KKRI – 15

அத்தியாயம் – 15

“மது.. மது..” கிருஷ்ணாவின் குரல்கேட்டு மெல்ல கண்விழித்தவள் அவனைச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியவாறு, ‘பஸ் நின்றுவிட்டதா?’ என்றாள் அரைத்தூக்கத்துடன்.

“உனக்கு ஏதாவது வேண்டுமா..” மறுப்பாக தலையசைத்து மறுத்துவிட்டு அவனின்தோள்சாய்ந்து மீண்டும் தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.

மாலைநேரம் நெருங்கும் நேரத்தில் மதுரை வந்து இறங்கினர். அங்கிருந்து அவர்கள் திருமங்கலம் செல்லும் பஸ் ஏறும்பொழுது தான் தன்னை யாரோ பார்ப்பது போல உணர்ந்து வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள் மது.

அந்த பேருந்து நிலையத்தின் நிழல்குடையின் அருகே நின்றிருந்தவரின் பார்வை அவளின் மீது படிந்தது.

‘கிருஷ்ணா..’ என்று அவனின் கையைப்பிடித்தவளின் தளிர்விரல்கள் பயத்தில் நடுங்கியது.

அவளின் உள்ளங்கை வேர்ப்பதை கண்டு, “மது..” என்று திரும்பிய கிருஷ்ணாவின் பார்வையில் விழுந்தார் சம்பூரணம்.

அவரின் பார்வை மதுவை எரிப்பதைக் கண்டுகொண்டவன், “மது பஸ் கிளம்புது பாரு..” என்று லாவகமாக அவளின் கவனத்தை திசை திருப்பியவன் அவளோடு சேர்ந்து பஸில் ஏறினான்.

இருவரும் ஒரே சீட்டில் சென்று அமர கலங்கும் கண்களைக் கட்டுபடுத்திக்கொண்டு அவரைத் திரும்பிப் பார்த்தவளின் தவிப்பு உணர்ந்தவரின் கண்களுக்கு அவள் குழந்தையாக தெரிந்தாள்.

அவரின் உதட்டில் புன்னகை அரும்புவதைக் கவனித்துவிட்ட மது அவரைப் பார்த்து மெல்ல சிரிக்க, ‘முதலில் கண்ணைத் துடை..’ அங்கிருந்து சைகை செய்ய மது அவசரமாக இரண்டு கண்களையும் வேகமாக துடைத்துவிட்டு அவரைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள்.

இருவரின் சைகையை கவனித்த கிருஷ்ணாவின் உதட்டில்  புன்னகை தவழ்ந்திட, ‘அடுத்த பெண்ணின் மீது கூட பாசம் வைத்திருக்கிறார்..’ என்று நினைத்துவிட்டு திருப்பி அமர்ந்தும் பஸ் கிளம்பியது.

அதே நேரத்தில் மனைவியின் அருகே வந்த ராஜதுரை, “சம்பூரணம் கிளம்பலாமா?” என்று கேட்க, “ம்ம் போலாம்..” என்றவர் கணவனுடன் கிளம்பினார்.

கெந்தக பூமி என்றாலும், எழில் அழகிற்கு ஈடு இணையில்லை என்று சொல்லாம். பசுமை மாறாமல் காட்சியளிக்கும் வயல்வெளிகள். தென்னத்தொப்பு, வாழைத்தோப்பு என்று ரசித்துகொண்டே வந்தாள்.

மதுவைத் திரும்பிப் பார்த்த கிருஷ்ணாவின் மனம் மீண்டும் கடந்தகாலம் நோக்கிப் பயணித்தது.

தன்னருகே அமர்ந்திருந்த மதுவின் மீதிருந்த காதலை உணர்ந்த நாளும் அவனின் கண்முன்னே படமாக விரிந்தது.

