Neer Parukum Thagangal 2.1

NeerPArukum 1-76632c00

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் – 2

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

‘ஏன் இந்தப் பார்வை?’ என்ற எரிச்சலுடன் எழுந்துவிட்ட கண்மணி, தன்னை பார்த்துக் கொண்டிருப்பவன் முன்னே சென்று, கனல் போன்று அவனைப் பொசுக்கத் துடிக்கும் தன் கருவிழிகளை விரித்து நின்றாள்.

சட்டென சேதுவின் பார்வை மாறியிருந்தது. அந்த மாற்றம்… எதற்காக இவள் இப்படி வந்து நிற்கிறாள்? என்று புரியவில்லை என்பது போல் இருந்தது!

அவளோ எரிதழல் போல் எரிக்கும் பார்வையுடன், “பொறுக்கியாடா நீ?” என்று அழுத்தமாக, ஆவேசமாக, ஆத்திரமாக கேட்டதில் கண்மணியின் நுனிமூக்கு அக்கினி குழம்பாய் சிவந்து போனது!

இதைக் கேட்டவுடனேயே சேதுவின் பார்வை மாறியது! அந்த மாற்றம்… அவள் வார்த்தை பிரயோகம் அவனை சினமூட்டியிருப்பதைப் பிரதிபலித்தது!!

கண்மணி சத்தமாக கேட்டிருந்ததால், அவன் நின்ற இடத்திற்கு அருகிலிருந்த கடையின் வேலை ஆட்கள், அங்கு ஆர்டர் செய்ய வந்திருந்தவர்கள்… இவர்கள் இருவரையும் நோக்கி ஆச்சரியப் பார்வையை வீசிக் கொண்டிருந்தனர்.

யாரையும் பொருட்படுத்தாமல், “எதுக்குடா இப்படிப் பார்த்துக்கிட்டு நிக்கிற? ஆங்! எதுக்கு?!?” என கண்மணி எரிச்சலுடன் கேட்கும் பொழுதே, அங்கே வந்த செக்யூரிட்டி பெண்மணி, “மேடம், என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.

சுட்டெரிக்கும் தன் பார்வையை அவன் மீது வைத்தபடி, “இதோ நிற்கிறானே! இவன் பார்க்கிற பார்வையே சரியில்லை!! மோசமா பார்த்துக்கிட்டு நிக்கிறான்!” என்று அவரிடம் கோபமாக முறையிட்டதும், அவர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

சேதுவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து ஏதோ பேசத் தொடங்குகையிலே, “அந்தப் பக்கம் போய் நில்லுங்க” என சேதுவைச் சொன்னவர், “மேடம், நீங்க போங்க” என்று கண்மணியைச் சொன்னார்.

செக்யூரிட்டி பெண்மணி வந்ததும், அருகிலிருந்து ஆட்கள் மட்டுமின்றி, ‘என்ன பிரச்சனையோ?’ என்று மற்றவர்களும் பார்ப்பதைக் கண்ட சேது… கண்மணி பேச்சினால் அவனுக்குள் பெருக்கெடுத்த கோபத்தை உடல்மொழியினால் மட்டும் காட்டிவிட்டு, அங்கிருந்து சென்றான்.

இன்னும் கோபம் குறையாமல் நிற்பவளைப் பார்த்து, “அந்த தம்பி போயாச்சு. நீங்களும் போங்க மேடம்” என செக்யூரிட்டி பெண்மணி சொன்னதும், அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டாள்.

இதயம் படபடவென்று அடித்தது. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து அதனை சகஜ நிலைக்கு கொண்டு வந்தவள், ஓரிரு நொடிகள் கண்களை இறுக்கமாக மூடி மனதை சமநிலைக்குக் கொண்டு வந்தாள்.

