NeerPArukum 1-001c323a

Neer Parukum Thagangal 11.1


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 11.1

சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்!

இதை எதிர்பார்க்கவில்லையா? இதை… இவனிடம் எதிர்பார்க்கவில்லையா? இல்லை, இதை இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லையா? இதில் ஏதோ ஒன்றால், சரவணன் வெளிப்படுத்திய ப்ரியத்திற்கு, செல்வியின் நிலைப்பாடு கோபம்! கோபம் மட்டுமே!!

மகனின் உறக்கம் கலைய ஆரம்பிக்கும் நிலையில், அந்தக் கோபத்தையும் பொறுமையான முறையில், அமைதியான குரலில் முடிந்தளவு தேர்ந்தெடுத்த வார்த்தைகள் வழியாக வெளிப்படுத்த நினைத்தாள்.

விழிப்பிற்காக அசைந்த மகனைத் தட்டிக் கொடுத்தபடியே, “இதுக்கு என்ன அர்த்தம் சரவணன்? ம்ம், சொல்லுங்க என்ன அர்த்தம்?” என்றதும், ‘அர்த்தம் தெரியவில்லையா?’ என்பது போல் அவன் பார்த்தான்.

அவன் பார்வைக்குப் பதிலாக, “தெரியும்! தெரியுது” என்று வேகமாக சொல்லி, ஒருமுறை அவனையும், தன்னையும் சுட்டிக் காட்டிவிட்டு, “கல்யாணம் பத்திக் கேட்கிறீங்க. நேரடியா கேட்க பயந்து போய், இப்படிக் கேட்கிறீங்க? சரிதான?” என்று காட்டமாக கேட்டாள்.

‘பயந்தா?’ என்பது போல் கண்களைச் சுருக்கினான்.

“நான் உங்களைச் சகஜமா பார்க்கிறதை, நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. என் எதிர்ல யார் இப்படி இருந்தாலும், என் பார்வை இதுதான்!” என, அவன் இதமாக உணர்ந்ததை ‘தன் இயல்பு’ என சுட்டிக் காட்டினாள்.

‘இதுதான் என் இயல்பு’ என்று அவள் சொன்னது, அவன் இதமாக உணர்ந்ததை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக அவளது மேம்பட்ட பார்வையை மனம் மெச்சிக் கொள்ளத்தான் செய்தது!!

எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தவனிடம், “நான் பேசினதைக் கேட்டு வந்த அனுதாபத்தில… இப்படி ஒரு முடிவு. சரியா? இந்த மாதிரி பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறது. அதான? இன்னும் சொல்லுங்களேன், உங்க ரெண்டு பேரையும் நல்லா பார்த்துப்பேன். அப்படி! இப்படினு!!” என்றாள் ஏதேதோ!

செல்வி பேசும் வார்த்தைகளில் சிறிதும் உடன்பாடில்லை என்பதால் ஒருவித எரிச்சல் வந்திருந்தது. இருந்தும் சரவணன் அமைதியாக இருந்தான்!

“காஃபி கொடுத்தது, இட்லி எடுக்க உதவினது, ஃபேன் எடுத்து வச்சது எல்லாம் இந்த மாதிரி கேட்கத்தானா?” என்று முழித்துக் கொள்ள நினைக்கும் மகனை, தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டே பேசினாள்.

‘என்ன நடந்தாலும் பரவாயில்லை’ என்று கதவின் அணைவாக வைத்திருந்த பொருட்களைத் தூக்கி எறிந்துவிட்டு இங்கிருந்து போய்விடலாம் என்று கோபம் பொங்கியது. ஆனாலும் அப்படியே அழுத்தமாக இருந்தான்!

“உங்களைத் தப்பு சொல்லக் கூடாது. ஏன்னா, அங்க நின்னவங்களை ‘இங்கே வந்து இருங்க’-ன்னு நான்தான சொன்னேன்!? என்னைத்தான் சொல்லணும்” என்றாள், ‘அவ்வளவுதான் உறக்கம்’ என்று விழித்த மகனைப் பார்த்தவாறே!

மேலும், “டீசென்ட்டா பேசறீங்கனுதான் பேசினேன். இப்படிக் கேட்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, பேசியிருக்கவே மாட்டேன்” என்று முடித்துக் கொண்டாள்.

உறக்கத்திலிருந்து எழுந்த ஹரி, அம்மா மடியில் உட்கார்ந்தபடி சுற்றி இருந்த புதிய சூழலை மிரட்சியோடு பார்த்ததும், ‘அம்மாவும் இங்கேதான் இருக்கேன்’ என்பது மகன் தோளில் தட்டிச் சமாதானப் படுத்தினாள்.

