“ஹி இஸ் மை மேன் சிவா!” என அமர்ந்திருக்கும் கணவனின் தோள் பற்றிக் கொண்டாள். இப்பொழுது அரண்டு விழிப்பது அவன் முறையாயிற்று.
“கல்யாணம் ஆயிடுச்சா? இல்ல இனிமேல் தானா?” வேகமாய் கீழிறங்கிய பார்வை குட்டி விரலில் இருக்கும் மெட்டியில் நிலைகுத்தி நின்றது.
‘இவ்வளவு சின்னதா, தேவதை மாதிரி அழகான பொண்ணுக்கு இவர் கணவரா?’ அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. என்ன தான் படிச்சிருந்தாலும், பக்கா கிராமத்தானாக, ஓங்கு தாங்கான முரட்டுத்தனமான தோற்றமும், பெரிய மீசையுமாய் இருப்பவனோடு ஈஸ்வரியை ஒப்பிட்டு இணை கூட்ட முடியாமல் வேதனை சூழ்ந்தது. (முரட்டு முள் தான் அழகு ரோஜாவுக்கு பொருத்தம், பாதுகாப்பு. உனக்கு இதெல்லாம் புரிய இன்னும் பக்குவம் வரணும் தம்பி!)
எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறேன். யாரோடும் இது போன்ற எண்ணங்கள் தோன்றியதேயில்லை ஆனால் இவளைப் பார்த்ததும் மட்டும் ஏன் திருமணம் வரை யோசித்தேன்? பார்க்கும் பொழுதே இவள் நாகரீகத்தின் அளவு தெரிகிறதே, இவளைப் போய் இந்த கிராமத்தில் அதிக வசதிகள் இல்லாத பழைய காலத்து வீட்டில் வைத்திருக்கிறாரே என்ன மனிதன் இவர்? இப்படி ஒரு பெண் நம்மை நம்பி வரும் போது தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாமா? (அது உன் கேரக்டரா இருக்கலாம். இவன் வீரா… நெஞ்சில் வச்சு தாங்குவான்)
அவ்வளவு நேரமும் வீரபாண்டியனின் மீது கொண்டிருந்த மதிப்பும்,மரியாதையும் சட்டென சரிய இன்னொருவன் மனைவி எனும் பட்சத்தில் இதற்கு மேல் இந்த தேவதையை பற்றி நினைப்பதற்கோ, யோசிப்பதற்கோ ஒன்றும் இல்லை” என மனதை அடக்கி, உள்ளே குமுறும் இனம் புரியா வருத்தத்தையும், வேதனையையும் புதைத்தவன், அதற்கு மேல் அங்கிருக்க முடியாது எனும் நிலையில்,
“தேங்க்ஸ் சார். நான் கிளம்பறேன்” என விடைபெற,
“இருங்க சிவா. சாப்பிட்டு போகலாம்…போ, ஈஸ்வரி சாப்பாடு எடுத்து வை” என கட்டளையிட,
“பாவம், இந்தப் பொண்ணை பம்பரமாய் சுழற்றிவிடுவார் போல. வேலைக்காரி ரேஞ்சுக்கு அதிகாரம் பண்றார்” மீண்டும் மனம் சுருள,
“இல்ல சர், இன்னொரு நாள் வரேன். அம்மா எனக்காக காத்திருப்பாங்க!” என விடைபெற்றுச் சென்றாலும், மனம் என்னவோ மங்கையிடமே நின்றது.
“நீங்க சாப்பிட வாங்க!” என கணவனின் கரம் பற்ற,
“அதுக்கு முன்ன சின்ன பஞ்சாயத்து ஒன்னு இருக்கு ஜில்லுக்குட்டி” என்றபடி அவளை கைகளில் ஏந்திக்கொள்ள, (பஞ்சாயத்தோ பாங்கிராவோ… சீக்கிரம் முடிங்கடா)
“என்ன…?” இவனுக்கு மூட் வந்துட்டா நேரம் காலமே கிடையாதே என மிரள, தங்கள் அறைக்கு தூக்கிச் சென்றவன், கண்ணாடியின் முன் இறக்கிவிட்டு, தோள்களில் கரம் பதித்து,
“மார்டன் டிரெஸ், பிரீ ஹேர் ஸ்டைல், குட்டி பொட்டுன்னு இருந்தா பார்க்கிறவன் தங்கச்சின்னு நினைக்காம என்ன பண்ணுவான்? ஏற்கனவே நீ ரொம்ப சின்னதா காலேஜ் ஸ்டூடென்ட் மாதிரி தான் இருக்க. சோ…”
“சோ…? இனி இது போல ட்ரெஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்றீங்களா?” சிறுபிள்ளையாய் முகம் தூக்க,
“சே… ச்சே! உன் அத்தான் அவ்வளவெல்லாம் மோசமில்லை ஜில்லு. இதுல நீ ரொம்ப அழகாயிருக்க, இப்படியே பண்ணிக்கோ. பட் கூடுதலா இதையும் செஞ்சுக்கோ” என குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்தவன்,
“இனி எவனாவது தங்கச்சியான்னு கேட்பான்?” என கண்ணோரம் சுருங்க சிரித்தான்.
