NNA6B

NNA6B

நீயும் நானும் அன்பே

அன்பு-6B

 

அடுத்தடுத்து வந்த இருநாட்களும் வழக்கத்தை விட, யாரும் நடமாட்டமில்லா குகைக்குள் இருக்கும் நிசப்தத்தை, அந்த வீடு குத்தகைக்கு எடுத்திருந்தது.

 

சிறுவர், சிறுமியர் மட்டும் வழமைபோல சிரிப்பும், குதூகலமுமாக இருந்தனர்.

 

சசிகலாவை தேடிச் சென்ற நவீனாவை, வழமைபோல வரவேற்று பேசி அனுப்பியிருந்தார்.  ஆனாலும் அத்தையின் முகத்தில் ஏதோ ஒன்று குறைந்தாற்போன்ற உணர்வு நவீனாவிற்கு வந்தது.

 

ஆனால் தாஸூம், உடன் வந்த சிறுமியும் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே வலம் வந்தனர். வெளியில் எங்கும் அதிகம் தலைகாட்டவில்லை.

 

முதல்நாள் சசிகலாவை மட்டும் சென்று சந்தித்தவள், அடுத்த நாள் எதேச்சையாக சங்கரின் வீட்டிற்கு வந்திருந்த புது சிறுமியை அவளாகவே தேடிச் சென்று சந்தித்தாள்.

 

“ஹாய்… ஐம் நவீனா, யுவர் ஸ்வீட்நேம் ப்ளீஸ்!”, என வலியச் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டிருந்தாள் நவீனா.

 

“…, அந்தச் சிறுமி நவீனாவை அங்கு எதிர்பாராததால், திகைப்புற்று, எதுவும் பேசாமல் திருவிழாவில் காணாமல் போனவளைப் போல விழித்தது.

 

தான் பேசியது எதுவும் புரியவில்லையோ என்ற எண்ணத்தில், “உம்பேரன்ன?”, என விடாது வினவியிருந்தாள் நவீனா.

 

“…”, வாயைத் திறக்காமல் எதிரில் வந்து நின்றவளை ஆராய்ந்தாள் நவீனாவின் வயதொத்திருந்தவள்.

 

பேசாமல் இருந்தவளை செய்கையால் பேசத் தெரியாதா? ஊமையா? காது கேட்காதா? என நவீனா விடாமல் கேட்க, அவள் கேட்ட சைகை முறையில் உண்டான நவீனாவின் முகமாறுதல்களைப் பார்த்து, அவளறியாமலேயே சிரித்திருந்தாள்.

 

பெண்ணின் சிரிப்பில் அடுத்த கட்ட முயற்சிக்கு முன்னேறி, “சொல்லுங்க”, என நவீனா ஊக்கினாள்.

 

“ம்… மோனிகா!”, என்று கூறியவளின் குரலின் மென்மை இனிமையான மெல்லிசையினை நினைவுறுத்தியது நவீனாவிற்கு.

 

“ஸ்வீட் நேம் அன்ட் கேட்ச்சி வாய்ஸ்! நான் நைன்த், நீங்க?

 

நானும் நைன்த் தான்..

 

அதற்குமேல் அவளுடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு, வழக்கமான அவர்களது சங்கம் கூடுமிடத்திற்கு வந்திருந்தாள் நவீனா. மற்றவர்கள் அங்கிருக்க, தான் மோனிகா பற்றி அறிந்ததை, சாந்தனுவிடம் மட்டும் மெல்லிய குரலில் பகிர்ந்து கொண்டாள் நவீனா.

 

“அங்க என்ன குசுகுசுன்னு பேச்சு, என பொடியன் நவீனாவைக் கேட்க

 

“ஒன்னுமில்லைடா, நம்ம ஸ்கூல்ல இனி சாட்டர்டே லீவு கிடையாதாம்.  அதத்தான் சாந்தனுகிட்ட கன்ஃபார்ம் பண்ண கேட்டேன், என மாற்றி நவீனா சமாளிக்க

 

“அப்டித் தெரியலையே, என சரியாகக் கணித்து நவீனாவைக் காண்டாக்கியிருந்தான் பொடியன்.

