Nee Enaku Uyiramma–EPI 7

189613085_863389437581725_4803627891963141566_n-4e7e684e

அத்தியாயம் 7

இரண்டு வாரங்களாய் வேணிக்கு மேசேஜ் செய்கிறான், போன் செய்கிறான், எதற்கும் எந்த வித ரெஸ்பாண்ஸும் இல்லை. மேசேஜ்களைப் படித்திருக்கிறாள் என ப்ளூ டிக் காட்டியது. ஆனால் அதற்கு பதில் போட முயலவில்லை அவள். நேதனுக்கு கோபம் கோபமாக வந்தது. நாட்டில் இருந்திருந்தால் நேரில் போய் பார்த்து நன்றாக திட்டி விட்டிருப்பான். அவன் இருப்பதோ சிங்கப்பூரில்.

வேலை விஷயமாக வந்தவனுக்கு, ஒன்று மாற்றி இன்னொரு டீல் சைனாகிக் கொண்டே இருந்தது. இந்த முறை மிகவும் சக்சஸ்புல்லாகி இருந்தது அவனது பிஸ்னஸ் ட்ரீப். பார்க்கப் போனால் சந்தோசத்தின் உச்சியில் இருக்க வேண்டியவன், என்னவோ இவளது புறக்கணிப்பில் உள்ளுக்குள் வெந்துக் கொண்டிருந்தான்.

அப்படி என்ன தப்பு செய்துவிட்டான்? திருமணம் ஆகவில்லை என்பதை சொல்லவில்லை. அதை சொல்ல வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதாவது ஒரு தடங்கல். அதற்கு ஏன் இந்தக் கோபம் அவளுக்கு என புரியவில்லை நேதனுக்கு. திருமணமாகி இருந்து அதை சொல்லாமல் மறைத்து அவளுடன் பழகி இருந்தால் தானே அது தவறு! வேணியின் பாராமுகத்தைக் எண்ணி மண்டைக் காய்ந்தது இவனுக்கு.

இங்கு அவளோ, கஸ்டமர் கேட்ட காபியை தயாரித்துக் கொடுத்து இன்முகமாக அனுப்பி வைத்தாள். பக்கத்தில் வைத்திருந்த போன் பாடி அழைத்தது இவளை. நேதனின் நம்பரைப் பார்த்தவள், அழைப்பை ஏற்கவில்லை. சற்று நேரம் சென்று மேசேஜ் வரும் ஒலி கேட்டது. பார்க்கதே என மூளை அறிவுறுத்தினாலும், கை வழக்கம் போல லாக்கை எடுத்து விட்டு வாட்சாப்பைத் திறந்துப் பார்த்தது.

“என்னை இக்னோர் செய்யறியா வேணி?” என ஆரம்பித்து வரிசையாக அனுப்பி இருந்தான் மேசேஜ்களை.

“நான் என்ன தப்பு பண்ணேன்?”

“இது என்ன சின்னப்புள்ளைத்தனமா இருக்கு நீ செய்யறது? நமக்கு நாப்பது வயசாச்சு! ஞாபகம் இருக்கா?”

“வாட் தெ ஹெல்!!! இப்போ பேச போறியா இல்லையா?”

“உனக்கு கோபம் போகனுங்கறதுக்காக நான் உடனே போய் கல்யாணம்லாம் செஞ்சுக்க முடியாது!”

“ஓ காட் வேணி! யூ ஆர் சோ ஸ்டபர்ன். அண்ட் ஐ ஹேட் யூ ஃபார் தட்!” என தட்டி நிறைய கோப முகம் வைத்த ஸ்மைலிகளை சேர்த்து அனுப்பி இருந்தான்.

‘போடா, போடா! நானும் ஐ ஹேட் யூ தான்’ என எண்ணிக் கொண்டவள் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள். கை இரண்டும் காபியைக் கலந்தாலும் நினைவுகள் அன்று அவன் வீட்டில் நடந்ததையே அசைப் போட்டது.

