நிலவொன்று கண்டேனே 11
ரூமிற்குள் மெல்லிய சூரிய வெளிச்சம் பரவவும் கண் விழித்தாள் நித்திலா. இதமாகப் போர்வை மூடி இருந்தது.
சட்டென்று எழுந்து உட்கார்ந்தவள் சுற்று முற்றும் தேடினாள். யுகேந்திரனைக் காணவில்லை.
‘சோஃபாவில் இருந்த நான் எப்படி பெட்டுக்கு வந்தேன்?’
ஏதேதோ எண்ணங்கள் முண்டியடிக்க ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள். நேற்றைய நாள் கண் சிமிட்டியது.
தனது கையில் கிடைத்த தகவல்களை யுகேந்திரனிடம் சொல்வதற்கு மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. அதற்காக அவள் கடமையை அவளால் மீற முடியாதே?
தைரியமாகத் தான் அவனை வரவழைத்தாள். இதுவரை முகம் பார்த்திருக்காத அன்பரசுவின் பிம்பம் உடைந்து போனதுதான் வருத்தமாக இருந்தது.
யுகேந்திரனின் ருத்ர தாண்டவம் அவள் எதிர்பார்த்தது தான். இருந்தாலும்… அவன் மனமுடைந்து அழுதபோது நித்திலா நொறுங்கிப் போனாள்.
அவன் கண்ணீரைப் பார்க்கும் சக்தி அவளுக்கு இருக்கவில்லை. மடியோடு வாரி அணைத்துக் கொண்டாள். ஆயிரம் வார்த்தைகளில் ஆறுதல் சொன்னாலும் அந்த ஒற்றை அணைப்புக்கு ஈடாகுமா என்ன?
லேசாக வீசிய காற்றுக்கு காகிதம் படபடக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். பக்கத்தில் இருந்த மேஜை மேல் லெட்டர் ஒன்று பேப்பர் வெயிட் அதன் மேல் வீற்றிருக்க உட்கார்ந்திருந்தது.
கடிதத்தை எடுத்தவள் அதைப் படிக்க ஆரம்பித்தாள். யுகேந்திரன் தான் எழுதி இருந்தான். முத்து முத்தான அவன் எழுத்துக்களை முதன் முதலில் பார்த்த போது உண்டான பரவசம் இப்போதும் உடலெங்கும் பரவியது.
என் நிலாவிற்கு…
இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் எனக்குக் கால அவகாசம் கொடு. நீ கை காட்டும் அத்தனை குற்றவாளிகளையும் கூண்டில் அடைக்கலாம். அதுவரை உன்னைச் சந்திக்க முடியாமல் போனால் வருத்தப்படாதே.
நான் சொல்லும் நேரத்தில் சில நபர்களுக்கு கால் பண்ணிவிடு. நான் சொல்லும் ஆணைகளையும் ஒரு சப் கலெக்டராக அவர்களிடம் தெரியப்படுத்து. மீதி நேரில். சாப்பாட்டைக் கொஞ்சம் குறைத்துக்கொள். என்னால் உன் கனம் தாங்க முடியவில்லை.
உன் கவிஞன்.
இப்படி இருந்தது கடிதம். நித்திலாவைப் பதட்டம் தொற்றிக் கொண்டது. யுகேந்திரன் என்ன செய்யப் போகிறார்? இதில் கடைசியில் ஜோக் வேறா?
சோஃபாவில் இருந்தவள் கட்டிலுக்கு வந்ததன் ரகசியம் இப்போது புரிந்தது. காலைக் கடன்களை விரைவாக முடித்தவள் கூர்க்காவை அழைத்தாள்.
“சொல்லுங்க அம்மிணி.”
“நேத்து எத்தனை மணிக்கு யுகேந்திரன் போனாரு?”
“ஒரு பத்து மணி வாக்குல தம்பி கிளம்பிட்டாங்க அம்மிணி.”
“உங்ககிட்ட ஏதாவது சொன்னாங்களா?”
“எப்போவும் போலத்தான், அம்மிணியை நல்லா பார்த்துக்கோ ன்னு சொன்னாங்க.”
“ம்…” சிந்தனையோடே சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். பங்கஜம் அம்மாவின் தாளிப்பு வாசனை சமையலறையில் இருந்து வந்தது.
