NNA7B

நீயும் நானும் அன்பே

அன்பு-7B

 

இறுதி ஆண்டு என்பதாலும், வேலை சற்று அதிகமிருந்ததாலும் ஊருக்கு செல்வதை தள்ளிப் போட்டிருந்தான் சங்கர்.

 

ஆனாலும், நினைவு முழுவதும் நிரம்பியிருந்த நவீனாவை, நிமிடமும் மறக்காமல், பணிகளில் கவனம் செலுத்தியிருந்தான்.

 

அன்று நவீனாவிற்கு நடந்த நிகழ்வை எப்போது நினைத்தாலும் சங்கருக்கு வருத்தம் மிகுந்தது.

 

அன்று…

 

கண்மாய் கரையில் அமர்ந்தவாறே, இளையவர்களின் துள்ளலை வேடிக்கை பார்த்திருந்தவன், அங்குமிங்கும் அவர்களை நோக்கியபடியே இருமுறை இளசுகளைத் தாண்டிச் சென்ற காயத்திரியின் செயலில் உண்டான உணர்வில் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்திருந்தான்.

 

கட்டாந்தரையில் அமர்ந்திருந்ததால் ஒட்டியிருந்த மண்ணை, தனது கையால் ஒரு தட்டு, தட்டிவிட்டு, ஐவரையும் நோக்கி கண்மாயிற்குள் வேகமாக நடக்கத் துவங்கினான்.

 

இமைக்காது, காயத்திரியின் செயல்களை கவனித்தபடியே இறங்கியவனின் பார்வைக்கு, அவளின் காலைக் கொண்டு நவீனாவின் காலை இடறி விட்டதைப் பார்த்து, ஓடி வந்தான்.

 

‘எதுக்கு இந்தப் பயபுள்ள இவ காலை வாரி விடுது என்ற எண்ணம் மேலேழ வேகமாக வந்தான். சுற்றிலும் இருந்தவர்களைக் கவனியாது, கிணற்றுக்குள் பார்வையை வீசியபடியே வந்திருந்தான்.

 

வரும்போதே, கிணற்றுக்குள் தவறி விழுந்தவளின் தலை மேலெழும்பி இருமுறை உள்சென்றதைப் பார்த்தவன், மூன்றாவதாக வெளிவந்த நவீனாவின் உச்சந்தலை முடியைப் பிடித்து மேலே இழுக்க முயன்றான்.

 

கிணறு நவீனாவோடு, சங்கரையும் தனக்குள் இழுக்க முயற்சிக்க, நிலைதடுமாறி கிணறுக்குள் விழுந்தவன், பதினைந்து நொடிகளுக்குள், மயங்கிய நவீனாவை தோள்மீது ஒரு பக்கமாக போட்டவாறு சிரமப்பட்டு மேலேறினான்.

 

மேலே வந்தவன், “சாந்தனு, வீட்டுக்கு கிளம்பு.  அங்க பெரியம்மாகிட்ட போயி நடந்ததை சொல்லு! நான் வர்றேன், என்றபடி நடக்க, நால்வரும் பயந்தவாறே ஓட்டமும் நடையுமாக தாங்கள் எடுத்து வந்ததை கவனித்து எடுக்காமல்கூட சங்கரோடு கிளம்பியிருந்தனர்.

 

சாந்தனு வந்து பதற்றத்தில் கூறியது புரியாமல், அருகிலிருந்த சொம்பில் இருந்த நீரைக் குடிக்கக் கொடுத்து, “இப்போ சொல்லு, என்று சசி கூறவும்

 

புயல் வேகத்தில் நவீனாவைத் தூக்கியபடியே வந்தவன், தாய் இன்னும் வாயிலுக்கு வராது இருக்கவே, அமைதியாக இருந்த வீட்டிற்குள் கேட்கும்படி, “அம்மா, என்றழைக்கவும் சரியாக இருந்தது.

 

மகனின் அழைப்புச் சத்தம் கேட்டு சசிகலா வெளிவர, மகன் நின்ற கோலத்தில் பதறி ஓடிவந்தார்.