பின், மகனுக்கு கொஞ்சம் வெண்ணீர் கொடுக்கலாம் என்று எழுந்து கொள்ள பார்த்தாள். அவ்வளவு நேரமும் முட்டியை மடக்கி அமர்ந்திருந்ததால், கால்கள் மறத்துப் போய் அவளை ஒருமுறை தடுமாற செய்தது. இருந்தாலும் சுவரைப் பிடித்துக் கொண்டு சமாளித்தாள்.

சமாளித்து முடித்ததும், அக்கறை என்ற பெயரில் ஏதாவது சொல்வானோ என்று சரவணனைப் பார்த்தாள். ஆனால் அவனோ துளியும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். இப்படியே இருக்கட்டும்! இதுதான் நல்லது என்று நினைத்துக் கொண்டாள்.

அதற்குமேல் அதைப் பற்றிச் சிந்திக்காமல், மகனை வெந்நீர் குடிக்க வைத்து முகத்தை லேசாக தண்ணீர் கொண்டு துடைத்து, பின்பு துப்பட்டா கொண்டு முகத்தின் ஈரத்தை ஒற்றி எடுத்தாள்.

அப்போதுதான் எழுந்ததால் ஹரி சுறுசுறுப்பே இல்லாமல் இருந்தான். சிறிது நேரம் கையில் வைத்தபடியே நடந்தாள். அவன் தூக்க கலக்கம் சென்றபின், மீண்டும் அமர்ந்து, அவனையும் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள்.

ஹரி அங்கிருந்த நாளிதழ்கள், பாத்திரங்களை வைத்து விளையாட ஆரம்பித்தான். அவன் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்றதும் ஒரு சிறு நிம்மதியில் மகன்மீது மட்டும் கவனத்தை வைத்திருந்தாள்.

அந்தக் கணத்தில், “செல்வி, நீங்க பேசி முடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். பேசினது புரிஞ்சது. இப்போ நானும் கொஞ்சம் பேசிக்கலாமா?” என அனுமதி கேட்டு, அவளது பேச்சின் மீதான கோபத்தை வெளிப்படுத்த நினைத்தான் சரவணன்!

***********************************

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

சேது அப்படி ஒரு கேள்வி கேட்டதும், “புரியாத மாதிரி பேசனும்னு பேசுவியா? இல்ல, என்னைக் குழப்பணும்னே பேசுவியா?” என கண்மணி சிடுசிடுவென கேட்க, “இதுல உனக்கு என்ன புரியலைன்னு சொல்லு?” என்றான்.

“ப்ராபளம் இல்லை-னா எதுக்கு என்கேஜ்மென்ட் கேன்சல் பண்ணனும்? ஏதோ இருக்கு. நீ எதையோ மறைக்கிற?” என்றாள்.

லேசாக சிரித்தவன், “நம்பு! நிஜமா எந்த ப்ராபளமும் கிடையாது. ஆக்சுவலா அவங்க சைடுல…” என்று தொடங்குகையில், “ப்பா! மரியாதையெல்லாம் ரொம்ப பலமா இருக்கு. எனக்கெல்லாம் கிடையாதா?” என்று ஒருமாதிரி குரலில் கேட்டாள்.

உடனே சேதுவிற்கு அவளை மரியாதை விகுதியில் அழைத்துப் பேசியிருக்க வேண்டுமோ என்ற ஒரு நெருடல் வந்து அவன் சிரிப்பை மறையச் செய்தது!

மேலும் நிதானமாக, “சாரி, நம்ம பேச ஆரம்பிச்ச சிச்சுவேஷன் வேற. நீ… நீங்க பேசி… அதுக்கு நான் பேசி அப்படியே கன்டினியூ ஆயிடுச்சி. நீ… நீங்க இப்படி எக்ஸ்பெக்ட் பண்ணுவீங்கன்னு நான் யோசிக்கலை” என்று அவன் கருத்தாக விளக்கிக் கொண்டிருக்க, அவள் மௌனமாக சிரித்தாள்.

அவள் சிரிப்பில் கேலி தெரிந்ததும், ‘எதற்காக அப்படிக் கேட்டாள்?’ என அவன் யோசிக்கையில், மரியாதை விகுதியுடன் அவள் பேசியது போல் தன்னையும் பேச வைத்திருக்கிறாள் என்று புரிந்தவுடனே பின்னந்தலையில் தட்டி, “ச்சே!” என்றான்.

