Pallavan kavithai 8

Pallavan kavithai 8

அன்று பொழுது புலர இரண்டு ஜாமங்கள் இருக்கும் போதே அந்த மாட்டுவண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு விட்டது. ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்த அந்த அதிகாலைப் பொழுதில் காளைகளின் கழுத்தில் குலுங்கிய மணிகள் ஜல் ஜல் என்று ஒலி கிளப்ப வண்டி வெகு வேகமாக போய் கொண்டிருந்தது.
யாரிற்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் சாதாரண மாட்டுவண்டியைத் தெரிவு செய்திருந்தாள் பரிவாதனி. வண்டியின் உட்புறமாக மகிழினி அமர்ந்திருக்க அதற்கு அடுத்தாற்போல் பரிவாதனி உட்கார்ந்திருந்தாள். கால்கள் இரண்டையும் வெளியே போட்டுக்கொண்டு உபாத்தியாயர் தங்களை விட்டு தொலைதூரம் போய்க்கொண்டிருக்கும் காஞ்சி மாநகரை வெறித்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது வாதாபி அரண்மனையில் உபாத்தியாயர் வேலையில் அமர்த்தப்பட்டிருத்தார் சேந்தன். மாளிகையில் நடக்கும் எந்த பிரச்சனையையும் கண்டும் காணாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்த மனிதர்.
இருந்தாலும் இளவரசர் மங்களேசன் மேல் அவருக்கு அலாதியான பாசம் இருந்தது. ஆட்சிப்பொறுப்பை ஏன் இவரிற்குக் கடவுள் கொடுக்கவில்லை என்று சேந்தன் பலமுறை நினைத்ததுண்டு. அவர் வேண்டுகோள் ஆண்டவனிற்குக் கேட்டதோ என்னவோ! மந்திரி பிரதானிகள் அனைவருமாக சேர்ந்து இளவரசரை அரியணையில் அமர்த்தினார்கள். மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டதுபோல சேந்தனும் நிம்மதி அடைந்தார்.
ஆனால் அந்த நிம்மதி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. சிம்மவிஷ்ணு மகாராஜா வாதாபிக்கு விஜயம் செய்திருந்த போது எதிர்பாரா விதமாக சக்கரவர்த்தி மங்களேசர் படுகொலை செய்யப்பட்டார். நாடே ஸ்தம்பித்து போனது! சேந்தனும் உறைந்து போனார்!
தெய்வாதீனமாக குழந்தை பரிவாதனி உயிர் தப்பிய போது சிரிப்பதா அழுவதா என்றே அவரிற்குப் புரியவில்லை. ஆனால் குழந்தையை வளர்ப்பதற்காக வாதாபியைச் சேர்ந்த ஒருவர் கண்டிப்பாக வேண்டும் என்று சிம்மவிஷ்ணு மகாராஜா சொன்னபோது அதைச் சிரமேற்கொண்டு ஏற்றுக்கொண்டார்.
இன்றைக்கு நேற்றைக்கு அல்ல… கடந்த சுமார் பதினெட்டு வருடங்களாக அஞ்சான வாசம் போல அந்த மாளிகையில் வாழ்ந்து பரிவாதனியை வளர்த்தார் சேந்தன்.
வெளி உலகிற்கு இவர்களை யாரென்று இனங்காட்டாத போதும் ஒரு இளவரசி வளருவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார் சிம்மவிஷ்ணு மகாராஜா.
மாட்டுவண்டி திடீரென்று நிற்கவும் சிந்தனைக் கலைந்து நிமிர்ந்து பார்த்தார் உபாத்தியாயர். ஒரு ஆற்றங்கரையின் ஓரமாக மாட்டுவண்டி நிறுத்தப்பட்டிருந்தது. வண்டிக்காரரை கேள்வியாக பார்த்தார் உபாத்தியாயர்.
“ஐயா! ஆத்தங்கரை ஓரம்… வயிறு காலியா இருக்கு, எதையாவது உள்ள தள்ளிட்டோம்னா அது பாட்டுக்குக் கெடக்கும்…” இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அதனால் பாதி வாயை மூடிக்கொண்டு பவ்யமாக சொன்னான் வண்டிக்காரன்.
“சரிப்பா.” வண்டியிலிருந்து இறங்கினார் உபாத்தியாயர். பெண்களும் இறங்கி கொண்டார்கள். மகிழினி தான் தயாரித்து கொண்டுவந்திருந்த உணவுப்பொட்டலங்களில் ஒன்றை உபாத்தியாயரிடம் கொடுத்துவிட்டு இன்னொன்றைத் தனக்கும் தோழிக்குமாக பிரித்தாள்.
