nk8

nk8

நிலவொன்று கண்டேனே 8
ஒரு வாரமாக யுகேந்திரனைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தார் வானதி. அத்தனை கலகலப்பு இருக்கவில்லை.
வேலைப்பளு என்று நினைத்திருந்தார். ஆனால், எதையோ பறிகொடுத்தது போல் அவன் உட்கார்ந்திருந்த தோற்றம் மனதை என்னவோ செய்தது.
ஒற்றைப் பையன் என்று அன்பரசு கொஞ்சினாலும், வானதி கொஞ்சம் கண்டிப்பான அம்மாதான். பிள்ளையின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்வார். ஒரு நல்ல அம்மா என்பதை விட, யுகேந்திரனுக்கு ஒரு நல்ல தோழி என்றால் சரியாக இருக்கும்.
வீட்டுக்கு முன்னால் இருந்த அந்தப் பரந்த தோட்டத்தின் புல்வெளியில் வானம் பார்த்துப் படுத்திருந்தான் யுகேந்திரன். கைகள் இரண்டும் தலைக்கு அணையாக இருந்தன.
பக்கத்தில் வந்தமர்ந்த அம்மாவைக் கூட உணராமல் வானத்தை வெறித்தபடி படுத்திருந்தான். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த வானதி லேசாக அழைத்தார்.
“யுகேந்திரா!” அம்மாவின் குரலில் கலைந்தவன், தலையைத் திருப்பிப் பார்த்தான்.
“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”
“ஒன்னுமில்லை.”
“அம்மாக்கிட்ட கூட பொய் சொல்லுவியா நீ?”
“……”
“வேலையில ஏதாவது ப்ராப்ளமா?”
“இல்லையில்லை.” அவசரமாக வந்தது பதில்.
“நித்திலா கூட சண்டை போட்டியா?”
“……” அந்த அமைதியே சொன்னது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று.
“என்ன ஆச்சு? சொல்லுப்பா. உன்னை இப்பிடிப் பார்க்க அம்மாக்குக் கஷ்டமா இருக்குப்பா.” வானதி வற்புறுத்தவும் வாய் திறந்தான் யுகேந்திரன்.
“ரெண்டு நாளாச்சு… பேசமாட்டேங்கிறா.”
“ஓ… வீட்டுக்குப் போய் பாரேன்.”
“ம்ஹூம்… அதுக்கு எனக்குத் தைரியம் இல்லை.” மகன் பேச்சில் ஆச்சரியப்பட்டார் வானதி. அப்படியென்றால் தவறு தன் மகன் பேரில் தான் இருக்கிறது என்று புரிந்தது.
“நீ என்ன பண்ணினே?” அம்மாவின் குரலில் பேதத்தை உணர்ந்தவன் எழுந்து உட்கார்ந்தான்.
“என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டா.”
“ம்…”
“அதை என் கண்ணைப் பார்த்துச் சொல்லுடீங்கிறேன்… எந்தத் தயக்கமும் இல்லாம என் கண்ணைப் பார்த்து உன்னை எனக்குப் பிடிக்கலைன்னு கூலாச் சொல்லுறா.”
“ம்…”
“எனக்கு அப்பிடியொரு கோபம் வந்திச்சு…”
“டேய்! கோபத்துல என்னடா பண்ணினே அவளை? கை நீட்டிட்டியா?” வானதியின் குரலில் அத்தனை பரபரப்பு இருந்தது.
“இல்லை… கொஞ்சம்… உரிமை எடுத்துக்கிட்டேன்.” மகனின் பேச்சில் வானதியின் கண்கள் சுருங்கின. அந்தப் பேச்சைப் புரிந்து கொள்ள சில வினாடிகள் தேவைப்பட்டது அவருக்கு.