“தேங்க்ஸ் அண்ணா!” என இமை தட்டி கள்ளச் சிரிப்பை உதிர்க்க,
“சொல்லாதடி! அண்ணன், ப்ரோன்னு ஏதாவது சொன்ன… கொன்னுடுவேன்!” கோப முறைப்புடன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை இதழ் கொண்டு ஒற்றி எடுத்தான். (நீ ட்ரெண்ட்லயே இல்லை மச்சான்… பிரதர், ஏய்… தம்பின்னு தான் இப்போதெல்லாம் செல்லமா கூப்பிடுறாங்க!)
“பட்டிக்காட்டான்! விருமாண்டி… எனக்கு தான் அத்தான்னு கூப்பிடறது பிடிக்கலைன்னு சொல்றேன்ல. திரும்பத் திரும்ப அத்தான்னு சொல்லச் சொன்னா என்ன அர்த்தம்?” விசும்பலும், கேவலுமாய் மென்குரலில் முகம் பார்க்காமல் கேட்டவள் தாடை பற்றி நிமிர்த்தியவன்,
“பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் அப்படித் தான் கூப்பிடனும்னு அர்த்தம்! பிடிக்கலையா சரி விடுன்னு மாத்திக்கிறதுக்கு இது உடையில்லை, உறவு! அத்தையோட ஆண் தான் அத்தான். அழகு தமிழ்ல எவ்வளவு அற்புதமா உறவு முறை வகைப்படுத்தி இருக்காங்க… இதைச் சொல்றதுல என்ன கஷ்டம்? “
“வீராங்கிற என் அழைப்பு கூட தான் அழகா மட்டுமில்ல போர்வீரன் மாதிரி இருக்கிற உங்களுக்கு பொருத்தமாவும் இருக்கு. அதையும் சொல்ல விடமாட்டேங்கறீங்க !” கணவனின் தெளிவான விளக்கத்தில் அழுகை நின்று போய் ஆற்றாமை விரவக் கேட்டாள். போர்வீரன் என்றதும் சிறு சிரிப்பு எட்டிப் பார்க்க,
“நீ வீரான்னு கூப்பிடுறதை கேட்கிறவங்க, என்னை பொண்டாட்டிக்கு அடங்கினவன்னோ இல்ல பொண்டாட்டி தாசன்னோ நினைப்பாங்க. அது என் தன்மானத்தை உரசிப் பார்க்கிற விஷயம், புரியுதா? (பட்டம் கொடுக்கிறவங்க எல்லாம் இப்படி நமக்கு ஒரு பார்ட்னர் கிடைக்கலையேன்னு பொறாமைப்படுறவங்க தான்!)
அதோட நம்மைவிடப் பெரியவங்கள மரியாதைை இல்லாம பேர் சொல்லிக் கூப்பிடறது என்ன பழக்கம்?” சிறு பிள்ளையாய் அதையே பிடித்துக் கொண்டு தொங்குபவளிடம் சிறு கோபம் உண்டானது அவள் கணவனுக்கு.
“வா, சாப்பிடலாம். நேரமாச்சு. ஆபீஸ் கிளம்பனும்” என இழுத்துக்கொண்டு போனான்.
‘நல்ல ஊர்டா சாமி! இவங்களுக்கெல்லாம் அடுத்தவங்க என்ன பண்றாங்கன்னு பார்க்கிறது தான் வேலை போல… பட்டிக்காடுகள்! இவன் அதுக்கு மேல எடக்கு நாட்டான்! இவர் மட்டும் டீ , டீ ன்னு ஏலம் விடுவார். நாங்க மட்டும் அன்பே, அத்தான்னு கொஞ்சிக்கிட்டு இருக்கனும்.
மரியாதை எல்லோருக்கும் பொது தானே? சின்னவங்களை மரியாதையா அழைக்கக் கூடாதுன்னு நினைக்கிறது என்ன பழக்கமோ? சொன்னா சிடுசிடுப்பான் விருமாண்டி!’ மனதில் வசைபாடியபடியே அவன் பின்னோடு செல்லத்தான் வேண்டியிருந்தது.
