NNA5B
NNA5B
நீயும் நானும் அன்பே…
அன்பு-5B
வாரவிடுமுறை நாள்.
குளத்தில் சென்று குளிக்க ஆசைப்பட்டவளை பெரியவர்கள் மறுத்திருந்தனர். ‘அந்தத் தண்ணியில குளிச்சிப் பழக்கமில்லை. சளி புடிக்கும். வேணாம்’, என முல்லை மறுத்திருந்தார்.
முளைக்கொட்டிற்கு வந்தவர்களோடு அதிகாலையில் கிளம்பியவளை, ‘வீட்டிலயே குளிடாம்மா. உனக்கு எந்த இடத்துல எவ்வளவு ஆழம்னு எல்லாம் தெரியாது’, என்ற அவளின் சித்தி, “உனக்கு நீச்சல் தெரியுமா?”, எனக் கேட்டிருந்தார்.
“தெரியாது”, என்றவளை ‘நீ அந்தப் பக்கமே வரதைப் பத்தி இனி யோசிக்காதே’ என மிகவும் கண்டிப்போடு கூறிவிட்டார்.
வரா, வயல்காட்டினைப் பற்றி நல்ல மாதிரியாக அங்கு இருக்கும் சூழலைப் பற்றி விவரித்திருக்க, நவீனாவிற்கு சென்று காணும் ஆவல் வந்திருந்தது.
ஆச்சியிடமும், தாத்தாவிடமும் அனுமதி கேட்க, “அவ்வளவு தூரம் உன்னால நடக்க முடியாது. அப்படியே போனாலும் வரப்பில் நடந்து பழக்கம் இல்லை உனக்கு. பாத்து நடக்கணும். அதனால வேண்டாம்”, என நீண்ட நாளாகவே மறுத்திருந்தனர்.
ஆசையோடு நோக்கிய ஒவ்வொரு வார விடுமுறை நாட்களும் பெரியவர்கள் மறுத்ததால், மிகவும் வருத்தமாகக் கழிந்திருந்தது பெண்ணுக்கு.
நவீனாவின் முகவாடலைக் கடந்த சில வாரமாகக் கண்ட பெரியவர்கள்,
“அடுத்த வாரம்னா தாத்தா போகும்போது கூட போயிட்டு வா. ஆனா வரப்புல பாத்து நடக்கணும்”, என்று முல்லை கூறியிருந்தார்.
அதைக்கேட்ட நவீனாவிற்கு ஏக சந்தோசம்.
ஆச்சியின் ‘பாத்து நடக்கணும்’ வார்த்தையைக் கேட்டவளுக்கு,
‘நம்ம நடை மேல இந்த ஆச்சிக்கு எம்புட்டு நம்பிக்கை. இதுக்காகவே வரப்புல போயி நடந்து, ந்ம்ம நடையை இன்னும் மேம்படுத்தி நல்ல பேரு வாங்கிக் காட்டறோம்!’, என விளையாட்டாகவே எண்ணியிருந்தாள் நவீனா.
அடுத்த வாரவிடுமுறை நாளை ஆவலோடு நோக்கிக் காத்திருந்தாள் பெண்.
/////////////
சங்கர், இறுதியாண்டு படிப்பை மதுரை வேளாண் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.
ஏக்கர் கணக்கில் இருக்கும் தனது நிலங்களில் நல்ல மகசூலை கொண்டுவரவும், நிலத்தை தரிசாக்கி விடாமல் இருக்கவும் வேண்டித்தான், இள வேளாண் கல்வியைத் தேர்ந்தெடுத்திருந்தான்.
குருவேலுவின் தீவிரமான முயற்சியினால், சங்கருக்கு அந்த மாதிரியான எண்ணம் உருவாகியிருந்தது.
சங்கர் முதலாமாண்டு சேர்ந்த பிறகுதான் குருவேலு மரணமடைந்திருந்தார்.