அப்போதுதான் லேசாக இருள் பிரிந்து சுள்ளென்ற சூரிய கிரணங்கள் ஓடும் ஆற்றுநீரை முத்தமிட்டு கொண்டிருந்தன. தன் காதலன் அணைத்த மாத்திரத்திலேயே ஜொலிக்கும் புது பெண்ணைப் போல அந்த ஆற்றுநீரும் அப்போது புது மினுமினுப்போடு ஓடிக்கொண்டிருந்தது.
ஆற்றங்கரையோரமாக இருந்த ஒரு பெரிய மரத்தின் வேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள் பரிவாதனி. அந்த முகத்தில் எப்போதும் இருக்கும் குழந்தைத்தனம் போய் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. கடந்து இரண்டு நாட்களாக சதா யோசனையையே காட்டின அந்த அஞ்சன விழிகள்.
மகிழினியும் தோழியை அதிகம் தொந்தரவு பண்ணவில்லை. உபாத்தியாயரும் மகளும் ஊரை விட்டே போகப்போகிறார்கள் என்று தெரிந்தபோது தன் மூட்டை முடிச்சுகளையும் கட்டி ஆயத்தமாகி கொண்டாள். அவர்கள் வீட்டில் யார் எது பேசியும் அவள் காதில் ஏறவில்லை.
பரிவாதனி இரண்டு நாட்கள் தீவிர சிந்தனையின் பிறகு தன் முடிவுகளைத் திடமாக வகுத்துக்கொண்டாள்.
பல்லவ சாம்ராஜ்யத்தின் வட எல்லையில் இடதுபுறமாக வாதாபியும் வலது புறமாக வேங்கியும் இருப்பதால் அந்த திக்கையே தவிர்த்தாள் பரிவாதனி. தென் எல்லையில் காவிரி நதி வரைப் பரவியிருந்த பல்லவ ராஜ்ஜியமே தாங்கள் குடியேற தற்போது சிறந்த இடமாக தோன்றியது. அதை உபாத்தியாயரிடம் அவள் பிரஸ்தாபித்த போது அவரும் எந்த மறுப்புமின்றி ஏற்றுக்கொண்டார்.
அத்தோடு காவிரிக்கு அருகிலிருக்கும் ‘கொற்கை’ எனும் ஊரில் தனக்கு நண்பர் ஒருவரும் இருப்பதால் அங்கு போவது இப்போதைய அவர்கள் நிலைமைக்கு அனுகூலமாக இருக்கும் என்றும் நம்பினார்.
உபாத்தியாயர் அவர்களின் பயணம் பற்றி மன்னருக்கு அறிவிக்க முயன்ற போது பரிவாதனி அதைத் தடுத்து விட்டாள். அவர்கள் இருப்பிடம் யாரிற்கும் தெரியக்கூடாது என்பதில் பெண் மிகவும் கவனமாக இருந்தாள்.
அவள் கைப்பட முந்தைய நாள் இரவே இரண்டு ஓலைகளை எழுதி வைத்துக்கொண்டாள். அதில் ஒன்றை அடிகளாரிற்கும் இன்னொன்றைப் பல்லவ குமாரனிற்கும் விலாசமிட்டு அவர்கள் மாளிகையின் முதலாம் கட்டிலேயே பார்வைக்குப் படும்படி வைத்துவிட்டுக் கிளம்பி இருந்தாள்.
இன்னும் சற்று நேரத்தில் அடிகளார் நிச்சயமாக அவர்கள் மாளிகைக்கு வருவார். அவர் கண்களில் ஓலைகள் கண்டிப்பாக படும். பல்லவ இளவல் கைக்கும் அதற்கடுத்தாற் போல ஓலைப் போகும். இப்போது மட்டும் அவள் கண்களில் லேசாக கண்ணீர் பளபளத்தது.
“பரிவாதனி…” மகிழினியின் அழைப்பில் திடுக்கிட்டு பார்த்தாள் பெண்.
“ஏன்? எதற்கு இப்படி திடுக்கிடுகிறாய் பரிவாதனி?”
“ஒன்றுமில்லை மகிழினி… வேறு சிந்தனையில் இருந்துவிட்டேன்.”
“இந்தா… இதைச் சாப்பிடு.” உரிமையோடு தோழி நீட்டிய உணவை வாங்கி கொண்டாள் பரிவாதனி. இரண்டு நாட்களாக உணவு இறங்க மறுத்தது. இருந்தாலும் தந்தைக்காகவும் தோழிக்காகவும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சமாளித்து கொண்டாள்.
“பரிவாதனி… நீ கொஞ்சம் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டாயோ என்று எனக்குத் தோன்றுகிறது.” உணவை உண்டபடி நாசூக்காக பேச்சை ஆரம்பித்தாள் மகிழினி.
