RR 4

ரௌத்திரமாய் ரகசியமாய்- 4

ஆறடிக்கும் மேல் வளர்ந்த உருவம், ஹேர் ஜெல் பூசி மேல் நோக்கி சீவப்பட்டிருந்த கேசம், கருப்பு நிற முழு கோட் சூட்டுடன் கண்களுக்கு கூலர்ஸை மாட்டியபடியே, அவனது லெதர் ஷு கால்கள் தடதடக்க வேக நடையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் பரத்.

‘என்னா‌ நடை… என்னா வேகம்… இப்படியே போனா பாஸ் நடந்தே வீட்டுக்கு போயிடுவாரு போல இருக்கே. அவர் வேகத்துக்கு இதையும்‌ தள்ளிக்கிட்டு எப்படி ஓடுறது…”என‌ மனதினுள் முணுமுணுத்தவாறு லக்கேஜ்ஜையும் தள்ளிக் கொண்டு முன்னால் செல்லும் தன் தலைவனது நடையின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் திலீப்பும் பின்னாலேயே ஓடினான்.

“தீலிப்…” என்ற பரத்தின் குரலில் திடுக்கிட்டு,

“ஆங்… யெஸ் பாஸ்” என்றான்.

“லால் அங்கிள் இருக்காரா?”

“பாஸ்… ஹீ இஸ் வெயிட்டிங் அவுட் சைட்” என்ற பதிலைத் தொடர்ந்து வெளியேற, அவனை அழைத்துச் செல்ல, பாதுகாவலர்கள் சூழ, தயாராக இருந்தது அவனுடைய வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ்.

லாலும் அங்கு தான் நின்றிருந்தார். கூலர்ஸை கழற்றியபடி ஓரிரு நொடிகள் அவனை வெறித்து பார்த்து விட்டு வந்த வேகத்திலேயே காரில் அமர திலீப்பின் கைகளில் கார் வேகமெடுத்தது.

“யாரைக் கேட்டு அவனை அட்டாக் செஞ்சீங்க?” எரிந்து விழுந்தான் பரத்.

“எந்த நேரத்தில் என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் பரத்”

“அப்போ எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்றீங்களா?” உள்ளடக்கிய கோபத்துடன்.

“இருபது வருஷ அனுபவம் எனக்கிருக்கு. உங்க அப்பா காலத்திலிருந்தே”

கொதித்துப் போனான் பரத். எத்தனை அலட்சியமான‌ பதில். அதுவும் அவன் முன்னாலேயே.

‘அப்போ நான்‌ என்ன முட்டாளா? இவரை கூடவே வைத்திருப்பதனால் தன்னை ஒன்றும் தெரியாத பொடிப்பையன் என்று நினைத்து விட்டாரா?’

நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டன. நாடியில் ஓடிய குருதியின் வெப்பம் குப்பென அதிகரித்தது. அவர் புறம் திரும்பி அவரை வெறித்தான். அவன் கண்களில் எரிமலையின் சீற்றம்.

“என்னை கேட்கணும், எந்த முடிவு எடுக்குறதா இருந்தாலும் என்னை கேட்கணும், ஐ அம் தி ஹெட்… யூ ஷுட் ஒபே மை ஆர்டர்…” என்று வெடித்தான்.

பதிலுக்கு அவனையும் சில கணம் வெறித்தவர் எதுவும் பேசவில்லை அமைதியானார்.

அடுத்து சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தன. எந்த கோபமுமில்லை.பின் இருவருமாக அடுத்தடுத்த திட்டங்களை வகுக்கத் துவங்கினர்.

***

விடியலின் கரங்கள் பூமியை காதலுடன்‌ தழுவியிருக்க, தன் முகம் மறைத்திருந்த முகில்களை விலக்கி சோம்பலாக வெளிவந்து கொண்டிருந்தது சூரியன்‌.

பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறமே பரவி படர்ந்திருந்தது. மலைகளில் முளைத்திருந்த மரம், செடி, கொடிகளின் பச்சை சிகரங்கள் அனைத்தும் புகைந்து கொண்டிருந்தன,
முகடுகளை சுற்றிலும் அடர்த்தியாய் வெண்பனி மூட்டங்கள்.

