NPG-15

NPG-15

கீதாஞ்சலி – 15

சென்னையின் பரபரப்பு முழுதாகத் தொற்றிக் கொள்ளாதப் புறநகர் பகுதியிலிருந்தது அந்த வீடு. வாசலில் இருந்த தங்க நிற போர்டில் டாக்டர். வாசுகி மற்றும் அட்வகேட் ருத்ரமூர்த்தி என்று பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் அந்த வீட்டில் இருப்பவர்களைப் பற்றிச் சொல்லின.

தீப்தியின் இல்லம் அது. தீப்தியின் தாயார் வாசுகி சென்னையில் பிரபலமான மகப்பேறு மருத்துவர். மிகவும் கைராசிக்காரர் எனப் பெயர் பெற்றவர். மருத்துவப் பணியை சேவையாக மட்டுமே செய்யும் நல்லுள்ளம் கொண்ட பெண்மணி.

தந்தை ருத்ரமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். நீதிமன்றத்தில் மட்டுமே தன்னுடைய வாதத் திறமையால் எதிரணியினரைத் கதிகலங்கச் செய்பவர். வீட்டைப் பொறுத்த வரை அவர் ஒரு நல்ல கணவர், பாசமான தந்தை மட்டுமே.

தீப்தியைப் பொறுத்த வரை பெற்றோராக மட்டுமின்றி இருவருமே அவளுக்கு நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். ஒற்றை மகள் தங்களுடன் இருக்காமல் எங்கோ கண் காணாத மூலையில் அமெரிக்காவில் இருப்பதில் இருவருக்குமே அவ்வளவு வருத்தம் இருந்தது.

திருமணப் பேச்செடுக்கும் வேளைகளில் எல்லாம் அவளின் மழுப்பலானப் பதிலகள் வேறு மிகுந்த கவலையைக் கொடுத்திருந்தது அந்தப் பெற்றோருக்கு. இப்பொழுது மகள் திடீரென அமெரிக்காவிலிருந்துத் திரும்பி வந்ததில் கொஞ்சம் மகிழ்ந்து போயிருந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வண்ணம் தன்னுடைய இத்தனை வருடக் காதலையும், அதற்கு தற்பொழுது கிடைத்திருக்கும் சம்மதம் பற்றியும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள் தீப்தி.

அதைக் கேட்டு வாசுகி சற்று அமைதி காக்க, ருத்ரமூர்த்தி தான் பேச்சைத் தொடங்கினார்.

“ஏன் டா பாப்பா, இதை எங்க கிட்ட இத்தனை நாள் சொல்லாம இருந்த?” மகள் எத்தனைப் பெரியவளாக இருந்தாலும் பெற்றவர்கள் இருவருக்குமே எப்பொழுதுமே அவள் பாப்பா தான்.

“சொல்லணும்னு தான் ப்பா நினைப்பேன். ஆனா…” திணறினாள் தீப்தி.

“நாங்க உன்கிட்ட எப்பவாவது கண்டிப்பா நடந்திருக்கோமா? ஒரு ஃப்ரெண்ட் மாதிரி தானே பழகினோம். அப்புறமும் எங்க கிட்ட இருந்து மறைச்சுட்டியே பாப்பா.”

“நான் சொன்னா, நீங்க உடனே கௌஷிக் கிட்டத்தான் போய் நிப்பீங்க. அவர் ஒத்துக்கவே மாட்டார். அது எனக்குக் கண்டிப்பா தெரியும். அதான் சொல்லலை.”

“அவர் ஒத்துக்காட்டி நான் விடுவேனா? மாப்பிள்ளை கையைக் காலைக் கட்டித் தூக்கிட்டு வந்திருக்க மாட்டேன்.”

“இதுக்குத் தான்… இதுக்குப் பயந்து தான் நான் சொல்லலை. காதலை ஃபோர்ஸ் பண்ணி எல்லாம் வர வைக்க முடியாதுப்பா.”

“இப்ப மட்டும் வந்துருச்சாக்கும் அந்தக் காஆஆஆதல்” இப்பொழுது தான் வாய் திறந்தார் வாசுகி.

“இதுவரைக்கும் காதல் இருந்துச்சான்னு எனக்குத் தெரியாதும்மா. ஆனா நான் காதல் சொன்னப்போ அதுக்கு மறுப்பா அவர் சொன்ன காரணம் இப்போ இல்லை.”