 

தாயின் பதற்றத்தைத் தணிக்க, “தண்ணிக்குள்ள விழுந்துருச்சுமா, ஆத்தாவைக் கூப்பிடுங்க!, என்றபடியே ஈரத்துணியிலிருந்து வழிந்த நீரோடு, தோளில் கிடந்தவளை தூக்கியவாறே வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.

 

மூவரின் வீட்டு ஹால் பகுதியும், ஒன்றோடன்று இணைந்து, உள் வழியாகவே வந்து செல்லும்படி அமைக்கப்பட்டிருக்கும்.

 

அதற்குள், சாரதாவும் சத்தம் கேட்டு அங்கு வர, மற்றவர்களும் கூடியிருந்தனர்.

 

பெண்களிடம் நவீனாவை ஒப்படைத்தவன், அவனது ஈர உடையை மாற்றி வந்தான்.

 

கண்கள் இரத்தச் சிவப்பாக இருக்க, அண்ணனைக் கண்ட சாந்தனு, தமையன் அருகே வரவே தயங்கினான்.

 

வரா, எங்குபோய் ஒளிந்தாள் என்று அவளுக்கு மட்டுமே தெரியும்.  மற்ற இரு வாண்டுகளும், தாயிக்கும், பெரியம்மாவிற்கும் விளக்கம் கொடுத்தார்கள்.

 

முதலில் வயிற்றுக்குள் சென்ற நீரை வெளியேற்றினார்கள்.  ஆனாலும் மயக்கம் தெளியாமல் இருந்தவளை, பழைய மாட்டு வண்டிச் சக்கரத்தில் குப்புறப் படுக்க வைத்து சுற்றினார்கள்.    

 

அதன்பின் சற்று நேரத்தில் அசைவு தெரியவே, பயந்து விழித்தவளை, “ஒன்னுமில்லை.  எல்லாம் சரியாயிருச்சு, என்று முதுகைத் தடவி ஆறுதல்படுத்தினார், சசிகலா.

 

தாஸ், மோனிகா இருவரும் வந்து நின்று அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.

 

ஒரு மணி நேரம் இயல்பிற்கு வராமல் இருந்த நவீனாவை ஈர உடைகளை மாற்றி விட்டிருந்தார் சசி. தலையை ஈரமில்லாமல் துடைத்தவர் சாம்பிராணி புகை போட்டு முடியை உலர்த்தினார்.

 

அதற்குள் காரைக்குடி சென்று வந்த, தங்கவேலு, முல்லை இருவரும் நடந்த விடயம் கேட்டு, பதறியிருந்தனர்.

 

இருவரையும் தேற்றுவதற்குள் மற்றவர்களுக்கு போதும் போதும் என்றாகியிருந்தது.

 

நினைவு வந்திருந்தாலும், சுரம் வந்திருக்க பெண் கண்களைக் திறக்க முடியாமல் முனகத் துவங்கியிருந்தாள்.

 

நவீனாவின் வேதனைகளை அங்கும், இங்கும் நின்று பார்த்தவனுக்கு, காயத்திரியை கொன்று போடும் வேகம் வந்தது.

 

‘எதுக்கு அப்டி பண்ணா, கைல மாட்டட்டும்.  அதுக்குப்பின்னதான் அவளுக்கு இருக்குத் திருவிழா, என்று மனதிற்குள் வன்மம் வளர்த்திருந்தான்.

 

அன்றே மாலையில் நவீனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்து வந்திருந்தார்கள்.

 

பயப்பட வேண்டாம்.  நீரைக் குடித்ததாலும், நாசிக்குள் நீர் நுழைந்து நுரையீரலுக்கு சென்றதாலும் உண்டான, உடலின் அசிரத்தையை காய்ச்சலாக காட்டுகிறது என்று கூறி அனுப்பியிருந்தார் மருத்துவர்.

 

மருந்து, மாத்திரைகளை தவறாமல் கொடுக்கும்படி கூறி அனுப்பியிருந்தார்.

 

இரவு, பகல் என அன்றும், மறுநாளும், தாய் மற்றும் ஆத்தாவுடன் விழித்தே அருகில் இருந்தான் சங்கர்.

