NIRAL MOZHI -18.2

NIRAL MOZHI -18.2

சைபர் கிரைம் யூனிட்

மூன்று பக்கமும் முற்றிலும் அடைக்கப்பட்ட அறை. ஒருபக்கம் இருந்த சுவரில் கதவு மட்டும் இருந்தது. மற்றபடி எந்த ஒரு காற்றோட்ட வசதியும் இல்லாத அறை. கொஞ்சம் சிறிய அறைதான்!

அறையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த பெரிய மேசை! அதன் முன்னே நாற்காலிகள்!!

அதில் சைபர் கிரைம் யூனிட்-டை சேர்ந்த அலுவலர்கள் இருந்தார்கள்.

இரண்டு நிமிடங்களில்…

இரண்டு காவலர்கள் நல் கேரைக் கூட்டி வந்து, அந்த அலுவலர்கள் முன் அமர்த்திவிட்டுச் சென்றார்கள்.

விசாரணைத் தொடங்கியது…

அவனைப் பற்றி முதலில் சொல்லச் சொன்னார்கள்.

அவன் பெயரைச் சொன்னான். கணினி சம்பந்தமான அவனது படிப்புகளைப் பற்றிச் சொன்னான். தான், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதைச் சொன்னான். இப்படி, அவனைப் பற்றி அடிப்படையான விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

அடுத்த கேள்வி, ‘எப்போதிலிருந்து இப்படிச் செய்கிறாய்?’ என்பதுதான்.

“ஃபர்ஸ்ட் சின்ன சின்ன சைபர் கிரைம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்புறம் டார்க் வெப்-ல மால்வேர் சாப்ட்வேர் எழுதி செல்(sell) பண்ணிக்கிட்டு இருந்தேன்.

அப்புறம் டார்க் வெப்-லயிருந்து ஹேக்கர்ஸ் ஹயர் பண்ணுவாங்கனு தெரிஞ்சது. ஸோ, நானே அட்டாக்-ம் பண்ண ஆரம்பிச்சேன்” என்றான் அடங்கிப்போன குரலில்.

அடுத்த கேள்வியாக, ‘ஏன் பிட்காயின்?’ என்று கேட்கப்பட்டது.

“ஃபர்ஸ்ட்…என்னோட இன்கம் கிரிப்டோ கரன்சியா(Crypto Currency) இருக்கணும்னு நினைச்சேன்.

அதிலயும் மத்த கிரிப்டோ கரன்சியை விட, பிட்காயின் பெட்டர். ஏன்னா, கிரேட்டர் லீக்யூடிட்டி ரேட்(Greater Liquidity Rate)

மத்த கிரிப்டோ கரன்சியை பியட் கரன்சியா(Fiat Currency-அரசாங்கம் வெளியிடும் பணம்) மாத்தும்போது, அதோட வேல்யூ(பணமதிப்பு) குறையும். பட், பிட்காயின் அப்படியில்லை! எந்த நாட்டோட கரன்சியா மாத்தினாலும், அதோட வேல்யூ மாறாது.

செகன்ட், பிட்காயின் பேய்மென்ட் அக்சப்ட்டன்ஸ் ரேஷியோ (Payment Acceptance Ratio – எளிதாக இணையத்தில் பொருட்கள் வாங்க முடியும்) அதிகம்.

தேர்ட், பிட்காயின் ட்ரான்ஸாக்ஷன் பீ(Transaction Fee), ரொம்பக் கம்மி!

ஃபோர்த், இந்தியன் கரன்சியா இருந்தா, பேங்க் அக்கௌன்ட் தேவை. அங்க என்னோட ஐடென்டிட்டி தெரிய வரும். அக்கௌன்ட்-க்கு வர்ற மணிக்கு இன்கம் டேக்ஸ் பே பண்ணனும். சரியா கணக்கு காட்டணும்.

பட், பிட்காயின் அப்படியில்லை. என்னோட ஐடென்ட்டியை மறைக்க முடியும். அன்ட் இதை வச்சி என்னை யாரும் ட்ரேஸ் பண்ண முடியாது.

பிஃப்த், மத்த பியட் கரன்சி(Fiat Currency) மாதிரி, இதுல பிளக்சுவேஷன் (Fluctuation) இருக்காது. பிட்காயின் வேல்யூ இன்கிரீஸ் ஆகிட்டேதான் போகும்.