♣♣♣♣♣♣♣♣♣♣♣
அடுத்த நாள் நித்திலாவிற்கு கோயம்புத்தூர் லேடிஸ் கிளப்பில் ஒரு விழா இருந்தது. சிறப்பு அதிதியாக அழைத்திருந்தார்கள்.
இரண்டு நாட்களாக பொள்ளாச்சியே சோகத்தில் மூழ்கி இருந்ததால் இந்த மாற்றம் நித்திலாவிற்கும் தேவைப்பட்டது.
யுகேந்திரனிடம் இருந்தும் எந்தத் தகவலும் இல்லை. வாழ்க்கையில் கொஞ்சம் பிடிப்பில்லாமல் போனது போல் இருந்தது. எதுவோ குறைந்தாற் போலொரு உணர்வு.
லேடிஸ் க்ளப்பில் நித்திலாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான தாய்மார்கள் வருகை தந்திருந்தார்கள்.
நல்லதொரு தருணத்தை வீணடிக்க நித்திலா விரும்பவில்லை. சப் கலெக்டராக அல்லாமல் ஒரு பெண்ணாக, சமூக நலன் விரும்பியாக, தான் உரையாற்ற அழைக்கப்பட்ட போது தன் கருத்துக்களை முன் வைத்தாள்.
“கால மாற்றத்தால் யாவும் மாறினாலும் சில விஷயங்களின் அடிப்படை மட்டும் மாறுவதேயில்லை. அதில் ஒன்று பெண்கள் குறித்த ஆண்களின் மனநிலை. ஆணாதிக்க சூழலில் வளரும் ஆண் குழந்தைகளுக்கும் இதே மனநிலைதான் அமைகிறது.”
“வளர்ந்து பெரியவனாகும் போது அம்மா அப்பாவை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்கும் நாம், ஏன் நாளைக்கு உன்னை நம்பி ஒரு பெண் வருவாள், உனக்கும் பெண் குழந்தைகள் பிறக்கும், அவர்களையும் நன்றாகப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதில்லை?”
அரங்கத்தில் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. சமகால நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருந்த தாய்மார்கள் மௌனமாகக் கேட்டிருந்தார்கள்.
“ஆண் குழந்தைகளை வளர்க்கும் போது ஒரு சில விடயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள் தாய்மார்களே! வீட்டு வேலை செய்வது இழிவானதல்ல என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். கிச்சனுக்குள் அவர்களையும் அனுமதியுங்கள். தன்னுடைய தேவைகளை நிறைவேற்றப் பழக்குங்கள். அவர்களது ரூம், அவர்கள் சாப்பிட்ட ப்ளேட் இவற்றை எல்லாம் அவர்களையே சுத்தப்படுத்த வையுங்கள்.”
“ஆண் பிள்ளைகளை அழ அனுமதியுங்கள். ஆண் என்ற முள் கிரீடத்தை அவர்கள் தலையில் நீங்கள் திணிக்கும் போது அவர்கள் அழ மறந்து விடுகிறார்கள். ஐயையோ! ஆண்பிள்ளை நீ, இப்படி அழலாமா? என்று கேட்பதை நிறுத்துங்கள். மனதில் ஏற்படும் சங்கடங்களை அழுகையின் மூலம் வெளிப்படுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்.”
கூடியிருந்த அத்தனை பேர் முகத்தலும் ஒரு வலி தெரிந்தது. நித்திலா தொடர்ந்தாள்.
“பெண் குழந்தைகளைத் திட்டும் போதோ, மரியாதைக் குறைவாக நடத்தும் போதோ ஆண்பிள்ளைகளைக் கண்டியுங்கள். உன்னைப் போலவேதான் அவளும் என்று அவர்களுக்குப் புரிய வையுங்கள். மற்றவர்களின் விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுக்க, இன்னொருவரின் கஷ்டத்தில் பங்கெடுக்கச் சொல்லிக் கொடுங்கள்.”
“பீடோபீலியா என்றொரு மனநோய் இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்க மாட்டார்கள். குழந்தைகளை அவர்கள் பார்க்கும் பார்வையே வேறுபட்டதாக இருக்கும். குழந்தைகளால் பாலியல் ரீதியாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஈர்க்கப் படுவார்கள்.”
“உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர், அல்லது சொந்தக்காரர் உங்கள் குழந்தைகளை மடியில் தூக்கி வைத்துக்கொள்வது, கொஞ்சுவது, தொடுவது, அதிக நேரம் செலவழிப்பது இவையெல்லாம் இதற்கான அறிகுறிகள் தான். நான் எல்லா உறவுகளையும் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் கவனமாக இருங்கள்.”
“இன்றைய இன்டர்நெட் யுகத்தில் ஆபாசத் தளங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகிப் போகிறார்கள். அதனால் பார்க்கும் அனைத்துப் பெண்களையும் வயது வித்தியாசம் இல்லாமல் தான் அவர்கள் கண்கள் பார்க்கிறது. தேங்கி இருக்கும் இந்த உணர்வுகள் நேரம் வாய்க்கும் போது வெளிப்படுகின்றது.”
“தன்னைப் பற்றிய தெளிவான, தைரியமான, தன்னம்பிக்கை எண்ணம் கொண்ட ஆண் குழந்தைகள் நேராகச் செல்கிறார்கள். சுயமரியாதை, தரம் இதெல்லாம் அவர்களுக்கு முக்கியமாகப் போகிறது. ஆனால்… வெட்டியாக உட்கார்ந்திருக்கும் இளைஞனின் சிந்தனைகளே சிதறுகிறது.”
“பெண் பிள்ளைகள் யாரைப் பற்றி ஏதாவது சொன்னால் காது கொடுத்துக் கேளுங்கள். அவர் நம்பிக்கையானவர், அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று சொல்லாதீர்கள். தங்களை நேர்மையாகக் காட்டிக் கொள்பவர்கள் பலர் நல்லவர்கள் அல்ல.”
அமைதியாகப் பேசி முடித்தாள் நித்திலா. யாரும் கை கூடத் தட்டவில்லை. அவர்கள் மனதில் அந்தக் கருத்துக்கள் ஆழமாக இறங்கட்டும் என்று நினைத்து அமைதியாக வந்து உட்கார்ந்து கொண்டாள்.
அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. ஆனால்… அவள் மனம் மட்டும் யுகேந்திரனையே நினைத்த படி இருந்தது.
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
டெலிஃபோன் சிணுங்கவும் காதிற்குக் கொடுத்தாள் நித்திலா. நேரம் இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?’ மனதில் தோன்றிய கேள்வியோடு ‘ஹலோ’ சொன்னாள்.
“நித்திலா… நான் யுகேந்திரன் பேசுறேன்.” அந்த நான்கு வார்த்தைகளில் நித்திலாவின் உலகம் வண்ண மயமானது.
“கவிஞரே! நலந்தானா? என்ன இந்த நேரத்தில்? இப்போதான் என் ஞாபகம் வந்ததா?” அந்தச் சிணுங்கலை யுகேந்திரன் ரசித்தாலும் அவசரமாகப் பேசினான்.
“நித்திலா… நான் சொல்லுறதை நல்லாக் கவனி. வீட்டுக்குப் பக்கத்துல ஒரு மளிகைக்கடை இருக்கில்ல?”
“ஆமா…”
“அந்தக் கடைக்குப் பக்கத்துல ஒரு கறுப்புக் கலர் வேன் நிக்குது.” அந்த வண்டியின் நம்பரைச் சொன்னவன்,
“நீ சீக்கிரம் ரெடியாகிட்டு கறுப்பனையும் கூட்டிக்கிட்டு அந்த வேனுக்குப் பக்கத்துல வா.” என்றான்.
“யுகீ! என்ன நடக்குது? நீங்க எங்க இருக்கீங்க?”
“கண்ணம்மா… வேன்ல தான் நான் இப்போ இருக்கேன்.”
“ஏன்? காருக்கு என்ன ஆச்சு?”
“நீ கிளம்பி வா. நான் எல்லாம் சொல்லுறேன். உன்னை யாரும் சந்தேகப்படாத மாதிரி நடந்துக்க… சரியா?”
“ம்…” யுகேந்திரன் ஏதோ செய்கிறான் என்று புரிந்தது. ஆனால் என்ன செய்கிறான் என்றுதான் நித்திலாவிற்குப் புரியவில்லை.