அதுவரை விவசாயம் பற்றிய ஊக்கத்தை, அவனது உள்ளத்தில் ஊட்டியது குருவேலுதான்.
ஐயாவின் ஆசை ஊட்டும் வார்த்தைகளைக் கேட்டு, கற்க வந்திருந்தாலும், ஈடுபாட்டோடு கற்கத் துவங்கினான்.
கல்லூரி வாயிலாக, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் உள்ள ஒடுகம்பட்டியில் நம்மாழ்வார் அவர்களின் “குடும்பம் அமைப்பு”, இயங்கி வருவதை அறிந்து, கல்லூரி மாணவர்கள் அனைவரும் சென்று கலந்து கொண்டனர்.
அங்கே இயற்கைப் பண்ணை, இயற்கை வாழ்வியல், வயல், பள்ளி என்று அமைத்து, இயற்கை ஆர்வலர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
அதில் பயிற்சி பெற்றவனுக்கு நிறைய நுணுக்கங்களை அறிந்து கொண்டிருந்தான். அதனை தனது குடும்பத்து பெரியவர்களின் மூலமாகவே தங்களது நிலங்களில் விதைத்த பயிர்களுக்கு செயல்படுத்தினான்.
முதலில் சற்று கடினமாகத் தெரிந்தாலும், போகப் போக எல்லாம் பிடிபட்டது. அதன்பிறகு. மகசூல் மட்டுமன்றி, மண்ணின் வளமும் காக்கப்பட்டது.
வறண்ட பகுதியான சீவகங்கைப் பகுதியில் பயிரிடக் கூடிய தாவரங்களின் தன்மைக்கு ஏற்ப, எப்போது, எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டால் பயிர் பாதுகாப்பு மற்றும் மகசூல் இரட்டிப்பு சாத்தியமாகும் என்பதை பயிற்சியின் வழியாக கடைபிடித்து, அதனை தனது விடாமுயற்சியினால் வெற்றிபெறச் செய்திருந்தான் சங்கர்.
இறுதி ஆண்டு படிப்பு முடிந்தபிறகு, முழுநேர விவசாயியாக மாறத் திட்டமிட்டிருந்தான். அதில் எந்த பின்னடைவும் இன்றி அடுத்தடுத்த ஆயத்தப் பணிகளைச் செய்த வண்ணமிருந்தான்.
குருவேலு தவறிவிட்ட நிலையில், தனது கல்வி மற்றும் ஆராய்ச்சி அனுபவங்களை தங்கவேலு, ராஜவேலு இருவரிடையே பகிர்ந்து கொள்வான் சங்கர்.
இருவருக்கும் விவசாயம் சார்ந்த நல்ல அனுபவம் இருந்தாலும், பேரனின் வார்த்தைகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டனர்.
“இனி இரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்து வேணாம் ஐயா”, என்று கூறி மாற்றாக இயற்கை வழி மக்கச் செய்த கால்நடைகளின் கழிவுகளைப் பயன்படுத்த வழிகூறியவனை, பெரியவர்கள் மறுத்துக் கூறவில்லை.
“இனி டிராக்டர் எல்லாம் வேணாம்யா. இனி கலப்பை மாடு கட்டியே உழுவோம்”, என்ற பேரனின் பேச்சைக் கேட்டு,
“இதெல்லாம் நாம முன்ன பயன்படுத்தினதுதாம்பா. இப்ப இடையிலதான் எல்லாம் மாறிப்போச்சு”, என்று இரசாயன உரங்கள், டிராக்டர் கொண்டு உழுதல் போன்றவற்றை மாற்றி, பழைய முறைக்கு திரும்பியிருந்தனர்.
கல்லூரியில் பயிலும் நண்பர்கள் அனைவரும், சங்கரின் விவசாயப் பண்ணை பற்றி அறிந்திருந்ததால், ஆண்டுக்கொரு முறை வந்து அவர்களது விவசாய நிலங்களைப் பார்வையிடுவதை வழக்கமாக்கியிருந்தனர்.
