nk7

nk7

நிலவொன்று கண்டேனே 7

இரண்டு நாட்கள் முழுதான ஓய்விற்குப் பின் இன்று தான் ஆஃபீஸிற்கு வந்திருந்தாள் நித்திலா. இதில் கடுப்பான விஷயம் என்னவென்றால் அவளையே தொடரும் அந்த ‘கறுப்பன்’ தான்.

அவர் பெயரே ‘கறுப்பன்’ தானாம். விடிந்தால் வந்து விடுவார். எல்லாம் யுகேந்திரனின் ஏற்பாடு. எவ்வளவு சொல்லியும் அவன் ஒத்துக்கொள்ளவே இல்லை.

பகல் முழுவதும் இவர் காவல் காப்பார். இரவு எட்டு மணி வாக்கில் இவர் போக, இன்னொருவர் வருவார். அவரின் பெயர் கூட இவளுக்குத் தெரியாது.

இது போதாதென்று, இரவில் வருபவர் ஒரு பெரிய நாயையும் அழைத்து வருவார். தப்பித் தவறி அவர் கண்ணயர்ந்து விட்டால் கூடுதல் பாதுகாப்புத் தேவையாம். நித்திலாவிற்குத் தலை வேதனையாக இருந்தது.

பங்கஜம் அம்மாவிற்கும், கூர்க்காவிற்கும் இந்த ஏற்பாடுகளை எல்லாம் பார்த்த போது வாயெல்லாம் பல்லாகிப் போனது. கோபம் தலைக்கேற யுகேந்திரனை அழைத்துச் சத்தம் போட்டிருந்தாள் நித்திலா.

‘கவிஞரே! இது என்ன கூத்து? போற இடமெல்லாம் நிழல் மாதிரி ஒருத்தர். எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?’

‘நித்திம்மா… உன்னோட நன்மைக்குத் தானேடா. கொஞ்சம் பொறுத்துக்கோ.’ மிகவும் நிதானமாகச் சொன்னான் யுகேந்திரன்.

‘ஒன்னும் வேணாம். பக்கத்துல இருக்கிற ஷாப்புக்குக் கூட போக முடியலை. என்ன இது?’

‘நான் என்ன பண்ணட்டும்? ஊர்ல இருக்கிற வம்பையெல்லாம் நீ அள்ளிக் கட்டிக்கிட்டு வர்ற. உன்னோட பாதுகாப்பு எனக்கு முக்கியம் இல்லையா?’

‘ப்ளீஸ் யுகேந்திரன், புரிஞ்சுக்கோங்க.’

‘எனக்குப் புரியுது கண்ணம்மா. இருந்தாலும் நான் என்ன பண்ண முடியும் சொல்லு? உன்னைத் தனியா விட்டுட்டு நீ சேஃபா இருக்கிறயா, இல்லையான்னு என்னால பதற முடியாதும்மா. கொஞ்சம் பொறுத்துப் போடா.’

‘இத்தனை நாளும் இப்பிடித்தானே இருந்தேன்?’ அவள் குரலில் ஒரு சலிப்பிருந்தது.

‘இத்தனை நாளும் உன்னை எனக்குத் தெரியாதே? தெரிஞ்சிருந்தா அப்போவே உன்னை அள்ளிக்கிட்டு வந்திருப்பேன்.’ பேச்சு திசை மாறவும் பேசுவதை முடித்துக் கொண்டாள். அவள் சொல்லி அவன் கேட்கப் போவதில்லை. பிறகு எதற்கு வீணான விவாதம்?

அதேநேரம் வானதி வீட்டிலும் ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது. யுகேந்திரன் ரெடியாகிக் கொண்டிருக்க, வானதி அவன் முன்னால் வந்து நின்றார். முகத்தில் கொஞ்சம் கலவரம் தெரிந்தது.

“என்னம்மா?”

“யுகேந்திரா…”

“சொல்லுங்க.”

“நைட் அப்பா ஃபோன் பண்ணினாங்க.”

“ஓ… என்னவாம்?”

“யுகீயும், அந்த சப் கலெக்டரும் ஒன்னா படிச்சவங்களான்னு கேட்டாங்க.” தலைக்கு ஜெல் தடவிக் கொண்டிருந்த யுகேந்திரன் அம்மாவின் பேச்சில் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

“நீங்க என்ன சொன்னீங்க?”

