NNA23Final

 

நீயும் நானும் அன்பே

அன்பு-23 (நிறைவு)

 

நவீனா சூலுற்றதை அறிந்தவுடன் சங்கர், சசி, அன்னம்மாள் அனைவரது கவனிப்பும் இரட்டிப்பாகியிருந்தது.

 

அதையும் தாண்டி, சங்கர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருந்தான்.

 

அதிக நேரம் நவீனாவிற்காக ஒதுக்கத் துவங்கியிருந்தான்.  சங்கர் பெண்ணைத் தாங்கியதை, கண்டும் காணாமல் இருந்தாலும், உணவு விசயத்தில் அன்னம்மாள் தனது அனுபவத்தைக் கூறினார்.

 

“மசக்கை, வாந்தி இல்லைனு… அவ ஆசப்பட்டு கேக்கறதை, பிரியமா திங்கறதை, எல்லாம் வாங்கிக் கொடு….! வேணானு சொல்லலை தம்பி….! ஆனா வயித்துக்குள்ளயே புள்ளைய வளக்கணும்னு ரெண்டு பேரும் நினைக்கக் கூடாது! புள்ள எடை கூடுனா… பிரசவம் சிக்கலாயிரும்! ரெண்டு உசிரும் நல்லா இருக்கனும்னா… அவளை வேல பாக்க விடு!   குனிஞ்சு நிமிந்து எல்லாம் பாத்தாதான் பிறக்கற புள்ளையும் சுறுசுறுப்பா இருக்கும்!, என்று அன்னம்மாள் சங்கரிடம் கூறினார்.

 

இவ்வாறு அருகில் இருந்தவாறே ஒவ்வொன்றையும் கவனித்து அன்னம்மாள் சீராக்க…

 

நவீனாவும் ஆச்சியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, “ஆச்சி சொல்ற மாதிரியே ஃபாலோ பண்ணுவோங்க…!, என்று கணவனிடம் கூற

 

அதற்குமேல் அன்னம்மாளின் அறிவுரைப்படியே அனைத்தையும் பின்பற்றத் துவங்கியிருந்தாள் நவீனா.

 

“அலோபதி டாக்டரு…! ஆத்தா சொல்றதைக் கேட்டு நடந்தா ஆச்சர்யமா இருக்குல்ல!, என்று சங்கரும் பெண்ணின் பேச்சைக் கேட்டு, தனது சந்தேகத்தை வினவ

 

“உங்க விசயத்துல எனக்கு அவங்க மேல, அவங்க பூட், அவங்க மெடிசின் எல்லாத்துலயும் ஒரு நம்பிக்கைங்க… அதான் அப்டி சொன்னேன்!, என்று பெண்ணும் கணவனிடம் விளக்க

 

அதற்குமேல் அவரவர் நிலையில் நின்று பெண்ணைத் தாங்க… நாட்கள் அதன்போக்கில் வேகமாகச் சென்றது. 

 

ஐந்து மாதங்கள் நிறைவு பெற்றதும், பெண் தன் நுண்ணிய உணர்வால் குழந்தை அடிவயிற்றில் அசைவதை உணர்ந்து சங்கரிடம் கூறினாள்.

 

பெண் தன் உணர்வுகளை வார்த்தைகளால கணவனோடு பகிர, தானே சுமப்பதுபோன்ற உணர்வைப் பெற்றான் சங்கர்.

 

விசயம் தெரிந்த புஷ்பா ஐந்து மாதங்கள் நிறைவு பெற்றவுடன், மகளைக் காண மதுரைக்கே கணவனின் அனுமதியோடு நேரில் வந்திருந்தார்.

 

தாயைக் கண்ட மகள், தாயின் மடியில் சென்று தலை சாய்த்துப் படுத்தவள், அவளையும் அறியாமல் கண்ணீர் உகுத்தாள். 

 

பெண் அழுவதைக் காண சகிக்காத அனைவரும், “வயித்துப் புள்ளக்காரி இப்டி அழுகக் கூடாது… ஆத்தா…! நடந்தது எல்லாம் போகட்டும்!  இனி எல்லாம் உம்மனசுக்கு நல்லாவே நடக்கும்!, என்று ஆளாளுக்கு ஏற்ற நல்வார்த்தைகள் கூறி நவீனாவைத் தேற்றியிருந்தனர்.

 

மகளுக்கு தாயிடம் பேச ஆயிரம் விசயங்கள் இருக்க, அனைத்தையும் ஒரே நாளில் கொட்டித் தீர்த்து இலகுவாகியிருந்தாள் நவீனா.

 

ஆனாலும் ஏதோ ஒட்டாத தன்மையை மகளிடம் புஷ்பா உணரவே செய்தார்.

 

அனைத்தையும் கண்டும், காணாததுபோல சங்கர் அமைதியாக இருந்தான்.

