NIRAL MOZHI -17.2

NIRAL MOZHI -17.2

வீட்டின் வெளியேஇந்த நொடியில்!

காவலர்களில் இருவர், வெளிப்புறம் இருந்த மாடிப் படிக்கட்டுகள் வழியே ஏற ஆரம்பித்தனர். காலடிச் சத்தம் கேட்காமல்… கையில் தயாராகத் துப்பாக்கி வைத்துக் கொண்டு… ஏறிக் கொண்டிருந்தனர்.

மற்ற இரு காவலர்களும், ‘எப்படியாவது பால்கனிக்குச் செல்ல வேண்டும்’ என்று முடிவெடுத்து, அதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வீட்டின் உள்ளே… இந்த நொடியில்!

‘ஐயோ’ என்று இருந்தது மிலாவிற்கு!

இருந்தும்… கதவின் இந்தப் பக்கம் நின்றபடி, ‘எப்படியாவது கதவை அடைத்து விட்டால் போதும்’ என்று மிலா போராடிக் கொண்டிருந்தாள்.

கதவின் அந்தப் பக்கம் இருந்தபடி, ‘நீ தப்பிக்கவே முடியாது’ என்பது போல், கதவை அடைக்க விடாமல்… நல் கேர் தடுத்துக் கொண்டிருந்தான்.

தோள்பட்டை வலியைப் பொறுத்துக் கொண்டு… உடலின் ஒட்டுமொத்த சக்தியையும் சேர்த்து… தன்னால் முடிந்த அளவு, இரு கைகளாலும் கதவைப் பிடித்துத் தள்ளினாள்.

ஆனால், நல் கேர்… மிக எளிதாக, அவளின் முயற்சியை வீணடித்துக் கொண்டிருந்தான்.

இதற்கிடையே… இறக்கி விடப்பட்ட ஜெர்ரி, அழுது கொண்டே அந்த அறையின் பால்கனி பகுதி நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.

கதவை அடைக்க முயன்றபடியே, “ஜெர்ரி… அங்க போகாத விழுந்திருவ… ஜெர்ரி போகாத” என்று மிலா கத்தினாள்.

மேலும், ‘ஹெல்ப்… ஹெல்ப்’ என்றும் கத்த ஆரம்பித்தாள். தொண்டை வறண்டிருந்ததால், இருமல் வந்தது. கத்துவதை நிறுத்திவிட்டு, கதவை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

அவள் படும் வேதனை,வலி, கஷ்டம்… அனைத்தையும் கண்ட நல் கேரின் முகம், ஒருவித திருப்தியைக் காட்டியது. அவள் அனுபவிக்கும் கஷ்டம் ஒவ்வொன்றும், நிகில் அனுபவிக்கும் கஷ்டமாகப் பார்த்தான்! ஆதலால்தான், இந்த திருப்தி!!

இருவருக்கும் இடையே கடுமையான போராட்டம், இப்படியே முற்பது நொடிகள் தொடர்ந்தன!!

முற்பத்தியோராவது நொடியில்…

நல் கேர் முகம் மாறியது. அதுவரை திருப்தியைக் காட்டிய முகம்… திகிலை உணர்ந்தது போல் மாறியது.

காரணம்?

கதவின் சிறு இடுக்கில் வழியே தெரிந்த போலீஸ் வேன்!!

நல் கேர்… தன் காதைக் கூர்மையாக்கிக் கொண்டு, வீட்டின் வெளியே நிலவும் நிசப்தத்தைக் கேட்டான்.

அடுத்த நொடியிலிருந்து, அடுக்கடுக்கான கேள்விகள் அவனிடம்!!

ஏன், தெருவில் செல்லும் வாகனத்தின் ஒலி கேட்கவில்லை?

ஏன், ஆட்களின் நடமாட்டமோ… பேச்சு சத்தமோ இல்லை?

வீட்டைச் சுற்றி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

தன்னைக் கைது செய்து, அழைத்துச் செல்லத்தான் இந்த காவலர் வாகனமா?

எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் என்று தெரிந்தது!

அது! போலீஸ் தன்னைச் சுற்றி வளைத்துவிட்டார்கள் என்பது!!

எப்படி? எப்படி, அதற்குள் தன் விலாசத்தைக் கண்டுபிடித்தார்கள்? இல்லை, இவர்கள் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள்!

அவன் கண்டுபிடித்திருப்பான்! அவன்! அவனேதான்!! நிகில்!!!

