NMK-10

                        நின் முகைக் காதல்

                                                           10

 

ஆதவ்வின் அருகில் அமர்ந்திருந்தவளுக்கு மூன்று மணி நேரமும் அவனுடன் எப்படிக் கழிந்தது என்றே தெரியவில்லை. அவளுக்கு போர் அடிக்கதபடி பார்த்துக் கொண்டான். அவர்களின் தொழில் பற்றியும் , குடும்பத்தில் இருப்பவர்கள் பற்றியும் பேசிக் கொண்டே வந்தான்.

ஏர்போர்ட்டிலிருந்து அவர்களுக்காகக் காத்திருந்த காரில் ஏறி சென்றனர். செல்லு வழியில் அவளுக்கு அந்த ஊரைப் பற்றி விளக்கினான்.

அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு அங்கிருக்கும் அமைதியான கடற்கரைகளில் அப்போதே சென்று ஆட வேண்டும் போல் இருந்தது.

ஆனால் மனதில் வேதனை மட்டும் குறைந்தபாடில்லை. தராசு போல, ஒரு புறம் ஆதவ்வை பிடித்தும் இருந்தது, மறுபுறத்தில் அவனை விட்டு விலகிப் போவதும் சரி என்று பட்டது. அவளுடைய மூளைக்கு இந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என்பதை யோசிப்பது மிகப் பெரிய சுமையாக இருந்தது.

என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்று அப்போது இருந்த மனநிலையில் அவள் நினைக்க, ஆதவ்வோ அவளை அதற்கு விடவில்லை.

ஹோட்டல் ரூம், இரண்டு அறைகள் கொண்ட சுவீட் ரூம் என்பதால் ஒரே அறையில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போனது. இரவு நேரம் என்பதால் அவர்களுக்காக உணவு ஏற்கனவே அறையில் கொண்டு வரப் பட்டு இருக்க,

இருவரும் இருந்த பசியில் அமைதியாக உண்டுவிட்டுத் திரும்ப,

“போதுமா இல்ல இன்னும் எதாவது ஆர்டர் பண்ணவா? ஜூஸ்?” ஆதவ் அவளிடம் கேட்க,

“இன்னும்மா? இதுவே போதும்.

“சரி.. காலைல இங்க இருந்து அவங்களுக்கு போன் பண்ணா காஃபி கொண்டு வந்து தருவாங்க. ஓகே..?” என்றுவிட்டு அவன் கைகழுவி வந்தான்.

இருவரும் ஹாலில் அமர்ந்திருக்க, யார் முதலில் தூங்கச் செல்வது என்று இருந்தது. முதலில் தான் எழுந்து சென்றால், அவன்மீது ஈடுபாடில்லை  என்பது போல் தோன்றிவிடுமோ என பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.

அதுவுமில்லாமல் அவன் அருகிலேயே கழிந்த பத்து நாட்கள் இப்போது அவளைத் தனியே உறங்கவிடவில்லை.

ஆதவ்வோ அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதர்க்ககவே அங்கேயே இருந்தான். அவள் கடைசி வரை வாயைத் திறக்காமல் இருக்கவும்,

“தூக்கம் வருதா…? வந்தா தூங்கு..” அவன் பேச்சைத் துவங்க,

“இல்ல.. தூங்கனும்னு இல்ல. உங்களுக்குத் தூக்கம் வந்தா தூங்க போலாம்” என்றாள்.

மெல்லச் சிரித்தவன், “என்கூட வா..” அவளை அழித்துச் சென்றான்.

ரூமை விட்டு வெளியே வந்ததும் சில்லென்ற கடல் காற்று அவர்களை எதிர் கொண்டது. காற்றில் அவன் தலைமுடி அசைய தன்னுடைய பேன்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு நின்று  அந்தக் காற்றை எதிர் கொண்டவனை , தீக்ஷாவின் கண்கள் ரசனையுடன் பார்க்கவே செய்தது .

‘இப்போ இவனைப் பார்க்கும்போதெல்லாம்  அழகாகத் தெரிய காரணம் என்ன? அவனது குணமும் அதனால் ஈர்க்கப்பட்ட தன் மனமும் தான்!’ கேள்வியும் கேட்டு பதிலும் அவளே கூறிக் கொண்டாள்.

அவர்கள் தங்கி இருந்தது கடற்கரையை ஒட்டி இருந்த பீச் ரெசார்ட்,

நூறு மீட்டர் இடைவெளியில் கட்டப்பட்ட சில வீடுகள். வெளியே கூரை வேய்ந்து காணப்பட்டாலும், உள்ளே அனைத்து வசதிகளும் கொண்ட அறைகள்.

