Oviyam14

“வாம்மா அமுக்குணி… எவ்வளவு சாமர்த்தியமா எங்க ஹீரோவை உன்னோட முந்தானையில முடிஞ்சு வெச்சுக்கிட்டே!” ஹாஸ்பிடலுக்குள் நுழைந்த மாதவியை நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள் ரஞ்சிதா.

மாதவி எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சிரித்தாள். அவர்களை நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார்கள் பெண்கள் இருவரும். ஹாஸ்பிடல் ஸ்டாஃபை திருமணத்திற்கு மட்டும் அழைத்தால் போதுமென்று இரு வீட்டாரும் முடிவு பண்ணியதால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

“இப்படிச் சிரிச்சுச் சிரிச்சுத்தானே அந்த மனுஷனை மயக்கிட்டே! இன்னும் எதுக்கு சிரிக்கிறே?” கடுப்பாகச் சொன்னாள் மேனகா.

“நிச்சயதார்த்த ஃபோட்டோஸ் பார்த்தீங்களா? நல்லா இருக்கா?” இது மாதவி.

“சூப்பரா இருக்கு மாதவி! டாக்டர் ஈன்னு இளிச்சுட்டே இருக்கார். அப்படி என்ன சொக்குப் பொடியடிம்மா போட்டே அந்த மனுஷனுக்கு?!” பெண்கள் இருவரும் மாதவியிடம் வம்பு பண்ணிக் கொண்டிருக்கும் போதே மேனகாவின் தனிப்பட்ட எண் சிணுங்கியது. சிரித்தபடியே கைபேசியை எடுத்தவள்,

“ஹலோ.” என்றாள். அந்தப் புறம் என்ன சொன்னார்களோ, மேனகாவின் முகம் இருண்டு போனது.

“ஐயையோ! என்ன ஆச்சு? இப்போ எப்படி இருக்கார்?” வார்த்தைகள் பதட்டமாக வந்து விழ மாதவியும் ரஞ்சிதாவும் பயந்து போனார்கள்.

“மேனகா, என்ன ஆச்சு?” ரஞ்சிதாவின் குரல் மேனகாவின் காதுகளை எட்டியது போலவே தெரியவில்லை. அவள் கண்களிலிருந்து கண்ணீர் சரசரவென வழிந்தது.

“சீக்கிரமா ஹாஸ்பிடலுக்குக் கூட்டிக்கிட்டு வாங்க சார். ப்ளீஸ் சார். சீக்கிரமா வாங்க.” அழுதுகொண்டே கூறி முடித்தவள் நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தாள்.

“ஏய்! என்னடி ஆச்சு? ஏதாவது சொல்லித் தொலையேன்.‌ ஏன் இப்போ இப்படி அழுற?” ரஞ்சிதா மேனகாவை உலுக்கினாள்.

“அவரு… அவருக்கு… நெஞ்சுவலி வந்திருக்கு.” கேவினாள் மேனகா.

“யாருக்குடீ? ஒழுங்காச் சொல்லேன்.”

“உங்க வீட்டுக்காரருக்கா?” மாதவி சட்டென்று கேட்கவும் ‘ஹோ’ வென்று அழுதபடி தலையை ஆட்டினாள் மேனகா.

“ஹாஸ்பிடலுக்கு… கொண்டுவரச் சொல்லி… இருக்கேன்.”

“சரிசரி பயப்படாதே.‌ ஒன்னும் ஆகாது.”

“மயங்கி விழுந்துட்டாராம்.” மேனகா தடுமாறிய போது ரஞ்சிதா சட்டென்று மாதவியை அண்ணார்ந்து பார்த்தாள். மாதவிக்கும் கொஞ்சம் கலக்கமாக இருந்தது. மயக்கம் ஏன் வந்தது?

பெண்கள் இருவரையும் விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்தவள் செழியனை உடனேயே அழைத்தாள். அன்றைக்கு அவனுக்கு விடுமுறை நாள். இரண்டு ரிங்கிலேயே ஃபோனை எடுத்தான் டாக்டர்.

“மாதவி டார்லிங்… என்ன இந்த நேரத்துல?” குரலிலேயே தூக்கக் கலக்கம் தெரிந்தது. நேற்று அவனுக்கு ட்யூட்டி முடியும் போதே நள்ளிரவாகி இருந்தது. உறங்குவான் என்று தெரியும். இருந்தாலும் தொந்தரவு பண்ணினாள் பெண்.