வாங்கி வைத்திருந்த பர்கரை சாப்பிட மனமே இல்லை. தலை வேறு வலிப்பது போலிருந்ததால், எழுந்து சென்று தேநீர் ஒன்றை வாங்கி வந்தாள். கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக் கொண்டே சுற்றிப் பார்த்தாள்.

அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவன் இல்லை என்றதும், ‘வண்டி ஓட்டிட்டு போகணும் கண்மணி. ஸோ சாப்பிட்டு முடி’ என தனக்குத் தானே அறிவுரை சொல்லிக் கொண்டு பர்கரை சாப்பிட ஆரம்பித்தாள்!

************************

அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய – லக்ஷ்மி கேசவன் & மினி ஜோசப்

அம்மா பற்றி லக்ஷ்மி கேட்டதும்… மினியின் சிரிப்பு மறைந்து, “அம்மா” என்று மெதுவாகச் சொல்லி ஓரிரு நொடிகள் அமைதியாகவே இருந்தவள், “அம்மா, இப்போ இல்லை ஆண்ட்டி. எனக்கு அப்பா மட்டும்தான்” என்று ஒரு சிறு முக வாட்டத்தோடு சொல்லிவிட்டுச் சாப்பிடாமலே இருந்தாள்.

இப்படியென எதிர்பார்க்கவில்லை என்பதால், “சாரி” என்று கண்கள் சுருக்கிச் சொன்ன லக்ஷ்மி, “சீஸ் தோசை உன்னோட ஃபேவரைட்தான? சாப்பிடு” என்று சிறுபிள்ளைக்குச் சொல்வது போன்று எடுத்துக் கூறிய பிறகே மினி மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள்.

அதன்பின்னர் லக்ஷ்மி செய்தது ஒன்றே ஒன்று மட்டும்தான்! அது… கன்னத்தில் கைவைத்து மினியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதுதான்!

தோசையை மென்று கொண்டே, “நீங்க… விமன்ஸ் டே ஸ்பீச் அட்டன் பண்ண வந்தீங்களா ஆண்ட்டி?” என்று கேட்டதும், அவளை ரசித்துப் பார்த்திருந்ததில் லக்ஷ்மி பதில் சொல்லாமல் மெய்மறந்து இருந்தார்.

என்ன காரணமென்று புரியவில்லை! சற்று நேரத்திற்கு முன்தான் மினியைச் சந்தித்திருந்தாலும்… அவள் மீது ஒரு சிறு பற்று, பிடித்தம், ஈடுபாடு லக்ஷ்மிக்கு ஏற்பட்டிருந்தது!!

ஏன் இப்படியென தெரியவில்லை? ஆனால் அவளுடன் பேச வேண்டுமென்று, அவள் பேச்சைக் கேட்க வேண்டுமென்று சிறு ஆசை உண்டாகியிருந்தது!

இதனால்தான் தன்னை மறந்து, பதில் சொல்ல மறந்து இருக்கிறார்!

பேசாமல் இருந்தவர் முகத்தின் முன் கையசைத்து, “ஆண்ட்டி” என அழைத்து மீண்டும் கேள்வி கேட்டதும், “ம்ம்ம், அதுக்காகத்தான் வந்தேன். ரொம்ப நல்ல ஸ்பீச்” என்றார் விரும்பி அவள் சாப்பிடும் விதத்தைப் பார்த்தபடியே!

மேலும் அவள் சகஜமாகிவிட்டாளென தெரிந்ததால், “மினி… அந்தப் பையன் பலோவ் பண்ணி வந்ததுமே ஏன் பயந்த? அப்படிப் பயப்படக் கூடாது. அந்தப் பொண்ணு பேசினது மாதிரி தைரியமா பேசிடணும். சரியா?” என அவளுக்கு ஒரு நல்லதென்று நினைத்துச் சொன்னார்.

