Nizhale Nijamaai full novel

நிழலே நிஜமாய் – 1

வாழ்வின் சில போதுகளில் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுவதுண்டு. எண்ணங்களுக்கு சக்தி உண்டாம். நேர்மறை எண்ணங்கள் தன்னம்பிக்கையை கொடுக்கும். எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை கொடுக்கும். எதிர்மறை எண்ணங்கள் அச்சத்தை கொடுக்கும். நம்மை பலவீனப்படுத்தும்.

“ஒருவேளை அப்படி நடந்துவிட்டால்?” கலக்கத்தை உண்டாக்கும் இந்த கேள்வி மனிதனை கலவரமடையச் செய்கிறது.

அவன் பல ‘அப்படி’க்களை யோசித்தான். மனதிற்குள் எண்ணங்களுடன் போர் செய்தான். சிந்தனையை மாற்ற முயற்சித்தான்.

என்ன முயன்றும் தனக்குள் எழும் நடுக்கத்தை குறைக்க முடியவில்லை. அது அவன் கார் ஓட்டும் விதத்திலும் பிரதிபலித்தது.

சாலையில் கவனம் வைக்க வேண்டுமென்று தன் எண்ணங்களை பின்னுக்கு தள்ளி கண்களை இறுக மூடி திறந்தான். இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை இதையே திரும்ப திரும்ப செய்தும் பலனில்லை.

சாலையோரம் வண்டியை நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில நிமிடங்களை எடுத்துக் கொண்டான். நினைவு முழுவதும் அவளையே சுற்றி வந்தது.

இதற்கு மேல் தாமதிக்க முடியாதென்று காரை விரட்டியவன் மருத்துவமனைக்கு வந்துதான் நிறுத்தினான். பார்க்கிங்கில் காரை நிறுத்தி முன்னாலிருந்த கட்டிடங்களையே வெறித்தவனுக்கு அங்கிருந்து ஓடி மறைந்துவிட ஆசை தான்.

பெருமூச்சுடன் கதவை திறக்க கையை நீட்டினான்… முழுதாக நீட்ட முடியாமல் கையிலிருந்த கட்டு தடுத்தது. கையை மடக்கி கட்டுப் போட்டு கழுத்தில் மாட்டியிருந்தனர்.

“ஹேர்லைன் கிராக் தான். 2 வீக்ஸ் கட்டு போடு… அதுக்கப்பறம் தேவைப்பட்டா கண்டின்யூ பண்ணிக்கலாம்”

நேற்றிரவு மருத்துவர் கூறியது நினைவு வந்தது. வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக கட்டுப் போட கையை நீட்டினான். வலது கையில் கட்டை வைத்துக் கொண்டு தன் வேலைகளை எப்படி செய்வது? கார் ஓட்டக் கூட முடியாதே…

“ஏன் நீ கார் எடுத்துட்டுப் போற? கால் பண்ணி சொன்னா அருள் வந்துக் கூட்டிட்டுப் போவான்ல? பேருக்குன்னு வீட்டுல ஒரு டிரைவர் வெச்சுக்கிட்டு நீயே தான் கார் எடுக்கணுமா? அதுவும் இந்த நெலமையில?”

காலை தந்தை கூறியது சரியென்றுப்பட்டாலும் அப்போதிருந்த மனநிலையில் தனிமையில் இருக்க விரும்பியவன் மறுப்பாக தலையசைத்து காரை எடுத்து வீட்டுக்கு சென்றுவிட்டான்.

இப்போது கதவை திறக்க வேண்டும். உள்ளே செல்ல வேண்டும். அவளை காண வேண்டும். இது எல்லாவற்றையும் விட தனக்கு அவள் வேண்டும். அவளில்லாமல்…

மேலே யோசிக்காமல் கொஞ்சம் திரும்பி அமர்ந்தவன் இடது கையால் கதவைத் திறந்து காரிலிருந்து இறங்கி கதவை மூடி லாக் செய்தான்.

ஆழ மூச்சை எடுத்து நடக்க ஆரம்பித்தவனின் ஒவ்வொரு அடியிலும் அவன் நடையின் வேகம் கூடியது.

“எப்பயுமே நீங்க நடக்குறது அழகு. கம்பீரமா இருக்கும். எனக்கு பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்”

அவள் குரல் காதில் கேட்க நடையின் வேகம் இன்னும் கூடியது.

நடக்க நடக்க தலைக்குள் சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி… தலையில் கை வைத்தான். நெற்றியை சுற்றி போடப்பட்டிருந்த கட்டில் கை பட்டது. ஒருமுறை தலையை அழுத்தி விடுவித்தவன் அதன் பிறகு வலியை கண்டுக் கொள்ளவில்லை.

அவளிருந்த அறையை நெருங்க நெருங்க மனம் பதைக்கத் துவங்கியது. அவனை முதலில் கண்டது அவனுடைய தந்தை சந்திரன் தான்.

தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து மகனருகில் வந்து, “குளிச்சுட்டியா? சாப்பிட்டியா? அதுக்குள்ள எதுக்கு வந்த? கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு வந்திருக்கலாமே?” என்றார்.

அவரை பார்த்தான். பதில் கூறவில்லை. அவர் அவனுடைய பதிலை எதிர்ப்பார்க்க்கவுமில்லை.

“நைட் புல்லா தூங்கலையே… எங்கள எல்லாம் வீட்டுக்கு அனுப்பி தூங்க சொல்லிட்டு நீ ஹாஸ்பிட்டல்லயே தான இருந்த… இப்படி கண்ணு முழிச்சிருக்கியே”

தலையை மட்டும் அசைத்து அவரை கடந்துச் சென்று நாற்காலியில் அமர்ந்தான். அவனருகில் அமர்ந்திருந்தவர் நாற்காலியின் கைப்பிடியின் மீதிருந்த அவன் கையில் ஆதரவாக தட்டினார்.

அவரை திரும்பி பார்த்தான். அவர் முகமும் வேதனையில் இருந்தது. அவருக்கும் வருத்தமிருக்கும் என்று நினைத்தவன் அவர் கை மீது அவனுடைய மற்றொரு கையை வைத்து அழுத்தினான்.

அவருக்கு அந்த பக்கம் அமர்ந்திருந்த பெண்மணி அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். எதுவும் பேச முடியாத நிலையில் அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

பாக்கெட்டிலிருந்த மொபைல் ஒலிக்க அமைதியாக இருந்த சூழலைக் கெடுக்க விரும்பாமல் வேகமாக எடுத்துப் பார்த்தான். பேக்டரியிலிருந்து அழைத்திருந்தனர். வேலை இருக்கிறது. நிறையவே… மனம் ஒன்றி எதையும் கவனிக்க முடியாதென்றுத் தோன்ற காலை கட் செய்து பாக்கெட்டில் போட்டான்.

மீண்டும் அழைப்பு வராது. அவன் அழைக்கும் வரை அவனை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அப்படி தான் தன்னை சுற்றி உள்ளவர்களை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறான்.

அவன் ஒருவரின் அழைப்பை துண்டிக்கிறான் என்றால் மிக முக்கியமான வேலையில் இருக்கிறான் என்று அர்த்தம். வேலை முடிந்ததும் மறக்காமல் அவனே அவர்களுக்கு அழைப்பான். அவன் எதையுமே மறந்ததில்லை.

இப்போது அவன் நினைவில் இருப்பது அவள்… அவள் மட்டுமே. அவளை குறித்த சிந்தனையில் கண்களை மூடி பின்னால் சுவற்றில் தலை சாய்த்து அமர்ந்தான்.

காலை 6 மணி ஆகியிருந்தது. அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் அந்நேரத்தில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் நிசப்தமாய் இருந்தது.

“நீங்க போய் காபி குடிச்சுட்டு வாங்க”

தன்னருகில் அமர்ந்திருந்தவர் சந்திரனிடம் கூற அது காதில் விழுந்தாலும் அப்போதும் கண்களை திறவாமல் அமர்ந்திருந்தான்.

“நீங்க கூட்டிட்டுப் போங்க”

மனைவி சொன்னதை கேட்டதும், “வாங்க நம்ம போவோம்” என்று அவர் சந்திரனை அழைக்க மகனை திரும்பி பார்த்துவிட்டு எழுந்துச் சென்றார்.

நிசப்தமாய் இருந்த இடம் திடீரென்று பரப்பரப்பானது. பேச்சு குரல் கேட்க கண்களை திறந்துப் பார்த்தான். பலர் புடைசூழ மருத்துவர் வந்துக் கொண்டிருந்தார்.

அவனையும் பரப்பரப்பு தொற்றிக் கொள்ள எழுந்து நின்றான். அவனைப் பார்த்து லேசாக தலையசைத்தவர் அறையினுள் சென்றார்.

அவர் உள்ளே இருந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்கு டென்ஷன் கூடியது. அறையின் வெளியே குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான்.

“விஷ்வா”

இந்த அழைப்பிற்காகத்தானே காத்திருந்தான். வேகமாக திரும்பி அறை வாயிலில் நின்றிருந்த மருத்துவரின் அருகில் ஓடி வந்தான்.

உள்ளே வருமாறு தலையசைத்து அவர் செல்ல, “ஒருவேளை அப்படி நடந்துவிட்டால்?” என்று மருத்துவமனைக்கு வரும் வழியில் அவன் யோசித்ததனைத்தும் மீண்டும் மனதில் தோன்றின.

பெட்டில் படுத்திருந்தாள். நேற்று மாலை ICUவில் சேர்த்ததிலிருந்து இப்படி தான் கண் மூடி படுத்திருக்கிறாள். எடுக்க வேண்டிய டெஸ்ட், ஸ்கேன் அனைத்தையும் இரவே எடுத்துப் பார்த்துவிட்டு ஆபத்து ஒன்றுமில்லையென்று வார்டிற்கு மாற்றியிருந்தனர்.

போட்டிருந்த ட்ரிப்ஸும் அகற்றப்பட்டிருந்தது. முகம் சோர்ந்திருப்பதாகக் கூடத் தெரியவில்லை. நல்ல உறக்கத்தில் இருப்பது போல் இருந்தது.

“ஷீ இஸ் பெர்பெக்ட்லி நார்மல் விஷ்வா. ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டேன். கண்ணு முழிச்சுட்டான்னா சாப்பாடு கூட குடுக்கலாம். ட்ரிப்ஸ் எல்லாம் ரிமூவ் பண்ண சொல்லிட்டேன். முழிக்க லேட் ஆச்சுன்னா வேணா திரும்ப போட்டுக்கலாம். அதர்வைஸ் தேவையில்ல”

மருத்துவர் சொன்னது அவனுக்கு எப்பேர்ப்பட்ட நிம்மதியை அளித்தது என்று அவனால் விவரிக்க முடியாது. அவரை நன்றியுடன் பார்த்தவன் கேஸ் ஷீட்டில் ஏதோ எழுதத் துவங்கியவரை விடுத்து அவளிடம் நகர்ந்து சென்றான்.

எப்போது எழுவாள் என்ற ஏக்கம் தோன்ற வலது கரம் நீட்டி மென்மையாக அவள் கன்னம் வருடினான்.

அவன் ஸ்பரிசத்தை உணர்ந்தாளோ… மருந்து வேலை செய்ததோ… அவள் இமைகளில் அசைவு தெரிந்தது. முதலில் இமைகளை பிரிக்க போராடியவள் மெல்ல கண்களை திறந்துப் பார்த்தாள்.

“முழிச்சுட்டாங்க டாக்டர்”

நர்ஸ் கூறியதைக் கேட்டு வேகமாக அவள் அருகில் வந்த மருத்துவர் அவனை நகற்றிவிட்டு அவள் கன்னத்தில் லேசாக தட்டினார். கண்களை நன்றாக திறந்தப் பிறகு அவர் கையை பார்த்தாள்.

“ரெஸ்பான்ஸ் இருக்கு”

விஷ்வா அவள் முகத்தைவிட்டு பார்வையை அகற்றவில்லை. எப்போது தன்னை பார்ப்பாள்… தன்னை அழைப்பாள்… எதிர்ப்பார்ப்புடன் அவள் கண் திறந்த மகிழ்ச்சியும் சேர ஆர்வமாக அவளை பார்த்தபடி நின்றான்.

“நான் பேசுறது கேட்குதா? என்னை பாரும்மா”

கருவிழி திருப்பி மருத்துவரின் முகம் பார்த்தாள்.

“உன் பேரு என்ன?”

எச்சில்கூட்டி விழுங்கி வாய் திறந்தாள். “ஆ… ஆராதனா”

“இவரு யாருன்னு தெரியுதா?”

நேற்றிலிருந்து இருந்த பயம், சந்தேகம் அனைத்தும் நீங்கி அவளை பார்த்து புன்னகைத்தான் விஷ்வா.

ஆராதனா அவனை பார்த்தாள். உணர்ச்சியற்ற பார்வை. இரண்டு நொடியில் மீண்டும் மருத்துவரை பார்த்தாள். அவனும் அவரை தான் பார்த்தான்.

“ஷீ மைட் பீ ரிகலெக்டிங். வெளில இருக்கவங்கள கூப்பிடுங்க”

டாக்டர் சொன்னவுடன் நர்ஸ் ஒருவர் வெளியே சென்று அங்கிருந்தவர்களை அழைத்தாள். உள்ளே வந்த மூவரையும் ஆராதனா நிதானமாகப் பார்த்தாள்.

“இது யாரும்மா?”

“அப்பா”

“பேரு?”

“ஹரிகிருஷ்ணன்”

“இவங்க?’

“அம்மா”

“அவங்க பேரு?”

“சரண்யா”

“இவங்க?”

சந்திரனையும் அதே உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவள் மருத்துவரை திரும்பிப் பார்த்தாள்.

“இவர உனக்கு அடையாளம் தெரியுதா?”

மீண்டும் விஷ்வாவை கை காட்டி மருத்துவர் கேட்க மெத்தையில் எழுந்தமர முயன்றாள். சரண்யா வேகமாக ஓடி வந்து அவளை தூக்கி அமர உதவ விஷ்வா முன்னே சென்று தலையணையை எடுத்து அவள் முதுகுக்குப் பின்னால் வைத்தான்.

தன் இருபுறமும் நின்றவர்களை பார்த்தவள் தாயின் கையைப் பற்றிக் கொண்டாள். அவள் செய்கை வித்தியாசமாகத் தெரிய அவளையேக் கூர்ந்து கவனித்தான். மகள் எழுந்துவிட்ட மகிழ்ச்சியில் அவள் தலை கோதிவிட்டார் சரண்யா.

“எப்படியோ அவ கண்ணு முழிச்சதே எனக்கு நிம்மதியா இருக்கு”

முதலில் பேசினார் சந்திரன். அறையிலிருந்த இறுக்கம் தளர்ந்து எல்லோர் முகத்திலும் நிம்மதி பரவியது.

விஷ்வாவின் முகம் மட்டும் தெளிவடையவில்லை. தாயின் கைப்பற்றி தலை குனிந்து அமர்ந்திருந்தவளை பார்த்தபடி நின்றான்.

அவளிடம் பேச வேண்டுமென்றுத் தோன்ற பெட்டில் அவளருகில் இருந்த இடத்தில் அவளை பார்த்தபடி அமர்ந்தான்.

மிரண்டுப் போய் அவனைப் பார்த்தவள் நகர்ந்துச் சென்று தாயின் கையை இறுகப் பற்றினாள். நிமிர்ந்து சரண்யாவை பார்த்தான். அவர் முகத்திலும் குழப்ப ரேகைகள்.

அவள் முன் நெற்றி முடியை ஒதுக்கிவிட அவன் கையை முகத்தருகில் கொண்டு செல்ல தாயுடன் இன்னும் ஒன்றி அமர்ந்தாள்.

“ஹேய்… இப்போ என்ன? யார் நீங்கன்னுக் கேட்கப் போறியா?”

நேற்றிலிருந்து வாயே திறவாமல் அமர்ந்திருந்தவன் முதல் முறையாய் அவளிடம் பேசினான். மருத்துவர் சொன்ன விஷயமும் அவள் கண் விழித்தது மட்டுமல்லாமல் வாய் திறந்து பேசியதும் அவனுள் நம்பிக்கையை விதைத்திருந்தன. “ஒன்றும் ஆகிவிடாது” என்ற தைரியத்தை கொடுத்திருந்தன.

ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்த அவள் தன்னிடம் பேசினால் எல்லாம் சரியாகும் என்றெண்ணியே அவளருகில் அமர்ந்தான். இதுவரை மற்றவர் முன்னிலையில் அவன் அவளருகில் அமர்ந்ததில்லை. தவிர்க்க முடியாத சில தருணங்களை தவிர… அவளும் அதை விரும்பியதில்லை.

இப்போது அந்த அறையில் இருந்த யாரையும் அவன் கண்டுக் கொள்ளவில்லை. அவனுக்கு அவளுடன் பேசியே ஆக வேண்டும். நேற்றிலிருந்து என்ன பாடு பட்டிருப்பான்? அவன் அனுபவித்த வேதனைக்கெல்லாம் அவள் மட்டுமே மருந்தாவாள் என்பதை அவன் நன்கு அறிவான்.

அவள் அவனை மெல்லத் திரும்பிப் பார்க்க, “பேசு ஆராதனா” என்றுக் கூறி புன்னகைத்தான். அவன் முகத்தை சில நொடிகள் உற்று நோக்கியவள் தாயிடம் திரும்பினாள்.

“யாரும்மா?”

அவளுடைய ஒற்றை கேள்வி அவனுடைய உலகத்தை தகர்த்து தூள் தூளாக்கியது.

“ஆராதனா விளையாடுறியா?”

“காம் டவுன் விஷ்வா… நீ பேஷண்ட ஸ்ட்ரெயின் பண்ண வைக்குற”

“எது டாக்டர் ஸ்ட்ரெயின்?”

அவன் கத்தியதில் மேலும் மிரண்டவள் தாயின் வயிற்றில் முகம் புதைத்து அவரை இடையுடன் அணைத்துக் கொண்டாள்.

நிழலே நிஜமாய் – 2

“பேசுன்னு சொன்னா பேச மாட்டியா?”

விஷ்வாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆராதனா யாரென்றுக் கேட்கிறாள்… தன்னை அடையாளம் தெரியாமல் யாரென்றுக் கேட்கிறாள்… எவ்வளவு முயன்றும் அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அவளை முறைத்தபடியே அமர்ந்திருந்தான்.

தாயின் வயிற்றிலிருந்து முகத்தை எடுத்தவள் அவரை நிமிர்ந்துப் பார்த்துவிட்டு மெல்ல அவனை திரும்பிப் பார்த்தாள். முன்பு போல் உணர்ச்சியற்ற பார்வையோ மருண்ட பார்வையோ இல்லை. ஆராய்ச்சிப் பார்வை.

பெயர் சொல்லி அழைத்தான். உரிமையாய் அருகில் அமர்ந்தான். நன்கு பரிச்சயம் உள்ளவன் போல் புன்னகையுடன் பேசினான். யாராயிருக்கும்? இந்த முகத்தை எங்கேனும் பார்த்திருக்கிறோமா?

மூலை அவள் எண்ணங்களை பரிசீலித்து நினைவடுக்குகளில் தேட முயன்றது. ஆனால் யோசிக்க யோசிக்க உடல் சோர்ந்துப் போய் தலை வலிப்பது போல் இருந்தது. இனம்புரியாத பயம் நெஞ்சில் சூழ கண்கள் கலங்கத் துவங்கின.

அவனுடைய பலகீனம் அது ஒன்று மட்டும் தான். அவளுடைய கண்ணீர். அவனை மிருகமாக்குவதும் அதுவே…

“எதுக்கு அழுகுற? இப்போ நான் என்ன சொல்லிட்டேன்? நீ…”

“விஷ்வா”

தந்தையின் கண்டிப்புக் குரலில் அமைதியானவன் பெட்டிலிருந்து வேகமாக எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவளை விடுத்து டாக்டரை முறைத்தான்.

“ஆராதனா நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?”

மருத்துவர் கேட்ட கேள்வி புரியாமல் விழித்தவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து தாயை பார்த்தாள்.

“நீ இப்போ வேலை பார்க்குறியா? படிக்குறியா? என்ன செய்யுறன்னு உனக்கு ஞாபகம் இருக்காம்மா?”

“வேலை… நான் படிக்குறேன்… நான் நான் படிக்குறேன்”

சந்திரனுக்கே கொஞ்சம் பக்கென்றிருந்தது. அருகில் நின்ற ஹரிகிருஷ்ணனை பார்த்தார். “என்ன இப்படி சொல்லுறா?” அவர் கேட்ட கேள்வியிலிருந்து அவரும் அதிர்ந்திருக்கிறார் என்பது புரிந்தது.

“என்னம்மா படிக்குற?”

“BE… பர்ஸ்ட் இயர்…”

“அது ஏழு வருஷத்துக்கு முன்னாடி”

“இல்ல… பர்ஸ்ட் இயர் முடிச்சு தர்ட் இயர்”

“அது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி”

“எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல…”

“அது எப்படி இல்லாம போகும்?”

“ம்மா….”

இரஞ்சுதலாக தாயை பார்த்தாள். அவர் மட்டும் என்ன செய்ய முடியும்? அவருமே அவள் கூறிய பதில்களை கேட்டு குழம்பி போய் தான் இருந்தார். விஷ்வாவிற்கு கோபம் வருவதில் ஞாயமிருக்கிறதென்று நினைத்தவர் அவன் பேசுவதை தடுக்க முனையவில்லை.

சரண்யா பேசாமல் இருக்க தந்தையை பார்த்தாள். அவர் ஏதோ கூற வர அவர் தோள் தொட்டு தடுத்த சந்திரன், “இவன எங்கயாவது பார்த்த ஞாபகமாவது இருக்காம்மா?” என்று மகனை கை காட்டி கேட்டார்.

மறுப்பாகத் தலையசைத்தாள்.

“என்னை நீ இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல?”

“நீங்க எதுக்கு கத்திக்கிட்டே இருக்கீங்க? எனக்குதான் உங்களை ஞாபகம் இல்லைன்னு சொல்லுறேன்ல? விட வேண்டியது தான?”

“எப்படி விட முடியும்? யூ ஆர் மை வைப் டாம்மிட்”

அவ்வளவு நேரம் கோபம், இயலாமை, பயம் என்று பல உணர்ச்சிகளை காட்டிய அவள் முகத்தில் இப்போது எந்த உணர்ச்சியும் இல்லை.

“மாபிள்ளைய உனக்கு தெரியலையா ஆராதனா?”

கேள்விக் கேட்ட தாயிடமிருந்து விலகி அமர்ந்தாள். தீவிரமாக யோசிக்கிறாள் என்று அவள் முகபாவனையிலிருந்து தெரிந்தது.

“எனக்கு தனியா இருக்கணும். எல்லாரும் கொஞ்ச நேரம் வெளிய போங்க ப்ளீஸ்”

“நான் இருக்கேன். நீங்க எல்லாரும் போங்க”

“முக்கியமா நீங்க… கொஞ்ச நேரம் என்னை தனியா இருக்க விடுங்க ப்ளீஸ்”

அவள் குரலில் இருந்தது கோபமா வெறுப்பா புரியவில்லை. நின்ற இடத்தைவிட்டு அசையாமல் அவளை பார்த்தான்.

“விஷ்வா வா… அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். ரொம்ப ஸ்ட்ரெஸ் குடுக்க வேண்டாம். வா…”

“என்ன டாக்டர் நீங்க…”

“நீ வா நம்ம பேசுவோம். ப்ளீஸ்…”

கூப்பிட்டால் அவன் வரமாட்டான் என்றுத் தெரிந்து அவன் கையை பிடித்து இழுத்து வெளியே வந்தார். அறையை விட்டு வெளியே வந்தபோது அவருக்கு மூச்சு வாங்கியது,

“வான்னு சொன்னா வரானா? இழுக்க தெம்பில்ல… உள்ளயே அந்த கத்து கத்துனான்… என்னென்ன கேட்க காத்திருக்கானோ?”

ஆராதனாவை போலவே மிரண்டு போய் அவனை பார்த்தபடியே தன்னுடைய கன்ஸல்டேஷன் ரூம் நோக்கி நடந்தார்.

எல்லோரும் உடன் செல்ல வேண்டாமென மற்றவர்கள் அறைக்கு வெளியே இருந்த நாற்காலிகளில் மீண்டும் சென்று அமர்ந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குழப்பம். யாரும் பேசும் நிலையில் இல்லை.

தனது இருக்கையில் சென்றமர்ந்தார் டாக்டர் குமார். எதிரில் இருந்த இருக்கையை கை காட்ட சலித்தபடியே அதில் அமர்ந்தான்.

“அம்னீஷியால நிறைய டைப் இருக்கு. அதுல…”

“அம்னீஷியான்னு முடிவே பண்ணிட்டீங்களா?”

“அவதான் உன்னை தெரியவே தெரியாதுன்னு சொல்லுறாளே… இன்னுமா உனக்கு டவுட்? அக்ஸிடென்ட்கு முன்னாடி நடந்தது முழுக்க அவளுக்கு இன்னும் ஞாபகம் வரல. கொஞ்ச கொஞ்சமா ஞாபகப்படுத்திக்க ட்ரை பண்ணுறா… அதனால தான் பர்ஸ்ட் இயர்… பர்ஸ்ட் இயர் முடிச்சு தர்ட் இயர்னு இப்படி முன்னுக்கு பின் முரனா பேசுறது எல்லாம். இது டெம்ப்ரவரி தான். சீரியஸா எதுவுமில்ல. கொஞ்ச…”

“எது சீரியஸ் இல்ல? எது டாக்டர் சீரியஸ் இல்ல? ஹஸ்பன்ட் யாருன்னே தெரியல… இது உங்களுக்கு சீரியஸா தெரியலையா? அப்போ அவளுக்கு கல்யாணம் ஆனதும் மறந்து போயிருக்கும்ல?”

“இப்போ நீ ஏன் உளறுற?”

“நான் உளறுறேனா?”

“விஷ்வா… என்னால முடியல… உன்னை உன் அப்பாவால மட்டும் தான் சமாளிக்க முடியும். இத்தனை நாள் ஆராதனா சமாளிச்சா… இனி அவளையும் சேர்த்து சந்திரன் தான் சமாளிக்கணும் போலருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்து அவனுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கப் போறீங்க”

“நான் இங்க டென்ஷன்ல இருக்கேன்… நீங்க என்னமோ ஜாலியா பேசிக்கிட்டு இருக்கீங்க?”

“நான் ஜாலியா பேசுறேனா? புலம்பிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுறேன். அதுக்கப்பறம் நீயாச்சு உன் வைப்பாச்சு… அவள சும்மா இது ஞாபகம் இருக்கா அது ஞாபகம் இருக்கான்னு கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ணா அவ ப்ரெயின் அந்த இன்பர்மேஷன் எல்லாத்தையும் ப்ராசஸ் பண்ண ட்ரை பண்ணி அவளுக்கு அது ரொம்ப ஸ்ட்ரெயின் ஆகும். ரெஸ்ட் எடுக்க விடு. கொஞ்ச நாள்ல தானா சரியாயிடும்”

“கொஞ்ச நாள்னா எத்தனை நாள்? ஒரு நாள்? நாலு நாள்? ஒரு வாரம்?”

“நான் டாக்டர். ஜோசியர் கிடையாது. ஞாபகம் வரும். எப்போ வரும்னு தேதி நேரமெல்லாம் என்னால சொல்ல முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருவாட்டி நானே வீட்டுல வந்து பார்த்துக்குறேன். தேவைப்பட்டா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வர சொல்லுறேன். இப்போ நீ கிளம்பு”

“ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி மட்டும் வராம இருங்க…”

“தவறாம வந்து உன்கிட்ட திட்டு வாங்கிக்குறேன்பா… போய் மத்தவங்களுக்கு தைரியம் சொல்லு… எல்லாரும் பயந்து போயிருப்பாங்க… காட்டு கத்து கத்தி நீதான் பயமுறுத்தி வெச்சிருக்கியே… ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு போய்…”

“எது டாக்டர் ஒண்ணுமில்லாத விஷயம்?”

“ஐயோ தெரியாம சொல்லிட்டேன். மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிக்காத. ஈவ்னிங் ரவுண்ட்ஸ் போகும்போது வந்து பார்க்குறேன். சந்திரன்கிட்ட சொல்லிடு”

எதையோ வாய்க்குள் முனகியபடியே எழுந்து செல்பவனை பார்த்தவர், “கஷ்டம்… ரொம்ப கஷ்டப்பட்டு இவனோட கோபத்த அந்த பொண்ணு கொறச்சுது… இப்போ அதுவே இவன் கோவத்துக்கு காரணமாயிடுச்சு. எப்படி சமாளிக்கப் போகுதோ?” என்று நினைத்துப் பெருமூச்சுவிட்டார்.

விஷ்வா திரும்பி வந்தபோது அனைவரும் அவன் முகத்தையே பார்த்தனர். எதுவும் பேசாமல் தந்தையருகில் அமர்ந்தான்.

சரண்யா கணவரை பார்க்க அவர் சந்திரனின் கையில் தட்டி, “கேளுங்க” என்று ரகசியமாகக் கூறினார்.

“விஷ்வா டாக்டர்…”

“டாக்டராப்பா அவரு? அவளுக்கு எல்லாம் மறந்துப்போச்சுன்னு ரொம்ப சாதாரணமா சொல்லுறாரு. அக்ஸிடென்ட்கு முன்னாடி நடந்தது கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வருமாம். இப்படியே பிட்டு பிட்டா இவளுக்கு எந்த காலத்துக்கு முழுசா ஞாபகம் வந்து முடிக்குறது? நம்ம வேற நல்ல டாக்டர் பார்க்கலாம்பா”

“பொறுமையா இரு. எதுக்கு இப்படி கோவப்படுற? குமார் கரெக்டா தான் சொல்லியிருப்பான். வேற டாக்டர் பார்க்கணும்னா அதையும் அவனே இந்நேரம் சொல்லியிருப்பான்”

“நீங்க உங்க பிரெண்ட்டுக்கே சப்போர்ட் பண்ணுங்க. என் நிலமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கப்பா. அவளுக்கு எங்க கல்யாணம் ஞாபகம் இல்ல. நான் யாருன்னே ஞாபகம் இல்லை. நான் இப்போ என்ன செய்வேன்?”

“பொறுமையா இரு. அதான் ஞாபகம் வந்துடும்னு குமார் சொன்னான்ல…”

அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தான். அவனுடைய அந்த அமைதியே மற்ற மூவருக்கும் கலக்கத்தை கொடுத்தது.

விஷ்வா அமைதியாக இருக்கிறான் என்றால் தீவிரமாக யோசிக்கிறான் என்று அர்த்தம். அவன் நினைத்தது நடக்கவில்லை என்றால் கிடைத்தவர் மீதெல்லாம் பாயப் போகிறான் என்று அர்த்தம். எப்போது யார் அவனிடம் வாயை கொடுத்து மாட்டுவோமோ என்றெண்ணி அவன் பக்கம் திரும்பாமல் அமர்ந்திருந்தனர்.

முழுதாக மூன்று மணி நேரம் இடத்தைவிட்டு எழாமல் அமர்ந்திருந்தவன் ஆராதனாவின் அறைக்குள் ஒரு நர்ஸ் செல்வதை பார்த்து அவள் வெளியே வருவதற்காகக் காத்திருந்தான்.

“பேஷன்ட் தூங்கி எழுந்துட்டாங்க. ஒருத்தர் உள்ள போய் பாருங்க. அதிகம் பேச வேண்டாம்”

சரண்யா இருக்கையிலிருந்து எழ அவருக்கு முன்னால் விஷ்வா எழுந்து அறை வாயிலை அடைந்தான்.

“சார் அவங்க அம்மா…”

“ம்ம்?”

புருவம் உயர்த்தி அவன் கேட்ட தொனியில், “இல்ல சார் போங்க” என்று வழிவிட்டாள் அந்த நர்ஸ்.

சரண்யா உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் நிற்க, “நீங்களும் போங்கம்மா. காலையிலயே ரொம்ப சத்தம் போட்டுட்டாரு… கொஞ்சம் மெதுவா பேச சொல்லுங்க” என்றுக் கூறி அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டாள்.

“நீ ஈஸியா சொல்லிட்ட… மாப்பிள்ளைகிட்ட யாரு சொல்லுறது?”

மனதில் எழுந்த கேள்வியுடன் அறைக்குள் நுழைந்தார். ஆராதனா விழித்துப் படுத்திருந்தாள். விஷ்வா அவளருகில் செல்லாமல் அறையின் ஒரு மூலையில் நின்றிருந்தான். அவன் அங்கே நிற்கும்போது மகளின் அருகில் செல்ல தயங்கியவர் அறையின் மற்றொரு மூலையில் சென்று நின்றார்.

அன்னை உள்ளே நுழைந்தபோது ஆராதனா அவரை ஒருமுறை பார்த்ததோடு சரி. மீண்டும் பார்வையை திருப்பி அவனைப் பார்த்தாள். அவனும் அமைதியாக அவளை பார்த்தபடி நின்றான்.

காலையில் அவன் முகத்தை பார்த்து நினைவுக் கூற முயன்றவள் இப்போது அவனை அளவிட்டாள். கை ப்ராக்ச்சர் ஆகி கட்டுபோட்டிருந்தான். நெற்றியில் சிறிய கட்டு ஒன்று இருந்தது. அவள் கவனத்தை முதலில் ஈர்த்தது இவை இரண்டும் தான்.

பார்மல் பேன்ட் அணிந்திருந்தான். அரைக்கை சட்டை. கையில் பேண்டேஜ் இருப்பதால் முழுக்கை சட்டை அணியவில்லை போல என்று நினைத்தவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.

ஆளை துளைக்கும் கூர்மையான பார்வை. அவனும் தன்னையேப் பார்க்க அதற்கு மேல் அவளால் அவனை பார்க்க முடியவில்லை. விழி தாழ்த்தியவள் திரும்பி அன்னையை பார்த்து அருகில் வருமாறு தலையசைத்தாள்.

அவர் செல்லவில்லை. அவனை திரும்பிப் பார்த்தார். போகுமாறு தலையசைத்தான். அதன் பிறகே அவர் மகளிடம் சென்றார்.

“அம்மா எதுக்கு இவன்கிட்ட கேட்குறாங்க? இவன் சொன்னாதான் கிட்ட வருவாங்களோ? அப்படி என்ன இவன் பெரிய இவன்? எல்லாரையும் உருட்டி மிரட்டி வெச்சிருக்கான்… பார்க்குற பார்வைய பாரு… ரெண்டு நிமிஷத்துக்கு மேல நம்மளால பார்க்க முடியல…”

அருகில் வந்த அன்னையிடம், “அவன இங்கேருந்து போக சொல்லுங்கம்மா” என்று மெல்லியக் குரலில் கூறினாள்.

அவள் என்னதான் மெதுவாகக் கூறினாலும் மருத்துவமனையின் அமைதியான சூழலில் அது அவன் காதுகளில் விழுந்துவிட்டது.

“நான் வெளிய போகணுமா? எதுக்கு? போனாப் போகுதுன்னு இங்க நின்னு வேடிக்கைப் பார்த்ததுக்கு எனக்கு இது தேவைதான்”

வேகமாக நடந்து வந்து அவளருகில் மெத்தையில் அமர்ந்தான்.

“இவன் எதுக்கு எப்பப் பார்த்தாலும் என் பக்கத்துலயே வந்து உட்காருறான்?” என்று நினைத்தவள், “ம்மா…” என்றாள்.

“என்ன சும்மா ம்மா ம்மான்னு அவங்களையே கூப்பிடுற? ஏன் என்கிட்டக் கேட்க மாட்டியா?”

“எனக்கு தண்ணி வேணும்”

“தண்ணி எடுத்துக் குடுங்க அத்தை”

சரண்யா நகர்ந்து செல்ல தவிப்புடன் அவரைப் பார்த்தாள். “தண்ணி தீர்ந்துடுச்சு. நான் அப்பாகிட்ட வாங்கிட்டு வர சொல்லுறேன்” அவர் வெளியே சென்றுவிட அவளுடைய தவிப்பு இன்னும் அதிகமானது.

நிழலே நிஜமாய் – 3

ஆராதனாவால் இயல்பாக இருக்க முடியவில்லை. அருகில் அமர்ந்து கண்ணிமைக்காமல் ஒருவன் தன்னையே பார்க்கும்பொழுது எழுந்து ஓடக் கூட முடியவில்லையே என்று தவிப்பாக இருந்தது.

தரையை ஆராய்ந்தாள். போர்வை நுனியை முறுக்கினாள். கதவை வெறித்தபடி அமர்ந்தாள். நேரம் மட்டும் நகரவே இல்லை. என்ன செய்தபோதும் அவன் அருகில் இருப்பதை மறக்கவும் முடியவில்லை அவன் தன்னையே பார்ப்பதை கண்டுக் கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை.

“ஒழுங்கா ஒரு மூலையில நின்னுட்டு இருந்தான். நான் தான் வெளிய போக சொல்லி இப்படி பக்கத்துல வந்து உட்கார வெச்சுட்டேன்”

கையை ஆராய்ந்தபடியே மெல்ல திரும்பி அவனை பார்த்தாள்.

“நீ எதுக்கு இங்க உட்கார்ந்திருக்க?”

பதிலில்லை.

“அம்மாகிட்ட கேட்காத என்கிட்ட கேளுன்னு நீதான சொன்ன? தண்ணி வேணும்னு கேட்டா எடுத்துட்டு வர மாட்டியா? எதுக்கு அவங்கள வெளிய அனுப்பின?”

“தண்ணி தீர்ந்துடுச்சுன்னு அவங்கதான் போனாங்க. நான் அனுப்பல”

“சரி நீ முதல்ல பெட்லேருந்து எந்திரி”

அவன் அவளை இன்னும் கூர்மையாகப் பார்க்க, “எத்… எதுக்கு இப்படி உத்து உத்து பார்க்குற? அப்படி என்ன இருக்கு என் மூஞ்சில?” என்றாள்.

“நீ நீன்னு பேசுறியே… அதான் பார்க்குறேன்”

“உனக்கென்ன மரியாதை? யாருன்னே தெரியாத பொண்ணுகிட்ட எல்லார் முன்னாடியும் கத்துற… பக்கத்துல வந்து உட்காருற…”

“நீ என் வைப்”

“அதையே திரும்ப திரும்ப சொல்லாத… எனக்கு தலை வலிக்குது…”

இரு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்தவளை பார்த்ததும் சற்று இளகினான். இந்த சில மணி நேரங்களில் அமைதியாக அமர்ந்து யோசித்ததால் அவள் தன்னை மறந்துவிட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனம் பக்குவப்பட்டிருந்தது.

“சரி… அட்லீஸ்ட் உன்னைவிட வயசுல பெரியவன். அதுக்காகவாவது மரியாதை குடுக்கலாம்ல?”

“என்னைவிட பெரி…” பேச்சை பாதியில் நிறுத்தி கண்கள் இடுக்கி அவனைப் பார்த்தாள்.

“இவன் என்னைவிட பெரியவனா? அப்படின்னு இவன் சொல்லிக்குறான்… எப்படி நம்புறது? சரி… பெரியவனாவே இருந்துட்டுப் போகட்டும்… முதல்ல… முதல்ல எனக்கு என்ன வயசாகுதுன்னு தெரியணும்.

நான் காலேஜ் படிக்குறேன்னு சொன்னா அதெல்லாம் வருஷக்கணக்குக்கு முன்னாடின்னு சொல்லுறானே… அப்போ நெஜமா நமக்கு என்னதான் வயசாச்சு? நம்ம காலேஜ் படிச்சப்போ நமக்கு என்ன வயசிருக்கும்? 16? இல்லல்ல… 18? ச்ச… நமக்கு ஏன் எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது? யோசிக்க யோசிக்க தலை தான் வலிக்குது. இவன்கிட்டயே கேட்டா?”

அவள் தன்னை பார்ப்பதும் பின் சட்டென்று தலை குனிந்து யோசிப்பதுமாய் இருக்க, “என்னத்த அப்படி யோசிக்குறா? எல்லாம் ஞாபகம் வந்துடுச்சோ?” என்று அவளை பார்த்தான்.

“இப்போ… உனக்கு… நீ பெரியவன்னு சொன்னல்ல… எவ்வளோ பெரியவன்?”

“ம்ம்கும்… இத கேட்கதான் இப்படி யோசிச்சாளா?” என்று நினைத்தவன், “3 வயசு பெரியவன்” என்றான்.

“3 வயசு…” என்று முனகியவள், “இப்போ உனக்கு என்ன வயசாகுது?” என்றாள்.

பதில் சொல்லாமல் அவளையேப் பார்த்தான். “நீ ஏன் இப்படி லுக்கு விட்டுக்கிட்டே இருக்க? கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டியா?”

“இப்போ உனக்கு உன் வயசு தெரியணுமா?”

“எப்படி கண்டுப்பிடிச்சான்?” ஆச்சரியமாக அவனை பார்க்க, “அப்போ நெஜமா அதுக்குதான் என் வயசு கேட்டியா? என்னை பத்தி தெரிஞ்சுக்குறதுக்காக இல்லையா?” என்றுக் கேட்டான்.

“உன்னை பத்தி நான் எதுக்கு தெரிஞ்சுக்கணும்? ஆனா நான் உன் வயசு தெரிஞ்சுக்கதான் கேட்டேன்… நெஜமா… நம்பு… ஏன் இப்படிப் பார்க்குற?”

“எனக்கு 32 வயசாகுது”

“அய்யய்யோ… அதுக்குள்ள எனக்கு 29 வயசாகிடுச்சா?”

“ம்ம்ம்ம்…”

“ச்ச… அவசரப்பட்டு சத்தமா சொல்லிட்டோமே… மானமே போச்சு… இந்த அம்மா வேற இன்னும் வர மாட்டேங்குறாங்க…”

அறை கதவை அவள் பார்க்க, “உங்கம்மா வர மாட்டாங்க…” என்றான்.

“ஏன்?”

“நான் வெளில போனாதான் அவங்க உள்ள வருவாங்க”

“அப்போ நீ…”

“உங்கம்மாகிட்ட என்னை வெளில போக சொன்னதுக்குதான் வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தேன். திரும்ப வெளில போக சொன்னா…”

“வேணாம் வேணாம். நான் எதுவும் சொல்லல”

“ம்ம் குட். ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருக்கு… உனக்கு தண்ணி வேணுமா?”

அதை எப்போது மாட்டிவிட்டார்கள் என்று கையை பார்த்தாள். “இத முதல்லயே கவனிச்சிருக்கணும்… ஆமா அந்த நர்ஸ் நான் உட்கார ஹெல்ப் பண்ணப்போ காலையிலிருந்து எதுவும் சாப்பிடல ரொம்ப வீக்கா இருக்கீங்கன்னு டாக்டர் ட்ரிப்ஸ் போட சொல்லிட்டாருன்னு சொன்னாங்க. ச்ச மறந்துட்டேன்”

“ம்ம்ச்ச்… எவ்வளவு நேரம் நான் உன் முகத்தையே பார்க்குறது?”

“எனக்கு அலுக்கலையே…”

“நீ… நீ இப்படியெல்லாம் பேசாத…”

“ம்ம்? கேட்கல…”

அவள் முனகலாகக் கூற அவன் முன்னே நகர்ந்து வந்து காதை அவள் வாயருகில் நீட்டினான். அவன் பக்கத்தில் அமர்ந்திருப்பதே அவஸ்தையாக இருக்க இப்போது இன்னும் நெருங்கி வரவும் தலையை பின்னுக்கு இழுத்தவள் அவன் தோளில் கை வைத்து தள்ளினாள்.

“ஆ…”

கட்டுப் போட்டிருந்த கையை பிடித்து வலியில் அவன் முகம் சுளிக்க, “சாரி… சாரி… நான் வேணும்னு பண்ணல… வலிக்குதா? சாரி” என்றுப் பதறினாள். அவன் கை வீக்கம் இன்னும் முழுதாகக் குறையவில்லை. அதை கவனித்தவளுக்கு இன்னும் வருத்தமாக இருந்தது.

“சாரி… நீ பக்கத்துல வந்ததும்… வலிக்குதா? வீக்கம் இருக்கு. டாக்டர்கிட்ட வேணா போய் கேளு. பெயின் கில்லர் குடுப்பாங்க”

“என்னை அனுப்புறதுலயே தான் இருப்பியா?”

வலியுடன் சேர்ந்து அவள் கூறியது எரிச்சலை கொடுக்க கொஞ்சம் சத்தமாகவே கத்தினான்.

“எதுக்கு இப்படி எதுக்கெடுத்தாலும் கத்துற? அதுவும் இவ்வளவு பக்கத்துல உட்கார்ந்துட்டு… போய் டேப்லட் போட்டுட்டு இந்த இடத்துலயே வந்து உட்கார்ந்துக்கோ… பட்டா போட்டு தர சொல்லுறேன்”

அவளும் பதிலுக்கு கத்த, “பட்டா எல்லாம் தேவையில்ல… எனக்கு உரிமை இருக்கு. நான் வந்து உட்கார்ந்தா எவன் கேள்விக் கேட்பான்?” என்றான்.

அவ்வளவு நேரம் எதையும் யோசிக்காமல் இருந்தவள் அவன் அப்படிக் கூறவும் மீண்டும் பழைய நினைவுகளை நினைவிற்கு கொண்டு வர முயன்றாள். தலை வலியெடுத்தது. அவன் முகத்தை ஒரு முறையேனும் எங்கும் பார்த்ததாக நினைவு வரவில்லை.

யாரோ ஒருவரின் அருகில் அறையில் தனியாக அமர்ந்திருப்பது அச்சத்தை கொடுத்தது. சத்தம் போட்டு உதவிக்கு யாரையாவது அழைக்க வேண்டும் என்றுத் தோன்ற அப்படி செய்தால் அவன் திட்டுவான் என்பது மட்டும் மனதில் பதிந்திருந்தது.

“எனக்கு பசிக்குது. அம்மா வர சொல்லுறியா?”

இம்முறை அவளுடன் மல்லுக்கு நிற்காமல் அமைதியாக எழுந்து வெளியே வந்தவன், “அவளுக்கு பசிக்குதாம். டாக்டர்கிட்ட என்ன குடுக்கலாம்னு கேட்டு வாங்கிட்டு வாங்க” என்றான்.

கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டிய ஹரிகிருஷ்ணன், “எதுவும் பிரச்சனை இல்லையே?” என்றுக் கேட்க அதற்கு பதிலாய் அவன் ஆட்டிய தலையாட்டலில் இருந்து அவரால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அவன் உள்ளே சென்றதும், “இப்போ என்ன செய்யுறது?” என்று சந்திரனிடம் கேட்டார்.

“அவன் பிடிவாதம் உங்களுக்கு தெரியுமே சம்பந்தி… மீறி ஏதாவது சொன்னா குதிப்பான். இப்போதைக்கு அவன் என்ன முடிவுல இருக்கான்னு என்னால கெஸ் பண்ண முடியல. ஈவ்னிங் வரைக்கும் பார்ப்போம்”

“என்ன கோபம் வந்தாலும் மாப்பிள்ள எங்க பொண்ண ஒண்ணும் சொல்ல மாட்டாருன்னு எங்களுக்கு தெரியும்ங்க. அதனால அவர நெனச்சு கவலையில்ல. எங்க பொண்ண நெனச்சாதான்…”

சரண்யா கவலையுடன் கூற, “எங்க வீட்டுக்கு வந்ததுக்கப்பறம் அவ எங்க வீட்டு பொண்ணும்மா. இதுவரைக்கும் என்னைக்காவது அழுதுக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்திருக்காளா? நான் பார்த்துக்குறேன்…” என்று தைரியம் கூறினார் சந்திரன்.

“நீங்க பார்த்துக்குவீங்க சம்பந்தி… எங்களுக்கு கவலை உங்களை பத்தியும் தான். எப்பயும் பையன சமாளிச்சு எங்க பொண்ணுக்காக பேசுவீங்க… இனி எங்க பொண்ணையும் சேர்த்து இல்ல சமாளிக்கணும்?”

“அவரு சொல்லுறதும் சரி தான். எப்படி சமாளிப்பீங்க?”

இருவரும் கேட்டக் கேள்வியை சந்திரனும் காலையிலிருந்து யோசித்துக் கொண்டு தான் இருக்கிறார். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாது, “நான் போய் குமார பார்த்துட்டு வந்துடுறேன். சாப்பாடு என்ன குடுக்கலாம்னுக் கேட்கணும். பாவம் பசியோட இருப்பா” என்று எழுந்துச் சென்றார்.

“என்ன திரும்ப உள்ள வந்துட்ட? சாப்பாடு?”

“டாக்டர்கிட்ட கேட்டு வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன்”

“நீ போக மாட்டியா?”

“எனக்கு டயர்டா இருக்கு ஆராதனா… நைட் முழுக்க தூங்கல”

“ஒஹ்ஹ்…” என்றவள், “நம்ம பேரு சொல்லி கூப்பிடுறான். இவன் பேரு என்னன்னு தெரியலையே… காலையில சொன்னானா? இல்லையே… சொன்னானோ? ஞாபகம் வர மாட்டேங்குது” என்று யோசித்து, “உன் பேரு என்ன?” என்று அவனிடமேக் கேட்டாள்.

புன்னகையுடன், “விஷ்வா” என்றான்.

காலையில், “நீங்க யாருன்னு கேட்கப் போறியா?” என்பதையும் இப்படி புன்னகையுடன் தான் கேட்டான் என்று நினைத்தவள், “புல் நேம் சொல்லு” என்றாள்.

“விஷ்வா”

“ஏன் சிரிக்குற?”

“நீ என்கிட்ட கேட்ட முதல் கேள்வி இது தான். திரும்பவும் இத்தன வருஷம் கழிச்சுக் கேட்குற”

“எனக்கு ஞாபகம் இல்ல”

“தெரியுது” என்றவன் மெத்தையில் அமராமல் அங்கிருந்த சேரை எடுத்து கட்டிலின் அருகில் போட்டு அதில் அமர்ந்து இடது கையை மெத்தையில் வைத்து அதன் மீது தலை வைத்து படுத்தான்.

“என்ன நீ பாட்டுக்கு இங்க தூங்குற?”

“சொன்னேன்ல… டயர்டா இருக்கு ஆராதனா”

“அதுக்கு ஏன் என் பக்கத்துலயே படுக்குற?”

தலையை மட்டும் தூக்கிப் பார்த்தவன், “நைட் புல்லா இப்படி தான் உன் முகத்துக்கு பக்கத்துல தலை வெச்சு நீ எப்போடா கண்ணு முழிச்சு என்னை பார்ப்பனனு பார்த்துக்கிட்டே இருந்தேன்” என்றுக் கூறி மீண்டும் படுத்துவிட்டான்.

அவன் கூறிய பதிலை கேட்டதும் சட்டென்று பேச்சு தடைபட்டது. பலமுறை ஏதோ கேட்க வாயை திறந்து திறந்து மூடியவளுக்கு என்ன கேட்பதென்று புரியவில்லை.

“அப்… அப்போ நீ… ரூம்ல வேற யாரு இருந்தா?”

“ம்ம்ஹும்”

“நீயும் நானும் மட்டுமா?”

“ம்ம்”

“நைட் புல்லாவா?”

“ம்ம்”

“என் முகத்துக்கு பக்கத்துலயேவா படுத்திருந்த?”

பதில் வரவில்லை என்றதும் குனிந்து அவன் முகம் பார்க்க முயன்றாள். கையில் தலை வைத்துப் படுத்திருப்பதால் முகம் தெரியவில்லை.

“தூங்கிட்டானா? இவன் என்ன எல்லாத்தையும் அசால்ட்டா சொல்லிக்கிட்டு இருக்கான்… நம்ம வீட்டுலயும் பொறுப்பே இல்லையா? எப்படி இவன்கூட தனியா விட்டுட்டுப் போனாங்க? இப்போவும் ஒருத்தர் உள்ள வர மாட்டேங்குறாங்க”

அவள் எண்ணமிட்ட நேரம் கதவை திறந்துக் கொண்டு சந்திரன் உள்ளே நுழைந்தார். கையில் ஒரு ட்ரே தூக்கி வந்தவரை பார்த்ததும் சாப்பாடு கொண்டு வருகிறார் என்றுப் புரிந்தது. இவர் எதற்காகக் கொண்டு வருகிறார் என்ற சந்தேகத்துடன் அவரை பார்த்தாள்.

“தூங்கிட்டானா? நைட் எங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பி வெச்சுட்டு அவன் இங்கயே தான் இருந்தான். பாவம். நீ சாப்பிடுறியா? இல்ல நான் ஊட்டி விடட்டுமா?”

“ஊட்டி விடுறீங்களா? நீங்களா?”

“ம்ம்… எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்துலக் கூட நீங்க இருக்குறதால நான் அம்மாவ தேடுறதில்ல மாமான்னு நீ தான் சொல்லுவியே…”

“நான் சொல்லுவேனா? உடம்பு சரியில்லாமப் போகுமா? ஏன்? எப்போ அப்படி…”

அவள் தன்னை வருத்திக் கொள்கிறாள் என்று நினைத்தவர், “நீ சாப்பிடுறியா? நான் ஊட்டி விடட்டுமா?” என்றுக் கேட்டார்.

“நான் சாப்பிடுறேன். கை… கை கழுவணும்”

அந்த அறைக்குள்ளேயே இருந்த அட்டாச்ட் பாத்ரூமினுள் சென்றவர் குவளையில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினார்.

“ட்ரிப்ஸ் கழட்டணும்”

“அது முடியப் போகுது. இன்னும் கொஞ்ச நேரம் தான். முடிஞ்சதும் எடுத்துட சொல்லுறேன். இனி ட்ரிப்ஸ் வேண்டாம்னு டாக்டர்கிட்ட சொல்லிட்டேன். சோ கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ. கை கழுவு”

“நீங்க எதுக்கு அங்கிள் இதெல்லாம் செய்யுறீங்க? அம்மா?”

அவளுடைய ‘அங்கிள்’ என்ற அழைப்பில் சட்டென்று முகம் சுருங்கினாலும் நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டு, “அம்மாவும் அப்பாவும் சாப்பிட போயிருக்காங்க” என்றார்.

ஆராதனாவிற்கு சந்திரனை பிடித்தது. பிடித்தது என்பதைவிட விஷ்வாவை போல் தன்னிடம் கத்தவில்லை அதிகாரம் செய்யவில்லை என்பதால் அவரை தூர விரட்டும் எண்ணம் தோன்றவில்லை. தன் தந்தையின் வயதையொத்தவரின் மீது தோன்றிய மரியாதை அவரை எதிர்த்து பேச அனுமதிக்கவில்லை.

கையை கழுவிவிட்டு அவர் கொண்டு வந்துக் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள். அவள் பாதி சாப்பிடும்போதே ட்ரிப்ஸ் முடிந்தது. சந்திரன் வெளியே சென்று நர்ஸை கூட்டி வந்தார்.

“அப்படியே அவ கையில குத்தி வெச்சிருக்க அந்த நீடிலையும் எடுத்து விட்டுடுங்க. இனி தேவைப்படாது. டாக்டர்கிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன். அவளுக்கு கஷ்டமா இருக்கும்”

தனக்காக யோசித்துப் பேசியவரை நன்றியுடன் பார்த்தாள். யாரென்றே தெரியாத இருவர் தன் பெற்றோருடன் சேர்ந்து அவளை கவனித்துக் கொள்கின்றனர்… அவர்களை விட்டு தூர விலகி இருக்க நினைத்தவளுக்கு அவர் மீது நம்பிக்கை பிறந்தது.

கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்பதுக் கூட நினைவில்லை. மருத்துவமனை உணவு அவ்வளவு பிடிக்காததால், “போதும் அங்கிள். சாப்பிட முடியல” என்றாள்.

மீண்டும் குவளையில் தண்ணீர் கொண்டு வந்து அவர் நீட்ட இம்முறை இப்படி அமர்ந்த இடத்திலிருந்தே கை கழுவுவது சங்கடமாக இருந்தது.

“அம்மாவ வர சொல்லுறீங்களா?” என்று அவள் கேட்கவும் தலையை கையில் அழுத்தி தூங்கியதால் கை மரத்துப் போக தூக்கம் கலைந்து விஷ்வா எழவும் சரியாக இருந்தது.

“எதுக்கு அம்மா?”

தூக்கக் கலக்கத்திலும் தான் பேசியது அவன் காதுகளில் சரியாக விழுந்துவிட்டதை எண்ணி ஆச்சரியப்பட்டவள், “அம்மா வர சொல்லுங்க அங்கிள்” என்று சந்திரனிடமே பேசினாள்.

“அதான் எதுக்குன்னுக் கேட்குறேன்”

“எனக்கு பாத்ரூம் போகணும்… இதெல்லாமா உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியும்?”

“வா” என்றவன் இருக்கையிலிருந்து எழுந்தான்.

“ஹான்? என்னது?”

“வா…”

“ம்மா…”

“எதுக்கு அவங்கள கூப்பிடுற?”

“ம்மா உள்ள வரப் போறியா இல்லையா?”

“ஆராதனா இது ஹாஸ்பிட்டல் கத்தாதம்மா”

அவள் கத்தியது கேட்டு சரண்யாவும் ஹரிகிருஷ்ணனும் உள்ளே ஓடி வந்தனர்.

“என்னம்மா நெனச்சுக்கிட்டு இருக்க? எதுக்கு இவன்கூட தனியா தனியா விட்டுட்டுப் போற?”

“எதுக்கு கத்துற? நான் தான் வான்னு சொல்லுறேன்ல?”

“எனக்கு பாத்ரூம் போகணும்”

சந்திரன் தலையிலடித்துக் கொள்ள, “போ சரண்யா” என்று மனைவியை பிடித்துத் தள்ளினார் ஹரிகிருஷ்ணன்.

“அத்தை… நீங்க வெளில போங்க முதல்ல”

“அவங்க எதுக்குப் போகணும்? அவங்க என் அம்மா. நான் இப்போ கட்டில விட்டு இறங்கினா கண்டிப்பா விழுந்துடுவேன்னு எனக்கே தெரியுது. அவங்க என்கூட வரணும். நீ போ வெளில”

உள்ளே ஓடி வந்த நர்ஸ், “அடடடா இது ஹாஸ்பிட்டல். கொஞ்சம் சத்தம் போடாம இருங்க. பக்கத்துல பேஷண்ட்ஸ் இருக்காங்க” என்று சத்தம் போட, “எல்லாம் உன்னால வந்தது. ஒழுங்கா வா” என்று கத்தினான் விஷ்வா.

“நீ முதல்ல வெளில போ…”

“விஷ்வா சத்தம் போடாம இரு”

“ம்மா… இவன வெளிலப் போக சொல்லு…”

“புருஷனுக்கு ஏத்த பொண்டாட்டி தான்… ரெண்டும் என்ன கத்து கத்துதுங்க” என்று நினைத்த நர்ஸ், “கத்தாம இருங்க தயவு செஞ்சு” என்றுக் கத்தினார்.

“மாப்பிள்ளை நீங்க…”

“என்னால வெளில போக முடியாது. அவ…”

“அவன வெளில போக சொல்லுங்க… இனி ஒரு நிமிஷம் அவன் இங்க நின்னான்… வெளில போக சொல்லுங்க………”

உச்சஸ்தாயியில் ஆராதனா கத்தியதை கேட்டு காதைப் பொத்திக் கொண்டு நர்ஸ் அங்கிருந்து சென்றார். “நீ வா…” என்ற சந்திரன் அவன் கையை பிடித்து வெளியே இழுத்து செல்ல மகளை முறைத்தபடி ஹரிகிருஷ்ணனும் அவர்களுடன் சென்றார்.

“ஹ்ம்ம்… யாருக்கிட்ட? எங்களுக்கும் கத்தத் தெரியும்” என்று மனதிற்குள் கூறிக் கொண்ட ஆராதனா மெத்தையை விட்டிறங்கி தாயின் கையை பிடித்தபடியே நடந்தாள்.

நிழலே நிஜமாய் – 4

சரண்யா ஆராதனாவுடன் எதுவும் பேசவில்லை. ஜூஸ் கலந்துக் கொடுத்துவிட்டு சேரில் அமர்ந்துவிட்டார். ஹரிகிருஷ்ணன் அறைக்குள் வரும்போது கதவு திறந்திருந்த இடைவெளியில் சந்திரன் விஷ்வாவிற்கு உணவூட்டுவது தெரிந்தது.

“இவன் என்ன… இவ்வளவு பெருசா தடிமாடு மாதிரி வளர்ந்துட்டு இவனுக்கு போய் அங்கிள் ஊட்டி விடுறாங்க? ஓஹ்ஹ்… கை ப்ராக்ச்சர் ஆகியிருக்குல்ல… பாவம் நான் வேற பிடிச்சு தள்ளுறேன்னு… நல்லா வலிச்சிடுச்சு போல… இவனுக்கு வேணும். அப்படியா மூஞ்சிய கிட்ட கொண்டு வருவான்? பயந்துட்டேன்.

நைட் புல்லா இப்படி தான் உட்கார்ந்திருந்தேன்னு சொன்னானே… தூங்கவே இல்லையாமே… அவ்வளவு அக்கறையா என்ன? ஆனா எதுக்கு? வைப்னு சொல்லிக்குறான்… கல்யாணமா? நமக்கா? ம்ம்ஹும்ம்… அதுக்குள்ள நான் கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டேன்பா… இது ஏதோ லூசு உளறிட்டு திரியுது”

சந்திரனுடைய மொபைல் ஒலித்தது. குமார் அழைத்திருந்தார். மகனுக்கு ஊட்டுவதை விடுத்து மொபைலை ஆன் செய்தார்.