வெளியே கதவைத் திறந்து வந்தால், கால்கள் மண்ணில் புதையும் பீச் மணல். கைக்கெட்டும் தூரத்தில் கடல்.  இன்று அவர்களுக்காகவே வந்திருந்த முழுநிலவு. தென்றல் காற்று. அருகில் இருந்த ஒரு ஓபன் பாரிலிருந்து வந்த வந்த மெல்லிய கிடார் இசை என அனைத்தும் ரம்யமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.

ஆதவ்வோ தீட்ச்சாவுடன் தன் வாழ்வு எப்போது தொடங்கும் என மனதிலேயே ஆசைக் கடலில் மிதந்து கொண்டிருக்க,

தீட்சாவின் மனதில் திடீரென ஒரு மாற்றம். ‘பேசாமல் சத்யாவுடன் நடந்த பேச்சு வார்த்தையைப் பற்றி இவனிடம் சொல்லிடலாமா? நம்ம மேல எந்தத் தப்பும் இல்லையே. அதைவிட உங்கள பிடிச்சிருக்குனு சொல்லிடலாமா??

ச்ச..அவன் வேண்டான்னு சொன்னதும் என்னை புடிச்சிருச்சான்னு கேட்டா?..ஏற்கனவே ஒருத்தன் கிட்ட அசிங்கப் பட்டாச்சு..இப்போ இவர் கிட்டயும் வாங்கிக் கட்டிகனுமா? தீட்சா..போதும் இந்த லிமிட்லையே இருந்துக்கோ.

புருஷன் கூட சண்டையே இல்லாம, பிரச்சனையே வராம பிரிஞ்சு போகப் போற ஒரே பொண்ணு நானா தான் இருப்பேன். என்ன வாழ்க்கை டா இது.!’

மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு நிற்க, அந்த நேரம் ஆதவ்வின் செல் சிணுங்கியது.

பாக்கெட்டிலிருந்து எடுத்தவன் யாரென்று பார்க்க, அருகில் நின்று கொண்டிருந்த தீட்சாவின் கண்களுக்கும் அந்தப் பெயர் தெரிந்தது.

“சாஷா..?” ஆதவை அவள் கேட்க,

“நம்பர் கேட்டேன்னு பிரதாப் சொல்லிருப்பான்னு நெனைக்கறேன்.” சாதாரணமாகக் கூறிவிட்டான்.

ஆனால் அவளுக்குத் தான் மனதில் பாரம் ஏறியது.

“ஓ! இந்த நேரத்திலா?” அவள் குரலில் பொறமை இருக்கவே செய்தது.

“நீயே பேசறியா?” அவளிடம் நீட்டினான்.

“இல்ல.இல்ல. நீங்களே பேசுங்க” அவசரமாக மறுத்தாள்.

“என்ன பேசறது?” தீட்சாவிடமே கேட்க,

அவள் அவனை புருவம் உயர்த்திப் பார்த்தாள்.

“ம்ம்.. கிண்டலா.. பேசுங்க. நான் வேணா அந்தப் பக்கம் போறேன்.” மனம் கணக்க அவள் கிளம்ப எத்தனிக்க,

அவளது கைகளைப் பற்றிக் கொண்டான். அவள் உடலெங்கும் மின்சாரம் பாய, திரும்பினாள்.

“இங்கயே இரு.” என அவள் கையை விடாமல் போனை அட்டென்ட் செய்தான்.

“ஹல்லோ ..” பதட்டமில்லாமல் அலட்டலும் இல்லாமல் பேசினான்.

“ஹல்லோ ஆதவ். எப்படி இருக்கீங்க?”  பெண் குரல் கேட்டது.

உடனே அவன் ஸ்பீக்கரில் போட்டு பேசினான்.

“நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க?” மூன்றாவது மனிதரிடம் பேசுவது போலத் தான் பேசினான்.

“என்ன நீங்கனு சொல்றீங்க.. நீ னே சொல்லலாம். உங்களுக்கு இல்லாத உரிமையா?” உரிமையுடன் பேசினாள்.

தீட்சாவிற்கு வாய் தன்னிச்சையாய் கோணிக்கொண்டது. அதைக் கண்டவனுக்கு உச்சி குளிர்ந்தது.

‘உள்ள இருக்குல்ல…அத சொல்றதுக்கு என்ன…?’ என நினைத்தவன்,

“உரிமையா கூபிட்ற அளவு இன்னும் போலன்னு நினைக்கறேன்.” வெடுக்கெனக் கூற,

அது என்னவோ பெரிய ஜோக் மாதிரி அந்தப் பெண் குரல் சிரிக்க ஆரம்பித்தது. தீட்ச்சாவிற்கு ஏனோ அவளது கொஞ்சும் குரலைக் கேட்கவே வெறுப்பாக இருந்தது.

“சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு நான் தூங்கப் போகணும். அப்பறம் பேசுவோமே!” ஆதவ் இணைப்பைத் துண்டிக்கப் பார்க்க,

“இல்ல ஆதவ் எவ்வளவோ நாள் உங்க கூட பேசணும்னு நான் ஏங்கி இருக்கேன். எனக்கு இப்போ அப்படி ஒரு சந்தர்ப்பம் கெடச்சும் அதை நான் தவற விட விரும்பல. அதான் உங்க மனைவி உங்களுக்குச் செட் ஆகலையே , அதுக்கப்றம் உங்களையே நினைச்சுட்டு இருக்கற எனக்கு அந்த வாய்ப்புக் கொடுக்கறதுல என்ன தவறு?” வெளிப்படையாக பேசிவிட்டாள்.

ஆதவ் தீட்ச்சாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளது முகம் அந்த சாஷாவின் வார்த்தைகளால் சிறுத்து விட்டது. ஆதவ் உடனே,

“இல்ல எனக்கு டராவெல் பண்ணி வந்தது கொஞ்சம் டயர்ட்டா இருக்கு, அதுனால தூங்கப் போறேன். பை!” அவளது பதிலுக்குக் காத்திருக்காமல் இணைப்பைத் துண்டித்தான்.

தீட்ச்சா தன் கைகளை மெல்ல அவனிடமிருந்து உருவிக் கொண்டாள். அவளையே ஊடுருவும் பார்வை பார்த்தவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அவளால்.

“வாங்க போய் தூங்கலாம்.” தங்களது அறையை நோக்கி நடக்க,

“கொஞ்சம் இரு தீட்சா. என்ன ஒண்ணுமே சொல்லாம போற.”

“என்ன சொல்லணும்?”

“சாஷாவ போன் பண்ண வெச்சது நீ தான. அப்போ நீ தான் சொல்லணும்.” அவளது கண்களை நேருக்கு நேர் சந்தித்தான்.

தீட்ச்சா சற்று தடுமாறினாள். இப்போ தான் என்ன சொல்வது.

“அதான் பேச ஆரம்பிச்சாச்சு இல்ல. இனிமே கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பொண்ணப் பத்தி புரிஞ்சிபீங்க. அவளும் உங்கள விடற மாதிரி தெரியல.” போலியாக ஒரு சிரிப்பை வரவைத்துக் கொண்டாள்.

‘கல்லூளிமங்கி. வெளிய வருதா பாரு. எனக்கு உங்கள புடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை உங்கிட்ட இருந்து வரவைக்க நான் இன்னும் எத்தனை தூரம் போகணுமோ!’ ஆதவிற்கு மலைப்பாக இருந்தது.

“ஓ! அப்போ பேசப் பேச புடிச்சிடுமா? ஆனா நீயும் சத்யாவும் பெருசா பேசுன மாதிரி தெரியல அப்புறம் எப்படி புடிச்சுது?” அவளிடம் கேள்வியைத் திருப்ப,

‘அவன எங்க புடிச்சுது! எல்லாம் என் தலைவிதி!’ என நொந்தவள்,

“நான் உங்களைப் பத்தித் தான் பேசுனேன். இப்போ என் கதைய ஏன் இழுக்கறீங்க.” நழுவப் பார்த்தாள்.

“நீங்க தான் லவ்ல எனக்கு சீனியர் ஆச்சே.. கொஞ்சம் சொல்லிக் குடுங்க எப்படி லவ் பண்றதுன்னு. எனக்குத் தான் இவ்வளவு நாள் புரியலையே, இப்போ அவ பேசறப்ப மட்டும் எப்படிப் புரியும். அதுனால எனக்கு லவ் டிப்ஸ் குடு.”  ‘உன்னை நான் விடுவதாக இல்லை என்பது போல இதற்கும் அவளிடம் பாடம் கேட்டான்.

“என்னது..! லவ் டிப்ஸா ? நானா…!” கண்களில் ஆச்சரியத்தை தேக்கி நின்றாள்.

அதில் சிறிது நேரம் மயங்கியவன் , “ஏன் இவ்வளோ ஷாக் ஆகற… எனக்கு லவ் பண்ணக் கத்துக் குடு. நீ தான ஒரு பொண்ண எனக்கு செட் பண்ணிட்டு தான் போவேன்னு சொன்ன. அதப் பண்ணு.”

“ஆங்… இதுல நான் என்ன.. பண்ண முடியும். அவ தான் உங்கள லவ் பண்றாளே. நீங்களும்….”

