நிலவொன்று கண்டேனே 5

நேரம் இரவு பத்தைத் தாண்டி இருந்தது. யுகேந்திரன் அமைதியாக வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். ‘பார்பிக்யூ’ போட்ட அதே இடம். மூட்டிய நெருப்பு இன்னும் அணையாமல் தீக்கங்குளாகக் கண்சிமிட்டியது.

நித்திலாவை அவள் வீட்டில் விட்டு விட்டு இப்போதுதான் வந்திருந்தான். ஸ்கூட்டி இருந்ததால் இது நாள் வரை அலுவலக ஜீப்பை வீட்டிற்கு அழைத்ததில்லையாம். நாளை முதல் அதில் தான் ஆஃபீஸிற்குப் பயணம் என்று சொல்லிச் சிரித்திருந்தாள்.

நேற்றிரவு நடந்த சம்பவத்திற்குப் பிறகு, சப் கலெக்டரின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இரண்டு போலீஸ் ஊழியர்கள் காவலுக்கு நியமிக்கப் பட்டிருந்தார்கள். இருந்தாலும் யுகேந்திரனுக்கு அத்தனை நிம்மதியாக இருக்கவில்லை.

அன்றைய மாலைப்பொழுது மனதை மயக்கி இருந்தாலும், ஏதோ சொல்ல முடியாத வேதனை ஒன்று அவன் கழுத்தை நெரித்தது.

எத்தனை ஆளுமையான பெண்! அவளுக்குள் இப்படி ஒரு சோகத்தை யுகேந்திரன் எதிர்பார்த்திருக்கவில்லை. அன்று அவள் ஆஃபீஸ் போன போது, அங்கிருந்த ஊழியர்கள் அவளிடம் நடந்து கொள்ளும் முறையிலிருந்தே யுகேந்திரனுக்கு அவள் தன்மை புரிந்தது.

தன்னிடம் மனம் விட்டுப் பேசும் நித்திலா வேறு, சப் கலெக்டர் வேறு. பதவி என்று வந்து விட்டால்… அங்கிருப்பது, தான் பார்க்கும் நித்திலா அல்ல.

“யுகேந்திரா!” அம்மாவின் குரலில் திரும்பிப் பார்த்தான் யுகேந்திரன். பக்கத்தில் இருந்த செயாரில் அமர்ந்து கொண்டார் வானதி. மகனின் மனதை ஓரளவு அவரால் படிக்க முடிந்தது.

“சொல்லு யுகேந்திரா?”

“அம்மா…”

“அம்மாவும் உன் வயசைக் கடந்துதான் வந்திருக்கேன். உன் மனசு இப்போ என்ன நினைக்குதுன்னு எனக்குப் புரியுது.” நேரடியாக விஷயத்திற்கு வந்தார் அம்மா. அங்கே சட்டென்று ஒரு கனமான அமைதி நிலவியது. யுகேந்திரன் இடது கையால் நெற்றியைத் தடவிக் கொண்டான்.

“அன்னைக்கு நடுரோட்ல அந்தப் பொண்ணை முதல் தடவை பார்த்தப்போ உன் முகத்துல ஒரு அருவருப்புத் தான் தெரிஞ்சுது. அது இத்தனை சீக்கிரத்துல அன்பா மாறுதுன்னா, அது பரிதாபமாக் கூட இருக்கலாம். வாழ்க்கைக்கு இதெல்லாம் சரி வராதுப்பா.”

“ம்…” எதுவும் பேசவில்லை மகன். அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டான்.

“வாழ்க்கையை அனுபவிச்சு வாழணும்னு நினைக்கிற ரகம் நீ. எல்லாத்துலயும் ஒரு நிதானம் உங்கிட்ட. ஆனா, இதுக்கு நேர் எதிர் மாற்றம் நித்திலா. அவளுக்கு இதெல்லாம் புதுசு. உனக்கு ஈடு குடுக்க அவளால முடியுமான்னு பார்த்துக்கோ.”

