Kalangalil aval vasantham – 7 (3)

தீவிரமாக பேச்சில் ஆழ்ந்திருந்தவர்களை பார்த்து, “ப்ரீத்தி… சாப்பிட்டுட்டு பேசலாம்ல…” என்று சீதாலக்ஷ்மி கேட்க,

“வந்துட்டேன்ம்மா…” என்றபடி எழுந்தது ஷான். அவ்வளவு விரைவாக தன் குடும்பத்தோடு ஒட்டிக் கொள்வான் என்பதை எதிர்பார்க்காத ப்ரீத்திதான் வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தாள்.

காயத்ரியை அழைத்த சீதாலக்ஷ்மி, “ரெண்டு இலை அறுத்துட்டு வாடி…” என்று விரட்டிவிட, அவளும் இலை அறுக்க ஓடினாள்.

செய்து வைத்த உணவுகளை சீதாலக்ஷ்மி கொடுக்க, ப்ரீத்தி மேஜை மேல் அடுக்கினாள். ஷானுடைய செல்பேசி அவ்வப்போது அழைத்தபடி இருந்தது. அதில் பெரும்பாலும் ஸ்வேதா.

அவளது அழைப்பு வரும் போதெல்லாம் ஷான், ப்ரீத்தியை சங்கடமாக பார்த்தான்.

“ஒரு தடவையாவது எடுத்து பேசிடுங்க பாஸ். இல்லைன்னா கண்டிப்பா பிரச்சனை தான்…” சற்று இறங்கிய குரலில் ப்ரீத்தி கூற,

“இல்ல ப்ரீத்தி. தேவையில்லாம கண்டதையும் பேசுவா. எனக்கு டென்ஷனாகும். அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று முடித்து விட்டாலும், அவளது அழைப்பு தொடர்ந்தபடி தான் இருந்தது. அதனாலேயே செல்பேசியை சைலென்ட்டில் போட்டவன், “வா… நீயும் உட்கார்…” என்று அவளையும் அழைத்து அருகே அமர வைத்துக் கொண்டவன், பேச்சிலும் உணவிலும் சுவரசியமாகினான்.

இருவருமாக மதிய உணவை உண்டு கொண்டிருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் மோகன். சஷாங்கன் உஷாரானான்!

“வாங்க சர்…” அவ்வளவு மரியாதையாக வரவேற்றார். பின்னே, மகளது முதலாளி என்றால் சும்மாவா? படியளக்கும் பரமனாயிற்றே! அவரைப் பார்த்து ஒரு பெரிய புன்னகையைக் கொடுத்தவன், பேசியபடியே அவரது செய்கைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான், யாரும் அறியாமல்!

ஆனால் அவரது செய்கைகளில் எந்தவிதமான தவறும் தெரியவில்லை. பொய்யோ புரட்டோ, ஒருவரது செய்கை காட்டிக் கொடுத்துவிடும். கண்கள் நிலையில்லாமல் இருப்பதிலேயே கண்டுபிடித்து விடுவான். ஆனால் இவர் அப்பாவியாக தெரிந்தார்.

டைனிங் டேபிளில் அவர்கள் முன் வந்து அமர்ந்தார் மோகன்.

“நடேசன் கிட்ட பணத்தைக் கொடுத்துட்டேன் பாப்பா…” இருவருக்கும் பொதுவாகவே கூறியவரை புருவம் நெரிய குழப்பமாகப் பார்த்தாள் ப்ரீத்தி.

சஷாங்கனுக்கு இதுவொன்றும் புதிய செய்தியல்ல என்பதால் அலட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன சொல்றீங்க?” அவனுக்கு பூசணிக்காய் கூட்டை வைத்தபடியே இவள் கேட்க,

“அதான் பாப்பா. நடேசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை குடுத்துட்டேன்…” என்று மீண்டும் கூற, மற்ற மூவருக்கும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை.

“ப்பா சொல்றதை தெளிவா சொல்லுங்க…” காயத்ரி அவள் பங்குக்கு கடுப்படித்தாள்.