“ருத்ரா.. இன்னும் என்னடி தூக்கம் எழுந்திரு.. மாப்பிள்ளை வீட்டார் வந்துட்டே இருக்காங்களாம்..” என்று அறையை நோக்கி குரல்கொடுத்துவிட்டு, தன்னுடைய வேலையைக் கவனித்தார் சம்பூரணம்.

தாயின் குரலை அலட்சியம் செய்துவிட்டு தன்னுடைய அறையின் படுக்கையில் விழி மூடிய வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் ருத்ரா.

‘கிருஷ்ணா பெயர் நல்லா இருக்கு. ஆனால் அவனோட குணம் எப்படின்னு தெரியல..’ என்ற சிந்தனையிலேயே உழன்றாள்.

அதற்குள், “ருத்ரா இன்னும் என்னடி தூக்கம்..”  அவளின் அறைகதவுகள் வேகமாகத் தட்டினார் சம்பூரணம்.

“அம்மா நான் குளிச்சிட்டு இருக்கேன்..” என்று எழுந்தும் ஒரு பொய் சொல்லிவிட்டு வேகமாக குளியலறைக்குள் நுழைந்தாள்.

“இவளை கட்டிகிட்டு போற அந்த பையன் ரொம்ப பாவம். இவளை வெச்சு அவன் எப்படி காலம் தள்ள போறானோ..” என்று வழக்கமான புலம்பலைத் தொடர்ந்த வண்ணம் செல்லும் மனைவியைப் பார்த்தார் ராஜதுரை.

‘இவளும் திருந்த போறது இல்ல. இவளோட புலம்பலுக்கு ஒரு முற்றுபுள்ளி கிடைக்க போறது இல்ல’ என்று நினைத்தவர் மாப்பிள்ளை வீட்டினர் வருகிறார்களா? என்று வாசலைப் பார்த்தார்.

ராஜதுரை – சம்பூரணம் இவரின் ஒரே மகள்தான் ருத்ரா. மதுரையில் இரண்டு மண்டபம் ராஜதுரையின் பெயரின் இருக்கிறது. அவள் படிப்பை முடித்துவிட்டு இப்பொழுது மதுரையிலிருக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.

அவளுக்கு வாழ்க்கை பற்றி எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. தன்னுடைய மூளைக்கு எது சரியென்று சொல்கிறதோ அதை மட்டுமே செய்வாள். அவளை பொறுத்தவரை மனதில் போட்டு எதையும் குழப்ப மாட்டாள் தெளிவாக உடனுக்குடன் பேசி விடுவாள்.

அதே நேரத்தில் திருமங்கலத்திலிருந்து ருத்ராவைப் பெண்பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தனர் கிருஷ்ணா வீட்டினர்.

“அண்ணா இன்னும் அறையிலிருந்து என்னதான் பண்ற..” என்ற தங்கையின் குரல்கேட்டு “எதுக்குடி இப்படி கழுதை மாதிரி கத்தற..” என்றவன் அறையிலிருந்து வெளியே வந்தான்.

“இன்னும் என்னப்பா பண்ற. நல்ல நேரத்திற்குள் பெண்ணை பார்த்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டும் இல்ல..” என்ற ஆறுமுகத்தின் பேச்சில் இருக்கும் உண்மை புரிந்து, “சரிப்பா..” என்றவன் சென்று காரை எடுக்க முன்னாடி பக்கம் ஆறுமுகம் ஏறியமர்ந்தார்.

“தாத்தா கூட நான்தான் உட்காருவேன்..” என்று ஆறுமுகத்தின் மடியில் அமர்ந்து கொண்டான் ரஞ்சித்.

பின் சீட்டில் செந்தாமரை, தாரிகா மற்றும்  சங்கீதா வாசலில் நின்றிருந்த அண்ணாவினைக் கவனித்தான்.

