முன்னுக்கே வந்துட்டாங்க!’ என ஆச்சரியமாக பார்த்தாள் இவள்.

எல்லோரும் அவனை வரவேற்க, சின்னவனுக்குத்தான் கொண்டாட்டம். தன்னிடம் தாவியவனைத் தூக்கிக் கொண்டான் நேதன்.

“கேஷவ் குட்டி!” என அவன் அழைக்க துள்ளினான் சின்னவன்.

பார்த்திருந்த அனைவருக்கும் புன்னகை வந்தது அவனது சந்தோஷத்தில்.

சிரித்த முகமாய் இருந்தாலும் அவன் முகத்தில் லேசாய் வாட்டம் தெரிந்ததோ என சந்தேகித்தாள் வேணி. அவளைப் பார்த்துச் சிரித்தவனின் சிரிப்பு கண்களை எட்டவில்லை. என்னவாயிற்று இவனுக்கு என மனம் தவித்துப் போனது வேணிக்கு. சற்று நேரம் அளவளாவி இருந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பியது நேதனின் குடும்பம்.

சீனர்களின் பழக்க வழக்கப்படி ஏழு மணிக்கே மிஸ்டர் லிம்மின் வீட்டில் இரவு உணவை முடித்திருந்ததால், வீட்டுக்கு வந்ததும் மற்ற வேலைகளைப் பார்த்தனர் இருவரும். குளித்து விட்டு வந்த நேதன், மகனிடம் நேரத்தை செலவு செய்ய, இவளோ லாண்டரி ரூமில் அவன் போட்டிருந்த உடைகளை வாஷிங் மெசினில் போட்டாள்.

தொலைக்காட்சி நேரத்தில் இவள் பேச வர, அவனது பதில்கள் ஏனோதானோவென இருந்தது. இவளும் பேசாமல் எழுந்து ரூமுக்கு வந்துவிட்டாள். அரை மணி நேரம் கழித்து மகனைத் தூக்கிக் கொண்டு வந்தான் நேதன். அவனே சின்னவனுக்கு உடை மாற்றி நெஞ்சில் போட்டுத் தட்டிக் கொடுத்தான். இவளும் அமைதியாக அவன் செய்கைகளைப் பார்த்திருந்தாள்.

சின்னவன் உறங்கியதும், அவள் அருகே வந்து நின்றான் நேதன். இவளோ கண்ணை மூடி உறங்குவது போல பாசாங்கு செய்தாள். குனிந்துப் உற்றுப் பார்த்தவன், அப்படியே கையில் அள்ளிக் கொண்டான் இவளை.

“விடு, விடு! ஒன்னும் வேணாம்! என்னமோ பெரிய இவன் மாதிரி கண்டுக்காம இருந்த! இப்போ மட்டும் எதுக்கு என்னைத் தூக்கற! விடு” என சத்தம் போட்டவளின் வாயைத் தன் வாயால் மூடினான் நேதன்.

“ஷ்ஷ்ஷ்! கத்தி தூங்கறவர எழுப்பிடாதே ப்ளிஸ்!” என்றவன் அவர்களின் தனி மெத்தையில் அவளைப் படுக்க வைத்தான்.

தானும் படுத்துக் கொண்டவன், தன்னவளை நெஞ்சில் அள்ளிப் போட்டுக் கொண்டான்.

“ஒன்னும் வேணா” என விலக முயன்றவளை இன்னும் இறுக்கிக் கொண்டவன்,

“ஐ லவ் யூ லெங்லோய்” என சொல்லி நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

இவள் அவனையேப் பார்த்திருக்க,

“நேத்து நீ ஐ லவ் யூ சொன்னதுல இருந்து அங்க இருக்கவே முடியல! ஏற்கனவே ஓரளவு டீலிங் முடிஞ்சிருந்தது. இனிமே கான்பரண்ஸ் கால்ல பேசிக்கலாம்னு கிளம்பி வந்துட்டேன் வேணிம்மா!” என்றான் இவன்.

“அப்புறம் எதுக்கு முகத்தத் தூக்கி வச்சிருந்தீங்க?”

“நான் சிரிச்சா நீயும் சிரிப்ப! எனக்கு உடனே கட்டிக்கனும்னு தோணும். அம்மா வீட்டுல அதெல்லாம் முடியுமா?”

“அப்போ இங்க வந்து ஏன் கட்டிக்கல?”

“கட்டிக்கிட்டா மட்டும் போதாது, ஒட்டிக்கிட்டாத்தான் இந்த வேட்கைத் தீரும்னு தோணுச்சு. அதான் சின்னவர் தூங்கற வரை வேய்ட் செஞ்சேன்!” என்றவன் அவள் உச்சி முகர்ந்தான்.