 

தன்னோடு, பொடியனை அருகில் இழுத்து வைத்து, அவனிடம் மோனிகா பற்றி தான் அறிந்ததை, மெல்லிய குரலில் ரகசியம்போல கூற,

 

“அது… அன்னிக்கே எனக்கு அவங்க பேரு தெரியுமே!, என இதெல்லாம் ஒரு விடயமா என்கிற தினுசில் கேட்ட பொடியனைக் கண்டு, அதுவரை மோனிகா பற்றி அறிந்து வந்தததில் தனக்குள் புலங்காகிதமடைந்து இருந்தவளை, புஸ்வானம் ஆக்கியிருந்தான் சிறுவன்.

 

பெண்ணின் நிலையை சாந்தனு பரிகாசம் செய்ய, நவீனாவிற்கு என்னவோபோல ஆகியிருந்தது.

 

வாடியவளைத் தேற்றியிருந்தான் சாந்தனு.

 

ஆனாலும், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக மோனிகாவுடனான பேச்சு வார்த்தைகளைக் கூட்டியிருந்தாள் நவீனா.

 

வீட்டிற்குள் இருந்தாலும், ‘சசி…. சசி.. எனத் தனது தேவைகளுக்கு அத்தையை அணுகிய, மாமனை ஆச்சர்யமாக நோக்கினாள் பெண்.

 

மோனிகா மட்டும் தந்தையைத் தவிர, நவீனாவுடன் மட்டும் இயல்பாக உரையாடினாள்.

]]]

வாரயிறுதி நாளும் வந்தது.

 

வீட்டிற்குள் வருமுன்னே வரும்வழியிலேயே வம்பர்களின் வார்த்தைகளால், தந்தையுடன், ஒரு சிறுமியும் வீட்டிற்கு வந்ததை அறிந்திருந்தான். எட்டு மணியளவில் வீட்டிற்கு வழமைபோல வந்த சங்கர், ஐயாமார்களுடன் சிறிதுநேரம் பேசிவிட்டு, அன்றிரவே மதுரைக்கு திரும்பியிருந்தான்.

 

பெரியவர்கள், தாய் அனைவரும் மறுத்தும் கிளம்பிச் சென்றவனை யாராலும் தடுக்க இயலவில்லை.

 

என்ன? ஏதென்று விடயம் தெளிவாகத் தெரியாமல் மற்றவர்கள் அமைதியோடு இருக்க, அன்னம்மாளும், சசிகலாவும் அடுத்து வந்த நாட்களில் தங்களுக்குள் இறுகிப் போயிருந்தனர்.

 

தந்தை வந்ததை இலகுவாக எடுத்துக் கொண்டவனால், தந்தையோடு, தங்கையென வந்தவளை அந்த வீட்டில் சேர்க்க மனம் ஒத்துழையாமை இயக்கம் செய்யததால், மன இறுக்கம் மற்றும் கோபம் காரணமாக திரும்பிச் சென்றதாக சங்கரைப் பற்றி வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொண்டதை, அவர்கள் பேசிக் கொண்டதன் வாயிலாக அறிந்து கொண்டிருந்தாள் நவீனா.

 

சங்கரின் குடும்பம் மட்டும் புரியாத புதிராக அவளுக்கு இன்னும் இருக்க, யாரிடம்? என்னவென்று கேட்க என்று தோன்றாமல், சாந்தனுவிடம் வந்து விசாரித்துப் பார்த்தாள்.

 

முதலில் கூறாமல் இருந்தவன், பிறகு ஓரளவு தான் அறிந்தவற்றை, நவீனாவுடன் பகிர்ந்து கொண்டிருந்தான் சாந்தனு.