“சொல்லுடா”

“என்னத்த சொல்லுறது? குடும்பத்தோட சேர்ந்து கத்தி ஊரக் கூட்டிக்கிட்டு இருக்கீங்களாமே… அந்த நர்ஸ் பாவம்… உன் பையன் தான் அப்படின்னுப் பார்த்தா உன் மருமகளும் ஆரம்பிச்சுட்டாளா? உங்களையெல்லாம் இங்க வெச்சு சமாளிக்க முடியாது. இது ஹாஸ்பிட்டல். ஈவ்னிங்கே டிஸ்சார்ஜ் பண்ணுறேன். கூட்டிட்டு வீட்டுக்குப் போ. நான்…”

“ஏதோ கொஞ்சம் கோபம் வந்துடுச்சு. ரெண்டு பேரும் சத்தமா பேசிட்டாங்க. அதுக்காக இப்படி ட்ரீட்மென்ட் பாதில நிறுத்தி வீட்டுக்கு அனுப்பினா நல்லாவா இருக்கு? டாக்டர் மாதிரி பேசு குமார்”

“ட்ரீட்மென்ட் எல்லாம் ஒண்ணும் தேவையில்ல. கொஞ்சம் ரெஸ்ட், பீஸ் ஆப் மைன்ட் இருந்தா போதும்… மறந்ததெல்லாம் தானா ஞாபகம் வந்துடும். காலையில விஷ்வாகிட்ட சொன்ன மாதிரி நான் ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி வந்துப் பார்த்துக்குறேன். இப்போதைக்கு நீங்க கெளம்புங்க அது போதும்”

“இப்படி தொரத்தி விடுறல்ல? உனக்கு பீஸ் கிடையாது… வீட்டுக்கு வா… அப்பறம் தரேன்…”

“நீ குடுத்துதான் நான் இன்னொரு பில்டிங் கட்டப் போறேன் பாரு… போடா… விஷ்வாகிட்ட சொல்லி கொஞ்சம் நிதானமா பேச சொல்லு சந்திரா. அவளுக்கு ப்ராப்ளம் எதுவும் இல்ல. பட் அவ நிறைய யோசிக்கணும். அத மட்டும் பார்த்துக்கோ”

“நான் பார்த்துக்குறேன் குமார்”

“ப்ரிஸ்க்ரிப்ஷன் குடுத்து விடுறேன். முடிஞ்சா ஈவ்னிங்குள்ள வந்துப் பார்க்குறேன். நிறைய வேலை இருக்குடா. எதுனாலும் கால் பண்ணு”

“சரி குமார். வெச்சிடுறேன்”

“என்னப்பா சொன்னாரு? உங்க பிரெண்ட்…”

“ஈவ்னிங் வீட்டுக்குப் போயிடலாமாம். ரெஸ்ட் எடுக்கட்டும்னு சொன்னாரு”

விஷ்வா மீண்டும் அமைதியாகிவிட்டான். இம்முறை அவன் என்ன யோசிக்கிறான் என்று சந்திரனுக்கும் தெரியும். அவரும் அதே விஷயத்தை யோசித்துதான் கலங்கிக் கொண்டிருந்தார்.

அனைவரும் சாப்பிட்டு முடித்த நேரம் ஆராதனா உறங்கிவிட்டிருந்தாள். அவள் எழுந்ததும் கிளம்பலாம் என்று முடிவெடுத்தனர்.

குமார் கொடுத்தனுப்பிய மருந்து சீட்டை எடுத்துச் சென்று அவர் குறிப்பிட்டிருந்த மருந்தனைத்தையும் வாங்கி வந்தவன் மனைவி கண் விழிப்பதற்காகக் காத்திருந்தான்.

காத்திருப்பின் முடிவில் நிகழப் போகும் பிரச்சனையை எதிர்க்கொள்ள தன்னையே தயார் செய்துக் கொண்டிருந்தான்.

ஆராதனா கண் விழித்தாள். சரண்யா அவளுடைய உடைமைகளை பையினுள் எடுத்து வைக்கத் துவங்கினார்.

“வீட்டுக்குப் போறோமாம்மா?”

“ம்ம்”

“நீ போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா ஆராதனா”

விஷ்வா கூறியதைக் கேட்டவள், “இவனும் வரானா? நம்ம வீடு அவனுக்குத் தெரியுமா?” என்று தாயிடம் கேட்டாள்.

“நம்ம அவங்க வீட்டுக்கு தான் போறோம் ஆராதனா. அது உன் வீடு”

“திரும்ப திரும்ப ஏன்மா அதையே சொல்லுறீங்க? எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்மா”

“கடவுளே… சரி போய் முகம் கழுவிட்டு வா… போ… அப்பறம் அதுக்கும் மாப்பிள்ளைகிட்ட திட்டு வாங்காத”

விஷ்வா தன்னையே பார்ப்பதை உணர்ந்து இதற்கு மேல் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தால் கேள்விக் கேட்பானென்று எழுந்து குளியலறை நோக்கி நடந்தாள். சாப்பிட்டது, ட்ரிப்ஸ் ஏறியது, உறங்கி எழுந்ததென்று அனைத்தும் சேர்ந்து சோர்வை கொஞ்சம் விரட்டியிருந்தது.

“உன்னோட ட்ரெஸ். மாத்திக்கோ”

அவன் நீட்டிய கவரை பார்த்தவள் எதுவும் கேட்காமல் அதை வாங்கி உள்ளே சென்றாள். சரண்யா அதற்கு மேல் அங்கே நிற்காமல் அறையை விட்டு வெளியே வந்துவிட்டார்.

உடை மாற்றி வந்தவள் விஷ்வா மட்டும் அறையினுள் இருப்பதைக் கண்டாள்.

“நாங்க உங்க வீட்டுக்கு வரோம்னு அம்மா சொன்னாங்க. ப்ளீஸ்… நான் எங்க வீட்டுக்குப் போறேனே… எனக்கு கொஞ்ச நாள் தனியா இருக்கணும். யோசிக்கணும். ப்ளீஸ் அம்மாகிட்ட சொல்லேன்…”

“முடியாது ஆராதனா. உனக்கும் சில பொறுப்பெல்லாம் இருக்கு. எல்லாத்தையும் விட்டுட்டு நீ இப்போ உங்கம்மா வீட்டுக்குப் போக முடியாது”

“ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற? உன்ன பார்க்க பார்க்க எனக்கு என்னமோ ஆகிடுச்சுங்குற பீல் தான் வருது… சுத்தி இருக்க எல்லாரும் என்னை விநோதமா பார்க்குற மாதிரி இருக்கு. கொஞ்ச நாள் நான் தனியா இருக்கணும்”

“என்ன புரிஞ்சுக்க மாட்டேங்குறேன்? நீ என்னை சுத்தமா மறந்துட்ட. பைன். நான் அத அக்செப்ட் பண்ணிக்கல? அதே மாதிரி நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உனக்கு அது ஞாபகம் இல்லாம இருக்கலாம். பட் என்னை நம்பி நீ என்னோட வந்து தான் ஆகணும். உனக்கு நான் மட்டும் கிடையாது. இன்னும்…”

“விஷ்வா மெதுவா பேசு… அவள எதுக்கு கத்துற?”

உள்ளே வந்த சந்திரன் கூறியதைக் கேட்டதும் அமைதியாகி, “வீட்டுக்குப் போகலாம் ஆராதனா” என்றான்.

தன் தாய் தன்னை அவனுடைய வீட்டிற்கு அழைத்து செல்ல நினைக்கிறாள். தந்தை மறுத்துப் பேசவில்லை. சந்திரன் மீது நம்பிக்கையிருந்தது. தனக்கு எந்த தீங்கும் வர விடமாட்டார். அதோடு விஷ்வா கூறியது போல் நினைவில்லை என்று தான் கூறுவது உண்மையோ பொய்யோ அதை அவன் ஏற்றுக் கொள்ளும்போது அவன் சொல்வதை தற்சமயம் நம்புவதை தவிர தனக்கு வேறு வழியில்லை.

அமைதியாக அறையை விட்டு வெளியே வந்தாள். “போலாம்மா” என்றுக் கூறி முன்னே நடந்தவளின் கை பிடித்து அழைத்துச் சென்ற சரண்யா திரும்பி கணவரை பார்த்தார்.

“சம்பந்தி… வீட்டுக்குப் போய்… எப்படி சமாளிக்க?”

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் மாமா” என்று ஹரிகிருஷ்ணனுக்கு தைரியம் சொன்ன விஷ்வா வேகமாக சென்று காரை எடுத்தான். முன்னிருக்கையில் அவனருகில் அமராமல் அன்னையுடன் பின்னால் அமர்ந்தாள்.

வீடு நெருங்க நெருங்க எல்லோரின் பார்வையும் அவள் மீதே படிந்திருந்தது. சிறிது தூரம் சென்றப் பிறகு அவளுக்கே வித்தியாசம் தெரிய, “எதுக்கு எல்லாரும் நம்மளையேப் பார்க்குறாங்க? கிளம்பும்போது நல்லாதான இருந்தாங்க?” என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

வீடு பெரியதாக இருந்தது. செக்யூரிட்டி கேட்டை திறந்துவிட போர்ட்டிகோவில் கார் நின்றதும் வீட்டிலிருந்து ஒரு கூட்டமே வெளியே வந்தது.

அவர்களையெல்லாம் தள்ளிவிட்டு முன்னே ஓடி வந்த குட்டி பெண், “மம்மி” என்று அழுதபடியே ஆராதனாவின் கால்களை கட்டிக் கொண்டாள்.

ஒரு நிமிடம் உலகம் ஸ்தம்பித்துப போக நிற்க முடியாமல் தடுமாறினாள். திருமணம் ஆனதையே ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறுபவள் இதை சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. திரும்பி தாயை பார்த்தாள்.

“தூக்கு ஆராதனா” என்று அவர் கூற குனிந்து சிறுமியை பார்த்தாள். அவள் கால்களுக்குள் முகம் புதைத்து தேம்பிக் கொண்டிருந்தாள்.

சிறிய குழந்தைகள் அழும்போது தூக்க வேண்டும் என்று இயல்பாக தோன்றும் எண்ணம் அவளுடைய, “மம்மி” என்ற அழைப்பில் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

விஷ்வா அவளருகில் வந்து மகளை தூக்கி, “மம்மி வந்துட்டாங்கல்லடா… அப்பறம் எதுக்கு அம்மு அழறீங்க?” என்று சமாதானம் செய்ய முயன்றான்.

“மம்மி ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க. நீங்க கூட்டிட்டும் போகல. மார்னிங் கேட்டேன்ல… அப்போ கூட கூட்டிட்டுப் போகல… போங்க டாடி…”

“ம்ம்கும்… உன் மம்மிக்கு உன் டாடியவே ஞாபகம் இல்லையாம்…” என்று நினைத்தவன், “ஹாஸ்பிட்டல் வந்தா அம்முவுக்கும் ஊசி போட்டிருப்பாங்களே” என்றான்.

“ஊசியா?”

“ஆமா… டாடிக்கு கூட போட்டாங்க”

“அப்போ வேணாம்”

“அழாம இருப்பீங்களா?”

வீங்கியிருந்த கையால் மகளின் கண்ணீரை துடைத்து விடுபவனை ஆச்சரியமாக பார்த்தபடியே நின்றாள் ஆராதனா. மருத்துவமனையில் கத்தியவனுகும் இப்போது சிறு குழந்தையிடம் பொறுமையாக பேசுபவனுக்கும் இருந்த வித்தியாசத்தை அவள் மனம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது.

“மம்மி” என்று அவளிடம் தாவியவளை வேறு வழியின்றி தூக்கிக் கொண்டாள். “கிஸ்? மம்மி தூக்குனா கிஸ் குடுப்பீங்க”

சிறு பிள்ளைகள் என்றால் அவளுக்கு இஷ்டம். அதுவும் அம்மு துருதுருவென்றிருந்தாள். அவளின் அழுகையும் தனக்காக அவள் விஷ்வாவிடம் வாதாடியதும் ஆராதனாவின் மனதில் ஆழப் பதிந்தன. ஆசையாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

விஷ்வாவிற்கு அப்போது தான் நிம்மதியானது. தன்னிடம் ஆர்ப்பாட்டம் செய்தது போல் மகளிடம் செய்தால் எப்படி சமாளிப்பதென்று அவன் கொண்ட கவலை தீர்ந்தது.

மருமகள் தன் மகனிடம் நடந்துக் கொண்ட விதத்தை பார்த்து சந்திரனுக்கும் கவலை இருந்தது. ஏதோ இந்த அளவிற்கு அவள் அமைதியாக இருப்பதே பெரிய விஷயம் என்று நினைத்தார்.

மனைவியின் கழுத்தை விடாமல் கட்டிக் கொண்டிருக்கும் மகளை பார்த்தபடியே முன்னே நடந்தவனை, “ஒரு நிமிஷம் இருங்கய்யா… ஆரத்தி எடுக்கப் போயிருக்காங்க. எவ்வளவு பெரிய கண்டத்துலேருந்து தப்பிச்சு வந்திருக்கீங்க. சுத்திப் போட்டுட்டு உள்ளக் கூட்டிட்டுப் போறோம்” என்றுக் கூறி தடுத்தார் அந்த வீட்டின் தோட்டக்காரர் பாண்டி.

அடுத்த அடி எடுத்து வைக்காமல் அவன் நிற்க அவனருகில் நின்றவள், “பரவாயில்ல… மத்தவங்க சொல்லுறதையும் மதிக்குறான். சொன்னதும் நின்னுட்டானே…” என்று எண்ணமிட்டாள்.

வீட்டில் வேலை செய்யும் பெண்ணொருத்தி ஆரத்தி சுற்ற அனைவரின் பார்வையும் தங்கள் மீதிருப்பதை உணர்ந்தவன் மகளை தூக்கியிருந்த ஆராதனாவின் மற்றொரு கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

தாய் தந்தை உடன் வராமல் சந்திரனுடன் பேசியபடி பின்னே நிற்க பழக்கமில்லாத வீட்டினுள் நுழையும் உணர்வு தோன்றியவளுக்கு அவன் கை பிடித்து நடப்பதே தைரியத்தைக் கொடுத்தது.

தன் கையை உதறிவிடுவாளோ என்று நினைத்தவன் அதை கெட்டியாகப் பிடித்து நடப்பவளை திரும்பிப் பார்த்தான். வீட்டை புதிதாய் பார்ப்பதை போல் சுற்றி நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “நீங்க இங்க ஹால்ல உட்காருங்க. நாங்க எங்க ரூமுக்குப் போறோம். அம்மு… தாத்தாகிட்ட இருங்கடா… மம்மி டயர்டா இருப்பாங்கல்ல… ரெஸ்ட் எடுக்கட்டும் என்ன…” என்றான்.

“ம்ம்ஹும்… மம்மி கூட இருக்கேன்”

“பாட்டிகிட்ட வாங்கடா செல்லம். பாட்டி வந்ததுலேருந்து என்கிட்ட நீங்க பேசவே இல்லையே… வாங்க வாங்க…” சரண்யா வந்து மகள் கையிலிருந்து பேத்தியை வாங்கிக் கொண்டார்.

எதற்கும் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்த ஆராதனா தன் கையை பிடித்து நடந்தவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.

“அவ என் பொண்ணா?”

“ஷ்ஷ்… ரூம்குள்ள போனதுக்கப்பறம் எதுவா இருந்தாலும் கேளு”

ஹாலில் நின்றவர்களை பார்த்தவளுக்கு அவன் சொல்வதும் சரியென்றுத் தோன்ற அமைதியாக நடந்தாள். ஹாலின் ஒரு மூலையில் இருந்த அறை கதவை திறந்து அவளுடன் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டான்.

“அவ என் பொண்ணா? அம்மு?”

“நம்ம பொண்ணு. அம்மு வீட்டுல செல்லமா கூப்பிடுற பேரு”

“நெஜமா எனக்கு கொழந்தை இருக்கா? எப்போ… எனக்கு ஏன் விஷ்வா எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குது? என்னால… முதல்ல நீ யாரு? எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? காலையிலிருந்து இத யோசிச்சு யோசிச்சே தலை வலிக்குது. இப்போ பொண்ணுன்னு சொல்லுற… எப்படி என்னால ஏத்துக்க முடியும்? என்னால…”

“உன்னை ஏத்துக்க சொல்லல. உண்மைய மாத்தவும் முடியாது. அவ உன் குழந்தைன்னு உனக்கு ஞாபகம் இல்ல. ஆனா அவ சின்ன பொண்ணு… அவள ஹர்ட் பண்ணிடாத ப்ளீஸ்… இந்த ரெண்டு நாள்லயே அவ உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டா ஆராதனா”

அவன் பேசும்பொழுது அவனுடைய முகத்தையே ஆராய்ந்தாள். அவன் பொய் சொல்வதாகத் தெரியவில்லை. ஆனால் எதையும் முழுதாக ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது.

“வயசென்ன?”

“3”

“பேரு?”

“தீபாலி”

அவள் தலைக் குனிந்து நிற்க, “குளிச்சுட்டு வா. சாப்பாடு எடுத்துட்டு வரேன். நீ இங்கயே சாப்பிடு” என்றான்.

“அம்மாகிட்ட ட்ரெஸ்…”

அவன் கப்போர்டை திறந்து காண்பிக்க நம்ப முடியாமல் அவனருகில் வந்து எட்டிப் பார்த்தாள். உள்ளே புடவை, சுடிதார், பேன்ட், சட்டை என்று நிறைய உடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“இது…”

“நம்ம கப்போர்ட். உன் டிரஸ், என் ட்ரெஸ் எல்லாம் இருக்கு. உன் ட்ரெஸ் எப்படி இங்க வந்துதுன்னுக் கேட்காத. குளி. சாப்பாடு எடுத்துட்டு வரேன்…”

சோர்ந்துப் போயிருக்கிறான் என்பது அவன் முகத்திலும் குரலிலும் தெரிய மேலே எதுவும் கேட்டு அவனை வருத்தாமல் உடைகளை ஆராயத் துவங்கினாள். மொத்தத்தையும் பார்வையிட்டவள் தேடி தேடி அடி ஷெல்பிலிருந்து ஒரு நைட் ட்ரெஸை எடுத்தாள்.

விஷ்வா அறையைவிட்டு வெளியே வந்தபோது பெரியவர்கள் அனைவரும் ஆவலாய் எழுந்து அவனருகில் வந்தனர்.

“இப்படியெல்லாம் நடந்துக்காதீங்க. அவளுக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு நீங்களே மத்தவங்களுக்கு சொல்லிடுவீங்க போலருக்கு. அம்மு எங்க?”

“எனக்கு அவளோட டிராயிங் காமிக்குறேன்னு நோட் எடுத்துட்டு வர அவ ரூமுக்குப் போயிருக்கா”

“அவள கொஞ்சம் பார்த்துக்கோங்க அத்தை. இப்போதைக்கு அவ ஆராதனாகிட்ட அதிகம் போகாம இருக்குறதே நல்லது”

“அதெல்லாம் நாங்கப் பார்த்துக்குவோம் விஷ்வா. அவ என்ன சொன்னா?”

“ம்ம்ச்ச்… அவளுக்கு தீபாலியையும் ஞாபகம் இல்லப்பா. நிறைய கேள்விக் கேட்குறா… குளிக்க சொல்லியிருக்கேன். சாப்பாடு ரூமுக்கே கொண்டுப் போறேன். எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு. காலையில பேசலாம்”

“வாங்க மாப்பிள்ளை… சாப்பாடு எடுத்துக் குடுக்குறேன்” என்ற சரண்யா வேகமாக அடுக்களைக்குள் நுழைந்து சமையற்காரரிடம் கேட்டு இரண்டு தட்டுகளில் உணவை எடுத்தார்.

ஒரு கையில் கட்டுடன் நின்றவனை பார்த்து, “நான் எடுத்துட்டு வரேன். வாங்க” என்றுக் கூறி அறைக்குள் சென்றவர் தட்டுகளை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

ஆராதனா குளியலறையிலிருந்து வெளியே வர அவளை தலை முதல் பாதம் வரை பார்த்தவன், “இந்த ட்ரெஸ் போட மாட்டேன்னு அடில வெச்சிருந்த… இன்னைக்கு போட்டிருக்க?” என்றுக் கேட்டான்.

காட்டனில் நைட் பேண்டும் சட்டையும் அணிந்திருந்தவள் குனிந்து தன்னை பார்த்துவிட்டு, “ஏன்? இதுக்கென்ன?” என்றாள்.

“அம்மு பிறந்ததுக்கு அப்பறம் குண்டாகிட்டேன்… இது போட்டா நல்லாவே இல்லன்னு சொன்ன?”

கண்ணாடி முன்னால் ஓடி சென்று நின்றாள். “குண்டாகிட்டேனா? ஆமா… ச்ச… தொப்பை கொஞ்சூண்டு இருக்கு. அது மட்டும் குறைக்கணும். அவ்வளவு தான். நான் ஒண்ணும் குண்டா எல்லாம் இல்ல. இந்த ட்ரெஸ் தான் நான் எப்பயும் வீட்டுல போடுவேன். நீ சும்மா எதையாவது சொல்லாத”

“நான் எதுவும் சொல்லலையே… எனக்கு இந்த ட்ரெஸ்ல உன்னைப் பார்க்க பிடிக்கும்”

ஒற்றை கையில் சட்டை பட்டனை கழட்டியபடியே சொன்னவனை நிமிர்ந்துப் பார்க்க முடியாமல் நகர்ந்து சென்று டேபிள் மீதிருந்த தட்டை எடுத்து வந்து மெத்தையில் அமர்ந்தாள்.

“நீ சாப்பிடலையா?”

“சாப்பிடணும். குளிச்சுட்டு வரேன். ஆ…”

சட்டையை கழட்டும்பொழுது ஏற்பட்ட வலியில் அவன் முனக தலை குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள். மாற்றுடையுடன் குளியலறைக்குள் சென்றவன் வெளியே வந்தபோது அவள் சாப்பிட்டு முடித்திருந்தாள்.

“நீ தூங்கு. நான் சாப்பிட்டு படுக்குறேன்”

“தூங்குன்னா?”

“ஹான்? படு… தூங்கு… தூக்கம் வரலையா?”

“இங்கயேவா?”

“பின்ன எங்க?”

“நான்… நான் அம்மாகூட அவங்க ரூம்ல தூங்குறேன்”

“இங்க அவங்களுக்கு ரூம் எல்லாம் இல்ல ஆராதனா. மேல கெஸ்ட் ரூம்ல தூங்குவாங்க. நீ பேசாம படு”

கட்டிலையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் கண்கள் கலங்க, “அம்மாகூட தூங்குறேன். நான் போகணும்” என்றாள்.

அவள் இப்பொழுது வெளியே சென்று யாரேனும் அவளிடம் கேள்விக் கேட்டால் என்ன ஆகுமோ என்ற கவலை இருந்தாலும் அவள் கண்ணீரை பார்க்க பாவமாக இருக்க, “ம்ம்” என்றான். விட்டால் போதுமென்று அறையை விட்டு வெளியே ஓடினாள்.

நிழலே நிஜமாய் – 5

நேரம் நள்ளிரவை கடந்திருந்தது. அந்த அறைக்குள் வந்து பல மணி நேரங்களாகியும் ஆராதனா இன்னும் அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

விளக்கை அணைத்து படுத்தப் பின்பு தனக்கு ஏன் உறக்கம் வரவில்லை என்ற ஆராய்ச்சியில் சில மணித் துளிகள் கரைந்தன. அருகில் உறங்கும் தாயை திரும்பிப் பார்த்தாள். சரண்யா நல்ல உறக்கத்தில் இருந்தார்.

புதிய வீடு, புதிய அறை, புதிய மனிதர்கள்… தான் உடுத்தியிருக்கும் ஆடை முதற்கொண்டு அனைத்துமே புதிது. சம்பந்தம் இல்லாத ஓரிடத்தில் தன்னை வலுக்கட்டாயமாக தள்ளி விட்டதாகத் தோன்றியது.

தன் வாழ்வில் இதுவரை நடந்தவற்றை யோசிக்க முயன்றாள். எதுவும் தெளிவாக நினைவிற்கு வரவில்லை. சரி இன்று காலையிலிருந்து நடந்தவற்றையாவது யோசித்து ஒரு முடிவிற்கு வரலாமென ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தாள். முதலில் அவள் நினைவிற்கு வந்தது விஷ்வா தான்.

“அட ச்ச… இவன் மூஞ்சி எதுக்கு ஞாபகம் வருது? கண்ண திறந்ததும் யாரப் பார்த்தேன்? டாக்டர்… அவருதான எழுப்பினாரு. அவர இதுக்கு முன்னாடிப் பார்த்திருக்கேனா? ம்ம்… இல்ல. அவர பார்த்ததில்ல.

அப்பறம் அம்மா அப்பா… அவங்கள விட்டுடலாம். அப்பறம் சந்திரன் அங்கிள்… நல்ல அங்கிள். இன்னைக்கு முழுக்க நான் பார்த்த இந்த கூட்டத்துலயே இவரு ஒருத்தர் தான் எனக்காக பேசினாரு. எதுக்கும் பதட்டப்படாம… நல்ல மனுஷன்.

விஷ்வா… வேண்டாம் அவன பத்தி லாஸ்டா யோசிக்கலாம். வீட்டுக்கு வந்தோம். ஆரத்தி எடுக்க சொன்னவரு… ஆரத்தி எடுத்த அந்தம்மா… இன்னும்… ம்ம்ஹும் யாருமே இதுக்கு முன்னாடி பழக்கப்பட்டவங்களா தெரியல.

அம்மு…”

நினைத்த மாத்திரத்தில் இதயத் துடிப்பு அதிகரித்தது. ஏ ஸி அறையிலும் வியர்த்துக் கொட்ட மெத்தையில் எழுந்தமர்ந்தாள்.

குழந்தையை குறித்து நினைத்ததும் இனம் புரியாத பாசமும், இன்னதென்று சொல்ல தெரியாத பயமும் மனதில் ஒருங்கே உதித்தன.

எழுந்து அறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள். “இல்ல இருக்க முடியாது. அம்மு என் குழந்தை இல்ல. எனக்கும் விஷ்வாவுக்கும்… இல்லல்ல… அப்படி இருக்காது. அவ பார்க்க அழகா இருக்கா. துரு துருன்னு இருக்கா. சிரிக்கும்போது… அந்த சிரிப்ப பார்த்தா எல்லா கவலையும் மறந்துடும் போலருக்கு. அந்த பிஞ்சு முகத்த பார்த்துக்கிட்டே… ச்ச… இது என்ன யோசனை? நடு ராத்திரில தேவையில்லாம முழிச்சிருந்தா இப்படியெல்லாம் தான் தோணும்”

மெத்தையில் சென்று படுத்தவள் கண்களை இறுக மூடி தூங்க முயல சில நிமிடங்களில் உறக்கமும் வந்தது.

காலையில் உறக்கம் லேசாக களைய இடது கை நீட்டி மெத்தையில் துழாவினான் விஷ்வா. எதுவும் தட்டுப்படவில்லை என்றதும் மெல்ல கண்களை திறந்துப் பார்த்தவன் அருகில் ஆராதனாவை காணாது எரிச்சலுடன் மொபைலை எடுத்துப் பார்த்தான். மணி 7.

“ஷிட்… இவ்வளவு நேரம் எழுப்பாம என்ன பண்ணிட்டு இருக்கா…”

மெத்தையில் எழுந்தமர்ந்தவனுக்கு நேற்றைய நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன. சில நிமிடங்கள் தன்னருகில் மெத்தையை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

“எழுப்ப மாட்டா… இனி எழுப்ப மாட்டா…”

மொபைலை எடுத்து அடுத்த நாளிலிருந்து காலை எழுவதற்கு அலாரம் வைத்தான்.

திருமணம் முடிந்த அன்றிலிருந்து இத்தனை வருடங்களாக இல்லாத பழக்கம். இனி எல்லாமே புதிதாய் கற்றுக் கொள்ள வேண்டும். துயிலெழுந்ததும் தோன்றும் புத்துணர்ச்சி மறைந்து மனம் சோர்ந்துப் போக கை கட்டை பார்த்தவன் எழுந்து குளியலறைக்குள் சென்றான்.

அவன் வெளியே வந்தபோது மெத்தையில் க்வில்ட் மடிக்கப்படாமல் களைந்துக் கிடந்தது. பெருமூச்சுடன் கட்டிலருகில் வந்தவன் ஒற்றை கையில் அதை தூக்கிப் பிடிக்கவே சிரமப்பட்டான். கட்டுப் போட்டிருந்த கையில் பிடிக்க முயன்றால் வலியெடுத்தது.

அவன் ரஜாயோடு போராடிக் கொண்டிருந்த சமயம் சந்திரன் அறை வாயிலில் வந்து நின்றார். மகனை எழுப்புவதற்காக வந்தவர் அவன் கஷ்டப்படுவதை பார்த்து, “நான் வேணா…” என்று உள்ளே ஓரடி எடுத்து வைத்தார்.

“தேவையில்ல… நானே… நான் மடிச்சுக்குறேன்”

அதற்கு மேல் அவர் அறையினுள் நுழையவில்லை. “கதவு திறந்தே வெச்சுட்டு தூங்கிட்ட? எழுப்ப வந்தேன்”

ஆராதனா தன் தாயுடன் உறங்குவதாக சொல்லி சென்றப் பிறகு எதையும் கவனிக்காமல் அப்படியே படுத்துறங்கிவிட்டான்.

“எந்திரிச்சுட்டேன்பா. குளிச்சுட்டு வரேன்”

“எப்படி குளிப்ப? இந்த கையோட…”

“நான் சமாளிச்சுக்குறேன்”

எப்படியோ மெத்தையில் விரித்துப் போட்டு ஒற்றை கையால் ரஜாயை மடித்து முடித்திருந்தான். சந்திரன் அப்போதும் கவலையுடன் அவனை பார்த்தபடி நிற்க கப்போர்டை திறந்து ஊடைகளை எடுத்தவன் அவர்புறம் திரும்பி, “ஆராதனா… எந்திரிச்சுட்டாளா?” என்றுக் கேட்டான்.

“நல்லா எந்திரிச்சா… அவள சமாளிக்கதான் ஒரு ஊரே போராடிட்டு இருக்கு” என்று நினைத்தவர், “நீ சீக்கிரம் குளிச்சுட்டு வா. சாப்பிடலாம். கை பத்திரம். இடிச்சுக்காத” என்றுக் கூறி நகர்ந்துவிட்டார்.

அவன் தயாராகி டைனிங் டேபிலிற்கு வந்தபோது ஆராதனாவின் எதிரில் அவளுடைய பெற்றோரும் அருகில் சந்திரனும் நின்று எதையோ விளக்கிக் கொண்டிருந்தனர்.

அவனைக் கண்டதும் அனைவரும் சட்டென்று அமைதியாகிவிட திரும்பிப் பார்த்தாள். நேற்று போலவே பார்மல் பேண்ட்டும் அரை கை சட்டையும் அணிந்திருந்தான்.

யாரையும் கண்டுக் கொள்ளாமல் வந்து அவளருகில் அமர்ந்தவன் தண்ணீர் எடுத்துப் பருக, “எப்போ பாரு இவன் ஏன் என் பக்கத்துலயே வந்து உட்காருறான்” என்று நினைத்து சுற்றி இருந்த அனைவரையும் பார்த்தாள். சரண்யா எதுவும் பேசாதே என்று சைகை செய்து சமையலறையுள் சென்று பொங்கல் எடுத்து வந்து அவன் தட்டில் வைத்தார்.

தட்டில் ஸ்பூன் இருக்க அதை இடது கையில் பிடித்தவன் சிறிது தடுமாறி கொஞ்சம் பொங்கலை எடுத்து சட்னி தொட்டு வாயருகில் எடுத்து சென்ற சமயம், “எனக்கு காலேஜ் போகணும்” என்றாள் ஆராதனா.

வாயருகில் எடுத்துச் சென்றதை அப்படியே தட்டில் வைத்து புரியாமல் அவளை திரும்பிப் பார்த்தான்.

“ப்ளீஸ்… எனக்கு காலேஜ் போகணும். நீ சொன்னங்குறதுக்காக நான் உங்க வீட்டுக்கு வந்துட்டேன். அதுக்காக என்னால எல்லாத்தையும் விட முடியாது. படிப்பு முக்கியம். காலேஜுக்கு டைம் ஆச்சு”

நிமிர்ந்து சரண்யாவை பார்த்தான். அவர் தலை குனிய ஹரிகிருஷ்ணனை பார்த்தான். பெருமூச்சுடன் தலையை இடம் வலமாக ஆட்டினார். இதையே தான் அவர்களிடமும் கூறியிருக்கிறாள் என்றுப் புரிந்தது.

“காலையில எழுந்ததுலேருந்து இதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கா. நீ சாப்பிடு” சந்திரன் குனிந்து அவன் காதில் ரகசியமாய் கூறி அவன் தட்டில் கொஞ்சம் சாம்பாரை ஊற்றினார்.

“காலேஜ் எல்லாம் போக முடியாது ஆராதனா” தட்டில் போட்ட ஸ்பூனை எடுத்து பொங்கலை சாப்பிட்டான்.

“ஏன்? இதையே தான் அம்மாவும் அப்பாவும் சொல்லுறாங்க. நான் ஏன் போகக் கூடாது?”

“நீ காலேஜ் போகுறத நிறுத்தி ரொம்ப நாளாச்சு” அவளுக்கு பதில் சொன்னாலும் அவள் புறம் திரும்பாமல் இடது கையால் ஸ்பூனில் பொங்கலை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“என் படிப்ப நிறுத்திட்டாங்களா?”

கண்களை இறுக மூடி திறந்து திரும்பி அமர்ந்து, “நீ காலேஜ் எல்லாம் முடிச்சுட்ட. உன் படிப்ப யாரும் நிறுத்தல. ஏற்கனவே படிச்சு முடிச்சுட்ட. காலங்காத்தால உயிரை வாங்காம மனுஷன நிம்மதியா சாப்பிட விடு” என்று அடிக் குரலில் அவன் உறும மிரண்டுப் போனவள் சுற்றிப் பார்த்தாள். ஒருவர் கூட அங்கில்லை.

“அடப்பாவிகளா… இவன் கத்துனா எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க… இவன திட்டுவாங்கன்னுப் பார்த்தா… ஒருத்தர கூட காணுமே… இப்படி தனியா விட்டுட்டுப் போயிட்டாங்களே…”

அவன் இன்னும் தன் பக்கம் திரும்பி அமர்ந்து தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் லேசாக தலையை ஆட்டி அவன் தட்டை கை காட்டினாள். திரும்பி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

“அப்போ…”

“ம்ம்?”

“இல்ல… படிச்சு முடிச்சுட்டேன்னு சொல்லுற? அப்படின்னா… நான் என் அப்பாவோட பேக்டரி பார்த்துக்குறேன். கரெக்டா? நான் பேக்டரிக்கு போகவா? ஆனா எனக்கு அங்க எந்த வேலையும் தெரியாதே… அப்பா படிப்பு முடிஞ்சதும் சொல்லித் தரேன்னு சொன்னாங்க. இப்போ சொல்லி தருவாங்களா?”

“உங்க அப்பா பேக்டரி நான் தான் பார்த்துக்குறேன்”

“நீ ஏன் பார்த்துக்குற? நான்…”

“நான் அத வாங்கிட்டேன். நான் பார்த்துக்குறேன்”

ஆராதனாவால் விஷ்வா சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை. “அப்பா பேக்டரிய வித்துட்டாங்களா? ச்ச… இவன் பொய் சொல்லுறான். எவ்வளவு பார்த்து பார்த்து வளர்த்த பிசினஸ்… அதுக்காக எவ்வளவு உழைச்சிருப்பாங்க… ஒருவேளை…”

“மம்மி….”

கத்தியபடி ஓடி வந்தாள் தீபாலி. நேற்று போல் இன்று திகைத்து விழிக்காமல், “குட் மார்னிங் தீபாலி” என்றுக் கூறி புன்னகைத்தாள்.

ஆனால் அதை கேட்ட தீபாலி தான் திகைத்து விழிக்க வேண்டியதாயிற்று. அவள் ஏதோ கேட்க வர, “அம்மு வா… சாப்பிடு. ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு” என்றழைத்தான் விஷ்வா.

தாயையே பார்த்தபடி அவனருகில் வந்தவளை தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். அவன் கிட்டத்தட்ட சாப்பிட்டு முடித்திருக்க, “கற்பகம்மா” என்றுக் குரல் கொடுத்து சிறிய நேப்கின் ஒன்றை எடுத்து அவள் கழுத்தடியில் சொருகினான்.

ஒரு சிறிய தட்டில் பொங்கலும் ஸ்பூனும் எடுத்து வந்து அவன் தட்டருகில் வைத்துச் சென்றார் கற்பகம். தானே இடது கையில் சிரமப்பட்டு சாப்பிட மகளுக்கு எப்படி ஊட்டுவதென்று யோசித்தவன் ஸ்பூனில் பொங்கலை எடுத்து ஊட்ட முயன்றான். மடியில் அமர்ந்திருப்பவளுக்கு ஊட்ட வாகாக இல்லை.

“அம்மு சாப்பிடுவா. நீங்க சாப்டுங்க டாடி” என்ற தீபாலி அவன் கையிலிருந்து ஸ்பூனை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள். சிறு குழந்தைக்கு தானே எடுத்து சாப்பிட்டு அதிகம் பழக்கமில்லை என்பது அவள் சாப்பிடும் விதத்தில் தெரிந்தது.

ஆராதனாவால் சாப்பிட முடியவில்ல. தீபாலி வந்ததிலிருந்து அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஸ்பூனில் எடுக்கும் பொங்கலில் பாதிக் கூட அவள் வாயினுள் செல்லவில்லை என்பதை கவனித்தவள் நிமிர்ந்து விஷ்வாவை பார்த்தாள்.

அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். குற்றம் சாட்டும் பார்வை. ஒரு நொடி தலை குனிந்து அமர்ந்தவள் குழந்தையை தூக்க கை நீட்டினாள். மகளை சுற்றி கை போட்டு அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். “என் மகளை உன்னிடம் தர மாட்டேன்” என்று அவன் உணர்த்த நினைத்தது அவளுக்கு தெளிவாகவேப் புரிந்தது.

“நான் ஊட்டி விடவா? ஸ்பூன் குடுங்க…”

அவளை திரும்பிப் பார்த்த தீபாலி, “டெய்லி மம்மி தான் ஊட்டுவீங்க. இன்னைக்கு அம்முகூட கோவம்னு நெனச்சேன். ம்ம்…” என்று ஸ்பூனை நீட்டினாள்.

அவள் கூறியது ஆராதனாவை அதிர வைக்க விஷ்வாவின் முகத்தை பார்த்தாள். இப்போதும் இமைக்காமல் அதே பார்வை பார்த்தான்.

“நான்… நான் மறந்துட்டேன். சாரி”

“எதுக்கு சாரி? மம்மி என்னை அடிச்சா மட்டும் தான் சாரி சொல்வீங்க. 2 டைம்ஸ்…”

“அது… நான்…”

“பேசாம ஊட்டி விடுறியா?”

அவன் கூறுவதே சரியென்றுத் தோன்ற அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். பெண்களுக்கு இயல்பிலேயே இருக்கும் தாய்மை உணர்வுக் காரணமாக குழந்தைக்கு ஊட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இல்லை.

கற்பகம் பால் க்ளாஸை எடுத்து வர அதைப் பார்த்த தீபாலியின் கண்கள் கலங்கத் துவங்கின. “இன்னைக்கு வேண்டாம் டாடி” விட்டால் அழுதுவிடுபவள் போல் கூறியவளை பார்க்க ஆராதனாவிற்கு பாவமாக இருந்தது.

“நோ… குடி. அம்மு குட் கர்ள் தான?”

“ப்ளீஸ் டாடி… இன்னைக்கு ஒன் டே மட்டும்…”

“இதே தான் டெய்லி சொல்லுற. குடி அம்மு”

“டெய்லி நீங்கதான எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்க?”

“பாவம்… அழுதுடுவா போலருக்கு. வேண்டாம்னா விடேன்…”

வாயை பிளந்து ஆராதனாவை திரும்பிப் பார்த்த தீபாலி விஷ்வா எதுவும் கூறும் முன், “பாய் டாடி. பாய் மம்மி” என்று கத்தியபடி அவன் மடியிலிருந்து நழுவி இறங்கி ஓட்டமெடுத்தாள்.

க்ளாஸை டேபிள் மீது வைத்து மனைவியை திரும்பிப் பார்த்தான்.

“இல்ல… அவ… அழுதாளா… பாவம் கெஞ்சுனா… அதான்…”

“இப்படி தினம் நான் சொன்னப்போ எல்லாம் நீ கேட்டதில்ல. இப்ப இத யாரு குடிக்குறது?”

“நீ குடி”

“எனக்கு பால் எல்லாம் வேண்டாம்”

முகத்தை சுளித்து எழுந்து செல்பவனைப் பார்க்க சிரிப்பு வந்தது. “உனக்கு பால் பிடிக்காதா? அதான் தீபாலி பால பார்த்தா இந்த ஓட்டம் ஒடுறாளா? நல்ல அப்பா நல்ல பொண்ணு…”

எழுந்து கை கழுவி ஹாலிற்கு வந்தபோது தீபாலி அவளுடைய அறையிலிருந்து, “மம்மி என்னோட கலரிங் புக்…” என்றுக் குரல் கொடுத்தாள்.

ஆராதனா யோசனையுடன் அவளறைக்கு செல்ல திரும்ப, “நீ இரு” என்றுக் கூறி விஷ்வா மகளின் அறைக்குள் சென்றான். உள்ளே வந்துவிட்டானேத் தவிர கலரிங் புக் எங்கே இருக்குமென்று அவனுக்கும் தெரியாது.

மகளுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி ஒரு வழியாய் கண்டுப்பிடித்து, “கெடச்சிடுச்சு” என்று அவளிடம் கொடுத்தபோது, “தேன்க் யூ டாடி” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அதன் பின் அவள் கேட்டக் கேள்விக்கு பதில் கூற முடியாமல் தடுமாறியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளையும் அவள் பேகையும் ஒரே கையில் தூக்கி வெளியே வந்தான்.

பேத்தியையும் அவள் பையையும் அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டு காரில் பள்ளிக்கு அனுப்ப வெளியே சென்றார் சந்திரன்.

சோபாவில் அமர்ந்து ஷூ மாட்டியவனின் அருகில் சென்று சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தவள், “நானும் வரவா?” என்றுக் கேட்டாள்.

“எங்க?”

“அப்பாவோட பேக்டரிக்கு…”

“நான் இப்போ அங்க போகல”

“அப்போ நீ அப்பாவோட பேக்டரிய பார்த்துக்கலையா?”

“இப்போ போகலன்னு தான் சொன்னேன். பார்த்துக்கலன்னு சொல்லல”

“வீட்டுல இருந்து நான் என்ன செய்யுறது?”

“நீ…”

வாசலில் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் டாக்டர் குமார் உள்ளே நுழைவதை கண்டான்.

அவரைக் கண்டதும் ‘எனக்கு ஏதோ ஆகிடுச்சு’ என்று நேற்றிலிருந்து மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணம் இன்னும் வலுப் பெற வேகமாக எழுந்து சென்றுவிட்டாள் ஆராதனா.

பேத்தியை காரில் வழியனுப்பிய சந்திரனோடு பேசிக் கொண்டே வந்த குமார் விஷ்வாவை பார்த்ததும் அமைதியாகிவிட்டார்.

ஷூவை மாட்டிவிட்டு எழுந்தவன் அவரைக் கடந்து செல்லும்போது, “அவ மண்டைய ஒடச்சு என்னத்தையாவது பண்ணி அவளுக்கு மறந்ததை எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வாங்க… இல்ல…” என்று மிரட்டிவிட்டுச் சென்றான்.

“என்னடா உன் பையன் மண்டைய உடைக்க சொல்லுறான்? என்னை பார்த்தா எப்படித் தெரியுது?”

“நீ வா. அவன் ஏதோ டென்ஷன்ல இருக்கான்”

அடுத்து ஆராதனா என்ன கூற காத்திருக்கிறாளோ என்ற யோசனையுடன் அவளை காண தன் நண்பருடன் சென்றார் குமார்.

நிழலே நிஜமாய் – 6

ஆராதனா அமைதியாக அமர்ந்திருந்தாள். குமார் அந்த வீட்டிற்குள் வந்ததிலிருந்து அவ்வளவு நேரம் இருந்த குழப்பங்கள் அதிகரித்து தலை வலியெடுக்கத் துவங்கியது. அவரிடம் பேச அஞ்சியே வேகமாக எழுந்து இரவு தாயுடன் படுத்துறங்கிய மாடியறைக்குள் வந்துவிட்டாள்.

அவர் வந்திருப்பதே அவளை பரிசோதிப்பதற்காக தானே… எப்படி அவளை காணாது திரும்பி செல்வார்? அவளை தேடி மாடிக்கு வந்தார்.

“அவளுக்கு இன்னும் எதுவும் பிடிப்படலன்னு நினைக்குறேன் குமார். இந்த வீட்டுல எல்லாத்தையும் புதுசா பார்க்குறா. யாரையும் அடையாளம் தெரியல. அம்முவ கூட”

குமார் படியேறுவதை நிறுத்தி திரும்பிப் பார்த்தார். “அம்முவ நான் மறந்தேப் போயிட்டேன் சந்திரா. அவளுக்கு தெரியுமா? சொல்லிட்டீங்களா?”

“என்னன்னு சொல்லி புரிய வைக்குறது? நேத்து அவள பார்த்ததும் ஆராதனா ஷாக் ஆகி நின்னுட்டா. தூக்கக் கூட இல்ல. பாவம் அம்மு ரொம்ப அழுதுட்டா”

“ம்ம்… விஷ்வா எதுவும் சத்தம் போட்டுடலையே…”

“இல்ல குமார். அவனுக்கும் கோவம் வருது. காலையில டைனிங் டேபிள்ல கொஞ்சம் கடுப்படிச்சான். அவன் இவ்வளவு பொறுமையா இருக்குறதே பெரிய விஷயமில்லையா? நான் பெருசா பயந்தேன்டா”

“ஆமாமா… உன் பையன் தான… எப்படி தான் உனக்கு அவன் பையனா பிறந்தானோ? சரி வா… அடுத்து உன் மருமகள சமாளிக்க முடியுதாப் பார்க்கலாம்”

அறைக்குள் நுழைந்தவர்களைக் கண்டதும், “எனக்கு தலை வலிக்குது. நான் கீழப் போறேன்” என்று அறையை விட்டு வெளியேற முயன்றாள் ஆராதனா.

“நான் எப்போ வந்தாலும் முதல் ஆளா ரெண்டே நிமிஷத்துல சிஞ்ஜர் டீ போட்டு எடுத்துட்டு வந்துக் குடுத்து ‘இங்க யாருக்கும் எந்த வியாதியும் இல்லையே’னு கிண்டல் பண்ணுற ஆளு… இப்போ தலை வலிக்குதுன்னு பயந்து ஓடுற…”

“வியாதி இருக்கா? இப்போ… யாருக்கு? எனக்கு சிஞ்ஜர் டீ பிடிக்காதே… அப்பறம் நான் எதுக்கு அத கலந்தேன்? நீங்க இங்க…”

“டேய்… நீயெல்லாம் ஒரு டாக்டர்… நீ வந்து உட்காரு ஆராதனா. தலையில போட்டிருக்க கட்ட பிரிச்சுட்டு டிரெஸ்ஸிங் பண்ணி பான்ட்டெய்ட் போட்டு விடுவான்”

“நான் டாக்டர் தான்டா… இப்படி நர்ஸ் வேலையெல்லாம் பார்க்க விடுங்க. சாரிம்மா. நான் சொன்னதெல்லாம் மறந்துடு. இப்படி வந்து உட்காரு வா… நெத்தில காயம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்”

“எனக்கு ஏற்கனவே எதுவும் ஞாபகம் இல்லன்னு தான் எல்லாரும் சொல்லுறாங்க. நீங்க மறக்க சொல்லுறீங்க”

குமாருக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. “அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. நீ உட்காரு. சந்திரா… எங்க ரெண்டு பேருக்கும் டீ எடுத்துட்டு வர சொல்லு. நாங்க பேசிட்டே குடிப்போம்”

“அப்போ எனக்கு வேண்டாமா? மூணு பேருக்கும் எடுத்துட்டு வர சொல்லுறேன் இரு” என்றவர் அறையை விட்டு வெளியே சென்று டீ எடுத்து வருமாறு குரல் கொடுத்தார்.

அவர் அறைக்குள் வந்த நேரம் தன் கிட்டை திறந்து வைத்து ஆராதனாவின் நெற்றி கட்டை அவிழ்த்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தார் குமார்.

“காயம் பலமா இல்ல. இனி கட்டு போட வேண்டாம். சந்திரா சொன்ன மாதிரி பான்ட்டெய்ட் போடுறேன். ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி வந்து மாத்திக்குறேன். இன்னைக்கு குளிக்கலாம். நேத்தே காயத்துல தண்ணிப் பட்டிருக்கு. குளிச்சியா?”

“இல்ல. விஷ்வா முகம் கழுவ சொன்னான்”

அவள் சொன்னதைக் கேட்டதும் சட்டென்று நண்பரை திரும்பிப் பார்த்தார் குமார். “அது நேத்துலேருந்து அவன் இவன் தான்”

“என்ன அங்கிள்?”

“ஒண்ணுமில்லம்மா. நீ ஆடாம உட்காரு. நான் சொல்லுற வரைக்கும் தலைக்கு மட்டும் தண்ணி ஊத்த வேண்டாம்”

“எனக்கு தலையில பெருசா அடிப்பட்டதால தான் எல்லாம் மறந்துப் போச்சு… நீங்க என் தலைய மொட்டை அடிச்சு ஆபரேஷன் பண்ணியிருப்பீங்கன்னு நெனச்சு… என் முடி ஒருவேளை விக்கோன்னு பிடிச்சு இழுத்துப் பார்த்தேன்”

“இது வேறையா? நீ ரொம்பவே தெளிவா இருக்க ஆராதனா”

“அப்பறம் எதுக்கு எல்லாரும் என்னை வித்தியாசமாவே பார்க்குறாங்க?”

ஒரு ட்ரேயில் தேநீர் கோப்பைகளுடன் உள்ளே நுழைந்த சரண்யாவின் காதுகளில் இது விழுந்துவிட, “நீ எல்லாமே வித்தியாசமா பண்ணா அப்படி தான் பார்ப்பாங்க” என்றார்.

காலையில் பேத்தியிடம் அவள் நடந்துக் கொண்ட விதத்தைப் பார்த்தவருக்கு கோபம் வந்துவிட்டது. நேற்று தீபாலியை முதல் முறை பார்த்தபோது அவள் அதிர்ந்தது இயல்பே. அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சிறுபிள்ளை ஆசையாய் அருகில் வரும்போது தூக்கக் கூட தோன்றாமல் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் என்ன பெண் இவள் என்று கோபம் வர அதுவே இப்போது வார்த்தைகளாகவும் வெளி வந்தது.

ஆராதனாவின் கண்கள் கலங்கத் துவங்க, “நீங்க போங்கம்மா. நாங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கோம்” என்று அவரை அனுப்பி வைத்தார் குமார்.

ஒரு கப்பை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்த சந்திரன் தனக்கு ஒரு கப்பை எடுத்து கட்டிலின் எதிரே போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தார். ஆராதனாவின் காயத்திற்கு மருந்திட்ட குமார் குளியலறைக்குள் சென்று கை கழுவி டீ கப்பை எடுத்து வந்து நண்பரின் அருகில் அமர்ந்தார்.

சில நொடிகள் அமைதியாக தேநீர் அருந்துவதில் கழிய, “நீ முதல்ல உனக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு நினைக்குறத நிறுத்து ஆராதனா. சில விஷயங்கள் மறந்துடுச்சு. அது பெரிய விஷயம் இல்ல. நல்லா யோசிச்சுப் பார்த்தா எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வந்துடும். டென்ஷன் ஆகாம இருக்கணும். அதான் முக்கியம்” என்று பொறுமையாகக் கூறினார்.

ஆராதனா பதில் எதுவும் கூறவில்லை. தலை குனிந்தமர்ந்து அமைதியாக தேநீர் பருகிக் கொண்டிருந்தாள். அவள் யோசிக்கட்டும் என்று மற்ற இருவரும் எதுவும் பேசவில்லை.

“எனக்கு எங்க வீட்டுக்குப் போகணும்”

“ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ விஷ்வாவே கூட்டிட்டுப் போவான்”

“இல்ல டாக்டர். இங்க இருந்தா என்னால யோசிக்க முடியல… எதுவும் ஞாபகம் இல்ல… யாரையும் அடையாளம் தெரியல… என்னால… ப்ளீஸ் டாக்டர்… மூச்சு முட்டுற மாதிரி இருக்கு”

சந்திரன் தன்னுடைய தேநீர் கோப்பையை கீழே வைத்துவிட்டு எழுந்து சென்று மெத்தையில் அவளருகில் அமர்ந்தார்.

“உனக்கு இங்க இருக்க யாரையும் அடையாளம் தெரியல அவ்வளவு தான? யாரையும் பிடிக்காமப் போயிடலையே?”

அவள் பதில் கூறாமல் இருக்க, “நீ அமைதியா இருந்தா நாங்க எல்லாரும் சேர்ந்து உன்னை கொடுமைப்படுத்துறோம்னு இவன் நெனச்சுக்குவான்” என்று நண்பரை கை காட்டினார்.

“உனக்கு இந்த வீட்டுல யார பிடிக்கலன்னு சொல்லு… அடிச்சுத் துரத்திடுவோம். சொல்லு… என் பிரெண்ட்… தோ இந்த சந்திரா உன்னை ஏதாவது சொல்லுறானா?”

“ம்ம்ஹும்”

“வீட்டுல வேலை செய்யுற யாரையாவது கண்டாளே ஆகலன்னு சொல்லு… இப்போவே வேலைய விட்டுத் தூக்கிடுவோம்”

“நான் இன்னும் அவங்க யார்கிட்டயும் பேசல”

“அம்மு?”

“அழகா இருக்கா”

“அப்போ விஷ்வா?”

ஆராதனாவின் நெற்றி சுருங்க, “அய்யய்யோ தவளை தன் வாயாலயே கெட்டுச்சாம்” என்று நினைத்த குமார், “அப்போ ஒண்ணும் பிரச்சனை இல்ல. இங்க இருக்க எல்லாரும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க. நீ தைரியமா இரு. நான் கிளம்புறேன். ஹாஸ்பிட்டல் போக டைம் ஆயிடுச்சு” என்று அவசரமாக எழுந்து தன் கிட்டை பேக் செய்து அறையை விட்டு வெளியே சென்றார்.

“ரெஸ்ட் எடு” என்றுக் கூறி சந்திரன் அவர் பின்னாலேயே சென்றார்.

“விஷ்வா? அவனக் கண்டா பயம் தான் வருது. இல்லல்ல… அவனுக்கு நான் எங்க பயப்படுறேன்? என்கிட்ட கத்துனா அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல கத்துன மாதிரி பதிலுக்கு கத்திவிட்டுடுவேன்… என்னை யாருன்னு நெனச்சான்? தூக்கம் வருது… நைட் புல்லா யோசிச்சு யோசிச்சே… ஷப்பா…”

விஷ்வா டேபிள் மீதிருந்த பேப்பர் வெயிட்டை சுழற்றியபடியே யோசனையில் இருந்தான். ஏதோ ஒரே நாளில் அவனுடைய வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றியது.

நேற்றிலிருந்து ஆராதனா பேசுவதையோ நடந்துக் கொள்வதையோ… அவனை மறந்ததைக் கூட அவன் இப்போது பெரிதாக எண்ணவில்லை. காலையில் தீபாலி கேட்ட ஒற்றை கேள்வி அவனை அளவுக்கதிகமாக யோசிக்க வைத்திருந்தது.

“மம்மிக்கு என்னை பிடிக்கலையா டாடி?”

ஏக்கமாக அவள் கேட்டக் கேள்விக்கு அப்போது என்ன பதில் கூறுவதென்று தெரியாமலேயே அவளை அறையைவிட்டு வெளியே தூக்கி வந்துவிட்டான். ஏதாவது சமாதானம் சொல்லியிருக்க வேண்டுமென்று இப்போது உறுத்தியது. தான் பதில் கூறாததே அவளுக்கு மேலும் சந்தேகத்தைக் கொடுத்திருக்கும் என்று அஞ்சினான்.

“பூல்… குழந்தை முன்னாடி கொஞ்சம் நடிச்சா கொறஞ்சா போயிடுவா? சாப்பாடாவது ஊட்டி விடலாம்ல? சின்ன குழந்தைய கொஞ்ச கூட தெரியாத…”

சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தான். “என்ன செஞ்சுட்டு இருக்கேன்? யார பத்தி இப்படி யோசிக்குறேன்? ஆராதனாவையா? அவள பத்தி எனக்குத் தெரியாதா? எல்லாத்தையும் மறந்துட்டா… அவளுக்கு இப்போ வேண்டியது கொஞ்சம் டைம். அம்முவ சமாளிக்க முடியாதா? கொஞ்ச நாள்… எப்படியாவது அவள மட்டும் சமாளிச்சுட்டா எல்லாம் சரியாகிடும். சரியாகாமப் போகுறதுக்கு வாய்ப்பே இல்ல. சீக்கிரம் சரியாகிடும்”

மீண்டும் மீண்டும் இதையே சொல்லி மனதை திடப்படுத்திக் கொண்டான். என்ன முயன்றும் மனதின் ஒரு மூலையில் தோன்றி தன்னை அச்சுறுத்தும், “ஒருவேளை அப்படி நடந்துவிட்டால்?” என்ற கேள்வியை அவனால் முற்றிலுமாக உதறித் தள்ள முடியவில்லை.

மிகவும் முயன்று தன் கவனத்தை வேலையில் திருப்பினான். மதிய உணவு இடைவேளைவரை தாக்குப் பிடிக்க முடிந்தவனால் அதற்கு மேல் முடியாமல் போனது.

எப்போதும் அவனுக்கான மதிய உணவு வீட்டிலிருந்து வரும். ஆராதனா தவறாமல் அவனுக்கு அழைத்து, “சாப்பாடு வந்துடுச்சா? ஒழுங்கா சாப்பிடுங்க” என்றுக் கூறும் அக்கறையான வார்த்தைகள் இல்லாமல் உணவு உள்ளே இறங்க மறுத்தது

“அவளுக்கு என்னை பிடிக்கலையா?”

காலையில் மகள் கேட்டக் கேள்வியை இப்போது அவன் மனம் கேட்டது.

“எல்லாமே மறந்திருந்தாலும் என்னைப் பத்தின ஒரு விஷயம் கூடவா நியாபகம் இல்லாமப் போகும்? நான் அவ மனசுல பதியவே இல்லையா? இத்தனை வருஷத்துல ஒரு விஷயம் கூடவா இல்ல?

எனக்கே இப்படி இருக்கே… அம்முவுக்கு எப்படி இருக்கும்? இதெல்லாம் அவளால புரிஞ்சுக்க முடியாது. என்னாலையும் புரிய வைக்க முடியாது. இனி அவ முன்னாடி கவனமா இருக்கணும். இதையெல்லாம் எப்படி சமாளிக்கப் போறேன்… நெனச்சாலே தலை சுத்துது”

ஆராதனா டைனிங் டேபிளில் உணவருந்திக் கொண்டிருக்க அவளுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார் கற்பகம். நன்றாக தூங்கி எழுந்தவள் நேரம் கழித்து சாப்பிட மற்ற அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர். தனியே சாப்பிடுவது உறுத்தியது. தன் தாயும் தனக்காக காத்திருக்காமல் உணவுண்டது வருத்தத்தை தந்தது.

“சாப்பிடுங்கம்மா… இப்போவே மணி மூணுக்கு மேல ஆச்சு. இவ்வளவு லேட்டாவா சாப்பிடுறது? இப்போவும் என்னமோ தட்டுல கோலம் போட்டுட்டு இருக்கீங்களே… சாப்பாடு பிடிக்கலையாம்மா?”

கடைசி வாக்கியத்தை சொல்லும்போது அவர் குரலில் இருந்த வருத்தத்தை கண்டுக் கொண்டவள், “சூப்பரா இருக்கு. எனக்கு தான் லேட்டா சாப்பிடுறதால நிறைய சாப்பிட முடியல. எனக்கு போதும். இத கொட்டிடுங்க” என்றுக் கூறி கை கழுவ எழுந்தாள்.

கற்பகம் அவளையே பார்த்தபடி நிற்க அங்கே வந்த சந்திரன், “ஆராதனா சாப்பிட்டாளா?” என்றுக் கேட்டார்.

“சாப்பிட்டாங்கய்யா. போதும்னு சொல்லி சாப்பாட கீழக் கொட்ட சொல்லுறாங்க. அம்மாவுக்கு என்ன ஆச்சு?”

“பசிச்சிருக்காது கற்பகம்மா. கொட்டிடுங்க. எப்பவும் சாப்பாட வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு அவதான் சொல்லுவா. இன்னைக்கு ஏதோ அசதியா இருக்குப் போல. நீங்க வேலைய பாருங்க”

ஆராதனா என்ன செய்வதென்றுத் தெரியாமல் ஹாலை சுற்றி வந்தாள். டீவீ பார்த்தாள். சோபாவில் அமர்ந்த நிலையில் சிறிது நேரம் உறங்கினாள்.

யாரும் அவளிடம் பேசவில்லை. தாயும் தந்தையும் உறங்கிக் கொண்டிருந்தனர். சந்திரனும் உறங்கிவிட அந்த வீட்டில் வேறு யாருடன் பேசுவதென்று தெரியவில்லை.

இதன் பிறகு என்ன செய்வதென்று புரியாமல் அமர்ந்திருந்தவளின் அருகில் வந்த சந்திரன், “தூங்கலையா ஆராதனா?” என்றுக் கேட்டார்.

“ம்ம்ச்ச்… காலையில தான அங்கிள் தூங்கினேன்? தூக்கம் வரல. அம்மாவும் அப்பாவும் தூங்கிட்டாங்க. இந்த வீட்டுல வேலை செய்யுறவங்க எல்லாரும் என்னைக் கண்டாளே மரியாதையா ஒதுங்கிப் போறாங்க… என்னைத் தொல்லைப் பண்ணக் கூடாதுன்னு நினைக்குறாங்க. என்னப் பண்ணுறதுன்னுத் தெரியல அங்கிள்”

“போர் அடிக்குதுன்னு சொல்லுற”

“ரொம்பவே அங்கிள்”

“கார்டன் சுத்திப் பார்த்தியா?”

“வீட்டையே முழுசா சுத்திப் பார்க்கல… கார்டன் எங்…”

“வா. உனக்குப் பிடிச்ச பூ எல்லாம் இருக்கும்”

“எனக்குப் பிடிச்ச பூ எதுன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“செடி எல்லாம் வாங்கிட்டு வந்து வெக்க சொன்னதே நீதான்”

“நான் சொன்னேனா? எனக்குப் பிடிச்ச செடியா?”

“ம்ம்ஹும். எதுவும் யோசிக்காத. வந்து கார்டன் சுத்தி நட. அப்பறம் அங்கயே கொஞ்ச நேரம் உட்காரு. நல்லா இருக்கும்…”

பேசாமல் சந்திரனுடன் சென்றவள் அவர் சொன்னது போலவே தோட்டத்தை சுற்றி நடந்தாள். கையில் எடுத்து வந்திருந்த புத்தகத்துடன் அவர் பெஞ்சில் அமர்ந்துவிட ஒவ்வொரு செடியாக அருகில் சென்றுப் பார்த்து ரசித்தாள்.

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள்”

“நான் தான் சொன்னேன்ல?”

“நீங்க இங்க இருக்கீங்களா?” என்றுக் கேட்டபடி அவர்களருகில் வந்தார் ஹரிகிருஷ்ணன்.