அதுவரை அவள் முகத்திலிருந்த இலகுத் தன்மை மறைந்து, “என்ன… கம்பேர் பண்றீங்களா? எனக்கு கம்பேர் பண்ணா பிடிக்காது” என ஒருமாதிரி குரலில் பேசியதும், “கம்பேரிஷன் இல்லை. அது உனக்கு… உனக்கு” என யோசிக்கும் போதே, “அட்வைஸ்-ன்னு வச்சிக்கலாமா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம், உனக்கு ஒரு நல்லதுனு” என்று லக்ஷ்மி சொல்லுகையிலே, “அட்வைஸ்! நினைச்சேன்!! இது எனக்கு கிடைக்கும்னு?” என்று தலையைப் பக்கவாட்டில் திருப்பி மினி முணுமுணுக்க, “எதுனாலும் நேருக்கு நேர முகத்தைப் பார்த்து சொல்லணும்!?” என்று அவர் அழுத்தமாகச் சொன்னார்.

‘எனக்கென்ன பயமா?’ என்பது போல் அவர் முகத்தைப் பார்த்து, “யாருன்னே தெரியாத பொண்ணுக்கு… நீங்க ஏன் அட்வைஸ் பண்றீங்க? அதெல்லாம் என் அப்பா பார்த்துப்பாங்க” என அவளும் அழுத்தமாக சொல்லிவிட்டு, “இங்கயே இப்படினா, வீட்ல எவ்ளோ அட்வைஸ் பண்ணுவீங்க? உங்க கிட்ஸ் ரொம்பவே பாவம்!!” என்று அனுதாபப்பட்டாள்.

சட்டென லக்ஷ்மியின் முகம் மாறி, சற்றே உணர்ச்சிவசப்பட்டார்! மறந்திருந்த மனக்காயம் எல்லாம் மறுபடி ஏற்பட்டது போல் மனதில் ஒரு வலி!!

ஏதோதோ உணர்வுகளின் பிடியிலே இருந்த லக்ஷ்மி, “ஆக்சுவலா டேஸ்ட்டியா சமைக்கிறது, சப்ஜெக்ட் டீச் பண்றதோட சேர்த்து தைரியமா… மரியாதையா பேச உன் அப்பாதான் கத்துக் கொடுத்திருக்கணும்” என்று அவரது வலியை வார்த்தைகளில் காட்டினார்.

“அப்பா சொல்லிக் கொடுக்கலைனு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டு பட்டென எழுந்து, “இதுக்கு மேல ஒரு வார்த்தை அப்பாவைப் பத்தி பேசாதீங்க! பேசவே பேசாதீங்க!” என்று கோபத்துடன் சொல்லும் பொழுது அவள் கண்கள் கலங்கியிருந்தது, குரல் நடுங்கியது.

‘ஐயோ! அவள் வயதென்ன? என் வயதென்ன? அவள்தான் பேசினாள் என்றால், நானும் அப்படியே பேச வேண்டுமா?’ என்று தன்னை நிந்தித்துக் கொண்டவர், எதையாவது சொல்லி அவளைச் சமாதனப்படுத்திட நினைத்து, “மினி… நான் சொல்றதை…” என்று ஆரம்பித்தார்.

அதற்குள், “பேசாதீங்க! உங்ககூட பேசவே எனக்குப் பிடிக்கலை. என் அப்பா பத்தி யாரும் குறையா சொன்னா எனக்குப் பிடிக்காது” என்று கடுமையாகச் சொல்லிக்கொண்டே பையிலிருந்து இருநூறு ரூபாயை எடுத்து மேசை மேல் வைத்து, “சீஸ் தோசைக்கு” என்று சொல்லிப் போய்விட்டாள்.

அவளுடன் நிரம்ப நேரம் பேசிக் கொண்டிருக்க நினைத்து இப்படி ஆயிற்றே? என வலியெடுத்த மனம் சோர்ந்து போனது. ‘என்ன செய்ய?’ என யோசிக்கும் பொழுதே… மினியைப் பின் தொடர்ந்து வந்த அந்தப் பையன், அவள் சென்ற பக்கமாகப் போவதைப் பார்த்தார்.