கணவன் அலுவலகத்திற்கு சென்றதும், தந்தைக்கு அழைத்து தன்னை கூட்டிப் போக வருமாறு பணித்துவிட்டு, அத்தையிடம் வந்து,
“அத்தை, அத்தானுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கனும்ன்னு ஆசைப்படுறேன். அதுக்கு தஞ்சாவூர் வரை போகனும். அப்பாவை வரச் சொல்லியிருக்கேன். அவர் கூட போய் வாங்கிட்டு வந்துடறேன். நான் கடைக்கு போயிருக்கேன்னு அத்தான்கிட்ட சொல்லாதீங்க!” என கெஞ்சி, கொஞ்சி தந்தையுடன் கிளம்பிவிட்டாள்.
மாலை வீட்டிற்கு வந்தவன், மனைவியின் கொலுசு சிணுங்கல் கேட்காது வீடெங்கும் தேடி, ஓய்ந்து போய் உடைமாற்றி் அன்னையிடம்,
“ஈஸ்வரி எங்கம்மா?” எதிர்பார்ப்பும், ஏமாற்றமுமாய் கேட்டான். காபி டம்ளரை அவன் கையில் கொடுத்தபடி,
“அண்ணனும், அண்ணியும் வந்திருந்தாங்க. அவுக கூட போயிருக்கு” மருமகள் கேட்டுக் கொண்டதற்கேற்ப பட்டும்படாமலும் சொன்னார்.
“என்னய்யா இது, ஆத்தா அப்பாவோட சத்த நேரம் இருந்துட்டு வரட்டுமே… சின்ன புள்ள! ஒரு வாரமா நம்மளோட தானே இருக்கு. இன்னும் பத்து நாள்ல ஊருக்கு கிளம்பிடுவாக. அதுவரைக்கும் தானே, விடுய்யா” என மருமகளுக்கு வக்காலத்து வாங்கினார்.
அரைமணி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் அழைத்துவிட்டான். அப்பொழுது தான் கேன்வாஸைப் பொருத்தி கோட்டோவியம் வரையத் தொடங்கியிருந்தாள்.
‘வீரா’ என்ற பெயருடன் சிணுங்கிய கைபேசியை உயிர்ப்பித்தவள்,
“அத்தான், ஆபீஸ்ல இருந்து வந்தாச்சா?” குதூகலமாய் விசாரிக்க, அத்தான் என்ற அழைப்பில் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது. இருந்தும்,
“ம்… நீ எங்கடி ஊர் சுத்திட்டு இருக்க? புருஷன்கிட்ட சொல்லிட்டுப் போகனும்கிறது கூட இல்லாம உன் இஷ்டத்துக்கு கிளம்பிப் போயிருக்க… ரெடியா இரு. இன்னும் அரை மணி நேரத்துல வந்து கூட்டி வரேன்” வழக்கம் போல் சிடுசிடுக்க,
‘ஐயோ! இவன் வந்தா எல்லாமே கெட்டுப்போயிடுமே!” பதறியவள்,
“நான் இன்னைக்கு வரல… நைட் இங்க இருந்துட்டு நாளைக்கு வரேன்” என்று வேகமாகச் சொல்ல,
“இவ்வளவு நேரம் அம்மா, அப்பா கூட கொஞ்சிக் குலாவினது போதாதா? கிளம்பி வர வழியைப் பாரு”
‘நியாயம் தானே, இத்தனை ஆண்டுகளாய் கூடவே இருந்தவங்கள இமைக்கும் நேரத்தில் விலக்கி நிறுத்த முடியாது தான்’ எனத் தோன்றினாலும்,
“என்னவோ செய்” சம்மதத்தைக் கூட சரியாய் சொல்லாமல் வைத்துவிட்டான்.
“ஆங்கிரி பர்ட்! பொசுக்கு, பொசுக்குன்னு கோபம் வந்துடுது” கோட்டோவியமாய் நின்ற கணவனின் கன்னத்தில் முத்தமிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.
மனைவியை எங்கேனும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே விரைந்து வந்தவனுக்கு அவள் இல்லாதது கோபத்தை உண்டாக்கியிருந்தது. இரவும் அது தொடர, தூக்கம் வர மறுத்தது.