அவன் செய்கை கண்டு நன்றாக சிரித்தவள், “ஹலோ புரிஞ்சிடுச்சா?” என்று கேட்க, அவனும் மெல்ல சிரித்து, “இப்ப எப்படி? ‘நீங்க, வாங்க’-னு பேசணுமா? இல்ல…” என இழுத்தவனிடம், “உன் இஷ்டம்பா!” என்று பெரியமனதாக அவள் சொன்ன விதத்தில் அவனது சிரிப்பு முகமெங்கும் விரிந்தது.

ஓரிரு நொடிகள் இதழ் சிரிப்புடன் இருந்த சேதுவை இமை தட்டாமல் பார்த்த கண்மணி, “என்கேஜ்மென்ட் கேன்சலானது ஏன்னு சொல்லு” என்றாள்.

“ஓகே!” என்று பேசிக் கொண்டிருந்த விடயத்திற்கு வந்தவன், “என்கேஜ்மென்ட் முடிஞ்சப்புறம் ஒரு வாரம் கழிச்சி அவங்க என்னை பார்த்துப் பேச வந்தாங்க. ‘மேரேஜ்-ல இன்ட்ரெஸ்ட் இல்லை. நீங்க உங்க வீட்ல சொல்லி மேரேஜ் ஸ்டாப் பண்ண முடியுமா?’னு கேட்டாங்க” என்று மீண்டும் தொடங்கினான்.

“பிடிக்குதான்னு கேட்டுத்தான என்கேஜ்மென்ட் பிஃக்ஸ் பண்ணியிருப்பாங்க. அப்பவே அவங்க பேரன்ட்ஸ்-கிட்ட இதைச் சொல்லியிருக்கலாமே?”

“சொல்லாம இருந்திருப்பாங்களா?”

“ஓ! அப்போ அவங்க வீட்ல ஃபோர்ஸ் பண்ணாங்களா?”

“ம்ம்ம், அவங்க ஆம்பிஷன் என்னென்னு ஃபர்ஸ்ட் வீட்லதான் சொல்லி, மேரேஜ் வேண்டாம்னு சொல்லிருக்காங்க. கெஞ்சியும் பார்த்திருக்காங்க. பட், அவங்க அப்பா கேட்கவேயில்லையாம். அதனால என்கிட்ட சொல்லி, மேரேஜ் ஸ்டாப் பண்ண நினைச்சிருக்காங்க”

“அப்படி என்ன ஆம்பிஷன்!?!”

“ரூரல் சைடுல இருக்கிற விமன்-காக சர்வீஸ் பண்ண நினைச்சாங்க”

“அதுக்கு எதுக்கு மேரேஜ் வேண்டாம்னு சொல்லணும்? மேரேஜ் பண்ணிட்டு யாரும் சாதிக்கலையா என்ன?”

“மேரேஜ் நடந்தா சாதிக்க முடியாதுனு அவங்க சொல்லவேயில்லை. மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்லை… சர்வீஸ்லதான் இன்ட்ரெஸ்ட் இருக்குனு சொன்னாங்க. ரெண்டுத்துக்கும் டிஃபரென்ஸ் இருக்கு”

“ஓகே… ஓகே!!” என்றவள், “ஆனா இப்போ சொல்றதை, என்கேஜ்மென்ட்டுக்கு முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருக்கலாமே?” என்றாள்.

“நானும் இதையே கேட்டேன். என்கேஜ்மென்ட்க்கு முன்னாடியே அவங்க வீட்ல பேசிப் பார்த்தாங்களாம். பட் அது முடியலை. என்கேஜ்மென்ட்க்கு அப்புறமும் பேரன்ட்ஸ்கிட்ட பேசி புரிய வைக்க ட்ரை பண்ணாங்களாம். ஆனா அதுவுமே முடியலைங்க போய்தான், என்கிட்டயே பேச வந்தாங்க. அவங்க சிச்சுவேஷன் அப்படி போல!”

“நீ என்ன பண்ண?”

“அவங்களோட பிளான்ல ஒரு மெச்சூரிட்டி இருந்தது. விஷன் பத்தின தெளிவு இருந்தது. பேன்சி-காக பண்ண நினைக்கலை. ஸோ நேரா அவங்க வீட்டுக்குப் போய் அவங்க அப்பாகிட்ட பேசினேன்”

ஆச்சரியமாய் அவனைப் பார்த்தவளிடம், “பேரண்ட்ஸ்-கிட்டதான பேசணும். அதான்” என்றதும், “நீ பேசினதும் ஒத்துக்கிட்டாங்களா?” என்று கேட்டாள்.

