Neer Parukum Thagangal 3.2

NeerPArukum 1-4716a770

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 3.2

இது போன்ற நொடிகளில் மஹிமா!

கார்த்திகேயன் பேசிப் போனதையே நினைத்து… அவன் போகும் போது எந்த நிலையில் இருந்தாளோ, இப்பொழுதும் அதே நிலையில் இருந்தாள். காணும் காட்சிகளெல்லாம் மங்கலாகத் தெரிந்து போகும் அளவிற்குக் கருவிழிகளை இயக்கமற்று ஒரு இடத்திலே நிறுத்தி வைத்திருந்தாள்.

திடுமென கேட்ட மக்களின் அலறல் மற்றும் அபாய சத்தத்தில்தான் முதலில் உடலில் ஒரு அதிர்வு வந்தது. பின்னரே உணர்வு வந்தது. ஆனாலும் ஒன்றுமே புரியவில்லை. உட்கார்ந்தவாறே அந்தப் பக்கம் இந்தப் பக்கமென திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.

‘என்ன நடக்கிறது?’ என புரிய வந்தது. ஆனால், ‘எதற்காக?’ என புரியவில்லை. இருந்தும் கைப்பையைத் தூக்கிக் கொண்டு எழப் பார்த்தாள். சட்டென தலை சுற்றியது. அதீத பசி என்று உணர்ந்தாள். ஆனாலும் சூழ்நிலையைக் கருதி ஓர் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து நடந்தாள்.

அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு, வெளியேறும் வழியை நோக்கி கண்முன் தெரியாமல் ஓடுபவர்களுக்கு நடுவே வேகமாக நடந்தாள். கூடவே, ‘யாருக்கும் உதவி தேவைப்படுமா?’ என்று ஆராய்ந்து கொண்டே போனாள்.

அப்படியொரு நிலையிலும் அவள் மனம் இதையும் யோசித்தது!

அந்த நேரம் தப்பித்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் வேகமாக ஓடி வந்த ஒருவர் அவள்மீது மோதியதில் நிற்க முடியாமல் தடுமாறியவள், பிடிக்க ஏதும் பிடிமானம் இல்லாமல் போனதால் கீழே விழுந்துவிட்டாள். ஓடும் அவசரத்தில் அந்த மனிதர் போய்விட்டார்!

இவள்தான் விழுந்த அதிர்ச்சியில் சட்டென எழ முடியாமல் இருந்தாள்!

ஆனால் ஒருசில நொடிகள் மட்டுமே அப்படி!!

சற்றே அதிர்ச்சி குறையவும் சூழலின் நிலவரத்தைக் கண்டு, முயற்சி செய்து எழுந்து நேராக அமர்ந்தாள். அவ்வளவுதான் முடிந்தது! முழுவதுமாக எழுந்து நிற்க முடியவில்லை!

காரணம்? இடது காலில் உணர்ந்த வலி!

‘என்னாச்சு?’ என்று காலைப் பார்த்தாள். உடைந்து கிடந்த நாற்காலியிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த இரும்புக் கம்பி ஒன்று அவள் கணுக்காலின் சதையைக் கிழித்திருந்தது.

எழுந்து நிற்கமுடியாது அளவிற்குப் பயங்கற வலி!

இது மட்டுமில்லாமல் முழங்கையில் சின்னதாய் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. தரையில் உடைந்து கிடந்த கண்ணாடித் துண்டுகளும், துகள்களும் கையிலும் உடையிலும் ஒட்டிக் கொண்டிருந்தன.

ஓரிரு வினாடிகள் வேதனையைத் தாங்கியபடி எழாமலே இருந்தாள். ஆனால் இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும்? தப்பிக்க வேண்டாமா? ஆதலால் வேக வேகமாக கண்ணாடித் துகள்களைத் தட்டிவிட்டு எழுந்தாள்.

கண்ணாடித் துகள்கள் குத்திய கைப்பகுதிகள் காந்த ஆரம்பித்தன!