எப்படி அவனால் மட்டும் இவ்வளவு வேகமாக யோசிக்க முடிகிறது? என்று எரிச்சல் வந்தது.

எந்த வழியில், தன் விலாசத்தைக் கண்டுபிடித்திருப்பான் என்று தெரியவில்லை! இருந்தும், தான் மீண்டும் மீண்டும் அவனிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற மட்டும் புரிந்தது.

‘மாட்டிக் கொண்டால், வாழ்க்கை முழுவதும் சிறைதானா?’ என்ற எண்ணம் வந்து, நல் கேரின் கவனத்தைச் சிதறச் செய்தது.

கவனம் சிதறிய நொடியில், அவன் கதவைத் தடுத்து நிறுத்தவில்லை.

அதே நொடியில், மிலா தள்ளிய வேகத்தில் கதவு அடைக்கப்பட்டது.

‘என்ன நடந்தது? எப்படி நடந்தது?’ என்று மிலாவிற்குப் புரியவில்லை. இருந்தும், சட்டென கதவைத் தாழிட்டாள்.

ஒரு நொடிதான்! ஒரே ஒரு நொடிதான்!!

முடிந்தது! போராட்டம் முடிந்தது! இவ்வளவு நேரம், அவனுடன் நடத்திக் கொண்டிருந்த போராட்டம் முடிந்தது!!

கதவின் இந்தப் பக்கம்…

‘தப்பிக்க வழி கிடைத்திருக்கிறது’ என்ற எண்ணத்தில் மிலா நின்று கொண்டிருந்தாள்.

கதவின் அந்தப் பக்கம்…

‘தப்பித்துவிட்டாளா?’ என்ற எரிச்சலில்,கதவைத் ‘டமார்… டமார்’ என்று நல் கேர் பலமாகத் தட்டிக் கொண்டிருந்தான்.

வீடு இருந்த வீதியில் சற்று நொடிகளுக்கு முன்னால்!!

அதாவது மிலா ‘ஹெல்ப்… ஹெல்ப்’ என்று கத்திய நொடியில்…

மிலா கத்தியது, வெளியே நின்றிருந்த அனைவருக்கும் கேட்டது. அங்கே இருந்த அனைத்துக் காவலர்களும் வீட்டின் மேல்தளத்தைப் பார்க்க ஆரம்பித்தனர்

அந்த வீட்டின் சுற்றுச் சுவர் அருகே நின்று கொண்டிருந்த நிகிலுக்கும் கேட்டது. கேட்ட அடுத்த நொடியே, வீட்டின் கேட் அருகே வந்து நின்று… சத்தம் வரும் திசையைப் பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

நிகிலின் பரிதவிப்பைப் பார்த்த முரளி, அவன் அருகே வந்த நின்றார்.

அவன் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்தவர், “பயப்படாதீங்க நிகில்” என்றார்.

“ப்ச் முடியலை முரளி! சத்தியமா முடியலை!!” என்று கண்கள் கலங்கச் சொன்னவன், “நான்… உள்ளே போக முடியாதா?” என்று நடுங்கும் குரலில் கேட்டான்.

அவர் பதில் சொல்லவில்லை. அவராலும் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால், இது காவல் துறையினரின் வேலை!

அவனுக்கும் புரிந்தது. ஆதலால், அதற்கு மேல் எதுவும் கேட்கவில்ல!!

இருந்தும், தன்னிலையை மிகவும் அவஸ்தையாக உணர்ந்தான்.

வீட்டின் உள்ளேஇந்த நொடியில்!

கதவின் இந்தப் பக்கம்…

கதவைத் தாழிட்டவள், அப்படியே சரிந்து அமர்ந்து கண் மூடி அழ ஆரம்பித்தாள்.

அந்த நொடியில், பால்கனியில் குதித்திருந்த இரு காவலர்களில் ஒருவர் ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டார். ‘வேறு யாரிடமோ இருக்கிறோம்’ என்று தெரிந்ததும், ஜெர்ரியின் அழுகை அதிகரித்தது.

உடனே, மிலா திரும்பிப் பார்த்தாள். ஆச்சிரியம் அவளுக்கு! நடப்பது புரிந்தது! தங்களைக் காப்பற்ற வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது!!

ஓர் நிம்மதி! கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்!!

மற்றொரு காவலர், ‘எழுந்து வாருங்கள்’ என்று மிலாவைப் பார்த்துச் சைகை செய்தார்.