“இல்லை மகிழினி… நிறுத்தி நிதானமாக சிந்தனைச் செய்து விட்டுத்தான் இந்த முடிவிற்கு வந்தேன்.”
“அப்படியானால் உன் எதிர்காலத்திற்கு என்ன பதில்?”
“ஏன்? என் எதிர்காலத்திற்கு என்ன குறை வந்துவிட்டது?”
“புரிந்துதான் பேசுகிறாயா? இல்லைப் புரிய மறுக்கிறாயா?”
“நன்றாக புரிகிறது மகிழினி, சிறிது காலமாக இருந்தாலும் அவரோடு நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்குப் போதும்!”
“நீ எங்கே அவரோடு வாழ்ந்தாய்?! உனக்கே இது முட்டாள்தனமாக இல்லையா பரிவாதனி?” மகிழினியின் குரலில் கோபம் தொனித்தது.
“மகிழினி… இப்போது இந்த நிமிடம் பல்லவ இளவலை நான் நாடினால் நிச்சயமாக அவர் மகாராஜாவை எதிர்த்து என்னை மணந்து கொள்வார்.”
“கண்டிப்பாக! அதில் என்ன சந்தேகம் உனக்கு?”
“அதனால் யாரிற்கு என்ன லாபம் மகிழினி?”
“எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை, நீ நன்றாக இருக்க வேண்டும், அது மட்டுந்தான் என் கவலை.”
“அப்படி நீயும் நானும் நினைக்கலாம், நாளை நாட்டை ஆளப்போகும் இளவரசர் நினைக்கலாமா?”
“…………..”
“அவர் மன்னர் குலத்தில் பிறந்தவர் மகிழினி… மக்கள் நலன் ஒன்று மட்டும்தான் அவரிற்கு முக்கியமாக இருக்க வேண்டும்!”
“அப்போது எதற்கு இந்த வீணாய்ப்போன காதல்? உன் வாழ்க்கையைப் பாழாக்கி கொள்ளவா?”
“அது அப்படியில்லை மகிழினி… நான் யாரென்று அறியாத நாட்களில் என்னை இளவரசர் காதலித்ததில் எந்த பழுதும் இருக்கவில்லை.”
“இப்போது மட்டும் என்ன பழுது வந்துவிட்டது?”
“இப்போது அவர் என்னை மணந்து கொண்டால் இரண்டு பெரும் ராஜ்ஜியங்களைப் பகைத்துக்கொள்ள வேண்டும், அதற்கு மகாராஜா ஒப்பமாட்டார்.”
“இது மன்னர் குலத்திற்குப் புதிதா என்ன? போர் மூண்டால் படைத்திரட்டி போர் புரிவதுதானே?”
“போர் புரிவது மன்னர் வழக்கம்தான்… இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் அதற்கு வலுவான ஒரு காரணம் வேண்டாமா? ராஜ்ஜியத்திற்கு எதிராக வைரிகள் இருக்கிறார்கள் போரிடுகிறோம் என்றால் கேட்க நன்றாக இருக்கும், என் பட்டத்து ராணிக்கு அவள் ஒன்றுவிட்ட சகோதரர்களே வைரியாக இருக்கிறார்கள், அதனால் போர் மூண்டுள்ளது என்று சொன்னால் உலகம் பல்லவ சாம்ராஜ்யத்தைப் பார்த்து சிரிக்காதா மகிழினி?”
“…………..”
“நான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை மகிழினி… இரண்டு நாட்கள் நிதானமாக சிந்தித்தேன், என்னால் அவர் வாழ்வு சிறப்புற்றதாகத்தான் இருக்க வேண்டும், அதில்தான் எனக்கு மகிழ்ச்சி!”
“உன்னைப் பிரிந்து இளவரசர் மகிழ்ச்சியாக இருந்து விடுவாரா?”
“எனக்கும் அந்த கஷ்டம் உண்டுதான் மகிழினி, இல்லையென்று நீ நினைக்கிறாயா?” சொல்லிவிட்டு அழகாக புன்னகைத்தாள் பரிவாதனி. மகிழினியின் உள்ளத்தில் தன் தோழியைப் பார்த்த போது வேதனை நிரம்பியது.
“அரச குலத்தினரிற்கு இதுவெல்லாம் சகஜம் மகிழினி, ராஜ்ஜியத்தின் நன்மைக்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த எத்தனையோ வீர புருஷர்களின் கதைகளை நாம் படித்ததில்லையா? பல்லவ இளவலும் அத்தகைய வீர புருஷர்தானே! அவரால் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வர முடியும்!”
அதற்கு மேல் தோழிகள் இருவரும் பேசிக்கொள்ள வண்டிக்காரன் இடம் கொடுக்கவில்லை. காலை ஆகாரத்திற்காக ஆற்றங்கரையோரம் நின்ற பயணம் மீண்டும் ஆரம்பித்தது கொற்கையை நோக்கி.