நேதனின் தங்கைப் பிள்ளைகள் என ஜானகி சொன்னதை செவிமடுத்தவள்,

“ஓ! இந்தப் பசங்க நேதனோட பசங்க இல்லையா?” என அதிர்ச்சியாகக் கேட்டாள்.

“அவனுக்கு கல்யாணம் ஆகியிருந்தா தானே பசங்க வர! இவன் தான் நாற்பதாகியும் இன்னும் சிங்கிளா சுத்திட்டு இருக்கானே!” என அங்கலாய்த்தார் ஜானகி.

“என்னம்மா! புதுசா வந்துருக்கற நேதன் ப்ரேண்ட் கிட்டயும் உன் புலம்பலை ஆரம்பிச்சிட்டியா?” என ஆங்கிலத்தில் கேட்டப்படியே வந்தார் மிஸ்டர் லிம்.

அவரைப் பார்த்து,

“ஹலோ அங்கிள்!” என்றவள் மரியாதையாக எழுந்து நின்றாள்.

“அட உட்காருமா! நானே உங்க அங்கிள் வந்தா எழுந்து நிக்க மாட்டேன்! நீ எதுக்கு நிக்கற!” என்றபடி அவளின் கைப்பிடித்து உட்கார சொல்லி இழுத்தார் ஜானகி.

“ஆமாம்மா நீ உட்காரு” என வேணியிடம் சொன்னவர்,

“எனக்கே ஏதோ ஒரு சில சமயம்தான் இந்த மாதிரி மரியாதைலாம் கிடைக்குது! அது உனக்குப் பொறுக்கலையா!” என ஜானகியிடம் கேட்டுப் புன்னகைத்தார்.

“அங்க என்ன ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்த என் ப்ரேண்ட மிரட்டிட்டு இருக்கீங்க?” என ஸ்விம்மிங் ஃபூலில் இருந்து குரல் கொடுத்தான் நேதன்.

“என்னைக்கும் இல்லாத அதிசயமா ப்ரெண்டுனு ஒரு ஆள வீடு வரைக்கும் அழைச்சிட்டு வந்திருக்கியே, அதான் யாரு எவருன்னு விசாரிச்சிட்டு இருக்கேன்” என்றார் ஜானகி.

இவன் புன்னகையுடன் வேணியைப் பார்க்க அவளோ ஜானகியுடன் பேசுவது போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் கோபமாய் இருக்கிறாள் என இவனுக்குப் புரியவில்லை. பாவம் ஆண்கள்! அவர்களின் தலையைத் தட்டி, நான் உன் மேல் கோபமாக இருக்கிறேன் என சொன்னால் ஒழிய பெண்களின் மறைமுக கோபம் அவர்களுக்குப் புரிவதில்லை. அவளுக்கு ஏதோ மூட் அவுட் போல என கடந்துப் போய் விடுவார்கள்.

ஜானகி இவளை உள்ளே அழைக்க, இவள் திரும்பி மகனைப் பார்த்தாள். அவனோ ஒரே சிரிப்புத்தான். நேட்டலியின் மகன்கள் அவனை சூழ்ந்துக் கொண்டு விளையாட்டுக் காட்ட, கேஷவுக்கு ஒரே குஷி. அவன் பாஷையில் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். மகனைப் பார்த்தவளின் கண்கள் மிருதுவானது. அவன் அருகே தன் மொட்டை மண்டையில் இருந்து தண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த நேதனைப் பார்த்ததும் முகம் கடினமானது.

மெல்ல திரும்பி ஜானகியுடன் வீட்டின் உள்ளே நுழைந்தாள். மிஸ்டர் லிம்மோ அங்கேயே அமர்ந்துக் கொண்டு சின்னவர்கள் செய்யும் சேட்டையை ரசித்துக் கொண்டிருந்தார். உள்ளே சென்றவள் கையில் ஜூஸ் தட்டைக் கொடுத்து,

“அங்கிளுக்கும் நாதனுக்கும் குடுத்துட்டு வாம்மா! பசங்களுக்கு மில்லோ கேன் ட்ரீங் குடுத்துடு! உன் மகன் ஸ்ட்ரோல குடிப்பாரா? இல்ல ஃபீடிங் பாட்டில்ல ஊத்திக்கறியா?” என சகஜமாக வீட்டு ஆட்களுடம் பேசுவது போல பேசினார் ஜானகி.

