NUA–Epilogue

எபிலாக்

காலமெல்லாம் காதல் வாழ்க

காதலெனும் வேதம் வாழ்க

காதலே நிம்மதி கனவுகளே அதன் சந்நிதி

கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி நீ காதலி

(முத்துக்காளை & தவமங்கை)

 

ஐந்து வருடங்களுக்குப் பிறகு…

 

சோலையூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது அவ்வருட திருவிழாவுக்காக. தெருவுக்கு தெரு மைக் செட்டில் ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’வும் ‘கற்பூர நாயகியே கனகவள்ளி’யும் மாறி மாறி முழங்கியது. வாசலில் வாழை மரம் கட்டி மாவிலை தோரணம் தொங்க ஒவ்வொரு வீடும் சுத்தபத்தமாக காட்சியளித்தது. கிராமத்து குட்டி சுவரில் எல்லாம் யார் வீட்டு அன்னதானம் எந்த நாள் நடக்கிறது எனும் போஸ்டர்களும், திருவிழா முடிந்து நடக்கப் போகும் கலைநிகழ்ச்சியின் நிகழ்ச்சி நிரலும் ஒட்டப்பட்டிருந்தன.

சூரியன் துயில் எழுந்து கடமையை செய்ய ஆரம்பித்திருந்த நேரம், டாக்சி ஒன்று கிராமத்து நுழைவாயிலில் பெரிதாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்றின் அருகே வந்து நின்றது. அதில் இருந்து வெளியே இறங்கிய அஜய் புன்னகையுடன் அந்த பேனரை ஏறிட்டு நோக்கினார். அதில் கரு நீல கரை வைத்த வேட்டியிலும், இள நீல சட்டையிலும் கைக்கூப்பியபடி நின்றான் காளை. அவன் அருகே அழகிய இள நீல நிற புடவையில் புன்னகை முகமாக நின்றிருந்தாள் மங்கை. அவள் இடுப்பில் காளையின் மறு பிம்பமாக அவர்களின் செல்வன் மயிலகாளை என்ற மகிழன்(மகிழ்ச்சியை அளிப்பவன்). குடும்ப வழக்கமாக மயிலகாளை என அழைத்தாலும் பிறப்புப் பத்திரத்தில் மகிழன் என தான் கொடுத்திருந்தான் காளை. வருங்காலத்தில் தன் செல்வனை மயில் மயில் என யாரும் கிண்டலடித்து விடக்கூடாது எனும் எண்ணம் தான் அதற்கு காரணம்.   

“கடையில கிடைக்கும் கம்மல்

தூசின்னா வரும் தும்மல்

கமல் நடிச்ச படம் பம்மல்

காளை எங்கள் பொன்மனச் செம்மல்!!!”

என ஆரம்பித்திருந்த வாசகத்தைப் படித்ததும் அஜய்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அரசி! இங்க வந்து உன் மாப்பிள்ளையின் வீர தீர பராக்ரமத்தைப் பாரு” என காரில் இருந்த மனைவியை அழைத்தார். வெளியே வந்து போஸ்டரைப் பார்த்த அரசிக்கும் புன்னகை வந்தது.

“ஜூஸ் பேக்டரி முதலாளி, டீச்சருக்கு மட்டும் தொழிலாளி, ஊருக்கு உதவும் குணசாலி எங்கள் அன்பு அண்ணன் காளையின் சார்பாக நடைபெறும் அன்னதானத்துக்கு உங்கள் எல்லோரையும் வருக வருக என வரவேற்கிறோம்.” என பேனரில் இருந்ததைப் படித்தார் அரசி.

இந்த சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருந்தான் காளை. மங்கைக்கு மட்டுமே மாங்காய் ஜுஸ் போட்டவன், அவள் உந்துதலில் ஜூஸ் பேக்டரி ஒன்றை சிறிதாக ஆரம்பித்தான். ருசியாகவும் அதோடு கலப்படமில்லாமலும் இருந்த அவனின் “மங்கை மாங்கோ” ஜூஸ் விற்பனை மெதுவாக வளர்ந்து இப்பொழுது லாபகரமாக போய் கொண்டிருக்கிறது. ஊரில் உள்ள பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கும் வருமானத்துக்கு வழி செய்தான் காளை. முத்துக்காளை தற்பொழுது முதலாளி காளையாக உருவெடுத்திருந்தான். மங்கை இன்னும் அதே பள்ளியில் டீச்சர் வேலை செய்கிறாள். அதோடு ஆள் வைத்து இலவசமாக பெண்களுக்கான கராத்தே வகுப்பும், ஆங்கில வகுப்பும் நடத்தி வருகிறாள். எந்த ஊர் மக்கள் பஞ்சாயத்தில் நிற்க வைத்து அவர்களை அக்கு வேறாக ஆணி வேறாக அலசி காயப் போட்டார்களோ, அவர்களே இப்பொழுது காளையையும் மங்கையையும் மரியாதை கலந்த அன்புடன் பார்க்கிறார்கள்.

