NSOV – 3

ஹரி விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே நேரம், அதிகாலை மணி மூன்றை நெருங்கியிருந்தது…

அவனுக்காக… ஓட்டுநருடன் காத்திருந்த… பி.எம்.டபிள்யூ வில் ஏறியவன்,  திருவள்ளுரில் இருக்கும் வீட்டிற்குச் செல்வதை விடக் கிண்டியிலுள்ள அலுவலகத்திற்கே சென்று விடலாம் என முடிவு செய்து… அங்கேயே வந்து சேர்ந்திருந்தான்.. அந்த மிகப்பெரிய கட்டிடத்தில் இரண்டு தளங்களில் அவனுடைய அலுவலகம் இயங்கி வந்தது.

அங்கேயே தங்கி வேலை செய்வதற்காக பிரத்தியேகமாக ஒரு அறையை தனக்காக தயார் செய்து வைத்திருந்தான்.

ரெப்ரஷ் செய்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தவனின் நினைவுகள் கடந்த காலதிலிருந்து வெளிவரமுடியாமல்… அதிலேயே சுழன்றுகொண்டிருந்தது…

********************************

ஸ்வேதாவுடனான அந்தச் அறிமுகத்திற்குப் பிறகு, பாலுவுடன் சேர்ந்து… ஹரியும் அடிக்கடி அவர்களைச் சந்திக்க வருவான்…

பெரும்பாலும் மத்திய உணவு அனைவரும் ஒன்றாகவே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தார்கள்… நாட்கள்அதன் வேகத்தில் ஓட… ஹரியும் அவர்களுள் ஒருவனாக ஆகிப்போனான்.

ஸ்வேதாவை தன் இதயம் முழுவதிலும் நிறைத்து வைத்திருந்தாலும், நட்பு என்னும் எல்லை கோட்டைதாண்டி அவளை நெருங்க விரும்பவில்லை ஹரி…

அவள் மற்ற எல்லோரிடமும் எப்படிப் பழகுகிறாளோ… அப்படியேதான் தன்னிடமும் பழகுகிறாள் என்பதையும் நன்றாக அறிந்திருந்தான் அவன்…

இப்பொழுது… போன்று படித்தாள் என்றால்… கோல்ட் மெடல் வாங்கும் வாய்ப்பும் அவளுக்கு உள்ளதால்… அவள் மனதைக் குழப்ப அவன் விரும்பவில்லை..

பாலு இன்றி தனியாக அவளை, அவன் சந்தித்ததும் இல்லை, சந்திக்க முயன்றதும்இல்லை… ஆனால், ஒருநாள், அப்படி ஒரு வாய்ப்பு தானாகவே அவனுக்கு அமைந்தது…

அந்த நாள்தான்அவனை முழுவதுமாக மாற்றிப்போட்டது…

************************************

ஒருநாள் அனைவரும் மதியம் ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரம் … அவர்கள் அருகிலே வராமல், சற்றுதூரத்திலேயே நின்றுகொண்டு … ஸ்வேதவை வருமாறு ஜாடை செய்தாள் அவள்… வஸுதா…

அவள் ஸ்வேதாவை தனியாக அழைத்ததில் சற்று கோபம் கொண்ட பாலு… “ஏன் மகாராணி நாங்களெல்லாம் இருந்தால் இங்க வர மட்டாங்களாமா.. ரொம்ப ஓவரா பண்ணுறா…” என்று எகிற…

அவளிடம் வருவதாக ஜாடை காட்டிவிட்டு ஸ்வேதா பாலுவிடம் ” அவளுடைய நிலைமைதான் தெரியும் இல்லையா பாலுண்ணா… ப்ளீஸ் நான் அவளிடம் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்”… என்றுவிட்டுப் போக…

பாலு ஹரியை நோக்கி “இவ அடங்கவே மாட்டாடா… இவளை பார்த்தால் மட்டும் நம்மை கட் பண்ணி விட்டுட்டு போயிடுறா “என்றுஅங்கலாய்க்க…

ஹரி சிரித்துக்கொண்டே “அவளைப் பற்றிதான் உனக்கு தெரியும் இல்ல… அந்தபொண்ணுக்கு ஏதாவது உதவி தேவையாக இருக்கும்… அதுதான் போயிருப்பா… நீ விடு மச்சான்” என்றுஅவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்…

