Rose – 16

images (93)-37f14728

அத்தியாயம் – 16

அந்த முடிவை அறிந்த நாளில் இருந்தே, ராம்குமாரிடம் எப்படி பேசுவது என்ற சிந்தனையில் வலம் வந்தாள் யாழினி. அன்று மாலை வழக்கம்போலவே அவர்களின் வீட்டிற்குச் செல்ல, அங்கே மொத்த குடும்பமும் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

“வா யாழினி…” அவளை இழுத்து அருகே அமர வைத்துக் கொண்ட வைஜெயந்தி, “இங்கே பாரு! நீ வீட்டுக்கு ஒரே பொண்ணு. அப்பாவைப் பத்திரமாக பார்த்துக்கணும். உன்னோட படிப்பை முடிச்சதும், உன் மனசு சொல்லும்படி வேலைக்கு போ” தாய்க்கு நிகரான அறிவுரைகளை வழங்க, அவளும் சரியென்று தலையாட்டி வைத்தாள்.

யாழினி மறுப்பக்கம் வந்து அமர்ந்த கீர்த்தனாவோ, “அக்கா நீயில்லாமல் இந்தியாவில் எப்படி இருக்க போறேனோ தெரியல. இங்கே படிப்பை முடிச்சிட்டு அங்கே வந்திடு அக்கா” என்று சொல்ல, “சரி கீர்த்தி!” என்றாள்.

“ஏய் வாலு! எப்போ கிளாஸ் முடிச்சிட்டு வந்தே” என்றபடி அங்கே வந்த ராமைப் பார்த்தும், “அம்மா நான் அண்ணாவிடம் கொஞ்சம் பேசணும்” என்றவளின் முகத்தில் இருந்த கலக்கமே, அவளது மனநிலையை அப்பட்டமாகப் பிரதிபலித்தது.

அவளை சிந்தனையுடன் ஏறிட்ட மகனிடம், “உன்னோட அண்ணனிடம் பேச என்னிடம் எதுக்கு பர்மிசன் கேட்கிற?” செல்லமாக கடிந்துகொள்ள, அவளின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

“சரி நீங்க இருவரும் போய் பேசிட்டு வாங்க. நான் காஃபி போட்டு வைக்கிறேன்” என்று சொல்ல, யாழினி வீட்டின் பின் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டத்திற்கு செல்ல, அவளின் பின்னோடு சென்றான் ராம்குமார்.

அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்த யாழினி, “அண்ணா உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்” என்றவளைப் பார்த்தபடி, அவளின் எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“எத்தனையோ முறை உனக்கு ஏன் இந்த கலாச்சாரம் பிடிக்காமல் போனதுன்னு நீ கேட்டு இருக்கிற… ஆனால் ஒருமுறை கூட அதுக்கு நான் பதில் சொன்னதே கிடையாது” என்றவள் இடையில் நிறுத்த, அவனுக்கும் ஏதோ புரிவதுபோலவே இருந்தது.

“அதுக்கென்ன மதுரா…” என்றவன் இலகுவாகக் கேட்க, “உங்களை சந்திக்கும் முன்பு நான் சந்தித்த பிரச்சனையால் தான், எனக்கு இங்கே இருக்க பிடிக்காமல் போனது” என்றவளின் குரலில் இருந்த மாற்றமே, அவனது சிந்தனையை எங்கெங்கோ இழுத்துச் சென்றது.

“இங்கே பதினைந்து வயதிலேயே பசங்க டேட்டிங் போக தொடங்கிடுவாங்க. அதுக்கு அடுத்த கட்டம் லிவிங் டூ கெதர் வாழ்க்கை தான். இதை நானே நிறைய இடத்தில் பார்த்து இருந்தாலும், பிடிக்கல என்று சொல்லிவிட்டால் சிலர் விலகிப் போகும்போது எதிலிருந்தோ தப்பித்த உணர்வு வரும்” யாழினி விழிகள் வானத்தை வெறிக்க, அவளின் கையைப் பிடித்து அழுத்தினான்.