 

பெற்றவளுக்கோ, ‘இம்புட்டயும் புள்ளை மனசுல வச்சி மருகிட்டே இருந்திருக்கு!  நானும் விட்டேத்தியா இருந்தது தப்போ?, என்று மனம் சாட, சற்றே வருத்தம் புஷ்பாவிற்கு வந்திருந்தது.

 

அடுத்து வந்த இரண்டு மாதங்களும், புகுந்த வீட்டுச் சீராட்டலோடு, பிறந்து வீடும் சேர்ந்து கொள்ள திக்குமுக்காடிப் போனாள் நவீனா.

 

ஏழாம் மாதம் சீமந்தம் என்று முடிவாகி, அதைச் சாக்கிட்டு வெற்றியையும் சீமந்த விழாவில் வந்து கலந்து கொள்ள அழைத்தார் புஷ்பா.

 

‘சீமந்தமெல்லாம் பொண்ணுங்க ஃபங்சன்!  நீயே போயி புள்ளைய பாத்து பத்திரமாக் கூட்டிட்டு வா!, என்றதோடு, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துவிட்டு, காரைக்குடியிலேயே இருந்து கொண்டார் வெற்றி.

 

மனம் இன்னும் அவருக்கு முரண்டியது.  அதனால் அவரால் அந்த விழாவினை இலகுவாக எதிர்கொள்ள இயலாது என பின்வாங்கியிருந்தார்.

 

புஷ்பாவிற்கு கணவனின் நிலை புரிந்தது.  மனம் வர ஆசை கொண்டபோதும், அதைவிட தன்முனைப்பு அவரை இறங்கி வர இயலாமல் செய்வதை உணர்ந்தே இருந்தார்.

 

“சரிங்க…, என்றதோடு மகனையும், அருகில் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்து பிறந்தகம் சார்பாக செய்ய வேண்டிய அனைத்தையும் சிறப்பாக செய்தார் புஷ்பா.

 

விழாவில் மகளின் நிறைவான பூரிப்பான முகத்தைக் கண்டு மகிழ்ச்சி கொண்டிருந்தார் புஷ்பா.

 

இருவரும் ஆசிர்வாதம் வாங்க எண்ணி கீழே குனிய, அதற்குள் தடுத்த புஷ்பா, “தீர்க்க சுமங்கலியா இரும்மா…, என்று மகளை வாழ்த்தியவர் மருமகனைக் கண்டு,

 

“அவங்கப்பா கொஞ்சம் முன்னப்பின்ன பேசுனதையெல்லாம் மனசுல வச்சிக்காதப்பா…!, என்று தன் மனதில் உறுத்தியதை அன்று சங்கரிடம் கூறிவிட்டார்.

 

“எதுக்கு அத்தை பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு… அதையெல்லாம்பத்தி நான் யோசிக்கல அத்தை!”, சங்கர்.

 

“பெத்தவரு… ஏதோ மன சஞ்சலத்துல அன்னிக்கு அப்டி பேசிட்டாரு…!, என்ற புஷ்பா இழுக்க

 

“… பொம்பிளப்புள்ளைய பெத்து வளத்து ஆளாக்கி… ஆசையோட கல்யாணம் பண்ணிக் கொடுக்க நினைச்ச உங்க நினைப்பைக் கலைச்சதுக்கு… நீங்கதான் என்னை மன்னிக்கனுத்தை!, என்று மாமியாரிடம் மனம் திறந்து மன்னிப்பை வேண்டினான் சங்கர்.

 

அதுவரை அங்கு நடப்பதை கண்ணுற்றவாறு இருந்த அன்னம்மாள், “ஆமாத்தா…! புள்ளை மனசுக்குள்ள எதையோ நினைச்சு வந்து எங்ககிட்ட சொல்லும்போது… நாங்களும் ஆளாளுக்கு உங்ககிட்ட வந்து மாறி மாறி நேருலயும், ஆளுககிட்ட சொல்லியும், பேசிப் பாத்தோம்.  நீங்க ஒத்துவரல…! புரிய வைக்கவும் எங்களால முடியல!  நவீனாவுக்கு மனசுக்குள்ள ஏதோ சரியில்லைனு புரிஞ்சது.  அத எங்ககிட்ட சொல்ல முடியாம புள்ளை தவியா தவிச்சது!

 

அதான் உம்புள்ளை ஆசைப்பட்ட மாதிரியே எல்லாம் பண்ணிட்டோம். நாங்க எடுத்துப் பண்ணது தப்புனாலும்… அன்னைக்கு வேற வழி தெரியலை!