‘ச்சே என்னதிது! ஒரு பெண்ணோட ஸ்பரிசம் இந்தளவுக்கு ஏங்கச்செய்யுமா? ‘ தலையணையைக் கட்டிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தாலும், தூக்கம் கண்களைத் தழுவாமல் சதி செய்தது. திருமணம் ஆனதிலிருந்து அவளோடு கழித்த பொழுதுகள் இன்று நினைவுகளாய் இம்சிக்க,
“இது என்ன கொடுமை, சிவன் ராத்திரிக்கு கூட இப்படி எல்லாம் கண் விழித்ததில்லை. எல்லாம் இவளால் தான். பேபி டால் மாதிரி இருந்துகிட்டு படுத்தி எடுக்கிறா! தாலி வாங்கிக்கிட்டோமா, புருஷனோட குடும்பம் நடத்தினோமான்னு இல்லாம, சொல்லாம கொள்ளாம கிளம்பி போயிருக்கா. இவள…” அதற்கு மேல் முடியாது என்று தோன்றிவிட,
‘நான் தவிக்க, நீ மட்டும் உல்லாசமா உறங்குவியோ? ‘ என வெகுண்டவன் கைபேசியை கதறடிக்க,
நடுஇரவில் ஆழ்ந்த அமைதியில் கணவனின் உருவத்தை மனதில் இருத்தி அதை தூரிகையின் வாயிலாக இடம் மாற்றிக் கொண்டிருக்க, கைபேசியின் அலறலில் அரண்டு போனவள் கணவன் என்றதும்,
‘இந்நேரம் வரை தூங்காமல் என்ன செய்கிறான்?’ எனும் பயத்துடனேயே
‘இது என்ன கொடுமை? இவன் தூங்கக் கூடாதுன்னு நான் சூனியம் வச்ச மாதிரி சொல்றானே?’ மிரண்டு விழிக்க,
“புதுப் பொண்டாட்டியை வெளியே கூட்டிப் போகலாம்ன்னு வேலைய பாதியிலேயே விட்டு வீட்டுக்கு வந்தா நீ எனக்கு முன்ன எஸ்ஸாகிட்ட. சரி, போனோமா வந்தோமான்னு இல்லாம நைட்டுக்கு வேற டேரா போடுற” என சிடுசிடுக்க, (இப்படித் தான் உங்க ஊர்ல மிஸ் யுன்னு சொல்வீங்களா?)
‘ஒரு நாள் ராத்திரி அம்மா வீட்டில் தங்குறதுக்கே நினைச்சு நினைச்சு திட்டுவான் போலவே! ‘ தன் போக்கில் பயணித்த எண்ணங்களை நிலைப்படுத்தி,
“சாரி அத்தான், நீங்க வெளியே கூட்டிப் போறேன்னு சொல்லியிருந்தீங்கன்னா வீட்டிலேயே இருந்திருப்பேன்.” தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
“சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு நினைச்சா நீ ஷாக்கே கொடுக்கிற! உன் அண்மை இல்லாம தான் என்னால தூங்க முடியல. ரொம்பத் தேடுதுடி!” விரகம் வழிந்தது அவன் குரலில்.
‘இது என்ன, இப்படி ஒரு ஹஸ்கி வாய்ஸ்!’ மனம் இளக
“நீங்க எதை மீன் பண்றீங்க அத்தான்?”
“இந்த நேரத்துல வேற என்ன தேடும்? பேர் சொல்லிக் கூப்பிடாம அத்தான்னு கூப்பிடுன்னு சொன்னதுக்கு பழிவாங்கிட்டேல்ல! போனை வை டீ பொம்மை!” எரிந்து விழுந்தவன் தானே வைத்துவிட்டான்.
அவன் சொல்வது நூறு சதவிகிதம் உண்மையே. இந்நேரம் காமம் மட்டுமே பிரதானமாய் இருக்கும் என்பது தான் இயல்பு ஆனாலும் அவன் வாயிலாக கேட்க மனம் சுணங்கியது.
‘அநியாயத்துக்கு எதார்த்தவாதியா இருக்கானே?’ ஒரு மனம் முரண்ட, மற்றொன்றோ கொஞ்சல் நாடகம் இல்லாமல் தனது தேவை சொன்னது உயரிய விஷயம் தானே” என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியது.
நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். உன்னைப் பார்க்கனும், பேசனும் என காதல் வேஷத்தை ஏன் எதிர்பார்க்கிறேன். இந்நேரத்தில் கணவனின் தேவை காமம் இன்றி காதலாய் மட்டுமே இருக்க வாய்ப்பில்லை. அதைத் தானே அப்படியே சொன்னான். இந்த இயல்பு தான் வருத்தம் உண்டாக்குவதாக இருந்தாலும் அவன் பால் கட்டி இழுக்கிறது. உன்னை இம்ப்ரெஸ் பண்ணப் போய் நான் தான் மயங்கி நிக்கப் போறேன் விருமாண்டி’ மனம் மந்தகாசமாய் எதார்த்தம் பேசும் கணவன் வசம் மண்டியிட தருணம் பார்க்க தொடங்கிவிட்டது.