இதையெல்லாம் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினியோ… “இனிமேல் ஸ்வேதா மேடம் நேராக கிளாஸுக்குதான் வருவாங்க… நான் போகிறேன்”…எனக் கூறிவிட்டு கிளம்பிவிட…

பிறகு பாலு… “ஒண்ணுமில்லடா இவதான் சரியான படிப்பாளி ஆச்சே! அந்த வசுதா லசன்ல ஏதாவது டவுட் கேட்பாள்.. ஆனா இவளை தனியா எதுக்கு அழைத்துக்கொண்டு போகணும்?”

“இங்கேயே சகஜமாக கேட்கலாமில்லையா?”

“காலேஜ் வரும்போதும்… திரும்பி போகும்போதும் ஸ்வேதாவிடம் ஒட்டிக்கொண்டுதான் இருப்பாளாம்.. ஆனால் நம்ம யாரோடும்… ஏன் வர்ஷினியோடவும் கூட பேசமாட்டாளாம்… இவஇப்படி இன்சல்ட் செய்யறா… ஆனா இவ விஷயத்துல மட்டும் ஸ்வேதா நம்ம பக்கம் இருக்கமாட்டாள்” என புலம்ப…

“சரி விடுடா… அவளே ஒருநாள் புரிந்து கொள்வாள்”.. என்று முடித்தான் ஹரி…

ஆனால் அப்படி ஒருநாள் வரும்பொழுது… காலம் கடந்து போயிருக்கும் என அறிவானா ஹரி??

****************************************

சில தினங்கள் கடந்த நிலையில்… ஒருநாள் பாலு ஏதோ விசேஷம் என்று கோவை சென்றதால் கல்லூரிக்கு வரவில்லை…

முதல் ஹவர் முடிந்தவுடன்… வகுப்பிலிருந்து வெளியில் வந்த ஹரி… எப்பொழுதும் அவர்கள் அமரும் சரக்கொன்றை மரத்தடியில் ஸ்வேதா மட்டும் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டான்…

அவள் ஒருபுத்தகத்தை பிரித்து வைத்து அதில் ஆழ்ந்திருந்தாள் …, சத்தம் செய்யாமல் அவள் அருகில் வந்தவன் அவள்காதருகில் ஒரு சொடுக்கு போட அதிர்ந்து திரும்பியவள்…

” ஓ ஹரி! நீங்கள் தானா” என்க…

“நானேதான்” என்றவன்… “அமாம் நீ என்ன… இந்த நேரத்துல, அதுவும் உன் தலை… வாலு… இதெல்லாம் இல்லாம தனியாஉட்கார்ந்து இருக்க?” என்று கேட்க…

அதற்கு அவள் “என்ன தலை?… என்ன வாலு?” என்க… “வர்ஷினியும், வசுதாவும்தான்” என்று அவன் சொல்லவுமே… காண்டானவள்… “ஹரிஈஈஈ…” என்று பல்லை கடிக்க..

“சும்மாதான் சொன்னேன்… கூல்.. கூல்…” என்றவன் “எங்கே அவர்கள்?” என்று கேட்க…

“ஒரு இன்டர் காலேஜ் மீட்… டான்ஸ் காம்பெடிஷன்… இரண்டு பேருமே கலந்துக்கறாங்க.. அ துக்கான ரிகர்சல் போயிட்டு இருக்கு… க்ளாசில், பாதிபேர் அதுக்கு போயிட்டதால.. இந்த ஹவர் பிரீ.. அதுதான் இங்க வந்து உட்கார்ந்து விட்டேன்” என்று அவள் நீளமாகக் கூற..

