Neer Parukum Thagangal 2.2

NeerPArukum 1-9ddabc01

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 2.2

‘மனிதநேயம் பேசும்’ மஹிமா & கார்த்திகேயன்

கார்த்தி பேசாமல் இருப்பதைப் பார்த்த மஹிமா, “சாரி கார்த்தி. ரியலி சாரி” என்று மன்னிப்பு கேட்ட பிறகும் அவன் வாய் திறக்கவில்லை.

‘ரொம்ப கோபம் போல’ என மனம் வாடியவள், “கார்த்தி என் சிச்சுவேஷனை சொன்னா” என அவள் சொல்லி முடிக்கும் முன்னே, “சொல்லவே வேண்டாம்! யாருக்காவது ஹெல்ப் பண்ணிட்டு வந்திருப்ப! அதான?!” என்றான்.

அவன் சொல்வது சரியே என்றாலும், அதைச் சொன்ன விதமானது அவளைக் கோபப்படுத்தியதால், “இப்படிப் பேசாத! ஹெல்ப் பண்றது ஒன்னும் தப்பான விஷயமில்லை” என அழுத்திச் சொன்னவள், “லேட்டா வந்ததுக்குத்தான் சாரி கேட்கிறேன்ல!?” என்றும் சொல்லிப் பார்த்தாள்.

“நானும் தப்புனு சொல்லலை” என்றவன், “பட் இன்னைக்கு மட்டுமா கேட்கிற? எப்பவுமே இதேதான…? ஒரு மனுஷன் எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்றது சொல்லு!?” என்றான் அலுத்துப்போய்!

“எப்பவும் கிடையாது. எப்பாவதுதான்” என்றவள், “இதுதான் நான். என்னைப் புரிஞ்சிக்கோ கார்த்தி” என்றதும், “இத நீ சொல்லவே வேண்டாம். உன்னைப் புரிஞ்சிக்கிறேன். பட் உன்னோட ப்ரையாரிட்டி நான் கிடையாது. அதையும் சொல்லிக்கிறேன்” என்றான்.

“அப்படி ஒன்னும் இல்லை?” என மறுத்தவளுக்கு, இந்த பேச்சுகள் போதுமென தோன்ற, மேசையிலிருந்த பரிசுப்பொருளைப் பார்த்து, “இதென்ன கார்த்தி…? விமன்ஸ் டே கிஃப்ட்டா?” என்றாள் ஆர்வமாக.

“ஏன் கேட்க மாட்ட, இன்னைக்கு நம்ம என்கேஜ்மென்ட் நடந்து நூறாவது நாள்! உனக்கு கிஃப்ட் கொடுத்து, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க நினைச்சி வர சொன்னா… லேட்டா வந்து நிக்கிற? இதுல, எதுக்கு வர சொன்னேன்னு ரீசனே தெரியலை” என்று குறைபட்டுக் கொண்டான்.

என்கேஜ்மென்ட்? ஆம், நிச்சயம்தான்! இவர்கள்… பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் திருமண நாளை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள்.

இவர்களது குடும்பத்தினர் தமிழகத்தின் மற்றொரு நகரத்தில் வசிக்கின்றனர். இருவரும் இந்த நகரில் வேலை பார்க்கின்றனர். வேலைப்பளுவிற்கு இடையே நேரமிருந்தால் இதுபோல் சந்தித்துக் கொள்வார்கள்.

‘என்கேஜ்மென்ட்’ என்பதனால் வந்த புன்னகையுடன், “அதுக்கென்ன கார்த்தி? இன்னும் எவ்ளோ நேரமிருக்கு?! நிறைய பேசலாம்” என்று கூறி, கைப்பையை எடுத்தாள்.

காத்திருப்பினால் உண்டான கோபத்தில், “பேசணும்ங்கிற ஆசையவே போக வச்சிட்ட… நீ” என்று நொந்து கொள்ள, சட்டென புன்னகை மறைந்து மஹிமா அமைதியாகிவிட்டாள்.

