Neer Parukum Thagangal 10.2

NeerPArukum 1-7354b4f5

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 10.2

அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்!

மௌனமாக… முகம் இறுகிப் போயிருந்த லக்ஷ்மியிடம், “ஆண்ட்டி… இப்படிக் கேட்க கூடாதோ?” என்று ஏதோ தவறாய் கேட்டது போல் மினி உணர, “ம்கூம், அதெல்லாம் இல்லை” என அவர் மென்னகை புரிய, “அப்போ சொல்லலாமே?” என்று இலகுவான குரலில் கேட்டாள்.

நடந்ததை நினைத்து அழுதபடியே இருக்காமல் … அதைக் கொஞ்சம் மறந்து, பேச்சின் போக்கை மாற்றுகிறாளே என்ற நிம்மதி லக்ஷ்மிக்கு வரவும், “ம்ம்ம் சொல்லலாமே!?” என்று இயல்பாகச் சொன்னார்.

ஏதோ கதை கேட்க உட்கார்ந்திருப்பது போல் இருந்தவளிடம், “எனக்கு அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். அப்பாக்கு பேங்க்-ல வேலை” என சொல்லும் பொழுதே இடையில் புகுந்து, “உங்க வீடும் எங்க வீடு மாதிரிதான? அப்பா… பொண்ணு? அப்படி?!” என்று கேட்டாள்.

“ம்ம்” என ஆமோதித்து முறுவலித்தபடி, “அப்பா பார்த்து பண்ணி வச்சதுதான் என்னோட மேரேஜ்” என்றதும், “மேரேஜ் ஆயிடுச்சா?” என மினி ஆச்சரியப்பட, “அதான் அப்போவே சொன்னேனே?” என்று அவர் கேட்க, “பட்…” என்று திரும்ப ஏதோ கேட்க நினைத்து, “சரி, நீங்களே சொல்லுங்க” என்றுவிட்டாள்.

“மேரேஜ் முடிஞ்சி ஒன்றரை வருஷம் லைஃப் ஹேப்பியா போச்சு. அது…” என்று முடிக்கும் முன்னே, “அப்புறம் எப்படி?” என்று குறுக்கே புகுந்து, ஏதோ கேள்வி கேட்க வந்தவள், “சரி சொல்லுங்க” என்று மீண்டும் விட்டுவிட்டாள்.

“என் வீட்டாளுங்களுக்கு… சொந்தக்காரங்களுக்கு… அதுக்கப்பறம் என்கிட்ட கேட்க குழந்தை இல்லையாங்கிற கேள்வியும், பேசறதுக்க அதைப் பத்தின விசயமும்தான் இருந்தது” என சொல்லி நிறுத்தியதும், அவர் வாழ்வு பற்றிய புரிதல் ஓரளவு மினிக்கு வந்திருந்தது.

பேச்சை நிறுத்திய லக்ஷ்மி-க்கோ… அகிலத்தின் தேவையில்லா அக்கறையை, பூமியின் அதிகப்படியான பொறுப்புணர்வை நினைத்து, உள்ளுக்குள் கோபம் தீப்போல் கனன்று கொண்டு வந்தது.

மினி எந்தக் கேள்வியும் கேட்காமலிருக்கவும், “அடுத்த ஒரு ஒன்றரை வருஷம் ட்ரீட்மென்ட்-னே வாழ்க்கை போனது. எதுவுமே சரியா வரலைனதும், கேள்வி கேட்ட எல்லாருமே எனக்கு ஏதோ பெரிய குறை இருக்கிற மாதிரியே பார்க்க ஆரம்பிச்சாங்க” என்றார் ஆதங்கத்துடன்!

ஆதங்கம் சிறிதும் அடங்காத லக்ஷ்மி, “அவங்களைச் சொல்லியும் தப்பில்லை. நிறைவான கல்யாண வாழ்க்கைனா குழந்தைங்க… அதுவும் ஆணொண்ணு பொண்ணொன்னு இருக்கற மாதிரி காட்டற சொசைட்டில, இல்லாதவங்களைக் குறையாதான பார்ப்பாங்க. சரிதான?” என்றார் வருத்தத்துடன்!