“கார்டன் சூப்பரா இருக்குப்பா”

“நீ வெச்சது உனக்குப் பிடிக்காமப் போகுமா?”

“இப்போதான் சம்பந்தி எதையும் யோசிக்காதன்னு சொன்னேன்”

“அப்போ சரி. நான் எதுவும் சொல்லல”

முகத்தில் கவலை மண்டிக் கிடக்க அங்கே வந்த சரண்யாவை பார்த்ததும், “என்னாச்சும்மா?” என்றாள் ஆராதனா.

அவளைப் பார்ப்பதை விடுத்து மற்ற இருவரையும் பார்த்தவர், “சொல்ல சொல்லக் கேட்காம காலையிலயும் மாப்பிள்ளை கார் எடுத்துட்டுப் போயிருக்காங்க. நீங்களாவது சொல்லக் கூடாதா சம்பந்தி? டிரைவர் எல்லாம் எதுக்கு இருக்காங்க?” என்றுக் கவலையாகக் கேட்டார்.

“கையில கட்டோட எப்படி ஓட்ட முடியும்?”

“நான் சொன்னா எங்கக் கேட்குறான்?”

சந்திரன் சலித்துக் கொள்ள எல்லோரின் பார்வையும் ஆராதனாவின் பக்கம் திரும்பியது. “என்னை எதுக்குப் பார்க்குறாங்க?” என்று நினைத்தவள், “நான் உள்ளப் போறேன்” என்றாள்.

“நில்லு ஆராதனா. மாப்பிள்ளைக்கு போன் பண்ணிக் குடுக்குறேன். டிரைவர் வருவாருன்னு சொல்லு”

“ஏன் அத நீங்க சொல்ல வேண்டியதுதான?”

“சொல்லுறத செய். எப்போ பாரு கேள்விக் கேட்டுக்கிட்டு” எரிச்சல்பட்டவர் விஷ்வாவின் எண்ணை டயல் செய்து மொபைலை அவள் கையில் திணித்தார்.

அன்றைய தினத்தின் வேலைகளை முடித்த விஷ்வா கிளம்புவதற்கு முன் மேனேஜரிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தான். மொபைல் ஒலிக்க எடுத்துப் பார்த்தவன் ஆச்சரியத்துடன் அழைப்பை ஏற்றான்.

“சொல்லு ஆராதனா”

“நான் தான் கால் பண்ணுறேன்னு எப்படிக் கண்டுப்பிடிச்ச?”

“உன் மொபைல்லேருந்து வேற யாரு கால் பண்ணுவா?”

“என் மொபைலா…” கையிலிருந்த மொபைலை திருப்பி திருப்பிப் பார்த்து அவள் ஆராயத் துவங்க, “முதல்ல பேசு” என்று அதட்டினார் சரண்யா.

“டிரைவர் வருவாராம்… உன்னைக் கூட்டிட்டு வர. நீ அங்கயே இருப்பியாம். கார் டிரைவ் பண்ண வேண்டாமாம்”

“என்னால வெயிட் பண்ண முடியாது. நான் இன்னும் பத்து நிமிஷத்துலக் கிளம்பிடுவேன். பை”

“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்…”

“வேலை இருக்கு ஆராதனா. வை”

“வைக்க முடியாது. பேக்டரிலேருந்துக் கிளம்பின… வீட்டுல சாப்பாடு போட மாட்டோம். மரியாதையா அங்கயே உட்கார்ந்திரு. இன்னும் அரை மணி நேரத்துல டிரைவர் வருவாரு. கார் ஸ்டியரிங்ல கைய வெச்சா நல்லா இருக்க இன்னொரு கையையும் ஒடச்சுவிட்டுடுவேன்”

அவனைவிட சத்தமாகக் கத்தியவள் அழைப்பைத் துண்டித்து மொபைலை அன்னையிடம் நீட்டி பின், “இது என்னோடதுன்னு தான சொன்னீங்க? என்கிட்டயே இருக்கட்டும்” என்றுக் கூறி வீட்டினுள் சென்றாள்.

“என்னங்க இவ மாப்பிள்ளைகிட்ட இப்படி பேசிட்டுப் போறா?”

“பேசட்டும் சம்பந்தியம்மா. அவனுக்கும் இப்படி பேசுற ஒரு ஆள் தான் சரி”

“அதுக்காக இப்படி பேசுறது சரியில்லைங்க”

“அவ சொல்லுறது சரிதான் சம்பந்தி. உங்க பொண்ணு இருக்க அமைதிக்கு அவ தான் என் பையனுக்கு ஏத்தவன்னு அவள பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு சொன்னீங்க நியாபகம் இருக்கா? இப்போ நீங்களே இப்படி சொல்லுறீங்களே?”

“கொஞ்ச நாள் ஒரு மாறுதல் இருக்கட்டுமே… வாங்க உள்ளப் போகலாம்” என்று கூலாக சொல்லி செல்லும் சந்திரனை வியப்புடன் பார்த்தபடி நின்றனர் ஆராதனாவின் பெற்றோர்.

நிழலே நிஜமாய் – 7

காரிலிருந்து இறங்கிய விஷ்வா வேகமாக வீட்டினுள் நுழைந்து ஹாலில் அமர்ந்திருந்தவளிடம், “உள்ள வா” என்றுக் கூறி நடக்க அமைதியாக எழுந்து அவன் பின்னால் சென்றாள் ஆராதனா.

“நம்ம பொண்ணுக்கு தைரியம் வந்துடுச்சுப் போலருக்கு சரண்யா”

“என்னங்க நீங்க வேற… நானே என்ன ஆகுமோன்னு பயந்துட்டு இருக்கேன்”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது சம்பந்தியம்மா. எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க. என் மருமகளுக்கு என் பையன சமாளிக்க நல்லாவே தெரியும்”

“அவதான் உங்க மருமகன்றதையே மறந்துட்டாளே… அப்பறம் எப்படி சமாளிப்பா?”

“விடு சரண்யா. நம்ம கவலைப்பட்டு எதுவும் ஆகப் போறதில்ல. அவங்க ரெண்டுப் பேருக்கு நடுவுல எது நடந்தாலும் கண்டுக்காம இருந்திட வேண்டியது தான்”

பெற்றோர்கள் கவலைப்பட்டது போல் அவள் மீது கடுங்கோபத்தில் இருந்தவன் அறையினுள் வந்ததும் கதவை தாழிட்டு, “அம்மு எங்க?” என்றுக் கேட்டான்.

“எங்கன்னா? எனக்கெப்படித் தெரியும்? எதுக்கு என்கிட்டக் கேட்குற?”

“அப்படியே ஓங்கி அரஞ்சன்னா… என்னதான் நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? இந்த வீட்டுல அவளப் பார்த்துக்க யாருமே இல்லையா? அவ அம்மா நீ இல்ல? அவ தாத்தா பாட்டி இல்ல? அப்பறம் எதுக்கு அவ பாண்டி அண்ணா கூட கார்டன்ல விளையாடுறா?”

“தெரியாது”

“திமிராவே தான் பேசுவியா?” அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி அவன் கேட்ட விதத்தில் கொஞ்சம் மிரண்டவள் அவன் கையை தட்டிவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

“எனக்கு பதில் வேணும்”

“சின்ன கொழந்தை ஆசையா விளையாடலாம்னு கிட்டப் போனா அவ மம்மி மம்மின்னு கூப்பிடுறா. ஸ்கூல்லேருந்து வந்து வீட்டுக்குள்ள நுழையும்போதே மம்மின்னு கத்திட்டே தான் நுழையுறா. அவ பேசுறத கேட்டுட்டே இருக்கணும் போலதான் இருக்கு. ஆனா என்னால அவ மம்மின்னு கூப்பிடுறத ஏத்துக்க முடியல விஷ்வா. நான் அவகிட்ட போனா… எங்க எதையாவது சொல்லி அவள ஹர்ட் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு”

முதலில் கோபமாக ஆரம்பித்து தவிப்புடன் பேசி முடித்தவளை பார்க்க அவனுக்கும் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் பேசி தான் ஆக வேண்டுமென்று முடிவெடுத்தான்.

“அவ கூப்பிடுறது உனக்குப் பிடிக்கலன்னாலும்…”

“பயம் வருது விஷ்வா. நான் என்னமோ தப்பு பண்ணுறேன்னு தோணுது”

“என்னவோ… நீ எப்படி பீல் பண்ணாலும் சரி… அவ உன் பொண்ணு. அவ உன்ன மம்மின்னு தான் கூப்பிடுவா. அத மாத்த முடியாது. அவ சின்ன பொண்ணு. அவளுக்கு இதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது. ஆனா உன்னால புரிஞ்சுக்க முடியும். நீயே சொல்லுற அவள ஹர்ட் பண்ணிடுவேன்னு பயம் இருக்குன்னு. இப்போவும் நீ அவள ஹர்ட் பண்ணிட்டு தான் இருக்க ஆராதனா”

“நான் எதுவும் பண்ணல”

“நீ அவள கண்டுக்குறதில்லன்னு நினைக்குறா”

“நான் ஒதுங்கிப் போறேன்”

“ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் உனக்கு தெரியும். அவளுக்குத் தெரியுமா? இங்க பாரு… உன்கூட ஆர்க்யூ பண்ண எனக்கு இப்போ தெம்பில்ல. அவகூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணு”

“எப்போ பாரு எல்லாருக்கும் ஆர்டர் போட்டுட்டே இருப்பியா?”

“இப்போ எதுக்கு கத்துற?”

“நீ தான்… நீதான் எப்போவும் கத்திக்கிட்டே இருக்க. போன் பேசுனப்பையும் எப்படிக் கத்துன?”

“நீயும் கூட சேர்ந்து கத்துனல்ல? இன்னொன்னும் சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ. எனக்கு யார் ஆர்டர் பண்ணாலும் பிடிக்காது. நான் கார் செல்ப் டிரைவ் பண்ணிட்டு வருவேன்னு சொன்னா அப்படி தான் வருவேன். சும்மா அதை செய்யாத இதை செய்யாதன்னு சொல்லாத”

“ஏன்? நான் ஏன் சொல்லக் கூடாது? அப்போ நீ என் பேச்சக் கேட்டிருக்கணும். யார் சொல்லுறதையும் கேட்க மாட்டியா? நான் உன் வைப்னு சொல்லிட்டுத் திரியுற… கல்யாணம் ஆகி இத்தன வருஷம் ஆச்சுன்னு சொல்லிக்குற… அப்போ ஒரு நாள் கூட நீ என் பேச்ச கேட்டதில்லையா?”

அவளைக் கூர்ந்து கவனித்தவன், “என்ன புதுசா கேள்வியெல்லாம் கேட்குற?” என்றான்.

“வைப்னு சொல்லி கூட்டிட்டு வந்து இந்த வீட்டுலையே அடச்சு வெச்சிருக்கியே… கேள்விக் கேட்கக் கூட எனக்கு உரிமை இல்லையா என்ன?”

அவளையே இரண்டு நொடி உற்று நோக்கியவன் கப்போர்டின் அருகில் சென்று அதை திறந்து எதையோ தேடினான்.

“என்னத்த தேடுறான்?” என்று அவள் யோசிக்கும்பொழுதே அவள் முன்னால் வந்து நின்று இடது கரம் நீட்டி, “கேள்விக் கேட்குற உரிமை உனக்கு வேணும்னா இது உன் கழுத்துல இருக்கணும்” என்றான்.

நீட்டிய அவன் கையில் இருந்த தாலியை பார்த்தவளின் கை கால்கள் விறைக்க துவங்கின. அதையே வெறித்தவள் நிமிர்ந்தபோது தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவனைக் கண்டு அஞ்சியவளாய், “நான்… வெளில…” என்று சொல்ல வந்ததை முழுதாக சொல்ல முடியாமல் கதவை திறந்து வெளியே ஓடிவிட்டாள்.

தாலியை பார்த்தான். மருத்துவமனையில் அதை அவள் கழுத்திலிருந்து கழற்றி அவன் கையில் கொடுத்த நொடி நினைவு வந்தது. அதை இறுகப்பற்றி அவள் தன்னிடம் திரும்பி வந்துவிட வேண்டுமென்று தவித்த நொடிகளும் நினைவு வந்தன.

“நீ எனக்கு திரும்ப கிடைக்கணும்னு நெனச்சேன். என்னோட ஆராதனாவா எனக்கு திரும்ப கிடைக்கணும்னு நெனச்சிருக்கணுமோ?”

தொண்டை அடைக்க இனி அந்த தாலி தன் கண்களில் படக்கூடாதென்று தன் உடைகளுக்கு அடியில் அதை பத்திரப்படுத்தினான்.

“வைப்னு எத்தன தடவ சொன்னான்… அப்போ எல்லாம் எனக்கு எதுவுமே தோணலையே… தாலிய பார்த்ததும் ஏன் அவன் முன்னாடி நிக்க முடியல? நிஜமாவே எனக்கு அவன் கல்யாணம் பண்ணி… அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க… ச்ச… எங்களுக்கு…”

“என்னாச்சு ஆராதனா? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?”

“ம்ம்… ம்ம்ஹும்”

“என்னாச்சு?”

“ஒண்ணுமில்லம்மா… நீங்க போங்க”

மகளையே பார்த்தபடி சரண்யா அங்கிருந்து நகர்ந்துவிட அவளெதிரில் அமர்ந்திருந்த சந்திரன், “கத்துனானா?” என்றுக் கேட்டார்.

“ம்ம்ஹும்”

“திட்டுனானா?”

“இல்ல அங்கிள்”

“அவன் என்னைக்கும் உன்னை திட்டி நான் பார்த்ததில்ல. அப்படியே கோவமா கேள்விக் கேட்டாலும் நிஜமாவே நீ ஏதாவது தப்பு பண்ணியிருப்ப”

“அம்முகூட நான் விளையாடலன்னு கோவப்பட்டான். அவள நான் கண்டுக்குறதில்லையாம்”

“ஏன் விளையாடல? அவள உனக்குப் பிடிக்கலையா?”

பதில் சொல்லத் தயங்கி அவரை பார்த்தவள், “அவ என்னை மம்மின்னு கூப்பிடுறா” என்றாள்.

“உன்னை அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு அவக்கிட்ட சொல்லுற தைரியம் எங்க யாருக்கும் இல்ல. உனக்கு உரிமை இருக்கு. நீயே அவக்கிட்ட சொல்லிப் புரிய வை. அதுக்கப்பறம் அவக்கூட விளையாடுவியா?”

கண்கள் கலங்கிவிட செய்வதறியாது விழித்தாள். அவளுக்கும் புரிந்தது. 3 வயதே ஆன தீபாலியிடம் சென்று இதை எடுத்து சொல்வது கடினம் என்று. அது சரியில்லை என்பதையும் உணர்ந்தாள். அவளின் அழைப்பை முழுதாக ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

கன்னத்தில் கண்ணீர் வழிந்தோட அமர்ந்திருக்கும் மருமகளைப் பார்த்த சந்திரன், “எதுக்கு அழற? முடியாதுன்னுத் தெரியுதுல்ல? விஷ்வாவோட கல்யாணத்தப் பத்தி பேச்சு வந்தப்போ இந்த வீட்டுக்கு ஒரு மறுமகள கொண்டு வரதவிட மகள கூட்டிட்டு வரணும்னு ஆசைப்பட்டேன்.

எல்லார மாதிரி ‘நமக்கு ஒரு பொண்ணு இருந்தா கடைசி காலத்துல நல்லாப் பார்த்துப்பா’ன்னு நெனச்சவன் தான் நானும். நீ வந்ததுக்கு அப்பறம் எனக்கு அந்த கவலை இல்லாமப் போச்சு.

இது உன்னோட வீடு ஆராதனா. நீ ஏன் உன்னை ஏதோ ஜெயில்குள்ள அடச்சு வெச்ச மாதிரி பீல் பண்ணுற? நீ உன் இஷ்டம்போல இருக்கலாம். யாரும் உன்னை எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க” என்றுக் கூறி எழுந்தவர், “முடிஞ்சா பழசை எல்லாம் ஞாபகப்படுத்திக்க முயற்சி பண்ணு” என்றுக் கூறி சென்றுவிட்டார்.

அவள் மனதில் எழுந்த முதல் கேள்வி, “சந்திரன் அங்கிள் என்கிட்ட இவ்வளவு பொறுமையா பேசுறாங்க. ஆனா அம்மாவும் அப்பாவும் என்கிட்ட பேச கூட மாட்டேங்குறாங்களே… ஏன்?” என்பது தான்.

அவர் இறுதியாக சொல்லிச் சென்ற வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. “நியாபகப்படுத்திக்கணும். எப்படி? எதிலிருந்து ஆரம்பிக்க? இந்த வீடோ இங்க இருக்குறவங்களயோ இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி இல்லையே…”

விஷ்வாவின் நினைவு வந்தது. அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தவள் எழுந்து அவனுடைய அறைக்குச் சென்றாள். அவளைப் பொறுத்தவரை அது அவனுடைய அறை. அவன் அங்கே இல்லை. யாரிடம் கேட்பதென்று தெரியாமல் ஹாலிற்கு வந்தவள் தீபாலி வீட்டினுள் ஓடி வருவதைக் கண்டாள்.

விஷ்வாவும் சந்திரனும் சொன்னதுபோல் இந்த சிறு குழந்தையை எதற்காக வறுத்த வேண்டும்?, “மம்மி நான் விளையான்டேன்” என்று அவள் கத்தியது மீண்டும் தயக்கத்தைக் கொடுத்தது. இப்போது இவளிடம் பேசாவிட்டால் நிச்சயம் திட்டு விழும்.

வேறு வழியின்றி, “என்ன விளையாடினீங்க?” என்றுக் கேட்டு அவளைத் தூக்கினாள்.

“பால் வெச்சு. டாடி தான் லேட் ஆச்சுன்னு உள்ள போக சொல்லிட்டாங்க” நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்தாள்.

“முகம் கழுவி விடவா?”

“ம்ம்”

குழந்தையை எங்கு தூக்கி செல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. விஷ்வாவின் அறைக்கு செல்லலாம் என்றுத் திரும்பியவளிடம், “என் ரூமுக்குப் போகலாம்” என்று தனது அறையை கை காட்டினாள் தீபாலி.

குளியலறையில் அவளை இறக்கிவிட்டு தண்ணீர் எடுத்து அவள் முகத்தை கழுவ முயன்றாள். பழக்கமில்லாத வேலையை செய்வதுபோல் தோன்ற தீபாலியின் ஆடை முழுவதும் நனைந்தது.

“மம்மி ட்ரெஸ்… போச்சு…”

“ஹான்… இரு இரு… விளையாடிட்டு வந்தல்ல… குளிச்சுடலாம்”

எதையோ கூறி சமாளித்து அவள் ஆடையை கலைந்தவளை சந்தேகமாகப் பார்த்தாள் அம்மு. ஏதோ வித்தியாசம் இருப்பதாகப்பட்டது. இன்னதென்று சொல்லத் தெரியவில்லை.

குளிப்பாட்டி முடித்து துவட்டிவிட்டவள் வெளியே வந்து அவளது கப்போர்டை திறந்தாள். எந்த ஆடையை எடுத்து அணிவிப்பதென்றுத் தெரியவில்லை.

“தீபாலி என்ன டிரஸ் போடணும் சொல்லு. போட்டுவிடுறேன்”

“ஏன் மம்மி?”

“அது… இன்னைக்கு உனக்கு பிடிச்ச டிரஸ் போட்டுக்கோ சரியா?”

“நீங்க தீபாலி தீபாலி சொல்லுறீங்க. நான் மம்மியோட அம்மு இல்லையா?”

முகம் சுருங்கிவிட கேள்விக் கேட்டவளை பார்க்க பரிதாபமாக இருந்தது. விஷ்வாவிடம் மல்லுக்கட்டியவளால் மகளிடம் விவாதம் செய்ய முடியவில்லை. அவளை கொஞ்ச ஆசை தான். ஆனால் தான் அவளுக்கு தாய் இல்லை என்று மட்டும் உறுதியாக நம்பினாள். பொய் சொல்லவும் வராமல் உண்மை சொல்லவும் தைரியம் இல்லாமல் அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தாள்.

“அப்படி இல்லம்மா… எனக்கு… எனக்கு கொஞ்சம் மறந்துடுச்சு. அதா…”

“கொஞ்சம்னா? அம்முகூடவா?”

இரு கைகளையும் நெஞ்சில் வைத்து மூக்கு விடைக்க கேள்விக் கேட்டவளை பார்க்க நெஞ்சை பிசைந்தது. சட்டென்று அவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள். காரணமின்றி அவளுக்கும் அழுகை வந்தது.

இன்னும் சில நொடிகள் அங்கிருந்தாலும் பெரிதாக அழத் துவங்கிவிடுவாள் என்பதால் அவசரமாக எழுந்து கப்போர்டிலிருந்து அவள் உடையை எடுத்து கண்களை துடைத்து திரும்பி மீண்டும் மண்டியிட்டு அமர்ந்து உடையை அணிவித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“பாட்டிகிட்ட போய் இருக்கீங்களா?”

“ம்ம்” என்று தலையாட்டியவள் அவள் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டாள்.

அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு விஷ்வாவை தேடியது நினைவு வர அறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலில் யாரும் இல்லை. வீட்டை விட்டு வெளியே வந்து தோட்டத்தை எட்டிப் பார்த்தாள். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து சந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அங்கு சென்று அவனை அழைக்க தயங்கியவள் வீட்டினுள் வந்து விஷ்வாவின் அறைக்குச் சென்று அவன் வரும்வரை அங்கேயேக் காத்திருக்க முடிவெடுத்து மெத்தையில் அமர்ந்தாள்.

சந்திரனுடன் பேசிவிட்டு வந்தவன் ஆராதனாவை தனதறையில் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு நொடி அவளை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்து கதவை மூடி தாழிட்டான்.

அவனைக் கண்டதும் எழுந்து நின்றவள், “நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லுறல்ல? எனக்கு ப்ரூப் வேணும்” என்றாள்.

நக்கலாக சிரித்தான். அவளுக்கு எரிச்சல் வந்தது.

“எதுக்கு சிரிக்குற?”

“அதான் அம்மு இருக்காளே”

உடனே பதில் கூற முடியாமல் உதட்டை கடித்தவள் மூடியிருந்த கதவையும் அவனையும் பார்த்துவிட்டு, “எனக்கு ப்ரூப் வேணும்” என்று மெல்லியக் குரலில் கூறினாள்.

கப்போர்டருகில் அவன் செல்லவும், “தாலிய காமிக்காத” என்றுப் பதறினாள். அவளை திரும்பிப் பார்த்தவன் கப்போர்டை திறந்து மேல் ஷெல்பிலிருந்து ஒரு ஆல்பத்தை எடுத்தான்.

“என்னதிது?”

“நம்ம கல்யாண ஆல்பம்”

அவன் கையிலிருந்து கிட்டத்தட்ட அதை பிடுங்கியவள் மெத்தையில் அமர்ந்து வேகமாக திறந்தாள். முதல் பக்கத்தில் அவள் மட்டுமே இருக்கும் புகைப்படங்கள் இருந்தன. தான் மட்டுமே இருந்தாலும் திருமணக் கோலத்தில் தன் உருவத்தைப் பார்த்தவளின் நெஞ்சம் படப்படக்க மெதுவாக அடுத்த பக்கத்தை திருப்பினாள். அனைத்தும் விஷ்வாவின் புகைப்படங்கள்.

சிறிது நேரம் அவற்றை வெறித்தவள் பக்கத்தை திருப்பினாள். அதன் பிறகு இருந்தவை அனைத்தும் இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள். வேக வேகமாக பக்கங்களைப் புரட்டியவள் ஒரு பக்கத்தில் தன் பார்வையை நிலைக்கவிட்டாள்.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா அவள் அடுத்த பக்கத்திற்கு செல்லாததால் அருகில் சென்று ஆல்பத்தைப் பார்த்தான். அவன் அவள் கழுத்தில் மங்கள நாண் பூட்டும் புகைப்படம் இருந்தது.

“இப்போ நம்புறியா?”

அவன் குரலில் திடுக்கிட்டவள் அடுத்த பக்கத்தை திருப்பினாள். அதில் ஒரு புகைப்படம் மட்டும் இல்லாமல் இருக்க, “இங்க இருந்த போட்டோ எங்க?” என்றுக் கேட்டாள்.

“உன்கிட்டதான் இருக்கு”

“ஆல்பம் இங்க வீட்டுலயே தான இருக்கு? அப்பறம் என்ன ஒரு போட்டோ மட்டும் என்கிட்ட இருக்குன்னு சொல்லுற?”

“அது உனக்குதான் தெரியும். அந்த போட்டோ மட்டும் உருவி ஒளிச்சு வெச்சிருக்க. கேட்டா ‘அது வேணாம்’னு சொல்லுவ… கேட்டு கேட்டு அலுத்துப் போய் நானும் விட்டுட்டேன்”

எதையோ தீவிரமாக யோசித்தவள், “ஆல்பம் ஏன் போட்டோ போட்டிருக்கு?” என்றாள்.

“ஆல்பம்னா போட்டோதான் இருக்கும்”

“ம்ம்ச்ச்… அது… டிஜிட்டல் ப்ரின்ட் இல்லையா? எதுக்கு தனி தனியா பிரிண்ட் பண்ண போட்டோஸ் இருக்கு?”

“இது உங்க வீட்டுல ஏற்பாடு பண்ண போட்டோக்ராபர் குடுத்த ஆல்பம். போட்டோஸ் தான் வேணும்னு நீதான் சொன்னியாம். எங்க போட்டோக்ராபர் குடுத்த ஆல்பம் இப்படி போட்டோ போட்டோவா இருக்காது. நீ கேட்குற மாதிரி டிஜிட்டல் ப்ரிண்டா இருக்கும். பார்க்குறியா?”

“வேணாம். நான் எதுக்கு இப்படி ஆல்பம் போட சொன்னேன்?”

“இதையும் கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு”

ஆல்பத்தை மூடி இரு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்து அமர்ந்தாள்.

“எனக்கு ஏன் விஷ்வா எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குது? டாக்டர் சொன்னாரு நான் யோசிச்சா ஞாபகம் வந்துடும்னு. நானும் அப்பப்போ யோசிச்சுப் பார்க்குறேன். எல்லாமே புதுசாதான் தெரியுது. தீபாலி… நீ… எனக்கு ஞாபகம் இல்லையே… நான் ஏன் இப்படி ஆகிட்டேன்? யோசிக்க யோசிக்க தலை தான் வலிக்குது. பயமா இருக்கு. ஏதோ தப்பா நடக்குதுன்னுத் தோணுது. நான்… என் லைப்ப தொலச்சுட்டனோன்னு தோணுது விஷ்வா”

அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை வெடிக்க வாய் விட்டுப் புலம்பி கதறத் துவங்கினாள்.

நிழலே நிஜமாய் – 8

மெத்தையில் அமர்ந்து ஆராதனா கதறி அழத் துவங்க அவள் புலம்பும்வரை அசையாமல் நின்ற விஷ்வா மெல்ல நடந்து அவளருகில் வந்தான். தன்னை நிமிர்ந்துப் பார்த்தவளின் எதிரில் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். இதை ஆராதனா சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. தன்னிச்சை செயலாக தலையை பின்னுக்கு இழுத்தாள்.

அவள் செயல் அவனை வருந்தச் செய்தாலும் இரு கைகளையும் அவள் முகத்தருகில் எடுத்துச் சென்று கட்டை விரலால் அவள் கண்ணீர் துடைத்தான்.

இது அவனின் முதல் ஸ்பரிசமில்லை. வீட்டினுள் நுழையும்போது கையை பிடித்துக் கூட்டி வந்திருக்கிறான். இருப்பினும் அப்போது தோன்றாத நெருக்கம் இப்போதுத் தோன்றியது.

சிலை போல் அமர்ந்திருந்தவளின் மடி மீதிருந்த அவள் கரங்களை தன் இருக் கரங்களால் பற்றினான்.

“ஹாஸ்பிட்டல்ல உன்னை சேர்த்ததுலேருந்து ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்துப் பிழைச்சேன். டாக்டர்கிட்ட சண்டை போட்டு ராத்திரி பூரா உன் பக்கத்துலயே உட்கார்ந்து என்கிட்ட திரும்பி வந்துடுன்னுக் கெஞ்சுனேன்.

காலையில அம்முவ பார்த்துட்டு வர சொல்லி அப்பா திட்டுனதாலதான் வீட்டுக்கே வந்தேன். அப்பா சொல்லுற வரைக்கும் எனக்கு அவ ஞாபகம் கூட வரல.

நீ கண்ணு முழிச்சுட்டன்னு நர்ஸ் சொன்னப்போ போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்துது.

டாக்டர் சொன்ன மாதிரி எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்னு நம்புறேன். உனக்கு என்னை ஞாபகம் இல்லைங்குறத என்னாலயே முழுசா ஏத்துக்க முடியல ஆராதனா. அம்முவ பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாரு.

இந்த வீட்டுல நீ எப்படி வேணா இருந்துக்கோ. ஆனா இங்கேருந்து போறேன்னு மட்டும் சொல்லாத. என்னால நீ இல்லாம இருக்க முடியாது”

அவன் கைகளை பிடித்தபோது உதற நினைத்தாள். கண்களை நேராய் பார்த்த அவன் பார்வையும் கைகளில் அவன் கொடுத்த அழுத்தமும் அதை செய்ய விடவில்லை.

அவன் பேசிய வார்த்தைகள் அவள் மனதை அமைதியுறச் செய்ததன் விந்தையை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். தன் கைகளைப் பிடித்திருக்கும் அவன் கைகள் மீது பார்வை சென்றது. கட்டுப் போட்டிருந்த வலக் கையில் வீக்கம் சுத்தமாக வடிந்திருக்க அதை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

அவள் அழுகை நின்றதும் தான் பேசியதற்கு மறுத்து எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பதுமே அப்போது போதுமானதாக இருக்க எழுந்துச் சென்றான் விஷ்வா.

இன்னும் சிறிது நேரம் அவனருகில் இருக்க வேண்டும் என்று ஆசைக் கொண்ட மனதை அடக்கி தன்னருகில் இருந்த ஆல்பத்தைப் பார்த்தாள். தனக்கு திருமணமாகிவிட்டது என்பதை மனதில் பதிய வைக்க முயன்றாள். “இப்போதைக்கு திருமணம் வேண்டாம்” என்றே மனம் கூச்சலிட்டது.

முகம் கழுவி வந்தபோது அவள் இன்னும் அறையினுள் இருப்பதை ஆச்சர்ரியமாகப் பார்த்த விஷ்வா தோளில் கிடந்த துண்டை அங்கிருந்த சேரில் போட்டு, “ரொம்ப யோசிச்சு ஸ்ட்ரெயின் பண்ணிக்காத. வா” என்றுக் கூறி வெளியே செல்ல அவன் பின்னால் எழுந்துச் சென்றாள்.

டைனிங் ஹாலிற்கு சென்றான். ஹாலில் அமர்ந்து சரண்யா அம்முவிற்கு உணவூட்டிக் கொண்டிருந்தார். அம்மு அங்கு இல்லாததே நிம்மதியை தர அவனருகில் சென்றமர்ந்தாள் ஆராதனா.

ஹரிகிருஷ்ணன் அவள் முகத்தையே கூர்ந்து ஆராய்ந்தார். அதில் தெரிந்த வேதனை அவரை வாட்டியது. மருமகன் ஏதேனும் திட்டியிருக்கக் கூடும் என்று முதலில் சந்தேகம் கொண்டவருக்கு அப்படியிருந்தால் இப்போது அவனுடன் வந்து அவனருகில் அமர மாட்டாள் என்பதும் உரைத்தது.

“ஆராதனா… சாப்பிடும்போது யோசிக்கக் கூடாது. ஒழுங்கா சாப்பிடுடா”

தந்தையை நிமிர்ந்துப் பார்த்தாள். ஹாஸ்பிட்டலிலிருந்து வந்ததிலிருந்து அவர் இப்போது தான் அவளிடம் பேசுகிறார். புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.

இப்போதும் ஸ்பூன் கொண்டு சிரமப்பட்டு சாப்பிட்ட விஷ்வா எழுந்துச் சென்றுவிட ஆராதனா கை கழுவி ஹாலிற்கு வந்தாள். சரண்யா இன்னும் உணவூட்டிக் கொண்டிருந்தார்.

அவளைப் பார்த்ததும், “மம்மி” என்று அவளிடம் ஓடி வந்தாள் தீபாலி. அவளை தூக்கி தாயின் அருகில் வந்தவள், “சமத்தா சாப்பிடுறீங்களா?” என்றுக் கேட்டாள்.

“ம்ம்… அம்மு குட் கர்ள்”

“ம்ம்கும்… எங்க? பாரு… பாதி தான் முடிஞ்சிருக்கு. அதுக்கே ஆயிரம் கதை சொல்ல வேண்டியிருக்கு”

“அப்போ தீபாலி ஒழுங்கா சாப்பிடலையா?”

அவள் முகம் சுருங்குவதைப் பார்த்தவள், “அம்மு நிஜமா குட் கேர்ள் தான? அப்போ சீக்கிரம் சாப்பிடுங்கப் பார்ப்போம்” என்று பெயரை மாற்றிக் கூறினாள்.

புன்னகையுடன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டவள் அவள் கையிலிருந்து இறங்கி, “ஸ்பீடா ஊட்டுங்க பாட்டி. ஆ…” என்று வாய் திறந்து காட்டினாள்.

தன்னுடைய அழைப்பு மாறியதற்கே குழந்தை இவ்வளவு உற்சாகம் கொள்கிறாளா என்று வியந்தவள் அவள் முத்தமிட்டதால் கன்னத்தில் ஒட்டியிருந்த உணவை கழுவச் சென்றாள்.

இரவு அனைவரும் உறங்கியப் பிறகும் உறக்கம் வராமல் நடைப் பழகிக் கொண்டிருந்தாள் ஆராதனா. யாரும் அவளை உறங்க சொல்லவில்லை. அவள் யாருடனும் பேசவில்லை.

நேற்றைய தினம் அன்னை உறங்கிய அறைக்குள் சென்றபோது தாயுடன் நிகழ்ந்த உரையாடல் நினைவிற்கு வந்தது. அவள் சென்றபோது ஹரிகிருஷ்ணனும் அங்கிருந்தார்.

“தூங்கலயாம்மா?”

“தூக்கம் வரலப்பா”

“நானே உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கணும். ஏதோ ஞாபகத்துல கீழயே விட்டுட்டு வந்துட்டேன். என்னங்க… நீங்க…”

“நான் பக்கத்து ரூம்ல படுத்துக்குறேன் சரண்யா. நீ தூங்குடா”

ஹரிகிருஷ்ணன் வெளியேறியதும், “அவங்க நம்ம சொந்தமாம்மா? சந்திரன் அங்கிள்… அந்த விஷ்வா?” என்றுக் கேட்டபடியே வந்து தாயினருகில் அமர்ந்தாள்.

“ம்ம்… சொந்தம் தான். உன் மூலமா எங்களுக்கு சொந்தம்”

“நம்ம எதுக்கு இவங்க வீட்டுல தங்கியிருக்கோம்? நம்ம வீட்டுக்குப் போயிடலாம்மா”

“ஏன்? உனக்கு இந்த வீடு பிடிக்கலையா?”

“அப்படியில்ல… எதுக்கு நம்ம இங்க இருக்கணும்?”

“இதுவும் உன் வீடுதான்டா. நானும் அப்பாவும் அப்படி தெரியாத யாரோ வீட்டுல உன்னை கூட்டிட்டு வந்து தங்க வைப்போமா? இப்போ உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போனா தேவையில்லாத பேச்செல்லாம் வரும்.

உனக்கு எல்லாம் மறந்துடுச்சுன்னு இந்த வீட்டுல இருக்கவங்களுக்கோ அவங்களோட சொந்தங்களுக்கோ மாப்பிள்ளை சொல்லல. அப்போ நாங்களும் சொல்லாம இருக்குறது தான முறை?

இப்போதைக்கு அட்லீஸ்ட் இது தான் உன் வீடுன்னாவது மனசுல பதிய வை ஆராதனா. உன்னை இங்க இருக்கவங்க என்னைவிட நல்லாப் பார்த்துப்பாங்க. ஒரே நாள்ல யோசிச்சா எல்லாம் ஞாபகம் வந்துடாது. இப்போ நிம்மதியா தூங்கு. அதான் நான் பக்கத்துல இருக்கேனே…”

சரண்யா அவள் முகத்தை சில நொடிகள் பார்த்துவிட்டு படுத்துவிட ஆராதனாவும் படுத்தாள். ஆனால் உறக்கம் தான் வரவில்லை.

இப்போதும் அன்னையுடன் தான் சென்று உறங்க வேண்டும். மேலே செல்லலாம் என்று முடிவெடுத்துத் திரும்பியவளின் முன்னால் வந்து நின்றான் விஷ்வா.

“இன்னும் ஏன் முழிச்சிருக்க?”

“தூக்கம் வர மாட்டேங்குது. புது இடம் இன்னும் பழகல”

“ஓஹ்ஹ்… சரி வா”

“எங்க?”

“எனக்கும் தூக்கம் வரல. வா கொஞ்ச நேரம் கார்டன்ல நடந்துட்டு வரலாம்”

மணியை பார்த்தாள். பதினொன்றாகியிருந்தது. இந்நேரத்தில் அவனுடன் தனியாக தோட்டத்தில் நடப்பதா என்று யோசித்தாலும் வீட்டை விட்டு சிறிது நேரம் வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என்றுத் தோன்ற அரைகுறையாய் தலையசைத்தாள்.

விஷ்வா அமைதியாக நடந்தான். இரண்டடி இடைவெளி விட்டு அவனருகில் நடந்தவள் அவன் ஏதாவது பேசுவானென்று அவன் முகத்தையேப் பார்த்தாள். தனக்குள் யோசனையில் இருந்தவன் சில நிமிடங்களுக்குப் பிறகே அதை கவனித்தான்.

“ஏன் என்னையேப் பார்க்குற?”

“ஹான்… இல்ல… நீ நடக்கலாம்னுக் கூப்பிட்டதும் ஏதோ பேசதான் கூப்பிட்டியோன்னு நெனச்சேன். நீ அமைதியா இருந்தியா… அதான்…”

“உன்கிட்ட நான் என்ன பேசுறது?”

“ஏன்? பேசுறதுக்கு ஒண்ணுமே இல்லையா? அப்பறம் எதுக்கு அப்படி சொன்ன?”

“எப்படி?”

“என்னை விட்டுட்டுப் போகாத. இங்கயே இருன்னு…”

“என்னமோ தோணுச்சு சொன்னேன். அதுக்காக இப்போ தொனத் தொனன்னுக் கேள்விக் கேட்காத. கொஞ்ச நேரம் அமைதியா இரு”

“உனக்கு தோணுறப்போ நான் பேசணும்… மத்த நேரம் அமைதியா இருக்கணுமா?”

“ஆமா அப்படிதான். வாய மூடு”

“முடியாது. நான் பேசிக்கிட்டேதான் இருப்பேன். நீ கேட்டுதான் ஆகணும்”

அவளை திரும்பிப் பார்த்தவன் அமைதியாக நடக்க, “எங்க வீட்டுல எடுத்த கல்யாண ஆல்பம் எதுக்கு இந்த வீட்டுல இருக்கு?” என்றுக் கேட்டாள்.

“…”

“நீ காலையில எத்தன மணிக்கு பேக்டரிக்கு போவ? நானும் வருவேன்”

“…”

“உனக்கு தூக்கம் வரலையா?”

“…”

“அம்மு எந்த ஸ்கூல்ல படிக்குறா?”

பள்ளியின் பெயரை சொன்னான்.

“இதுக்கு மட்டும் பதில் வருது” என்று முனகியவள், “நான் தூங்கப் போறேன்” என்றாள்.

விஷ்வா நடப்பதை நிறுத்தி அவளையேப் பார்க்க தலைக் குனிந்தவள் வேகமாக வீட்டினுள் சென்றுவிட்டாள்.

அவனுக்கு சிரிப்பு வந்தது. “இவ எப்படி இத்தன நாள் அமைதியா இருந்தான்னுத் தெரியல…” என்றெண்ணியபடியே அவனும் வீட்டினுள் வந்தான்.

காலை ஆராதனா கீழே வந்தபோது ஆண்கள் மூவரும் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். விஷ்வாவின் அருகில் வந்தமர்ந்து டேபிள் மீதிருந்த செய்தித்தாளை எடுத்தாள்.

“இப்போ நீ மட்டும் எதுக்கு என் பக்கத்துல வந்து உட்காருற?”

செய்தித்தாளிலிருந்து பார்வையை விளக்காமல் கேள்விக் கேட்டவனைப் பார்த்தவள் பதில் கூறாமல் பக்கங்களைப் புரட்டினாள்.

“இன்னைக்கு காலேஜ் போகணும்னு அடம் பிடிக்கலையா?”

“அதான் அனுப்ப மாட்டீங்கன்னுத் தெரிஞ்சுப் போச்சே… அப்பறம் எதுக்கு நான் என் தொண்டை தண்ணிய வேஸ்ட் பண்ணணும்?”

“குட்”

“உன் குட் எனக்குத் தேவையில்ல”

“ஹ்ம்ம்… சரி வேற என்னெல்லாம் கேட்கக் கூடாதுன்னு முடிவுப் பண்ணியிருக்க?”

“அதை எதுக்கு நான் உன்கிட்ட சொல்லணும்?”

“சொன்னா அதுக்கேத்த மாதிரி நான் மத்தவங்கக்கிட்ட பேசுவேன்”

“நீ கிழிப்ப… அதான் என்னை விட்டுப் போகாதன்னு சொன்னியே… நீயா மத்தவங்கக்கிட்ட பேசி என்னை அனுப்பி வைப்ப?”

“அப்போ நான் சொன்னதுக்காக தான் போகலையா?”

“இப்போ எதுக்கு என்னைப் பார்க்குற?”

“பதில் சொல்லு… திரும்பிடுறேன்”

“இல்ல. அம்மாவும் நான் இங்க இருக்குறது தான் நல்லதுன்னு சொல்லுறாங்க. இந்த விஷயத்துலயும் யாரும் என் பேச்சை கேட்கப் போறதில்லன்னுத் தெரிஞ்சுப் போச்சு. அதான்”

“அப்போ உனக்கு நம்ம வீட்டுல இருக்குறதுல எந்த அப்ஜெக்ஷனும் இல்லையா?”

“நம்ம வீடுன்னு ஒண்ணும் நான் நினைக்கல. இங்க வந்தன்னைக்கு இது நம்ம சொந்தக்காரவங்க வீடான்னு அம்மாகிட்ட கேட்டேன். அவங்க சொன்ன பதில் எனக்கு திருப்தியா இல்ல. சோ இது ஏதோ தூரத்து சொந்தத்தோட வீடுன்னு முடிவுப் பண்ணிக்கிட்டேன்”

“தூரத்து சொந்தம்னா?”

“அதான்… இந்த ஒண்ணுவிட்ட மாமா வீடு… அத்தை வீடு மாதிரி…”

“சித்தப்பா வீடு பெரியப்பா வீடுன்னு நினைக்காம இருந்த வரைக்கும் சந்தோஷம்” என்று முனகியபடியே அவன் திரும்பிவிட்டான்.

“என்ன முனகுற?”

“…”

“பதிலே சொல்லிடாத”

“ஆராதனா குளிச்சுட்டு வா…” சரண்யா குரல் கொடுக்க, “இவங்க வேற… இத பண்ணு அத பண்ணுன்னு…” என்று அலுத்துக் கொண்டபடியே செய்தித்தாளைப் பார்த்தாள்.

அதிலிருந்த தேதியும் மாதமும் வருடமும் அவளை அச்சுறுத்தின. லேசானதாக துவங்கிய தலை வலி நொடிக்கு நொடி அதிகரித்தது.

செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு எழப் போனவன் அவள் தலையைப் பிடித்து அமர்ந்திருப்பதைக் கண்டதும், “என்னாச்சு ஆராதனா?” என்றுக் கேட்டு அவள் தலையை வருடினான்.

விருட்டென்று சோபாவில் நகர்ந்து அமர்ந்தவள் வேகமாக எழுந்து மேலே ஓடிவிட்டாள். சற்று நேரத்திற்கு முன்னால் அவளாக வந்து பேசினாள், இப்போது எதற்கு இப்படி ஓடுகிறாள் என்று யோசித்தவனுக்கு எதுவும் பிடிபடவில்லை. நேரமாகிவிட்டதால் அவனும் எழுந்து குளிக்கச் சென்றான்.

குளியறையின் கதவை தாழிட்டு அதில் சாய்ந்து நின்றவளுக்கு மூச்சு வாங்கியது. “இத்தன வருஷம் ஆகிடுச்சா? கடைசியா… எந்த வருஷம் நான் காலேஜ் போனேன்? எனக்கு ஏன் எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது? எப்படியாவது… எதுல தேடுறது? இவன் வேற ஏதேதோ போட்டோ எல்லாம் காமிக்குறான்… கடவுளே…”

அப்படியே சரிந்து அமர்ந்தவளுக்கு அழுகை வந்தது. நடப்பது எதுவும் தனக்கு சம்பந்தம் இல்லாதது போலவும் தன்னை மையமாக வைத்தே நடப்பதாகவும் மாறி மாறி தோன்றி அவளை மேலும் குழப்பின.

“ஆராதனா… குளிச்சுட்டியா?”

கதவு தட்டப்படும் ஓசையும் வெளியே சரண்யாவின் குரலும் கேட்க அவசரமாக கண்களைத் துடைத்தவள், “இப்போதான்மா குளிக்க வந்தேன். நான் வரேன். நீங்கப் போங்க” என்றாள்.

“சரி. டிரஸ் எடுத்துக்கலையா? பெட் மேல வெச்சிருக்கேன்”

“சரிம்மா”

இதற்கு மேல் எதையும் யோசிக்கக் கூடாதென்று ஷவரை திறந்து அதனடியில் நின்றாள். குளித்து முடித்து வெளியே வந்தப் பிறகும் மனதில் தன்னைப் பற்றிய சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்க சரண்யா வைத்துச் சென்ற உடையை அணிந்துக் கீழே வந்தாள்.

வெளியே செல்லத் தயாராகி அறையைவிட்டு வெளியே வந்த விஷ்வா படிகளில் இறங்கி வருபவளைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான்.

முதலில் அவனை கண்டுக் கொள்ளாதவள் அவன் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தில் குனிந்துத் தன்னைப் பார்த்தாள். புடவை கட்டியிருந்தாள். தாய் வைத்திருந்த உடையை இன்னதென்றுக் கூடப் பார்க்காமல் எடுத்து அணிந்தது நினைவு வந்தது.

அவள் மனதில் எழுந்த முதல் கேள்வி -, “எனக்கு புடவை கட்டத் தெரியாது. நான் எப்போ கத்துக்கிட்டேன்?”

இப்போது அவள் விஷ்வாவை பார்த்த பார்வையில் பயம் கூடியிருந்தது. அவன் எதுவும் பேசும் முன் அங்கிருந்து விரைந்துச் சென்றாள்.

நிழலே நிஜமாய் – 9

விஷ்வா வந்தால் தன்னருகில் அமர்வான் என்று டைனிங் டேபிளில் எப்போதும் அவன் அமரும் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமரப் போனாள்.

அவன் ஆராதனாவை விட்டு தன் பார்வையை விளக்கவில்லை. அமரும் முன் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் இப்படி பார்ப்பவனின் எதிரில் அமர்வது சரி வராதென்று டேபிளை சுற்றி வந்து அவனருகிலேயே அமர்ந்தாள்.

“இப்போ என்ன பிரச்சனை உனக்கு? காலையில நல்லாதான பேசுன? அப்பறம் திடீர்னு எந்திரிச்சு ஓடிட்ட… இப்போ எதுக்கு அங்க போய் உட்காரப் போன?”

பதட்டமாக சுற்றிப் பார்த்தாள். அங்கிருந்த யாரும் அவர்களைக் கண்டுக் கொள்ளவில்லை. இருப்பினும் அவன் இப்படி தன் பக்கம் திரும்பி அமர்ந்துப் பேசுவதை தவிர்க்க நினைத்தாள்.

“என்ன? எதுக்கு சுத்தி சுத்திப் பார்க்குற?”

“நீ முதல்ல நேரா உட்கார்ந்து சாப்பிடு. இப்படி எல்லார் முன்னாடியும் என்கிட்ட பேசாத ப்ளீஸ்”

“ஏன்? நீ இங்க வந்ததுலேருந்து அப்படி தான பேசுறேன்? இப்போ என்ன புதுசா?”

“அத தான் செய்யாதன்னு சொல்லுறேன். பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க”

விஷ்வா அமைதியாகிவிட்டான். அவன் எதுவும் கூறாததால் திரும்பிப் பார்த்தாள்.

சில நொடிகள் அவளை வெறித்தவன் இடது கையால் ஓங்கி தலையில் அடித்து திரும்பி அமர்ந்தான்.

அவன் அடித்த வேகத்தில் எதிரில் அமர்ந்திருந்த சந்திரனும் ஹரிகிருஷ்ணனும் நிமிர்ந்துப் பார்த்தாலும் எதுவும் கேட்கவில்லை.

ஆராதனாவிற்கு இன்னும் சங்கடமாகிவிட்டது. “முதல்ல இவன் இப்படி என் பக்கத்துல வந்து உட்காருறத மாத்தணும். எல்லார் முன்னாடியும் தைரியமா வந்து பேசுறான். இனி அப்படி பேச விடக் கூடாது”

“நான் ரெடி….” தீபாலி ஓடி வந்து விஷ்வா ஆராதனாவின் நாற்காலிகளுக்கு நடுவில் நுழைய முயன்றாள்.

அவன் மகளை விடுத்து மனைவியை பார்த்தான்.

“தூக்கலன்னா கொன்னுடுவேங்குற மாதிரியேப் பார்க்குறானே…” என்று நினைத்தவள் குனிந்து மகளை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டாள்.

அப்போதும் அவன் பார்வையை விளக்காமல் இருக்க தட்டிலிருந்து உணவை எடுத்து ஒரு வாய் மகளுக்கு ஊட்டி திரும்பி அவனை முறைத்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

தீபாலிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆராதனா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தப் பிறகு இப்போது தான் அவளாக தன்னை தூக்கி ஊட்டுகிறாள். சிறு பிள்ளையானாலும் அன்னையின் ஒவ்வொரு செய்கையும் அவள் மனதை பாதித்தன.

சரண்யா மகளையும் பேத்தியையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். ஆண்கள் அனைவரும் சாப்பிட்டு எழுந்துவிட டைனிங் டேபிளில் வந்தமர்ந்தவர், “இன்னைக்கு அம்மு நிறைய சாப்பிடுறா தெரியுமா? நீ ஊட்டுனா மட்டும் தான் அவ இப்படி ஒழுங்கா சாப்பிடுறா. என்ன இருந்தாலும் அம்மா ஊட்டுற மாதிரி வருமா?” என்றுக் கேட்டு சிரித்தார்.

கதை சொல்லி சிரித்து பேசி உணவூட்டிக் கொண்டிருந்தவளுக்கு சரண்யா சொன்னதைக் கேட்டதும் சிறு தயக்கம் தோன்றியது.

“போதும்”

“சரி போதும். அவளுக்கு வாய் தொடச்சு விடுங்கம்மா” என்றவள் தீபாலியை கீழே இறக்கிவிட்டு தட்டில் மீதமிருந்ததை சாப்பிட எடுத்து வாயருகில் கொண்டு சென்றாள். அதை உண்ண மனம் ஒப்பவில்லை. கையை உதறி தட்டை தள்ளி வைத்து வேறு புது தட்டை எடுத்து, “கற்பகம்மா” என்றுக் குரல் கொடுத்தாள்.

என்னவாயிற்று இவளுக்கு என்ற யோசனையுடன் தீபாலியை தூக்கிச் சென்றார் சரண்யா.

“பாட்டி… இன்னிக்கு மம்மி கூட ஸ்கூல் போகட்டா?”

சில நாட்கள் மகளுடன் காரில் அவள் பள்ளிக்கு சென்று வருவது ஆராதனாவின் வழக்கம். ஆனால் இப்போது கேட்டால் ஒப்புக் கொள்வாளா தெரியாது. தான் சரி என்றுக் கூறி ஆராதனா மறுத்துவிட்டால் அம்மு அழத் துவங்குவாள் என்பதால், “மம்மி ரெஸ்ட் எடுக்கட்டும்டா செல்லம். இன்னொரு நாள் வருவாங்க” என்று அவளுக்கு சமாதானம் கூறினார்.

விஷ்வா இதை கேட்டுக் கொண்டு தான் இருந்தான். மகளுடன் பள்ளிக்கு செல்லலாமா என்று முதலில் யோசித்தவன் பிறகு அதுவேப் பழக்கமாகிவிட்டால் தன்னால் தினம் அவளுடன் செல்ல முடியாதே என்று அமைதியாக அமர்ந்திருந்தான். சரண்யா பேத்திக்கு ஷூ அணிவித்து வெளியே தூக்கிச் சென்றார்.

காலை எழுந்தது முதல் பெரிதாக எதையோ தொலைத்துவிட்டது போல் இருந்தது. முந்தைய தினம் வைத்திருந்த அலாரம் அடித்து எழுந்தபோது தோன்றிய எண்ணம். வீட்டில் பலர் இருந்தும்… ஆராதனாவே வீட்டில் இருந்தும் தான் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு தோன்றி அவனை சோர்வடையச் செய்தது.

பேக்டரிக்கு கிளம்ப வேண்டும். அவனுக்கான வேலைகள் காத்திருந்தன. எங்கும் செல்லத் தோன்றாமல் மெத்தையில் அமர்ந்திருந்தான்.

“உள்ள வரலாமா?”

குரல் கேட்டு நிமிர்ந்தவன் ஆராதனாவை கண்டதும் நெற்றி சுருக்கினான்.

“என்ன புதுசா கேட்குற?”

“இல்லையே…”

“நேத்து உள்ள உட்கார்ந்து தான நான் வர வரைக்கும் எனக்காக வெயிட் பண்ண?”

“என்ன இருந்தாலும் இது உன் ரூம்… கேட்டுட்டுதான உள்ள வர முடியும்…”

“அதான் ஏன் நேத்து தோணலன்னுக் கேட்குறேன். காலையிலிருந்து எல்லாமே வித்தியாசமா செய்யுற”

“எல்லாம் முதல்ல தப்பு தப்பா செஞ்சுட்டு அப்பறம் என் தப்ப நானே திருத்திக்குறேன்”

“வா”

“நீ கிளம்பி போயிருப்பன்னு நெனச்சேன். ரெடி ஆகிட்டு எதுக்கு இங்க உட்கார்ந்திருக்க? லேட் ஆகலையா?”

“ம்ம். போகணும்”

“ஏன் டல்லா இருக்க?”

“இல்லையே”

“பொய் சொல்லுற”

“நான் பொய் சொல்லுறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?”

“ரொம்ப கம்மியா பேசுற”

“நான் எப்பயும் அப்படிதான்”

“நீ ஜாஸ்தி பேச மாட்டன்னு இந்த ரெண்டு நாள்ல தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா எப்பயும் பேசுறதவிட இப்போ கம்மியா பேசுற? என்ன யோசிக்குற?”

“…”

“எதுக்கு முறைக்குற?”

“நான் ஒண்ணும் முறைக்கல. நான் இப்போ என்ன யோசிக்குறேன்னு சொன்னா நான் சொல்லுறத நீ செய்வியா?”

“மாட்டேன்”

“நான் இன்னும் விஷயத்த சொல்லவே இல்ல. இவ்வளவு அவசரமா மாட்டேன்னு சொல்லுற… அப்பறம் எதுக்கு அக்கறையா விசாரிக்குற?”

“நீ… நீ கேட்குறத எல்லாம் என்னால எப்படி செய்ய முடியும்? ஏதோ டல்லா இருக்கியேன்னு கேட்டேன். சரி சொல்லு… என்ன யோசிச்ச?”

“ஹான்? கேட்கல…”

மருத்துவமனையிலும் தான் பேசியபோது இதையே சொல்லி அவன் அருகில் நகர்ந்து அமர்ந்தது நினைவு வந்தது. இப்போது அவள் நிற்கும் இடத்திற்கும் கட்டிலிற்கும் இருக்கும் ஐந்தடி இடைவெளியை கணக்கிட்டுப் பார்த்தவள் தொண்டையை செருமினாள்.

“என்ன யோசிச்சன்னு சொல்லு. என்னால முடிஞ்சா செய்யுறேன்”

“தினமும் நான் கிளம்பும்போது உன்கிட்ட சொல்லிட்டுதான் கிளம்புவேன். என் கன்னத்துல கிஸ் பண்ணி பை சொல்லுவ. கன்னத்துல எல்லாம் குடுத்து ஏமாத்தாதன்னு சொல்லி உன் லிப்ஸ்ல அழுத்தி கிஸ் பண்ணிட்டுதான் கிளம்புவேன். இப்போ இது எதுவும் இல்லாம எப்படி கிளம்புறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்”

குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்குமளவிற்கு அறை நிசப்தமானது. ஆராதனாவிற்கு மட்டும் அவளுடைய இதயத் துடிப்பின் ஒலி காதை பிளந்தது. பதட்டத்தில் வியர்க்கத் துவங்க புறங்கையால் நெற்றியை வழித்து அவனைப் பார்த்தாள்.

எந்த பதட்டமும் இல்லாமல், தான் கேட்டதற்கு எந்த வருத்தமும் கொள்ளாமல் அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் பதட்டம் அவனுள் எந்த குற்றவுணர்வையும் தோற்றுவிக்கவில்லை.

மாறாக மனதின் ஏதோ ஒரு மூலையில் கள்ளச் சிரிப்பை வரவழைத்து குதூகலிக்கச் செய்தது. அவளின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்தான். கண்டு ரசித்தான்.

சில நிமிடங்கள் கரைந்தப் பிறகும் அவள் ஏதும் பேசாமல் நிற்க இதற்கு மேல் அவளை வறுத்த விரும்பாமல் எழுந்து அவளருகில் வந்தான்.

“நான் கிளம்பும்போது எனக்கு பை சொல்வியா? எனக்கு இந்த வீட்டுல வேற யார்கிட்டயும் சொல்லிட்டுக் கிளம்புற பழக்கமில்ல. என்னமோ… நான் போறத பத்தி யாருக்கும் எந்த கவலையும் இல்லாத மாதிரி தோணுது. சொல்லிக்கக் கூட யாரும் இல்லாத மா…”

“பை விஷ்வா”

முதலில் அவன் பேசியதைக் கேட்டு அச்சம் தோன்றினாலும் பின்பு அவன் கேட்டவிதம் அவன் மீது இரக்கத்தை உண்டாக்கியது.

வாடிய முகம் சட்டென்று பிரகாசிக்க பளிச்சென்று புன்னகைத்து, “பை” என்றுக் கூறி அறையை விட்டு வெளியேறினான்.

ஆராதனாவின் மனம் அமைதியின்றித் தவித்தது. காலை முதல் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவளை நிறையவே பாதித்திருந்தன. மெல்ல நடந்துச் சென்று விஷ்வா அமர்ந்திருந்த இடத்தில் மெத்தையில் அமர்ந்தாள்.

“நான் அப்படி என்ன செஞ்சேன்? அம்மு நான் ஊட்டிவிட்டா நிறைய சாப்பிடுறான்னு அம்மா சொல்லுறாங்க. வெறும் பை சொன்னதுக்கு இவன் முகம் எப்படி மாறிடுச்சு… நான் இவங்களுக்கெல்லாம் அவ்வளவு முக்கியமா? எப்படி?”

அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். “இந்த வீடு, இங்க இருக்கவங்க… இந்த ரூம்… ஏன் எனக்கு எதுவுமே நியாபகம் வர மாட்டேங்குது? நான் யோசிக்குறேனே… எவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சாலும் எதுவும் நியாபகம் வரலயே… எனக்கு மட்டும் ஏன் கடவுளே இப்படி ஒரு வாழ்க்கை… ஒருவேளை…ஒருவேளை இவங்க எல்லாருமே பொய் சொல்லுறாங்களோ? என்னால ஏன் எதுவுமே கண்டுப்பிடிக்க முடியல?”

கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்து அமர்ந்திருந்தவளுக்கு தலை வலியின் காரணமாக உறக்கம் வந்தது. அப்படியே பக்கவாட்டில் சரிந்து படுத்தாள்.

ஹாலில் அமர்ந்திருந்த ஹரிகிருஷ்ணன் அருகில் வந்த சரண்யா ஒருமுறை சந்திரனின் அறையை திரும்பிப் பார்த்து கதவு மூடப்பட்டிருப்பதை உறுதி செய்துக் கொண்டு கணவர் அருகில் அமர்ந்தார்.

“நம்ம பொண்ண நெனச்சா உங்களுக்கு கவலையாவே இல்லையாங்க?”

“ஏன் சரண்யா இப்படிக் கேட்குற? அதெப்படி எனக்கு கவலை இல்லாமப் போகும்?”

“அவ இப்படி இருக்குறத பத்தி நீங்க எதுவுமே பேச மாட்டேங்குறீங்களே…”

“நீ அவ கூடவே இருக்க… பக்கத்துலயே இருந்துப் பார்த்துக்கிட்டாதானா? இருபத்திநாலு மணி நேரமும் அவள பத்தியே தான் யோசிக்குறேன். ஹ்ம்ம்…”

“என்னமோ எனக்கு அவ நிலமைய நெனச்சா ரொம்ப கவலையா இருக்குங்க”

“எல்லாம் சரி ஆகிடும்”

“ஒருவேளை அவளுக்கு கடைசி வரைக்கும் எதுவுமே நியாபகம் வரலன்னா?”

“எதுக்கு நெகட்டிவ்வா நினைக்கணும்? கண்டிப்பா நியாபகம் வரும்”

“நான் அப்படி நடக்கணும்னு சொல்லலைங்க… அப்படி நடந்துட்டா? அவளோட பெத்தவங்களா நம்ம என்ன செய்யணும்னுக் கேட்குறேன்”

“உனக்கு என்ன தோணுது?”

“என்னால எதையும் டக்குன்னு முடிவு பண்ணிட முடியலைங்க. இது அவளோட வாழ்க்கை. நம்ம எதையாவது செஞ்சு அது அவ வாழ்க்கைய கெடுத்துட்டா?”

“நீ அவ அம்மா சரண்யா. நீ எப்படி அவளுக்கு கெடுதல் செய்வ?”