“……”

“இதெல்லாத்துக்கும் மேல, அப்பா. அவரை எப்பிடிச் சமாதானப் படுத்துவ? ஆர்ஃபனேஜ்ல வளந்த பொண்ணை அப்பா ஏத்துக்குவாரா?”

“உங்களுக்கு நித்திலாவைப் பிடிக்கலையாம்மா?”

“ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒரு சப் கலெக்டரா அவ துறுதுறுன்னு வேலை பார்க்கிறது பிடிச்சிருக்கு. ஒரு தனி மனுஷியா அவ பேச்சு, செயல் எல்லாம் ரொம்பவே பிடிச்சிருக்கு. இதெல்லாம் எம் பையனுக்குப் பொண்டாட்டியா வரப் போதுமா யுகேந்திரா?”

“…..” யுகேந்திரனின் மௌனம் வானதிக்குக் கஷ்டமாக இருந்தது. எதுவானாலும் அவனே முடிவெடுக்கட்டும் என்று உள்ளே போய்விட்டார்.

நாற்காலியில் அமர்ந்திருந்தவன் இறங்கித் தரையில் படுத்துக் கொண்டான். கைகளைத் தலைக்கு அணையாகக் கொடுத்து வானம் பார்த்திருந்தான்.

அம்மா சொல்வதிலுள்ள நியாயம் அவனுக்கும் புரிந்தது. நித்திலா தனக்குச் சரியான துணைதானா என்ற சந்தேகம் வந்தாலும், அவளை நினைக்கும் போது உண்டாகும் சுகமான உணர்வைத் தடுக்க முடியவில்லை.

ஒரு பாதுகாப்பற்ற நிலையில் அந்தப் பெண் இருக்கிறாள். தங்கள் குடும்பத்திற்கு அவள் வேண்டப் பட்டவள் என்று காட்டுவதற்காகவே அவளைத் தன்னோடு இன்று அழைத்து வந்திருந்தான்.

எம் எல் ஏ வீட்டினருக்கும், சப் கலெக்டருக்கும் ஒரு நட்புண்டு என்ற செய்தி, நாலு பேருக்குத் தெரியவேண்டும். அது அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று தோன்றியது. அதனாலேயே வீடு வரை அழைத்து வந்திருந்தவன், ட்ரைவரை அனுப்பாமல் மீண்டும் அவனே ட்ராப் பண்ணினான்.

தூக்கம் வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. நித்திலாவிற்கு ஒரு கால் பண்ணலாமா என்று யோசித்தான். வேண்டாம், அதிக உரிமை எடுப்பது போலத் தோன்றும் என எண்ணி அந்த யோசனையைக் கைவிட்டான்.

அவளை ட்ராப் பண்ணப் போகும் போது காரில் நடந்த உரையாடல் இப்போது மனத்திரையில் படமாக ஓடியது.

‘கவிஞரே! உங்களோட பேசும் போது, தமிழும் இனிக்குதே… அது ஏன்?’ அவள் கேள்வியில் ரசனையாகச் சிரித்தான் யுகேந்திரன்.

‘அதுதான் தமிழின் அழகு நித்திலா. கண்ணதாசனோட பேச்சு ஒன்னு சமீபத்துல கேட்டேன். அதுல அவர் என்ன சொல்லுறார்னா… தவத்துக்கு ஒருவரடி, தமிழுக்கு இருவரடி, சவத்துக்கு நால்வரடி. புரியுதா?’

‘ம்… தவம் ஒருத்தர் பண்ணணும், தமிழை இருவர் பேசி மகிழணும், கடைசியா நால்வர் வேணும். சரியா நான் சொன்னது?’

‘ம்…’

‘இல்லை கவிஞரே! எல்லார் கூடவும் தான் நான் தமிழ்ல பேசுறேன். அப்பெல்லாம் இனிக்காத தமிழ் உங்ளோட பேசும் போது மட்டும் இனிக்குதே. அது ஏன் தெரியுமா?’