ஓரிரு நொடிகள் மௌனம் நிலவியது!

மஹிமா முகத்தை கார்த்தி பார்த்தான். ஒருமாதிரி இருந்தாள். காக்க வைத்த கோபம் இருந்தாலும், அவளை அப்படிப் பார்க்க கஷ்டமாக இருந்தது. ‘இன்று எதற்கு இப்படிப்பட்ட பேச்சுகள்?’ என தோன்ற, “ம்ம், கிஃப்ட்” என்று, வண்ணக் காகிதம் சுற்றப்பட்ட பரிசை அவள் பக்கமாக நகர்த்தினான்.

தன்னருகே அதை இழுத்தவள், “டயர்டா இருக்கு. லஞ்ச் சாப்பிடலை. ரொம்ப பசிக்குது கார்த்தி. ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றியா?” என்று கேட்டதுமே, ‘உண்ண கூட மறந்து என்ன உதவியோ?’ என்று அதற்கும் கோபம் வந்தது.

இருந்தாலும், “என்ன வேணும்னு சொல்லு?” என்றான் சாதரணமாக!

“பிளைன் தோசை” என்றதும், கார்த்தி எழுந்து சென்றான். அவனது மனநிலை மாறியது போல் தெரியவில்லை. இருந்தாலும், ‘சரியாயிடுவான்’ என பரிசைப் பார்க்கும் ஆவலுடன் பளபளக்கும் வண்ணத்தாளைப் பிரித்தாள்.

உள்ளே ஒரு அழகான ‘ஹேன்ட்பேக்’ இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை கையில் எடுத்துத் தொட்டுப் பார்த்தாள். மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்தாள். பின் விலைக் குறிப்புடன் தொங்கிய தகவல் குறிப்பை வாசித்தாள்.

அக்கணம் தோசை வாங்கிக் கொண்டு வந்த கார்த்தி, ‘பிளாஸ்டிக் ட்ரே’-யை மேசை மேல் வைத்துவிட்டு, அவள் எதிரே அமர்ந்து கொண்டான்.

அவன் உட்கார்ந்த அடுத்த நொடி, “என்ன கார்த்தி இது? நான் அனிமல் லெதர் யூஸ் பண்ண மாட்டேன்னு தெரியாதா? லெதர் ஐடம்ஸ் வாங்கிறப்போ வீகன் லெதரானு பார்த்துதான் வாங்கணும். PU, FAUX லெதர்… இப்படி போட்டிருக்கும். இதெல்லாம் பார்க்காம நீ வாங்கியிருக்க” என்றாள்.

விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுகின்ற பைகளைப் பயன்படுத்த மாட்டேன். செயற்கை தோலினால் செய்திருக்க வேண்டும் என்று, தன் வாழ்வு முறையைச் சாதரணமாகத்தான் சொன்னாள்.

ஆனால் ஏற்கனவே வெகுநேர காத்திருப்பின் கோபத்தில் இருந்தவனுக்கு, இது கோபத்தின் அளவை அதிகரிக்கவே காரணமாயிற்று!

இருந்துமே, “அந்த அளவுக்கு எனக்கு இதுல தெரியாது” என்று பொறுமையாக சொன்னவன், “உனக்காகத்தான் ஆசையா வாங்கினேன். இந்த டைம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா?” என்றும் கேட்டான்.

அக்கணம்… தான் வாழும் வாழ்வுமுறையைப் புரிந்து கொள்ளாமல் இப்படிக் கேட்கிறானே?’ என்று மஹிமாவிற்கு கோபம் வந்ததால், “அதெப்படி கார்த்தி முடியும்? சான்ஸே இல்லை. பேசாம நீ ரிட்டர்ன் பண்ணிடு” என்று பரிசையும், வண்ணக் காகித்தையும் அவன்புறம் தள்ளினாள்.