சிரித்த முகத்துடன் போஸ்டரில் இருந்த தன் மகளை வாஞ்சையுடன் பார்த்தார் அஜய்.

‘ரொம்ப சந்தோஷமா இருக்குடாம்மா! நாங்க குடுக்க முடியாத அன்பையும் பாசத்தையும் என் மருமகனும் அவங்க குடும்பமும் உனக்கு கொட்டிக் குடுத்துருக்காங்க. இதே மாதிரி என்னைக்கும் சிரிச்ச முகத்துடன் மருமகன் கூட அந்நியோன்யமா வாழனும்மா நீ’ என மனதில் நினைத்துக் கொண்டவர், மனைவியை அழைத்துக் கொண்டு டாக்சியில் ஏறினார்.

அவர்கள் டாக்சி காளையின் வீட்டை அடைந்த மறுநிமிடம் குடுகுடுவென ஓடி வந்தான் அவர்களின் பேரன் மயிலகாளை.

“பாத்திம்மா!” எனும் அவன் சத்தத்தில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்தார்கள்.

புன்னகையுடன் தன்னை நோக்கி ஓடி வரும் பேரனைத் தூக்கி கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார் அரசி.

“ஐ மிச் யூ பாத்திம்மா! ஐ மிச் யூ ஜோ மச்! குத்தி காளைக்கு என்ன வாங்கினு வந்தீங்க பாத்தீ! ஷோ மீ ஷோ மீ!” என பரபரத்தான் குட்டி.

அவனுக்காக வாங்கி வந்திருந்த விளையாட்டுப் பொருட்களை புன்னகையுடன் எடுத்துக் கொடுத்தார் அஜய்.

“ஹாய் தாத்தா! ஹவ் ஆர் யூ?” என அப்பொழுதுதான் அவர் இருப்பதையே கவனித்தவனாக கேட்டான் குழந்தை.

“உங்க பாட்டிய பார்த்துட்டா நான் பக்கத்துல இருக்கறதே உன் கண்ணுக்கு தெரியாதேடா செல்லக்குட்டி” என்றவர் பேரனைப் பார்த்து சிரித்தார்.

அவரின் சிரிப்பை புன்னகையுடன் பார்த்தார் அரசி. பேரனின் பாசம் அஜயிடம் இல்லாமல் தன்னிடம் குவிந்திருப்பதிலேயே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதே குட்டி, அஜயிடம் நெருக்கமாக இருந்திருந்தால் இன்னொரு பிரளயம் வெடித்திருக்கும். அது என்னவோ, மங்கையின் மனதில் மட்டுமே இருந்த கரைகாணாத தாய்ப்பாசம் அப்படியே அவள் மகனிடம் கடத்தப்பட்டிருந்தது. மகிழனுக்கு அரசி எப்பவுமே ஸ்பேஷல். ஆனால் அரசி ஒரேடியாக அவனிடம் ஒட்டி விட்டால் பின் அவனும் தனக்கே வேணும் என நின்று விடுவாளோ என பயந்து திருவிழா சமயம் மட்டுமே அரசியை அழைத்து வந்து இரண்டு நாள் தங்கிப் போவார் அஜய். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை போன் போட்டு பேரனிடம் பேச விடுவார். அதுவே பாட்டிக்கும் பேரனுக்கும் போதுமானதாக இருந்தது.

“வாங்க டீச்சரப்பா, வாங்க அத்தை” என சிரித்தமுகமாக வரவேற்றான் காளை. அவன் அருகே நின்றிருந்த மங்கை புன்னகையை மட்டும் கொடுத்தாள்.

உள்ளே நுழைந்த இருவரும் கை கால் கழுவி விட்டு முற்றத்தில் அமர்ந்தனர். காபி கலந்து கொண்டிருக்கும் காமாட்சியிடம் ஓடிய குட்டி,

“அப்பத்தா!” என அழைத்தான்.

“என்னடா ராசா?”

“பாத்திம்மா வந்துட்டாங்க! ரெண்டு நாளு நான் அவங்க கூட படுப்பேன். அப்பத்தா நோ கோபம்! சரியா?” என புன்னகை முகமாக கேட்டான்.

காமாட்சிக்கு சிரிப்பு வந்துவிட்டது. காளை மங்கையுடன் படுக்கப் போகும் சின்னவன், நடு இரவில் தட்டுத்தடுமாறி வந்து காமாட்சியிடம் படுத்துக் கொள்வான். அவனுக்காகவே பாயில் படுப்பதை நிறுத்தி விட்டு மெத்தையில் தூங்குகிறார் இப்பொழுதெல்லாம்.

