கீதாஞ்சலி – 16

ராகுலும் கௌஷிக்கும் வீடு வந்து சேர்ந்த பொழுது வீட்டில் அனைவருமே நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். எனவே இருவரும் ஓசை எழுப்பாமல் சென்று அவரவர் அறைகளுக்குள் புகுந்து கொண்டார்கள்.

அமிர்தா, சந்தோஷ், நிரஞ்ஜலா மூவருமே நல்ல உறக்கத்தில் இருக்க, சத்தம் எழுப்பாமல் சென்றுத் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உடைக்கு மாறி வெளிவந்த ராகுல் சிறிது நேரம் நின்று அவர்கள் மூவரையுமே பார்த்த வண்ணம் இருந்தான். தூங்கும் பொழுது ஒருவர் முகத்தைப் பார்த்தால் அவர் குணத்தைச் சொல்லி விடலாம் என்று சொல்வது உண்டு.

இங்கு அந்த இரவு விளக்கின் ஒளியில் இரண்டல்ல மூன்று குழந்தைகள் உறங்கிக் கொண்டிருப்பதாகத் தான் தோன்றியது ராகுலுக்கு. அமிர்தாவின் குழந்தைத் தனமான முகத்தைத் தனை மறந்து ரசித்திருந்தான் ராகுல்ரவிவர்மன். என்றோ அவள் கூறியது அவன் நினைவடுக்கில் இருந்து வெளி வந்தது.

‘நைட்ல நிம்மதியா தூங்கவே மாட்டேன். யாராவது வந்து எதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம் இருந்துக்கிட்டே இருக்கும். காலையில சத்யா அத்தை நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சிடுவாங்க. அவங்க எந்திரிச்சு புழங்குற சத்தம் கேட்ட அப்புறம் தான் ஒரு ரெண்டு மணி நேரம் மட்டும் தூங்குவேன்.’

இங்கு வந்ததில் இருந்து அமிர்தா தூங்காமல் இருந்து தான் பார்த்திருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்த்தான் ராகுல். இங்கு வந்த அன்றிலிருந்தே அவள் நன்கு தூங்குவது அவன் சிந்தனையில் உதித்தது.

‘இது, அவள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம் அல்லவா? அதீத அன்பு இருக்கும் இடத்தில் தானே நம்பிக்கையும் தோன்றும். அப்படியென்றால் திருமணத்திற்கு முன்பிருந்தே இவள் என் மீது அன்பு கொண்டிருக்கிறாளா? அதனால் விளைந்த நம்பிக்கையா இது?

இந்த அன்பினை எந்த வகையில் சேர்ப்பது? நட்பு ரீதியிலா அல்லது காதலா? எதுவாக இருந்தாலும் அவள் என் மீது அன்பாக இருக்கிறாள். இந்த நினைப்பு ஒன்றே போதும்.

எனக்கும் சரி, அவளுக்கும் சரி நிச்சயமாக இது உடற்கவர்ச்சியோ அல்லது இனக்கவர்ச்சியோ கிடையாது. இருவருமே ஒரு முறை வாழ்ந்து முடித்தவர்கள். அதையும் தாண்டி இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப் படுகிறோம் என்றால் இது எங்கள் அன்பின் வெளிப்பாடு. இதில் எவ்வித ஒளிவு மறைவிற்கும் இடம் இல்லை.

எனக்குத் தோன்றியது போல் ஒரு உரிமை உணர்வு அவளுக்கும் இருக்குமா? உரிமை இல்லாமலா அன்று இதழமுதம் பருக அனுமதித்தாள்?’ அன்று முகத் திருப்பலாகத் தோன்றிய விஷயம் இப்பொழுது வெட்கத்தின் வெளிப்பாடாக இருக்கக் கூடுமோ என்றுத் தோன்றியது.

‘சரி, அப்படியே இப்பொழுது அந்த உணர்வு தோன்றாவிடினும் பிற்பாடு என்றாவது ஒரு நாள் தோன்றாமலா போய்விடும்? அதுவரைக் காத்திருப்பதில் தவறொன்றுமில்லையே.

தனிமைத் தீவில் தவித்து வந்தவனுக்கு குடும்ப வாழ்க்கையை வரமாக அளித்த தேவதை அல்லவா இவள். இவளுக்காக இன்னும் எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். இது என் குடும்பம் என்ற நிறைவு இப்பொழுது இருக்கிறதே, இதுவே போதும்.’