‘ஏன்?’ யுகேந்திரனின் இதழ்களில் ஒரு குறும்புப் புன்னகை ஒட்டிக்கொண்டது.

‘ஏன்னா… நீங்க பேசுற விஷயங்கள் அழகு. பொறுக்கினா மாதிரி விஷயங்களைத்தான் பேசுறீங்க. ஏன் கவிஞரே? காதல் வரல்லையா உங்களுக்கு?’ சட்டென்று அவள் கேட்க, அந்த வெகுளித்தனத்தில் வாய் விட்டுச் சிரித்தான் யுகேந்திரன்.

‘இல்லையேம்மா?’

‘ஐயையோ! ஆனா உங்களைப் பொண்ணுங்க சும்மா விட்டிருக்க மாட்டாங்களே?’ இப்போது அவன் இதழ்க்கடையோரம் லேசாக ஒரு வசீகரப் புன்னகை தோன்றியது. நித்திலாதான் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

ஒரு புன்னகையோடு எல்லாவற்றையும் அசை போட்டபடி உள்ளே போனான் யுகேந்திரன்.

* * * * * * * * * * * * * * *

அன்று ஞாயிற்றுக்கிழமை. பிற்பகல் நான்கு மணி. யுகேந்திரன் நிதானமாக ரெடியாகிக் கொண்டிருந்தான். வெள்ளை வேட்டி சட்டை. வேட்டியில் சின்னதாகத் தங்க நிற பார்டர் இருந்தது.

அன்று பொள்ளாச்சியில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. யுகேந்திரனுக்கும் அழைப்பு வந்திருந்தது. இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், கலந்து கொள்ள முடிவு செய்திருந்தான்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இன்று நித்திலாவும் அவனோடு வரச் சம்மதித்திருந்தாள். முதலில் மறுத்தவளை யுகேந்திரன் வற்புறுத்தி அழைத்திருந்தான்.

‘கவிஞரே! என்னை அழையா விருந்தாளியா வரச் சொல்லுறீங்களா?’

‘அப்பிடியெல்லாம் இல்லை நித்திலா. நீங்க என்னோட கெஸ்ட், அவ்வளவுதான். உங்களுக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சாத் தானே அவங்களும் உங்களை இன்வைட் பண்ணுவாங்க.’ ஏதேதோ சொல்லி அவளைச் சம்மதிக்க வைத்திருந்தான்.

ஸ்கூட்டி எரிந்த நிகழ்விற்குப் பிறகு எந்தத் தொல்லைகளும் இல்லாவிட்டாலும், இது நிரந்தரம் அல்ல என்று யுகேந்திரனுக்குப் புரிந்திருந்தது.

சப் கலெக்டரின் தலையீட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பால்பண்ணை உரிமையாளர் இன்னும் சிறையில் தான் இருந்தார். அவரை வெளியே எடுப்பதற்காக அவரின் குடும்பத்தினர்கள் அயராது முயற்சி செய்த போதும், அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தது.

யுகேந்திரன் அந்த விஷயத்தில் கொஞ்சம் கண்ணுங் கருத்துமாகவே இருந்தான். பால்பண்ணை உரிமையாளரின் குடும்பத்தினர் சப் கலெக்டர் மேல் கொலை வெறியில் இருப்பதாகக் காற்றோடு சில தகவல்கள் வந்திருந்தன.

அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டவன், காரை நித்திலாவின் வீட்டிற்கு முன்பாக நிறுத்தினான். வாசலில் நின்ற கூர்க்கா இவனைப் பார்த்ததும் வணக்கம் வைத்தார். நடுத்தர வயது.

“மேடம் ரெடியாகிட்டாங்களா ஐயா?” இது யுகேந்திரன்.

“நீங்க வந்தா உள்ளே வரச் சொன்னாங்க தம்பி.”