உடனே, “ஆண்ட்டி உங்களுக்கு பேபீஸ் பிடிக்காதோ?” என்று அவர் பேசியதை வைத்து ஒருமாதிரி கேட்டதும், “நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” என்று சட்டென கேட்டு, “ரொம்ப பிடிக்கும் மினி” என்றார்.

சற்று நேரம் எடுத்துக் கொண்டவர், “எனக்கும் குழந்தை வேணும்ங்கிற ஆசை இருந்தது மினி” என்றார் ஓர் மென்னகையுடன்.

குழந்தையின் கைப்பிடிக்க, ஊட்டிவிட, தூங்கையில் தலைவருட, அழுதால் சமாதானப்படுத்த, குழந்தையிடம் பேச, கவனித்துக் கொள்ள, வளர்ந்தபின் குழந்தை அவரைக் கவனிக்க… இப்படி இருபது வருடத்திற்கு முன்பு இருந்த ஆசைகளை… ஏக்கத்தை இன்று மனதில் நினைத்துக் கொண்டார்!

“அப்புறம் ஏன் அப்படிச் சொன்னீங்க?” என்றாள் சந்தேகமாக!

“குழந்தை இல்லைன்னா, அதை ஒரு பெரிய குறையா பார்க்க வேண்டாம்னு சொல்றேன் மினி. அவ்வளவுதான்” என்றார் அன்று புண்பட்ட மனதை பற்றி இன்று புன்னைகையுடன்!

அவரது புன்னகையே பார்த்தவளிடம், “சின்னஞ்சிறு உயிர் சந்தோஷம்தான்! இல்லைனு சொல்லலை! ஆனா அதுக்காக கூட வாழற உயிரை வேண்டாம்னு சொல்றது, வார்த்தையால காயப்படுத்தறது… அந்த உயிர்க்கும் வலிக்கும்ல?” என்று நிதானமாகக் கேட்டார்.

பின் லக்ஷ்மி மெல்ல இமைகளை மூடிக் கொள்ள, அவர் புன்னகை மறைந்தது.

மூடிய விழிக்குள்… ஒரு புது உயிரின் வரவு இல்லையென்றால், இருக்கும் உறவு இல்லாமல் போக வேண்டும் என்ற சமூகநிலை அவலமானதாகவும், பெருத்த அநியாமானதாகவும் தோன்றியது, லக்ஷ்மிக்கு!

‘தாய்மை’ உயர்ந்த பண்பென ஒத்துக் கொண்ட மனதிற்கு, குழந்தை இல்லை என்றானதும்… பெண்களை நோக்கி பயன்படுத்தப்படும் அடையாளங்களை இழிசொற்களை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.

ஒரு காலத்தில் தினந்தினம் அத்தகைய இழிசொற்களைக் கேட்டுக் கொண்டு வாழ்ந்ததை எண்ணிப் பார்த்ததில் புருவ மத்தியில் வலியே வந்துவிட்டது.

புகுந்த வீட்டிற்குள் ஒருவித மனஅழுத்ததோடு, குற்ற உணர்வோடு, தன் மதிப்பு குறைந்தது போன்று இருந்த நாட்களை நினைத்து இமைமூடிய விழிகளுக்குள் இதயத்தின் வலிநீர் சுரக்கப் பார்த்தது.

‘வேண்டாம்’ என கட்டளையிட்டு அதைக் கட்டுப்படுத்திக் கொண்ட நேரத்தில், மினி அவர் தோளைத் தொட்டதும், மெதுவாக இமை திறந்தார்.

லேசாக கலங்கியிருந்த லக்ஷ்மி கண்களைப் பார்த்தவள், “பீல் பண்றீங்களா?” என்று முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டு கேட்டதும், “இது… எப்பவோ நடந்தது” என்றபோது உணர்ச்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டிருந்தார்.

என்றோ நடந்திருந்தாலுமே, அன்று அது லக்ஷ்மிக்குப் பெரும் வேதனையைத் தந்திருக்கும். ஏன் இன்றும்கூட அந்த வேதனையின் சுவடுகள் இருக்கின்றன. அதனால்தான் குழந்தை பற்றிய பேச்சின் பொழுது அவர் முகம் ஒருமாதிரி மாறியிருக்கிறது.