சிந்தனையின் போக்கில் சில நிமிடம் கண் மூடி நின்றிருந்தான் மெல்லிசைக்காரன். மனத்தின் நிறைவு முகத்திலும் புன்னகையாக வெளிவந்தது. மனதுக்குள் யாரோ அமர்ந்து பூபாளம் இசைப்பதைப் போல் பரவசமாக இருந்தது.

அதே புன்னகையுடன் கண் திறந்தவன் கட்டிலின் அருகில் சென்றான். நடுவில் அமிர்தா உறங்கி இருக்க அவளுக்கு இரு பக்கமும் சந்தோஷும் நிரஞ்ஜலாவும் இருந்தார்கள். இரண்டு பேருக்குமே அணைவாக சில பலத் தலையணைகளை இருபுறமும் அடுக்கி இருந்தாள் அமிர்தா.

சந்தோஷ் முதலில் படுத்திருக்க அவனருகில் சென்று கீழே தள்ளி விட்டிருந்த தலையணைகளை எடுத்து மீண்டும் அவனுக்கு அணைவாக வைத்துவிட்டுக் குனிந்து அவன் தலைமுடிக் கோதி மெதுவாக அவன் நெற்றியில் முத்தம் வைத்தான் ராகுல்.

இரண்டெட்டு எடுத்து வைத்தவன் திரும்பி வந்து அமிர்தாவின் பிறை நெற்றியிலும் இதழ் ஒற்றினான்.

கட்டிலை சுற்றிக் கொண்டு வந்து நிலாவின் அருகிலிருந்தத் தலையணைகளை எடுத்துவிட்டு அவள் அருகில் படுத்து அவளுக்கும் அதே போல் தலைக் கோதி முத்தம் வைக்க, “அப்பா” என்றழைத்து ராகுலைக் கழுத்தோடு கட்டிக் கொண்டாள் குழந்தை.

“நிலா குட்டி, இன்னும் தூங்கலையாடா நீங்க?”

“ம்ஹூம்” சொல்லிவிட்டு அழகாக இடவலமாகத் தலையை வேறு அசைத்தாள்.

“இவ்வளவு நேரம் தூங்காம இருக்கலாமா? சீக்கிரம் தூங்கினா தானே மார்னிங் சீக்கிரம் எந்திரிக்க முடியும். குட்டிம்மாவுக்கு நாளைக்கு ஸ்கூல் வேற இருக்கே. நீங்க தூங்காம எப்படி அம்மா மட்டும் தூங்கினாங்க?” குழந்தையின் தலை முடியைக் கோதியபடியே ராகுல் ரகசியக் குரலில் வினவ,

“நான் அப்பாக்கு வெயிட் பண்றேன் சொன்னா அம்மா… தூங்கு சொல்லிட்டா” அவனைப் போலவே ரகசியக் குரலில் சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டது குழந்தை.

வெட்டியாக அங்கு ஸ்டுடியோவில் அமர்ந்திருந்தது இப்பொழுது உறுத்தியது ராகுலுக்கு.

“அப்போம் அம்மா பாடி, பாடி, பாடி, அவளே தூங்கிட்டா” இப்பொழுது கையால் வாயை மூடிக் கொண்டு கிளுக்கிச் சிரித்தாள் குழந்தை. ஒவ்வொரு ‘பாடி’க்கும் பொருத்தமானத் தலையசைப்புகள் வேறு.

குழந்தையின் சிரிப்போடுத் தானும் இணைந்து கொண்டவன் நிரஞ்ஜலாவைத் தூக்கித் தன் நெஞ்சில் படுக்க வைத்துக் கொண்டுத் தட்டிக் கொடுத்தான் அவளைத் தூங்க வைக்கும் பொருட்டு.

“அப்பா”

“என்னடா”

“என்னை மீ… மி… மீசிக் ரூம் கூட்டிட்டுப் போதீங்களா?”

“நிலா குட்டி எதுக்குடா அங்க போகணும்?”

“அண்ணா மட்டும் போதாங்க. டொம் டொம் தட்துதாங்க. அம்மா என்னை மத்தும் தொடக் கூடாது சொல்லித்தாங்க” இப்பொழுது மீண்டும் ஒரு உதடு பிதுக்கல்.

சந்தோஷ் பள்ளியில் எதாவது ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. பெரும்பாலான பிள்ளைகள் கீ போர்டிலும் கிடாரிலும் ஆர்வம் காட்ட, சந்தோஷ் மட்டும் ஏனோ மிருதங்கத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அவனுக்காகவே ராகுலின் மியூசிக் ரூமில் மிருதங்கமும் இடம் பெற்றிருக்கும். சமீபத்தில் சந்தோஷ் அதை வாசித்துப் பயிற்சி எடுத்திருக்க வேண்டும். நிலாவும் அவ்வாறே செய்ய விருப்பப்பட அதை அமிர்தா மறுத்திருக்க வேண்டும். அதற்குத் தான் இந்தக் கொஞ்சல் என்பது நன்றாகப் புரிந்தது ராகுலுக்கு.

