anima27

anima27

அணிமா 27

 

சுபாவின் வேதனையைக் காணச் சகிக்காதவனாக, ஈஸ்வர், “அப்பா! சுபா நம்ம வீட்டு பொண்ணுப்பா! நம்மள தலை குனிய வைக்கிற மாதிரியான செயலை, அவ எப்பவுமே செய்ய மாட்டா!

 

 

 

நான் என் தங்கையை புரிஞ்சி வெச்சிருக்கிற வரைக்கும், அவளோட எல்லைக் கோட்டை தாண்டி அவ போகவே மாட்டா…

 

 

 

அதனால அவ விருப்பப் படி, அவ வேலைக்குப் போகட்டும்… தடுக்காதீங்க!” என்று அவளுடைய மனோ திடம் குறையாமல் இருப்பாள் என்று முழுமையாக நம்பி, ஈஸ்வர் தந்தையிடம் சகோதரிக்காக வாதாடவும்,

 

 

 

“நீ சொல்றதால, ஒத்துக்கறேன், ஆனாலும் எனக்கு என்னவோ சரியாய் படல! பார்த்து கவனமா நடந்துக்கச்சொல்லு!” என்று விட்டேற்றியாய் சொல்லிமுடித்து, விருட்டென அங்கிருந்து சென்றுவிட்டார் பரந்தாமன்.

 

 

 

அடுத்த நொடியே, அவளுடைய முகம் பிரகாசிக்க, “தேங்க்ஸ் டா ஈஸ்வர்! என்ன இருந்தாலும், நீ அப்பாவுக்கு ரொம்ப ஸ்பெஷல், அதனால்தான் நீ கேட்ட உடனே ஒத்துக்கிட்டாங்க” என்றாள் சுபா.

 

 

 

அதற்கு, “அவர் ஒண்ணும் முழு மனசோட சம்மதிக்கல… நீ கொஞ்சம் கவனமா நடந்துக்கோ… கார்ப்பரேட் கல்ச்சர் அப்படிங்கிற பேருல, நம்ம பழக்க வழக்கங்களே மாறிப் போய், நிறையப் பேர் இந்த கைலாஷ் மாதிரி, திரியறாங்க. ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் சுபா!” என்று ஈஸ்வர் சொல்லவும்,

 

 

 

“எனக்காக நீ இவ்வளவு யோசிக்கற, செய்யற… அதனால உன் நன்மைக்காக ஒண்ணு சொல்றேன்… எனக்கு இப்பவே நாற்பதாயிரம் சம்பளத்துல வேலை கிடைச்சிடிச்சு.

 

 

 

ஆனால் உன் நிலைமை?!

 

 

 

இப்ப நம்ம ஊர் இருக்கும் நிலைமையில் இந்த விவசாயமெல்லாம், சரிப்பட்டு வராது…

 

 

 

நீ எம்.எஸ்.சி… முடிச்சு, அதுக்கு பிறகு, ரிசெர்ச் ஸ்டடி பண்ணி, விவசாயத்தை முன்னேற்ற நினைக்கிறதெலாம், கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து கொக்கு பிடிக்கிற சமாச்சாரம்.

 

 

 

நீ சம்பாதிக்கிற பாதி பணத்தை, அக்ரிகல்ச்சர் ரிசெர்ச் சம்பந்தப் பட்ட புக்ஸா வாங்கி அழிக்கற…

 

 

 

வேற நல்ல லைன்ல கொஞ்சம் பணம் சம்பாதிக்கிற வழியை பாரு ஈஸ்வர்!” என்று தனக்கு நன்மை என்று தோன்றியதைச் சுபா சொல்லவும், அதில் கோபம் வரப்பெற்றவனாக…

 

 

 

“உனக்கு பிடிச்சதை நீ செய்யற இல்ல! அதுமாதிரிதான் எனக்கு இதுதான் பிடிக்கும்! இந்த திருக்குறளை கேள்வி பட்டதில்ல நீ!

 

 

 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

 

தொழுதுண்டு பின்செல் பவர்.