கணவனின் ஓவியம் முற்றுப்பெற விடிகாலை ஆகிவிட்டது. இதுவரை தான் வரைந்ததிலேயே அதிக உயிர்ப்பும்,ஈர்ப்புமாய் தன்னவனின் ஓவியம் தெரிய, அதை ரசித்தபடியே தூங்கிப் போனாள்.
அலுவலகத்திற்கு கிளம்பும் வரை மனைவி வராதது கண்டு சினந்தவன்,
“வரட்டும், மகாராணிக்கு எப்போ தான் இங்க வர மனசு வருதுன்னு பார்க்கிறேன்” என கருவியபடி சென்றுவிட்டான். அயர்ந்து உறங்கியவள் மெல்ல கண்விழிக்க மணி பத்தாகிவிட்டது.
“அடக் கடவுளே! இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்? இந்நேரம் ஆபீஸ் போயிருப்பானே… ச்சே அவன் கண் விழிக்கும் போது முதல் விஷயமா இந்த ஆர்ட்டை பார்க்க வைக்கனும் நினைச்சேன். இப்படி ஆயிடுச்சே!” வருத்தமும், கோபமுமாய்
“அம்மா, ஏன் சீக்கிரம் எழுப்பிவிடலை?” என அன்னையிடம் முகம் தூக்க,
“விடிய விடிய உன் ரூம்ல லைட் எரிஞ்சுது. அதான் விட்டுட்டேன்.”
“போங்கம்மா, இந்நேரம் அவங்க ஆபீஸ் போயிருப்பாங்க. என் ஆர்ட்ல தான் அவங்க கண் விழிக்கணும்ன்னு பிளான் பண்ணியிருந்தேன் தெரியுமா?”
“சாரிடா, நீ சொல்லிட்டு படுத்திருந்தா எழுப்பியிருப்பேன். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை. நல்ல இடம் பார்த்து மறைச்சு வச்சுட்டு நாளைக்கு காலையில் பிளானை எக்ஸிகியூட் பண்ணிடு.
“போங்க, இவ்வளவு கஷ்டப்பட்டு வரைஞ்சுட்டு ரீ -ஆக்ஷன் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க நாளை வரைக்கும் வெயிட் பண்ண முடியாது. மத்தியானம் சாப்பிட வரும் போது காட்டிடுவேன். அப்பா! வாங்க, என்னை என் வீட்ல கொண்டு போய் விடுங்க. ” வெளிதேசத்தில் வளர்ந்தவள் இந்த கிராமத்தில் சிறப்பாய் வாழ வேண்டுமே எனும் கவலை மகளின் ஒட்டுதல் கண்டு ஒன்றுமில்லாமல் போனது.
” சாப்பிட்டு வாடா விக்கி, கொண்டு போய் விடுறேன். ” என்ற தந்தையின் பேச்சை தட்ட முடியாமல் உணவருந்த அமர்ந்துவிட்டாள்.
வீட்டு வாசலில் கார் நிற்பது கண்டு வெளியே வந்த மாமியாரின் கண்களை மூடி,
“அப்பா, அதை இப்படி கொண்டு வந்து வைங்க” என ஆணையிட, நடுக்கூடத்தில் வைத்தார். மாமியாரின் கண்களில் இருந்து கைகளை எடுக்க, அலை அலையாய் விரவும் கேசமும் அகன்ற நெற்றியும், கூர்விழிகளும், முறுக்கு மீசையும், தாடியும், மார்பில் புரளும் செயினும், கையில்லா பனியனும், மடித்துக்கட்டிய வேட்டியுமாய் கையில் கழியுடன் ஆளுயர கேன்வாஸில் அழகோவியமாய் நின்ற மகனிடம் இருந்து கண்களை எடுக்கமுடியாமல்,
“அடியாத்தி, அம்சமா இருக்கு! உன் மாமா வரட்டும்… இங்கனையே எல்லோரும் பார்க்கிற மாதிரி மாட்டச் சொல்லுவோம்” என மருமகளுக்கு திருஷ்டி கழித்து, உறங்கப் பணித்தார். ரூமின் கதவைத் திறந்ததும் பார்க்கும்படி ஓவியத்தை வைத்தவள், கதைவடைத்து கட்டிலில் முடங்கிவிட்டாள். மதியம் வீட்டிற்கு வந்தவன் மனைவியின் காலணிகளைக் கண்டதும் மனம் லேசாக,
“ஒருவழியா வந்துட்டாளே” சிறு சிரிப்புடன் செல்ல, அத்தான் எனும் அழைப்பும், தழுவலுமாய் வரவேற்பவளைக் காணாது,