“ஸ்ட்ரோல இன்னும் பழக்கம் வரல! வேகமா உறிஞ்சிடறாரு, அப்புறம் இருமல் வந்திடுது ஆண்ட்டி”

“அதெல்லாம் போக போக பழகிடும்.”

மில்லோவை டின்னில் இருந்து ஃபீடிங் பாட்டிலில் ஊற்றியவள், எல்லா பானங்களையும் எடுத்துக் கொண்டு நீச்சல் குளத்துக்குப் போனாள். அங்கே மிஸ்டர் லிம் ஸ்விம்மிங் ஃபூல் ஓரம் அமர்ந்து, கேஷவை துண்டில் சுற்றி மடியில் வைத்திருந்தார். நேதன் ஃபூலில் இருந்து வெளியேறி, டீ ஷர்டைக் கலட்டி விட்டு உடம்பைத் துடைத்துக் கொண்டிருந்தான். குட்டிகள் இருவரும் இன்னும் தண்ணியில் தான் இருந்தார்கள்.   

இவளைப் பார்த்ததும் துண்டை நாற்காலியில் போட்டு விட்டு, அவள் அருகே வந்தான் நேதன்.

“கேஷவ் கையெல்லாம் வெள்ளையா ஆகிடுச்சு! அதான் அவர ஃபூல்ல இருந்து தூக்கிட்டேன்!” என சொல்லியபடியே ட்ரேயை வாங்கிக் கொண்டான்.

“ஹ்ம்ம், சரி” என்றவள் அவன் முகத்தை நேராய் பார்க்காமல், தன் மகனைப் பார்த்திருந்தாள்.

மேல் சட்டையில்லாமல் உடம்பைக் காட்டியபடி இருந்தவனைப் பார்க்க சங்கோஜமாக இருந்தது இவளுக்கு. அவள் தம்பிகள் எப்பொழுதும் வீட்டில் இப்படித்தான் இருப்பார்கள். தொந்தியும் தொப்பையுமாய் இருக்கும் தன் தம்பிகளையும், வாடி வதங்கிப் போய் இருக்கும் கணவரையும் பார்த்திருந்தவளுக்கு, திடகாத்திரமாய் தன் முன்னே நின்றிருந்தவனைப் பார்க்க கூச்சமாக இருந்தது.

மிஸ்டர் லிம்மிடம் இருந்து தன் மகனை வாங்கிக் கொண்டவள், அவனை நன்றாகத் துடைத்து மில்லோவைப் புகட்டினாள். சமத்தாய் அந்த இனிப்பு பானத்தை சொட்டு வைக்காமல் முடித்தவன், நேதனை பார்த்து கை நீட்டினான்.

“சும்மா சும்மா அவங்கள தூக்க சொல்லி தொல்லைப் பண்ணினா அம்மா அடிச்சுடுவேன் கேஷவ்” என மெல்லிய குரலில் மிரட்டினாள் வேணி.

அடி எனும் வார்த்தை மட்டும் நன்றாக விளங்கி விட்டது சின்னவனுக்கு. உதட்டைப் பிதுக்கி நேதனைப் பார்த்து தூக்குமாறு இரு கரம் நீட்டி அழ ஆரம்பித்தான் கேஷவ். அவனும் பானங்களை அப்பாவுக்கும், தங்கை பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டு, அம்மாவையும் மகனையும் நெருங்கினான்.

“குடு வேணி” என இவன் கை நீட்ட,

“ஏன் என் கிட்ட சொல்லல?” என மெல்லிய குரலில் ஆத்திரமாகக் கேட்டாள்.

“என்னத்த சொல்லல?”

“உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு!”

“அது பெரிய மேட்டர் இல்லையே, பார்க்கறவங்க கிட்டலாம் சொல்லிட்டுத் திரிய” என விளையாட்டாகவே பதில் கொடுத்தான் இவன்.