 

தாஸூவிற்கு இரண்டு மனைவியர்.  இப்போது இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகளோடு வந்திருக்கிறார்.  ஆனால் இரண்டாவது மனைவி என்ன ஆனார் என்பது சாந்தனுவிற்கும் தெரிந்திருக்கவில்லை.

 

சசிகலா அத்தையின் மீது பரிதாபம் உண்டாகியிருந்தது பெண்ணுக்கு.

 

ஆனாலும், எந்த உணர்வையும் காட்டாது வலம் வருபவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள் பெண்.

 

மூன்று வாரங்கள் வீடு அதே நிலையில் வாசமில்லா சந்தனத்தை சோகத்தோடு பூசியவாறே தொடர்ந்தது.

 

சங்கர் அன்றிரவு வந்து சென்றபின், அந்த வீட்டின் பக்கமே என்பதைவிட அந்த ஊரின் பக்கமே வரவில்லை.

]]]

சங்கராக வீட்டு தொலைபேசிக்கு அழைத்துப் பேசினாலேயொழிய அன்னம்மாளுக்கும், சசிகலாவிற்கும், வீட்டிலுள்ள மற்றையோருக்கும் அவனோடு பேசுவது இயலாத காரியம்.

 

வாரந்தோறும் சில மாதங்களாக தொடர்ந்து வந்து போன மகன், தற்போது வீட்டிற்கு திடீரென்று வராமல் இருந்தது, சசிகலாவிற்கு தன்னுடைய ஒட்டு மொத்த சந்தோசத்தைப் பரிகொடுத்ததுபோல இருந்தது.

 

கணவருக்கு வேண்டியவற்றை தான் நின்று செய்தாலும், வந்திருந்த சிறுமியிடம் இயல்பாகப் பேச இயலாமல் ஏதோ ஒன்று தடுத்தது.

 

அன்னம்மாளுக்கும் மகன் வழிப்பேத்தி, மோனிகா மட்டுமென்றாலும், ஏதோ ஒரு இடைவெளி இருந்தது.

 

அந்த வீட்டின் ஒவ்வொரு அசைவிற்கும், சங்கரை அண்டியே சமீபகாலமாக வாழ்ந்து பழகிய அன்னம்மாள், பேரனை பார்க்காமல் மனம் துவண்டிருந்தார்.

 

அன்னம்மாளுக்கும், பேரனைக் காணும் ஏக்கத்தில், வீட்டிற்கு வருமாறு கூறி, தபால் எழுதும்படி மருமகளிடம் கூறியிருந்தார்.

 

மாமியாரின் பேச்சிற்கு இணங்கவும், தனது பரிதவித்த தாயுள்ளத்தாலும், மகனுக்கு கடிதம் எழுதியிருந்தார் சசிகலா.

 

தாயின் கடிதத்தைக் கண்டவனுக்கு ஊருக்கு வர விருப்பம் இருந்தாலும், வீட்டிற்கு வந்த இருவரை எதிர்கொள்ள இயலாத தனது மனதால் தயங்கினான்.

]]]

தயங்கியவனின் தயக்கம் போக்கினாள், நவீனா!

 

நவீனாவின் இனிய நினைவுகளோடு சமீப காலமாக இயங்குபவனை, ஊருக்கு வந்து செல்ல ஊக்கியது பெண்ணின் நினைவு!

 

ஃபீனிக்ஸைப் போல, (நவீனா) பெண்ணை நோக்கியே மீண்டும் மீண்டும் செல்லும் தன் நினைவுகளோடு போராடியவாறு இருந்தவனுக்கு, கடிதத்தைக் கண்டவுடன் ஊருக்குச் செல்லும் உத்வேகம் கூடியது.

 

உயர உயர

குறையா நினைவுகளோடு

உன்னை நோக்கியே

பறக்கும் என்

நினைவுகள்!

சங்கடங்களால்

சாம்பலானாலும் – உன்

நினைவுகளின்

உந்துததலில் என்னை

உயிர்ப்போடு

புதுப்பிக்கிறேன்!