புரிந்தபோது… ஆத்திரத்தின் எல்லைக்கே போனார் வானதி. யுகேந்திரனுக்கு நான்கைந்து அடிகள் போட்டவர்,
“டேய்! புள்ளையாடா நீ? எம்புள்ளையாடா நீ? என்ன காரியம் பண்ணி இருக்க? எப்பிடிடா அவ உன்னை சும்மா விட்டா?” 
“அவ பேசினது மட்டும் தப்பில்லையா?”
“அவ என்னடா தப்பா சொல்லிட்டா? புடிக்கலைன்னு சொல்லி இருக்கா.”
“பொய்…”
“அதை நிரூபி.”
“அதைத்தான் பண்ணினேன்.”
“ச்சீ… உங்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை யுகேந்திரா.” 
“ரொம்பக் கற்பனை பண்ணிக்காதே வானதி.” மகனின் பதிலில் இன்னும் நான்கு அடிகள் போட்டார் அம்மா.
“பெருசாப் பண்ணினாலும், சின்னதாப் பண்ணினாலும் தப்பு தப்புதான்டா. ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவ விரல் நுனியைப் பிடிக்கிறதுக்குக் கூட உனக்கு உரிமை இல்லை. அவ உன்னோட பொண்டாட்டியா இருந்தாக் கூட.” 
ஆத்திரத்தில் சத்தம் போட்டவர் எழுந்து வீட்டை நோக்கிப் போனார். வாய் மகனை வசை பாடியபடியே இருந்தது.
“அதெல்லாம் விருப்பம் இருந்துச்சு. அதான் இழைஞ்சுக்கிட்டே இருந்தாளே.” அம்மா பக்கத்தில் இல்லை என்ற தைரியத்தில் வாய்க்குள் முணுமுணுத்தான் யுகேந்திரன்.
“உன்னையெல்லாம் இலக்கியம் பேச அனுமதிச்சது தப்பாப் போச்சு.” நடந்து போனவர் திரும்பி நின்று சாடினார்.
“ஏய் வானதி! களவு பண்ணியது உன் மகன் யுகேந்திரன் அல்ல, அவன் நித்திலாவின் காதலன்… கவிஞன்.” என்றான் சத்தமாக இங்கிருந்த படியே. 
பக்கத்தில் கிடந்த சின்னக் கல் ஒன்றைப் பொறுக்கிய வானதி அதை மகனை நோக்கி விட்டெறிந்தார். லாவகமாக அதிலிருந்து கடைசி நேரத்தில் தப்பினான் யுகேந்திரன்.
நித்திலாவுடன் பேசி ஒரு வாரம் ஆகியிருந்தது. ஃபோன் கால் எதையும் ஆன்சர் பண்ணவில்லை. நேரில் போகும் தைரியம் இவனுக்கும் இருக்கவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு போவது?
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவள் சொன்ன கல்லூரி ஃபங்ஷன் இருந்தது. மறக்காமல் ப்ளாக் ஆடியை ட்ரைவர் முருகனோடு அனுப்பி வைத்திருந்தான்.
கொத்தாக குண்டு மல்லிச் சரத்தை ட்ரைவரின் கையில் கொடுத்து கூடவே சின்னதாக ஒரு கார்டையும் கொடுத்திருந்தான். கார்டில்,
‘கட்டுக்குள்ளே நிற்காது திரிந்த காளையைக் கட்டிவிட்டு கண் சிமிட்டும் சுந்தரியே.’ என்று எழுதியிருந்தான்.
ட்ரைவர் அதைக் கொடுத்த போது மறுக்காமல் வாங்கிக் கொண்டாளாம். யுகேந்திரனுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
‘அண்ணா… சப் கலெக்டர் ஃபங்ஷனுக்குப் போகும் போது பூ வெச்சிருந்தாங்களா?’ தயக்கத்தோடே கேட்டான். முருகனுக்கு வாய் கொள்ளாச் சிரிப்பு.
‘தம்பீ… அம்மிணி தலை நிறையப் பூவாத்தான் இருந்துச்சு.’ சொல்லிய போது அவர் குரலில் அத்தனை குறும்பு. யுகேந்திரனின் முகம் லேசாகச் சிவந்து போனது.