உடனடியாக… தன்னைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு, ‘இன்னும் இந்தப் பையன் போகவில்லையா? இவளாவது வீட்டுக்குப் போயிருப்பாளா? இல்லை, இங்கேயேதான் இருக்கின்றாளா?’ என்ற கேள்விகள் வந்ததுமே பதற்றத்துடன் எழுந்து மினியைத் தேடிச் சென்றார்.

பத்து நிமிட தேடலுக்குப் பின், அந்தத் தளத்திலுள்ள துணிக் கடையினுள் மினி நிற்பதைப் பார்த்தார். கூடவே, அந்தக் கடையின் கண்ணாடிக் கதவுகளுக்கு வெளிப்பக்கமாக அந்தப் பையன் நிற்பதையும் பார்த்தார்.

‘இவன் ஏன் இன்னமும் மினியைப் பின் தொடர்கிறான்?’ என அவன் மீது வந்த சந்தேகத்தால், ஏதாவது சொல்லி அவனை எச்சரிக்கலாமென்று நினைத்தார். அவளுக்காக லக்ஷ்மி அதைச் செய்யவும் செய்தார்.

அவனும் திரும்ப ஏதுமே பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அடுத்து மினியைப் பார்த்தார். ‘இவள் ஏன் வீட்டிற்குப் போகாமல்… இங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கிறாள்?’ என்ற எரிச்சலுடன் விறுவிறுவென்று அந்தக் கடைக்குள் சென்றவர், அலைபேசி பேச்சிலே கவனத்தை வைத்திருந்தவளின் பக்கமாகச் சென்று நின்று கொண்டார்.

நான்கைந்து ஆடைகளை கையில் வைத்துக் கொண்டே, “ப்பா… மத்தியானம் சாப்பிட்டீங்களா?” என தொழில் ரீதியாக வெளியூர் சென்றிருந்த அப்பாவிடம் மினி கேட்க, “ம்ம், அப்போவே” என்றவர், “நீ சாப்பிட்டியாடா?” என்றார்.

“பருப்பு… ரசம்… உருளைக் கிழங்கு வறுவல்… செம்ம காம்போ! எப்பவும் போல சூப்பரா செஞ்சிருந்தீங்க. நானும் நல்லா சாப்பிட்டேன்-ப்பா” என மினி கூறிய விதத்தைக் கேட்டு மறுமுனையிலிருந்த ஜோசப் மனம் நிறைந்து போனார்.

ஜோசப்… மினியின் தந்தை! எப்பவும் இப்படித்தான்! மகளது சின்னச் சின்னச் சிரிப்பிலே பெரிய பெரிய பூரிப்பு அடைந்துவிடுவார்!

சமையலுக்கென ஒருவரை நியமிக்கும் அளவிற்கு வசதிகள் வந்திருந்தாலும், மகளுக்குத் தன் கையாலே சமைத்து தந்தால்தான் அவரது மனம் நிறைவாய் உணரும்!

அந்த ஒன்று மட்டுமல்ல, மகளுக்கென்று ஒவ்வொரு விடயத்தையும் பார்த்துப் பார்த்து செய்வதில்தான் அவர் வாழ்வு, மகிழ்வு அடங்கியிருக்கிறது!

மனைவி மரியா மறைவிற்குப் பின்… ஜோசப்பின் வாழ்வை வாடிப் போகாமல் வைத்திருப்பது அவரது செல்ல மகள்தான்! மகள், கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அவருக்கு இன்னும் அவள் கைக்குழந்தையே!

மகளுக்குச் சின்னதாய் ஒன்றென்றாலும்… அவர் மனமானது படாதபாடுபடும்! சன்னமாய் துடிதுடித்துவிடும்! சக்தியில்லாமல் போய்விடும்! சங்கடங்களால் சூழ்ந்துவிடும்! சுருக்கமாக அவருக்கு மகள்தான் எல்லாமும்!