சிம்ப்ளி, பிட்காயின் என்னோட டிஜிட்டல் அஸெட்(Digital Asset). இன்னைக்கு கோல்ட்… லேண்ட்-ல இன்வெஸ்ட் பண்ற மாதிரி, இன் பியூச்சர் பிட்காயின்-ல இன்வெஸ்ட் பண்ணுவாங்க. அப்போ என்கிட்ட அஸெட் அதிகமா இருக்கும்” என்று வரிசைப்படுத்தியவன், “இப்படியெல்லாம் நினைச்சேன்” என்றான் வருத்தமாக!

எதிர்காலத்திற்காக யோசித்து யோசித்து செய்ததையெல்லாம்… எதிர்பாரா நேரத்தில்… எவனென்றே தெரியாத ஒருவன் வந்து, எதுவுமே இல்லாமல் செய்துவிட்டான் என்ற வருத்தம்… அவன் குரலில் இருந்தது.

‘ஹேக்கிங்! மால்வேர் அட்டாக்! அதெல்லாம் எப்படி??’  என்ற கேள்வி கேட்கப்படவும்,

ஹேக் செய்த விவரங்கள் அனைத்தும் சொன்னான்.

சற்று நேரத்திற்குப் பின், விசாரணை முடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.

முரளி, “கோர்ட்-ல ப்ரோடுய்ஸ் பண்ணனும். என்ன பார்மாலிட்டீஸோ, அதைப் பண்ணுங்க” என்று தன் குழுவினர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

மீண்டும் கைப்பேசி உரையாடல்…

“இதைச் சொல்லத்தான் கால் பண்ணேன்” என்றார் முரளி.

“ஓகே முரளி! ஆனா, தமிழ்நாட்டில, எந்தக் காம்பெட்டிட்டர் இன்டஸ்ட்ரி இந்த மாதிரி பண்ணச் சொன்னாங்கனு தெரியுமா?” என்று கேட்டான்.

“இங்க மணி ட்ரான்ஸ்பர் நடக்கலை, நிகில்! அன்ட், இன்டஸ்ட்ரி பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்றது, இன்டஸ்ட்ரி டீலிங் எல்லாம் அந்த டார்க் வெப் ஏஜென்ட்தான் பார்த்திருக்கான். ஸோ, அடுத்ததா அவனை விசாரிக்கணும்”

“ம்ம்ம்” என்றவன், “அப்போ, நாளைக்கு கோர்ட்-ல ப்ரோடுய்ஸ் பண்ணப் போறீங்களா?” என்று கேட்டான்.

“ஆமா நிகில்” என்றார்.

அதன்பின்னும் துறை சார்ந்த விடயங்கள் பேசிவிட்டு, இருவரும் அழைப்பைத் துண்டித்தனர்.

பேசி முடித்ததும், நிகில் அமைதியாக நின்றான்.

‘விபத்து நடந்துதான், ஷில்பாவிற்கு காயம் ஏற்பட்டு இருந்திருக்கிறது’ என்று நிகிலிற்குத் தெரிய வந்திருந்தது.

அப்படியே விட்டுவிட்டுச் சென்றருக்கலாமே!? எப்படியாவது காப்பாற்றியிருப்பேன். இல்லை, யாராவது காப்பாற்றியிருப்பார்கள்… என்று மனம் துடித்தது! கண்கள் கலங்கியது!!

‘ஏன் இப்படிச் செய்தான்?’ என்று நினைக்கும் போதே, கலங்கிய கண்கள் கோபத்தைக் காட்டின!!

சைபர் கிரைம் குற்றத்திற்காக, அதிகபட்சமாக இருபது வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கும். மேலும், கொலை குற்றத்திற்காக… ஆயுள் தண்டனை கிடைக்கும்.

வாழ்க்கை முழுவதும், நல்ல கேர் சிறையில்தான் கழிக்க வேண்டும்!

இதெல்லாம் தெரிந்தும், நிகிலின் மனம் ஆற மறுத்தது. அன்று… இதே இடத்தில் நின்றுதானே சொன்னாள், ‘இன்னும் நிறைய அச்சீவ் பண்ணனும்’ என்று! நினைத்துப் பார்த்தவனின் கண்கள் மீண்டும் கலங்கின.