“அப்படி என்ன பொல்லாத காரணம்?” இது ருத்ரமூர்த்தி.

“அவர் ஃப்ரெண்ட் மேரேஜ் லைஃப் சரியா அமையலை ப்பா. அவர் குழந்தையோட தனியா நிக்கிறப்போ நான் மட்டும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு…” தீப்தி முடிப்பதற்குள் மீண்டும் ஆரம்பித்தார் வாசுகி.

“அவர் சொன்ன காரணம் இல்லாமல் போனாலும் அவர் உன்னைத் தேடி வரலை பாப்பா, நீதான் அவரைத் தேடி வந்திருக்க. அதை மறந்துடாதே”

“அவர் வந்தா என்ன? நான் வந்தா என்ன? காதலுக்குள்ள இந்த ஈகோ போகோ எல்லாம் பார்க்க கூடாது ம்மா.”

“ஏன் சொல்ல மாட்ட? நான் எந்த முடிவும் இப்ப சொல்ல மாட்டேன். சாயங்காலம் வர்றாங்க இல்ல. வரட்டும், நேர்ல பார்த்துட்டு முடிவு பண்ணிக்கலாம்.

இங்க பாருங்க, உங்களுக்கும் சேர்த்துத் தான் சொல்றேன். சாயங்காலம் அவங்க முன்னாடி தேவையில்லாம வாயை விட்டுடாதீங்க. முதல்ல பார்ப்போம். அப்புறம் எல்லாரும் எப்படி என்னன்னு விசாரிக்கலாம். அப்புறமா முடிவு பண்ணலாம். சரியா?”

“நீ சொல்ற மாதிரியே பண்ணிக்கலாம் வாசு” உடனடியாக பதில் வந்தது ருத்ரமூர்த்தியிடமிருந்து.

வாசுகி எழுந்து உள்ளே சென்றுவிட அப்பாவின் காதைக் கடித்தாள் மகள்.

“பேருக்கு தான்ப்பா நீங்க பெரிய கிரிமினல் லாயர். ஆனா அம்மாக்கிட்ட ‘சரி வாசு… சரி வாசு…’ இதைத் தவிர வேற எதுவும் பேசுறதே கிடையாது. சப்போர்ட் பண்ணுவீங்கனு பார்த்தா… போங்கப்பா” சொல்லிவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் தீப்தி.

“அப்படி இல்லடா பாப்பா, அம்மா எது சொன்னாலும் அது நம்ம நல்லதுக்காதான் இருக்கும். அந்தப் பையன் கௌஷிக் சரியான ஆளாய் இருந்தா அம்மா தன்னால ஓகே சொல்லப் போறா. உனக்கு உன் ஆள் மேல நம்பிக்கை இருக்குல்ல, அப்புறம் எதுக்கு சும்மா என் ஆளை குறை சொல்ற…”

“ஐய… ரொம்பத்தான் உங்க ஆளுக்கு சப்போர்ட் பண்றீங்க…” தனக்குப் பழிப்பு காட்டிவிட்டு தலையை சிலுப்பிக் கொண்டு போட்டிருந்த போனிடெயில் இங்குமங்கும் அசைந்தாடச் செல்லும் மகளையே பார்த்திருந்தார் ருத்ரமூர்த்தி.

அடுத்ததாக அவரது தர்ம பத்தினியைத் தேடிக் கொண்டுச் சென்றார்.

“ஏன் வாசு, பாப்பாக்கிட்ட அப்படிச் சொல்லிட்டு வந்தே? குழந்தை முகமே வாடிப் போச்சு தெரியுமா?”

“ஆமா… உங்க செல்லக் குழந்தை தான் நம்மக்கிட்ட இத்தனை வருஷமா இந்த விஷயத்தை மறைச்சு வைச்சிருக்கா.”

“ஜஸ்ட் பப்பி லவ்னு நினைச்சதா பாப்பா தான் சொல்லுச்சு இல்ல?”

“அது இல்லைன்னு ஆனப்புறமும் அவ நம்ம கிட்டச் சொல்லலை. அவளா தேடிப் போயிருக்கா. திடுதிப்புன்னு வந்து பாட்டு பாடப் போறேன்னு சொன்னப்பவே நான் யோசிச்சேன். என்னமோ இடிக்குதேன்னு…

இப்ப இல்ல தெரியுது. இல்லாட்டி இவளாவது பாடுறதாவது. இவளுக்குப் பாட்டு சொல்லிக் குடுக்க வந்தவங்க எல்லாரையும் துண்டைக் காணோம் துணியைக் காணோம்ன்னு ஓட வைச்சவ தானே இவ.”