“டாக்டர்! மேனகா ஹஸ்பென்டுக்கு நெஞ்சு வலி வந்திருக்கு. நேரா ஹாஸ்பிடல் கொண்டு வர்றாங்க. மயங்கி விழுந்திருக்கார்.” அவள் பேச ஆரம்பித்த போதே அவள் குரலின் பதட்டம் கேட்டுப் போர்வையை விட்டு எழுந்து விட்டான் செழியன்.

“ஓ… சந்திரமோகன் அங்கிள் இருக்காங்களா?”

“தெரியலையே…” இவள் சொல்லும் போதே அவன் ப்ரஷ் பண்ணும் சத்தம் கேட்டது.

“பரவாயில்லை… வந்த உடனேயே ட்யூட்டியில இருக்கிற டாக்டரை ‘ஈ.ஸி.ஜி’ எடுக்கச் சொல்லு. திருப்தியா இல்லைன்னா ‘என்ஜியோக்ராம்’ பண்ணச்சொல்லு. எதுக்கும் தியேட்டரை ரெடி பண்ணச் சொல்லு. நான் இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.”

“டாக்டர்… சீக்கிரமா வாங்க… கவனம். ட்ரைவரைக் கூட்டிக்கிட்டு வாங்க. நீங்க ட்ரைவ் பண்ண வேணாம்.”

“சரிடா… வந்தர்றேன்.” ஆணைகளைப் பிறப்பித்துவிட்டு அவன் துரித கதியில் ரெடியாக மாதவி இங்கு அவன் சொன்ன அனைத்தையும் செய்ய ஆயத்தமானாள்.

மேனகாவின் கணவரை கொஞ்ச நேரத்திலேயே ஹாஸ்பிடல் கொண்டு வந்திருந்தார்கள். நேராக ‘ஐ.ஸி.யூ’ ற்கே கொண்டு போய்விட்டார்கள்.‌ அவசர அவசரமாக ஒரு ‘ஈ.ஸி.ஜி’ எடுக்கப்பட, அது அத்தனை திருப்தியாக இருக்கவில்லை. என்ஜியோக்ராம் எடுப்பதற்காக எல்லா ஏற்பாடுகளும் பண்ணிக்கொண்டிருக்கும் போதே செழியனும் வந்து விட்டதால் அவனே அனைத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான்.

செழியனைப் பார்த்த பிறகுதான் மாதவிக்கு மூச்சு சீராக வந்தது. ரிசப்ஷனில் யாரோ ஒருவர் நிற்கவேண்டும் என்பதால் ரஞ்சிதா அங்கேயே நின்றிருந்தாள். மேனகாவைச் சமாளிப்பதற்குள் மாதவிக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

“மாதவி! எனக்குப் பயமா இருக்கு மாதவி. அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் செத்துப் போயிடுவேன் மாதவி.”

“ஐயையோ! என்னப் பேச்சு இது? ஒன்னும் ஆகாது.‌ நீங்க கவலையே படாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் நல்ல படியா சரியாயிடும்.”

“சரியாயிடும் இல்லை மாதவி?”

“கண்டிப்பா. கவலையே படாதீங்க.” ஆறுதலாக மாதவி இரண்டு வார்த்தைகள் பேசிக்கொண்டிருக்கும் போதே செழியனின் தலை தெரிந்தது.

“டாக்டர்! அவருக்கு என்ன ஆச்சு? எப்படி இருக்கார்?” செழியனைப் பார்த்த மாத்திரத்தில் அவனிடம் பாய்ந்து போனாள் மேனகா. மாதவிக்கும் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.

“ப்ளாக் ஒன்னு இருக்குங்க.”

“ஐயையோ! டாக்டர்!”

“பயப்பாதீங்க, ஆனா இவ்வளவு நாள் எப்படிக் கவனிக்காம விட்டீங்க? கிட்டத்தட்ட எண்பது சதவீதம் ப்ளாக் ஆகியிருக்கு.”

“நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லுவாங்க. ஆனா வீட்டுல இருக்கிறப் பெரியவங்க வாயுக் கோளாறுன்னு சொல்லியே என் வாயை அடைச்சிருவாங்க டாக்டர்.”

“சரி விடுங்க… இப்போ ‘ஸ்டென்ட்’ போட்டுரலாம். சர்ஜரி தேவையில்லை.” செழியன் சொன்னபோது மேனகாவின் முகம் கொஞ்சம் கவலையைக் காட்டியது.

“உங்களுக்கு ஓகே தானே மிஸஸ்.மேனகா?”

