Kalangalil aval vasantham – 8 (1)

Kalangalil aval vasantham – 8 (1)

8

தலையில் கைவைத்து மௌனமாகவே முகத்தை மறைத்தபடி அந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தவளைக் கேள்வியாகப் பார்த்தான் சஷாங்கன். உள்ளுக்குள் அவ்வளவு வேதனையாக இருந்தது. அவளது உடலில் ஏற்பட்ட நடுக்கம் குறையவே இல்லை. குடும்பத்தைத் தாங்கும் ஒற்றைப் பெண். நேர்மையாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே! அதைத் தாண்டி அவள் என்ன ஆசைப்பட்டாள்? வேறெதுவும் இல்லையே! அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது, இது ஏதோ சதி வலை தானென்று!

ஆனால் யார்? ஏன்? எதற்காக?

அவன் தான் குறி என்றால் நேரடியாக அவனிடம் மோத வேண்டியதுதானே? இந்த அப்பாவிப் பெண்ணை ஏன் இப்படித் துன்புறுத்த வேண்டும்?

“ரிலாக்ஸ் ப்ரீத்தி…” அவளுக்கு முன்பிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன் கூறியது அவளுக்கா, இல்லை தனக்கேவா?

கையை முகத்திலிருந்து எடுக்காமல், தலையை மட்டும் ஆட்டினாள். அவளது உடைந்த முகத்தை யாருக்கும் காட்ட அவளுக்கு விருப்பமில்லை. எப்போதுமே காட்ட மாட்டாள் என்பது அவனுக்கும் தெரியும். அவ்வளவு எளிதில் உணர்வுகளை வெளிக்காட்டி விடுபவள் அல்ல அவள்!

வெகு அரிது! அதிலும் உடைந்து போவது என்பது மிக மிக அரிது! அவனாகக் கேட்டாலும் அவ்வளவு எளிதாக வெளிப்படுத்தி விடமாட்டாள் என்பது தெரிந்தது தானே?

“கொஞ்சம் தண்ணி குடுங்கம்மா…” என்று சஷாங்கன் கேட்க, அதுவரை பிரம்மை பிடித்தது போலத்தான் பார்த்துக்கொண்டிருந்தார் சீதாலக்ஷ்மி. ஏதோவொரு மிகப் பெரிய பிரச்சனையில் மகள் சிக்கியிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

வேகமாகச் சமையலறைக்குச் சென்றவர், சொம்பில் தண்ணீரை எடுத்து வந்து சஷாங்கனிடம் தர, அவன் அமர்ந்திருந்த இருக்கையை இழுத்து வந்து அவள் முன் அமர்ந்தபடி பிரீத்தியிடம் நீட்டியவன்,

“குடி…” என்று கூற, தலை குனிந்தபடியே வாங்கினாள்.

இருவரையும் பார்த்த சீதாலக்ஷ்மிக்கு உள்ளுக்குள் பயம் தான். என்ன இருந்தாலும் திருமண வயதில் இருக்கும் மகள். அதிலும் இத்தனை இளமையாய் அழகனாய் ஒரு முதலாளியிடம் வேலை பார்க்கும் சூழ்நிலையில் அவளது மனம் சஞ்சலப்பட்டுவிட்டால் என்னாவது?

அதிலும் அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் குடும்பத்தைப் பற்றி மகள் சொல்லி ஓரளவு தெரியும். பாஸ் என்று சொல்வாளே தவிர, இவ்வளவு இளமையானவன், அழகன், கம்பீரன் என்பதை அவள் கூறியதில்லை. அது அவளைப் பொறுத்தமட்டில் ஒரு விஷயமல்ல என்பதை அவர் அறியவில்லை!

முதன்முதலில் அன்று தான் அவனைப் பார்த்தார். பார்த்த மாத்திரத்தில் உள்ளுக்குள் பயம் தான் வந்தது. பெண்ணைப் பெற்ற தாயாயிற்றே! அவளை மரியாதையோடு திருமணம் செய்து கொடுக்க வேண்டிய நிலையில், அதைச் செய்யாமல் அவளது சம்பாத்தியத்தில் தாங்கள் உணவுண்ண வேண்டி இருக்கிறதே என்ற குற்ற உணர்வு, சஷாங்கனை பார்த்தபோது இன்னும் அதிகமாகியது!

ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால், அவர்களது சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? அவளுக்குப் பின் இருக்கும் மகள் என்னாகுவாள்?

அத்தனையும் மனதுக்குள் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தவர், சஷாங்கனை நோக்கி,

“என்ன பிரச்சனை தம்பி?” என்று கேட்க, மெளனமாக அவரை நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன பிரச்சனையா இருந்தாலும் ப்ரீத்திக்கு எதுவுமாகாது. அதுக்கு நான் கேரன்ட்டி…” என்றவனுக்குக் கொஞ்சமாகப் புன்னகை மலர்ந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், அவனது புன்னகையைக் கண்டதில் சற்றுச் சமாதானமானாள்.