“என் பேரன் வாசனை இல்லாம நான் எப்படி தூங்குவேன் ராசா!” என சின்னவனை வம்பிழுத்தார் காமாட்சி.

நெற்றி சுருக்கி யோசித்தவன்,

“நான் போட்டிருக்க சட்டை கல்ட்டி தரேன், நீங்க அத வாசம் புடிச்சு தூங்குவீங்களாம்” என ஒரு பதிலையும் தந்தான் அவன்.

காமாட்சிக்கு குபீரென சிரிப்பு வந்துவிட்டது. கையில் இருந்த வேலையை விட்டுவிட்டு பேரனைத் தூக்கி உச்சி முகந்தார் அவர். தன் மகனுக்கு எப்பொழுதடா திருமணம் நடக்கும் என ஏங்கி இருந்தவராயிற்றே! அருமையான மருமகளையும், துருதுருவென பேரனையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லியவாறே அவன் கன்னத்தில் முத்தமிட்டார் காமாட்சி.

பேரன் இறங்கி வெளிடே ஓடி விட, காமாட்சியின் அருகே வந்து நின்றாள் மங்கை.

“ஹ்க்கும்!”

“என்னத்தா?”

“எனக்கு?”

“காபியா? ஒனக்கு ஒம் புருஷன் போட்டாத்தானே தொண்டையில இறங்கும்!”

“காபி வேணா! அதோட ஸ்வீட்டா ஒரு முத்தம் குடுங்க ஆத்தா! அவனுக்கு மட்டும் அள்ளிக் குடுக்கறீங்க!” என பொய்யாய் முறைத்தாள் மங்கை.

அந்த வீட்டில் குழந்தையாக மகிழன் இருந்தாலும், இன்னும் குழந்தையைப் போல நடந்து கொள்வது மங்கைதான். சொந்தமாய் சாப்பிடும் மகிழன் கூட முதல் வாய் தன் அன்னைக்கு ஊட்டாமல் சாப்பிடமாட்டான். அவன் அப்பா எப்படி மங்கையை தாங்குகிராறோ அதே போலவே இவனும் இப்பொழுது இருந்தே தன் அம்மாவை தாங்க ஆரம்பித்து விட்டான்.

இயற்கையாய் பிரசவம் நடக்கும் என டாக்டர்கள் சொல்லியிருக்க, கடைசி நேரத்தில் எடை அதிகமாக இருந்த மகிழனை வெளியே தள்ள முடியாமல் தவித்துப் போய் விட்டாள் மங்கை. நார்மல் டெலிவரிக்கு முயற்சித்த பாதி வழியில் ஆபரேஷன் செய்ய முடியாத காரணத்தால் வேகியூம் வைத்து குழந்தையை வெளியே எடுத்திருந்தாலும் பாதி உயிர் போய் விட்டது மங்கைக்கு. அதனாலேயே அவள் மேல் இன்னும் இன்னும் வீட்டில் இருந்த அனைவருக்கும் பாசம் சுரந்தது. ஊன் உறக்கம் இன்றி ஹாஸ்பிட்டலே கதியாய் கிடந்த காளைதான் மங்கைக்கு பதில் போராடி பிள்ளையைப் பெற்றதாக காமாட்சி இன்னும் கூட அவனை கிண்டல் செய்வார். மனைவி பட்டப் பாட்டை பார்த்தவன், அவள் எவ்வளவு மிரட்டியும், கெஞ்சியும், கொஞ்சியும் கூட இரண்டாவது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.

தன் முன்னே நின்றிருக்கும் மருமகளை வாஞ்சையாக பார்த்தார் காமாட்சி. கொஞ்சமாக எடை கூடி, கோயிலுக்குப் போவதற்காக அரக்கு வர்ண சேலை கட்டி, அதற்கேற்ற நகைகள் பூண்டு சர்வ லட்சணமாக நின்றிருந்தவளைப் பார்த்து மகனைப் போலவே மயங்கி நின்றார். சட்டென குனிந்து மிளகாயை அள்ளி, அதில் உப்பு சேர்த்து மருமகள் முகத்துக்கு நேராக மூன்று சுற்று சுற்றி வெளியே வைத்திருக்கும் விறகு அடுப்பில் போட்டு விட்டு வந்தார் காமாட்சி. புன்னகையுடன் அவர் செயலையே பார்த்தப்படி நின்றாள் மங்கை.

“ஊரு கண்ண விட உறவு கண்ணு தான் பொல்லாத கண்ணுத்தா! என் கண்ணே என் மருமக மேல பட்டுருச்சு! அதான் திருஷ்டி சுத்திப் போட்டேன்!” என்றவர் அவள் முகம் வழித்து நெட்டி முறித்து கன்னத்தில் பாசமாக முத்தமிட்டார். இவள் மட்டும் சும்மா இருப்பாளா! தாயாய் பாசம் காட்டும் தன் ஆத்தாவுக்கு கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தாள்.  