“டாக்டர்…” மேனகா எதையோ சொல்லத் தயங்க மாதவி அவளின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“டாக்டர்… அவங்களுக்கு ஓகேதான். நீங்க மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்க.” மாதவி கண்களால் செழியனுக்கு ஜாடை காட்டத் தயக்கத்தோடே நகர்ந்தான் செழியன்.

“மாதவி… நிறையச் செலவாகுமே? பணத்துக்கு நான் எங்க போவேன்?”

“அதெல்லாம் அப்புறமாப் பார்த்துக்கலாம். இப்போ நடக்க வேண்டியதைப் பார்ப்போம்” மேனகாவின் கரத்தை ஒரு முறை அழுத்திக் கொடுத்த மாதவி செழியனை நோக்கிப் போய்விட்டாள்.

“மாதவி… எனி ப்ராப்ளம்?” இது செழியன்.

“டாக்டர்… பணம்தான் ப்ராப்ளம்.”

“ஓ… அதை அப்புறமாப் பார்த்துக்கலாம். ஹாஸ்பிடல் ஸ்டாஃப் எங்கிறதால அங்கிள் எப்படியும் ஹெல்ப் பண்ணுவாங்க.”

“கண்டிப்பா…”

“வேற ஒரு பிரச்சனையும் இல்லையே? பேஷன்ட்டோட ரிலேடிவ்ஸ் சம்மதிக்கணும். இல்லைன்னா பின்னாடி பிரச்சனை ஆகிரும்.”

“இல்லையில்லை. நீங்க ஆகவேண்டியதைப் பாருங்க டாக்டர்.”

அதன்பிறகு செழியன் தாமதிக்கவில்லை. தனது பணியில் இறங்கிவிட்டான். இரண்டு மணிநேரக் களேபரத்திற்குப் பின்பு டாக்டரின் ரூமிற்குக் காஃபியோடு வந்தாள் மாதவி. அப்போது அவளுக்கும் லன்ச் ப்ரேக்.

“மாதவி, வா வா.”

“டாக்டர் சாப்பிடுறீங்களா, இல்லை காஃபியா?”

“காஃபியே போதும் மாதவி, நீ சாப்பிடு.”

“கொஞ்சமாச் சாப்பிடுங்களேன்.”

“ம்… முதல்ல காஃபியைக் குடு.” கப்பை அவனிடம் கொடுத்தவள் லன்ச் பாக்ஸைத் திறந்தாள். அன்றைக்குச் சிக்கன் பிரியாணி.

“வாசனை தூக்குது.”

“அம்மாவோட சமையல் எப்பவுமே நல்லாத்தான் இருக்கும்.”

“ஓ… அப்போ இன்னைக்கு டேஸ்ட் பார்த்திட வேண்டியதுதான்.” அவன் ஆர்வமாகச் சொல்லவும் முதல் கவளத்தை அவனுக்கே ஊட்டி விட்டாள் மாதவி.

“நல்லா இருக்கா?”

“எப்படி இல்லாமப் போகும். குடுக்கிறது நம்ம ஆள் கையில்லை!” அவன் கெத்தாகச் சொல்லவும் புன்னகைத்தாள் பெண்.

“ஏன் மாதவி? மேனகா வீட்டுல என்ன பிரச்சனை?”

“பிரச்சனைன்னு ஒன்னுமில்லைங்க. கொஞ்சம் பெரிய குடும்பம். மாமனார், மாமியார், கல்யாணத்துக்குத் தயாரா நிக்குற நாத்தனார்னு… இவங்க ரெண்டு பேரோட வருமானமும் தான்.”

“ஓ… குழந்தைங்க?”

“ம்ஹூம்… நாத்தனாருக்குக் கல்யாணம் ஆகுறவரை எதுவும் வேணாம்னு வீட்டுக்காரர் சொல்லிட்டாராம்.”

“அடப்பாவமே!”

“ம்… ஆனா லவ் மேரேஜ் தான். அவ சந்தோஷமாத்தான் இருக்கா.”

“அப்படீன்னாச் சரிதான். இத்தனைக் குறும்புப் பண்ணுற மேனகாக்குள்ள இவ்வளவு விஷயமா?”

“ம்… ஆனா எதைப் பத்தியும் அலட்டிக்காம ரெண்டும் கலகலன்னு இருக்குங்க. ரெண்டு பேரும் சேந்தா ரிசப்ஷன் களைகட்டும்.”

“ம்… அதான் தெரியுமே. வந்த முதல்நாளே அங்கிள் சொல்லிட்டாரு. ரெண்டும் சரியான வாலுங்கன்னு.”

“இப்பக்கூட ரெண்டும் என்னை நல்லா ஓட்டிக்கிட்டுத்தான் இருந்தாங்க.”