“அதெப்படி ஒத்துப்பாங்க? அவங்க அப்பா பார்வையில பொண்ணுங்களுக்கு லைஃப் கம்ப்ளீட்னா மேரேஜ், குழந்தை-னு இருக்கிறதுதான் போல. எவ்வளவு பேசியும் மனுஷன் மாறவே மாட்டேன்னு ரொம்ப அழுத்தமா இருந்தாரு. 

‘ப்யூச்சர்ல அவளுக்குப் பணத்தேவை இருந்தா, யார் ஹெல்ப் பண்ணுவா?’-னு கேட்டாரு. பினான்சியல் சப்போர்ட் இன்னொருத்தர் தரணும்-னா, எதுக்குப் படிக்க வச்சீங்கன்னு கேட்டேன். சரிதான?” என்றான்.

சரிதான் என்று தலையாட்டினாள்.

“நான் கேட்டதுக்கு அவர்கிட்ட பதில் இல்லை! ஆனா அவர் ஒன்னு கேட்டாரு”

“என்ன?”

“ம்ம், ‘கல்யாணம்தான் பொண்ணுக்குப் பாதுகாப்பு. அதை என் பொண்ணுக்கு அமைச்சி கொடுக்க வேண்டாமா?’னு கேட்டாரு. மேரேஜ் சேஃபர் பிளேஸ்-னா, ஏன் இவ்ளோ டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் இருக்குனு கேட்டேன். அதுக்கும் அவர்கிட்ட பதில் இல்ல!

ஆனா, ‘இவ்ளோ பேசற! நீ புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கோ! அதுக்கப்புறம் அவ சாதிக்கட்டும்’னு சொன்னாரு. உங்க பொண்ணு மேரேஜ் வேண்டாம்னு சொல்ல போய்த்தான் பேச வந்தேன். இல்லைனா நானே புரிஞ்சிப்பேன்னு சொன்னேன். சரிதான?”

சரிதான் என்று இம்முறையும் தலையாட்டினாள்.

“உடனே அவர் ‘ஒரு வயசுக்கப்புறம் சொந்தக்காரங்க, சுத்தியிருக்கிறவங்க, ’ஏன் மேரேஜ் பண்ணலைனு?’-ன்னு கேட்டா, என்ன பதில் சொல்ல’னு கேட்டாரு. அவர் சொல்றது நடக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு. ஸோ அவர் கேட்ட கேள்விக்கு என்கிட்ட பதிலில்லை!”

“மத்தவங்க பேச்சுக்கு தர்ற முக்கியத்தை, உங்க பொண்ணு விருப்பத்துக்கும் கொடுத்துப் பார்க்கலாமே-ன்னு நீ பேசியிருக்கணும்!”

“உன் அளவுக்குப் பேசத் தெரியாது” என்று கூற, “உனக்கா பேசத் தெரியாது?!” என்று அவள் வியப்பு காட்ட, “அதான் உன் அளவுக்கு-ன்னு சொன்னேன்ல” என்று அவன் மென்சிரிப்புடன் சொல்ல, “சரி மேல சொல்லு” என்றாள் சிறு புன்னகையுடன்.

“என்ன சொல்ல? கடைசியா அவர், ‘நான் வேற மாப்பிள்ளை பார்த்துக்கிறேன், இடத்தை காலி பண்ணு’னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டாரு”

“அதுக்கு நீ என்ன சொன்ன!?”

“அவங்க சொன்னதுக்காக நான் மேரேஜ் ஸ்டாப் பண்ணாலும், அவங்க அப்பா வேற யாரையாவது கல்யாணம் பண்ணி வைப்பாருனு புரிஞ்சது. அதான், ‘ஒரு வருசம் உங்க பொண்ணுக்கு டைம் கொடுங்க. அவங்க நினைச்சதை சாதிக்க முடியலைனா, மேரேஜ் நடக்கட்டும்’-னு சொன்னேன்”

புருவங்கள் இரண்டையும் அவள் நெற்றிவரை உயர்த்தவும், “ஹே! வேற என்ன பண்ண? அவங்களை மாதிரி சர்வீஸ் மைன்ட் எனக்கில்ல. அட்லீஸ்ட் அப்படி யோசிக்கிற ஒருத்தருக்கு ஒரு சின்ன ஹெல்ப்” என்றான் எதார்த்தத்தை மீறி!