வாழ்வின் சூரியனாக நீ!

ஃபீனிக்சாக நான்!

 

பெண்ணின் நினைவு, தனக்குள் உயிரோட்டத்தைக் கூட்ட, வாரயிறுதி நாளில், இறுமாப்பையும், எரிச்சலையும், கோபத்தையும் தூக்கி வீசிவிடத் துணிகிறான்.

 

கடிதம் வந்து, வாரம் கடந்தபிறகு, ஒரு முடிவிற்கு வந்தவனாக, ஊரை நோக்கி கிளம்பியிருந்தான் சங்கர்.

 

வெள்ளியன்று வழமைபோல வரும்நேரத்தில் கிளம்பாமல், சற்றுத் தாமதமாகவே ஊருக்குச் செல்லும் கடைசி பஸ்ஸில் கிளம்பி மானகிரி வந்திருந்தான்.

 

ஊரில் உள்ளவர்களின் கேள்விகைளைத் தவிர்க்க இந்த ஏற்பாடு.  இன்னும் அவனால் எதையும் இலகுவாக ஏற்றுக் கொள்ள இயலாதநிலை.  ஆகையால் தாமதமாக வீட்டிற்கு வரும்படி தனது பயணத்தை மாற்றிக் கொண்டிருந்தான்.

 

உறக்கத்தில் வீடு நிசப்தமாயிருந்தது.  தங்களது பகுதிக்குள் வந்து தாயை மெதுவாக எழுப்பியவன், தாயின் பரபரப்பில் “மெதுவா வாங்கம்மா, அவசரமில்லை, என்றுவிட்டு குட்டிக் குளியலைப் போட்டபின், உணவின் முன் வந்தமர்ந்தான். 

 

மகனின் வருகையில் மகிழ்ந்தவர், பார்த்துப் பார்த்து அந்நேரத்தில் கவனிக்க, எளிமையான உணவே போதும் என்றிருந்தான்.

 

சத்தம்கேட்டு எழுந்து வந்த தாஸைக் கண்டு கொள்ளாமல் உண்டவனை, அங்கிருந்த ஈஸிசேரில் சாய்ந்தபடியே அமைதியாக பார்த்திருந்தார் தாஸ்.

 

தந்தையாக கேள்வி கேட்டால், பதில் என்றளவில் இருப்பவனை யார் என்ன செய்ய முடியும்?

 

“தம்பி! மோனிகா ஸ்கூல் டிஸ்கண்டினியூ பண்ணிருச்சு.  சும்மா வீட்டுல பொழுது போகாம கஷ்டப்படுது.  ஏதாவது ஸ்கூல்ல இப்ப அட்மிசன் வாங்க முடியுமா?, தாஸ்

 

“ம்…, என உண்டவாறு தலையை ஆட்டியவன், “நம்ம சாந்தனுல்லாம் போற ஸ்கூல்ல கேட்டுப் பாப்போம், என்று முடித்துவிட்டான் சங்கர்.

 

அதற்குமேல் அங்கிருப்பதை விரும்பாதவன், உணவுண்டதாக பெயர் செய்துவிட்டு எழுந்தான்.

 

உறக்கமில்லாமல் தவித்த அன்னம்மாள், பேச்சுக் குரல் கேட்டு எழுந்து வந்திருந்தார்.  மகனும் பேரனும் பேசுவதைக் கேட்டவருக்கு மனங்கொள்ளா மகிழ்ச்சி. பேரனின் அருகில் வந்து நெட்டி முறித்தார்.

 

“ஏன் சங்கரு,  இந்த ஆத்தா போறதுக்குள்ள எல்லாம் சரியாகனும்யா, என வரம்போலக் கேட்டவரை, தன்னோடு அணைத்து தேற்றினான்.