“எனக்கு அது பெரிய மேட்டர்தான்! கல்யாணம் ஆனவங்க கிட்ட சும்மா பேசறதே எனக்குப் பெரிய பிரச்சனையா முடியுது! அப்படி இருந்தும், உன்னைப் பத்தி ஸ்கூல்ல இருந்து தெரியுமேன்னு உன் கூட பழகனேன். என் மகனையும் பழக விட்டேன்! இப்போ நம்ம நட்பப் பத்தி எவ்ளோ கேவலமா பேசுவாங்க தெரியுமா? கொஞ்ச நாளாத்தான்டா நான் நிம்மதியா இருக்கேன்! என் நிம்மதிய பறிச்சிடாதே! இனிமே நமக்குள்ள ப்ரெண்ட்ஷிப் மண்ணாங்கட்டின்னு ஒன்னும் வேணா!” என சொல்லியவளின் கண்கள் கலங்கி நின்றன.

அவள் வார்த்தைகளில் வாயடைத்துப் போனான் நேதன். அவளிடம் தன்னிலைப் பற்றி விளக்க முனைவதற்குள், ஜானகி சாப்பிட வருமாறு அழைத்தார். மகனைத் தூக்கிக் கொண்டு இவள் உள்ளேப் போய்விட, அவளது கலங்கிய முகம் மனதை ஏதோ செய்தது இவனுக்கு.

கீழே இருந்த கெஸ்ட் குளியலறையை ஜானகி காட்ட, அங்கேயே மகனைக் குளிக்க வைத்து உடை மாற்றி விட்டாள் வேணி. இருபத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு பார்த்திருந்தாலும், நேதன் அவளிடம் மிகுந்த மரியாதையாகவும் அக்கறையாகவும்தான் நடந்திருந்தான். அவனை கடுமையாகப் பேசி விட்டதை நினைத்து நெஞ்சு சுட்டாலும், மனதை கல்லாக்கி வைத்தாள் வேணி. தனது உடைகளும் லேசாய் ஈரமாய் இருக்க, அந்நியர்களின் வீட்டில் குளித்து உடைமாற்ற கூச்சப்பட்டுக் கொண்டு பாத்ரூமில் இருந்த ஹேர் ட்ரையரில் மேலோட்டமாக காய வைத்தாள்.

மகனைத் தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வர, அங்கே நீந்தி இருந்த அனைவரும் குளித்து முடித்து டைனிங் ஹாலில் கூடி இருந்தனர். இவளையும் அழைத்து தன்னருகே அமர்த்திக் கொண்டார் ஜானகி. வீட்டிலிருந்து இந்திய உணவு வகைகளை சமைத்து எடுத்து வந்திருந்தார் அவர். அச்சு அசல் சீனர்களைப் போல இருந்த நேட்டலியின் மகன்கள், சாம்பார், அப்பளம், தயிர், ஊறுகாய், பொரியல் என வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். நேதனும், மிஸ்டர் லிம்மும் கூட அந்த உணவை ரசித்து சாப்பிட்டனர்.

‘சிண்டியன் வீட்டுல இப்படித்தான் தமிழ் சாப்பாட்டையும் சீன சாப்பாட்டையும் கலந்தடிப்பாங்க போல’ என எண்ணியவளின் கவனத்தைக் கலைத்தார் ஜானகி.

“பையனுக்கு என்ன சாப்பாடு குடுப்ப வேணி? சாதத்துல சாம்பார், கொஞ்சம் நெய் சேர்த்து நசிச்சுக் குடுக்கவா?” என கேட்டார்.

