O Crazy Minnal(17)

ocmy-97dc6926

17

 வரும்பொழுது இருந்த வேகம் இப்பொழுது கிளம்பும்பொழுது துளியளவும் இல்லை குறிஞ்சிக்கு.  உற்சாகம் வடிந்தவளாக தன் சைக்கிளை ஓட்டாமல் தள்ளிக் கொண்டு நடந்தவள் அங்கிருந்த ஒரு பூங்காவினுள் நுழைந்துவிட்டாள். அங்கு ஆட்கள் அதிகமில்லாத இடமாகப் பார்த்து ஒரு கல்பெஞ்சின் பக்கத்திலேயே வண்டியை நிறுத்தியவள் அமர்ந்து கொண்டாள்.

 

தொடையில் தன் முழங்கையை ஊன்றி தலையை இரு கைகளாலும் தாங்கியபடி முகத்தை மூடி அமர்ந்திருந்தவளுள் எண்ண அலைகள் வந்து மோதின. எல்லாம்

அவள் காலில் தன் பிஞ்சு விரலால் தொட்டு “தீதீ மை  டால்!” என்ற குரல் கேட்கும்வரைதான்.

 

அந்த ஸ்பரிசத்தில் நிமிர்ந்து பார்த்தவளின் எதிரில் முகம் நிறைந்த புன்னகையுடன் கண்களில் பல மின்மினிகளுடன் நின்று கொண்டிருந்தாள் ஒரு மூன்று வயது தேவதை! அவளது குட்டி குட்டி கரங்கள் எதையோ காட்ட இவள் திரும்பிய திசையில் ஒரு குட்டி ரிமோட் கன்ட்ரோல் ஹெலிகாப்டர் அந்த மஞ்சள் நிற பூக்கள் பூத்து குலுங்கிய மரத்தில் சிக்கியிருந்தது. பார்வையை மறுபடியும் குட்டி தேவதையிடமே திருப்பினாள் அவளோ  கண்களில் ஆர்வத்துடன் இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள், ‘இது உனக்கு டாலாக்கும்? இந்த பார்வையே கொல்லுதே! இஞ்சி’ என்றெண்ணியவள் தன் காலிலிருந்த  ஸ்னீக்கர்சையும், புல்லோவரையும் கழட்டிவிட்டு அங்கிருந்த வேலியில் ஒரு காலை வைத்து இன்னொன்றை மரத்தின்மேல் வைத்தவள் ஒரு பக்க கிளையைப் பற்றி எக்கி அந்த ஹெலிகாப்டரை எடுத்துவிட்டாள்.

 

இறங்கியவள் அந்த குட்டி தேவதையிடம் வந்து தரையில் மண்டியிட்டமர்ந்தவாறு அதைக் கொடுக்க அவளுக்கோ அவ்வளவு சந்தோஷம்! கன்னங்களில் குழி விழவில்லை இருந்தும் அந்த சிரிப்பு அவளை ஈர்த்தது!

 

ஹெலிகாப்டரை வாங்கிக் கொண்டு  அதை அப்படியே தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு நின்றவள் அங்கொரு  முப்பது வயது மதிக்கத்தக்க  இளைஞன் ஒருவன்  வரவும் அவனை ஓடிச் சென்று கட்டி கொண்டாள். 

 

அவன்தான் இவளின் அப்பா போலும் பதற்றமாக வந்தவன் இவளைக் கண்டவுடன் அள்ளி அணைத்திருந்தான். இவளும் அவ்வளவு நேரம் இறுக்கிப் பிடித்திருந்த ஹெலிகாப்டரை கீழே விட்டிருந்தாள்.

 

“பேட்டா!”என்று ஆரம்பித்தவன் எதையோ வினவ அவளும் அவன் காதோரம் என்ன சொன்னாளோ அவனிடம் இருந்து கீழிறங்கியவள் “பாப்பா!” என்றவன் கையையும் பிடித்து இவள் புறம் இழுக்க, குறிஞ்சியிடம் வந்தவன் அவளிடம் நன்றியுரைத்தான், இவளும் “நோ ப்ராப்ளம்!” என்று அதை மறுத்துவிட அவளை அழைத்துக் கொண்டு சில எட்டுகள் எடுத்து வைத்திருப்பான் அவன் கைகளில் இருந்து நழுவியவள் குறிஞ்சியிடம் வந்து ஒற்றை விரலைக் காட்டி அவள் உயரத்திற்கு வரும்படி சொல்ல அவளும் மண்டியிட்டமர்ந்தாள்.

 

அதில் வாய் நிறையப் புன்னகைத்தவள் குறிஞ்சியின் கன்னத்தில் தன் சின்ன இதழைப் பதித்துவிட்டு ஓடி விட்டாள்!