தன் மனதில் இருப்பதை தமையனிடம் கொட்டிவிட நினைத்தவள், “அன்னைக்கு நான் கிளாஸ் முடிச்சிட்டு வந்துட்டு இருந்தேன். என்னோட கிளாஸ்மேட் ஷ்யாம் என்னை டேட்டிங் கூப்பிட்டான். எனக்கு இதெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காததால், நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்” என்றவளின் உள்ளங்கை சில்லிட்டுப் போக, அதற்குமேல் சொல்ல முடியாமல் திணறினாள்.

இன்று அவளைப் பேச வைத்துவிடும் முடிவுடன், “இங்கே பாரு! அது ஒரு முறை நடந்து முடிஞ்ச விஷயம். அதையே நினைத்து உன்னை நீயே வருத்திக்காமல் என்ன நடந்ததுன்னு சொல்லு” அவளுக்கு தேவையான தைரியத்தைக் கொடுக்க, அவளின் வாய்ப்பூட்டு அவிழ்ந்தது.

“ஏற்கனவே அவன் ட்ரக்ஸ் யூஸ் பண்ணிட்டு, சில பெண்களிடம் வர்ம்பு மீறியதாக கேள்விபட்டு தான் மறுத்தேன். அவன் என்னைப் பின்தொடர்ந்து வந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்டிப்பிடித்து கட்டாயப்படுத்தி கிஸ் பண்ண வந்தான். நானும் அவனைத் தடுக்க என்னென்னவோ செய்து பார்த்தேன்” அவள் சொல்வதைக் கேட்டு, ஒரு அண்ணனாக அவனை அடிப் புரட்டி எடுக்கும் அளவிற்கு கோபம் வந்தது.

அந்த சிலநொடிகளை இப்போது கண்முன்னே வந்துபோக, “இந்த நாட்டில் இதெல்லாம் சகஜம் என்பதால், அவனைத் தட்டிக் கேட்க யாருமே வரல. அதனால் தான் எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கல!” யாழினி உதடுகள் துடிக்க, அவளை எப்படி சமாதானம் செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை.

அவள் பேசி முடிக்கட்டும் என்று ராம் அமைதிகாக்க, “அப்போதான் அங்கே வந்த ஒருத்தன் ஷ்யாமிடம் இருந்து என்னை விலக்கிவிட்டு, அவனை நாலு அறை விட்டு, கையைப் பிடிச்சு திருகி விட்டாங்க. அவன் தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து ஓடிப் போயிட்டான்” என்றவள் சொல்ல, தன்னுடைய தங்கையின் மானத்தைக் காத்தவன் மீது மரியாதை தோன்றியது ராமிற்கு!

“அவனோட செயலைக் கண்டாலே நல்லவன் போல தெரியுது! உன்னிடம் என்ன சொன்னான்?” ராம் அவளிடம் விசாரிக்க, அவள் மீண்டும் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.

தன் கைகளை மெல்ல உருவிக்கொண்டு, “ஒரு பெண்ணோட மனதைத் தொடுபவனை தான் உடலைத் தொட முடியும். அதனால் கண்டவங்க கையை வைக்கும்போது கன்னத்திலே இரண்டு போடு தப்பே இல்ல” இடைவெளிவிட, ராமிற்கு அந்நபரின் பேச்சு பிடித்தது.

“அவன் சொன்னது உண்மைதான். இந்தியாவில் அக்கா, தங்கை என்றாலுமே ஒரு வயதிற்கு மேல் அவர்களைத் தொட்டு பேசுவது தவறுன்னு பெரியவங்க கண்டிப்பாங்க. அத்துடன் ஒரு ஆண் தொடணும், தொடக்கூடாது என்று கிராமத்துப் பாட்டிங்க கண்டிப்புடன் சொல்லும். அதை தான் இப்போ குட் டச், பேட் டச்னு சொல்லி கொடுக்கும் நிலைக்கு வந்துட்டோம்” என்றவன் விளக்கம் கொடுக்க, யாழினி முகம் மெல்ல தெளிந்தது.