 

அதான் அப்டி ஒரு முடிவை எடுக்க வேண்டியதாப் போச்சு…! மாப்பிள்ளை இப்ப கூட இங்க வரலை!  இன்னும் அவுக கோபம் தீரல போல!  அவுகள பெரிய மனசு பண்ணி எங்களை எல்லாம் மன்னிக்கச் சொல்லு!, என்று அன்னம்மாள் வந்து புஷ்பாவிடம் பேச

 

அன்னம்மாளின் இறுதி வார்த்தையில் மனம் சங்கடமடைந்த புஷ்பா, “எதுக்கு பெரியம்மா… இப்டி பேசுறீங்க…! நடந்தது நடந்துபோச்சி…! இனி நடக்கிறது எல்லாம் நல்லபடியா இவங்க வாழ்க்கைல நடக்கனும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க!, என்று மகளையும், மருமகனையும் அன்னம்மாளிடம் திருநீறு வாங்கப் பணித்தார் புஷ்பா.

 

ஒருவழியாக, மனதின் ஓரத்தில் இருந்த பாரங்கள் நீங்கியபோதும், பெண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பக் காத்திருந்தவர்களை, ஹாலில் அமரச் செய்துவிட்டு தங்களது அறைக்குள் வந்த நவீனா

 

“ஏங்க… எங்க அம்மா வீட்டுக்கு எப்ப வந்து கூப்ட வருவீங்க?, என்று கணவனிடம் வந்து பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தையின் நிலையில் வந்து நிற்க

 

“இன்னும் கிளம்பவே இல்லை.  அதுக்குள்ள கூப்டறதப் பத்தி நான் பேசினா… அத்தை என்னை உண்டு இல்லைனு பண்ணிருவாங்க, சங்கர்

 

“ஏதோ புது இடத்துக்கு போற ஃபீல் ஆகுது.  என்னனு தெரியலை!, என்று நவீனா புலம்ப

 

“என்ன செய்யனும்னு சொல்லு வீனா!, என்று மனைவியிடமே அதற்கான விடையை சங்கர் கேட்க

 

“காலேஜ் போகணும்னு நாளைக்கே வந்து என்னைக் கூட்டிட்டு வந்திரீங்களா?, என்று கேட்டவாறே கணவனின் மார்போடு சாய்ந்து கொண்டு, ஏக்கமாக கணவனின் முகம் பார்த்து, பிரிய மனமில்லாது கேட்டவளை, இதமாக அணைத்து, அணைப்பிலேயே தனது பதிலைக் கூறி மனைவியை வழியனுப்பியிருந்தான் சங்கர்.

 

தாய் மற்றும் உடன் வந்திருந்தவர்களோடு அரைமனதாகக் கிளம்பியிருந்தாள் பெண்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகான பிரிதல்.  பெண்ணால் இயல்பாக அங்கிருந்து கிளம்ப இயலவில்லை.

 

வந்த அழுகையை அடக்க, நெஞ்சில் பாரமேறியது போன்ற உணர்வு.  ஆனாலும் வயிற்றுப் பிள்ளையை எண்ணி மூச்சினை ஆழமாக இழுத்து விட்டாள்.

 

ஆண் தனக்குள் எழும் கைநழுவிச் செல்லும் வாய்ப்புகளையோ, துன்பங்களையோ, துயரங்களையோ எளிதில் வெளிக்காட்டுவதில்லை.

 

சிலர் மதுவின் துணையை நாடி மனதில் உள்ளதை வெளியில் கூறி ஆறுதல் தேடுவதாக உலகை நம்ப வைக்கின்றனர்.

 

மது அருந்தாதவர்கள், மனதோடு வைத்துக் கொண்டு மன்றாடுகிறார்களே தவிர, மரத்துப் போன மனதைக் கொண்ட மனிதர்கள் அல்ல அவர்கள்.

 

மனம் துயருற்றாலும், எதையும் வெளிக்காட்டாமல் நின்றவனை, புரிந்து கொண்டிருந்தவள், மறுநாள் கண்டிப்பாக அழைத்துச் செல்ல வருவான் என்ற நம்பிக்கையோடு கிளம்பியிருந்தாள் நவீனா.

 

இலகுவாக மனம் ஒன்றிய இடத்தை விட்டுச் செல்ல பிரிய இயலாத நிலையில் புஷ்பாவோடு சென்றவளுக்கு, அன்றைய தினத்தைக் கடத்த இயலாமல் வருந்தினாள்.

 

சில ஆண்டுகளுக்குப்பின் வீட்டிற்கு வந்த மகளை “வாம்மா…!, என்றதோடு அறையோடு முடங்கியவர், மகளைக் கவனிக்க மனைவியை ஏவியவாறு ஒதுங்கியிருந்தார் வெற்றி.

 

தந்தை, பழகிய வீடு, படுத்துறங்கிய படுக்கை எல்லாம் அந்நியமாகத் தோன்றியது நவீனாவிற்கு.

 

படுக்கை பகையானது. நேரத்தை நெட்டித் தள்ளினாள்.

 

மற்றவர்களைத் தொந்திரவு செய்ய பிரியமில்லாமல், தனது அறைக்குள் இருந்தவாறே கணவனுக்கு நடுநிசியில் அழைத்தாள் நவீனா.