உடலை ஊசியாய் துளைக்கின்ற ஈரப்பதம் மிக்க குளிர்காற்று. பச்சைமலையை துளைத்துக் கொண்டு வெள்ளையாய் கொட்டுகின்ற‌ தூரத்து அருவி.

பாறையை செதுக்கி அமைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் பாம்பென ஊர்ந்து கொண்டிருந்தது ஓர் தொடர் வண்டி. சில்லென்று ஈரக்காற்றில் மிதமான வெப்பமும் அவள் தேகத்தை இதமாய்‌ வருடிச்‌ சென்றது.

ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. வெளியில் தெரிந்த பனி சூழ்ந்த பசுமையான உயர்ந்த மலைகளும், உயர்ந்த மரங்களும் அந்த ஊரின் ரம்மியமான தோற்றத்தை கண்டு உள்ளம் சிலிர்க்கச் செய்தது.

ஜன்னலோரமாக அமர்ந்திருந்த இயற்கை அன்னையின் வரங்களை இரசித்துக் கொண்டிருந்தாள் தாமிரா. அவள் தோளில் சாய்ந்து உறங்கிப் போயிருந்தாள்‌ சிந்து. கண்டி புகைரத நிலையத்தை அடைய இன்னும் சில நிமிடங்களே இருந்தன.

‘மூனே மூனு மணிநேரம் ட்ராவல் பண்றதுக்குள்ள தூங்குறதைப் பாரு…’ சலித்தபடி அவளை எழுப்பினாள்.

“ஏய்‌ சிந்து… எழுந்திரு… இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு, சி-ந்-து” அவளை உலுக்கி எழுப்பிக் கொண்டே தங்களது லக்கேஜ்களை சரிபார்க்க ஆரம்பித்தாள்.

‘ஆவென’ வாயை‌ பிளந்து கொட்டாவியை வெளியேற்றியபடியே எழுந்து, உடைகளையும் கலைந்திருந்த தலைமுடியையும் சரிப்படுத்திக் கொண்டே,

“ஹேய் தாம்ஸ்… அப்படியே என்னோட லக்கேஜ், ஹேண்ட் பேக்கையும் இந்தப் பக்கம் எடுத்து கொடு டி…” என்று தாமிராவிடம் கேட்க,

அவளை ஏற இறங்க பார்த்து முறைத்து விட்டு “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இந்தா பிடி” என‌ அவளது லக்கேஜை அவள் புறம் தள்ளி விட்டு, கைப்பையையும் அவளிடம் கொடுத்தாள்.

கொழும்பிலிருந்து கண்டிக்கு மூன்று மணிநேர பயண தூரம் தான். தருண் இருவரையும் காரில் அழைத்துச் சென்று விடுவதாக கூறியும், ஜாலியாக ரயிலில் பயணிப்பதாக கூறி மறுத்து விட்டனர்.

கண்டியின் ஜில்லென்ற காலநிலையில் இருவருக்கும் குளிரெடுக்க, ஸ்வெட்டரை அணிந்து கொண்டனர்.

ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், கைகளை தேய்த்து சூடு பரவச்‌ செய்து கொண்டு அவர்களை அழைத்துச் செல்ல வரும் காருக்காக காத்திருந்தனர்.

கண்களால் சுற்றும் முற்றும் பார்த்தபடி “தாம்ஸ் செம்ம‌ ப்ளேஸ் பா… ஜில்லுனு இருக்கு. நல்லா சாப்பிட்டு இழுத்து போர்த்திட்டு தூங்கினா சூப்பரா தூங்கலாம்பா…” என்று கண்கள் பளபளக்க கூறியவளை முறைத்தாள் தாமிரா.

தாமிரா, “சாப்பிடறது தூங்கியது ரெட்டை தவிர வேற எதையும் உருப்படியா செய்யாத. உன்னை மாதிரி ஒருத்தி கிட்ட சிக்கி பேஷண்ட்ஸ் என்ன பாடு‌ படப் போறாங்களோ?” என‌ தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஓகே நல்லவளே! உன் அட்வைஸை அப்புறம் கேக்குறேன். வா இப்போ இந்த அழகான‌ ஏரியால இந்த தேவதைய ஒரு போட்டோ எடு” என்று ஓரிடத்தில் நின்று போஸ் கொடுக்க ஆரம்பித்தாள்.