“தாய் – தந்தை இல்லாமல் வளரும் பிள்ளைகள் தான் வழிதவறி போவாங்க. பெண் என்பவள் போகப்பொருள் கிடையாது, எந்த நாட்டு பெண்ணாக இருந்தாலும், அவளோட விருப்பம் இல்லாமல் விரல் நுனி தீண்டுவதுகூட தவறுதான்” அன்று அவன் சொன்னதை, ஒருவரி மாறாமல் தமையனிடம் ஒப்பித்தாள் யாழினி.

“கற்பு என்பதை இரு பாலருக்கும் பொதுவாக வைப்போம் என்பது பாரதியாரோட கருத்து. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், ஆண் மற்றும் பெண் இருவரும் கற்புடன் இருக்கணும். நீ அவனை எதிர்த்து அடிக்கணும், நீ உன் பெற்றவர்களும் பொருள் இல்ல பொக்கிஷம்” என்றவள் கூற, “அது என்னவோ உண்மைதான்” என்றான் ராம்குமார்.

யாழினி சொல்வதைக் கேட்கும்போது அந்த நபரை நேரில் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்றது அவனின் மனம். அவனது எண்ணவோட்டத்தை அறியாத யாழினி கையுடன் எடுத்து வந்த செயினை ராமின் கைகளில் கொடுக்கம் அதை வாங்கிப் பார்த்தான்.

அந்த டாலரின் உள்ளே பாரதியாரின் புகைப்படம் இருக்க, “இதை எனக்காக அவங்க கொடுத்தாங்க. இதைப் பார்க்கும்போது தைரியம் வரும்னு சொன்னாரு. அவரால் தான் எனக்கு தமிழ் மீது ஈடுபாடு வந்துச்சு” என்றவள் தொடர்ந்து சொன்ன விஷயம் ராமை திகைப்பில் ஆழ்த்தியது.

“அவரோட பேரு என்னன்னு நீ இன்னும் சொல்லவே இல்லையே மதுரா?!” அவள் மரியாதை கொடுத்து அழைக்கும்போதே உண்மைப் புரிந்து போக, அவளை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தான்.

யாழினி முகம் சட்டென்று செவ்வானமாக சிவக்க, “அம்மாடியோ எங்க மதுராவிற்கு வெக்கம் எல்லாம் வருதே” அவளைக் கேலி செய்ய, “அண்ணா” என்று சிணுங்கினாள்.

“சரி ஆள் யாரென்று சொல்லு, ஊருக்குப் போவதற்குள் பேசிப் பார்க்கிறேன். உங்கப்பாவிற்கு உள்ளூரில் தான் மாப்பிள்ளை வேண்டுமாம். அதனால் அவரும் திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்பு இருக்கு” என்றவன் இலகுவாக கூற, அடுத்து அவள் சொன்ன விஷயம் அவனை அதிர வைத்தது.

“அன்னைக்கு கூட ஹோட்டலில் உங்களிடம் அடையாளம் காட்டினேனே!” என்றவள் ஞாபகப்படுத்த, அவள் சொல்வது யாதவை தான் என்று உணர்ந்தான்.

“நீ யாதவை சொல்றீயா?!” அவன் சந்தேகமாகக் கேட்க, அவளும் தலையாட்டி வைத்தாள்.

ராம்குமாருக்கு நண்பனை நினைத்து பெருமையாக, ஏன் கொஞ்சம் கர்வமாகவும் இருந்தது. யாதவ் கொள்கையை நினைத்து மனம் பதறிப் போக, “நீ அவனைக் காதலிக்கிறாயா?!” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமானாள்.

“அதைக் காதல் என்று சொல்ல முடியாது. ஒரு இக்கட்டில் இருந்து என்னைக் காப்பாற்றினார். அன்னைக்கு என்னைக் காப்பாற்றாமல் போயிருந்தால், எங்கப்பா நடைபிணமாகவே மாறி இருப்பாரு” என்றவள் நிதர்சனத்தைக் கூற, அவனது அந்த கருத்தை ஏற்றுக் கொண்டான்.