“எனக்கென்ன பாஸ்? எதுவா இருந்தாலும் சமாளிப்பேன்…” நடுக்கமிருந்தாலும் உறுதியாகக் கூறியவளை, இன்னும் புன்னகை மலரப் பார்த்தான்.

“பாத்தீங்களா? கன் மாதிரி… இப்படி பொண்ணை யார் அசைக்க முடியும்?” என்று சிரித்தபடியே சீதாலக்ஷ்மியை பார்த்துக் கேட்க, அவருக்கும் லேசான புன்னகை மலர்ந்தது.

“என்ன இருந்தாலும் இவர் பண்ணது தப்புங்க தம்பி. அம்முவ கேக்காம அந்தப் பணத்தைத் தொட்டு பார்த்திருக்கக் கூடாது. இவருக்கு எப்பவுமே புத்தி பத்தாது…” கணவர் இப்படி செய்து விட்டாரே என்ற ஆற்றாமை, மகளது முதலாளியின் முன்பு மகளைத் தலைகுனியச் செய்த கோபம் எல்லாமாகச் சேர்ந்து கொண்டது!

“தப்பு தான். ப்ரீத்தியை ஒரு வார்த்தைக் கேட்டிருக்கணும். நேத்து அந்த நடேசன் என் சட்டையப் புடிச்சு கேக்கவும், எனக்கும் யோசனையே வரல. எப்படியாவது இந்தப் பணத்தை அவன் மூஞ்சில வீசிட்டு வந்துட்டா போதுன்னு நினைச்சிட்டேன்…” மகளுக்குச் சமாதானம் கூறுவதா, மனைவியைச் சமாளிப்பதா என்ற பயம் வேறு!

“நீங்க என்னைக்கு தான் யோசிச்சு செஞ்சு இருக்கீங்க? யோசிச்சு புத்தியோட இருந்தா புள்ளை சம்பாரிக்கறதுல உக்காந்து சாப்பிட முடியுமா?” இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் அவர் பேச, மோகனுக்கு ரொம்பவுமே அவமானமாக இருந்தது.

“ம்மா…” பல்லைக் கடித்துக் கொண்டு தாயை அழைத்தாள் ப்ரீத்தி. சஷாங்கனின் முன்னே வீட்டு விஷயத்தை எல்லாம் கடை பரப்புகிறாரே என்ற எரிச்சல்!

“எனக்கு அசிங்கமா இருக்கு அம்மு. உனக்கொரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்க இந்த மனுஷனுக்குத் தோணுதா? இப்பத்தான் இன்னும் பிரச்சனையெல்லாம் இழுத்துட்டு வந்துட்டு இருக்காங்க. இன்னும் எவ்வளவு நாளைக்கு உன் தலைல மொளகாய் அரைச்சுட்டு இருப்பாங்க?” கண்ணைத் துடைத்தபடி கேட்ட சீதாலக்ஷ்மியை பரிவாகப் பார்த்தவன், தலைகுனிந்து அமர்ந்தபடி இருந்த மோகனை ஆழ்ந்து பார்த்தான். அவர்களிடையே இருக்கும் பதட்டம் புரிந்தது. அந்த இறுக்கத்தை குறைக்க வேண்டுமென நினைத்துக் கொண்டு,

“என்ன கல்யாணமா?” என்று குரலை உயர்த்தியவன், “ஒய்… அதுக்குள்ளே உனக்கென்ன அவசரம்?” ப்ரீத்தியை பார்த்து கலாய்க்க, அவனைப் பார்த்து முறைத்தாள்.

“நான் கேட்டேனா?” என்றவளை பார்த்து சிரித்தவன், சீதாலட்சுமியை ஆதரவாகப் பார்த்து,

“ப்ரீத்தியை பத்தின கவலைய விடுங்கம்மா. இப்பத்தான இருபத்தி ஏழாகுது? இப்பல்லாம் பொண்ணுங்க முப்பது வயசுல தான் மேரேஜ் பண்ணிக்கறாங்க…” என்றவன், ப்ரீத்தியை பார்த்து, “ப்ரீத்திக்கு மாப்பிள்ளை பார்க்கறது என்னோட பொறுப்பு. அதுவும் லீ மின் ஹோ மாதிரி பார்த்துத் தரேன்னு பொறுப்பெடுத்து இருக்கேன்…” என்று குறும்பாகச் சிரிக்க,

“பாஸ்…” என்றவளுக்கும் புன்னகை மலர்ந்தது.