“இல்லையில்லை, நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன்.” எத்தனை தூரம் நட்பு இருந்தாலும், தனியாக அவள் வசிப்பதால் யுகேந்திரன் அந்த வீட்டிற்குள் இன்று வரை நுழைந்ததில்லை.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நித்திலா காரை நோக்கி நடந்து வந்தாள். மெல்லிய பிங்க் நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். சற்று அடர்ந்த பிங்க் நிறத்திலும், கோல்ட் கலரிலும் சின்னதாக போடர். அதே அடர்ந்த பிங்க் நிறத்தில் ப்ளவுஸ். தலை நிறைய குண்டு மல்லிகை. இன்று சற்றே நகைகள் அணிந்திருந்தாள். கண்ணுக்கு மை தீட்டிக் கொஞ்சம் சிரத்தையெடுத்து அலங்காரம் பண்ணியது போலத் தோன்றியது யுகேந்திரனுக்கு. இமைக்க மறந்திருந்தான்.

கூர்க்காவிடம் தலையை ஆட்டி விடைபெற்றுக் கொண்டவள், காரிற்குள் ஏறினாள்.

“கவிஞரே! நான் சுமாரா இருக்கேனா?” அந்தக் கேள்வியில் யுகேந்திரன் கொஞ்சம் திக்குமுக்காடிப் போனான்.

“சூப்பரா இருக்கே பொண்ணே.”

“இந்த லொள்ளுத் தானே வேணாங்கிறது. நாங்களும் கண்ணாடி பார்ப்போமில்லை.”

“அப்போ உங்க வீட்டுக் கண்ணாடியை மாத்துங்க அம்மிணி.”

“சரி கண்ணு.” அந்த வட்டார மொழியில் பேசிவிட்டு அவள் கலகலவென்று சிரித்தாள். யுகேந்திரனும் புன்னகைத்துக் கொண்டான்.

“உங்க ஏரியாப் பொண்ணு மாதிரி ஆகிட்டேனா?”

“அதென்ன மாதிரி? பொள்ளாச்சியிலேயே ஒரு மாப்பிள்ளை பார்த்துட்டா எங்க ஊர்ப் பொண்ணுதான்.”

“அட! இந்த ஐடியா நல்லா இருக்கே. சுயம்வரம் ஒன்னு நடத்திருவோம் கவிஞரே…”

“நடத்தலாமே… சப் கலெக்டர்ன்னா கசக்குமா என்ன நம்ம பசங்களுக்கு?” சிரித்தபடியே இருவரும் அந்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

ஓரளவு பெரிய மண்டபம் தான். ஆனால் அதைச் சுற்றி பெரிய அளவில் நிலம் இருந்தது. அழகாகப் பேணிப் புல் வளர்த்திருந்தார்கள். அழகான கொன்றை மரங்களும் ஆங்காங்கே பூத்துக் குலுங்கியபடி நின்றன.

கார்ப் பார்க்கிங்கில் காரை நிறுத்தினான் யுகேந்திரன். சுற்றிவர இருந்த ஏரியா பார்ப்பதற்கு அத்தனை உவகை அளிப்பதாக இருந்தது.

“ரொம்ப அழகா இருக்கு இல்லை சார் இந்த இடம்?”

“ம்…”

“ஏன் கவிஞரே, என்னை என்ன சொல்லி அறிமுகப்படுத்தப் போறீங்க?”

“என்ன சொல்லட்டும்?”

“கேள்வி கேட்டது நான். பதில் சொல்லாம என்னையே திருப்பிக் கேள்வி கேக்குறீங்க?”

“என்ன வேணும்னாலும் சொல்லலாமா? அதுக்கு எனக்குப் பர்மிஷன் உண்டா நித்திலா?” அவள் கண்களை ஆழமாகப் பார்த்துக் கேட்டான் யுகேந்திரன்.