சீதாலக்ஷ்மியோ புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, “பாப்பா… வட்டியோட சேர்த்து அசலையும் தந்துட்டேன். மொத்தம் எட்டரை லட்சம். நீ அனுப்புனதுல மீதி இன்னும் ஒன்னரை லட்சம் இருக்கு…” என்று பிரீத்தியிடம் விரிவாகக் கூற, அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

“என்ன நான் அனுப்பினேனா? என்ன சொல்றீங்க?” தலையைப் பியைத்துக் கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு!

தந்தையையும் சஷாங்கனையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு அப்போது வரையுமே எதுவும் புரியவில்லை.

“நீ அனுப்பினது தான பாப்பா?”

“என்னப்பா? என்ன சொல்றீங்க? நான் என்ன பணம் அனுப்பினேன்?” குரல் நடுங்கவாரம்பித்து விட்டது அவளுக்கு!

பத்து லட்ச ரூபாயை நான் அனுப்பினேன் என்று கூறுகிறாரே. இவருக்கு என்ன மூளை கெட்டுப் போய்விட்டதா?

“என்ன சொல்றார்ன்னா அவருக்கு நீ பத்து லட்சம் அனுப்பிருக்கயாம். அதை கொண்டு போய் கட்டியாச்சுன்னு சொல்றார். சரியாப்பா?” என்று சஷாங்கன் மோகனை பார்த்து கேட்டு அதை உறுதிப்படுத்த, அவளுக்கு கால்கள் துவண்டு நடுங்க ஆரம்பித்திருந்தது.

ஷான் பக்கம் திரும்பியவள், “நீங்க அனுப்பினீங்களா பாஸ்?” என்று அவனைப் பார்த்துக் கேட்க, அவன் தோளை குலுக்கினான்.

“என்ன விஷயம்ன்னு கூட நீ எனக்கு சொல்லல ப்ரீத்…” நேரம் பார்த்து அவளை குத்திக் காட்டினான் ஷான்.

“அப்பா அக்கௌன்ட்க்கு நீங்க பணம் அனுப்பினீங்களா? ப்ளீஸ் சொல்லுங்க…” இன்னுமழுத்தி சற்று கறாரான ப்ரீத்தி குரலில் கேட்க,

“ஆக்சுவலா என்ன பிரச்சனை. அதை சொல்லு முதல்ல…” உணவுண்டபடியே கிடுக்கிப் பிடி போட்டான் ஷான்.

அவனை ஆழ்ந்த பார்வை பார்த்தவள், கண்களை தாழ்த்திக் கொண்டு,

“உங்க கிட்ட சொல்லக் கூடாதுன்னு நான் நினைக்கல பாஸ். வாங்கியிருக்கற பணத்தை கட்டி முடிக்காம எத்தனை தடவை உங்களை சங்கடப்படுத்த? அதான்…” என்று தயக்கமாக கூற,

“எவ்வளவு?”

“எட்டரை லட்சம்…” அவளது குரல் இன்னும் சிறியதாகி இருந்தது.

“இவ்வளவு அமௌன்ட்டை தர்றதுக்கு என்னை தவிர வேற யாரை உனக்கு தெரியும்?” சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டே அலட்டிக் கொள்ளாமல் கேட்டவனை கூர்மையாக பார்த்தாள்.

எதையோ மனதுக்குள் வைத்துக் கொண்டு தான் பேசுகிறான் என்பது புரிந்தது.

“அதையும் நீங்களே சொல்லுங்க பாஸ்?”

“நீ சொல்லு ப்ரீத்…”

“எனக்கு உங்களை தவிர வேற யார்கிட்டயும் கேட்க முடியாது…” அழுத்தமான குரலில் கூறியவளை, நிமிர்ந்து பார்த்தவன்,

“கூட்டு சூப்பர்மா…” என்று சீதாலட்சுமியை பார்த்து ஷான் கூற, அவரோ, கணவர் செய்த செய்கையில் கால்கள் வேரோடிப் போய் நின்றிருந்தார். காயத்ரியால் நடப்பதை வேடிக்கை பார்க்கத்தான் முடிந்ததே தவிர, வேறு என்ன செய்வது என்று தோன்றவில்லை. ஆனால் தமக்கை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறாள் என்பது மட்டும் புரிந்தது.