மகள் சிறு வயதில் பாட்டு கற்றுக் கொள்ள அடித்த கொட்டங்களை நினைத்து இருவரும் இப்பொழுது சிரித்துக் கொண்டார்கள்.

“ஏங்க எல்லாம் சரியா வருமாங்க?”

“பார்க்கலாம் வாசு. இன்னைக்கு தானே முதல் தடவை பார்க்கிறோம். நிதானமா நல்லா விசாரிச்சு செய்யலாம் சரியா? நீ எதுக்கும் கவலைப்படாதே. எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.”

மனைவியிடம் சொல்லிவிட்டாலும் ருத்ரமூர்த்திக்கும் கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்தது. சாதாரணமான அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம் அவர்களுடையது. ராகுல் ரவிவர்மனின் உயரம் அவர்களைக் கொஞ்சம் மிரட்சி அடையச் செய்தது.

****************

மாலை நேரம். ராகுல் வீட்டிலிருந்து அனைவரும் தீப்தியின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். முதற்கட்ட தயக்கங்கள் இருந்த போதும் வெகு இயல்பாகத் தங்கள் குடும்பத்தோடு ஒன்றிப் போனவர்களைத் தீப்தியின் பெற்றோருக்கும் கொஞ்சம் பிடிக்கத்தான் செய்தது.

அதன் பிறகும் நீடித்த கொஞ்ச நஞ்ச தயக்கத்தையும் ராகுல் பேசிப் பேசியே சரி செய்திருந்தான். பேச அவனுக்குச் சொல்லியா தர வேண்டும்? இன்னமும் வாசுகியின் முகத்தில் கொஞ்சம் குழப்ப ரேகைகள் தென்பட, அவரிடம் சென்றவன்,

“இங்க பாருங்க ம்மா, நீங்க என்னை நம்பி உங்க பொண்ணை கௌஷிக்குக்குக் கல்யாணம் பண்ணி வைங்க. அவளுக்கு ஒரு அண்ணனா இருந்து காலத்துக்கும் அவளை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு” என்று சொல்ல,

பெண்ணைப் பெற்றவர்களுக்கு இந்த வாக்குறுதியே போதுமானதாக இருந்தது. ஆறடி உயரத்தில் நல்ல திடகாத்திரமான ஆண்மகனாக, தங்கள் மகளுக்கேற்ற அழகனாக இருந்த கௌஷிக்கையும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நண்பனுக்காக இவ்வளவு செய்பவன் நாளை தங்கள் மகளையும் நன்றாக வைத்திருப்பான் என்ற நம்பிக்கை கௌஷிக்கைப் பார்த்த மாத்திரத்தில் வந்திருந்தது.

அதை விடத் தங்கள் மகளிடம் மாமியார் பந்தா எதையும் காட்டாமல் வெகு சகஜமாகப் பழகும் சத்யவதியை ரொம்பவே பிடித்தது. தங்கள் மகளிடம் நெடு நாள் தோழி போலப் பழகும் அமிர்தா, குழந்தைகள் என அனைவரையுமே அவர்களுக்கு நிரம்பவே பிடித்துப் போக திருமண நாளைக் குறிக்கும் வேலையில் இறங்கி விட்டார்கள் இரு வீட்டுப் பெரியவர்களும்.

“ஏன் டா பொண்ணு பார்க்க வந்தா பொண்ணு கூடத் தனியா எல்லாம் பேசச் சொல்ல மாட்டாங்களா?” கௌஷிக் ராகுலின் காதைக் கடிக்க,

“அது நல்லதனமா வந்தா சொல்லுவாங்க. இப்படிப் பொண்ணை வருஷக் கணக்கா வாட விட்டவங்களுக்கு எல்லாம் அந்த ஆஃபர் கிடையாதாம்” கௌஷிக்கைப் போலவே தானும் அவன் காதைக் கடித்தான் ராகுல்.

அதைக் கேட்டு கௌஷிக் முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள, அதைப் பார்த்து அமிர்தாவிடம் விஷயத்தைக் கொண்டு சென்றான் ராகுல்.

“அமிர்தா, உங்க அண்ணனுக்கு தீப்தி கூடத் தனியா பேசணுமாம்.”