 

பெரியவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “இல்லை, மாடியில போயி தூங்காமதான் இருப்பேன்.  அதுக்கு இங்கேயே இருக்கேன், என்று அமர்ந்து விட்டான்.

 

நவீனாவின் அதிர்வுகளைக் கண்டு கொள்பவன், உடனே தாய் அல்லது ஆத்தாவை அழைத்து என்னவென்று பார்க்கச் சொல்லுவான்.

 

இப்படியே இரண்டு நாட்களைக் கடத்தியவன், வேறு வழியில்லாமல் திங்களன்று காலையில் கிளம்பியிருந்தான்.

/////////////

 

கிளம்பியவனிடம், “மோனிக்கு இன்னிக்கு ஸ்கூல்ல போயி கேட்டுப் பாக்கட்டா? எப்ப சேக்கச் சொல்றாங்களோ, அப்ப சேத்துரலாம்!, என்று ஆரம்பித்த தந்தையின் முகம் காணாமலேயே

 

“குவார்டர்லி டைம்ல அட்மிசன்னு போயி, நிக்க முடியாது.  இன்னும் ஒரு வாரத்தில எக்சாம் ஆரம்பிச்சிரும்.  எக்சாம் முடிஞ்சபின்ன போயி, என்னனு கேக்கலாம், என்று விட்டு கிளம்பியிருந்தான் சங்கர்.

 

தான் அந்த வீட்டில் செல்லாக் காசாக இருப்பதுபோல எண்ணிய தாஸன், வருத்தத்தை மறைத்தபடியே, தனது அறைக்குள் சென்று மகளை தேற்றினார்.

 

மோனிகா பள்ளிக்குப் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதால்தான், காலையில் ஊருக்குக் கிளம்பும் மகனிடம் வந்து நின்றிருந்தார் மனிதர்.

 

இதைப்பற்றி அறியாதவனோ தாயிடம் கூறிக் கொண்டு கிளம்பியிருந்தான்.

///////////

வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்தது முதல், மனம் எதிலும் ஒட்டவில்லை சங்கருக்கு.

 

ஆனாலும், அன்றே தபால் ஒன்றை எழுதி போஸ்ட் செய்திருந்தான்.

 

அடுத்த வாரம் இங்கு அதிக வேலை இருப்பதால், தன்னால் ஊருக்கு வரஇயலவில்லை என்று.

 

குணமாகியிருக்க வேண்டும், என்று அவனது வேண்டுதலும், எண்ணமும், அவளை எழுப்பியிருந்ததோ என்னவோ!

 

அடுத்தடுத்த வாரங்களிலும் கல்வி சார்ந்த பணிகளுக்கிடையே ஊருக்கு வர இயலாத நிலையில் மதுரையிலேயே தங்கிவிட்டான் சங்கர்.

////////////

 

ஊருக்கு வந்த வெற்றிக்கு தாஸின் வருகையைக் கண்டு, ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும், அவரின் மகளைக் கண்டு தங்கையை எண்ணி வருத்தம் எழ, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

 

இருந்தாலும் மரியாதை நிமித்தமாக நான்கு வார்த்தைகள் என்ற அளவோடு தனது பேச்சைக் கத்தரித்திருந்தார் வெற்றி.

 

அந்தப் பேச்சும் தனது தங்கை சசிக்காக என்பதாக மட்டுமே இருந்தை, தாஸும் உணர்ந்தே இருந்தார்.

 

பெரும்பாலும், வீட்டு வேலைக்காரர்களைக் கொண்டு மதுவை வாங்கிவரச் செய்து, வீட்டிலேயே அருந்தியபடி இருந்த தாஸை அவ்வீட்டுப் பெரியவர்கள் இலைமறை காயாக மதுவைத் தவிர்க்கும்படி கூறியிருந்தனர்.

 

தனது பழைய நினைவுகளை மறக்க வேண்டி எனும் காரணத்தை முன்வைத்து மது அருந்தியவரால், தவிர்க்க இயலாமலும், வந்தது முதலே தனிமையிலும் தவித்திருந்தார்.  

 

அதனால் தனது பால்யகால சினேகிதரைக் கண்ட தாஸிற்கு, வெற்றியுடன் பேசுவது மகிழ்வைத் தந்தது.