தானும் அவரைக் கஷ்டப்படுத்திவிட்டது போன்று உணர்ந்த மினி, “ஆண்ட்டி, சாரி ஆண்ட்டி” என்று சிறு வருத்தமான முகத்துடன் சொல்ல, ‘திடீரென ஏன்?’ என்று புரியாமல், “எதுக்கு இப்போ சாரி?” என்று கேட்டார்.

“அப்போ உங்க கிட்ஸ் பத்தி பேசினேன்-ல!? அதுக்காக” என வாய்க்குள்ளேயே பேசியவள், “அந்த டைம்-ல இருந்த டென்ஷன்ல அப்படிப் பேசிட்டேன். ரொம்ப சாரி ஆண்ட்டி” என்று முழுமனதுடன் மன்னிப்பு கேட்டாள்.

“நானுமே… உன்கிட்ட சாரி கேட்டுக்கிறேன் மினி. எதையெதையோ நினைச்சி அப்போ அப்படிப் பேசிட்டேன்” என மனதிலிருந்து சொன்னதும், “அப்பா பத்தி பேசினத்துக்குத்தான ஆண்ட்டி?” என்று மினி சரியாக கணித்துச் சொல்லவும், ‘ம்ம்’ என்பது போல் தலையாட்டினார். 

இருவருக்கும் இடையே அப்போது எழுந்த ஒரு சிறு மோதலை பேசிப் புரிந்து கொண்டதால் இருவரின் முகமும் சிறிது மலர்ச்சியுடன் தெரிந்தது! ஒரு சிறு முறுவலையும் பரிமாறிக் கொண்டனர்! அது சிலநொடிகள் நீடித்தது!!

அதன்பின் மினியே, “அப்புறம் என்னாச்சு ஆண்ட்டி?” என ஆரம்பித்தாள்.

“என் புகுந்த வீட்ல இருக்கிறவங்க, என்னைய டிவோர்ஸ் பண்ணிட்டு அவங்க பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண நினைச்சாங்க” என்று லக்ஷ்மி சொல்லி முடித்ததுமே… மினிக்கு அது அநியாயமாகப் பட, “ஆண்ட்டி, உங்க ஹஸ்பண்ட் ஒன்னும் சொல்லலையா?” என்றாள் எரிச்சலாக.

“அவருமே அந்த பேமிலி-ல ஒருத்தர்தான மினி?” என்று ஒரு சிறு வெறுப்புடன் சொல்லிவிட்டு, “அதுக்கப்புறம் யார்கிட்ட போய் என்ன பேச சொல்லு?” என்று கேட்க, மினி ஏதும் பேசாமல் உம்மென முகத்தை வைத்தபடி இருந்தாள்.

லக்ஷ்மியின் குரல் இதற்கெல்லாம் நியாயம் என்கின்ற நீர் இல்லவேயில்லை என்ற தாகத்துடன் ஒலிந்திருந்தது!

பேச சிறிது நேரம் எடுத்துக் கொண்ட லக்ஷ்மி, “குழந்தை இல்லைனு சொல்லிச் சொல்லியே தினந்தினம் சண்டை, சச்சரவு, திட்டு. ஒருகட்டத்தில இதெல்லாம் போதும்னு தோணிச்சி மினி” என வெடவெடத்த குரலில் சொன்னவர், “அதான் டிவோர்ஸ்-க்கு ஒத்துக்கிட்டு எங்க வீட்டுக்கே வந்துட்டேன். அப்புறமா லைஃப் நானும்… என் அப்பாவும்-னு ஆகிடுச்சு” என்று முடித்தார்.

அதன்பின், இருவருக்கும் இடையே பேச்சுகள் இல்லாமல் இருந்தது! அங்கே, அந்தக் கடை முழுதும் ஓர் அடர்த்தியான அமைதி நிலவியது!!

மினிக்குள்… இப்பொழுதும் இவரது அப்பா துணையாக இருக்கிறாரா? என்ற கேள்வி ஓடியது. ஆனால் அதை எப்படிக் கேட்கவென சரியாகத் தெரியாமல் “இப்போ நீங்க… உங்க அப்பா? யார் இருக்காங்க?” என்று தடுமாறினாள்.