‘எவ்ளோ ஈஸியா சொல்றா…?’ என மீண்டும் கோபம் வந்தது. ஆனால் மஹிமா சாப்பாடு ட்ரேயை எடுப்பதைப் பார்த்தவன், ‘சரி, பசிக்கிதுனு சொன்னாளே? சாப்பிடட்டும்’ என்று கோபத்தை வெளிப்படுத்தாமல் இருந்தான்.

அவளோ தோசையை ஒரு துண்டு பிய்த்ததுமே, “என்ன கார்த்தி நீ… கீ ரோஸ்ட் வாங்கிட்டு வந்திருக்கிற? பிளைன் தோசைதான கேட்டேன்?!” என்றாள் அவன் வாங்கியிருந்த விதத்தை ஆட்சேபிக்கும் குரலில்!

‘இன்னைக்கு ஏன் இப்படி?’ என்று அலுத்துப் போனவன், சாப்பிடும் உணவிற்கு ஒரு முகம் இருந்தால் சாப்பிட மாட்டாளே என்று நினைக்கும் பொழுதே, “நான் டெய்ரி ப்ராடக்ட்ஸ் சேர்த்துக்க மாட்டேன்னு தெரியாதா?” என்று கேட்டுவிட்டு, ட்ரேயையும் தள்ளி வைத்துவிட்டாள்.

அதோடு விடாமால், “நான் என்ன சாப்பிடுவேன்னு கூட உனக்குத் தெரியலை. ‘இதை யூஸ் பண்ண மாட்டேன்’னு சொன்னா, அதை புரிஞ்சிக்காம ‘அட்ஜஸ்ட் பண்ண முடியாதா?’ன்னு கேட்கிற…” என்று குறைப்பட்டதோடு, “இதுல வெய்ட் பண்றேன்னு வேற சொல்லிக் காட்டுற?!” என்று முடித்தாள்.

மஹிமா வாழும் வாழ்வை புரிந்து கொள்ளாதது போல் பேசுகிறாளே? என்று கார்த்தியின் கோபம் அதிகரித்தது!

உடனே ஹேன்ட்பேக்கை காட்டி, “இது நிஜமா எனக்குத் தெரியாது” என்றவன், தோசையைக் காட்டி, “உன்னோட ஃபுட் டயட் தெரியும். நான் கரெக்ட்டாதான் கேட்டேன். பட் கடைக்காரர் வெளிய போற அவசரத்தில இருந்ததால, மாத்திக் கொடுத்திருக்கலாம்” என்று உள்ளதைச் சொன்னான்.

அப்போதும் மஹிமா, “ஆனா…” என ஏதோ சொல்ல வருகையில், “ப்ச், போதும். ரொம்ப கோபப்பட வைக்கிற!!” என்றான் தலையைத் தாங்கிப் பிடித்தபடி!

“எதுக்கு கோபம்?” என்றாள் அவனை உன்னிப்பாய் கவனித்தபடி!

“உன் லைஃப் ஸ்டைல் புரிஞ்சிக்கிறதுக்கு டைம் கொடு. அதுக்கு முன்னாடியே ‘தெரியலை… புரியலை’ன்னு சொல்லிக் காட்டாத. அது உன்மேல கோபப்பட வைக்குது” என்றான் நேராக அமர்ந்தபடி!

அவன் பேச்சினை அவள் புரிந்த விதத்தினால், “என்ன கார்த்தி சொல்ல வர்ற? இந்த மாதிரி லைஃப் ஸ்டைல் பாலோவ் பண்ற பொண்ண… அன்டர்ஸ்டான்ட் பண்ண முடியலைனு சொல்றியா?” என்று கேட்டாள்.

“நான் அப்படிச் சொல்லலை. அன்டர்ஸ்டான்ட் பண்ணி நடந்துக்க கொஞ்சம் டைம் கொடுன்னு சொல்றேன்” என்று எழுந்துவிட்டான்!

சட்டென அவளுக்கு, ‘நிறைய பேச நினைத்தேனே? அதற்குள் ஏன் எழுந்தான்?’ என்று மனம் ஒருமாதிரி இருக்க, “எங்க போற கார்த்தி?” என்றாள்.