“இல்ல, பரவாயில்ல ஆண்ட்டி! அவனுக்கு போரிட்ஜ் செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கேன்! ஹாட் பேக்ல இருக்கு. இப்போத்தானே மைலோ குடிச்சாரு! இன்னும் கொஞ்ச நேரம் போனதும் சாப்பிட குடுக்கலாம்”

மகனைத் தொடையில் அமர வைத்துக் கொண்டு உணவு உண்ண முயன்றாள் வேணி. அவனோ தனக்கு மட்டும் எப்பொழுதும் கூழாய் கஞ்சியை அரைத்துக் கொடுத்து விட்டு இவள் மட்டும் வித விதமாய் சாப்பிடுகிறாள் எனும் கடுப்பில் தட்டில் கையைக் கொண்டு வந்து வைத்தான். வீட்டில் என்றால் அவனை ஹாலில் அமர்த்தி விட்டு விளையாட்டு பொருட்களைக் கொடுத்து விட்டு சாப்பிட அமர்வாள். இங்கே இவனை மட்டும் தனியாக அமர்த்தி வைக்க ஒரு மாதிரி இருந்தது வேணிக்கு.

அவள் அவஸ்தையைக் கண்டும் காணாதது போல பார்த்திருந்த நேதன், ஜானகியிடம் கண்ணைக் காட்டினான். அவள் மட்டும் சற்று முன் கண் கலங்கிப் பேசியிருக்காவிட்டால் இவனே எழுந்துப் போய் சின்னவனை வாங்கியிருப்பான். இப்பொழுது அம்மா மகன் இருவரையும் நெருங்குவது, அவள் கோபத்தை இவன் மதிக்கவில்லை எனும் எண்ணத்தை விதைக்குமே. அதனால் தான் தன் தாயிடம் கண்ணால் உதவி கேட்டான்  

“பையனை இப்படி குடும்மா வேணி! நீ சாப்பிடற வரைக்கும் நான் வச்சிருக்கேன்” என கையை நீட்டினார் ஜானகி.

“இல்ல பரவாயில்ல ஆண்ட்டி! நீங்க சாப்பிடுங்க, நான் மேனேஜ் பண்ணிப்பேன்!” என்றாள் இவள்.

“அடக் குடும்மா” என வாங்கிக் கொண்டார் அவர்.

கேஷவோ ஆண்களிடம் ஆசையாய் போவது போல, பெண்களிடம் போக மாட்டான். தன் அம்மா, பேபி சிட்டர் இப்படி சிலர் மட்டுமே விதிவிலக்கு. ஜானகி தூக்கியதும் உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தான். கண்களில் கண்ணீர் வழிய நேதனைப் பார்த்து கை நீட்டினான் அவன்.

என்னடா இப்படி செய்கிறானே என நினைத்து வேணிக்கும் அழுகை வரப்பார்த்தது. நேதனிடம் பேசியது தவறோ, பழகியது தவறோ, மகனை அவனோடு சாப்பிட அழைத்துப் போனது தவறோ, அவன் அழைத்தானே என வீடு வரை வந்தது தவறோ என மனதில் ஒரே போராட்டம். முகம் மூக்கெல்லாம் சிவந்து அழுகையை அடக்கப் போராடும் இவளை ஒரு பார்வைப் பார்த்தவன், சட்டென எழுந்துக் கொண்டான்.

கைக் கழுவி விட்டு ஜானகியை நெருங்கியவன், கேஷவை தூக்கிக் கொண்டான். அவன் தூக்கிய நொடி, நேதனின் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டு தேம்பினான் சின்னவன். மெல்லிய குரலில் அவனுடன் பேசியப்படியே ஹாலுக்கு சென்று விட்டான் நேதன். அவர்கள் இருவரின் நெருக்கத்தைப் பார்த்து, மற்றவர்கள் எல்லோரும் இருப்பதால் ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாகிப் போனாள் இவள்.

“நேதன் பார்த்துப்பான் வேணி! இந்த வாண்டுகள கூட சின்னப் புள்ளையில அவன் பேபி சிட் செஞ்சிருக்கான். நீ சாப்பிடு” என்றார் ஜானகி.     