அவர் அப்படிச் சொல்லிய பிறகும்… எழுந்து கொள்ளாமல், கதவைக் கை காட்டினாள். அவளுக்குப் பயம். கதவை உடைத்துக் கொண்டு, நல் கேர் வந்துவிட்டால் என்ன செய்ய? என்ற பயம்!!

மிலா பயப்படுவது தெரிந்ததும், அவளின் அருகே சென்றார். கதவின் பக்கமாக நின்று கொண்டு, மிலாவைப் பால்கனிக்குச் போகச் சொன்னார்.

இதே நொடியில்… மேலும் ஐந்து காவலர்கள் பைப்பின் வழியாக ஏறி, பால்கனிக்குள் குதித்திருந்தனர்.

கதவின் அந்தப் பக்கம்…

நல் கேர், கதவைத் தட்டுவதை நிறுத்திவிட்டான். கதவின் அருகே காதை வைத்துக் கேட்டான். காவலர்களின் பூட்ஸ் சத்தம் கேட்டது.

அவ்வளவுதான்! தன் ஆட்டம் முடிந்ததுவிட்டது என்று தெரிந்தது! இல்லை, நிகில் முடித்துவிட்டான் என்று புரிந்தது.

அடுத்த நொடி, அறையின் மூலையில் சென்று… உடலைக் குறுக்கி அமர்ந்துகொண்டான்.

வேறு என்ன செய்ய முடியும்?

கதவின் இந்தப் பக்கம்…

மிலா எழுந்து பால்கனிக்குச் சென்றாள்.

இவர்கள் இருவரையும் பாதுகாப்பாகக் கீழே கொண்டு செல்ல வேண்டும். அதன்பின், நல் கேரை கைது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அடுத்த நொடியில், எப்படி இவர்களைக் கிழே கொண்டு செல்வது? என்று யோசித்தனர். அதற்கடுத்த நொடியில், கீழிருந்த காவலர் ஒருவரிடம் ஏணி ஏற்பாடு செய்யும்படி கூறினார்கள்.

பக்கத்து வீட்டில் இருந்து, கட்டடம் கட்டப் பயன்படுத்தப்படும் ஏணி கொண்டு வரப்பட்டது.

முதலில் ஒரு காவலர் இறங்கினார். அவருக்குப் பின்னே, ஜெர்ரியை வைத்துக் கொண்டிருந்த காவலர் இறங்கினார். திமிறிக் கொண்டிருந்தவனை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு, அந்தக் காவலர் கீழே இறங்கி வந்தார்.

இறங்கியதும், கீழே நின்றுகொண்டிருந்த காவலரிடம் ஜெர்ரியைக் கொடுத்துவிட்டு, மிலாவை அழைத்து வர மீண்டும் மேலே சென்றார்.

‘மீண்டும் வேறு யாரிடமோ இருக்கிறோம்’ என்று தெரிந்ததால், ஜெர்ரியின் அழுகை மேலும் அதிகமானது. உடனே, அந்தக் காவலர் கேட்டின் அருகே பரிதவிப்புடன் நின்று கொண்டிருந்த நிகிலை நோக்கிச் சென்றார்.

காவலர் அருகில் வந்ததும்… அவரது கைகளில் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்த ஜெர்ரியை, நிகில் வாங்கிக் கொண்டான்.

‘யார் கைகளில் இருக்கிறோம்’ என்று தெரிந்ததும்… ஜெர்ரி, ‘ப்பா’ என்று அழைத்து… நிகிலின் கழுத்தோடு கட்டிக் கொண்டு… அவனது தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்.

நிகில், அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். மேலும், பல முறை ஜெர்ரியை முத்தமிட்டான்.

ஜெர்ரியின் அழுகை கொஞ்சம் குறைந்தது. பின் , தோளில் இருந்து முகத்தை நிமிர்த்தி, நிகிலின் முகம் பார்த்தான்.

நிகிலும், அவன் முகம் பார்த்து, “ஜெர்ரி அழக் கூடாது. அப்பா வந்திட்டேன்-ல, இனிமே அழக் கூடாது” என்று சொல்லியதும், மீண்டும் தன் அப்பா தோளில் சாய்ந்து கொண்டான், ஜெர்ரி.

இப்படியே, மூன்று நான்கு முறை நிகழ்ந்தது.

இதே நொடிகளில்…

காவலர் ஒருவரின் உதவியுடன், மிலா கிழே இறங்கியிருந்தாள்.