‘இவளை…’ என சலித்துக் கொண்டு தோழியின் ஒவ்வொரு போஸையும் தன் கைப்பேசியில் படம் பிடித்தபடியே பின்னால் நகர, யாரோ ஒருவன் அவளை இடித்து தள்ளிக்கொண்டு வேகமாக நடக்க, நிலை தடுமாறியவளது கைப்பேசி தரையில் விழுந்தது.

“ஐயோ என் செல்ஃபோன்…” என இவள்‌ பதற, ‘போன் என்னாச்சோ’ என்று சிந்துவும் ஓடி வந்தாள்.

தாமிராவின் கைப்பேசியின் திரை நொறுங்கிப் போயிருந்தது. பிறந்த நாளன்று தருண் அவளுக்காக வழங்கிய பரிசு அது.

செல்ஃபோன் திரையை கண்டதும் அழுகை உடைப்பெடுக்க, சிந்துவோ தாமிராவின் மேல் இடித்து தள்ளிச் சென்றவனை தேடினாள்.

அவள் மேல் இடித்தவனோ அதை சட்டை செய்யாமல் நடந்து சென்று கொண்டிருந்தான். சிந்துவுக்கு அந்த மனிதன் மேல் பொல்லாத கோபம் வந்தது.

“ஏய் தாமிரா சும்மா அழாதடி, பாரு அந்த ஃபுட் பால் மண்டையனை…” என உறுமிக் கொண்டு எழுந்தாள்.

இடித்து தள்ளியது மட்டுமில்லாமல் ஒரு மன்னிப்பை கூட சொல்லாமல் செல்லும் அவன் மேல் தாறுமாறாக கோபம் முளைக்க,

“ஹலோ… எக்ஸ் கியூஸ் மீ… உன்னை தான்… என் ஃபிரண்ட் போனை உடைச்சிட்டு எங்க ஓடுற?” அவன் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடினாள்.

பார்ப்பதற்கு மலை போல் இருக்கும் அந்த ஆளிடம் ஏதும் சண்டை போட்டு வம்பை விலைக்கு வாங்கி விடுவாளோ என்ற பயத்தில் அவளை தடுப்பதற்காக தாமிராவும்‌ அவள் பின்னாலேயே ஓடினாள்.

அவனுக்கு இவள் அழைத்தது காதில் விழவில்லை போலும்

“ஏய்…! மொட்டை உன்னை தான்டா இடியட். நில்லுடா இல்லைனா உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடுவேன்” என்று அவள் கத்திய மறுநொடி பிரேக் பிடித்தது போல் அவன் நடை தடைபட்டது.

அதே வேகத்தில் திரும்பி நின்றான் அவன். தனக்கு பயந்து தான் நின்று விட்டான் என கற்பனை செய்து கொண்டவள் திரும்பி தோழியிடம் ‘எப்படி’ என்று தோரணையாக நின்று கேட்டுக் கொண்டிருக்க, தாமிராவோ பனியில் உறைந்து போனது போல் நிற்க அவள்‌ விழிகளோ அச்சத்தில் விரிந்து போயிருந்தன.

தாமிரா அப்படி சிலை போல் நின்றதை கண்டவள் குழம்பிப்போய் ‘எதுக்கு இப்படி ஷாக்காகி நிக்குறா’ என அந்த மனிதன் நின்ற திசையில் திரும்ப அவன் இரு கைகளிலும் முளைத்திருந்தது இரு துப்பாக்கிகள்.

இத்தனை நேரம் வீர மங்கையை போல் ஆட்டம் போட்டவள் துப்பாக்கியை கண்டதும் விதிர்விதிர்த்து போனாள். அவனோ கண்கள் ரத்தமென சிவக்க தாமிராவையே முறைத்துக் கொண்டிருந்தான்.

அவன் கைகளில் இருந்த துப்பாக்கியை இடுப்பிலிருந்து உருவி எடுத்ததுமே வாயடைத்துப் போனவள் தன்னையே அவன் முறைப்பதை கண்டு சுவாசம் தடைபட எதுவும் செய்யத் தோன்றாதவளாய் நின்றிருக்க, அவனருகிலேயே நின்றிருந்த சிந்துவுக்கோ கண்களில் மரண பயம் தெரிந்தது.