“கிளைன்ட் ஒருத்தர் பார்க்கணும்னு சொன்னாரு. இந்த டைம் வாங்கன்னு சொல்லியிருந்தேன். அதான் நான் கிளம்பறேன்” என்றான்.

எழுந்தவனை நிமிர்ந்து பார்த்து, “நான் லேட்டா வந்தேங்கிற கோபத்திலதான், எதையோ சொல்லிட்டுப் போக பார்க்கிறியா கார்த்தி?” என்றதும், “அப்படி நீ நினைச்சா என்னால ஒன்னும் பண்ண முடியாது” என்றான்.

மேலும், “பசிக்குதுனு சொன்ன, ஸோ போறதுக்கு முன்னாடி எதும் சாப்பிட்டுப் போகணும்” என்று சொன்னதும், “எனக்குத் தெரியும். நீ போ” என இந்த நாளில் போய் இப்படி விட்டுப் போகிறானே என்ற கோபத்தில் பேசினாள்.

‘போ’வா என்று வாய்க்குள்ளே முணுமுணுத்தவன், “என்னமோ பண்ணு” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினான்!

கார்த்திகேயன் போய் வெகுநேரமாகியும்… முன்னே இருக்கும் ஹேன்ட்-பேக், தோசையைப் பார்த்தவாறு அப்படியே மஹிமா அமர்ந்திருந்தாள்.

மஹிமா நனிசைவ (Veganism) வாழ்வியலை வாழ்பவள்! தாவர வகை உணவு முறையைப் பின்பற்றுபவள்!

விலங்குகளிலிருந்து பெறப்படுகின்ற முட்டை, பால் பண்ணைப் பொருட்கள், இறைச்சி என்று அனைத்தையும் தவிர்த்துவிடுவாள்! மேலும் விலங்கிலிருந்து தயாரிக்கப்படுகின்ற பொருட்கள், உடை, ஆபரணங்கள் என எதையும் அவள் பாவிப்பதில்லை!!

அறிவுநிலை பாகுபாடுகள் ஏதும் இல்லாமல் எல்லா உரியிர்களிடத்தும் அன்பு செலுத்துவாள்! ஒவ்வொரு உயிருக்கும் மிகுந்த மதிப்பு கொடுப்பவள்!

இழப்புகளிலே பெரிய, திரும்பப் பெற முடியாத இழப்பு உயிரிழப்பு என்பதால், உயிர்களுக்கு அச்சுறுத்தல் தருபவர்கள் மேல் கோபம் கொள்வாள்!!

எந்த உயிரும் துன்பப்படுவது கண்டால் வேதனை அடைவாள்! முயன்றளவு முயற்சி செய்து அந்த உயிரின் வேதனையைக் குறைக்கப் பார்ப்பாள்!!

தனக்கு எப்படி வலிக்குமோ அப்படித்தான் மற்ற உயிருக்கும் வலிக்கும் என்று பார்த்துப் பார்த்து வாழ்பவள். அனைவருக்குமே அப்படியொரு மனமிருந்தால் குற்றங்கள் குறையும் என்பது அவளது திண்ணமான எண்ணம்.

அவளைப் பொறுத்தவரை இந்த வாழ்க்கைமுறைப் பற்றி எத்தனை மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், இதுவொரு குற்றமற்ற வாழ்க்கைமுறை! அதற்காக யார்மீதும் இதைத் திணிக்க மாட்டாள்!

அதேபோல் இதிலிருந்து இம்மியளவும் விலகமாட்டாள்!!

உதவும் குணம் கொண்டவள்! தெரிந்தவர், தெரியாதவர் என்கின்ற வேறுபாடு பாராமல்… சிலநேரம் தன்னைக் கூட கவனிக்காமல் உதவுபவள்! இந்தவொருகுணத்தால் அன்பிற்குரியவர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்வாள்.

அதைக் கோபம் என்று சொல்வதைவிட அவளுக்கான அக்கறை!