“போத்தா! போய் அம்மா அப்பாக்கு காபி தண்ணி குடுத்துட்டு வா! இங்கனவே நாம ரெண்டு பேரும் இம்புட்டு நேரம் நின்னா என்னா நெனைப்பாங்க!”

“அதெல்லாம் ஒன்னும் நெனைக்க மாட்டோம்! மங்கை இங்க சௌக்கியமா இருக்கான்னு சந்தோஷந்தான் படுவோம்” என சொல்லியபடியே வந்தார் அஜய். காலை உணவு உண்ண அவர்களை உள்ளே அழைத்து வந்திருந்தான் காளை.

இப்பொழுது வீட்டில் டைனிங் டேபிள், ஏசி, கிரைண்டர் என எல்லா அத்தியாவசிய பொருட்களும் இருக்கின்றன. ஆனாலும் வீட்டு மக்கள் இன்னும் தரையில் தான் அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த வீட்டையும் பழமை மாறாமல் இன்னும் பெரிதாக கட்டி இருந்தான் காளை.

அஜய் பின்னாலேயே வந்த அரசியும் மாமியார் மருமகளின் அந்நியோன்யத்தைப் பார்த்தப்படி தான் வந்தார். அடிக்கடி காளை சொல்லும் ‘என் பொண்டாட்டித்தான் எனக்கு மட்டும்தான்’ மந்திரம் அரசியிடம் நன்றாகவே வேலை செய்தது. இப்பொழுதெல்லாம் நான்கு வார்த்தை பயம் இல்லாமல் மகளுடன் பேசுகிறார் அவர். அவளும் முகம் திருப்பாமல் பேசுவாள்.

அவர்களுடனே வந்த காளை,

“டீச்சர், நான் கோயிலுக்குக் கிளம்பனும்! எல்லோரும் சீக்கிரம் கிளம்பி வாங்க! கார் இங்கதான் நிக்கிது. நீங்களே ஓட்டிட்டு வந்திடுங்க, நான் பைக்ல போறேன்! அப்பா தோப்புல இருந்து அப்படியே கோயிலுக்கு வந்திடுவாரு” என சொல்லியவனை கண்ணில் லேசாக நீர் துளிர்க்கப் பார்த்தாள் மங்கை.

இந்த வருடமும் காளை தீ மிதிக்கிறான். மங்கை பிரசவத்தில் போராடிய தினம், இனி ஒவ்வொரு வருடமும் தீ மிதிப்பதாக வேண்டி இருந்தான் அவன். ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்வு என்றாலும் மங்கைக்கு தாங்க முடிவதில்லை. எவ்வளவு அடக்கினாலும், தனக்காக எந்த கஸ்டத்தையும் இஸ்டமாய் ஏற்கும் கணவனின் அன்பில் கண் கலங்கி விடும் அவளுக்கு.

“கண்ணைத் துடைத்தா! ஒவ்வொரு வருஷமும் உன்னோட இதே ரோதனையா போச்சு! சந்தோஷமா அனுப்பி வை!” என கடிந்துக் கொண்டார் காமாட்சி.

“அம்மா, நோ க்ரை! அப்பா வில் பீ ஆல்ரைட்” என மங்கையின் காலை கட்டிக் கொண்டான் மகிழன்.

மகனைத் தூக்கிக் கொண்டவள், முகத்தில் புன்னகையைப் பூசிக் கொண்டாள். தன் பிஞ்சு விரல்களால் மங்கையின் கண்ணீரைத் துடைத்து விட்டான் மகிழன். நேர்த்திக் கடன் செலுத்தும் முன் மனைவியை அணைத்து சமாதானப் படுத்த முடியாமல் கலங்கி நின்ற காளை, மகனின் செயலில் உச்சிக் குளிர்ந்துப் போனான். உருவத்தில் காளையைக் கொண்டிருந்த மகிழன், உள்ளத்திலும் அவனையே உரித்து வைத்திருந்தான். மகன் மீது, தனக்குக் கிடைக்காத பாசத்தை எல்லாம் கொட்டும் மனைவிக்கு அந்த மகனை வைத்தே பாசத்தைப் பொழிய பழக்கி இருந்தான் காளை. மொத்தத்தில் அந்த வீட்டின் உயிர்ப்பே தவமங்கைதான்.

தீமிதி எந்த வித தடங்கலும் இல்லாமல் நடந்தேறியது. அன்றே காளையின் சார்பாக தடபுடலாக அன்னதானம் நடந்தது. வீட்டு அங்கத்தினரும் காளையின் நண்பர்களும் பந்தி பரிமாறி திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு வயிறார உணவளித்து அனுப்பினார்கள்.

