நீயும் நானும் அன்பே…
அன்பு-7A
நவீனாவிற்கு முதலுதவி செய்திருந்தனர். சுவாசக் குழாயிலும் நீர் சென்று நிறைய அவஸ்தையை பெண்ணுக்கு கொடுத்திருந்தது.
சுரம் அதிகமாக இருந்ததால், மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று வந்திருந்தனர்.
குடும்ப மருத்துவர் என்பதாலும், வேறு ஏதேனும் பின்விளைவுகள் இதனால் வராமல் காக்கவேண்டியும், நடந்த அனைத்தும் மறையாமல் பகிரப்பட்டு, அதற்கேற்றாற்போல சிசிச்சை வழங்கப்பட்டு இருந்தது.
மூன்று நாட்கள் நல்ல சுரத்திலும், உறக்கத்திலும் கழித்திருந்தாள் நவீனா.
சசிகலா, முல்லை, அன்னம்மாள் மூவரும் இரவு, பகலென, மாறிமாறி விழித்திருந்து, நவீனாவைக் கவனித்துக் கொண்டனர்.
“காச்ச குறையவே மாட்டுது! கிணத்துல விழுந்ததுல புள்ளை பயந்து, தண்ணியவும் ரொம்ப குடிச்சிருச்சுபோல! அதான் நாசி, வாயி வழியா தண்ணி அதிகமா போயி, புள்ளை ரொம்ப கஷ்டப்படுது!”, அன்னம்மாள் வருத்தமாகக் கூற
“எப்டி போயி, இப்டி விழுந்தானு தெரியலை! இவபாட்டுக்கு எதாவது விளையாட்டுத்தனமா செய்து வச்சு ஒன்னு கிடக்க, ஒன்னு ஆச்சுனா, பெத்தவளுக்கு என்ன பதிலைச் சொல்ல?”, என தனக்குள் வருத்தமாகக் கூறிய முல்லை
“அசந்து வந்தாலும், தூங்க முடியாம உடம்புல உதறலா வருது! ஆஸ்பத்திரில போயி காமிச்சதோட, கொடுமலூரு பூசாரிகிட்ட மந்திரிச்ச கயிறு ஒன்ன வாங்கிட்டு வந்துக் கட்டி விடுவோமாக்கா!”, என்று கிராமத்து பாணியில் தனது சந்தேகத்தைக் கேட்டார்.
“சொல்லி விட்டுருக்கேன் முல்லை. தங்கம் அங்க போயிட்டு வரதாதான் சொன்னாப்புல!”, அன்னம்மாள்.
பெண்ணின் மனஅதிர்ச்சியின் அளவை, அந்த நாள்களில் அருகில் இருந்து கவனித்த மூவரும், நேரிடையாகக் கண்டதில் பதறிப் போயிருந்தனர்.
மூன்றாவது நாள் மாலையில் சற்று இயல்புக்கு திரும்பியவள், கண்விழித்து தான் இருப்பதை ஊர்ஜிதம் செய்யவே நேரமெடுத்தது.
வெகுநேரத்திற்குப் பிறகு தனது கடந்து போன கசப்பான நினைவுகளை, எண்ணிப் பார்த்தவளுக்கு, நடந்ததை நினைக்கவே பயந்து வந்தது.
அந்த நாளில் தனக்கு ஏற்பட்ட நிகழ்வு, தனது எதிரிக்குக்கூட வரக்கூடாது என நவீனா மனம் வேண்டியது. இதைப்பற்றிய சிந்தையின் விளைவோ என்னவோ, அமைதியாகவே இருந்தாள்.
அடுத்த நாளே பள்ளிக்கு கிளம்புகிறேன் என்றவளை, பெரியவர்கள் ‘இருக்கட்டும், இன்று ஒரு நாள் மட்டும் வீட்டில் இருந்துவிட்டு நாளை செல்’ என்றிருந்தனர்.