இன்னும் சுருக்கமாக, ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், மினிக்கு அவர் ஒரு தாயுமானவர்!!

அந்தத் தாயுமானவரிடம், “ப்பா, நீங்க எப்போ வருவீங்க?” என்று செல்லமாகக் கேட்க, “பதினோரு மணியாகும் போல-டா. நீ டின்னர் முடிச்சிட்டு, டோர் லாக் பண்ணிட்டுத் தூங்கிடணும். அப்பா வந்தப்புறம் கால் பண்ணுவேன். அப்போ டோர் ஓபன் பண்ணா போதும். சரியா?” என, தான் வரும்வரைக்கும் மகளைப் பாதுகாப்பாய் இருக்கச் சொன்னார்.

“ம்ம்ம்… சரிப்பா” என சொல்லும் பொழுதே மினி லக்ஷ்மியை பார்த்துவிட்டாள்.

உடனே, “அப்பா, இங்க லக்ஷ்மி-ன்னு ஒருத்தங்க! இன்னோருத்தரோட என்னை கம்பேர் பண்ணாங்க. அட்வைஸ் வேற பண்ணாங்க. இதெல்லாம் உன் அப்பா சொல்லித் தந்திருக்கணும்னு சொன்னாங்க-ப்பா” என்று சற்றுமுன் நடந்ததை அச்சுப்பிசகாமல் தந்தையிடம் ஒப்பித்தாள்.

“யாரு மினி அது… லக்ஷ்மி?” என்று சிரித்துக் கொண்டே கேட்டவர், “ஆனா ஏன் அப்படிச் சொல்லணும்? எதெல்லாம் சொல்லித் தரணும்?” என்றும் கேட்டதற்கு, “ஏன் சொன்னாங்கனா…” என்று ஒரு வேகத்தில் தொடங்கியவள், அப்படியே சொல்லாமல் நிறுத்திவிட்டாள்!

பயணத்தின் போது அப்பாவிற்கு ஒரு சிறு பதற்றம் வந்தாலும், அவருக்கு அது பாதுகாப்பாய் இருக்காதென மினி நினைத்ததால், இந்தப் பையன் விவகாரம் குறித்து இப்போது சொல்ல வேண்டாமென்று பேச்சை நிறுத்தியிருந்தாள்!!

பேசுவதைத் தொடர்ந்தவள், “ப்பா… நீங்க வீட்டுக்கு வந்தப்புறமா சொல்றேன். இப்ப ட்ரையல் பார்க்கப் போறேன். பைப்பா” என்று மினி முடிக்க, “பைம்மா. வீட்டுக்குப் போயிட்டு கால் பண்ணனும்” என்று அவர் சொல்ல, “சரிப்பா” என அழைப்பைத் துண்டித்தாள்.

லக்ஷ்மியைப் பார்த்தவாறே அலைபேசியை தன் பேக்பேக்கில் வைத்துவிட்டு, ஒத்திகை அறை நோக்கிச் சென்றாள். ‘லேட் பண்ணாம, சீக்கிரமா வீட்டுக்குப் போ மினி?’ என அறிவுரை வழங்க அவருக்குத் தோன்றியது. ஆனால் மீண்டும் அவளிடம் பேச்சாகிப் போகுமோவென, அதைச் செய்யவில்லை.

மேலும், எச்சரித்த பின்னும் அந்தப் பையன் திரும்ப வந்து நிற்கிறானா என்று வெளியே பார்த்தார். அவன் அங்கில்லை! ‘சரி கிளம்பலாம்’ என நினைத்தார். ஆனால் அவளை அப்படியே விட்டுப் போக சிறிதும் மனமில்லை!

ஆதலால், மினி மீது உண்டான பற்றின் காரணமாக… அவளுக்காக… அவள் பாதுகாப்பிற்காக… லக்ஷ்மி அங்கேயே நின்று கொண்டார்!!

*************************