“அண்ணா நீங்க வரல..” என்றவன் மாதவனிடம் கேள்வி கேட்க “இல்ல கிருஷ்ணா எனக்கு கொஞ்சம் வேலை இருக்குப்பா. நீங்க போயிட்டு வாங்க..” என்றதும் அவனும் சரியென்று தலையசைத்துவிட்டு காரை எடுத்தான்.

ருத்ரா பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு தயாராக வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, ‘பெண் பார்க்கதானே வராங்க..’ என்ற அலட்சியத்தில் மீண்டும் தன்னுடைய செல்லை எடுத்து நோண்ட தொடங்கினாள்.

காரிலிருந்து கிருஷ்ணா, ஆறுமுகம், செந்தாமரை, தாரிகா மற்றும் சங்கீதா ஐவரும்  இறங்கினர்.

“வாங்க.. வாங்க..” என்று வாசலுக்கு வந்து அவர்களை வரவேற்ற ராஜதுரை அவர்களை ஹாலில் அமர வைத்தார்.

இரு வீட்டினரும் பேசிகொண்டிருக்க கிருஷ்ணா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

ஆறுமுகமும், செந்தாமரையும் கிருஷ்ணாவின் முகத்தைக் கவனித்துவிட்டு சங்கீதாவிடம் சைகையில் ஏதோ சொல்ல, “கண்ணனை கொஞ்சம் சிரிக்க சொல்லு தாரிகா” என்றாள் சங்கீதா மெல்லிய குரலில்.

அவனின் முகத்தில் புன்னகை என்பது மருந்துக்கும் இல்லாமல் இருக்கவே தாரிகா தான், “அண்ணா என்ன ஒரு மாதிரி இருக்கிற..” என்று கேட்டாள்.

தங்கையின் வற்புறுத்தலில் புன்னகைத்த கிருஷ்ணா, “எனக்கு என்னடா நான் நல்லா இருக்கிறேன்..” என்று சொல்லவும் அவளின் மனம் சாந்தமானது.

கிருஷ்ணா பட்டென்று பேசினாலும் கூட, மற்றவர்களுக்கு தெரியாத அளவிற்கு மனதில் சில ரகசியங்களை பொக்கிஷமாக பாதுகாப்பான். அப்படி சில நினைவுகள் அவனின் மனதை ஆக்கரமிக்கவே அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவன் என்னதான் மனதிற்கு சமாதானம் சொன்னாலும், அவனின் மனம் அதை ஏற்க மறுத்திட, ‘நடப்பது நடக்கட்டும்..’ என்ற முடிவுடன் நிமிர்ந்தான்.

அதற்குள் ருத்ராவை அழைத்த சம்பூரணம், “வாம்மா வந்து எல்லோருக்கும் காபி கொடு..” என்றாள்.

‘இந்த சடங்கு சம்பரதாயம் எல்லாம் எவன் கண்டிபிடிச்சானோ..’ என்ற எரிச்சலுடன் எழுந்து அறையின் வெளியே வந்தவள் எல்லோருக்கும் காபியைக் கொடுத்தாள்.

அவள் நீட்டிய காபியை எடுத்துக்கொண்ட கிருஷ்ணா பேருக்கு கூட அவளை நிமிர்ந்து பார்க்காமல் இருக்க, ‘இவனுக்கு எல்லாம் காபி கொடுக்க வேண்டி இருக்கே..’ என்ற எண்ணத்துடன் நகர்ந்தாள் ருத்ரா.

இருவரின் மனம் வேறு வேறாக இருக்க கண்ணில் பட்ட விஷயங்கள் அவர்களின் கருத்தில் பதியவில்லை. மற்றவர்களுக்கு பெண்ணை பிடித்துவிட, “கிருஷ்ணா நீ போய் பேசிவிட்டு வாப்பா..” என்றார் ஆறுமுகம்.