“சரி வாங்க போலாம்” சத்தமில்லாமல் குழந்தையையும் தூக்கிக் கொண்டு மியூசிக் சென்றுவிட்டான் ராகுல்ரவிவர்மன்.

அங்கு அமிர்தா எதையெல்லாம் இதுவரைத் தொடக் கூட விடாமல் வைத்திருந்தாளோ அதிலெல்லாம் ஆசை தீர விளையாண்ட பிறகே நிலாவின் முகத்தில் தூக்கத்திற்கான அறிகுறி கூடத் தோன்றியது. அந்த அறை மட்டும் ஒலி ஆதார அறையாக வடிவமைக்கப் பட்டிருந்ததால் உள்ளே அப்பாவும் மகளும் அடிக்கும் கொட்டம் வெளியில் யாருடைய உறக்கத்தையும் பாதிக்கவில்லை.

பியானோவில் கை வலிக்கத் தட்டி முடித்தாயிற்று. கிடாரிலும் கூட நரம்பு அறுந்து போகும் அளவுக்கு வாசித்தாயிற்று. மிருதங்கத்தின் உயரம் தான் கொஞ்சம் அதிகம். இருந்தாலும் அதையும் தந்தையின் மடியில் அமர்ந்து ஓரளவுக்கு மாறி மாறி தட்டிப் பார்த்தாயிற்று. வேறு எதுவும் குழந்தையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கு இல்லாததால் அடுத்த கட்டத்திற்குத் தாவினாள் நிரஞ்ஜலா.

“அப்பா, பாப்பாக்கு பச்சிக்குது” சொல்லிவிட்டுப் பாவமாக வயிற்றை வேறு தடவிக் காட்ட,

“அச்சச்சோ” மிரண்டு தான் போனான் மெல்லிசைக்காரன். தன் சொந்த வீடாகவே இருந்தாலும் இதுவரை அந்த சாப்பாட்டு அறையைத் தாண்டி சமையல் அறை என்ற ஒன்று இருப்பதே அவனுக்குத் தெரியாதே.

இருந்தாலும் மகள் பசியோடிருக்க அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? இப்பொழுது தந்தையும் மகளும் கீழே இறங்கிச் சென்றார்கள்.

“குட்டிம்மாவுக்கு என்ன வேணும்?” குழந்தையையும் வைத்துக் கொண்டே குளிர்சாதனப் பெட்டியைத் திறந்துப் பார்க்க, அந்தக் குட்டி வாண்டோ அங்கு வைக்கப்பட்டிருந்த ஐஸ்க்ரீம் கேக்கைச் சுட்டிக் காட்டியது.

“அம்மாக்கிட்ட எனக்கு அடி வாங்கிக் குடுக்காம விட மாட்டீங்க போலயே குட்டிம்மா. இந்நேரத்துக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா பாப்பாவுக்கு கோல்ட் வந்துடும் இல்ல. அதை நீங்க காலையில சாப்பிடுங்க. இப்ப வேற எதாவது சொல்லுடா செல்லம்” ராகுல் பாவமாகக் கேட்க மனமிறங்கி வந்தாள் நிரஞ்ஜலா.

பலமான சிந்தனைக்குப் பிறகு, “நிலா பாப்பாக்கு நிலா தோசை” என்றாள்.

“நிலா தோசையா?” திருதிருவென்று ராகுல் விழிக்க,

“செய்யத் தெய்யாதா?” இப்பொழுது ஒரு கேலிச் சிரிப்பு குழந்தையிடத்தில்.

“நிலா பாப்பா பால் குடிக்கிறீங்களா?” வழி கண்டுபிடித்து ராகுல் வினவ, அஷ்டகோணலாக மாறியது குழந்தையின் முகம்.

“நேணா… நேணா பால் நேணா” விட்டால் அழுது விடும் நிலைக்குச் சென்றுவிட்டாள் நிலா.

“சரிடா… சரிடா வேற என்ன சாப்பிடலாம்” பேசியபடி மூடி வைக்கப்பட்டிருந்த ஹாட் பேக்குகள் ஒவ்வொன்றாகத் திறந்துப் பார்க்க ஒன்றில் சாதம் இருந்தது.