ஆனால் கேட்ட விதத்தில் அவருக்கான ஒரு சிறு அக்கறை இருந்தது!

அவளது கேள்வி தெளிவாக இல்லையென்றாலும், தன் தந்தையைப் பற்றிக் கேட்க வருகிறாளென்பது லக்ஷ்மிக்குச் சரியாகப் புரிந்தது!

ஆனாலும் பதில் சொல்ல ஒரு சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டவர், “அப்பா” என்று உச்சரித்து… சிறு இடைவெளிவிட்டு, “இப்போ… இல்லை மினி” என்றார் இன்றளவும் தந்தையின் மறைவை மறக்க முடியாத மனவாட்டத்துடன்!

உடனே அவரை நெருங்கி அமர்ந்து, ஆறுதலாக இருக்க அவரது கைப்பிடித்து, “அப்படினா… இப்போ உங்ககூட யாரும் இல்லையா ஆண்ட்டி?” என கலங்கிய முகத்துடன் மினி கேட்டதும், இல்லையென்று நிதானமாக தலையசைத்தவர் அழுத்தமாக அவளது கையைப் பிடித்துக் கொண்டார்!

மேலும் ஒரு நெடுமூச்சிற்குப் பின்னர், “நானும்… என்னோட தனிமையும்தான் இப்பெல்லாம்” என லக்ஷ்மி தற்போதைய வாழ்வு நிலவரத்தைச் சொன்னதும், மினியுடைய மனம் கவலையாகிப் போனது அவருக்காக!!

**********************************

மனிதநேயம் பேசும் மஹிமா – ??? – கார்த்திகேயன்

பைரவி அப்படிச் சொன்னதுமே, “ஏன்மா இப்படிச் சொல்ற?” என்று சண்முகம் கேட்க, மஹிமாவைப் பார்த்தபடியே, “தப்பா போகுதுன்னு தோணுது தாத்தா” என்றாள் வாட்டமாக.

“ஏன்மா இப்படி? இது நம்ம பிளான்தான?” என அல்போன்ஸ் கேட்கவும், “நான் அதைச் சொல்லலை அங்கிள்” என்றவள், “நமக்கு நியாயம் கிடைக்கணும்னு, காயத்தோட இருக்கிற பொண்ண கார்னர் பண்றது தப்பா தோணுது. அதான் இவ வெளிய போகட்டும்” என முடிவாக சொல்வது போல் சொன்னாள்.

சண்முகமும் அல்போன்ஸும் எதுவும் சொல்லாமல் இருந்தனர்!

மஹிமாவோ, “இது மட்டும்தான் தப்பா? சேர், டேபிள், கிளாஸ் உடைச்சப்போ, எத்தனை பேருக்கு அடிபட்டுச்சோ? அதெல்லாம் தப்பா தெரியலையா?” என மனிதநேயம் கொண்டவளிடமிருந்து கேள்விகள் வந்து விழுந்தன.

“தப்புதான்! இல்லைனு சொல்லலை. பட் நிச்சயம் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இருந்திருக்காது. ஏன்னா, எங்களுக்காக பண்ற ஒரு விஷயத்தில வேற யாரும் பாதிக்கபட்டிட கூடாது-ன்னு ரொம்பவே உறுதியா இருந்தோம்” என்று பைரவி தங்கள் பக்கம் இருக்கும் மனிதத்தன்மையை எடுத்துப் பேசினாள்.

மேலும், “ஒரே ஒரு பொண்ண மட்டும், தாத்தாவை அடிச்சாங்கிற கோபத்தில ரூம்ல அடைச்சு வைச்சேன். அதுவும் தப்புதான். ஆனா அப்போ அப்படித்தான் செய்ய தோணிச்சி. மத்தபடி நாங்க யாரையும் காயப்படுத்தலை” என்றாள் அவர்கள் நடந்து கொண்டதை அப்படியே!

‘இந்தச் செயலுக்கு பெரியவர்கள் ஏன் துணை நிக்கிறார்கள்?’ என்பது போல் மஹிமா பார்த்திருக்க… அவளது கால் காயத்தைப் பார்த்த பைரவி, “உனக்கு எப்படி இந்தக் காயம் வந்தது?” என கேட்க, “ஒருத்தர் இடிச்சி கீழ விழுந்தப்ப, சேர் கம்பி குத்திடிச்சி” என்றாள்.