“அந்நிய நாட்டில் தன் பெண்ணுக்கு இப்படியொரு சூழல் என்பதை அவராலும் தாங்கிக்க முடியாது. அதே சமயம் இந்த மாதிரி தவறுகள் எல்லா இடங்களிலும் நடந்துட்டு தான் இருக்கு” என்று ராம்குமார் சொல்ல, “உண்மைதான்” என்றாள்.

“சின்ன வயதில் இருந்தே யாரும் இல்லாத அனாதைபோல வளர்ந்த எனக்கு உறவுகளோடு இணைந்து வாழ ஆசை. அத்துடன், அம்மாவோட பிறந்தவங்க இன்னும் இந்தியாவில் தான் இருக்காங்களாம். சோ நான் படிப்பை முடிச்சிட்டு அங்கே வந்துவிடுவேன்” தன் முடிவினை அவள் தெளிவாகக் கூற, அவனுக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

சிறிது இடைவெளிவிட்டு மீண்டும், “கிருஷ்ணா மேல் இருக்கும் எண்ணம் மாற வாய்ப்பு இருக்கு அண்ணா. அவரின் மீது காதல் வந்தால், கட்டாயம் நான் உங்களிடம் சொல்வேன். நீங்க அவரை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் ஓகே” என்று சொல்ல, ராம்குமாரின் மனம் மெல்ல அமைதியடைந்தது.

யாதவ் மீது வைத்திருப்பது காதல் இல்லை, பின்நாளில் வந்ததாலும் வரலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொண்ட ராம், ‘இரு வேறு துருவங்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்தால், கட்டாயம் காதல் வர வாய்ப்பு இருக்கு. நாளை நடப்பதை இன்றே திட்டமிட்டு காய் நகர்த்த இது கதை இல்லையே!’ என்ற எண்ணத்துடன் நிமிரவும், வைஜெயந்தி காஃபி போட்டு எடுத்து வரவும் சரியாக இருந்தது.

தன் மன பாரத்தை ராமிடம் இறக்கி வைத்த யாழினியிடம், “இதனால் மட்டும்தான் கல்ச்சர் பிடிக்காமல் போனதா?” அவன் கேட்க, வைஜெயந்தி மகனைக் கேள்வியாக நோக்கினார்.

“அப்படி சொல்ல முடியாதுன்னா. அப்பா என்னைக் கொண்டுபோய் கிரீச்சில் விட்டுட்டுப் போயிடுவாங்க. நமக்கு தேவையானதை நம்மாலே செய்து வளரும்போது, அதில் ஒரு இயந்திர தன்மை வந்துடுது… உயிர்ப்பு இல்லாத வாழ்க்கை” அதைச் சொல்லும்போது, அவளின் கண்ணில் இருந்த வலி மற்றவர்களைப் பாதித்தது.

“இங்கே பல விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும், ஏதோவொரு பாதுகாப்பு இல்லாமல் வளர்ந்துவிட்டேனோ என்ற எண்ணம்” எங்கோ பார்த்தபடி சொன்னவள், கடைசியாக சொன்னது ராமிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

“தனிமையில் இருந்து தப்பிக்க ரேட்டிங் போலாம், பசங்க கூட சேர்ந்து லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழலாம் தான். வயதும், இளமையும் இருக்கும் வரைதான் எல்லாமே. அதுக்குப் பிறகு நமக்கு ஒரு நிரந்தரமான துணை வேண்டுமென்று சொல்லும்போது வாழ்க்கை நம் கையைவிட்டு போயிருக்கும்” நிதர்சனம் புரிந்து யாழினி பேச, வைஜெயந்தி அவளை இழுத்து கன்னத்தில் இதழ் பதித்தார்.

அவளது பக்குவமான பேச்சு மனத்தைக் கவர, “வாழ்க்கையை நாம் வாழப்போவது ஒரு முறைதான் அதை எப்படி வேண்டுமானாலும் வாழலாம்னு வாழ முடியாது. இப்படித்தான் வாழனும் என்ற வரைமுறையுடன் வாழ்ந்தால் தான், அடுத்த தலைமுறைக்கு நம்ம நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க முடியும்” யாழினி கூற, அவருக்கு ஹை – பைக் கொடுத்து சிரித்தாள் வைஜெயந்தி.