தொண்டையில் உணவு இறங்க மறுத்தாலும், ஜானகிக்கு வித்தியாசமாய் ஏதும் தெரியக் கூடாது என கஸ்டப்பட்டு விழுங்கி வைத்தாள் வேணி. ஜானகி பேரன்களைப் பற்றி, மகளைப் பற்றி என பேசிக் கொண்டே சாப்பிட்டார். மிஸ்டர் லிம்மும் அவ்வப்பொழுது அவர்கள் பேச்சில் கலந்துக் கொண்டார். அந்தக் குட்டிப் பையன்கள் தாத்தாவிட்ம் பேசும் போது சீனத்திலும் ஜானகியுடன் பேசும் போது தமிழிலும், தங்களுக்குள் பேசும் போது தமிழ், சீனம், ஆங்கிலம், மலாய் என கலந்துக் கட்டியும் பேசினர். மனது ஒரு நிலையில் இல்லாவிட்டாலும், அந்த குட்டிகளின் பேச்சை ரசிக்கவே செய்தாள் வேணி.

உணவை முடித்ததும் மகனைப் போய் பார்த்து தூக்கிக் கொள்ள மனம் சொன்னாலும், ஜானகிக்கு கிச்சனில் உதவி செய்ய சொல்லி தமிழர் பண்பாடு உந்தியது. மீதி உணவுகளை டப்பெவேரில் போட்டு வைத்தவர்கள், மேசையைத் துடைத்து பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தனர். ஜானகி தேய்த்துக் கொடுக்க, இவள் அலசி வைத்தாள்.

“ஏன்மா வேணி, உனக்கும் நேதனுக்கும் நட்ப தாண்டி எதாவது இருக்கா?” என மெல்ல நூல் விட்டுப் பார்த்தார் ஜானகி.

அவர் கேள்வியில் கையில் இருந்த கண்ணாடி பாத்திரம் நழுவ பார்க்க, சட்டென சுதாரித்தாள் வேணி.

“அப்படிலாம் ஒன்னும் இல்லை ஆண்ட்டி! நாங்க ஜஸ்ட் ப்ரேண்ட்ஸ்”

பெருமூச்சொன்றை விட்டவர்,

“இந்தப் பையன் இப்படியே பிடி கொடுக்காம இருக்கானேன்னு மனசெல்லாம் வலிக்குதும்மா! ஒரு ப்ரெண்ட வீட்டுக்குக் கூப்டுருக்கேன், அவ பேரு வேணின்னு சொல்லவும், எனக்கு அப்படி ஒரு ஆவல்! நல்ல சேதி சொல்லப் போறானோன்னு அவன் தங்கச்சிய கலட்டி விட்டுட்டு நானே வந்தேன் உன்னைப் பார்க்க! ஹ்ம்ம்! என் மனச ஒடிச்சிட்டியேம்மா” என்றார்.

“என்ன ஆண்ட்டி நீங்க! நான் ஒரு பையனுக்கு அம்மா” என அதிர்ந்துப் போய் சொன்னாள் இவள்.

“உன்னைப் பத்தி லேசா சொன்னான்! கணவன் இல்லைனா மறுமணம் செஞ்சிக்கறதுல என்ன தப்பு? நான் பழமைவாதிலாம் இல்ல! என் மகனுக்குப் புடிச்சிருந்தா எந்தப் பொண்ணா இருந்தாலும், அந்தப் பொண்ணுதான் எங்க வீட்டு மருமக! உனக்கு பையன் இருந்தா என்ன? நீ மருமகளாயிட்டா, அவன் எங்க பேரனாகிடுவான்! ம்ப்ச் பாரேன் நான் ஆகாயத்துல கோட்டைக் கட்டறேன்! நீதான் உங்களுக்குள்ள ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டியே”  

“ஆண்ட்டி! இவ்ளோ ஆசை இருக்குல்ல நேதனுக்கு கல்யாணம் செஞ்சுப் பார்க்கனும்னு! அப்புறம் ஏன் இத்தனை வயசு வரைக்கும் விட்டு வச்சிருக்கீங்க?” என கேட்டாள் இவள்.

“என்னதான் தமிழ் பேச சொல்லிக் கொடுத்தாலும், நம்ம சாப்பாட்ட பழக்கினாலும், நேதனோட பல பழக்க வழக்கங்கள் அவன் அப்பா சைட்ட ஒட்டித்தான் இருந்தது.”