 

ஆனால் வெற்றி அதை விரும்பாமல், தனக்கு வேறு வேலை என்று காரணம் கூறி இடையில் தனது தாயைக் காண காரைக்குடி கிளம்பியிருந்தார்.

///

 

தந்தையோடு ஊருக்குக் கிளம்பியவளுக்கு, தாயை விட்டு வரும்போது உண்டான உணர்வு, தற்போது ஊரை விட்டுக் கிளம்பும் போதும் வந்திருந்தது.

 

எதற்காக தனது தாயிடம் இங்கு வர தனக்கு விருப்பமில்லை என்று இங்கு வரத் தயங்கினாலோ, அதே ஊரை விட்டுக் கிளம்ப, மனம் சொல்லொணா துயரத்தை அடைந்திருந்தது.

 

இருந்தாலும், பத்து நாட்களில் ஊருக்கு திரும்பி விடலாம் என்கிற நம்பிக்கையில், பயணம் முழுவதும் கடந்து போன நாள்களின் நினைவுகளை அசைபோட்டிருந்தாள் நவீனா.

 

பெற்றவர்களுக்குப் பிறகு, தன் மீது கரிசனை, கண்டிப்பு, அன்பு இதைக் காட்டுவதற்கு தான் இதுவரை சம்பாதித்த முல்லை ஆச்சி, தங்கவேலு தாத்தா, சசி அத்தை இவர்களின் பட்டியலில் தற்போது சங்கரும் அவள் உணராமலே வந்திருந்தான்.

 

என்னதான் அவன் தன்னைக் கண்டித்தாலும், சத்தம் போட்டாலும், முறைத்தாலும், அதில் இருந்த அவனது அக்கறை பெண்ணுக்கு பாதுகாப்பு உணர்வைத் தந்திருந்ததேயொழிய, அவன்மீது வெறுப்பைத் தரவில்லை என்பதை உணர்ந்தாள்.

 

சாந்தனு, வரா இருவரும் தோழர் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

 

தாயைக் கண்டவளுக்கு, ஓடிச் சென்று கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலைவிட, ‘ஏன் மானகிரிக்கு இதற்கு முன்ன என்னை அடிக்கடி லீவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போகலை, விழாக்களுக்கு அனைவரும் குடும்பத்தோடு அங்கு வரும் நிலையில், நாம் ஏன் அதில் கலந்து கொண்டதில்லை என்பது போன்ற கேள்விகள் மட்டுமே முன்வந்து நின்றது.

 

வந்தவுடன் இதைப் பற்றிக் கேட்கக் கூடாது என எண்ணியவள், அனைவரோடும் இலகுவாக பேசத் துவங்கினாள்.

 

பெண்ணின், தன்மையான பேச்சு, நடை உடை பாவனைகளில் வந்திருந்த இலேசான முதிர்வு, வளவளப்பு, வம்பு இதை விட்டிருந்த மகளைக் கண்ட புஷ்பாவிற்கு, ஏனோ மனம் வருந்தியிருந்தார்.

 

மகளைத் தாயின் வீட்டில் விட்டு மிகவும் கஷ்டப்படுத்திவிட்டோமோ என்று கலங்கியிருந்தார்.

 

‘வளரும் பருவத்தில், பெற்றோரது அருகாமையில்லாது, அதிகமான பொறுப்புகளைத் தந்து, பணிகளைத் திணித்தால், பெண் பிள்ளைகளின் வளர்ச்சி குறைவதோடு, பிள்ளைகளுக்கு மனமுதிர்வு விரைவில் வந்துவிடும்’, என்கிற கிராமத்து வார்த்தையை நினைத்தே வருத்தமடைந்திருந்தார் புஷ்பா.

 

பொறுப்பாக அவளே வந்து எதாவது பணிகளை முன்வந்து செய்வது மகிழ்ச்சியைத் தந்தாலும், பெற்றவளுக்கு பிள்ளையின் அந்த வயதிற்கான சில குணங்களை விட்டுவிட்டாற்போல என்பதைவிட தங்களது செயலால் அது மகளிடம் மறைந்து போனதுபோல உணர்ந்தார்.