 

 

 

அவ்வளவு உன்னதமான ஒரு விஷயத்தை… எவ்வளவு கேவலமா பேசுற…

 

 

 

பணம் சம்பாதிப்பதுதான் முக்கியம்னா… இந்த முறையிலும் பணம் சம்பாதிக்க முடியும். என்ன கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.

 

 

 

பொண்ணுங்களுக்கு இருபத்தி ரெண்டு, இருப்பது மூணு வயசுலேயே கல்யாணம் செஞ்சி கொடுத்துடறாங்க… ஆனால் பசங்களுக்கு அப்படி இல்லை…

 

 

 

உங்களுக்கு ரெண்டு மூணு வயசு வித்தியாசத்துல மாப்பிளை வேணும்…

 

 

 

அதுக்காக பசங்க சீக்கிரம் ப்ரஃபஷனலா செட்டில் ஆகணும்னு பிரஷர் போடுறீங்க…

 

 

 

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ னு சொன்னார் பாரதியார்.

 

 

 

உங்களுக்கெல்லாம், விவசாயம் செய்யறவனையும், புதுசா தொழில் தொடங்கி முன்னுக்கு வர நினைக்கறவனையும் பார்த்தால் அம்பாளையவே தெரியாது…” என்று அவள் முதலில் சொன்ன வார்த்தைகளுக்காக, குத்தி காண்பித்தவன்…

 

 

 

நான் இப்படித்தான்… நீ உன் வேலையைப் போய் பார்!” என்று  காரமாகச் சொல்லவும்…

 

 

 

“நீ ப்ராக்டிகலா இல்லாமல்,  இப்படியெல்லாம் பேசிட்டு இருந்தால்… உன்னை ஒருத்தியும் கட்டிக்க மாட்டா…” என்று நாவை அடக்காமல் சுபா சொல்லிவிட,

 

 

 

“பரவாயில்லை… கல்யாணம் மட்டும்தான்  வாழ்க்கையின் டெஸ்டினேஷன் பாயிண்ட் இல்ல… கருணாவோட பெரியப்பா இல்ல…

 

 

 

அதே மாதிரி… உனக்கோ இல்ல ஜீவிக்கோ குழந்தை பிறந்தால், அவங்களையே என் சொந்த குழந்தைகளாக நினைச்சுகிறேன்…” என்று வருத்தத்துடன் ஆனாலும் திண்ணமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஈஸ்வர்.

 

 

 

அனைத்தையும் அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அம்மா பாட்டி இருவரும் அப்படிப் பேசியதற்காகச் சுபாவை வறுத்து எடுத்தனர்.

 

 

 

ஒரு வாரத்திற்குப் பிறகு, வயதின் கோளாறில், ஏதேதோ கற்பனையுடன், பெங்களூரு நோக்கிப் பயணப்பட்டாள் சுபா.

 

 

 

அவளை அங்கே பத்திரமாகக் கொண்டுபோய் விட்டுவிட்டு, அவளுடைய தங்கும் இடம், உடன் வேலை செய்பவர்கள் என, அனைத்தையும் பார்த்து அறிந்துகொண்டு அங்கிருந்து சென்னை சென்றனர் ஈஸ்வரும் கருணாகரனும்.

 

 

 

முதல் முறை பள்ளி செல்லும் குழந்தைக்குச் செய்வதுபோல், ஈஸ்வர் அங்கே வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், பரந்தாமனின் கோபத்திற்குப் பயந்து அதைப் பொறுத்துக்கொண்டாள் சுபா.

 

 

 

அந்த பயணம் முழுமையிலும், புது வித உணர்வு தாக்க… சுபாவிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது கருணாகரனுக்கு.

 

***

 

புதிய ஊர். மிகவும் புதுமையான சூழல். கட்டுப்பாடற்ற சுதந்திரம், அதுவும், அவளைப் பொறுத்தவரைச்  சம்பளமாக ஒரு மிகப்பெரிய தொகை! என அந்த வாழ்க்கையை மிகவுமே ரசிக்கத் தொடங்கியிருந்தாள் சுபா.

 

 

 

அங்கேதான்  அசோக்கை அவள் முதல் முதலில் சந்தித்தாள், அவளது டீம் லீடராக. முதலில் அலுவலக ரீதியான பழக்கம் மட்டுமே இருந்தது. நாளடைவில் அது நட்பாக மாறியது.