பந்தி பரிமாறும் இடத்தின் அருகே வந்து நின்றது ஒரு கார். புன்னகையுடன் மங்கை அதனை நோக்கி போக, காளையும் அவள் பின்னோடேயே வந்தான். காரிலிருந்து இறங்கினார்கள் கதிர்வேலனின் குடும்பத்தினர். கதிரின் இரு குழந்தை செல்வங்களும் மங்கையை நோக்கி ஓடி வர, சண்மு ஓடிப் போய் காளையின் கையைப் பிடித்துக் கொண்டாள். பார்வதியும் பரமுவும் திருப்பதிக்கு சென்றிருக்கவும் இவர்கள் மட்டும் வந்திருந்தார்கள். (எல்லாரையும் கூட்டிட்டு வர முடியாதுப்பா! அப்பூறம் கதை இழுத்துகிட்டே போகும்! சோ பாரு அண்ட் பரமுவ பேக் பண்ணியாச்சு)

“வாம்மா தங்கச்சி! சுகமா இருக்கியா?” என அன்பொழுக கேட்டான் காளை.

மங்கையைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் அவனுக்கு தங்கச்சி தான். தங்கை சென்டிமெண்டில் டீ.ஆருக்குப் பின் காளைதான் டாப்பில் நிற்கிறான்.

“மாங்கா தோப்பும், பூந்தோட்டமும் எப்படி பாச மழையைப் பொழியுது பாரேன்” என மங்கையிடம் கண்ணைக் காட்டினான் கதிர்.

மென்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தாள் அவள்.

சில வருடங்களுக்கு முன் மங்கை வாயும் வயிறுமாக இருக்கிறாள் என கேள்விப்பட்டு பார்வதி  பரமுவுடன் இவர்களைப் பார்க்க வந்திருந்தார்கள் சண்முவும் கதிரும். அப்பொழுதிருந்தே மண், செடி, கொடி, பூச்சிப்பொட்டு, யூரியா என பாசப்பயிரை வளர்த்திருந்தார்கள் காளையும் சண்முவும்.

மங்கையின் முன் கதிரை கண்டுக் கொள்ளாத காளை, தனியே மாட்டியவனை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“நீங்க என் டீச்சர வேணான்னு சொல்லவும் தான் எனக்கு இவ்வளவு பெரிய பொக்கிஷம் கிடைச்சது! ரொம்ப நன்றிங்க போலிஸ்கார்” என கொண்டாடி விட்டான் காளை.  

“ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருத்தன் கட்ட முடியாதுன்னு சொல்வாங்க! தவா உங்களுக்குத்தான்னு கடவுள் முடிச்சுப் போட்டிருக்கான். தவாவ நெனைச்சு எனக்கு எப்பவுமே ரொம்ப கில்ட்டியா இருக்கும். ஆரம்பத்துலயே கல்யாணத்துக்கு முடியவே முடியாதுன்னு சொல்லிருக்கனும் நான். ஆனா அம்மா மிரட்டனாங்க, அப்பா மிரட்டனாங்கன்னு ஒத்துக்கிட்டேன். சண்முவோட விஷயம் அறிஞ்சு தவா விட்டுக் குடுத்துட்டாலும், அவ வாழ்க்கையில விளையாடிட்டோமோன்னு ரொம்ப கவலையா இருந்தது. நாங்க மகிழ்ச்சியா வாழ்ந்தாலும் நெஞ்சோரமா ஒரு முள்ளு குத்திட்டே இருக்கற உணர்வு. எனக்கு மட்டும் இல்ல சண்முவுக்கும் அப்படித்தான். தவாவுக்கு நாங்களே நல்ல மாப்பிள்ளையா பார்க்கனும்னு நெனைச்சோம். ஆனா அவளே உங்கள பார்த்துட்டா! மலர்ந்த முகமா தவாவ பார்க்கிற இந்த நொடி என்னோட குற்ற உணர்ச்சியெல்லாம் அப்படியே காத்துல கரைஞ்சி போகிற ஃபீல்! தவாவ தங்கத்தட்டுல தாங்கற உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லனும்!”

“ரெண்டு பேரும் மாத்தி மாத்தி நன்றி சொல்லிக்கிட்டது போதும்! உள்ள வாங்க” என அவர்கள் பேசியதை இவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்த மங்கை அழைத்தாள். அன்றிலிருந்து இரு பக்கமும் நெருக்கம் வந்திருந்தது. அடிக்கடி போனில் பேசிக் கொள்வதோடு, நேரிலும் சந்தித்துக் கொள்வார்கள் இரு ஜோடிகளும்.