 

“எல்லாம் சரியாகும் ஆத்தா, எனக்கு கொஞ்சம் காலஅவகாசம் வேணும். நான் ஐயாவைப் போயி பாக்கப் போறேன்.  நீங்க போயி படுங்க ஆத்தா!, என்றவன், அதற்குமேல் அங்கு நிற்காமல், தங்கவேலுவின் பகுதிக்குள் நுழைந்திருந்தான்.

 

முல்லை ஆத்தாவும், தங்கவேலு ஐயாவும் மிக மெல்லிய குரலில் சம்பாசனையில் இருக்க

 

“ஐயா, என்று அந்நேரத்தில் வந்த பேரனைக் கண்டு இருவருமே மகிழ்ந்திருந்தனர்.

 

“என்ன ராசா! கோபத்துல சாப்பிடவே இல்லையா!  இழைச்சு ரொம்பக் கருத்துட்டேயே, எனக் கண் கலங்கிய முல்லையை

 

“பொய் சொல்லாதீங்க ஆத்தா! எம்ஜியாரு கலரு உங்க பேரன்.  இப்ப பட்டினி கிடந்து மெலிஞ்சு கருத்துட்டேனாக்கும், என்று கிண்டல் செய்தான்.

 

“எப்பவும் போலத்தான சாப்பிடுறேன் ஆத்தா!  அப்புறம் எப்டி மெலிவேன்?, என வயதான ஆத்தாவின் மனதை நோகவிட மனமில்லாமல் மறைத்தான் சங்கர்.

 

“உங்க ஆத்தா உன்னை ரொம்ப நாள்செண்டு பாக்கறதால, அவளுக்குதான் நல்லா வித்தியாசம் தெரியும்.  நீ மெலிஞ்சது உனக்கே எப்டித் தெரியும்?, என்று ஐயாவும் முல்லையுடன் சேர்ந்து கொள்ள,

 

சிரித்து மழுப்பியவன், பண்ணை சார்ந்த விடயங்களுக்குள் ஐயாவை திசை திருப்பியிருந்தான். 

 

பேரனின் கேள்விக்கு பதிலளித்தவர், “நீ சொன்ன ஆளு அப்பப்போ வந்து பாக்குறாங்க சங்கரு.  நமக்கும் எதாவது தேவைன்னா நேருல போயி விசாரிச்சிக்கறதுதான், என்று பதிலளித்தார் தங்கவேலு.

 

சற்றுநேரம் இருவருடன் பேசிக் கொண்டிருந்தவன், “நேரமாச்சு, போயி படுத்து உறங்கு.  அசந்து தெரியற, என முல்லை நினைவுறுத்த விடைபெற்றான் சங்கர்.

 

விடைபெறலோடு உறங்கக் கிளம்பியவன், போகும் வழியில் நவீனாவின் அறையில் ஒரு எட்டு எட்டிப் பார்த்தான்.

 

நல்ல உறக்கத்தில் இருந்தவளை, அறைவாசலில் நின்று நிதானமாகப் பார்த்துவிட்டு, நிம்மதிப் பெருமூச்சை எடுத்து விட்டான்.  அதற்குமேல் மாடியே தஞ்சமென்று எண்ணியவாறே மாடியை நோக்கிக் கிளம்பியிருந்தான்.

 

அதிகாலையில் எழுந்தவன், மீண்டும் நவீனாவின் திவ்ய தரிசனம் முடித்து, தங்களது பண்ணையை நோக்கிக் கிளம்பியிருந்தான் சங்கர்.

]]]

சனிக்கிழமை… விடுமுறை ஆதலால், அன்று சாந்தனு தனது பட்டாளத்தோடு, தனது தூண்டில் கருவிகளோடு கிளம்பிக் கொண்டிருந்தான்.