அப்பொழுது வேகமாக மாடியேறிய மகளைக் கவனித்தார் ராஜதுரை. அவளுக்கு மூச்சு முட்டுவது போல இருக்கும் சமையத்தில் வேகமாக மாடிக்கு சென்று அங்கிருக்கும் இயற்கையை ரசிப்பது அவளது குணம் என்று அறிந்தவர் என்பதால்,

“நீங்க மேலே போய் பேசுங்க..” என்றதும் கிருஷ்ணா வேகமாக மாடியேறி செல்ல இருவீட்டினரும் மற்ற விஷயங்களை பேசத் தொடங்கினர்.

அவன் மாடிக்குச் செல்ல, அங்கிருந்த கைப்பிடி சுவற்றில் சாய்ந்தவண்ணம் நின்றிருக்க, ‘இவளிடம் என்ன பேசறது..’ என்ற சிந்தனையுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

கிளிபச்சை நிறத்தில் பட்டுப்புடவை கட்டி தலைநிறைய மல்லிகை பூ, அடுத்தவரை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் பார்வை, எரிச்சலில் முகம் சிவந்திருக்க, வேண்டா வெறுப்பாக ஒரு புன்னகை  அவளின் உதட்டை தழுவிச் செல்ல நொடியிலேயே இதுதான் ருத்ரா என்று முடிவு செய்தான்.

அவள் நிமிரும் பொழுது எதிரே நின்றவனை கவனித்த ருத்ராவின் பார்வை அவனை அளவேடுத்தது. அலையலையாக கேசமும், சிந்தனையில் சுருங்கிய முகமும், அடுத்தவரின் பார்வைக்கு கட்டுப்படாத விழிகளும், புன்னகைக்காத இதழ்களும், கோபத்தை உள்ளடக்கி நின்றவனின் குணத்தை எடை போட்டது அவளின் உள்ளம்.

இருவரும் சிலநொடிகள் ஒருவரையொருவர் பார்த்திருக்க, “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா..” என்று நேரடியாக கேட்டாள்.

அவளின் கேள்வியில் நிமிர்ந்தவனோ, “ம்ம் பிடிச்சிருக்கு..” என்றான்.

“பிடிச்சிருக்கு என்றால் என்ன அர்த்தம்..” என்றாள் ருத்ரா கேள்வியாகவே..

“மனசுக்கு பிடிக்கல. காலப்போக்கில் பிடிக்காமலும் போகலாம் என்ற அர்த்தம்தான்..” என்றான் கிருஷ்ணா அழுத்தத்துடன்

அவள் இடதுபுருவம் உயர்த்திக் கேள்வியாக பார்க்க, “பிடிக்கும், பிடிக்காது என்ற இருவார்த்தை வைத்து என்னோட வாழ்க்கையை நான் முடிவு பண்ண முடியாது. இது என்னோட குணம்..” அவளைப் பார்த்து தெளிவாகக் கூறினான்.

“ம்ம் நல்ல குணம்..” என்ற ருத்ரா

“எனக்கு சீக்கிரமாக எந்த விஷயமும் பிடிக்காது.  எனக்கு பிடிச்சிருச்சுன்னா  அவர்கள் மீது நான் அதிகமாக ஆதிக்கம் செலுத்துவேன். இது என்னோட மைனஸ்” என்றவளை ஒரு பார்வை பார்த்தான் கிருஷ்ணா

இருவருக்குமே இதற்கு மேல் என்ன பேசுவது என்றே தெரியாமல் போக, “கீழே போலாமா..” என்று கிருஷ்ணா இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்க,

“நான் வரல. நீங்க போறது என்ற போங்க..” என்றாள் முகத்தில் அடித்தார் போல சொல்லவே கிருஷ்ணாவிற்கு கோபம் தலைகேறியது.

மறுநொடியே வேகமாக கீழிறங்கி வந்தவனுக்கு ருத்ராவைப் பிடிக்கவில்லை அவன் அதை சொல்ல வரும் முன்னே, “இப்பொழுது பொண்ணுக்கு மோதிரம் போட்டுவிட்டு போகிறோம்.. அடுத்து வர நல்ல நாளில் உறுதி பண்ணலாம்” என்ற தந்தையின் முடிவில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை.