அன்று இரவு மியூசிக் ரூமில் நடந்த நிகழ்வுக்குப் பிறகு இப்பொழுது தான் நேரடியாக அமிர்தாவிடம் பேசுகிறான் ராகுல். இடைப்பட்ட இந்த ஒரு வார காலத்தில் எதிலிருந்தோ தப்பித்து ஓடுபவன் போல் அவளைத் தொடர்ந்து தவிர்த்துக் கொண்டே தான் இருந்தான் ராகுல்.

மிகவும் தவித்துப் போயிருந்த அமிர்தா, இது எப்பொழுதிலிருந்து என்பதைப் போல ஒரு பார்வையை இருவரையும் நோக்கிச் செலுத்திவிட்டு, நேரடியாக வாசுகியிடமே கேட்டுவிட்டாள்.

“ஆன்ட்டி நீங்க தப்பா நினைக்கலைன்னா தீப்தியையும் கௌஷிக் அண்ணாவையும் கொஞ்ச நேரம் தனியா போய் பேசச் சொல்லலாமா? இல்ல… வந்ததுலயிருந்து நாமளே பேசிட்டு இருக்கோம். அவங்களும் மனசு விட்டுப் பேசினா…”

“அட இது எனக்குத் தோனலையேம்மா… போம்மா தீப்தி மாப்பிள்ளையோட போய் பேசிட்டு வா” என்று வாசுகி தீப்தியிடம் சொல்ல,

‘என்னது மாப்பிள்ளையா!’ தன் மனைவியா பேசுவது என்று அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தார் ருத்ரமூர்த்தி.

“அப்பா…. எப்படி என் செலெக்ஷன்? உங்க ஆளு டோட்டல் சரண்டர்” அப்பாவின் காதைக் கடிக்க மறக்கவில்லை தீப்தி.

அவர் முகம் காட்டிய பாவங்களைப் பார்த்துப் பொங்கிய சிரிப்பை அடக்கியபடி கௌஷிக்கைப் பார்த்துத் தலை அசைத்து முன் நடந்தாள் தீப்தி. மறுவார்த்தைப் பேசாமல் கௌஷிக் அவளைப் பின் தொடர,

“மகனே… ஒரு ஃபார்மாலிட்டிக்குக் கூட இந்த அம்மாக்கிட்ட பர்மிஷன் கேக்கலையே?” சமயம் பார்த்துக் காலை வாரினார் சத்யவதி.

“நீங்க பிசியா பேசிக்கிட்டு இருக்கீங்கல்ல ம்மா… அதான்…” ஒரு அசட்டுச் சிரிப்போடு சொல்லிவிட்டுக் காரியத்தில் கண்ணாக வேகமாக தீப்தி சென்ற வழி சென்று மறைந்தான் கௌஷிக், அவனைப் பின்தொடரும் சிரிப்பொலியைக் கணக்கில் கொள்ளாது.

வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்திற்குத் தான் வந்திருந்தாள் தீப்தி. கௌஷிக் வந்தது தெரிந்தும் அவனுக்கு முதுகு காட்டியபடி அங்கிருந்த பாரிஜாதச் செடியைப் பற்றியபடி நின்றிருந்தாள் தீப்தி. பிஸ்தா பச்சையில் அடர் நீல வண்ண பார்டர் வைத்த சாஃப்ட் சில்க் புடவை அவளைப் பேரழகியாகக் காட்டியது.

“ம்க்கூம்” கௌஷிக் தொண்டையைச் செருமிய பொழுதும் அங்கிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

“தீப்தி…” இப்பொழுது மெல்ல அழைத்துப் பார்த்தான் கௌஷிக்.

சட்டென்றுத் திரும்பி அவன் முகம் பார்த்தவளின் கண்களில் ‘உனக்கு என் பெயர் கூடத் தெரியுமா?’ என்ற கேள்வி இருந்தது.

“உன் கிட்ட ஒரு விஷயம் மட்டும் சொல்லணும் தீப்தி.”

“சொல்லுங்க.”

“கல்யாணத்தைப் பொறுத்த வரைக்கும் எனக்குப் பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ராகுலுக்கும் எனக்கும் இருக்குற நட்பை நீ நல்லா புரிஞ்சுக்கிட்டா மட்டும் போதும். எந்தக் காலத்திலும் நான் அவனை விட்டுக் கொடுக்க மாட்டேன்.”