அதுவரை தன் போக்கில் விளையாடிக் கொண்டிருந்த ஜெர்ரி, நிகிலின் அமைதியைக் கண்டு, அவன் அருகே வந்து, ‘ப்பா’ என்று அழைத்து… அவனது கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு நின்றான்.

ஜெர்ரியின் செயலைக் கண்டதும், தன் கலக்கத்தை மறைத்துக் கொண்டு, ‘வா, உள்ளே போகலாம்’ என்று சொல்லி, அவனைத் தூக்கிக் கொண்டு, வீட்டிற்குள் சென்றான்.

நாட்கள் நகர்ந்தன.

ஒரு பத்து நாட்கள் கடந்திருந்தன. நிகிலின் அண்ணன்-கள் இருவரும், துபாய் சென்றிருந்தனர். சிறிது நாட்கள் நிகிலுடன் இருந்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்து, மற்ற அனைவரும் டெல்லி செல்லவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் இருந்த அனைவரும், ஷில்பாவின் நினைவிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தனர்.

நிகிலின் உடல்நிலை முழுவதுமாகத் தேறியிருந்தது.  மிலாவின் தோள்பட்டைக் காயம் குணமாகவில்லை. மற்ற காயங்கள் ஓரளவு குணமாகியிருந்தது.

ஆனால், மிலா மற்றும் ஜெர்ரி இருவருமே… அன்றைய இரவின் சம்பவங்களை நினைத்து, நிறைய பயந்தார்கள். நிகில்தான், இருவரையும் கவனித்துக் கொண்டான்.

அடுத்து ஒரு பத்து நாட்கள் கடந்திருந்தது.

இரவு நேரம், நிகில் வீடு!

அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, அவரவர் வேலையில் மூழ்கி இருந்தனர். மிலா, திலகத்தின் மடியில் படுத்துப் பேசிக் கொண்டிருந்தாள். நிகில், கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மீராவும், ஆஷாவும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். மீராவின் மகளும், ஜெர்ரியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதுவரை யோசித்துக் கொண்டிருந்த பாமினி, “ஆஷா, அந்த டீவியை ஆஃப் பண்ணு. நிகில்கிட்ட பேசணும்” என்றார்.

ஆஷா டீவியை ஆஃப் செய்ததும், ‘என்ன பேசப் போகிறார்?’ என்ற கேள்வியுடன், அனைவரும் பாமினியைப் பார்த்தனர்.

நிகிலும்… தலை நிமிர்ந்து பார்த்து, “என்னம்மா பேசணும்?” என்று கேட்டான்.

“அது.. உன் வேலை விஷயமா பேசணும்” என்றார்.

“ம்ம்ம், பேசுங்க” என்றான்.

“இந்த எழுதுற வேலை வேண்டாம் நிகில். வேற நல்ல வேலை தேடிக்கோ-டா” என்றார், அவன் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் திருப்தியில்லாமல். என்றுமே அவர் அப்படித்தானே!

“இல்லை-ம்மா! இந்த வேலையே போதும்” என்று மறுத்துவிட்டு, மீண்டும் கைப்பேசியைப் பார்க்க ஆரம்பித்தான்.

“நிகில்” என்று மீண்டும் அழைத்தார்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தான்.

“அண்ணன்-கிட்ட சொல்லி, துபாய்-ல ஒரு வேலை வாங்கித் தரச் சொல்றேன். நீ துபாய் போ, மிலாவும் ஜெர்ரியும் டெல்லி-ல வந்து எங்ககூட இருக்கட்டும்” என்றார்.

சட்டென திலகத்தின் மடியிலிருந்து மிலா எழுந்தாள். பின், “நிகில்” என்று கலக்கமாக அழைத்துக் கொண்டே சென்று, அவன் அருகே அமர்ந்து கொண்டாள்.

“என்ன மிலா?” என்று அக்கறையாகக் கேட்டான்.

“நாங்க ரெண்டு பேரும் உன்கூடத்தான் இருப்போம். உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டோம்” என்று நிகிலின் கைகளைப் பிடித்துக் கொண்டு, கோரிக்கை வைத்தாள்!