“இருக்க இருக்க உன் முகத்தில சோர்வு கூடிட்டே போகுது. அடிபட்டது ரொம்ப வலிக்குதா?” என்று பைரவி கேட்க, “சாப்பிடலைனு சொன்னாளே!? ஒரு ஜூஸ் கடை இருந்ததே. நான் போய் பழம் இருந்தா எடுத்திட்டு வர்றேன்-ம்மா” என்று சண்முகம் எழுந்து சென்றார்.

சற்றுநேரம் அமைதி நிலவியது. மூன்று வாழைப்பழங்கள் எடுத்துக் கொண்டு சண்முகம் வந்திருந்தார். எடுத்து வந்ததை மஹிமாவிடம் தந்ததும், மறுத்துக் கொண்டிருக்காமல் வாங்கி உண்டவள், நிரம்ப தண்ணீர் குடித்தாள். பசியின் கிறக்கம் போனதால் கொஞ்சம் களைப்பு நீங்குவது போல் தெரிந்தது.

“இப்ப பரவாயில்லையா?” என சண்முகம் கேட்டதற்கு, “ம்ம்ம்” என்று மஹிமா தலையசைத்துக் கொண்டே அவர்கள் மூவரையும் பார்த்தாள்!

அப்பொழுது செய்த செயலுக்கும்… இப்பொழுது செய்வதற்கும் பேசுவதற்கும் சம்பந்தமில்லாமல் இருப்பதனால், “இப்படிப் பேசி செஞ்சதை நியாயப்படுத்த பார்க்கிறீங்களோ?” என்று, ‘முழுமனதோடு இதைக் கேட்கவில்லை’ என்ற ஓர் குரலிலே மஹிமா கேட்டிருந்தாள்!

அதற்கு பைரவியோ, “நியாயப்படுத்த பார்க்கல. நியாயப்படுத்தவும் கூடாது! முடியாது!! ஆனா எங்களுக்கு வேற வழி தெரியலை” என்று, ‘முழுமனதோடு இதைச் சொல்கிறேன்’ என்ற குரலில் சொல்லியிருந்தாள்!!

“எத்தனை பேர் உயிருக்குப் பயந்துக்கிட்டு ஓடினாங்க? எத்தனை பேர் உள்ளே மாட்டிக்கிட்டு இருக்கிறாங்களோ? அவங்க உயிர் பயத்திலதான இருப்பாங்க. நீ என்ன சொன்னாலும், நீங்க செஞ்சதை அக்ஸப்ட் பண்ண முடியலை” என்று மனதின் நெருடலை மஹிமா சொன்னாள்.

“அப்படி நினைக்கிறவ எதுக்காக ஹெல்ப் பண்ண நினைச்ச?” என்று பைரவி நேரடியாக கேட்டாள்.

“ஃபர்ஸ்ட் இங்க மாட்டிக்கிட்டு இருக்கவங்களுக்கு ஏதும் ஆகிடக் கூடாதுன்னு நினைச்சேன். அப்புறமா நீங்க கண்கலங்கினது கஷ்டமா இருந்தது. அதான் இந்த ஹெல்ப்” என அப்பொழுது நினைத்ததை அப்படியே சொன்னாள்.

மேலும், “நான் இதையுமே சொல்லிடறேன். உங்க கோரிக்கை நியாயமானதா இருந்தா நிச்சயம் கார்த்தி ஹெல்ப் பண்ணுவான். ஆனா நியாயம் நேர்மைனு பார்க்கிறவன். நீங்க பண்ணதுக்காக கண்டிப்பா உங்க மேலயும் நடவடிக்கை எடுக்க வைப்பான்” என்று, ‘என்ன சொல்வார்களோ?’ என்கின்ற தயக்கத்திலே மஹிமா சொல்லி முடித்தாள்.

துளியும் தயக்கமில்லா குரலில், “கரெக்ட்தான அது!” என்று பைரவி பட்டென்று சொன்னதும், ‘என்ன இப்படிச் சொல்கிறாள்?’ என மஹிமா பார்த்திருந்தாள்.