இந்த ஆண்டும், அதேபோல பத்து நண்பர்களை வார இறுதியில் ஊருக்கு அழைத்து வர இருப்பதாக வீட்டிற்கு செய்தி கூறியிருந்தான் சங்கர்.
////////////
தன்னையே வட்டமிடும் கண்கள், நண்பர்களோடும், அடுத்தடுத்து விவசாயம் சார்ந்த பணிகளை மேற்பார்வையிடல் என்றும் பணிச்சுமையோடு தெரிந்தவனைப் பார்த்தவளுக்கு,
‘அப்பாடி, ரெண்டு நாளு கண்ணு ஓவர் டைம் பாக்கறதுக்கு லீவு விட்டுட்டாருபோல மனுசன்’, என்று எண்ணிக் கொண்டாள் நவீனா.
வருத்தம் எதுவும் வந்திருக்கவில்லை.
முந்தைய வாரத் திட்டமிடலின்படி, தங்கவேலுவுடன் சாந்தனு, நவீனா, வரா, மற்றும் அவளின் வயதொத்தவர்கள் மட்டும் வயல்வெளியை நோக்கிக் கிளம்பியிருந்தனர்.
பண்ணைக்கு காரில் அழைத்துச் சென்று இறங்கச் செய்தவர், “சுத்தி கண்ணுக்கு எட்டரவரை நம்ம காடு கரை தான்மா. பாத்து நடக்கணும். ரொம்ப தூரம் போகக்கூடாது. வரப்புல நடக்கும் போது செருப்பு போடலாம். வயலுக்குள்ள செருப்பு போட்டு இறங்கக்கூடாது”, என்று கூறியவர்
அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளிக் கொட்டகையினுள் சென்று ‘அக்கடா’ என வயோதிகம் காரணமாக வந்திருந்த உபாதைகளின் வீரியத்தால் அமர்ந்துவிட்டார்.
வயோதிகம் காரணமாக, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் இருக்கவே, நீண்ட, நெடிய தூர நடையை இயன்றவரை தவிர்த்துவிடுவார் மனிதர்.
சாந்தனுவிற்கு தனது சகோதரன் சங்கருடன் வந்த அனுபவத்தில், தனக்கு தெரிந்ததை நவீனாவுடன் பகிர்ந்தபடியே வந்தான்.
வரா, அவளது பங்கிற்கு தெரிந்ததை கூறியபடி வந்தாள்.
கேட்டபடியே ஜாக்கிரதையாக நடந்து வந்தவள், தூரத்தில் தெரிந்தவர்களை அவ்வப்போது வேடிக்கை பார்த்தபடியே, வரப்பிலும் கவனம் வைத்து நடந்து வந்தாள்.
நீண்ட நேர நடையில், நிறைய புது வகை பயிர்களைக் கண்டு, அது என்ன? இது என்ன? என ஆவலோடு கேட்டவளுக்கு, விளக்கம் கூறிய சாந்தனு முன்னே நடக்க, சற்று கவனத்தைக் குறைத்திருந்த காரணத்தால், வரப்பிலிருந்து கால் தவறி ‘அம்மா’ என்ற கத்தலோடு வயலுக்குள் விழுந்திருந்தாள் நவீனா.
விழுந்தவள் எழுப்பிய சத்தம், நெடுந்தூரம் கேட்டிருந்தது.
எழ முயன்றவளுக்கு, வேதனையில் நிற்க முடியாமல் கணுக்காலில் உயிர்போகும் வலி எடுத்தது. மேலும் அந்தக் காலில் சிராய்ப்புகள் வந்து வெளுத்த காலில் ஆங்காங்கு, இரத்தம் இப்போ வரவா? என மாதுளை முத்துவின் நிறத்தில் எட்டிப் பார்த்திருந்தது.