***
பயிற்சி கூடத்தில் வாட்பயிற்சி மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. கூரிய வாட்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று உரசும் சத்தம் நெடுநேரமாக கேட்ட வண்ணமே இருந்தது.
மகேந்திர வர்மன் தனது வாளை வெகு லாவகமாக சுழட்டி கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல அவன் வாள் வீச்சில் ஒரு மூர்க்கத்தனம் தெரிந்தது. எதிரே பொதிகை மாறன்!
இதுவரை பல்லவ இளவலின் நியாயமான போர் முறையை வெகு அனாயாசமாக சமாளித்த பொதிகை மாறன் இப்போது திணற ஆரம்பித்தான். ஏனென்றால்… மகேந்திரன் போர் தர்மங்களுக்கு அப்பாற்பட்ட விதத்தில் தன் வாளைச் சுழற்ற ஆரம்பித்திருந்தான்.
“இளவரசே!” பொதிகை மாறனின் குரல் தன் நண்பனை எச்சரித்தது. ஆனால் அதை மகேந்திரன் காதில் போட்டுக்கொள்ளவில்லை. எதிலிருந்தோ தப்பிப்பவன் போல எதிரிலிருப்பவனை மூர்க்கத்தனமாக தாக்கிக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் மகேந்திரனின் போர் முறை விதிகளை வெகுவாக அலட்சியம் செய்யவே பொதிகை மாறன் பொறுமை இழந்தான்.
“இளவரசே! போதும் நிறுத்துங்கள்!” உப சேனாதிபதி போட்ட சத்தத்தில் மகேந்திரன் சட்டென்று போரிடுவதை நிறுத்தினான். முகத்தில் வியர்வை ஆறாக பெருகிக்கொண்டிருந்தது. விம்மி தணிந்த அவன் மார்பு உள்ளுக்குள்ளே அது எத்தனை வேதனைகளைச் சுமந்து கொண்டிருக்கிறது என்று பொதிகை மாறனிற்கு சொல்லாமல் சொன்னது.
உப சேனாதிபதி கையைத் தட்டவும் வேகமாக ஒரு பணியாள் ஓடி வந்தான்.
“இளவரசருக்கு குடிக்க சில்லென்ற நீர் கொண்டு வா!” பொதிகை மாறன் ஆணையிட அடுத்த நிமிடமே தங்க குவளையில் நீர் கொண்டுவரப்பட்டது. இது எதையுமே உணராமல் மூச்சுவாங்க நின்றுகொண்டிருந்தான் மகேந்திர வர்மன்.
மனம் முழுவதும் வெறுமையாகி போயிருந்து. இனி தன் வாழ்க்கையில் என்ன மீதமிருக்கிறது என்று புரியாமல் பித்து பிடித்தவன் போல நின்றிருந்தான் பல்லவ குமாரன்.
“இளவரசே! இந்த நீரை முதலில் அருந்துங்கள்.”
“ம்..‌. என்ன சொன்னாய் மாறா?”
“மிகவும் களைப்பாக தெரிகிறீர்கள், இந்த நீரைக் கொஞ்சம் அருந்துங்கள்.”
“ஓ… சரி சரி…” பொதிகை மாறனின் கையிலிருந்த குவளையை வாங்கி நீரைப் பருகினான் மகேந்திரன். இளவரசனைப் பார்க்கவே மாறனிற்கு மிகவும் வேதனையாக இருந்தது!
பரிவாதனியின் ஓலைக் கிடத்த தினத்திலிருந்து இப்படித்தான் இருக்கிறார். அடிகளாரின் மூலம் மன்னரிற்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அவர் வதனமும் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் இறுக்கமாகவே இருந்தது.
காஞ்சி மாநகரைச் சல்லடைப் போட்டாகிவிட்டது. பரிவாதனி எங்கேயும் அகப்படவில்லை. அத்தோடு மன்னர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். உபாத்தியாயரும் கூட சென்றிருப்பதால் அவர் மனதில் சற்றே சாந்தி இருந்தது.
ஆனால் மகேந்திரன் தவித்தான்! காஞ்சியையும் தாண்டி அவன் தேடுதல் தொடர்ந்தது. ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை!
தன் ஊனொடு உயிராக கலந்தவளை நினைத்து மகேந்திரனின் உள்ளம் சொல்லொணா வேதனையில் தவித்தது! அவளாகத்தான் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். அவள் பிறப்பு ரகசியத்தில் இருக்கும் சிக்கலைத் தவிர்ப்பதற்காக என்னிடமிருந்து விலகி ஓடுகிறாள். ஆனால் அந்த ரகசியம்தான் என்ன?! பல்லவனுக்குத் தலைச் சுழன்றது.