 

தாய், தம்பி மற்றும் தந்தையோடு விடுப்பைக் கழித்தவள், அருகில் உள்ள பிள்ளைகளோடு சென்று விளையாடும் எண்ணத்திற்கு வரவே இல்லை.

 

நந்தாவும், சகோதரியின் முதிர்வை, இடைவெளியாக எண்ணி, நவீனாவுடன் இலகுவாக வந்து பேசத் தயங்கினான்.

 

தின்பண்டங்களுக்கும், விளையாட்டிற்கும் இதுவரை நந்தாவுடன் சண்டை போடும் நவீனா, “இந்த நந்தா எனக்கு இது போதும்.  நீ சாப்பிடு, என்று தம்பி கேளாமலே கொண்டு வந்து தந்திருந்தாள்.

 

பெரிய குடும்பத்தில், நிறைய பிள்ளைகளோடு பகிர்ந்து உண்ணப் பழகிருந்த குணம் இங்கும் தலைகாட்டியிருந்தது.

 

தமக்கையை நம்பாமல் பார்த்து, “நிசமாவா.  எனக்கா?, என்றபடியே ஆச்சர்யமாக வாங்கிக் கொண்டான் நந்தா.

 

‘விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் இனி தனக்கு வேண்டாம்.  நீயே வைத்துக் கொள் என்று பெருந்தன்மையாக தனக்குத் தந்தவளைக் கண்டு புரியாமல் பார்த்திருந்தான் நந்தா.

 

பள்ளி திறக்கும் நாளும் நெருங்கவே, தாயிடம் மனதில் வந்திருந்த கேள்விகளை முன்வைத்திருந்தாள் நவீனா.

 

‘அப்பாவுக்கு பெரும்பாலும், ஒரே இடத்தில, ஒரே ஊருல எப்பவும் வேலை இல்லை.  தமிழ்நாட்டுக்குள்ள வேலையில இருந்தப்போ விழா, நிகழ்வு இந்த மாதிரி விசயத்துக்கு கூப்பிட்டா ஊருக்கு போற வழக்கம் இருந்திருக்கும்.  பெரும்பாலும், வெளி மாநிலங்கள்ல இருந்ததால, அடிக்கடி குடும்பத்தோடு ஊருக்குப் போயி வர முடியாத சூழல்.  அதான் நாம அங்க அடிக்கடி போகல! என்று மகளிடம் அதற்கான காரணத்தைக் கூறிவிட்டு அமைதியாகியிருந்தார் புஷ்பா.

 

மகளிடம் மறவாது, மானகிரியில் தங்கியிருப்பது எவ்வாறு உள்ளது என்பதையும் கேட்டறிந்திருந்தார் புஷ்பா.

 

கண்களில் நிறைவோடும், பல நினைவோடும், ஆழ்ந்து ரசனையோடு பேசிய மகளைக் கண்டு, இதுவரை இருந்த மனவருத்தம் மறைந்திருந்தது புஷ்பாவிற்கு.

//////////////

தேர்வு விடுமுறையின் போது நவீனா ஊருக்குச் சென்றிருக்க, அப்போது மானகிரிக்கு வந்து சென்றிருந்தான் சங்கர்.

 

ஊருக்கு திரும்பியவள், வீட்டில் உள்ள வாண்டுகளுக்கு, தனது தோழமைகளுக்கு என சில பொருட்களை அன்பின் நிமித்தமாக வாங்கி வந்து தந்திருந்தாள்.

 

அனைவருக்கும் ஏக சந்தோசம்.  வராவிற்கும் வாங்கி வந்து தந்திருந்தாள் நவீனா.

 

வாண்டுகள், “இனி எப்பக்கா ஊருக்கு போவ, என்று கேட்குமளவிற்கு பரிசு அவர்களின் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

 

மோனிகாவை பள்ளியில் சேர்க்க தாஸ் விரும்பியதை, இளைய ஐயாவிடம் தபால் மூலம் பகிர்ந்து கொண்டிருந்தான் சங்கர்.