இவளுக்கும் தான் தெரியுமே! பள்ளியில் கூட சீன நண்பர்களோடுத்தானே இருப்பான். இந்தியர்களுடன் பழகினாலும் நெருக்கமான நட்பென்பது சீனர்களுடன்தானே!

“லீவிங் டுகெதர் சீனர்களுக்கு சாதாரண விஷயம்தானே! சிலர் அப்படி வாழ்ந்துட்டு கல்யாணம் செஞ்சிக்கிறாங்க. பலர் பழகி பார்த்துட்டு சரியில்லைனா ஜோடிய மாத்திக்கறாங்க! இவனும் படிச்சு முடிச்சிட்டு கம்பெனி ஆரம்பிச்ச டைம்ல ஒரு சீனப்புள்ளைய கேர்ள் ப்ரேண்டா வச்சிருந்தான். ரெண்டு பேரும் அவனோட அபார்ட்மேண்ட்ல ஒன்னாத்தான் இருந்தாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷம் சேர்ந்து வாழ்ந்துருப்பாங்க! அப்புறம் சரிப்பட்டு வரலன்னு பிரிஞ்சுட்டாங்க! என்னா ஆச்சுன்னே தெரியல! அதுக்குப் பிறகு கல்யாணப் பேச்செடுத்தா பிடி கொடுக்கவேயில்ல இவன்! வேற கேர்ல் ப்ரெண்டும் எனக்கு தெரிஞ்சு இல்லை!” என கவலையாக சொன்னார் அவர்.

அவர் கவலையைப் போக்க ஆறுதல் வார்த்தை சொல்லக் கூட பயமாய் இருந்தது வேணிக்கு. அதை அவர் வேறு மாதிரி எடுத்துக் கொண்டு ஆசையை வளர்த்துக் கொண்டால், தேவையில்லாத சங்கடங்கள் தானே வருமென அமைதியாக வேலையைப் பார்த்தாள். அதற்கு மேல் இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை.

வேலைகளை முடித்து விட்டு ஹாலுக்கு வர, அங்கிருந்த பெரிய தொலைக்காட்சியில் கார்ட்டுன் ஓடிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சி முன் இருந்த மேசையை ஓரமாக நகர்த்திக் போட்டு பெரிய ஜமுக்காளத்தை விரித்திருந்தான் நேதன். இரண்டு வாண்டுகளின் நடுவே கேஷவ் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். தன் தந்தையுடன் ஏதோ அளவளாவிக் கொண்டிருந்த நேதன் இவர்கள் வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்து வேணியைப் பார்த்தான். அவள் பார்வை மகனிடம் மட்டுமே இருந்தது.

கவுச்சின் ஓரத்தில் இருந்த பேக்கிலிருந்து அவனது கஞ்சிப் பாத்திரத்தை வெளியே எடுத்தாள் வேணி. அம்மாவைப் பார்த்ததும் முட்டிப் போட்டுக் கொண்டு அவள் அருகேப் போனான் சின்னவன்.

“பசிச்சிருச்சா ராஜா குட்டிக்கு?” என மெல்லிய குரலில் கேட்டவள், அவனைத் தூக்கிக் கொண்டாள்.

“அம்மா, அம்மா, அம்மா” என பல அம்மாக்களைப் போட்டு தனது முன்னிரண்டு பற்கள் தெரிய சிரித்தான் கேஷவ்.

ஜானகியைப் பார்த்து,

“ஆண்ட்டி, நான் இவனுக்கு டைனிங் ஹால்ல வச்சு சாப்பாடு குடுக்கவா?” என கேட்டாள்.

“இதெல்லாமா கேப்பாங்க! போம்மா, போய் குடு” என்றார் ஜானகி.

மகனையும் பாத்திரத்தையும் தூக்கிக் கொண்டு டைனிங் ஹாலுக்குப் போனாள் வேணி. அவனை மேசையில் அமர்த்தி, இவள் நின்றப்படியே அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். அவள் முதுகுப் பின்னால் இருந்து,

“வேற எதாச்சும் வேணுமா வேணி?” எனும் நேதனின் குரல் வந்தது.