முதலில், ‘உண்ண கூட மறந்து என்ன உதவியோ?’ என்ற கோபம் கார்த்திக்கு இருந்தாலும், ‘சாப்பிட்டுப் போ’ என்று சொன்னது அவளுக்கான அக்கறை!

ஆம், அக்கறைதான்! ஏனெனில்… கார்த்திகேயனுக்கு மஹிமா என்றால் உயிர்! அவளுக்கும் இது தெரியும்! மஹிமாவிற்கும் கார்த்தியை நிரம்பவே பிடிக்கும்! அது அவனுக்கும் தெரியும்!!

பிறகு ஏன் இதுபோன்ற பேச்சுக்கள்?

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்ற பயணத்தில் இருப்பதால் இப்படிப்பட்ட பேச்சுகள் வருகின்றன! இந்த நூறு நாட்களில் இருவருக்குள் சில சண்டைகள் வந்திருக்கின்றன. பேசி… அவர்களாகவே சமாதானம் ஆகிவிடுவார்கள்.

இதற்குமுன் வந்த பேச்சுகள் போலத்தான் இன்று வந்ததுமா? இத்தனை நாள் சமாதானமானவர்கள் இன்றும் சமாதானம் ஆவார்களா? அவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படுமா??

பார்க்கலாம்!

************************

சுயமரியாதை பேசும் செல்வி & சரவணன்

தன்முன் வந்து நின்றவளைப் பார்த்து, “வாங்க” என சிறு புன்னகை கீற்றுடன் சரவணன் எதிர்கொண்டதும், உறக்கத்திலிருந்து விழித்து… பசிக்காக அழும் மகனைத் தட்டிக் கொடுத்த செல்வியும் அதேயளவு புன்னகை செய்தாள்.

“உங்க அக்கா,” என அவன் ஆரம்பிக்கும் போதே, “அக்கா அவங்க ஊர்லருந்து வந்துகிட்டு இருக்காங்க. இப்ப வந்துருவாங்க” என்று சொன்னதும், “பையன் அழுதுக்கிட்டே இருக்கிறான். ஏன்?” என்று கேட்டான்.

“இப்பதான் முழிச்சான். பசிக்கும்… அதான் அழறான்” என அவள் சொன்னதும், “சாப்பாடு கொடுக்கணும்னா இங்கே உட்கார்ந்து கொடுங்க” என்றான்.

அதன்பின்னும் அமராமல் வேறு இடம் காலியாக இருக்கிறதாவென்று செல்வி பார்ப்பதைக் கண்ட சரவணன் உடனே எழுந்து, “ம், இப்ப உட்காருங்க” என்று சொன்னதும் அவள் ஒருமாதிரி உணர்ந்தாள்.

ஆனாலும் அங்கே அமர்ந்து கொண்டாள். கைப்பையை கீழே வைத்து, எதிரே நிற்கின்றவனைப் பார்த்து, “பரவால்ல… நீங்களும் உட்கார்ந்துக்கோங்க” என அவள் சொன்னாலும், “நீங்க பையனைப் பாருங்க” என சரவணன் இலகுவாக சொல்லிவிட்டு நிற்கவே செய்தான்.

அதன் பின்னர் செல்வி எதுவும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. மகனுக்குச் சாப்பாடு கொடுப்பதற்காக கிண்ணம், டப்பா, பிளாஸ்க் என அனைத்தையும் மேசை மேல் எடுத்து வைத்து, அவனுக்கு உணவு கலக்க ஆரம்பித்தாள்.

அழுகின்ற பையனை வைத்துக் கொண்டு அவள் சிரமப்படுவதைப் பார்த்து, “ஏதும் ஹெல்ப் வேணுமா-ங்க?” என்று சரவணன் கேட்க, “இல்ல வேண்டாம்” என செல்வி சொன்ன நேரத்தில் பெரியவர் ஒருவர் வந்து நின்றார்.