———
அனைவரும் பள்ளிக்கு சென்றுவிட, இன்னும் சசி அத்தையின் அறையில் இருந்தவளுக்கோ, எழுந்து தனது அறைக்கு சென்றுவிடும் வேட்கை.
ஆனாலும் அத்தை ‘இங்கேயே இரு’ என்று கூற, அமைதியாகிவிட்டாள் நவீனா.
மோனிகாவிற்கு புதிய இடம், நபர்கள் என்பதால் தனக்குள் இறுகி, யாருடனும் இயல்பாகப் பேச இயலாமல் இருந்தாள்.
இன்னும் தயக்கம் விலகாது இருந்தவள், நவீனாவுடன் சசியும் பெரும்பாலும் உடனிருந்ததால், நவீனாவை வந்து காணுவதைக்கூட தவிர்த்திருந்தாள்.
நவீனாவின் உடல்நிலையில் மோனிகாவைப் பற்றி யோசிக்க இயலாமல் இருந்தாள் நவீனா.
வீட்டில் இருந்தவளுக்கு, முன்புபோல இன்றும், சசி அத்தையோடு சகஜமாக இருக்க முடியாத சங்கடம் வந்திருந்தது.
மூன்று நாட்களும் சுரம், வலி, உறக்கம் என இருந்தவள் சுற்றம் உணரும் நிலையில் இல்லை. ஆனால் இன்று உடல் சற்று தேறியிருக்க, ஒரு இலகுத்தன்மை இல்லாது தோன்றியது பெண்ணுக்கு.
அவளின் தாஸ் மாமா, சசி அத்தையை சிறு விடயத்திற்குக் கூட ஏவியும், தேடியும் அடிக்கடி அங்கு வந்தவரைக் கண்டவளுக்கு, அத்தைக்கு தானும் தொந்திரவு தர வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியது நவீனாவிற்கு.
“சசி, குளிக்க சோப்பு, துண்டு எடுத்து வச்சிட்டியா?”
“சசி, இன்னும் ரெண்டு இட்லி வையி”
“சசி, குடிக்கத் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாம்மா”,
“சசி, இந்த ரூம்ல கழட்டிப் போட்ட சட்டையக் காணோம். தோய்க்க போட்டுட்டியா?”
“சசி, செலவுக்கு பணம் வேணும். காத்தமுத்த இங்க வரச் சொல்லி விட்ருக்கேன். அவன் வரதுக்குள்ள ஏற்பாடு பண்ணு”, என்று அடிக்கொரு முறை அழைத்த மாமனின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு, அத்தையை தானும் சங்கடப்படுத்த மனம் இடம்கொடவில்லை.
சசியும், நவீனாவை உடன் வைத்துக் கொண்டு, கணவரின் தேவைகளுக்கு மறுப்பு கூறவோ, தனது கருத்தை தயங்காது கூறவோ, இயலாமல் தவித்ததை, சசியின் செயல்பாட்டின் மூலம் நவீனா உணர்ந்திருந்தாள்.
‘இத்தனை வருசமா இதையெல்லாம் யாரு பண்ணா? இப்ப மட்டும் வந்து எதுக்கெடுத்தாலும் சசி, சசிம்மானு…! பேரு வச்சவரு கணக்கா வந்து, ரொம்பத்தான் மெழுகுபோல உருகுறாரு!’, என்று நினைத்தவளுக்கோ, தன் நிலையைக் காட்டிலும் சங்கடமாக இருந்தது, சசி அத்தையின் நிலை.
தாமதமானால், அன்னம்மாள் ஆச்சி வந்து, “என்னனு வந்து தாஸைப் பாத்துட்டு போம்மா! புள்ளை ரொம்ப நேரமா ரூமுக்கும் ஹாலுக்கும் நடையா நடக்குறான்!”, என்று அவரின் பங்குங்கு வந்து, பங்கம் வைத்துச் சென்றார் அன்னம்மாள்.