“என்ன புக் படிக்கற” என்று ஹரி…கேட்க…

“இல்ல பிஇ முடிச்ச உடனே… எம்எஸ் பண்ணலாம்னு ஒரு எண்ணம் இருக்கு… அதுக்கான எக்ஸாம் பற்றிய கைடு…” என்று அவள் கூறவும்…

“அப்ப மேடமும் யூ.எஸ்.. போகும்பிளான்லதான் இருக்காங்களா?” என்று நினைத்த ஹரி…

“பரவாயில்ல… பியூச்சர்ல நம்ம ப்ளேஸ்மென்ட் ஆகி… அங்க போகும்போது வசதியாகத்தான் இருக்கும்” என்று எண்ணியவாறே…

“அப்ப அங்கேயே வேலைசெய்யற பையனாக பார்த்து கல்யாணம் செய்துகொண்டால் வசதியாக போய்டும் இல்லையா?” என்றுகேட்க…

அதற்கு அவள் “ஹா! ஹா! கல்யாணமா? சான்ஸே இல்லை.. நான் எம் எஸ் படிக்க நினைப்பதே கல்யாணத்திலிருந்து தப்பிக்கத்தான்…” என்று ஸ்வேதா கூறவும்…

“புரியல” என்றவனுக்கு…  “இல்ல ஹரி… உண்மையாக சொல்லணும்னா எனக்கு ஸ்கூல் டீச்சர் ஆகவேண்டும் என்று தான் ஆசை, அதுவும் KG… லெவெலுக்கு…”

“ஆனால்… நான் +2 முடிச்ச உடனே… இதை அப்பா கிட்ட சொன்னபொழுது… அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை” என்று கூற…

“ஏன்?” என்று கேட்டவனிடம் வழக்கம் போல ஒரு கதையையே சொன்னாள் ஸ்வேதா…

“அப்பாவோட பிறந்தவர்கள் நான்கு பேர்.. இரண்டு அக்கா.. இரண்டு தம்பி… அப்பா படித்து கொண்டிருந்த சமயம்தான்அத்தைகளுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது… சித்தப்பாக்கள் இரண்டு பேறும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்…”

“பைனாசியாலி கொஞ்சம்… சிரமத்தில் இருந்ததால்… அப்பாவினால் அவர் ஆசைப்பட்ட இன்ஜினியரிங் படிக்கமுடியாமல் போனது…”

“மாமாக்கள் இருவருமே பெரிய இடம்… பிறகு அப்பா படித்து வேலைக்கு போன பிறகு நிலைமை சரியாகி சித்தப்பாக்களை நன்றாக படிக்கவைத்தனர்…”

“ஒருவர்ஆடிட்டர்…  இரண்டாவது சித்தப்பா கம்ப்யூட்டர் இன்ஜினியர்… யூஎஸ்ல க்ரீன் கார்டு வாங்கி செட்டில் ஆகிட்டார்… பிறகு சித்திகளும் படித்து பெரிய வேலையில் இருப்பவர்கள்…”

“அத்தைகளின் பசங்க ஐந்து பேர், ஆல் என்ஜினீர்ஸ் அண்ட் ஒருவர் டாக்டர்…”

“நாங்களும் அதே மாதிரி படிக்கலேன்னா அப்பாவுக்கு தலைகுனிவாகிடுமாம்… சோ எங்களையும் இந்த படிப்பில் தள்ளிவிட்டுட்டார்…”

“அண்ணா இஷ்டமாகத்தான் படிச்சான்… அனால் அவனுக்கு பிஜி பண்ண இன்ட்ரெஸ்ட் இல்ல, கேம்பஸ்ல செலக்ட் ஆகி வேலைல ஜாயின் செஞ்சுட்டான்…”

“நானும் பிஇ… முடிச்சுட்டு… உடனே வேலைக்குப் போனால்…நீங்க சொன்ன மாதிரியே… ஒரு அமெரிக்க மாப்பிள்ளையை பார்த்து எங்கப்பா என்னை தள்ளிவிட்டுவிடுவார்…” என்று ஸ்வேதா… சொல்லவும்… “அதனாலதான் இந்த எம்.எஸ்.. படிக்குற ஐடியாவா?” என்று ஹரி கேட்க…

“இல்லையா பின்ன? இங்கே இருந்தே படிக்கலாம் என்றால்… கல்யாணம் செய்துகொண்டு படி என்றுசொன்னாலும் சொல்லுவார்… அத்தைங்க வேற எப்பவும் கல்யாணத்த பற்றியே பேசி டென்ஷன் செய்யறாங்க” என்று அவள் சொல்லவுமே…