‘அடுத்து என்ன செய்ய? நிகிலை எப்பொழுது பார்ப்போம்?’ என்று புரியாமல் தவித்தபடியே நின்று கொண்டிருந்தாள்.

அவள் தவிப்பைப் பார்த்தக் காவலர், கேட்டின் அருகே கை காட்டினார்.

அவர் கை காட்டிய திசையில், மிலா பார்த்தாள்.

அங்கே நிகில் நின்றுகொண்டிருந்தான்!  மிலாவைப் பார்த்து, ‘வா’ என்று சைகை செய்தான்.

அவனைப் பார்த்ததும், ஓடி வரத்தான் மனம் நினைத்தது. ஆனால், மனம் நினைத்த அளவிற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. எனினும், வேக வேகமாக நடந்து கேட்டைக் கடந்து வந்து, அவன் முன்னே நின்றாள்.

மூன்று நாட்களுக்குப் பின்னர், இருவருக்கும் கொஞ்சம் நிம்மதியான தருணம் இது!

இந்த நொடியில்… மேல்தளத்தில் இருந்த காவலர்களுக்கு, ‘விக்டிம் சேஃப். அட்டாக் பண்ணுங்க’ என்ற தகவல் கொடுக்கப்பட்டது.

வீட்டின் மேல்தளத்தில்… இந்த நொடியில்!

பால்கனி இருந்த அறைக் கதவின் தாழ் திறக்கப்பட்டு, இரு காவலர்களும் உள்ளே நுழைந்தனர்.

நல் கேர், ‘என்ன மாதிரியான தாக்குதலில் ஈடுபடுவான்?’ என்று தெரியாது! ஆதலால், இரு காவலர்களும் பதுங்கியவாறு உள்ளே நுழைந்தனர்.

அவனிடம், ‘என்னென்ன ஆயுதம் இருக்கிறது?’ என்று தெரியாது! எனவே, சுடுவதற்குத் தயாரான நிலையிலே உள்ளே நுழைந்தனர்!!

அவன், ‘எப்படிப் பட்டவன்?’ என்று தெரியாது! ஆகையால், மிகுந்த எச்சரிக்கையுடன் நுழைந்தனர்!!

நல் கேரை தேடி… காவலர்களின் கண்கள் அறையைச் சுற்றி வந்து, அவன் அமர்ந்திருக்கும் இடத்தில் நின்றது.

இரு காவலர்களுக்கும் ஒரு சிறு அதிர்ச்சி!

‘என்னென்ன ஆர்ப்பாட்டம் பண்ணுவானோ?’ என்று நினைத்து வந்தவர்களுக்கு… மூலையில் கூனிக் குறுகி அமர்ந்திருப்பவனைக் கண்டதால் வந்த அதிர்ச்சி, அது!

ஆர்ப்பாட்டம் செய்தவனை, ஏற்கனவே நிகில் அடக்கியிருந்தான்… அள்ளிச் செல்ல மட்டுமே வந்திருப்பவர்கள், இவர்கள்!

நேற்றிரவு, நிகில் தோற்கடித்துச் சாய்த்தவனை… தூக்கிச் செல்ல மட்டுமே வந்திருப்பவர்கள், இவர்கள்!!

அது அவர்களுக்குத் தெரியாதல்லவா? ஆதலால் அதிர்ச்சி!!

அடுத்த நொடியில்…

பால்கனியில் இருந்த காவலர்களைச் சைகையால் உள்ளே வரச் சொன்னார்கள்.

அறையின் மூலையில் உட்கார்ந்திருந்த நல் கேர் முன்னே, துப்பாக்கி ஏந்திய காவலர் சென்று நின்றார். ஐந்து பேரில் ஒரு காவலர் சென்று, அவனது கைகளுக்கு விலங்கு பூட்டினார்.

மற்றொரு காவலர் சென்று, முன்பக்க கதவைத் திறந்து விட்டார். மேலும் இரு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உள்ளே நுழைந்தனர்.

இரண்டு காவலர்கள் சேர்ந்து அவனை எழுப்பினார்கள்.

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சூழ… மாடிப்படிகள் வழியே கீழே அழைத்து வரப்பட்டான்.

அங்கே நின்று கொண்டிருந்த கைதிகள் கூட்டிச் செல்லப்படும் வேனில், நல் கேர் ஏற்றப்பட்டான். ஒரு கையில் இருந்த விலங்கைக் கழட்டி… வேனில் இருந்த கம்பியில் மாட்டினார்கள்.