‘புள்ளையா அது…! பெருந்தொல்லைய எங்க சசி அத்தைக்குன்னே பெத்து விட்டுருக்கு இந்த ஆச்சி!’, என நவீனா, அன்னம்மாள் ஆச்சியின் பேச்சைக் கேட்டு, தாஸை தொல்லையாக எண்ணி இருந்தாள்.
அதற்குமேலும் தாஸைக் கவனிக்க தாமதித்த சசிகலாவை, “ஆம்பிளை அப்டி இப்டிதான் இருப்பாக…! இன்னும் அதையே நினைச்சா யாருக்கு நஷ்டம்? வராதவன் வருசங் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கான். வந்தவனை இனியாவது வீட்டோட வச்சிக்கிற மாதிரி நல்ல கவனி!”, என்று குறைந்த குரலில் மருமகளுக்கு அறிவுரை வேறு.
பெரும்பாலும் அமைதியாகச் சென்றுவிடும் சசி, அன்று நவீனா உறங்குவதாக எண்ணி மாமியாரிடம் தனது மனதைத் திறந்திருந்தார்.
“இப்டி ஒரு ஆளு காலங்கெட்ட காலத்துல திரும்பி வந்து, எனக்கு இனி என்ன நிறையப் போகுது!
இல்லை இவரு வந்ததால, தருசாப் போன பதினேழு வருசம், எனக்கு திரும்பி வந்துருமா!
இல்லை நானும், எம்புள்ளையும் சீப்பட்டு, சீரழிஞ்சு தனியா நின்ன வேதனையெல்லாம் இல்லைன்னுதான் போயிருமா!
அந்தக் குடிகெடுத்தவ, நல்லாயிருக்கும் போதா என்னையத் தேடி வந்தார் உங்க மவன். அவ போயிச் சேந்து, நாதியத்துப் போனதால அவரு பிறந்த வீட்டுக்கு திரும்பி வந்திருக்காரு! என்னவோ, எனக்காக இங்க உங்க மகன் தேடி வந்த மாதிரி சொல்லுறீங்க!
எம்புள்ளை ராசா கணக்கா வளந்திட்டான்!
அவனுக்கு இனி நல்லது பண்ணிப் பாத்தா, அதுவே எனக்குப் போதும்!
எம்புள்ளைக்காகத்தான் இந்த உசிரை வச்சிட்டு இன்னும் நடமாட்டத்தோட இருக்கேன்!
உங்க புள்ளை, உங்களுக்கு உசத்தின்னா நீங்களே அவரையும், வந்திருக்கிற உங்க பேத்தியையும் கவனிச்சு பாருங்க!
எதுக்கும் இனி என்னைய எதிர்பாக்கவும் செய்யாதீங்க! கூப்பிடவும் வேணாம்!”, என்று வேலைக்கு வருபவர்கள் அருகில் இல்லா நேரத்தில், தனது மாமியாரிடம் பொங்கி இருந்தார் சசிகலா.
இதுவரை எதற்கும் அன்னம்மாளை எதிர்த்துப் பேசியிராத சசியை, ஆச்சர்யமாக, ‘இவ்வளவு பேசுவியா’, என்பதுபோல பார்த்திருந்தார் அன்னம்மாள்.
அதற்குமேலும் பேச்சை வளர்க்க விரும்பாத அன்னம்மாள், மருமகளின் மனம் புரிந்தாலும், பெற்ற மனம் பித்தாக இருந்தது.
இதையெல்லாம் கண்டும் காணாமலும் கண்மூடிக் கிடந்த நவீனாவிற்கு, வருந்தக்கூட வாய்ப்பில்லாமல், உடல்நிலை சோர்வாக இருந்தது.
ஜீவன் வற்றிய உணர்வில் நடக்கவே திராணியில்லாமல் இருந்தவளுக்கு, எதையும் அதற்குமேல் நினைக்கவும் முடியவில்லை.
