Oh Papa Laali–Epi 4

அத்தியாம் 4

லிட்டில் இந்தியா(தேக்கா) என அழைக்கப்படும் இந்த இடம் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கிறது. இந்தியர்களுக்காக பிரத்தியேகமாக இருக்கும் இந்த இடத்தில் நமது உணவு, உடை, நகை என எல்லாம் கிடைக்கும். இங்கே அமைந்திருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் மிக பிரசித்தி பெற்றதாகும்.

அன்று சூர்யவர்மனுக்கு எண்டேர்டேய்ண்மேன்ட் வேலை எதுவும் இல்லை. அதனால் காலையிலேயே எழுந்து சுறுசுறுப்பாக குளித்து விட்டு தனது டிஜிட்டல் ஷோப்புக்கு கிளம்பினான். பையனை கிண்டர்கார்டன் அனுப்பிவிட்டு மறுபடி தூங்கிக் கொண்டிருக்கும் அக்காவைத் தொல்லை செய்யாமல் மெதுவாக தனது சாவியால் கதவைப் பூட்டி, கேட்டையும் பூட்டி விட்டு வெளியேறினான்.

இவர்கள் ப்ளாட் ஏழாவது மாடியில் இருந்தது. நடந்து லிப்ட் இருக்கும் இடத்திற்கு போனான். படியில் இறங்கலாம்தான், ஆனால் வியர்த்துவிடும். பிறகு எம்.ஆர்.டீ(ரயில்) எடுக்கும் போது கசகசவென இருக்கும் என்பதால் லிப்ட் தான் அவன் பயன்படுத்துவது. இவனுக்கு வரும் வருமானத்துக்கு தாராளமாக சின்ன கார் வாங்கலாம். ஆனால் இவனுக்குத்தான் இஸ்டமில்லை. பார்க்கிங் கட்ட வேண்டும், இன்சுரண்ஸ் எடுக்க வேண்டும், லொட்டு லொசுக்கு என கார் விலையை விட அதை பராமரிக்கும் விலை கழுத்தை நெரிக்கும். ஆகவே அவனுக்கு பொது போக்குவரத்து தான் வசதி. ரயில், பஸ், டாக்சி, கிரேப், கோஜேக் இப்படி பலவகையான போக்குவரத்து வசதி இருக்க கார் எதற்கு என்பது இவன் வாதம். அதோடு காரில் போனால் சைட்டடிக்கும் வசதி கிடைக்குமா?

லிப்டில் இவனோடு சில பெண்கள் ஏறினார்கள். இவனைப் பார்த்ததும் நட்பாக புன்னகைத்தார்கள்.

“ஹாய் லேடிஸ்! குட் மார்னிங்!” என் ஜொள்ளி மலர்ந்து சிரித்தான் நம் நாயகன்.

அவர்களிடம் பதில் மார்னிங் வாங்கிக் கொண்டு ரயில் ஸ்டேசனுக்கு நடையை எட்டிப் போட்டான். புக்கிட் பாத்தோக் ஸ்டேசன் பக்கத்திலேயே வெஸ்ட் மால் எனும் ஒரு மால் இருக்கிறது. அங்கே இவனுக்குப் பிடித்த காபி ஷாப் ஒன்று இருக்கிறது. இது போன்ற காலை வேளைகளில் சமயம் வாய்க்கும் போது அங்கே தான் பசியாறல் சூர்யாவுக்கு.

“குட் மார்னிங் ஆண்ட்டி” என அங்கே வேலை செய்யும் சீன பெண்மணியைப் பார்த்து புன்னகைத்தவன், ஆளில்லாமலிருந்த ஒரு மேசையில் அமர்ந்தான். எப்பொழுதும் சாப்பிடும் பட்டர் டோஸ்ட், ஹால்ப் பாய்ல்ட் முட்டை, டீ என ஆர்டர் செய்தவன் போனை நோண்ட ஆரம்பித்தான்.

மூளை வேண்டாம் வேண்டாமென தடுத்தாலும் பாழாய் போன மனது மீண்டும் ஒரு முறை அந்த வானத்து நிலவின் மேசேஜ்களை படிக்கத் தூண்டியது.