“என்னவாம்?”

“நான் உங்களை எம்முந்தானையில முடிஞ்சு வச்சிருக்கேனாம்.”

“அப்படியா?” அவன் குறும்பாகக் கேட்கவும் அவனை முறைத்தவள் அவன் வாயில் சிக்கன் பீஸைத் திணித்தாள்.

“விட்டா நீங்களும் அவங்களோட சேர்ந்து என்னைக் கிண்டல் பண்ணுவீங்க. நான் கிளம்புறேன்.” அவள் அவசரமாக உண்டு முடித்துவிட்டுக் கிளம்பவும் வழிமறித்தான் டாக்டர்.

“அலங்காரத்துல நேத்து எவ்வளவு அழகா இருந்தே தெரியுமா?” கிறக்கமாகச் சொன்னபடி அவன் நெருங்க,

“டாக்டர்… இது ஹாஸ்பிடல்.” அவசரமாகச் சொல்லிவிட்டு விலகிப் போய் விட்டாள் மாதவி. டாக்டர் பெரிதாக ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

0-0-0-0-0

“ஏன் உங்களுக்கு அப்படியொரு நினைப்பு வரலை மாமா?” காரை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு உள்ளே போன இளஞ்செழியனின் காதில் சித்ராவின் குரல் கேட்டது.

காலையில் விழுந்தடித்துக்கொண்டு போனவன் இப்போதுதான் வீடு திரும்புகிறான். பசி வயிற்றைக் கிள்ளியது. மாதவி சாப்பாட்டை நீட்டியபோது அவனுக்கு அவ்வளவு பசி. இருந்தாலும் அவளுக்கும் பசிக்குமே என்ற காரணத்தால் தான் வெறும் டேஸ்ட் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டான்.

“ஏய் பெரிய மனுஷி! என்ன உன்னோட குரல் ரோடு வரை கேக்குது? அம்மா! பசிக்குதும்மா.” பேசியபடியே டைனிங் டேபிளில் உட்கார்ந்தான் செழியன்.

“சொல்லுங்க மாமா. ஏன்? அப்படி எங்கிட்ட என்ன குறையைக் கண்டீங்க நீங்க?” சித்ரா ஆவேசமாகப் பேசவும் தான் ஏதோ முக்கியமான பேச்சுவார்த்தை போகிறது என்று தோன்றியது செழியனுக்கு. கண்களால் அர்ச்சனாவிடம் என்னவென்று கேட்டான். அவளுமே கலவரமாய் நிற்பதைப் பார்த்துவிட்டு ப்ளேட்டை எடுத்துத் தானே உணவைப் பரிமாறிக் கொண்டான் செழியன்.

“என்னப் பேச்சு இது சித்ரா?” இது கருணாகரன்.

“வேற எப்படி மாமா பேசச் சொல்லுறீங்க?”

“வாயை மூடு சித்ரா. இதென்ன இது? மாமான்னு மரியாதையே இல்லாம மல்லுக்கு நிக்குற?” இப்போது விஜயலக்ஷ்மி மகளைக் கண்டித்தார்.

“இங்கப்பாரும்மா சித்ரா, எங்க யாரோட மனசுலயும் இப்படியொரு எண்ணம் வரலை.” இது கற்பகம்.

“ஏன் அத்தை வரலை? என்னோட வருத்தமே அதுதான். உங்களுக்கெல்லாம் ஏன் அப்படியொரு எண்ணம் வரலை?”

“சரி… எங்களுக்குத்தான் வரலை. உனக்கு வந்துதில்லை? அப்போ நீ ஏன் அதை எங்ககிட்டச் சொல்லலை?”

“மண்டபத்துல இருந்த யாரோ ஒரு மூனாவது மனுஷிக்குத் தெரியுது, ஏன் உங்களுக்குத் தெரியலையா? எந்தப் பொண்ணாவது வந்து உங்கப் பையனை எனக்குக் கட்டிக் குடுங்கன்னு கேப்பாளா?” செழியனின் கை அந்தரத்தில் நின்றது. கையில் அவன் எடுத்த கவளம் வாய் வரை போகவில்லை.

இதுவரை சித்ரா சம்பந்தப்பட்ட ஏதோவொரு வாக்குவாதம் போகிறது. நாம் உண்டு முடித்தபின்பு சாவகாசமாக விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்த செழியன் திடுக்கிட்டுப் போனான். என்ன நடக்கிறது இங்கே?!