அன்று மதியம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். அதில் அவள் மெயிலைச் செக் பண்ணும் படி கட்டளை இட்டிருந்தான்.
இன்பாக்ஸைத் திறந்த போது அவன் அனுப்பிய மெயில் வந்திருந்தது. அதில் சில உயர் அதிகாரிகளைக் குறிப்பிட்டு அவர்களுடன் தொலைபேசியில் பேசச் சொல்லி இருந்தான்.
என்ன பேசவேண்டும், அவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் எல்லாம் விலாவரியாக விளக்கி இருந்தான். அவன் சொன்ன படியே அத்தனையையும் செய்து முடித்திருந்தாள்.
இப்போது திடீரென்று வரச் சொல்கிறான். இப்படி வெளியே போக வேண்டி வரும் என்று மதியம் வந்த மெயிலில் ஒன்றும் சொல்லவில்லை.
யோசித்த படியே ஜீன்ஸ், டாப்பிற்கு மாறினாள். கறுப்பனுக்கும் அழைத்திருப்பான் போலும். அவரும் இவள் வருகையை எதிர்பார்த்த படி நின்றிருந்தார்.
பங்கஜம் அம்மாவிடம் இவள் சொல்லிக் கொண்டு கிளம்ப கறுப்பனும் கூட நடந்தார். இருவரும் வெளியே நடந்து வர அந்த வேனின் பின் கதவு சட்டென்று திறந்தது.
உள்ளே இருந்த யுகேந்திரனைப் பார்த்த பிறகு தான் நித்திலாவிற்கு நேராக மூச்சு வந்தது. இவள் உள்ளே ஏறி அமர்ந்ததும் கறுப்பனிடம் சொல்லிக்கொள்ள வாகனம் அப்போதே கிளம்பியது.
“யுகீ… எங்க போறோம்? அதுவும் இந்த நேரத்துல?” இரண்டு நாட்கள் பிரிவைத் தாங்க முடியாமல் அவனோடு இழைந்து கொண்டு கேட்டாள் பெண்.
“ஃபாரெஸ்ட்டுக்கு போறோம் கண்ணம்மா.”
“இந்த நேரத்துல எதுக்கு அங்க போறோம்?” ஒரு பெருமூச்சு மட்டும் வந்தது அவனிடமிருந்து. சில கணங்கள் அமைதியாக இருந்தவன் தொடர்ந்தான்.
“இன்னைக்கு நைட் ஏதாவது கடத்தல் நடக்கும்னு எதிர்பார்க்கிறேன் நித்திலா.”
“எப்பிடிப்பா? நீங்க நாட்டுல இல்லாதப்போ தானே ரெண்டு தரமும் பண்ணினாங்க. நீங்க ஊர்ல இருக்கும் போது ஒன்னும் பண்ண மாட்டாங்க யுகேந்திரன்.”
“நான் ஊர்ல இல்லை நித்திலா?”
“வாட்?”
“எமிரேட்ஸ்ல இப்போ டுபாய்க்கு நான் ஃப்ளை பண்ணிக்கிட்டு இருக்கேன்.”
“கவிஞரே! என்ன ஆச்சு உங்களுக்கு? என்னென்னவோ சம்பந்தம் இல்லாம பேசுறீங்க.” அவள் குரலில் புன்னகைத்தான் யுகேந்திரன்.
“எனக்கும் என் தொழிலுக்கும் தான் சம்பந்தம் இல்லைன்னு ஆகிடிச்சே நித்திலா…”
“யுகீ…”
“வலிக்குது கண்ணம்மா. என் மேல கை வைச்சிருந்தாக் கூட நான் இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனா…”
“யுகீ…” நெருங்கி அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள் நித்திலா. அவளை ஒரு கையால் அணைத்தவன் தொடர்ந்தான்.
“இதுல, என்னை நம்பாம உங்கிட்ட புகார் குடுத்திருக்காங்க.” அவன் குரல் கசந்து வழிந்தது.
“யுகீ… நான் ஏதாவது உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா?” அண்ணாந்து அவன் முகம் பார்த்தபடி கேட்டாள். அவள் முகம் பார்த்துச் சிரித்தவன் தலையைத் தடவிக் கொடுத்தான்.