இதுவரை யாரிடமும் தனது கண்ணீரைக் காட்டியிராதவள், வாய் விட்டு அழாமலேயே கண்களில் இருந்து கண்ணீர் வழியத் துவங்கியிருந்தது.
வரா, அருகில் வயல் வேலையாக நின்றிருந்தவர்களை உதவிக்கு அழைக்கலாம் என்று நவீனாவிடம் கூற மறுத்துவிட்டாள்.
“கால் புஷ்னு வீங்கிருச்சுக்கா… இப்டியே வச்சிட்டு இருந்தா இன்னும் வலி கூடும். நா போயி கூட்டிட்டு வரேன்”, என்க
“இல்லை, வேல பாக்கறவங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம். நா, சாந்தனு ஷோல்டர் பிடிச்சிட்டு நடந்து மெதுவா வரேன். நாம அந்த ஷெட்கு போயிரலாம்”, என்க
சாந்தனுவும் மறுக்காமல் நவீனாவை கைத்தாங்கலாக பிடித்து எழுப்பி மறுபுறம் வரா உதவிவோடு ஒருவழியாக தங்கவேலு இருந்த கொட்டகைக்கு வந்திருந்தனர்.
தங்கவேலு, பேத்தியின் கண்களில் கண்ணீரைக் கண்டு, பதறியிருந்தார்.
பேத்தியின் கால்களில் இருந்த வீக்கம் மற்றும் சிராய்ப்பினைக் கண்டு மனிதர் துடித்துப் போனார். அவரின் பதற்றத்தைக் கண்ட சிறியவர்கள், ஒன்னுமில்லை தாத்தா என அவருக்கு ஆறுதல் கூறியிருந்தனர்.
சாந்தனுவிடம் கூறி, வயல்வெளியில் இருப்பவர்கள் இதுபோன்ற சுழுக்கை உருவி விடுபவர் யாரேனும் இருந்தால் அழைத்து வா என அனுப்பியிருந்தார்.
அங்கங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டு எங்கும் ஆளில்லாமல் இறுதியாக, இனி என்ன செய்ய என நொந்து போய் திரும்பும் வழியில் எதேச்சையாக சங்கரைச் சந்தித்தான் சாந்தனு.
சாந்தனு நீண்ட நேரம் வயல்வெளிக்கிடையே வெயிலில் அழைந்ததாலும், உதவிக்கு சரியான நபர்கள் கிட்டாததாலும் முகம் வாட நடந்து வந்திருந்தான்.
நண்பர்களோ இருந்தாலும் தம்பியின் முகம் வாடியிருந்ததைக் கண்டு, “ஏன் சாந்தனு, ஏதும் பிரச்சனையா முகமெல்லாம் வேர்க்க விறுவிறுக்க அங்கயும், இங்கயும் போன”, என்று கேட்டிருந்தான் சங்கர்.
“நவீ, வரப்புல கால் தவறி விழுந்து ஒரே அழுகைண்ணா”, என்ற விடயத்தைப் பகிர்ந்தவனைக் கண்டு,
“ஏன் என்னாச்சி, அவள யாரு இங்க எல்லாம் கூட்டிட்டு வரச் சொன்னா?”, என்ற தமையனின் கேள்வியில்
“ரொம்ப நாளாவே ஒரே நச்சரிப்புண்ணே. அதுல போன வாரமெல்லாம் யாரு கூடவும் பேசாம தனியாவே இருந்து ஐயாக்கிட்ட காரியம் சாதிச்சிது. அதனாலதான் இந்த வாரம் கூட்டிட்டு வந்தாங்க”, என்று காரணத்தை பகிர்ந்தான் சாந்தனு.
“சரி அவ விழுந்த உடனே ஏன் என்னைக் கூப்பிடல? எதுக்கு தனியொருத்தனா இப்டி அலைஞ்சிருக்க”, என்று தம்பியைக் கடிந்து கொண்டவன், நண்பரிகளிடம் கூறிக் கொண்டு உடனே கொட்டகை நோக்கி புயல் வேகத்தில் வந்திருந்தான்.