“ம்ம்ச்ச்… அவ கூட உட்கார்ந்து பேசணும்… அவளுக்கு எல்லாம் எடுத்து சொல்லணும்னு நினைக்குறேன். ஆனா இது அவ வாழ்ந்த வீடு. அவளோட புகுந்த வீட்டப் பத்தி நான் அவளுக்கு என்ன சொல்லுறதுன்னுப் புரியல”

“ம்ம்… நம்மள விட அவளுக்கு நல்லா தெரிஞ்ச ஒரு விஷயத்த என்ன சொல்லி அவளுக்கு நியாபகப்படுத்த முடியும்? குழம்பிப் போய் தான் நானும் அவக்கிட்ட பேசாம இருக்கேன்”

“ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ நான் மாப்பிள்ளைய நெனச்சு ரொம்ப பயந்தேன். ஆனாலும் நம்ம பொண்ண நல்லா பார்த்துப்பாருன்னு நம்பிக்கையும் இருந்துச்சு. அவங்களுக்குள்ள என்ன பேசிக்குறாங்க? அவ அவர எப்படி புரிஞ்சு வெச்சிருக்கா… எதையும் என்னால கணிக்க முடியல”

“அவ மாப்பிள்ளைய வெறுக்கலன்னு மட்டும் உறுதியா சொல்றேன் சரண்யா. அப்படி கொஞ்சமாவது வெறுப்பு இருந்திருந்தா அவரோட முகம் குடுத்து பேச மாட்டா”

“பேசுறா… ஆனா ரொம்ப நல்லா பேசுற மாதிரியும் தெரியல”

“அவளப் பொறுத்த வரைக்கும் அவரு யாரோ தெரியாத மூணாவது மனுஷன். அவ இந்தளவுக்கு பேசுறதே பெரிய விஷயமில்லையா?”

“ம்ம்… அதுவும் நம்ம அவ கூட இருக்கோம்… இது அவளோட வீடுன்னு சொன்னோம்… அதனால பேசுறா”

“எனக்கு மாப்பிள்ளைய பத்தின கவலை எல்லாம் இல்ல சரண்யா. என்ன வந்தாலும் புரிஞ்சுக்குற பக்குவம் அவருக்கு இருக்கு. அம்மு குட்டிய…”

“கொழந்த இந்த ரெண்டு நாள்லயே ரொம்ப ஏங்கிப் போயிட்டாங்க. ஆராதனாவ நெனச்சா இந்த விஷயத்துல எனக்கு கொஞ்சம் கோவம் கூட வருது. உன் பிள்ளைன்னு ஒத்துக்க மனசு வரல சரி… அட்லீஸ்ட் ஒரு சின்ன கொழந்த ஆசையா அவளையே சுத்தி வரப்போ தூக்கி கொஞ்சலாமா இல்லையா?”

“இன்னைக்கு காலையில ஊட்டி எல்லாம் விட்டாளே… அவ நெலமையில இருந்தும் கொஞ்சம் யோசி சரண்யா”

“அவ தவிக்குற தவிப்பெல்லாம் பார்த்துட்டுதாங்க இருக்கேன். புரியாம என்ன? அதான் சொன்னனே… எனக்கு யார் பக்கம் பேசுறது என்ன முடிவுப் பண்ணுறதுன்னு குழப்பமா இருக்கு”

“இங்கேருந்துப் போயேத் தீரணும்னு ஆர்ப்பாட்டம் பண்ணாம இருக்க வரைக்கும் நம்ம அதிகம் கவலைப் பட தேவையில்ல சரண்யா”

“அது ஒண்ணுதான் எனக்கிருக்க ஒரே நிம்மதி”

“இன்னுமா தூங்குறா?”

“ம்ம்… மதியம் சாப்பிடக் கூட எந்திரிக்கல. தூங்கட்டும்னு விட்டுட்டேன். ராத்திரி எல்லாம் சரியாவே தூங்க மாட்டேங்குறா. தூக்கம் வரப்போவே தூங்கிக்கட்டும்”

“என்ன ரெண்டு பேரும் தீவிரமா ஏதோ பேசிட்டு இருக்கீங்க?”

பின்னாலிருந்துக் கேட்ட சந்திரனின் குரலில் வேகமாக எழுந்த சரண்யா, “நான் போய் டீ எடுத்துட்டு வரேன்” என்றுக் கூறி உள்ளே சென்றுவிட்டார்.

“பொண்ண பத்தி ரொம்ப கவலைப்படுறீங்களா சம்பந்தி?”

தாங்கள் பதில் கூறாவிட்டாலும் சந்திரன் ஊகித்துவிட்டார் என்றுப் புரிந்தது.

“அவ உங்க வீட்டுல இருக்கும்போது கவலைப்பட அவசியம் இல்லைதான். ஆனா கவலைப்படாமலும் இருக்க முடியலையே சம்பந்தி. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே சமாளிக்க முடியும்?”

“ரெண்டு நாளுக்கே எதுக்கு இவ்வளவு கவலைப்படுறீங்க? எத்தனை வருஷமானாலும் சரி… ஆராதனா இந்த வீட்டு மருமக… எனக்கு மக மாதிரி… அவள இங்கேருந்து அனுப்ப நாங்க தயாரா இல்லை சம்பந்தி. நீங்க தேவையில்லாம யோசிக்காதீங்க”

“ஹ்ம்ம்… விதிப்படி நடக்கட்டும்…”

ஆராதனா மெல்ல கண்களைத் திறந்தாள். இரவு பகல் பிரித்தறிய முடியாத தடுமாற்றத்தில் மெத்தையில் எழுந்தமர்ந்தவள் தலையணையடியில் துழாவி மொபைலை எடுத்தாள். அவள் மொபைலை தாயின் கையிலிருந்து வாங்கியதிலிருந்து தன்னுடனேயே தான் வைத்திருக்கிறாள்.

“ஐயோ மணி 5”

மெத்தையிலிருந்து அவள் குதிக்கவும், “மம்மி… விளையாடலாம்” என்று தனதறையிலிருந்து தீபாலி குரல் கொடுக்கவும் சரியாக இருந்தது.

நிழலே நிஜமாய் – 10

விஷ்வா பேக்டரியை சுற்றி வந்தான். அவனுடையது பேப்பர் பேக்டரி. ராட்சத இயந்திரங்கள் மூலம் பல தரங்களில் காகிதங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. கூழிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் பகுதியில் நின்றுக் கொண்டிருந்தான். உள்ளதிலேயே சூடானதாகவும் சத்தம் அதிகமானதாகவும் இருக்கும் இடம் அதுதான்.

அவன் பேக்டரியை தினம் சுற்றி வருபவனல்ல. இன்று காலையில் வந்ததும் கையெழுத்திட வேண்டிய ஆவணங்களில் கையெழுத்திட்டுவிட்டு மற்ற மீட்டிங் அனைத்தையும் கேன்சல் செய்ய சொன்னான்.

மேனேஜர் ரெங்கநாதன் மறுத்து எதுவும் கூறவில்லை. இன்று அப்படி ஒன்றும் முக்கிய மீட்டிங் எதுவும் இல்லாததும் ஒரு காரணம். ரெங்கநாதன் சந்திரன் காலத்திலிருந்து அங்கு மேனேஜராக பணி புரிபவர். விசுவாசி என்பதை தாண்டி அவர்கள் குடும்ப நலன் விரும்பி.

விஷ்வாவின் முகம் இரண்டு தினங்களாய் வாட்டமாக இருப்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவருக்கு மற்றவர் சொந்த விஷயங்களைக் குறித்து கேள்விக் கேட்டு பழக்கமில்லை. இருப்பினும் பேக்டரியை சுற்றி வந்தால் ஒருவேளை அவன் மனம் நிம்மதியடையக் கூடும் என்று எண்ணினார். ஏனோ அவனை தனியாக அனுப்பவும் மனம் இல்லாமல் தனக்கிருந்த சில வேலைகளை வேகமாக முடித்துக் கொண்டு அவனுடன் வந்து சேர்ந்துக் கொண்டார்.

தற்போது அவரால் சூடு தாங்க முடியவில்லை. எதற்காக இந்த இடத்தில் இவ்வளவு நேரம் நிற்கிறான் என்று நினைத்தவர், “போலாமா தம்பி? இங்கயே எவ்வளவு நேரம் நிப்பீங்க?” என்று அவனருகில் சென்று உரக்கக் கத்தினார்.

இவர் எப்போது வந்தார் என்ற யோசனையுடன் லேசாக தலையசைத்து நடந்தான். மிஷினிலிருந்து வெளிவரும் காகிதத்தை பெரிய சுருளாக சுற்றி அனுப்புவர். அதை தேவைக்கேற்ற அளவுகளில் நறுக்கும் பகுதிக்கு வந்தான்.

வெள்ளையில் கூட வண்ணங்கள் உண்டு என்று அங்கு அடுக்கப்படும் காகிதங்களை பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம். அவனுக்கு காகிதங்கள் பிடிக்கும். அப்பாவின் தொழில் என்பதால் அல்ல. சிறு வயது முதல் காகிதங்கள் மீது தனி காதல்.

முதல் முறையாக இந்த பேக்டரிக்கு வந்த தினம் அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆறு வயது சிறுவனாய் கண்கள் விரிய இந்த இடங்களை வளம் வந்ததை அவன் அடிக்கடி நினைவுக் கூர்வான்.

தந்தையிடமிருந்து பொறுப்பை தான் ஏற்றப் பிறகு சில மாற்றங்கள் செய்திருக்கிறான். மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை என்று உறுதியாக நம்புபவன்.

படிப்பும் இந்த தொழிலை சார்ந்தே படித்து… திருமணத்தை குறித்து அதிகம் யோசித்திராதவன் சம்மதம் தெரிவித்தது கூட தன் மாமனாரின் தொழில் தானே காரணம். திருமணம் என்றதும் ஆராதனாவின் முகம் கண் முன் தோன்றி மறைந்தது.

“இன்னும் இருபது நிமிஷத்துல சிங்கபூர் கால் இருக்கு தம்பி. அந்த பையர் ரெண்டு நாளா உங்ககிட்ட பேசியே ஆகணும்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நான் தள்ளிப் போட்டு தள்ளி போட்டு இன்னைக்கு அப்பாயின்ட்மென்ட் குடுத்திருக்கேன். அது மட்டும் கேன்சல் பண்ண வேண்டாம்னு நெனச்சு விட்டுட்டேன். இல்ல அதையும்…”

“போலாம் அங்கிள்”

அவனுடைய ‘அங்கிள்’ என்ற அழைப்பில் அவன் ஏதோ குழப்பத்தில் இருப்பது தெளிவானது. எப்போதும் அவர் அவனை தம்பி என்று அழைப்பாரே தவிர அவன் பொதுப்படையாகவே பேசுவான். எப்போதேனும் அபூர்வமாக முடிவெடுக்க தடுமாறும் தருணங்களில் அவனிடமிருந்து வரும் இந்த அழைப்பு.

தன்னுடைய அறைக்கு வந்தப் பிறகு வேலை மட்டுமே பிரதானமாய் தெரிந்தது. ரெங்கனாதனும் அவனுடைய மாற்றத்தை உடனே கண்டுக் கொண்டார்.

“மம்மி நீங்க பால் ஒழுங்கா கேட்ச் பிடிங்க….”

“ஐயோ… உங்களுக்கு விளையாடவே தெரில…”

“போச்ச்… போங்க மம்மி எப்போ பாரு பால் தூரமா தூக்கி போடுறீங்க. நான் கேட்ச் பிடிக்க வேண்டாமா?”

அரை மணி நேரமாக ஆராதனா முழி பிதுங்கிக் கொண்டிருந்தாள். காற்று புகுத்தப்பட்ட இடை கம்மியான பெரிய பந்தை வைத்து தீபாலியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

முதலில் சிறு குழந்தை என மெதுவாக தூக்கி வீச அது அவள் கைக்கு போய் சேரவில்லை. சரி வேகம் கூட்டலாம் என்று அவள் வீசி எரிந்தது தீபாலியின் முகத்தில் அடித்தது.

பந்தை வீச வேண்டிய வேகத்தை கணிக்கவே தினறியவளுக்கு பின் அதை எப்படி சரியாக அவள் கையில் சேரும்படி வீசுவதென்று பிடிபடவில்லை.

“சாரி சாரி… நெக்ஸ்ட் டைம் பாரு…”

“கண்டிப்பா நெக்ஸ்ட் டைம் கரெக்டா த்ரோ பண்ணுறேன்…”

அவளும் என்னென்னவோ சமாதானம் சொல்லிப் பார்த்தாள். சொன்னபடி செய்யத்தான் முடியவில்லை.

“சின்ன பசங்களோட விளையாடுறது ரொம்ப கஷ்டமா இருக்கும் போலயே… எப்படி தூக்கிப் போட்டாலும் சரி வர மாட்டேங்குதே…”

இம்முறை எப்படியும் சரியாக தூக்கி போட வேண்டுமென்று உறுதி எடுத்தவள் பந்தை கையிலெடுக்கவும் அவளது மொபைல் அடிக்கவும் சரியாக இருந்தது.

சிலையென உறைந்து நின்றவளை, “மம்மி போன்” என்ற அம்முவின் குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.

“நீ விளையாடு” என்று பந்தை அவள்புரம் உருட்டிவிட்டு தோட்டத்தில் போடப்பட்டிருந்த பெஞ்ச் அருகில் சென்றாள். அன்று விஷ்வாவிற்கு பேசியப் பிறகு மொபைலை கையிலேயே வைத்துக் கொண்டு சுற்றினாளே தவிர அதை திறந்து பார்த்ததில்லை. யாருக்கும் அழைக்கத் தோன்றியதில்லை. யாரும் அவள் எண்ணிற்கு அழைத்ததில்லை.

முதல் முறையாக அந்த மொபைல் ஒலிப்பதை கேட்டவளுக்கு யாராயிருக்கும் என்ற யோசனை. பெரும் தயக்கத்துடன் அதை கையிலெடுத்துப் பார்த்தாள். தெரிந்த எண் போல் தோன்றாததால் காலை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள். அது ஒரு விளம்பர அழைப்பு. போனில் கேட்ட பதிவு செய்யப்பட்ட குரலை கேட்டதும், “அடச்ச…” என்று எரிச்சலுடன் கட் செய்தாள்.

ஆனால் மொபைலை கீழே வைக்க மனம் வராமல் அதை திருப்பிப் பார்த்தாள். விஷ்வாவின் கையில் அம்முவை தூக்கி வைத்து நிற்கும் புகைப்படம் வால்பேப்பராக வைக்கப்பட்டிருந்தது. இருவர் முகத்திலும் சிரிப்பு. இருவருமே புகைப்படம் எடுத்ததை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

காரணமின்றி ஆராதனாவின் உதடு புன்னகையில் விரிந்தது. சில நொடிகள் அந்த புகைப்படத்தை ரசித்துப் பார்த்தவள் லாக்கை கவனித்தாள்.

நான்கு இலக்க எண்ணை கொண்டு அன்லாக் செய்ய வேண்டும். வேகமாக தான் பிறந்த வருடத்தை கொடுத்துப் பார்த்தாள். தவறு என்று காட்டியது. தேதியை மாதத்துடன் சேர்த்துக் கொடுத்தாள். பலனில்லை.

“என் பர்த் டேட் இல்லாம வேற என்ன நம்பர் செட் பண்ணியிருப்பேன்? நான் எப்பயும் இதான வைப்பேன்? இந்த மொபைல் முதல்ல எப்போ வாங்குனதுன்னு தெரியலையே… நான் வெச்சிருந்த மொபைல்… கடைசியா என்ன மொபைல் வெச்சிருந்தேன்? என்கிட்ட மொபைல் இருந்துதா?”

மெல்ல திரும்பி அம்முவை பார்த்தாள். ‘கேளு’. ‘வேண்டாம் கேட்காதே’ என்று மனம் நடத்திய போராட்டத்தின் இறுதியில், “அம்மு” என்று அழைத்துவிட்டாள்.

“யெஸ் மம்மி” தான் விளையாடுவதிலேயே கவனம் வைத்திருந்தாள்.

“அம்முவோட பர்த்டே சொல்லுங்க பார்ப்போம்”

அவள் சொன்ன வருடத்தை மொபைலில் என்டர் செய்வதற்குள் வியர்த்துவிட்டது. இல்லை. அதுவுமில்லை. தன் முயற்சி தோல்வியடைந்தபொழுதும் நிம்மதியாகவே இருந்தது.

சோர்ந்து போய் பெஞ்சில் அவள் அமர்ந்த நேரம் மொபைல் மீண்டும் ஒலித்தது. திரையில் தெரிந்த விஷ்வா என்ற பெயரை பார்த்ததும் தனக்கு எதற்காக அழைக்கிறான் என்று நினைத்து அழைப்பை ஏற்றாள்.

“என்ன பண்ணுற?”

“சும்மாதான்… அம்முகூட விளையாடுறேன்”

“போன் அன்லாக் பண்ண ட்ரை பண்ணுறியா?”

எப்படி தெரிந்தது? திருதிருவென்று விழித்தவள், “ஹான்… இல்ல… இல்லையே…” என்றாள்.

“நீ மூணு தடவைக்கு மேல தப்பா பாஸ்கோட் என்டர் பண்ணதும் உன் பேயறஞ்ச மூஞ்சியும் முட்ட முட்ட கண்ணும் எனக்கு தெரிஞ்சுதே…”

“என்னது?”

“அதுல ஒரு ஆப் இருக்கு. 3 தடவைக்கு மேல தப்பா பாஸ்கோட் என்டர் பண்ணா பிரன்ட் கேமரால இமேஜ் கேப்சர் பண்ணி மெயில் பண்ணிடும்”

“ஹிஹி… அது… ட்ரை பண்ணேன்… ஓபன் ஆகல”

“இது நீ என்னை மாட்டிவிடுறதுக்காக செஞ்சது. நான் பாஸ்கோட் எப்பவோ கண்டுப் பிடிச்சுட்டேன். உன் மெயில் ஐடிக்கு பதிலா என் மெயில் ஐடி மாத்தி குடுத்தத கூட நீ இன்னும் பார்க்கல… இப்போ நீ செட் பண்ண பாஸ்கோட் கூட மறந்து போய்… த்சோ த்சோ…. பார்க்கவே பாவமா இருக்கு ஆராதனா”

தன் முன்னால் இருந்த மானிட்டரில் ஆராதனாவின் முகத்தை பார்த்து சிரித்தான் விஷ்வா.

ஆராதனாவிற்கு இந்த விஷ்வா புதியவன். அவனுடைய இன்னொரு முகத்தை பார்க்கிறாள். கிண்டல் செய்து சிரிப்பவனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்ற, “போதும் போதும்… ரொம்ப சிரிக்காத. இந்த 4 டிஜிட் நம்பர கண்டுப்பிடிச்சு… உன் மெயில் ஐடிய மாத்தி நானும் சிரிக்குறேன்” என்றாள்.

விஷ்வாவிற்கு இன்னும் அதிகமாக சிரிப்பு வந்தது. வாய்விட்டு சிரித்தான். இப்போது தன் மனைவியின் முகம் எப்படியிருக்குமென்று கற்பனை செய்துப் பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. அதற்கு அவன் முன்னால் இருந்த அவளது புகைப்படமும் ஒரு காரணம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிக்கிறோம் என்பது அவனுக்கே உரைத்தது. எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை நெஞ்சில் துளிர்விட துவங்கிய சமயம், “மம்மீ….” என்று தீபாலி அலறும் சப்தம் கேட்டது.

“அம்மு… என்னடா?”

ஆராதனா பதற அந்த பதற்றம் அவனையும் தொற்றிக் கொண்டது.

“என்னாச்சு? ஆராதனா அம்முவுக்கு என்னாச்சு? ஹே லைன்ல இருக்கியா இல்லையா? ஹலோ… பேசி தொலை… என்னாச்சு ஆராதனா?”

அவன் கத்திக் கொண்டிருக்கும்போதே இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதற்கு மேல் அவனால் ஒரு நொடியும் அங்கிருக்க முடியவில்லை. உடனே கிளம்பினாலும் வீட்டிற்கு போய் சேர முக்கால் மணி நேரமாகும்.

வழியில் தென்பட்ட ரெங்கநாதனிடம், “அங்கிள் வீட்டுக்குப் போறேன்” என்றுப் போகிற போக்கில் செய்தி சொல்லிவிட்டு பறந்தான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்தபோது வேலையாட்கள் முதல் அனைவரும் ஹாலில் கூடியிருக்க கண்களை சுழலவிட்டு அம்முவை தேடினான்.

“என்ன விஷ்வா அதுக்குள்ள…”

அவன் திரும்பி பார்த்த பார்வையில் சந்திரன் அமைதியானார். அம்முவின் அறை நோக்கி தாமாகஅவரது கை சென்றது.

அவன் அறைக்குள் நுழைந்ததை பார்த்த சரண்யா ஒதுங்கி நிற்க, “பெருசா அடியில்ல. தூங்குறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன்” என்றுக் கூறி வெளியே வந்தார் டாக்டர் குமார்.

“ஒண்ணும் பெரிய அடியில்லடா. விழுந்ததுல பல்லு குத்தி உதட்டுல ரத்தம் வந்திருக்கு. தாடைல அடிச்சு அங்கயும் ரத்தம் வந்துடுச்சு. ஸ்டிச் கூட தேவையில்ல. வலி தெரியாம இருக்கதான் தூங்க வெச்சிருக்கேன். அதுக்குள்ள ஆர்ப்பாட்டம் பண்ணி… எனக்கு கால் பண்ணி பதறி… அலறியடிச்சு என்னையும் ஓடி வர வெச்சு… ஷ்ஷ்… உன் குடும்பத்த வெச்சு என்னால சமாளிக்க முடியல சந்திரா”

“நீ ஈஸியா சொல்லுவடா… மூஞ்சி முழுக்க ரத்தத்தோட என் பேத்திய பார்க்க பதறாது? எங்க… இப்போ என்கிட்ட சொன்னத உள்ள போய் என் பையன்கிட்ட சொல்லு பார்ப்போம்…”

“சரி சரி… நான் கிளம்புறேன். காலையில வந்து ஆராதனாவ பார்க்குறேன். அவள எதுக்குடா இப்படி தனியா உட்கார வெச்சிருக்கீங்க? நீயாவது போய் பேசுடா. புள்ள அழுது அழுது மூஞ்சியெல்லாம் எப்படி வீங்கி போயிருக்குப் பாரு”

“அம்மு கத்துனத கேட்டு நாங்க எல்லாரும் வெளில ஓடி வந்துப் பார்த்தோமா… அவ்வளவு ரத்தத்த பார்த்ததும் கொஞ்சம் பயந்துட்டோம்டா… சம்பந்தியம்மா ரொம்ப திட்டிட்டாங்க. அம்முவ பார்க்குற வேலையில அவள மறந்துட்டோம். நான் பேசுறேன்”

“ம்ம். அவளும் பாவம் தான? வரேன் சந்திரா”

ஆராதனாவின் அருகில் வந்தமர்ந்தார் சந்திரன். கண்களில் இடைவிடாது வழிந்த கண்ணீரை துடைத்து தலை குனிந்தாள்.

“அம்மா திட்டுனதெல்லாம் மனசுல வெச்சுக்காத. அம்முவுக்கு அடிப்பட்டத பார்த்து பயந்து திட்டியிருப்பாங்க. அவ நல்லாதான் இருக்கா. போய் பாரேன்…”

மறுப்பாக தலையசைத்தவளின் அருகில் வந்தார் ஹரிகிருஷ்ணன். “நீ பண்ணது தப்பு ஆராதனா. அம்மா கொஞ்சம் அதிகமா திட்டிட்டாங்க தான். அதுக்காக போய் உன் பொண்ண பார்க்காம இங்க உட்கார்ந்து அழுதுட்டு இருப்பியா? மாப்பிள்ளை வேற வந்துட்டாங்க. நீ போகலன்னா அவங்களுக்கு இன்னும் கோபம் வரும். போ”

கெஞ்சுதலாக பார்த்தவளிடம், “பயப்படாத போ… அவன இப்போ நீ மட்டும்தான் சமாளிக்க முடியும். எங்க யாராலையும் பேச முடியாது. அம்முவையும் பார்க்கணுமில்ல?” என்று ஆறுதலாகக் கூறினார் சந்திரன்.

தான் அங்கு அமர்ந்து சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று எழுந்து மெல்ல அம்முவின் அறையருகில் சென்றாள் ஆராதனா. உள்ளிருந்து வெளியே வந்த சரண்யா அவளைக் கண்டதும் முறைத்துவிட்டு சென்றார்.

மீண்டும் தயக்கம் தொற்றிக் கொள்ள சில நொடிகள் அறை வாயிலேயே நின்றவள் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். மெத்தையில் அம்முவின் அருகில் அமர்ந்து அவள் வலது கையை தன் கைகளுக்குள் பொத்தி வைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

அவள் உள்ளே நுழையவும் திரும்பிப் பார்த்தவன் கலங்கியிருந்த கண்களையும் சிவந்து வீங்கியிருந்த அவள் மூக்கையும் பார்த்து திட்ட வேண்டாமென்று முடிவெடுத்தான்.

வா என்று கண்களால் சைகை செய்து அழைத்தவனின் அருகில் ஓடிச் சென்று தரையில் அமர்ந்து அவன் காலை கட்டிக் கொண்டு மீண்டும் அழத் துவங்கினாள்.

“நான் அவக்கூட விளையாடிட்டுதான் விஷ்வா இருந்தேன். உன்கூட போன் பேசிட்டு இருந்ததால அவள கவனிக்கல. சாரி… ஐ அம் சாரி”

கட்டுப் போட்டிருந்த இடது கையை அவள் தலையில் வைத்தான். நிமிர்ந்துப் பார்த்தாள்.

“இந்த போன்… இது அடிச்சுதா… எனக்கு இதுல என்னெல்லாம் ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கேன்னு பார்க்கணும்னு தோணுச்சு. அதான் அவள தனியா விளையாட சொன்னேன். சாரி…”

“சொன்ன சரி. ஆனா அவள உன் கண் பார்வைக்குள்ளயே வெச்சிருந்திருக்கணும்”

“சாரி விஷ்வா”

“எதுக்கு அழுகுற? அழறதால எல்லாம் சரியாகிடுமா?”

இல்லையென்று தலையசைத்தவள், “அம்மா திட்டிட்டாங்க” என்றுக் கூறி அவன் கால்களை இறுகக் கட்டிக் கொண்டாள்.

“ரொம்ப திட்டுனாங்களா?”

“ம்ம்… ஒரு சின்ன பொண்ண கூட பார்த்துக்க முடியாதா உன்னால? ஆசையா உன்கூட விளையாடதான கூப்பிட்டா… எப்படி ரத்தம் வருது பாரு… இந்தளவுக்கு பொறுப்பில்லாம உன்னை நான் வளர்த்தேன்னு…”

அவள் கேவத் துவங்க தலையை வருடியவனுக்கு அவளை பார்க்க தன் வகுப்பு ஆசிரியையை குறித்து புகார் செய்யும் சிறுபிள்ளை போல் தோன்றியது.

“நீ எப்படி எனக்கு பொண்ணா பொறந்தியோன்னு கேட்டாங்க விஷ்வா… நிறைய திட்டுனாங்க… உன் பொண்ணுன்னு நினைக்கலன்னாலும் ஒரு குழந்தைய பாத்துக்க துப்பில்லையான்னு கேட்டாங்க. அம்மா இப்படியெல்லாம் பேசி நான் கேட்டதே இல்ல விஷ்வா…”

அவள் அழுகை பெரிதாக, “சரி நான் அத்தைகிட்ட பேசுறேன். இனிமே திட்ட மாட்டாங்க” என்று சமாதானம் செய்ய முயன்றான்.

அம்மு தூக்கக்கலக்கத்தில் அவன் கையை கெட்டியாய் பிடித்திருந்தாள். ஒரு குழந்தை கையை பிடித்திருக்க மற்றொரு குழந்தை காலை பிடித்து அழுவதாக தோன்றியது.

ஆராதனா அழுததால் சத்தம் போடாமல் விட்டாலும் அவள் மீது கோபம் இருக்கதான் செய்தது. கோபம் இருப்பினும் சரண்யா அவளை இப்படி அதிகப்படியாக திட்டியதையும் மனம் ஏற்க மறுத்தது.

நிழலே நிஜமாய் – 11

சாய்வு நாற்காலியில் சாய்ந்து சாய்ந்து நிமிர்ந்துக் கொண்டிருந்தான் விஷ்வா. அந்த ஆட்டமும் சீராக இல்லை, அவனுடைய சிந்தனையும் சீரானதாக இல்லை. குழப்பம், பயம் கவலையென்ற உணர்ச்சிகள் கலவையாகத் தோன்றி அவன் சிந்தனை திறனை மழுங்கடித்திருந்தன. இன்று புதிதாக இப்படியொரு இக்கட்டு வருமென்று அவன் எதிர்பார்க்கவில்லை.

கதவு தட்டும் ஒலிகேட்டு நிமிர்ந்து அமர்ந்தவன் உள்ளே நுழைந்தவரிடம் கையை நீட்டினான். அரை மனதாய் கையிலிருந்த கவரை அவனிடம் கொடுத்தார் ரெங்கநாதன்.

“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் உங்களால வர முடியும்னு சொல்லி நான் வேணா பேசி பார்க்கவா தம்பி? இப்போ போகுறதுக்கு நீங்க யோசிக்குற மாதிரி தெரியுது”

“வேணாம். எத்தன நாள் தள்ளிப் போட முடியும்? எப்படியும் போய் தான் ஆகணும். அதோட நம்ம அனுப்புற கன்சைன்மென்ட்ஸ் ஒழுங்கா வந்து சேர மாட்டேங்குதுன்னு அவங்க சொல்லுறப்போ நம்ம போய் பார்க்காம அத தள்ளிப் போட முடியாது. நான் நாளைக்கே கிளம்புறது தான் சரி. இப்போவே இந்த ஆக்சிடென்ட்டால அவங்கக்கிட்ட பேசுறது டிலே ஆகிடுச்சு”

இரண்டு நாட்களாக சிங்கப்பூரிலிருந்து அந்த பையர் தன்னிடம் பேச முயற்சித்தது இதற்காகத் தான் என்பது அவர்களிடம் பேசியப் பிறகே அவனுக்குத் தெரிந்தது.

“டிக்கெட் அந்த கவர் உள்ள இருக்கு. ஒரு வாரம் நீங்க இருக்க மாட்டீங்கன்னு உங்ககிட்ட கையெழுத்து வாங்க வேண்டிய டாகுமென்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்கேன். மீறியும் ஏதாவது விட்டுப் போச்சுன்னா சைனிங் அத்தாரிட்டியா அப்பாவ சைன் பண்ண சொல்லிடுறேன்”

“பேக்டரில எந்தப் பிரச்சனையும் வராது அங்கிள்”

“நிச்சயம் வராம நான் பார்த்துக்குறேன்”

“வீட்டுப் பிரச்சனைய எப்படி சமாளிக்குறது?” காலையிலிருந்து மனதை அரிக்கும் கேள்வியை மனம் மீண்டும் கேட்டது. “நான் பக்கத்துல இருந்து பார்க்குறப்போவே இப்படி இருக்கு… திரும்பி வர எப்படியும் ஒரு வாரம் ஆகும். அதுக்குள்ள எதுவும் நடக்காம இருக்கணுமே…”

“நான் போய் பேப்பர்ஸ், வவுச்சர்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன் தம்பி”

“ம்ம்”

சந்திரன் அவன் மொபைலிற்கு அழைத்தார். நூறாவது முறையாக தனக்கு தைரியம் சொல்லி தன்னை சிங்கப்பூர் அனுப்பி வைக்கவே இந்த அழைப்பு. மனம் சோர்ந்துப் போனது.

“சொல்லுங்கப்பா”

“ரெங்கநாதன்கிட்ட இப்போதான் பேசுனேன். எல்லாம் ஓகேனு சொன்னாரு. ப்ளைட் டிக்கெட் கையில கெடச்சிடுச்சாமே… நீ எப்போ வீட்டுக்கு வர?”

“இங்க வேலையெல்லாம் முடிச்சுட்டுக் கிளம்பி வரேன்”

“சரி. நீ எதுக்கும் கவலைப்படாம இரு. ஒரு வாரத்துல எதுவும் தலைகீழா மாறிடப் போறதில்ல”

“பாப்போம்”

அவன் பதில் சந்திரனுக்கு திருப்திகரமாக இல்லை. மகனுக்கு சமாதானம் கூறினாலும் நிமிடத்திற்கு நிமிடம் அவருடைய ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டுதான் இருந்தது.

ஹரிகிருஷ்ணன் அருகில் அமர்ந்து பேப்பரில் கண்ணை வைத்து அவர்கள் பேச்சில் காதை கொடுத்திருந்தார். மற்றவர்களுக்கு தைரியம் சொல்லுமளவிற்கு அவருக்கு தைரியம் போதவில்லை.

இத்தனை நாள் மாப்பிள்ளை பார்த்துக் கொள்வார் என்று பெரிதாக கவலைக் கொள்ளாமல் இருந்த மனிதருக்கு இப்போது மாப்பிள்ளை இல்லாத நேரம் எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற உதறல்.

“அவன் போறதுக்கு ஒத்துக்கிட்டான் சம்பந்தி”

“அப்படியா?”

“ப்ளைட் டிக்கட் இப்போதான் வந்துதாம். மேனேஜர் சொன்னார்”

“சரி சம்பந்தி”

“அங்க பிரச்சனை இருக்கு. அவன் போயே ஆகணும். இல்லன்னா இப்படி ஒரு சூழ்நிலையில… அதுவும் அவன் கை ஒடஞ்சு இருக்கப்போ அவ்வளவு தூரம் போக விட்டிருக்க மாட்டேன்”

“அதெல்லாம் சரிதான் சம்பந்தி. எல்லாத்தையும் நம்மளால நிச்சயமா சொல்ல முடியுமா என்ன?”

“ஆராதனாவ நம்ம எல்லாரும் பார்த்துக்கலாம்”

“அதெல்லாம் நல்லாவேப் பார்த்துக்கலாம் சம்பந்தி. இப்போ மட்டும் என்ன? அவ மாப்பிள்ளைகிட்ட அதிகம் பேசுறதுக் கூட இல்ல. நம்மதான பார்த்துக்குறோம்”

“நீங்க ஏன் ஒருமாதிரியே பேசுறீங்க? உங்களுக்கு உங்க பொண்ண நல்லாப் பார்த்துக்க முடியும்னு நம்பிக்கை வரலையா?”

“வர மாட்டேங்குதே… எந்த தைரியத்துல நீங்க மாப்பிள்ளைக்கு கால் பண்ணி தைரியம் சொல்லி என்னையும் சமாதானம் பண்ணுறீங்கன்னு எனக்குப் புரியல சம்பந்தி”

“நீங்க சொன்னீங்களே… இப்போவும் ஆராதனா நம்மகிட்டதான் பேசுறா… விஷ்வாகிட்ட அதிகம் பேசுறதுக் கூட இல்லைன்னு”

“நம்ம யார் சொல்லியும் கேட்காதவ மாப்பிள்ளை பேச்சுக்கு மட்டும் தான சம்பம்ந்தி அடங்குனா. மறந்துட்டீங்களா?”

“ஹ்ம்ம்… நம்ம பேச்ச மீறியும் ஆராதனா எதுவும் செய்ய மாட்டா”

“அது என்னமோ நீங்கதான் சொல்லிக்குறீங்க. மாப்பிள்ளை ஒரு வாரம் இருக்க மாட்டாங்கன்னுக் கேட்டதுலேருந்து எனக்கு நெஞ்சுக்குள்ள திக்குன்னு இருக்கு” அங்கு வந்த சரண்யா கூறியதைக் கேட்டு ஆமோதிப்பாக தலையசைத்தார் ஹரிகிருஷ்ணன்.

“உங்க பொண்ணு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”

சந்திரன் சற்று உரக்கக் கேட்க அந்த சூழ்நிலையிலும் புன்னகைத்த ஹரிகிருஷ்ணன், “இந்த வீட்டுக்கு வந்ததுலேருந்து அவ எங்க பொண்ணாவா சம்பந்தி இருக்கா? கல்யாணத்துக்கு அப்பறம் என்னமோ அவ எங்களுக்கு புதுசாதான் தெரியுறா” என்றார்.

உண்மைதான். மறுக்க முடியாது. ஆனால் தற்போது அவள் அதை மறந்துவிட்டாள். அவளது பெற்றோரின் உதவி இல்லாமல் அவளை தன்னால் சமாளிக்க முடியாதென்று சந்திரன் உறுதியாக நம்பினார்.

விஷ்வா வீட்டிற்குள் வந்ததும் ஹாலில் அமர்ந்துவிட்டான். கையிலிருந்த பைலை சோபாவில் அருகில் வைத்து ஷூவை கழட்டினான்.

“ஹாய். எப்போ வந்த? ஏன் டல்லா இருக்க?”

“ஒரு வாரம் ஒழுங்கா இருப்பியா?”

“ஏன்? இப்பயும் ஒழுங்காதான இருக்கேன்? என்ன ஒரு வாரம்?”

தங்களுக்கிருந்த கவலையில் விஷ்வா ஊருக்கு செல்வதை அவளிடம் சொல்ல மறந்துவிட்டதை பெற்றோர் அப்போதுதான் உணர்ந்தனர். சுற்றி உள்ளவர்களைப் பார்த்தவன் விஷயத்தை ஊகித்தான்.

“நான் ஒரு வாரம் சிங்கப்பூர் போறேன். பிசினஸ் ட்ரிப். நா…”

“ஏன் போற?”

காலையிலிருந்து மனதில் தோன்றிய சோர்வை விரட்டியடித்தது அவளது அந்த கேள்வி. சோபாவில் நிமிர்ந்தமர்ந்து அவளை பார்த்தான். பெற்றோர்களுக்கும் ஆச்சரியமே.

“வா” என்றவன் முன்னால் நடக்க கேள்வியின்றி அவன் பின்னால் சென்றாள். அவனுடைய அறைக்குள் வந்ததும், “என்னாச்சு?” என்றுக் கேட்டாள்.

“நான் போக வேண்டாமா?”

“போறேன்னு சொன்ன… இப்போ போக வேண்டாமான்னு என்னைக் கேட்குற?”

“நிமிர்ந்து என்னை பார்த்து பதில் சொல்லு. எதுக்கு அப்படிக் கேட்ட?”

“இல்ல… இந்த வீட்டுல உன்கிட்டதான் நான் நிறைய பேசுறேன். உன்னை மட்டும்தான் நல்லா தெரியும். நீயும் போயிட்டா…”

“ஏன்? அப்பாகிட்டயும் நீ பேசுறியே”

“அது… அங்கிள்கிட்ட நான் நல்லாதான் பேசுறேன்…”

“அம்முகூட விளையாடுற… வீட்டுல வேலை செய்யுறவங்கக் கிட்ட கூட அப்பப்போ நீ பேசுறத பார்த்திருக்கேன். அப்பறம்?”

“அதெல்லாம் பேசுறேன். எல்லார்கிட்டயும். அவங்கள எனக்கு தெரியும். ஆனா பார்த்த மாதிரி இல்ல. அவங்க என்கிட்ட பேசுறாங்க. நான் இங்க யாருகிட்ட…”

உளறலாக அவள் உதிர்த்த வார்த்தைகள் அவனுக்குள் நம்பிக்கையை விதைத்தன.

“இப்படியே குழம்பி குழம்பி தெளிவாகு. நான் சீக்கிரம் திரும்பி வந்திடுறேன்” அவள் தோளை சுற்றி கை போட்டு அறை வாயில் வரை அழைத்துச் சென்றவன் புன்னகையுடன் திரும்பி உள்ளே வந்தான்.

இனி கிளம்புவதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. உற்சாகத்துடன் தன் உடைமைகளை எடுத்து பெட்டிக்குள் அடுக்கினான்.

ஆராதனா தான் பேசியதையும் அவன் சொன்னதையும் எண்ணிப் பார்த்தாள். இரண்டிற்கும் அர்த்தம் பிடிபடவில்லை.

யாருடனும் பேசாமல் அமைதியாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தது தீபாலி மட்டும்தான். தந்தை தன்னை விட்டு ஒரு வாரம் பிரியப் போகிறான் என்பதை கேள்விப்பட்டதிலிருந்து சோகமே உருவாக இப்படித்தான் அமர்ந்திருக்கிறாள்.

விஷ்வா வீட்டிற்குள் வந்ததை அவன் குரல் கேட்டதை வைத்து கண்டுக் கொண்டாள். தன்னை தேடி வந்து பேசுவான் என்று நினைத்தவளுக்கு வெகு நேரமாகியும் தகப்பனை காணாது கோபம் வந்தது.

“சாப்பிடலாமா அம்மு?” என்றுக் கேட்டு அறைக்குள் வந்த சரண்யாவிடம், “எனக்கு ஒண்ணும் வேணாம். நீங்க போங்க பாட்டி” என்றுக் கத்தி அவரை வெளியே அனுப்பிவிட்டாள்.

மகளின் அறையைக் கடந்துச் சென்றவனின் காதுகளில் இது விழுந்துவிட அவன் இருந்த மனநிலையில் புயலென உள்ளே நுழைந்து மகளை இரு கைகளாலும் தூக்கி சுற்றி இடது கையில் தூக்கிக் கொண்டான். அதன் பிறகே கட்டுப் போட்டிருந்த கையில் வலியை உணர முடிந்தது. லேசாக முகம் சுருக்கினாலும் நொடியில் அதை சரி செய்து, “அம்முவுக்கு என்ன கோவம்?” என்றுக் கேட்டான்.

“டாடி அம்மு விட்டுப் போறீங்க”

“இல்லையே… ஒன் வீக்… சீக்கிரமா அம்முவ பார்க்க ஓடி வந்துடுவேனே… வரும்போது அம்முவுக்கு நிறைய கிப்ட்ஸ் வாங்கிட்டு வருவேனே”

“என்ன கிப்ட்?”

“அது சர்ப்பரைஸ். அம்மு சமத்தா இருந்தீங்கன்னா திரும்பி வந்ததும் தருவேன்”

“ஓகே டாடி” அவன் கழுத்தைச் சுற்றி கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். அந்த நொடி முதல் விமானம் ஏறும்வரை அவனுக்கு எந்த கவலையும் இருக்கவில்லை. யாரையும் விமானநிலையம் வர வேண்டாமென்று சொன்னவன் வீட்டிலிருந்துக் கிளம்புவதற்கு முன் சரண்யாவிடம் தனியே பேசிவிட்டு தான் சென்றான்.

“ஆராதனா செய்யுறதெல்லாம் சரின்னு என்னாலையும் ஏத்துக்க முடியல. கோபம் வருது. ஆனா நான் கத்துறதில்ல. நீங்களும் திட்டாம இருந்தா நல்லாயிருக்கும்” என்று அவன் கூறியதும், “இல்ல மாப்பிள்ளை. இனி இப்படி திட்ட மாட்டேன்” என்று பதிலுரைத்தார்.

ஆராதனாவின் மொபைல் ஒலித்தது. தீபாலிக்கு அடிப்பட்டதிலிருந்து அவள் மொபைலை கையிலெடுப்பதில்லை. மேஜை மீதிருந்ததை எடுத்துப் பார்த்தாள்.

“சொல்லு. ரீச் ஆகிட்டியா?”

“ம்ம். வந்துட்டேன். மொபைல் ஒழுங்கா சார்ஜ் போட்டு கையிலயே வெச்சுக்கோ. எனக்கு எப்போ டைம் கிடைக்குதோ அப்போதான் என்னால பேச முடியும்”

“என்னால கால் பண்ண முடியாதே… நான் எப்படி உன்கிட்ட பேசுறது? பாஸ்கோட் சொல்லு”

“முடியாது. முடிஞ்சா கண்டுப்பிடிச்சு கால் பண்ணு”

அன்றிலிருந்து ஒரு வாரமும் அவளிடமிருந்து கால் வராதா என்று அவன் மனம் ஏங்கியது. இறுதிவரை அவனே தான் கால் செய்ய வேண்டியதாயிற்று. ஆராதனா முயற்சி செய்யாமலில்லை. ஆனால் அது எதுவும் பலனளிக்காமல் போனது.

இடையில் ஒரு நாள் அழைத்தபோது, “ஹே நான் தீபாலி கூட விளையாடுறேன். அப்பறம் பேசுறேன்” என்று அவள் கூறியதைக் கேட்டப் பிறகு மனம் இன்னும் நிம்மதியடைந்தது.

சந்திரனுக்கு அழைத்துப் பேசினான். அது முழுவதும் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சாய் இருந்தது. அவனுக்கும் வேலை ஓயவில்லை. வேலைகளுக்கு நடுவில் அங்கிருந்த மருத்துவமனையில் தனது கை கட்டை பிரிக்க சொன்னான். பிரித்ததும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு முற்றிலும் சரியாகிவிட்டதாகத் தெரிவித்தனர்.

இருந்த சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைத்து அவன் புறப்பட்ட தினம் மனைவியையும் மகளையும் காணப் போகிறோம் என்ற நினைப்பு அவன் உற்சாகத்தைக் கூட்டியது.

டிரைவர் வீட்டு வாசலில் காரை நிறுத்தியதும் அவசரமாக உள்ளே நுழைந்தவனை எதிர்கொண்டார் சந்திரன்.

“ட்ரிப் எப்படி விஷ்வா இருந்துது?”

“ஆராதனா எங்கப்பா? அம்முவுக்கு இன்னைக்கு லீவ் தான?”

“அது… ஆமாப்பா… அவ ரூம்லதான் விளையாடிட்டு இருக்காங்க”

ஆராதனா அவனைக் கண்டதும், “ஹேய் வந்துட்டியா? எப்படிப் போச்சு வேலையெல்லாம்?” என்றுக் கேட்டு அவனருகில் வந்தாள்.

பதில் கூற அவன் வாய் திறக்கவும், “ஆரூ… சீக்கிரம் வா” என்று அம்மு கத்தவும் சரியாக இருந்தது.

முகத்தில் இருந்த புன்னகை சட்டென்று காணாமல் போக மனைவியைப் பார்த்தான். “வரேன்” என்று குரல் கொடுத்தவள், “நீ சொல்லு” என்று விஷ்வாவிடம் கூறினாள்.

“அம்மு இப்போ உன்னை எப்படிக் கூப்பிட்டா?”

“ஆரு… அதான என் பேரு?”

அவன் முகம் போன போக்கைப் பார்த்த சந்திரன், ஹரிகிருஷ்ணன், சரண்யா மூவரும் கையை பிசைந்தபடி தலை குனிந்து நின்றனர்.

நிழலே நிஜமாய் – 12

விஷ்வாவின் அமைதிக்கு அவனாலேயே சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை. யார் மீது கோபம்? யார் மீது காண்பிப்பது? சரி செய்ய வேண்டும். ஆனால் எதை? எங்கிருந்து துவங்குவது?

மனதில் கேள்விகளுக்கு பஞ்சமில்லை. விடை தேட வேண்டிய மூளை வேலை நிறுத்தம் செய்யத் துவங்கி பல நிமிடங்கள் ஆயிற்று.

சந்திரன் தைரியத்தை வரவழைத்து அவனருகில் வந்தார். நிறைய பேச வேண்டும். எப்போதெல்லாம் நிறைய பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எதிலிருந்து துவங்குவதென்ற குழப்பமும் சேர்ந்துக் கொள்கிறது.

“விஷ்வா”

நிமிர்ந்துப் பார்த்தான்.

“கை வலி எதுவும் இல்லையே?”

சமாதானம் சொல்ல எத்தனையோ விஷயங்கள் இருந்தும் தன் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார். பெற்ற மனம்… வெறுமையாக சிரித்தான்.

அவன் கத்தியிருந்தாலாவது அதட்டியிருக்கலாம். இல்லை பொறுமையாக எடுத்துக் கூறியிருக்கலாம். சந்திரனுக்கு மனதை பிசைந்தது.

“நீ குளிச்சுட்டு வா. இப்படி உட்கார்ந்திருக்காத. எல்லாம் சரியாப் போகும்”

தன் முகம் பிரதிபலிக்கும் தன் மனநிலையை எதிர்கொள்ள தெம்பில்லாமல் செல்கிறார். அவரும்தான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் எழுந்து கப்போர்டை திறந்தான். பாதிக்கு மேல் காலியாக இருந்தது.

வந்ததிலிருந்து எத்தனையை தாங்குவது? சோர்வுடன் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றான். ஷவரை திறந்து சுவற்றில் இரண்டு கைகளையும் ஊன்றி சாய்ந்து நின்று கண்களை மூடியவுடன் வீட்டிற்குள் நுழைந்தது முதல் நடந்தவை கண் முன்னால் தோன்றின.

“ஆரு” என்ற தீபாலியின் அழைப்பில் அதிர்ந்தவன் ஆராதனா சொன்ன பதிலை கேட்டு எரிச்சலுற்றான்.

“ஆராதனா தான் உன் பேரு. யாரு இல்லன்னா? அம்மு எதுக்கு உன்னை உன் பேரு சொல்லி கூப்பிடுறா?”

“நான் தான் கூப்பிட சொன்னேன்”

“ஏன்?”

நெற்றியில் விழுந்த சுருக்கப் பள்ளங்களின் ஆழம் அதிகரித்துக் கொண்டேப் போக ஆராதனாவிடம் கேள்வி கேட்டவனிடம் ஓடி வந்தாள் தீபாலி.

“டாடி……. வந்துட்டீங்களா? கிப்ட் எங்க? கிப்ட் கிப்ட்…”

குனிந்து மகளை தூக்கியவன், “மம்மிய பேரு சொல்லி எல்லாம் கூப்பிடுற? அப்போ அம்மு பேட் கேர்ள் தான? அப்பறம் எப்படி நான் கிப்ட் குடுப்பேன்? அம்மு சமத்தா இருந்தாதான் கிப்ட்னு சொன்னேனா இல்லையா ம்ம்…” என்றான்.

“நான் ஆரு கூட தான் விளையாடுறேன். அப்போ அவ எனக்கு பிரெண்ட் தான? நான் என் பிரெண்ட்ஸ் எல்லாம் பேரு சொல்லிதான் கூப்பிடுறேன். அப்போ ஆருவையும் பேரு சொல்லிதான கூப்பிடணும்?”

“அவளா? என்ன பேச்சு இது அம்மு? யார் சொல்லி குடுத்தா உனக்கு?”

“இல்ல டாடி… ஆரு சொல்லி தந்தா”

தந்தை குரலை உயர்த்தவும் குழந்தையின் குரல் உள்ளே சென்றது. கண்கள் கலங்க மருண்டு விழித்துப் பார்க்கும் மகளை அணைத்துக் கொண்டான்.

“சாரிடா குட்டி. டாடி திட்ட மாட்டேன் என்ன? கிப்ட் வாங்கிட்டு வந்துட்டேன். டாடி அப்பறமா எடுத்து தரேன். நீங்க போய் கொஞ்ச நேரம் உங்க ரூம்ல விளையாடுறீங்களா?”

“கோவம் போச்சா?”

தலையை ஆட்டி ஆட்டி கேட்ட மகளின் கன்னத்தில் முத்தமிட்டு, “போச்ச்ச்” என்றான். பதிலுக்கு அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவன் கையிலிருந்து இறங்கி இரண்டடி ஓடியவளை, “அம்மு” என்றழைத்தான்.

“ம்ம்?”

“இனிமே ஆருன்னு எல்லாம் கூப்பிடக் கூடாது. மம்மின்னுதான் கூப்பிடணும்”

“ஆனா ஆரு சொன்னா…”

“அம்மு குட் கேர்ள் தான? மம்மிய போய் அவ இவன்னு பேசலாமா?”

“ம்ம்ஹும்”

“குட். எப்பயும் போல மம்மி வாங்க போங்கன்னு பேசணும். ஓகேவாடா?”

“ஓகே”

முயல் குட்டியை போல் குதித்து குதித்து செல்பவளை பார்த்தவன் ஆராதனாவின் பக்கம் திரும்பினான்.

“இப்போ எதுக்கு என்னை மம்மின்னு கூப்பிட சொன்ன?”

“இங்க பாரு… என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு ஆராதனா. உன்னையும் அம்மு ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணிதான் திரும்ப திரும்ப எல்லாம் சொல்லி புரிய வெச்சுட்டுப் போனேன். ஒரே வாரத்துல என்ன பண்ணி வெச்சிருக்க பாத்தியா?”

“நான் என்ன பண்ணேன்? சந்திரன் அங்கிள்… நீங்க சொல்லுங்க… அவ என் பேரு சொல்லி கூப்பிட்டா எனக்கு எந்த கில்ட்டி பீலும் வர மாட்டேங்குது, அவகூட ஒழுங்கா விளையாடுறேன்னு நான் ரீசன் சொன்னேனா இல்லையா? இப்போ இவன் வந்து கேள்விக் கேட்குறான்?”

“ஏய்… அப்பாவ பேரு சொல்லி பேசுற?”

“உனக்கு என்னதான் பிரச்சனை? தீபாலி என்னை ஆருன்னு கூப்பிடக் கூடாது… நான் சந்திரன் அங்கிள்னு தான சொல்லுறேன்… பேரு சொல்லி ஒண்ணும்…”

“வாய மூடு”

கையை ஓங்கி மகளை நோக்கி சென்றவனின் முன் ஓடி வந்தார் ஹரிகிருஷ்ணன். “உங்க கோவத்த நான் தப்பு சொல்லவே மாட்டேன் மாப்பிள்ளை. ஆனா இப்போ நீங்க என் பொண்ண அடிச்சா அதுக்கு எங்கள விட பின்னாடி நீங்க ரொம்ப வருத்தப் படுவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்”

என்ன செய்துக் கொண்டிருக்கிறோம்? அடிக்க கை ஓங்கும் அளவிற்கா தனக்கு கோபம் வருகிறது? அவசரமாக சுற்றிப் பார்த்தான். சந்திரனின் முகத்தில் வேதனையின் சாயல். சரண்யா தலை குனிந்து முந்தானையில் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார்.

சுற்றி இன்னொருமுறை கவனித்தவன், “எங்க எல்லாரும்? நீங்க மட்டும்தான் இருக்கீங்க?” என்றுக் கேட்டான்.

“வேற யாரும் இல்ல”

“ஏன் பா?”

“இன்னைக்கு நீ வரன்னு சொன்னதும்… இப்படி ஏதாவது நடக்கும்னு நெனச்சு… எல்லாருக்கும் இன்னைக்கு ஒரு நாள் லீவ் குடுத்திருக்கேன் விஷ்வா”

ஆராதனாவை அடித்து துவைக்குமளவிற்கு மனதில் கோபமிருந்தது. பெற்றோர் முன்னால் இதுவரை அவளை திட்டியதே இல்லை. இன்று அடிக்கும் அளவிற்கு சென்றாயிற்று. வேகமாக அறைக்குள் வந்தவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.

கண்களை திறந்து ஷவரை மூடினான். மீண்டும் கண்களை மூடி சுவற்றில் தலையை சாய்த்தவனின் உடலில் வலுவிருந்த அளவிற்கு மனதில் தெம்பில்லை.

ஆராதனா கைகளை கட்டி சோபாவில் அமர்ந்திருந்தாள்.

“நீ எதுக்கு ஆராதனா மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு உட்கார்ந்திருக்க?”

“நீங்க இப்படி அவளுக்காக பரிஞ்சு பேசி பேசியேதான் சம்பந்தி இந்த நெலமைக்கு வந்து நிக்குது. தப்பா நினைக்காதீங்க… அவள என்கிட்ட விடுங்க… நாலு இழுப்பு இழுத்தா எல்லாம் தன்னால சரியாப் போகும்”

அழுகையும் ஆத்திரமும் ஒருசேர சரண்யா கத்த, “சரண்யா அமைதியா இரு” என்றார் ஹரிகிருஷ்ணன்.

“என்னை எதுக்கு அமைதியா இருக்க சொல்லுறீங்க? இன்னும் எத்தன நாளைக்கு அமைதியா இருக்கணும்? நடந்ததெல்லாம் பார்த்ததுக்கு அப்பறமும் எப்படிங்க இப்படி கொஞ்சம் கூட கவலையே இல்லாம நிக்குறீங்க? பொண்ண பத்தி அக்கறையே இல்லையா உங்களுக்கு?”

“சும்மா உனக்குதான் பாசமிருக்கு அக்கறையிருக்குன்னு குதிக்காத… சத்தம் போட்டு எந்த பிரயோஜனமும் இல்லைன்னுதான சொல்லுறேன்”

“நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இப்போ சண்டை போட்டுக்குறீங்க? எல்லாத்துக்கும் காரணம் நான் தான். நானே சரி பண்ணுறேன்”

“சும்மா அவள கத்திக்கிட்டே இருக்கா சம்பந்தி. திட்டுனா மட்டும் அவ மாறிடுவாளா?”

“கண்டிக்காம விட்டதுக்குதான் இப்படி…”

“அதான் சொல்லுறேனே… நான் சரி பண்ணுறேன்னு… நம்ப மாட்டீங்களா?”

அமைதியாக நிற்கும் பெற்றோரை பார்த்த ஆராதனா விருட்டென்று எழுந்து மாடிக்குச் சென்றாள்.

விஷ்வா வருவதை பார்த்த சரண்யா அங்கிருந்து சென்றுவிட ஹரிகிருஷ்ணன் சந்திரன் அருகில் அமர்ந்தார்.

பெண்ணை பெற்றவருக்கு மாப்பிள்ளையை சமாளிக்க சம்பந்தியிடம் உதவி கேட்கும் நிலை. அமைதியாக இருந்தார்.

சந்திரனுக்கு எப்படியாவது எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டுமென்ற கவலை. யோசனையில் இருந்தார்.

அடுத்து என்ன செய்ய வேண்டும், எதை குறித்து சிந்திக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தான் விஷ்வா.

சரண்யா வந்து அனைவருக்கும் தேநீர் கொடுக்க கப்புடன் எழுந்தவன் ஹாலை தாண்டி நடக்க ஆரம்பித்தான்.

“நான் பேசிட்டு வரேன்” என்ற சந்திரன் எழுந்து அவன் பின்னால் சென்றார். உள்ளே சொல்லிவிட்டார் தான். ஆனால் தோட்டத்து பெஞ்சில் வந்தமர்ந்து ஐந்து நிமிடங்களானப் பிறகும் பேச்சை துவங்கவில்லை.

தோட்டத்து மலர்களின் நறுமணம் கலந்த இளந்தளிர் காற்று அங்கு அமர்ந்திருந்தவர்களின் உணர்வுகளை எட்டாமல் அவர்கள் மீது மோதிச் சென்றது.

ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தவனின் கையிலிருந்த கோப்பையை பார்த்தவர் தேநீர் மீது படிந்திருந்த ஆடையை கவனித்து, “டீ ஆறுது. குடி” என்றார்.

குடித்தான். நாவில் ருசி தெரியாது போனது. கப்பை கையில் நீண்ட நேரம் பிடித்திருக்க விரும்பாமல் மொத்த தேநீரையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தான்.

“நீ போனப் பிறகு ஆராதனா ஒரு நாள் முழுக்க யாரோடயும் பேசல. ரூம் உள்ளயே அடைஞ்சுக் கெடந்தா. எங்களுக்கு அவள அப்படி பார்க்கவே கஷ்டமா இருந்துது. நாங்க பேச்சு குடுத்தாலும் ஒதுங்கியே போனா. சம்பந்தியம்மாகிட்ட அவங்க வீட்டுக்கே போயிடலாம்னு சொன்னாளாம். எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பயம் வந்துடுச்சு. நான் தான் அவகிட்ட போய் ‘இந்த வீட்டுல இருக்கணும்னா எப்படி இருக்கணும்னு உனக்கு தோணுதோ அப்படி நீ இருந்துக்கோ… யாரும் உன்ன கேள்வி கேட்காதபடி நான் பார்த்துக்குறேன்’னு சொன்னேன்”

“…”

“இங்க வேலை செய்யுறவாங்ககிட்ட பேசுறத சுத்தமா நிறுத்துனா. எங்கயாவது வெளில போகணுமான்னு கேட்டா வேண்டாம்னு சொல்லிட்டா. அம்மு மட்டும் அவள சுத்தி சுத்தி வந்தா. அவ மம்மின்னு கூப்பிடுறது மட்டும்தான் பிடிக்கலன்னு சொல்லி… என் தப்புதான் விஷ்வா. இந்த விஷயத்த இன்னும் சிக்கலாக்கிட்டேன். சாரி”

“நீங்க எதுக்குப்பா சாரி கேட்குறீங்க? இந்த அக்ஸிடென்ட்டே என்னோட தப்புதானப்பா? அதனாலதான இவ்வளவு பிரச்சனையும்?”

“நீ இப்படி கோவப்பட்டு கத்தாம மட்டும் இருப்பியா?”

“கோபமே படக் கூடாதுன்னு தான் பா நானும் இத்தன நாள் பல்ல கடிச்சுட்டு இருந்தேன். அம்மு கொழந்த பா… அவள…”

“இனி என்ன செய்யணும்னு மட்டும் யோசி. நீ எப்பயுமே தப்பா முடிவெடுத்ததில்ல. இப்போ நீ எது சொன்னாலும் நாங்க எல்லாரும் அதுக்கு ஒத்துக்குவோம்”

தந்தையை தீர்க்கமாய் பார்த்தவன், “நான் முதல்ல உங்க பிரெண்ட்கிட்ட பேசணும். நாளைக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கி குடுங்க” என்றான்.

“குமார திட்டி எதுவும் ஆகப் போறதில்ல விஷ்வா”

“டாக்டர் தான அவரு? முதல்ல அவருகிட்ட பேசுறேன். அப்பறம் என்னோட முடிவ சொல்லுறேன்”

எழுந்து செல்லும் மகனையே பார்த்தவர் தேநீரை பருகி மறு கையில் இருந்த மொபைலில் நண்பரின் எண்ணை அழுத்தினார்.

“உன் பையன் என்கிட்ட பேசணுமா? எதுக்குடா? இப்போ என்ன ஆச்சு?”

குமார் பதரியதை பார்த்த அவரின் மகன் விக்னேஷ் கடுப்பானான். “இவனுக்கெல்லாம் அப்பா எதுக்கு பயப்படுறாங்க?”

அவர் காலை கட் செய்ய காத்திருந்தவன், “அவன் உங்ககிட்ட பேசணும்னு சொன்னா பேச வேண்டியது தான? இதுக்கு எதுக்கு இப்படி பதறுறீங்க? நீங்க எதுக்குப்பா அவனுக்கு போய் பயப்படுறீங்க? உங்க பிரெண்டுக்கு கூட பயப்படுறதில்ல” என்றுக் கேட்டான்.

“சந்திரா மேல பாசமிருக்கு. என் பிரெண்ட். விஷ்வா… அது பயம் இல்ல விக்னேஷ். சந்திரா மேல இல்லாத அளவுக்கு விஷ்வா மேல எனக்கு மரியாதை இருக்குன்னு வெச்சுக்கோயேன்…”

“அப்படி என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு அவனுக்கு? என்னமோ பண்ணுங்க”

“என்னங்க சொல்லிட்டுப் போறான்?” கேள்விக் கேட்ட மனைவி உஷாவை புன்னகையுடன் பார்த்தவர், “விஷ்வாவ பத்தி பேசுனேன்” என்றார்.