“இல்லைடா… நீ உன்னோட கடமையைத் தான் செஞ்ச. நீ அந்தப் புகாருக்கு ஆக்ஷன் எடுக்கலைன்னாத் தான் நான் வருத்தப்பட்டிருப்பேன்.”
அந்தப் பதில் அவளைத் திருப்திப் படுத்த அவனோடு நன்றாக சாய்ந்து கொண்டாள். யுகேந்திரனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன் கைகளுக்கு விலங்கு போட்டவள் இன்று இத்தனை தூரம் இழைகிறாளே?
இருந்தாலும், அந்த அன்யோன்யம் இருவருக்கும் இதமாக இருந்தது. இந்த இரண்டு நாள்ப் பிரிவு அவளை நிறையவே பாதித்திருக்கிறது என்று புரிந்தது அவனுக்கு.
காலை முதல் ஓயாது ஓடிக்கொண்டிருந்தவன் அந்தப் பெண்மையின் ஸ்பரிசத்தில் இதம் கண்டான்.
நேராக ஏர்போர்ட்டில் இருந்து தான் வருகிறான் யுகேந்திரன். இல்லாத ஒரு நண்பனை உருவாக்கி அவனைப் பார்க்க டுபாய் போவதாக வானதியிடம் ஒரு கதை புனைந்திருந்தான்.
டிக்கெட் வீசா எல்லாம் எந்தச் சந்தேகமும் வராத படி நிஜமாகவே எடுக்கப் பட்டிருந்தது. ஃப்ளைட்டில் ஏறி உட்காரும் வரை அமைதியாகவே இருந்தான். பயணிகளின் பெயர்ப் பட்டியலில் தன் பெயரை உறுதிப் படுத்திக் கொண்டவன் அதன் பிறகு பயணத்தைத் தொடரவில்லை. ரத்துச் செய்து கொண்டான்.
சில உயர் அதிகாரிகளின் உதவியோடு அதைச் செய்து முடித்தவன் சட்டென்று வெளியே வரவில்லை. ஃப்ளைட் புறப்பட்டுச் சென்ற பின்னர் வி.ஐ.பி வாயிலாக வெளியேறி வந்தவன் இதோ, இப்போது நித்திலாவை அணைத்தபடி அமர்ந்திருக்கிறான்.
வண்டி அவன் கட்டுப் பாட்டிற்குள் இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ட்ரைவர் புதிதாக இருந்தார். அவரை யாரென்று நித்திலாவிற்குத் தெரியவில்லை.
இரண்டு நாட்கள் ஷேவ் பண்ணாத அந்த முகம் அவளைக் காந்தம் போல இழுத்தது. சுட்டு விரலால் அவன் நாடியின் வரிவடிவத்தை அளந்தவள்,
“ஷேவ் பண்ண முடியாத அளவுக்கு பிஸியா கவிஞரே?” என்றாள்.
“நாளைக்குப் பண்ணிக்கறேன் கண்ணம்மா.” அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் ட்ரைவரிடம் ஏதோ பேச அவரும் தலையாட்டிக் கொண்டார்.
வண்டியின் ஹெட்லைட்டை அணைத்துவிட்டு அந்த மங்கிய நிலவொளியில் பயணம் மெதுவாக நடந்து கொண்டிருந்தது.
நன்றாக மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த அந்த ஏரியாவில் வண்டியை நிறுத்தச் சொன்ன யுகேந்திரன் அவளோடு இறங்கிக் கொண்டான். ட்ரைவரிடம் ஏதோ இடங்களின் பெயர்களைச் சொல்லிப் பேசி முடித்தவன் அவரைப் போகச் சொன்னான். வண்டி கிளம்பிப் போய்விட்டது.
“என்ன யுகீ? நம்மை விட்டுட்டு வண்டி போகுது?”
“லேட்டா வருவார் நித்திலா?”
“ஓ… அதுவரைக்கும் நாம என்ன பண்ணப் போறோம்?”
“ஒரு டூயட் பாடலாமா?”
“தாராளமா… என்ன, நீங்க பாடுவீங்க… நான்…”
“ம்… நீ?”
“பாட்டை வாசிப்பேன்.” அவள் பேச்சில் வாய் விட்டுச் சிரித்தவன் பக்கத்தில் இருந்த மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்தான். அவிழ்ந்த பிறகுதான் தெரிந்தது, அது ஒரு ஏணி என்று.