“அவங்க ரெண்டு பேரும்… நல்ல ஃப்ரெண்ட்ஸ்ன்னு…” வானதிக்குப் பேச்சு வரவில்லை.

“எதுக்கும்மா அப்பிடிச் சொன்னீங்க? யுகீக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டியது தானே?”

“யுகேந்திரா! என்னால சட்டுன்னு அப்பிடிச் சொல்ல முடியலை கண்ணு.”

“இனிப் பேசும் போது அப்பிடித்தான் சொல்லணும் புரியுதா?”

“டேய்! அப்பா உன்னோட நன்மைக்குன்னு நினைச்சுத்தானே பேசுறாங்க.”

“எது நன்மை? அவங்களுக்குப் புடிச்சிருந்தா மட்டும் எதையும் யோசிக்காம வாத்தியார் வீட்டுல பொண்ணெடுப்பாங்க. அதையே நாங்க பண்ணினா, எங்க நன்மைக்குச் சொல்லுறாங்களா?”

“டேய்! வாத்தியார் பொண்ணுக்கு என்னடா குறை?”

“இல்லைல்ல… அப்போ எதுக்கு சப் கலெக்டருக்கு குறை சொல்லுறீங்க?”

“குறை சொல்லலைப்பா…”

“அம்மா… நல்லாக் கேட்டுக்கோங்க. அனாதையா நின்னது அவ தப்புக் கிடையாது. அந்த நிலைமையில கூட வளர்ந்து நிக்கிறா. யாரு தடுத்தாலும் சரி, யாரு சம்மதிச்சாலும் சரி, எனக்கு நித்திலாதான். அதுல மாற்றம் இல்லை.”

கோபமாகச் சொல்லிட்டு வெளியே போகும் மகனைப் பார்த்தபடியே இருந்தார் வானதி. அவன் பேசுவது நியாயமாக இருந்தாலும், மனதுக்குள் கவலை மண்டியது.

உண்மையிலேயே நேற்று இரவு அன்பரசு பேசும் போது அதைத் தான் சொல்லி இருந்தார். மகனின் நடவடிக்கைகள் அவர் காதுக்குப் போயிருக்கவும், நித்திலாவைப் பற்றி விசாரித்திருக்கிறார்.

பெண் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்று தெரிந்த போது மனிதருக்கு அந்த விஷயத்தில் விருப்பம் இல்லாமல் போனது.

‘யுகீக்கு இது சரிவராது வானதி. வெறும் நட்புன்னா சந்தோஷம் தான். ஆனா, அதையும் தாண்டிப் போகாம பார்த்துக்கச் சொல்லு.’ இப்படித்தான் சொல்லி இருந்தார்.

வானதிக்கு மண்டை வெடித்தது. அப்பாவும், பிள்ளையும் ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்தால் பாவம், அவரும் தான் என்ன செய்வார்?

இரண்டு நாட்களும் பார்க்காத வேலைகள் நித்திலாவை முழுதாக விழுங்கிக் கொண்டன. மதியம் உணவு இடைவேளையின் போதே கொஞ்சம் ஓய்வு கிடைத்தது.

நம்பரைத் தேடிக் கண்டுபிடித்து அவசரமாக எண்களை அழுத்தினாள். அடுத்த பக்கம் ரிங் போவது கேட்டது.

“ஹலோ.” இது வானதி.

“ஆன்ட்டி… நான் நித்திலா பேசுறேன்.”

“அடடே! நித்திலா நல்லா இருக்கியாம்மா?” வானதியின் குரல் உற்சாகமாகத்தான் இருந்தது.

“ஆன்ட்டி, நான் உங்க கூட பேசணும்.” வார்த்தை வளர்க்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் பெண்.

“வீட்டுக்கு வாம்மா.”

“இல்லை ஆன்ட்டி, அது சரிவராது. வெளியே எங்கேயாவது மீட் பண்ணலாம்.”

“ஓ! அப்படீன்னா… தாத்தா வீடு தெரியுமா?”

“இல்லையே ஆன்ட்டி.”

“ஒரு ப்ராப்ளமும் இல்லை. ட்ரைவரை அனுப்பி வைக்கிறேன். நீ வந்து சேரும்மா.”