இப்போது நினைத்த போதும் யுகேந்திரனுக்குச் சிரிப்பு வந்தது. மீண்டும் வானம் பார்த்துப் படுத்துக் கொண்டான்.
ராட்சஸி… மனம் நிறைய ஆசையை வைத்துக் கொண்டு என்னை இம்சிக்கிறாள். என் மேல் பிரியம் இல்லையென்றால் எதற்கு நான் கொடுத்த பூவை வைத்துக் கொண்டாளாம்?
நாடகக்காரி… எத்தனை நாட்களுக்கு அவளால் நடிக்க முடிகிறது என்று நானும் பார்த்து விடுகிறேன். என்னை விட்டுவிட அவளால் முடியுமாமா?
தப்புதான்… நான் பண்ணியது தப்புதான். இல்லையென்று சொல்லவில்லையே. அதற்கு எத்தனை முறைதான் மன்னிப்புக் கேட்பது? 
என்னை மன்னிக்க மாட்டாளாமா அந்த அக்கிரமக்காரி? இப்படி இன்னொரு பெண்ணிடம் என்னால் நடக்க முடியுமா? இல்லை, அவள்தான் இது போல ஒரு தவறை இன்னொருவர் செய்ய அனுமதிப்பாளா?
தான் வாழ்க்கையில் செய்த அந்த இனிமையான தவறை ஒரு முறை அசை போட்டுப் பார்த்தான் யுகேந்திரன். அவளால் மட்டுமே கொடுக்க முடிந்த அந்த சுகத்தை மனம் இன்னொரு முறை அவளிடம் யாசித்தது.
ஃபோனை எடுத்தவன் வேண்டுமென்றே அவளிடம் வம்பு வளர்த்தான். எப்போதோ படித்தது ஞாபகம் வர வாட்ஸ்அப்பில் நான்கைந்து வரிகளை டைப் பண்ணி அவளுக்கு அனுப்பி வைத்தான்.
‘அன்று ஏன் பெண்ணே கண்களை மூடிக் கொண்டாய்? நடந்த தவறுக்கு சாட்சிகள் வேண்டாமென்றா? ஆஹா! அப்படியென்றால் என்னிரு கண்களை என்ன செய்யப் போகிறாய்?’
இதைப் படித்ததும் அவள் முகம் கோபத்தில் சிவந்து போகும் என்று யுகேந்திரனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதைப் படித்து விட்டு நித்திலா வாய்பொத்தி அழுதது யுகேந்திரனுக்குத் தெரியாது.
மேலும் ஒரு வாரம் கடந்திருந்தது. ட்ரைவரோடு, வானதி சப் கலெக்டரின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். காரைக் கண்டதும் கூர்க்கா எந்தக் கேள்வியும் கேட்காமல் கேட்டைத் திறந்து விட்டார்.
“என்ன முருகா! என்ன ஏதுன்னு ஒன்னும் விசாரிக்கலை. அவர் பாட்டுக்குக் கேட்டைத் திறந்து விடுறார்?”
“நம்ம தம்பியோட காருக்கு இங்க அத்தனை மரியாதை அம்மிணி.” முருகனின் குரலில் அத்தனை பெருமை தெரிந்தது.
“மரியாதை மட்டும் தானா முருகா?” பத்து வருட விசுவாசி என்பதால் குடும்பக் கதைகளை இலகுவாகப் பேசினார் வானதி.
“விருப்பமும் இருக்கு அம்மிணி.”
“அப்பிடியா?”
“ஆமாங்கிறேன். அன்னைக்கு காலேஜ் ஃபங்ஷனுக்குத் தம்பி கார் அனுப்பினார். ஏறி உட்கார்ந்ததுல இருந்து இந்தக் காரைத் தடவிக் குடுத்தபடியே இருந்தாங்க.”