“என்மீது அன்பைப் பொழியும் அப்பாவைப் போலவே, ஒருத்தனை பார்த்து கல்யாணம் செய்வேன். அடுத்து பிறக்கின்ற குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கைப் பாதையை அமைத்து தரணும் என்ற முடிவில்  தெளிவாக இருக்கேன் அம்மா” என்ற யாழினியை வியப்புடன் ஏறிட்டான் ராம்குமார்.

“இதைவிட அது பேஸ்ட், அதைவிட இது பேஸ்ட் மலர் விட்டு மலர் தாவும் மனிதர்களைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்குன்னு சொல்றே! எண்ணம் போல வாழ வாழ்த்துகள் யாழினி” மனம் திறந்து வாழ்த்திய ராமிற்கு ஓரளவு மனம் அமைதியடைந்தது.

அவளது மனபாதிப்பை மாறிவிட்ட திருப்தியுடன் அவன் அமெரிக்காவிற்கு பாய் சொல்லிவிட, இந்தியா வந்தவனுக்கு சைகார்ட்டிஸ்ட் படிப்பின் மீது பிடிப்பு ஏற்பட்டது.

தன் விருப்பம்போல படிப்பை முடித்து வேலையைத் தொடர, அங்கே மதுர யாழினியும் மேல்படிப்பை முடித்துவிட்டு தந்தைக்கு பிஸ்னஸில் பக்கபலமாக இருந்தாள். யாதவிடம் மடைதிறந்த வெள்ளமாக அனைத்தையும் கொட்டித் தீர்த்த ராம்குமாரின் மனம் மெல்ல நடப்பிற்கு திரும்பியது.

தன்னவளின் மறுப்பக்கம் தாயில்லாத பிள்ளையாக அவள் தனித்தே வளர்ந்த விதம் அனைத்தையும் கேட்டு யாதவ் மனம் வலிக்க செய்தது என்றால், அவள் தன்னை உயிராக விரும்பியது புரிந்தபோது தான் செய்த தவறும் புரிந்தது.

 “உன்னை அவள் காதலித்தது உண்மைதான். ஆனால் என்னிடம் அன்னைக்கு மழுப்பலான பதில்தான் சொன்னாள். ஆனால் இப்போ நடப்பதைப் பார்த்தால், நீதான் ஏதோ தவறு செய்திருக்கேன்னு மட்டும் நல்ல புரியுது” என்ற நண்பனின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்தான்.

“அந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட எட்டு வருஷம் இருக்குமே. அப்போவே என்னைக் காதலித்திருக்கிறாள் என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு” என்றவனின் குரலில் காதல் வழிய, ‘இவங்களை வாழ்க்கையில் இணைத்துவிடு கடவுளே’ தெய்வத்திற்கு மனுப்போட்டார்.

“அங்கேயே வளர்ந்த அவளுக்கு டேட்டிங், லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை எல்லாம் சுத்தமாக பிடிக்காததால் தான். இந்திய கலாச்சாரத்தையும், தமிழையும் கற்றுக் கொண்டாள். நீ அவருக்கு நேர் எதிர் துருவம்” என்றவன் சொல்ல, அவன் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தான்.

தன்னவள் இதுவரைப்பட்ட கஷ்டத்தை எல்லாம் மறக்கடிக்கும் அளவிற்கு, அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக வேரூன்றியது.  ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் சத்தம்கேட்டு நண்பர்கள் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

“வாடா போய் பார்க்கலாம்” யாதவ் எழுந்து முன்னே செல்ல, ஆம்புலன்ஸ் கதவைத் திறந்தது. அதில் ஸ்டேச்சரில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த யாழினியைப் பார்த்தவுடன் அவன் உலகம் ஸ்தம்பித்துப் போனது.

அவனின் பின்னோடு வந்த ராம் அதிர்ச்சியுடன் நின்றிருந்த நண்பனைப் பார்த்தான். பிறகு அவன் பார்வை சென்ற திசையைக் கவனித்தவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.