இவன் அரை லூசு என திட்டி இருக்க,

“அப்படிலாம் சொல்லாதீங்க வர்மன்! உங்க மேல நான் முழு லூசாவே இருக்கேன்!” என பதில் போட்டிருந்தாள்.

அவளது உரிமை கலந்த மேசேஜ்கள் மற்றும் செயல்களைப் பார்க்கும் போது இவன் வயிற்றுக்குள் லேசாக பட்டாம்பூச்சி பறப்பது போல இருந்தது.

‘பட்டாம்பூச்சியாம் பட்டாம்பூச்சி! அது பசி வயித்தக் கிள்ளற சத்தம்டா மட்டி’ என தன்னையேத் திட்டிக் கொண்டவன், வந்திருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

ஹால்ப் பாயில் முட்டையில் சோயா சாஸ்சையும் பெப்பரையும் கை கலக்கினாலும், மூளை பாட்டுக்கு அதன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தது.

‘இந்தப் பொண்ணு டைம் பாஸ் பண்ணறதுக்கு என் கூட விளையாடி பார்க்கிறாளோ? அப்படி உண்மையாலுமே பிடிச்சிருந்தா நேருல தானே வரனும்! எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்? நல்ல போயிட்டு இருக்கற என் கேரியர ஸ்பாய்ல் செய்ய யார் பண்ணற சதியோ தெரியலயே இது! ஆனாலும் இப்படி ஒருத்தி அக்கறையா பேசறதும், ஃபோலோ பண்ணறதும் ரொம்ப பிடிக்குதே, என்ன செய்ய! அடங்கு மனமே அடங்கு!’

இதற்கு மேல் போதும் இந்த விளையாட்டு என நினைத்தான் சூர்யா. இனி மேல் அவளுக்கு எந்த வித பதிலும் போட்டு இந்த விளையாட்டைத் தொடர விடக் கூடாது என முடிவெடுத்தவன், சற்று நேரத்துக்கு முன் வந்திருந்த குட் மார்னிங் வர்மன் மேசேஜை தடவிப் பார்த்தான். பெருமூச்சுடன் அதை அப்படியே கிடப்பில் போட்டவன் சாப்பிட ஆரம்பித்தான்.

சற்று நேரத்தில் தன் முதுகை யார் பார்வையோ துளைப்பது போல இருக்க, பின்னால் திரும்பிப் பார்த்தான் சூர்யா. அங்கே ஒரு அழகான அதாவது மிக மிக அழகான பெண்ணொருத்தி குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

‘சாதாரண பிகரே நம்மள பார்க்கறது இல்ல! இதுல இந்தப் பொண்ணு உன்னை முறைச்சுப் பார்க்கறான்னு நெனைக்கறதெல்லாம் வேற லெவல்டா சூர்யா!’ என தன்னைத்தானே திட்டிக் கொண்டவன், நிமிர்ந்து இவனைப் பார்த்தவளுக்கு ஒரு புன்சிரிப்பை பரிசளித்தான். அவளோ அது புண்சிரிப்பு என்பது போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

‘ரைட்டு! சாப்பிடற வேலையைப் பார்ப்போம்’ என இவனும் தன் உணவில் கவனத்தை செலுத்தினான்.

சாப்பிட்டு முடித்தவன் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் என எழுந்து நின்றான். எப்பொழுதும் போல கீழே இறங்கிய பேண்டை மேலே இழுத்து விட்டுக் கொண்டு நடையை எட்டிப் போட்டான் சூர்யா. அவன் பின்னாலேயே அந்தப் பெண்ணும் எழுந்து வருவது ஓரக்கண்ணில் தெரிந்தது. அவன் அதற்கு மேல் அவளைக் கண்டு கொள்ளவில்லை.

அங்கங்கே பார்த்து புன்னகைத்தவர்களுக்கு இவனும் புன்னகையை பதிலாக்கினான். மற்ற நாட்டு செலிபிரிட்டி போல் இல்லாமல் இங்குள்ள செலிபிரிட்டிஸ் மக்களோடு மக்களாக கலந்துப் பழகுவார்கள். சாதாரணமாக மக்கள் நடமாடும் இடங்களில் நடமாடுவார்கள். ஓரிருவர் தான் பெரிய பருப்பு என காட்டிக் கொண்டாலும் பெரும்பாலோர் ப்ரண்ட்லியாகத்தான் இருப்பார்கள்.