எப்படியோ தட்டுத் தடுமாறி லிஃப்ட் பக்கமாக வந்திருந்தாள். உள்ளே ஆறேழு பேர் இருந்தார்கள். இவள் உள்ளே கால் வைத்ததும், ‘சீக்கிரம் வாம்மா’ என்று உயிர் பயத்தில் எரிச்சல் பட்டார்கள்.

அதேநேரம், ‘நாங்களும் வந்துக்கிறோம்’ என்று ஒரு முதியவர் குரல் வந்தது!

மஹிமா குரல் வந்த பக்கம் பார்த்தாள். ஒரு முதியவரும் அவரது மனைவியும் முடிந்த அளவு வேகமாக வந்து கொண்டிருந்தார்கள். உடனே மஹிமா லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் நின்று கொண்டாள். அவள் செயல் கண்டு, ‘என்னமா பண்ற?’ என உள்ளே இருந்தவர்கள் கத்தினார்கள்.

‘அவங்களும் வந்துக்கட்டுமே’ என்று அவள் சோர்வுடன் சொல்லும் பொழுதே, மூச்சிரைக்க அவர்கள் இருவரும் வந்திருந்தனர்!

மஹிமா லிஃப்ட் உள்ளே செல்ல, “தேங்க்ஸ்” என அவர்களும் நுழைந்தார்கள். அவ்வளவுதான் தப்பித்துவிடலாம் என்று எல்லாரும் நினைத்த போது, ‘லிஃப்ட் ஒவர்போர்ட்’ என்ற அறிவிப்பொலி வந்தது.

அத்தனை பேரும் மஹிவைப் பார்த்தார்கள்! உன்னால்தான் தாமதம் ஆகிறது என்றா? இல்லை, இப்பொழுது என்ன செய்யப் போகிறாய் என்றா? இரண்டில் ஏதோ ஒரு பார்வை அது!!

அதைப் புரிந்த முதியவர், “நான் எஸ்கலேட்டர்ல வர்றேன்” என மனைவியைப் பார்த்துச் சொல்ல, வயதானவரை மேலும் அலைக்கழிக்க வேண்டாமே என்ற எண்ணத்தில், “இல்லை. நானே போறேன்” என்று மஹிமா வெளியே வர, அந்த முதியவர் நன்றியோடு பார்த்தார்.

மற்றவர்கள், ‘உதவி செய்ய அளவில்லையா?’ என்பது போல் பார்த்தனர்!

அவ்வளவுதான்! லிஃப்ட் கதவு மூடி கீழ்தளத்தை நோக்கிச் சென்றது!!

இங்கேயே நிற்காமல் எஸ்கலேட்டர் வழியாகச் செல்லலாமென நினைத்தாள்! ஆனால் அந்த அளவிற்கு அவள் உடலில் ஆற்றல் இல்லை! தலை இராட்டினம் போல் கிறு கிறுத்தது!!

காரணம்… பசி பாதி! வலி மீதி! இருந்த சோர்வும் கூடச் சேர்ந்து கொண்டது!!

இரத்த கசிவினாலும், காயத்தினாலும், பசியினாலும் உடல் சோர்வடைந்தது! ‘தண்ணீராவது குடியேன்’ என உடல் களைப்பு அவளிடம் கெஞ்சிக் கேட்டது! இல்லையென்றால் மயங்கிவிடுவாய் என்று மூளை அச்சுறுத்தியது!!

இந்த நிகழ்வுகளால் யாரும் யாரையும் கவனிக்கின்ற மனநிலையில் இல்லை. தான் மயங்கி விழுந்தால் இங்கேயே மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதனால், எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தாள்!

ஓரிரு நொடிகள்தான் நின்றிருப்பாள்! அதற்குமேல் நின்று பார்த்திட சக்தியே இல்லை! மயக்கம் வருவது போல் உடல் தொய்வடைய ஆரம்பித்தது! ‘என்ன செய்ய?’ என்று யோசித்தாள்!

வெகு அருகே கேக்-ஷாப் இருந்தது. அங்கே தண்ணீர் பாட்டில்கள் இருந்தன!!

லிஃப்டை பார்த்தாள். இன்னும் வரவில்லை. எஸ்கலேட்டர் வழியாக போகலாம் என்று பார்த்தால் அங்கே இரண்டு முகமூடி உருவங்கள் இருந்தன. சரி, லிஃப்ட் வருவதற்குள் தண்ணீர் குடித்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது.