 

இரண்டு ரிங்கில் எடுத்தவனிடம், “தூங்கலையா?, என்று கேட்க

 

“ம், அதற்குமேல் எதுவும் பேசினானில்லை.

 

“ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க?

 

“தெரியலை!”, தெரிந்தும் தெரியாது என்றிருந்தான் சங்கர்

 

சங்கர், நவீனா திருமணத்திற்குப் பிறகு, நவீனாவை விட்டுவிட்டு அடிக்கடி இல்லையென்றாலும், வாரமொருமுறை அல்லது இருமுறை ஊருக்குச் சென்று பழகிய சங்கருக்கு, முதன் முறையாக நவீனா தன்னை விட்டுச் சென்றதை எண்ணிய உள்ளத்தில், ஏதோ பறிபோனதுபோன்ற மனநிலையைத் தந்திருந்தது.

 

தாங்கள் வசிக்கும் வீட்டில், நவீனா இல்லாமல், சங்கர் மட்டும் இதுவரை தனித்து இருந்ததில்லை.

 

முதன்முறையாக தனிமை இனிமை தரவில்லை. துயரைத் தந்திருந்தது.

 

ஆற்ற முடியாத துயரல்ல என்பது அறிவுக்குப் புரிந்தாலும், அருகில் இல்லாதவளை எண்ணி ஏங்கிய மனம் தூக்கத்தை துரத்தியிருந்தது.

 

என்ன சொல்ல?  எதையும் சொல்ல இயலாத நிலை சங்கருக்கு.  “நீ தூங்கு, என்று கணவன் கூற

 

“உங்களுக்கு தூக்கம் வரவரை எதாவது பாடுறீங்களா?”, பெண்ணுக்கு மனதை சாந்தப்படுத்த வழி தெரியாமல், வழி தேடினாள்.

 

“என்ன பாட?”, மனம் முழுக்க இருந்த பார உணர்வு பெண்ணின் பேச்சில் சற்று குறைந்தாற் போன்ற உணர்வோடு வினவினான்.

 

“எதுனாலும் ஓகே!”, என்று பெண் கூறியதும்… கம்மிய குரலைச் சரி செய்தவன் மனைவிக்காக தன் மனநிலைக்கு ஏற்ற பாடலை சங்கர் பாடத் துவங்கியிருந்தான்.

 

“வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே
வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே

வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே

மலரிலும் மலையிலும்
நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய்
தெரிவதென்ன

வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே
—-
உன் நியாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னை பந்தாடுதே
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே

படித்தால் இனித்திடும் புதினம்
உன்னை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே

வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே

செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம் ஆனதே
பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாண கோலங்களே

மண நாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் வருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே
வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே

கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே
வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே

மலரிலும் மலையிலும்
நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய்
தெரிவதென்ன

வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யேயேயே, என்று கணவன் பாடி முடிக்கும் முன்பே, பாதிப் பாடலின்போதே நவீனா உறங்கியிருந்தாள்.

எதேச்சையாக எழுந்து வந்த புஷ்பா, மகளின் அறையில் எரிந்த விளக்கினைக் கண்டு, அறைக்குள் எட்டிப் பார்க்க… மகள் அறையில் வந்த பேச்சு சத்தத்தைக் கண்டு,

‘தூக்கம் வரலையா? யாருகிட்ட இன்னேரத்துல பேசிட்டுருக்கா, என்று நினைத்தவாறே சற்று நேரம் நின்று கவனித்துவிட்டு, அறைக்குள் வந்து மகளை நெருக்கத்தில் பார்த்தார்.

மகள் உறங்கியதை உணர்ந்தவர், பாடல் ஒலி எங்கிருந்து வருகிறது என்கிற யோசனையோடு நோக்க… அலைபேசி உயிர்ப்போடு இருந்ததைக் கண்டார்.

அதனை எடுத்து, ‘பாட்டை கேட்டுகிட்டே இதை ஆஃப் பண்ணாம தூங்கிட்டாளாக்கும்என எண்ணியவாறே அலைபேசியை எடுத்து நோக்க… எதிர்முனையில் இருந்து வந்த பாடல் வரிகளைக் கேட்டு, குரலின் பரிட்சயத்தில் யோசித்தார்.

சற்று நேரத்திற்குப்பின் எதிரில் சங்கர் பாடுவதை உணர்ந்தவர், சிரித்தவாறே இரவு விளக்கை மட்டும் எரியவிட்டு, மற்ற விளக்குகளை அணைத்துவிட்டு… அறையை விட்டு வெளியேறி இருந்தார்.

‘தாலாட்டுப் பாடுனவளை மறக்க வைக்கிற அளவுக்கு மருமயன் இப்படி கிறக்கமா பாடுனா… எப்டி என் ஞாபகம் எம்புள்ளைக்கு இருக்கும்!  அதான் புள்ளை என்னைத் தேடவே இல்லை! என்று மனதில் நினைத்தவாறே… உண்மை புலப்பட… மனதில் நிறைவான மகிழ்ச்சியோடு படுக்கையறை நோக்கிச் சென்றார் புஷ்பா.