அவர் வந்ததும்… அதாவது அந்தத் தளத்தில் இருந்த ஒரு சிறிய உணவகத்தின் உரிமையாளர் வந்ததும், “என்ன சித்தப்பா?” என்றான் சரவணன்.

வந்தவரோ செல்வியைப் பார்த்து, “அக்கா கூட வரலையா-ம்மா?” என அவள் தனியே வந்திருப்பதைப் பற்றிக் கேட்டதும், “வந்துக்கிட்டு இருக்காங்களாம் சித்தப்பா” என்று சரவணன் பதில் சொன்னான்.

“சரி, சரி” என்று தலையாட்டியவர், “பையன் பேரென்னமா?” என்று கேட்டதும், மகனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தவள், “ஹரி” என சொல்லும் பொழுதே, “நீங்க என்ன சித்தப்பா இன்னேரம் கடையில இருக்காம, இங்க வந்து நிக்கிறீங்க?” என சரவணன் கேட்டான்.

“சரவணா, கடையில ஒரு டேப் ஒழுகிக்கிட்டே இருக்குடா. புதுசு ஒன்னு வாங்கி வச்சிருக்கேன். நீ போறதுக்கு முன்ன மாட்டிக் கொடுத்திட்டுப் போ. அப்புறம், குட்டிமா-க்கு பீஸ் கட்டணும். பணம் வாங்கிட்டுப் போக உன் சித்தி கீழ வந்து நிக்கிறா. நான் போய் பணத்தைக் கொடுத்திட்டு வர்றேன். நீ அது வரைக்கும் கடையைப் பார்த்துக்கோ” என்று அவனிடம் சொன்னார்.

பின் செல்வியிடம், “குட்டிமா என் பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறா. அவகிட்ட பணத்தைக் கொடுத்து பஸ் ஏத்திவிட்டு இவனோட சித்தியும் இங்க வந்திடுவாங்க. அது வரைக்கும்…” என இழுத்தவர், “இப்படி உன்னைக் காக்க வைக்கிறோமேன்னு நினைக்காத-மா” என்று சொன்னார்.

சீக்கிரம் வந்ததால்தான் இவ்வளவுமென நினைத்தவள், “இல்லை. இவனுக்குச் சாப்பாடு கொடுக்கத்தான் சீக்கிரமா வந்தேன். அதோட என் அக்கா வரவும் நேரமிருக்கு. நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க” என்றாள்.

“அதுவும் சரிதான்” என அவர் சொல்லும் பொழுதே சரவணன் அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. “குட்டிமாதான் சித்தப்பா” என அலைபேசி அழைப்பை எடுத்தவன், “இப்பதான் குட்டிமா வந்திருக்காங்க” என்றான் மறுமுனையில் கேட்ட கேள்விக்கு பதிலாக!

தன்னை பற்றிய பேச்சுதான் என புரிந்தாலும், நிமிர்ந்து பார்க்காமல் செல்வி மகனுக்குச் சாப்பாடு கொடுத்தாள்!

அந்த நேரத்தில் அடுத்து என்ன கேள்வி கேட்கப்பட்டதோ, “பேசிட்டு, அண்ணே சொல்றேன்” என்றான்.

பின், “குட்டிமா பேசணுமா-ம்” என அலைபேசியை சித்தப்பாவிடம் கொடுக்க, “என்னவாம் உன் தங்கச்சிக்கு” என்று வாங்கினதுமே, “பேசிக்கிட்டே போங்க சித்தப்பா. இந்நேரம் கிளம்பினாதான், ஏழு மணிக்குள்ள அவ காலேஜ் போய் சேர முடியும்” என்றான் சரவணன்.

“சரி சரவணா” என அலைபேசியை காதில் வைத்தவர், “இப்ப வந்திடுவோம்-மா” என்று மறக்காமல் செல்வியிடமும் சொல்லிவிட்டு, மகளிடம் பேச்சைத் தொடங்கியபடி கிளம்பினார்.