“ஹேய் சித்ரா! என்னப் பேசுற நீ?” இப்போதுதான் வாயைத் திறந்தான் டாக்டர்.

“வாங்க அத்தான். இப்போதான் உங்களுக்கு என்னைத் தெரிஞ்சுதா?” கேலியாக வந்தது சித்ராவின் பேச்சு. சுற்றி இருந்தவர்களை ஒரு முறை செழியனின் கண்கள் ஆராய்ந்தது. எல்லோரின் முகமும் தர்மசங்கடத்தையே காட்டியது.

“அத்தை… இவ என்னப் பேசுறா?”

“அவ கிடக்குறா செழியா பைத்தியக்காரி. முட்டாள் மாதிரிப் பேசுறா.”

“அம்மா!”

“வாயை மூடு சித்ரா… உன் வயசென்ன? செழியன் வயசென்ன? யாரு உம்மனசுல இப்படியொரு தேவையில்லாத எண்ணத்தை விதைச்சது?”

“வயசுதான் உங்களுக்கு இப்போப் பெரியப் பிரச்சனையாப் போச்சா?” வார்த்தைகள் தடித்துக் கொண்டே போனது. கருணாகரன் இப்போது குரலைச் செருமிக் கொண்டார்.

“இங்கப்பாரு சித்ரா. நீ என்னோட அக்காப் பொண்ணு. உனக்கில்லாத உரிமை இந்த வீட்டுல வேற யாருக்கும் இல்லை, அதை நான் ஒத்துக்கிறேன். இதை நீ எங்கிட்ட ஆரம்பத்துலேயே சொல்லி இருக்கலாமே? நிச்சயதார்த்தம் முடிஞ்சு, கல்யாணத்துக்கும் நாள் குறிச்சதுக்கு அப்புறமா இப்படிப் பேசினா எப்படி?”

“தப்புப் பண்ணிட்டேன் மாமா. என்னால இதைத் தாண்டி வர முடியும்னு தான் நினைச்சேன். ஆனா அந்த மாதவிக்குப் பக்கத்துல அத்தானைப் பார்த்தப்போ…” அவள் பல்லைக் கடித்துக்கொண்டு சொல்ல அதற்கு மேல் அங்கே செழியன் இருக்கவில்லை.

உட்கார்ந்திருந்த நாற்காலியை வேகமாகத் தள்ளியவன் சின்க்கில் கையைக் கழுவிக்கொண்டு வெளியேறிவிட்டான். அர்ச்சனா அவன் பின்னோடு ஓடி வந்தாள்.

“அண்ணா… எங்கப் போறே?”

“இந்த வீட்டுல என்ன நடக்குது அர்ச்சனா? பார்க்கவே சகிக்கலை.” பின்னால் ஓடிவந்த தங்கைக்காக நின்றவன் கர்ஜித்தான்.

“காலையில இருந்தே இதைத்தான் பேசிக்கிட்டு இருக்கா. நீ ஹாஸ்பிடல் போனதுல இருந்து ஒரே அழுகை… சண்டை.”

“இவளுக்கென்னப் பைத்தியமா பிடிச்சிருக்கு? லூசு மாதிரிப் பேசுறா? மாதவி என்னோட வாழ்க்கையில வரலைன்னாக் கூட இவளை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா? உன்னால அதைக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியுதா அர்ச்சனா?”

“ம்ஹூம்…” அர்ச்சனாவின் தலை இடம் வலமாக ஆடியது.

“அப்போ எப்படி இவளால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது? மாதவியைப் பத்தி இங்க யாராவது தப்பாப் பேசினா நடக்கிறதே வேற. அத்தைக்காகப் பார்க்கிறேன்.” முகம் சிவக்கக் கத்தியவன் காரை எடுத்துக்கொண்டு விரைந்து விட்டான். அர்ச்சனாக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவசரமாக வெளியே ஓடிவந்த கற்பகமும் கத்திவிட்டுப் போகும் மகனின் வார்த்தைகளைக் கேட்டிருந்தார். அவர் முகத்திலும் கவலையின் சாயலே தெரிந்தது.

“ரொம்பக் கோபப்பட்டானா?”

“முகமெல்லாம் சிவந்து போச்சும்மா.”

“ஆண்டவா! இது என்னப் புதுக் குழப்பம்? எம்புள்ளைக் கல்யாணத்துல இத்தனைத் தடங்கல் வரணுமா?” கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் கற்பகம்.