பைரவியே, “தப்பு பண்ணவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும். அதுக்குத்தான நாங்களும் போராடிக்கிட்டு இருக்கோம். அப்போ நாங்க தப்பு பண்ணாலும் அதேதான? அதுதான நியாயம்!?” என்றாள் தெளிவாக!

“யாரு தப்பு பண்ணாங்க? எதுக்காக போராடுறீங்க?” என மஹிமா புரியாமல் கேட்டதோடு, “நீ பேசறதை வச்சி, இவங்க” என சண்முகத்தைப் பார்த்து, “உன் தாத்தான்னு தெரியுது. ஆனா இவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” என்று அல்போன்ஸைப் பார்த்தாள்.

பைரவியும் அல்போன்ஸை பார்த்தபடியே, “ஒரு விசயத்தில நானும் அங்கிள் பொண்ணும் பாதிக்கப்பட்டிருக்கோம். அப்படித்தான் எங்களுக்குள்ள முதல அறிமுகம் ஆனது” என்றாள்.

“என்ன விஷயம்? என்ன பாதிப்பு?”

“வேலை பார்க்கிற இடத்தில ஒருத்தன் விடாம தொல்லை கொடுத்தான்”

“ஒர்க் பிளேஸ் ஹராஸ்மென்ட்டா?” என்று மஹிமா கேட்க, “ம்ம்” என்று பைரவி தலையாட்டியதும், “போலீஸ்ல கம்பளைன்ட் கொடுத்திருக்கலாமே? ஈஸியா முடிஞ்சிருக்குமே? இதுக்குப் போய் இப்படி ஏன் பண்ணனும்?” என்றாள்.

“போலீஸ்… கம்பளைன்ட்” என்று விரக்தியுடன் சொன்னவள், “இதுக்காக மூணு மாசமா போராடி ஒரு உயிரைப் பறி கொடுத்திட்டு நிக்கிறேன்” என்றாள்.

இதுவரை பைரவியின் குரலில் ஓர் உறுதி இருந்தது!

ஆனால் இதைச் சொல்லி முடிக்கையில் அவள் குரல் உடைந்து போயிருந்தது. நடந்தவைகள் அனைத்தும் ஞாபகத்தில் வர… வர ஒட்டுமொத்தமாக ஒடுங்கி ஓய்ந்து போன தோற்றத்தில் காணப்பட்டாள்!!

அவளது தொய்வைக் கண்ட சண்முகம் எழுந்து வந்து, ‘தைரியமாக இரு. நான் இருக்கிறேன்’ என்று அவள் அருகில் அமர்ந்து கொண்டார். மகளின் இழப்பை நினைத்து கண்ணீர் கட்டியிருந்த கண்களுடன் இருந்த அல்போன்ஸும் வந்து, ‘நானும் இருக்கிறேன்’ என்று அவள் பக்கத்தில் அமர்ந்தார்.

மூவருமே இழப்பை நினைத்து இதயத்தின் வலியுடன் அமர்ந்திருந்தனர்!

இவர்கள் இப்படியென்றால் மஹிமா, ‘உயிரிழப்பா!?’ என்று உடைந்திருந்தாள். அல்போன்ஸின் கண்ணீரைக் கண்டு, இவரது மகள்தான் மறைந்திருக்கிறாள் என புரிந்தது. அவர்கள் கண்களில் தெரிந்த வலிக்கே மனம் கஷ்டப்பட்டவள், இதயத்தில் ஏற்பட்டிருக்கும் வலியை நினைத்து கண்கலங்கினாள்.

மறைந்த உயிருக்கும் அவளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அந்த உயிர் பற்றியோ… எப்படி இது நடந்தது என்றோ… அவளுக்குத் தெரியாது. இருந்தும் அந்த உயிருக்காக வாடினாள்! உள்ளுக்குள் அழுதாள்!!

நால்வரும் சூழ்நிலையை மறந்து வெகுநேரம் இப்படியே இருந்தனர்!!