“கவிஞரே! நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க. நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும். ஆனாலும் இப்பல்லாம் அளந்து தான் பேசுறீங்க. அடிக்கடி மௌனமாகிடுறீங்க. நான் தான் வாய் ஓயாமப் பேசுறேன்.” அங்கலாய்த்தபடி காரை விட்டு இறங்கினாள் நித்திலா. யுகேந்திரனும் புன்னகைத்துக் கொண்டான்.

சப் கலெக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறு குறுவென்று பார்த்தாலும், எல்லோரும் நாகரிகமாக நடந்து கொண்டார்கள். ஒரு சின்னத் தயக்கத்தோடே வந்த நித்திலா சற்று நேரத்திலெல்லாம் இயல்பாகிப் போனாள்.

விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நித்திலாவையும் மேடைக்கு அழைத்துப் புத்தகம் வழங்கி கௌரவித்தார்கள். இரண்டொரு பேர் புத்தகத்தைப் பற்றியும், அதன் ஆசிரியர் பற்றியும் பேசினார்கள். தேநீர் உபசாரமும் நடந்தது.

எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு, இரண்டு பேரும் வெளியே வந்தார்கள். நேரம் மாலை ஏழைத் தாண்டி இருந்தது. யுகேந்திரனை யாரோ அழைக்கத் திரும்பிப் பார்த்தான்.

“நீங்க பேசிட்டு வாங்க சார். நான் அந்தப் பூமரங்களைப் பார்த்திட்டு வந்துர்றேன்.” சொல்லிவிட்டு நகர்ந்தாள் பெண். யுகேந்திரன் அந்த நண்பரோடு பேசியபடி இருக்க, மண்டபத்தை விட்டு வெளியேறிய நித்திலா வாகனங்களுக்காகப் போடப்பட்டிருந்த அந்தத் தார்ப் பாதையைத் தாண்டி நடந்தாள்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எங்கிருந்தோ வந்த இரு சக்கர வண்டி ஒன்று அவளைத் தாண்டிச் செல்லும் போது, அவள் புடவை முந்தானையை இழுத்தது.

முந்தானை இழுபட்ட வேகத்திற்கு வண்டியோடு இழுபட்டவள், அங்கிருந்த கொன்றை மரத்தில் மோதி நின்றாள். வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவன், மீண்டும் அவள் முந்தானையை எட்டிப் பிடிக்கப் போக அது அந்தக் கைகளுக்கு எட்டவில்லை. வாகனம் மாயமாகிப் போயிருந்தது.

“நித்திலா…” யுகேந்திரனின் கர்ஜனையில் அந்த இடமே ஒரு நொடி ஆடி ஓய்ந்தது. எல்லோரும் ஸ்தம்பித்தபடி நின்றுவிட்டார்கள்.

நண்பரோடு பேசியபடி நின்றிருந்த யுகேந்திரன் எப்படித்தான் அவளிடம் வந்து சேர்ந்தானோ தெரியாது. கண் இமைப்பதற்குள் அவளை நெருங்கி இருந்தவன், அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்திருந்தான்.

சேலை முந்தானையைப் பின் பண்ணியிருந்த இடது பக்க ஜாக்கெட் கிழிந்திருந்தது. புடவையும் கிழிந்து போனதால் தான் நித்திலா அந்த இடத்தோடு மோதி விடப்பட்டாள். இல்லாவிட்டால் வாகனத்தோடு இழுபட்டுக் கூடவே போயிருப்பாள்.

நெற்றியில் அடிபட்டிருக்க லேசாக ரத்தம் கசிந்தது. விழா முடிந்து ஒரு சிலர் கலைந்து போயிருக்க, எஞ்சியிருந்தவர்கள் அங்கே கூடி விட்டார்கள்.

நித்திலா கூசிப் போனாள். முடிந்த மட்டும் யுகேந்திரனோடு ஒட்டிக் கொண்டாள். வலிகள் எல்லாவற்றையும் தாண்டி தனது கோலம் தான் அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.