“ம்…”
“நானும் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். மனசு நிறைய ஆசை இருக்கு. நீங்க பெரிய இடம் எங்கிறதால சின்னம்மிணி தயங்குறாங்க.”
வானதியிடமிருந்து ஒரு பெரு மூச்சுக் கிளம்பியது. இந்த இரண்டு வாரங்களுக்குள் யுகேந்திரன் பொலிவிழந்து போயிருந்தான். மகனின் கோலம் காணப் பொறுக்காமல் தான் கிளம்பி வந்திருந்தார். அவர் வந்தது மகனுக்குத் தெரியாது.
கார் வீட்டின் முன் நிற்கவும் பங்கஜம் அம்மா ஆர்வமாக ஓடி வந்தார். வானதியைக் கண்டவுடன் அவர் முகம் மாறிப்போனது. ‘யார்?’ என்பது போல் பார்த்தார்.
“யுகேந்திரன் தம்பியோட அம்மா இவங்கதான்.” அவசரமாக அறிமுகப் படுத்தினார் முருகன். அதைச் சொன்ன மாத்திரத்தில் பங்கஜத்தின் முகம் மலர்ந்து போனது.
“அப்பிடியா? உள்ளே வாங்க அம்மிணி. நித்திலாக் கண்ணு… யாரு வந்திருக்காங்கன்னு வந்து பாரு கண்ணு.” உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தவர் வானதியை அழைத்துச் சென்று அமர வைத்தார்.
ஏதோ வேலையில் பிஸியாக இருந்த நித்திலா ரூமை விட்டு வெளியே வந்தாள். சத்தியமாக அவள் வானதியை அங்கே எதிர்பார்க்கவில்லை.
“ஆன்ட்டி! வாங்க வாங்க. எப்பிடி இருக்கீங்க?”
“ம்… நல்லா இருக்கேன்டா. நீ எப்பிடி இருக்கே?”
“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி.”
“அப்பிடித் தெரியலையே நித்திலா.” சட்டென்று வானதி சொல்லவும் நித்திலாவின் முகம் நிலம் பார்த்தது. பங்கஜம் இங்கிதம் அறிந்து உள்ளே போனார்.
இளைத்துக் கறுத்திருந்தாள். கண்ணைச் சுற்றிக் கருவளையம் இருந்தது. கூந்தலை ஏனோதானோ என்று அள்ளி முடிந்திருந்தாள்.
“என்னாச்சு நித்திலா? எதுக்கு எம்மகனை அவாய்ட் பண்ணுற?” அந்தக் குற்றச்சாட்டில் நித்திலா அண்ணாந்து பார்த்தாள்.
“ஆன்ட்டி… புரிஞ்சுதான் பேசுறீங்களா?”
“என்ன புரியலை எனக்கு?”
“ஆன்ட்டி… உங்க பையன்…” நித்திலாவிற்கு வார்த்தைகள் நொண்டி அடித்தன.
“ஆமா… என் பையன் தான். அதனால தான் இன்னைக்கு உன்னோட வாசல் தேடி வந்திருக்கேன்.”
“அது என் பாக்கியம் ஆன்ட்டி. ஆனா எம்மேல குத்தம் சொல்லாதீங்க.”
“வேற என்ன பண்ணச் சொல்லுற? அவனை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தது நீதானே? அப்போ… உன்னைத் தானே குத்தம் சொல்லணும்?”
“ஆன்ட்டி… உங்க மகன் சொல்லுற விஷயத்துக்கு என்னால கண்ணை மூடிட்டுத் தலையாட்ட முடியும்.”
“ஆட்டு… யாரு உன்னைத் தடுத்தா?”
“ஆன்ட்டி… நீங்க…” நித்திலாவின் தடுமாற்றத்தில் புன்னகைத்தார் வானதி.