வரும் வழியில் சாந்தனு மூலம் இதர விடயம் பற்றிக் கேட்டறிந்து கொண்டவன், இன்று இங்கு எத்தனை பேர் வந்தார்கள், என்ன, ஏது என அனைத்தையும் கேட்டறிந்தான்.
“ஐயா…”, என தங்கவேலு முன்வந்து நின்றிருந்தான் சங்கர்.
சங்கரைக் கண்டவுடன், அந்த இறைவனைப் பார்த்ததைப் போல பெரியவர் உள்ளம் நெகிழ்ந்திருந்தார்.
“இதுக்குதான் நான் இங்க வரவேணாமுன்னு சொன்னேன் சங்கரு. சொன்னா கேட்கலை. இப்ப உக்காந்து அழுதுகு. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிருவமா சங்கரு”, என்று பேரனிடமே என்ன செய்ய எனப் புரியாமல் கேட்டார் பெரியவர்.
“வீட்ல, ஆத்தாகிட்ட எண்ணைய் தேச்சு விடச் சொல்லுவோம், சரியாகிட்டா பரவாயில்லை. இல்லைனா இன்னிக்கு சாயந்திரம் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போவோம் ஐயா”, என்றவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் கண்களில் நீரோடு குனிந்து அமர்ந்திருந்தாள் பெண்.
வராவிற்கோ, ‘நாமல்லாம் எத்தனையோ தட விழுந்து எந்திரிச்சு போயிருக்கோம். இந்த அக்காவுக்கு மட்டும் என்னாச்சு. இப்டி காலு பலூன் கணக்கா வீங்கி கிடக்கு. எப்பவும் அழுவாத அக்கா கண்ணுல இருந்து தாரை தாரையா தண்ணீ ஊத்துது. பாவம் ரொம்ப வலிக்குது போல’ என எண்ணியவாறே வருத்தத்தோடு மற்றவர்களுடன் அமைதியாக நின்றிருந்தாள்.
சாந்தனுவிற்கோ, ‘ஆசைப்பட்டு பாக்க வந்துது, இப்படி ஆகும்னு யாருக்கு தெரியும். வரும்போது அவ்ளோ சந்தோசமா வந்தது. இப்ப இப்டி அழுது கரையுது’ என வருத்தமடைந்திருந்தான்.
சங்கரை அழைத்து வருமுன், ஈரத்துணியால் நவீனாவின் வீங்கிய கணுக்காலைச் சுற்றி வைத்திருந்தார் தங்கவேலு.
முதலுதவியாகச் செய்திருந்த துணியை எடுத்து, வீக்கத்தை வைத்து அவள் வலியின் வீரியம் உணர்ந்தான்.
மறந்தும் பெண்ணின் கண்களைப் பார்க்கவில்லை. “எந்திரிச்சு காருக்கு நடந்து வந்திருவியா”, என்று பெண்ணிடம் கேட்க
தலையை ஆமோதித்து ஆட்டியவள், நிமிர்ந்து சாந்தனுவை நோக்கினாள்.
புரியாமல் நவீனாவை நாயகன் பார்த்திருக்க, கையைப் பிடித்துத் தூக்க ஏதுவாக சாந்தனுவை நோக்கிக் கையை நீட்ட, வரப்பில் தூக்கிவிட்டதுபோல சாந்தனு தூக்க முன்வந்தான். வராவும் உடன் வந்து உதவ வர
அனைத்தையும் பார்த்திருந்தவன்,
“ஐயா, நானே வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிறவா”, என ஒப்புதல் கேட்டு நின்றான் சங்கர்.