பார்த்துக் கொண்டிருந்த காயத்ரிக்கும் அப்போது தான் மூச்சே வந்தது. தமக்கையின் முகத்தை அதுவரைப் பார்க்கக் கூட முடியவில்லை. அவளது சூழ்நிலையை முழுவதுமாக உணர முடிந்தது. ஆனால் யாரைக் குற்றம் சொல்ல?

“அய்யயோ சப்ப மூக்குக்காரன எல்லாம் நான் மாமாவா ஏத்துக்க முடியாது…” என்று சிரித்தபடியே கூறினாள் காயத்ரி.

“சூப்பர்… உண்மைய சொல்லிட்ட காயத்ரி…” என்று அவளுக்கு ஹைஃபை கொடுத்தான்.

“பாஸ்…” என்று அருகிலிருந்த குஷனை அவன்மேல் எறிய, அதை அவன் கேட்ச் பிடித்துச் சிரிக்க, அவளும் அவனோடு இணைந்து சிரித்தாள்.

அவனிடம் எந்தக் கள்ளத்தையும் சீதாலக்ஷ்மியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுள் ஒருவனைப் போலத்தான் உணர்ந்தார். மனதுக்குள்ளிருந்த மிகப் பெரிய பாரம் இறங்கியதைப் போல இருந்தது.

“தம்பிக்குக் கல்யாணம்…” என்று அவர் இழுக்க, அவனது முகம் சற்று மாறிச் சீரானது.

“சீக்கிரமாவேம்மா. கண்டிப்பா உங்களை எல்லாம் வந்து கூப்பிடுவேன்…” என்றுக் கூறியபோது, ப்ரீத்தியின் முகத்தில் கள்ளச்சிரிப்பு.

“அவங்க பெரிய இடம்மா…” என்று சீதாலக்ஷ்மியிடம் குறும்பாகக் கூறியவள், காயத்ரியிடம் திரும்பி, “உன்னோட பேவரிட் ஸ்வேதா இருக்காங்கல்ல…” என்று அதே குறும்போடுக் கேட்க, அவனிடத்திலும் வெட்கப் புன்னகை!

“ஆமா…” என்ற காயத்ரியிடம், “அவங்க தான் பாஸோட பியான்சிடி…” என்று போட்டுடைக்க,

“வாவ்… நிஜமாவாக்கா?” என்று ஆச்சரியப்பட்டாள். சும்மாவா? ஸ்வேதாவின் வெறித்தனமான ரசிகையாயிற்றே இவள்.

“எஸ்…” என்றவள், ஓரக்கண்ணில் அவனைப் பார்வையிட்டபடியே, “கன்னாபின்னான்னு லவ்வு காயு…”

“நீ ஸ்வேதாவை பார்த்து இருக்கியா ப்ரீத்தி?” என்று கண்களில் கனவோடு காயத்ரி கேட்க,

“நிறைய தடவை…” என்று இல்லாத காலரை கெத்தாக ஏற்றிவிட்டாள்.

“நேர்ல எப்படி இருப்பாங்க?” நடிகையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டும் தான் அவளுக்கு!

“செமயா இருப்பாங்க தெரியுமா? ஸ்க்ரீன்ல பார்க்கறத விட நேர்ல இன்னும் அழகா இருப்பாங்க…” என்று காயத்ரியிடம் கூறியவள், இவன் புறம் திரும்பி, “அப்படியொரு கலர் எப்படி பாஸ்? என்னதான் போடுவாங்க?” அவளது நெடுநாள் சந்தேகத்தைக் கேட்க,

“அடடா… இது ரொம்ப முக்கியம்…” என்று சிரித்தவன், “அவ கிட்ட நீயே கேளு…” என்று அவள் பக்கமே பந்தை உருட்டி விட்டான்.

“எங்க? தானோஸ பாத்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மாதிரி பாத்து வைக்கறாங்க…”

“இதுல தானோஸ் யார்? நீயா? அவளா?” என்று சிரித்தபடி கேட்க,

“அதை உங்க பார்ட்னர் கிட்ட கேளுங்க பாஸ்…”

“சரி… கேக்கலாம்… இப்ப கிளம்பு… டைமாகுது…” ஸ்வேதாவை பற்றிப் பேசியதில் அவனுக்கு வெட்கம் வேறு. அவளை வலுக்கட்டாயமாக எழுப்பிக் கிளம்ப சொன்னான்.

காயத்ரிக்கு தமக்கையைப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது. அவள் குடும்ப பொறுப்பை எடுத்துக் கொண்டதிலிருந்து, அவளது சிரிப்பும் விடை பெற்றுப் போயிருந்தது.