“கண்ணு… நீ பண்ணுற தியாகத்தால எம் பையனுக்குப் பிரயோஜனம் இருந்தா சந்தோஷம். அது இல்லைங்கிறப்போ எதுக்கு இந்த வேதனை? நீயும் கஷ்டப்பட்டு, அவனையும் கஷ்டப்படுத்தி…”
வானதி பேசப்பேச நித்திலா தலையைக் குனிந்து கொண்டாள். மனதில் இருந்த வலி கண்ணீராகச் சிதறியது.
“யுகியைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் நித்திலா. உன்னை அவன் விட்டுக்குடுக்க மாட்டான். அப்பிடியிருந்தா, இந்த ரெண்டு வாரத்துல அவங்கிட்ட ஏதாவது மாற்றம் தெரிஞ்சிருக்கும்.”
“……..”
“எம்புள்ளை எதையோ பறிகுடுத்தவன் மாதிரி உட்கார்ந்திருக்கான். என்னால அவனை இப்பிடிப் பார்க்க முடியலைம்மா.”
“நான் எல்லாரோட நன்மையையும் யோசிச்சேன்.” கண்ணீர்க் குரலில் சொன்னாள் நித்திலா.
“அது எனக்குப் புரியுதுடா. அதனால ஒரு லாபமும் இல்லைம்மா. காலம் முழுக்க உன்னையே நினைச்சிக்கிட்டு இருப்பானே தவிர அவன் பார்வை அங்க இங்க போகாது கண்ணு.”
“உங்க வீட்டுல இதனால பிரச்சினைகள் வரும் ஆன்ட்டி.”
“என் புருஷனைச் சமாளிக்கிறது உன் புருஷன் பாடு. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது.” வாய்விட்டுச் சிரித்தார் வானதி.
கண்களில் கண்ணீர் வழியப் புன்னகைத்தாள் நித்திலா. மனதில் பாறாங்கல்லாக உட்கார்ந்திருந்த சோகம் மாயமாக மறைந்து போயிருந்தது. அவள் கண்ணீரைத் துடைத்து விட்டார் வானதி.
“நித்திலா… யாருக்கு யாருங்கிறது ஆண்டவனோட தீர்ப்பு. அதை நம்மால ஒன்னும் பண்ண முடியாது. இனி வரப்போற காலங்கள் கொஞ்சம் கடினமானதாக் கூட இருக்கலாம்…”
வானதி ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப் பட்டவர் போல பேசினார். நித்திலா குறுக்கிடவில்லை. சற்று நேரம் சிந்தனை வசப்பட்டவர் மீண்டும் தொடர்ந்தார்.
“எத்தனை கஷ்டம் வந்தாலும் நீயும், யுகியும் உறுதியா நின்னா எல்லாத்தையும் சமாளிக்கலாம்.”
“ஆன்ட்டி…”
“ஆன்ட்டி இல்லை, அத்தை…” சொல்லிவிட்டு வானதி கண்சிமிட்ட, நித்திலா அழகாக வெட்கப்பட்டாள்.
                      •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
அந்த ஞாயிறு முக்கியமான ஒரு இலக்கியக் கூட்டம் இருந்தது யுகேந்திரனுக்கு. மனமேயில்லாமல் புறப்பட்டான்.
இருந்தாலும் மனதின் மூலையில் மெலிதாக ஒரு நப்பாசை, நித்திலா வருவாள் என்று. பார்த்தே இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது.
எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் இவன் சளைக்காமல் குறுஞ்செய்திகளை அனுப்பிய படியே இருந்தான். பார்க்க மட்டும் எந்த விதத்திலும் முயற்சிக்கவில்லை. 
இன்று அவனும் கூட்டத்தில் உரையாற்றுவதாக இருந்தது. அதனாலேயே நேரத்தோடு புறப்பட்டான். ஒரு வேளை நித்திலா வந்தால் அவளோடு பேசவேண்டும். எண்ணற்ற ஆசைகளோடு புறப்பட்டான் கவிஞன்.