“ஷான்…” அழுத்தமாக அழைத்தாள் ப்ரீத்தி.

“சொல்லு…”

“விளையாடாதீங்க ஷான்…”

“நான் எதுக்கு விளையாட போறேன்? மத்தவங்க விளையாட நீயேன் ப்ளேகிரவுண்ட் ஆகற?”

“புரியல…”

“என்னை காலி பண்ணனும்ன்னு நினைக்கறவங்களுக்கு நீ தான் ட்ரம்ப் கார்ட்ன்னு உனக்கும் தெரியும்… உனக்கெதாவது பிரச்சனைன்னா எனக்கு முதல்ல தெரியனும். என்னை தவிர மற்ற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் போது இப்படியெல்லாம் ட்ராப் பண்ண தான் பார்ப்பாங்க…” நிதானமாக தயிரை சோற்றில் பிசைந்தபடி ப்ரீத்திக்கு விளக்க, அவளால் மறுத்துப் பேச முடியவில்லை.

அவன் சொல்வதும் உண்மைதானே. ஆனால் தனிப்பட்ட எல்லா பிரச்சனைகளையும் அவனிடம் கூறிக் கொண்டிருக்க முடியுமா?

டைனிங் டேபிளிலேயே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். என்ன செய்வது என்று புரியவில்லை. சாப்பிடும் மனநிலை எல்லாம் எங்கேயோ போய்விட்டது. கண்ணும் மனமும் கலங்க, அவளது நிலையை கண்டவனால் அதற்கும் மேல் தாள முடியவில்லை. மெளனமாக எழுந்தவன் கையைக் கழுவினான்.

“இந்த விஷயம் பற்றி எனக்கெதுவும் தெரியாது பாஸ்…”

“இதை நீ சொல்ல தேவையில்ல. ஐ நோ…” என்றவன், “மொதல்ல சாப்பிட்டு முடிடா. காலைல இருந்தே டயர்ட்டா இருக்க…” என்றவன், அவளுக்கு பரிமாற, அவசரமாக சீதாலட்சுமி வந்தார்.

“நான் பண்றேன் தம்பி…”

“இட்ஸ் ஓகேம்மா… நீங்க உட்காருங்க…” என்று கூறிவிட்டு அவனே அவளுக்கு பரிமாற, அவனது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

“சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது பாஸ்…” என்றவளின் கண்கள் கலங்கியது.

“ஏய் லூசு. ஒழுங்கா சாப்பிடப் போறியா இல்லையா? இதை பற்றி நாம சென்னை போய் பேசிக்கலாம்…” என்று முடிக்க பார்க்க, அவளால் அப்படி விட்டுவிட முடியவில்லை.

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாஸ்…” அவள் பிடிவாதமாக கேட்க,

“நீ குழப்பிக்காத. நான் பார்த்துக்கறேன்.” என்று அவளது தலையில் தட்டியவன், “சாப்பிடு…” என்று கூற, அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. முயன்று மறைத்த்துக் கொண்டாள்.

பெற்றோர் முன்பும் காயத்ரியின் முன்பும் அழுதால் ஏதோ பெரிய பிரச்சனை என்று பயந்து விடுவார்கள் என்ற எண்ணமும் கூட!

மெளனமாக சாப்பாட்டை அளந்தவள், “ப்பா… அந்த பத்து லட்சம் எங்க?” அவசரமாகக் கேட்டாள், அவர் கூறியதை மறந்து விட்டு! அவ்வளவு குழப்பம் அவளது மனதில்!

“அதை கட்டிட்டேனே!”

“ஹய்யோ… இப்ப நான் என்ன பண்ணுவேன்?”

“நிஜமாவே அது உன் பணமில்லையா பாப்பா? நீ அனுப்பலையா?” அப்பாவியாய் கேட்ட தந்தையை என்ன செய்வது?

“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்… அறிவிருக்கா? பிள்ளை பதறிட்டு இருக்கு… பொறுப்பே இல்லாம கேட்கற கேள்விய பாரு…” சீதாலக்ஷ்மியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தலைமைக்கு மிக அருகில் இருப்பது நெருப்பின் மேல் நிற்பதற்கு சமம் என்பதை இந்த மனிதருக்கு எப்படித்தான் உணர்த்துவது. சஷாங்கன் நம்பாவிட்டால், ப்ரீத்திக்கு இது எவ்வளவு பெரிய அவமானம் என்று நினைக்கும் போது நடுங்கியது அவருக்கு!