சிலவினாடிகள் கழித்து கார்த்தியிடமிருந்து அலைபேசி அழைப்பு வர, மெல்ல அதை ஏற்று, “இப்பத்தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்” என்று சொன்ன அடுத்த நொடியே, “அழறியா மஹி?” என அவள் குரலைக் கணித்துக் கேட்டான்.

அவள் அமைதியாக இருந்ததும், “உள்ளே என்னதான் நடக்குது? பயமில்லைனு சொல்ற. கேஸூவலா பேசற! மஹி, நீ அவங்களுக்கு ஃபேவரா நடக்கற மாதிரி தெரியுது” என்று அவளைக் கணித்துச் சொல்ல, “அதுல ஒன்னும் தப்பில்லை” என்றாள் கரகரப்பான குரலில்!

‘தப்பில்லையா?’ என்று தனக்குள் கேட்டவன், “இப்படிச் செஞ்சவங்களுக்கு, நீ ஹெல்ப் பண்ண நினைக்கிற! இது தெரிஞ்சதுமே, ஒரு லாயரா போலீஸ்-க்கு நான் இன்ஃபார்ம் பண்ணியிருக்கணும். அதைவிட்டு உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். இதனால எனக்குத்தான் ப்ராப்ளம் வரும்” என்றான்.

“அப்போ ஹெல்ப் பண்ண முடியாதா?” என்றாள் கலக்கமாக!

“அந்த அர்த்தத்தில சொல்லல. சீக்கிரமா என்னென்னு சொல்லச் சொல்றேன்” என அவசரப்படுத்த, “சரி… சரி” என்று அவள் அலைபேசியை வைக்கப் போக, “மஹி வச்சிடாத! இப்பவாது சொல்லேன். உனக்கு ஒண்ணுமில்லை-ல?” என்று அவர்களுக்காகப் பேசப் பார்த்தான்.

என்ன நினைத்தாளோ, “அவங்ககிட்ட கேட்டுட்டு, நான் கால் பண்றேன்” என அழைப்பைத் துண்டித்துவிட்டு, பைரவியைப் பார்த்தாள்.

மஹிமா, ‘ஸ்பீக்கர் மோடில்’ போட்டுப் பேசியிருந்ததால் பைரவியும் நடந்த உரையாடலைக் கேட்டிருந்தாள்.

உதவ முன்வந்தவனுக்கு தங்களால் பிரச்சனை வந்துவிடக் கூடாது! இழப்பை நினைத்து இடிந்து போகும் நேரமில்லை இது! தங்களுக்கு இந்த முறையாவது நியாயம் கிடைக்க வேண்டும்!

உடனடியாக ஓய்ந்து, உடைந்து போயிருந்த தன் குரலை சரிசெய்து கொண்டு, நடந்ததை மஹிமாவிடம் சொல்லத் தயாரானாள் பைரவி!!

*************************************

வணிக வளாகத்தின் வெளியே

அதே இரவுப் பொழுது!

சூழலில் இரண்டு மாற்றங்கள் நடந்திருந்தது. ஒன்று பொதுமக்கள் வெகுவாக குறைந்து போயிருந்தனர். மற்றொன்று மாட்டிக் கொண்டவர்களின் உறவுகள் இனிமேல் ஆபத்தொன்றும் இருக்காது என்று உணர ஆரம்பித்ததால், பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

சரவணனின் உறவானவர்களும், செல்வியின் உறவும் கூட அப்படியே!

ஊடகத்தினர் தங்களது பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.

*************************************

கடமை தவறா காவலர் பெனசீர்!

பெனசீர் கேட்டிருந்த தகவல்களைச் சேகரிப்பதற்காக சென்றிருந்த செந்தில் இன்னும் வரவில்லை. அதற்குள் செல்வி பற்றிய பல விவரங்களுடன் தினேஷ் வந்து நின்றான்.

“டொமஸ்டிக் வயலன்ஸ்-ன்னு டிவோர்ஸ் பண்ணியிருக்காங்க. வீட்ல அவங்க பெரியம்மா தாத்தாகிட்ட ஃபோன்ல விசாரிச்சப்போ ரெண்டு பேருமே இந்தப் பொண்ணுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி பேசறாங்க” என தினேஷ் தொடங்கினான்.

“ஏன் அப்படி?” என்றார் பெனசீர் சந்தேகமாக!