அவன் ஆசைகளைப் பொய்யாக்கவில்லை பெண். கூட்டம் ஆம்பிக்க சற்றே நேரமிருந்த போது உள்ளே நுழைந்தாள். யுகேந்திரன் சந்தோஷத்தின் எல்லைக்கே போனான். 
உடம்பில் புதிதாக ரத்தம் பாய்ந்தது போல் ஓர் உணர்வு. அவளைக் கண்களால் நிரப்பிய படி, பேச்சை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளே வந்து அமர்ந்தவள் கண்களால் துளாவுவது இங்கிருந்தே யுகேந்திரனுக்குப் புரிந்தது. இருந்தாலும் மறைவாகவே நின்று கொண்டான். 
தேடட்டும்… நன்றாகத் தவிக்கட்டும். என்னை வருத்தினாள் இல்லையா? மனம் நினைத்தாலும் செயல்படுத்த முடியவில்லை அவனால். 
விழா ஒருங்கிணைப்பாளரோடு ஏதோ பேசுவது போல் பாவனை பண்ணிக் கொண்டு மேடை வரை போய் வந்தான். மறந்தும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை.
அன்று யுகேந்திரன் வித்தியாசமான ஒரு தலைப்பை எடுத்திருந்தான். ‘அறத்துடன் மருத்துவம் பேசும் தமிழ் இலக்கியம்.’
எப்போதும் போல இப்போதும் அவன் குரல் எல்லோரையும் வசீகரிக்க, நித்திலாவும் இமைக்காமல் அவனைப் பார்த்திருந்தாள். 
“சங்க காலத்தில் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைப் படுத்தி இருந்தனர். இதை நாமறிவோம். இந்த ஐவகை நிலங்களுக்கும் ‘உரிப்பொருள்’ என்று ஒவ்வொன்றைச் சுட்டி இருந்தனர்.” சபை ஆழ்ந்து கேட்டிருந்தது.
“உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சி என்பது குளிர்ப்பாங்கான மலைப்பகுதி. ஆதலால் தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே ‘புணர்தல்’ என்பது அங்கு உரிப்பொருள்.”
நித்திலா லேசாக நெளிந்தாள். யுகேந்திரன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். இவளுக்காக இலக்கியத்தை மாற்ற முடியுமா என்ன?
“முல்லையில், கூடிக்களித்த அவர்கள் திருமணம் புரிந்து நிலையாகக் குடிபுகுந்து இல்லறம் நடத்துவர் என்பதால் அதன் உரிப்பொருள் ‘இருத்தல்’. அதே போல மருதத்தின் உரிப்பொருள் ‘ஊடல்’ இதுவே மிகவும் விசேஷமாக இலக்கியங்களில் பேசப்பட்டுள்ளது.”
“இலக்கியத்தில் ஊடலுக்கா பஞ்சம்?” முன் வரிசையில் இருந்த பழுத்த பழம் ஒன்று கேட்கவும், தலையசைத்து ஆமோதித்தான் யுகேந்திரன்.
“அடுத்து நெய்தலின் உரிப்பொருள் ‘இரங்கல்’. இங்கு பிழைப்புக்காக மீன் பிடிக்கவோ, முத்து எடுக்கவோ கடலில் சென்ற தலைவனுக்காக கவலைப் பட்டிருப்பாள் தலைவி. பாலை நிலம் வரண்ட பூமி. அங்கு பிழைக்க வழியின்றி பொருள் ஈட்டுவதற்காக தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான். அதனால் அங்கு ‘பிரிதல்’ உரிப்பொருள்.” 
“ஆஹா!” அதே முன்வரிசையில் இருந்து மீண்டும் ஒரு குரல்.
“தலைவனும் தலைவியும் கூடிக்களித்தாலும் ஊடலும், பிரிதலும் தான் சுவைபடச் சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் காதல் கொண்டவர்களுக்கே உரித்தான பசலை நோய்.” யுகேந்திரன் தொடர்ந்தான்.