 

தன்னால் தற்போது ஊருக்கு வந்து செல்லும் சூழல் இல்லாததால், அந்தப் பெண்ணை பள்ளியில் சேர்க்க, ஆவண செய்திடுமாறு எழுதியிருந்ததை அடுத்து, மோனிகாவும் இவர்களோடு பள்ளிக்கு செல்லத் துவங்கியிருந்தாள்.

 

மோனிகா, நவீனாவிடமே மனந்திறந்து பேச பிரியம் காட்டவில்லை.  பள்ளியிலும் அதுபோலவே இருந்தாள்.

 

இருந்தாலும், அது அவள் குணம் என்று மற்றவர்கள் விட்டுவிட்டனர்.

 

///////

நவீனா, தற்போது மிகவும் கவனமாக ஒவ்வொரு பணியையும், இடத்திற்கு தகுந்தபடி கையாளத் தகுந்தவாறு தேர்ந்திருந்தாள்.

 

பத்தொன்பது வயது ஆணிற்கு இருக்கக் கூடிய மனமுதிர்வு, பதினான்கு வயது பெண்ணிற்கு இருக்கும் என்கிற இயற்கை சூட்சும விதி அனைவருக்கும் பொருந்துவதில்லை.

 

சூழலை உள்வாங்கி, காரியத்தில் கண்ணாக, பொறுப்புடன், விழிப்போடு, கற்பதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

 

புத்தகத்தில் இருப்பதைப் படிப்பதல்ல இயற்கை சூட்சும விதி!

 

பிரபஞ்ச வீதியில் மனிதர்களுக்குள்ளும், இயற்கையிடமும், சுற்றம் முழுமைக்கும். உயிருள்ள, உயிரற்ற என்ற எந்த பாரபட்சமுமின்றி, விரவிக் கிடக்கும் அது. 

 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாழ்க்கைப் பாடத்தை, நுணுக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

 

தனிநபரின் ஈடுபாடு, திறமை இவற்றைப் பொறுத்து, உள்வாங்கும் திறமை ஆளாளுக்கு மாறுபடும் என்கிற நியதியில், நவீனா சூட்சும விதியின் சூட்சுமங்களை கற்றுத் தேருவதில் ஆர்வமாக இருந்தமையால், அந்தப் பக்குவத்தை குறுகிய காலத்திற்குள் பெற்றிருந்தாள்.

 

இத்தகையவர்களின் கற்றுக் கொள்ளும் தாகம் என்றும் தணியாதது!

 

நவீனாவும் ஆர்வத்தோடு, புத்தியில் ஸ்திரத்தன்மையோடு ஒவ்வொன்றையும் அணுகுகிறாள்.

////

ஊரிலிருந்து திரும்பியவள், பள்ளி நாள்கள் தவிர, இதர நாள்களில் பிடிவாதமாக வயல்வெளிகளைக் காணச் சென்று வருகிறாள்.

 

வரப்புகள் அவளை இப்போது மகிழ்வோடு வரவேற்கிறது.

 

பெண்ணும், கவனத்தை கையாள்கிறாள்.

 

அத்தோடு மழையும் பெய்யத் துவங்க குளம், கண்மாய்களில் நீரி நிரம்பத் துவங்கியிருந்தது.

 

அத்தை, பெரியம்மா, சித்தி இவர்களிடம் போய், தனக்கு நீச்சல் கற்றுத்தரும்படி வம்படி செய்தவளை, “இப்போ எப்டிடி போயி நீச்சல் காத்துக் குடுக்க?, என்று பின்வாங்கியவர்களை விடாமல் தொந்திரவு செய்து சம்மதிக்க வைத்திருந்தாள்.

 

அதிகாலை நேரத்தில் அழைத்துச் சென்று ஒரு வாரம் பயிற்சி எடுத்தவுடன் நீச்சல் பெண்ணின் வசமாகியிருந்தது.

 

இதுபோல கிராம வாழ்க்கையில் உள்ள இதுவரை பெண் அறிந்திராத விடயங்களை கேட்டுக் கேட்டு ஆர்வமாகவும், கவனமாகவும் கற்றுக் கொள்ளத் துவங்கியிருந்தாள் பெண்.

 

அடுத்து, தீபாவளி வந்தவுடன் வீடு இன்னும் களை கட்டியது.