“இளவரசே!” இதமாக அழைத்தான் பொதிகை மாறன்.
“மாறா! என் நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்கிறது!”
“சற்று அமைதியாக இருங்கள்! ஏதாவது தகவல் கிடைக்காமல் போகாது.”
“நம்பிக்கை இல்லை மாறா! ஒளிந்து கொள்ள நினைத்தவள் அதற்கு ஏற்றாற் போலத்தானே இடத்தையும் தேர்ந்தெடுத்திருப்பாள்!”
“ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் இளவரசே? இவர்களோடு போராடலாமே? உங்கள் துணை இருக்கும்போது அவர்களுக்கு என்ன கவலை?”
“இல்லை மாறா… போராட பயந்து அவள் போகவில்லை, எனக்கு நன்மை நினைந்துதான் போயிருக்க வேண்டும்.”
“கண்டுபிடித்துவிடலாம் இளவரசே!”
“மாறா… நீ என் நண்பன் இல்லையா?!” கண்களில் அத்தனை வேதனையைத் தாங்கி தன் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்ட பல்லவ குமாரனிற்கு சட்டென்று பதில் சொன்னான் மாறன்.
“அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இளவரசே?”
“மாறா… என் அந்தரங்கங்களை நான் உன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?” இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலையை ஆட்டினான் பொதிகை மாறன்.
“மாறா! அன்றைக்கு அமரா என்னோடு சண்டைப் போடும்போது அந்தப்புர தேரை நான் உபயோகித்ததாக என் மீது குற்றம் சொன்னதை நீ அறிவாய் அல்லவா?”
“ஆம் இளவரசே!”
“அன்றைக்கு நான் பரிவாதனியோடு காட்டிற்குப் போயிருந்தேன்.”
“ஓ…”
“ஆமாம்… அன்று முழுவதும் அங்குதான் நேரம் செலவழித்தோம், என் அணை மீறிய ஆசைகள் அனைத்திற்கும் இடம் கொடுத்த பெண்மையை இன்று தொலைத்துவிட்டு நிற்கிறேனே மாறா!” இளவரசன் புலம்ப ஆரம்பித்திருந்தான்!
“இந்த கைகளில் நெகிந்து கிடந்த அந்த மோகன அழகை இனி என்று காண்பேன் மாறா!” தன் இரு கைகளையும் நீட்டிக்கொண்டு அதைப் பார்த்தபடி பித்துப் பிடித்தவன் போல பேசிக்கொண்டிருந்தான் மகேந்திரன். பொதிகை மாறன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றிருந்தான்.
“மாறா! உனக்கொன்று தெரியுமா?” திடீரென்று மகேந்திரன் முகத்தில் புன்னகைத் தோன்றியது.
“பரிவாதனிக்கு குதிரை ஏறக்கூட தெரியவில்லை!” சொல்லிவிட்டு இப்போது கடகடவென்று சிரித்தான் இளவரசன்.
“அவளுக்காக இன்னொரு புரவியோடு போயிருந்தேன்… ஆனால் பாவம் சித்தரஞ்சன், எங்களிருவரையும் தாங்கிக்கொண்டான்.” சொல்லிவிட்டு மீண்டும் பல்லவ குமாரன் சிரிக்க உப சேனாதிபதியும் புன்னகைத்தான்.
“சித்தரஞ்சனை அன்று அவளுக்கு அறிமுகப்படுத்தினேன்.” இப்போதும் அன்றைய நிகழ்வுகளை அசைப்போடுபவன் போல சற்று நேரம் அமைதியாக இருந்தான் இளவரசன்.
“மாறா! இந்த பெண்களுக்கு ஆண்களுக்கு இல்லாத இத்தனை நாணம் எங்கிருந்து வருகிறது?” படக்கென்று இளவரசன் கேட்க மாறன் திணறிப்போனான். அவன் கண்களிற்குள் அந்த கணம் அமரா தேவி வந்து போனாள்!
“அவளுக்கு என்னிடம் நாணம் எதற்கு மாறா?”
“இளவரசே…” பேச்சு சற்றே எல்லை மீறிப்போகவும் மாறன் சட்டென்று பல்லவ இளவலை அழைத்தான்.
“அடடா! உனக்கு எதற்கு இத்தனைச் சங்கோஜம்? அவள்தான் பெண், அத்தனை நாணப்பட்டாள்… உனக்கென்ன ஆனது மாறா?” தன் கவலைகளையெல்லாம் மறந்து மீண்டும் வாய்விட்டு சிரித்தான் மகேந்திரன்.
“இளவரசே! வடக்கே போன வீரர்கள் ஏதாவது சேதி கொண்டு வந்தார்களா?”
