O Crazy Minnal(16)

FB_IMG_1651883546714-114588ec

16

 அழகும் தமிழும் கொஞ்சி விளையாடும் ஊர், திருநெல்வேலி. மாஞ்சோலையிலிருந்து மணிமுத்தாறுவரை தன்னுள் அடக்கம் என்ற தோரணையுடன் இருக்கும் அந்த ஊரின் கம்பீரத்திற்குச் சற்றும் சளைக்காமல் நின்று கொண்டிருந்தது அந்த “பூஞ்சோலை”.

பூஞ்சோலை, சோலை வீடு என்றும், பெரிய வீடு என்றும் பலரால் அழைக்கப்படும் ஒரு அன்பாலயம்! 

ஆம் அன்பாலையமேதான்! யதீந்திரன் பானுமதியம்மாளின் அன்பால் உருவான குடும்பம். அந்த ஊரின் பெரியக் குடும்பம். வசதியில் மட்டுமில்லாமல் அளவிலும் பெரியதே! கூட்டுக் குடும்பம் அவர்களது.

 

அவர்களது தொழில் அந்த காலத்திலேயே  நல்ல பொருள் ஈட்டி தந்ததால் பிற மாவட்டங்களிலும் அவர்களது இந்திரன் & கோ பிரபலமாகிக் கொண்டிருந்த காலம், காலகாலமாக விவசாயத்தைப் போற்றி வந்த குடும்பம் அன்று அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியிலிருந்தது.

 

யதீந்திரனின்  மூத்த மகனான தேவேந்திரன்  பொறுப்பேற்று  நடத்திக் கொண்டிருக்கத் தம்பிகளான மஹேந்திரனும், விஜயேந்திரனும் அண்ணனுக்கு உறுதுணையாக நின்றனர் என்றால் அவர்களது மனைவிமார்கள் அந்த குடும்பத்தின் சீராக நடத்திச் சென்றனர், அவ்வளவு ஒற்றுமை!

ஒருவர்மேல் மற்றவர் கொண்டிருந்த அன்பு அவர்களைக் கட்டி வைத்திருந்தது என்பதுதான் உண்மை.

 

அப்படிப்பட்ட அன்பையும் உடைத்தெறிந்தது ஒரு சம்பவம்! ஆம், எல்லாம் மஹேந்திரனின் மகனான ஜிதேந்திரன் காதலென்று வந்து நிற்கும்வரைதான்.

அவர்கள் காதலுக்கு எதிரானவர்கள் அல்ல! ஆனால் ஏனோ ஜிதேந்திரனின் காதலை மட்டும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

 

அவர் லீலாமதியின் கம்பீரத்தில் விழ லீலாவோ இவரின் தூய அன்பினில் விழுந்திருந்தார். சிறுவயதிலிருந்து ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு, ஜிதேந்திரனின் கூட்டுக் குடும்பத்தில் ஒருத்தியாகப் போகிறோம், என்னும்போதே மனதுக்குள் சாரலடித்தது!

 

பாவம் அவள் ஏங்கியது உறவுக்காக, அது இன்று இவ்வளவு பெரியளவில் கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் தரையில் கால் பாவவில்லை.

“ஹே! பொருமையா லீலா..” என்றவனிடம்கூட

 

“ஏன் ஜிதேன்.. ஒருவேளை இவ்வளவு பெரிய குடும்பத்த குடுக்கறதுக்காகத்தான் கடவுள் சின்ன வயசிலேயே என்ன தனியா விட்டாரோ?” என்றவளின் கண்களோரம் மின்னியது!

 

“ஹே.. அப்படியெல்லாம் இல்லடா” என்றவர் லேசாக அணைத்து விடுவித்தவர்.

 

“இனிமே இப்படிலாம் பேசக்கூடாது!” என்று அன்பான கட்டளையுடனே முடிப்பார்.

அப்படியிருக்கையில் இங்கே அனைவரும் முதலில் திகைத்து பின் அவர்களது காதலை மறுக்க அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை!

ஆனால் அந்த நிலையிலும் அண்ணனுக்காக பேசி  வசவுகளை தன் பக்கம் திருப்பி கொண்டது வளர்மதியே!