 

பெரும்பகுதி நேரத்தினை மீன் பிடித்தலில் மற்றவர்கள் செலவளிக்க, இள வாண்டுகளோடு விளையாடி அலுத்துப் போனவள்,

 

“சாந்தனு, இன்னிக்கு மட்டும் நானும் உங்ககூட வந்து, எப்டி தூண்டில்ல மீன் பிடிக்கறதுன்னு பாக்கட்டா”, மிகவும் இரங்கிக் கேட்டவளைப் பார்க்க சாந்தனுவிற்கும் வருத்தமாகத்தான் இருந்தது.

 

ஆனாலும் அண்ணனின் கூற்றில் இருந்த உண்மை உலுக்கவே, “வேணாந்தாயே…! எங்க சங்கரண்ணனுக்கு தெரிஞ்சுது அவ்ளோதான்!, வருத்தம் இருந்தாலும் இவளை அழைத்துச் சென்று எதாவது பிரச்சனை வந்தால் வம்பு என அத்தோடு பேச்சைக் கத்தரித்தான் சாந்தனு.

 

“உங்க அண்ணந்தான் ஊருப்பக்கமே வரலையே!  இன்னிக்கு மட்டும் வந்திட்டு வரேனே!”, எனக் கெஞ்சினாள் பெண்.

 

சாந்தனு, வரா இருவரும் மறுக்க, விடாமல் தொந்திரவு செய்தவளை, “அப்ப ஆத்தாகிட்ட கேட்டுட்டு, அவங்க விட்டா வா!, என்று கூறிவிட்டு, எப்படியும், தங்கவேலு, முல்லை இருவரும் நவீனாவை விடமாட்டார்கள் என்ற தைரியத்தில் பேசிவிட்டு அகன்றிருந்தான் சாந்தனு,

 

கேட்டால் நிச்சயமாக விடமாட்டார்கள் என்று நவீனாவிற்கும் தெரிந்திருந்ததால், அமைதியாகிவிட்டாள் பெண்.

 

பத்து மணியளவில், முல்லை ஆச்சியுடன், தங்கவேலு காரைக்குடிக்கு கிளம்பியிருந்தார்.

 

“வீட்டுல பத்திரமாக இருந்துக்கோ! ஆஸ்பத்திரி வரை போயிட்டு, வந்திறேன், என்று ஆச்சி கிளம்பியதும், பெண்ணிற்கு புதியதாக ஐடியா ஒன்று உதித்தது.

 

பெரியவர்கள் இருவரும் காரைக்குடி சென்று வருவதற்குள், தூண்டிலில் மீன்பிடிப்பதை பார்த்து வர முடிவு செய்திருந்தாள் நவீனா.

 

சாந்தனுவிடம் மீண்டும் சென்றவள், ஆச்சி தன்னையும் மீன்பிடிக்க அழைத்துப் போகுமாறு கூறிவிட்டு, காரைக்குடி சென்றுவிட்டதாகக் கூறி மீன்பிடிக்க அவர்களோடு கிளம்பியிருந்தாள்.

 

நம்பாத பார்வையுடன், ஏராளமான இலவச அறிவுரைகளோடு அழைத்துச் சென்றனர்.

 

தங்களது மீன்பிடித் தளத்தின், நீர், நில அமைப்பைக் கூறி, அலார்ட் செய்திருந்தான் சாந்தனு.

 

“இங்கதான் நிறைய பெரிய மீனு மாட்டும்.  அதான் நாங்க எப்பவும் ரெகுலரா இந்த இடத்துக்கு வருவோம்.  ஆனா இங்க பக்கத்துல, என்று அருகாமையில் இருந்த இடத்தைக் காண்பித்து,

 

“கம்மாய் வறண்டப்ப தோண்டுன கிணறு இன்னும் மூடல.  அதுக்குள்ள மழை பேஞ்சு கம்மா நிரம்பிருச்சு.  அதனால நீ அங்குட்டு போகாம இந்தப் பக்கம் வந்து நின்னுக்க, என்று விளக்கி நவீனாவை எச்சரிக்கை செய்திருந்தான் சாந்தனு.

 

வராவும் வழிமொழிந்திருந்தாள்.