காலை நேரங்களில் எப்பவுமே கூட்டம் நெட்டித் தள்ளும் ரயில் நிலையங்களில். மக்கள் வெள்ளத்தோடு கலந்து ரயிலின் உள்ளே நுழைந்தான் சூர்யா. நிற்க கூட இடமில்லை, ஆனாலும் மக்கள் ரயிலின் உள்ளே நின்றிருந்தார்கள். ஜீரோங் ஈஸ்ட் ஸ்டேசனில் இறங்கி இன்னொரு ரயில் மாறினான் இவன். ஜீரோங்கில் இருந்து அடுத்த ஸ்டேஷன் செல்லும் ரயில் பாதை கொஞ்சம் ஆட்டம் கொடுக்கும். ஆகவே ரயில் மெதுவாக ஆடி நகர, அவன் இடுப்பை ஒரு மெல்லிய கரம் இறுக அணைத்துக் கொண்டது.

‘எவ அவ?’ என திரும்பிப் பார்த்தவன் ஆச்சரியமடைந்தான். அந்தக் காபி ஷாப் பெண் தான். ரயில் ஆடிய ஆட்டத்துக்கு இவன் இடுப்பை வளைத்திருந்தாள். இவன் பார்ப்பதைக் கண்டு தலைக் குனிந்தபடி,

“சாரி!” என மெல்ல முணுமுணுத்தவள் கையை அகற்றிக் கொண்டாள்.

இவன் ஒன்றுமே சொல்லவில்லை. ஒரு அழகிய பெண் இடுப்பைப் பிடித்தால் கசக்கவா செய்யும்!

சற்று நேரம் அமைதியாகப் பயணித்தார்கள். மீண்டும் ரயில் குலுக்கிய குலுக்களில் அவன் இடுப்பை பற்றிக் கொண்டாள் அந்தப் பெண்.

‘பிடிக்கறதுனா என் சட்டையைப் புடிச்சுக்கலாம், இல்ல கையைப் புடிச்சுக்கலாம்! இப்படி இடுப்பைப் பிடிச்சு இம்சையைக் கூட்டுறாளே!’ என மனதில் புலம்பியவன், வெளியில் அமைதியாகவே நின்றிருந்தான். மீண்டும் மெல்லிய குரலில் ஒரு சாரி. பரவாயில்லை என்பது போல தலையை மட்டும் ஆட்டி வைத்தான் சூர்யா. அவள் இடுப்பைப் பிடித்திருக்கிறாளே என அவனும் எவ்வளவு நேரம் தான் மூச்சைப்பிடித்துத் தொப்பையை உள்ளிழுத்து நின்றிருப்பான்! அவள் கையை விட்டதும் இவன் அடக்கி வைத்திருந்த மூச்சை விட, தொப்பையும் வெளியே வந்து ஆசுவாசமாக மூச்சு வாங்கியது.

அடுத்த ஸ்டேசன்களில் மக்கள் ஏறத்தான் செய்தார்களே தவிர இறங்கிய பாட்டைக் காணோம். அந்த அழகிய பெண் கூட்ட நெரிசலால் இன்னும் இன்னும் இவனை நெருங்கி நின்றாள். சூர்யாவால் அங்கே இங்கே நகரவே முடியவில்லை. கொஞ்சம் நகர்ந்தால் பக்கத்தில் நின்றிருந்த சீன பெண், இவன் வேண்டுமென்றே அவளை இடிப்பது போல முறைத்தாள். வேறு வழி இல்லாமல் அந்த அழகிய பெண் ஒட்டிக் கொண்டே வரும் அந்த சுகமான இம்சையை தாங்கியப்படி வந்தான் சூர்யா.

தஞ்சோங் பாகார் ஸ்டேசன் வரவும் கூட்டத்தோடு கூட்டமாக இறங்கினான் இவன். அந்த ஏரியாவில் தான் இவனது ஆபிஸ் இருந்தது. இறங்கியவன் ஏதோ ஒரு உந்துதலில் திரும்பி ரயில் பெட்டியைப் பார்க்க, அந்தப் பெண் இவனைத்தான் பார்த்தப்படி நின்றிருந்தாள். இவன் கவனிப்பது தெரிந்ததும் மெலிதாக புன்னகைத்து ஒற்றைக் கண்ணை சிமிட்டினாள்.