“சரி ஆன்ட்டி.”

“சாப்பிட்டியா நித்திலா?”

“இல்லை ஆன்ட்டி, இனிமேல்தான்.”

“ஓகேம்மா, சாப்பிடு. ஈவ்னிங் பார்க்கலாம்.” சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார் வானதி. நித்திலா சிந்தனையோடே மீதி வேலைகளைச் செய்து முடித்தாள்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சரியாக ஆறு மணியளவில் சத்தியமூர்த்தியின் வீட்டில் இருந்தாள் நித்திலா. அதற்கு முன்பாகவே வானதி அங்கு வந்திருந்தார்.

கொஞ்ச நேரம் இவர்களோடு பேசிக்கொண்டிருந்த சத்தியமூர்த்தி, ஏதோ வேலையாக வெளியே போய்விட்டார். அந்தத் தனிமை பெண்கள் இருவருக்குமே வசதியாக இருந்தது.

“சொல்லு நித்திலா.”

“ஆன்ட்டி… நான் சொல்லப் போற விஷயத்தை நீங்க சரியாப் புரிஞ்சுக்கணும். என்னை… என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாது.” அவள் தயக்கத்தைப் பார்த்துப் புன்னகைத்தார் வானதி.

“சொல்லும்மா… என்ன சொல்லுறான் எம் புள்ளை?”

“ஆன்ட்டி… அது… வந்து…”

“நட்பையும் தாண்டிப் போகலாம் எங்கிறானா?”

“ம்…” அவள் மேலும் கீழுமாகத் தலையாட்டினாள்.

“சரின்னு சொல்ல வேண்டியதுதானே?” ஆழம் பார்த்தார் வானதி.

“அது சுயநலம் ஆன்ட்டி.”

“ஏம்மா அப்பிடிச் சொல்லுற?”

“நான் வளர்ந்த இடம், சூழ்நிலை எல்லாம் ரொம்பவே வித்தியாசம் ஆன்ட்டி. உங்க பையனால நான் சுகப்படலாம். ஆனா, என்னால அவங்க சுகப்படுவாங்களான்னு கேட்டா… எனக்கு அதுக்குப் பதில் தெரியாது ஆன்ட்டி. கவிஞரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க நல்லா இருக்கணும்.” நித்திலாவின் பேச்சில் கண்கள் கலங்கின வானதிக்கு.

“நித்திலா! இந்த எண்ணம் ஒன்னு மட்டும் போதுமேம்மா.‌ இதை விட என்ன தகுதி வேணும் உனக்கு?”

“ஆன்ட்டி… ப்ராக்டிகலா யோசிங்க. உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது.”

“சரிம்மா. நான் ஒன்னு உன்னைக் கேக்கட்டுமா?”

“கேளுங்க ஆன்ட்டி.”

“யுகி உனக்கு ஒத்து வரமாட்டான்னு சொல்லிட்டே.”

“நான் அப்பிடிச் சொல்லலை ஆன்ட்டி”

“சரி, யுகிக்கு நீ ஒத்துவரமாட்டே… இப்போ சரியா? அப்போ நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே?” கண்கள் சுருங்கக் கேட்டார் வானதி.

“இப்போ அதுதான் ரொம்ப முக்கியமா ஆன்ட்டி? பார்க்கலாம்…” பிடி கொடுக்காமல் பதில் சொன்னாள் இளையவள்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்க அந்த ‘ப்ளாக் ஆடி’ வீட்டின் முன்னால் சர்ரென்று வந்து நின்றது. அவசரமாக இறங்கிய யுகேந்திரன் உள்ளே வந்தான். பெண்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். அவனை இங்கே இருவருமே எதிர் பார்க்கவில்லை.

“நீ இங்க என்ன பண்ணுற?” நித்திலாவைப் பார்த்துக் காட்டமாகக் கேட்டான்.

“யுகேந்திரா! என்னடா பேச்சு இது? வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்பிடித்தான் பேசுவியா?” வானதியின் கோபத்தை அவன் சட்டை செய்யவில்லை.

“எதுல வந்த?” அவன் கேள்வி மீண்டும் நித்திலாவை நோக்கி வந்தது.

“ஆன்ட்டி கார் அனுப்பி இருந்தாங்க.”