 

அந்த சின்ன இதழ் பதிப்பே அவளின் பாதி பிரச்சனைகளை மறக்கடித்திருக்கும் ஆனால், ஓடியவளின் தலையைக் கலைத்துவிட்டவன் அவளை தூக்கிக் கொள்ள அவள் பேசுவதற்கெல்லாம் ஒருவித சுவாரஸ்யமான முகபாவத்துடன் தலையை ஆட்டியாட்டி கேட்டுக் கொண்டிருந்தான்.

 

அதைப் பார்த்தவளுக்கோ மனம் மறுபடியும் ஜிதேந்திரனிடமே வந்து நின்றது! அவரும் இப்படிதானே அவள் என்ன உளறிக் கொட்டினாலும் ஆச்சரியமாகவே கேட்டுக் கொள்வார்.

 அவளை என்றுமே அவர் அடக்கியதில்லை, ஏன் எத்தனை முறை விழுந்து வாரியிருக்கிறாள்? ஒவ்வொரு முறையும் அவள் உறங்கும்பொழுது அவள் கையை பற்றிக் கொண்டு அமர்ந்திருப்பாரே தவிர என்றுமே இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்றதில்லை. எத்தனை முறை  அவளே கிண்டலடித்திருக்கிறாள்? அவர்களிருவரையும், ஆனால் இன்றல்லவா புரிகிறது அந்த காதலும் அன்பும்தான் இன்று அவர்கள் குடும்பம் உருவாகக் காரணமென்று!

 

கல்லூரி காலக் காதல். அது கல்யாணத்திற்குப் பின் ஏன், இத்தனை வருடங்களுக்குப் பின்னும் கொஞ்சம்கூட மாறாமல் அப்படியே இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்!

 

எப்படிப்பட்ட மனிதராக இருக்க வேண்டும் அவளது அப்பூ. என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் பொறிதட்டியது, லீலா இதில் எவ்வளவு பாதிக்கப் பட்டிருப்பாரென்று. இன்றும் அவருள் ஏதோ ஒரு ஓரத்தில் இருக்கத்தானே செய்யும் அந்த காயம் வடுவாக!

 

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் மறுபடியும் அந்த ஸ்னீக்கர்ஸை அணிந்து கொண்டு புல்லோவரையும் மாட்டியபடி மேலே பார்க்க வானமோ கருமையைப் பூசிக் கொண்டிருந்தது இதற்குமேல் தாமதமானால் அஷ்மி அழைத்துவிடுவாள், தானிருக்கும் மன நிலையில் அவளிடம் சரியாகப் பேச முடியுமா? சந்தேகமே.

 

ஃபோனை எடுத்தவள்  started என்றொரு மெஸேஜை தட்டிவிட்டு  ஆராவையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

*************

ஜிதேனும் லீலாவும் வந்து விட்டதுக்கான அறிகுறியாக வீட்டினுள் நுழையும் பொழுதே அவள் நாசியைத் தீண்டிச் சென்றது காபியின் மனம்! ஃபில்டர் காபி போலும். உள்ளே நுழைந்தவளின் முகமே சற்று வாடியிருக்க அதை எவ்வளவுதான் அவள் மறைக்க நினைத்தாலும் அஷ்மியின் கண்களுக்கது பட்டுவிட்டது. நேராக உள்ளே நுழைந்தவள் ஸ்னீக்கர்ஸை ஒரு ஓரமாகக் கழட்டிப் போட அவளிடம் வந்த அஷ்மியோ “என்னாச்சு இஞ்சி? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்க  உள்ளே அதிர்ந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்.

 

“லைட்டா தலைவலி அஷ்மி…” என்றவாறே புல்லோவரை கழட்டி அங்கிருந்த சோஃபாவில் வீசியவள் சாய்வாக அமர்ந்து கொண்டாள்.

 

அதை நம்பவில்லை என்றாலும் அவளையே  பார்த்தவள் அடுக்களைக்குள் நுழையவும் ஜிதேந்திரன் ஒரு மக் நிறைய காபியுடன் வரவும் சரியாக இருந்தது. அவள் எதுக்காக வந்திருப்பாள் என்பதைத் தெரிந்தவர்போல அவர் “யாழிக்கு தான்டா, உள்ள எல்லாருக்கும் இருக்கு மிக்ஸ் பண்ணனும் நான் வரேன்..” என்க அவளோ

 

“நான் கொண்டுவரேன்பா” என்றுவிட்டு சென்றாள். அவளும் அதையேதான் சொல்ல வந்தாள். ஆனால் இவர்கள் பேசியதைக் கேட்டவர் முதலிலேயே அவளுக்குக் கலக்க ஆரம்பித்திருந்தார். தலையை பின்னால் சாய்த்து இரு கரங்களாலும் முகத்தை மூடியவாறு அமர்ந்திருந்த மகளிடம் வந்தவர்  பரிவாக அவள் தலையைக் கோதியவாறு “யாழிமா!” என்றழைக்க  வரத்துடித்த கண்ணீரை விழுங்கியவள் மனதைச் சமன் படுத்திக் கொண்டு  போலியான உற்சாகத்தைத் தத்தெடுத்தவளாக “அப்பூ! எப்ப வந்தீங்க?” என அவரும் அவள் தலையில் கை வைத்து “ரொம்ப வலிக்குதாடா? இப்போதான்டா வந்தோம்” என்றார்.