‘ம்ம்ம்’ என்று தலையாட்டினான்.

“அவன் அண்ணங்க ரெண்டு பேரும், டெல்லி-ல வீடு வாங்கிட்டாங்க. அவனும் வீடு வாங்க வேண்டாமா?” என்று பாமினி, மிலாவைப் பார்த்துக் கேட்டார்.

‘என்ன பதில் சொல்லவென்று?’ தெரியாமல்… மிலா, நிகிலைப் பார்த்தாள்.

“நிகிலும் வாங்குவான்-னு சொல்லு” என்று நிகில் சொல்லிக் கொடுத்ததும், “ஹாங், நிகிலும் வீடு வாங்குவான்” என்று பாமினியிடம் அப்படியே சொன்னாள் மிலா.

“எப்போ?” என்றார் பாமினி விடாமல்!

மீண்டும், மிலா நிகிலைப் பார்த்தாள்.

“இந்த வருஷம் வாங்கிடுவான்னு சொல்லு” என்று நிகில் சொன்னதும், “ஹாங், இந்த வருஷம் அத்தை” என்றாள்.

“வேற நல்ல வேலை பார்த்தா… உனக்கு, ஜெர்ரிக்கு இன்னும் நிறைய செய்வான்” என்று மிலாவை மாற்றப் பார்த்தார்.

மிலா, தன் பக்கமாக திரும்புவதற்குள்… “இப்ப செய்றதே போதும்-னு சொல்லு” என்றான் நிகில். அதையும், “ஹாங், இதுவே போதும்” என்றாள் மிலா.

அதற்கு மேல், ‘எப்படிப் பேசவென்றே?’ பாமினிக்குத் தெரியவில்லை. அமைதியாகிவிட்டார். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த, மீராவும்… ஆஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர்.

பாமினி அமைதியானதும், “சரி!? நிகில் எங்கயும் போக வேண்டாம். மிலா, நீ வேலைக்குப் போ!” என்று திலகம் ஆரம்பித்தார். என்றுமே இவர் இப்படித்தானே!

இதற்கும்… மிலா, நிகிலைப் பார்த்தாள்.

“எனக்கு வேலைக்குப் போகணும்னு தோணிச்சி-னா, போவேன்னு சொல்லு” என்று நிகில் சொன்னதும், “ஹாங்! தோணிச்சின்னா வேலைக்குப் போவேன்-ம்மா” என்றாள் மிலா.

“அடப்பாவி!! அம்மாவை விட்டுட்டு வர மாட்டேன்னு சொன்ன பொண்ண… எப்படிப் பேச வைக்கிற?” என்று, அவர்கள் உரையாடலின் இடையே ஆஷா புகுந்தாள்.

“அச்சச்சோ! இல்லை அம்மா! அப்படியில்லை” என்று சொல்லிக் கொண்டே… மீண்டும் தன் அம்மாவின் மடியில் சென்று, மிலா படுத்துக் கொண்டாள்.

“ஏன் அண்ணி இப்படி?” என்றான் நிகில்.

“கரெக்ட் ஆஷா” என்ற திலகம், ” ‘சரி அம்மா’-ன்னு மட்டும் சொல்லிக்கிட்டு இருந்து பொண்ணு நிகில். ஆனா, இன்னைக்கு இப்படி…” என்று பாதியிலே பேச்சை நிறுத்தினார்.

“ஐயோ! சாரி அத்தை!!” என்று மெல்லச் சிரித்தவன், “இப்போ எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கிறீங்க? இருக்கிற வேலை போதும். ஆளை விடுங்க!” என்று இன்னும் சிரித்தான்.

முழுதாய் ஒரு நிமிடமாவது, அனைவரும் நிகிலை பார்த்துக் கொண்டிருந்தனர். வெகு நாட்களுக்குப் பிறகு, சகஜமாக பேசிச் சிரிக்கிறான். இதுநாள் வரை, அவனிடம் ஒரு இறுக்கம் இருந்தது.

மிலா, ஜெர்ரியை நன்றாகக் கவனித்துக் கொண்டாலும்… அவர்கள் நால்வருக்கும் ‘என்ன தேவை?’ என்று பார்த்துப் பார்த்துச் செய்தாலும்… ஷில்பாவை நினைத்து, அவனிடத்தில் ஒரு இறுக்கம் இருந்து கொண்டே இருந்தது.