மூன்று காவலர்கள் மற்றும் இரண்டு ரைஃபிள் ஏந்திய காவலர்கள் காவலாக இருக்க… வேனின் கதவுகள் அடைக்கப்பட்டன.

வேன் கிளம்பியது.

அதன் பின்னே, அந்தப் பகுதியின் துணை ஆய்வாளர் மற்றும் சில காவலர்கள் பின்தொடர்ந்தனர்.

முரளி மற்றும் துணை ஆணையர் கிளம்பிவிட்டார்கள். மற்ற இடங்களில் நின்று கொண்டிருந்த, சிறப்பு பிரிவு காவலர்கள் கிளம்பிச் செல்ல ஆரம்பித்தனர்.

அப்பகுதி காவல் நிலையத்தின் ஆய்வாளர் மேற்பார்வையில், நல் கேரின் வீட்டைச் சோதனை செய்யும் பணி நடக்க ஆரம்பித்தது.

வீடு இருந்த வீதியில்சற்று நொடிகளுக்கு முன்!

அதாவது மேல்தளத்தில், நல் கேர் மீது ‘அட்டாக்’ ஆரம்பித்த நொடியில்…

மூன்று நாட்களுக்குப் பின்னர், இருவருக்கும் கொஞ்சம் நிம்மதியான தருணம் இது!

நெற்றியில் இருந்த காயம். கைகளில் இருந்த சிராய்ப்புகள்! ஆடையில் இருந்த ரத்தக்கறை! முகத்தில் இருந்த வேதனை! உடலில் இருந்த சோர்வு!

மேலும்… தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால், இடது கையை ஒருமாதிரி வைத்துக் கொண்டிருந்தாள்.

இப்படி, எல்லாவற்றையும் நிகிலின் கண்கள் கவனித்தன.

அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் நினைத்தவுடன், சுற்றி நிற்கும் ஆட்களை மறந்து… சட்டென நிகிலின் நெஞ்சில் அழுத்தமாகச் சாய்ந்து கொண்டு, “நிகில்” என்று மட்டும் சொல்லி, மிலா அழ ஆரம்பித்தாள்.

அவனும் சூழலைக் கவனிக்கும் நிலையில் இல்லை. எனவே, ஒருகையால் இறுக்கமாக அணைத்துக் கொண்டு, அவள் தலையை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தான்.

“உனக்கு சரியாயிடுச்சா? கால் எப்படி இருக்கு நிகில்?” என்றாள் அழுகையின் ஊடே!

“ம்ம் பரவால்ல” என்றான்.

“இனிமே என்னை தனியா எங்கேயும் போகச் சொல்லாத. நான் எங்கேயும் போக மாட்டேன்” என்று பயத்தில் பதற்றத்துடன் சொன்னாள்.

“ம்ம்” என்று மட்டும் சொன்னான்.

 “ஷில்பாவை ஒரு தடவை பார்க்க முடியுமா நிகில்?” என்று நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.

நிகில் எதுவும் சொல்லவில்லை.

“கை ரொம்ப வலிக்குது நிகில்” என்று தோள்பட்டையைக் காட்டி அழுதாள்… “இங்க ரொம்ப வலிக்குது நிகில்” என்று நெற்றிக் காயத்தைக் காட்டி அழுதாள்… “ஜெர்ரி ரொம்ப அழுதான். என்னால சமாளிக்கவே முடியலை” என்று கண்ணீர் வடித்தாள்… “ரொம்ப டயர்டா இருக்கு நிகில்” என்று சொல்லி, அவன் மேல் சாய்ந்து நின்றாள்.

‘ச்ச்சே’ என்று தன்னை நொந்து கொண்டவன், “வா, ஃபர்ஸ்ட் ஹாஸ்ப்பிட்டல் போகலாம்” என்று சொல்லி, ‘நான் கிளம்புகிறேன்’ என்பது போல் முரளியைப் பார்த்தான்.

அடுத்த நொடியில்…

ஒரு கையில் ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு… மறு கையால் மிலாவை நன்றாக அணைத்துப் பிடித்துக் கொண்டு… ஆம்புலன்ஸ் நோக்கி நடந்தான்.

<NIKHIL VS NULL CHAR.> என்ற விளையாட்டு முடிந்து விட்டது. தன்னுடன் போட்டியிடுபவன், எப்படி இருப்பான்? என்று தெரியாமலே, போட்டியை வென்றிருக்கிறான், நிகில்!

NOTE :

This episode may give the feel like end of story. But, one more episode will come.

Leave a Reply

error: Content is protected !!