எழுந்து நின்ற சரவணன், “சாப்பாடு கொடுத்திட்டு இருங்க. நான் கடையைப் பார்த்துக்கணும். ஏதும் உதவி வேணும்னா கேளுங்க” என்று சொல்லிவிட்டு, அவள் ‘சரியென’ தலையாட்டிய பிறகே அங்கிருந்து சென்றான்.

அக்கணம் செல்விக்கு ஓர் அலைபேசி அழைப்பு வந்தது. அவளது அக்காதான்! அழைப்பை ஏற்றதுமே மறுமுனையில் கேட்ட கேள்விக்கு, “வந்துட்டேன்-க்கா. ஆனா…” என்று ஏதோ சொல்ல வருகையில், அவளைப் பேச விடாமல் தடுத்து, நிறைய பேசிவிட்டு அவள் அக்கா அழைப்பைத் துண்டித்தாள்.

அக்கா பேசியதைக் கேட்டுவிட்டு அலைபேசியை மேசை மேல் வைத்ததுமே, ஏதேதோ எண்ணங்கள் வந்து சற்றுத் தள்ளி நின்று எட்டிப் பார்க்க, ‘ச்சே’ என தலையை உலுக்கி, இந்தச் சந்திப்பை பற்றிய யோசனைகளுடன் மகனிற்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தாள்.

எந்தச் சந்திப்பு?

அதுதான்… சரவணன், சித்தி, சித்தப்பா இவர்களுடனான இச்சந்திப்புதான். எதற்காக இது என்றால்… திருமண ஏற்பாட்டிற்காக!

செல்வி தரப்பில் அவளது அக்காவும், சரவணன் தரப்பினில் அவன் சித்தப்பா, சித்தி என்கிறானே அவர்களும்… இதனை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

பொதுவான நபர் மூலமாக இரு தரப்பினருக்கும் அறிமுகம் கிடைத்தது. அது திருப்தியாக இருக்க, முகங்களின் அறிமுகம் பெற்றுக் கொண்ட பின், இப்படி ஒரு சந்திப்பு நிகழ்கிறது. இனிமேல் பேசி முடிவு எடுக்க வேண்டும்.

இன்று மகள் கல்லூரி கிளம்பிச் செல்வதால் இன்னொரு நாள் சந்திக்கலாமே என்று சித்தப்பா கேட்டுப் பார்த்தார். ஆனால் இச்சந்திப்பைத் தள்ளிப் போட செல்வி அக்கா விரும்பவில்லை.

சில காரணங்களால் திருமண வாழ்வு முடிவடைந்துவிட்ட செல்விக்கு, கூடிய விரைவில் மறுமணம் செய்ய வேண்டுமென அவள் அக்கா நினைக்கிறாள்!

சரவணனுக்கு இது முதல் மணம். சில காரணங்களினால் அவனது திருமணம் தள்ளிப் போயிருக்கிறது! கூடிய விரைவினில் அவனுக்குத் திருமணம் செய்து பார்க்க சித்தப்பா-சித்தி ஆசைப்படுகின்றனர்!!

என்ன அந்த ‘சில காரணங்கள்’? பேசட்டும். பேசினால் தெரிந்துவிடும்!!

**********************

இப்படிப்பட்ட சூழலில், யாரும் எதிர்பார்த்திடா திடுநிகழ்வாய் அந்த தளத்தில் இருந்த ஆளுயரக் கண்ணாடி ஒன்று உடைக்கப்படும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அலங்காரப் பொருட்களும் நாற்காலிகளும் மேசைகளும் அடித்து நொறுக்கப்பட்டன!

உருட்டுக் கட்டைகள் கொண்டு… ஒரே மாதிரி உடையணிந்து முகமூடி போட்ட மூன்று உருவங்கள் இதையெல்லாம் செய்து கொண்டிருந்தன!!

கூடவே… அந்த மூன்று முகமூடி உருவங்களில் ஒன்றின் கையில் துப்பாக்கி இருப்பதை அத்தளத்தில் இருப்பவர்களில் பலர் பார்த்ததும் பதைபதைத்துப் போயினர்!!!

***********************