“தெரியும்”

“என்ன தெரியும்?”

“நீங்க ஆர்.வீ சாரை விட்டுக் கொடுக்க மாட்டீங்கன்னு…”

“இன்னும் ஆர்.வீ சார் தானா?”

கௌஷிக் கேட்கவும் நாக்கைக் கடித்துக் கொண்டவள்,

“சாரி அப்படியே பழகிடுச்சு. இனி மாத்திக்கிறேன்.”

“ஹ்ம்ம் குட். நீ அவனை உன் அண்ணனா பார்த்தாலே எனக்குப் போதும். இந்தப் பேச்சு எடுத்தப்பவே அவன் உன்னைத் தங்கச்சியா பார்க்க ஆரம்பிச்சிருப்பான்.”

“ஹ்ம்ம்…” சொல்லிவிட்டுத் தலையையும் ஆட்டிக் கொண்டாள்.

“உனக்கு என்கிட்ட எதாவது கேட்கணுமா?”

இப்பொழுதும் தலை மட்டும் மேலும் கீழுமாக ஆடியது.

“அப்போ கேளு” வில்லங்கம் புரியாமல் இலகுவாகச் சொல்லி வைத்தான் கௌஷிக்.

“இதே மாதிரி அமிர்தா கிட்டயும் கேட்டீங்களா?”

“அமிர்தா கிட்ட என்ன கேட்கணும்? புரியலை தீப்தி.”

“இல்ல இப்போ என்கிட்ட சொன்னீங்க இல்லையா, உங்க ஃப்ரெண்ட்ஷிப்பைப் புரிஞ்சுக்க சொல்லி. இதே மாதிரி அமிர்தா கிட்டயும் அவங்க ரெண்டு பேர் மேரேஜுக்கு முன்ன சொல்லி இருக்கீங்களான்னு கேட்டேன்.”

“இல்ல…. அது அமிர்தா…” இதற்கு என்ன பதில் சொல்வதென்று கௌஷிக்கிற்குப் புரியவில்லை.

“ரொம்பக் கஷ்டப்படாதீங்க. நானே சொல்றேன். ஏன்னா அமிர்தாவை உங்களுக்குச் சின்ன வயசுல இருந்துத் தெரியும். சோ அவங்க மேல உங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அப்படித்தானே?

அதே நம்பிக்கையை என் மேலயும் வைங்களேன்.

நான் உங்க மூணு பேரையும் பிரிக்கணும்னு நினைக்கலை. நீங்க மூணு பேருமா இருக்குற கூட்டுக்குள்ள என்னையும் சேர்த்துக்கோங்கன்னு தான் கேட்குறேன்.”

அவளின் விளக்கத்தில் வாயடைத்துப் போனான் கௌஷிக். கைகள் தாமாக நீண்டு அவள் கரத்தைப் பற்றிக் கொண்டது.

அவனின் திடீர் ஸ்பரிசத்தில் தீப்தியும் வாயடைத்துப் போக சிறிது நேரம் அங்கு மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.

“என்னையும் சேர்த்துப்பீங்களா?” இறைஞ்சுதலாய் அவள் கேட்க,

“இன்னும் சேரலைன்னா நீ நினைக்கிற?” என்று பற்றியிருந்த அவள் கரத்தைக் கண்களால் சுட்டிக் காட்டிக் கேட்டான் கௌஷிக்.

தோட்டத்தில் வாசம் வீசிக் கொண்டிருந்தப் பூக்களுக்குப் போட்டியாகப் பூவையின் வதனமும் மலர்ந்து போனது.

“இது போதும் எனக்கு. என்னைக் கல்யாணம் பண்ணி உங்க கூட வைச்சுக்கிட்டாலே போதும் எனக்கு. இதுக்கு மேல வேற எதுவுமே எனக்கு வேணாம்.” கண்களில் துளிர்த்த நீரும் புன்னகையும் போட்டி போட சொல்லி முடித்தவள் சிறிது நேர இடைவெளிக்குப் பின்,

“ஹனிமூனுக்குக் கூட நீங்க உங்க ஃப்ரெண்ட் கூடவே போய்க்கோங்க. நான் ஒன்னுமே சொல்ல மாட்டேனே” இப்பொழுது இயல்புக்குத் திரும்பி இருந்தாள் தீப்தி.

“ஆங்… ஹனிமூனுக்கு அவன் கூடப் போய் நான் என்ன பண்ண?”