ஆறடி வளர்ந்த ஆஜானுபாகுவான உருவம். வழித்து வெட்டப்பட்ட தலைமயிர். அகன்ற நெற்றி. அடர்ந்த புருவம். அளவான தாடி. அவன் கண்களில் அந்த துஷ்டப் பார்வை. முரடன் அவன். அந்த தோற்றமே வில்லனாக எடுத்துக் காட்டியது அவளுக்கு.

அதே நேரம், அவனது துப்பாக்கி தாமிராவை குறிபார்த்து இருந்தது. அதை பார்த்ததும் அவளது முட்டைக் கண்கள் மேலும் விரிந்தது. .

அடுத்த கணமே “டுமீல்” என்ற சத்தம் “ஆ…” என்று கத்திக் கொண்டே காதுகளை இறுக மூடிய‌படி தோழிகள் இருவரும் குனிந்தனர்.

தாமிராவுக்கு பின்னால் ஒரு மனிதன் நெற்றிப்பொட்டில் தோட்டா துளைத்து சரிந்து விழுந்தான். கூட்டத்தோடு கூட்டமாக கலந்திருந்த பலரது கைகளில் துப்பாக்கிகள் முளைத்தன.

அதற்குள் சுதாரித்த சிந்து அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு சிலையாய் சமைந்திருந்த தாமிராவையும் இழுத்துக் கொண்டு ஓர் மரத்தின் பின் ஓடி ஒளிந்து கொண்டாள்.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு ‘டமால் டுமீல்’ என்ற‌ சத்தம் மாத்திரமே செவிகளில் விழுந்தது. தாமிரா சிந்துவின் தோள் வளைவில் முகம் புதைத்தபடி காதுகளை இறுகப் பொத்தியவள் அச்சத்தில் நடுங்கினாள்.

சிறிது நேரத்தில் எந்த சத்தமும் இல்லை. துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து போயிருந்தது. கூட்டம் கூடியது. எங்கும் ஒரே சலசலப்பு.

தாமிராவை அழைத்துக் கொண்டு ஒளிந்திருந்த மரத்தை விட்டும் வெளியே வந்தாள்‌ சிந்து. அவளுக்கும் அதிர்ச்சி தான்.

அதற்குள் இவர்களை அழைத்துச் செல்லவென அனுப்பப்பட்டிருந்த காரும் வந்து சேர்ந்தது. இறங்கி ஓடி வந்தான் காரை ஓட்டி வந்த பழனி. சற்றுமுன் நடந்த கலவரம் பற்றி அவனுமே அறிந்திருந்தான். அதனால் விளைந்த பதற்றம் அது.

இருவரது பாதுகாப்பையும் உறுதி செய்த பிறகே அவனுக்கு உயிர் வந்தது. காரணம் அவன் தான் தாமதமாகியிருந்தான்.

வேறு எதுவும் தோன்றவில்லை இருவருக்கும். இந்த இடத்தை விட்டு ஓடினால் போதும் என்றிருந்தது. எங்கேயோ இருந்த அவர்களது லக்கேஜினை தேடி எடுத்து காரில் ஏற்றினர். இயந்திரம் போல அவர்களும் காரில் ஏற கார் பயணித்தது.

என்னவாயிற்று என்பதை உணரவே தாமிராவுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. துப்பாக்கி! கொலை! ரத்தம்! அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

என்ன நடந்தது? யார் யாரை சுட்டது? யார் அந்த மனிதன்? எப்படி நடத்தது? உயிருக்கு மதிப்பேயில்லையா?

கொடீரம்! கொடூரம்! அந்த மனிதனின துஷ்டப் பார்வை அவள் கண்முன் வந்து போக பயத்தில் முகம் வெளிரியது.

சிந்துவும் தாமிராவும் பேசிக் கொள்ளும் மன நிலையில் இல்லை. எவ்வளவு அழகாக ஆரம்பித்த நாள். இந்த ஊருக்கு காலடி வைத்த முதல் நாளே இப்படி ஒரு கொடூரத்தை பார்க்க நேர்ந்த இருவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள்.

இனிவரும் நாட்கள் எப்படி கழியுமோ? என்ற பயமும் உள்ளுக்குள் தலை தூக்கியது. அதற்குள் இருவரும் தங்குவதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டை அடைந்திருந்தனர்.

# # #