“கறுப்பன் எங்க?”

“அவரும் கூடத்தான் வந்தார்.”

“ஏன்? வரும் போது அம்மிணி ஒரு வார்த்தை எங்ககிட்ட சொல்ல மாட்டீங்களோ?” அவன் கேள்வியில் அப்பட்டமாகக் கோபம் தெறித்தது.

‘சந்திப்பதே உன்னைப்பற்றிப் பேசத்தான். இதில் உன்னை வைத்துக்கொண்டு பேசுவதா?’ நித்திலாவின் மனது ஊமையாக அழ, சட்டென்று எழுந்து கொண்டாள்.

“ஆன்ட்டி… நான் கிளம்புறேன்.”

“அங்க போய் என்னம்மா பண்ணப் போறே? இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகலாமே கண்ணு.”

“இல்லை ஆன்ட்டி, கொஞ்சம் வேலை இருக்கு. ரெண்டு நாள் ஆஃபீஸ் போகலை இல்லையா? அதை முடிக்கணும்.” வாய்க்கு வந்ததைச் சொன்னாள்.

“அப்போ சரிம்மா.” வானதியும் எழுந்து கொள்ள, வாசலை நோக்கிப் போனாள்.

நித்திலா வருவதைப் பார்த்து ட்ரைவர் முருகன் காரை எடுக்க ஓடி வந்தார். யுகேந்திரன் பார்த்த ஒரு பார்வை அவரை ஓரங்கட்டச் செய்தது.

கறுப்பனிடம் ஏதோ பேசியவன், ப்ளாக் ஆடியை ஸ்டார்ட் பண்ணினான். நித்திலாவிற்குச் சங்கடமாக இருந்தது. வானதிக்கு முன்னால் காரில் ஏறத் தயங்கிய படி அவள் நிற்க, பலமாக ஹார்னை ஒரு தரம் அடித்தான்.

திடுக்கிட்ட நித்திலா வானதியைத் திரும்பிப் பார்க்க, ‘ஏறு’ என்பது போல சைகை காட்டினார். சட்டென்று ஏறி உட்கார்ந்தாள்.

“ஏன்? மேலிடம் அனுமதி குடுத்தாத்தான் எங்க கூட வருவீங்களோ?” அப்போதும் அவன் குரலில் சூடிருந்தது. நித்திலா தலையைக் குனிந்து கொண்டாள்.

நன்றாக இருட்டியிருந்தது. வழிநெடுகிலும் இருந்த அடர்ந்த காட்டு மரங்கள் மேலும் அந்த இடத்திற்கு இருள் சேர்க்க, பயணம் அத்தனை இதமாக இருந்தது.

சீ டி ப்ளேயரை ஆன் பண்ணினான் யுகேந்திரன். ‘கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே…’ பாடும் நிலா உருகிக் கரைந்து கொண்டிருந்தார்.

நித்திலா நன்றாகச் சாய்ந்து அமர்ந்தாள். கன்னத்தை வருடிய சுகமான குளிர்ந்த தென்றல் நாசியையும் நிரப்பியது. ஆழ்ந்து மூச்செடுத்துக் கொண்டாள்.

அந்தக் கணம் அத்தனை இன்பமாக இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்தவனின் அருகாமை அவளை இன்பத்தின் எல்லைக்குக் கூட்டிச் சென்றது.

கார் சட்டென்று நிற்கவும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் பெண். கைகள் இரண்டையும் தலைக்கு அணையாகக் கொடுத்து சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான் யுகேந்திரன்.

“என்னாச்சு கவிஞரே?”

“அதான் அம்மிணி ரொம்பவே ரசிக்கிறீங்களே. கொஞ்சம் நிதானமாப் போகலாம்.” அவள் முகம் பார்த்து மனம் படித்தான். குரலில் இப்போது சிரிப்பிருந்தது.

“ஒரு வாக் போகலாமா கவிஞரே?” ஆவலாகக் கேட்டாள்.

“இல்லையில்லை. அது சேஃப் கிடையாது. இன்னொரு நாள் பகல்ல போகலாம்.”

“இந்த இருட்டுல, யாருமில்லாத அமைதியில நடந்தாத்தான் சுகமா இருக்கும்.” அவள் ரசித்துச் சொல்லவும், திரும்பிப் பார்த்து முறைத்தான் யுகேந்திரன்.