“வார்ம் வாட்டர் வேணும்!”

ஃபில்ட்டர் வாட்டரில் இருந்து வெதுவெதுப்பான நீரைப் பிடித்து எடுத்து வந்தவன், காலியாகி இருந்த கேஷவின் வாட்டர் பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தான்.

“தேங்க்ஸ்”

“வேணி!”

“ஹ்ம்ம்”

“சாரி வேணி”

“இல்ல பரவாயில்ல” என பட்டும் படாமல் பேசினாள் இவள்.

“மறைக்கனும்னு நெனைச்சி மறைக்கல வேணி! சொல்ல சந்தர்ப்பம் வராம போச்சு! இதுனால என்ன பெருசா இம்பேக்ட் வரப் போகுதுன்னு அலட்சியம். உன்னை வீட்டுக்குப் கூப்பிட்டப்போ கூட, நான் தனியாள்னா சங்கடப்படுவன்னுதான் தங்கச்சிய வர சொன்னேன்! எனக்கு கேஷவ சந்தோசப்படுத்திப் பார்க்கனும்னு தோணுச்சே தவிர உன்னோட ஃபீலிங் ஹர்ட் ஆகும்னு தோணல! சாரி வேணி” என மெல்லிய குரலில் மன்னிப்பை வேண்டினான் நேதன்.

“நான் ஒரு விடோ நேதன்! என்னோட ஒவ்வொரு செயலையும் இந்த சமுதாயம் பார்த்துட்டு இருக்கு! உன்னை மாதிரி ஹை கிளாஸ் மக்களுக்கு இதெல்லாம் புரியாது! என்னை மாதிரி மிடில் கிளாஸ் ஆட்கள் நாலு பேர அணுசரிச்சு, மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு பயந்து பயந்து வாழனுங்கறது தலை விதி. நான் ஓவரா ரியாக்ட் செஞ்சிருந்தா சாரி நேதன். இனிமே கபேக்கு வா, காபி குடி, கெளம்பிடு! போன் பேசறது, மேசேஜ் செய்யறது முக்கியா இவர் கிட்ட பழக நினைக்கறது எல்லாம் வேணா!”

“வேணி!” என இன்னும் பேச முயன்றவனை,

“போதும் நேதன்! உன் பேரெண்ட்ஸ்லாம் இருக்காங்க! நாம இப்போ ஆர்கியூ பண்ண வேணா! எனக்கு தர்மசங்கடமா இருக்கு” என முடித்து விட்டாள்.

அவளை சங்கடப்படுத்த வேண்டாமென இவனும் அதற்கு மேல் பேசவில்லை. மகனுக்கு உணவை ஊட்டி முடித்தவள், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள். இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போக சொன்ன ஜானகியிடம், காலையிலேயே எழுந்து மார்க்கேட் எல்லாம் போய் வந்தது, சின்னவனுக்கு களைப்பாக இருக்கும், தன்னுடைய படுக்கையில் படுத்தால்தான் நன்றாக உறங்குவான் என சொல்லி கிளம்பிவிட்டாள்.

காரில் கேஷவை பேபி சீட்டில் அமர்த்திய நேதன்,

“நாளைக்கு பிஸ்னஸ் ட்ரிப்புக்கு சிங்கப்பூர் போறேன்! அங்கிருந்து போன் செய்றேன்! இன்னிக்கு ரெண்டு பேரும் நல்லா ரெஸ்ட் எடுங்க” என சொன்னான்.

தலையை சரி என ஆட்டியவள் காரை கிளப்பி சென்று விட்டாள். அதன் பிறகு அவனது கால்சையும், மேசேஜையும் முழுமையாக தவிர்த்தாள்.

இரண்டு வாரம் கழித்து சிங்கப்பூரில் இருந்து வந்த நேதன், நேராக ஆபிசிருக்கும் இடத்துக்கு வந்தான். காரை பார்க் செய்து விட்டு, நேராக வேணியின் கபேவுக்குப் போனான். அது சாத்திக் கிடந்தது.

 

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி..லவ் யூ ஆல், வோ ஐ நி )