“ப்பா… பாப்பாக்கு பூவா”

“இதுல என்ன போட்டு சாப்பிடுவீங்க?”

“எதுவும் நேணா ப்பா. அப்பியே சாப்புவேன்.”

தந்தையும் மகளும் ஹாட் பேக்கோடு டைனிங் டேபிளுக்கு வந்து சேர்ந்து தட்டில் கொஞ்சம், டைனிங் டேபிளில் கொஞ்சம், ராகுல் வயிற்றில் கொஞ்சம், நிலா வயிற்றில் கொஞ்சம் என அந்த சாதம் ஒருவழியாகத் தீர்ந்து போனது. நிலாவுக்குத் தூக்கமும் வந்து சேர்ந்தது.

வெறும் வெள்ளை சாதம் கூட அன்று அமிர்தமாக மாறிப் போனது.

மாடி ஏறி வரும் வரையில் கூடப் பொறுக்காமல் தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டே தூங்கிப் போயிருந்தாள் குழந்தை. அவள் உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க வைத்துவிட்டுத் தானும் படுக்க, சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த உறக்கம் அவனை ஆட்கொண்டது.

விடிய விடிய உறங்காமல் புரண்டு கொண்டிருப்பவன் இப்பொழுது படுத்ததும் உறங்கிப் போயிருந்தான்.

அதிகாலை வேளையில் அமிர்தா கண் விழித்துப் பார்க்கும் பொழுது, நிலா ராகுலின் கை மீதுத் தலை வைத்துப் படுத்திருக்க, ராகுலின் உள்ளங்கை அமிர்தாவின் முகத்துக்கு வெகு அருகில் இருந்தது. அந்தக் கையின் மீதுத் தன் கரத்தை வைத்து அணைவாகப் பிடித்துக் கொண்டாள்.

‘ஒரே ஒரு முத்தத்தைக் கொடுத்துட்டு இவர் படுத்துற பாடு’ மனம் தன் போக்கில் முணுமுணுக்கக் கண்களோ மீண்டும் சுகமாகத் துயில் கொள்ளத் துவங்கியது.

‘அவள் மனதிலும் காதல் வரக் காத்திருப்பேன்’ என்று ராகுலும், ‘கிட்ட வரவும் வேண்டாம், அப்புறம் அதையே சாக்கா வைச்சுத் தள்ளிப் போகவும் வேண்டாம். இப்படியே தினமும் பேசிச் சிரிச்சுக்கிட்டுக் கூட இருந்தாலே போதும்’ என்று அமிர்தாவும் ஆளாளுக்கு ஒரு முடிவெடுத்து அதன்படி நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

இடையில் கௌஷிக்கின் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் வேறு நடந்து கொண்டிருந்தது. இப்பொழுது அமிர்தாவும் தீப்தியும் ஆகச் சிறந்தத் தோழிகளாக மாறியிருந்தார்கள்.

ராகுல், ராஜேந்திர பிரசாத் இயக்கும் சரித்திரத் திரைப்படத்தில் இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்த காரணத்தால் கைவசம் இருக்கும் திரைப்படங்களின் பணிகளை வேக வேகமாக முடித்துக் கொண்டு இருந்தான். ராகுல் இவ்வேலைகள் அனைத்தையும் முடிக்கவும் அந்தத் திரைப்பட கலந்தாய்வுக்காக அவனை அவர்கள் ஃப்ரான்ஸ் நாட்டுக்கு அழைக்கவும் சரியாக இருந்தது.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு இது போல் வெளிநாடுகளில் வைத்துக் கலந்தாய்வு செய்வது என்பது இப்பொழுது பரவலாகப் பரவி வரும் கலாச்சாரங்களுள் ஒன்று. ராகுலாலும் மறுப்பேதும் கூற முடியவில்லை.

ஆனால் எப்பொழுதும் உடன் செல்லும் கௌஷிக் இம்முறை செல்லவில்லை. ஜீவா அப்பா குறித்து ராகுலுக்கு இருக்கும் ஐயப்பாடு கௌஷிக்கிற்கும் இருக்கும் ஒன்றுதான். ஆகையால் ராகுல் மட்டும் வேறு சில சவுண்ட் என்ஜினியர்களுடன் கிளம்பிச் செல்வது என்று முடிவானது.

ராகுல் கிளம்புவதற்குள் கௌஷிக் திருமணத்திற்காகப் பட்டெடுக்கும் வேலையை முடித்துவிடலாம் என்று சத்யவதி பிரியப்பட ராகுல் விமானம் ஏறுவதற்கு முதல் நாள் மாலை அனைவரும் குடும்ப சகிதமாகக் கிளம்பி காஞ்சிபுரம் வந்திருந்தார்கள்.