“ஓகே ஓகே… பகல்லயே போகலாம்.” அவசரமாகச் சொல்லிவிட்டு முகத்தை அந்தப் புறமாகத் திருப்பிக் கொண்டாள்.

‘யப்பா! என்னமாக் கோபம் வருது. வானதி ஆன்ட்டி எப்பிடித்தான் சமாளிக்கிறாங்களோ?’ மனதுள் ஆச்சரியப்பட்டவளுக்கு அப்போதுதான் அந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் கல்லூரி விழா ஞாபகத்திற்கு வந்தது.

“கவிஞரே! நானே உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்னு நினைச்சேன்.”

“என்னது?” சாய்ந்து இருந்தபடியே கேட்டான் யுகேந்திரன். பொள்ளாச்சியின் ஒரு பிரபலமான கல்லூரியின் பெயரைச் சொன்னவள்,

“இந்த ஞாயிற்றுக்கிழமை அந்தக் கல்லூரியில ஒரு விழா நடக்குது. அதுக்கு என்னை சீஃப் கெஸ்டாக் கூப்பிட்டிருக்காங்க.” என்றாள்.

“வெரிகுட். கார் அனுப்புறேன். பத்திரமா போய்ட்டு வரணும் புரியுதா?”

“ம்…”

“ஏன்? எங்களையெல்லாம் கூட கூட்டிட்டு போக மாட்டீங்களா?”

“கவிஞரே! அது லேடீஸ் காலேஜ்.”

“அதுக்குத்தான் கூட வர்றதே. கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்குமில்லை.” அவன் பேச்சில் விழிகள் தெறிக்கத் திரும்பிப் பார்த்தாள் நித்திலா.

“கவிஞரே! உங்க மேல நான் எவ்வளவு மரியாதை வைச்சிருக்கேன். நீங்க இப்படிப் பேசலாமா?” என்றாள் குறையாக.

“ம்… தப்பு அங்கதான் இருக்கு. யாருக்கு வேணும் உங்க மரியாதை? ஏதோ வானத்திலிருந்து குதிச்சு வந்தவன் மாதிரி ஏன் பார்க்குறீங்க?”

“…..”

“சாதாரண மனுஷன் அம்மிணி. காதல், பாசம், அன்பு எல்லாம் இயற்கையா வர்ற சாதாரண மனுஷன்.” சற்று அழுத்தமாகச் சொன்னவன்,

“இதெல்லாம் எங்க உனக்குப் புரியப்போகுது.” என்றான் முணுமுணுப்பாக.

“ஆமா! எங்களுக்குப் புரியாதுதான். ஐயாக்கு வாலிபம் திரும்புதுன்னு நினைப்பு. அரைக்கிழவன், இவருக்கு காலேஜ் கேக்குது.” அவனைப் போலவே அவளும் வாய்க்குள் முணுமுணுத்தாள்.

“ஏய்! என்ன சொன்ன? அரைக்கிழவனா? யாருடி கிழவன்? சரின்னு ஒரு வார்த்தை சொல்லு. அதுக்கப்புறம் உனக்கு நான் காட்டுறேன், நான் கிழவனா, வாலிபனான்னு.” அவன் சவால் விடவும் வெளிப்பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். புன்னகை ஒன்று முகத்தில் பூத்திருந்தது.

“அதுசரி… என்னமோ சொல்ல வந்தியே, அதைச் சொல்லு அம்மிணி.”

“அட ஆமா, அதை மறந்து போய்ட்டேன் பார்த்தீங்களா? ஃபங்ஷன்ல ஸ்பீச் பண்ணணுமே… என்ன பேசுறது?” முகத்தில் ஒரு சலிப்பிருக்க சிணுங்கலாக வந்தது அவள் குரல். அவளின் சேட்டையை ரசித்துப் பார்த்திருந்தான் யுகேந்திரன்.

“எனக்கு உங்களை மாதிரியெல்லாம் பேச வராது கவிஞரே. ப்ரெஸ்ஸுக்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ணுறது தான் நமக்கு சுலபமா வரும்.”

உதட்டைச் சுழித்தபடி அவள் பேசிக்கொண்டிருக்க, அந்த முகத்தையே மொய்த்திருந்தது யுகேந்திரனின் பார்வை. தன் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்த பெண் அதை உணரவில்லை.