‘பார்டா! இந்த பியூட்டி நம்மள பார்த்து பிரியா வாரியர் மாதிரி கண் அடிக்குது! பார்க்க சுமாரா இருந்தாலும் நானும் ஒரு செலிபிரிட்டில்ல! பிரியா என்ன ஐஸ்வர்யா கூட கண்ணடிப்பா!’ என தனக்குத் தானே பூஸ்ட் ஏற்றிக் கொண்டவன், ஒரு துள்ளலுடன் ஆபிஸ்சுக்கு சென்றான்.

சிசில் ஸ்ட்ரீட்டில் இருந்த ஒரு பெரிய பில்டிங்கில் சிறிய இடத்தை இவன் வாடகைக்கு எடுத்து ஆபிஸ் போட்டிருந்தான். சின்ன இடமானாலும் டவுன் ஏரியாவில் இருப்பதால் வாடகை மிக மிக அதிகம். ஆனாலும் இவனுக்குக் கட்டி வந்தது. லாபமும் ஓரளவு பார்க்க முடிந்தது.

இவன் உள்ளே நுழைந்த போது, ஜோசப்பின் கம்யூட்டர் முன்னே அமர்ந்திருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும். அவரும் சிங்கப்பூர் தமிழர்தான். இவன் அம்மாவின் நெருங்கிய தோழி.

சிங்கப்பூரில் வயதானவர்கள் முடங்கி வீட்டிலமராமல் இப்படி எதாவது வேலை செய்துக் கொண்டுதான் இருப்பார்கள். துரித உணவு கடைகளில், கிளினிங் பணிகளில், இன்சுரன்ஸ் செக்டரில் இப்படி எல்லா இடங்களிலும் இவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவதை கண் கூடாக நாம் காணலாம்.

ஜோசப்பின் தான் இவனின் செகரெட்டரி, டீ லேடி, கிளினர் கம் ரிஷப்சனிஸ்ட். இவனின் தொழில் சாம்ராஜ்யத்தின் ஆல் இன் ஆல் அவர். அவரோடு டிசைனிங் டீமில் ஒருவரும், மார்கேட்டிங் கம் சேல்ஸ் டீமில் ஒருவரும் இருக்கிறார்கள். இவர்கள் பணி வாடிக்கையாளர்களைப் பிடித்து, அவர்கள் விருப்பப்படி பதாகைகள், இன்விடேஷன், பெயர் அட்டைகள் இப்படி டிசைன் செய்வதுதான். பிரிண்டிங் பணியை இன்னொரு நிறுவனத்திடம் கொடுத்துவிடுவார்கள். பிரிண்டிங் பிரஸ்சுக்குப் பணம் கொடுத்தது போக இவர்களுக்கு லாபம் தாராளமாக வரும். அதோடு சூர்யா எண்டெர்டெய்ண்ட்மேண்ட் பீல்டில் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கும் குறைவில்லை. பேசி பேசியே வாடிக்கைப் பிடித்து விடுவான் இவன்.

“குட் மார்னிங் பியூட்டி”

“ஓ மை குட்னஸ்!” மும்முரமாக வேலையில் ஆழ்ந்திருந்தவரை இவன் குரல் திகைப்படைய வைக்க, நெஞ்சில் கை வைத்தவாறே முறைத்தார் அவர்.

“இப்படியே அடிக்கடி செய்! பொட்டுன்னு போக போறேன் நான்!” என கடிந்துக் கொண்டார் ஜோ.

“கூல் டவுன் கூல் டவுன்!” என வடிவேலு பாணியில் சொன்னவன்,

“டொண்ட்டாடொய்ங்” என கையில் இருந்த ஸ்டார்பக்ஸ் கப்பை அவர் முன்னே ஆட்டினான்.

“ஃபார் யூ மை குவீன்!” என சொன்னவன் ஒரு கப்பை அவரிடம் கொடுத்து விட்டு மற்றொரு கப்புடன் தனதறைக்கு நடந்தான்.