திருவிழாவுக்கு வந்திருந்த கதிர் குடும்பத்தை உணவுண்ண அழைத்துப் போனார்கள் மங்கையும் காளையும். குழந்தைகள் மூவரும் எப்பொழுதும் போல ஒட்டிக் கொண்டார்கள். அன்னதானம் முடிந்து குடும்பமாக திருவிழா கடைகளை சுற்றி வந்தார்கள் மங்கை, சண்மு ஜோடி! பெரியவர்கள் ஓய்வெடுக்க வீட்டுக்கு சென்று விட்டனர். குழந்தைகளை ராட்டினம் ஏற்றி விளையாட விட்டார்கள். குச்சி ஐஸ் வாங்கி அனைவரும் சுவைத்தார்கள். கம்மல், வளையல் கடைகளில் கலர் கலராக அக்சேசரிஸ் வாங்கிக் கொண்டார்கள். ஆண்கள் இருவரும் பொம்மைத் துப்பாக்கியில் பலூனை சுடும் இடத்திற்கு வந்து நின்றார்கள்.

கதிரின் காதில் குசுகுசுவென,

“ஒன்ரை சார், கரேக்டா சுடுவீங்களா? லெப்டுக்கு குறி வச்சு ரைட்டுல சுட்டுட மாட்டீங்கல்ல? உங்கள நம்பி இந்த வெளாட்டுக்கு வரலாமா?” என நக்கலாக கேட்டாள் சண்மு.

“போடி சொறி சம்மு! கரேக்டா சுடாமத்தான் எனக்கு என்கவுண்டர் வேலன்னு பட்டம் குடுத்துருக்காங்களா?” என கேட்டான்.

“என்கவுண்டர் வேலனா? என் காதுல என்கவுண்டர் ஏகாம்பரம்னே கேக்குதே! அது என்னமோ நானும் போலிஸ்தான்னு நீங்கதான் நெஞ்ச நிமித்திக்கிட்டுத் திரியறீங்க! ஊர் மக்கள் எல்லாம் உங்கள சிரிப்பு போலிசாவே பார்க்கறாங்க! மை மானம் மைலாப்பூர் கோயிங் யூ க்நோ! வாட் எ பப்பி ஷேம்!”

“அடி போடி! தில்லு போலிசோ தில்லாலங்கடி போலிசோ, உன்னைப் பொறுத்த வரை நான் ஜொள்ளு போலிசுடி சம்மு”

“ஆமா ஆமா வழியுது! தொடைச்சிக்கிட்டு சுடற வேலையைப் பாருங்க போலிஸ்க்கார்”

மாட்டி இருந்த எல்லா பலூனையும் சுட்டு கரடி பொம்மையை ஜெயித்து தன் காதல் மனைவிக்கு ஆசையாய் கொடுத்தான் கதிர். முகத்தில் சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்திருந்தார்கள் மங்கையும் காளையும்.

அன்றிரவு அசதியாய் அனைவரும் உறங்கி விட, தனதருகே உறங்கும் கணவனையேப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் மங்கை.

“படுங்க டீச்சர்!”

“நீங்க தூங்கலியா?”

“தூங்கிட்டேன்! நீங்க எழுந்து உட்கார்ந்ததும் முழிச்சிக்கிட்டேன்.”

அப்பொழுது இருந்தே இப்படித்தானே காளை! மங்கை மூன்று முறை பாத்ரூம் எழுந்து போகும் வேளையெல்லாம் முழித்து முழித்து அல்லவா தூங்குவான். இப்பொழுது அவளுக்காக ரூமுக்குள்ளேயே அட்டாச் பாத்ரூம் கட்டி இருந்தாலும், இன்னும் கூட அவள் அசைந்தால் முழித்து விடுவான் அவன்.

“சில பேர் சொல்வாங்க, பிறந்த வீட்டுல ஒரு பொண்ணு சொகுசா இருந்துட்டா புகுந்த வீடுட்ல ரொம்ப கஸ்டப்படுவாளாம். பிறந்த வீட்டுல கஸ்டப்பட்டா புகுந்த வீட்டுல சொகுசா இருப்பாளாம். மத்தவங்க விஷயத்துல இது உண்மையா இல்லையான்னு தெரியாது. ஆனா என் விஷயத்துல இது நூத்துக்கு நூறு உண்மை காளை. உங்களுக்கு மனைவியா ஆனதும் தான் என் வாழ்க்கையே ஒளி பெற்றிருக்கு! இருட்டுல வாழ்ந்த எனக்கு நீங்க விளக்கு ஏத்தி வைக்கல, நீங்களே விளக்கா மாறிட்டீங்க! ஐ லவ் யூ சோ சோ சோ சோ மச் காளை!”

புன்னகையுடன் தன் மனைவியை அணைத்துத் தன்னருகே படுக்க வைத்துக் கொண்டான் காளை.

“நான் விளக்குன்னா, இந்த விளக்கு எரிய தேவையான கரண்ட்டே நீங்கதான் டீச்சர். நீங்க இல்லாம எனக்கு ஒளி ஏது? மங்கை இல்லாமல் காளைக்கு வாழ்வென்பதேது?” என உணர்ச்சிகரமாக பேசினான் காளை.