“என்ன டாபிக்ல பேசலாம் கவிஞரே?” அவள் குரலில் கலைந்தவன், சற்று நேரம் சிந்தித்தான்.

“ம்… நித்திலா, காலேஜ் பசங்க என்கிறதால மோஸ்ட்லி எல்லாருக்கும் ஓட்டுப் போர்ற உரிமை இருக்கும். இளைஞர்கள் மத்தியில இன்னைக்கு அதைப் பத்தின விழிப்புணர்வு ரொம்பவே குறைஞ்சிக்கிட்டு வருது. அதைப் பத்திப் பேசு.”

“சரியா வருமா?”

“ஏனிந்தக் கேள்வி? நல்லதை யாரு வேணும்னாலும் சொல்லலாமே.”

“அப்பிடியா சொல்லுறீங்க? நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும் கவிஞரே.”

“இப்பிடி எல்லாத்தையும் ஏத்துக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும். சரி அதை விடு. பாயிண்ட் என்னன்னா… இன்னைக்கு ஓட்டுரிமை இருக்கிற எல்லா யங்ஸ்டர்ஸும் ஓட்டுப் போடுறதில்லை. அது பெரிய தப்பு.”

“ஆமா… கேட்டா இங்க அரசியல் பண்ணுற யாரையும் எங்களுக்குப் புடிக்கலைன்னு சொல்லுறாங்க.”

“அதுதான் தப்பு. பிடிக்கலைன்னு இவங்க ஓட்டைப் போடாம விடுறாங்க. ஆனா… யாரோ ஒருத்தன் அந்த ஓட்டைப் போடத்தான் போறான். அப்பிடித் தப்பான வழியில நம்ம உரிமை போறதுக்கு எதுக்கு நாம அனுமதிக்கணும்?”

“அப்போ என்ன பண்ணுறது?”

“உங்க ஓட்டை நீங்களே செல்லாத ஓட்டு ஆக்கிடுங்க. தப்பான கைக்குப் போறதை விட இது பெட்டர் இல்லையா?”

“சூப்பர் கவிஞரே!”

“அடுத்த பாயிண்ட் பெண்கள் தான். பசங்க யார் பேச்சையும் கேக்கிறதில்லை. ஆனா பெண் பிள்ளைங்க அப்பா சொல்லிட்டார், அண்ணா சொல்லிட்டான், மாமா சொல்லிட்டாருன்னு அடுத்தவங்க சொல்லுறதைக் கேட்டுக்கிட்டு ஓட்டுப் போடுறாங்க. அது தப்பு. சுயமா அவங்களால சிந்திக்க முடியும்னு தானே அரசாங்கமே ஓட்டுரிமை வழங்குது. அப்புறம் எதுக்கு சொல் புத்தி. அதை நிறுத்தணும்.”

அவன் சொல்லச் சொல்ல ஒரு வாக்கின் சாதக பாதகங்களை டைரியில் சட்டென்று குறித்துக் கொண்டாள். அவளுக்குத் தோன்றிய ஒன்றிரண்டு பாயிண்ட்டை அவளும் சொல்ல சற்று நேரம் விவாதம் நடந்தது.

“இன்னொரு விஷயம் பணம் வாங்குறது.”

“இல்லை சார். அந்த விஷயத்துல பெண் பிள்ளைங்களைக் குறை சொல்ல முடியாது.”

“இரு, நான் இன்னும் முடிக்கலை. குடுக்கிறவனைத் தடுக்க முடியாது. அதனால குடுத்தா வாங்கு. எதுக்கு விடணும். ஆனா, அவன் குடுத்ததை வாங்கிட்டோம்னு ஓட்டுப் போடாதே. உனக்கு யாருக்குப் போட இஷ்டமோ, அவங்களுக்குப் போடு.”

“கவிஞரே, அது நம்பிக்கைத் துரோகம்.”

“அடிப்போடி… ஓட்டுக் கேட்டு வர்றவனை அதுக்குப் பின்னாடி அடுத்த எலெக்ஷன்ல தான் பார்க்கிறோம். இதுல இவ நியாயம் பேசுறா.”