“இந்தக் கதையெல்லாம் வேணாம். எனக்கு லவ் வராம அவ கூட நான் எப்படி வாழுவேன். அப்போ மறுபடியும் என் வாழ்க்கை வீணா போகும். அதுக்கு எனக்கு யாரும் இல்லாம நான் இப்படியே இருந்துக்கறேன்.” இப்போது அவன் கிளம்ப,

“இருங்க…இருங்க…” தலை குனிந்து அவன் முன்னே வந்து நின்றாள்.

சிறிது நேரம் அமைதியாக இருக்க,

“என்ன …சொல்லு” அவளது முகத்தைக் குனிந்து பார்த்தான்.

“நான்… ஹெல்ப்… பண்றேன்.” திக்கித் திக்கிக் கூறிவிட்டாள்.

“ம்ம்ம் தட்ஸ் குட். தேங்க்ஸ். வா போய் தூங்கலாம்.” அவளையும் அழைத்துக் கொண்டு செல்ல,

‘இனி நான் எங்க தூங்கறது.’ மனதில் எண்ணியவாறே அவளது அறைக்குச் சென்றாள்.

“குட் நைட்” என்றவன் தனதறைக்குள் சென்று விட,

இவள் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அந்த சாஷா இன்று பேசியதையே நினைத்து தன்னை மேலும் காயப் படுத்திக் கொண்டாள்.

‘ஆதவ்வுக்கு அவ மேல நான் லவ் வர ஐடியா குடுக்கணுமா…அவளும் அவ குரலும்…எனக்கே லவ்வுனா என்னனு தெரியாம இப்போ தான் தெளிஞ்சி இருக்கேன்.. இவர் வேற… ‘ முதலில் திட்ட ஆரம்பித்தது, பின் ஆதவ் தன்னை விட்டுப் போகப் போகிறான் என்ற நினைப்பே அவளை உறங்க விடாமல் செய்தது.

அத்தோடு தினமும் அவன் அருகில் உறங்கிவிட்டு இன்று அவனைக் காணாமல் உறங்கவும் முடியவில்லை.

மெல்ல எழுந்து விளக்கைப் போடாமல் அவனது அறைக்குச் செல்ல நினைக்க, அவனோ விளக்கை எல்லாம் அனைத்துவிட்டிருந்தான்.

ஹால் வரை வந்தவள், தயங்கி நிற்க, திடீரென ஒரு கரம் அவளைச் சுற்றி வளைத்தது. அவளது இடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விட பயத்தில் அவள் அலறிவிட்டாள்.

“ஆதவ்….வாங்க…” என கூச்சலிட,

சட்டென பிடி விலகியது.

“ஹே! நீ தானா.. நான் யாரோ திருடன்னு நினச்சுட்டேன்.” என்றவன் ஹாலின் விளக்கைப் போட்டான்.

அவளைப் பிடித்து அணைத்தவன், அவளது கணவனே தான்.

“நீங்களா..!” நெஞ்சில் கை வைத்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

“நீ ஏன் லைட் போடாமா இங்க வந்த..? தூங்கலையா…?”  

“இல்ல..தூக்கம் வரல.. நீங்க தூங்கிட்டீங்களான்னு பாக்க வந்தேன்..” படபடத்தாள்.

அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.

‘நான் இல்லாம மேடமுக்கு தூங்க முடியல.. அத சொல்ல தயக்கம்..ம்ம்ம்.. நீன்னு தெரிஞ்சு தான் கட்டிப் புடிச்சேன். உன்ன இப்படி எல்லாம் தூண்டினா தான் வழிக்கு வருவ…’ என நினைத்துக் கொண்டு,

“சரி வா தனியா தூங்க பயமா இருந்தா…என் ரூம்லயே தூங்கலாம். பில்லோ நடுல வெச்சு..” கண்ணடித்துச் சிரிக்க,

அவளுக்குத் தான் சங்கடமாகிப் போனது.

“நீங்க தப்பா..” ஆரம்பித்தவளை,

“நான் எதுவும் நினைக்கல…வா…” அவளை பிடித்து இழுத்துக் கொண்டு கட்டிலுக்குச் சென்றான். இடையில் தலையணை வைத்து அவளைப் படுக்கச் சொல்ல,

எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.

அவனுக்கும் இப்போது தான் நிம்மதியாக உறக்கம் வந்தது.

வழக்கம் போல அவள் உறங்கியதும், அவளது இடையை சுற்றிக் கொண்டு தன்னருகே அவளை இழுத்துக் கொண்டு தூங்கினான். அவளும் இருந்த அலுப்பில் அவனுடன் அடங்கினாள்.