“அதான் அவன் மூஞ்சி சரியில்லையா? ஆராதனா எப்படிங்க இருக்கா? ஒரு தடவ போய் பார்க்கலாம்னு சொன்னா கூட்டிட்டேப் போக மாட்டேங்குறீங்க… அவங்க வீட்டுல தப்பா நெனச்சுக்கப் போறாங்க”

“இதையெல்லாம் உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணுற நிலமையில அங்க யாரும் இல்ல உஷா. உன்னை அவளுக்கு அடையாளம் தெரியாது. எல்லாம் சரியானதும் கூட்டிட்டுப் போறேன்”

அடுத்த நாள் அவருடைய கன்சல்டேஷன் அறைக்குள் நுழைந்ததும் விஷ்வா கேட்ட முதல் கேள்வி, “எப்போ எல்லாம் சரியாகும்?” என்பது தான்.

“டெலிவரியே நாங்க சொன்ன தேதியில கரெக்டா நடக்கும்னு 100% கேரன்டீ கிடையாது விஷ்வா. எப்போ சரியாகும்னு நான் எப்படி சொல்லுறது? நீ முதல்ல உட்காரு… வா”

“எனக்கு என்னமோ எல்லாமே கை மீறி போயிட்டு இருக்க மாதிரி இருக்கு டாக்டர். நீங்க இப்போ சொல்லுறத வெச்சுதான் நான் எந்த முடிவா இருந்தாலும் எடுக்கணும்”

“ஹ்ம்ம்… சரி. மெடிக்கல் டெர்ம்ஸ் எல்லாம் சொல்லி உன்னை குழப்ப விரும்பல. இது மனோதத்துவ ரீதியாவும் சரி பண்ண வேண்டிய விஷயம். சொல்லு… அவ உங்க வீட்டுல இத்தன நாள் இருக்காளே… எப்படி? இது அவ வீடுங்குற நெனப்பு கொஞ்சமாவது இருக்குறதாலதான?”

“ம்ம்கும்… அவங்கம்மாகிட்ட கேட்டதுக்கு இங்க இருக்கவங்க உன் சொந்தம்னு சொன்னாங்களாம். அந்த பதில் அவளுக்கு ஓகேவா இல்லையாம். சோ இது ஏதோ தூரத்து சொந்தத்தோட வீடுன்னு அவ மைன்ட்ல பிக்ஸ் பண்ணிக்கிட்டா”

“ஷ்ஷ்ஷ்… அவ அப்பா அம்மாகூடவே தான் பேசுறாளா?”

“அவங்க அம்மா திட்டுனதுலேருந்து அவங்ககூட பேசுறது கொறஞ்சுடுச்சு. அத்தைக்கு அவ பண்ணுறது எதுவும் பிடிக்கல. மாமாகிட்ட அவ அதிகம் பேசுற மாதிரி தெரியல”

“சந்திரா?”

“அப்பாதான் எல்லாருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்குறாங்கன்னுத் தோணுது. பிரச்சனை எதுவும் வராம பார்த்துக்குறாங்க. அவ சொன்னா அப்பா முடியாதுன்னு சொல்லுறதில்ல. அதனால அப்பாகூட நல்லாதான் பேசுறா”

“சந்திரன் உனக்கு அப்பாவா இல்ல அவளுக்கு அப்பாவான்னு எனக்கே சந்தேகம் வந்திருக்கு. நல்ல விஷயம் தான். அம்முகிட்ட எப்படி நடந்துக்குறா?”

“ஆராதனாவோட பொழுதுபோக்கு அம்மு. அம்முகூட விளையாடுறதுல தான் டைம் பாஸ் ஆகுதுன்னு நினைக்குறா. அவ என் வைப் டாக்டர். என்னோட வைப்பா அவ எனக்கு திரும்ப வேணும்”

“அவ உன்கூடவே உன் வீட்டுல தான இருக்கா?”

“நேத்துலேருந்து என் கண்ணுலயே படாம ஓடி ஒளியுறா”

“அதுக்கு நான் என்ன பண்ணுறது விஷ்வா? நீங்க எல்லாத்தையும் அவ இஷ்டத்துக்கு விடுறீங்க. அவ மைண்ட்ல ஒவ்வொரு விஷயமா பிக்ஸ் பண்ணிட்டே வரா. நீங்களும் அவ கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாம இருந்தா போதும்னு விட்டுட்டே இருக்கீங்க. இதுல என் வைப் எனக்கு வேணும்னா? அது உன் கையில தான் இருக்கு. அவ மனசுல ப்ரெசென்ட் ஆழமா பதியணும். பாஸ்ட் கொஞ்சம் கொஞ்சமா நியாபகம் வரணும். தானா வரலாம். பட் நீ வர வை”

உடனே பதில் கூற வாயை திறந்தவன் சட்டென்று அமைதியானான். ஆராதனா கண் விழித்த அன்றிலிருந்து வேலை நிறுத்தம் செய்திருந்த மூளை வேக கணக்குகள் போட்டு அவசர முடிவுகளை எடுக்க உதவியது.

நிழலே நிஜமாய் – 13

“குமார் என்ன விஷ்வா சொன்னான்?”

சந்திரன் முன் வந்து கேள்வி கேட்டார்.

“உங்ககிட்ட எல்லாம் நிறைய பேச வேண்டி இருக்கு. இங்கயே இருங்க. முதல்ல நான் ஆராதனாவ பார்க்கணும். இன்னைக்கும் லீவ்…”

“எல்லாருக்கும் லீவ் சொல்லிட்டேன் விஷ்வா. யாரும் வர மாட்டாங்க. நம்ம மட்டும்தான்”

“ஈவ்னிங் எல்லாரையும் வர சொல்லுங்கப்பா. நான் பேசணும்”

“சொல்லிடலாம். பக்கத்துல இருக்க நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தான தங்கியிருக்காங்க… எப்போ கூப்பிட்டாலும் உடனே வந்துடுவாங்க விஷ்வா”

மாடிப்படிகளில் ஏறியவனின் வேகம் குறைந்துக் கொண்டேப் போனது. எதற்காக அவளை முதலில் காண நினைக்கிறோம் என்ற கேள்விக்கு விடையை தேடும் முயற்சியில் இருந்தான்.

அவன் சென்றதும், “மாப்பிள்ளை என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கும் சம்மதம்” என்றார் சரண்யா.

“இப்போ இருக்க நிலைமைக்கு எங்களால எதிர்த்து எதுவும் பேச முடியாது”

“நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இப்போ இப்படி பேசுறீங்க? அவன் என்ன சொல்லுறான்னு கேட்போம்”

சந்திரனுக்கும் கொஞ்சம் கலக்கமாக தான் இருந்தது.

அறை வாயிலில் சிறிது தயங்கி உள்ளே எட்டிப் பார்த்தான். ஆராதனா மெத்தையின் அருகில் தரையில் அமர்ந்திருந்தாள். நேற்று வீட்டிற்குள் நுழைந்தபோது அவளைக் கண்டது… அதன் பிறகு இப்போதுதான் பார்க்கிறான். மனம் லேசாகி இறகாகிப் போக அறைக்குள் வந்து சுவற்றில் சாய்ந்து நின்றான்.

ஆராதனா அவனைப் பார்த்தாள். அவன் தன்னோடு பேசுவான் என்று அவள் நினைத்திருக்க அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு அமைதியாகவே அறையைவிட்டு வெளியே வந்தான். அவன் அழைக்க அவசியமின்றி எழுந்து அவன் பின்னே நடந்தாள்.

பெற்றோர்களுக்கு எதிரில் அமர்ந்தான். ஆராதனா தயங்கி தயங்கி தாயின் அருகில் அமரப் போக தன் பக்கத்தில் சோபாவை கை காட்டி அவளை கண்களால் அழைத்தான். அதற்காகத்தான் அவளும் காத்திருந்தாளோ… சென்று அவனருகில் அமர்ந்தாள்.

“நான் இப்போ என்ன பேசுனாலும் அத அப்ஜெக்ட் பண்ணி நீ எதுவும் சொல்லக் கூடாது. கடைசியா நம்ம தனியா பேசலாம். ஓகே?”

“நீ ஏதோ முடிவெடுத்திருக்கன்னு தெரியுது. பட் அத அப்படியே நான் அக்செப்ட் பண்ணிக்கணும்னு நினைக்காத”

“ம்ம்…”

“என்ன விஷ்வா?”

“முதல் விஷயம். இன்னையிலிருந்து ரெண்டு மாசத்துக்கு நம்ம வீட்டுல வேலை பார்க்குற எல்லாருக்கும் லீவ் குடுத்துடுங்கப்பா. ரெண்டு மாச சம்பளம் அவங்களுக்கு குடுத்துடலாம்”

“அது பிரச்சனை இல்ல விஷ்வா… கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிப்பாங்க. நமக்கு தேவையானப்போ கூப்பிட்டுக்கலாம்”

“இல்லப்பா. யாரும் இங்க இருக்கக் கூடாது. அவங்கவங்க வீட்டுக்கோ சொந்த ஊருக்கோ போக சொல்லிடுங்க. நம்ம வீட்டுல நடக்குறது வெளில தெரியுறத நான் விரும்பல. அவங்களுக்கெல்லாம் இப்போவே கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கும். யாருக்கும் எந்த விளக்கமும் தர தேவையில்ல”

“அது… காரணம் சொல்லியாகணுமே… நான்…”

“அதுக்குதான்பா ஈவ்னிங் வர சொல்லுங்கன்னு சொன்னேன். நானே அவங்ககிட்ட பேசுறேன். நான் சொல்லிக்குறேன்”

“சரி விஷ்வா”

“ரெண்டாவது விஷயம். அத்தை, மாமா… நீங்க நாளைக்கு காலையில உங்க வீட்டுக்கு கிளம்புங்க”

இதை ஓரளவிற்கு எதிர்ப்பார்த்தே இருந்தனர். சரண்யா தலை குனிய, “சரி மாப்பிள்ளை. நாங்க கிளம்பிடுறோம்” என்றார் ஹரிகிருஷ்ணன்.

“ஹேய் இரு… அம்மா அப்பா இல்லாம என்னால…”

“நம்ம கடைசியா பேசுவோம்னு சொன்னேன் ஆராதனா. அமைதியா இரு”

“இதுக்கு என்னால ஒத்துக்கவே முடியாது”

“ஷ்ஷ்ஷ்”

உதட்டின் மீது ஆள் காட்டி விரலை வைத்து கூறியவன் திரும்பி சந்திரனை பார்த்தான்.

“அப்பா… நீங்க… நீங்க கொஞ்ச நாள் கெஸ்ட் ஹவுஸ்ல போய் இருக்க முடியுமா?”

கேள்வியை கேட்டு முடித்தபோது அவன் தலை குனிந்திருந்தான். மற்ற விஷயங்களை சொன்னது போல் சுலபமாக இதை அவனால் சொல்ல முடியவில்லை.

“சரிப்பா”

“மாப்பிள்ளை… நீங்க சொல்லுற எல்லாத்தையும் ஏத்துக்குறதுன்னு முடிவோடதான் இருந்தோம். ஆனா இந்த விஷயம்…”

“இல்ல மாமா. அப்பா கெஸ்ட் ஹவுஸ்ல இருக்குறது தான் நல்லது”

“அதில்ல மாப்பிள்ளை… சம்பந்தி வீட்டுல இருக்க வேண்டாம்னு நீங்க நெனச்சா… அவங்கள எங்களோட எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுறோம். வயசான காலத்துல தனியா இருந்து எப்படி சமாளிப்பாங்க. ப்ளீஸ் இதுக்கு மட்டும் சரின்னு சொல்லுங்க”

சந்திரனை பார்த்தான். அவர் சற்று தயங்கி, “நான் போறேன் விஷ்வா” என்றார்.

நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டவன், “கடைசியா… அம்மு…” என்றுக் கூற அனைவரின் முகத்திலும் வேதனையின் சாயல்.

“அம்முவையும் கொஞ்ச நாள் நீங்க தான் பார்த்துக்கணும். பார்த்துப்பீங்களா?”

“எங்க பேத்திய பார்த்துக்க எங்களுக்கு என்ன மாப்பிள்ளை? எங்கக் கூடவே அவள வெச்சுக்க ஆசைதான். நாங்க பார்த்துக்குறோம்”

கூற நினைத்ததையெல்லாம் எப்படியோ சொல்லி முடித்துவிட்ட நிம்மதியில் திரும்பி ஆராதனாவை பார்த்தான். பல்லை கடித்தபடி அமர்ந்திருந்தவள், “இப்போ நம்ம பேசலாமா? வா” என்றுக் கூறி எழுந்து அவன் அறை நோக்கி நடந்தாள்.

“என்ன தைரியத்துல நான் உன்கூட தனியா இந்த வீட்டுல இருக்க ஒத்துப்பேன்னு நீ நெனச்ச?”

கதவை தாழிட்டவன் சாவதானமாய் நடந்து வந்து, “நீ ஒத்துக்குவன்னு நான் நெனைக்கலையே… சண்டை போடுவன்னு தான் நெனச்சேன்” என்றான்.

“நீ யாரு? எதுக்காக நான் இந்த வீட்டுலயே இருக்கணும்? எந்த தைரியத்துல என் அப்பா அம்மாவும் இல்லாம நான் உன் கூட தனியா இருக்கணும்?”

“எக்ஸாக்ட்லி… இந்த கேள்விக்கெல்லாம் உனக்கு பதில் தெரியணும்னா நீ என்னோட தனியா இருந்துதான் ஆகணும்”

“நோ வே. என்னால முடியாது. நானும் என் அப்பா அம்மாகூடவே போறேன்”

“விட மாட்டேன்”

“நீ என்ன விடுறது? நான் போறேன்”

அவ்வளவு நேரம் பொறுமையாய் பேசிக் கொண்டிருந்தவன் சத்தமாக கத்தியவளை இன்னும் நெருங்கி வந்து தன் கைகளால் அவள் தோள் பற்றினான்.

“நான் கேட்குற கேள்விக்கெல்லாம் நீ தெளிவா பதில் சொல்லிட்டன்னா உன்னை போக விட்டுடுறேன்”

“கைய எடு முதல்ல”

“நீ என்ன திமுருனாலும் உன்னால என் பிடிலேந்து தப்பிச்சுப் போக முடியாது. ஒழுங்கா நான் சொல்லுறத கேளு. விட்டுடுறேன்”

“வலிக்குது விஷ்வா… விடு”

“சொல்லுறத கேளு”

அவள் போராட்டம் சட்டென்று நின்றது. என்ன சொன்னாலும் எவ்வளவு திமிரினாலும் அவன் சொன்னது போல் அந்த இரும்பு பிடியிலிருந்து தப்ப முடியாது தான். அமைதியாக அவனை பார்த்தாள்.

“ஹாஸ்பிட்டல்ல எங்க வீட்டுக்கு போகணும்னு சொன்னப்போ நீ ஆர்ப்பாட்டம் பண்ணல…”

“நான் வர மாட்டேன்னு தான் சொன்னேன்”

“என்னை வெளில போக சொல்லி அந்த கத்து கத்தி, நான் வெளில போனதுக்கு அப்பறம்தான் அடங்குன. அப்படி இந்த விஷயத்துக்கும் ஆர்ப்பாட்டம் பண்ணியா?”

“…”

“சரி உங்க அம்மா சொன்னாங்க. நீயும் வந்த. இந்த ரூம்குள்ள என் கூட தனியா வந்தியே… எப்படி?”

“எனக்கு அம்மு பத்தி கேட்க வேண்டியிருந்துது. வேலைக்காரங்க முன்னாடி கேட்க வேண்டாமேன்னு வந்தேன்”

“ஓகே. நான் கதவ லாக் பண்ணிட்டுதான் உன்கிட்ட பேசுனேன். அப்போன்னு இல்ல… நீ எப்போ இந்த ரூம்குள்ள வந்தாலும் நான் டோர் லாக் பண்ணிடுவேன். இப்பயும் லாக் ஆகி தான் இருக்கு. அதுக்கு என்னை நீ கேள்விக் கேட்டதில்ல. ஏன்?”

“அது… நம்ம பேசுறது வெளில கேட்கக் கூடாதுன்னு…”

“அப்படியா? நீ பர்ஸ்ட் டைம் இந்த ரூம்குள்ள வந்தப்போ உன் முன்னாடி தான் நான் ஷர்ட் கழட்டுனேன். ஞாபகம் இருக்கா? அப்போ உன்னை பொருத்தவரைக்கும் நான் யாருன்னேத் தெரியாத தர்ட் பர்சன். நீ என்னை திட்டல… திரும்பி நிக்கல…”

“அ… அது… நீ டிரஸ் சேஞ்ச் பண்ணா…”

“இந்த சிச்சுவேஷன்ல என்னை தவிர வேற யாரோ ஒரு தர்ட் பர்சன வெச்சு இமாஜின் பண்ணி பாரு… யாரோ… உனக்கு முன்ன பின்ன தெரியாத ஒரு ஆள்… நீ இப்படி தான் ரியாக்ட் பண்ணியிருப்பியா?”

“வேற… நான் எதுக்கு விஷ்வா அப்படி யோசிக்கணும்?”

“சோ உன்னால இப்படி ஒரு சிச்சுவேஷன்ல வேற ஒருத்தர இமாஜின் கூட பண்ணி பார்க்க முடியல. ஒத்துக்குறியா?”

பதில் கூறாமல் அவனை முறைத்தாள்.

“நான் கேட்ட எந்த கேள்விக்கும் நீ பதில் சொல்லணும்னு நெனச்சு நான் இதெல்லாம் கேட்கல. இன்னும் நிறைய விஷயம் இருக்கு ஆராதனா. அட்லீஸ்ட் இதெல்லாம் வெச்சு சொல்லு… உனக்கு என் மேல சுத்தமா நம்பிக்கை இல்லையா?”

“அப்… அப்படியெல்லாம் இல்ல”

“நான் உன்ன எந்த விதத்துலயும் கஷ்டப்படுத்த மாட்டேன். இதுல உனக்கு சந்தேகம் இருக்கா?”

“சந்தேகம்னு… என்னால ஷூரா சொல்ல முடியல”

“100% நம்பிக்கை வர மாதிரி இனி நான் நடந்துக்குறேன். அதுக்கு எனக்கு ஒரு சான்ஸ் குடு. என்கூட இந்த வீட்டுல நீ தனியா இருக்கணும்”

“எப்படி விஷ்வா உன்னால இப்படி கேட்க முடியுது? இதுக்கு எப்படி நான் ஒத்துக்க முடியும்? யாருமே இல்லாம… என்னால முடியாது விஷ்வா. நீ இதுவரைக்கும் சொன்ன எல்லா விஷயத்தையும் உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கிட்டு உன்னை நான் நம்பணும்னா நான் உன்கூட தான் இருந்தாகணும். அது எனக்கு புரியாம இல்ல. அதுக்காக… என் அம்மா மட்டும் இங்க இருக்கட்டும்”

“அத்தைக்கு அவங்க பொண்ணு லைப் எங்க பாழாகிடுமோன்னு பயம். உன் மேல இருக்க அக்கறையில உன்னை திட்டிட்டே தான் இருப்பாங்க”

அவள் முகம் தொங்கிவிட்டது. “அம்முவுக்கு அடிப்பட்டப்போவே ரொம்ப திட்டிட்டாங்க”

“இனி அப்படி திட்டக் கூடாதுன்னு சொல்லிட்டேன்”

“நீ சொன்னியா? அம்மாகிட்டயா? எப்போ?”

“சிங்கப்பூர் கிளம்புறதுக்கு முன்னாடி”

தன் தாயை கூட தட்டிக் கேட்க ஆள் இருக்கிறதென்ற கர்வம். அவன் தனக்காக பேசியிருக்கிறான் என்ற சந்தோஷம். அவன் கண்களை கூர்ந்து கவனித்தாள்.

“சரி அம்மா வேண்டாம். அப்பா இருக்கட்டும்”

“மாமா இதுக்கு ஒத்துக்குவாங்களா? கண்டிப்பா அவங்க ரெண்டு பேருமே இருக்க மாட்டாங்க”

அவன் சொல்வது உண்மை தான். தங்க சம்மதிக்க மாட்டார்கள். அப்படியே தங்கினாலும் தனக்காக பரிந்து பேச மாட்டார்கள். தனக்கென்று யாருமே இல்லையா?

“சந்திரன் அங்கிள்? அவங்க இருப்பாங்கல்ல? உன் அப்பாதான? அங்கிள் இங்க இருக்கட்டும். நானும் இருக்கேன்”

“அப்பா…”

“இது தான் என் முடிவு. என்னால உன்கூட தனியா இருக்க முடியாது. எனக்கு சப்போர்ட் பண்ணுற யாராவது இங்க இருக்கணும். அது என் அப்பாவா இருந்தா என்ன? சந்திரன் அங்கிளா இருந்தா என்ன?”

“என் அப்பாவ உன் அப்பாவுக்கு சமமா யோசிக்குற அளவுக்கு முன்னேறிருக்கியே… சந்தோஷம். சரி. அப்பாவ இங்க இருக்க சொல்லுறேன். வேற?”

“நான் என் இஷ்டத்துக்குதான் இருப்பேன்’

“நீ என்கூட, என் பக்கத்துல இருந்தா போதும்”

“அதான் உன் பக்கத்துலயே இருக்கேன்னு சொல்லிட்டேனே… இன்னும் என்ன?”

சிரித்தான். நக்கலாக சிரிக்கிறானோ? அவன் சிரிப்பிற்கு வேறெதுவும் அர்த்தம் உள்ளதா? கண்டறிய முடியாமல், “நான் போலாமா?” என்றுக் கேட்டாள்.

“போ”

இப்போதும் அதே சிரிப்பு. என்னவாக இருக்கும்? விடைக்கான தேடலுடன் வெளியே வந்தாள். அவள் பின்னால் வந்தவன் மற்ற மூவரும் இன்னும் ஹாலிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டான். இதுவும் நல்லதற்குதான்.

“அப்பா… நீங்க இங்கயே இருங்க. நாளைக்கு ஏதாவது பிரச்சனை ஆனாலும் பெரியவங்க யாரும் இல்லாம எல்லாமே நாங்களே முடிவு பண்ண மாதிரி ஆகிடக் கூடாது. சோ நீங்க இங்கயே இருங்க. உங்களுக்கு இதுல ஏதாவது…”

“இல்ல மாப்பிள்ளை. எங்களுக்கும் அந்த கவலை இருந்துது. நீங்க சொல்லுறது சரிதான். சம்பந்தி இங்க இருக்கட்டும்”

“அம்முவ உங்கக்கூட அனுப்பி வைக்குறேன் மாமா”

“நாங்கப் பார்த்துக்குறோம்”

“நான் தினம் வந்துப் பார்த்துக்குறேன்”

“எப்போ வேணா வாங்க”

எப்படி முடியுமோ என்று நினைத்து பயந்தது எந்தவித சிக்கலுமின்றி முடிந்த நிம்மதி.

“அம்மு வந்ததும் அவகிட்ட நானே சொல்லிடுறேன். அவ வரதுக்கு முன்னாடி மத்தவாங்கள கெஸ்ட் ஹவுஸ்லேந்து வர சொல்லிடுங்கப்பா”

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் முன்னால் வந்து நின்ற வேலையாட்களிடம், “ஒரு ரெண்டு மாசம் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்குப் போய் இருங்க. சம்பளப்பணம் அப்பா இப்போ குடுத்திடுவாங்க. எப்போ திரும்பி வரணுமோ அப்போ கால் பண்ணி சொல்லுறேன்” என்றான்.

பாண்டி மட்டும் தயங்கி தயங்கி, “நாங்க ஏதும் தப்பு பண்ணிட்டோமா?” என்றுக் கேட்க, “இல்ல. எங்களுக்கு கொஞ்ச நாள் தனியா இருக்கணும்” என்று மட்டும் கூறி சென்றுவிட்டான்.

அம்முவை வீட்டில் கூட்டி வந்துவிட்டதும் கார் சாவியை கொடுத்துவிட்டு அருளும் கிளம்பிச் சென்றான்.

தீபாலியை சரண்யா குளிப்பாட்டிக் கொண்டிருக்க மகளிடம் எப்படி கூறுவதென்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தாள் ஆராதனா.

“இப்படி எல்லாரையும் அனுப்பி வெச்சுட்டு நீயும் நானும் மட்டும் இருக்கலாம்னு சொல்லுறியே… இது என்ன லிவிங் டுகெதரா?”

“ஷ்ஷ்ஷ்… போயிடு… உன் பஞ்சாயத்து எதுவா இருந்தாலும் நாளைக்கு தனியா இருக்கும்போது வெச்சுக்கோ… இப்போ என்னை கடுப்பேத்தாத. நான் அம்முகிட்ட பேசணும்”

“மம்மி…”

விஷ்வா கூறியப் பிறகு அம்மு ஆராதனாவை அழைக்கும் அழைப்பு மாறியிருந்தது. கத்தியபடி ஓடி வந்தவளை தூக்கி மடியில் இருத்திக் கொண்டான் விஷ்வா.

“அம்மு… டாடி சொன்னா கேப்பீங்கதான? அம்மு கொஞ்ச நாள் இந்த வீட்டுல இருக்க வேண்டாம்டா… நீங்…”

“ஏன் டாடி? நான் இங்க இருக்க கூடாதா? அம்மு எங்க போவா? நான் போ மாட்டேன்”

அழுதபடி அவன் மடியிலிருந்து இறங்கி ஓடிவிட்டாள். எப்படியெல்லாமோ ஆரம்பித்து விஷயத்தை விளக்க வேண்டுமென்று எண்ணியிருந்தவன் ஆராதனா சற்று முன் கேட்ட கேள்வியில் குழம்பி பேசிய வார்த்தைகள். குழந்தை அழுதப் பிறகே பேசியது தவறென்றுப் புரிந்தது. மனைவியை முறைத்தான்.

நிழலே நிஜமாய் – 14

விஷ்வா கூறியதையும் தீபாலி அழுததையும் பார்த்த ஆராதனா, “ஏன் விஷ்வா அப்படி சொன்ன?” என்றுக் கேட்டாள்.

“உன்னாலதான். எல்லாம் உன்னாலதான். ச்ச… தயவுசெஞ்சு மார்னிங் வரைக்கும் எதுவும் பேசாத, கேட்காத. ப்ளீஸ்”

தவறு முழுவதும் தன்னுடையது என்று ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை என்றாலும் இது போன்ற இக்கட்டுகளை தவிர்க்க பேசாமல் இருப்பதே சிறந்தது என்று முடிவெடுத்தாள்.

தீபாலியை தேடிச் சென்றான் விஷ்வா. வீடு முழுவதும் தேடியும் அவள் எங்கும் இல்லாததால் வெளியே வந்தான். வராண்டாவின் படியில் இரு கைகளையும் கன்னத்தில் வைத்து அமர்ந்திருந்தாள். அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. இருப்பினும் தான் பேசியது தவறு, அதற்காக கோபமாக இருக்கும் மகளை சமாதானம் செய்வது தன் கடமையென்று அவளருகில் சென்றான்.

“ஹ்ம்ம்…”

முகத்தை திருப்பி அமர்ந்தாள். மூன்று வயது குழந்தையின் கோபம். தூக்கி கொஞ்ச துடித்த மனதை அடக்கி, “அம்மு என்னை பார்க்க மாட்டீங்களா?” என்றுக் கேட்டான்.

“மாட்டேன்”

“டாடி பாவம் இல்ல?”

“இல்ல. வீட்ட விட்டு போ சொல்றீங்க… அம்மு பாவம் இல்ல?”

“அம்மு… இப்படியெல்லாம் பேசக் கூடாது. டாடி அப்படியா சொன்னேன்?”

“அப்போ நான் மம்மிகூடயும் டாடிகூடயும் இருக்கவா?”

ஏக்கமாய் கேட்டவளை தூக்கி மடியில் அமர்த்தி தலை கோதினான்.

“இல்லடா… கொஞ்ச நாள் அம்மு எங்ககூட இருக்க வேண்டாம்”

“ஹாஸ்டல்ல சேக்கப் போறீங்களா? நான் சமத்தா இருக்கேன் டாடி”

“ஹேய்… ஹாஸ்டல் எல்லாம் இல்லடா அம்மு. பாட்டி வீட்டுலதான் இருக்கப் போறீங்க”

“பாட்டி வீட்டுலையா?

“ஆமா… லீவுக்கு பாட்டி வீட்டுக்குப் போகணும்னு சொன்னீங்கல்ல? இப்போ கொஞ்ச நாள் பாட்டி வீட்டுல இருப்பீங்களாம்… டாடி டெய்லி வந்து பார்த்துக்குவேனாம்”

“டெய்லி வரணும்… ப்ராமிஸ்?”

அவள் குட்டி கை மீது தன் கை வைத்து, “ப்ராமிஸ்” என்றான்.

“அப்போ மம்மி?”

“வருவாங்க. பட் டெய்லி இல்ல. மம்மி ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்கல்ல… அவங்களுக்கு இன்னும் உடம்பு சரி ஆகலடா”

“திரும்ப ஊசி போடுவாங்களா?”

“ஊசி இல்ல. ரெண்டு அடி வேணா போடலாம். வர வர சொன்ன பேச்சையே கேட்க மாட்டேங்குறாங்க”

“ஆமா டாடி… மம்மி பேட் கர்ள் ஆகிட்டாங்க. நம்ம பேசாம அவங்கள கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுடலாம்”

“வேணாம் வேணாம்… டாடியே பார்த்துக்குறேன்”

“இவ்ளோ நாள் எங்கப் போனீங்க?”

“சிங்கப்பூர் போனேன். வேலை இருந்துதுடா”

“எனக்கு கிப்ட் வாங்கிட்டு வரேன் சொன்னீங்க? காணும்?”

“அச்சச்சோ… மறந்தேப் போயிட்டேன் அம்மு… நம்ம போய் என்ன கிப்ட்னு பார்க்கலாமா? உள்ளப் போவோமா?”

“சீக்ரம்… பாஸ்ட் பாஸ்டா போலாம்”

ஆராதனாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. பக்கத்து அறையில் சரண்யா தங்களுடைய உடைமைகளை பேக் செய்துக் கொண்டிருக்க ஹரிகிருஷ்ணன் அவருக்கு உதவினார். அவர்களுடன் இருக்க விரும்பாமல் தந்தை எப்போதும் படுத்து உறங்கும் அறைக்குள் வந்துவிட்டாள்.

“இப்போ அங்க போனா அம்மா ஏதாவது சொல்லுவாங்க. கீழப் போய் அங்கிள் எதுவும் கேட்டா… இந்த விஷ்வா பாட்டுக்கு எல்லாத்தையும் சொல்லிட்டு அவன் பொண்ண கொஞ்ச போயிட்டான். எவ்வளவு நேரம்… என்னை காணும்னு தேடுறானா? அவன் தேடலன்னா என்ன? நான் போறேன்”

வேகமாக எழுந்து கீழே இறங்கி வந்தவள் நேரே விஷ்வாவின் அறைக்குள் சென்றாள்.

“ஹைய் பார்பி… சூப்பர் டாடி…”

“இந்த பாக்ஸ்ல என்ன இருக்குன்னுப் பார்க்கலையா?”

“என்ன இருக்கு? சாக்லேட்ஸ்… ஜாலி….”

கத்தி மெத்தை மீது குதித்து ஓடி வந்து தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டாள் தீபாலி. “எல்லாமே அம்முக்கு தான்…” மகளை தூக்கி சுற்றியவன் ஆராதனாவை பார்த்ததும் அப்படியே நின்றான்.

இப்படியொரு பந்தத்தில் தானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். இந்த சந்தோஷம் தனக்கும் கிடைக்க வேண்டும். விஷ்வா தீபாலியோடு மட்டும் எதற்கு இப்படி விளையாடுகிறான்? தனக்கென்றும் நேரம் ஒதுக்க வேண்டும்.

“உள்ள வா. ஏன் அங்கயே நிக்குற?”

பெரியவர்களை அனுப்புவது சரி… இந்த சிறு குழந்தையையும் எதற்காக வீட்டிலிருந்து அனுப்ப வேண்டுமென்ற எண்ணம் இப்போது தந்தையையும் மகளையும் கண்டப் பிறகு மாறியிருந்தது. “யாரும் தேவையில்ல. எல்லாரும் போகட்டும். நான் முதல்ல தெளிவாகணும்”

“என்ன யோசிக்குற?”

“மம்மி எப்பயும் இப்டி யோசிச்சுட்டே இருக்காங்க. பேசவே மாட்றாங்க”

“கம்ப்ளையிண்ட பத்தியா? ஏன் மம்மி பேச மாட்டேங்குறீங்க?”

இப்போதும் அவன் தீபாலியை தூக்கி வைத்திருப்பதை கவனித்தவள், “எனக்கு பேச எதுவும் இல்ல” என்றாள்.

“ஓகே. அப்போ ரைம்ஸ் சொல்லிட்டே டான்ஸ் ஆடுங்க”

“அதான… ஆடுங்க பார்க்கலாம்…”

“ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து என்னை வம்பிழுக்குறத நிறுத்துங்க. நீங்க அவள இறக்கி விடுங்க. போய் ஹோம்வர்க் பண்ணு போ அம்மு”

“ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. எப்போ பாரு கத்திக்கிட்டே இருக்காங்க ச்ச…”

அலுத்துக் கொண்டபடி தீபாலி விஷ்வாவின் கையிலிருந்து இறங்கி செல்ல அவனோ அசையாமல் நின்றான்.

“நீ எதுக்கு இப்படி பார்க்குற?”

“இப்போ நீன்னு சொல்லுற?”

“உனக்கு நான் எப்போ மரியாதை குடுத்தேன்?”

“கொஞ்ச நேரம் முன்னாடி அம்முவ இறக்கி விடுங்கன்னு சொன்னியே”

“இறக்கி விடுங்கன்னு சொன்னேனா? இல்ல… இல்லையே… இறக்கி விடுன்னு தான சொன்னேன்?”

“இல்ல இப்போ…”

“விஷ்வா”

சந்திரன் அழைக்கும் குரல் கேட்க அவளிடம் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் நகர்ந்தான். தான் என்ன பேசினோம் என்ற யோசிக்க முயன்றாள் ஆராதனா.

“நீ சொன்ன மாதிரி சம்பளம் குடுத்து எல்லாரையும் ஊருக்கு அனுப்பியாச்சு. ஆனா இப்போ வீட்டு வேலை எல்லாம் யார் செய்வா? அத விடு… சாப்பாடு?”

“கொஞ்ச நாளைக்கு நம்மதான்பா செய்யணும். ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே ஆராதனாவுக்கு சமைக்க தெரியும்னா பிரச்சனை இல்ல. இங்க வந்ததுலேருந்து அவ தனியா சமச்சதே இல்லையே… சோ அவளுக்கு சமைக்க தெரியுமா தெரியாதான்னு நமக்கு தெரியாது. பாக்கலாம். அப்படி அவளுக்கு சமையலும் மறந்து போச்சுன்னா…”

“சரி விடு. எப்படியாவது சமாளிப்போம். நீ அம்முவோட திங்க்ஸ் எடுத்து வைக்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணு விஷ்வா”

“அத்தை அவங்க திங்க்ஸ் பேக் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க கீழ வந்ததுக்கு அப்பறம்…”

“அம்முகிட்ட சொல்லிட்டியா?”

“சொல்லியாச்சுப்பா. லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போகணும்னு சொன்னியே இப்போ போன்னு சொல்லியிருக்கேன். அழ மாட்டா”

“எனக்குதான் எப்படி அம்முவ விட்டுட்டு இருக்குறதுன்னு தெரியல. ஹ்ம்ம்… இப்படியெல்லாம் நடக்கும்னு நமக்கு என்ன தெரியும்”

பெருமூச்சு விட்டபடி துவண்டு போய் செல்பவரை பார்த்தவனுக்கு பரிதாபமாக இருந்தது. பேத்திதான் அவரின் விளையாட்டு தோழி. எப்படி பிரிந்து இருப்பார்?

“ஆராதனா”

அன்னையின் அழைப்பில் திடுக்கிட்டவள் தான் இன்னும் விஷ்வாவின் அறைக்குள்ளேயே நிற்பதை உணர்ந்து வெளியே வந்தாள்.

மௌனம். ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க தயக்கம். ஆராதனா கை நகத்தை ஆராய்ந்தாள். சரண்யா புடவை முந்தியை அளந்தார்.

ஒரு முடிவுடன் நிமிர்ந்தவர், “என் கூட வா” என்றழைத்து டைனிங் ஹாலிற்கு சென்றார். அன்னையருகில் அமர்ந்தாலும் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு. விஷ்வா இப்பொழுது உடனிருக்க வேண்டுமென்று விரும்பினாள்.

“கொஞ்ச நாளைக்கு நீ இந்த வீட்டுல தனியா இருக்கப் போற ஆராதனா. தனியான்னா நீ மட்டும் இல்ல… உன் புருஷன்கூட. அம்முவையும் நாங்க கூட்டிட்டுப் போயிடுவோம். இது உனக்கு தண்டனை இல்லடா. கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நெனச்சு உன்னையும் இப்போ எங்களோட கூட்டிட்டுப் போக முடியும். ஆனா என்னைக்காவது ஒரு நாள் எல்லாம் நியாபகம் வரும்போது நீ கேட்குற கேள்விக்கு எங்களால பதில் சொல்ல முடியாமப் போயிடும் ஆராதனா.

நீ இந்த வீட்டுல ரொம்பவே சந்தோஷமா இருந்த. இனியும் அப்படிதான் இருப்ப. உனக்குப் பிடிக்காத எதையும் மாப்பிள்ளை செய்ய மாட்டாங்க. எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு நீ இருந்துதுதான் ஆகணும்னு சொல்லல. எதையும் எடுத்தெறிஞ்சு பேசாம கொஞ்சம் பொறுமையா சொல்லு.

உனக்கும் மாப்பிள்ளைக்கும் சம்பந்தமில்லன்னு நீ நெனச்சா… உனக்காக மாப்பிள்ளை எதுக்கு அவங்க பெத்த பொண்ண பிரிஞ்சு இருக்கணும்? யோசி.

எப்போ வேணா கால் பண்ணு. சம்பந்தி இருக்காங்க. நானும் அப்பாவும் என்ன செய்வோமோ அததான் சம்பந்தியும் உனக்கு செய்வாங்க. வயசுல பெரியவங்ககிட்ட என்னைக்கும் உன் கோபத்த காமிச்சுடாத.

நிறைய அட்வைஸ் பண்ணுற மாதிரி தோணும். இன்னைக்கு இதெல்லாம் சொல்லலன்னா நீ நடந்துக்குற விதத்தால உன் லைப் கேள்விக் குறியாகிடக் கூடாதுடா. ஹ்ம்ம்… கடைசியா ஒண்ணு மட்டும் சொல்லுறேன் ஆராதனா… என்னைக்கு எங்களுக்கு கால் பண்ணி இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்க முடியாதுன்னு தீர்மானமா நீ சொல்லுறியோ… அன்னைக்கு உன்னை வந்து கூட்டிட்டுப் போக நாங்க தயங்க மாட்டோம்”

“உப்ப்… அப்பாடா… நல்லவேளை திட்டாம எழுந்து போயிட்டாங்க. இனி இங்க உட்கார்ந்திருக்கக் கூடாது”

வேக வேகமாக நடந்தவள் எங்கு செல்வதென்று தெரியாமல் அம்முவின் அறைக்குள் நுழைந்தாள். விஷ்வா கப்போர்டில் எதையோ எடுத்துக் கொண்டிருக்க அம்மு ஒரு சிறிய பேகினுள் அவளுடைய புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“நான் ஹெல்ப் பண்ணவா?”

இருவரும் திரும்பி அவளை பார்த்தனர். அந்த கேள்வி யாருக்கென்ற குழப்பம். யார் பதில் கூறுவதென்று ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?”

“அந்த ட்ராலி கொஞ்சம் எடு”

“என் கலர் பென்சில் காணும் மம்மி”

இம்முறை தந்தையும் மகளும் ஒருசேர கூற முதலில் ட்ராலியை எடுத்து மெத்தை மீது வைத்தவள், “அன்னைக்கு நம்ம சேர்ந்து கலர் பண்ணோமே… உன் ட்ரா உள்ள இருக்கும்” என்று கலர் பென்சிலை எடுத்து நீட்டினாள்.

“அம்முவோட ஏஞ்சல் ட்ரெஸ் எங்க ஆராதனா? அது கண்டிப்பா வேணும்னு அடம் பிடிக்குறா… நானும் தேடி தேடி பார்க்குறேன்…”

“மேல் ஷெல்ப்ல…”

“மம்மி இந்த கலரிங் புக் பினிஷ் பண்ணிட்டேன். புதுசு தாங்க”

“அவளோட பிரஷ் பாத்ரூம்லேந்து எடுத்துட்டு வா”

“என்னோட பால் கண்டிப்பா வேணும். அது இல்லாம நான் எப்டி விளையாடுவேன்? எடுத்து வைங்க மம்மி”

“ஆராதனா…”

“நிறுத்துறீங்களா ரெண்டுப் பேரும். யப்பா முடியல… இப்படியா மாத்தி மாத்தி வேலை வாங்குவீங்க?”

இருவருமே ஏதோ கூற வர சரண்யா உள்ளே வந்தார். “பேக் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? நான் பார்த்துக்குறேன்” விட்டால் போதுமென்று முதல் ஆளாய் விஷ்வா வெளியே ஓடிவிட்டான். அதென்னவோ அவனில்லாமல் தாயின் அருகில் இருக்க மனம் முரண்டியது. அவர் கவனிக்காதபொழுது அவளும் வெளியே வந்துவிட்டாள்.

இரவு யாருக்கும் உறக்கம் வரவில்லை. தீபாலிகூட நீண்ட நேரம் விஷ்வாவின் மடியிலேயே அமர்ந்திருந்தாள். மகள் கண் விழித்திருப்பது வருத்தம் தான். ஆனால் அவளை உறங்க சொல்ல மனம் வரவில்லை.

“அம்மு தூங்கும்மா… மணிய பாத்தியா?”

“போங்க தாத்தா… இன்னும் கொஞ்ச நேரம்”

“டைம் ஆச்சுடா… தூக்கம் வரலையா?”

“ம்ம்ஹும்”

“நான் தூங்க வைக்குறேன் மாமா”

“அப்போ மம்மியும் வரணும்”

ஆராதனாவை பார்த்தான். அவளுக்கும் இன்று ஏனோ உறக்கம் வரவில்லை. இந்த வீட்டிற்கு வந்த அன்றிலிருந்து சரியான உறக்கம் இல்லைதான். இருப்பினும் இன்று மனதின் சஞ்சலங்கள் அதிகரித்திருந்தன. விஷ்வாவிடமிருந்து அம்முவை தூக்கிக் கொண்டாள்.

தாயும் தந்தையும் இரு பக்கமும் அமர்ந்திருக்க கொட்ட கொட்ட விழித்திருந்தாள் தீபாலி. “தூங்குடா அம்மு. ரொம்ப லேட் ஆகிடுச்சு”

“நீங்க டெய்லி பாட்டி வீட்டுக்கு வருவீங்கல்ல?”

“அதான் ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்ல? கண்டிப்பா வருவேன்”

“மம்மி?”

“ஹான்… நான்… நானும் அடிக்கடி வரேன் அம்மு”

“ஓகே”

வல கையில் விஷ்வாவின் கையையும் இட கையில் ஆராதனாவின் கையையும் பிடித்தபடி கண்களை மூடினாள்.

தன் குடும்பம் நிறைவுப் பெற்றுவிட்டதாகப்பட்டது. மனைவி, மகளுடன் எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்ற தவிப்பு. அம்மு உறங்கியப் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஆராதனா அம்முவின் நெற்றி வருடியபடி அங்கேயே அமர்ந்திருந்தாள். நேரமாகிவிட்டது. உறக்கமும் வந்தது. அவளை விட்டு செல்ல மனமில்லை. அது குழந்தைகள் உறங்கும் சிறிய கட்டில். மெத்தையிலிருந்து இறங்கி தரையில் அமர்ந்து ஒரு கையை அம்முவின் மீது வைத்து ஒரு கையை மடக்கி தலைக்கு வைத்து உறங்க ஆரம்பித்தாள்.

காலை நேரம் வீட்டில் ஒரே பரப்பரப்பு. அருளும் அவன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுவிட டிராப் செய்வதாக கூறிய விஷ்வாவிடம் வேண்டாமென்றுக் கூறி தங்கள் வீட்டிலிருந்து டிரைவரை கார் எடுத்து வர சொல்லியிருந்தார் ஹரிகிருஷ்ணன்.

“டாடி டெய்லி வரணும்” என்று ஆயிரமாவது முறையாக சொல்லிச் சென்றாள் அம்மு.

எதுவும் பேசாமல் ஆராதனாவை ஆணைத்து விடுவித்தார் சரண்யா. தாயை விட்டுப் பிரியப் போவது அந்த அணைப்பில் உரைத்தது. “வரேன்டா” என்று ஹரிகிருஷ்ணன் கூறியபோது அவளுக்கு தொண்டையை அடைத்தது.

இனி தன் பெற்றோர் உடன் இருக்க மாட்டார்கள். யாரென்றுத் தெரியாத, சம்பந்தமில்லாத ஒருவனுடன் இந்த வீட்டில் தனித்திருக்க வேண்டும். கார் புறப்பட்ட சமயம் அவள் கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீர் நிலம் தொட்டது.

“நம்ம ரிசப்ஷன் முடிஞ்சு மண்டபத்திலிருந்து கிளம்பின அன்னைக்கு நீ இப்படி தான் அழுத”

“ஹான்?”

“நம்ம கல்யாணம் முடிஞ்சு இந்த வீட்டுக்கு வரப்போ நீ இப்படிதான் அழுத”

இத்தனை நாட்கள் இல்லாமல் விஷ்வாவின் பார்வையில் ஏதோ வித்தியாசம். பெற்றோரை பற்றிய சிந்தனை பின்னுக்கு தள்ளப்பட அது என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள்.

நிழலே நிஜமாய் – 15

முன்பிருந்ததை விட வீடு இன்னும் அமைதியாக இருந்தது. சுற்றி பலர் இருந்தபொழுதே ஆராதனாவிற்கு தான் தனித்து விடப்பட்டது போன்றதொரு உணர்வு. இப்போது அதை அப்படியே முழுதாக நம்பினாள்.

விஷ்வா அவனுடைய அறைக்குள் சென்றுவிட்டான். சந்திரன் சிறிது நேரம் அமர்ந்து அவளுடன் பேசியிருந்துவிட்டு தூக்கம் வருவதாக சொல்லிச் சென்றார். அவளுக்குதான் அடுத்து என்ன செய்வதென்றுத் தெரியவில்லை. இதுவரை அவள் அந்த வீட்டை சுற்றிப் பார்த்ததில்லை. எழுந்து நிதானமாகப் பார்க்க ஆரம்பித்தாள்.

டீவீ மீது அவளும் விஷ்வாவும் தீபாலியும் இருக்கும் புகைப்படம் இருந்தது. “இந்த வீட்டுல நம்ம செஞ்ச ஒரே வேலை டீவீ பார்க்குறது தான். எப்படி இந்த போட்டோவ கவனிக்காம போனோம்?” அதை கையில் எடுத்தாள். தீபாலி இன்னும் சிறு பிள்ளையாக இருந்தாள். ஒன்றரை அல்லது இரண்டு வயது இருக்கலாம்.

அந்த நொடியே அவளை தூக்கி கொஞ்ச வேண்டுமென்ற வேகம். ஏன்? அருகிலேயே இருந்தபொழுது சேர்ந்து விளையாடினோம்… இப்படி ஆசை வந்ததில்லையே… ஒருவேளை அவளை பிரிந்து இருக்க முடியாதோ? ச்ச… தீபாலியை இந்த சில நாட்களாக தானே தெரியும்? பிறகென்ன?

“ஆராதனா”

“ம்ம்”

“என்ன அந்த போட்டோவையே பார்த்துட்டு இருக்க?”

அவள் கையிலிருந்து அதை வாங்கிப் பார்த்தான். அவனுக்கு மிகவும் பிடித்த புகைப்படம். அதனாலேயே அதை அடிக்கடி பார்க்க விரும்பி ஹாலில் டீவீ மீது வைத்திருந்தான். தாயின் கையில் இருந்தாலும் தீபாலி அவன் முகத்தை வருடிக் கொண்டிருப்பாள். வீட்டிற்கு வந்திருந்த சமயம் டாக்டர் குமார் எடுத்த புகைப்படம்.

“உனக்கு இந்த போட்டோ ரொம்ப பிடிக்குமா?”

“ம்ம்… குட்டியா பொம்ம மாதிரி இருப்பா அம்மு… இப்போவும் அப்படிதான். இருந்தாலும்… எந்நேரமும் நீயும் நானும் பக்கத்துலயே இருக்கணும்னு அடம் வேற… உன்ன இப்படி சிரிக்க வெச்சுப் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆராதனா”

“நான் போட்டோ பிடிக்குமான்னுதான் கேட்டேன்”

“போட்டோல இருக்க உங்க ரெண்டுப் பேரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எனக்கு டைம் ஆகுது. ஏதாவது சாப்பிட கிடைக்குமா? இல்ல… இப்படியே பட்டினியா…”

“சாப்பிட வேண்டியது தான?”

“சாப்பாடு?”

அவளுக்கு அப்போதுதான் உரைத்தது. வீட்டில் யாரும் இல்லை. யார் சமைப்பது?

கலவரமடையும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். “சுத்தம்… கல்யாணத்துக்கு முன்னாடி இவளுக்கு சமைக்க தெரியாது போலருக்கு”

“நான் சமைக்கணுமா?”

“தெரியுமா?”

“ம்ம்ஹும்…”

“எதுவுமே தெரியாதா? சுடு தண்ணியாவது வெப்பியா? அடுப்பையாவது பத்த வெச்சிருக்கியா இதுக்கு முன்னாடி?”

“ஓவரா பேசாத. அந்தளவுக்கு மோசம் ஒண்ணும் இல்ல”

“தப்பிச்சேன். சரி என்ன தெரியும் சொல்லு”

“என்ன… சமைச்சு… இப்… ப்ரெட் இருக்கா?”

“வேற வழியே இல்லன்னா அத தான் சாப்பிட்டுப் போகணும்னு நேத்து வாங்கி வெச்சேன். கடைசில அதான் சாப்பிடணுமா?”

“ம்ம்ச்ச்… நீ கொஞ்ச நேரம் பேசாம வா”

பிரிட்ஜை திறந்து ப்ரெட் பாக்கெட்டை எடுத்து நீட்டினான். கிச்செனுள் சென்று டோஸ்டரை ஆன் செய்து ப்ரெட் துண்டுகளை இரண்டிரண்டாக வைத்து டோஸ்ட் செய்து ஒரு தட்டில் அடுக்க ஆரம்பித்தாள்.

“இப்படியே எப்படி சாப்பிடுறது? அட்லீஸ்ட் கொஞ்சம் பட்டர் கிட்டர் தடவு… ரொம்ப ட்ரையா இருக்கும் ஆராதனா”

“உன்ன பேசாம இருன்னு சொன்னேன்ல?”

பிரிட்ஜிலிருந்து ஒரு கேரட்டை எடுத்து கழுவி அதை துருவிக் கொண்டே பிரெட்டை டோஸ்ட் செய்து எடுத்தாள்.

“சீஸ் ஸ்ப்ரெட் எடுத்துட்டு வா”

“கேரட் எடுக்கப் போனப்போவே எடுத்துட்டு வர வேண்டியது தான? பிரிட்ஜ் உள்ள தான இருக்கு?”

“ரொம்ப அலுத்துக்காத… உனக்குதான செய்யுறேன்… ஹெல்ப் பண்ணா என்னவாம்?”

அவன் எடுத்து வந்த சீஸ் ஸ்ப்ரெட்டை டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் மீது தடவி துருவிய கேரட்டை அதன் மீது பரப்பி இன்னொரு ப்ரெட் துண்டால் மூடி ஒரு தட்டில் வைத்து நீட்டினாள்.

“என்ன காம்பினேஷன்டி இது? எனக்கு வேண்டாம். இதுக்கு வெறும் ப்ரெட் சாப்பிட்டுக்குறேன்”

“அதெல்லாம் முடியாது. இன்னைக்கு இதுதான் உனக்கு ப்ரேக்பாஸ்ட். இஷ்டம்னா சாப்பிடு… இல்லன்னா பட்டினியா போ… எப்படியோ போ… எனக்கென்ன வந்துது? நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்ல. நல்லா இருக்கும். ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்தாதான தெரியும்”

“ஒரு வாய் சாப்பிட்டு எனக்கு பிடிக்கலன்னா?”

“வெச்சுட்டு போ… நான் சாப்பிட்டுக்குறேன். உனக்கெல்லாம் போய் செஞ்சு குடுக்குறேன்ல…”

வேகமாக சான்ட்விச்சை கையில் எடுத்தவன் ஒரு கடி கடித்துவிட்டு, “நல்லால்ல” என்று அதை தட்டில் வைத்தான்.

“நல்லாலன்னா பே…”

தயார் செய்துக் கொண்டிருந்த சான்ட்விச்சை தட்டில் வைத்துவிட்டு அவன் வைத்ததை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஹ்ம்ம்… அவ்வளவு மோசம் ஒண்ணுமில்ல…” தட்டில் அவள் வைத்த புதிய சான்ட்விச்சை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.

நமுட்டு சிரிப்புடன் அவன் கூற அவள் கையிலிருந்ததை பார்த்தாள். அவன் சாப்பிட்ட எச்சம். ஏற்கனவே சாப்பிட ஆரம்பித்தாகிவிட்டது. வேண்டாமென்று வைக்கவும் முடியவில்லை. மேற்கொண்டு சாப்பிடவும் முடியவில்லை.

அவள் முக மாற்றத்தையும் விழுங்க முடியாமல் திணறுவதையும் ரசித்தபடியே தன் பங்கை காலி செய்தான்.

“ஒண்ணுதானா? இன்னும் கிடைக்குமா? பசிக்குது. எனக்கு டைம் வேற ஆச்சு”

அப்பாடாவென்று கையிலிருந்ததை கீழே வைக்கப் போனாள். “சாப்பிடு சாப்பிடு. அதுக்காக ஏன் பாதியில வைக்குற?”

“இல்ல உனக்கு டைம் ஆகுது…”

“அப்போ நீ கொஞ்சம் சீக்கிரம் சாப்பிடு. உன்னை பார்க்க வெச்சு நான் சாப்பிட முடியாதுல்ல? பாஸ்டா… ம்ம்…”

வேகவேகமாக மென்று விழுங்கியவள் ஒரு க்ளாஸ் தண்ணீர் அருந்தி அவனுக்கு மேலும் சில சான்ட்விச்சுகளை செய்து கொடுத்தாள்.

“ஓகே நான் கிளம்புறேன். லஞ்ச் எப்பயும் வீட்டுலேருந்து வந்துடும். அருள் கொண்டு வருவான். இப்போ அவனையும் அனுப்பியாச்சு. என்ன பண்ணப் போற?”

“அதுக்கு நான் என்ன பண்ணுறது? நீ முதல்ல கிளம்பு… டைம் ஆச்சு டைம் ஆச்சுன்னு என்னை படுத்திக்கிட்டு இருக்க”

“புருஷனுக்கு சமைச்சு போடுறதுக்கு பேரு படுத்துறதா? பை”

அவன் பசியோடு வெளியே செல்ல வேண்டாமென்று மட்டும் யோசித்தவளை அவன் வார்த்தைகள் திடுக்கிட வைத்தன. மீண்டும் தலைவலி ஆரம்பமானது. தெளிவில்லாமல் ஏதேதோ யோசிக்கத் துவங்கினாள்.

ஆராதனா ஹாலிற்கும் சமயலறைக்கும் நடந்து நடந்து சோர்ந்துப் போனாள். கடந்த மூன்று மணி நேரங்களில் அவளால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. தான் விஷ்வாவிற்கு உதவுகிறோம் என்று அவள் நினைத்தபோதெல்லாம், “புருஷனுக்கு செய்ய…” என்ற அவன் வார்த்தைகள் காதில் எதிரொலித்தன.

“என்னாச்சு ஆராதனா? ஏன் இவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க?’

“அது… அங்கிள்… விஷ்வா லஞ்ச் சாப்பிடணும்”

“அதுக்கென்னம்மா?”

“இல்ல… நான்… சமச்சுட்டேன். எப்பயும் வீட்டுலேருந்து தான் லஞ்ச் குடுத்து விடுவீங்களாம்… காலையில சொன்னான். இப்போ…”

“நீ போய் குடுத்துட்டு வரியா?”

“எது… நானா? இல்லல்ல… இப்போ அவனுக்கு சாப்பாடு குடுத்து விடணுமா? இல்ல அவன் வெளில சாப்பிட்டுக்குவானா?”

“அத அவன்கிட்டதான் கேட்கணும். கால் பண்ணுறியா?”

“என் மொபைல்… நீங்க கால் பண்ணி குடுங்க அங்கிள்”

அடுத்த கேள்வி கேட்காமல் தன் மொபைலில் மகனின் எண்ணை அழுத்தி அவள் கையில் கொடுத்தார்.

“சொல்லுங்கப்பா”

“நான் ஆராதனா”

“எதுக்கு அப்பா மொபைலேருந்து கூப்பிடுற?”

“என் மொபைல் அன்லாக் பண்ண பின் தெரியாது”

“ஒஹ்ஹ்… மறந்துட்டேன். சொல்லு”

“சாப்பாடு குடுத்து விடவா? இல்ல நீ வெளில சாப்பிட்டுக்குவியா?”

“நான் எங்க சாப்பிடணும்னு நீ இன்னும் முடிவு பண்ணலையா?”

“நான் எப்படி முடிவுப் பண்ணுறது?”

“லஞ்ச் ரெடியா?”

“ம்ம்”

“அப்பறம் நான் எதுக்கு வெளில சாப்பிடணும்? பை”

“என்ன ஆராதனா சொன்னான்?”

“வெச்சுட்டான் அங்கிள்”

“நீ பேக்டரிக்கு போறியா?”

“கார் டிரைவிங் தெரியும். ஸ்கூல் படிக்கும்போதே கத்துக்கிட்டேன். ஆனா இப்போதைக்கு எனக்கு எது ஞாபகம் இருக்கு எது மறந்துப் போச்சுன்னே எனக்கு சரியா சொல்லத் தெரியல அங்கிள். அதோட… உங்க பேக்டரிக்கு வழி… எனக்கு தெரியாதே”

அவள் சொல்வதும் சரிதான். இவளை நம்பி தனியாக அனுப்பவும் முடியாது. அவள் சொல்வது போல் அவளுக்கு வழியும் தெரியாது.

“நானே போறேன். நீயும் வரியா? வீட்டுல தனியா உட்கார்ந்து என்ன பண்ண போற?”

“இல்ல அங்கிள். நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்”

“சரி பத்தரமா இரு. லஞ்ச் பேக் பண்ணு. நான் கிளம்புறேன்”

அந்த நொடியிலிருந்து அவள் மூளையை குடைந்த ஒரே விஷயம் – எப்படி தன் மொபைலை அன்லாக் செய்வது? பலமுறை முயன்றுப் பார்க்கலாம். ஆனால் தொடர்ந்து மூன்று முறை தவறாக நம்பர் என்டர் செய்தால் விஷ்வாவிற்கு மெயில் செல்லும். தான் தோற்பது அவனுக்கு தெரிவதை அவள் விரும்பவில்லை.

எக்காரணத்தாலோ அந்த லாக் நம்பர் தன் பெற்றோர் சம்பந்தப்பட்டதோ தன்னை மட்டும் சார்ந்ததோ இல்லையென்று உறுதியாக நம்பினாள்.

சந்திரன் கிளம்பும் முன், “விஷ்வாவோட டேட் ஆப் பர்த் என்ன அங்கிள்?” என்றுக் கேட்டாள்.

அதை கூறியவருக்கு அவர்களது வாழ்க்கை இனி எப்படி இருக்கப் போகிறதென்ற கவலை. பேக்டரி வந்திறங்கியப் பிறகும் அவர் முகம் தெளியவில்லை.

மகனிடம் பொறுப்பை ஒப்படைத்தப் பிறகு அவர் அடிக்கடி அங்கு வருவதில்லை. அவசியம் இருந்ததில்லை. பல நாட்கள் கழித்து வந்தாலும் கேட்டில் நின்ற செக்யூரிட்டி முதல் ஊழியர்கள் வரை மரியாதையாய் வணங்கி ஒதுங்கிச் சென்றனர்.

முன்னறிவிப்பின்றி சந்திரன் பேக்டரிக்கு வருவது இதுவே முதல் முறை. அவர் வந்திருக்கும் செய்தி உடனே ரெங்கநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது. பார்த்துக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடி வந்தார்.

ஆராதனா வருவாள் என்று விஷ்வா நினைத்திருந்தான். தந்தையை பார்த்ததும் தான் அவள் வருவதில் உள்ள சிக்கல்கள் உரைத்தன.

ஆராதனா புறங்கையால் நெற்றியை தேய்த்தபடி அமர்ந்திருந்தாள். விஷ்வாவுடைய பிறந்த வருடத்தையும் கொடுத்துப் பார்த்தாகிவிட்டது. வேறு எதுவாக இருக்கும் என்று நீண்ட நேரமாக யோசித்தவளுக்கு அந்த யோசனை பளிச்சிட்டது.

“வெட்டிங் டே… ஒருவேளை அதுவா இருந்தா? ச்ச அந்த டேட்டும் தெரியாதே… ஆல்பம்… அன்னைக்கு விஷ்வா காமிச்ச ஆல்பம்ல கண்டிப்பா இருக்கும்”

அவனுடைய அறைக்குள் வந்து கப்போர்ட் அருகில் நின்றவளுக்கு தயக்கம்.

“அவன் இல்லாதப்போ அவன் ரூம் உள்ள வந்ததே தப்பு. அவன் கப்போர்ட்… இதுக்குள்ள என் ட்ரெஸ்ஸும் இருந்துது. அப்போ இது என்னோடதும் தான். அதெல்லாம் என் டிரஸ்னு எப்படி நம்புறது? ம்ம்ச்ச்… என்னவோ ஒண்ணு. நான் பார்ப்பேன். அன்னைக்கு மேல் செல்ப்லேருந்து தான் எடுத்தான். கெடச்சிடுச்சு…”

சந்திரன் கிளம்பும் வரை விஷ்வாவிடம் எதுவும் பேசவில்லை. அவன் எப்போதும் அதிகம் பேச மாட்டான். அமைதியாக வழியனுப்பி வைத்தான்.

ஆல்பத்தை எடுத்த இடத்தில் வைத்தாள் ஆராதனா.