புடவைத் தலைப்பையும் இழுத்து மூட முடியாதபடி அதுவும் கிழிந்து போயிருந்தது. கண்களில் நீர் திரள யுகேந்திரனோடு ஒட்டிக் கொண்டாள்.

சுற்றி நின்றவர்களுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. மலைத்துப் போய் நின்றிருந்தார்கள். வயதில் பெரியவர் ஒருவர் தன் அங்கவஸ்திரத்தை யுகேந்திரனிடம் நீட்டவும், சட்டென்று வாங்கியவன் அவள் தோளைச் சுற்றிப் போர்த்தி விட்டான்.

யாருக்குமே என்ன பேசுவதென்று புரியவில்லை. புத்தக வெளியீட்டு விழா என்பதால் கூடியிருந்த எல்லோரும் நடுத்தர வயதிற்கும் மேலாகத்தான் இருந்தார்கள். தங்கள் மகள் வயதில் இருக்கும் ஒரு பெண்ணின் சங்கடம் புரிந்ததோ என்னவோ எதுவும் பேசாமல் கலைந்து போனார்கள்.

யுகேந்திரனுக்கு மிகவும் நெருங்கியவர்கள் ஒரு சிலர் மட்டுமே போகாமல் நின்றிருந்தார்கள்.

“யுகேந்திரன், காருக்குக் கூட்டிட்டுப் போங்க. அடி பட்டிருக்கும் போல இருக்கு. ஒரு டாக்டரை உடனடியாப் பார்க்கிறது நல்லது.” ஒருவர் சொல்ல, இன்னொருவர்,

“போலீஸுக்கு தகவல் சொல்லலாமா?” என்றார்.

“ஆமா, சும்மா விடக்கூடாது. வேணும்னு தான் யாரோ வேண்டாதவங்க பண்ணி இருக்காங்க. நல்லது பண்ணுறவங்களுக்கு இதுதான் பரிசுன்னா, இதை சும்மா விடக்கூடாது.” இன்னொருவர் சொல்ல, யுகேந்திரன் நித்திலாவை மெதுவாக எழுப்பினான்.

காலிலும் அடி பலமாகப் பட்டிருக்கும் போல. நடக்கவே சிரமப்பட்டாள் பெண். கைத்தாங்கலாக அவளைக் கார் வரை நடத்தி வந்தவன் காரிற்குள் உட்கார வைத்தான். அவள் பக்க டோரை மூடிவிட்டு தானும் ஏறி அமர்ந்து கொண்டான்.

நிலைமை கொஞ்சம் கனமாக இருந்தது. அடுத்து என்ன பேசுவது, என்ன பண்ணுவது என்று புரியாமல் நிதானமாக நித்திலாவை நிமிர்ந்து பார்த்தான் யுகேந்திரன். அவனின் பார்வை புரிந்தவள் ஒரு கேவலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

யுகேந்திரனுக்கும் கண்கள் கலங்கின. அவள் முதுகை லேசாகத் தடவிக் கொடுத்தவன், கொஞ்ச நேரம் அவளை அழவிட்டான். அவள் தேம்பல் நிற்காமல் தொடரவும், அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான்.

“நித்திலா… இங்கப் பாரு. அழக்கூடாது… நீ எதுக்குக் கண்ணம்மா அழுற? ஒன்னுமில்லைடா… ஒன்னும் நடக்கலை. நான் இருக்கேன் இல்லையா? உன் பக்கத்துல நான் இருக்கேன் இல்லையா? நீ அழக்கூடாது.” குழந்தைக்குச் சொல்வது போல அவள் கண்களைத் துடைத்து விட்டபடி சொன்னான்.

“நான்… நான்…” ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனால் வார்த்தைகளையும் தாண்டிக் கொண்டு கண்ணீர்தான் முதலில் வெளிவந்தது.

“சரி சரி… நீ எதுவும் பேச வேணாம். நான் பார்த்துக்கிறேன்.” சொன்னவன் காரை ஸ்டார்ட் செய்தான். அப்போதும் அவன் தோளில் சாய்ந்த படியே அமர்ந்திருந்தாள் பெண்.