அங்கு உள்ள ஒரு கடையைத் தான் வாசுகி குறிப்பிட்டிருந்தார். எனவே எல்லோரும் அங்கேயே செல்வதாக முடிவு செய்து கிளம்பி இருந்தார்கள். முதலில் ராகுல் வர மறுத்தான்.

“கௌஷிக், நாளைக்கு பட்டு சாரீஸ் எடுக்க நீ எல்லாரையும் கூட்டிட்டுப் போயிட்டு வாடா. நான் வந்து, கூட்டம் கூடிட்டா கஷ்டம் டா.” ஸ்டுடியோவில் வைத்து முதல் நாள் ராகுல், கௌஷிக், அமிர்தா, தீப்தி நால்வரும் பேசிக் கொண்டிருக்கையில் ராகுல் சொல்ல,

“எனதருமை மெல்லிசை அண்ணாவே, அதை அப்படியே கொஞ்சம் உங்க ஒயிஃப் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க பார்ப்போம்” என்றாள் தீப்தி.

ராகுல் திரும்பி அமிர்தா முகத்தைப் பார்க்க அவள் முகமோ வாடிப் போய் இருந்தது.

“எங்க, இப்ப நீ வர மாட்டேன்னு சொல்லித்தான் பாரேன்” இது கௌஷிக்.

“யாரு வரமாட்டேன்னு சொன்னா?” அவள் முகவாட்டத்தைப் பார்த்து நொடியில் மனதை மாற்றி இருந்தான் மெல்லிசைக்காரன்.

“அது” என்று கூறி கௌஷிக்கும் தீப்தியும் ஒருவருக்கொருவர் ஹைஃபை கொடுத்துக் கொண்டார்கள்.

ருத்ரமூர்த்தியும் வாசுகியும் தீப்தியோடு மறுநாள் மாலை ராகுலின் வீட்டிற்கே வந்துவிட அங்கிருந்து சத்யவதி, ராகுல், கௌஷிக், அமிர்தா, குழந்தைகள், அவர்களைப் பார்த்துக் கொள்ள கமலாம்மா என்று எல்லோருமாகக் கிளம்பிக் காஞ்சிபுரம் வந்திருந்தார்கள்.

“ஏம்ப்பா ராகுல், இப்படி ராத்திரி எட்டு மணிக்குத் துணி எடுக்கப் போறோமே, வீட்டுக்குக் கிளம்புற அவசரத்துல இல்ல எல்லாரும் இருப்பாங்க. ஒழுங்கா புடவை எல்லாம் எடுத்துக் காமிப்பாங்களா?” வழி நெடுக சத்யவதி புலம்பிக் கொண்டே வந்தார்.

ராகுலும் கௌஷிக்கும் சிரித்துக் கொண்டார்களே தவிரப் பதில் ஏதும் கூறவில்லை.காஞ்சிபுரத்தின் மிகப் பெரிய ஜவுளிக் கடல் அன்று எட்டு மணிக்கெல்லாம் மூடப்பட்டிருந்தது.

“அதுக்குள்ள கடையவே மூடிட்டாங்களா” காரில் அமர்ந்தபடியே சத்யவதி மீண்டும் ஆரம்பிக்க, அப்பொழுது வெள்ளை வேஷ்டி சட்டையில் நெற்றியில் விபூதி குங்குமம் பளபளக்க ஒரு நபர் வந்து இவர்களை வரவேற்றார்.

“வாங்க… வாங்க… ஆர்.வீ சார் எங்க கடைக்கு வர்றது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.” சொல்லியபடியே வேறு ஒரு சிறு கதவு வழியாக இவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார். உள்ளே வழக்கம் போல் விளக்குகள் ஒளிர மின்னிக் கொண்டிருந்தது அந்த ஜவுளிக் கடல்.

“முதல்ல எல்லாருக்கும் குடிக்க எதாவது குடுத்து உட்கார வைங்க. அப்புறம் அவங்க என்ன கேட்குறாங்களோ அதுக்கு தகுந்த மாதிரி எடுத்துக் காமிக்கணும். சரியா?” அங்கிருந்த விற்பனைப் பெண்களிடம் கூறிவிட்டு,

“சார் நீங்க பார்த்துக்கிட்டே இருங்க, நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்.” ராகுலிடம் சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டார் அந்தப் பெரிய மனிதர்.