புஷ்பாவிற்கு மகளின் வாழ்க்கை பற்றிய நிறைவு இருந்தாலும், ஒவ்வொன்றையும் கண்ணுறும்போது ரெட்டிப்பு மகிழ்வாக உணர்கிறார்.

வெற்றியைப் போல சங்கர் இல்லை.  மகளைச் சீராட்டி வளர்த்து, திருமணத்திற்குப் பிறகு என்னவோ? எப்படியோ? என்கிற பயம் இல்லாமல் இருக்கும்படியான நம்பிக்கையான மருமகன் என்கிற நிறைவு புஷ்பாவிற்கு என்றுமே இருந்தது.  அது நடக்கும் நிகழ்வுகளைக் கண்ணுற்று வலிமை சேர்த்தது.

மகள் வீட்டிற்கு வந்த மறுநாளே கிளம்பிச் செல்ல விரும்புவதை அறிந்த வெற்றிக்கோ, மனம் வெறுமையாக உணர்ந்தார்.

 

இனி பெண் தங்களோடு ஒட்டாத வாழ்க்கைதான் வாழ எண்ணுகிறாள் என்பது புரிந்தவுடன், மனம் நொந்தார்.

 

அதேவேளையில், தனது மனைவியை இதேபோன்ற சூழலில் தான் நிறுத்தி, மனைவி தாய் வீட்டோடு சில மாதங்கள் இருக்கப் பிரியப்பட்டபோது, அதற்குத்தான் சம்மதிக்காததும் நினைவிடுக்கில் வந்துபோக, இறைநீதியான இன்றைய செயலை எண்ணி ஏற்றுக்கொள்ள தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டார்.

 

அடுத்த நாள் வீட்டிற்கு வந்த சங்கரை மருமகனுக்குரிய சகல மரியாதையோடு அனைவரும் வரவேற்று உபசரிக்க, வெற்றியோ “வாங்க…, என்ற வார்த்தையோடு ஒதுங்கியிருந்தார்.

 

‘எம்புள்ளை ஒன்னுமறியாதது.  நான் ஏதோ மனசுல நினைச்சி உங்களை வேணானு அப்ப சொல்லிட்டேன்.  அதை மனசுல வச்சிக்க வேணாம்.  எம்புள்ளைய நல்லாப் பாத்துக்கங்க மாப்பிள்ளை!, என்று மனம் கூற நினைத்தாலும், சங்கரிடம் இறங்கிச் சென்று பேச ஏதோ ஒன்று தடுத்தது.

 

கணவன், வந்த மருமகனை , ‘வாங்க என்று வந்து அழைத்துப் பேசியதைக் கண்ட புஷ்பா ஆனந்தக் கண்ணீரோடு பார்த்திருந்தார்.

 

அதற்குமேல், அங்கு தன்னை இணைக்க இயலாமல், வெற்றி அங்கிருந்து நகன்றிருந்தார்.

 

சங்கருக்கும் இயல்பாக வீட்டின் சூழல் இல்லாமையால், விரைவில் மனைவியோடு கிளம்பியிருந்தான்.

 

கணவனை ஹாலில் அமரச் செய்துவிட்டு, ‘அப்பாட்ட சொல்லிட்டு வந்திரேன் என்று வெற்றி இருக்கும் இடத்தை நோக்கிக் கிளம்பியவள்

 

“அப்பா…, என்று அறை வாயிலில் நின்று மெல்லிய குரலில் அழைத்தாள்.

 

மகளின் அழைப்பில் ஏதோ புத்தகத்தில் முகத்தைப் புதைத்திருந்தவர், நிமிர்ந்து மகளை நோக்க…

 

“அப்பா… உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். அதான், என்று மகள் இழுக்க…

 

“என்னம்மா… ஏன் வெளிய நின்னுட்டுருக்க… வா…, என்று வெற்றி மகளை அழைத்தார்.

 

உள்ளே வந்தவள் தந்தை கூறியும் அமராது, நின்றவாறே , “என் கல்யாண விசயத்துல உங்ககிட்ட நான் என் ஆசையச் சொல்லியும் நீங்க கேக்கலைங்கறதாலதான்… நான் அப்டி ஒரு முடிவை எடுத்துட்டேன்.  அது தப்புதான். சாரிபா. ஆனா அன்னைக்கு அதத்தவிர எனக்கு வழி தெரியலைப்பா, என்றவளை அமைதியாகப் பார்த்திருந்தார் வெற்றி.

 

“என்னைய… உங்களுக்கு அப்புறம்… ஒரு படி மேல அவரைத் தவிர வேற யாராலயும் நல்லா பாத்துக்க முடியாதுனு எனக்கு தோணினதால… அவரை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டேன்பா…! இன்னிக்கு வர எந்தக் குறையுமில்லாம, அவரும், அவங்க வீட்ல எல்லாரும் என்னைய பாத்துக்கறாங்கப்பா…!