அவனை ஆச்சரியமாக பார்த்தவள், “அவங்க அப்பா ஒத்துக்கிட்டாரா?” என்று கேட்க, “அதுக்கப்புறமும் நிறைய பேசினோம். கடைசில, ‘ஒரு வருஷம்தான்! அதுக்கு மேல டைம் கிடையாது’-ன்னு இறங்கி வந்தாரு” என்றான்.

“நல்லது” என்றவள், “அந்தப் பொண்ணு என்ன சொன்னாங்க?” என்றாள்.

“மேரேஜ் ஸ்டாப் பண்ண கேட்டா, இப்படிப் பண்ணிருக்கீங்கனு டென்சன் ஆகிட்டாங்க. ‘உங்க ஆம்பிஷனு-காகத்தான், இப்படிச் சொன்னேன். இன்ட்ரெஸ்ட் இல்லைனு சொல்ற பொண்ண, கண்டிப்பா கல்யாணம் பண்ண மாட்டேன். ஸோ ஒன் இயர்ல என்ன முடியுமோ, அதை நடத்திக்காட்டுங்க’-னு சொன்னதும்… புரிஞ்சிக்கிட்டாங்க”

சில வார்த்தைகளில் அவன் கொடுத்த அழுத்தத்தைக் கண்டு கொள்ளாதது போல கண்மணி, “உங்க வீட்ல ஒன்னும் சொல்லலையா?” என்றாள்.

“எல்லாரும் கோபப்பட்டாங்க! இந்தப் பொண்ணு வேண்டாம். வேற பொண்ணு பார்க்கிறேன்னு அம்மா சொன்னாங்க. ‘அதாமா நடக்கப் போகுது! ஆனா ஒரு வருஷம் வெயிட் பண்ணுங்க’ன்னு சொன்னேன்.

‘போடா பைத்தியக்காரா!!’னு அம்மாவும் கோபப்பட்டாங்க. ஆனா அப்புறமா புரிஞ்சிக்கிட்டாங்க” என அவனுக்கும் அவன் அம்மாவிற்குமான புரிதல் பற்றி சின்னதாய் சொன்னான்.

‘நீயா பைத்தியக்காரன்?!’ என்பது போல் அவனைப் பார்த்துக் கொண்டே, “இப்போ அந்தப் பொண்ணு?” என்றாள் கேள்வியாக!

“ரூரெல் சைடுல இருக்கிற விமென்காக ட்ரைனிங் ப்ரோக்ராம் நடத்திறாங்க. இன்ஷியலா கஷ்டப்பட்டாங்க. பட் இப்போ ஹெல்ப் தேவைப்படுற வுமனை ஐடென்டிஃபை பண்ண ரெண்டு டிஸ்ட்ரிக்ட்ல இவங்களுக்கு டீம் இருக்கு.

கஷ்டப்படுற எத்தனையோ பெண்களுக்கு ட்ரைனிங் கொடுத்து, entrepreneur மாத்தி, அவங்க லைஃப்யே மாத்தியிருக்காங்க. பட் இதெல்லாம் ஒன் இயர்ல முடியலை. இந்த இடத்துக்கு வர்றதுக்கு டூ இயர்ஸ் ஆனது.

அன்ட் அந்த ரெண்டு டிஸ்ட்ரிக்ட்ல ஒன்னுல, அவங்கள டாப் டென் ப்ராமிசிங் யங் விமன் கேட்டகரில செலக்ட் பண்ணியிருக்காங்க”

“கிரேட்! அவங்ககிட்ட பேசினேனா என்னோட விஷஸ் சொல்லிடு” என்றவள், “இப்போ பேமிலி அக்சப்ட் பண்ணாங்களா?” என்று கேட்டாள்.

“பின்ன!? இப்போ இருக்குற பொசிஷன் பார்த்து, அவங்க அம்மாக்கு ரொம்ப சந்தோசம்! பெருமையா நினைக்கிறாங்க. அவங்க அப்பாவும் ஹேப்பிதான். பட் அடிக்கடி ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாரு. ஓகேதான்! இந்தளவுக்கு மாறினதே பெரிய விஷயம்” என்று முடித்தான்.

பேசி முடித்தவனும்… பேச்சைக் கேட்டிருந்தவளும் சற்று நேரத்திற்கு எதுவம் பேசாமல் இருந்தனர்!

அதன்பின், “கண்மணி” என்று சேது அழைக்க, ‘என்ன?!’ என்பது போல் அவள் பார்க்க, “ஒரு முக்கியமான விஷயம். ம்ம்… உன்கிட்ட இதைச் சொல்லிடுன்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு” என்றான் அழகாக!