“ஹா… ஹா… அது வாஸ்தவம் தான். இன்னொரு விஷயம் என்னன்னா… ஓட்டுப் போடும் போது தங்களோட தலைவனை சரியா ஆராய்ந்து பார்த்து தெரிவு செய்ய மாட்டேங்குறாங்க. அதுக்கப்புறமா தலைவர் அதைப் பண்ணலை, இதைப் பண்ணலைன்னு புலம்புறாங்க. நீங்க சரியான ஆளைத் தெரிவு பண்ணி இருந்தா இந்தப் பிரச்சினை வராதில்லை.”

“கண்டிப்பா.”

“இதுலயும் முக்கியமா கிராமத்துப் புறப் பெண்கள், புருஷன் யாரைக் கை காட்டினாலும் ஓட்டுப் போட்டுர்றது. ஓட்டுப் போடும் போது புருஷன் என்ன கூடவா இருக்கான்? வீட்டுல தலையை ஆட்டிட்டு அவங்க இஷ்டத்துக்குப் போட வேண்டியது தானே.”

அவள் சொல்லி முடிக்க அவளை மேலும் கீழுமாகப் பார்த்தவன், ஒரு தினுசாகத் தலையாட்டினான். வாய் பொத்திச் சிரித்தாள் நித்திலா.

“பயங்கரமான ஆளுதான். அதுசரி… இன்னைக்கு அம்மாக்கிட்ட என்ன பேசின?” சட்டென்று டாப்பிக்கை மாற்றினான் யுகேந்திரன். நித்திலா திணறிப் போனாள்.

“அதுவும் வீட்டுக்கு வராம, தாத்தா வீட்டுல மீட்டிங். அப்போ… என்னைத் தவிர்க்கணும்னு ப்ளான் பண்ணி பேசியிருக்கீங்க.”

“அ… அப்பிடி… இல்லை…”

“வேற எப்பிடி? சரி நீயே அதைச் சொல்லு. அப்பிடி என்ன பேச்சு?”

“அது… அது…”

“உங்க மகன் அரைக்கிழவன், அவர் எனக்குச் சரியா வரமாட்டார்னு சொன்னியா?”

“ஐயையோ! நான் அப்பிடிச் சொல்லலை.”

“வேற என்ன சொன்னே?”

“உங்க பையனுக்கு நான் பொருத்தமில்லைன்னு சொன்னேன்.” அவள் குரல் உள்ளே போயிருந்தது.

“அப்பிடி நான் சொன்னேனா உங்கிட்ட?”

“சொல்லாட்டி எனக்குப் புரியாதாங்க?”

“நீ என்ன சொல்ல வர்ற நித்திலா? உம்மேல பரிதாபப்பட்டு நான் உன்னை லவ் பண்ணுறேன்னா?”

“இருக்கலாம்…”

“ஓங்கி ஒன்னு விட்டேன்னாத் தெரியும். என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே நீ? சரி, நான்தான் அனுதாபத்துல லவ் பண்ணுறேன். நீ எப்பிடி? உனக்கு எம்மேல லவ் இல்லையா?”

அந்தக் கேள்வியில் நித்திலாவின் விழிகள் அலைப்புற்றது. மனம் லேசாக நெகிழத் தொடங்கவும், தலையை வெளிப்புறமாகத் திருப்பிக் கொண்டவள் தன்னை நிதானப் படுத்தினாள்.

அவளையே பார்த்திருந்த யுகேந்திரனின் முகம் மென்மையானது. அவள் வலது கையைத் தனது கைகளுக்குள் எடுத்துக் கொண்டவன்,

“நிலா… எதுக்கு இப்பிடிப் போராடுறே? அனுதாபப் பட்டெல்லாம் காதல் வராது கண்ணம்மா.” என்றான். அந்தக் குரலில் அத்தனை காதல் இருந்தது.

“எனக்கு உங்க மேல மரியாதை இருக்கு கவிஞரே, ஒத்துக்கிறேன். ஆனா, காதல் இல்லை.” திராவகமாக வந்து விழுந்தது அவள் வார்த்தைகள்.

“வாட்! கம் அகெய்ன்!” அவன் குரலில் ஆச்சரியம் இருந்தது.

“உங்க மேல எனக்கு லவ் இல்லைன்னு சொன்னேன் கவிஞரே!” கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள் உறுதியாகச் சொன்னாள்.