“இல்லை மாறா… வடக்கே போனதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, ஆனால் தெற்கே போகும் வீதியில் போன ஒரு வண்டியில் உபாத்தியாயர் போல ஒருவரைப் பார்த்ததாக அரண்மனைக் காவலுக்கு வந்த ஒரு வீரன் சொல்லி இருக்கிறான்.”
“உபாத்தியாயர் என்று உறுதியாக சொல்லவில்லையா?”
“இல்லை… அதிகாலை என்பதால் சரியாக தெரியவில்லை என்று சொல்கிறான்.”
“ஓ… அப்படியானால் அதிகாலையிலேயே புறப்பட்டிருக்க வேண்டும்!”
“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்… யார் கண்ணிலும் படக்கூடாது என்று நினைத்திருக்கிறார்கள்.”
“ஆமாம்.”
“ஆனால் நான் விடமாட்டேன் மாறா! அவளைக் கண்டுபிடித்து என்னருகில் கொண்டுவந்தே தீருவேன்!” அது அத்தனைச் சுலபமில்லை என்று புரியாமல் சூளுரைத்தான் இளவரசன்.
***
நான்கு நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து பல்லவ எல்லையின் தென்கிழக்குப் பக்கமாக காவிரிக்கு அருகில் அமைந்திருந்த கொற்கை எனும் ஊரிற்கு வந்து சேர்ந்திருந்தாள் பரிவாதனி.
நான்கு நாட்கள் இடைவிடாது பயணப்பட்டதால் உபாத்தியாயர் வெகுவாக களைப்படைந்திருந்தார். உடம்பு மட்டுமல்லாது மனதும் வெகுவாக களைப்படைந்திருந்ததால் ஏதோ திடீரென பத்து வயது மூப்படைந்துவிட்டவர் போல சோர்ந்து போனார்.
காவிரியை அண்மித்திருந்ததால் பசுமைக்குக் குறைவில்லாமல் இருந்தது கொற்கை. சாதாரணமான வீடுதான் என்றாலும் விசாலமாக காற்றோட்டமாக இருந்தது.
வீட்டைப் பார்த்த போது மகிழினியின் கண்கள் கலங்கிவிட்டன. இருந்தாலும் பரிவாதனி எதையும் கவனிக்காதவள் போல உற்சாகமாகவே நடமாடினாள். ஒரு எல்லைக்கு மேல் மகிழினியால் வாளாதிருக்க முடியவில்லை.
“பரிவாதனி! எத்தனைப் பெரிய மாளிகையில் ராஜகுமாரி போல வாழ்ந்துவிட்டு இன்றைக்கு இப்படி வாழ வேண்டும் என்று உனக்கு என்ன தலையெழுத்தா?” பொங்கி வெடித்த தோழியைப் பார்த்து புன்னகைத்த பெண்ணின் குரலில் திருப்தியே மிதமிஞ்சி இருந்தது.
“மகிழினி…‌ எனக்கு சௌகர்யங்கள் குறைந்து போயிருக்கலாம், ஆனால் மனதில் நிம்மதி நிறைந்திருக்கிறது!”
“ஏது… இளவரசரைப் பிரிந்திருப்பதில் உனக்குப் பரம திருப்தி போல தெரிகிறது!”
“அப்படியில்லை மகிழினி… அவரைப் பிரிந்து வாழ்வது எனக்கு வேதனையான விஷயம்தான், இருந்தாலும் அவர் கடமைகளை அவர் சரிவரவே செய்யப்போகின்றார் என்பதில் என மனதிற்கு எவ்வளவு நிறைவு தெரியுமா?”
“ஏன்? உன்னை நன்றாக வைத்திருப்பது இளவரசர் கடமைகளில் ஒன்றில்லையா?” மகிழினியின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
“வீடா நாடா என்ற கேள்வி வரும்போது அவருக்கு நாடுதான் முக்கியம், நானும் அதைத்தான் ஆமோதிப்பேன்.”
“நல்ல கூத்துதான்!” தலையில் அடித்துக்கொண்டு கோபமாக நகரப்போன தோழியின் கையைப் பிடித்து நிறுத்தினாள் பரிவாதனி.
“நான் எத்தனைப் பாக்கியவதி என்று உனக்குத் தெரியுமா மகிழினி?!” இதைக் கேட்ட போது பரிவாதனியின் குரல் அத்தனை மதுரமாக இருந்தது. அந்த குரலிலேயே மகிழினி திகைத்துப்போய் நின்று விட்டாள்.
‘இப்போது இவள் இத்தனை இன்பப்பட அப்படி என்ன அதிசயம் இங்கே நிகழ்ந்துவிட்டது?!’
“பல்லவ குமாரனின் அன்பு எத்தகையது என்று உனக்குத் தெரியாது மகிழினி! அவர் அன்பு முழுவதற்கும் நான்தான் சொந்தக்காரி!”