அவன் நெஞ்சில் படுத்திருந்தவள், நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

“அப்போ நான் இல்லாம நீங்க இல்ல?”

“நிச்சயமா இல்ல டீச்சர்!”

“மங்கைதான் காளைக்கு எல்லாமே?”

“சத்தியமா டீச்சர்!”

“அப்போ மங்கை சொன்ன சொல் தான் காளைக்கு வேதவாக்கு?”

இந்த இடத்தில் லேசாக ஜெர்க்கானான் காளை. இத்தனை வருட தாம்பத்தியத்தில் மங்கையின் தில்லாலங்கடித்தனத்தை கண்டுப்பிடிக்கும் அளவுக்கு அவனுக்கும் மூளை வளர்ந்திருந்தது.

“ரெண்டாவது பிள்ளை வேணும்னு கேக்காத வரைக்கும் என் டீச்சர் சொல்லற எல்லாமே எனக்கு வேதவாக்குத்தான்”

சட்டென கோபமாக நகர்ந்துப் படுத்துக் கொண்டாள் மங்கை.

“எனக்கு மகன் இருக்கான்! மகளா என் அம்மும்மா இருக்கா! அது போதுமே டீச்சர்!” என தள்ளிப் படுத்திருந்தவளை இவனே நெருங்கிப் போய் அணைத்துக் கொண்டான். அவனின் கெஞ்சலிலும் கொஞ்சலிலும் டீச்சராக இருந்தவள் எலிசாக மாறிப்போனாள்.

இரண்டு பிள்ளை வேண்டும் என பார்த்த அன்றே கேட்டவன், அவள் நலத்துக்காக ஒற்றை பிள்ளை போதும் என பிடிவாதம் பிடிப்பதில் கூட அவனின் அன்பு ஒன்றே மங்கையின் கண்ணுக்குத் தெரிந்தது. இந்த இரண்டாம் பிள்ளை போராட்டம் மங்கைக்கு வெற்றியாய் முடியுமா அல்லது காளைக்கு வெற்றியாய் முடியுமா என அவர்களே முடிவெடுத்துக் கொள்ளட்டும். இதில் வெற்றிகரமாக நாம் பின்வாங்கிக் கொள்வோம்.

தீமிதி முடிந்த இரண்டாவது நாள் அஜய் குடும்பமும் கதிர் குடும்பமும் காலையிலேயே தத்தம் ஊருக்குக் கிளம்பி சென்று விட்டார்கள். அன்றிரவு கோலாகலமாக தொடங்கியது ஊர் மக்கள் ஆவலாக எதிர்ப்பார்த்திருந்த கலைநிகழ்ச்சி. எப்பொழுதும் போல மங்கை பள்ளி மாணவர்களின் மேடை நாடகம், ஆட்டம் பாட்டம் என களைக்கட்டியது மேடை.

இந்த வருடமும் மேடை ஏறினான் காளை. வேட்டியின் நுணியை ஒரு கையிலும் மற்றொரு கையில் மைக்கோடும் நின்றிருந்தவனைப் பார்த்து விசில் பறந்தது.

“ஏறிட்டான்டா மாங்காத்தோப்பு ஓனரு! ஒவ்வொரு வருஷம் மாதிரியும் இந்த வருஷமும் மாங்கா, மாங்குயிலுன்னு பாடி நம்ம காதை பஞ்சர் பண்ண போறான் டோய்!” என சத்தமாக குரல் கொடுத்தான் பக்கோடா பாண்டியன்.

“எங்க காளை மாங்கான்னுதான்யா பாடுவான்! உன்னை மாதிரி தேங்கா மண்டையனுக்காக தேங்கான்னா பாடுவான்?” என குரல் கொடுத்தான் செவல.

“அட விடு மாப்பிள்ளை! யாருக்கு என்ன தெரியுமோ அதப்பத்திதானே பாட முடியும்! மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டுன்னு பாடிட்டுப் போறான் வுடு” என மாடசாமி நக்கலாக சவுண்ட் விட்டான்.

“ஆமா டோய்! எங்க காளைக்கு மாங்கா பத்தி மட்டும்தான் தெரியும்! ஆனா இந்த மாடசாமிக்கு கொரோனா வராம இருக்க, மூக்குல நாலு நாளு தோய்க்காத கோமணத்தக் கட்டிக்கனும்ங்கற வரைக்கும் தெரியும் டோய்! அவரு நம்ம ஊரு ஆல் இன் ஆல் அழகு ராஜா டோய்” என கூட்டத்தில் இன்னொரு குரல் கேட்டது. அது வேறு யாரும் இல்லை நம் ராஜியின் கணவன் ராஜாமணிதான். மங்கையின் குணத்தைப் பார்த்துப் படித்து இப்பொழுது காளையிடம் அனுசரணையாய் நெருங்கி இருந்தான் அவன். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜி களுக்கென சிரித்து விட்டாள்.