 

“ஏன் எல்லாரும் அண்ணன திட்டுதீய அப்படி என்ன பண்ணிருச்சு?” என்று தன் பெரியப்பாவிடம் கேட்க அவருக்கு முந்திக் கொண்டு அவள் கையை பற்றி உலுக்கி இருந்தார் செல்வி

 

“ஏட்டி என்ன பேச்சு பேசுத பெரியப்பா முன்னாடியே..”

 

“சித்தி அவள விடுங்க!” என்ற ஜிதேந்திரன் தன் அன்னையை நோக்க  கோமதியோ  ஒரு ஓரத்தில் கண்களில் நீர் திரள நின்று கொண்டிருந்தார்.

அவருக்கு மகனா குடும்பமா? என்ற போராட்டம் அதை உணர்ந்தவர் போல நேராகத் தாத்தாவிடம் சென்ற ஜிதேந்திரன் அவர் காலடியில் அமர்ந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டு மெல்லிய குரலில் அவரிடம்

 

“தாத்தா.. நீயாவது என்ன நம்பு தாத்தா..  அவ ரொம்ப நல்ல பொண்ணு.  அப்பாம்மா கிடையாது உங்களலாம் பாக்கவே அவ்ளோ ஆசையா வந்தா,  என்னைய நம்பி வந்துருக்கா தாத்தா..” என்க

அவர் தலையைத் தடவிய யதீந்திரனோ “இந்தப் புள்ள நமக்கு வேண்டா கண்ணு” என்று அதிலேயே நிற்க வெறுத்து விட்டது அவருக்கு. அவர் சத்தியமாக இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன் வேண்டாம் என்கிறார்கள்… என்று புரியாமல் குழம்பி நின்றவரிடம்  எல்லோரும் வேண்டமென்றனரே தவிர ஏன் என்று சொல்லவில்லை. தலையே வெடித்து விடும்போல் இருக்க 

 

“அய்யோ! வேணாம் வேணாங்கரீங்களே ஏன் வேணாம்?” என்று கத்திவிட்டார் ஜிதேந்திரன். முதல் முறை ஜிதேந்திரன் கத்தியதைக் கண்ட லீலா முதலில் அதிர்ந்து பின் அவரிடம் வந்தவர் அவர் கையை தடவிக் கொடுக்க, ஏனோ அந்த நேரத்திலும் அவருக்கு அது இனிமையாகத்தான் இருத்தது. அவள் கண்களில் கொஞ்சமும் வெறுப்பில்லை. தன்னை வேண்டாமென்று தன் முன்னிலையிலேயே சொல்கிறார்களே என்ற கோபமில்லை, மாறாக ஏன்? என்ற கேள்வி மட்டுமே.

இம்முறை கோமதியின் முகத்தில் சற்று நிம்மதி, லீலாவின் மேல் வந்த நம்பிக்கை போலும்.

நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு வந்தது மஹேந்திரனின் குரல்!

 

“ஊர்பேர் தெரியாதவளை நம்ம வீட்டு மருமகளா எத்துக்க முடியாது!”

அவரது கேள்வியில் சட்டென லீலாவைப் பார்க்க அவள் கண்களிலோ அடிவாங்கிய உணர்வு!

 

மறுவார்த்தை பேசவில்லை அவர் அப்படியே லீலாவின் கையை பற்றிக் கொண்டு சிலையென உறைந்து நின்றவளை வெளியே அழைத்துச் சென்றார் மறந்தும்கூட யாருடைய முகத்தையும் பார்க்கவில்லை!

தன்னை நம்பி வந்தவள் என்ற பின்னும் எப்படி இவர்களால் காயப்படுத்த முடிந்தது? என்று கேள்வி ஒரு புறமும், தான் பெருமைப் பட்ட குடும்பமா இன்று ஒருத்தியின் மனதை இப்படி அடித்து நொறுக்கியது? என்ற வருத்தம் மறுபுறமுமாக வேதனையில் இருக்க லீலாயதியோ இந்த தாக்குதலில் பேச்சற்றவளாகிப் போனாள். அவள் என்ன செய்தாள்? இதில் அவள் தவறென்ன? அவள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? தன்னை பற்றி ஒன்றும் தெரியாமல் இந்த ஒன்றை மட்டும் வைத்து அவர்கள் ஏன் மறுக்கிறார்கள்? மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் குத்தீட்டியாய் நிற்க எங்கே ஜிதேந்திரன் வருந்துவாரோ என்று மௌனியாகி இருந்தாள்.