மனதிற்க்குள் “ஐயோ” என்று அதிர்ந்தவன்… “மேல படிக்கறது நல்ல விஷயம்தான், ஆனால் என்றைக்கு இருந்தாலும் நீ கல்யாணம் செய்து கொண்டுதானே ஆகவேண்டும்” என்று கேட்க…

“இல்லை ஹரி, என்னால ஸ்கூல் டீச்சராகத்தான் ஆக முடியல… ஆனாலும் டீச்சிங் லைன்லதான் வரணும்னு ஒரு ஆசை…”

“எம்.எஸ் முடிச்சிட்டு… இங்க வந்து ஏதாவது காலேஜ்ல, லெக்சரர்ராக வேலை பார்க்கணும், பிறகுதான் கல்யாணத்த பற்றியே யோசிப்பேன்…” என்று ஸ்வேதா சொல்ல…

என்னவோ அவனுக்குத் தெரிந்துகொண்டே தீரவேண்டும் என்ற ஆவலில் கேட்டான்  “உனக்கு எந்த மாதிரி மாப்பிளை வேண்டும்?”என்று…

அதற்கு  ” சரி.. நீங்க சொல்லுங்க… உங்க கேரியர் பிளான் என்ன?” என்று கேட்டவளிடம்…

“நான்கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லவில்லையே” என்றவனிடம்…

“நீங்க சொல்லுங்க… நான் என்பதிலை சொல்றேன்…” என்ற ஸ்வேதாவிடம்…

“ம்.. எப்படியும் கேம்பஸ்ல செலக்ட் ஆகிடுவேன்… இருக்கறதிலேயே பெரிய கம்பெனியா பார்த்து ச்சூஸ் பண்ணி வேலையில ஜாயின் பண்ணிடுவேன்… அப்புறம் ஆன் சைட்.. நல்ல சாலரின்னு செட்டில் ஆகவேண்டியதுதான்…” என்று ஹரி பதில் கூறவும்… ஸ்வேதாவின் உதடுகள் ஏளனத்தில் வளைந்தது…

“இப்படி திங்க் பண்ற ஒருவரை… கண்டிப்பாக நான் செலக்ட் பண்ண மாட்டேன்!” என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திராத பதிலைச் சொல்லி அவனை அதிரவைத்தாள் அவனுடைய மனதுக்கினியவள்…

மிகவும் பாடுபட்டு முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு “பிறகு வேறு எப்படிப்பட்டவனை எதிர்பார்க்கிறாய்? வானத்திலிருந்து வந்து குதிக்கணுமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்பதுபோல் ஹரி கேட்க..

“ஏன் எனக்காக ஒருத்தன் வானத்திலிருந்து வந்து குதிக்க மாட்டானா என்ன?” என்று சிரித்தவாறே பதில் கொடுத்தாள் ஸ்வேதா…

அதற்கு ஹரி… “வருவாம்மா வருவான்.. நீ மேல சொல்லு” என்க..

“அது! என்று கெத்தாக சொன்னவள்” எனக்கு அதிகமான எதிர்பார்ப்பெல்லாம் இல்லை ஹரி… அவர் ஏதாவது ஒரு பிசினெஸ் செய்யறவராக இருக்கணும்…”

“பெரிய லெவல்ல இல்லனாலும்… சொந்த தொழிலாக இருக்கணும்.. ஒரு பத்து குடும்பத்தையாவது அவர் வாழ வைக்கணும்.. எல்லாவற்றிற்கும் மேலே என்னோட அப்பா மாதிரி, நான் விரும்புவதை செய்ய எனக்குத் தடையாக இருக்கக் கூடாது… அவ்வளவுதான்” என்று முடித்தாள் ஸ்வேதா…

அவனோ விடாமல் “மத்ததெல்லாம் ஓகே… அது என்ன சொந்த பிசினஸ்.. ஏன்?” என்று கேட்க “சொல்லுவாங்க இல்ல ‘சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட எலிக்குத் தலையாக இருப்பது உயர்வு’ அது மாதிரி பத்தோடு பதினொன்னா இல்லாம அவர் இடத்தில் அவர்தான் உயர்ந்து இருக்கணும்…”

“இது என்னோட மைண்ட் செட்… சாரி! நான் அதுக்காக உங்களைப்போல ஆம்பிஷன்ல இருப்பவர்களைக் குறைவாக சொல்லல… எனக்கு என்ன விருப்பம்னு சொன்னேன் அவ்வளவுதான்” என்றவள்.