“ஏறு நித்திலா.” அவன் கட்டளையில் திகைத்தாள் பெண்.
“என்ன இது யுகீ?” அதிர்ச்சியாக வாய் கேட்டாலும் அவன் சொன்னதைச் செய்தாள் பெண்.
அவளை முன்னால் ஏறச்சொல்லி அவளைப் பின்தொடர்ந்தான் யுகேந்திரன். ஏணி முடிந்த இடம் ஒரு ‘ட்ரீ ஹவுஸ்’ ஆக இருந்தது. நித்திலா வியப்பின் உச்சிக்கே போனாள். ஓங்கி வளர்ந்திருந்த மரத்தின் உச்சி அந்தக் காட்டின் முக்கால்வாசியை அழகாகக் காட்டியது.
“கவிஞனே! நீ ரசிகனைய்யா!” உணர்ச்சி மிகுதியில் அவனை ஒருமையில் அழைத்தாள் நித்நிலா. ஆனால் யுகேந்திரனோ கசப்பாகப் புன்னகைத்தான்.
“இந்த இடத்துக்கு உன்னோடு வர நான் எப்படியெல்லாம் கற்பனை பண்ணி வைத்திருந்தேன் என்று உனக்குத் தெரியாது கண்ணம்மா…” அவன் பேச்சில் வலி மட்டுமே மீதமிருந்தது.
“அதனால என்ன யுகேந்திரன். நீங்க எப்பிடி நினைச்சீங்களோ அப்பிடியே தான் இப்போவும். சரியா?” அவள் பேச்சில் அவன் கண்கள் பளிச்சிட்டன.
“என்ன சப் கலெக்டரே! என் கைக்கு விலங்கு போட்டிருக்கீங்க என்கிற தைரியமா?” இப்போது அவள் கலகலவென்று சிரித்தாள்.
“உண்மையைச் சொல்லட்டா யுகீ. சத்தியமா ஆமாம் தான். அந்தத் தைரியம் தான்.” சிரித்தபடியே சொன்னவள்,
“சிங்கம் சும்மாவே டிஸ்கோ ஆடுது… இதுல நான் வேற ஸ்டார்ட் ம்யூசிக் சொல்லணுமா?” அவள் சொன்ன விதத்தில் கண்களில் நீர் வரச் சிரித்தான் யுகேந்திரன்.
“பேசு கண்ணம்மா… பேசு. என்னை மறந்து நான் இப்பிடிச் சிரிக்க இன்னும் ஏதாவது பேசு.”
“மனசுல கொஞ்சமாவது உங்களுக்குப் பயம் இருக்கா யுகேந்திரன்?” அவள் கேட்ட கேள்வியில் கண்கள் இடுங்க அவளைப் பார்த்தான் யுகேந்திரன்.
“இந்த அத்துவானக் காட்டுல, அதுவும் இந்த ராத்திரி நேரத்துல, ஒரு வயசுப் பையன் நீங்க… எங்கிட்ட தனியா மாட்டி இருக்கீங்களே, நெஞ்சுல கொஞ்சமாவது பயம் இருந்தா இப்பிடி சிரிப்பீங்களா நீங்க?”
அவள் சொன்னதைக் கிரகிக்க அவனுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. பட்டென்று சிரித்தவன், அவள் அசந்திருந்த நேரம் பார்த்து அந்த மரத் தரையில் அவளைத் தள்ளினான்.
கைகள் இரண்டையும் அவள் இருபுறமும் ஊன்றியவன் அவள் முகத்தருகே குனிந்தான். அவன் கண்கள் அவள் கண்களுக்கு வெகு அருகாமையில் தெரிந்தது. அந்த மருண்ட விழிகளை இமைக்காமல் பார்த்தான் யுகேந்திரன்.
“என் வீரத்திருமகளின் விழிகளில் முதன் முறையாகப் பயத்தைப் பார்க்கிறேன்.” அவன் பேசவும் தான் நித்திலாவிற்கு நின்ற மூச்சு நேரானது. அவள் முக பாவங்களையே பார்த்திருந்தான் யுகேந்திரன்.