 

மொட்டை வெயில்கூட உரைக்காமல், தூண்டிலில் கவனம் செலுத்தியிருந்தனர் இவர்களோடு வந்த இன்னும் இருவரும்.

 

மண்புழு சேகரித்தலை இருவர் செய்தனர்.

 

வரா எடுபிடியாகி இருந்தாள்.

 

மண்புழுவை தூண்டிலில் உள்ள ஊசியில் குத்தி, நீருக்குள் விடவும், சற்று நேரத்தில் தூண்டில் மீனின் எடைக்கு தகுந்தாற்போல இறங்கவும் மேலே இழுப்பதையும் பார்த்தவளுக்கு, தனக்கும் மீன் பிடிக்கும் ஆசை எழுந்தது.

 

எடுத்துச் சென்றிருந்த வாளியில், சாந்தனு பிடித்த மீன்களை போட்டு கையில் வைத்திருந்தவள், அதை வராவிடம் ஒப்படைத்து விட்டு, தூண்டிலை சாந்தனுவிடமிருந்து வற்புறுத்தி வாங்கியிருந்தாள்.

 

எல்லாவற்றையும் தானே செய்து கொடுத்தவன், தூண்டிலைப் பிடித்திருந்தவளின், “ஏய் சாந்தனு, மீனு மாட்டிருச்சு போல!, என்ற சத்தத்தில்

 

“எதுக்கு இவ்ளோ சத்தம்!, என்று அதட்டியவன், “அப்டியே தூண்டில லபக்குனு மேலபாத்து தூக்கு!, என்றான்.

 

தூண்டிலை நீரைவிட்டு வெளியே எடுத்தவளுக்கோ ஏக மகிழ்ச்சி ஏய்…. நான் மீன் பிடிச்சிட்டேன்…! என்ற பெண்ணின் சத்தத்தை கரையில் நின்றவாறு கவனித்தவனை, கவனிக்கத் தவறியிருந்தனர் ஐவரும்.

 

தங்கவேலுவை பண்ணை விடயமாகப் பார்க்க வீட்டிற்கு வந்தவன், அவர்கள் காரைக்குடி கிளம்பியதை சித்தியின் வாயிலாக அறிந்து கொண்டான்.

 

அதன்பின், நவீனாவை அறையில் தேட, அங்கும் பெண்ணைக் காணவில்லை.

 

வீட்டில் கேட்டால் யாருக்கும் தெரியவில்லை.  ஒருவேளை அவளையும் காரைக்குடிக்கு அழைத்துச் சென்று விட்டார்களோ என்ற எண்ணத்தோடு, அவளின் சக தோழர்களைத் தேட அவர்களும் அங்கு இல்லை.

 

சாந்தனுவோடு அனைவரும் இல்லை என்றவுடன், கண்மாய் கரைப்பக்கம் வந்தவன், அங்கங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்தபடியே சற்று நேரம் நின்றிருந்தான்.

 

அப்போதுதான் ஒரு இடத்தில் தங்கள் வீட்டின் வாண்டுகள் மீன் பிடிப்பதைக் கண்டான். வாண்டுகள் செய்த லீலைகளை அமைதியாக நின்று கவனிக்கத் துவங்கியவனின் காதில் சந்தமாக விழுந்திருந்தது, நவீனாவின் சந்தோசக் கூச்சல்!

 

நவீனாவின் மகிழ்ச்சிக் குரல் கண்மாய்க்கரை வரை கேட்டதில்,  அவளின் குரலின் குதூகலம் உணர்ந்தவன், அவளை அழைத்துச் செல்லும் எண்ணம் எழுந்ததைக் கைவிட்டு, அங்கிருந்த மரத்தினடியில் அமர்ந்து, அவர்களை வேடிக்கை பார்த்திருந்தான்.

 

“இன்னும் ஒன்னு மட்டும்”, என்று கூறியே அடுத்தடுத்து ஏழெட்டு மீன்களைப் பிடித்தவளுக்கு, ஏரோப்பிளேன் ஓட்டிய சந்தோசம் வந்திருந்தது.