 

 

 

அங்கே வேலைக்குச் சேர்ந்த முதல் மாதம் மட்டும், வார இறுதி நாட்கள் ‘அளத்தரை’ சென்று குடும்பத்துடன் இருந்தாள். அடுத்து வந்த நாட்களில், மற்றவர்களைப் பார்த்து ஏற்பட்ட ஆசையில், முதல் காரியமாக அவளுடைய நீளமான கூந்தல் குட்டையாக மாறியிருந்தது.

 

 

 

தொடர்ந்த நாட்களில் உடைகளிலும் மாற்றம் வந்தது. சல்வார் மட்டுமே அணிந்தவள், அங்கே வேலை செய்யும் மற்ற பெண்களைப் போன்று உடுத்த தொடங்கினாள்.

 

 

 

அவளுடைய டீம் தோழர்களுடன் சேர்ந்து, வார இறுதி நாட்களைக் கழிக்கும் ஆவலில்… ஊருக்குச் செல்வதை ஏதேதோ காரணம் சொல்லித் தள்ளிப்போடத் தொடங்கினாள்.

 

 

 

அவர்களுடன் டீம் பார்ட்டி, பிறந்த நாள் பார்ட்டி,  இரவு விருந்து என  செல்ல தொடங்கிய பின்பு, பெண்களின் போக்கைப் பார்க்கவும், முதலில் ‘திக்!’ என்றுதான் இருந்தது சுபாவிற்கு .

 

 

 

அதுவும், சா

சிகரட் பிடிப்பது, மது அருந்துவது, ஆண் நண்பர்களுடன் தனியாகத் தங்குவது என்பதைப் பார்க்கவும் பயந்தே போனாள் சுபா.

 

 

 

ஆனாலும் ஒரு சிலரைத் தவிர, எல்லோருமே அப்படி இல்லை என்பதும் புரியவும்… கொஞ்சம் தெளிவடைந்தவள், அந்த குழப்பங்களிலிருந்து தப்பிக்க ஊருக்கும் சென்றுவந்தாள்.

 

 

 

இந்த முறை சென்றபோது, கூந்தலைக் கத்தரித்ததற்காக, அம்மா மற்றும் பாட்டியிடம் அதிகப்படியான திட்டுகளையும் வாங்கிக்கொண்டாள். பரந்தாமன் அவளிடம் பேசவே இல்லை. ஜீவிதா அதைக் கண்டு மிகவும் மனம் வருந்தினாள்.

 

 

 

முதலில்  ஈஸ்வருக்குப் பயந்து, சமூக வலைத்தளங்களை அதிகம் உபயோகப் படுத்தாமல் இருந்தவள், ‘சுபா நிலா’ என்ற புனை பெயரில் உபயோகிக்கத் தொடங்கினாள்.

 

 

 

அதில் அவள் போடும் அவளுடைய படங்கள், அவளுடைய குடும்ப வட்டத்தில் யாரும் பார்க்க இயலாமல் செய்திருக்கவே, அது ஈஸ்வருக்கோ, கருணாவிற்கோ தெரியாமல் போனது.

 

 

 

மொத்தத்தில், அவளுடைய வாழ்க்கையை இருளில் மூழ்கடித்துக்கொண்டிருந்தாள் சுபா, தன்னை சுற்றி நடப்பது எதையும் உணராமல்.

 

 

 

உணர்ந்திருந்தால் அசோக் அவளிடம் காதல் என்று சொல்லிக்கொண்டு வந்து நின்றபொழுது, அதை நம்பியிருப்பாளா சுபா?

 

 

 

ஈஸ்வருக்கும் அவளுக்குமான பிறந்த நாள், என்பதினால், வார இறுதி நாட்களுக்கு முன்பாக இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, நான்கு நாட்கள் ஊருக்குக் கிளம்பினாள் சுபா.

 

 

 

அதற்கு முந்தைய தினம்,  அவளை ‘டின்னர்’ ருக்கு என்று சொல்லி வற்புறுத்தி, ஒரு நட்சத்திர விடுதிக்கு அழைத்து வந்திருந்தான் அசோக்.