“என்னிடம் உனக்கு என்ன பயம் கண்ணம்மா?” கேட்டவனின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டாள் நித்திலா. அவள் பக்கத்தில் வீழ்ந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அசையாமல் அப்படியே படுத்திருந்தாள்.
“கோபமா?”
“ஆமா.” ஆங்காரமாகப் பதில் சொன்னவள் புரண்டு அவன் மார்பில் தலை வைத்துக் கொண்டாள்.
“சாரிடா.”
“அது பத்தாது.”
“சரி… என்ன பண்ணணும்?”
“பாடுங்க.”
“இப்போவா?”
“இல்லை… நாளைக்கு நல்ல நேரம் பார்த்து குறிச்சுக் குடுக்கிறேன், அப்போ பாடுங்க.”
“ஆனாலும் நீ என்னை ஆட்டிப் படைக்கிறே அம்மிணி…” சலித்துக் கொண்டாலும் அவன் குரலில் மகிழ்ச்சியே வழிந்தது.
“கண்மணி கண்மணி உன் முகம் கண்டிட கண்கள் துடிக்கிறது… முல்லை இளங்கொடி போகையில் என்னுயிர் முள்ளில் நடக்கிறது… சின்ன மணிக்குடம் சிந்தி வழிந்தது என்னை அழைக்கிறது… கன்னி உன் நெஞ்சினில் இல்லை குடத்தினில் ஈரம் இருக்கிறது.”
அந்த மாயக் குரல் அவளை மயக்கி வீழ்த்தியது. மயங்கியவள் தெளிய சற்று நேரம் தேவைப்பட்டது.
“இதுவரை கேட்காத பாடல் கவிஞரே!”
“ம்… நிறையப் பேர் கேட்டிருக்க மாட்டார்கள். ‘வேதம் புதிது’ ல வரும்.”
“ஓ… ஆனால் உங்க கவனத்துக்குத் தப்பலை.” இருவரும் மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டார்கள். இரவும் நிலவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. அந்த ஏகாந்தத்தில் இருவரும் பேச மறந்து கண் மூடி இருந்தார்கள்.
சட்டென்று தூரத்தில் ஏதோ ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது. யுகேந்திரனின் உடல் விறைப்புற்றது. படுத்திருந்தவன் பக்கத்தில் இருந்த பெண்ணையும் மறந்து எழுந்து உட்கார்ந்தான்.
ஃபோனை எடுத்து மளமளவென்று யாருக்கோ குறுஞ் செய்திகளை அனுப்பிய வண்ணமே இருந்தான் யுகேந்திரன்.
“யுகீ…”
“உஷ்… பேசாதே…” அவன் கட்டளையில் வாய் மூடிக்கொண்டாள் பெண். நடக்கும் நிகழ்வுகளை ஒரு மௌனச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த ஒரு நாழிகைக்கு அந்த இடத்தில் தடதடவென மரங்களின் ஓசை மட்டுமே கேட்டது. யுகேந்திரன் கை முஷ்டிகள் இறுக, தன்னைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான். கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன.
சிறிது நேரத்திற்கு எல்லாம் அந்த வாகனத்தின் சத்தம் மீண்டும் கேட்க ஆரம்பித்தது. சுவிட்சைப் போட்டால் தண்ணீர் கொட்டுவது போல ஒரு விசில் சத்தத்தில் அந்த இடமே வேறாகிப் போனது.
நான்கைந்து பிரகாசமான விளக்குகள் திடீரென்று உயிர் பெற இருட்டைக் கிழித்துக் கொண்டு வெளிச்சம் பாய்ந்தது. நித்திலா விழி விரிய அனைத்தையும் பார்த்திருந்தாள்.
உயர் காவல் அதிகாரிகள் மற்றும் இன்னோரன்ன அதிகாரிகள் அந்த இடத்தை முற்றுகை இட்டிருந்தார்கள். யுகேந்திரனும் அந்தக் கயிற்று ஏணியைப் பிடித்துக்கொண்டு விரைவாகக் கீழே இறங்கிச் சென்று விட்டான்.
கடத்தலுக்காக உபயோகப் படுத்தப்பட்ட வாகனம், மரங்கள், சம்பந்தப்பட்டவர்கள் என அனைத்தும் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தூக்கத்தைத் தொலைத்த காட்டுப் பறவைகள் கூச்சலிட இரவும் விடியலுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டது.