பெரியவர், “ஆமாயா, நீ இப்போ போறதால இன்னும் கொஞ்சம் நேரம் செண்டு நான் வீட்டுக்கு வாரேன். நீ முதல்ல இதுகளை கூட்டிகிட்டு கிளம்பு”, என்று சம்மதம் கூறியவுடன்
வலியோடும், மன வேதனையோடும் அமர்ந்திருந்தவளை எழுப்ப உதவிய சாந்தனு மற்றும் வராவைத் தடுத்தான்.
அனைவரும் பார்த்திருக்க, தனது இருகைகளால் பெண்ணை பஞ்சுப் பொதியைப்போல தூக்கியிருந்தான் சங்கர்.
வராவிற்று திறந்த வாய் மூடவில்லை. இதெல்லாம் படத்தில் பார்த்த காட்சிகள் மட்டுமே. இதுவரை ஊருக்குள் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திராத அனைவரும் வித்தியாசமாகப் பார்த்திருந்தனர்.
வேறு வழியில்லையா? என பதறி, மறுத்துப் பேசத் துவங்கியவளை,
“காலை ஊனி நடந்தா இன்னும் வீக்கம் கூடும். வண்டிவர உன்னை சாந்தனு பிடிச்சு கூட்டிட்டு வரது அவனுக்கும் கஷ்டம்”, என்று கடினக் குரலில் வார்த்தைகளை உகுத்தவன், தூக்கியபடி நடந்திருந்தான்.
சங்கரை நோக்கி நிமிர்ந்த பெண்ணின் பார்வையைப் புரிந்து கொண்டவன்,
“கடத்திட்டா போறேன். காலு வலிங்கிறதால வண்டிவர தூக்கிட்டுப் போறேன். அதுக்கெதுக்கு இந்தப் பதறு பதறுற”, என்று அதட்டிவிட்டு, இதெல்லாம் தனக்கு ஒன்றுமில்லை என்பதுபோல விசுக்கென தூக்கியவாறு வண்டியை நோக்கி நடந்திருந்தான் சங்கர்.
கொட்டகையிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் நின்றிருந்த காரை நோக்கி, தன்னைத் தூக்கியபடி நடந்தவனின் செயலில், பெண்ணுக்கோ மிகவும் லஜ்ஜையாகத் தோன்றியது.
‘இவரு எதுக்கு இப்டித் தூக்கி என்னை சங்கடப்படுத்தறார்’ என நினைத்தாலும், அவனிடம் சொன்னால் என்னாகும் என்று தெரிந்ததால், அமைதியாகவே இருந்தாள் நவீனா.
பின்சீட்டில் பெண்ணை இலகுவாக அமர வைத்தவன், “காலை கீழே தொங்கப் போடாம மேலே தூக்கி வச்சிக்க”, என்றான். அதற்குமேல் எதுவும் பேசாமல், சாந்தனு, வராவுடன் வந்தவர்களையும் வண்டியில் ஏறச் செய்து, வண்டியை கிளப்பியிருந்தான்.
சாந்தனு, வரா, மற்றும் வந்திருந்த அனைவரும் வண்டியில் நவீனாவிற்கு இடைஞ்சல் தரா வண்ணம் ஒதுங்கி அமர்ந்து கொண்டிருந்தனர்.
பாதை கரடுமுரடாக இருக்கவே வண்டியின் ஆட்டத்தில், இன்னும் வாய்விட்டு அலறியவளை, முறைத்துப் பார்த்தவன்,
“இங்க எதுக்கு வரணும்? சரி… வந்தவ பாத்து நடந்து வந்திருக்கனும். பொடதில கண்ணு வச்சிட்டு போயி வரப்புல வழுக்கிவிட்டு விழுந்துட்டு, இப்ப வண்டிய ஓட்டும்போது அலறுனா என்ன செய்யுறது? வாயை மூடிட்டு வா!” என்ற சங்கரின் உஷ்ண குரலைக் கேட்டவளுக்கு
‘ஐயோடா’ என்றிருந்தது. ஆனாலும் வலியில் முணகியவளை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடியே வண்டியை மெதுவாகவே ஓட்டி வந்தான்.