 

 

 

அவர்கள் உணவு உண்டு முடித்ததும், அவன் அருந்தியிருந்த மதுவின் போதையைத் தாண்டிய ஒரு போதை கண்களில் தெரிய,  “உன் பர்த்டே அன்னைக்கு, நீ இங்கே இருந்தால், நான் அன்னைக்கு உனக்கு இந்த கிஃப்ட்டை கொடுத்திருப்பேன்.  ஊருக்குப் போவதால், இப்போதே கொடுக்கறேன்…” என்று சொன்னவன், அவளுடைய கையை பிடிக்க, அதில் அவள் அதிர்ந்த நொடி, ஒரு அழகிய மோதிரத்தை அவளுடைய விரலில் அணிவித்து… “அட்வான்ஸ்ட் ஹாப்பி பர்த்டே ஏஞ்சல்! வித் லோட்ஸ் ஆஃப் லவ்” என்று அவளை நெகிழவைக்கும் விதமாக அவன் சொல்லவும், பயத்தில் உடல் நடுங்கிப்போனாள் சுபா.

 

 

 

அவளுடைய நடுக்கத்தைக் கண்களில் குறித்துக்கொண்டவன், “நீ ஊருக்கு போயிட்டு வந்து எனக்குப் பதில் சொல்லு போதும்! உனக்காக நான் காத்துட்டு இருப்பேன்!” என்று ஏக்கமான குரலில் சொல்லி முடித்தான்.

 

 

 

எப்படி அவளுடைய விடுதிக்கு வந்தாள், எப்படி ஊருக்கு வந்து சேர்ந்தாள் என்பதுகூட புரியாத மன நிலையில்… வீட்டில் இருந்தாள் சுபா.

 

இந்த முறை ஈஸ்வர் ஊருக்கு வரும்பொழுது, கருணாவும் அவனுடன் வந்திருந்தான். எதாவது குடும்ப விழா தவிர, வேறெதற்கும் அங்கே வராதவன், அதிசயிக்கும் விதமாக வந்திருக்கவும் அனைவருக்குமே ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஈஸ்வருக்குமே இது புதிதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி அதிகம் ஆராயாமல் விட்டுவிட்டான்.

 

 

 

ஈஸ்வர், சுபானு இருவரது பிறந்தநாள் அன்று, குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வந்து, பெரியவர்களிடம் ஆசி பெற்று, அதன் பின் வீட்டில் சாருமதி தடபுடலாகத் தயாரித்திருந்த உணவை உண்டு, அந்த நாளை கொண்டாடினர்.

 

 

 

ஈஸ்வர், பிறந்தநாளுக்கென, சுபாவுக்கு ஒரு புடவையைப் பரிசாகக் கொடுக்க, மகிழ்ச்சியாக இருந்தது சுபாவிற்கு. ஜீவிதாவிற்கும் லெஹெங்கா ஒன்றை வாங்கி வந்திருந்தான் அவன்.

 

 

 

அப்பொழுதுதான், தான் அவனுக்கு பரிசாக எதையுமே வாங்கிவரவில்லை என்பதையே உணர்ந்தாள் சுபா. முதல் முதலாக அவள் மனதில் தான் தவறு செய்கிறோமோ என்ற எண்ணம் தோன்றி, அவளைக் கொன்றது.

 

 

 

அங்கே வந்தது முதலே, கருணாகரனின் பார்வை, சுபாவையே தொடர்ந்துகொண்டிருக்க… அவள் இருந்த குழப்பமான மனநிலையில் அதைக் கவனிக்கவில்லை. ஆனால் அதைக் கவனித்த ஈஸ்வர்தான் குழம்பிப்போனான்.

 

 

 

அவனால் நண்பனிடம் கோபப்படவும் இயலவில்லை. அதே நேரம், அதை அப்படியே விட்டுவிடவும் மனமில்லை.

 

 

 

சுபா விடுப்பு முடிந்து பெங்களூரு சென்றுவிட, சென்னை வந்தனர் ஈஸ்வர் மற்றும் கருணாகரன் இருவரும். அடுத்த நாள் உடற்பயிற்சி செய்யும் சமயத்தில் ஈஸ்வர், கருணாகரனிடம் சுபா குறித்துக் கேட்டுவிட, “ஆமாம் டா மச்சான்! எனக்கு உன் தங்கையை பிடிச்சிருக்கு! அவள் எனக்கு மனைவியா வந்தால், நான் ரொம்ப சந்தோஷ படுவேன்!” என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டான் கருணா.