இப்படியே கூட்டம் சலசலக்க, காமாட்சி மற்றும் மச்சக்காளை அருகில் அமர்ந்திருந்த மங்கை, மடியில் படுத்திருக்கும் மகனின் தலையை வருடியபடியே புன்னகை முகத்துடன் வைத்தக்கண் வாங்காமல் தன் கணவனையேப் பார்த்திருந்தாள். அவனும் மேடையில் இருந்து அவளைத் தான் காதலாய் பார்த்திருந்தான்.

“டேய் புல்லு! இங்க இவ்ளோ பெரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு, நீ காதல் லுக் விட்டுக்கிட்டு இருக்கியா? ஊருல ஒவ்வொரு புருஷனும் கல்யாணம் ஆகி ஒத்த வருஷத்துலே அன்பே ஆருயிரேன்னு கூப்பிட்ட பொண்டாட்டிய பிசாசே பில்லிசூனியமேன்னு கூப்ட ஆரம்பிச்சுடறான்! நீ இன்னும் அதே அன்பே ஆருயிரே கட்டத்துலயே இருக்கடா! திருந்துடா டேய்” என செவல மேடை ஏறி வந்து அவன் காதில் முணுமுணுத்தான்.

“போடா என் வெண்ட்ரு! எங்களுக்கு அறுபதாம் கல்யாணம் வந்தாலும் என் டீச்சர நான் அன்பே ஆருயிரே கட்டதுல தான் வச்சிருப்பேன்! ஏன்னா டீச்சர் என் வைப்பு(wife) மட்டும் இல்லடா என் லைப்பு(life)!”

மைக்கை மூடாமல் அவன் பேசியது ஊருக்கே கேட்க,

“டீச்சர் களையை இன்னும் விடாம வச்சிருக்காங்க டோய்!” என கூட்டத்தில் இருந்து சத்தம் வந்தது.

கொல்லென அங்கே சிரிப்பலை பரவ, வெட்கத்தில் முகம் சிவந்தாலும் தன்னவனின் மேல் இருந்த பார்வையை அகற்றவில்லை மங்கை.

இசை ஆரம்பிக்க,

“மாம்பழத் தோட்டம் மல்லிகை கூட்டம்

மணக்க வரும் மாலைப் பொழுதோடு

மருவியணைக்கும் மயக்கம் பிறக்கும்

மலர்ந்து வரும் ஆசை விழியோடு” என காளை பாட

அடுத்த வரியை இசைக்குழுவின் பெண் பாடகி பாடினாலும், கீழே அமர்ந்திருந்த மங்கையும் மன்னவனைப் பார்த்து பாடல் வரியை மெல்ல வாயசைத்துப் பாடினாள்.

“மன்மதன் வந்தான் தேரோடு இங்கே

காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட் பட்”

கோரசாக கீழே அமர்ந்திருந்த மக்கள் எல்லோரும் இவர்கள் இருவரின் ரவுசு தாங்காமல்,

“அம்மா அம்மம்மா அம்மா அம்மம்மா” என பாடலை முடித்து வைத்தனர்.

பாடல் முடியும் வரை ஒருவர் பார்வை இன்னொருவரை விட்டு விலகவில்லை. பாடி முடித்தவன் மங்கையின் அருகே வந்து அமர்ந்து, தூங்கி இருந்த மகனைத் தன் ஒரு பக்க தோளில் போட்டுக் கொண்டான். மீதி நிகழ்ச்சியை அவன் இன்னொரு தோளில் சாய்ந்தவாறே பார்த்தாள் தவமங்கை.

“காளை”

“ஹ்ம்ம் டீச்சர்”

“ம்மா ம்ம்ம்மாஆஆ ம்ம்மா”

“நானும் ம்மா ம்ம்ம்மாஆஆ ம்ம்மா டீச்சர்” என சொன்னவன் அவள் தோளை தன் கரம் கொண்டு இறுக்கிக் கொண்டான்.

 

மங்கையவளுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த மாந்தோப்பு ஓனரின் மாபெரும் காதல் காவியம் இத்துடன் நிறைவு பெறுகிறது……….    

 

(முற்றும்)

   

(இந்தக் கதையில என் கூட பயணிச்ச அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. லைக்ஸ், கமேண்ட், மீம்ஸ், பாட்டுன்னு காளைய கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. பல தடங்கள், பல சோதனைகள் இந்தக் கதைய எழுதிய டைம்ல! அத்தனை கஸ்டத்துலயும் என் கூட இருந்து எனக்கு உற்சாகமூட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி டியர்ஸ். அடுத்து மற்றுமொரு கதையுடன் கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி வணக்கம்.

வநிஷா)