அவனின் முகத்திலிருந்த இறுக்கத்தைக் கவனித்த சங்கீதா, “இன்னைக்கு வீட்டிற்கு போனதும் பெரிய பூகம்பமே வெடிக்க போகுது..” என்று தாரிகாவிடம் மெல்லிய குரலில் கூறினாள்

ராஜதுரை மற்றும் சம்பூரணம் இருவரும் ஒரு மனதாக சம்மதம் சொல்ல மாடியிலிருந்து இறங்கி வந்த ருத்ரா, ‘பிடிக்காத ஒரு விஷயத்தை எப்படித்தான் இவ்வளவு சீக்கிரம் முடிவு பண்றாங்களோ..’ என்று நினைத்தவளுக்கு மீண்டும் எரிச்சல் மண்டியது.

வீட்டினர் அவர்களின் விருப்பத்தைக் கேட்காமல் முடிவெடுத்துவிட்டு, “கிருஷ்ணா இந்த மோதிரத்தை ருத்ராவின் கையில் போடுப்பா..” என்றார் ஆறுமுகம்.

அவன் மோதிரத்தை வாங்கிவிட்டு ருத்ராவைப் பார்க்க அவளும் அதே வெறுப்புடன் கைகளை நீட்டிட அவளின் விரல்களில் மோதிரத்தை அணிவித்தான்.

உள்ளுக்குள் எரிமலை வெடிக்க வெளியே தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு தாயின் முகம் பார்த்தான் கிருஷ்ணா.

தன்னுடைய கையிருந்த மோதிரத்தை பார்த்துவிட்டு நிமிர்ந்த ருத்ரா அவனை ஒரு பார்வை மட்டும் பார்த்தாள். அவனோ அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

இரு மனங்களும் இருவேறு திசையில் நின்று வாழ்க்கை என்ற ஒரு பாதையை கேள்வியுடன் நோக்கியது.

“சரிங்க நாங்க கிளம்புகிறோம்..” என்று அவர்களிடமிருந்து விடைபெற்று கிளம்ப, வீட்டைவிட்டு வேகமாக வெளியேறிய கிருஷ்ணாவின் முகம் செந்தணலாக மாறியிருந்தது.

தமையனின் முகத்தை கவனித்த தாரிகாவிற்கு அவனின் மனம் புரிந்து போனது. எல்லோரும் வந்து காரில் ஏறியதும் மின்னல் வேகத்தில் காரை எடுத்த கிருஷ்ணா தன்னுடைய கோபத்தைக் காரின் மீது காட்டினான்.

திடீரென்று அவனின் மனதில் தோன்றியவளின் முகம் அவனை மையலுடன் பார்த்துவிட்டு நொடிபொழுது மாயமென்று மறைந்துவிட அவனின் முகம் குப்பென்று வேர்த்துவிட்டது.

தினமும் பார்க்கும் அவளின் முகம் தன்னை இந்தளவிற்கு சலனப்படுத்தும் என்ற உண்மையை அவனே அறியாத ஒரு விஷயம். அப்பொழுதுதான் அவன் தன்னுடைய மனதைப்பற்றிய ஆராய்ச்சி இறங்கினான். அதற்குள் வீடு வந்து சேர்ந்த கிருஷ்ணா வேகமாக அவனின் அறைக்குள் சென்று மறைந்தான்.

‘வீட்டிற்கு வந்தும் மகன் அவர்களிடம் சண்டை போடப் போகிறான்’ என்று மற்றவர்கள் நினைத்திருக்க அவனோ வீட்டிற்கு வந்தும் அமைதியாக அவனின் அறைக்குள் சென்று மறைவதைக் கண்டு வாயடைத்துப் போனது.