வலியோடு வந்தவர்களுடன் எதாவது பேசியவளைப் கோபம் குறையாமல் திரும்பிப் பார்த்தான் சங்கர்.
‘அந்த வாயி எங்கிட்ட பேசமட்டுந்தான் பூட்டிக்கும். எல்லாருக்கிட்டயும் வளவளதான்’ என்ற எண்ணத்தோடு வண்டியை செலுத்தினான்.
‘இவங்க இப்ப எதுக்கு கோவப்படுறாங்கன்னு தெரியலையே. நான் விழுந்தது… என்ன வேணுணா போயி விழுந்தேன். ஏதோ என் நேரங் காலம்… வேடிக்கை பாத்திட்டே போயி வெள்ளந்தியா விழுந்து வாரிட்டேன்’ என அலுத்துக் கொண்டவள் வந்த அழுகையை அடக்கியிருந்தாள் நவீனா.
“அது ரொம்ப நாளாவே இங்க வரணும்னு கேட்டுச்சுன்னே… அதான் இன்னிக்கு ஐயா கூட்டிட்டு வந்தாங்க.. ஆனா வயலுக்குள்ள இறங்குறதுக்கு முன்ன சொல்லித்தான் விட்டாங்க.. பாத்து மெதுவாதான் நடந்து வந்துச்சு. ஆனாலும் எப்டி இப்டி ஆச்சுன்னே தெரியலை”, என்று சாந்தனு நவீனாவிற்காக பேசியிருந்தான்.
“ஆமா மச்சான். ரொம்ப நாளாவே அக்கா வரணும்னு தாத்தாகிட்ட சொல்லிக் கேட்டுச்சு. தாத்தாதான் வேணானு சொல்லிட்டு, இந்த வாரம் கூட்டிட்டு வந்தாங்க”, என்று கூற
“எல்லாத்துக்கும் நீதான் காரணம். அவளுக்கு இங்க எதுவும் தெரியாது. நீ எதாவது சொல்லி ஆசை காட்டப்போக அதைப் பிடிச்சிட்டு உங்கக்காரி தொங்குறா”, என்று வராவையும் கடிந்து கொண்டான்.
சங்கரின் பேச்சில் இருந்த உண்மை உரைக்கவே, வரா அமைதியாகி இருந்தாள்.
சங்கரின் ‘அவ’ ‘இவ’ளை காணும் நிலையில் பெண்ணில்லை. திட்டுவதை மட்டும் ‘இன்னிக்கு இவங்ககிட்டல்லாம் பாட்டுக் கேக்கணும்னு இருக்குபோல’ என நொந்தபடி வந்தாள் நவீனா.
நவீனாவின் வலியை உணர்ந்து வண்டியை மெதுவாகவே உருட்டினான் சங்கர்.
வீட்டிற்கு வந்தவன், அம்மா, மற்றும் சித்தியை அழைத்து பெண்ணை வீட்டிற்குள் தூக்கி வரச் செய்தான்.
அன்னம்மாள் ஆச்சி தனக்கு தெரிந்த கை வைத்தியம் மூலம், சரியாகக் கணித்து, கணுக்காலை தொட்டுப் பார்த்து வீக்கம் கண்டு உணர்ந்து, சிகிச்சை கொடுத்தார்.
விடயம் அறிந்த முல்லை, ‘இவளுக்கு எதாவது ஒன்னுன்னா மகளுக்கு என்ன பதில் சொல்றது’, என மனங்கலங்கி, கண்ணில் நீரோடு பேத்தியை அரவணைத்திருந்தார்.
அன்னம்மாள் உருவிய உருவலில், காலை மறுபுறம் உருவிய பெண்ணை அத்தைமார்கள் அனைவரும் அமுக்கிப் பிடித்துக் கொள்ள துடித்து கதறிவிட்டாள் பெண்.