 

பட்சனங்கள், பலகாரங்கள் செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு எண்ணிக்கையைக் கூட்டினர்.

 

அவற்றை உண்பதிலேயே, மது உண்ட வண்டைப்போல, பிள்ளைகள் மாலையில் மயங்கிக் கிடந்தனர்.

 

தீபாவளிக்கு வந்திருந்த சங்கரை, நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டவளுக்கு, முன்பு அவனைக் கண்டால் இருந்த தோன்றும், பயம், தயக்கம் தற்போது இல்லாமல் போயிருந்ததாக உணர்ந்தாள்.

 

வந்தவன், பழைய சம்பவம் பற்றியோ, அப்டி ஒன்று நடந்ததாகவோ பெண்ணிடம் காட்டிக் கொள்ளவில்லை.

 

சமையல்கட்டில் பலகாரங்கள் செய்வதில் துணையாக இருப்பதிலிருந்து, மாலை நேரங்களில் மத்தாப்பூ கொளுத்துவது வரை கவனம் தேவையாக இருப்பதை உணர்ந்திருந்தவள், நேர்த்தியாக இருக்கக் கற்றுக் கொண்டிருந்தாள்.

 

வேட்டு வைப்பதில் முதலில் தயக்கம் காட்டியவளை, “இங்க வா நவீனா, நான் உனக்கு எப்படி சேஃபா ஹேண்டில் பண்றதுனு சொல்றேன், என சாந்தனு கூற, அதையே அவன் ஒரு முறை செய்ததைப் பார்த்ததில் தானாகவே தைரியமாக முன்வந்து பட்டாசு வெடித்திருந்தாள் நவீனா.

 

வெற்றியைப் பொருத்தவரை, புஸ்வானம், சங்குசக்கரம், கம்பி மத்தாப்பூ தவிர வேறு எந்த வெடிகளையும் தீபாவளிக்கு வாங்கித் தந்தவரல்ல.

 

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதாக இதுவரை அப்டித்தான் பிள்ளைகளை வளர்த்திருந்தார் மனிதர்.  அதனால் இந்த சத்தத்தோடு கூடிய வெடியினை வெடிக்க சற்று தயக்கம் இருந்தது நவீனாவிற்கு.  அதை தற்போது சரியாகி இருந்தது.

 

தவுசண்ட் வாலா, டென் தவுசண்ட் வாலா என்று வாசலையே குப்பையாக்கிய ஆண்களுக்கு இணையாக இந்த ஆண்டு தானும் வெடியை வெடித்து மகிழ்ந்திருந்தாள் பெண்.

 

பெண்ணின் விளையாட்டுத்தனம் மறைந்து, சமயோசிததனம் கூடியதை அவளின் நடை, பாவணைகளில் கண்ட முதிர்ச்சியில் அறிந்து கொண்டிருந்தான் சங்கர்.

 

ஆனாலும் பெண்ணை எதற்காகவும் நேரில் நெருங்கியிராவன், நெஞ்சத்தில் அவளோடு உருகி ஒன்றாகியிருந்தான்.

 

தேடல் பார்வையை சற்றுத் தணித்திருந்தான்.  அதற்குக் காரணம் நேரடியான நவீனாவின் துருவல் பார்வை காரணமாக இருந்தது.

 

‘எதுக்கு இந்தப் பார்வை பாக்குறா, நாம பாக்கறது ஒரு வேளை தெரிஞ்சிருச்சோ, என்று பெண்ணைப் பார்ப்பதைத் தவிர்க்கத் துவங்கியிருந்தான் சங்கர்.

 

சாந்தனு, மற்றும் இளையவர்களோடு சேர்ந்து அரட்டை, உள்விளையாட்டுகள் என சத்தம் வீட்டில் நிறைந்து இருந்தாலும், அதில் புதிதாக வந்திருந்த நவீனாவின் சாந்தத்தையும் உணர்ந்திருந்தான் சங்கர்.

 

மாறுபாடுகளை மனம் குறித்துக் கொண்டது.  மாரன் தற்போது சமயோசிதமாக நடக்க தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

 

மாரனின் தடுமாறல்கள் சங்கரைத் தாக்குமா?

//////////////