“அம்மா ஒரு நிமிஷம், நீ பேசாம இரு…” என்று சீதாலக்ஷ்மியை அடக்கியவள், “உங்க அக்கௌன்ட்டுக்கு வர்ற பணமெல்லாம் உங்களோட பணமாகிடுமா ப்பா? நாளைக்கே உங்க அக்கௌன்ட்ல தப்பா வந்திருச்சு, பணத்தைத் திருப்பிக் குடுன்னு பேங்க்காரன் கேட்டா என்ன பண்ணுவீங்க? என் கிட்ட ஒரு வார்த்தைக் கேக்க மாட்டீங்களா?”

“என்னடா பண்றது?” செய்வதையெல்லாம் செய்துவிட்டு எப்படி கேட்கிறார்!

“நமக்கு சொந்தமில்லாத பணம். அதை வேற செலவு பண்ணிட்டு வந்திருக்கீங்க. உரிமையானவங்க கேட்டா என்ன பண்றது? யோசிக்க மாட்டீங்களா?” கேள்வி மேல் கேள்வியாக கேட்ட பெண்ணுக்கு என்ன பதில் சொல்வது என்று அவருக்கும் புரியவில்லை.

எரிச்சலாக மோகனை பார்த்துக் கொண்டிருந்தார்கள் சீதாலக்ஷ்மியும் காயத்ரியும்! எதை அவர்களிடமும் ஆலோசித்தார்? பணம் வந்ததாக மொபைலில் செய்தி வரவும், மகள் தான் அனுப்பி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, பணத்தை நடேசனிடம் கொண்டு போய் கொடுத்துவிட்டு, கை நிறைய பழமும் பூவுமாக வீட்டுக்கு வந்த மனிதருக்கு, அது அவள் அனுப்பிய பணம் அல்ல என்று தெரிந்த போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“அதான் புரியல பாப்பா…”

“ஏன்பா யோசிக்க மாட்டேங்கறீங்க! இப்ப அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்?” அவரிடம் புலம்பியபடி தலையில் கைவைத்து அமர்ந்தவளுக்கு பணத்தைக் காட்டிலும் இப்போது ஷான் தன் மீது கொண்ட நம்பிக்கை என்னவாகும் என்பதுதான் கேள்வியாக இருந்தது.

எவ்வளவு முறை கேட்டிருப்பான்? என்ன பிரச்சனை என்று! ஒரு முறை கூட அவனிடம் கூறாமல், தான் பணம் அனுப்பியதாக அவன் முடிவு செய்து கொண்டால் அவளது நேர்மை என்னாவது? அதிலும் கம்பெனியில் இப்போதுள்ள பிரச்சனையில், என்னவெல்லாம் நினைக்கக் கூடும்? விதம் விதமாக நினைக்கத் தோன்றியது அவளுக்கு!

அனைத்தையும் விட சஷாங்கனின் நட்பு… அவள் மேல் அவன் வைத்த நம்பிக்கை? இப்போது கேள்விக்குறியாகலாமா?

தன்னை ஷான் சந்தேகப்பட்டுவிடுவானோ என்ற பயம் வாட்டியது!

நிமிர்ந்து ஷானை பார்த்தாள். அவளது பார்வையிலிருந்த தவிப்பை அவன் உணர்ந்து கொண்டான்.

அதுவரை மெளனமாக பார்வைட்டுக் கொண்டிருந்த ஷானுக்கு வேறு ஏதோ தட்டுப்பட்டது!

இன்டர்னல் ஆடிட், ஸ்வேதாவுக்கு கொடுத்த பங்குகளும் பிளாட்ஸ்ஸும், ப்ரீத்தி அவனது குடும்பத்தை சந்திப்பது, அவளது தனிப்பட்ட பிரச்சனைகள், பத்து லட்சம் பணம்.