விரிக்கப்பட்டிருந்த பஞ்சு மெத்தையில் பெண்கள் அமர்ந்துவிட ஆண்கள் மூவரும் சற்றுத் தள்ளி அங்கு இடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தனர். கமலாம்மா சந்தோஷையும் நிரஞ்ஜலாவையும் வைத்துக் கொண்டு சற்றுத் தள்ளி இருந்து கொண்டார்.

பெண்களின் தீவிர தேடுதல் வேட்டைத் தொடங்கியது. தீப்தியை நடுவில் அமர வைத்து அவளுக்கு இருபுறமும் வாசுகியும் சத்யவதியும் அமர்ந்துவிட, அமிர்தா சத்யவதியின் அருகில் அமர்ந்திருந்தாள்.

“ஓய் சோனி, தீப்திக்கு எந்தெந்த அக்கேஷனுக்கெல்லாம் புடவை எடுக்குறாங்களோ அதுக்கெல்லாம் நீயும் உனக்குத் தனியா எடுத்துக்கணும். சரியா?” ரகசியமாக வந்து அமிர்தாவின் காதில் கிசுகிசுத்தான் மெல்லிசைக்காரன்.

“அவங்க நிறைய எடுப்பாங்க. எனக்கு எதுக்கு ரவி அத்தனை சாரீ?”

“ம்ப்ச்… ப்ளீஸ் எனக்காக…” கண்களைச் சுருக்கி ஆணவன் கெஞ்சுதலாகக் கேட்க பெண்ணவள் உடனடியாகத் தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

முதலில் வீட்டில் வேலை செய்பவர்களுக்குத் தான் அமிர்தா புடவை எடுத்தாள். முதலில் அங்கிருந்த கமலாம்மாவிற்கு, பின் சாந்தி அக்காவிற்கு, மாணிக்கம் அண்ணா வொயிஃப்க்கு என்று அவள் போட்ட லிஸ்ட் நீண்டு கொண்டே போனது.

அதன் பிறகு நிரஞ்ஜலாவிற்குப் பட்டுப் பாவாடை எடுக்கவென்று வேறு பிரிவிற்கு வேறு சென்று வந்தாள் அமிர்தா.

அவள் வரும் வரை இங்கு தீப்தி ஒன்றையும் தேர்ந்தெடுத்து முடித்திருக்கவில்லை. ஒட்டு மொத்தக் கடையையும் அதுவரை அலசி ஆராய்ந்து கொண்டு தான் இருந்தாள்.

அதற்குள் அமிர்தாவும் அவர்களுடன் சேர்ந்துவிட அதன் பிறகு தீப்திக்கு நிச்சயதார்த்தம், சடங்கு, வரவேற்பு, முகூர்த்தம் என்று ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுக்க ஆரம்பிக்க, இங்கு அமிர்தாவும் அவளுக்குப் பிடித்தமானவற்றைத் தேர்வு செய்யத் தொடங்கினாள்.

ராகுல் சற்றுத் தள்ளி கௌஷிக்கோடு அமர்ந்திருக்க ஒரு புடவையைக் கையில் எடுப்பவள் இங்கிருந்தே கண்களால் அவனிடம் ‘இது ஓகேவா’ என்று கேட்பாள். அவன் தலை அசைத்தால் அதை எடுத்து வைப்பது, உதடு பிதுக்கினால் வேறு புடவை பார்ப்பது என்று யார் கருத்தையும் கவராமல் இங்கு தனியாக ஒரு காதல் நாடகம் அரங்கேறிக் கொண்டு இருந்தது.

ஒரு கட்டத்தில் ராகுல் நைசாக அவர்கள் இருவரிடமிருந்தும் நழுவி அமிர்தா அருகிலேயே வந்து அமர்ந்து கொண்டான்.

“ம்மா இன்னும் எத்தனை தான்ம்மா எடுப்பீங்க” பல மணி நேரங்களாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது சலித்துப் போனது தீப்திக்கு.

“அதுக்கு மட்டும் எடுத்துட்டா முடிஞ்சுதுல்ல அண்ணி?” என்று வாசுகி சத்யவதியிடம் வினவ,

“ஆமா வாசு, அதுக்கு மட்டும் எடுத்துட்டா முடிஞ்சுது” என்று சத்யவதியும் பதிலளித்தார்.

“அது… அதுங்குறீங்க, எதுக்கும்மா?” என்றாள் தீப்தி.