“ரூம்ல காத்திருப்பாளா இருக்கும் என எண்ணியபடி கதவைத் திறக்க, தன் வார்ப்பாய் எதிரே ஒய்யாரமாய் நிற்கும் ஓவியம் கண்டு திகைத்துப் போனான். அச்சில் வார்த்தது போல் கண்ணோர சுருக்கம் உட்பட அவ்வளவு நேர்த்தியாய் இருந்தது. நெற்றியிலும், புஜத்திலும் பூத்திருக்கும் வியர்வை துளிகள் கூட தத்ரூபமாய் இருந்தன. ஒரு முறை தானே பார்த்தாள். அதிலேயே இவ்வளவு தெளிவா வித்தைக்காரி தான்!!” மனம் மெல்ல விழிக்க, ஆழ்ந்த சயனத்தில் இருக்கும் மனையாளின் அருகே அமர்ந்து,
“ஜில்லுக்குட்டி! என்னை கிறுக்கனாக்கி உன் பின்னாடி அலையவிடனும்னு முடிவோட இருக்கியா? இந்த குட்டி விரல்களுக்குள்ள இன்னும் என்னென்ன வித்தையெல்லாம் ஒளிச்சு வச்சிருக்க? ஓவியத்தையே பாடமா எடுத்து படிச்சவங்கிறதால நல்லா வரைவன்னு நினைச்சேன். ஆனால் இவ்வளவு உயிரோட்டமா இருக்கும்னு எதிர்பார்க்கலை. பிடிச்சிருக்கு! உன்னை… உன் ஓவியத்தை… காதல் சொல்ல வைக்கனும்ங்கிற வீம்பை ரொம்ப பிடிச்சுருக்குடி!” கன்னத்தில் முத்தமிட, முறுக்குமீசை முந்திக்கொண்டு அவள் தூக்கம் கலைத்தது.
“வாங்க மகாராணி! இப்போ தான் அப்பா வீட்ல இருந்து இங்க வர வழி தெரிஞ்சுதா?” புருவம் உயர்த்தி வினவ,
“நான் காலையிலேயே வந்துட்டேன். நீங்க தான் லேட்” என்றவளின் தலை வருடி,
“அது சரி, வா சாப்பிடலாம்!” என எழுந்து கொண்டான்.
‘ஆர்ட்டை பார்த்தானா இல்லையா? வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லமாட்டேங்கிறான் ‘ மனம் முரண்ட, படுத்தபடியே அவன் கரம் பற்றி,
“அத்தான்!” சலுகையாய் அழைக்க, அவனோ சிறு முறுவலுடன் என்ன என்பது போல் புருவத்தை ஏற்றினான். (உன் அத்தான் உலக மகா நடிகன் மா… கண்ணுக்கு முன்னால இருக்கிற ஓவியம், அதைப் பார்க்கலையாம்)
“ம்ஹூம், ஒண்ணுமில்லை” முகம் வாடச் சொன்னாள்.
“பிடிச்ச கையை ஏன் விடற, இறுக பற்றி எழுந்துக்கோ!” என தூக்கினான். இரவு தூங்காமல் இருந்ததால் தலைவலிக்க எழுந்து அமர்ந்தவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. முயன்றும் வாமிட் வராமல் போக,
“அத்தை! எனக்கு சாப்பாடு வேண்டாம். தலைவலிக்குது, வாமிட் வர்ற மாதிரி இருக்கு. டீ குடிக்கிறேன் ” என்றவளை உக்கிரமாய் முறைத்தபடி உணவருந்திக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
‘இவன் ஏன் இந்த பார்வை பார்க்கிறான்? வாயைத் திறந்து சொன்னாலே இவன் மனசு புரியாது. இதுல பார்வையால் சங்கதி சொன்னா எனக்கென்ன புரியும்?’ யோசனையை விழிக்க,
“சரியான தூக்கமில்லாததால தான் இந்த சங்கடமெல்லாம். டீ குடிச்சா தூங்க முடியாது ஆத்தா. இஞ்சி டீ போட்டுத் தரேன். வாந்தி, தலைவலி எல்லாம் விட்டுப் போயிடும். தூக்கமும் கெடாது.” என்றதோடு நில்லாமல் இஞ்சியைத் தட்டி கொதிநீரில் போட்டு, வற்றவைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு போட்டு ஆற்றிக் கொடுத்தார். இளஞ்சூடான பானம் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது உண்மை தான். சற்று நேரத்திற்கெல்லாம் குமட்டல் நின்றுவிட்டது.