அவள் பேச்சற்று நிற்க முதலில் சுதாரித்துக் கொண்ட ஜிதேந்திரனோ தன் வருத்தங்களனைத்தையும் ஒதுக்கியவராக, அவளை தோளோடு சேர்த்தணைத்து நெற்றியில் இதழ் பதித்தவர், அவளது குளமாகியிருந்த கண்களைப் பார்த்து  கண் சிமிட்டினார்.

உனக்கு நான் எனக்கு நீ! என்பதை அவர் வார்த்தையால் சொல்லாவிடினும் செயல்களால் காட்டினார்.

அன்று பற்றிய கையை இன்றும் விடாமல் அவளை தன் கண்களுக்குள் வைத்துப் பாதுகாத்தார் என்றுதான்  சொல்ல வேண்டும். அவளுக்கு எல்லாமுமாக அவரும் அவருக்கு உலகமாக அவளும் மாறியிருந்தனர்.

 

முதலில் அந்த ஊரைவிட்டே வந்தவர் பின்னாளில் வேறு வழியின்றி அந்த மாநிலத்தை விட்டே வெளியேறியிருந்தார்.

**********

“இப்போ சொல்லு யாழி!  மாமாவ பார்த்த அன்னைக்கே எனக்கு என்னவோ வித்யாசமா பட்டுச்சு, அன்னைக்கே பழைய ஃபேமிலி ஃபோட்டோஸெல்லாம் எடுத்து பார்த்தேன்..” என்று இழுத்தவனை அவள் கேள்வியாக நோக்க அவனே தொடர்ந்தான்

 

“ஆனா.. உண்மை தெரிஞ்சி என்கிட்ட பேசாம போயிட்டா??? எனக்கு குடும்பம் ஒன்னு சேரனும் யாழி”என்க ரேவதியோ அவளது கைகளைப் பற்றியிருந்தாள்

 

“ப்ளீஸ் யாழி! நான் என் மாமாவ பார்த்ததே இல்ல தெரியுமா??? அம்மா சொல்லித்தான் தெரியும்… அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடியும் அண்ணனுக்காக நின்னவங்க, இன்னைக்கு வரையிலும்,  தன் அண்ணன் என்னைக்காவது வருவான்னு நம்பறாங்க. என் அம்மாக்கு நான் ஒன்னும் பெருசா செஞ்சதில்லை யாழி,  அவங்க அண்ணனையாவது நான் அவங்களுக்கு திருப்பி குடுக்கறேனே..” என்றவளின் குரல் உடைய குறிஞ்சிக்கோ நம்பமுடியாத ஆச்சரியம்.

 

பார்த்திராத ஒரு மாமனின் மீது இவ்வளவு ப்ரியமா, அதுவும் கண்ணீர் சிந்துமளவு? என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் புரிந்தது.

இது அவளது அன்னையினால், அவள் அன்னையின் அண்ணன் பாசத்தைப் பார்த்து வளர்ந்தவள், ஆனால் நரேந்திரன்? அவனுக்கென்ன வந்தது அவர் தூரத்து உறவுதானே வரும்? என்று பார்த்தவளுக்குப் பாவம்  புரியவில்லை தூரம் உறவுகளினிடையே அல்ல மனங்களினிடையே தான் வருகிறதென்று!

 

ரேவதியையே சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் பின் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்து கொண்டாள்.

அவள் வார்த்தை ஏதுமின்றி கதவு வரைச் சென்றவள் ஒரு நொடி நின்று இவர்களைத் திரும்பிப் பார்த்தவள் அவர்களது கலக்கத்தை உணர்ந்தவளாகச் சிறு புன்னகை ஒன்றைச் சிந்திச் சென்றாள்.