‘அப்படி என்ன முக்கியம்?’ என அலட்டிக் கொள்ளாமல் பார்த்தவளிடம், “ஒன் இயர்க்கு அப்புறமா, அவங்களே அவங்க அப்பாகிட்ட பேசி என்கேஜ்மென்ட் கேன்சல் பண்ணாங்க” என்றான் அவசியமாக!

‘இதிலென்ன முக்கியம் இருக்கிறது?’ என காட்டிக் கொண்டவளிடம், “அன்ட் இன்னொரு விஷயமும் இருக்கு. ‘போடா பைத்தியக்காரா’-னு சொன்னவங்க, இப்போ எனக்குப் பொண்ணு பார்க்கிறாங்க” என்றான் அடக்கமாக!

‘நீ… ஷார்ட் பிலிம் டைரக்டரா, டயலாக் ரைட்டரா?’ என்று மனதிற்குள் அவனை மெச்சிக் கொண்டவளிடம், “கண்மணி… நான் என்ன சொல்ல வர்றேனா, பாசம் காட்ட கூடாதானு நீ கேட்டதுல தப்பே கிடையாது. அதுக்காகெல்லாம் ஸாரி சொல்ல வேண்டாம்” என்றான் சேது அர்த்தமாக!

*******************************

அப்பாவின் குட்டி இளவரசியாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்

லக்ஷ்மி கூறிய அனைத்தையும்… குறிப்பாக ‘தனிமை’ என்ற வார்த்தையைக் கேட்டபின்பு அவருக்காக உண்டான கவலையில், “உங்களுக்கு ரிலேட்டிவ்ஸ்-னு யாரும் இல்லையா ஆண்ட்டி?” என்று கேட்டதும், “இருக்கிறாங்களே மினி! ஏன் கேட்கிற?” என்றார் புரியாமல்!

“ஆண்ட்டி, இப்படித் தனியா இருக்காம ரிலேட்டிவ்ஸ் யார் வீட்லயாவது போய் இருக்கலாமே?” என அவருக்கான அக்கறையில் யோசனை சொல்ல, ஒரு சிறு முறுவலுடன், “அதெப்படி சரியா வரும் மினி? எத்தனை நாள் இருக்க முடியும் சொல்லு!?” என்று யதார்த்தத்தைப் பேசினார்.

அதன்பின் எதுவும் பேசாமல் வருத்தமாக இருந்தவளைப் பார்த்த லக்ஷ்மிக்கு, தன்னைப் பற்றி சொல்லியிருக்கவே கூடாதோ என தோன்றவும், “இங்க பாரு மினி, அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்கதான் பார்த்துக்கணும்” என அவர் அனுபவத்தைச் சொல்லி, அவளை ஆறுதல் படுத்தப் பார்த்தார்.

அவளோ ஆறுதல் அடையாமல், என்றோ லக்ஷ்மியைக் காயப்படுத்தியவர்கள் மீதெல்லாம் கோபமே வர, “உங்களுக்கு இவ்ளோ நடந்திருக்குது. உங்க அப்பா என்ன ஆண்ட்டி பண்ணாங்க? உங்களை அப்படியே விட்டுட்டாங்களா?” என அவர் தந்தையைக் குறை கூறுவது போல் கேள்வி கேட்டாள்.

அவள் கேட்டதில் உடன்பாடில்லாதது போல் முகம் சுருக்கிய லக்ஷ்மி, “மினி! உனக்கு உன் அப்பா எப்படியோ, அப்படித்தான் எனக்கு என் அப்பா! சரியா? ஸோ அவரைப் பத்தி எதும் பேசாத!” என ‘கனிவோடு ஓர் கட்டளை’ என்பது போன்று சொன்னார்.

ஓர் நிமிடம் அமைதியாக இருந்தவள், “சாரி…” என மெதுவாகச் சொல்லிவிட்டு, ஏதோ முணுமுணுக்க, “கேட்கலை மினி, என்ன சொன்ன?” என்று புருவத்தைச் சுருக்கி அவர் கேட்கவும், “அது, என்னை மாதிரியே நீங்களும் டாடி’ஸ் லிட்டில் பிரின்சஸ்-னு சொன்னேன்” என்று குனிந்து கொண்டே சொன்னாள்.

மேலும் மினி நிமிர்ந்து பார்த்து, “நீங்க… அந்த ஜெனரேஷன் பிரின்சஸ். நான், இந்த ஜெனரேஷன் லிட்டில் பிரின்சஸ்” என்றதும், பேசிக் கொண்டிருந்ததை மறந்து சட்டென்று லக்ஷ்மிக்கு புன்னகை வந்தது.