 

“லைட்டா.. கொஞ்ச நேரம் தூங்கவா?” என்று கேட்டவளை ஒரு நிமிடம் பார்த்தவர்

 

“சரி இந்த காபி குடிச்சிட்டு போய் தூங்கு நான் அப்பறமா எழுப்பறேன்” என்று அவளைக் குடிக்க வைத்தே அனுப்பினார்.

 

அவளுக்கு நன்றாகத் தெரியும் இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்தாலும் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று.  இல்லையென்றால் அவளே அழுதுவிடவும் வாய்ப்பிருக்கையில் அங்கிருந்து வருவதே மேலல்லவா? அதான் தலைவலியென்றவள் தங்களறைக்கு வந்திருந்தாள். அது முழு பொய்யும் அல்ல,  லேசாகத் தலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது உண்மை!  

உள்ளே வந்தவள் விளக்கைக்கூட உயிர்ப்பிக்காமல் அப்படியே வந்து மெத்தையில் விழுந்தாள். அந்த இருள் அவள் சிந்திப்பதற்கு ஒத்துழைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

கண்முன் அன்று காலையிலிருந்து நடந்தவை அனைத்தும் படமாக ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் அவளது மனமுழுக்க ஜிதேந்திரனும் லீலாமதியுமே ஆக்கிரமித்திருந்தனர்.  கையில் ஒன்றுமில்லாமல் வந்தவர்கள், இன்றும் அவர்கள் ஒன்றும் செல்வச்செழிப்பான வாழ்வை வாழ்ந்துவிடவில்லை, ஆனால் அதற்குமேல் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்கிறார்கள். 

 

அன்னையைப் பற்றி நன்கறிந்தவள் அவள்! அவளுக்கு நன்றாகத் தெரியும் கட்டாயம் லீலாவிற்குள் ஒரு ஓரத்திலாவது குற்ற உணர்வு இருக்கும். அவ்வளவு பெரிய குடும்பம் உடைவதற்கு தானும் ஒரு காரணமாய் இருந்து விட்டோமே என்று அவர் வருந்துவார். அவள் அன்னை ஆழமானவள்! அந்த ஆழத்தில் இதுவும் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் போகிறது. அப்பூ! எத்தனை வருடங்கள்.. எவ்வளவு பெரிய குடும்பத்திலிருந்தவர்..  ஒரு நொடிக்கூடவா  ஏங்கியிருக்க மாட்டார்? அன்னைக்காக.. இல்லை தங்கைக்காக..  ஹ்ம்ம்ம்

 

ரேவதி,

இன்று காலையில் அவளைச் சந்தித்த பொழுது இப்படியெல்லாம் நடக்கும் என்று அவள் என்ன கனவா கண்டாள்?

 

இவ்வளவு பாசமா அவளுக்கு? தன் அம்மாவிற்காக என்றாளே!  வார்த்தைக்கு வார்த்தை மாமா என்றாளே, அவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அவள் பிறந்ததிலிருந்து ஜிதேந்திரனை பார்த்ததுகூட கிடையாது. 

 

‘நான் என்.அம்மாவுக்கு ஒன்னும் பெருசா பண்ணதில்லை யாழி!’ என்றாளே நான் இதுவரை அப்படி என்ன பண்ணிவிட்டேன்? எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அப்பூவிற்கும் அம்மூவிற்கும்?

என்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை கலைத்தது விளக்கொளி!

 

அஷ்மிதான்! அந்த அறையின் விளக்குகளை உயிர்ப்பித்திருந்தாள்.

இவள் கண்களை லேசாகக் கசக்கிக் கொண்டு எழுந்தமர இவளிடம் வந்தவளோ

“என்னாச்சு இஞ்சி?” என்றாள் “ஏன்? ஒன்னுமில்லையே” என்று இவள்  முணுமுணுப்பாக

 

“இல்ல என்னமோ இருக்கு, நான் உன் அக்கா இஞ்சி!” என்றவளின் குரலில் அழுத்தம்

 

குறிஞ்சியின் விழிகளில் என்ன கண்டாளோ, அவளை ஒரு முறை அணைத்து விடுவித்தவள் “என்னவா இருந்தாலும் பார்த்துக்கலாம்டா” என்று சென்றுவிட்டாள்.

**********

“லூசுத்தனமா பேசாத யாழி!” என்றவன் மறு முனையில் கத்திக் கொண்டிருக்க இவளோ நான் சொன்னதுதான் கடைசி என்பதுபோல ஃபோனை வைத்திருந்தாள்.