“வெட்டிங் டேட் இல்ல. அது ஈஸியா கண்டுப்பிடிக்க முடியும். விஷ்வா கண்டுப்பிடிக்கக் கூடாதுன்னு நெனச்சு நான் இந்த லாக் செட் பண்ணியிருந்தா கண்டிப்பா இந்த டேட்ஸ் எதையும் வெச்சிருக்க மாட்டேன்.

அப்பா… இப்போதான் மூளை கொஞ்சம் சுருசுருப்பா வேலை செய்யுது. சின்னபுள்ளத்தனமா இப்படி பர்த் டே வெட்டிங் டே எல்லாம் யோசிக்குறத விட்டுட்டு வேற எதாவது… ம்ம்கும்… நமக்குதான் எதுவும் தெரியாதே… வேற என்னத்த யோசிக்க?”

சந்திரன் வந்ததிலிருந்து அவளை கவனித்துக் கொண்டிருந்தார். ஓரிடத்தில் அமராமல் அலைபாயும் கண்களுடன் வீடு முழுவதும் சுற்றி வந்தவளை பார்த்ததும் எதையோ தீவிரமாக யோசிக்கிறாள் என்றுப் புரிந்துக் கொண்டார்.

“ஒரே நாள்ல நிறைய யோசிக்காத ஆராதனா. எதுக்கு வீணா ஸ்ட்ரெயின் பண்ணிக்குற?”

“ஹான்… ஓகே அங்கிள்” என்றவள் தன் நடையை நிறுத்தவில்லை.

“நல்ல பொண்ணும்மா நீ… உன்னை பொண்ணு பார்க்க வந்தன்னைக்கும் நீ இப்படி தான் நடையா நடந்தியாம்… உங்கப்பா அன்னைக்கு சொல்லிக்கிட்டே இருந்தாங்க”

“ம்ம்”

“உட்காரு ஆராதனா. அட்லீஸ்ட் உட்கார்ந்து யோசி”

“அங்கிள் இப்போ என்ன சொன்னீங்க? பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு… என்னைக்கு அங்கிள் வந்தீங்க?”

“என்னைக்கு வந்தீங்கன்னா? அதான் சொன்னனே… உன்னை பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு”

“ஐயோ அங்கிள்… டேட் நியாபகம் இருக்கா?”

“தேதி நியாபகம் இல்ல. அக்டோபர் மாசம் வந்தோம்”

“ம்ம்ச்ச்… அப்படின்னா எங்களுக்கு கல்யாணம் ஆன வருஷம் தான் வரும். டேட் தெரியாம எப்படி…”

“இல்லம்மா. நாங்க அக்டோபர்ல பொண்ணு பார்க்க வந்தோம். எல்லாம் பிக்ஸ் பண்ணி தை மாசம் உங்க கல்யாணம்”

“அப்போ எங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு முந்தின வருஷம்… தேன்க் யூ அங்கிள். நான் ட்ரை பண்ணி பார்க்குறேன்”

“மெதுவா போ ஆராதனா… என்ன அவசரம்?”

சந்திரன் கத்தியதெல்லாம் அவள் காதில் விழவில்லை. எண்களை அழுத்திவிட்டு ஒருமுறை ஆழ மூச்சையெடுத்து அன்லாக் என்றிருந்ததை அழுத்தினாள். லாக் ரிமூவ் ஆகியது.

“முதல்ல அந்த ஆப்ல இருக்க மெயில் ஐடி மாத்தணும். அதுக்கு என் ஐடி எதுவும் டக்குன்னு நியாபகம் வர மாட்டேங்குதே… முதல்ல போன்ல என்ன இருக்கு பார்க்கலாம். அப்படி எதுக்கு இத லாக் பண்ணி வெச்சிருக்கேன்?”

நிழலே நிஜமாய் – 16

தெருவிளக்கின் வெளிச்சம் உருவாக்கிய வட்டத்தை தாண்டி அனைத்தும் சூனியமாக தெரியும் இரவு வேளையில் வீட்டின் முன்னால் இருந்த போர்ட்டிகோவின் தூணில் சாய்ந்து நின்றாள் ஆராதனா. வெளிச்ச வட்டத்தினுள் அவள் பார்வை தங்கவில்லை. வெறுமையை வெறிக்கவே மனம் விரும்பியது.

“ஏன் இங்க நிக்குற?”

தன்னை சுற்றியிருந்த மனிதர்களை அடையாளம் காண முடியாவிட்டாலும் அவர்கள் குரல் மனதில் பதிந்துவிட்டிருந்தது. அதிலும் விஷ்வாவின் குரல்.

அவன் குரலில் வெளிப்படும் வேறுபாட்டைக் கூட அவளால் மிக சரியாக புரிந்துக் கொள்ள முடியும். அவனுடைய கோபம், நிதானம், ஆளுமை, இறைஞ்சுதல் என்று எத்தனையோ உணர்வுகள் அவன் குரலில் வெளிப்பட்டதுண்டு.

அவன் குரலை கேட்டவள் அவனைக் குறித்த சிந்தனைக்கு சென்றுவிட்டதால் அவனை திரும்பிப் பார்க்கவில்லை.

விஷ்வா அமைதியாக அவளுக்கு எதிரில் இருந்த தூணுக்கு சென்று அவளை பார்த்தபடி அதில் சாய்ந்து நின்றான்.

“என்ன யோசிக்குற?”

அவளால் எவ்வளவு முயன்றும் அவனை தாண்டி இருட்டை வெறிக்க முடியவில்லை.

“ஒண்ணுமில்ல”

“ஒண்ணுமில்லாததுக்கா இவ்வளவு நேரமா இங்க நின்னுட்டு இருக்க?”

“நீ ஏன் ஈவ்னிங் வந்ததுலேருந்து என்கிட்ட பேசல? அமைதியா வந்த… கார்டன்ல அங்கிள் கூட டீ குடிச்ச… அப்பறம் உன் ரூம்குள்ள போய் உட்கார்ந்துட்ட… சாப்பிடும்போதும் எதுவும் பேசல”

“இததான் யோசிச்சியா?”

“ம்ம்”

“நிஜமா?”

“ம்ம்ச்ச்… என் போன்ல லாக் நீ செட் பண்ணது. நீ அன்னைக்கே சொன்னதான்… இருந்தாலும் அது நான் செட் பண்ணதுன்னு நடுவுல கன்ப்யூஸ் ஆகிட்டேன். நான் இப்போ எல்லாம் நிறைய விஷயத்துல குழம்பிப் போயிடுறேன். என்னை பொண்ணு பார்க்க வந்ததா அங்கிள் சொன்ன வருஷத்த லாக்கா செட் பண்ணியிருக்க… அத நான் கண்டுபிடிக்க மாட்டேன்னு எப்படி நெனச்ச? எனக்கு நியாபகம் இருந்திருக்காதா?”

விஷ்வா புன்னகைத்தான்.

“சிரிக்குற மாதிரி நான் இப்போ என்ன கேட்டேன்?”

“சில நேரங்கள்ல நமக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச விஷயம், இல்ல கண்ணுக்கு முன்னாடியே இருக்க விஷயத்த நம்ம கவனிக்க மறந்துடுவோம். அப்படிதான் நீயும் மறந்திருப்ப”

“எதுக்கு அந்த லாக் செட் பண்ண?”

“முதல்ல நீதான் செட் பண்ண. இப்போ அன்லாக் பண்ணிட்ட… ஆனா எதுக்குன்னு நியாபகம் வரலையா?”

இல்லையென்று தலையசைத்தாள்.

“அதுல அப்படி என்ன முக்கியமான விஷயம் இருந்துதுன்னு பார்த்தியா?”

“அப்படி எதுவும் இல்ல. அதனால தான் எனக்கு புரியல. போட்டோஸ் எல்லாம் பார்த்தேன். நீ, நான், அம்மு, சந்திரன் அங்கிள், என் அப்பா, அம்மா… அவ்வளவுதான்”

“நீயும் நானும் எப்படி ஒண்ணா போட்டோ எடுத்துக்கிட்டோம்னு டவுட் வரலையா?”

“நான் உன்கூட இருந்திருக்கேன். அத இப்போ மறந்துட்டேன்”

“ஹ்ம்ம்… சோ உனக்கு மறந்துடுச்சுன்னு ஒத்துக்குற அளவுக்கு… நீயே நம்புற அளவுக்கு வந்துட்ட… சந்தோஷம்”

“அதுல பெருசா எதுவும் இல்லன்னா அப்பறம் எதுக்கு அத லாக் பண்ண?”

“ஆக்ஸிடென்ட் ஆகுறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி உன் மொபைல்ல பாலன்ஸ் இல்லன்னு என் மொபைல்லேருந்து உங்கம்மாவுக்கு கால் பண்ணி பேசுன. ‘என் மொபைல் எதுக்கு எடுக்குற? அதுல இம்பார்ட்டன்ட் காண்டாக்ட்ஸ் எல்லாம் இருக்கு’னு விளையாட்டுக்கு சொன்னேன். ‘என் மொபைல்ல கூட தான் முக்கியமான எத்தனையோ விஷயம் இருக்கு. இனி என் மொபைல் நீங்க தொடாதீங்க’னு சொல்லி லாக் பண்ணி வெச்சுட்ட. அடுத்த நாளே அத கண்டுபிடிச்சு பாஸ்கோட், மெயில் ஐடி மாத்திட்டேன்”

“சின்னப்புள்ளத்தனமா இல்ல?”

“என்னை கேட்டா? நீ செஞ்சதுதான? உனக்கே தெரியுதா? இத நான் சொன்னா ஒத்துக்க மாட்ட”

“நான் இப்படியெல்லாம் நடந்துக்குவேன்னு என்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல விஷ்வா. நிஜமா நான் இதெல்லாம் செஞ்சேனா?”

அவனிடமிருந்து பதில் வராததால் அவன் முகத்தை தவிர்த்து அவனுக்கு பின்னாலிருந்த தெருவிளக்கை பார்க்க முயன்றாள். ஒரு நொடி கூட பார்வை அதில் நிலைக்கவில்லை.

“நீ மத்தவங்கக்கிட்டயோ ஏன்… உங்க வீட்டுலயோ கூட இப்படி நடந்து நானும் பார்த்ததில்ல. பட் என்கிட்ட மட்டும் எதுக்கு அப்படி நடந்துக்கிட்ட?”

“எப்படி?”

“சின்னப்புள்ளத்தனமா… அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல… மொத்தமும் மறந்துப் போச்சாம்… அப்போக்கூட பார்த்தியா என்கிட்ட கத்தி மல்லுக்கட்டுன… அ…”

“நீ சும்மா எதையாவது சொல்லாத”

இந்த சில நாட்களாக யார் எதை பேசினாலும் அதை குறித்து தீவிரமாக யோசிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தவளுக்கு இப்போது சிரிப்பு வந்துவிட்டது. அதை அவன் கண்டுக் கொள்ளக் கூடாதென்று வேகமாக வீட்டினுள் சென்றாள்.

விஷ்வா அங்கேயே நின்றான். வீட்டிலிருந்து அனைவரையும் அனுப்பி ஆராதனாவை தனித்திருக்கவிட்டது தவறோ என்று மனதின் ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டே இருந்த சிறிய குற்றவுணர்வு காணாமல் போயிருந்தது. கண்களை மூடி தூணில் தலை சாய்த்து இரவின் நிசப்தத்தை உள்வாங்கினான்.

சந்திரன் உறங்கிவிட்டிருக்க வீடு அமைதியாக இருந்தது. ஆராதனாவின் கால்கள் தாமாக அவளை அம்முவின் அறைக்கு அழைத்துச் சென்றன. காலையிலிருந்து அவள் நினைவே இப்போதுதான் வந்தது. அவளுடன் விளையாடி கழித்த மாலை பொழுதுகள் நினைவு வந்து புன்னகைக்க வைத்தன.

அறையை சுற்றிப் பார்த்தவள் அவளுடைய கப்போர்டை திறந்தாள். ஓரிரு உடைகளையும் இன்னப்பிற விளையாட்டுப் பொருட்களை தவிர மீதமிருந்த இடங்கள் காலியாக இருந்தன.

ஆராதனாவை தேடிய விஷ்வா அம்முவின் அறையினுள் வந்தான். பின்னால் காலடி சப்தம் கேட்டும் திரும்பாமல் நின்றாள்.

“இங்க என்ன பண்ணுற?”

“அம்முவ போய் பார்த்தியா?”

“டைம் இல்ல”

வெடுக்கென்று திரும்பி அவனை முறைத்தாள்.

“டெய்லி வந்து பார்க்கணும்னு அவ எத்தன வாட்டி சொல்லியிருப்பா? ப்ராமிஸ் பண்ணியா இல்லையா?”

“பேக்டரிலேருந்து கிளம்பும்போதே லேட் ஆகிடுச்சு. அதோட உங்க வீட்டுக்கு போறதுன்னா… எனக்கு கம்பர்ட்டபிளா இருக்காது அதா…”

“அதுக்காக? ச்ச…”

தன்னை தாண்டிச் சென்றவளின் கையை இறுகப் பற்றி அருகில் இழுத்தான்.

“உனக்கு எதுக்கு கோபம் வருது?”

“நீ பண்ணுறதுக்கு கோபம் வராம? பாவம் எவ்வளவு அழுதிருப்பா?”

“சரி அவ அழுதா உனக்கென்ன?”

“அவ… நீ போய் பார்த்திருக்கணும்”

“என் பொண்ண பார்க்காம இருக்க நான் இப்படியெல்லாம் காரணம் சொல்லுவேன்னு நினைக்குறியா?”

“அப்பறம் எதுக்கு அப்படி சொன்ன?”

இடது கையால் அவன் தோள்பட்டையில் அடித்தவள் வலது கையை அவன் இன்னும் விடாமல் பிடித்திருப்பதை உணரவில்லை.

“அவளுக்காக என்னை அடிப்பியா?”

தான் எல்லை மீறுவதாகத் தோன்ற அவனை விட்டு விலக முயன்றபோது தான் தன் கையை அவன் பிடித்திருப்பதை கவனித்தாள்.

“எனக்கு தூக்கம் வருது” என்றுக் கூறி கையை அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

“வா தூங்கலாம்”

மிகச் சாதரணமாய் சொன்னவனை கண்கள் இடுக்கிப் பார்த்தாள்.

“நான் தூங்கப் போறேன்”

“நான் மட்டும் முழிச்சிருக்கவா போறேன்?”

“குட் நைட் விஷ்வா”

“எங்கப் போற?”

“ம்ம்ச்ச் தூக்கம் வருதுன்னு சொன்னேன்ல? மேல போறேன்”

“மேல எல்லாம் நீ போக முடியாது. ஒழுங்கா என்கூட…”

“உன் ரூம்ல தூங்க சொல்லுறியா?”

“நம்ம ரூம்”

“என்ன விளையாடுறியா? ஏதோ உன்கூட தனியா ஒரே வீட்டுல இருக்கணும்னு சொன்ன… எனக்கு இதுவே லிவிங் டுகெதர் மாதிரி தான் இருக்கு. இதுல… உன்கிட்ட எல்லாம் பேசி…”

விடுவிடுவென்று மாடிப்படிகளில் ஏறியவளை இரண்டே எட்டில் அடைந்தவன், “சொல்ல சொல்ல எங்கப் போற” என்றுக் கேட்டு அவளை அப்படியே தோளில் தூக்கினான்.

“என்ன பண்ணுற? விடு விஷ்வா… நான் இப்போ கத்தி அங்கிள் எந்திரிச்சு வந்தா என்ன நினைப்பாங்க? கொஞ்சம் கூட அறிவே இல்லையா? விடு… விடுன்னு சொல்லுறேன்ல? காது கேட்குதா இல்லையா? டேய்… இறக்கி விடுடா……”

“கத்து… எங்கப்பா எந்திரிச்சு வந்து கேட்டாலும் நான் பதில் சொல்லிக்குவேன்”

கடைசி படியில் நின்று அவளை இறக்கிவிட்டவன் கை கட்டி நின்றான். எப்படியாவது அவனை தாண்டி படிகளில் ஏற நினைத்து இட வலமாக நகர்ந்தாள். அவனும் அவளுக்கு வழி விடாமல் நகர்ந்தான்.

சில நொடிகள் அவனை முறைத்தவள் படிகட்டின் பக்கவாட்டிற்கு சென்றாள். அதன் பிறகு எந்த சப்தமும் கேட்காததால் திரும்பிப் பார்த்தான் விஷ்வா. அது மர கைப்பிடிக் கொண்ட படிக்கட்டு. கைபிடியை பிடித்து நான்காவது படியில் கால் வைத்து அதன் மீது ஏறிக் கொண்டிருந்தாள் ஆராதனா.

“ஏய் ஏய்… இப்படியாடி படிகட்டுல ஏறுவ? விழுந்துத் தொலைக்காதடி… சொல்லிக்கிட்டே இருக்கேன்… எறங்கு ஆராதனா… அடியேய் வானரமே…”

கடைசி படியிலிருந்து இறங்கி அவனும் படிகட்டின் பக்கவாட்டிற்கு சென்று அவளை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரு காலை கைபிடியை தாண்டி போட்டு படியில் காலூன்றி மற்றொரு காலையும் உள்ளே கொண்டு வந்து படிகளில் ஓட முயன்றாள்.

சட்டென்று அவளை போலவே படியில் தாவி குதித்தவன், “பொண்ணாடி நீ?” என்று கொஞ்சம் சப்தமாகவே கேட்டு மீண்டும் வேதாளம் போல் அவளை தூக்கி படிகளில் விரைந்து இறங்கினான். அவள் பேசுவதையோ தன்னிடமிருந்து விலகி இறங்க முயல்வதையோ பொருட்படுத்தாமல் அவனுடைய அறைக்குள் சென்று கதவை மூடி அவளை சற்று தள்ளி இறக்கிவிட்டான்.

ஆராதனா கதவருகில் வரும் முன் அதை தாழிட்டு அதன் மீதே சாய்ந்து தரையில் அமர்ந்தான்.

“கதவ திற விஷ்வா”

காலை நீட்டி கையை தூக்கி சோம்பல் முறித்தவன், “முடியாது” என்றான். கடுப்பானவள் அவன் எதிரிலேயே சம்மணமிட்டு அமர்ந்தாள்.

“நீ கதவ திறக்குற வரைக்கும் நான் இங்கயே தான் உட்கார்ந்திருப்பேன்”

“உன் இஷ்டம். கொஞ்சம் அந்த தலகாணிய மட்டும் எடுத்துக் கொடுக்குறியா? முதுகு வலிக்குது”

“முடியாது. வேணும்னா நீயே எந்திரிச்சு வந்து எடுத்துக்கோ”

“அது நடக்காது”

“உன் இஷ்டம்”

நேரம் நள்ளிரவை கடந்தப் பிறகும் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக தரையில் அமர்ந்திருந்தனர்.

காலையிலிருந்து பல விஷயங்களை யோசித்துக் களைத்திருந்தவளுக்கு இப்போது தூக்கம் அவசியம். இன்று வேலை அதிகமாக இருந்ததால் அதிகம் இருக்கையிலிருந்து எழாமல் இருந்தவனுக்கு உண்மையிலேயே முதுகு வலியெடுத்து உறக்கம் கண்களை சொருகியது.

ஆராதனா பிடிவாதமாக அசையாமல் அமர்ந்து அவனை பார்த்திருக்க விஷ்வா அமர முடியாமல் தூக்கத்துடன் போர் செய்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவனை பார்க்க பாவமாக இருந்தது. அவன் படும் அவஸ்தை சகிக்க முடியாததாகப்பட இறங்கிப் போவதென்று முடிவெடுத்தாள்.

“சரி… நான் கீழ படுத்துக்குறேன். நீ போய் பெட்ல படு… விட்டா தூங்கி விழுந்துடுவ போலருக்கு…”

“நான் தூங்கி விழுந்தா உனக்கென்ன? உட்காரு”

அரை தூக்கத்தில் வீம்புப் பிடிக்கிறான் என்றுப் புரிந்தது.

“தூங்கு விஷ்வா. நான் தான் இங்கயே இருக்கேன்னு சொல்லிட்டேன்ல? நான் கீழப் படுத்துக்குறேன்”

ஒரு நொடி முகம் பளிச்சிட லேசாக புன்னகைத்தவன், “கீழ எல்லாம் படுக்க வேண்டாம். பெட்லயே படு. பெரிய பெட் தான். நான் உன் கிட்டயே வர மாட்டேன்” என்று பேசியபடியே எழுந்து சென்று மெத்தையில் படுத்தான்.

கதவை திறந்து வெளியே ஓடிவிடலாமா? யோசிக்க மட்டுமே முடிந்தது. கீழே படுக்க விரிப்பு வேண்டும் என்று நினைத்தவள் எழுந்து மெத்தையை பார்த்தாள்.

விஷ்வா இன்னும் கண்களை மூடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தான் சென்று படுக்காமல் தூங்க மாட்டான் என்று உறுதியாக நம்பியவள் மெத்தையை சுற்றி வந்து மறுபக்கம் அமர்ந்தாள். படுக்க தயக்கமாக இருந்தது. அவன் இன்னும் கண்களை மூடவில்லை.

கால் பக்கம் இருந்த இரண்டு தலையணைகளை எடுத்து இருவருக்கும் இடையில் வைத்து படுத்தாள்.

“குட் நைட்” என்றுக் கூறி அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்தான் விஷ்வா.

முதல் நாள் திரும்பிப் படுத்தவன் அடுத்த நாள் அவளை பார்த்தபடி நடுவிலிருந்த தலையணை மீதே தலை வைத்துப் படுத்தான். மூன்றாம் நாள் தலையணை எரிச்சலைக் கொடுக்க தூக்கத்தில் அதை தூக்கியெறிந்துவிட்டு மனைவியின் கழுத்தை சுற்றி கை போட்டு நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான். அன்றிலிருந்து ஆராதனாவின் தூக்கம் தூரமானது.

நிழலே நிஜமாய் – 17

“என்ன யோசிக்குற?”

இரண்டு நாட்களாக விஷ்வா தொடர்ந்து கேட்கும் கேள்வியிது. ஆராதனாவிடமிருந்து பதில் வராது. அவள் முகத்திலிருந்து எதையேனும் கண்டறிய முனைவான். எதையும் ஊகிக்க முடியாமல் போனது.

ஆராதனா அமைதியாகிவிட்டாள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் கடந்த காலத்தை குறித்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் முழு நேர வேலையாக அதை மேற்கொண்டாள். பலன் என்னவோ பூஜ்யம் தான்.

விஷ்வா கொஞ்சம் பொறுமையிழந்திருந்தான். கேட்ட கேள்விக்கு பதில் வராமல் போனால் இயல்பாக வரும் கோபம் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்டும் பதில் வராததால் இன்று அவளை பேச வைத்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்து அவள் இரு கைகளையும் பற்றி, “என்ன யோசிக்குற?” என்று மீண்டும் கேட்டான்.

தன் கைகளை பற்றியிருக்கும் அவன் கைகளை பார்த்தாள். அவளின் அமைதியும் முகத்தில் தெரிந்த வேதனையும் அவனை சற்று நிதானப்படுத்தின. அவள் கைகளை விடுத்து கன்னங்களை பற்றினான்.

“பேச மாட்டியா?”

முதல் நாள் பார்த்தபோது கோபம்கொண்டு கத்தியவனுக்கும் இப்போது தன் கன்னம் பற்றி மென்மையாக கேள்விக் கேட்பவனுக்குமான வித்தியாசம் தெளிவாகத் தெரிந்தது.

“உனக்கு என்மேல இருந்த கோபம் போயிடுச்சா?”

“எதுக்கு கோபம்?”

“அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல நான் என்ன சொன்னாலும் கத்தின. அதுக்கப்பறம்… இப்போகூட அமைதியா பேசுற…”

“அன்னைக்கு நீ என்னை மறந்துட்டங்குற வருத்தம். என்னால அத தாங்கிக்க முடியல”

“இப்போகூட உன்னை இதுக்கு முன்னாடி பார்த்ததா நியாபகம் இல்ல விஷ்வா”

“ஆனா அப்போ மாதிரி என்னை பார்த்து பயப்படலையே… முகத்த திருப்பிட்டு ஒதுங்கி போகலையே…”

“என்னை இப்படி தொட விடுறேன்னு சொல்லுற…”

பற்களை அழுத்தமாக கடித்தவன் அவள் கன்னங்களிலிருந்து கைகளை விளக்கி நிமிர்ந்து அமர்ந்தான். சந்திரன் அம்முவை பார்க்க ஆராதனாவின் வீட்டிற்கு சென்றிருந்தார். காலை சென்றவர் மறுநாள் மாலை வருவதாகக் கூறினார். வீட்டில் இருவருமே தனித்திருக்க டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்.

“ஏதோவொரு குருட்டு தைரியத்துல என் வாழ்க்கையவே பணயம் வெச்சு விளையாடிட்டு இருக்கேனோன்னு தோணுது விஷ்வா”

“…”

“இப்போ நீ ஏன் அமைதியாகிட்ட?”

“…”

தனக்குள்ளேயே பல விஷயங்களை யோசித்து குழப்பிக் கொண்டிருந்தவள் அவனிடம் மனம்விட்டு பேச எண்ணியே அவன் கேட்டபோது பதில் கூறினாள். அவனுடைய அமைதி அவளை பரிதவிக்க வைத்தது. கற்சிலை போல் அமர்ந்திருந்தான்.

“பேச மாட்டியா?”

தொண்டையடைக்க கண்கள் கலங்குவதை அவனிடமிருந்து மறைக்க போராடியபடியே கேள்விக் கேட்டாள்.

“இதுக்கு நீ என் முகத்த பார்க்காம ஒதுங்கியே போயிருக்கலாம்”

“என் நிலைமையிலிருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு விஷ்வா… அம்மா அப்பா என்னை இப்படி யாரோ ஒருத்தர் வீட்டுல தனியா விட்டுட்டு போயிட்டாங்க. நீ என்னை வைப்னு சொல்லுற. அம்மு வேற… எவ்வளவு யோசிச்சாலும்… எத்தன வாட்டி யோசிச்சாலும் என் லைப்ல என்னென்ன நடந்துதுன்னு இப்போ வரைக்கும் என்னால கரெக்டா கண்டுப்பிடிக்க முடியல. என்ன பத்தியும் கொஞ்சம் யோசி விஷ்வா ப்ளீஸ்”

“என்ன யோசிக்கல? உன்னை பத்தி என்ன யோசிக்கல ஹான்? வீட்டுல வேலை செய்யுறவங்க எல்லாரும் உன்கிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுதுன்னு சந்தேகப்பட ஆரம்பிச்ச உடனே அவங்க எல்லாரையும் இந்த வீட்டுலேருந்து அனுப்பிட்டேன்.

உன் அப்பா அம்மா கூடவே இருந்தா பழச யோசிக்க மாட்டன்னு தான் அவங்கள போக சொன்னேன். உன்னை அவங்ககூட அனுப்பி வைக்க எவ்வளவு நேரம் ஆகியிருந்துருக்கும்? நீ இந்த நிமிஷம் சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு அவங்களோட அனுப்பி வெச்சிருந்தா அதுக்கப்பறம்? அவங்களோட போய் என்ன பண்ணுவ? கொஞ்ச நாள் யோசிக்க ட்ரை பண்ணுவ… அப்பறம்? என்ன… வேற கல்யாணம் பண்ணிப்பியா? முடியுமா உன்னால? நான் தான் உன் ஹஸ்பன்ட்னு உனக்கு நியாபகம் இருக்கோ இல்லையோ… அதுக்கும் நான் டிவோர்ஸ் குடுக்கணும்.

எல்லாத்துக்கும் மேல அம்மு… என்னால அவள பார்க்காம இருக்க முடியாது. ஒரு நாள் கூட. உங்க வீட்டுக்கு வரதுன்னா எனக்கு அவ்வளவு பிடிக்காது. உங்க வீடு பிடிக்காம இல்ல. மாப்பிள்ளையா அங்க வந்து உட்கார்ந்துட்டு நான் என்ன செய்வேன்? ஆனா இப்போ… தினம் போறேன். அவள பார்க்க. உன் பொண்ணு உன்னை எவ்வளவு மிஸ் பண்ணுறான்னு உன்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது. ஆனா ஒரு வாட்டி… இத்தன நாள்ல நீயும் என்கூட வந்து அவள பாருன்னு ஒரு வாட்டியாவது சொல்லியிருக்கேன்?

பழசெல்லாம் நியாபகம் வந்துடுச்சா? அட்லீஸ்ட் நியாபகப்படுத்திக்க நீ ட்ரை பண்ணுறியான்னு கேட்டிருக்கேனா? வீட்டுல இருக்க நேரம் நீ என் வைப்னு சொல்லி காமிச்சோ… இல்ல உனக்கு புரிய வைக்கவோ ட்ரை பண்ணியிருக்கேனா? காலையில ஆபீஸ் கிளம்பி போனா உனக்கு ஒரு போன் கூட பண்ணாம தான இருக்கேன்? உன்கூடவே இந்த வீட்டுல ஒண்ணா இருக்கேனே தவிற எந்த விதத்துலயாவது உன்னை டிஸ்டர்ப் பண்ணுறேனா?

யோசிக்கலையாம்… யோசிச்சு பார்க்கவாம்… அழாத… தயவு செஞ்சு அழாத… எவ்வளவோ கஷ்டப்பட்டு உன்னை கஷ்டப்படுத்தாம இருக்க மாக்ஸிமம் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன். அழுது நான் பண்ணுறது எல்லாம் வீண்னு ப்ரூவ் பண்ணாத”

டைனிங் டேபிள் மீது அவன் ஓங்கி அடிக்க இமைகளை வேகமாக மூடி திறந்ததில் குளம் கட்டியிருந்த அவள் கண்களிலிருந்து இரு துளி கண்ணீர் கண்ணகளில் வழிந்தோடியது.

அவன் பேச ஆரம்பித்தபோதே தன் மீதிருந்த சுய பச்சாதாபம் மறைந்திருந்தது. யோசித்து சலிப்படையும் சமயங்களில் சுலபமாக இந்த வீட்டிலிருந்து வெளியேறி இங்கே நடந்த எல்லாவற்றையும் மறந்துவிடலாம் என்று அவள் நினைத்தது சாத்தியமே இல்லையென்று அவன் கூற்று தெளிவாக்கியது.

தான் தன்னை பற்றி மட்டுமே சிந்தித்திருக்கிறோம் என்ற குற்றவுணர்வுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

யார் இவன்? தனக்கு சம்பந்தமில்லாதவனென்று ஒதுக்கிவிட முடியாது. தன் மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறான். அவன் சொன்னது போல் எந்த விதத்திலும் தன்னை தொந்தரவு செய்ததில்லை. தன்னிடம் நெருங்கி வர முயன்றதில்லை. என்னருகில் இருப்பது மட்டும் இவனுக்கு போதுமா?

அவனை இருக்கியணைத்து கதறியழ வேண்டும் போல் இருந்தது. கண்கள் மீண்டும் கலங்கத் துவங்க கடைசியாக அவன் கூறியது நினைவு வந்து அழுகையை விழுங்கினாள்.

பெருமூச்சுடன் இருக்கையை விட்டு எழுந்தான் விஷ்வா.

“உன் மூளைய கசக்கி பிழிஞ்சு பழச மட்டுமே யோசிச்சு பார்க்க நினைக்காத ஆராதனா. உன்னோட பாஸ்டுக்கும் ப்ரெசென்ட்டுக்கும் சம்பந்தம் இருக்கு. அத முதல்ல மனசுல ஆழமா பதிய வை. வீட்டுக்குள்ளயே தான் இருக்க. சுத்தி நடக்குற எல்லாத்தையும் கவனி. வெளில கூட்டிட்டு போகணும்னாலும் சொல்லு. கூட்டிட்டுப் போறேன்.

எல்லாமே புதுசா தெரியுதா… இட்ஸ் ஆல்ரைட்… புதுசாவே ஸ்டார்ட் பண்ணுவோம். முதல்ல தெரியாத யாரோ ஒருத்தர் வீடு… இவங்க யாரையும் இதுக்கு முன்னாடி பார்த்ததில்ல… தனியா இருக்கேன்… இப்படியெல்லாம் நெகட்டிவ்வா யோசிக்குறத நிறுத்து. பிரெண்ட் வீட்டுல தங்கியிருக்கேன்னு நெனச்சுக்கோ. ஒரு பையன் வீட்டுல போய் தங்குவாங்களான்னு கேட்காத. இப்படியெல்லாம் நினைக்க்கலன்னா இந்த ஜென்மத்துக்கு உன்னால தெளிவா யோசிக்க முடியாது”

மனம் லேசாக சிரித்தவள் எழுந்து, “ஓகே பிரெண்ட்ஸ்?” என்று வலது கையை நீட்டினாள்.

“அய்யய்யே… பிரெண்ட்ஸா? நான் ஒரு பேச்சுக்கு பிரெண்ட் வீடுன்னு சொன்னேன்… உன்கூட என்னால பிரெண்டா எல்லாம் இருக்க முடியாது. இது என்ன சினிமாவா? போடி… நீ என் வைப். முடிஞ்ச வரைக்கும் என்னை நான் கண்ட்ரோல் பண்ணிக்க ட்ரை பண்ணுறேன். உன்னை ஹர்ட் பண்ண மாட்டேன். அவ்வளவு தான் என்னால முடியும். ஆளப் பாருடா… பிரெண்ட்ஸாம்…”

முகத்தை சுளித்தபடி முன்னே செல்பவனை பார்க்க சிரிப்பாக இருந்தாலும் அவன் கூறிய விஷயம் மூளையை எட்டியது. அவனுடன் நட்பாகப் பழகலாம். ஆனால் அவன் தன் நண்பன் இல்லை.

அறை வாயிலுக்கு வந்தவுடன் விஷ்வா சிறிது தயங்கி நின்றான். அவன் பின்னால் வந்த ஆராதனாவும் இரண்டடி தள்ளி நின்றுவிட்டாள். திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தில் இருந்த கேள்வியை அவனால் படிக்க முடிந்தது.

“உன் பக்கத்துல தான் படுத்து தூங்கணுமா?”

“…”

“நான்… நான் மேல போய் தூங்கவா? நடுவுல தலைகாணி வெச்சாலும் நீ தூக்கத்துல என்கிட்ட நகர்ந்து வந்து படுத்துடுற… மேல… மேல கை வேற போடுற…”

தலை குனிந்து நின்றவளின் அருகில் வந்தான்.

“இவ்வளவு நேரம் நான் உனக்காக எவ்வளவு செய்யுறேன்னு சொன்னேன்… நிறைய விட்டுக் குடுக்குறேன். உன்னை தொந்தரவு பண்ணாம ஒதுங்கி இருக்கேன். மேல கை போடுறேன்னு சொல்லுற… அதுகூட தூக்கத்துல எனக்கே தெரியாம செய்யுறது தான். எவ்வளவு தூக்கமா இருந்தாலும் அதுக்கு மேல எதுவும் செய்யாம இருக்க அளவுக்கு என் மனச கட்டுப்படுத்தி வெச்சுக்க எனக்கு தெரியும். இன்னும் என்ன வேணா செய்யுறேன்… ஒரு நாளைக்கு என்னை எட்டு மணி நேரம் நிம்மதியா தூங்க மட்டும் விடு. நீ பக்கத்துல இல்லன்னா… எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது ஆராதனா”

“…”

“ப்ளீஸ்…”

ஒருவேளை அவள் மறுத்துவிட்டால் அவளுடன் தன்னால் வாதாட முடியாது. மறுப்பதற்கான அனைத்து உரிமையும் அவளுக்கு உண்டு. ஆனால் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி தனக்கில்லை என்று நினைத்தவன் திரும்பி வேகமாக அறைக்குள் சென்றுவிட்டான்.

ஆராதனாவின் மனதில் ஒரு நொடிப் பொழுதில் பல ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அங்கு நிற்காமல் அகன்றதிலிருந்தே விஷ்வா தன்னை வற்புறுத்தவில்லை என்பதை புரிந்துக் கொண்டாள். இப்போது முடிவெடுக்க வேண்டியது அவள் தான்.

மெத்தை மீது அமர்ந்திருந்த விஷ்வாவின் முகம் ஆராதனா அறைக்குள் வந்தவுடன் பிரகாசமடைந்தது.

“குட் நைட்”

மனம் நிறைந்திருக்க படுத்தவுடன் உறங்கிவிட்டான்.

ஆராதனா நின்ற இடத்திலிருந்தே அவன் முகத்தை சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தாள். உறக்கத்திலும் அவன் மனதின் மகிழ்ச்சியை முகம் பிரதிபலித்தது. மெல்ல நடந்து வந்து அவனருகில் படுத்தாள். இடையில் தலையணை வைக்கவில்லை. வைத்தும் பலனில்லை என்று நினைத்தவள் அவன் முகத்திலிருந்து பார்வையை விளக்கவில்லை.

“ஒருவேளை நிஜமாவே இவன என் லைப்ல மீட் பண்ணியிருந்தா எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பேன்? பார்த்தவுடனே பிடிச்சிருக்குமா? ஹாஸ்பிட்டல்ல முதல் முதல்ல பார்த்தப்போ பிடிச்சுதா என்ன?

ம்ம்ஹும்ம்… முதல்ல கோபம் வந்துது. இப்படி பக்கத்துல வரானேன்னு… அப்பறம் பயம் வந்துது. என்ன கத்து கத்துனான்… அப்பறம்? தெரியல… கோபம், பயம் ரெண்டுமே இல்ல. ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் இவன பத்தி நான் என்ன நினைக்குறேன்னு எனக்கு ஏன் தெளிவா புரிய மாட்டேங்குது?

எதுக்கு இவன் பக்கத்துல வந்து படுத்திருக்கேன்? அவன் சொன்னதாலையா? ஆனா கம்பெல் பண்ணலையே… நிஜமாவே எனக்காக எவ்வளவு யோசிச்சிருக்கான்? இவன முழுசா நம்புறேன். இப்போதைக்கு அது போதும்”

காலை கண்விழித்தபோது அருகில் விஷ்வா இல்லை. தினமும் ஆராதனாவே முதலில் எழுவாள். விழித்ததும் முதலில் காணும் முகமும் உறங்கும் முன் இறுதியாக காணும் முகமும் அவனுடையதாக இருக்கும். அதை இன்று தான் உணர்கிறாள். முகம் வாடிவிட எதற்காக தனக்கு முன்னால் எழுந்தான் என்று கொஞ்சம் கோபம் கூட வந்தது.

மெத்தையிலிருந்து எழுந்தவள் தான் போர்த்தியிருந்த ரஜாயையும் அவனுடையதையும் மடித்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள்.

அவள் வெளியே வந்தபோதும் அவனை அறையில் காணாது வீடு முழுவதும் தேடினாள். எங்கும் இல்லையென்றதும் கோபம் இன்னும் அதிகமானது. வெளியே வந்து தோட்டத்தை எட்டிப் பார்த்தாள். அவளுக்கு முதுகு காட்டி பெஞ்சில் அமர்ந்திருந்தான். வேகமாக சென்று அவன் முன்னால் நின்றாள்.

கண்களை மூடி எதிலோ லயித்திருந்தான். கோபம் மொத்தமும் காற்றில் கரைந்து காணாமல் போக அவன் முகத்தை பார்த்தபடி அருகில் அமர்ந்தாள்.

“என்ன இன்னைக்கு சீக்கிரம் எந்திரிச்சுட்ட?”

“ம்ம்…”

“டைம் ஆகலையா? கிளம்பாம இங்க வந்து உட்கார்ந்திருக்க?”

“இன்னைக்கு சண்டே லீவ்”

“ஒஹ்ஹ் ஆமால்ல… அப்பறம் எதுக்கு சீக்கிரம் எந்திரிச்ச?”

கண்களை மெல்லத் திறந்து அவளை திரும்பிப் பார்த்தான்.

“தினம் எனக்கு முன்னாடியே எந்திரிச்சு போயிடுற. அப்பறம் வந்து என்னை எழுப்புறதும் இல்ல. கல்யாணத்துக்கப்பறம் தினம் காலையில உன் முகத்த பார்த்து எந்திரிச்சே பழகிடுச்சு. ஆக்ஸிடென்ட்டுக்கு அப்பறம் ஒரு நாள் கூட அது நடக்கல. நேத்து நைட் திடீருன்னு தூக்கத்துல தோணுச்சு… உனக்கு முன்னாடியே அலாரம் வெச்சு எந்திரிச்சா என்னன்னு… அதான்”

“என் முகத்துல முழிச்சு என்ன பண்ண போற?”

குரல் உள்ளே சென்றுவிட திரும்பி நேராக அமர்ந்தாள்.

ஆழ மூச்செடுத்தவன், “டெய்லி மார்னிங் என்னை எழுப்பி விடுறியா?” என்றுக் கேட்டான்.

“நானா? அது ஒண்ணும் பெரிய வேலை இல்ல… ஓகே”

“நான் உன்கிட்ட இப்படி நிறைய கேட்குறேன் ஆராதனா. உனக்கு என்கிட்ட எதுவும் கேட்கத் தோணலையா? வீட்டுக்கு போகணும்னு ஆரம்பிக்காத. கடுப்பாகிடுவேன். உனக்குன்னு எதுவுமே வேணாமா? ஏதாவது கேளு”

“எனக்குன்னு… எனக்குன்னு என்ன விஷ்வா கேட்க? எனக்கு தெரியலையே… அப்படி ஏதாவது தோணுச்சுன்னா கேட்குறேன். சரி நான் உள்ளப் போறேன். ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணணும். நீ வரியா?”

“கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். நீ போ”

எழுந்து வீட்டினுள் வந்தவளின் கண்களில் ஹாலின் சோபா மீதிருந்த அவளுடைய மொபைல் பட்டது. அதை அவள் சீண்டுவதில்லை. விஷ்வா சொன்னது போல் அவனும் அவளுக்கு அழைப்பதில்லை. அதில் ரகசியம் ஒன்றுமில்லை என்றுத் தெரிந்தப் பிறகு அதை வைத்துக் கொண்டு வேறு என்ன செய்வதென்று எண்ணினாள். அவ்வபோது சார்ஜ் போடுவதோடு சரி.

இன்று ஏனோ அதை ஆராயத் தோன்றியது. போட்டோஸ் ஏற்கனவே பார்த்தாயிற்று. காண்டாக்ட்ஸ் எடுத்துப் பார்த்தாள்.

அஞ்சலி. முதல் பெயரிலேயே அவள் முகம் மலர்ந்தது. தாமதிக்காமல் உடனே கால் செய்தாள். மூன்று ரிங்கில் எடுக்கப்பட்டது.

“ஆராதனா? நிஜமா நீயாடி கால் பண்ணுற? அடேங்கப்பா அண்ணா எங்கயாவது உன்னை விட்டுட்டு ட்ரிப் போயிட்டாங்களா? என் நியாபகம் எல்லாம் வந்திருக்கு உனக்கு… தீபாலி எப்படி இருக்கா? நீ எப்படி டி இருக்க?”

தோழியின் உற்சாகம் அவளையும் தொற்றிக் கொண்டது. அவள் சொன்ன விஷயம் நெருடவும் செய்தது. ‘நான் அவளுடன் அதிகம் பேசுவதில்லையா?’ கேள்வியை பின்னுக்குத் தள்ளி பேச ஆரம்பித்தாள்.

“நான் சூப்பரா இருக்கேன்டி. அதெல்லாம் விடு. இன்னைக்கு நம்ம கேங் மொத்தமும் என் வீட்டுக்கு வரீங்க… மத்த 2 பேருக்கும் நீயே கால் பண்ணி சொல்லிடு. பத்து மணிக்கு வீட்டுல இருக்கணும். நான்… நான் எங்க வீட்டுல இல்லடி. விஷ்வா வீடு தெரியுமா?”

“விஷ்வாவா? அண்ணாவ பேரு சொல்லி கூப்பிடுறியா? இது எப்பையிலிருந்து? நீ அங்க இல்லாம வேற எங்கடி இருப்ப? 3 பேரு எப்படிடி வர முடியும்? செல்வி கல்யாணம் ஆகி கொயம்பத்தூர்ல இருக்காடி. மறந்துட்டியா? நான் வரணும்னா ரிஷிய கொண்டு போய் என் மாமியார் வீட்டுல விட்டுட்டு வரணும்டி. வருண் அவங்க பிரெண்ட பார்க்கப் போறேன்னு சொன்னாங்க”

யார் வருண்? யார் ரிஷி? செல்விக்கு எப்போது திருமணம் ஆகியது? மாமியார் வீடென்று சொல்கிறாளே… இவளுக்கு எப்போது திருமணம் ஆகியது? தலை சுற்ற, “என்னமோ பண்ணு. சீக்கிரம் வந்து சேருங்க” என்றுக் கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

“அந்த மொபைல் யூஸ் பண்ணுறியா? பரவாயில்லையே…”

“கிண்டல் பண்ணுறியா? என் மொபைல் நான் யூஸ் பண்ணாம? விஷ்வா… நீ சொன்னல்ல… எனக்குன்னு ஏதாவது கேக்க சொல்லி… என் பிரெண்ட்ஸ் இன்னைக்கு வீட்டுக்கு இன்வைட் பண்ணியிருக்கேன். சாரி… உன்கிட்ட கேட்காம… இங்க வர சொல்லிட்டேன். நான்…”

“எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. யாரு… அந்த சுகன்யாகிட்ட தான் பேசுனியா?”

“சுகன்யாவ உனக்கு எப்படி தெரியும்? அஞ்சலிகிட்ட பேசுனேன்”

“ஒஹ்ஹ்” ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

தன்னை சுற்றி நடப்பவற்றை புரிந்துக் கொள்ள முடியாமல் தடுமாறினாள் ஆராதனா.

நிழலே நிஜமாய் – 18

ஆராதனா சமையலறையில் இருந்தாள். உடல் மட்டுமே அங்கிருந்தது. தன் பள்ளி, கல்லூரி நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்தாள்.

விஷ்வா ஓரிடத்தில் அமராமல் ஹாலில் வட்டமடித்துக் கொண்டிருந்தான். கையில் ஆராதனாவின் மொபைல் இருந்தது. ஒரு மனம் ‘செய்’ என்க மறு மனமோ ‘அவள் விஷயத்தில் அதுவும் அவளுக்கு தெரியாமல் தலையிடாதே’ என்று எச்சரித்தது.

சோபாவில் அமர்ந்து கண்களை இறுக மூடித் திறந்தவன் அஞ்சலியின் எண்ணிற்கு அழைத்தான். அவள் சீக்கிரம் எடுக்க வேண்டும். அவன் பேசி முடிக்கும் வரை ஆராதனா வந்துவிடக் கூடாது. செய்யப் போகும் செயலில் குற்றம் இல்லையென்று எண்ணினாலும் அதில் ஏதோவொரு திருட்டுத்தனம் ஒளிந்திருப்பதாகவே தோன்றியது.

“சொல்லுடி கிளம்பிட்டுதான் இருக்கேன். சுகன்யாவும் வரேன்னு சொல்லிட்டா. அவளும் ரெடி ஆகிட்டு இருக்கா…”

தன்னை பேச விடாமல் தோழியை காணப் போகும் மகிழ்ச்சியில் படப்படவென்று அவள் அடுக்கிக் கொண்டேப் போக தொண்டையை செருமி ஆரம்பித்தான் விஷ்வா.

“நான் விஷ்வா பேசுறேன். ஆராதனாவோட…”

“சொல்லுங்கண்ணா”

அவள் நிதானத்திற்கு வந்துவிட்டாள் என்றுப் புரிய மேலும் தொடர்ந்தான்.

“நான் ஷார்ட்டா சொல்லிடுறேன். ஆராதனாவும் நானும் கார்ல போறப்போ ஒரு ஆக்ஸிடென்ட்…”

“ஐயோ என்னாச்சு…”

“இப்போ இல்ல அஞ்சலி. கொஞ்ச நாள் முன்னாடி. நடுவுல எதுவும் பேசாம நான் சொல்லுறத கேளுங்க”

“சரிண்ணா”

“அவளுக்கு பழசெல்லாம் மறந்துப் போச்சு. பழசுன்னா… எது வரைக்கும்னு கரெக்டா தெரியல. எங்க கல்யாணம், நான், என் பேமிலி… எல்லாம் மறந்துப் போச்சுன்னு மட்டும் தெரியும்”

“எப்படிண்ணா? தீபாலி கூடவா?”

“ஹ்ம்ம்… எல்லாமே. அப்பா மட்டும் வீட்டுல இருக்க சொல்லிட்டு மத்த எல்லாரையும் அனுப்பிட்டேன். தீபாலி ஆராதனா வீட்டுல இருக்கா. அவ பேரன்ட்ஸ் பார்த்துக்குறாங்க. அவ உங்களுக்கு கால் பண்ணியிருக்கா. சோ ஸ்கூல் டேஸ் காலேஜ் டேஸ் நியாபகம் இருக்குன்னு நினைக்குறேன்”

“நாங்க வேணா இன்னைக்கு வராம…”

“இல்லல்ல… நீங்க வரணும். எனக்கு… எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”

“கண்டிப்பா செய்யுறேன்”

“அவ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தா… கல்யாணம் பிக்ஸ் ஆனப்போ என்ன மைன்ட் செட்ல இருந்தா… எதப் பத்தியும் எனக்கு ஐடியா இல்ல. இன்னைக்கு இங்க வரப்போ அத அவளுக்கு நியாபகப் படுத்தணும்”

“கல்யாணத்தப்போவா? அதெல்லாம் எதுக்குண்ணா? அதுக்கப்பறம் அவ எப்படி இருந்தான்னு சொல்லிப் புரிய வெச்சு…”

“என் கெஸ்படி அதெல்லாம் ஏற்கனவே அவ பேரண்ட்ஸும் என் அப்பாவும் சொல்லியிருப்பாங்க. கல்யாணத்துக்கு அப்பறம் அவ எப்படி இருந்தான்னு என்னாலக் கூட அவளுக்கு சொல்ல முடியும். என்னை பார்க்குறதுக்கு முன்னாடி… என்னை பார்க்குறப்போ… அவ என்ன நெனச்சான்னு அவளுக்கு நியாபகப்படுத்துங்க. போதும்”

“போதுமா? இந்த அண்ணா ஏன் சொல்லுறதையே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க… இருக்க சிக்கல இன்னும் பெருசாக்குறதுக்கு வழி சொல்லுறாங்களே…”

“ஹலோ?”

“சரிண்ணா… பேசும்போது அப்படியே இதையும் சேர்த்து சொல்லிடுறோம்”

“தேங்க்ஸ். வெக்குறேன்”

மனதில் நிம்மதிப் பரவினாலும் சிறு குற்றவுணர்வும் தோன்றதான் செய்தது. பெருமூச்சொன்றை வெளியேற்றி மொபைலை கீழே வைத்தான்.

“விஷ்வா. சாப்பிட வா”

முகம் புன்னகையில் மலர எழுந்து டைனிங் ஹாலிற்கு சென்றான். தட்டு வைத்து உணவு பரிமாறினாள். ஆனால் அவள் கவனம் தன் மீது இல்லையென்பதை உடனே கண்டுக் கொண்டான்.

“பெருசா நான் உன் ஹஸ்பன்ட்னு உனக்கு நியாபகப்படுத்துற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன் பேச மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ அஞ்சலிகிட்ட இப்படி கேட்டது சரியா?

இது தப்புன்னு ஏன் நினைக்கணும். நான்தான எல்லாத்தையும் முதல்லேருந்து ஆரம்பிக்கலாம்னு சொன்னேன். அப்போ கல்யாணத்துலேருந்து தான் ஆரம்பிக்கணும். நடக்குறது நடக்கட்டும். இப்படியே அவ என்னை மறந்துட்டான்னு என்னை நானே எத்தனை நாளைக்கு சமாதானப்படுத்திக்க முடியும்? என் லைப். அத நாசமாக நான் விட மாட்டேன். எனக்கு ஆராதனா வேணும்”

“என்ன இன்னும் சாப்பிடாம உட்கார்ந்திருக்க?”

“ஹான்… அது… நீயும் வா. டெய்லி ப்ரேக்பாஸ்ட் சேர்ந்து உட்கார்ந்து தான சாப்பிடுறோம்”

“ஒரு நிமிஷம். அடுப்ப ஆப் பண்ணிட்டு வந்திடுறேன். முன்னாடியே சொல்ல வேண்டியது தான? இப்படியா சாப்பாட ஆற விட்டுட்டு உட்கார்ந்திருப்ப?”

சமையலறையுள் நின்று தன்னிடம் பேசியபடியே வேலை செய்யும் மனைவியை பார்த்தான். “நீ இங்கயே என் கூடவே இருக்கணும்” மனம் ஏங்கியது.

“லஞ்ச் வேற செய்யணும். அவங்க வரதுக்குள்ள வேலை எல்லாம் முடிச்சா தான் ப்ரீயா உட்கார்ந்து பேச முடியும்”

அருகில் அமர்ந்து வேக வேகமாக அவள் உண்ண, “நீ ஏன் சமைக்குற? ரெஸ்ட் எடு. ரிலாக்ஸ்டா உட்கார்ந்து பேசு. லஞ்ச் ஆர்டர் பண்ணிக்கலாம். உன் பிரெண்ட்ஸ் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டாங்க” என்றான்.

“விஷ்வா…”

“ம்ம்?”

“அவங்க வரதுல நிஜமாவே உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையா?”

“இல்ல. ஏன்? நான் பாட்டுக்கு நம்ம ரூம்ல இருக்கேன். எனக்கும் கொஞ்சம் வர்க் இருக்கு”

“தேங்க்ஸ்”

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்?”

“இல்ல… கலயாணத்துக்கு அப்பறம் யாரோட ஹஸ்பன்ட்டாவது நம்ம பிரென்ட்ஷிப்ப பிரிக்க நெனச்சா உடனே டிவோர்ஸ் பண்ணிடணும்னு ஸ்கூல் டேஸ்லயே நாங்க பேசிப்போம். அஞ்சலிகிட்ட பேசுனதுலேருந்து பழசையெல்லாம் யோசிச்சுப் பார்க்க ட்ரை பண்ணேன்…”

விஷ்வாவிற்கு புரை ஏறியது. “அடிபாவிகளா… எவ்வளவு அசால்ட்டா சொல்லுறா?”

“பார்த்து விஷ்வா… மெதுவா சாப்பிடு”

தண்ணீர் க்ளாஸை அவனிடம் நீட்டியவள், “இப்போ நீ இத என்னை இம்ப்ரெஸ் பண்ணுறதுக்காக சொல்லலன்னு எனக்கு நல்லா தெரியும். கண்டிப்பா நீ எங்க பிரென்ட்ஷிப்புக்கு குறுக்க வந்திருக்க மாட்ட. அப்பறம் அஞ்சலி ஏன் நான் கால் பண்ணுறதே இல்லன்னு சொன்னா? நான் எப்படி அவங்களோட எல்லாம் பேசாம இருந்தேன்?” என்று யோசித்து குழம்பினாள்.

தோழிகள் வந்தப் பிறகும் குழப்பங்கள் தொடர யாரிடம் எதிலிருந்து துவங்குவதென்று யோசித்துக் கொண்டிருந்தாள். அஞ்சலியும் சுகன்யாவும் நூறாவது முறையாக ஹாலை சுற்றிப் பார்த்தனர். ஆராதனா தரையை விட்டு பார்வையை விளக்கவில்லை.

“வீடு நீட்டா வெச்சிருக்க”

“ம்ம்? ஆமா… நான்… இருங்க வந்துடுறேன்”

ஆராதனா எழுந்து உள்ளே சென்றதும், “இப்போ எதுக்குடி இத சொன்ன?” என்றுக் கேட்டாள் அஞ்சலி.

“எவ்வளவு நேரம் அமைதியாவே உட்கார்ந்திருக்குறது?”

“வேற ஏதாவது பேச வேண்டியது தான சுகன்யா?”

“விஷ்வா அண்ணா கால் பண்ணாங்கன்னு நீ சொன்னப்போவே எனக்கு பக்குன்னு இருந்துது. அவங்க என்னைக்குடி நம்மகிட்ட எல்லாம் பேசியிருக்காங்க? இவளுக்கு நியாபகம் இல்லன்னு வேற சொன்னாங்கன்ற… எது நியாபகம் இருக்குன்னே தெரியாம…”

“அது புரியாமதான்டி நானும் அமைதியா இருக்கேன். சரி அவளாவது பேசுவான்னா…”

“விடு… அண்ணாவ பார்க்கதான் அவங்க ரூமுக்கு போயிருக்கா. என்ன பேசுறதுன்னு கேட்டுட்டு வருவாளா இருக்கும்”

“சிரிக்காத சுகன்யா. ஆனா இவ செஞ்சாலும் செய்வா… அநியாயத்துக்கு எல்லாத்தையும் அண்ணாகிட்ட கேட்டு செய்யுறவளாச்சே”

லேப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா ஆராதனா அறைக்குள் வந்ததும் நிமிர்ந்து கேள்வியாகப் பார்த்தான்.

“அவங்க வந்துட்டாங்க”

“ம்ம்ம்… அவங்க வீட்டுக்குள்ள வரத பார்த்துட்டுதான நான் உள்ள எந்திரிச்சு வந்தேன்?”

“இல்ல… வந்து… வீட்டுக்கு வந்திருக்காங்க. வாங்கன்னு சொல்ல மாட்டியா?”

“உன்ன பார்க்கதான வந்திருக்காங்க”

குனிந்து வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டான். ஆராதனா இன்னும் அங்கேயே நிற்க நிமிர்ந்து, “என்ன?” என்றான்.

எதுவும் பேசாமல் அவனை பார்த்தபடியே நின்றான். கண்களை மூடித் திறந்து அவளை அருகே அழைத்தான். வேகமாக சென்று மெத்தையில் அவனருகில் அமர்ந்து ஏதோ சொல்ல வாயை திறந்தாள்.

“அவங்க உன் பிரெண்ட்ஸ் தான? க்ளோஸ் பிரெண்ட்ஸ் வேற… உன்ன பத்தி சொல்லு. நீ இப்போ என்ன நிலமையில இருக்கன்னு சொல்லு. அவங்கள பத்தி கேட்டு தெரிஞ்சுக்கோ. இதுல ஆரம்பிச்சாலே அப்பறம் உங்க அரட்டைய நிறுத்த முடியாது. கொஞ்ச நேரம் கழிச்சு லஞ்ச் ஆர்டர் பண்ணுறேன். சாப்பிடுங்க. அவங்களுக்கு எப்போ கிளம்பணுமோ கிளம்பட்டும். நான் ரூம் விட்டு வெளிய வர மாட்டேன். மொபைல் கையில வெச்சுக்கோ. ஏதாவது சொல்லணும்னா கால் பண்ணுறேன். போ… பேசு”

அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் லேசாக கலங்கத் துவங்க, “தேன்க் யூ” என்றாள். பதிலுக்கு லேசாக புன்னகைத்தான்.

இரு கரங்களையும் நீட்டி அவன் கன்னங்களை கிள்ளி ஆட்டி, “தேன்க் யூ சோ மச் விஷ்வா” என்றுக் கூறி சிரித்தவள் துள்ளலுடன் வெளியே சென்றாள். அவனுக்குதான் ஒரு நொடி எல்லாம் ஸ்தம்பித்து நின்றுப் போனது.

அறைக்குள்ளிருந்து மலர்ந்த முகத்துடன் வந்த தோழியை கண்டவர்கள் பார்வை பரிமாற்றம் செய்துக் கொண்டனர்.

“எனக்கு எல்லாம் மறந்து போச்சு. எது, எவ்வளவு, எப்போ வரைக்கும்… எனக்கே சரியா தெரியல. இந்த வீடு, எனக்கு கல்யாணம் ஆனது எல்லாம் சுத்தமா நியாபகம் இல்ல. காலையில நீ சொன்ன எந்த விஷயமும் எனக்கு தெரியாது அஞ்சலி. உங்கள பத்தி சொல்லுங்கடி”

சுகன்யா நக்கலாக சிரிக்க, “நீ எதுக்கு எரும சிரிக்குற?” என்றாள் ஆராதனா.

“இல்ல… நாங்க வந்து கால் மணி நேரம் ஆச்சு. மேடம்கு பேச்சே வரல. ஒரு ரெண்டு நிமிஷம் உள்ளப் போயிட்டு வந்தீங்க… ஹ்ம்ம்… அண்ணா அப்படி என்னம்மா செஞ்சாங்க?”

ஆராதனா சோபாவில் இருந்த சிறிய தலையணையை எடுத்து அவளை அடிக்க ஆரம்பிக்க அதன் பிறகு விஷ்வா கூறியது போல் அவர்கள் அரட்டையை நிறுத்த முடியவில்லை. மதிய உணவு வந்தபோது விஷ்வா அறைக்குள்ளிருந்தே அவள் மொபைலிற்கு கால் செய்து கூறினான். அப்போதும் அவனுக்கான உணவை எடுத்து வந்து தர சொல்லிவிட்டான்.

கவரையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வந்தவள், “ஒழுங்கா சாப்பிடு. சாரி உன்கூட உட்கார்ந்து சாப்பிட முடியல. வேற எதுவும் வேணும்னா கூப்பிடு என்ன…” என்று அவசரமாகக் கூறிச் சென்றுவிட்டாள்.

காலையில் செய்ததை அவள் உணர்ந்து செய்யவில்லை என்று நினைத்தவன் லேப்பை அருகில் வைத்துவிட்டு தண்ணீர் அருந்தினான்.

சுகன்யா ஜாடை காட்ட சரியென்று தலையசைத்த அஞ்சலி, “ஏன் ஆராதனா… அண்ணா உன்னை பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு நீ என்ன பண்ணன்னு உனக்கு நியாபகம் இருக்கா?” என்றாள்.

“ம்ம்கும்… அடபோடி… ஹேய்… உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ல? சொல்லுங்க… அங்கிள், விஷ்வா… அப்பறம் ஒரு ஊரே வந்துச்சா? பாட்டெல்லாம் பாட சொன்னாங்களா என்ன? நான் சாரீ கட்டினேனா? காபி எல்லாம் குடுத்தேனா? இன்னும் என்னென்ன காமெடி எல்லாம் நடந்துது?”

“இரு இரு… எதுக்கு இப்படி கேள்வியா கேட்குற? அண்ணாவோட அப்பா இன்னும் கொஞ்சம் ரிலேடிவ்ஸ் கூட வந்து பர்ஸ்ட் பார்த்துட்டு போனாங்க. அப்போ உன்னை சாரீ கட்ட கன்வின்ஸ் பண்ண நாங்களும் உங்கம்மாவும் பட்ட பாடு…”

“ஆனாலும் உனக்கு அந்த டைம்ல பிடிவாதம் ரொம்ப ஜாஸ்தி ஆராதனா. எல்லாரையும் படுத்தி எடுத்துட்ட”

“அப்போ விஷ்வா வரலையா?”