“என் கூட வந்தாலும் நீங்க ஒன்னும் பண்ணப் போறதில்லை.” சொல்லிவிட்டு அவன் கரத்திலிருந்துத் தன் கைகளை உருவிக் கொண்டாள்.

“ஏன்?” ஒற்றைப் புருவம் உயர்த்தி கௌஷிக் வினவ,

“ஓ… காதல் என்னைக் காதலிக்கவில்லை அப்படின்னு வருஷக் கணக்கா என்னை சுத்த விட்டீங்கல்ல… அதுக்குப் பனிஷ்மென்ட் வேண்டாம்?

‘காதல் உன்னைக் காதலித்ததம்மா’ அப்படின்னு வருஷக் கணக்கா இல்லைன்னாலும் மாசக் கணக்குலயாவது உங்களை சுத்த விடலைன்னா அப்புறம் நான் தீப்தியே கிடையாது” சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குள் செல்வதற்காக நடக்க ஆரம்பித்தாள்.

முன்னால் நடந்து கொண்டிருந்தவளின் கரம் பற்றி இழுத்துத் தன்னை நோக்கித் திருப்பிய கௌஷிக்,

“அப்படி என்ன இருக்கு என்கிட்ட? நீ இப்படி வருஷக் கணக்கா காத்திருக்கிற அளவுக்கு?” அவளின் கண்களையே உற்றுப் பார்த்துக் கேட்டான்.

அவள் வாய் வழி சொல்ல வேண்டியதை விழி வழி சொல்லி முடித்தாள். ஆனாலும் வாய் பேசாமல் இருந்தால் அவள் தீப்தி அல்லவே.

“அதான்யா எனக்கும் தெரியலை, உன் நிறமும், உன் முடியும், மொகரக்கட்டையும்… ஆனா என்னவோ இருக்குய்யா உன்கிட்ட…” அந்த டப்ஸ்மேஷ் வசனத்தையே மீண்டும் பேசியவள் ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடியே போய் விட்டாள்.

வாய் கொள்ளாப் புன்னகையோடு போகும் பெண்ணையே பார்த்து நின்றான் கௌஷிக். முகம் மட்டுமல்ல மனமும் சேர்ந்து சிரித்தது கௌஷிக்கிற்கு.

**************

‘ஆர்.வீ.ஸ்டுடியோஸ்.’ தனது இருக்கையில், கைகள் இரண்டையும் கோர்த்துத் தலைக்கு அடியில் வைத்தவாறு கண் மூடி அமர்ந்திருந்தான் ராகுல்ரவிவர்மன்.

தீப்தியின் வீட்டிலிருந்து கிளம்பிய பிறகு அனைவரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு இவன் மட்டும் வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு வந்திருந்தான். வேலையை சாக்கிட்டுக் கொண்டு தான் அமிர்தாவைத் தவிர்த்து வருகிறான்.

மனம் குழம்பிக் கிடந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எந்த வேலையிலும் அவன் கவனம் செல்லவில்லை. மனம் முழுவதும் அவளே நிரம்பி இருந்தாள். தனது அன்றாட வேலைகளைச் செய்வதற்குக் கூட அவளையே எதிர்பார்க்கத் தொடங்கி இருந்தது அவன் மனது.

காலையில் எழுந்ததும் தனக்குப் பிடித்தப் பக்குவத்தில் காஃபி தருவதில் தொடங்கி, ஜாகிங், எக்சர்சைஸ் முடித்தப் பிறகு சத்துமாவுக் கிண்ணத்துடன் நிற்பது, அசைவம் பிடிக்காத பொழுதும் தன் கையாலேயே பரிமாறுவது என்று எப்பொழுதுமே அவன் வயிற்றை வாட விடாமல் பார்த்துக் கொள்ளும் அமிர்தா,

ஸ்டுடியோவிலோ அல்லது வெளி இடங்களிலோ யாராவது ஒரு பெண் கொஞ்சம் தன்னை ரசனையாகப் பார்த்து விட்டால் பொய்யோ நிஜமோ உடனே கோப முகமூடி அணிந்து கொள்ளும் அமிர்தா,

தன் கையிலிருக்கும் சிகரெட்டை உரிமையாகப் பறித்துத் தூக்கி வீசும் அமிர்தா, இப்படிக் கண்ணை மூடினாலும் அவள் நினைவே மீண்டும் மீண்டும் வந்து வாட்டியது.