கார் ஒரு வீட்டின் முன்பாகப் போய் நின்றது. உடனேயே உள்ளே போகாமல் காரை விட்டு இறங்கியவன் யாருடனோ ஃபோனில் பேசினான். நித்திலாவிற்கு ஒன்றுமே கேட்கவில்லை.

ஆனால் அவன் ஃபோனை டிஸ்கனெக்ட் பண்ணவும் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சட்டென்று வெளியே வந்தார்.

“யுகீ… உள்ளே வாப்பா. அவங்களையும் கூட்டிக்கிட்டு வா.”

“சரி ஆன்ட்டி.” சொல்லியபடியே அவள் பக்கக் கதவைத் திறந்தான். கேள்வியாகப் பார்த்தாள் நித்திலா.

“நித்தி… எங்க ஃபாமிலி டாக்டர் தான். இப்போ ஹாஸ்பிடல் போனா தேவையில்லாத கேள்விகள் வரும். அதனாலதான்… இறங்குடா.” என்றான். குரல் அத்தனை மென்மையாக இருந்தது.

கொஞ்சம் சிரமப்பட்டு அவள் இறங்கவும் இவன் கை கொடுத்தான். அணைத்தாற் போல அவளை அவன் உள்ளே அழைத்துச் செல்ல, டாக்டர் சற்றே வியப்பாக யுகேந்திரனைப் பார்த்தார்.

“ஆன்ட்டி… ஏதாவது வாங்கணுமா?”

“இல்லைப்பா, அவசியமில்லை.” சொன்னவர் நித்திலாவை ஒரு ரூமிற்குள் அழைத்துச் சென்றார். அவள் யுகேந்திரனைப் பார்க்கவும், ‘போ’ என்பது போல கண்ணால் ஜாடை காட்டினான்.

இரண்டு, மூன்று இடங்களில் அடிபட்டு லேசாகச் சிராய்த்திருந்தது. வெற்றியிலும் ரத்தம் வடிந்து உறைந்து போயிருந்தது.

ஒவ்வொரு இடமாகச் சோதனை பண்ணியவர், அடிபட்ட எல்லா இடங்களையும் சுத்தம் பண்ணி மருந்து போட்டார். இன்ஜெக்ஷன் ஒன்றும் போட்டவர், நெற்றியில் சின்னதாக ஒரு பான்டேஜும் போட்டு விட்டார்.

“பெயின் இருக்காம்மா?”

“லேசா இருக்கு டாக்டர்.”

“நான் பெயின் கில்லர் குடுக்கிறேன். பயப்படுற மாதிரி ஒன்னுமில்லை. மெடிக்கல் லீவ் இருக்கில்லையா? ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா.”

“ம்… சரி டாக்டர்.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்த டாக்டர் ஒரு பையோடு உள்ளே வந்தார்.

“இந்தாம்மா. இதை சேன்ஞ் பண்ணிக்கோ.” சொல்லிவிட்டு அவர் கதவை மூடிக்கொண்டு போய்விட்டார். பையைத் திறந்து பார்த்தாள் நித்திலா. புதிதாக ஒரு சுடிதார் இருந்தது. கண்களில் நீர் திரள சற்று நேரம் உறைந்தபடி நின்றிருந்தாள்.

யுகேந்திரன் தான் உடனேயே போய் வாங்கி வந்திருக்கிறான் என்று புரிந்தது. நெஞ்சை ஏதோ பிசைய உடையை மாற்றிக் கொண்டாள்.

ரூமை விட்டு அவள் வெளியே வந்ததுதான் தாமதம், டாக்டரோடு பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று அவளை நோக்கி வந்தான்.

“நித்திலா… இப்போ எப்பிடி இருக்கு?”

“ம்…” அவள் தலையாட்டினாள். டாக்டர் எல்லாவற்றையும் ஒரு விசித்திரமான புன்னகையோடு பார்த்திருந்தார்.