 

அவரு இங்க வந்ததுல இருந்து உங்க முகமே சரியில்ல…! எனக்காக இங்க வந்தவருக்கு சரியான வரவேற்பு இல்லைங்கறப்போ… பிறந்த வீடா இருந்தாலும் என்னால இங்க வரமுடியாதுப்பா…!

 

அவரை கஷ்டப்படுத்திப் பாக்க முடியாது என்னால!

 

கிளம்பறேன்பா!”, என்றுவிட்டு அதற்குமேல் தந்தையின் பதிலுக்குக் காத்திராமல்,

 

“அவங்க… கிளம்ப வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, என்று தனது விடைபெறலுக்கான காரணத்தைக் கூறிவிட்டு அறையை விட்டு வெளியே வந்திருந்தாள் நவீனா.

 

மகளின் நிதானப் பேச்சைக் கேட்டவருக்கு நிச்சயம் கோபமில்லை.  ஆனால் வருத்தமிருந்தது.  வரும்நாட்களில் எல்லாம் சரியாகும் என்கிற நம்பிக்கையோடு செல்லும் மகளைப் பார்த்திருந்தார்.

 

இது எதையும் அறியாத மற்றவர்கள், அவரவர் பேச்சில் மனதை நிறுத்தியிருக்க… ஹாலில் அமர்ந்திருந்த கணவனிடம் வந்தவள், “கிளம்புவோமா, என்று கேட்டாள்.

 

மனைவியின் முகத்தைக் கண்டே, நவீனாவின் மனதில் எதோ உறுத்தலை உணர்ந்து உடனே கிளம்பியிருந்தான் சங்கர்.

///////

ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நவீனாவிற்கு, ஆச்சிகளான நன்முல்லை மற்றும் அன்னம்மாள் இருவரது கவனிப்போடு, கணவனின் கனிவான கவனிப்பும் சேர்ந்திருக்க… பெண் மகிழ்வாக குழந்தையைச் சுமந்தாள்.

 

பெண்ணின் காலில் இருந்த நகத்தை வெட்டியவாறு இருந்தவனிடம்,

 

“இப்டி ஆளாளுக்கு விழுந்து விழுந்து கவனிச்சிட்டா வருசம் ஒரு புள்ளை பெத்துக்கலாம் போலயே, என்று கணவனிடம் பேச

 

“பெத்துக்கிட்டாப் போச்சு! நான் ரெடி”, என்று கணவனும் பெண்ணின் பேச்சிற்கு ஒத்துழைப்பு நல்க…

 

“எப்படா சான்சு கிடைக்கும்னு காத்துக் கிடந்தமாதிரி பேச்சு வருது?

 

“சரி வேணானு சொல்லியிருந்தா என்னடீ சொல்லியிருப்ப?, என்று சங்கரும் விடாமல் கேட்க

 

“என்ன சொல்லியிருப்பேன்?”, என்று யோசித்தவள், “அதையும் நீங்களே சொல்லுங்க, என்று கூற

 

“வர வர சாதாரணமா பேசக்கூட உனக்கு சோம்பேறித்தனம் வந்திருச்சு… வீனா!  இப்டி இருந்தா எல்லாரும் என்னைத்தான் குறை சொல்வாங்க, என்ற கணவனின் பேச்சில்

 

“அடுத்தவங்க உங்கள குறை சொல்லிறக்கூடாதுனு, என்னை பேச சொல்றீங்க?, என்று பெண்ணும் சிரித்தவாறே கூறியவள்

 

“அடுத்த புராஜெக்ட் பத்தி இப்ப பேச வேணாம்.  இந்த புராஜெக்ட்ல கிடைக்கிற ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ் அனலைஸ் பண்ணிட்டு ஒரு கன்குலூசன்கு அப்புறம் நெக்ஸ்ட் புராஜெக்ட்கு வருவோம், என்று நவீனா கூறினாள்.

 

“ஏண்டி, எம்புள்ளைங்க எல்லாம் உனக்கு புராஜெக்டா?, என்று சங்கர் வம்பு வளர்க்க…

 

“அப்புறமென்ன… ஒரு நாளா இரண்டு நாளா… வயித்தில எப்டியும் இருநூத்தி எழுவது… அப்புறம், வளக்கறதுனு நாலு வருசம் அவங்களுக்காக மெனக்கடனும்ல, என்று பெண் கூற

 

“இப்டி எல்லாம் கணக்குப் பாத்தா… உங்கம்மா உன்னை வளத்தாங்க, என்று சங்கர் வினவினான்.

 

“கணக்கு பாத்தாங்களா இல்லையாங்கறதா இப்ப பிரச்சனை.  நானே பேசனும்னு சொன்னீங்க… என்ன பேசனு… தெரியாம… பேச ஆரம்பிச்சா… டிபேட்ல வந்து நிக்கறமாதிரி… இது குத்தம், அது குத்தம்னு, போங்கங்க!, என்று கணவனிடம் கூறியவள், சிரித்தவாறே எழுந்தாள் பெண்.