 

 

 

அவனுடைய குடும்ப அந்தஸ்தை எண்ணி அதிர்ந்த ஈஸ்வர், “நீ என்ன இவ்வளவு ஈஸியா சொல்லிட்ட! நிம்மி அத்தை வேணா இதுக்கு சம்மதிக்கலாம்…

 

உங்க பெரியப்பா ஒத்துப்பாரா? இதெல்லாம் சரியா வராது! விட்டுடு!” என்று ஈஸ்வர் சொல்லிக்கொண்டே போக, அவனை கை நீட்டித் தடுத்த கருணா,

 

 

 

“லூசாடா நீ! எங்க பெரியப்பாவை பத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசற! அவரு எப்பவுமே மனசுக்கு மரியாதை கொடுக்கிறவர் தெரியுமா? அதுவும் நான் ஒன்றைக் கேட்டல், கட்டாயம் மறுப்புச் சொல்லவே மாட்டார்!” என ஆணித்தரமாக சொல்லிவிட்டு,

 

“உன் மனசுக்கு சரின்னு பட்டா, நெக்ஸ்ட் டைம் சுபா இங்கே வரும்போது, அவ என்ன நினைக்கறான்னு, அவளோட விருப்பத்தை கேட்டு, என்கிட்ட சொல்லு,

 

 

 

அவளுக்கு முழு சம்மதம் என்கிற பட்சத்தில், நான் மாமாகிட்டேயும், பெரியப்பா கிட்டேயும் பேசி உங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்க சொல்றேன்…

 

 

 

அவளுக்கு விருப்பம் இல்லேன்னா என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்! ஏன்னா எதுக்காகவும் ஏங்கிட்டு வாழ்க்கையை அழிச்சுக்கற ஆள் நான் இல்லை!” என்று சொல்லி முடித்தான்.

 

 

 

“நீ இவ்வளவு தூரம் சொல்லும்போது, நான் என்ன சொல்ல போறேன்! ஓகே தாண்டா மாப்ள!” என்று அவனை அணைத்துக்கொண்டான் ஈஸ்வர். எப்படியும் சுபா மறுப்பு சொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையில்.

 

 

 

பெங்களூரு சென்ற அடுத்த தினமே, அலுவலகத்திலேயே அவளுடைய பதிலுக்காக அவளை நச்சரிக்கத் தொடங்கினான் அசோக். அவளுடைய தந்தையின் வார்த்தைகள் மனதில் தோன்றி அச்சத்தை ஏற்படுத்த, அதன் பின்விளைவுகளைப் பற்றி அறிந்தவளாக, அவள் பலவாறாக மறுத்தும், பேசி பேசியே அவளைக் கரைத்தான் அவன்.

 

 

 

திடமான மனநிலை இல்லாத காரணத்தால், ஒரு சூழ்நிலையில் அவனது காதலை ஏற்றுக்கொண்டாள் சுபா.

 

 

 

அதைச் சாதகமாக எடுத்துக்கொண்டவன், ஓரிரு மாதங்களிலேயே,  ஒன்றாக வெளியில் செல்வது தவறில்லை, சாதாரண அணைப்புகள் தவறில்லை, எல்லை தாண்டாத முத்தங்கள் தவறில்லை, கொஞ்சமாக மது அருந்துவது கூட தவறில்லை என்ற நிலைக்கு அவளைக் கொண்டுவந்திருந்தான். அவளை அதற்குப் பழக்கியும் இருந்தான்.

 

 

 

ஒரு நாள், நண்பர்களுடன் சென்ற பார்ட்டியில், மற்ற பெண்களுடனான, அவனுடைய அத்துமீறல்களைப் பொறுக்கமுடியாமல், பாதியிலேயே வெளியேறியவள், அவளது அறைக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

 

 

 

நல்ல குடும்ப பின்னணியும், பாட்டியும், அன்னையும் சொல்லிச் சொல்லி ரத்தத்திலேயே ஊறிப்போயிருந்த ஒழுக்கமும், அவளுடைய அறிவை தட்டி எழுப்ப, குற்ற உணர்ச்சியில் தவித்துப்போனாள் சுபா.