சத்யவதி முகத்தை வேறு பக்கமாக சிரிப்புடன் திருப்பிக் கொள்ள, வாசுகியோ “கல்யாணத்தன்னைக்கு நைட் கட்டிக்கிறதுக்கும்மா” என்று புடவைகளின் மீதே கவனம் இருப்பது போல் மகளின் முகம் பார்க்காமல் சொல்லி முடித்தார்.

“இன்னும் ஒன்னுதான் போல” அவர்கள் எதற்கு எடுக்கிறார்கள் என்றுத் தெரியாமலேயே ராகுலிடம் ரகசியமாகக் கூறினாள் அமிர்தா.

“அவங்களுக்கு ஒன்னு போதுமா இருக்கும். நீ உனக்கு இன்னும் எத்தனை வேணுமோ எடுத்துக்கோ” அதே ரகசியக் குரலில் ராகுலும் பதிலளிக்க,

“ஹ்ம்ம்ம்” நிஜமாவா என்று அவனிடம் கண்களாலேயே கேட்க,

“ஹ்ம்ம்ம்” அவனும் கண்களாலேயே ஆமோதித்திருந்தான்.

கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக அதிக சிரத்தை எடுக்காமல் ஏதோ பெயருக்கு உடுத்தி வந்தவள் இன்று தான் மீண்டும் இளம் பெண்ணுக்கே உரிய ஆசையுடன் புடவைகளைத் தேர்வு செய்யத் தொடங்கி இருந்தாள்.

அங்கு தீப்திக்காக பதினோரு புடவைகள் தெரிவு செய்யப்பட்டிருக்க இங்கு அமிர்தாவின் புடவைக் கணக்கோ இருபதைத் தொட்டிருந்தது.

“ஓய் சோனி, இப்போ லாஸ்ட்டா எடுத்த புடவை அவங்க எதுக்கு எடுத்தாங்க தெரியுமா?” இப்பொழுது ரகசியக் குரல் மேலும் ரகசியமாக வெளிவந்தது ராகுலிடமிருந்து.

“எதுக்கு?” அப்பொழுதும் புடவைகளை விட்டுக் கண்ணெடுக்காமல் கேட்டாள் அமிர்தா.

“அது தெரியாமலேவா நீ மூணு புடவை எடுத்த?”

“ம்ப்ச்… எதுக்குன்னு சொல்லுங்க ரவி.”

“ஃப்ர்ஸ்ட் நைட்டுக்காம்” கள்ளச் சிரிப்போடு ராகுல் சொல்ல, குப்பென்று குங்குமமாக சிவந்து போனது அமிர்தாவின் முகம். எந்தப் பக்கம் திரும்புவது என்று கூடத் தெரியாமல் அதற்கும் அவன் தோள்களைத் தான் சரணடைந்திருந்தாள் காரிகை.

“நாங்கூட தெரிஞ்சு தான் விவரமா மூணு புடவை எடுக்குறேன்னு நினைச்சேன்” அவள் காது மடலில் உதடு உரச மேலும் ரகசியம் பேசி அவளை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான் மெல்லிசைக்காரன். பெண்ணின் வெட்கம் அவனைப் போதையேற்றிக் கொண்டிருந்தது.

புடவைத் தெரிவு முடிந்த பிறகு தான் தீப்தியின் கவனம் இவர்களிடம் சென்றது. இருவரும் இருந்த நிலை பார்த்து சிரித்துக் கொண்டவள் தன்னவனைத் தேடிக் கண்களைச் சுழல விட்டாள்.

அங்கு அயோத்தியா விஷயத்தில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு குறித்துத் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள் மாமனாரும் மருமகனும். அதாவது ருத்ரமூர்த்தியும் கௌஷிக்கும். விறுவிறுவென்று அவர்களை நோக்கிச் சென்ற தீப்தி வழியில்,

“அடடே நம்ம அமிர்தாவா இது? ரொம்பத் தூக்கம் வந்துடுச்சோ?” என்று அமிர்தாவையும் ராகுலையும் கலாய்க்கவும் மறக்கவில்லை.

தன்னெதிரே புசுபுசுவென்று கோப மூச்சோடு நிற்கும் மகளைப் பார்த்த ருத்ரமூர்த்தி,

“என்னடா பாப்பா?” என்று கேட்க,

“என்ன என்னடா பாப்பா? இங்க எனக்குப் புடவை எடுக்க வந்தோமா இல்ல நாட்டு நடப்பைப் பத்திப் பேச வந்தோமா?”

“எனக்கு இந்தப் புடவை பத்தியெல்லாம் என்ன பாப்பா தெரியும்?” பாவமாகக் கேட்டார் ருத்ரமூர்த்தி.