உணவுக்குப் பின் அறைக்குள் வந்தவன், கட்டிலில் தலையணையை அணைவாய் வைத்து சாய்ந்து அமர்ந்திருந்தவளின் அருகே வந்து,
“ஈஸ்வரி, உன் பிரச்சனை தான் என்ன?” காண்டாக கேட்க,
‘இப்போதைக்கு தலைவலி தான் பிரச்சனை. ஆனால் இவன் அதை கேட்கவில்லை போலும்’ சிந்தனை வயப்பட்டவளாய் அமைதி காக்க,
“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள உன் முந்தானையை பிடிச்சுக்கிட்டு சுத்தணும். அப்படித்தானே!”
‘இதென்ன புதுக்கதை என்பது போல் ஒன்றும் புரியாமல் பார்க்க,
“என்னை இம்ப்ரெஸ் பண்றதுக்காகத் தானே இதெல்லாம்!”
“எஸ் பாஸ்!” என்று இதழ் விரிக்க,
“சிரிக்காதே, எரிச்சலா வருது. ராத்திரி முழுக்க கண்விழிச்சு கஷ்டத்தை வாங்கிட்டு வந்திருக்க, இந்த பெயின்டிங்கை பார்க்கும் போதெல்லாம் நீ இப்படிசுகவீனமா இருப்பது தான் நியாபகம் வரும். அப்புறம் எங்கிருந்து ரசிக்கிறது?”
“ஓ! சாப்பாடு ருசிக்கல, ஓவியம் ரசிக்கலை ! அடப்போடா… உன்னை எப்படி இம்ப்ரஸ் பண்றதுன்னு தான் எனக்குத் தெரியல!?”
“பார் ஈஸ்வரி, உன் மேல காதல் இல்லாததால இப்ப என்ன குறைஞ்சு போச்சு? உன்கிட்ட அன்பா, அக்கறையா, அனுசரணையா இருக்கேன் தானே ? இதைவிட வேற என்ன எதிர்பார்க்கிற?”
“நீங்க சுயம் தொலைக்கலையே !”
“ஓ! நீ தான் என் உலகம்ன்னு பித்துக்குளியா்கனும் அப்படித் தானே? அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை. சும்மா உன்னை வருத்திக்காதே!”
“ஏன் வாய்ப்பில்லை? விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி! இந்த வில்லேஜ் விருமாண்டியை கரெக்ட் பண்றது கஷ்டம் தான் . ஒத்துக்கிறேன். அதுக்காக ஓவரா பில்ட் அப் பண்ணாதீங்க!” உதடு சுளிக்க,
“உனக்கு சொல்றதும், சுவத்தில முட்டிக்கிறதும் ஒன்னு தான். என்னவோ பண்ணு?” (விக்கி, ஒரு ஓரமாய் போய் நில்லும்மா, அத்தான் முட்டிக்கனுமாம்) சிடுசிடுத்து விலகியவனின் கரம் பற்றி,
“ரொம்ப கஷ்டப்பட்டு வரைஞ்சேன் தெரியுமா? சூப்பரா இருக்குடி ஜில்லுக்குட்டின்னு கன்னத்தில் நச்சுன்னு ஒரு இச் கொடுக்கலாமே? ” இமை தட்டி கேட்க,
“ச்சு… இரு தரேன்!” என கன்னம் பற்றி வலிக்க கிள்ள,
“ஆ… அத்தை” என அலறியதும் பட்டென கரத்தை விலக்கிக் கொண்டு,
“இப்போ எதுக்குடி அம்மாவை கூப்பிடுற?”
“ம்… அப்போ தானே விடுவீங்க!” கண் சிமிட்ட, ஒரே பாச்சலாய் அறையை கடந்து, மாமியாரிடம் செல்ல,
“சேட்டைக்காரி!” என இதமாய் சிரித்தான். அவளோ,
“இதுவும் ஊத்திக்கிச்சே! இவனுக்காக மெனக்கெடுறதுக்கு சாதாரண அப்ரிஸியேஷன் கூட கிடைக்க மாட்டேங்குது! எப்படி இம்ப்ரெஸ் பண்றது? அடுத்து என்ன செய்யலாம்? பெயின்டிங்கை பார்த்து ஒரேயடியாய் மயங்கலைன்னாலும் ஓரளவுக்காவது வழிக்கு வந்திடுவான்னு நினைச்சேன். இப்படியாயிடுச்சே… அடுத்த முறை நிதானமா பிளான் பண்ணி பண்ணனும். அவசரப்படக்கூடாது. இருடா ஆங்கிரி பர்ட்! உன் வீக்னெஸ் என்னன்னு கண்டுபிடிச்சு கதறடிக்கிறேன்!” என காதல் கோட்டையின் அஸ்திவாரத்தை பலமாக போட தயாராகிவிட்டாள்.