 

“பாத்து… மெதுவா எழுந்திரி, என்றபடி மனைவியோடு எழுந்தவன், “புருசனை கொறை சொல்லாத பொண்டாட்டி உலகத்துல இருக்கவே மாட்டாங்களோ?”, சங்கர்

 

“உங்களை எங்க நான் கொறை சொன்னேன்?, என்று நவீனா கேட்க, அடுத்தடுத்து வந்த பெற்றோரின் வார்த்தையாடலில், வயிற்றினுள் இருந்த குழந்தையும் மகிழ்ந்திருந்தது.

/////

மூன்று வருடங்கள் கடந்த பிறகு…

 

வராவின் வாழ்வில் அவ்வப்போது பூகம்ப நிகழ்வுகள் வந்து போக, பெண் விரக்தியிலும், சண்டை சச்சரவிலும் பொழுதைப் போக்குகிறாள்.

 

பெரியவர்களிடம் அடங்கிப் போகும் சாந்தனு, வராவிடம் சற்றே கடுமை காட்டுவது படிப்படியாக உயர்ந்து வருகிறது.

 

பெண்ணுக்கு நிம்மதியில்லாத வாழ்வாக எப்போதும் புலம்பலும், வருத்தமுமாகச் செல்லத் துவங்கின நாட்கள்.

 

வராவின் தந்தை தன்னால் ஆனமட்டும் மகளின் நல்வாழ்விற்கு வேண்டியவற்றைச் செய்தாலும், கண்ணைக் குத்திவிட்டு, வழமைபோல சாந்தனுவின் ஏமாற்று வேலைகள் நடந்தேறுகிறது.

 

சாந்தனுவின் சுயம், அவன் விரும்பினால் ஒழிய மாற வாய்ப்பில்லை.  இது புரியாத வரா, நித்தமும் யுத்தமிட்டு களைக்கிறாள்.

/////////

 

ஜெய்சங்கர்-நவீனாவின் புதல்வன் ஜெயநவீன் தந்தையின் மேற்பார்வையில், பாட்டிகளின் ஆதரவில் வளர்கிறான்.

 

அன்னம்மாள் வயோதிகம் காரணமாக இறைவனடி சேர்ந்திருந்தார்.

 

அன்னம்மாளின் இறுதி பயணத்திற்கு வந்திருந்த மகள்கள், மற்றும் அவர்களின் மகள்கள், நவீனாவை நோக்கிப் பொறாமையில் பொருமினர்.

 

அடுத்து வந்த பதினாறாம் நாளிலும் அதே நிலை தொடர, ஆரம்பம் முதலே கண்ணுற்றவாறு அமைதியாக இருந்த சங்கர் அன்று பொறுமை இழந்திருந்தான்.

 

ஆம்.  அனைவரது பொருமலில் நவீனா அறைக்குள் சென்று முடங்கியிருந்தாள்.

 

தாஸிடம், “இனி எங்களுக்கு இந்த வீட்ல என்ன உரிமை இருக்கு.  எங்களை மதிச்சு ஒரு பச்சைத் தண்ணி கொடுக்கக்கூட எங்க புள்ளைகளை எடுக்கல, என்று அவரின் தமக்கை பேச அமைதியாக கேட்டவாறு அமர்ந்திருந்தார் தாஸ்.

 

அதுவரை அனைத்தையும் அமைதியாகப் பார்த்திருந்தவன், அதற்குமேல் பொறுமை போயிருக்க…

 

“அத்தை… உங்க நாலுபேரு வீட்ல யாரு வீட்ல இருந்து எனக்கு பொண்ணு எடுத்திருந்தாலும் உங்களை வாசல்லகூட இப்டி வர விட்ருக்க மாட்டாங்க..! ஆனா இப்ப வரை நாங்க செய்ய வைக்க, எங்க அம்மாவும், நவீனாவுந்தான் ஒத்தாசையா இருக்காங்க!

 

இன்னிக்கு வர இந்த வீட்ல பிறந்தவங்களுக்கு என்ன செய்தமோ, அதை எங்க ஐயா, ஆத்தா போயிட்டாலும் எந்தக் குறையில்லாம செய்ய இப்ப எங்க அப்பா இருக்காரு! அவரு காலத்துக்கு பின்ன நான், எனக்கப்பறம் என் மயன் செய்வான். இதுல எந்த மாற்றமும் வராது!