இது போலவெல்லாம் சிரித்துப் பேசி எவ்வளவோ நாளாகி இருந்தது. அவளாக திருச்சி வரும்போது கூட, இந்தளவெல்லாம் பேசியதில்லை. அளவுதான்!

ஏதோவொரு யோசனையிலேயே இருப்பாள். எதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது அனைத்தையும் மறந்துவிட்டு உரையாடிக் கொண்டிருந்த தமக்கையைப் பார்த்தபோது, அதற்குக் காரணம், சஷாங்கன் தான் என்பதும் புரிந்தது!

“சரிம்மா… கிளம்பறேன்…” இடக்கையை திருப்பி வாட்சை பார்த்தவள் எழுந்து கொள்ள,

“பார்த்து இருந்துக்க அம்மு. ரொம்ப பெரிய இடத்துல இருக்க. பணம் காசு இல்லைன்னா கூட இருந்துக்கலாம். ஆனா ஒரு சின்னத் தப்புக் கூட நம்ம மேல வந்துட கூடாதும்மா. எல்லாத்தையும் விட அதுதான் நமக்கு முக்கியம்…” என்றவர், சற்று இடைவெளி விட்டு, “இந்த தடவை தம்பிக்கும் ஏதோ தெரிஞ்சிருக்கு. அதனால பரவால்ல. ஆனா எப்பவுமே அப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியாதுல்ல அம்மு. அதனால எந்த பிரச்சனைலையும் சிக்கிடாதம்மா…” என்றவரை புன்னகையோடு பார்த்தான் சஷாங்கன்.

“கொஞ்சம் பிரச்சனை இருக்கும்மா, இல்லைன்னு சொல்லமாட்டேன். என்னை டார்கெட் பண்றவங்க, இப்ப ப்ரீத்திக்கு குறி வெச்சு இருக்கலாம். ஆனா என்னைத் தாண்டித் தான் இந்த மேடமை தொட முடியும். கவலைப்படாதீங்க…”

உறுதியாகக் கூறியவனை சிறு புன்னகையோடு பார்த்தார் சீதாலக்ஷ்மி!

“இவங்கப்பா செலவு பண்ண பணத்தை தலைய அடமானம் வெச்சாவது திருப்பிடறோம் தம்பி…” என்று அவர் கூற,

“அது எனக்கும் ப்ரீத்திக்கும் இடைல இருக்க வரவு செலவும்மா. அதை நாங்க பார்த்துக்கறோம்…” என்று கூற,

“இல்ல தம்பி…” என்று இடையிட்டார் அவர்.

“விடுங்கம்மா…” என்று முடித்துவிட்டு, “அப்புறம், உங்கப்பா இடம் பார்த்துக் கொடுப்பாங்க தான?” என்று இவள் பக்கம் திரும்பிக் கேட்க, தயக்கமாகத் தந்தையைப் பார்த்தாள்.

“பண்ணுவாங்க… ஆனா…” என்று இழுத்தாள். அவன் எதற்குக் கேட்கிறான் என்று புரிந்தது. ஆனால் எங்குப் போனாலும் வம்பை வலுவில் வாங்கிக் கொண்டு வரும் தந்தையை இவனிடம் எப்படி கோர்த்து விடுவது?

அவளது ஆனாவை கவனிக்காமல், “ஒரு மூணு ஏக்கர் வரைக்கும் இங்க தேவைப்படுதுங்க. தில்லை நகர், கேகே நகர், அண்ணா நகர்… இந்த மூணு ஏரியால. உங்களால முடியும்னா பாருங்களேன்…” என்ற சஷாங்கனை பளீரென்ற முகத்தோடு ஏறிட்டார்.

“கண்டிப்பா பார்க்கறேன் தம்பி…” என்றார். அவருக்கு மிகவும் பிடித்தது இந்த வேலை தான். அதை விடுத்து வேறெதை செய்தாலும் அவரால் செய்ய முடியாது என்பதால் தான் இத்தனை பிரச்சனைகளும்.

“பாஸ்… நான் என்ன சொல்றேன்னா…” என்று இடையே வந்தவளைப் பார்த்து,

“யாருக்கோ கொடுக்கறத உங்கப்பாவுக்கு குடுத்துட்டு போறேன். இதுக்கும் நேர்மை எருமை கருமைன்னு டயலாக் பேசாத தாயே!” என்று ஒரேடியாக அடக்க, அதற்கும் மேல் பேசவில்லை. ஆனால் தந்தை எந்த வம்பையும் இழுத்துவிட கூடாதே என்ற பயம் மட்டும் மனதுக்குள் தங்கியது!

ஆசைத் தீர அளாவிவிட்டு புறப்பட்டபோது மணி ஏழரையைத் தாண்டியிருந்தது. ஒன்பது மணிக்கு விமானம்!

 

error: Content is protected !!