“நீங்க என்னமோ பண்ணிட்டுப் போங்க. எதுக்கு இவரையும் சேர்த்துக் கெடுக்குறீங்க. உங்களைச் சொல்லித் தப்பில்லைப்பா. உங்களை இப்படி வளர்த்து வைச்சிருக்குற அந்த டாக்டரம்மாவைச் சொல்லணும்.” சொல்லிவிட்டு விறுவிறுவென்று கௌஷிக்கின் கரம் பற்றி இழுத்துச் சென்று விட்டாள் தீப்தி.

“என்னை எங்கம்மா தானே வளர்த்துச்சு. வாசு எப்படி என்னை வளர்க்க முடியும்?” புரியாமல் குழம்பிக் கொண்டே தலையில் இருந்த ஒன்றிரண்டு முடிகளையும் பிய்த்துக் கொண்டார் அந்தப் பாவமான தந்தை.

தீப்தி கௌஷிக்கோடு வந்து அமரவும் சத்யவதியும் வாசுகியும் நாசூக்காக அங்கிருந்து எழுந்து விட,

“அங்க பார்த்தீங்களா” என்று கண்களால் ராகுலையும் அமிர்தாவையும் கௌஷிக்கிற்கு சுட்டிக் காட்டினாள் தீப்தி.

“நமக்கு ஃபர்ஸ்ட் நைட் சாரி எடுக்கப் போய் அவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்காங்க. நீங்க என்னடான்னா எங்க அப்பாவோட உட்கார்ந்து இப்பத்தான் நாட்டு நடப்பை டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. உங்களை எல்லாம் வைச்சுக்கிட்டு” என்று தீப்தி தலையிலடித்துக் கொண்டாள்.

விற்பனைப் பெண்களும் கௌஷிக்கைப் பார்த்துச் சிரித்து வைக்க வெட்கப்பட்டுத் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் கௌஷிக்.

“ஆமா நீங்க எதுக்கு இப்போ வெட்கப்படுறீங்க. அது என் டிபார்ட்மென்ட்.” அதற்கும் சண்டைக்கு வந்தாள் தீப்தி.

“உனக்குத் தான் அதெல்லாம் வரலையே தீபி. அதான் உனக்குப் பதிலா நான் அந்த வேலையைச் செய்யிறேன்.”

இப்படியே ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும் கேலி பேசிக் கொண்டும் பட்டெடுக்கும் நிகழ்வு இனிதே நடந்து முடிந்தது.

ராகுலும் கௌஷிக்கும் பணம் செலுத்துமிடத்தில் இருக்க அங்கிருந்த விற்பனைப் பெண்களிடம் பேச்சுக் கொடுத்தனர் சத்யவதியும் வாசுகியும்.

“ஏம்மா எங்களால உங்களுக்கெல்லாம் பாவம் ரொம்ப லேட் ஆகிடுச்சு இல்ல. காலையில இருந்து வேலை பார்த்து டயர்டா ஆகி இருப்பீங்க.”

“இல்ல மேடம். நேத்தே ஆர்.வீ சார் கால் பண்ணி எங்க ஓனருக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. அது மட்டுமில்லாம நீங்க வரும் போது மார்னிங்க்ல இருந்து இருக்குறவங்க வேண்டாம். அவங்க டயர்டா இருப்பாங்க.

மார்னிங் லீவ் கொடுத்து சேல்ஸ் கேர்ள்ஸ் நாங்க வரும் போது வேலைக்கு வரச் சொல்லுங்க. அப்பத்தான் அவங்களும் சந்தோஷமா வேலை செய்வாங்கன்னு ஆர்.வீ சார் ரெக்வஸ்ட் பண்ணிக் கேட்டுக்கிட்டாராம். அதால எங்க ஓனர் எங்களுக்குக் காலையில லீவ் கொடுத்துட்டார் மேடம்” சொல்லிவிட்டு பில் போட வேண்டிய புடவைகளை எடுத்துக் கொண்டு நகர்ந்தது அந்தப் பெண்.

“எங்க ராகுல் எப்போதுமே இப்படித்தான். நமக்குத் தோனாத விஷயத்தைக் கூட சரியா அக்கறை எடுத்துப் பண்ணி முடிப்பான்” வாசுகியிடம் பெருமையாகக் கூறிக் கொண்டிருந்தார் சத்யவதி.

இங்கு நடந்தப் பேச்சு வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே ராகுலைக் காதலோடும் தன்னவன் என்கிற உரிமையோடும் பார்த்திருந்தாள் அமிர்தா.

error: Content is protected !!