0-0-0-0-0

அந்த ப்ளாக் ஆடி நேராக ஹாஸ்பிடல் வளாகத்தில் போய் நின்றது. காரைப் பார்க் பண்ணிய செழியன் உள்ளேப் போனான். ரஞ்சிதா டாக்டரை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள். லேசாகப் புன்னகைத்தவன் அவளைக் கடந்து விட்டான்.

மேனகாவின் கணவனைப் பார்க்க வந்தது போல் பெயர் பண்ணிக்கொண்டு பேஷன்ட்டைப் பார்த்தவன் முகத்தில் திருப்தி தெரிந்தது. எல்லாம் நார்மலாக இருந்தது.

“தான்க் யூ டாக்டர்.” கண்கள் திரள நன்றி சொன்னவளைப் பார்த்துப் புன்னகைத்தான் இளஞ்செழியன்.

“இனிக் கொஞ்சம் கவனமா இருக்கணும். ஃபூட், எக்சர்சைஸ் எல்லாத்தையும் கொஞ்சம் கவனிங்க.”

“ஓகே டாக்டர்.” சொல்லிவிட்டு வெளியே வந்தவனை அப்போதுதான் கண்டாள் மாதவி.

“டாக்டர்! நிம்மதியா வீட்டுல தூங்காம இங்க என்னப் பண்ணுறீங்க?”

“உனக்கு இன்னைக்கு ஷிஃப்ட் எத்தனை மணிக்கு முடியுது மாதவி?”

“மூனு மணிக்கு.”

“ஓ…” கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான் இளஞ்செழியன். இரண்டு என்றது.

“சரி… இன்னும் கொஞ்ச நேரந்தான் இருக்கு. நான் வெளியே கார்ல இருக்கேன். நீ ட்யூட்டியை முடிச்சிட்டு வந்திடு.”

“ம்… என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”

“ம்ப்ச்… ஒன்னுமில்ல… நீ வேற என் உயிரை வாங்காத.” அவன் சலித்துக் கொள்ள அவள் மௌனமாகிப் போனாள்.

***

ட்யூட்டியை முடித்துக்கொண்டு சந்தனமும் மெரூனும் கலந்த அந்த எம்ப்ராய்டரி சுடிதாரில் காரை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மாதவி.

சீட்டை நன்றாகச் சரித்துவிட்டுக் கொண்டு தூரத்தில் வரும் தன் இன்பத்தின் முழு உருவத்தை ரசித்துக் கொண்டிருந்தான் இளஞ்செழியன். அவளைப் பார்த்த மாத்திரத்தில் குப்பென்று மனதுக்குள் பரவும் இந்த மகிழ்ச்சி என்றைக்கும் குறைந்து விடக்கூடாது ஆண்டவா என்று அவன் மனம் வேண்டிக்கொண்டது.

காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பெண். தலை கலைந்திருக்க, அவன் கண்களும் லேசாகச் சிவந்திருந்தது. தூக்கமில்லாத அவன் முகம் முழுவதும் களைப்பே தெரிந்தது.

“கேன்டீன்ல ஒரு காஃபி சாப்பிடலாமா?”

“ம்ஹூம்… எங்கேயாவது வெளியே போகலாம் மாதவி. உங்க அப்பா நம்பர் குடு.” அவள் கொடுக்கவும் அதை டயல் செய்தான்.

“ஹலோ.” உமாசங்கரின் குரல் மாதவிக்கும் கேட்டது.

“நான் இளஞ்செழியன் பேசுறேன்.”

“சொல்லுங்க மாப்பிள்ளை.”

“இல்லை… மாதவிக்கு இப்போதான் ட்யூட்டி முடிஞ்சுது. நானும் இப்போ ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். அதான் கொஞ்சம் ஷாப்பிங் கூட்டிட்டுப் போகலாம்னு…”

“தாராளமாப் போங்க மாப்பிள்ளை. ரொம்ப லேட்டாகுமா?”

“இல்லையில்லை… ஆறு மணிக்கு முன்னாடி வந்திருவோம்.”

“அப்போச் சரி. பத்திரமாப் போய்ட்டு வாங்க.”

“தான்க்ஸ் மாமா.” ஃபோனை அணைத்தவன் காரை ஸ்டார்ட் செய்தான். இப்போது மாதவியின் ஃபோன் அலறியது. கற்பகம் அழைத்துக் கொண்டிருந்தார்.

“ஹலோ அத்தை…”

“மாதவி… செழியன் உங்கூட இருக்கானா?”

“ஆமா…”

“கொஞ்சம் பார்த்துக்கோம்மா… கோபமா இருக்கானா?”

“ம்…” ட்ரைவ் பண்ணிக்கொண்டிருந்தவன் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள் பெண்.