“நாங்க ரெண்டு பேரும் உன்னை ரொம்ப மிஸ் செஞ்சோம்”

“நானும்தான் என் வைப்பையும் என் மகனையும் ரொம்பவே மிஸ் பண்ணேன்! அங்க இருக்கவே முடியல. இத்தனை வருஷம் நீங்க ரெண்டு பேரும் இல்லாம எப்படி வாழ்ந்தேன்னு தோணுச்சுடா” என்றவனின் குரல் கரகரத்திருந்தது.

தன்னவனுடன் இன்னும் ஒட்டிக் கொண்டாள் வேணி.

“வேணிம்மா”

“ஹ்ம்ம்”

“இன்னொரு பெண் நம்ம வாழ்க்கையில வேணாம்னு தனிமையில தவமிருந்தேன்டி நான். என்னைப் பார்த்து, செல்லத்துக்கு என்ன வேணும்னு கேட்டு என் தவத்த கலைச்ச மோகினி நீ!” என காதலுடன் சொன்னான் நேதன்.

“உன் கூட பழக ஆரம்பிச்ச போது உன்னோட ஒவ்வொரு பரிமாணமும் என்னை உந்தன் பால் கட்டி இழுத்தது. ஒரு தாயா உன்னோட அன்பு, ஒரு தோழியா நீ காட்டன அக்கறை, மகன் தந்தைப் பாசத்துக்கு ஏங்கிடுவாரோன்னு என்னைத் தள்ளி நிறுத்திய உன் கோபம், கூடப் பிறந்தவங்கள கைவிடாத பாசம் இப்படி எல்லாப் பக்கமும் என்னைப் புரட்டிப் போட்ட! உன்னோட கதையைக் கேட்டதும் உன்னை இன்னும் இன்னும் பிடிச்சது வேணி! அப்படியே உன்னை என் உள்ளங்கையில பொத்தி வச்சுப் பார்த்துக்கனும் ஒரு வெறியே எழுந்தது. பணம், பிஸ்னஸ்னு ஜடமா சுத்திட்டு இருந்தவனுக்கு உயிர் குடுத்தது நீதான். அந்த பாரதிக்கு ஒரு கண்ணம்மான்னா இந்த நேதனுக்கு நீ தான் உயிரம்மா! பிசிக்கலி நான் இன்னும் சரியாத்தான் இருக்கேன்னு எனக்கு என்னை உணர வச்சதும் நீதான்.! உன் மேல அவ்ளோ லவ் வச்சிருக்கேன்டி! என்னை உன்னிடம் இழந்து நிக்கிறேன் வேணி. ஆனா அத வாயால சொல்ல பயம்! இது எத்தனையாவது லவ்னு நீ கேட்டுட்டீனா என் முகத்த எங்கக் கொண்டு வச்சிப்பேன் நான்!” என சொன்னவனின் வாயில் ஒன்று போட்டாள் வேணி.

“என்ன பேச்சு பேசற நீ! உளறாதே!” என கடிந்துக் கொண்டாள் அவனை.

“அடிக்கடி ஐ லவ் யூ டூ, ஐ லவ் யூ போத்னு ஜாடைமாடையா சொல்லிப் பார்த்தேன்! நீ கண்டுக்கவேயில்ல! அதான் இனிமே நீ லவ்வ சொல்லாம நான் வாயைத் திறக்கக் கூடாதுன்னு இருந்தேன். நேத்து நீ லவ் சொல்லி அத்தனை முத்தம் குடுக்கவும் அங்க இருக்கவே முடியலடி! உடனே உன்னைப் பார்க்கனும்னு ஓடி வந்தேன்! எங்க இப்போ சொல்லுடி ஐ லவ் யூன்னு! கமான் வேணி”

“ஐ லவ் யூ நேதன்! லவ் யூ சோ மச்”

“ஐ லவ் யூ டூ மை வேணி” என ஆசையாய் அணைத்துக் கொண்டான் நேதன்.

நாற்பதிலும் காதல் வரும் ஏனென்றால் லைப் ஸ்டார்ட்ஸ் அட் ஃபோர்ட்டி! தனித்துப் பறந்த ஆண் கிளியும், குஞ்சோடு தவித்துக் கிடந்த பெண் கிளியும் ஒன்றை என்று அரவணைத்து, ஆதரித்து, அன்பு செய்து காதலோடு ஒன்றாய் சிறகடிக்க ஆரம்பித்தன. இனி அவர்கள் வாழ்வில் என்றும் இன்பமே.

முற்றும்.

(போன எபிக்கு லைக் அண்ட் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. இது பைனல் எபி. நேதன், வேணி மற்றும் அவங்க குட்டியோட  பயணித்த அனைவருக்கும் நன்றி. லிங்க் புதன் வரை இருக்கும்.  லவ் யூ ஆல் டியர்ஸ்)

error: Content is protected !!