இயலாமை தந்த ஆற்றாமையினால், உள்ளுக்குள் எழும் அழுகை வந்தபோதும் கண்ணில் நீர் வற்றியிருந்தது. தெம்பில்லாததால் அழ இயலாத அவஸ்தையோடு, பெரும்பாலும் படுக்கையில் கண்மூடிக் கிடந்தாள் நவீனா
சசி எத்தனை வேலை இருந்தாலும், தமையனின் மகளைக் காண அவ்வப்போது வந்து, கண்டு சென்றார்.
வாடித் தெரிந்தவளைக் கண்ட சசி, “என்ன செய்யுதுனு சொன்னாதான தெரியும் நவீனா”
“டயர்டா இருக்குத்தை! வேற ஒன்னுமில்லை”, என்றபடியே அத்தையின் வருகையை உணர்ந்து படுக்கையில் இருந்து எழுந்தாள்.
சசியின் கையில், இளஞ்சூடாக இருந்த சூப்பை நவீனா கையில் கொடுத்தவர், நவீனா வாங்கி அருந்தத் துவங்கியதும், “வேற எதுவும் பண்ணுதா?”, என்றபடியே நெற்றியில் கைவைத்துப் பார்த்தார்.
இல்லை எனத் தலையாட்டியவளை, “அப்போ சூப் குடிச்சிட்டு சாப்பிடறீயா எதாவது?”
“எதுவும் பிடிக்கலைத்தை!”, என்றபடியே ஒரே மூச்சில் மருந்தைக் குடிப்பதுபோல, சூப்பைக் குடித்து டம்ளரை அருகில் இருந்த மேசையின் மீது வைத்தவள், அடுத்த கனமே படுக்கையில் படுத்திருந்தாள் நவீனா.
“இப்டியே சொன்னா, உடம்பு எப்ப சரியாகுறது. இதுல இன்னிக்கு காலையில ஸ்கூலுக்கு வேற கிளம்புற?”
“காலையில கொஞ்சம் ஃபிரஷ்ஷாதான் ஃபீல் பண்ணேத்தை!”, என்றவள், தன்னிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்த அத்தையிடம்
“அன்னிக்கு என்னை… தண்ணியில இருந்து யாரு காப்பாத்துனா?” என தனக்குள் இதுவரை எழுந்த கேள்வியை தயங்கிபடியே அத்தையிடம் கேட்டாள்.
“ஏங்கேக்குற?” என நம்பாத பார்வை நவீனாவைப் பார்த்துவிட்டு,
“ஏன் உனக்குத் தெரியாதா?”, என்று அடுத்த வினாவைத் தொடுத்தவரிடம்,
‘தெரியாது’ என மறுத்து வருத்தமாகத் தலையாட்டினாள் நவீனா.
மறுத்தலை மறுகி சொன்னவளின் முகத்தைக் கொண்டே உண்மை என அறிந்து கொண்டவரோ, “நம்ம சங்கருதான்!”, என்று இலகுவாகக் கூறினார்.
சசியின் வார்த்தைகளைக் கேட்டு, “என்ன சொல்றீங்க? அப்ப நான் தண்ணியில விழுந்தது அவுங்களுக்கு தெரியுமா?”, என அதுவரை படுந்திருந்தவள், அத்தையின் செய்தி தந்த அதிர்ச்சியில் எழுந்தமர்ந்திருந்தாள்.
“இதென்னடி கேள்வி? அன்னிக்கு அவந்தான உன்னைத் தூக்கிட்டு வந்தான்”, என்று சிரித்தவர் அத்தோடு நிற்காமல் பேச்சைத் தொடர்ந்திருந்தார்.