“வீட்டுல ஒரு சின்னப் பிரச்சனை.”

“ஓ…”

“என்னன்னு அவனே உங்கிட்டச் சொல்லுவான். தேவையில்லாமக் கோபப்பட்டுக்கிட்டுக் கிளம்பி வந்துட்டான். சரியாச் சாப்பிடவுமில்லை. கொஞ்சம் என்னன்னு பாரும்மா.”

“சரிங்கத்தை.” அவள் பேசி முடித்த போது கார் நகரைத் தாண்டி வெளியே போய்க் கொண்டிருந்தது.

“பசிக்குது… ஏதாவது சாப்பிடலாமா?”

“ம்…” அவன் காரை ஒரு தரமான ஹோட்டல் முன்பு நிறுத்த இருவரும் இறங்கிக் கொண்டார்கள். அத்தனை கூட்டம் இருக்கவில்லை. அமைதியான ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டார்கள். எப்போதும் அவனுக்கு எதிர்ப்புறமாக அமர்பவள் அன்று அவனருகே அமர்ந்து கொண்டாள். ஆனால் எதையும் கவனிக்கும் நிலையில் செழியன் இல்லை.

“சாப்பிடுறீங்களா?”

“இல்லை மாதவி, காஃபி போதும்.”

“பகலும் ஒழுங்காச் சாப்பிடல்லைன்னு அத்தை வருத்தப்பட்டாங்க…”

“ம்ப்ச்… ரெண்டு காஃபி.” வந்த பேரரிடம் அவன் ஆர்டர் பண்ண அவள் தடுத்தாள்.

“ரெண்டு ப்ளேட் இட்லி கொண்டு வாங்க.”

“மாதவி… வேணாம்னாக் கேளு.”

“ப்ளீஸ்… எனக்காக.” அவன் கரத்தைப் பிடித்துக்கொண்டு அவள் கெஞ்ச ஒரு பாடாகச் சம்மதித்தான். இரண்டு பேரும் அமைதியாக உண்டு முடித்தார்கள்.

“இப்போ எங்கேப் போறோம்?”

“எங்கேயாவது… தனியா. நீயும் நானும் மட்டும் இருக்கிற மாதிரி.” அவன் குரல் சீறியது.

“சரி… போகலாம் வாங்க.” அவன் பில்லைப் பே பண்ணும் வரை அமைதியாக இருந்தாள் மாதவி. அப்படி என்னப் பிரச்சனையாக இருக்கும்? கார் வேமாகப் போய்க் கொண்டிருந்தது. மௌனத்தைக் கலைக்க மாதவி ரேடியோவை ஆன் பண்ணினாள்.

‘நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்… நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்…’ பாடல் இனிமையாக வர அவன் முகத்தில் இதுவரை இருந்த கடினம் லேசாகக் காணாமற் போனது.

‘கண்ணே என் கண் பட்ட காயம்… கை வைக்கத் தானாக ஆறும்…’ இப்போது அவன் விரல்கள் ஸ்டியரிங்கில் மெதுவாகத் தாளம் போட்டன. மாதவிக்கு இப்போதுதான் மூச்சு இயல்பாக வந்தது. காரை ஒரு கிளைப் பாதையில் திருப்பியவன் ஒரு மரத்தடி நிழலில் நிறுத்தினான். பேச அவன் விருப்பப் பட்டாற் போலத் தோன்றவில்லை மாதவிக்கு.

“வீட்டுக்குப் போய்த் தூங்கலையா என்ன?” மெதுவாக அவளே ஆரம்பித்தாள்.

“எங்க… சாப்பாடு கூட யாரும் போடலை…”

“ஓ…”

“அந்த சித்ரா வாய்க்கு வந்ததைப் பேசுறா, இவங்க எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு நிக்குறாங்க.” அவன் கோபமாகச் சொல்லவும் மாதவி திடுக்கிட்டுத் போனாள். இதில் சித்ரா எங்கே வந்தாள்?

“சித்ராக்கு என்னவாம்?”

“அவ கெடக்குறா கழுதை… என்னென்னமோப் பேசிக்கிட்டு…”

“என்ன… பேசினாங்க?” மாதவிக்கு வாய் உலர்ந்தது. என்ன வரப்போகிறது என்று அவளுக்குப் புரிந்தது. கண்கள் கலங்க செழியனைத் திரும்பிப் பார்த்தாள்.

“ஏய்! உனக்கு என்னடீ ஆச்சு? எதுக்கு நீ இப்போ அழுறே?” அவன் ஆச்சரியப்பட, ஹோவென்று அழுதபடி அவனுக்குள் புகுந்து கொண்டாள் மாதவி.