அதன்பின் ஒருநொடிகூட தாமதிக்கவில்லை!

கைப்பையைப் பிடித்துக் கொண்டு, காயத்தின் வேதனையைப் பொறுத்துக் கொண்டு கேக்ஷாப்-பின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு மஹிமா உள்ளே சென்றுவிட்டாள்.

விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ‘மினரல் வாட்டர் பாட்டில்’ ஒன்றை மிகுந்த சிரமத்துடன் எடுத்தாள். கைகள் நடுங்க மூடியைத் திறந்து தண்ணீர் சிதறச் சிதறக் குடித்தாள்.

இருந்தும் உடனடியாக அவள் எதிர்பார்த்த ஆற்றல் கிடைக்கவில்லை! தலை சுற்றும் அளவு விகாரமாக இருந்தது!!

அப்படியே சுவரில் சாய்ந்து, சரிந்து அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டாள். அதன்பின்தான் உடல் ஒரு சிறு தளர்வை உணர்ந்தது.

கணுக்காலின் காயம் விண் விண்ணென்று வலியில் தெறித்தது. சோர்வினால் கண்கள் சொருகியது. முயன்று முழித்திருந்தாள். இங்கே இப்படியே இருப்பது பாதுகாப்பல்ல என தோன்றினாலும் எழுந்து செல்லுமளவு தெம்பில்லை.

யாருக்காவது அழைத்து உதவி கோரலாமென யோசனை வந்தது. ‘யாருக்கு?’ என்ற யோசனையோடு அலைபேசியை எடுத்தாள். ஆனால் இந்த நிலையில் யாரால் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணமும் வந்தது.

வீட்டிற்கு அழைக்கலாமா என பார்த்தாள். ஆனால் அவர்கள்தான் இந்த ஊர் கிடையாதே? அவர்களால் எப்படி உதவ முடியும்? அத்தோடு இந்த நிலையில் பேசினால் அவர்கள் பயப்படுவார்கள்… பதற்றமடைவார்கள்!

எனவே இப்பொழுது அது வேண்டாமென நினைத்தாள்!!

அடுத்தாக ஞாபகத்தில் வந்தது கார்த்திதான்! தான் பேசினது… அவன் பேசிப் போனது என்று எதையும் யோசிக்காமல்… அவனுக்கு அழைக்க நினைக்கும்  பொழுதே, மஹிமாவின் தன்னுணர்வு குறைய ஆரம்பித்து, சில நொடிகளில் அவள் கண்கள் தானாக மூடிக் கொண்டன!

***************************

இதுபோன்ற நொடிகளில் லக்ஷ்மி கேசவன் & மினி ஜோசப்!

துணிக் கடைக்குள் நின்ற ஒருசிலர் பதறியபடி ஓடியதாலும், வெளியே கேட்ட சத்தத்தினாலும், ‘ஏதோ விபரீதம்?’ என லக்ஷ்மிக்குப் புரிந்தது. அந்த நொடியே அவரும் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் மினியை விட்டுப் போக அவரது மனம்தான் துளியும் ஒப்பவில்லை!!

எனவே அவளை அழைத்துக் கொண்டே வெளியே செல்லலாமென நினைத்து ஒத்திகை அறை நோக்கி விரைந்து போகையில்… கடையிலிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டதால், கடை உறுப்பினர் ஒருவர் கண்ணாடிக் கதவை இழுத்தடைத்து, வெளியே இருக்கும் ‘ஷட்டரை’ மூடுவதற்கு பார்த்தார்.

கடையின் பொருட்களுக்குச் சேதம் வரக்கூடாது அல்லவா? அதனால்!!

இதைக் கண்ட லக்ஷ்மி, “சார்… சார்… சார் ஒன் மினிட். உள்ளே ஒரு பொண்ணு இருக்கா. நான் அவளைக் கூட்டிட்டு வந்திடுறேன்” என நின்ற இடத்திலிருந்தே, குரலை உயர்த்திக் கெஞ்சினார்.