“நிறையபேர் இருக்காங்க ஹரி! பெரிய பின்புலம் இல்லாமல்… மிகவும் கஷ்டப்பட்டு… பேங்க்ல லோன் வாங்கிப் படித்து… அதை அடைக்க… உடனே நல்ல சம்பளத்தில் ஒரு வேலையில் சேர்ந்து… குடும்பத்தைக் காப்பாற்ற… ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியே வரமுடியாமல்… திணறிக்கொண்டு இருகாங்க…”

“உண்மையில்… அவங்க நிலைமையில் இருப்பது… மிகவும் கடினம்தான்…”

“ஆனால்… உங்களைப் போல… பாலு அண்ணா போல… வசதியான குடும்பப் பின்னணியில் இருக்கறவங்க… ஏன் இந்தப் பாதையை சூஸ் பண்ணனும்” என்று சொல்லிக்கொண்டே போனவள்… அப்பொழுதுதான் கவனித்தாள்… வகுப்பிற்கு நேரமானதை… உடனே பரபரப்பாக…

“ஐயோ.. கிளாஸ்க்கு டைம் ஆகிவிட்டது… பிறகு பார்க்கலாம்… பை” என்று கூறிவிட்டு… அங்கிருந்து… சென்றுவிட…

அவள் பேசிய வார்த்தைகளின் தாக்கத்தில் கல்போல் இறுகி உட்கார்ந்திருந்தான் ஹரி… யுகங்கள் போன்று நகர்த்த சில நொடிகளில்… மெசேஜ் வந்ததைத் தெரிவித்த… கைப்பேசியின் ஒலியில் திடுக்கிட்டு தன் நினைவுக்கு வந்தவன் தன் வகுப்பு நோக்கிச் சென்றான்.

ஆனால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு விடுதி அறைக்கு வந்தவனை , அவளுடைய ஒவொரு வார்த்தைகளும் ஊசி போல் குத்திக்கொண்டிருந்தது…

இவ்வளவு நாட்களாக அவனுக்கும் அவனுடைய தந்தைக்கும் இடையில் பெரும் சுவராய் எழுந்து நிற்கும் பிரச்சினையும்… இதுதானே!!

அவரோ, தான் நடத்தி வரும், இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் சிறிய அளவிலான நிறுவனத்தை மகன் தொடர்ந்து நடத்தமாட்டானா என்று ஏங்கிக்கொண்டு  இருக்க…

ஹரியோ… வெளிநாட்டில் வேலை என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தான்..

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது அதை… தள்ளிப்போடுவதால் ஒரு வேளை அவன் மனம் மாறக்கூடுமோ என்றுதான், அவர், அவனை வற்புறுத்தி,  எம்.ஈ… படிக்க அனுப்பியதே…

இந்த நிமிடம்வரை அவன் மனதில்… தந்தையின் தொழிலை கவனிப்பது பற்றிய எண்ணமே இல்லாதிருந்த ஹரி…

அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காக!

அவளிடம் கொண்ட… அவளே அறியாத! அளவற்ற காதலுக்காக!!

அவனுடைய தந்தையின் தொழிலை முயன்று பார்க்கலாமென்று, முடிவெடுத்திருந்தான்…

அந்த நொடி அவன் நினைத்திருக்கவில்லை… அந்தத் தொழில் அவனை அவ்வளவு ஈர்க்குமென்று!

ஒருசுழலாய் மாறி தன்னை முழுவதுமாக உள்ளே இழுத்துக்கொள்ளுமென்று!

சிற்சில சறுக்கல்களைத் தாண்டிய… அளப்பரிய வெற்றிகளைக் கொண்டுவந்து குவிக்கும் என்று!

லட்சத்தில் ஒருவனாக… மிகப்பெரிய உயரத்தில் அவனைக் கொண்டுபோய் வைக்குமென்று!