“தேங்க்ஸ் சூர்யா!” என சிரித்த முகத்துடன் சொன்னார் ஜோ.

“இன்னிக்காச்சும் நீங்க போட்டுக் குடுக்கற குளம்பில இருந்து தப்பிக்கலாம்னு தான் நானே வாங்கிட்டு வந்தேன் பியூட்டி!”

“குளம்பினா?”

“காபிம்மா காபி! சுத்த தமிழ் பேசினா இப்போலாம் யாருக்குமே புரியறது இல்ல! தமிழ் இனி மெல்ல சூசைட் பண்ணிக்கும். ஐ மீன் சாகும்!” என சொல்லி சிரித்தப்படியே வேலையைப் பார்க்கப் போனான் சூர்யா.

நிதி நிர்வாகம் மட்டும் இன்னும் இவன் தான் பார்ப்பான். ஜோ அழகாக அடுக்கி வைத்திருந்த மேசையை பத்து நிமிடங்களில் களைத்துப் போட்டவன், வேலையில் மூழ்கி தானும் களைத்துப் போனான்.

சில மணி நேரத்தில் வயிறு சத்தமிட்டு அழைக்க, கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்று என காட்டியது.

‘ரைட்டு! எனக்கு மட்டும் வயித்துல அலாரம் வச்சு படைச்சிட்டான் அந்தக் கடவுள்! டைம்கு மணி அடிச்சிடுது! சரி, சாப்பிட்டு வந்து கண்டினியூ பண்ணலாம்’ என எழுந்தவன் சைலண்டில் போட்டிருந்த போனை எடுத்துப் பார்த்தான்.

‘ருசியோ ருசி’ ஷோவின் டைரக்டரிடம் இருந்து சில பல மேசேஜ்கள், சிவாவிடம் இருந்து சில மேசேஜ்கள் என போன் நோடிபிகேஷனால் நிறைந்து வழிந்தது.

‘போன் பார்க்கவே ஒரு அசிஸ்டண்ட் வைக்கனும் போலடா!’ என நினைத்துக் கொண்டே ஜோசபினையும் அழைத்துக் கொண்டு உணவு உண்ணப் போனான். ஆபீசில் உள்ள மற்ற இருவரும் வேலை விஷயமாக வெளியே சென்றிருக்க, இவர்கள் இருவர் மட்டும் வெளியே போனார்கள். இங்கு வரும் போதெல்லாம் தன்னிடம் பணி புரிபவர்களுக்கு கண்டிப்பாக உணவு வாங்கிக் கொடுப்பான் சூர்யா. சம்பளம் கொடுப்பது போதாதா சாப்பாட்டு செலவு வேறு ஏன் என ஜோ அவ்வப்பொழுது கடிந்துக் கொள்வார்.

“உங்க மூனு பேருக்கு சாப்பாடு குடுக்கறதுல நான் ஒன்னும் ஓட்டாண்டியா ஆகிட மாட்டேன்! வஞ்சகமில்லாம சாப்பிடனும்! மத்தவங்களுக்கு சாப்பிடவும் குடுக்கனும் ஜோ! எங்க அம்மா அடிக்கடி இத சொல்லுவாங்க!” என புன்னகைப்பான்.

இருவரும் மெல்ல நடந்து ஆயேஷா கிட்சன் எனப்படும் உணவகத்துக்கு சென்றார்கள். உணவை ஆர்டர் செய்வது ஒரு புறம் என்றால், லஞ்ச் டைமில் இடம் பிடிப்பது பெரிய பாடாக இருக்கும். அதுவும் தனியாக வருபவர்களின் பாட்டை சொல்லவே வேண்டாம். டிஷூ பேப்பர் வைத்து இடத்தை ச்சோப்(உறுதி செய்வது என் சொல்லலாம். இது மலாய் வார்த்தையா அல்லது சீன வார்த்தையா என்பது கூட தெரியவில்லை. எல்லா மக்களும் இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள் சிங்கப்பூர், மலேசியாவில்) செய்துவிட்டு உணவு வாங்கி வருவார்கள்.