“இல்ல. அண்ணா அப்பறம் தனியா வந்து பார்த்தாங்க”

“ஏன்?”

“அவங்க அப்பா பார்த்தா போதும்னு சொல்லிட்டாங்களாம். பொண்ண நேர்லயே பார்க்காம எப்படி கல்யாணம் பண்ணிப்பன்னு கேட்டு 2 நாள் கழிச்சு அவங்கப்பா அவங்கள அனுப்பி வெச்சாங்க”

“ஹ்ம்ம்… மறுபடியும் சாரீ கட்டி…”

“இல்லடி”

“பின்ன?”

சுகன்யாவும் அஞ்சலியும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் எதையோ கூற தயங்குவது போல் இருக்க ஆராதனா அவர்களை கூர்ந்து கவனிக்கத் துவங்கினாள்.

“எதையாவது மறைக்குறீங்களா?”

“அப்படியெல்லாம் இல்லடி”

“சொல்லு அஞ்சலி. அவளுக்கு தெரிஞ்ச விஷயம் தான? நம்ம ஒண்ணும் புதுசா சொல்லப் போறதில்லையே”

“உனக்கு கல்யாணம் பண்ணிக்குறதுல இஷ்டம் இல்லடி. நீ உங்க அப்பாவோட பிசினஸ் பார்த்துக்கணும்னு ஆசைப்பட்ட. படிச்சு முடிச்சதும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த. விஷ்வா அண்ணா வந்தப்போ அவங்ககிட்ட எப்படியாவது பேசி கல்யாணத்த நிருத்திடணும்னு சொன்ன. சுடி தான் போட்டு நின்ன. அண்ணாகிட்ட சரியா பேசகூட இல்ல. தனியா பேசுனப்போ நீ என்ன சொன்ன அண்ணா என்ன சொன்னாங்கன்னு எங்களுக்கு தெரியாது. அதெல்லாம் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்ட. ஆனா அதுக்கப்பறம் கல்யாணம் வேண்டாம்னெல்லாம் அடம் பிடிக்கல”

“அப்படி என்னடி பேசுனீங்க?”

ஆராதனா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“சொல்லுடி”

“எனக்கு விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையா?”

“அப்படியெல்லாம் இல்ல ஆராதனா. உனக்கு கல்யாணத்த தள்ளிப் போடணும். அவ்வளவுதான். பிடிக்கலன்னா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்ட”

“பிடிக்காமதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேனா?”

“லூசு மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்காத. அதான் அவ சொல்லுறால்ல? கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னவ கல்யாணத்துக்கு அப்பறம் எங்கள எல்லாம் கண்டுக்கக் கூட இல்ல. இப்போ வரைக்கும் அண்ணாவ விட்டு எங்கயும் நகர மாட்ட. இப்போகூட உனக்கு இந்த மறதி வரலன்னா எங்களுக்கு கால் பண்ணியிருப்பியா?”

“அப்போ நான் மாறிட்டேனா?”

அஞ்சலியின் மொபைல் அடிக்க காலை அட்டென்ட் செய்து சற்று தள்ளி சென்றாள்.

“ஆமா நீ மாறிட்ட. அண்ணா அப்படி என்ன செஞ்சாங்கன்னுதான் எங்களுக்கு புரியல. என்ன பண்ணாங்க சொல்லு”

“போடி… எனக்கு அதெல்லாம் தெரியாது”

அவர்கள் அருகில் வந்த அஞ்சலி, “ரிஷி அழ ஆரம்பிச்சுட்டானாம். இனி என் மாமியாரால அவன தனியா சமாளிக்க முடியாதுடி. நாங்க கிளம்புறோம் ஆராதனா. லேட் ஆகிடுச்சு” என்று பரபரத்தாள்.

“ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாம்மா… அண்ணாவ மறந்த இந்த கொஞ்ச நாளாவது எங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணு”

“ரொம்ப பண்ணாத. கண்டிப்பா வரேன். ப்ரீயா இருக்கப்போ வீட்டுக்கு வாங்கடி. அடுத்த வாட்டி குட்டீஸ் கூட்டிட்டு வாங்க”

“கூட்டிட்டு வரோம். பை டி. அண்ணாகிட்ட சொல்லிடு”

வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தாள். காரில் ஏறப் போன சமயம் சட்டென்று ஆராதனாவின் அருகில் வந்த அஞ்சலி, “காலையில அண்ணா எனக்கு கால் பண்ணாங்க. எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் உனக்கு பழச எல்லாம் நியாபகப்படுத்த சொன்னாங்க. அப்போ உனக்கு கல்யாணத்துலயே இஷ்டம் இல்லன்னு எனக்கு தெரியும். பழச பத்தி பேசலன்னு சொன்னேன். இருந்தாலும் அவங்கக் கேட்கல. எதுவா இருந்தாலும் பரவாயில்ல சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க. நாங்க சொன்னத யோசிச்சு குழப்பிக்காத. பை. அப்பறம் கால் பண்ணுறேன்” என்றுக் கூறி சென்றாள்.

நிழலே நிஜமாய் – 19

விஷ்வா ஆராதனாவின் வீட்டின் முன்னால் காரை நிறுத்தினான். திருமணத்திற்குப் பிறகு வருடத்திற்கு ஒருமுறை அவன் இங்கு வந்து தங்குவதே அரிது. இப்போது தினம் வருகிறான். மகளை காணாது மனம் தவிக்க அவனுக்கு வேறு வழியில்லாமல் போனது.

இன்றும் தீபாலி அதே கேள்வியைக் கேட்பாள். தினம் ஒரு பதில். ஏதோவொரு சமாதானம். அவன் கூற்றை அவனுடைய மனமே ஏற்காதபோது மகளை எப்படி சமாளிப்பதென்ற கலக்கம்.

“ஒரே ஒரு தடவ அம்முவ வந்து பார்த்துட்டு போனாதான் என்ன? நான் அவகிட்ட வேற எதுவுமே கேட்கலையே… இதையும் கேட்க மாட்டேன். பார்க்கலாம். அவளுக்கா என்னைக்கு தோணுதோ வரட்டும்”

வீட்டிற்குள் நுழையும் மாப்பிள்ளையை கண்ட ஹரிகிருஷ்ணன் எழுந்து வந்தார். வரவேற்க தான். ஆனால் மாப்பிள்ளையின் முகம் காணும் தைரியம் இல்லாமல் போனது. மரியாதை நிமித்தம் எழுந்து வந்துவிட்டவர் தலை குனிந்தபடியே தலையசைத்து விஷ்வாவின் பின்னால் நடந்தார்.

“வாப்பா…” என்ற சந்திரனும் அதற்கு மேல் பேசவில்லை. நேற்று பேத்தியை காண வந்தவரை இப்போது அவனுடன் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும். அவரும் தயாராய் இருந்தார்.

“டாடி… இன்னைக்கு ரன்னிங் ரேஸ்ல அம்மு தான் பர்ஸ்ட் தெரியுமா?”

ஓடி வந்த மகளை தூக்கி, “சூப்பர் டா. டாடி சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க” என்று பான்ட் பாக்கெட்டிலிருந்து சாக்லேட் ஒன்றை எடுத்து நீட்டினான்.

“தான்க் யூ டாடி” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் அவனுக்கு பின்னால் தேடினாள்.

“மம்மி இன்னிக்கும் வரலையா? ஏன் டாடி வரல?”

“நான் போய் காபி எடுத்துட்டு வரேன்” என்ற சரண்யா அங்கிருந்து நகர்ந்துச் சென்றார். அவ்வளவு நேரம் பேத்தியின் பேச்சை கேட்டு பெருமிதத்துடன் நின்றிருந்தவரின் முகம் விழுந்துவிட்டது.

ஆராதனாவின் பெற்றோர் அனுபவிக்கும் வேதனையும் தன்னை காணும்போது அவர்களுக்கு உண்டாகும் சங்கடமும் விஷ்வாவிற்கு புரிந்தே இருந்தது. நேரடியாக எதையும் பேச அவர்கள் தயக்கம் காட்டும்பொழுது தேவையில்லாமல் பேசி அவர்களை மேலும் வறுத்த வேண்டாம் என்றெண்ணி அவனும் அமைதி காத்தான்.

மகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அவன் வாய் திறந்தபொழுது அவனுடைய மொபைல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். ஆராதனா அழைத்திருந்தாள்.

“சொல்லு”

“எங்க இருக்க?”

“ஏன்?”

“இல்ல… எப்போ வருவன்னு கேட்க தான் கூப்பிட்டேன்”

“தினம் எத்தன மணிக்கு வரேனோ அப்போ வருவேன். இன்னைக்கு என்ன புதுசா கேட்குற?”

“அது… ஒண்ணுமில்ல”

“…”

“…”

அழைத்திருப்பது மகளென்று ஊகித்த பெற்றோருரின் மனம் பரிதவித்தது. அம்முவை அவள் வந்து காணாதது அவர்களுக்கு கோபத்தைக் காட்டிலும் அதிக வருத்தத்தை தந்தது. விஷ்வா அந்த வீட்டிற்கு வரும் நேரம் மட்டுமே அம்முவை சமாதானப்படுத்தினான். ஆனால் கூடவே இருக்கும் தாத்தா பாட்டியின் நிலை அவனை விட மோசமானதாக இருந்தது.

ஆராதனா பேத்தியிடம் பேச வேண்டும் என்று சந்திரனும் ஆசைப்பட்டார்.

“வெச்சுடவா?”

“ஹான்… ம்ம்… நீ…”

“என்ன?”

“அது வந்து… எங்க வீட்டுக்கு போகலையா?”

“…”

“எங்க வீட்டுக்கு போனா… அம்முகிட்ட போன் குடுக்குறியா?”

“குரலே வெளில வர மாட்டேங்குதே… எதுக்கு அம்முகிட்ட போன் குடுக்கணும்?”

“மம்மி பேசுறாங்களா டாடி? அம்மு பேசணும்”

அப்போதும் விஷ்வா மொபைலை காதிலிருந்து எடுக்காமல் இருக்க, “குடுங்க டாடி” என்று அம்மு அதை பிடுங்க முயன்றாள். மறுமுனையில் ஆராதனாவும், “அவ தான் கேட்குறாளே… குடு ப்ளீஸ். நான் பேசணும்” என்றாள் இரஞ்சுதலாக.

மொபைலை காதிலிருந்து எடுத்து அம்முவின் காதில் வைத்தான்.

“மம்மி… ஏன் மம்மி நீங்க வரல? டாடி டெய்லி வராங்க. மம்மி ஒரு நாள் கூட வரல… அம்மு கூட விளையாட…”

பேசியபடியே தந்தையின் கையிலிருந்து இறங்கி அவள் வெளியே சென்றுவிட அதற்கு மேல் அவர்கள் பேச்சு காதில் விழவில்லை.

அவ்வீட்டில் அவன் இருந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் அம்முவை கையில் பிடிக்க முடியவில்லை. குழந்தை மனம் தான் எத்தனை மென்மையானது. எதிர்ப்பார்ப்பில்லாத அன்பை செலுத்தவும் தெரியும், சின்ன சின்ன செய்கைகளுக்கு குதூகலிக்கவும் தெரியும்.

ஆராதனா என்ன பேசினாள் என்று தெரியாது. அதை அவன் தெரிந்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. அவனை பொறுத்தவரை அவளுடைய மகளுடன் அவள் பேசிவிட்டாள். பேச வேண்டும் என்றாவது தோன்றியதே… அதுவரை சந்தோஷம்.

வீட்டிற்கு திரும்பி வரும் வழி முழுவதும் இதை குறித்து அவளிடம் எதுவும் பேசக் கூடாது என்றெண்ணினாலும் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணத்தை அறிந்துக் கொள்ள விரும்பினான். அருகில் அமர்ந்திருந்த தந்தை ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதைக் கண்டு அவனும் எதுவும் பேசவில்லை.

நேற்று அஞ்சலியும் சுகன்யாவும் சென்றப் பிறகு நீண்ட நேரத்திற்கு ஆராதனா ஹாலிலேயே அமர்ந்திருந்தாள். அவர்கள் அவளிடம் என்ன சொன்னார்கள் என்று தெரியாதபோதும் தான் கேட்டுக் கொண்டதன் பேரில் தங்கள் திருமணத்தைக் குறித்து பேசியிருப்பார்கள் என்று உறுதியாக நம்பினான். அவளை தொந்தரவு செய்யாது அறைக்குள்ளேயே அமர்ந்துவிட்டான். இரவும் அவள் உறங்குவதற்கு வெகு நேரமானது.

இன்றும் காலை அவன் புறப்பட்டு செல்லும்வரை மௌனம் சாதித்தாள். தந்தை இல்லாததால் மதிய உணவை வெளியே சாப்பிட்டுக் கொள்வதாகக் கூறிச் சென்றுவிட்டிருந்தான்.

ஆராதனா வாசலில் நின்றிருந்தாள். “ஏன்மா இங்க நிக்குற? உள்ள வா” என்ற சந்திரன் முன்னே சென்றார். விஷ்வா காரிலிருந்து இறங்கி நேரே உள்ளே சென்றுவிட்டான்.

பேச மாட்டானா? திரும்பியும் பார்க்கவில்லையே… மனம் ஏங்க தளர்ந்த நடையுடன் உள்ளே வந்தாள். சந்திரனும் விஷ்வாவும் அவரவர் அறையில் இருந்தனர். தேநீர் தயாரித்து அவள் வெளியே வந்தபோது அவர்கள் வீட்டினுள் இல்லை.

ட்ரேயுடன் தோட்டத்திற்கு சென்றாள். கோப்பைகளை எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் பேச்சை தொடர அவள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

“என்னம்மா?”

“அது… ஏன் எப்பயும் நீங்க ரெண்டு பேரும் தனியா உட்கார்ந்து டீ குடிக்குறீங்க? அதும் கார்டன்ல?”

“தினம் செய்யுறது தான?”

“இல்ல… எனக்கு தெரியக் கூடாதுன்னு…”

“ச்சச்ச… அப்படி எதுவும் இல்ல ஆராதனா. எங்களுக்கு பிசினஸ் பத்தி பேச… குடும்பத்த பத்தி பேச ஒரு அரை மணி நேரம். அவ்வளவுதான். நாள் பூரா ஓடிக்கிட்டே இருக்கான். கொஞ்சம் ரிலக்ஸ்டா உட்கார்ந்து பேசுறதுக்காக கார்டன்ல உட்காருறோம். ரகசியம் எதுவும் இல்லம்மா”

“ஒஹ்ஹ்…”

அப்போதும் அவள் அங்கேயே தயங்கி நிற்பதை கண்ட விஷ்வா, “அப்பா சொன்னதுல நம்பிக்கை வரலையா?” என்றான்.

“நம்பாம இல்ல. எனக்கும் போர் அடிக்குது. நாள் முழுக்க யாரோடையும் பேசாம வீட்டுக்குள்ளயே தான் இருக்கேன். இப்பயும் போய் தனியாதான்… வந்து… ரகசியம் எதுவும் இல்லன்னா நானும் உங்க கூட உட்கார்ந்து டீ குடிக்கவா?”

விஷ்வா சட்டென்று அமைதியாகிவிட்டான். இதை எப்படி யோசிக்காமல் விட்டோம்? எப்போதும் அவள் மீது குறைப்படும் நமக்கு அவள் அனுபவிக்கும் தனிமை எப்படி புரியாமல் போனது? அவன் யோசனையில் இருக்க, “உட்காரும்மா” என்றார் சந்திரன்.

அவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சிற்கு அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து தேநீர் பருக ஆரம்பித்தாள். அவர்கள் பேச்சு நின்றிருந்தது. ஆராதனா மெல்ல அவர்களை திரும்பிப் பார்த்தாள்.

“தினம் இப்படி தான் தனியா பேசுவோம்னு சொல்லுறீங்க… அப்போ இந்த ஆக்ஸிடெண்டுக்கு முன்னாடி கூட இப்படி தானா?”

இப்போது சந்திரனுக்கு பதில் சொல்வதில் தயக்கம் தோன்றியது.

“ஆமா ஆராதனா. உங்க கல்யாணத்துக்கு முன்னாடிலேருந்தே ஈவ்னிங் டீ மட்டும் நாங்க பேசிட்டே தனியாதான் குடிப்போம். அப்போ வீட்டுல எங்கள தவிர யாரும் இல்ல… சோ தனியா குடிப்போம்னு சொல்ல முடியாது. கார்டன்ல உட்கார்ந்து பேசுவோம். கல்யாணத்துக்கு அப்பறம்… நீ எதுவும் கேட்டதில்லையே…”

“தெரியல அங்கிள். நான் ஏன் கேட்கலன்னு எனக்கு தெரியல. ஆனா… என்னையும் உங்க பொண்ணு மாதிரி நினைக்குறதா சொல்லுறீங்க. எனக்கு தெரியக் கூடாத விஷயம் எதுவும் பேசலன்னா அப்போ நீங்க ஏன் என்னை உங்க கூட உட்கார சொன்னதில்ல?

இந்த வீட்டுல நான் உங்கள தவிர வேற யார்கிட்ட பேசிட போறேன்? இங்க வேலை பார்த்த யாரோடையும் நான் அதிகம் பேச மாட்டேன்னு வந்த ஒரே நாள்ல தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க யாரும் என்னோட பேச ட்ரை பண்ணல.

ஒருவேளை உங்கள ஹர்ட் பண்ணிடக் கூடாதுன்னு கேட்காம இருந்திருக்கலாம். இப்போவும் உங்கள ஹர்ட் பண்ணணும்னு நினைக்கல அங்கிள். எனக்கு இது புரியல. நீங்க அப்பா பையன் உங்களுக்குன்னு ஒரு நேரம் ஒதுக்கிகிட்டது ரொம்ப நல்ல விஷயம். எத்தன வீட்டுல இப்படி நடக்கும்? அதுக்காக…”

“தப்புதான் ஆராதனா. நீ கேட்க வரது புரியுது. விஷ்வாவோட அம்மா போனதுக்கு அப்பறம் நானும் அவனும் மட்டும்தான் குடும்பம்னு மனசுல பதிஞ்சுப் போச்சு. பல வருஷ பழக்கம். குடும்பத்துக்காக கட்டாயம் நேரம் ஒதுக்கணும்னு நெனச்சேன்… உன்னையும் அதுல சேர்த்துக்கணும்னு தோணாமப் போச்சு. மகள்னு வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லலம்மா. இனி இப்படி எதுவும் நடக்காம பார்த்துக்குறேன்”

“அங்கிள் நான் உங்கள குறை சொல்லணும்னு…”

“நான் அப்படி நினைக்கலம்மா. உனக்கு எல்லாம் மறந்ததும் நல்லதுக்குதான். பழைய ஆராதனாவா இருந்திருந்தா எங்களோட இந்த தப்ப நீ சுட்டிக்காட்டியிருக்க மாட்ட. இந்த கேள்விய முன்னாடியே கேட்க விடாம எது உன்னை தடுத்துதுன்னு தெரியல. நாங்க உங்கிட்ட நடந்துக்கிட்ட விதமா கூட இருக்கலாம். எதுவா இருந்தாலும் சாரிம்மா”

“சாரி எல்லாம் எதுக்கு அங்கிள். நான்… நான் இத கேட்டிருக்கக் கூடாது… நீங்க இவ்வளவு பீல் பண்ணுவீங்கன்னு…”

“கேட்க எல்லா உரிமையும் உனக்கு இருக்கு ஆராதனா. டீ குடி ஆறிடும்” என்றவர் விஷ்வாவிடம் பேச ஆரம்பித்தார்.

இவ்வளவு நேரம் தேநீர் கோப்பையை ஆராய்ந்துக் கொண்டிருந்தவன் திரும்பி மனைவியை பார்த்துவிட்டு தந்தையின் பேச்சில் கவனம் வைத்தான்.

அம்முவை குறித்து, பேக்டரியை குறித்து என்று சந்திரன் நிறைய பேசினார். வீட்டின் மீதும் தொழிலின் மீதும் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார் என்று நினைத்தவள் விஷ்வாவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவளை கண்டுக் கொள்ளாதிருந்தான். அப்படி தான் அவள் நினைத்தாள். பாராமுகம் மனதில் விதைக்கும் எண்ணம். அவன் இது நிகழ வேண்டியே அப்படி அமர்ந்திருந்தானா தெரியாது.

இரவுக்கான உணவு தயாரிக்கும் சமயம் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தவனிடமே கவனம் முழுவதும் இருந்தது. கையில் கத்தையாய் காகிதங்களுடன் அமர்ந்திருந்தவன் அதில் மூழ்கியிருந்தான்.

தான் கேட்டது அதிகப்படியோ? தவறாக நினைத்துவிட்டானோ? கோபம் கொண்டிருக்கிறானோ? தீர்க்கப்படாத சந்தேகங்கள் அரிப்புழுக்களாய் உருமாறி மனதை அரித்துக் கொண்டிருந்தன.

இமை உயர்த்தி தாழ்த்தி ஒரு நிமிடத்துள் பல நூறு முறை அவன் முகம் பார்த்தாள். சந்தேகம் நம் பிரியப்பட்டவரின் மனதை புன்படுத்திவிட்டோமோ என்ற பதட்டதை தரும்போது மனம் தான் என்ன பாடு படுகிறது?

ஒரு கட்டத்திற்கு மேல் யாரோ தன்னை பார்க்கிறார்கள் என்று உள்ளுணர்வு உணர்த்த தலை தூக்கி நோக்காமல் இருக்க பெரும்பாடுப்பட்டான் விஷ்வா. காரணம் ஆராதனா என்றறிந்தும் இன்று அவள் பேச்சின் தாக்கம் இன்னும் அவனை விட்டு அகலாதிருந்தது.

இதற்கு மேல் அங்கு உட்கார்ந்திருக்க முடியாது. காகிதங்கள் அனைத்தையும் மடித்துப் பிடித்து எழுந்தான். ‘வேண்டாம் நிமிராதே’ என்று எத்துனை கெஞ்சியும் விழி அவன் பேச்சை கேளாமல் அவள் இருந்த திசைக்கே திரும்பியது.

பார்வைகள் சந்தித்த ஒரு நொடி இருவரும் ஸ்தம்பித்து பின் அவசரமாய் திரும்பினர். அவன் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியாத ஏமாற்றம் ஆராதனாவிற்கு. அவள் முகவாட்டம் உண்டாக்கிய வருத்தம் விஷ்வாவிற்கு.

அவன் மீண்டும் டைனிங் ஹாலிற்கு வந்தபோது சந்திரன் உணவருந்திக் கொண்டிருந்தார். அவனுக்கு தட்டு வைத்து பரிமாறியவள் அவ்விடமே நின்றாள். இனியும் அவள் முகம் காணாது தவிர்த்தால் அவளை மேலும் வருத்தியது போலாகுமென்று நிமிர்ந்து புன்னகைத்துவிட்டு குனிந்து சாப்பிட ஆரம்பித்தான். போதும். இது போதும் அவளுக்கு. எதிரில் அமர்ந்து தனக்கான உணவை தட்டில் பரிமாறிக் கொண்டாள்.

அம்முவை குறித்த நினைவு இன்று ஆராதனாவின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருந்தது. குறிப்பாக அவளிடம் உரையாடியப் பிறகு. “மம்மி ஏன் வரல?” அவளுடைய பிரதான கேள்வி இது ஒன்று மட்டுமே. ஒவ்வொரு முறையும் பேச்சை மாற்ற பெரும்பாடுப்பட்டாள். விஷ்வா எவ்வளவு சிரமப்படுவான்?

வீட்டிற்கு சென்றால் தான் என்ன? யார் தடுக்கப் போகிறார்கள்? என்னுடைய வீடல்லவா? போனால் திரும்பி வர மனம் வருமா? கட்டாயம் போக வேண்டுமா? இன்னும் எத்தனை நாட்களுக்கு போகாமல் இருப்பது?

“இங்க வந்து உட்கார்ந்து என்ன யோசிக்குற?”

தோட்டத்து பெஞ்சில் அருகில் அமர்ந்தவனிடம் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறுக் கேட்கலாமா என்று யோசித்தாள். ஒரு நொடியில் மனதை மாற்றிக் கொண்டாள்.

“என்ன யோசனைன்னுக் கேட்டேன்”

“தூங்கலையா? நேரமாச்சு”

“தூங்கணும். நீ இல்லாம தூக்கம் வர மாட்டேங்குது. வா…”

“நான் இல்லன்னா என்ன? போய் தூங்கு. சும்மா சும்மா என்னை எதுக்குக் கூப்பிடுற? எனக்கு தூக்கம் வரல”

“இப்போ எதுக்கு கத்துற? இந்த இடமே எவ்வளவு அமைதியா இருக்கு? லூசு மாதிரி கத்துற?”

“லூசு தான்… உனக்கு என்னைப் பார்த்தா லூசாதான் தெரியும்”

“ம்ம்ச்ச்… சாரி. நான் அப்படி மீன் பண்ணி சொல்லல…”

“பின்ன எப்படி? நீ சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டுறேன்ல? அப்போ நீ இதுவும் பேசுவ இன்னுமும் பேசுவ”

“மெதுவா பேசுறியா?”

“இப்போ நீதான் கத்துற”

“என் பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு. நீ செய்யுற எல்லாத்தையும் பொறுத்துப் போவேன்னு நினைக்காத”

“நீ செய்யுற எல்லாத்தையும் நானும் பொறுத்துப் போவேன்னு நீ நினைக்காத”

“நான் எல்லாத்தையும் உன்ன கஷ்டப்படுத்தாம இருக்க செய்யுறேன்”

“அப்படின்னு நீயே சொல்லிக்கோ. இப்படியெல்லாம் சொன்னா நீ என் மனசுல பதிவேன்னு நினைக்காத. நடக்காது. நீ எனக்கு யாருமே இல்ல. இப்போ வரைக்கும் அப்படிதான் எனக்குத் தோணுது. இது மாறாது…”

“மாற வேண்டாம் போடி…”

கத்திய விஷ்வா எழுந்து வீட்டிற்குள் விரைந்தான்.

எதற்காக கத்தினோம்? ஏன் கோபம்? யார் மீது? அவனிடம் எதற்கு காண்பித்தோம்? பேசியது சரியா? தவறா? எனக்கு அவன் யாருமே இல்லையா?

அவன் போன தடத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆராதனா.

நிழலே நிஜமாய் – 20

விஷ்வாவை அப்படி பார்க்க டாக்டர் குமாருக்கு வருத்தமாக இருந்தது. முந்தைய தினம் தன்னை சந்திக்க விரும்புவதாக அவன் கூறியபொழுதே ஏதோ சரியில்லை என்பதை ஊகித்திருந்தார். தலையை இரு கரங்களால் தாங்கிப் பிடித்து எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மௌனம் அதை ஊர்ஜிதப்படுத்தியது.

பேச்சை துவங்கலாம் தான். என்ன நடந்ததென்று தெரியாமல் எதிலிருந்து துவங்குவது? ஒருமுறை சந்திரனுக்கு அழைத்து பேசியிருக்க வேண்டுமோ? இவ்வளவு தாமதமாக இந்த யோசனை வந்திருக்க வேண்டாம். இப்போது பேசலாமென்றால் விஷ்வாவிற்கு தெரியாமல் எப்படி பேசுவது?

யோசனைகள் அனைத்தும் அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவே, “விஷ்வா” என்றழைத்தார். தலை நிமிர்த்தி பார்த்தான். இதற்கு மேல் அவனே பேசட்டுமென்று காத்திருந்தார்.

சில நொடிகளுக்குப் பிறகு தலையிலிருந்து கைகளை எடுத்து நாற்காலியில் சாய்ந்தமர்ந்தான்.

“நடிக்குறா டாக்டர்”

“ஆராதனாவா? எப்படி சொல்லுற?”

“சரியா சொல்ல தெரியல. சில நேரம் தெளிவா வாங்க போங்கன்னு பழையபடி பேசுறா. என்ன இப்படி பேசுறன்னு கேட்கப் போனா இல்லையே சும்மா சொல்லாதன்னு சொல்லுறா. அம்முவ பார்க்க வர மாட்டேங்குறா. ஆனா போன்ல பேசுறா. சமைக்க தெரியாதுன்னு சொன்னா. ஆனா ரொம்ப நல்லா சமைக்குறா. என்கூட எங்க வீட்டுல தனியா இருக்க முடியாதுன்னு அப்பாவையும் தங்க சொன்னா. முதல் நாள் முரண்டு பிடிச்சதோட சரி… இப்போ வரைக்கும் என் பக்கத்துல தான் படுத்து தூங்குறா. நடிக்குறா கண்டிப்பா நடிக்குறா…”

“நான்கூட வேற என்னமோன்னு பயந்துட்டேன். இங்க பாரு விஷ்வா… அவளுக்கு எல்லாமே நிரந்திரமா மறந்துப் போயிடல. அக்ஸிடென்ட் ஆன ஷாக்ல கொஞ்ச வருஷங்கள், சில விஷயங்கள் மறந்துப் போச்சு. அவ்வளவுதான். அவ எல்லாத்தையும் மறக்கலன்றதால தான் சீக்கிரம் எல்லாம் நியாபகம் வந்துடும்னு நான் சொன்னேன். திஸ் இஸ் டெம்ப்ரவரி விஷ்வா”

“ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி நடந்துக்குறாளே டாக்டர்… அவ நடிக்கலன்னு சொல்லுறீங்களா?”

“இல்ல. அவ நடிக்கல. நியாபகம் வரும்னு சொன்னேன். அதுக்கு அர்த்தம் திடீர்னு ஒரு நாள் தூங்கி எந்திரிச்சதும் பழையபடி ஆயிடுவான்னு அர்த்தமில்ல. கொஞ்சம் கொஞ்சமாதான் வரும். அவளுக்கே தெரியாம அவ சப் கான்ஷியஸ் மைண்ட்ல பதிவாகியிருக்குற விஷயங்கள அவ பேசுறா செய்யுறா. எதெல்லாம் அவளோட ரொட்டீனா இருந்துதோ அதையெல்லாம் அவளுக்கே தெரியாம செய்யுறா. உனக்கு மரியாதை குடுத்து பேசுறதெல்லாம் அப்படிதான். ஏன்னா அதான் அவ பழக்கம். அதுக்காக அவள சந்தேகப்படாத”

“அவ என்ன செஞ்சாலும் கண்டுக்காம இருக்க சொல்லுறீங்களா?”

“அவ போக்குல விடு. அவ பழைய ஆராதனாவா ஏதாவது பேசுனாலோ செஞ்சாலோ உனக்கு எல்லாம் நியாபகம் வந்துடுச்சான்னுக் கேட்காத. நிலைமை இன்னும் மோசமாயிடும்”

“இன்னும் எத்தனை நாளைக்கு டாக்டர்?”

“ரொம்ப நாள் வேண்டி இருக்காது. நீ சொல்லுறத பார்த்தா அவளுக்கு பழசெல்லாம் அடிக்கடி நியாபகம் வர ஆரம்பிச்சிடுச்சு”

“ஹ்ம்ம்…”

“இந்த டைம்ல நீ ரொம்ப கேர்புல்லா இருக்கணும் விஷ்வா. ப்ரெசென்ட்ல அவளுக்கு புரியுற மாதிரி அவல சுத்தி ஒரு உலகத்த உருவாக்கி வெச்சிருக்கா. உங்க ஒவ்வொருத்தருக்கும் அவளுக்கு பிடிச்ச மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப் கற்பனை பண்ணி இருக்கா. பாஸ்ட் நியாபகம் வரப்போ அதெல்லாம் இல்லன்னு தெரியும். ப்ரெசென்ட்கும் பாஸ்டுக்கும் இருக்க வித்தியாசம் அவள நிறையவே குழப்பும். எது உண்மைன்னு புரிஞ்சுக்க தடுமாறுவா. தன்னால தெளிவா யோசிக்க முடியலன்னு நினைக்குறப்போ கோபம் வரும்”

“அது இப்போவே அடிக்கடி வருது டாக்டர். நல்லா பேசிட்டே இருக்கும்போது சம்பந்தம் இல்லாம கத்துறா”

“அது எல்லாத்தையும் அவ உன்மேல தான் காமிப்பா”

“ஏன்?”

“என்னோட கெஸ் அது. பார்க்கலாம். ஆராதனாவ பார்க்கணும்னு உஷா சொல்லிக்கிட்டே இருக்கா. இன்னைக்கு ஈவ்னிங் அவளையும் விக்னேஷயும் கூட்டிட்டு வரேன். புது ஆளுங்கள பார்த்தா அவ எப்படி ரியாக்ட் பண்ணுறா பாப்போம். இது வரைக்கும் எங்கயும் வெளில போனதில்லல்ல?”

“அவளோட வீட்டுக்கே வர மாட்டேங்குறா. அப்பறம் எங்க?”

“ஈவ்னிங் பார்க்கலாம் விஷ்வா”

“வரேன் அங்கிள்”

அவனுடைய தளர்ந்த நடை அவன் மனநிலையை பிரதிபலிக்க இன்று ஆராதனாவிடம் பேசி அவள் மனதை அறிய நினைத்தார் குமார்.

ஆராதனாவின் இந்த அமைதி அஞ்சலியின் அச்சத்தை கூட்டியது. தோழியின் வீட்டிலிருந்து வந்தவள் அதன் பிறகு இப்போது தான் அவளுக்கு அழைத்து பேசுகிறாள். “என்கிட்ட அண்ணா பேச சொன்னத பத்தி நீ அவங்கக்கிட்ட எதுவும் கேட்டியா?” என்று அஞ்சலி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் ஆராதனா.

“ஏன் கேட்கல? என் பிரென்ட்கிட்ட எதுக்கு நீ போய் பேசுனன்னு ஏன் கேட்கல? கல்யாணத்த பத்தி எதுக்கு பேச சொல்லியிருப்பான்? எதுக்காவது சண்டை போட்டுட்டே இருக்கோமே… இது ஏன் நியாபகத்துக்கு வரல? வர வர தேவையான எதுவுமே நியாபகத்துக்கு வர மாட்டேங்குதே… எந்நேரமும் அவன பத்தியே யோசிச்சா அப்பறம் எங்கேருந்து என்னை பத்தி யோசிக்க நேரம் கிடைக்கும்? அவன் நிம்மதியா தூங்கணும், நல்லா சாப்பிடணும்… ச்ச… எக்கேடோ கெட்டுப் போகட்டும்னு விட வேண்டியது தான? இந்த அக்கறை தேவையா?”

“ஆராதனா? ஏதாவது பேசுடி”

“ஹான்… என்ன பேச?”

“சுத்தம்… இவ்வளவு நேரம் என்னத்த யோசிச்ச? அண்ணா உன்கிட்ட எதுவும் கேட்டாங்களா? பேசினாங்களா?”

“இல்லடி. எதுவும் சொல்லல. உங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? ரிஷியா ஒரு நாள் கூட்டிட்டு வாடி. கண்ணுலயாவது காட்டும்மா உன் பையன”

“அடிப்பாவி… என் டெலிவரி அப்போ என் மாமியார் அம்மாகூட நீயும்தான்டி ஹாஸ்பிட்டல்ல இருந்த. வயசானவங்க தனியா சமாளிக்க முடியாதுன்னு சொல்லி அண்ணா உன்னை விட்டுட்டுப் போயிட்டாங்க. மத்த ரிலேடிவ்ஸ் வரதுக்கு காலையில ஆயிடுச்சு. ரிஷின்னு பேரு சஜ்ஜஸ்ட் பண்ணது நீதான். கண்ணுலயாவது காட்…”

“எனக்கு… எனக்கு தல வலிக்குது அஞ்சலி. நான் அப்பறம் பேசட்டுமா?”

“என்னாச்சு? நான் ஏதும் தேவையில்லாம பேசிட்டேனா? சாரிடி…”

“இல்ல அஞ்சலி. நீ எதுக்கு பீல் பண்ணுற?”

“சரி ரெஸ்ட் எடு. பை”

“பை”

“என்னம்மா ஆராதனா மதியான நேரத்துல கார்டன்ல உட்கார்ந்திருக்க? வெயிலா இல்லையா? வீட்டுக்குள்ள போம்மா”

“ஒண்ணுமில்ல மாமா. நீங்க தூங்கலையா?”

“பாக்டரிலேருந்து இப்போதான் வீட்டுக்குள்ள நுழையுறேன்”

“பாக்டரி போனீங்களா? எதுக்கு மாமா? எதுவும் பிரச்சனையா? அவங்க இருக்காங்களே… பார்த்துக்க மாட்டாங்களா? நீங்க எதுக்கு மாமா அலையுறீங்க?”

“விஷ்வாவுக்கு சாப்பாடு குடுக்க போயிருந்தேன். நீ சமைச்சு குடுத்து விட்டியே… தினம் நாந்தான எடுத்துட்டு போறேன்? மறந்துட்டியா?”

“அது… எனக்கு ரொம்ப தலை வலிக்குது அங்கிள். நான் தூங்கப் போறேன்”

அவள் பேச்சில் இருந்த வித்தியாசம் அவளை கூர்ந்து கவனிக்க வைத்தது. ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் பிடியில் தன்னையறியாமல் பேசி செல்கிறாள். குமார் வரும்போது இதை தெரிவிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார் சந்திரன்.

சொன்னது போல் மாலை குமார் தன் குடும்பத்துடன் சந்திரன் வீட்டிற்கு வந்தார். “அங்கல்லாம் நான் வர மாட்டேன்” என்று முரண்டுப் பிடித்த விக்னேஷை சமாளித்து அழைத்து வர நேரம் பிடித்தது.

டாக்டர் முன்பே பரிச்சயமானவர். உஷாவின் முகத்தையும் விக்னேஷின் முகத்தையும் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. உஷா அவள் அருகில் அமர்ந்து அவள் கை பிடித்துக் கொண்டிருந்தார். விக்னேஷ் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்போ உடம்பு தேவலையா? தனியா எல்லா வேலையும் எப்படிம்மா சமாளிக்குற?”

“நல்லா இருக்கேன் ஆண்டி. சாரி… எனக்கு உங்கள அடையாளம் தெரியல”

“அதுக்கு ஏன் வருத்தப்படுற? எனக்கு தெரியும். தைரியமா எனக்கு உங்கள தெரியலன்னு சொல்லுறியே… நீ தெளிவா யோசிக்குறன்னு இதுலயே தெரியுது ஆராதனா”

புன்னகைக்க முயன்று குமாரை பார்த்தாள். “உன்னை பத்தி விசாரிச்சுட்டே இருப்பா. அவளுக்கு எல்லாம் தெரியும்” என்றார்.

எவ்வளவு நேரம் கைபேசியை ஆராய்வது? நிமிர்ந்து எல்லோரையும் பார்த்தான் விக்னேஷ். “வைப் பசங்க எல்லாரும் நல்லா இருக்காங்களாப்பா?” என்று சந்திரன் கேட்க, “நல்லா இருக்காங்க அங்கிள். அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க” என்றவன் விஷ்வாவை பார்த்தான்.

விரல்கள் கோர்த்து கைகளை இறுக பற்றி ஆராதனாவின் முகம் பார்த்திருந்தான். அவன் வேறு யாரையும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஏதோ அவன் கண்களுக்கு மனைவி மட்டுமே தெரிவது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். எல்லோரையும் தீர்க்கமாக பார்க்கும் அவனுடைய பார்வையல்ல அது.

“விஷ்வா விக்னேஷ்கூட கார்டன்ல கொஞ்ச நேரம் பேசிட்டிரு. நான் ஆராதனாகிட்ட கொஞ்சம் பேசணும்”

டாக்டர் சொன்னதும் மனைவியை திரும்பி திரும்பி பார்த்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தான். பின்னால் விக்னேஷ் வருகிறானா என்று அவன் பார்க்கவில்லை. அமைதியாக தோட்டத்தில் சென்று நின்றவனின் அருகில் வந்தான் விக்னேஷ்.

“நீ ஏன் இப்படி இருக்க?”

“நானா? எப்படி?”

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி உன்கிட்ட போன்ல பேச எங்கப்பா பயந்தாங்க. இவனுக்கெல்லாம் எதுக்கு பயப்படுறீங்கன்னு திட்டுனேன். ம்ம்ச்ச்… இப்போ அப்பா உன்ன பரிதாபமா பார்க்குறாங்க. பயப்படலன்னு சந்தோஷமா இருக்கு… இருந்தாலும்… விஷ்வாகிட்ட என்னமோ மிஸ்ஸிங்”

“உனக்கு அப்படி தோணுமா இருக்கும்”

“சின்ன வயசுலேருந்து அப்பா உன்னை வெச்சு கம்பேர் பண்ணி பண்ணி திட்டுவாங்க. கடுப்பாகும். உங்க வீட்டுக்கு வரவே மாட்டேன்னு அழுவேன். இன்னைக்கு கூட வர மாட்டேன்னு அடம் பிடிச்சவன பேசி கன்வின்ஸ் பண்ணிதான் கூட்டிட்டு வந்திருக்காங்க. எல்லாரையும் எப்படி ஒரு லுக்கு விட்டே அடக்கி வெக்குறன்னு உன்னை பார்த்து பொறாமைபடுவேன்”

“நீ போறாமைப்படுறியா? உன்னை மாதிரி ஒரு உத்தமப்புத்திரன் உலகத்துலயே கிடையாதுன்னு எங்கப்பா சொல்லுவாங்க… கோபப்படாம பொறுமையா இருக்கிறது எப்படின்னு உன்கிட்ட படிக்கணுமாமே…”

மெல்லிதாய் சிரித்த விக்னேஷ், “அந்த லுக்கு இன்னைக்கு உன்கிட்ட மிஸ்ஸிங்” என்றான். “மே பீ. அதையெல்லாம் யோசிக்குற நிலமையில நான் இல்ல”

“அப்பாவும் அம்மாவும் ஆராதனா பத்தி பேசிக்குவாங்க. என் வைப் கூட அப்பாகிட்ட விசாரிப்பா. நான் பெருசா கண்டுக்கல. விஷ்வாவுக்கு தெரியாததையா இவங்கல்லாம் செஞ்சுடப் போறாங்க? எதுக்கு இப்படி பதறுறாங்கன்னு நெனச்சேன். எல்லாரும் உன் மேல எதுக்கு இவ்வளவு அக்கறை காட்டுறாங்கன்னு எரிச்சல். உள்ள ஆராதனா சொன்னத கேட்டப்போ… இப்படிதான உன்கிட்டயும் சொல்லியிருப்பா? நீ எந்தளவுக்கு பீல் பண்ணுறன்னு உன் மூஞ்சிய பார்த்தாலே தெரியுது”

“முதல் தடவ சொன்னப்போ ஜோக்னு நெனச்சேன். இப்போ வரைக்கும் முழுசா ஏத்துக்க முடியல விக்னேஷ்”

“நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?”

அடிக்கடி உஷாவை திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. அறையில் புதிய மனிதர் ஒருவர் அமர்ந்திருப்பதும் அவர் முன்னிலையில் தன் மனநிலை குறித்து கேள்விக் கேட்கப்படுவதும் கொஞ்சம் பதட்டத்தை கொடுத்தது.

உஷாவின் நடவடிக்கைகளும் பேச்சும் அந்த பதட்டத்தை குறைக்கவும் செய்தது. முதல் ஐந்து நிமிடங்களுக்கு குமார் கேட்ட கேள்விகளை அவள் முழுவதும் உள்வாங்காமலே பதில் கூறினாள். அது புரிந்து குமாரும் அவள் உடல் நிலை குறித்து மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தார்.

“தல வலி எப்போ எல்லாம் வருது?”

“எனக்கு தெரியாத விஷயத்த யாராவது சொல்லுறப்போ. நான் அத பத்தி யோசிக்குறப்போ”

“ரொம்ப வலிக்குதா?”

“சில நேரம் கொஞ்சம் வலிக்கும். சூடா டீ குடிச்சா சரியாகிடும். சில நேரம் ரொம்ப வலிக்கும். தூங்குனா சரியாகும். ஆனா தூக்கம் வராது”

“விஷ்வாவ பத்தி யோசிச்சா அப்படி தல வலிக்குதா?”

“விஷ்வா… அவன்… எனக்கு அவன் ரொம்ப க்ளோஸ்னு தோணும். அப்பறம் யாராவது அவன் என் ஹஸ்பன்ட்னு சொல்லுவாங்க. அது உண்மையான்னு யோசிப்பேன். எவ்வளவு ட்ரை பண்ணாலும் என்னால தூங்க முடியாது டாக்டர்.

என்னை பத்தின ஒரு விஷயம் கூட உனக்கு நியாபகம் இல்லையான்னு அவன் கேட்டிருக்கான். அவன் கேட்குறதுல தப்பில்லையே… ஒரே ஒரு விஷயம் நெனப்பு வரணும்னு யோசிப்பேன். ஸ்கூல், காலேஜ்… அப்பா, அம்மா, என் வீடு… மாத்தி மாத்தி இது தான் மைண்ட்ல ஓடும்.

அம்மு… அவன் பொண்ண எதுக்கு எங்க வீட்டுல விட்டுட்டு அவன் இங்க தனியா இருந்து கஷ்டப்படுறான்? பாவமா இருக்கும். சரியா சாப்பிடுறானா தூங்குறானா தெரியல. நல்லா பாத்துக்கணும்னுத் தோணும் டாக்டர்.

அவனும் என்னை நல்லா பார்த்துக்குறான். அஞ்சலி, சுகன்யா… என் க்ளோஸ் பிரெண்ட்ஸ். வீட்டுக்கு வந்தாங்க. அவங்களும் என் கல்யாணத்த பத்தி பேசுனாங்க. விஷ்வாதான் பேச சொன்னானாம்.

அவன் எனக்கு ப்ராமிஸ் பண்ணான் டாக்டர். பாஸ்ட் பத்தி எதுவும் பேச மாட்டேன்னு. நான் பேசலன்னு சொல்லிட்டு என் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லி பேச சொல்லுறான். எதுக்கு? எனக்கு எவ்வளவு தல வலிச்சுது தெரியுமா? இங்க எதுக்கு இருக்கணும்? இவன் சொல்லுறதெல்லாம் எதுக்கு கேட்கணும்னு… விஷ்வா யாரு டாக்டர்? அவன் மட்டும் இல்லன்னா நான் எங்க வீட்டுல நிம்மதியா இருந்திருப்பேன்ல? இவன் ஏன் என்னை டார்ச்சர் பண்ணுறான்?”

நிழலே நிஜமாய் – 21

“போ பாட்டி… நீ மம்மி மாதிரி சூப்பரா கத சொல்லவே மாட்டேங்குற. தாத்தாவ கேட்டா எனக்கு கத தெரியாது சொல்லுறாங்க”

“எத்தனை கதை சொல்லுறது? மணிய பாரு அம்மு… காலையில ஸ்கூல் போக வேண்டாமா? தூங்குடாம்மா”

“தூக்கம் வரல”

“தாத்தா வந்துப் பார்த்தா எனக்கு திட்டு விழும்…. தூங்காம பாட்டியும் பேத்தியும் இன்னும் என்ன அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்கன்னு…”

“திட்டுனா கத சொல்ல சொல்லுவேன். தாத்தா ஓ…டி போயிடுவாங்க”

“வாலு… கண்ண மூடு”

“மம்மி ஏன் பாட்டி வரல?”

“டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்கல்ல… அதான் வரல”

“அம்முவ பார்க்க மட்டும் டைமே இல்லையா?”

“யாருடா அப்படி சொன்னா? அவ எங்கயுமே போறதில்ல தெரியுமா?”

“எங்கயுமே போகலையா?”

“ம்ம்ஹும்…”

“வீட்டுக்குள்ளையே இருக்காங்களா?”

“ஆமாடா”

“போர் அடிக்காதா?”

“அவ தூங்கிடுவா. போர் அடிக்காது”

“இங்க வந்தா என்கூட விளையாடலாம்ல… போரே அடிக்காது”

“ம்ம்…”

“தூங்காத பாட்டி…”

“அம்மு ப்ளீஸ் அம்மு… பாட்டிக்கு ரொம்ப டயர்டா இருக்குடா… காலையில சீக்கிரம் எழுந்து கிளம்ப வேண்டாமா? தூங்குடா செல்லம்”

“சரி தூங்குங்க… நான் தட்டிக் குடுக்குறேன்”

கன்னத்தில் தன் பிஞ்சு கரத்தால் மெல்ல தட்டிக் கொடுக்கும் பேத்தியை பார்த்தபடி படுத்திருந்தார் சரண்யா. தீபாலி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலே இந்த நாடகம் என்பது மனதை உறுத்தியது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி பதில் சொல்லியும் சொல்லாமலும் சமாளிப்பது?

ஆராதனா இங்கே வராவிட்டால் என்ன? நாம் அம்முவை கூட்டிக் கொண்டு அங்கு செல்லலாம் என்று யோசனை கூறியபோது அதை உடனே மறுத்துவிட்டார் ஹரிகிருஷ்ணன்.

“அப்படி அம்முவ அங்க கூட்டிட்டு போணும்னா அது மாப்பிள்ளைக்கு தெரியாதா? தினம் இங்க வரவங்க ஒரு நாளைக்கு கூட்டிட்டுப் போக மாட்டாங்களா? நம்ம ஏதாவது செய்யப் போய் அவங்களுக்கு கோபம் வந்துட்டா? ஏற்கனவே நம்ம பொண்ண சமாளிக்க என்ன பாடுப் படுறாங்களோ? வேண்டாம் சரண்யா. ஆராதனா என்னைக்கு வந்து பார்க்குறாளோ பார்க்கட்டும். அதெப்படி பெத்த பாசம் மறந்துப் போகும்? போன்ல அவளாதான அம்முகிட்ட பேசுறா? யாரும் சொல்லலையே… வருவா. கண்டிப்பா வருவா”

கணவர் பேசியது நம்பிக்கையை கொடுத்தாலும் மனம் கேட்கவில்லை. மற்ற யாருக்காக இல்லையென்றாலும் தீபாலிக்காக ஒருமுறை ஆராதனாவை சென்றுப் பார்க்க வேண்டுமென்றுத் தோன்றியது.

அம்மு உறங்கியிருந்தாள். ஆராதனா அவளுடன் பேசத் துவங்கியது முதல் அவளின் நச்சரிப்பு குறைந்திருக்கிறது. நச்சரிப்பு என்று எப்படி கூற முடியும்? தாயை காண ஒரு சிறு குழந்தையின் ஏக்கம். தவறென்று கூறுவதற்கில்லை. நிலைமையை சரி செய்ய என்ன செய்வதென்றுதான் புரியவில்லை.

அறைக்குள் வந்த ஹரிகிருஷ்ணன் உறங்கும் மனைவியையும் பேத்தியையும் பார்த்துவிட்டு மீண்டும் ஹாலில் வந்தமர்ந்துவிட்டார். ஏதாவது செய்ய வேண்டுமென்று நீண்ட நேரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அவரால் செய்ய முடிந்தது எதுவுமில்லை என்ற வருத்தமே எஞ்சியது.

டாக்டர் குமார் சொல்லி சென்ற விஷயத்தை விஷ்வாவால் இன்னும் நம்ப முடியவில்லை. ஆராதனா தன்னைக் குறித்து இப்படியும் யோசிப்பாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

உறங்கிக் கொண்டிருந்தாள். அமைதியாக. சில மணி நேரங்களுக்கு முன்னால் என்ன பேசுகிறோம் என்றேத் தெரியாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தவள் எந்த சலனமும் இன்றி இப்போது உறங்கிக் கொண்டிருந்தாள். யார் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேளாமல் ஏதேதோ பிதற்றியவளை அடக்க முடியாமல் மயக்க மருந்து கொடுத்துச் சென்றிருந்தார் குமார்.

நேரம் நள்ளிரவை கடந்திருந்தது. விஷ்வா அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான். விக்னேஷ் கூறிய ஆலோசனை நினைவு வந்தது.

“ஆராதனாவ வெளில எங்கயாவது கூட்டிட்டுப் போ”

“எங்கயாவது போகணும்னா சொல்லு கூட்டிட்டுப் போறேன்னு ஏற்கனவே அவகிட்ட சொல்லியிருக்கேன். அவ பெருசா இண்டரெஸ்ட் காட்டல”

“நீயா ஏதாவது ஒரு எடத்த சூஸ் பண்ணி கூட்டிட்டுப் போ. அவகிட்ட போய் எங்க போகணும்னு சொல்லுன்னா…”

“ம்ம்… எதுக்கு சொல்லுற?”

“நாங்க வந்ததுக்கே அவ அன்கம்பர்டபிளா பீல் பண்ணுறா. இத்தனைக்கும் அப்பாவ தெரியும். அதுக்கே அவ உன்னைதான் திரும்பி திரும்பி பார்க்குறா. கவனிச்சியா?”

“அதுக்கு என்ன?”

“ஹ்ம்ம்… உன்னை போய் இந்த உலகம் அறிவாளின்னு நம்புது பாரு”

“யோசிச்சு யோசிச்சு மூல மரத்துப் போச்சு. தயவு செஞ்சு சொல்ல வரத தெளிவா சொல்லு. கடுப்பேத்தாத”

“எல்லாம் நேரம். என் கெஸ்படி அவ உன்கிட்ட இருக்கப்போ செக்யூர்டா பீல் பண்ணுறான்னு நினைக்குறேன். வீட்டுக்குள்ள ரெண்டு புது ஆள் வந்ததுக்கே அவ உன்னை திரும்பி பார்க்குறா. எதை பேசுறதுக்கு முன்னாடியும் பேசி முடிச்சப்பறமும் உன் முகம் பார்த்து நீ என்ன நினைக்குறன்னு புரிஞ்சுக்க ட்ரை பண்ணுறா. மொபைல் நோண்டிட்டு இருந்தாலும் நான் இவ்வளவு கவனிச்சிருக்கேன். அவ மூஞ்சியவே உத்து உத்து பார்த்துட்டு உட்கார்ந்திருந்த… என்னத்த கவனிச்ச நீ?”

“இல்ல… நானும் பார்த்தேன்…”

“சமாளிக்காத”

“சரி விடு. நான் இதெல்லாம் கவனிக்கல. அவளுக்கு எல்லாம் நியாபகம் வந்துடாதான்னு யோசிச்சிட்டு இருந்தேன்”

“தானா வராது. அட்லீஸ்ட் அதுக்கு டைம் ஆகும். நீயும் ஏதாவது செஞ்சு அவளுக்கு நியாபகப்படுத்துனா சீக்கிரம் வரும்”

“இதேதான் உன் அப்பாவும் சொன்னாங்க”

“சொன்னத கேட்ட மாதிரி தெரியலையே”

“என்ன பண்ணுறதுன்னு தெரியாமதான் முழிச்சிட்டு இருக்கேன்”

“இன்னும் எத்தனை நாளைக்கு?”

“நீ எனக்கு ஹெல்ப் பண்ணுறியா? சான்ஸ் கெடச்சுதுன்னு திட்டி தீர்க்குறியா?”

“ரெண்டும்தான். உன்னால எவ்வளவு வாங்கி கட்டியிருப்பேன்… இப்போ நிம்மதியா இருக்கு. நீ ஏதாவது செய்னு எங்களால சொல்ல முடியும். என்ன செய்யணும்னு சொல்லுறதுக்கு உங்க லைப்ல நடந்த எல்லா விஷயமும் எங்களுக்கு தெரியாது விஷ்வா. அது நீ யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய விஷயம். யோசி”

விக்னேஷ் சொன்னது போல் ஆராதனாவை வெளியே கூட்டிச் சென்றால் என்ன? வருவாளா? என்ன சொல்லி அழைப்பது? எங்கே அழைத்துச் செல்வது? நாளை அப்பாவை தொழிற்சாலைக்கு அனுப்பிவிட்டு அவளுடன் நேரம் செலவிட வேண்டும். கண்களை மூடி அமர்ந்த நிலையிலேயே உறங்க ஆரம்பித்தான் விஷ்வா.

எழுந்தது முதல் ஆராதனாவின் பின்னாலயே சுற்றித் திரிந்தான். அதிசயமாக அவளும் எதுவும் பேசவில்லை. ஏதோ சொல்ல தயங்குவதை சிறிது நேரத்திற்குப் பிறகே கவனித்தான்.

“ஏதாவது சொல்லணுமா?”

“ம்ம்… நீ… நம்ம எங்கயாவது வெளிலப் போகலாமா?”

“என்ன திடீர்னு?”

“வீட்டுக்குள்ளயே உட்கார்ந்து யோசிச்சா… தெரில எனக்கு கோவம் கோவமா வருது. தெளிவா யோசிக்க முடியல விஷ்வா. போலாமா?”

“ம்ம்”

“எங்க?”

“நீ ரெடி ஆகு. ஒரு டிரைவ் போகலாம்”

“அங்கிள்?”

“இங்கதான்மா இருக்கேன். என்ன விஷயம்?”

“வெளிலப் போறீங்களா அங்கிள்?”

“இன்னைக்கு அப்பா பாக்டரிக்கு போவாங்க. அதான் காலையிலயே கெளம்பிட்டாங்க”

“ஓஹ்ஹ்…”

“நீ போய் சீக்கிரம் ரெடி ஆகு”

அராதனா அங்கிருந்து சென்றதும், “நீ செய்யுறதெல்லாம் சரி தான் விஷ்வா. பட் இதுக்கப்பறம் எதுவும் தப்பாகிடாம பார்த்துக்கோ” என்றார் சந்திரன்.

“கொஞ்சம் பயமா இருக்குப்பா. சமாளிச்சிடுவேன். உங்கள டிராப் பண்ணிடுறேன்”

“வேண்டாம்பா. நீங்க கிளம்புங்க. குமார் வந்து பிக்கப் பண்ணிக்குவான். இன்னும் அரை மணி நேரம் ஆகும்னு சொன்னான். ரெங்கநாதனுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அவரு பாக்டரில இருக்கும்போது எந்த கவலையும் இல்ல”

தலையாட்டிவிட்டு அறைக்குள் வந்தான். ஆராதனா குளித்துக் கொண்டிருந்தாள். கப்போர்டை திறந்தான். முன்பு போல் அவளுடைய உடைகளும் உள்ளே இருந்தன. வீட்டிலிருந்த எல்லோரும் சென்ற இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் அங்கே அடுக்கியிருந்தாள். மாடியறையில் அவள் உடைகளை வைத்துக் கொண்டு எத்தனை முறை ஏறி இறங்குவது?

இருவரும் தயாராகி வெளியே வந்தனர். வீட்டை பூட்டி சாவியை அவளிடமே நீட்டினான். காவலாளி இருக்கும் வரை சாவியை அவனிடம் கொடுத்துச் செல்வது வழக்கம். இன்று அவனுக்கே இச்செயல் புதிதாக தெரிந்தது. தயக்கத்துடன் வாங்கி கைபையில் வைத்துக் கொண்டாள்.

முதலில் எங்கும் நிறுத்தாமல் ஒரு லாங் டிரைவ் போகவே எண்ணியிருந்தான். வழியில் தென்பட்ட மால் ஒன்றை பார்த்ததும் அதனுள் செல்லலாமென முடிவெடுத்து காரை உள்ளே திருப்பினான்.

பார்க்கிங்கிலிருந்து உள்ளே செல்லும் வரை அவன் கை பிடித்து நடந்தாள். அதன் பிறகு விலக நினைத்தவளின் கையை இறுகப் பற்றி தன்னருகிலேயே நடத்திச் சென்றான்.

“ஹாய் ஆராதனா… என்ன அதிசயமா இருக்கு… வீக் டேஸ்ல வெளிலலாம் கூட்டிட்டுப் போறாங்களா உங்க ஹஸ்பன்ட்? ஆமா எங்க உங்க வீட்டுல வேலை செய்யுற யாரையும் காணோம்? உன்னையும் கொஞ்ச நாளா பார்க்கலையே…”

அறுபது வயதிருக்கும் அந்த பெண்மணிக்கு. சிரித்த முகமாய் அவளருகில் நின்றிருந்தார். விஷ்வாவின் கையை இன்னும் இறுகப் பிடித்து அவன் முகம் பார்த்தாள்.

“இன்னைக்கு வேலை கொஞ்சம் கம்மி. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றவன் குனிந்து, “பக்கத்து வீட்டுல இருக்காங்க. நான் அதிகம் பேச மாட்டேன். நீதான் எப்பயும் பேசுவ. இவங்கள தெரிலையா?” என்று மெதுவாகக் கேட்டான்.

சுற்றியிருந்த அனைவரும் தன்னையே பார்ப்பது போல் இருந்தது. கண்களை இறுக மூடி திறந்து இல்லையென்று தலையசைத்தவள், “வரோம். அப்பறம் பார்க்கலாம்” என்றுக் கூறி மாலை விட்டு வெளியே வந்தாள்.

“இங்க வேண்டாம் விஷ்வா. நம்ம… நம்ம… பேக்டரிக்குப் போகலாம். அங்கிளும் அங்க இருப்பாங்கல்ல… இது வரைக்கும் நீ கூட்டிட்டுப் போகவே இல்லையே…”

அவள் கையில் லேசான நடுக்கத்தை உணர்ந்தவன் மறுப்பேதும் கூறாமல் காரை எடுத்தான். அவர்கள் உள்ளே செல்லும்போது இருந்ததைவிட இப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. பார்க்கிங்கிலிருந்து காரை எடுத்து மாலை விட்டு வெளியே வர இருபது நிமிடங்களுக்கு மேலானதில் எரிச்சலுற்றிருந்தான் விஷ்வா.

வழியில் காரை நிறுத்தி தந்தைக்கும் ரெங்கநாதனுக்கும் அழைத்து தாங்கள் வரும் விபரம் கூறினான். தொழிற்சாலையின் முன்னால் காரை நிறுத்தியபோது அவர்களை வரவேற்க இருவரும் வாசலில் நின்றிருந்தனர். இதை விஷ்வாவே எதிர்ப்பார்க்கவில்லை.

“வாங்கம்மா. நல்லாயிருக்கீங்களா?”

அங்கே சந்திரன் மட்டுமல்ல. மேலும் பலரும் இருக்கக்கூடும் என்று அப்போது தான் உரைத்தது. கேள்விக் கேட்டவர் பரிட்சயமற்றவராய் தெரிந்தார். சிரிக்க முயன்று அவர்களுக்குப் பின்னால் பார்த்தாள். முதலாளி வெளியே வரும்போது தாங்களும் உடன் வர வேண்டுமென்று இன்னும் சிலர் வந்திருந்தனர்.

தலை வலி ஆரம்பமானது. அங்கிருந்து உடனே செல்ல வேண்டும்.

“உள்ள வாம்மா ஆராதனா”

“வா”

சந்திரனும் விஷ்வாவும் அழைக்க, “வேண்டாம் விஷ்வா. போயிடலாம்” என்றுக் கெஞ்சினாள்.