 

 

 

அப்பொழுது அங்கே வந்த அவளுடைய டீம் தோழி சுஜாதா, அவளுடைய நிலை புரிந்தாற்போன்று, “நீ நினைக்கிற அளவுக்கு, அந்த அசோக் ஒண்ணும் உன்னை உண்மையா லவ் பண்ணல! அவனுக்கு இதெல்லாம் ஒரு டைம் பாஸ். தெரிஞ்சே நிறைய பேர் அவனோட சுத்தறாங்க.

 

ஆனால் நீ அப்படி இல்ல.  இதை நான் முன்பே உன்னிடம் சொல்லியிருக்கணும்… ஆனால் அவனுக்குத் தெரிந்தால், என்னோட ‘அப்ரைசல்’ல கையை வெச்சிடுவானோ என்கிற பயத்தில்தான் சும்மா இருந்தேன்!

 

என்னோட மனசு கேக்காம சொல்லிட்டேன்! இனிமேலாவது கேர்ஃபுல்லா இரு!” என்று அவளை எச்சரிக்கும் விதமாகச் சொல்லி முடித்தாள்.

 

 

 

அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த ப்ராஜக்ட் முடிந்திருந்த நிலையில், விடுப்பு எடுத்துக்கொண்டு அன்னையின் அரவணைப்பைத் தேடி ஊருக்கு வந்தாள் சுபா.

 

 

 

அவள் அங்கே வந்திருப்பதை அறிந்து, அவளிடம் பேச அங்கே வந்தான் ஈஸ்வர். இரு தினங்களில், அவளுடைய மனம் சற்று தெளிவடைந்திருந்தாள்.

 

 

 

கருணாகரனின் விருப்பத்தைப் பற்றி ஈஸ்வர் அவளிடம் சொல்லி, அதற்கு அவளுடைய சம்மதத்தைக் கேட்கவும், மிகவும் மனம் வருந்தினாள் சுபா.

 

 

 

கருணாகரன் போன்ற ஒருவனை வேண்டாம் என்று சொல்லவும் மனம் வரவில்லை அவளுக்கு.

 

 

 

தொண்டையில் சிக்கியிருக்கும் கடந்த காலத்தின் கசப்புகளை விழுங்கவும், வேலையிலிருந்து விடுபடவும், கால அவகாசம் தேவைப் பட்டது அவளுக்கு.

 

 

 

“எனக்கு ஒன் மந்த் டைம் வேணும் ஈஸ்வர். நான் யோசிச்சு சொல்றேன்!” என்று சொன்னாள் சுபா. அவள் இருக்கும் சூழ்நிலை தெரியாமல், அவள் எப்படியும் சம்மதம் சொல்லுவாள் என்ற நிம்மதியுடன் சென்னைக்குப் போனான் ஈஸ்வர்.

 

 

 

சுபா சொன்னதுபோலவே, ஒரு மாதம் கடந்து அங்கே திரும்ப வந்தவள், ஈஸ்வரைக் கைப்பேசியில் அழைத்து, கருணாகரனுடனான அவளுடைய திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். அவளுடைய குரல் முழுமையான மகிழ்ச்சியைப் பிரதிபலித்தது.

 

 

 

நண்பனுக்கே சகோதரியைத் திருமணம் செய்துகொடுப்பதால், காலம் முழுதும் அவர்களுடைய பிணைப்பு அப்படியே இருக்கும் என்ற மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்த ஈஸ்வர் அதைக் கருணாகரனுக்குத் தெரியப்படுத்தினான்.

 

 

 

ஆனால் அந்த திருமணம் நடக்காமல், அவனுடைய நண்பனின் வெறுப்புக்கு அவன் ஆளாகப்போவதையும், ஒட்டுமொத்தமாய் அவனே அவனுடைய சகோதரியை வெறுத்து ஒதுக்கப்போவதையும் அறியவில்லை ஈஸ்வர்.

 

error: Content is protected !!