“ஆமாம்! இதை நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்!”
“ஏன் இத்தனை ஆத்திரம் மகிழினி?”
“ஆத்திரப்படாமல் வேறு என்ன செய்வது? இதோ பார் பரிவாதனி! உன்னைப்போல நான் அரச குலத்தில் பிறக்கவில்லை, நான் சாதாரண பெண், எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்!”
“என் வாழ்க்கைக்கு இப்போது என்ன கேடு வந்துவிட்டது மகிழினி?”
“புரிந்துதான் பேசுகிறாயா பரிவாதனி? இளவரசர் உன்னை நினைந்து கொண்டே வாழ்க்கையைக் கடக்க முடியுமா?”
“முடியாதுதான்!”
“மகாராஜாவும் ராணியும் அவரை அப்படியே விட்டு விடுவார்களா?”
“மாட்டார்கள்!”
“கல்யாணம் பண்ணி வைப்பார்கள்! நீ இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு யுவதி வந்து உட்காருவாள்! உலகமே அவளை மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி என்று கொண்டாடும்!”
“ஆமாம்… கொண்டாடும்!” இப்போது மட்டும் பரிவாதனியின் கண்கள் லேசாக கலங்கியது. ஆனாலும் கம்பீரத்தோடு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“எத்தனைப் பெண்கள் அவரின் அந்தப்புரத்தை அலங்கரித்தாலும் அவர் மனதில் என்றைக்கும் கோலோச்ச போவது இந்த பரிவாதனிதான் மகிழினி!” தோழியின் பேச்சில் மகிழினி திடுக்கிட்டு போனாள்.
“இதுவெல்லாம் நடக்கின்ற காரியமா பரிவாதனி?! ஆண்களின் மனதை உனக்குத் தெரியாதா? மனைவி இறந்த மறுநாளே புதுமாப்பிள்ளை ஆகின்ற ஜென்மங்கள் அவர்கள்! இளவரசர் மட்டும் அதற்கு விதிவிலக்கா பெண்ணே?!”
“எப்போதும் விதி என்றொன்று இருந்தால் அதற்கு விலக்கும் இருக்கும் மகிழினி! இளவரசரைப் பற்றி நீ அறியமாட்டாய், நான் நன்கு அறிவேன்! இன்று நான் சொல்வதை என்றைக்காவது உனக்குக் காலம் உணர்த்தும்! அவர் அன்பை அள்ளி அள்ளி பருகிய நான் சொல்கிறேன் கேட்டுக்கொள் மகிழினி! விதி எனும் சூறாவளி எங்கள் வாழ்க்கையில் இப்போது பலமாக வீசுகிறது! ஆனால் என்றைக்கும் இது நீடிக்காது!”
“ஆமாம் ஆமாம்! நீ சொல்கின்ற சூறாவளி ஓய்ந்து இன்ப தென்றல் வீசுகின்ற ஓர் நாளும் வந்து சேரும்! அதற்குள் என் பிராணன் போய்விடாமல் நான் உயிரோடு இருக்க வேண்டுமப்பா ஆண்டவா!” கோப மிகுதியில் சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் மகிழினி.
ஆனால் பரிவாதனி அங்கிருந்த மஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள். தான் எடுத்திருக்கும் முடிவு தவறென்று அவளுக்கு லவலேசமும் தோன்றவில்லை. அப்படி என்றைக்கும் தோன்றப்போவதும் இல்லை. தன் மேல் கொண்ட அன்பினால் தன் தோழி கோபித்து கொள்கிறாள், அவ்வளவுதான்.
பிரிவு எனக்கு மட்டும்தானா? அவருக்கும்தானே?! நான் காஞ்சியில் இல்லையென்று தெரிந்தபோது அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும்! துடித்துப்போயிருக்க மாட்டாரா?!
பஞ்சணையில் கிடந்த அவள் மேனியைத் தென்றல் இதமாக வருடிக்கொடுத்தது! அந்த தென்றல் கொடுத்த சுகத்தில் பரிவாதனியின் கண்கள் லேசாக மூடிக்கொண்டன. மனக்கண் அந்த அடர்ந்த காட்டை நோக்கி போனது.
பிரிவொன்று நிச்சயம் என்பது அன்றைக்கே அவருக்குப் புரிந்துவிட்டதா?! அதனால்தான் தாகத்தோடிருந்தவன் ஒழுகும் பாத்திரத்தைக் கண்டதுபோல நடந்து கொண்டாரா?!
‘ஏன்? அன்றைக்கு தாகித்திருந்ததும் மோகித்திருந்ததும் அவர் மட்டுந்தானா பரிவாதனி?’ தன் மனச்சாட்சியின் குரலில் முகத்தை மறுபுறமாக திருப்பிக்கொண்டாள் பெண். முகம் சிவந்து போனது!