“அந்தப் பொண்ணு டிவோர்ஸ் பண்ணதுல அவங்களுக்கு உடன்பாடு இல்லை. அவ்வளவுதான் மேடம்” என்றான் சாதரணமாக!

“இதை யாரு சொன்னா?”

“மேடம், இங்கேதான் செல்வி அக்கா இருக்காங்க. செகன்ட் மேரேஜ் விஷயமா வந்திருக்கிறதா சொன்னாங்க. டவுட் பண்ற மாதிரி ஒன்னுமேயில்லை” என்று சொல்லிவிட்டு, “அன்ட் லக்ஷ்மி. அவங்க ஸ்பீக் வெல் அகடமி பௌன்டர்” என சந்தேகப்படும்படி எதுவும் இல்லையென்பது போல் சொன்னார்.

‘இவர்களைச் சந்தேகித்ததது தவறோ?’ என்ற முகத்தோடு, “பேமிலியர் பேஸா இருக்கேன்னு அப்பவே நினைச்சேன்” என பெனசீர் சொல்ல, “மேடம், இன்னும் ஒருத்தர் மட்டும் இருக்காங்க. அவங்களைப் பத்தின டீடெயில்ஸும் கலெக்ட் பண்ணிடவா?” என்று தினேஷ் கேட்டான்.

“எதுக்கும் விசாரிச்சிடுங்க” என பெனசீர் அனுமதிக்க, அவன் விடைபெற்றுச் சென்றதும், கட்டிடத்தைப் பார்த்தபடி பெனசீர் மீண்டும் யோசனைகளுக்குள் அமிழ்ந்தார்!

இதற்கிடையே இரண்டு உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த அழைப்பினையும் ஏற்று, அவர்களிடம் பேசியும் இருந்தார்.

‘எதையாவது கவனிக்காமல் விட்டிருக்கிறோமா?’ என்ற கேள்வி மீண்டும் எழ, இங்கு வந்ததிலிருந்து நடந்தவற்றை கண்முன் ஓட்டிப் பார்த்தார். செக்யூரிட்டி ஆட்கள் பேசியதெல்லாம் மனதிற்குள் சொல்லிச் சொல்லிப் பார்த்தார்.

தீவீரமாக யோசித்தவருக்கு ஏதோ பொறி தட்டிய பொழுது, “மேடம், ஃபுட்டேஜ் எங்கயும் ஸ்டோர் பண்றதில்லைனு சொல்றாங்க. உள்ள மாட்டியிருக்க மூணு பேர்கிட்ட பேசினோம். பயந்துக்கிட்டு ஷாப்குள்ள இருக்கிறதா சொல்றாங்க. அப்நார்மல் ஆக்டிவிட்டீஸ் இருக்கிற மாதிரியும் சொல்லலை. அடுத்து என்ன செய்ய மேடம்?” என்று செந்தில் வந்து நின்றான்.

“நீங்க… செக்யூரிட்டி ஆளுங்களோட பேரு, அட்ரஸ், ஃபோன் நம்பர் வாங்குங்க. சஸ்ஃபெக்ட் பண்றோம்னு கொஞ்சமும் தெரிய கூடாது. ‘வாங்கிட்டு வீட்டுக்கு அனுப்பிடுவோம்’-ன்னு கேஸுவலா பேசி வாங்கிடுங்க” என்று கடகடவென பெனசீர் கட்டளையிட்டார்.

‘இப்பொழுது இது எதற்கு?’ என்று நின்றவனிடம், “ம், சீக்கிரமா சொன்னதைச் செய்ங்க” என்று துரிதப்படுத்தியதும் செந்தில் விரைந்து சென்றான்.

பெனசீரின் சந்தேகப் பார்வை கட்டிடத்தின் முன்னே இருந்த பெரிய இடத்தில் போடப்பட்டிருந்த, ‘ஸ்டீல் பெஞ்சில்’ அமர்ந்திருந்த செக்யூரிட்டி நபர்களின் மீது விழுந்தது!

அதிலும் குறிப்பாக ஒருவர் மீதே இருந்தது!!

*************************************

Disclaimer :

Opinion differs! I respect each other’s opinion!