ஆனால் அது நிலைத்தது சொற்ப நொடிகளே!!

அதன்பிறகு அப்பாவின் அன்பு, ஆறுதல் பார்வைகள், ஆதரவு வார்த்தைகள், அவர் தோள் சாய்ந்து அழுத தருணங்கள் என அனைத்தையும் நினைத்துப் பார்த்தவருக்குப் புன்னகை மறைந்திருந்தது.

சங்கடமான நினைவுகள் மட்டுமா!? இல்லையே!! அப்பாவின் அருகாமையில் எத்தனை எத்தனை சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கிறது. அதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் முகத்தில் ஒரு சிறு முறுவல் வந்தது!

திரும்ப நிகழப் போவதேயில்லை… நினைவுகள் மட்டுமே என்ற எண்ணம் வர, அந்த முறுவலும் மறைந்து போனது!

நொடிக்கு நொடி அவர் முக மாற்றத்தைப் பார்த்திருந்த மினி, “ஏன் ஆண்ட்டி, உங்க அப்பாதான் சப்போர்ட்டா இருந்தாங்களா?” என மெதுவாகக் கேட்டாள்.

“ம்ம்… அது மட்டுமில்லை. சிலநேரம் ‘என் பொண்ண எதுவும் பேசாதீங்க’-னு சண்டையும் போட்டுருக்காங்க. அது என் புகுந்த வீட்டு ஆளுங்கனாலும் சரி, எங்க சொந்தக்காரங்கனாலும் சரி!

டிவோர்ஸ்னு திரும்பி வந்தப்புறம் எனக்கு ஆதரவா இருந்து, ஆறுதல் சொல்லி, தைரியம் தந்து அதிலருந்து என்னை வெளிய கொண்டு வந்தது அப்பாதான்!

அப்புறமா… மாஸ்டர்’ஸ் டிகிரி பண்ண வச்சாங்க. அதனாலதான் டியூட்ட-ரா காலேஜ்ல ஜாயின் பண்ணி… பிஹெச்டி முடிச்சி… லெக்ச்சரர்… ப்ரோபோஸர், பிரின்சிபல்-னு ப்ரோமோட் ஆகி இப்போ அகடமி வரைக்கும் வந்திருக்கேன்” என்று பேசி முடித்தார்.

அப்பா பற்றிய பேச்சுகள் என்பதால்… சில இடங்களில் மெனக்கெடல் எடுத்து உணர்ச்சிவசப்படாமல் பார்த்துக் கொண்டார்.

அடுத்து என்ன பேச? எதைப் பேச? என தெரியாமல் அவர் முகத்தையே மினி பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னமும் அப்பாவின் நினைவுகளிலே இருந்த லக்ஷ்மி, அவளைக் கவனிக்காமல் மீண்டும் பேச ஆரம்பித்தார். 

“அகடமி அட்மினிஸ்ட்ரேஷன் அவுட்-அன்ட்-அவுட் நான் பார்த்துக்கிட்டாலும், எனக்கு மாரல் சப்போர்ட் அப்பாதான் தந்தாங்க! ஸோ அப்பா இல்லைனதும் நிறைய ஸ்ட்ரகில் பண்ணேன். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா என்னை நானே தேத்திக்கிட்டு… இப்போ லைஃப் போய்க்கிட்டு இருக்கு!

பட் இப்பகூட சிலநேரம் எதையாவது நினைச்சி ஸ்ட்ரக்காகி நின்னுடுவேன். அப்பெல்லாம், ‘எழுந்து, ஓடு லக்ஷ்மி’-ன்னு சொல்ற மாதிரி ஏதாவது நடக்கும். எனெக்கென்னமோ அது அப்பாதான் நடத்தற மாதிரி இருக்கும்” என்று தன் உள்ளுணர்வுகளைச் சிலாகித்துப் பேசினார்.

அவர் பேசிய விதம்… பேசிய விடயம் ஈர்த்துப் போய்விட, “க்யூட்டான பான்டிங் ஆண்ட்டி” என்று மினி ரசித்துச் சொன்னதும், உணர்வுகளின் பிடியில் இருந்து மெது மெதுவாக தன்னை மீட்டு வந்து கொண்டிருந்தவர், அவளது பேச்சிற்கு எதிர்வினையாக உதடுகளில் சிறு முறுவலுடன், “நீயும்… உன் அப்பாவும்கூட இப்படித்தான?” என்றார்.