யாராக இருந்தாலும் இந்த தகவல்களை தான் கனெக்ட் செய்ய சொல்வார்கள். ஆனால் இந்த இடத்தில் வேறெதுவோ, வேறு யாரோ உள்ளே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அது மட்டும் வரிசையிலிருந்து காணாமல் போயிருக்கின்றது. அவனுக்காக பின்னப்பட்ட சதி வலையில் சிக்கியது இந்த அப்பாவிப் பெண்!

“இப்ப என்ன பண்றதுடா?”

“என்ன பண்றதுன்னு என்னை கேட்டீங்கன்னா? என்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டீங்களா? நீங்க பாட்டுக்கு எப்படி இப்படி பண்ணலாம்பா?”

“இப்படின்னு நான் சத்தியமா நினைக்கல பாப்பா…” என்றவரை கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை.

அதுவரை கைகளை கட்டியபடி அமர்ந்து பார்த்திருந்தவன், ப்ரீத்தியை அழைத்து,

“ஏன் இவ்ளோ டென்ஷனாகற?” என்று கேஷுவலாக கேட்க,

“இல்ல பாஸ். எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. என்ன நடக்குதுன்னு சத்தியமா புரியல…” என்று தாள முடியாமல் கூறினாள். தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்ற பயம் நூறு சதவிதம் வெளிப்பட்டது. இத்தனை வருடங்களாக காப்பாற்றி வந்த உண்மையும் நேர்மையுமே இப்போது உரசிப் பார்க்கப்படும் போது, என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள்!

“தெரியும்…” என்றான் அமைதியாக! அவனது பார்வை, காட்சி எல்லாம் ப்ரீத்தி மட்டுமே!

“என்ன?” அவள் கேட்டது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“தெரியும்ன்னு சொன்னேன். காலைலயே எனக்கு தெரியும்…” என்று கூறியவனை வெறித்துப் பார்த்தாள். இப்படியொன்று இருப்பது தெரிந்தும் அவளை எந்த விளக்கமும் கேட்காமல் இருந்திருப்பதுதான் இப்போது அவளது நடுக்கத்தை அதிகப்படுத்தியது.

பதில் பேச முடியவில்லை!

“அப்படீன்னா?” குரல் நடுங்கியது! இவளது பார்வையும் காட்சியும் ஷான் மட்டுமே, வேறு யாரும் அவளது வட்டத்துக்குள் இல்லை… சத்தியமாக இல்லை!

“எனக்கு ப்ரீத்தியை பற்றி தெரியும்ன்னு சொன்னேன். உலகத்தையே குடுக்கறதா சொன்னாலும் அவளால தப்பு பண்ண முடியாது. மனசாட்சியை தள்ளி வெச்சுட்டு வேலை பார்க்க முடியாதுன்னு வைஷு கிட்ட சொன்னேன்…” என்று நிறுத்தியவன்,

“அவ கேட்டா பத்து லட்சமென்ன, இன்னும் எவ்வளவு வேணும்னாலும் கொடுக்க அவளோட…” என்று நிறுத்தியவன், “ப்ரென்ட் இருக்கப்ப, போயும் போயும் ஒரு பத்து லட்சத்துக்கு ஆசைப்படறவ கிடையாதுன்னு சொன்னேன்…”

முகத்தில் எந்தவிதமான உணர்வுகளையும் காட்டாமல், பதில் சொன்னவனை பார்க்கையில் வாயடைத்துப் போனாள் ப்ரீத்தி!

கண்களிலிருந்து அடக்கி வைத்திருந்த கண்ணீர் வழியும் போல இருந்தது. முயன்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“அப்ப இந்த டென் லாக்ஸ்க்கு என்ன அர்த்தம் ஷான்?” குரல் நடுங்க அவள் கேட்க,

“ஐ டோன்ட் கேர்… டூ யூ?”

இடம் வலமாக தலையாட்டினாள்.

“எனக்குத் தெரியல…”

“ஃப்ரீயா விடுடா…” என்றவன், புன்னகையோடு, “நான் இருக்கேன்ல. பார்த்துக்கறேன்…” என்று கூற, பார்வை வட்டம் முழுவதுமாக மறைந்து அவன் மட்டுமே தெரிந்தான்!

பிரம்மாண்டமாய்… விஸ்வரூபமாய்!