வெளியில் நடப்பவைகளை ஒரு கண்ணால் பார்த்தவாறே, “சீக்கிரம் வாங்க. ஏதும் ஒடைஞ்சா ஓனருக்கு நான்தான் பதில் சொல்லணும்” என்று பாதியளவு இறக்கிவிடப்பட்ட ‘ஷட்டரை’ பிடித்தபடி, எரிச்சலுடன் சொன்னார்.

“சரி சார், சரி சார்” என்று சொல்லியபடியே அவசர அவசரமாக ஓடிய லக்ஷ்மி, “மினி… மினி” என்று ஒத்திகை அறைக் கதவைத் தட்டினார்.

ப்ளூடூத் உதவியுடன் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு லக்ஷ்மியின் சத்தம் சுத்தமாகக் கேட்கவேயில்லை! ஆனால் அறைக் கதவின் அதிர்வைப் பார்த்துவிட்டாள்! உடனே ப்ளுடூத்தை எடுத்துவிட்டு, “யாரு?” என்றாள்.

உடல்மொழியில் பதட்டமேயிருந்தாலும்… குரலில் அதைக் காட்டாமல், “மினி, நான் லக்ஷ்மி! ஏதோ ப்ராபளம் போல! சீக்கிரமா வா. வெளிய போயிடலாம்” என கடகடவென சொல்ல, “பேசாதீங்கன்னு சொன்னேன்ல? அப்புறம் ஏன் வந்து பேசறீங்க?” என்று நேரம் காலம் புரியாமல் கேட்டாள்.

அப்படி ஒரு கோபம் வந்தது லக்ஷ்மிக்கு! அதே கோபத்துடன், “சும்மா கேள்வி கேட்காத! ப்ராபளம்… வெளிய வா-ன்னு சொன்னா, வரணும்” என்று உத்தரவு பிறப்பிப்பது போல் சொன்னார்.

பயம் வரவும், “என்ன, என்ன ப்ராபளம்?” என்று மெல்லிய குரலில் கேட்டதுமே, கோபத்தை விட்டுவிட்டு, “பயப்பிடாத மினி. நீ… வெளிய வா. நாம இங்கிருந்து போயிடலாம்” என லக்ஷ்மி ஆறுதலான குரலில் சொன்னார்.

“வெயிட் பண்ணுங்க. ட்ரையல் பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னோட டிரஸ் சேஞ் பண்ணிட்டு வர்றேன்”

“அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை. சீக்கிரம் வா…” என்று அழுத்திச் சொன்ன பின்னரும் அவளது உடையை மாற்றிய பின்னரே கதவைத் திறந்தாள்.

உடனடியாக, “வா போகலாம்” என கைப்பிடித்து அழைத்ததும், அவர் கையை உதறிவிட்டு, “எனக்குப் போகத் தெரியும்” என்று அவர் மேல் இருக்கும் கோபம் குறையாத குரலில் சொன்னாள்.

‘இன்னுமா கோபம்?’ என்று நினைத்தாலும், “சரி போ” என்று அவளை முன்னே விட்டு… அவர் பின்னே சென்றார். கடையின் முன்பகுதிக்கு வந்த மினி, “என்ன இது? ஷட்டர் குளோஸ் ஆகியிருக்குது. இப்போ என்ன செய்ய?” என்று திரும்பி லக்ஷ்மியைப் பார்த்து… நடுக்கத்துடன் கேட்டாள்.

“ஐயோ! குளோஸ் பண்ண வேண்டாம்னு சொன்னேனே?” என பதற்றத்துடன் சொன்னவர், வேக வேகமாகக் கண்ணாடிக் கதவினருகே சென்று, “ஹெல்ப், ஹெல்ப்” என்று இருகைகளாலும் கதவைத் தட்டினார்.

அவரின் பதற்றம் அவளை பயங்கொள்ளச் செய்தது. மேலும், உள்ளே மாட்டிக் கொண்டோமே என்ற அச்சம் வந்தது. ஆனால் அப்போதும், “ஷட்டர் இருக்குது. இங்கே தட்டினா, வெளிய எப்படிக் கேட்கும்?” என லக்ஷ்மியின் செயலில்தான் குற்றம் கண்டுபிடித்தாள்.