டீஷூ இருந்த இடங்களை விடுத்து வேறு இடம் தேடி அமர்ந்தார்கள் இருவரும். இவனைப் பார்த்து புன்னகைத்தவர்களுக்கு பதில் புன்னகை வழங்கியவன், உணவு வாங்கி வந்தான். பேசியபடியே சாப்பிட்டார்கள் இருவரும்.

“எனக்கு மட்டும் ஒரு மகள் இருந்தா கண்டிப்பா உனக்குக் கட்டிக் குடுத்துருவேன் சூர்யா”

“போங்க ஜோ! உங்களுக்குத் தான் பொண்ணு இல்ல! உங்க சொந்தக்காரங்களுக்குக் கூடவா ஒரு பொண்ணு இல்ல? குடுக்கறதுன்னா குடுக்கலாம்! உங்களுக்கு மனசு இல்ல”

“என் தம்பி சைட் சொந்தத்துல ஒருத்தி இருக்கா! பேரு மோனிக்கா”

“வாவ் ஜோ! சொல்லவே இல்ல! மோனிக்காவாச்சும் உங்கள மாதிரி இல்லாம அழகா இருப்பாளா?” என சொல்லி கெக்கேபெக்கேவென சிரித்தான் இவன்.

“ஓ! ரொம்ப அழகா இருப்பா சூர்யா! என்ன நீ தான் இனி படிக்க வைக்கனும் அவள”

“அதுக்கு என்ன, நல்லா படிக்க வச்சு என் பிரிண்டிங் பிஸ்னஸ எழுதி வச்சிடறேன் ஜோ”

“தொழில்லாம் அவ டேக் ஓவர் பண்ண இன்னும் ஒரு பதினெட்டு வருஷம் ஆகும் சூர்யா”

“வாட்!!!!! ஏன் அவ்வளவு வருஷம்?”

“ஆமா சூர்யா! பொண்ணுக்கு இப்போத்தான் வயசு ரெண்டு! நீ அவள படிக்க வச்சு, தொழில் கத்து குடுத்து, எல்லாத்தையும் ஒப்படைக்க எப்படியும் அவ்ளோ வருஷம் ஆகும்ல!” என கூலாக இவர் சொல்ல, இவர்கள் பின்னால் யாரோ கிளுக்கி சிரிக்கும் சத்தம் கேட்டது.

இவன் பின்னால் திரும்பிப் பார்க்க, யாரோ ஒரு பெண்ணின் ஷோல் போட்டு மூடிய முதுகுபுறம் மட்டும் தெரிந்தது.

“இப்படி ஊரே என்னைப் பார்த்து சிரிக்கற அளவுக்கு ஜோக் சொல்லிட்டீங்கல்ல! இந்த நாள், உங்க காலண்டர்ல குறிச்சு வச்சிக்குங்க ஜோ! இந்த சூர்யா ஊரே பார்த்து மூக்கு மேல விரல வைக்கற அளவுக்கு ஒரு பேரழகிய கல்யாணம் முடிக்கத்தான் போறான்! அத நீங்க பார்க்கத்தான் போறிங்க!” என சிரிப்புடன் சவால் விட்டான்.

“நான் மூக்கு மேல விரல வைக்கற அளவுக்கு கப்ஸ் அடிக்கற பொண்ணயா கட்டப் போற! வாட் அ பிட்டி, வாட் அ பிட்டி!”

மீண்டும் பின்னால் இருந்து சிரிப்பு சத்தம்.

“அம்மா தாய்க்குலமே, போதும் விட்டுருங்க என்னை! கிளம்பலாம்!”

இருவரும் புன்னகையுடனே அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள். போகும் போது சிரித்த அந்தப் பெண்ணை இவன் திரும்பிப் பார்க்கவும் தவறவில்லை.

‘அட, நம்ம பிரியா வாரியர்!’

பேசலாம் என அவள் அருகே இவன் செல்ல விழைய, அவசரமாக எழுந்து நடந்து விட்டாள் அவள்.

‘ரைட்டு! தூரமா இருந்தாதான் கண்ணடிக்க தைரியம்லாம் வரும் போல! கிட்ட வந்தா கிலி அடிச்சு ஓடுதுங்க!’

பெருமூச்சுடன் கிளம்பி ஆபிஸ் போனான் சூர்ய வர்மன்.

 

பாடுவான்….