“மாதவி… என்னை நீயும் ஆத்திரப்படுத்தாதே. நீ அழுறதைப் பார்த்தா உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லைன்னு தோணுது.”

“அப்படியில்லை… அவங்க என்ன சொன்னாங்க?” அவள் குரல் விம்மியது.

“அதை என் வாயால நான் சொல்ல மாட்டேன். கூடப் பொறந்தது மாதிரி நினைச்சிருந்தேன். என்னப் பேச்சுப் பேசுது. சீச்சீ…”

“உங்கப்பா என்ன சொன்னாங்க?” சரியாகப் பாயிண்ட்டைப் பிடித்தாள் பெண். அப்போதுதான் அது செழியனுக்கு உறைத்தது. அப்பா ஏன் இன்று சித்ராவைக் கண்டித்து எதுவும் சொல்லவில்லை?

“மாதவி? நீ என்ன சொல்ல வர்றே?”

“உங்கப்பாக்கு சித்ரா சொன்ன விஷயத்துல உடன்பாடு இருக்கும்னு எனக்குத் தோணுது.”

“அடியேய்! நம்ம ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு.”

“நிச்சயதார்த்தம் தானே? கல்யாணம் முடியலையே?”

“மாதவி? நீ என்ன சொல்றே? அப்போ… இப்போ வரைக்கும் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவும் இல்லையா?” அவன் கேட்ட தோரணையில் விம்மி வெடித்தவள், அவன் முகத்தைத் தன்புறமாக இழுத்து முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

“இருக்கு… எல்லாமும் இருக்கு. ஆனா அதை ஒன்னுமில்லாமப் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு.”

“யாரு என்னப் பண்ண முடியும்? உரிமை இல்லாதப்பவே உன்னைத் தூக்கின ஆளு நான். இப்போ ஊரறிய நிச்சயதார்த்தம் நடந்திருக்கு. யாராவது குறுக்க வந்தாக் குடும்பமே நடத்துவேன்… என்னை யாரு என்ன சொல்ல முடியும்? ஏய்! முதல்ல அழுறதை நிறுத்துடீ.” அவன் அப்போதும் கோபமாகச் சொல்ல, கண்களைத் துடைத்துக் கொண்டவள் அவன் மார்போடு இன்னும் ஒட்டிக்கொண்டாள்.

“எங்கப்பா இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவார்னு பயப்பிடுறியா?”

“ம்…”

“எப்படி முடியும் மாதவி?”

“உங்கத்தை மேல அவங்களுக்கு அவ்வளவு பாசமாம். உங்கம்மா அன்னைக்குப் பேசும்போது சொன்னாங்க.”

“அதைச் சொன்னவங்க எங்கப்பாக்கு எம்மேல எவ்வளவு பாசம்னு சொல்லலையா?”

“இந்தக் கல்யாணத்துல அவங்களுக்கு அவ்வளவு இஷ்டமில்லை. சித்ரா உங்களுக்கு நல்ல மாட்ச் ன்னு அவங்க நினைக்கலாம் இல்லையா?”

“ஏய்! அவ வயசென்ன என்னோட வயசென்ன? என்னப் பேசுறே மாதவி நீ?”

“அப்போ உங்களுக்கு வயசுதான் இப்போப் பிரச்சனையா?” அவள் கேட்கவும் வாய்விட்டுச் சிரித்தான் செழியன்.

“உம் பின்னாடிப் பைத்தியம் மாதிரி அலையுறனே… நீயே இப்படிக் கேக்கலாமா மாதவி?” அவன் குரல் அடைத்துக் கொள்ளவும் அண்ணார்ந்து பார்த்தாள் பெண்.

இவனை விட இந்த உலகத்தில் அதிகமாக யாராவது காதல் செய்திருப்பார்களா!?

“என்ன?” அவன் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது.

“இல்லை…”

“சொல்லு…”

“எனக்கு… ஆரம்பிக்கத்தான் தெரியும்.”

“எதை?”

“நீங்க… முடிச்சு வெச்சிருங்க…”

“எதைடா?” ஆவலாகக் கேட்ட அவன் குரல் அவள் ஆரம்பித்து வைத்த பணியில் திக்குமுக்காடிப் போனது.‌ அனைத்தும் மறந்து போனது செழியனுக்கு. மறக்க வைத்திருந்தார் மாதவி. முற்றுப்புள்ளியைத் தொலைத்திருந்தான் இளஞ்செழியன்.

error: Content is protected !!