 

நாங்க செய்ய மறந்துட்டாலும், எங்க அம்மாவும், நவீனாவுந்தான் இன்னிக்கு வர உங்களுக்கு மறக்காம செய்யச் சொல்லி ஞாபகப்படுத்தறாங்க.  அப்டியிருக்க… வர தடவையெல்லாம் இந்த மாதிரி இனி பேசாதிங்க… அவங்க ரெண்டு பேரும் சொல்லலைனா ஆம்பிளைங்க எங்களுக்கு என்ன தெரியும்? சொல்லுங்க…, என்றவன்

 

“எம்பொண்டாட்டி மனசை காயப்படுத்திப் பாக்கணும்னு இனி இங்க வந்தா… நிச்சயமா அதுக்கு இங்க இடமில்லை!

 

எப்பவும்போல வந்து போயி இருங்க,  ஆனா யாரு மனசையும் சங்கடப்படுத்தாம வந்து போங்க.  இந்த வீடு எப்பவும்போல வந்த மனுசங்கள வரவேற்கும், என்றவன் அதற்குமேல் அங்கிருந்து நகன்றிருந்தான்.

 

கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் யாரையும், எங்கும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தனர்.

நவீனா சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணி புரிகிறாள்.

 

சங்கர் முழுநேர விவசாயியாக மாறிவிட்டான்.

 

நவீனா அரசுப் பணி தவிர, கிளினிக் எதுவும் வைக்காமல் மகனோடு மீதநேரத்தைச் செலவிடுகிறாள்.

 

வெற்றியின் தன்முனைப்பு பேரனின் வரவிற்குப் பிறகு வெகுவாகக் குறைந்துவிட்டது.

 

ஓய்விற்குப் பிறகு, ஹரிதாஸ் மற்றும் பேரனுடன் அவ்வப்போது வந்து நேரம் செலவளிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தார்.

 

நவீனா, கணவன் தனக்காக வேண்டியதை பார்த்துப் பார்த்து செய்வதை உணர்ந்து, பணிநேரத்தில் கைதேர்ந்த பொதுநல மருத்துவராகவும், இதர நேரத்தில் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்கி இனிமையான இல்லத்தரசியாகவும் மாறிக் கொண்டாள்.

 

“குட்டிப்பையன் மம்மு சாப்பிட்டீங்களா, என்று கேட்டவாறு குளித்துவிட்டு வந்து மகனைத் தூக்கினாள் நவீனா.

 

“சாப்த்தேன், என்று சிரித்தபடியே கூறினான் ஜெய்.

 

சமையல் கட்டிற்குள் சென்று உணவை எடுத்தவள், “அம்மா சாப்ட போறேன்.  அம்மாட்ட ஒரு வாய் வாங்கிக்கறீங்களா?, என்று மகனை இடுப்பில் தூக்கிக் கொண்டு, கையில் தட்டோடு வந்து கீழே குழந்தையை இறக்கிவிட்டு அமரச் செய்தவள், தானும் அமர்ந்தவாறு கேட்டாள்.

 

தலையை மறுத்து ஆட்டியவன், “நா ஊத்தி விதறேன், என்று தட்டில் வைக்கப்பட்ட உணவை தனது பிஞ்சுக் கரங்களால் எடுத்து தாயிடம் நீட்ட… அதை பிரசாதம்போல மகனிடம் குனிந்து வாங்கினாள்.

 

அதேநேரம் வீட்டினுள் நுழைந்த சங்கர், “அப்பாக்கு…, என்று கேட்க…

 

குழந்தை சிரித்தபடியே, “வாங்க ஊத்தறேன், என்று தட்டில் இருந்ததை கையில் எடுத்துக் கொண்டு தந்தையை நோக்கி நடந்து வந்தவாறு கூற

 

“இதோ வரேன்,  அம்மாவோட இரு… அப்பா கை,கால் கழுவிட்டு வந்து வாங்கிகறேன், என்றவாறு சங்கர் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அமர, பாரபட்சமில்லாது குழந்தை தாய், தந்தை இருவருக்கும் ஊட்டி மகிழ்ந்தது.

 

மூவரும் அமர்ந்து உண்ணுவதைக் கண்டு அங்கு வந்த சசி, “ஜெய், ஆத்தாவுக்கு சாப்பிட தரலையே, என்று பேரனிடம் கேட்க

 

“நீங்க சாப்தீங்களே, என்று பேரன் கூறிட

 

பேரனின் மழலைப் பேச்சில் மயங்கியவாறு, “எதையும் பாக்காத மாதிரி விளையாடறியேனு சொன்னா… எல்லாத்தையும் கவனிச்சிருக்க வடுவா, என்று பேரனின் முகத்தைத் தொட்டு திருஷ்டி கழித்தார் சசி.

 

மகனின் ஒவ்வொரு செயலையும் பேச்சையும் கண்டு,கேட்டு ரசித்தவாறே சங்கரும், நவீனாவும் உண்டு எழுந்தனர்.

 

சங்கர், நவீனா இருவரது வாழ்வும் சீரும், சிறப்புமாக இன்றுவரை இனிதே தொடர்கிறது.

 

நீயும் நானும் அன்பே… இத்துடன் நிறைவு பெறுகிறது…!

 

நன்றி!

 

—————