ஒரு வழியாக அதற்கான பணிகளைப் பார்த்து திருப்தியான அன்னம்மாள், கொஞ்ச நேரம் அப்பிடியே படுத்திரு என்று விட்டிருந்தார்.
அனைவரும் அவரவர் பணியை பார்க்கச் சென்றிருக்க, வரா, விடயம் தெரியாதவர்களுக்கு, ஸ்கீரின் ப்ளே செய்து விளக்க முற்பட்டிருந்தாள்.
சாந்தனு வருத்தத்தில் நகர்ந்திருந்தான்.
சசிகலாவிற்கு, “சித்திகளைக் கூட்டிட்டு நவீனா போயி தூக்கிட்டு வாங்க, காருக்குள்ள இருக்கா”, என்ற மகனின் வார்த்தைகளைக் கேட்டு பதறியிருந்தார்.
“என்ன சங்கரு, என்னாச்சு”, என்ற தாயின் கேள்விக்கு
“போயி பாருங்க, இவளை யாரு அங்கல்லாம் வரச் சொன்னது”, என்று திட்டியவாறே தலை முடியை மேலிருந்து கீழாகத் தடவி. கண்களை மூடி தன்னை ஆசுவாசப் படுத்திச் சமாளித்தவனைக் கண்டவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
எப்படி உள்ளே நவீனாவை தூக்கி வந்தோம் என்பது கூட மறந்திருந்தது.
சாரதாவும், ராஜவேலுவும் பதறி பேரனிடம் விசாரணையை மேற்கொண்டிருந்தனர். சங்கரும் அமைதியாகவே பதிலளித்தான்.
நவீனாவின் கத்தலில், உள்ளுக்குள் கதறியிருந்தான் சங்கர். ஆனாலும் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாது அமைதி காத்தான்.
ஒருவழியாக அழுது களைத்தவளுக்கு, சூடான முதலுதவிப் பானம் வழங்கப்பட்டது.
காரசாரமாக இருந்ததைக் குடித்தவள் சற்று நேரத்தில் அயர்ந்து உறங்கியிருந்தாள்.
உறங்கியவளை வந்து அவ்வப்போது பார்த்துச் சென்றவன், விட்டு வந்திருந்த நண்பர்களைப் பற்றி எண்ணாது அமர்ந்திருந்தான்.
“தொட்டாச் சிணுங்கி
தேகம் கொண்டவளே!
தொடாமலேயே சிணுங்கி – என்
வேகம் கூட்டுபவளே!
சிணுங்கலை மறந்து
சிரிப்பைத் துறந்து
சிந்திய வெந்நீரில் – என்
ஆவி போனதடி!
அரை உசிராய் ஆனதடி!
காதலோடு ஏந்தக் காத்திருந்தவனை
காயத்தோடு ஏந்தச் செய்தவளே!
காயம் செய்த மாயத்தில் – என்
சாயம் வெளுத்திடுமோ!
சாபம் வந்து சேர்ந்திடுமோ!
நன்றாக உறங்கி விழித்தவளை, “இப்போ வலி எப்படி இருக்கு?”, என்று வலியை மறைத்துக் கொண்டு கேட்ட வார்த்தைகளுக்கு உரியவனை அங்கு எதிர்பாராதவள், திகைத்து கேள்வி வந்த திசை நோக்கித் திரும்பினாள்.
வதனத்தில் வருத்தத்தோடு, வார்த்தைகளில் குறைவில்லா சீற்றத்தோடு, வாசலின் நின்று கேட்டவனைக் கண்டவளுக்கு வருத்தமாக இருந்தது, அவனது தோற்றம்.
‘ஏன் இப்ப யாருக்கு என்ன ஆச்சு, எதுக்கு இவங்க இப்டி இருக்காங்க. வெளியில பாக்க ஒரு மாதிரியும், பேசும்போது வேற மாதிரியும்’ என்று நினைத்தவள், கேட்டவனுக்கு என்ன பதில் கூறினாள்….
அடுத்த அத்தியாயத்தில்…