“இந்த திருமணத்திற்கு அவன் பூரண சம்மதம் சொன்னதே எனக்கு சந்தோசமாக இருக்கு தாமரை..” என்றவர் சோபாவில் அமர்ந்தார். அவரின் முகத்தை ஒருநொடி நிமிர்ந்து பார்த்த தாரிகா அவளின் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவனின் இந்த மாற்றம் சங்கீதாவை அதிர்ச்சியில் ஆழ்த்திருந்தவளின் கவனத்தை ஈர்த்தார் ஆறுமுகம். “என்னம்மா சங்கீதா உனக்கு அந்த பெண்ணைப் பிடித்திருக்கிறதா?” என்ற கேள்வியில் அதிர்ச்சியிலிருந்து மீண்டவள்,

‘இன்னும் உங்களோட மகனுக்கே இந்த திருமணத்தில் சம்மதமா என்று புரியாமல் குழம்பிட்டு இருக்கிற என்னிடம் கேட்கிறாரே..’ என்று மனதிற்குள் புலம்பியவள்,

“எனக்கு பிடிச்சிருக்கு மாமா. இந்த திருமணம் நல்லபடியாக நடந்தால் அதுவே போதும்..” என்று இருபொருள்பட கூறிய மருமகளைக் கேள்வியாக நோக்கினார் தாமரை.

அவனின் அமைதிக்கு பின்னே என்ன பூகம்பம் கிளம்புமோ என்று ஒவ்வொரு நொடியும் பயத்திலேயே வந்தவளின் மனதை துல்லியமாக கணித்திருந்தார் தாமரை.

“அத்தை இது நம்ம கண்ணன் தானா?” என்று சந்தேகமாகவே கேட்க,

“எனக்கும் அதே சந்தேகம்தான் கீதா. அவன் அமைதியாக இருக்கிறான் என்பதே வயிற்றில் நெருப்பைக் கட்டியது போல இருக்கு சங்கீதா..” என்று பயத்துடன் கூறினார்.

ஆனால் பெண்களின் இந்த பேச்சில் தலையிடாமல், “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் தாமரை..” என்றவர் எழுந்து வாசலை நோக்கிச் சென்றார்.

அவர்கள் இருவரும் பேசுவது புரியாமல் இருவரையும் மாறிமாறிப் பார்த்த ரஞ்சித், “நான் சித்தப்பா ரூமிற்கு போறேன்..” என்று மாடிக்கு ஓட, “ரஞ்சித் மெதுவாக போ..” என்று குரல்கொடுத்தாள் சங்கீதா.

ருத்ராவை பெண்பார்த்துவிட்டு வந்து தன்னுடைய அறைக்குள் நுழைந்தவனுக்கு தலைவலி வலித்தது. அவளை பிடிக்காத கோபம் ஒருபக்கம், அவளின் உதாசீனம் மறுபக்கம் என்று எல்லாம் சேர்ந்து அவனின் தலைவலியை அதிகரிக்க செய்தது.

அதேநேரம் தன்னுடைய மனதில் தோன்றியவளின் முகம் அவனின் சிந்தனையை திசைதிருப்ப, ‘இது எப்படி சாத்தியம்..’ என்ற கேள்வியுடன் படுக்கையில் விழுந்தான் கிருஷ்ணா. அவளின் முகம் தன்னுடைய ஆழ்மனதில் ஓவியமாக வரையப்பட்திருப்பத்தை உணர்ந்து அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அதற்குள் பஸ் சடன் பிரேக் போட்டு நின்ற இடத்தைக் கவனித்துவிட்டு, “மது திருமங்கலம் வந்தாச்சு இறங்கு..” என்றான்  கிருஷ்ணாவுடன் சேர்ந்து பஸிலிருந்து இறங்கினாள் மது.

மீண்டும் அந்த மண்ணில் கால்பதித்த மதுவின் கண்முன்னே மனம் அங்கும் இங்கும் ஊஞ்சலாட தொடங்கியது.

error: Content is protected !!