“பசலை என்பது உணவு உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். நாளடைவில் விழி குழிவெய்தி, மேனி இளைத்து, கறுத்துப் போவர். இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர்.”
இந்த விளக்கம் நித்திலாவிற்குப் புதிது. பசலை நோயென்று கேள்விப்பட்டிருந்தாலும் இத்தனை விளக்கம் தெரியாது.
“இதில் விசேஷம் என்னவென்றால், நோயைச் சொன்ன இலக்கியம் அதற்கு மருந்தையும் சொல்லி இருக்கிறது. நோயே மருந்தும் ஆவது காதலில் தானே! மருந்தால் குணப்படுத்த முடியாத இந்தக் கொடிய நோய்க்கு மருந்து, ‘காதலன்’ தான் என்கிறது இலக்கியம்.”
யுகேந்திரனே இப்போது லேசாகப் புன்னகைத்தான். வேண்டுமென்று தான் இந்தத் தலைப்பைத் தெரிவு செய்திருந்தான்.
“இதைத்தான் திருவள்ளுவர் தனது குறளில், ‘சாயலும் நாணும் அவர் கொண்டார், கைம்மாறாநோயும் பசலையும் தந்து’ என்கிறார். இதன் பொருள் சான்றுக்கு காம நோயையும் பசலை நிறத்தையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார் என்று தலைவி குறை கூறுகிறாள்.”
“உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகள் இருக்க, காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்கிறது தமிழ் இலக்கியம்.”
“ஒருவரை ஒருவர் அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்தத்திற்குக் காரணமான ‘கார்டிசல்’ என்ற சுரப்பி குறைவாகச் சுரக்கிறது என்று நவீன விஞ்ஞானம் சொல்கிறது. இதைத்தானே நமது இலக்கியம் அன்றே சொல்லி இருக்கிறது.” இதை அவன் சொன்னபோது கரவொலி பரிசாகக் கிடைத்தது.
“மருந்து பிறிதில்லை யவர்மணந்த மார்பே… நோய் தீர்க்கும் மருந்து தலைவி மணம் புரிந்து கொண்ட மார்பன்றி வேறில்லை. திருமணத்துக்கு முந்திய காதலை களவொழுக்கம் என்றும், திருமணத்திற்குப் பிறகு அவர்களின் இல்லற வாழ்வு கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டது நமது இலக்கியத்தில் தான்.”
இலக்கியத்தில் சொல்லப்பட்ட இல்வாழ்க்கை அறத்தையும், அதனை எவ்வாறு நெறிப்படுத்தி வாழவேண்டும் என்றும் விளக்கியவன் பேச்சை முடித்துக் கொண்டான்.
சத்தியமூர்த்தியின் நண்பர் ஒருவர் யுகேந்திரனைப் பிடித்துக் கொண்டார். வசமாக மாட்டிக்கொண்டான் கவிஞன்.
“என்ன யுகேந்திரா? பேச்சில் காதல் வாடை அடிக்கிறது?”
“ஏன் ஐயா? கூடாதா?”
“அய்யய்யோ! தாராளமாகப் பேசப்பா. உன் களவியல் கேட்க நாங்களெல்லாம் ஆவலாக இருக்கிறோம்.”
“முயற்சிக்கிறேன் ஐயா.” சிரித்தபடியே நழுவிக் கொண்டான்.
நித்திலாவைக் கண்களால் தேடினான். அவள் சத்தியமூர்த்தியுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. கறுப்பனை அழைத்துத் தகவல் கேட்க முருகனோடு அவள் வந்திருப்பதாகச் சொன்னார்.
இருவரையும் ஏறக்கட்டி அனுப்பி வைத்தவன், தாத்தாவிடம் வந்து சேர்ந்தான்.
“போகலாமா தாத்தா?”
“போகலாம் யுகேந்திரா. நித்திலா…”
“அவங்களும் நம்ம கூடத்தான் வரப்போறாங்க.” அவள் மறுக்கும் முன் அவசரமாகப் பதில் வந்தது.