டாக்டரிடம் விடை பெற்றுக் கொண்டவர்கள், நித்திலாவின் வீடு வந்து சேர்ந்தார்கள். வழமைக்கு மாறாக இன்று கூர்க்காவைக் கேட்டைத் திறக்கச் சொன்னவன், காரை உள்ளே கொண்டு போய் நிறுத்தினான்.

இவளின் கோலத்தைப் பார்த்துப் பதறிப் போய் ஓடி வந்த கூர்காவிடமும், சமையல்க்கார அம்மாவிடமும் என்ன சொன்னானோ? அவர்கள் தலையாட்டியபடி நகர்ந்து போனார்கள். எதையும் கவனிக்கும் நிலையில் நித்திலா இல்லை.

அவளை உள்ளே அழைத்துச் சென்றவன், டைனிங் டேபிளில் உட்கார வைத்தான். பங்கஜம் அம்மா சூடாக இட்லியும் சாம்பாரும் கொண்டு வந்து ஊட்டி விட அமைதியாக உண்டு முடித்தாள்.

“அம்மா… சாருக்கும்… குடுங்க.” நித்திலா சொல்லவும்,

“இதோ குடுக்கிறேன் கண்ணு. நீங்க சாப்பிட்டு முடிச்சதும் சாருக்கும் குடுக்கிறேன் கண்ணு.” சொன்ன பங்கஜம் அம்மா, புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டார். யுகேந்திரன் அனைத்தையும் அமைதியாகப் பார்த்திருந்தான்.

கைகளைக் கழுவிக் கொண்ட பங்கஜம் அம்மா, நித்திலாவை அவள் ரூமிற்குள் அழைத்துச் சென்றார். அவளுக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொண்டு யுகேந்திரனும் உள்ளே போனான்.

கட்டிலில் அவள் சாய்ந்து அமர்ந்திருக்க, இவனைக் கண்டதும் பங்கஜம் அம்மா சட்டென்று வெளியே போய்விட்டார். மாத்திரைகளை அவள் விழுங்கும் வரை பார்த்திருந்தவன், அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

“வலிக்குதாடா?” அந்தக் கேள்வியில் நித்திலாவிற்கு மீண்டும் கண்களில் நீர் கோர்த்தது.

“அழக்கூடாது கண்ணம்மா. தூங்கு.” என்றவன், அவளைச் சரியாகத் தூங்க வைத்தான். அந்தக் காயம்பட்ட நெற்றியில் லேசாக முத்தம் வைத்தவன்,

“தூங்கு நிலா.” என்றான். அவள் கண்கள் அவனை ஆச்சரியமாகப் பார்க்க, அந்தக் கண்களிலும் முத்தம் வைத்தான். திகைத்து நோக்கியவளைப் பார்த்துப் புன்னகைத்தவன்,

“தூங்குடா.” என்றான். மந்திரத்திற்குக் கட்டுப்பட்டாற் போல அவள் கண்கள் மூடிக்கொண்டன. கொஞ்ச நேரம் அந்த முகத்தையே பார்த்திருந்தவன், வெளியே வந்தான்.

கூர்க்காவையும், சமையல்க்கார அம்மாவையும் அழைத்துக் கொஞ்ச நேரம் பேசியவன், யாருடனோ ஃபோனிலும் பேசினான்.

அவன் பேசி முடித்து சற்று நேரத்திற்கு எல்லாம், ஒரு திடகாத்திரமான மனிதர் சைக்கிளில் வந்திறங்கினார். அவருக்கும் ஏதோ கட்டளைகள் இட்டவன், அதன் பிறகே பங்கஜம் அம்மா கொடுத்த உணவை உண்டான்.

எல்லாவற்றையும் சரி பண்ணிவிட்டு அவன் வீட்டுக்குக் கிளம்பும் போது மணி பதினொன்றை நெருங்கி இருந்தது.

 

error: Content is protected !!