இல்லை… அவர் மேல் அளவற்ற ஆசை வைத்தது நானும்தான்! நான் மீட்டும் வீணைப் போல எனை அவர் மீட்ட வேண்டும் என்று வேட்கைக் கொண்டது நானும்தான்!
அவள் கண்களிலிருந்து நீர்த்துளியொன்று ஓடி அவள் கன்னத்தை நனைத்து. வேதனையில்தானே கண்ணீர் சுரக்கும்? ஆனால் இன்பத்தில் முதன்முதலாக இன்று கண்ணீர் பூத்தது பெண்ணிற்கு. அழுவதில் சுகம் கண்டாள் அந்த காரிகை!
அருவிக்கரையும் அடர்ந்த காடும் அணைத்த அவனும் அப்போது அவள் சிந்தையை முழுதாக வியாபித்துக்கொண்டார்கள். எத்தனை சுகம்! ஒரு பெண்மை முழுமையடைவது தன் தலைவனின் தழுவலில்தானா?! அந்த ஆண்மையின் அரவணைப்பில்தானா?!
சித்தரஞ்சனை சிந்தையிலேயே கொள்ளாமல் தன்னை மீண்டும் மீண்டும் நாடியவனை நினைந்து அவள் மனம் உருகி கசிந்தது. எத்தனைப் பெரிய வேதனையை அவருக்கு அவள் கொடுத்திருக்கிறாள் என்றும் அவளுக்குப் புரிந்தது.
ஆனாலும்… நாளை மகேந்திர பல்லவரின் பெயர் சரித்திரத்தில் எழுதப்படும் போது தன்னால் அவருக்கு எந்த அவப்பெயரும் விளையாது! அது அவளுக்குப் போதும்.
‘புரிந்து கொள்ளுங்கள் அன்பரே! என்னை என் மனதைச் சரியாக புரிந்து கொள்ளுங்கள் அன்பரே! உங்களோடு வாழ்வது மட்டும்தான் எனக்கான வாழ்க்கை! அதைத் தவிர்த்து எனக்கென்று தனிப்பட்டதாக இனி எதுவுமே இல்லை! நீங்கள் அதை எனக்கு முழுதாக கொடுக்க ஆசைப்படும் போதும் அதை அனுபவிக்க நான் புண்ணியம் செய்திருக்கவில்லையே!
எனக்குள் நீங்கள் நிறைந்திருப்பது போல உங்களுக்குள்ளும் நான் நீக்கமற நிறைந்திருப்பேன்! அதில் எனக்குச் சந்தேகமே இல்லை!
உங்கள் மனதில் எனக்கான இடம்… இந்த பரிவாதனிக்கான இடம்… உங்கள் கலைவாணிக்கான இடம்… அது என்றைக்கும் நிரந்தரம்! எத்தனைப் பெண்கள் உங்கள் வாழ்க்கையில் வந்தாலும் பரிவாதனியை மறக்க உங்களால் முடியுமா அன்பரே!’
பஞ்சணையில் படுத்த படி தன் மன்னவனோடு மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தாள் பெண். ஆனால் மனதின் குரலை, அது பேசும் மொழிகளை அதற்குரியவர் அறியமாட்டாரா என்ன?!
சட்டென்று திடுக்கிட்டு விழித்தான் மகேந்திர வர்மன்! நான்கைந்து நாட்களாக இடைவிடாது பரிவாதனியை தேடுவதால் அவன் உள்ளமும் உடலும் வெகுவாக களைப்படைத்திருந்தது. உணவையும் மறுத்துவிட்டு தனது அறைக்கு வந்து மஞ்சத்தில் வீழ்ந்தவன் தன்னையும் மறந்து தூங்கி போயிருந்தான்.
“பரிவாதனி…” எதுவும் புரியாமல் அவன் வாய் அவளைச் சத்தமாக அழைத்திருந்தது.
“அழைத்தீர்களா இளவரசே!” இவன் குரல் கேட்டு பணிப்பெண் ஒருத்தி ஓடி வந்தாள்.
“இல்லை… உன்னை அழைக்கவில்லை…” இளவரசன் தடுமாற குழப்பத்தோடு அறையை விட்டு வெளியேறினாள் பணிப்பெண்.
மகேந்திரன் மீண்டும் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டான். அவன் மனது அந்த நொடி அவன் மனங்கவர்ந்தவளை வெகு அருகில் உணர்ந்தது! கண்களை மூடிக்கொண்டான்.
“எங்கிருக்கிறாய் தேவி?!” அவன் உதடுகள் முணுமுணுத்தன.

error: Content is protected !!