“என்னடா இந்த நவீனாப் புள்ளைய, இந்த சங்கரு பய விக்ரமாதித்தன் கதையில வர வேதாளத்தை மாதிரி எதுக்கு தோள்ள தூக்கிப் போட்டுட்டு வந்து வாசல்ல தொப்பலா நனைஞ்சு நிக்கறான்னு பாத்தா, பின்னதான எங்களுக்கு நீ கிணத்துல விழுந்த விசயமே தெரிஞ்சுது!”, சசியின் குரலில் அங்கலாய்ப்பு தெரிந்தது.
“சந்தடி சாக்குல என்னைய வேதாளம்னு சொல்லிட்டீங்க!”, என்று கோபமாக முகத்தை தொங்கப் போட்ட நவீனாவை
“உனக்குத் தெரியாதா அப்ப?”, என்று யோசிக்காமல் கேட்டிருந்தார் சசி.
“அத்தை….! நான் வேதாளம்கிறது எனக்குத் தெரியாதான்னு கேக்கறீங்களா? இல்லை உங்க மகன் என்னைத் தூக்கிட்டு வந்தது தெரியலையானு கேக்கறீங்களா?”, என நவீனா விலாவாரியாக வினாவை விளக்க
“சங்கரு உன்னைத் தூக்கிட்டு வந்ததைத்தான்டீ சொல்றேன்”, என்று முடித்திருந்தார் சசி.
‘சங்கர் அன்று அங்கு எப்படி சரியான நேரத்திற்கு வந்தான்?’ என்ற அதிர்ச்சி மாறாமல் அத்தையையே வைத்தகண் வாங்காமல், நீடித்த பார்வையாக நினைவுகளை, பின்னோக்கி அந்த நிகழ்விற்குள் கொண்டு சென்றிருந்தாள் நவீனா.
///////////////
இமைக்கும் நொடிக்குள் இங்கேயே தங்கிவிடு என ஆழமாக தனக்குள் தவறி விழுந்த நவீனாவை, எரிந்த ஈட்டியின் வேகத்தில் இழுத்துக் கொண்டு சென்றது அந்தக் கிணறு.
அதல பாதளம் கேட்டதோடு சரி. இன்று அனுபவமாக உணர்கிறாள்.
தனது பயத்தைக் கூட எந்த வகையிலும் காட்ட இயலாத கொடுமையான பயணமாக இருக்க, எதையும் உணரும் நிலையில் அப்போது பெண்ணில்லை.
நீரின் தன்மைக்கு, கிணற்றின் இழுப்பை எதிர்த்து நவீனாவை அதன் மேற்பரப்பிற்கு தள்ளியது.
நீரும், கிணறும் நவீனாவை பந்தாக எண்ணி மேலே நீர் தள்ளுவதும், கிணறு கீழே இழுப்பதுமாக மாறி, மாறி இருமுறை விளையாடிய விளையாட்டை புரிந்து கொள்ளத் தெரியாமல், மேலே எழும்பிய தைரியத்தில் பயத்தோடு அலற வாயைத் திறந்தாள் பெண்.
உள்ளே, வெளியே விளையாடியபடி இருந்த கிணற்று நீர், வெளியே சென்றவளை அந்நேரம் உள்ளே இழுத்திருந்தது. திறந்த வாயை மூடும்முன், குறைகுடமாக பெண்ணின் வாயை எண்ணிய நீர், நாசி மற்றும் வாயிற்குள் புகுந்தது.
மூச்சுக்கு தவித்து தலையை அங்குமிங்கும் ஆட்டி, தனது நிலையை நவீனா உணரும் முன்பு, உச்சந்தலையில் உயிர் போகும் வலி.
அதற்குமேல் பெண்ணிற்கு எதுவும் நினைவில்லை. மயங்கியிருந்தாள்.