தாத்தாவை அவர் வீட்டில் விட்டு விட்டு அந்த ப்ளாக் ஆடி இருவரையும் சுமந்த படி வந்து கொண்டிருந்தது. அன்றைக்குப் போல இன்றைக்கும் கார் ஓரிடத்தில் நின்றது.
இரவும், குளுமையும் சூழ்ந்திருக்க, சில்வண்டுகளின் ரீங்காரம் கேட்டபடி இருந்தது. 
“கண்ணம்மா… இன்னும் கோபம் தீரவில்லையா?” 
இந்தக் கவிதைக் குரலைக் கேட்காமல் அவள் பட்ட பாடு அவள்தானே அறிவாள்.
“பேசமாட்டாயா? என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லாதே பெண்ணே!” அவன் சொல்லவும் அடக்கமுடியாமல் கைகளில் முகம் புதைத்து அழுதாள் நித்திலா. 
அவள் அழுவதையே ஒரு வலியோடு அமைதியாகப் பார்த்திருந்தான் யுகேந்திரன். இப்போதும் தன்னிடம் வராமல் தள்ளியே நிற்பவளை என்ன சொல்வது?
“அழாதே நித்திலா. உனக்குப் பிடிக்கலைன்னா எதுவும் வேணாம். நான் இனி உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்.” அந்தக் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
“கவிஞரே… என்ன பேச்சு இது?” கேவலோடு வந்தது அவள் கேள்வி.
“எனக்கு உன் மனசு புரியலைம்மா. நான் தான் தப்புக் கணக்குப் போடுறேனா?” அவன் அமைதியாகக் கேட்க, இப்போது அவள் புயலாகிப் போனாள்.
“மனசு புரியலையா? ஏன் புரியலை? அதான் வாய்கிழிய இலக்கியம் பேசத் தெரியுதில்லை. இலக்கியத்துல எங்கேயாவது தலைவி அவ வாயாலேயே சம்மதம் சொல்லி இருக்காளா?”
“ஏய்…” அவள் கத்தி முடிக்கவும் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் யுகேந்திரன். விட்ட அழுகையை அவள் மீண்டும் தொடர, இப்போது யுகேந்திரன் புன்னகைத்தான். அவன் கண்களும் கலங்கிப் போயின.
“கண்ணம்மா… காதலென்னும் கவிதை சொல்லடி… உன் பிள்ளைத் தமிழில் கண்ணம்மா…” அவன் மெதுவாகப் பாடவும் அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
“முடியாது…”
“ப்ளீஸ் நிலா… ஒரே ஒரு முறை சொல்லு. பிடிக்கலைன்னு அன்னைக்கு எத்தனை உறுதியாச் சொன்னே. அதே மாதிரி இப்போ பிடிக்கும்னு சொல்லக் கூடாதா?”
அவன் கெஞ்சலாக முடிக்கவும் அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள் நித்திலா. அந்தப் பார்வையில் யுகேந்திரன் கொஞ்சம் திணறித்தான் போனான்.
“கவிஞரே! உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்குச் சொல்லத் தெரியாது. ஏன்னா… நீங்க எனக்குத் தாயுமானவர், தந்தையானவர்.” சொல்லி முடித்தவள் எட்டி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“களவியலா கண்ணம்மா?” அவன் கண்களில் மயக்கம் தெரிந்தது. 
“ம்… ஆமா. ஆனா, உங்களுக்குப் பர்மிஷன் கிடையாது.” அவள் ஆணைக்குக் கட்டுப்பட்டான் கவிஞன்.
“நீ பக்கத்தில் இருப்பதே பரம சுகம், பேரின்பம். இதில் எனக்கெதற்கு சிற்றின்பம்?” சரசமாகச் சொன்னவன் காரைக் கிளப்பினான்.
அந்த இரவு இனிமையாக நகர்ந்தது.

error: Content is protected !!