“ஏன்? இத்தன பேரு உனக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நம்ம இடம்தான் உள்ள வா ஆராதனா”

“ப்ளீஸ் விஷ்வா. வேண்டாம். எனக்கு யாரையும் தெரியாது”

“நீ இங்க வந்ததே இல்ல. நெஜமாவே இங்க இருக்க முக்கால்வாசி பேர உனக்கு தெரியாது. உள்ள வா”

“ஒரு சிலரையாவது எனக்கு தெரிஞ்சிருக்குமே… யாரையும் நியாபகம் இல்ல. வா போகலாம்”

“ம்ம்ச்ச்… எங்கப் போகலாம்”

“எங்க வீட்டுக்குப் போகலாம்”

மெல்ல திரும்பி தந்தையை பார்த்தான். அவர்கள் பேசியது எதுவும் கேட்காவிடினும் உள்ளே வர அவளுக்கு விருப்பமில்லையென்றுப் புரிந்துக் கொண்டவர், “அவ ரெஸ்ட் எடுக்கட்டும்பா. கூட்டிட்டுப் போ” என்றார்.

காரை ஆராதனாவின் வீட்டின் முன்னால் நிறுத்தினான். இறங்கி கேட்டை நோக்கி நடந்தவள் தயங்கி நின்றாள். விஷ்வா அவளருகில் வந்தான். ஹரிகிருஷ்ணனின் நண்பர் தன் குடும்பத்துடன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் அறிமுகமானவர் என்பதால் உடனேயே அடையாளம் தெரிந்துக் கொண்டான்.

எங்கும் தெரியாத முகங்கள். வரிசைகட்டி தன்னை துரத்துவதாகத் தோன்றியது. தந்தையின் நண்பரை தெரியாமலில்லை. உடன் நின்றிருந்த மற்றவர்களை தெரியவில்லை. இப்போதுதான் வீட்டினுள் நுழைகிரார்கள் போலும். வாசலில் நின்றிருந்தனர்.

“போலாம் விஷ்வா. வா. வண்டிய எடு. சீக்கிரம் உள்ள உட்காரு”

அவன் கை பற்றி இழுத்து வந்தவள் வேகமாக உள்ளே ஏறி அமர்ந்தாள்.

“இப்போ எங்கப் போக?”

“நம்ம வீட்டுக்கே போ”

“எதுக்கு இப்படி ஓடுற? எப்பையிலிருந்து அது நம்ம வீடாச்சு? நீ தெளிவா இருக்கியா இல்லையான்னு யோசிச்சு குழம்பியே எனக்கு பைத்தியம் பிடிக்கப் போகுது”

“தயவுசெஞ்சு பேசாம சீக்கிரம் போறியா?”

வீட்டிலிருந்து புறப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் அங்கே ஓடி இங்கே ஓடி கடைசியில் வீட்டிற்கே ஓடி வந்துவிட்டாள்.

விஷ்வா வருவதற்காகக் காத்திராமல் வீட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள் அவன் வந்ததும், “எதுக்கு என்னை அங்கல்லாம் கூட்டிட்டுப் போன? ஏன் அவங்கள தெரிலையா இவங்கள தெரிலயான்னுக் கேட்டு என் உயிர வாங்குற? நிம்மதியா எங்க வீட்டுக்கும் போக விட மாட்டேங்குற… என் அம்மா அப்பா… உன் பேச்ச கேட்டுக்கிட்டு என்னை திட்டுறாங்க. போயிடு… என்னை விட்டு எங்கயாவது போயிடு” என்று கத்தி அவ்விடத்தைவிட்டு செல்ல முயன்றவளின் இடையை பிடித்து தன் பக்கம் திருப்பி தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தான்.

“நான் உன்ன பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு உங்க வீட்டுல வெச்சு நீ என்கிட்ட என்ன சொன்ன நான் என்ன பேசுனேன்னு உனக்கு தெரியுமா?”

சட்டென்று அமைதியாகி அவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள்.

“நீயும் நானும் தனியா பேசுனோம். பொண்ண பிடிக்கலன்னு உங்க அப்பா அம்மாகிட்ட சொல்ல சொன்ன. என்னடா இந்த பொண்ணு இப்படி ஆரம்பிக்குதேன்னு நெனச்சேன். எதுக்கு அப்படி சொல்லணும்னுக் கேட்டேன். நீ உங்க அப்பா பேக்டரிய பார்த்துக்கணும்னு சொன்ன.

எனக்கு அப்போ சிரிப்பு வந்துடுச்சு. நீ சீரியஸா பேசிட்டு இருக்கப்போ சிரிக்க வேண்டாமேன்னு கண்ட்ரோல் பண்ணிட்டேன். சரி பார்த்துக்கோ அதுக்குன்னு கல்யாணமே பண்ணிக்காம இருந்திடப் போறியான்னுக் கேட்டேன். யோசிச்ச. இல்ல கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்குவேன்னு சொன்ன.

என்கிட்டயும் உங்கப்பாவோடத விட பெரிய பேப்பர் பாக்டரி இருக்கு. அதையும் சேர்த்துப் பார்த்துக்கோன்னு சொன்னா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவியான்னுக் கேட்டேன். ஏன் அப்படி கேட்க தோனுச்சுன்னுத் தெரியல. போட்டோல உன் முகம் பார்த்திருக்கேன். வீட்டுக்குள்ள வந்ததுக்கப்பறமும் பார்த்தேன். அப்போவெல்லாம் மனசுல பதியாத உன் முகம் கல்யாணம் வேண்டாம்னு நீ சொல்ல சொன்னப்போ ஆழமா பதிஞ்சுடுச்சோ என்னமோ.

அமைதியா யோசிச்ச. நீ நோ சொன்னா தாங்கிக்க முடியாதுன்னு தோனுச்சு. உன் கை பிடிச்சு ப்ராமிஸ்னு சொன்னேன். ரொம்ப நேரம் என் முகத்தையே பார்த்துட்டு நின்ன. அப்பறம் என்ன நெனச்சியோ… சரின்னு தலையாட்டிட்டு போயிட்ட.

அன்னையிலிருந்து நீ இல்லாத லைப் என்னால நெனச்சுக் கூட பார்க்க முடிஞ்சதில்ல. இப்போ இவ்வளவு பொறுமையா உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்னா அது நீ எனக்கு சொல்லிக் கொடுத்தது.

கல்யாணத்துக்கப்பறம் பாக்டரிக்கு போகணும்னு என்கிட்ட கேட்டதில்ல. அன்னைக்கு என்ன யோசிச்சன்னும் சொன்னதில்ல. இன்னைக்குதான் முதல் முதல்ல பாக்டரிக்கு வர. எனக்கு உண்மையிலயே ஆசை இருக்கு ஆராதனா… நீ என் பிசினஸ் பார்த்துக்கணும். உன்னால முடியும்னு எனக்கு தெரியும்.

உங்க வீட்டுக்குப் போக நான் தடையா இருக்கேன்னு நெனச்சா… இதுக்கு மேல உன்னை இங்க நிறுத்தி வெக்க எனக்கு உரிமை இல்ல. பேக் பண்ணு. இப்போவே கொண்டு போய் விட்டுட்டு அம்முவ கூட்டிட்டு வந்திடுறேன்”

தலை குனிந்து நின்றான். தோல்விக்குப் பின் துவளும் முகம் அவனுடையதாய் இருந்தது. காயப்படுத்துவதற்காக பேசவில்லை. இருப்பினும் அதிகமாய் ஆழமாய் காயப்படுத்தியிருக்கிறோம். அவன் கைகளுக்குள் நிற்பதை உணரும் நிலையில் அவளில்லை. அதற்கு மேலும் அவன் முகத்தை காண சகிக்காமல் அவனை இருக்கியணைத்துக் கொண்டாள் ஆராதனா.

நிழலே நிஜமாய் – 22

குற்றவுணர்வு மேலோங்கிய நிலையில் விஷ்வாவை இறுக்கியணைத்த ஆராதனாவிற்கு தன் நிலை உணர சில நிமிடங்கள் ஆயின. உடனே விலக வேண்டுமென்ற படப்படப்பு. தன் செயலுக்கு என்ன விளக்கம் கூறுவதென்ற பரிதவிப்பு. இரண்டும் மனதில் ஆர்ப்பரித்த ஏதோவொரு நொடியில் வேகமாய் விலகி நின்றாள்.

கனவுலகத்திலிருந்து திடீரென்று நடப்பிற்கு வந்தவன் போல் விழித்தான் விஷ்வா. அவள் தள்ளி நின்றது மனதை சுனங்கச் செய்ய மற்றுமோர் அணைப்பிற்காய் கை நீட்டி அவளை தீண்ட முயன்றான்.

“நான்… தூங்கப் போறேன்” அவன் முகம் காணாது ஓடிவிட்டாள். கோபம் கொள்வாளோ என்று அஞ்சினாலும், நீங்கி ஒதுக்கிச் சென்றது வருத்தம் தந்தாலும், அவர்கள் அறைக்குள் அவள் சென்றது கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியை அளித்தது.

தொலைகாட்சிப்பெட்டியின் மேலிருந்த புகைபடம் கண்ணில் பட்டது. மருத்துவர் சொன்னது போல் இன்னும் கொஞ்ச நாள். கண்டிப்பாக தன் குடும்பத்தை மீட்டெடுத்துவிட முடியுமென்ற நம்பிக்கை முகத்தில் புன்முறுவலை வரவழைத்தது.

ஆராதனா கால்களை மடக்கி கைகளால் கட்டி முகத்தை அதில் வைத்து அமர்ந்திருந்தாள். அவள் பயந்தது போல் எண்ணங்களுடன் போர் செய்ய வேண்டி வரவில்லை. எந்த யோசனையும் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் அமைதியை அனுபவிக்கிறாள்.

சந்திரன் வந்து ஹார்ன் அடிக்கும் வரை இருவரும் தங்கள் இடத்தை விட்டு அசையாதிருந்தனர். அவர் வந்தப் பிறகு அவரவர் வேலையை கவனிக்கச் செல்ல அன்றைய நிகழ்வு குறித்து சந்திரனும் அப்போது எதுவும் கேட்கவில்லை.

தேநீர் கோப்பையுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்த யாருக்கும் பேச்சை எதிலிருந்து துவங்குவதென்றுத் தெரியாத நிலை. கேட்டறிய எதுவும் இல்லையெனினும் தான் கூற வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாகத் தோன்ற தானே ஆரம்பித்தார் சந்திரன்.

“இன்னைக்கு ஏன் ஆராதனா பாக்டரி வரைக்கும் வந்துட்டு உள்ள வராம போன?”

“பயந்துட்டேன் அங்கிள். அங்க… அதுக்கு முன்னாடி ஒரு மாலுக்கு போனோம். பக்கத்து வீட்டு ஆன்டியாம்… வந்து பேசுனாங்க. அடையாளம் தெரியல. அதான் பாக்டரிக்கு போலாம்னு சொன்னேன். ஆனா… அங்கயும் அத்தன பேர பார்த்ததும்… தப்பா நெனச்சுட்டாங்களா?”

“நீ எதுக்கு அவள அங்க கூட்டிட்டு வந்த விஷ்வா?”

“சாரி பா. யோசிச்சிருக்கணும். தேவையில்லாம…”

“விஷ்வா மேல தப்பில்ல அங்கிள். நான் தான் கூட்டிட்டுப் போக சொல்லி…”

“இனிமே இப்படி நடக்காம பார்த்துக்குறேன் பா”

“நான் கேட்டதால தான…”

“நீ கேட்டியோ அவன் யோசிக்காம கூட்டிட்டு வந்தானோ… உனக்கு எல்லாம் மறந்துடுச்சுன்னு வீட்டுல வேலை செய்யுறவங்களுக்கு கூட தெரியக் கூடாதுன்னு எல்லாரையும் அனுப்பியாச்சு. உன்ன வெளில கூட்டிட்டுப் போகணும்னு நெனச்சது தப்பில்ல. நீ என்ன மனநிலைல இருப்பேன்னு கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம அத்தன பேர் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துனது தப்பு. அதுக்கப்பறம் நீ உள்ள வர மாட்டேன்னு சொன்னப்போ எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி ஒரு ரெண்டு நிமிஷத்துக்காவது உள்ள கூட்டிட்டு வந்திருக்கணும். கேள்வி கேட்குறவங்களுக்கு என்ன பதில் சொல்லுறது? சமாளிக்குறதுக்கு எவ்வளவு பாடுப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். எவ்வளவு பொய் சொல்லி… தேவையா இதெல்லாம்?”

“ஏதோ டென்ஷன்ல அவ கேட்டதும் அங்க வந்துட்டேன். இனி இப்படி நடக்காது பா. சிச்சுவேஷன் எப்படி இருந்திருக்கும்னு என்னால கெஸ் பண்ண முடியுது. சாரி பா. இப்படி ஒரு நிலமையில உங்கள நிறுத்துனதுக்கு”

“தப்பு முழுக்க உன் பேருலன்னு சொல்ல மாட்டேன் விஷ்வா. கவனமா இரு. நீ இன்னும் மாறவே இல்ல ஆராதனா. இவனுக்கு இப்படி சப்போர்ட் பண்ணி பண்ணியேதான் எல்லா விஷயத்துலயும் அவன் இஷ்டத்துக்கு நடந்துக்குறான்”

எழுந்து செல்லும்போது தந்தை கூறியது அவனை சிரிக்க வைத்தது. ஆராதனாவின் முகம் இன்னும் தெளியவில்லை.

“சாரி விஷ்வா. என்னால நீ திட்டு வாங்க வேண்டியதாப் போச்சு. நான் எதையுமே யோசிக்கல. ம்ம்ச்ச்… என் தப்பு”

விஷ்வா எழுந்து நின்று வலது கரம் நீட்டினான். இவ்வளவு திட்டு வாங்கியும் எப்படி சிரித்துக் கொண்டிருக்கிறான்? அவன் கரம் மீது தன் கரம் வைத்து எழுந்து அவனுடன் நடந்தாள்.

முதல் நாள் அவன் கை பிடித்து அந்த வீட்டிற்குள் நுழைந்ததற்கும் இன்று நுழைவதற்கும் எத்தனை வித்தியாசம்? ஹாலில் தன்னை பிரிந்து செல்லத் திரும்பியவனிடம், “சாரி” என்று மீண்டும் மன்னிப்புக் கோரினாள்.

அருகில் வந்து குனிந்து கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டு சென்றுவிட்டான். இதை சற்றும் எதிர்ப்பார்க்காதவள் அடுக்களைக்குள் புகுந்துக் கொண்டாள்.

“எவ்வளோ தைரியம் அவனுக்கு? அவன் பாட்டுக்கு வந்து… சும்மா போனவன சாரி சாரின்னு சொல்லி நான் தான்… பாவம் அங்கிள் அப்படி திட்டுனாங்களேன்னு நெனச்சா… முதல்ல பீல் பண்ணான். அப்பறம் எதுக்கு லூசு மாதிரி சிரிச்சான்? பேசாம இருந்திருக்கணுமோ? இருந்தாலும் எவ்வளோ தைரியம் அவனுக்கு?”

எவ்வளவு நேரம் இப்படியே தன்னையும் அவனையும் மாறி மாறி திட்டித் தீர்த்தாளோ இரண்டு கரங்கள் இடையை சுற்றி வளைக்க திமிறி விடுபட முயன்றவளை பின்னாலிருந்து இன்னும் இறுக்கமாக அணைத்தான் விஷ்வா.

“விடு விஷ்வா. என்ன நெனச்சிட்டிருக்க நீ? ஏய் விடுன்னு சொல்லுறேன்ல…”

“ஏன் விடணும்?”

“விடப் போறியா இல்லையா?”

“முடியாது. என்ன பண்ணுவ?”

“விடு”

“ஹ்ம்ம்… சரி சொல்லு. நான் உன்ன ஹக் பண்ணுறது இதான் பர்ஸ்ட் டைமா?”

தானே அவனை இன்று அணைத்ததை எண்ணிப் பார்த்தாள்.

“என்ன யோசிக்குற? இன்னைக்கு நடந்தத விடு. நான் உன்ன ஹக் பண்ணுறது இதான் பர்ஸ்ட் டைமா?”

“ஆமா. விடு. விடு…..”

“அப்போ டெய்லி தூங்கும்போது உன்ன கட்டிப்பிடிச்சு தூங்குறேன்னு சொன்னியே… அது?”

“இல்ல இல்ல… அப்படி நான் சொல்லல”

“பின்ன?”

“தூக்கத்துல தெரியாம… எப்பையாவது… என் மேல கை போடுவ… நான் உடனே எடுத்துவிட்டுடுவேன்”

அவளை லேசாக திருப்பி அவள் முகம் பார்த்தான்.

“அடச்ச… ஏன் இவ்வளவு கேவலமா உளறுறோம்?” மிக அருகில் அவன் முகம் பார்த்தவள் வேகமாக திரும்பிவிட்டாள்.

“ம்ம்… இப்படியே அமைதியா நீ உன் வேலைய பார்ப்பியாம்”

“நீ? வெளில போ. விடு ப்ளீஸ்”

“உன் வேலைய மட்டும் பாரு. என்னை பத்தி ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்”

அவள் வேலையை மட்டும் பார்க்க சீக்கிரமே பழகிக் கொண்டாள் ஆராதனா. காரணம் தினமும் இரவு சமையலின்போது அவளை பின்னாலிருந்து அணைத்தபடி நின்று அவளுடன் பேசுவதை வாடைக்கையாக்கினான்.

அன்று சந்திரனும் விஷ்வாவுடன் தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். ஏதோ முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி முந்தைய இரவு அதை அவளுக்கு விளக்கவும் செய்திருந்தான். அவன் பேச்சை அவள் கவனிக்கவில்லை. அவன் அணைப்பில் லயித்திருந்தாள். அதை அவன் உணராதிருக்க மும்முரமாய் சமைப்பது போல் பாவனை செய்துக் கொண்டிருந்தாள்.

அவன் பேச்சென்றில்லை. சில நாட்களாகவே செய்யும் வேலை, பிறர் பேசுவது, குமார் கூறும் அறிவுரைகள் என்று எதிலும் கவனம் இல்லை. ஆகாயத்தில் மிதந்தும் காற்றில் நடந்தும் தனக்கானதொரு தனியுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

இருவர் மட்டுமே உலகமென்றிருந்தால்? அக்கணமே அம்முவின் நினைவு வந்தது. அவளுடன் பேசியே பல நாட்களாகின்றன. இப்போதெல்லாம் விஷ்வாவும் தினம் அவளைக் காணச் செல்வதில்லையோ? இருக்கலாம். இந்நேரம் அவள் பள்ளியிலிருந்து வந்திருப்பாள். கைபேசியை எடுத்து அன்னையின் எண்ணிற்கு அழைத்தாள்.

ஆரதானாவின் எண்ணிலிருந்து அழைப்பென்றதும் தீபாலியே பேசினாள்.

“ஹலோ மம்மி… நான் ஸ்கூல்லேந்து வந்துட்டேன்”

அவளது ‘மம்மி’ என்றழைப்பு சிலிர்க்க வைத்தது. உதடு கடித்து புன்னகைக்க வைத்தது. அன்றைய தினம் குழந்தையிடம் கொஞ்சி பேசும் பேச்சாய் இல்லாமல் பொறுப்பான தாயாக தீபாலியிடம் பேசினாள் ஆராதனா. முதல் முறையாய் அவள் தன்னுடைய மகள் என்பதை நம்ப முயன்றாள். அவள் மகளென்றால் விஷ்வா? திருமணத்தைக் குறித்த சிந்தனை வந்ததும், “பாட்டிகிட்ட குடு அம்மு” என்றாள்.

தாயிடம் பேசினாள். நலம் விசாரித்தாள். அவர் கேட்காமலே தான் சந்தோஷமாய் இருப்பதாகக் கூறினாள். சரண்யாவிற்கு அவள் குரலிலிருந்த தெளிவும், சொன்ன வார்த்தைகளும் மகிழ்ச்சியை அளித்தன.

அன்று மாலை சந்திரனுக்கும் விஷ்வாவிற்கும் தேநீர் அளித்தவள் அவர்களுடன் அமரவில்லை. அவள் இல்லாதக் காரணத்தாலேயே அவர்கள் சுருங்க பேசி முடித்து உள்ளே வந்தனர். சந்திரனின் அறை வாயிலில் தயங்கி நின்றாள்.

“என்ன ஆராதனா?”

“நான் கொஞ்சம் பேசணும்…”

“சொல்லு. இன்னைக்கு கார்டன்ல எங்ககூட உட்கார்ந்து பேசல. விஷ்வாவுக்கு தெரியக் கூடாத விஷயம் ஏதாவது சொல்லணுமா?”

“இல்ல அங்கிள்…”

விஷ்வாவின் பெயரை கேட்டதும் காரணமின்றி சிரிப்பதும் வாயிலில் தொங்கிய திரைசீலையை திருகுவதுமாக நின்ற மருமகளை விநோதமாகப் பார்த்தார்.

“நான் ஒண்ணு கேப்பேன்… ஆனா நீங்க முடியாதுன்னு சொல்லக் கூடாது அங்கிள்”

“ஸ்கரீன பிச்சு வெச்சுடாத. எதுவா இருந்தாலும் அத விட்டுத் தள்ளி நின்னு கேளு. என்ன விஷயம்?”

“விஷ்வாவ… உங்க பையன எனக்கு கல்யாணம் பண்ணி வெப்பீங்களா?”

“என் பையன? மறுபடியுமா? சரி பண்ணி வெக்குறேன்”

“தேங்க்ஸ் அங்கிள்”

எதற்காக இப்படி ஓடுகிறாள் என்ற யோசனையுடன் சந்திரனின் அறைக்குள் நுழைந்தான் விஷ்வா. “இந்த பைல்ல இருக்க ரெண்டு டாகுமென்ட்ஸ்லயும் உங்க சைன் வேணும் பா. ஈவ்னிங் வாங்க மறந்துட்டேன். ஆராதனா என்ன சொன்னா?”

“ம்ம்… உங்க பையன கல்யாணம் பண்ணி வெப்பீங்களான்னுக் கேட்டுட்டுப் போறா. எத்தன தடவ கல்யாணம் பண்ணுறது? நீ பைல்ல குடு. இந்த பேப்பர்ஸ் எல்லாம்…”

சந்திரன் அவள் கேட்டதை பெரிதாகக் கண்டுக்கொள்ளாதபோதும் விஷ்வாவால் அப்படியிருக்க முடியவில்லை. அவனைக் கண்டால் ஒதுங்கிப் போவதும், அவன் அணைப்பை மறுக்காதிருப்பதும், அதிகம் பேசாமல் தனக்குள் சிந்தித்து சிரிப்பதுமாக இருக்கும் அவள் நடவடிக்கைகளில் தெரியும் வித்தியாசங்கள் எதுவும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.

நீண்டுக்கொண்டேப் போன அவர் பேச்சுக்கு நாசுக்காக முற்றுப்புள்ளி வைத்து எழுந்து அவர்கள் அறைக்குள் சென்றான். கைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவள் அவனைக் கண்டதும் எழுந்து நின்றாள். கதவை தாழிட்டு பைல்லை மேஜை மீது வைத்தவன் அவள் அருகில் சென்று கைபேசியை எட்டிப் பார்த்தான்.

அவனுடைய புகைபடம். அவனுக்குத் தெரியாமல் அவள் எடுத்திருக்க வேண்டும். அவன் பார்த்துவிட்டானென்றதும் கைபேசியை மறைக்க முயன்றாள். இன்னும் நெருங்கிச் சென்று கன்னத்தில் முத்தமிட்டான். அதை அவள் உணரும் முன்னே இடையை சுற்றி அணைத்தான். முத்தத்தின் அழுத்தமும் அணைப்பின் இறுக்கமும் கூடிக் கொண்டேப் போக கன்னத்தை விடுத்து கழுத்தில் முத்தமிட்டு அவள் முகம் பார்த்தான்.

கண் மூடி தன் கைகளுக்குள் ஒடுங்கி நின்றவளைக் கண்டதும் சட்டென்று விலகிச் சென்று கப்போர்டை திறந்தான். வேகவேகமாக துணிகளை களைத்தும் பொருட்களை நகர்த்தியும் அப்படி எதை தேடுகிறானென்று புரியாமல் பார்த்தாள். அவளிடமே திரும்பி வந்தவன் கையிலிருந்ததை அவளிடம் காட்டினான்.

“எனக்கிது முக்கியமில்ல. ஆனா உனக்கு… இதனால எதுவும் மாறப் போறதில்ல. இருந்தாலும் நீ கில்ட்டியா பீல் பண்ணாம இருக்க ஒருவேளை இது ஹெல்ப் பண்ணலாம்”

தாலியை அவள் கழுத்தில் அணிவித்தவன் கன்னங்களை பற்றி உதட்டில் அழுந்த முத்தமிட்டான்.

நிழலே நிஜமாய் – 23

விஷ்வா சொன்னது போல் தாலி அவள் மனநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. ஆராதனா விழித்திருந்தாள். தூங்கினால் தானே விழிப்பதற்கு. தாலியை கழட்டியும் கழுத்தில் மாட்டியும் நேரத்தை கடத்தினாள்.

விஷ்வா அசையாது படுத்திருந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனுக்கு மட்டும் எப்படியிந்த நிம்மதியான உறக்கம் வாய்த்தது? இரவு நிகழ்ந்தவற்றை எண்ணிப் பார்க்க பெருத்த தயக்கம்.

கையிலிருந்த தாலியை அணிந்துக் கொள்ள கழுத்தினருகில் எடுத்துச் சென்றவள் அதை தலையணைக்கடியில் வைத்துப் படுத்தாள். இன்று கண்டிப்பாக உறக்கம் வராது. விஷ்வாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் ஐந்து மணிக்கு எழுந்து தோட்டத்து பெஞ்சில் சென்று அமர்ந்தாள்.

ஆழ்ந்த உறக்கத்தை அனுபவித்ததாலோ என்னவோ வழக்கத்தைவிட சீக்கிரமே விழிப்புத் தட்டியது விஷ்வாவிற்கு. மெத்தையில் துழாவினான். மெல்ல கண்களை திறந்து தேடினான். ஆராதனா அறையில் இல்லாவிட்டாலும் இன்று புத்துணர்வுக்கு குறைவில்லை. துள்ளலுடன் எழுந்தான்.

பின்னால் கேட்ட காலடி ஓசை பதட்டத்தை கொடுக்க விஷ்வா அருகில் வந்து அமரும் முன் வேகமாக எழுந்து வீட்டிற்குள் சென்றுவிட்டாள் ஆராதனா.

முகம் கூட பார்க்காமல் செல்கிறாள். தவறு செய்துவிட்டோமோ? இல்லையென்று அந்த எண்ணத்தை உதறித் தள்ளினான். அவளுடன் பேச வேண்டிய அவசியம் முன்பை விட இப்போது அதிகரித்திருக்கிறது. உடனே செல்லவும் மனமில்லை. பேச மாட்டாள். முகம் பார்ப்பதையே தவிர்ப்பவள் பேச மாட்டாள். விழிகள் மூடி அமர்ந்தான்.

சந்திரன் செய்தித்தாளை எடுப்பதற்காக வாசலுக்கு வந்தார். இந்நேரத்தில் விஷ்வா தோட்டத்தில் அமர்ந்திருப்பது ஆச்சரியம். அருகில் செல்லலாமா என்று நினைத்தவர் அவனுக்கு தனிமை தர விரும்பி வீட்டிற்குள் வந்துவிட்டார்.

தேநீர் கோப்பையை கொடுத்த ஆராதனாவும் எதுவும் பேசவில்லை. புன்னகைக்கக் கூட இல்லை. வீட்டின் அமைதி வித்தியாசமாகப்பட்டது. மகன், மருமகளிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லையென்று சந்திரன் முடிவெடுத்தார்.

அவரும் பேசாததால் விஷ்வாவிற்கு பேச்சை துவங்குவது இன்னும் கடினமானது. தோட்டத்திலிருந்து எழுந்து வந்தவனுக்கு அறையில் தேநீர் தயாராயிருந்தது. தொழிற்சாலை செல்ல கிளம்பியவனுக்கு காலை உணவு டைனிங் டேபிளில் காத்திருந்தது. ஆராதனா சமையலறையில் இல்லை.

“சாப்பிடலாம் விஷ்வா”

“ஆராதனா எங்கப்பா?”

“ஏதோ வேலையிருக்குன்னு சொன்னா. நீ வா. நம்மள சாப்பிட சொன்னா. அவ அப்பறம் சாப்பிடுறாளாம்”

அவள் சாப்பிட மாட்டாள். தேடிச் சென்று அழைத்து வரலாமா? இப்போது வேண்டாம். மாலை பார்த்துக் கொள்ளலாம்.

மதியம் சந்திரன் உணவு எடுத்து வந்தார். சாப்பிட்டு முடித்து அவர் கிளம்பியதும் கைபேசியை எடுத்து அவள் எண்ணிற்கு அழைத்தான்.

எடுக்க வேண்டாம். எடுக்கக் கூடாது. மூன்றாவது ரிங்கில் அழைப்பை ஏற்றாள்.

“சாப்பிடு ஆராதனா. ப்ளீஸ்”

அவ்வளவுதானா? இதை சொல்லதான் அழைத்தானா? பதில் சொல்லவும் அவகாசம் கொடுக்காமல் வைத்துவிட்டான். அவனுக்கு எப்படித் தெரிந்தது? மனம் முழுவதும் அவன் தன்னைக் குறித்து சிந்திக்கிறான் என்ற சந்தோஷம். நல்ல பசி. அடுக்களைக்குள் சென்றாள்.

அன்று வழக்கத்திற்கு மாறாக அம்முகூட அமைதியாக இருந்தாள். மடியில் மகளை அமர்த்தி விஷ்வாவும் அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு ஆராதனாவின் வீட்டிலிருந்துக் கிளம்பினான்.

சந்திரனுக்கும் அவனுக்கும் தேநீர் கொடுத்தவள் அவர்களுடன் தோட்டத்தில் அமரவில்லை. அடுக்களையில் அதிக நேரம் நிற்காமல் இரவு உணவை தயாரித்து மேஜையில் வைத்துச் சென்றுவிட்டாள். விஷ்வாவிற்கு சிரிப்பு வந்தது.

நீண்ட நேரத்திற்குப் பிறகும் அவள் அறைக்குள் வராததால் வெளியே வந்தான். சந்திரன் உறங்கிவிட்டிருந்தார். ஆராதனா டீவீ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தூங்கலையா?”

“இல்ல. தூக்கம் வரல. நீ போய் தூங்கு”

“ஏன்?”

“நீ தூங்கு”

இப்போதும் முகம் பார்க்க மறுக்கிறாள். வேறொன்றும் கேளாமல் சென்றுப் படுத்தான். இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றி கண்களை இறுக மூடினாள் ஆராதனா.

நள்ளிரவை கடந்து அருகில் வந்து படுத்த மனைவியின் முன்னால் தான் இன்னும் விழித்திருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் கண் மூடி படுத்திருந்தான். அவன் உறங்கிவிட்டானா என்று பலமுறை உறுதிப்படுத்திக் கொண்டப் பின்னரே அவள் உறங்க ஆரம்பித்தாள்.

காலை அலாரம் அடித்ததும் எழ முயன்றவளை அணைத்து படுத்திருந்தான் விஷ்வா. அவனை எழுப்பாமல் அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றாள்.

“முழிச்சுதான் இருக்கேன். ரொம்ப கஷ்டப்படாத”

எப்போது விழித்தான்? அவன் முகத்தையே உற்று நோக்க விழிகள் திறந்து அவளை பார்த்தான்.

“நான்… எனக்கு வேலை இருக்கு. விடு”

“மாட்டேன்”

“என்னை விடு. நான் போகணும்”

“எங்கயும் போக வேண்டாம். இப்படி சீரியஸா பேசினா விட்டுடுவேன்னு நினைப்பா? நேத்து முழுக்க ஓடி ஒளிஞ்சல்ல… நைட் எதுக்கு அவ்வளவு லேட்டா வந்து படுத்த? நீ எதுக்கு இப்படி என்ன பார்த்து பயப்படுறியோ அததான் நான் செய்வேன்”

எவ்வளவு தடுத்தும் அவளை அடக்கியாளும் வித்தையறிந்திருந்தான். தடுக்க முயன்றவள் பின் மெல்ல தயக்கம் துறந்தாள். நாட்கள் செல்ல செல்ல அவன் மீதான காதல் அதிகரித்தது. அவன் தன் கணவன் என்பது மனதில் ஆழப் பதிந்தது.

தன்னைக் குறித்த சந்தேகங்களும் குழப்பங்களும் மேலோங்கும் சமயங்களில் அவள் முகம் பார்த்து மனதை படித்தான். தெளிவுபெற பேசி அவளை அமைதியுறச் செய்தான்.

அம்முவுடன் அவள் பேசும் நேரம் அதிகரித்திருந்தது. இரவில் ஆராதனா கதை சொல்வதை கேட்டுதான் அம்மு உறங்கினாள்.

அவள் இப்போதும் மகளை நேரில் சென்றுக் காணாதது விஷ்வாவிற்கு வருத்தமாக இருந்தாலும் மனைவியின் மனமாற்றங்களை எண்ணி தன்னை சமாதானம் செய்துக் கொண்டான்.

அவ்வபோது ஆராதனாவிற்கு வரும் பழைய நினைவுகளும் அந்நேரங்களில் அவள் நடத்தையில் தெரியும் மாற்றங்களும் அவனுக்குள் நம்பிக்கை ஒளியை கூட்டியிருந்தன.

குமார் வீட்டிற்கு வந்து ஆராதனாவை பரிசோதிப்பதை நிறுத்தி வெகு நாட்களாகியிருந்தன. மருந்து உட்கொள்வதையும் நிறுத்த அறிவுருத்தியிருந்தார். அதற்கு அவசியமில்லை என்பது அவர் கருத்து. சந்திரனிடம் விசாரித்துக் கொள்வார்.

அராதனாவை நேரில் கண்டும் பரிசோதித்தும் நாட்கள் பல ஆகிவிட்டதால் இன்று அவளை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு விஷ்வாவிடம் கூறினார்.

“ஹாஸ்பிடல் போகணுமா? எதுக்கு விஷ்வா? நான் நல்லாதான இருக்கேன்? டாக்டர்கிட்ட நீ சொல்லலையா?”

“நீ நல்லா இருக்கியா?”

“பார்த்தா எப்படி தெரியுது?”

“உன்ன பார்த்தா…”

“வேண்டாம். நீ எதுவும் சொல்லத் தேவையில்ல”

“ஏன்?”

“வேண்டாம்னா விடு. நீ ஏடாகூடமா ஏதாவது சொல்லுவ”

“என்னமோ போ. ஆசையா நாலு வார்த்த சொல்லலாம்னு நெனச்சேன்”

“ஒண்ணும் வேண்டாம். நீ போய் ரெடி ஆகு. டைம் ஆகலையா? அங்கிள் வந்துடப் போறாங்க. நீ ஏன் எப்போ பாரு இப்படி கட்டிப்பிடிச்சுட்டே நிக்குற? போ போய் உன் வேலைய பாரு”

“இதுவும் வேலை தான். சமயல முடிச்சுட்டு நீயும் சீக்கிரம் ரெடி ஆகு. ஹாஸ்பிடல் போயிட்டு உன்ன வீட்டுல டிராப் பண்ணிட்டு பேக்டரி போறேன். அப்பாகிட்ட சொல்லிட்டுக் கிளம்புறேன். லேட் பண்ணாத”

பின்னாலிருந்து அவளை அணைத்திருந்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலகிச் சென்றான். மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம் அவ்வளவு உவப்பானதாக இல்லை. தனக்கு ஒன்றும் நேரவில்லை என்ற நம்பிக்கை அங்கே சென்றால் ஒருவேளை குலையக் கூடும். தவிர்க்க முடியாதே. அவன் சொன்னது போல் தயாரானாள்.

“போயிட்டு வரேன் அங்கிள்”

“சரிம்மா. பொறுமையா போ விஷ்வா”

“பார்த்துக்குறேன் பா”

வெளியே அழைத்து செல்லுமாறு அவனிடம் கேட்ட அன்று இருவரும் சேர்ந்து பயணித்தது. அதன் பிறகு இன்றுதான் அவனுடன் காரில் செல்கிறாள். ஆனால் இது புதிய காராக இருந்தது.

“இந்த கார் ஏது? உன்னோட கார் எங்க?”

“இதுவும் நம்ம கார் தான். நேத்து ரெடி ஆச்சு. ஈவ்னிங் இதுலதான் வீட்டுக்கு வந்தேன். நீ கவனிக்கல”

“அப்படியா? நான் கவனிக்கல போலருக்கு. நேத்து ரெடி ஆச்சுன்னா புது வண்டியா?”

“இல்ல…”

“பின்ன?”

“இந்த கார்ல போனப்போ தான் ஆக்ஸிடென்ட் ஆச்சு. டேமேஜ் எல்லாம் சரி பண்ண மெக்கானிக் ஷெட்ல விட்டிருந்தேன்”

எங்கோ பார்த்தபடி கூறினான். வேதனைப்படுகிறானோ? உள்ளே அமர்ந்து காரை சுற்றிப் பார்த்தாள். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. பழைய நினைவுகள் ஏதேனும் வரக்கூடும். நிகழ்ந்து முடிந்தவற்றை நினைத்துப் பார்க்க மனம் தயாராக இருக்கிறதா? என்றேனும் ஒரு நாள் கடந்த காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அமைதியாக இருந்தாள்.

மருத்துவமனையில் குமாரின் அறைக்கு சென்று வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம் ஆராதனாவின் பெயரை கூறினான். ஐந்து நிமிட காத்திருப்பிற்கு பிறகு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

“எப்படி இருக்க ஆராதனா?”

புன்னகைத்தாள். வீட்டிலிருந்து கிளம்பியப் பிறகு எதுவும் பேசாதிருக்கிறாள்.

“அவ நல்லா இருக்காளாம். நீங்க எதுக்கு வர சொன்னீங்கன்னுக் கேட்குறா”

சிரிக்கிறான். முதல் முறை சிரித்த அவன் முகத்தை நினைவூட்டிய சிரிப்பு.

“நல்லா இருக்கேன்னு நீ சொன்னா போதுமா? நான் சொன்னாதான இவங்க நம்புவாங்க. அதுக்குதான் வர சொன்னேன். ரெகுலர் செக்கப். டெஸ்ட் எல்லாம் எடுத்து நீ நார்மலா இருக்கேன்னு சொல்லிட்டா நிம்மதியா இருப்பாங்க பாரு. நர்ஸ் கூட்டிட்டுப் போங்க. எப்படியும் ரெண்டு மணி நேரமாவது ஆகும் விஷ்வா. நீ இங்கயே வெயிட் பண்ணப் போறியா?”

“வெயிட் பண்ணுறேன் டாக்டர். நீ போ ஆராதனா”

“ஓகே. வெளில உட்கார்ந்திரு. ரிப்போர்ட்ஸ் உடனே ரெடி பண்ண சொல்லிருக்கேன். நானே கூப்பிடுறேன்”

வெளியே நாற்காலியில் அமராமல் நடக்க ஆரம்பித்தான். ஓரிடத்தில் நிற்கத் தோன்றவில்லை. அரை மணி நேரம் கழிந்திருந்தது. தேநீர் அருந்தலாமா? வேண்டாம். மீண்டும் நடை. இரண்டரை மணி நேரம் எங்கும் நிற்காத நடை.

கைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தவன் குமார் அழைக்கிறார் என்றதும் அழைப்பை துண்டித்து அவர் அறையருகில் சென்றான். ஆராதனா அவனுக்காக காத்திருந்தாள். எப்போது வந்தாளோ?

இருவரையும் மாறி மாறி பார்த்த குமார் எதுவும் கூறாதிருந்தார்.

“எதுவும் பிரச்சனையா டாக்டர்?”

“ஷீ இஸ் ஆல்ரைட் விஷ்வா”

“அப்போ நாங்கக் கிளம்பலாமா?”

“ஷீ இஸ் ப்ரெக்னன்ட்”

இருவரின் இதயத் துடிப்பும் ஒரே தாளகதியில் அதிகரித்தது. அவர்கள் முகத்திலிருந்து குமாரால் எதையும் ஊகிக்க முடியவில்லை. மேஜை மீதிருந்த ஆராதனாவின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தையும் எடுத்து விஷ்வாவிடம் நீட்டினார். அவன் எழ அவளும் எழுந்து அவனுடன் நடந்தாள்.

சந்திரனிடம் தெரிவிக்க வேண்டும். கைபேசியை எடுத்தார். விஷ்வாவும் ஆராதனாவும் சொல்வது தான் சரி. கைபேசியை வைத்துவிட்டு ரவுண்ட்ஸ் செல்ல தயாரானார் குமார்.

காரின் அருகில் வந்ததும் ஆராதனா அமர்வதற்காக கதவை திறந்துவிட்டான். இது என்ன புது பழக்கம்? தலை குனிந்தபடியே உள்ளே அமர்ந்தாள்.

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் காரை ஸ்டார்ட் செய்து ரிவர்ஸ் கியர் போட்டு வேகமாக பின்னே எடுத்தான். கடைசி நேர சுதாரிப்பில் பின்னால் வந்த காரில் மோதாமல் ப்ரேக் அடிக்க நேர்ந்தது. கார் குலுங்கியதில் அவனை திரும்பிப் பார்த்தவள் எதுவும் கூறவில்லை.

விஷ்வாவிற்கு வியர்த்தது. ஒரு கையை கன்னத்தில் வைத்து மறு கையால் காரை செலுத்தியவன் சிறிது தூரம் சென்றதும் அவள் புறம் திரும்பினான்.

“ஆராதனா சீட் பெல்ட் போடு”

“என்ன?”

“ம்ம்ச்ச் சீட் பெல்ட்… சீட் பெல்ட் போடு. சீக்கிரம். அங்க…”

இப்போதும் கடைசி நேர சுதாரிப்பில் எதிரில் வந்த டூ வீலரில் மோதாமல் ப்ரேக் அடித்து காரை நிறுத்தினான். கவனம் முழுவதும் அவளிடம் இருக்க சாலையை பார்க்க தவறியிருந்தான்.

“என்ன பண்ணுற விஷ்வா”

காரை சாலையோரம் திருப்பி நிறுத்தினான். நிதானம் தேவை. எதையும் யோசிக்கக் கூடாது. பத்து நிமிடங்கள் தேவைப்பட்டன நினைத்தவற்றை செய்து முடிக்க. இம்முறை மெதுவாகவே காரை செலுத்தினான்.

வீட்டின் கேட் அருகே நிறுத்தி அவளை இறக்கிவிட்டவன் தலையசைத்து கிளம்பிவிட்டான். எதுவும் பேசமாட்டானா? உள்ளே வர மாட்டானா? வீட்டினுள் சென்று என்ன சொல்வது?

“என்னம்மா இவ்வளவு நேரம் ஆயிடுச்சு? விஷ்வா எங்க?”

“பேக்டரிக்கு போயிட்டாங்க”

தளர்ந்த நடையும் சோர்ந்த முகமுமாக செல்லும் மருமகளிடம் சந்திரன் அதற்கு மேல் கேள்வி கேட்கவில்லை.

மாடிக்கு சென்றாள். விஷ்வாவின் நினைவை தடுக்கவே அவர்கள் அறைக்குள் செல்லவில்லை. அன்னையுடன் உறங்கிய அறைக்குள் செல்லவும் தோன்றவில்லை. தந்தை படுத்துறங்கிய அறைக்குள் சென்றாள்.

அவள் கண்களில் முதலில் பட்டது கப்போர்டின் மேல் இருந்த பெட்டி. கல்லூரி படிக்கும்போது அவளே செய்தது. அதை எடுத்துப் பார்க்கும் ஆவல் உந்த மெத்தையின் மேலேறி பெட்டியை எடுத்தாள். அவ்வளவு கனமில்லை.

அவசரமாக திறந்தாள். உள்ளே சிறியதும் பெரியதுமாக நிறைய பொருட்களிருந்தன. சில பரிசு பொருட்களும். ஒவ்வொன்றின் மேலும் ஒரு சிறிய காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. படித்துப் பார்த்தாள். விஷ்வா எப்போது எதற்காக அந்த பொருளை கொடுத்தானென்ற குறிப்பு. அவளுக்குப் புரிந்தது. அவளுக்கு மட்டுமே புரியும்படி குறிப்பெழுதி வைத்திருந்தாள்.

சிலவற்றை எடுத்து வெளியே வைத்ததும் அடியில் இருந்த புகைப்படம் தென்பட்டது. திருமணத்தின்போது எடுக்கப்பட்டது. ஆல்பத்திலிருந்து அவள் எடுத்து வைத்திருப்பதாக விஷ்வா கூறிய படமாக இருக்கலாம்.

பின்னாலிருந்த குறிப்பை படித்ததும் அந்த புகைப்படம் எடுத்தபோது விஷ்வா கூறியது நினைவு வந்தது. “ஆமா என்கிட்டயும் பேப்பர் பேக்டரி இருக்குன்னு சொன்னதும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்ட… உனக்குன்னு ஒரு பேக்டரி கட்டி தரேன்னு சொல்லியிருந்தா உடனே தாலி கட்ட சொல்லியிருப்ப போல…”

சிரிப்பை அடக்க முயன்று அவனை முறைத்த தருணத்தை உறைய வைத்திருந்த படம். அவள் முகம் சிவக்கிறாள் என்பதாலோ என்னவோ அதையே இன்னும் இருமுறை கேட்டான். ஒருவேளை புகைப்படத்தில் பதிவாகியிருக்கும் தன் முகத்தை கண்டால் ஆயுள் முழுவதும் கேட்பானென்று நினைத்தவள் யாருக்கும் சந்தேகம் வராதபடி பெற்றோரிடம் சொல்லி ஆல்பம் டிஜிட்டல் ப்ரிண்டாக இல்லாமல் போட்டோவாக வேண்டுமேன்றுக் கேட்டாள். மறக்காமல் இந்த ஒரு படித்ததை மறைத்து வைத்தாள்.

புகைப்படம் கையில் கனத்தது. நழுவிச் சென்ற நாட்களின் கூறுகள் யாவும் ஒன்றாய் இணைந்து துவக்கப் புள்ளியான விபத்து நடந்த நாளுக்கு அவளை அழைத்துச் சென்றன. அன்றைய நிகழ்வுகள் யாவும் துல்லியமாய் அவள் கண் முன் தோன்றின.`

நிழலே நிஜமாய் – 24

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து மனைவி வருவதற்காகக் காத்திருந்தான் விஷ்வா.

“ஒழுங்கா சமத்தா இருக்கணும் அம்மு. இன்னும் ரெண்டு மணி நேரத்துல நானும் அப்பாவும் உன்ன கூப்பிட வருவோம். இன்னும் கொஞ்ச நேரம்னெல்லாம் அடம் பிடிக்காம கிளம்பணும். ஓகேவா?”

“எவ்ளோ வாட்டி சொல்லுவீங்க மம்மி? நீங்க போங்க. நான் விளையாடணும்”

“விரட்டுறதுலயே இரு. பை”

வாசலில் நின்று மகளுக்கு அறிவுரை வழங்கிவிட்டு வந்தவள் காருக்குள் அமர்ந்தாள்.

“கொஞ்ச நேரம் அவ பிரென்ட் வீட்டுல விளையாடிட்டிருக்கப் போறா. ஷாப்பிங் முடிச்சுட்டு நம்ம வந்து கூட்டிட்டுப் போகப் போறோம். இதுக்கு இந்த அக்கப்போரு பண்ணுற நீ. வீட்டுலேருந்துக் கிளம்பும்போதே காது வலிக்குற அளவுக்கு அட்வைஸ் பண்ணி தான கூட்டிட்டு வந்த? இங்க வந்தும் எதுக்கு திரும்ப ஆரம்பிக்குற? அம்மு சமத்தா இருக்க மாட்டாளா?”

“பொண்ணு போ போன்னு விரட்டுறா. நீங்க திட்டுங்க. எனக்கு தேவைதான்”

“அப்போ நீ எங்கள எந்தளவுக்கு டார்ச்சர் பண்ணுறன்னுப் பார்த்துக்கோ”

“நான்? சரி. இனி வாயே தொறக்கல”

“எங்கப் போகணும் சொல்லு”

“அதான் நான் வாயே தொறக்கலன்னு சொன்னேனே”

“இதுக்கு பேருதான் டார்ச்சர் பண்ணுறது. ஷாப்பிங் போலாம் வாங்கன்னுக் கூப்பிட்டது நீ. எங்கப் போகணும்னு கேட்டா சொல்ல மாட்ட”

“இன்னைக்கு ஏன் காலையிலிருந்து இப்படி பேசி பேசியே கொல்றீங்க?”

“பேசவே மாட்டேங்குறேன்னு கொறப்பட்ட? பேசுனா இப்படி சொல்லுற. நான் என்னதான் செய்ய?”

“நீங்க பேசாமயே இருங்க போதும். அம்முவுக்கு ட்ரெஸ் எடுக்கணும்”

“ஹ்ம்ம். எப்பையும் எடுக்குற கடையிலதான?”

“ஆமா”

அடுத்த சில நிமிடங்களுக்கு விஷ்வா எதுவும் பேசாதிருக்க அந்த அமைதி ஆராதனாவை என்னவோ செய்தது.

“இன்னைக்கு ஏன் நீங்க பாக்டரிக்கு போகல?”

“அதான் பேசக் கூடாதுன்னு ஆர்டர் போட்டிருக்கியே”

“அடேங்கப்பா… அது எப்படிங்க எனக்கு பயந்த மாதிரியே நடிக்குறீங்க? நீங்க இந்த அட்டகாசம் பண்ணுவீங்கன்னு சொன்னா ஒருத்தர் நம்ப மாட்டாங்க தெரியுமா?”

“முதல்ல நல்லவன்னு ஊர நம்ப வைக்கணும். அப்பறம் பொண்டாட்டிய ஏமாத்தணும்”

“உண்மைய ஒத்துக்குறீங்களே”

அம்முவிடமிருந்து அழைப்பு வந்தது. தீபாலி அவர்களிடம் பேச நினைத்தால் தேவைப்படுமென்று ஆராதனாவின் கைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தனர். ஸ்பீக்கரில் பேசினான்.

“என்ன அம்மு அதுக்குள்ள கால் பண்ணுறீங்க? ஹரஷி கூட விளையாடலையா?”

“ஹரஷி ரூம்ல இருக்கா. நான் இல்லன்னாலும் அவ தம்பி பாப்பாகூட விளையாடுவா. டாடி… நம்ம வீட்டுல ஏன் டாடி தம்பி பாப்பா இல்ல?”

“ஏன் இல்லன்னா நான் என்னத்த சொல்லுறது? ஏன் மம்மி இல்ல? அம்மு கேட்குறால்ல… பதில் சொல்லுங்க”

“சும்மா இருக்கீங்களா நீங்க… மம்மிக்கு அம்மு மட்டும் போதும். நீ நான் டாடி எல்லாரும் சேர்ந்து விளையாடலாம். தம்பி பாப்பா எல்லாம் வேண்டாம் என்ன? அம்மு போய் விளையாடுடா. பை”

“என்ன கட் பண்ணிட்ட? அவ கேட்டதுக்கு நீ ஒழுங்காவே பதில் சொல்லல”

“இதுக்கு மேல என்ன பதில் சொல்லணும்? எனக்கு ஒரு கொழந்த போதும்”

“எனக்கு இன்னொன்னு வேணும்”

“ஒழுங்கா ரோட்ட பார்த்து வண்டி ஓட்டுங்க”

“அப்போ சரின்னு சொல்லு. நீ என்ன ஏமாத்துற”

“இதுக்கு பேரு ஏமாத்துறதா?”

“பின்ன? நான் வேணும்னு சொல்லுறேன். நீ வேண்டாங்குற. காரணமும் சொல்ல மாட்டேங்குற”

“எனக்கு அம்மு போதும். நீங்க முதல்ல என்னை பார்க்குறத விட்டுட்டு திரும்பி ரோட்ட… ஐயோ ப்ரேக்…”

கடைசி நிமிடத்தில் எவ்வளவு முயன்றும் எதிரில் வந்த காரில் இடிக்காமல் தடுக்க முடியவில்லை. இரு வண்டிக்கும் சேதம் அதிகமாகாவிட்டாலும் விபத்திலிருந்து தப்பிக்க காரை திருப்பி விஷ்வா செய்த முயற்சியால் அருகிலிருந்த மின்சார கம்பத்தில் வேகமாக மோதிய கார் குலுங்கி நின்றது.

விஷ்வா முதலில் பெண் பார்க்க வந்தது, விபத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்தது, அம்மு பிறந்தது, இன்று மருத்துவமனைக்குச் சென்றது, தங்கள் திருமணம் என்று தொடர்பில்லாமல் ஏதேதோ நினைவுகள்.

தான் இப்படிதான் நடந்துக் கொள்ள வேண்டுமென்று தன்னை சுற்றிப் போட்டுக் கொண்ட வளையமும், தானே அதை தாண்டி வெளியே சென்று நடந்துக் கொண்ட விதமும் மாறி மாறி அவளை அலைக்கழித்தன.

ஒரே சமயத்தில் பல விஷயங்களை யோசிக்க முடியாமல் தடுமாறினாள். மனமும் உடலும் சோர்ந்திருந்தது. மெத்தையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து பெட்டிக்குள் வைத்து அதனருகிலேயே படுத்து கண்ணயர்ந்தாள்.

“ஆராதனா… ஏன் இங்க வந்து படுத்திருக்க? எழுந்திரி ஆராதனா”

“ம்ம்”

“ஆராதனா”

அருகில் விஷ்வா அமர்ந்திருந்தான். விளக்கின் ஒளி கண்ணை கூசச் செய்தது. எழுந்தமர்ந்தாள்.

“எப்போ தூங்குன? இவ்வளவு நேரம் தூங்குறேன்னு அப்பா பயந்து எனக்கு கால் பண்ணாங்க. உங்க வீட்டுலேருந்து அவசர அவசரமா கிளம்பி வரேன். என்னாச்சு?”

அவன் முகத்தை பார்த்தாள். எதையோ கண்டறிய முனையும் தேடல்.

“வா கீழப் போகலாம்”

எழுந்து இரண்டடி நடந்தவனை தடுத்தது அவள் குரல்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

பேச்சில் தெளிவு, அழைப்பின் மாற்றம் இரண்டும் அவனை மீண்டும் வந்து அமரச் செய்தன. ஆழ மூச்சையெடுத்து தன்னை திடப்படுத்திக் கொண்டான்.

“இன்னொரு குழந்தை வேணும்னு விளையாட்டுக்கு கேட்டீங்களா? இல்ல…”

நினைவு வந்துவிட்டதா? எல்லாமுமா? சந்தோஷத்தில் துள்ளி குதிக்க முடியாமல் தடுத்தது அவளுடைய கேள்வி.

“அன்னைக்கு நடந்தது ஞாபகம் இருக்கா?”

“பேச்ச மாத்தாதீங்க”

“ஆசை இருந்துது. இருக்கு. உடனே வேணும்னு நினைக்கல. அன்னைக்கு நீ என்ன நினைக்குறன்னு தெரிஞ்சுக்க விளையாட்டா கேட்குற மாதிரி கேட்டேன்”

“அதனாலதான் இன்னைக்கு டாக்டர் சொன்னப்போ நீங்க எதுவும் சொல்லலையா? ஒரு வார்த்தை கூட பேசாம வீட்டுல விட்டிட்டு நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க? என்ன…”

“கத்தாத” என்றவன் அவளை நெருங்கி இடையை சுற்றி வளைத்துக் கொண்டான்.

“உனக்கு இந்த குழந்தை வேண்டாமா?”

“என் முகத்தை கூட பார்க்கல. அப்படியே போனீங்க…”

“ஆராதனா உனக்கு இந்த குழந்தை வேண்டாமா?”

கண்கள் கலங்கத் துவங்க அவனை இறுக்கியணைத்துக் கொண்டாள்.

“உன்கிட்ட நிறைய பேசணும்னு நெனச்சேன். காலையில நிஜமா எனக்கு டைம் இல்ல. பேச ஆரம்பிச்சு பாதியில நிறுத்தினா இன்னும் பிரச்சனையாகும். அதான் எதுவும் சொல்லாம போயிட்டேன். எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துது தெரியுமா?”

“…”

“நீ ஒளிச்சு வெச்ச போட்டோவ பார்த்துட்டேன். இத்தனை நாள் இந்த பாக்ஸ் எப்படி என் கண்ணுலப்படாம இருந்துதுன்னு தெரியல. எதுக்கு இவ்வளவு குப்பை சேர்த்து வெச்சிருக்க?”

“இது குப்பையா? எனக்கு வேணும். நான் எடுத்து வெச்சிருக்கேன்”

“அதுல எழுதிருக்க எதுவும் புரிய மாட்டேங்குதே. என்னை பத்தி தான் எழுதிருக்கன்னுத் தெரியுது. என்ன எழுதிருக்க?”

“ம்ம்ஹும்”

“நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்”

“என்ன?”

“பேக்டரிக்கு வரியா? நான் எல்லாமே சொல்லித் தரேன்”

“ஆமா பேக்டரிக்கு வர மாதிரி தான் பண்ணி வெச்சிருக்கீங்க பாருங்க”

“ரொம்ப பண்ணாத. நானே கூட்டிட்டுப் போயிட்டு நானே கூட்டிட்டு வந்திடுவேன். நாள் பூரா உன் கூடவே இருப்பேன். அப்பறம் என்ன உனக்கு? வீட்டுல தெண்டமா தான உட்கார்ந்திருக்க? எப்போ கேட்டாலும் கொஞ்ச நாள் போகட்டும் கொஞ்ச நாள் போகட்டும்னே சொல்லுற”

“எனக்கு பேப்பர் மேனுபேக்சர் பத்தியும் தெரியாது மேனேஜ்மென்ட் பத்தியும் தெரியாது”

“சொல்லித் தரேன்னு சொன்னது காதுல விழலையா?”

“இதெல்லாம் எப்போ கத்துக்கிட்டு… போங்க… சரிப்பட்டு வராது”

“அட சோம்பேறி… இந்த ஒரு விஷயத்துக்காக தான் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்ட… ஏதோ அம்முவ பார்த்துக்குறதுக்காக கொஞ்ச நாள் கொஞ்ச நாள்னு சொல்லுறேன்னு நெனச்சேன். உண்மையிலயே பேக்டரி பார்த்துக்கணும்னு எல்லாம் நெனப்பே கிடையாது. அப்படிதான?”

“எங்கப்பாகிட்ட கேட்பேன். உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு சொல்லுவாங்க. உங்ககிட்ட கேட்டேன். உங்களோட பேக்டரியையும் சேர்த்து பார்த்துக்க சொன்னீங்களா… நம்மளையும் நம்பி பொறுப்ப குடுக்குறேன்னு சொல்லுறாங்களேன்னு…”

“இளிச்சவாய்னு நெனச்சிருக்க…”

“எக்ஸாக்டா இல்ல… கிட்டத்தட்ட…”

“இப்போதான் உன்னை பத்தி உண்மை எல்லாம் வெளில வருது. எல்லாம் மறந்துடுச்சுன்னு டிராமா பண்ணி… என்னெல்லாம் பேசுன தெரியுமா? விஷ்வான்னு பேரு சொல்லி கூப்பிட்ட… ரொம்ப மரியாதையா டேய் வாடா போடா…”

“அதெல்லாம் நான் நானா இல்லாதப்போ செஞ்சது. அத எதுக்கு சொல்லி காமிக்குறீங்க? நான் ஒண்ணும் டிராமா பண்ணல”

“என்னை பத்தி ஒரு விஷயம்கூட உனக்கு நியாபகத்துல இல்லையா ஆராதனா?”

“ம்ம்ஹும்… ஆனா விட்டுட்டுப் போகணும்னு தோனல”

“இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே இருந்தோம்னா அப்பா ரொம்ப பயந்துடுவாங்க. வா கீழப் போகலாம்”

“மாமாகிட்ட… சொல்லிட்டியா?”

“இன்னும் யார்கிட்டயும் சொல்லல. டாக்டர் சொல்லுவாருன்னு நெனச்சேன். ஹ்ம்ம்… வா”

குழந்தையின் வருகை தந்த மகிழ்ச்சியின் அளவு அடுத்த நாள் தெரிந்தது. சரண்யா மகளை கட்டியணைத்து முதலில் மன்னிப்பு கோரினார்.

“நாங்க சொல்லுற எதையும் புரிஞ்சுக்காம எங்க உன் லைப்ப கெடுத்துக்குவியோன்னு பயமா இருந்துதுடா. நான் திடடுனதை எல்லாம் மனசுல வெச்சுக்காத”

“ச்ச இல்லம்மா. நீங்க எவ்வளவு தவிச்சிருப்பீங்கன்னுத் தெரியும்”

அருகில் வந்த ஹரிகிருஷ்ணன் மகளின் தலை கோதினார்.

“ஆராதனா”

“சொல்லுங்க மாமா”

“அம்மு என்ன பண்ணுறான்னுக் கொஞ்சம் பாரும்மா. வீட்டுக்குள்ள வந்ததும் அவ ரூமுக்கு ஓடிட்டா. இன்னும் ஆளை காணோம்”

“அவளதான் மாமா தேடுறேன். இருங்க கூட்டிட்டு வரேன்”

இவ்வளவு நேரம் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்த விஷ்வா மனைவியின் பின்னால் அம்முவின் அறைக்குள் சென்றான்.

“என்ன அம்மு தேடுற?”

“நான் கிராப்ட்ஸ் கிளாஸ்ல செஞ்சேன்ல… அந்த ப்ளூ கலர் டால்… அது காணும் மம்மி”

“அது எதுக்குடா இப்போ?”

“எனக்கு வேணும்”

“கீழ விழுந்துடாத. இறங்கு. நான் தேடித் பார்க்குறேன். நீதான் எல்லாத்தையும் பாட்டி வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிட்டியே. அப்பறம் எப்படி டால் மட்டும் இங்க இருக்கும்?”

“அங்க இல்ல. நான் தேடிட்டேன்”

“இப்போ அவசரமா அது எதுக்குன்னுக் கேட்டேன்”

“தம்பி பாப்பாவுக்கு”

“தம்பி பாப்பான்னு யார் சொன்னா? தங்கச்சி பாப்பாவா இருந்தா?”

“ம்ம்…”

“என்ன பண்ணுவ?”

“யாரா இருந்தாலும் அந்த டால் குடுப்பேன்”

“கெடச்சிடுச்சு. இந்தா”

“மம்மி…”

“என்னம்மா?”

“நான் கேட்டேன்னுதான் இந்த தம்பி பாப்பாவா? தேன்க்யூ மம்மி”

“யாரு சொன்னா?”

“நேத்து நைட் போன் பண்ணப்போ டாடி தான் சொன்னாங்க”

கட்டிலின் மீது நின்றிருந்தவள் அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். ஆராதனா முறைக்க ஆரம்பித்ததில் மெல்ல அவ்விடம் விட்டு நழுவிச் சென்றான் விஷ்வா.