அப்படி ஒரு கோபத்துடன் திரும்பியவர்… விறுவிறுவென்று அவளருகில் வந்து, “அதுக்குத்தான் சீக்கிரம் வா… வா-ன்னு சொன்னேன். கேட்டியா நீ? ட்ரஸ் சேஞ் பண்ணனும்… அது… இது-ன்னு… தேவையில்லாம பேசப் போய்தான்… இப்போ இப்படி மாட்டிக்கிட்டு நிக்கிறோம்!!” என்று திட்டினார்.

“இங்க பாருங்க… என் அப்பாகூட என்னை இப்படித் திட்டினது இல்லை. நீங்க திட்டாதீங்க” என அவர் பேச்சைக் கண்டிக்கும் விதமான குரலில் சொன்னாள்.

இன்னும் கோபம் குறையாததால், “உன்னைத் திட்டி வளர்த்திருக்கணும் மினி! அப்பத்தான் என்ன பேசணும்… எந்த சிச்சுவேஷன்ல எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சிருக்கும்” என்றார்.

முகத்தை ஒருமாதிரி வைத்துக் கொண்டு, “ப்ச், மறுபடி… மறுபடி அப்பா பத்தி பேசாதீங்க” என எரிச்சலடைந்து, “உங்களுக்கென்ன? இங்கருந்து போகணும். அவ்வளவுதான? இருங்க… அப்பாக்கு கால் பண்றேன். அப்பா ஏதாவது ஐடியா கொடுப்பாங்க” என்று நம்பிக்கையுடன் சொன்னாள்.

அவள் அலைபேசியை எடுத்ததுமே… லக்ஷ்மியும் அலைபேசி எடுத்து, “நானும் போலிஸுக்கு ஃபோன் பண்றேன்” என வெளியே போகும் முயற்சியை அவர் எடுக்க நினைக்க… அலைபேசியைக் கையில் வைத்துக் கொண்டு கண்களில் பீதியுடன் மினி ஒன்றை பார்க்கவும், “என்ன? என்னாச்சு” என்று அவரும் அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தார்.

அங்கே… மினி பார்க்கின்ற திசையில்… அவளைப் பின்தொடர்ந்து வந்தவன்… அந்தப் பையன்… இவ்வளவு நேரம் காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகள் பின்னால் மறைந்திருந்து… இப்பொழுது வெளியே வந்து நின்றான்!!

இவன் எப்படி இங்கே? போய்விட்டான் என நிம்மதி அடைந்தோமே? இன்னும் போகவில்லையா? நடந்த களேபரத்தில் உள்ளே மறைந்திருக்கிறானோ? என ஏகப்பட்ட கேள்விகள் வந்தது, லக்ஷ்மிக்கு!

இதே நேரத்தில் மினி… அவன் பேசியதெல்லாம் நினைத்து, ‘இவனிடமிருந்து எப்படித் தப்பிக்க?’ என்ற ஒரே கேள்வியுடன், அதீத பயத்தினால் உடலெங்கும் உதறியபடி நின்றாள்!!

***************************

இந்த நொடிகளெல்லாம் முடிந்த பின்…

மக்கள் தப்பித்துச் சென்றதால் நான்காவது தளம் காலியாக இருந்தது. இதே நிலைதான் மற்ற தளங்களுக்கும்! அதே நேரத்தில் பதற்றத்தால் தப்பியோட முடியாமலும், அங்கும்-இங்கும் ஓடிக் கொண்டிருந்தால் உயிருக்கு ஆபத்தோ என்ற பயத்தாலும் அந்தந்த தளங்களிலே சிலர் மறைந்திருந்தார்கள்.

நான்காவது தளத்தின் தரைப்பகுதியில் அங்கங்கே கண்ணாடித் துகள்களும், உடைந்த பொருட்களுமாய் இருந்தன. சில கடைகள், நாற்காலிகள் மற்றும் மேசைகள் சேதமாயிருந்தன.

இதற்கெல்லாம் காரணமான அந்த மூன்று முகமூடி உருவங்கள்?

***************************