இவை எல்லாவற்றையும் விட இரவில் அவளிடம் பேசும் பொழுது அவள் முகம் காட்டும் பாவங்கள்… அந்தக் கண்கள் அவ்வப்பொழுது விரியும் அழகில் சொக்கித் தான் போனது மனது.

ஒவ்வொரு நாள் இரவிலும் அவளிடம் அன்றைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசிய பிறகே உறங்கிப் பழகியவனுக்கு இப்பொழுது உறங்குவது போல் நடிக்கத் தான் முடிந்ததேயொழிய உறங்க முடியவில்லை.

‘ஏன்தான் அன்னைக்கு அப்படி நடந்துகிட்டேனோ’ இதையே எண்ணி எண்ணி கிட்டத்தட்ட ஆயிரம் முறையாவதுத் தன் தலையில் தானே அடித்துக் கொண்டிருப்பான் ராகுல்ரவிவர்மன்.

‘அவகிட்ட என்ன சொல்லி கல்யாணம் பண்ண நீ? குழந்தைங்களுக்காகத் தான் இந்தக் கல்யாணம், வேற எந்த விதத்திலும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு இப்படிப் பண்ணிட்டியே டா? இப்போ அவ உன்னைப் பத்தி என்ன நினைப்பா? ச்சே’ இதுவே தான் அவன் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

இப்பொழுது எப்படியும் வீட்டுக்குப் போக முடியாது. அமிர்தாவும் குழந்தைகளும் தூங்க இன்னும் சிறிது நேரம் எடுக்கும். அவர்கள் தூங்கிய பிறகு போய்க் கொள்ளலாம் எனும் முடிவுடன் ஸ்டுடியோவிலேயே அமர்ந்து நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தான் ராகுல்ரவிவர்மன்.

“வேலை இருக்குன்னு சொல்லிட்டு வந்து தூங்கிட்டு இருக்க? இதை வீட்ல பண்ண வேண்டியது தானே?” கேட்டபடியே ராகுல் முன் அமர்ந்தான் கௌஷிக்.

“நீ இங்க என்னடா பண்ற?” கௌஷிக்கை அந்நேரத்தில் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டுப் பிறகுக் கேட்டான் ராகுல்.

“நீ என்ன பண்றியோ அதையே நானும் பண்ணலாம்னு வந்தேன்” தோள்களைக் குலுக்கியபடிச் சொன்னான் கௌஷிக்.

“ம்ப்ச்…” வெறும் சலிப்பு மட்டுமே பதிலாக வந்தது ராகுலிடமிருந்து.

“என்னடா ஆச்சு? நீ ஒரு வாரமாவே சரியில்ல. எதையோ ரொம்ப யோசிச்சுக்கிட்டே இருக்க. அமிர்தா முகம் கூட சரியில்ல. உங்களுக்குள்ள எதாவதுப் பிரச்சனையா? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு.”

“உன்கிட்ட சொல்றதுக்கு என்னடா? ஆனா எப்படி சொல்றதுன்னு தான் தெரியலை.”

“தெளிவா குழப்புறடா…”

“அமிர்தாவை வெறும் ஃபிரெண்டா மட்டும் என்னால பார்க்க முடியலைடா. அதையும் தாண்டி ஏதோ ஒன்னு…” எப்படிச் சொல்வதென்றுத் தெரியாமல் ராகுல் தடுமாற,

“கரெக்ட் தானே, அமிர்தா இப்ப உன் ஃப்ரெண்ட் மட்டும் கிடையாது ராகுல். அவ உன்னோட வொய்ஃப். மனைவியைத் தோழியாவும் பார்க்கணுமே தவிர தோழியா மட்டுமே பார்க்கணுங்கிறது இல்ல ராகுல்.”

“ஆனா அமிர்தாவும் அப்படி நினைக்குறாளான்னு தெரியலையே கௌஷிக்.”

“அது இங்க உட்கார்ந்திருந்தா எப்படித் தெரியும்? அமிர்தா கிட்டப் போய் பேசினா தானே தெரியும்.”

“அவகிட்ட குழந்தைங்களுக்காகத் தான் இந்தக் கல்யாணம்னு சொல்லிட்டு இப்பப் போய் நான் உன்ன காத… எப்படிடா உன் மேல எனக்கு ஃபீலிங்க்ஸ் வந்திருச்சுன்னு சொல்றது?”