அதனால்தான்… அவனுக்காகத்தான், டெல்லி செல்லாமல் இருக்கின்றனர். ஷில்பாவிற்கு நடந்த நிகழ்வுகளில் இருந்து… சிறிதளவாவது, அவன் மீண்டு வர வேண்டும்! அதன்பிறகுதான் மற்றதெல்லாம் என்று முடிவெடுத்திருந்தனர்!!

இதோ! இன்று லேசாகச் சிரிக்கிறான்!! இனி, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துவிடுவான் என்ற நிம்மதி, அனைவர்க்கும் வந்தது!!

அதே நிம்மதியான மனநிலையுடன்… சற்று நேரம் பேசிவிட்டு, அனைவரும் உறங்கச் சென்றுவிட்டனர்.

நிகிலின் அறை

இரவு வெகு நேரமாகியிருந்தது. இன்னும் மூவரும் தூங்கவில்லை.

நிகில், தன் கணினியில் மின்னஞ்சல் பார்த்துக் கொண்டிருந்தான். மெத்தையில் படுத்துக் கொண்டு, மிலா, ஜெர்ரி இருவரும் பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இரண்டு நிமிடங்களில்…

நிகில் வந்து படுத்ததும்… ஜெர்ரி, தன் அப்பாவின் மேல் ஏறி விளையாடத் தொடங்கினான். மிலா, நிகிலிடம் பேசிக் கொண்டே இருந்தாள்.

சற்று நேரத்தில், ஜெர்ரி ஒரு புறம்… மிலா ஒரு புறம்… என்று நிகிலின் கைவளைவிற்குள் படுத்தபடியே இருவரும் உறங்கிப் போயிருந்தனர்.

நிகில், தனக்கு வந்த மின்னஞ்சல் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அந்த மின்னஞ்சல் அவனது தலைமையிடம் இருந்து வந்திருந்தது.

இந்தியாவில் இருக்கும், சிறு தனியார் மருத்துவமனைகளின் நோயாளிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய தரவுத்தளங்கள் குறியாக்கம் (Encrypt) செய்யப்படுகிறது. பின், தாங்கள் கேட்கும் பணம் தந்தால்… அதை மறைவிலக்கம்(Decrypt) செய்து தருவதாகச் சொல்லி, மின்னஞ்சல் வருகிறது.

இது… நோயாளிகளின் உயிர் சம்பந்தமான விடயம் என்பதால், மருத்துவமனைகள் பணம் செலுத்தி, தங்களது மறைவிலக்கம் செய்த தரவுகளைப் பெற்றுக் கொள்கின்றன.

‘யார் இப்படிச் செய்கிறார்கள்?’ என்று நிகில் கண்டறிய வேண்டும்!

இதுதான் மின்னஞ்சல் செய்தி!!

நிகில் யோசித்தான்.

இது ரேன்சம்வேர் அட்டாக்! (Ransomware Attack)

அதாவது, முக்கியமான தரவுகளை குறியாக்கம் செய்துவிட்டு, பின் மறைவிலக்கம் செய்து தருகிறோம் என்று சொல்லி பணம் கேட்பது… ரேன்சம்வேர் அட்டாக்!!

ஆனால், அதெப்படி முடியும்?

கிளியர் வெப்(Clear Web), டீப் வெப்(Deep Web), டார்க் வெப்(Dark Web)… என்று மாற்றி மாற்றி நிகில் யோசித்தான்.

இது போன்ற விவரங்கள் எல்லாம் டீப் வெப்-லதான் (DeepWeb) இருக்கும். சரியான லாகின் ஐடி, கடவுச்சொல் இல்லாமல், இந்த டீப் வெப் தளங்களுக்குள் நுழையவே முடியாது.

பின், எப்படி நுழைந்தார்கள்?

‘என்ன செய்ய? எப்படி அவர்களை நெருங்க??’ என்று நிகில் யோசித்தான்.

ஆம்! நிகில், மீண்டும் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்!

இம்முறை, <நிகில் VS யாரோ>!!

**** Program Terminated!! ****

Leave a Reply

error: Content is protected !!