“ஆமா ஆண்ட்டி” என்று ஆமோதித்தவள், “எனக்கு… என் அப்பாவை ரொம்ப பிடிக்கும். பெஸ்ட் டாடி இன் தெ ஹோல் வொய்டு வேல்டு! என் அப்பா மாதிரி யாருமே வர முடியாது. ஐ லவ் ஹிம் ஸோ மச்!” என அப்பா மீதிருந்த பாசத்தில் பேசிக் கொண்டே இருந்தாள்.  

திடீரென்று என்ன நினைத்தாளோ, “டச்வுட்!!” என்று கையைத் தரையில் தட்டி திருஷ்டி கழித்ததும்… முகத்தின் முறுவல் மென்னகையாக மாறிவிட, அவள் செயலைக் கண்டு புருவம் உயர்த்தி ஆச்சரியம் காட்டினார் லக்ஷ்மி.

அதன்பின் சில வினாடிகள் இருவரிடமுமே ஓர் பேரமைதி நிலவியது!

மீண்டும் மினிதான், “ஆண்ட்டி நீங்க டிவோர்ஸ் பண்ணாம, ஒரு பேபி அடாப்ட் பண்ணியிருக்கலாமே?” என அவர் தனிமையை விலக்க இருந்த வாய்ப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.

இன்னமும் இதைப் பற்றியே பேச வேண்டுமா என்ற சலிப்பு வர, “என்ன பேசற நீ? அது நான் மட்டும் முடிவு பண்ற விஷயமா? அன்ட், வாரிசுன்னு வர்றப்போ இந்த வாய்ப்பு வரவேயில்லை” என்றார் லக்ஷ்மி.

‘கேட்கலாமா? வேண்டாமா?’ என்ற ஒரு தயக்கத்துடனே, “ஆண்ட்டி, ஏன் உங்க அப்பா… உங்களுக்கு ஒரு ரீமேரேஜ் பண்ணி வைக்கலை?” என்று அடுத்திருந்த வாய்ப்பைப் பற்றிக் கேட்டாள்.

“அந்த தாட் எனக்கு வந்தாதான, அப்பா அதைப்பத்தி யோசிப்பாங்க! எனக்கு வரலைன்னு சொல்றதைவிட, அதுல இஷ்டமில்லை”

அடுத்து அவள் ஏதோ கேட்க வரவும்… லக்ஷ்மிக்கு உணர்வுகளுக்கு உள்ளேயே உழல்வது போல இருந்ததால், “இந்தப் பேச்செல்லாம் போதுமே மினி!?” என்று கெஞ்சியதும், அதற்குமேல் அவள் எதுவும் கேட்கவில்லை.

வயதின் காரணமாக வெகுநேரம் அமர்ந்திருந்தது கால்முட்டிக்கு வலியைத் தரவும் அவளது விரல்களைப் பிடித்திருந்த கையைத் தளர்த்திவிட்டு, “மினி, கொஞ்ச எந்திரிச்சி ரிலாக்ஸ் பண்ணிக்கிறேனே?” என்றதும், கோர்த்திருந்த அவள் கையை எடுத்துக் கொள்ள, லக்ஷ்மி எழுந்து கொண்டார்.

எழுந்தவர்… நேராக ஒத்திகை அறைக்குச் சென்றார். அதுவரை அமைதியாக இருந்தவன், அவரைப் பார்த்ததுமே கோபத்தில் கண்டபடி திட்டித் தீர்த்தான். அவனைக் கண்டுகொள்ளாமல் கட்டுகளின் முடிச்சிகளை ஒவ்வொன்றாக சோதித்துவிட்டுத் திரும்பினார்.

வந்தவர் உட்காராமல் காட்சி படுத்தப்பட்டிருந்த துணிகளைப் பார்த்தபடியே நடந்து கொண்டே இருந்தார். அப்படியே மினியையும் பார்த்தார். அவள் ஏதோ யோசிப்பது போல் இருந்தது.

‘என்ன- ஏது?’ என்று அவளை எதுவும் கேட்கவில்லை! ஆனால், ‘அப்படி என்ன யோசிக்கிறாள்?’ என்ற கேள்வி எழுந்ததில், சிறுசிறு நெற்றி முடிச்சுகளுடன் மீண்டும் லக்ஷ்மி நடக்க ஆரம்பித்தார்!!

லக்ஷ்மிக்கான கவலை… அக்கறை… வருத்தம் இந்த வரிசையில், இவ்வளவு நேரத்திற்குப் பின், அவர்மீது ஒரு சிறு தனிப்பற்று உருவாகியிருப்பது போல் மினி உணர்ந்தாள்!!

***********************************


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!