காதல் என்ற வார்த்தையை மென்று விழுங்கும் நண்பனைக் கண்ட போது சிரிப்பு தான் வந்தது கௌஷிக்கிற்கு. இருந்தாலும் அதை வெளிக்காட்டமல்,

“இங்க பாரு ராகுல், இது நீங்க ரெண்டு பேரும் தான் பேசி டிசைட் பண்ண முடியும். எனக்கென்னவோ அமிர்தாவுக்கும் உன் மேல அதே ஃபீலிங்க்ஸ் இருக்குற மாதிரி தான் தோணுது.”

“எப்படிச் சொல்ற கௌஷிக்?” மனத்தின் ஆர்வம் முகத்தில் தெரிந்தது மெல்லிசைக்காரனுக்கு.

“உன் சம்பந்தப்பட்ட எல்லாமே அந்தப் பொண்ணுப் பார்த்துப் பார்த்து பண்ணுதே, அதுல இருந்தே தெரியலை? நீ கேசுவலா சொல்லுவியே எல்லாரையும் பார்த்து, ‘லவ் யூ ஆல் ஸ்வரங்களே’ அப்படின்னு, அதுக்கே அந்தப் பொண்ணு முகம் வாடிப் போகுது. அதைக் கூட அமிர்தாவால ஏத்துக்க முடியலை. ஃபீலிங்க்ஸ் இல்லாமலா இப்படி பொசசிவ்னஸ் இருக்கும் ஒரு பொண்ணுக்கு? நீயே யோசிச்சுப் பாரு ராகுல்.”

கௌஷிக் சொல்வதும் சரியாகத் தான் பட்டது ராகுலுக்கு. இவனுமே அமிர்தாவின் அந்தத் தன்னுடைமைத்தனத்தை உணர்ந்திருக்கிறானே! ஆனாலும் எதுவோ இடித்தது.

“எங்க கல்யாணத்துக்கு முதல் நாள் கூட அமிர்தா ஜீவாவோட ஃபோட்டோவைப் பார்த்து அழுதுக்கிட்டு இருந்தாடா.”

“கல்யாணத்துக்கு முதல் நாள் அழுதா சரி, கல்யாணத்துக்கப்புறம் அப்படி செஞ்சாளா?”

கௌஷிக் கேட்க ராகுலின் தலை இடவலமாக அசைந்து மறுப்பைத் தெரிவித்தது.

“நிலா குட்டி யாரு ராகுல்?”

“என் பொண்ணு” சட்டென்று பதில் வந்தது ராகுலிடமிருந்து.

“ஹான் கரெக்ட்… நிலாவை உன் பொண்ணா ஏத்துக்கிட்ட அதே மனசுதான் இப்போ அமிர்தாவையும் உன் மனைவியா ஏத்துக்க சொல்லுது.

நிலாவை நீ ஜீவாவோட பொண்ணா பார்க்காத போது அமிர்தாவை மட்டும் ஏன் அப்படிப் பார்க்குற? அதே மாதிரி அமிர்தா உன்ன மாயாவோட கணவனா நினைச்சா அது உனக்கு ஓகேவா?

ஜீவா, மாயா ரெண்டு பேருமே உங்க ரெண்டு பேரோட பாஸ்ட். அதை நீங்க ரெண்டு பெருமே மறந்துடறது தான் உங்க வாழ்க்கைக்கு நல்லது.

நாம பார்க்கிற, கேட்கிற விஷயங்கள், நமக்கு முன்னாடி இருக்குற மனுஷங்க யார் வேணா பொய்யா மாறலாம். ஆனா நம்ம மனசு பொய் சொல்லாது ராகுல். கண்ணை மூடி நீயே உன் மனசுகிட்ட கேட்டுப் பாரு. மனசு சொல்றபடி நட. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்.

இப்ப வா கிளம்பலாம். இந்த ஒளிஞ்சு விளையாடுற விளையாட்டை எல்லாம் இத்தோட மூட்டை கட்டி வைச்சுட்டு அமிர்தா கிட்ட பேசுற வழியைப் பாரு”

கையோடு ராகுலையும் அழைத்துக் கொண்டு தான் அங்கிருந்துக் கிளம்பினான் கௌஷிக்.

இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா

எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்

கானல் நீரால் தீராத தாகம்

கங்கை நீரால் தீர்ந்ததடி

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை.

error: Content is protected !!