—
நடந்ததை எண்ணியதும் உடம்பில் ஒரு பதட்ட உணர்வை உணர்ந்து, மீண்டு நடப்பிற்கு வந்தவள்,
“அய்யோ அத்தை அப்ப, மதுரையில இருந்து உங்க மகன் வரவர என்னை எல்லாரும் அந்தக் கிணத்துத் தண்ணிக்குள்ள தேடுனீங்களா?”, (இந்த நவீனா புள்ளை இப்டிதான் கேட்டுது)
“போடீ அறிவாளி! அவன் அன்னிக்கு எங்க மதுரையில இருந்தான்! அவந்தான் அதுக்கு முந்தின நா ராவுலயே இங்க வந்துட்டான்ல!”, என்ற அத்தை கூறிய செய்தி, நவீனா அறியாதது.
“என்னாது? முந்தின நாளே இங்க வந்துட்டாங்களா! ஐயோ, இது தெரியாம கவனமா போயிட்டு கமுக்கமா வந்திரதா நினைச்சு போயி, மொத்த பிளானையும் கவுத்திட்டேனே!
தானா போயிக் குதிச்சு, கிணத்துல தூறு வாரிட்டேனே?”, என நவீனா தன்னை மறந்து பேசியிருக்க
புரியாமல் பார்த்த சசி, “என்னடீ ஆச்சு உனக்கு, தூறு வார கிணத்துல போயி குதிச்சியா?”, என்று முகத்தை சீரியசாக்கிக் கொண்டு கேட்டார்.
“இல்லைத்தை சும்மா அப்டி சொன்னேன். வழுக்கி விழுந்தேன்னு சொன்னா அசிங்கம்ல! இதுனா தூறு வாரறது கொஞ்சம் டீசண்டா இல்ல!”, என சசிகலாவிடமே கருத்து கேட்டது பெண்.
“இல்லை!” என்று அதே தொணியில் பேசி, நவீனாவை நாக்கவுட் செய்திருந்தார் சசி.
“எப்பவும் விளையாட்டா! எததுல விளையாட்டுன்னு ஒரு விவஸ்தை இல்லையா நவீனா?”
“அத்தை, அப்டியாது பேசி எனக்கு வந்த டேமேஜை மேனேஜ் பண்ணி, இமேஜைக் கீழிறங்காம காப்பாத்திக்கிறேன் அத்தை”, என்ற நவீனாவின் பேச்சில் சிரித்துவிட்டார் சசி.
“அப்புறம் என்னாச்சுத்தை!”, நவீனா
“அவந்தான் விழுந்தவளைத் தூக்கிட்டு வந்து வீட்டுக்கு முன்ன தொப்பலா நின்னான்.”, என்றவர் நடந்தவற்றை நவீனாவிடம் கூறினார்.
“ஆஹான்”, என பேந்தப் பேந்த விழித்தபடியே, அந்தக் காட்சியை மனதில் ஓடவிட்டவளுக்கு உவர்ப்பாக இல்லாததால், அதிர்ச்சியோடு கேட்டிருந்தாள்.
அதிர்ச்சியோடு கேட்டவளை நோக்கி, “ஆமா, நீ எப்டி போயி அந்தக் கிணத்துக்குள்ள விழுந்த?”, என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
“எதுவோ வந்து காலை இடறுன மாதிரி இருந்ததுத்தை! (காயத்திரி காலை வாரியதை அறிந்திருந்தாலும் பெண் அதைக் கூறப் பிரியப்படவில்லை)
நான் சுதாரிக்கிறதுக்குள்ள உள்ளே சொய்ங்குனு தண்ணிக்குள்ள போயிட்டேன்”, என்று கைகளில் அதற்கான உடல்மொழியோடு சொன்ன நவீனாவைப் பார்த்துச் சிரித்திருந்தார் சசி.
“சீரியஸா பேசும்போதும் உனக்கு மட்டும் சொய்ங்குனு எல்லாம் வருதுபாரு!”
“அப்டிதான் போனேந்தை! நான் கிணத்துக்குள்ள விழுந்ததை அப்பாகிட்ட சொல்லிட்டீங்களா?”, என முகத்தை சீரியசாக்கிக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.