 

விலாங்கு மீன் சிக்க, “ஐயோ பாம்பு!, என்றலறியவளை சமாதானப்படுத்தி, “ஏய்… எதுக்கு இந்த அலறு அலறுற… அது பாம்பில்ல! அதும் மீனுதான்!, என்று அவளிடமிருந்து தூண்டிலை பிடுங்காத குறையாக வாங்கியிருந்தான் சாந்தனு.

 

தூண்டிலை வாங்கிய சாந்தனு, மீண்டும் மீன் பிடிக்கத் துவங்கியிருந்தான்.

 

அதேநேரம் வாளியை மீண்டும், நவீனாவின் கைகளில் ஒப்படைத்திருந்தாள் வரா. வாளியோடு நவீனா நிற்க, அருகில் நின்றிருந்த வராவிடம், வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள் பெரியம்மாவின் மகளான காயத்ரி.

 

சற்று தூரத்தில் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தவள், என்றுமில்லாமல் மீன் பிடிக்க வந்திருந்த நவீனாவைக் கண்டதும், அங்கு வந்திருந்தாள்.

 

மீன்பிடிக்கும் குஷியில் மற்றதைக் கவனிக்க மறந்திருந்தாள் நவீனா.

 

நவீனாவை ஒட்டியே மீண்டும் மீண்டும் வந்து அவளைக் கடந்து செல்வதுபோல இடித்துச் சென்றவளின் உள்நோக்கம் உணராத வரா, இயல்பாக பேசியபடி இருந்தாள்.

 

சாந்தனு தூண்டிலை வாங்கியதைக் கண்டதும், மீண்டும் அங்கு முற்றுகையிட்டவளைக் கண்ட நவீனா, காயத்திரியின் செய்கையில் சற்று கவனத்துடன் நின்று கொண்டு, “இத்தோட வீட்டுக்குப் போயிரலாம் சாந்தனு!, என்று மாமன் மகனை அழைக்க

 

“ஆச்சரியமா இருக்கு! அதுக்குள்ள வீட்டுக்குப் போகலாம்னு சொல்ற! ஆத்தாட்ட சொல்லிட்டுத்தான வந்த!, என்று திரும்பாமல் கேட்டவனை

 

“இந்த மீனு இன்னிக்கு நம்ம எல்லாருக்கும் போதுமில்ல!, என்று காரணம் கூறியிருந்தாள் நவீனா.

 

இரண்டுமுறை நவீனாவைக் கடந்து சென்றவள், மூன்றாவதாக வந்து, “என்ன வரா.  மீன் பிடிச்சு முடிச்சு கிளம்பற மாதிரி தெரியுது!”, காயத்ரி

 

“ஆமாக்கா, என்று கல்மிசமில்லாமல் ஆமோதித்தவளை விட்டுவிட்டு, வாளியோடு நின்றிருந்தவளின் காலை தன் காலால் வாரி விட்டிருந்தாள் பெண்.

 

ஏதோ உள்நோக்கத்தோடு வந்திருக்கிறாள் என்று உணர்ந்தாலும், கவனத்தோடு நின்றிருந்தவளை, சுதாரிக்க இயலாதவாறு, காலை வாரியிருக்க, அருகில் எந்தப் பிடிமானமும் இன்றி, தவித்து, இறுதியில், அருகில் தரையோடு கண்மாயில் இருந்த கிணறுக்குள், கையில் பிடித்திருந்த வாளியோடு நிலைதடுமாறி “அம்மாஆஆஆஅஅஅஅ…., என்ற மனதின் பயத்தை வார்த்தையில் கொண்டு வந்திருந்த கதறல் வகைச் சத்தத்தோடு விழுந்திருந்தாள் நவீனா.

 

நவீனா என்ன ஆனாள்?

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

error: Content is protected !!