“அதை என் கண்ணைப் பார்த்துச் சொல்லு பொண்ணே!” அவன் குரலில் ரௌத்திரம் இருந்தது. இருந்தாலும், நித்திலா அச்சப் படவில்லை. திரும்பி அவன் கண்களை நேராகப் பார்த்தவள்,

“உங்க மேல லவ் இல்லைன்னு சொன்னேன்.” என்றாள் நிதானமாக.

அவள் சொல்லி முடிக்கவும் அவனுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ? அவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்திழுத்து அந்த செவ்விதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

சில நொடிப் பொழுதுகளைத் தனதாக்கியவன் அதே வேகத்தோடு அவளைத் தன்னிடமிருந்து பிரித்தான்.

“இப்போ சொல்லுடீ உனக்கு எம்மேல லவ் இல்லைன்னு… இப்போ சொல்லுடீ உனக்கு என்னைப் பிடிக்காதுன்னு… இப்போ சொல்லு… இப்போ சொல்லு… நான் நம்புறேன்.” அந்த ப்ளாக் ஆடி அதிர்ந்தது.

நித்திலா ஓய்ந்து போனாள். அவனோடு போராடுவது போதாதென்று இப்போது தன்னோடு தானே போராடுவது மிகவும் கொடுமையாக இருந்தது.

மிகவும் அண்மையில் தெரிந்த அந்தக் கண்களைச் சந்திக்கத் திராணி இல்லாமல், அந்தத் தோளைச் சரணடைந்தாள்.

ஒரு வேகத்தில் மூர்க்கத்தோடு செயல்பட்ட யுகேந்திரனுக்கு அப்போதுதான் தன் செயலின் வீரியம் புரிந்தது.

‘நானா? அதுவும் ஒரு பெண்ணிடம்? அதுவும் தான் அத்தனை மரியாதை வைத்திருக்கும் ஒரு ஜீவனிடம்?’ கண்களை இறுக மூடிக்கொண்டான்.

ஃபோன் சிணுங்கவும் அவனிடமிருந்து விலகப் போனாள் நித்திலா. அதை அனுமதிக்காதவன் அவளை அணைத்துக் கொண்டான்.

பங்கஜம் அம்மா அழைத்துக் கொண்டிருந்தார். அழைப்பை ஏற்றான் யுகேந்திரன். அடுத்த முனையில் அவர் பேசுவது நித்திலாவுக்கும் கேட்டது.

“தம்பி, அம்மிணி இன்னும் வீட்டுக்கு வரலையே?” அவர் குரலில் பதட்டம் இருந்தது.

“எங்கூடத்தான் இருக்காங்க. நீங்க பயப்படாதீங்கம்மா.”

“ஓ… அப்போ சரி தம்பி.” டக்கென்று ஃபோனை வைத்தார் பங்கஜம்.

யுகேந்திரனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எப்போதும் நிதானமாக இருப்பவன் அன்று அவள் விஷயத்தில் தடம் புரண்டிருந்தான்.

அவன் கட்டை விரல் அவள் இதழ்களை மெதுவாக வருடிக் கொடுத்தது. அவன் வருடலில் சிலிர்த்தது நித்திலாவிற்கு. அவள் மேனியிலோடிய சிலிர்ப்பை உணர்ந்த யுகேந்திரன் அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

“சாரி கண்ணம்மா. ரியலி சாரி. நான் அப்பிடி நடந்திருக்கக் கூடாது. சாரி.” அவன் இறைஞ்சிய போதும் நித்திலா எதுவும் பேசவில்லை.

“உன் விஷயத்துல மட்டும் நான் ஏன் இப்பிடி நிதானம் இழக்கிறேன்னு எனக்கே புரியலை. சாரி… சாரிடா…” அவன் அத்தனை சாரி சொன்ன போதும் அமைதியாகவே இருந்தாள். வீடு வந்து சேர்ந்த பிறகும் நித்திலா பேசவில்லை.

குற்றம் செய்த பிள்ளை தாயின் முகத்தை முகத்தைப் பார்ப்பது போல யுகேந்திரன் அவள் ஒரு பார்வைக்காகக் காத்திருந்தான்.

ம்ஹூம்… அவள் இளகவேயில்லை.

 

error: Content is protected !!