“ஏன், எங்கண்ணன் பதறிகிட்டு, பாதி வேலையோட ஓடி வரதுக்கா? ஏற்கனவே ஹார்ட் சர்ஜரி வேற பண்ணியிருக்கு. அதனால நாந்தான் இதைச் சொல்ல வேணானு சங்கருகிட்ட சொல்லிருந்தேன்”, என்ற அத்தையை எண்ணி
‘அத்தைனா அத்தைதான்!’, நவீனா பெருமூச்சு விட்டாள். சசி நவீனாவைப் பார்த்தபடியே தொடர்ந்திருந்தார்.
“ஃபோன் பண்ணும்போது சங்கருதான் அன்னிக்கு பேசுனான். காய்ச்சலா இருக்கு. அதனால மாத்திரை போட்டுட்டு தூங்குதுனு. எந்திரிச்சா நானே உங்களுக்கு கூப்டு பேசச் சொல்றேன் மாமான்னு வச்சுட்டதா சொன்னான்”, சசி இயல்பாக உரைத்திருந்தார்.
‘ஐயோ, நாம ரெண்டு நாளா எந்திரிக்கவேயில்லையே! எப்டி அப்பாகிட்ட சமாளிச்சாங்களோ தெரியலையே! அப்பா இப்போ பெரிய விசயமில்ல!
யாருக்கு இந்த விசயம் தெரியக்கூடாதுன்னு நினைச்சேனோ, அவங்களேதான் அன்னிக்கும் வந்து என்னைக் காப்பாத்திருக்காங்க!
கடவுளே இனி அவுக முகத்துல எப்டி முழிப்பேன்!
அராபிக் சீய விட பெரியளவு, வாழ்க்கையில இப்டி ஒரு அசிங்கமான அசம்பாவிதம் அரங்கேறிருச்சே நவீனா!
அதைவிட நான் மொத மொதல்ல பிடிச்ச மீனெல்லாம், குழம்பு வைக்க முடியாம, தண்ணிக்குள்ளயே போயிருச்சே!’, என மனதிற்குள் மாய்ந்து போனாள் நவீனா.
/////////////
பள்ளிக்குச் செல்லத் துவங்கியவளுக்கு, வழமைபோல நாட்கள் வேகமாகச் சென்றது.
இடையில் அழைத்துப் பேசிய வெற்றி, காலாண்டுத் தேர்வு முடியும் நாளை கேட்டுக் குறித்துக் கொண்டார்.
காலாண்டுத் தேர்வுகள் துவங்கி இருந்தது.
வாரயிறுதி நாள்களில் சற்றே பயந்து, வருத்தத்தோடு, படபடப்பாக சங்கர் வந்துவிட்டால், எப்படிப் பார்க்க? சுளுக்கிற்கே அவ்வளவு பேசியவன், இதற்கு இன்னும் என்ன சொல்வானோ என்றிருந்தது பெண்ணிற்கு.
‘குவார்டலியோட, நம்மை ஊருக்கு பேக்கப் பண்ணிராம’
‘கவனமா இருனு சொன்னா இதுதான் நீ கவனமா இருக்கிற லட்சணமா?’, என்பதுபோல, சங்கரின் கேள்வியாக என்னவெல்லாம் எழ வாய்ப்பிருக்கு என தன் மனக் கண்ணில் ஓட விட்டு விரக்தியடைந்திருந்தாள் நவீனா.
ஆனால் பெண் பயந்தது போல எதுவும் நடக்காமல், சங்கர் அந்த ஊரின் பக்கமே அடுத்து வந்த இரு வாரமும் வந்திருக்கவில்லை.
தேர்வுகள் ஒருவழியாக நடந்து முடிந்திருக்க, வெற்றியும் மகளை வந்து அழைத்துச் சென்றிருந்தார்.
////////////