இரவின் தனிமையில் கணவனின் மார்பில் தாடை அழுத்தி, அவன் முகம் பார்த்து,
“அத்தான், இந்த ஊர் பெண்கள் எல்லோரும் தினமும் ஒரு வீட்டில் மாநாடு போட்டு ஊர்க்கதை பேசுறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”
“ஏன்? உனக்கு அப்படி ஏதாவது ஐடியா இருக்கா? வேண்டாம்மா. அவங்களுக்கு வேலையில்லை, விடுவீடா போய் பேசுறாங்க. நீ சீக்கிரமா “உழவும் … தொழிலும்” ஆப் கிரியேட் பண்ற வேலையை ஆரம்பி, உன் மெயில் அட்ரஸ் கொடு. இன்பர்மேஷன் அனுப்பி வைக்கிறேன். இப்படி வெட்டி பொழுது போக்கினா உனக்கும் அவங்க காத்து அடிச்சிடும்”
“நீங்க அனுப்பி வைங்க. அதெல்லாம் நான் பார்த்துகிறேன். அப்படியே இவர்களுக்கும் பொழுதை உபயோகமா போக்குற மாதிரி ஏதாவது வேலை ஏற்பாடு பண்ணினா என்ன?”
“புரியலை ஈஸ்வரி”
“அன்னைக்கு அத்தை போட்டுக் கொடுத்தாங்களே இஞ்சி டீ அது மாதிரி, உடலுக்கு நன்மை விளைவிக்கிற நிறைய டீ வகைகள் இருக்கு. யூ-ட்யூபில் பார்த்தேன். செம்பருத்தி டீ, ஆவாரம்பூ டீ, சுக்குமல்லி காபி. இது மாதிரி சொல்லிக்கிட்டே போகலாம். கிராமத்தில் இருக்கவங்க சளித் தொந்தரவு, தூக்கமின்மை, சோர்வு இதெல்லாம் ஏற்படும் போது கைவைத்தியமா இந்த டீக்களை குடிச்சு எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கிறாங்க.
பட் சிட்டியில் இது சுலபமில்லை. அவங்களுக்காக இதை இன்ஸ்டன்ட் மிக்ஸ் மாதிரி தயாரிச்சு கொடுத்தா என்ன? சைனாவில் கூட ஜிஞ்சர் டீ, சின்ன சின்ன பாக்கெட்டுல கிடைக்கும்.
இனிப்பு முதற்கொண்டு போட்டு வச்சிருப்பாங்க. வெந்நீரில் கலக்கி குடிக்க வேண்டியது தான். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! மக்களும் ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு மாறிடுவாங்க, நமக்கும் இலாபம். நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணினீங்கன்னா பண்ணலாம் அத்தான்.” நெற்றியில் வட்டமிடும் முடிகளை ஒதுக்கி, அவள் புருவம் நீவியவன்,
“ஐடியா நல்லா இருக்கு. செய்யலாம். முதல்ல நம்ம வீட்டில அம்மாவும், நீயுமா ஆரம்பிங்க,உங்களைப் பார்த்து அவங்களுக்கும் ஆர்வம் வந்திடும். நாம கரடியா கத்தினாலும் கேட்கமாட்டாங்க பட் நீங்களே முன்னுதாரணமா இருந்தா, ஆர்வம் வருதோ இல்லையோ, பொறாமை வரும். அதுவே உங்களை தோற்கடிச்சு தான் சாதிக்கணும்ங்கிற வெறியை உண்டாக்கும். தானே அவங்களும் சிறுதொழில் செய்ய முன்வருவாங்க.
சுயஉதவிக் குழுன்னு ஆரம்பிச்சு எல்லாம் வட்டிக்கு கொடுத்து தான் வாங்குறாங்க, அதை இப்படி உபயோகமா ஏதாவது செஞ்சா சந்தோஷம் தான். அது சரி, என் ஜில்லுக்குட்டிக்கு திடீர்ன்னு எப்படி ஊரைத் திருத்தனும்ங்கிற ஞானோதயம் வந்துச்சு?” கண்களில் குறும்பு மின்ன கன்னம் வருடி கேட்டான்.
“தெரியாத மாதிரி கேட்காதீங்க அத்தான்!” எனும் சிணுங்கலுடன் மீசை நீவி கன்னம் கிள்ள,
“யேய்! வலிக்குது” எனக் கூவினாலும்,
“ஷப்பா… அடுத்த பிளானா? முடியலைடி… நான் இம்ப்ரஸ் ஆகுறேனோ இல்லை நீ புதுசு புதுசா நிறைய நல்ல விஷயங்கள் செய்ய ஆரம்பிச்சுட்ட. சந்தோஷமா இருக்கு கண்ணம்மா” என இதமாக அணைத்துக் கொண்டான்.
மீதம் நாளை சொல்லுவான்…
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss