pallavankavithai02

PKpic-ede676bc

pallavankavithai02

பல்லவன் கவிதை 02

விழிகளை அகற்ற சக்தியற்று அந்த பெண்ணையே பார்த்திருந்தான் மகேந்திர பல்லவன். இருபத்து மூன்று வயதுகளைக் கடந்திருந்த பல்லவ இளவல் கடல் தாண்டி பல தேசங்களுக்கும் போய் வந்திருக்கிறான்.

பலதரப்பட்ட அழகுகளையும் பார்த்திருக்கிறான்.

ஆனால் இவள்! மானிட பெண்தானா இல்லை தெய்வ அணங்கா? வீணையை ஏந்துவதற்காக அவள் அமர்ந்திருந்த அழகே மகேந்திர வர்மனின் சிந்தையைப் பெரிதும் குலைத்தது. இத்தனைக்கும் அவள் பெரிதாக எந்த அலங்காரமும் பண்ணி இருக்கவில்லை. 

பாண்டிய நாட்டு வெண் பட்டொன்று அணிந்திருந்தாள் அந்த பெண். நல்ல குடியில் பிறந்திருந்ததாலோ என்னவோ மிகவும் கவனமாக அவள் அழகுகளை எல்லாம் மறைக்கும் வண்ணம் கட்டப்பட்டிருந்த அந்த புடவை அவள் வலது தோளையும் மூடி இருந்தது.

மஞ்சள் குளித்த அவள் நெற்றியில் செஞ்சாந்து திலகம் இடப்பட்டிருந்தது. கழுத்தில் அணிந்திருந்த இரட்டை வட முத்துமாலையில் வைர பதக்கம் கோர்க்கப்பட்டிருந்தது. 

அந்த பதக்கம் தழுவி நின்ற இடத்திற்காக கண்களை ஓட்டிய இளவரசன் தன் பார்வையைச் சட்டென்று விலக்கி கொண்டான். இன்பமான எத்தனையோ ஊகங்களை அவன் மனதில் கிளப்பிய அவள் மோகன எழிலுருவத்தைப் பார்க்க முடியாமலும் பார்க்க துடித்தும் அவன் மனம் ஏங்கியது.

“பரிவாதனி… இது யாரென்று தெரிகிறதா?” அடிகளாரின் கேள்வியில் அந்த கண்கள் இரண்டும் ஒரு நொடி எதிரிலிருப்பவனைத் தொட்டு மீண்டது.

“அடிகளே! என்னை மன்னிக்க வேண்டும். இவர் யாரென்று எனக்குத் தெரியவில்லையே.” அவள் பதிலில் அடிகளார் புன்னகைத்தார். மகேந்திரனும் புன்னகைத்தான்.

“நியாயம்தான் அம்மா. உன் தந்தைதான் உன்னைக் கண்ணுக்குள் பொத்தி வைத்து வளர்த்தாரே. உனக்கெங்கே பல்லவ இளவரசனைத் தெரிந்திருக்க போகிறது. கேட்டுக்கொள் பரிவாதனி, உன் முன் நிற்பது பல்லவ குலத்தின் இணையில்லாத கலைஞன், கலைப்பிரியன் மகேந்திர வர்மன்.” அடிகளார் இளவரசனைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் போதே அந்த பெண்ணின் தலை இளவரசனை நோக்கி தாழ்ந்தது, மரியாதையின் நிமித்தம்.

“மகேந்திரா… மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் இன்னும் சில உபாத்தியாயர்களைப் பணிக்கு அமர்த்தும் படி நீ சொல்லி இருந்தாய் அல்லவா?”

“ஆமாம் அடிகளே.”

“அதன் பொருட்டுத்தான் பரிவாதனியை நாதக்கூடத்திற்கு வரவழைத்தேன்.”

“நல்லது அடிகளே. இவர்களை இதற்கு முன் நான் பார்த்ததில்லையே?”

“பார்த்திருக்க மாட்டாய். நம் பிரதான உபாத்தியாயர் சேந்தன் இருக்கிறார் அல்லவா?”

“ஆமாம்.”

“அவரின் செல்ல புத்திரி இவள். சேந்தன் தன் மகளைக் கண்ணுக்குள் வைத்து வளர்க்கிறார். நான் மிகவும் வேண்டி கேட்டுக் கொண்டதால்தான் இப்போது பரிவாதனி இங்கு வர சம்மதித்திருக்கிறார்.” பேச்சுத் தன்னைப் பற்றியே சுழலவும் பரிவாதினியின் தலை லேசாக குனிந்தது. அந்த கன்ன கதுப்புகளில் தெரிந்த நாணத்தின் சாயலைப் பல்லவ இளவல் வெகுவாக ரசித்தான்.

“அத்தோடு இன்னுமொரு விஷயம் மகேந்திரா.”

“சொல்லுங்கள் அடிகளே.” அடிகளாரின் முகத்தில் தொற்றிக்கொண்ட குறும்புப் புன்னகை மகேந்திரனின் ஆவலைத் தூண்டியது.

“இளவரசே… இதுநாள் வரை என் சீடப்பிள்ளைகளில் ஒருவன் வீணை வாசிப்பதில் அமோக தேர்ச்சி பெற்றவன் என்று நினைத்திருந்தேன்.” விஷயத்தை முடிக்காமல் அடிகள் சத்தமின்றி சிரித்தார். மகேந்திரன் முகத்திலும் இப்போது இளநகைப் பூத்தது.

“அந்த நினைப்பிற்கு இப்போது ஏதாவது பங்கம் நேர்ந்துவிட்டதா அடிகளே?” மனிதர் எங்கே வருகிறார் என்று புரிந்ததால் இளையவனும் அதே பாணியில் பேச்சைத் தொடர்ந்தான்.

“பங்கம் நேரவில்லை. இருந்தாலும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று புரிந்து கொண்டேன்.”

“முதுமொழிகள் எப்போதும் பொய்யாவதில்லை அடிகளே. நமக்குச் சமானமான திறமைகளைக் காணும் போது அதைப் போற்ற வேண்டும். அதீத திறமைகளைக் காணும் போது அங்கே நாம் மாணவனாக மாறிவிட வேண்டும். இப்போது உங்கள் சீடப்பிள்ளையின் நிலைமை என்ன?‌ மீண்டும் அவனை மாணவனாக உட்கார சொல்லலாமா?” மகேந்திர வர்மனின் பேச்சிலும் குறும்பு கொட்டிக் கிடந்தது. சுந்தரமூர்த்தி அடிகள் இப்போது வாய்விட்டே சிரித்து விட்டார்.

“மகேந்திரா… உன் அடக்கமே அடக்கம். நீ என்ன சொல்கிறாய் அம்மா? கைதேர்ந்த என் சீடப்பிள்ளையை உன் சீடனாக ஏற்றுக் கொள்கிறாயா?”

“அடிகளாரே…” வார்த்தைகள் சிக்கிக்கொண்டன பெண்ணிற்கு.

அடிகளார் இளவரசரைத்தான் இப்படியெல்லாம் சீடர் என்று பேசுகிறார் என்று அவளுக்குப் புரிந்தது. தன்னைப் புகழ்ந்து அவர்கள் பேசுவது ஒரு பக்கம், முகமறியாத புது ஆடவனின் திடீர் சந்திப்பு இன்னொரு புறமென பரிவாதனியின் உடம்பு லேசாக நடுங்கியது. அவள் கண்களில் துளிர்த்த நீரில் ஆண்கள் இருவரும் திகைத்து போனார்கள்.

“அம்மா பரிவாதனி… உன் இணையில்லாத திறமைகளைக் கண்டு என் உள்ளம் பூரிக்கிறது. உன் போல எனக்கொரு மகள் இல்லையே என்று என் மனம் ஏங்குகிறது. மகேந்திர வர்மனின் திறமைகளை நீ அறிய மாட்டாய். வீணை வாசிக்க அவன் ஆரம்பித்து விட்டால் இந்த உலகமே அதைக் கேட்க ஆயத்தமாகிவிடும். ஆனால் தன்னைப் போன்ற பிற கலைஞர்களைப் போற்றுவதிலும் அவன் இணையற்றவன். அதனால்தான் உன்னைப் பற்றி நான் அவனிடம் பிரஸ்தாபித்தேன். இதில் நீ சங்கடப்பட ஏதுமில்லை மகளே.” பரிவோடு அந்தப் பெண்ணின் தலையைக் கோதி கொடுத்தார் அடிகளார்.

“போ… போய் நீ உன் பாடங்களைக் கவனி.” அடிகளார் சொல்லவும் பரிவாதனி மெதுவாக நகர்ந்தாள். பல்லவ இளவலின் மனம் ஏனோ அந்த நொடி வெறுமையைத் தத்தெடுத்துக் கொண்டது.

நகர்ந்து சென்ற பெண் என்ன நினைத்தாளோ லேசாக தாமதித்தாள்.

இளவரசரிடம் விடைபெறாமல் போவது அவரை அவமரியாதை செய்வது போலாகும் என்பதால் அவள் நடைத் தளர்ந்தது. ஆனாலும் அந்த ஆடவனை அண்ணார்ந்து பார்க்க அவளுக்குச் சக்தி இருக்கவில்லை. அவள் தயக்கம் அடிகளுக்கும் புரிந்தது. இளவரசனுக்கும் புரிந்தது.

“அடிகளே… போய்வர சொல்லுங்கள். இது நாதக்கூடம். இங்கு பயிற்றுவிப்பவர்கள், பயில்பவர்கள் என்று இரண்டு வகைதான். இங்கு மண்டலாதிபதியும் ஒன்றுதான். மாணவனும் ஒன்றுதான்.” பல்லவ இளவலின் பேச்சில் பெண் ஒரு கணம் அவனைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தது. அது மாயையோ என்று நினைக்கும் வண்ணம் அடுத்த கணமே உள்ளே போய்விட்டாள் பரிவாதனி. கருணைத் ததும்பும் முகத்தோடு அந்த பெண்ணையே பார்த்திருந்தார் அடிகளார்.

“மகேந்திர வர்மா.”

“சொல்லுங்கள் அடிகளே.”

“பரிவாதனியைச் சிறு குழந்தை முதல் நான் அறிவேன்.”

“அப்படியா?”

“ஆமாம். சேந்தன் காஞ்சி மாநகருக்கு வந்த நாள் முதல் நான் அவரை நன்கு அறிவேன். பரிவாதனி சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால் தன் செல்ல மகள் மேல் அவருக்குப் பாசம் அதிகம். ஓர் ஒற்றைச் சொல் அந்த குழந்தையை அவர் கடிந்து பேசியிருக்கமாட்டார்.”

“புரிகிறது அடிகளே.”

“அந்த குழந்தையின் இணையற்ற திறமையைப் பார்த்து நான் மிகவும் வேண்டி கேட்டுக்கொண்டதால்தான் இங்கு கூட வர அனுமதித்தார். சிறு பெண், உலகமறியாதவள். உன்னிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள வேண்டும் என்பது அவள் நோக்கமல்ல.”

“அடிகளே! இது என்ன பேச்சு? என்னைப் பற்றி நீங்கள் அறிந்துகொண்டது இவ்வளவுதானா?”

“மகேந்திரா… உன்னை நானறிவேன். இருந்தாலும் அந்த சிறு பெண்ணைப் பற்றி யார் மனதிலும் சிறு சுணக்கம் வருவதைக் கூட என்னால் தாங்க முடியவில்லை. தவறாக எண்ணாதே.”

“புரிகிறது அடிகளே. நீங்கள் வீணாக மனதைக் குழப்பி கொள்ளாதீர்கள். நான் விடைபெற்று கொள்கிறேன்.” அடிகளாரை வணங்கிவிட்டு இளவரசன் தன் புரவியை நோக்கி நடந்துவிட்டான். ஆனால் மனம் மட்டும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.

***

அந்த ஒரு வாரம் பரிவாதனிக்கு மிகவும் சீக்கிரமாக கடந்துவிட்டது போல தோன்றியது. இந்த காஞ்சி மாநகருக்கு வந்த நாள் முதலாக அவள் தந்தை அவளை அநாவசியமாக வெளியே எங்கேயும் அனுப்புவதில்லை.

அப்படியே அவள் எங்கேனும் போனால் அவள் தந்தையும் கூட வருவார்.

கல்வி, கலை என அனைத்தும் கற்பிப்பதற்கு தேவையான உபாத்தியாயர்கள் அவர்கள் வீட்டிற்கே வந்தார்கள். 

அவர்கள் வீட்டை வீடு என்று சொல்வதை விட சிறு மாளிகை என்று சொன்னால் சரியாக இருக்கும். காஞ்சியில் சேந்தன் ஒரு தலைசிறந்த உபாத்தியாயர் என்பதால் அரசரே அவரைக் கௌரவிக்கும் பொருட்டு அந்த மாளிகையை வழங்கி இருந்தார். எந்த குறையும் இல்லாமல் பரிவாதனி ஒரு இளவரசியைப் போல அங்கு வளர்ந்து வரலானாள்.

“அம்மா பரிவாதனி.” தந்தையின் குரலில் ஸ்நானத்தை அப்போதுதான் முடித்துவிட்டு கூந்தலை உலர்த்தி கொண்டிருந்த பெண் திரும்பி பார்த்தது.

“அப்பா.”

“இங்கே வா அம்மா.” தந்தை அழைக்கவும் அவர் அறைக்குச் சென்றாள் பெண். 

“நல்லது, புத்தாடை அணிந்து கொண்டாயா?” மகளின் தோற்றத்தில் திருப்தியுற்றவர் போல தலையை ஆட்டினார் சேந்தன்.

“ஆமாம் அப்பா.”

“அடேயப்பா! என் குழந்தை எவ்வளவு வளர்ந்துவிட்டாள்! உனக்கு இன்றோடு பதினெட்டு பிராயங்கள் நிறைவு பெறுகிறது என்றால் என்னால் நம்ப கூட முடியவில்லையே பரிவாதனி!” பெண்ணின் முகத்தில் இப்போது புன்னகை அரும்பியது.

“அது என்ன அப்பா? அந்த பேழை பார்க்க அத்தனை அழகாக இருக்கிறதே?”

“அடடா! உன்னோடு பேசிக்கொண்டிருந்ததில் அதை மறந்துவிட்டேன் பார்த்தாயா? இந்தா அம்மா… இதைத் திறந்து பார்.” தந்தை நீட்டிய பேழையைக் கை நீட்டி வாங்கிய பரிவாதனி மலைத்து போனாள். அதன் அமைப்பும் அதன் உள்ளே இருந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூட நகைகளும் அவள் கண்ணைப் பறித்தன.

“அப்பா! ஏது இத்தனை விலையுயர்ந்த நகைகள் நமக்கு?”

“இவையெல்லாம் உன் தாயின் நகைகள் அம்மா. உனக்குப் பதினெட்டு வயது நிரம்பும் போது இதை உன்னிடம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு உத்தரவு.”

“ஓஹோ! என் அம்மா உங்களுக்கு ஆணைப் போட்டார்களா அப்பா?”

பெண் கலகலவென்று சிரிக்க சேந்தன் அவள் தலையை வருடி கொடுத்தார்.

“இன்று உன் பிறந்தநாள் இல்லையா? அதனால் உனக்குப் பிடித்ததை எல்லாம் அணிந்துகொள் அம்மா.”

“ஐயையோ! இத்தனையையும் அணிந்துகொள்ள முடியாது அப்பா. இந்த மஞ்சள் நிற மோதிரம் மிக அருமையாக இருக்கிறது. இதை மட்டும் அணிந்து கொள்கிறேன்.”

“உன் விருப்பம் அம்மா.” மகள் அறையை விட்டு வெளியேறியதும் ஒரு பெருமூச்சோடு அந்த பேழையை மூடி பத்திரப்படுத்தினார் சேந்தன். பெண் பிள்ளைகளின் தந்தைகளுக்கே உரித்தான கவலை அவரையும் பிடித்துக்கொண்டது.

‘இந்த பெண்ணுக்கு ஏற்ற மணாளனாக ஒருவனைப் பிடிக்க வேண்டுமே! ஒற்றையாக இருந்து கொண்டு இதையெல்லாம் நான் எப்படி செய்ய போகிறேன்?’ 

ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தன்னை வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டார் மனிதர்.

***

கண்விழித்து வெகுநேரம் ஆகியும் பஞ்சணையை விட்டு எழ மனமில்லாமல் புரண்டு கொண்டிருந்தான் மகேந்திர பல்லவன். அன்று பார்த்த அந்த பெண்ணின் அழகிய முகம் அவன் மனதை விட்டு நீங்குவேனா என்று அடம்பிடித்தது.

அவளை நினைத்த மாத்திரத்தில் அவன் உடம்பில் புது ரத்தம் பாய்ந்தது போல ஒரு புத்துணர்ச்சி. உலகமே அழகாக தெரிந்தது பல்லவ இளவலுக்கு. இத்தனை நாளும் அவன் உள்ளத்தை அழுத்தி கொண்டிருந்த இலைங்கைப் போர் மறந்து போனது. உருண்டோடிய தலைகளும் மரண ஓலமிட்ட மனிதர்களும் மறைந்து போனார்கள்.

இன்பம்… இன்பம்… சதா இன்பம்!

இத்தனை அழகை இதுவரை அவன் பார்த்ததே இல்லையே! சதா நிலம் பார்த்திருந்த அந்த காந்த விழிகள் ஓரிரு முறைத் தன்னைப் பார்த்ததற்கே அவன் உடலில் மின்சாரம் பாய்ந்ததே! அதே விழிகள் காதலைத் தேக்கி தன்னை நாணத்தோடு பார்த்தால் எப்படி இருக்கும்?!

இன்றோடு அவளைப் பார்த்து ஒரு வாரம் ஆகி இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவளை எப்படியாவது ஒரு முறைப் பார்த்துவிட வேண்டும் என்று மகேந்திரன் ஆன முயற்சிகள் அனைத்தும் செய்து பார்த்தான். ஆனால் ராஜ்ஜீய பணிகள் அவனை அசைய விடாமல் இழுத்துக்கொண்டன.

கண்களை மூடி அந்த முகத்தை மனக்கண்ணில் மீண்டுமொரு முறைக் கொண்டுவந்தான். ஏதோ ஒரு வித்தியாசம் அந்த முகத்தில் இப்போது அவனுக்குத் தெரிந்தது. அன்று அவளைப் பார்த்த அதிர்ச்சியில் அதை மகேந்திரன் ஆழ்ந்து கவனிக்கவில்லை. ஆனால் இப்போது சட்டென்று அது பிடிபட்டது.

அவள் மூக்கில் அணிந்திருந்த ஆபரணம்! தமிழ் பெண்கள் அணியும் சாதாரண மூக்குத்தி இல்லை அது. சிறிய வளையமொன்று அணிந்திருந்தாள். அந்த வளையத்தில் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய இழைப்போல ஒரு சங்கிலி அவள் காது வரைச் சென்று இணைக்கப்பட்டிருந்தது. 

சாதாரணமாக காஞ்சியில் இருக்கும் மகளிர் அணியும் ஆபரணங்களை அவன் நன்கு அறிவான். ஆனால் இது வித்தியாசமாக இருக்கிறதே?

அடிகளார் வேறு அன்று பேசும் போது ‘அவர்கள் காஞ்சிக்கு வந்தது முதல் அவர்களை நான் அறிவேன்’ என்று சொன்னாரே. அப்படியென்றால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இத்தனை நாளும் இந்த பெண்ணை நான் காஞ்சியில் பார்த்ததே இல்லையே! 

ஆயிரம் கேள்விகள் வண்டென குடைய எழுந்து உட்கார்ந்தான் மகேந்திரன்.

“இளவரசே! இளவரசியார் பயிற்சி கூடத்தில் உங்களுக்காக காத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.” பணிப்பெண் ஒருத்தியின் குரலில் நிஜத்திற்கு வந்தான் மகேந்திரன்.

“இதோ வந்துவிட்டேன் என்று சொல்.” பதில் சொல்லிவிட்டு அரை நாழிகைக்கு உள்ளாக பயிற்சி கூடத்திற்கு வந்துவிட்டான் பல்லவன். அமரா தேவி ஏற்கனவே பயிற்சியை ஆரம்பித்துவிட்டிருந்தாள். மகேந்திரனும் அவனது வாளை எடுத்துக்கொண்டு இன்னுமொரு வீரனுடன் பயிற்சிக்கு ஆயத்தமானான். சற்று நேரம் அங்கு வாட்கள் மோதிக்கொள்ளும் சப்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. 

“அண்ணா!”

“சொல் அமரா.” ஓய்வுக்காக அமர்ந்திருந்த தங்கைக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான் மகேந்திரன்.

“இன்றைக்கு நம் வீரர்கள் இருவர் மகாராஜாவின் ஓலையோடு இலங்கைக்குப் பயணமாகிறார்கள்.”

“அப்படியா? ஓலை என்ன காரணத்திற்காக அனுப்பப்படுகிறது?”

“நான்தான் அனுப்ப சொன்னேன் அண்ணா.”

“ஏன்?”

“இலங்கையில் நாம் பார்த்த வில்லவர்கள் பற்றி தந்தையிடம் சொல்லி இருந்தேன். அவர்களில் சிலரை இங்கு வரவழைத்து அதே போன்ற பயிற்சிகளை நம் வீரர்களுக்கும் அளிக்க வேண்டும். பச்சிலைச் சாற்றில் அம்பைத் தோய்க்கும் முறையையும் கற்றுக்கொள்ள வேண்டும்.”

“ஓஹோ!”

“இலங்கை மன்னர் சம்மதிக்கும் பட்சத்தில் அந்த வித்தைகள் அனைத்தையும் நானும் கற்றுக்கொள்ள தந்தையிடம் விண்ணப்பித்தேன். அவரும் ஏற்றுக்கொண்டார்.”

“நல்லது.”

“ஏன்? அவற்றையெல்லாம் நீயும் கற்றுக்கொள்ள போவதில்லையா?”

“மனிதர்களை அழிக்க வகைவகையாக கற்றுக்கொள்கிறீர்கள். நடக்கட்டும்… நான் ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்கிறேன். நீ ஒருத்தி அழிக்க கற்றுக்கொண்டால் போதாதா? நானும் துணைக்கு வரவேண்டுமா?”

“ஹா… ஹா… அண்ணா அண்ணா. வர வர நீ மிக நகைச்சுவையாக பேச ஆரம்பித்துவிட்டாய். ஆனால் உன்னை நான் விடப்போவதில்லை. என்னோடு சேர்ந்து நீயும் இவற்றை எல்லாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”

“வேறு வழி.” அங்கலாய்த்த மகேந்திரன் எழுந்து விட்டான்.

“அமரா! இன்றைக்கு எனக்கு வேறு முக்கியமான அலுவல்கள் இருக்கின்றன. நான் பயிற்சியை இத்தோடு முடித்து கொள்கிறேன்.”

“சரி அண்ணா.”

அதற்கு மேலும் அங்கு தாமதிக்காமல் மகேந்திரன் தன் மாளிகைக்கு

வந்துவிட்டான். பணிப்பெண்கள் இதமான வெந்நீரில் பன்னீரைக் கலந்து வைத்திருக்க அதில் வியர்வைத் தீரும் மட்டும் சுகமாக ஒரு குளியல் போட்டான்.

புத்தம் புது ஆடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டு பல்லவ குலத்திற்கே சொந்தமான நவரத்தின மாலை ஒன்றையும் போட்டு கொண்டான். எப்போதும் இது போலெல்லாம் நடந்து கொள்பவனல்ல மகேந்திரன். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக ஆகிப்போயிருந்தது.

மாளிகையை விட்டு வெளியே வந்தவன் சித்தரஞ்சன் மேல் தாவி ஏறி கொண்டான். புரவியின் கழுத்தை ஒரு முறை ஆசையாக தடவி கொடுத்தவன்,

“சித்தரஞ்சா! இன்றைக்காவது அவள் என்னோடு சில வார்த்தைகள் பேசுவாளா?” என்றான் ஏக்கத்தோடு. குதிரைக்கும் என்ன புரிந்ததோ தலையை இருமுறை பலமாக ஆட்டியது. அதன் பாஷைப் புரிந்தவன் போல மகேந்திரனும் பதில் சொன்னான்.

“அப்படியா சொல்கிறாய்? பார்க்கலாம் பார்க்கலாம். உன் வாக்குப் பலிக்கிறதா இல்லையா என்று.” 

அன்று பல்லவ இளவலின் மகிழ்ச்சி அளவற்றதாக இருந்தது. மனது முழுக்க அந்த பெண்ணே விஸ்வரூபம் எடுத்து நிற்க ஆவலோடு நாதக்கூடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். குதிரையை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் மகேந்திரன்.

“வா மகேந்திரா!” அடிகளாரின் குரலில் ஆவலோடு திரும்பியவன் அவருக்கு வணக்கம் வைத்தான். 

“பாடங்கள் ஆரம்பித்து விட்டதா அடிகளே?”

“ஆமாம் மகேந்திரா. நீ இன்றைக்கு ஏதேனும் பாடம் எடுக்கிறாயா? அவகாசம் இருக்கிறதா?”

“அவகாசம் இருக்கிறது ஆனாலும்… சொல்லி கொடுக்கும் மனநிலை இல்லை.”

“ஓஹோ! ஏதாவது மனக்கஷ்டமா மகேந்திரா?” கவலையோடு ஒலித்தது அடிகளின் குரல்.

“இல்லை அடிகளே. கஷ்டம் ஏதுமில்லை.”

“அப்படியென்றால் வேறு என்ன? இந்த அடிகளிடம் சொல்ல முடிந்தால் சொல்லு. முடிந்தவரை உதவி செய்கிறேன்.”

“மனம் இன்றைக்கு அதிகபட்ச அளவு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது அடிகளே.” மகேந்திரனின் பேச்சில் அடிகளார் பலமாக சிரித்தார்.

“அப்படியா சங்கதி? இது தெரியாமல் நான் என்னவோ ஏதோ என்று வருத்தப்பட்டேன். மனம் மகிழ்ச்சியாக இருந்தால் ஒரு கலைஞன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகேந்திரா?”

“என்ன செய்ய வேண்டும் ஸ்வாமி?”

“தன் மகிழ்ச்சியின் அளவைக் காட்ட வேண்டும்.”

“அது எப்படி?”

“அதோ என் அறையில் வீணை இருக்கிறது பார்.” அதற்கு மேல் அடிகள் ஏதும் சொல்லாமலேயே மீதியை மகேந்திரன் புரிந்து கொண்டான். அவனை அறியாமலேயே கால்கள் அவனை அங்கே இழுத்து சென்றது.

வாத்தியங்களின் அரசியை தன் மடியில் ஏந்தி கொண்டான் பல்லவ குமாரன். ஏதோ அவளையே தன் மடிமீது வைத்திருப்பது போல அவன் உடலும் உள்ளமும் கிளர்ந்தெழுந்தது. 

கேட்பதற்கே அரிதான ‘ஆஹிரி’ ராகத்தை அவன் தேர்ந்தெடுத்த போது அடிகள் கூட ஒரு கணம் தன்னை மறந்து தன் சிஷ்யனைப் பார்த்தார்.

ஆனால் அவன் இந்த உலகத்தில் இல்லாமல் வேறு ஒரு உலகத்தில் சஞ்சரிப்பதைப் பார்த்த போது ஒரு புன்சிரிப்போடு தன் வேலைகளைப் பார்க்க அடிகளார் நகர்ந்து விட்டார். 

மகேந்திரனின் கைகள் தொட்ட மாத்திரத்தில் அதுவரை அமைதியாக இருந்த அந்த மங்கை இப்போது ஆர்ப்பரிக்க ஆரம்பித்தாள். காதலன் தொட்ட மாத்திரத்தில் உலகத்து இன்பத்தையெல்லாம் அனுபவிக்கும் இளநங்கைப் போல அந்த வீணை மகளும் இன்ப நாதத்தை நாலாபுறமும் அள்ளி வீசினாள்.

ஒரு நிமிடம் அந்த இசை வெள்ளத்தில் மூழ்கிய நாதக்கூடம் தன்னை நிதானப்படுத்தி கொண்டு மீண்டும் இயல்பிற்கு வந்திருந்தது. ஆனால் மகேந்திர வர்மன் தன்னை மறந்திருந்தான்.

இது நேரம் வரை ராக ஆலாபனையில் மிதந்தவன் இப்போது பல்லவர் காலத்தில் பிரசித்தமாக இருந்த ‘கலியாண கதை’ எனும் நூலிலிருந்து ஒரு பாடலைப் பொறுக்கி எடுத்து வாசிக்க ஆரம்பித்திருந்தான். உள்ளம் மயங்கிபோய் கிடக்க சட்டென்று அவன் உயிர் ஒரு நொடி நின்றது.

‘யாரது?! அவள் வந்துவிட்டாளா?’ வீணையின் தந்தி ஒன்று சுண்டி விடப்பட அது அவளாகத்தான் இருக்கும் என்று அவன் உள்ளுணர்வு சொல்ல கண்களைத் திறந்து பார்த்தான் பல்லவன்.

அவன் உள்ளுணர்வு பொய்க்கவில்லை! அவனெதிரே வீணையை மடியில் ஏந்திக்கொண்டு அந்த கலைவாணியே அமர்ந்திருந்தாள். ஒரு கணம் மகேந்திரனின் மனம் நான் அந்த வீணையாக இருக்க கூடாதா என்று ஏங்கியது.

அவன் வாசிக்க ஆரம்பித்த பாடலை அவளும் மீட்ட ஆரம்பிக்க மகேந்திரன் இன்பத்தின் உச்சத்திற்குப் போனான். இந்த நாடகத்தை ஒரு புன்னகையோடு அடிகளாரும் பார்த்தபடி நின்று இருந்தார். 

பாடலின் ஒவ்வொரு வரியையும் அவன் மீட்ட அதை அச்சு பிசகாமல் அவள் வாசித்து காண்பித்தாள். ஏதோ அவன் அங்கு ஆசான் போலவும் அவள் மாணவி போலவும் பாடல் தொடர்ந்தது.

எதிரிலிருப்பவன் மன்னன் மகன் என்பதாலா இல்லை வீணையில் அவன் தன்னை விட கைதேர்ந்தவன் என்பதாலா எதுவோ தெரியவில்லை, பரிவாதனி பணிவையே காட்டினாள். அந்த அடக்கம் அப்போது பல்லவனிற்கும் இனித்தது. 

தான் கற்றுக்கொடுக்க பின்பற்றும் அவள் அழகு அவனை மயக்கியது. இசையை மட்டுமா அவளுக்குக் கற்றுக்கொடுக்க அவன் ஆசைப்படுகிறான்?!

“இதற்கு மேலும் இந்த இசை வெள்ளத்தில் மூழ்க எனக்கு சக்தி இல்லை மகேந்திரா.” அடிகளாரின் குரலில் கனவு நீங்கியவன் போல மீட்டுவதை நிறுத்தினான் பல்லவ குமாரன். அவனையே பின்பற்றினாள் பெண்.

“அபாரம் குழந்தைகளே! உங்களுக்கு ஆண்டவன் அருள் எப்போதும் இருக்கட்டும்.” இருவரையும் ஆசீர்வதித்த அடிகளார்,

“மகேந்திரா! உனக்கொரு விஷயம் தெரியுமா?” என்றார்.

“சொல்லுங்கள் அடிகளே.”

“இன்றைக்குக் குழந்தைக்குப் பிறந்த தினமாம். சேந்தன் இப்போதுதான் சொன்னார். நல்ல நாளும் அதுவுமாக பரிவாதனிக்கு உன் இசையாலேயே பரிசு கொடுத்திருக்கிறாய்.” சொல்லிவிட்டு அடிகளார் நகர அந்த மோகன எழிலுருவை ஊடுருவி பார்த்தான் மகேந்திரன். அந்த பார்வையின் வீச்சைத் தாங்க சக்தியற்று தலையைக் குனிந்தாள் பெண்.

“அந்த பரிசு மட்டும் போதுமா பரிவாதனி?” அவன் குரலில் தாபம் கொட்டிக்கிடந்தது. பதில் சொல்ல தெரியாமல் அமைதியாக நின்றிருந்தாள் பெண். அவளருகே வந்தான் மகேந்திரன். அவளையும் அறியாமலேயே இரண்டெட்டு பின்னே நகர்ந்தது பெண். இப்போது மகேந்திரன் முகத்தில் புன்னகை.

எதையும் யோசிக்காமல் தன் கழுத்தில் கிடந்த பல்லவ குலத்திற்கே சொந்தமான அந்த நவரத்தின மாலையைக் கழட்டி அவளுக்காக நீட்டினான் இளவரசன். பரிவாதனி திகைத்து போனாள்.

“வாங்கிக்கொள் பரிவாதனி.”

“இளவரசே…” அந்த ஒற்றை வார்த்தையில் மகேந்திர வர்மன் திக்குமுக்காடி போனான். இதுவரை அந்த வார்த்தையை ஆயிரம் பதினாயிரம் முறைப் பலர் சொல்லி கேட்டிருக்கிறான். ஆனால் இன்று இந்த மோகனாங்கியின் வாயிலிருந்து அந்த வார்த்தை உதிரும் போது இத்தனை இன்பமா?!

“வாங்கிக்கொள் பெண்ணே.” மகேந்திரனின் குரலில் இப்போது லேசான அழுத்தம் தொனித்தது. அவன் கண்களை அண்ணார்ந்து பார்த்தாள் பெண். அந்த ஒரு நொடியைத் தனதாக்கினான் மகேந்திரன். அந்த நான்கு விழிகளும் ஒன்றோடொன்று கலந்து நின்றன. இரு விழிகள் கவிதைப் பாடின. காதல் மொழி பேசின. ஆனால் மற்றையது இரண்டும் எல்லாம் புரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்தன.

“நீயாக வாங்கிக்கொள் இல்லாவிட்டால் நானாக கொடுக்கிறேன்.” மகேந்திரனின் வார்த்தைகளில் தெரிந்த உறுதியில் அவள் கைத் தானாக அவனை நோக்கி நீண்டது. 

“இது… இது…” 

“பல்லவ குலத்திற்கே உரித்தான சொத்து.”

“அதை என்னிடம்…”

“யாரிடம் எது இருக்க வேண்டும் என்று மகேந்திரனுக்கு நன்றாகவே தெரியும் பெண்ணே.” அவள் கண்கள் இப்போது இளவரசனை நன்றாக ஏறெடுத்து பார்த்தன. அந்த வேல் விழிகளின் பார்வையை மகேந்திரனும் சிறிது நேரம் தன் விழிகளால் தாங்கி நின்றான். இப்போது அவன் முகத்தில் ஒரு வசீகர புன்னகைத் தோன்றியது. அது கொடுத்த மயக்கத்தைத் தாங்க முடியாமல் பெண் பார்வையைத் தாழ்த்தி கொண்டது.

நீண்டிருந்த அந்த கைகளிலே நவரத்தின மாலையை வைத்தான் பல்லவ இளவல். 

சட்டென்று அவன் கைகள் அவளது விரல்களைப் பற்ற துடித்து போனது பெண். 

“இளவரசே! உங்கள் தகுதிக்கு இது சரியல்ல.” அவள் வார்த்தைகள் சற்று சூடாக வெளியேறின. ஆனால் மகேந்திரன் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவள் விரலிலிருந்த மோதிரத்தையே உற்று பார்த்தான்.

“பரிவாதனி… உனக்கு ஏது இந்த மோதிரம்? யார் கொடுத்தது?”

அப்போதுதான் அவன் செய்கைக்கு அர்த்தம் புரிந்த பெண் திகைப்போடு அவனைப் பார்த்தாள்.

“சொல், யார் உனக்கு இதைக் கொடுத்தது?”

“என் தந்தை.”

“யார்… உபாத்தியாயரா?”

“ஆமாம்.” 

“அவருக்கு எங்கிருந்து கிடைத்தது இது?”

“இது என் அன்னையுடையது என்று…”

“என்ன?” அவள் வார்த்தைகள் முழுமை பெறுவதற்கு முன்பே இடை மறித்தான் இளவல்.

“உன் அன்னையுடையதா?”

“ஆமாம்… அப்படித்தான் அப்பா சொன்னார். ஏன்?” அவள் குரலில் கலக்கம் இருந்தது. சற்று நேரம் மகேந்திரன் ஏதும் பேசவில்லை. அமைதியாக அந்த மோதிரத்தையே பார்த்திருந்தான். சட்டென்று ஏதோ ஓர் முடிவிற்கு வந்தவன் போல அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன.

“பரிவாதனி, இன்று இரவு முதலாம் ஜாமம் முடியும் வேளையில் உன்னை நான் உன் மாளிகைக்குப் பின்னால் இருக்கும் நந்தவன கோவிலில் சந்திக்கிறேன்.”

“ஐயையோ! இளவரசே…” அதற்கு மேல் அவளைப் பேச விடாமல் அவன் பார்வைத் தடுத்தது.

‘நான் சொன்னதைச் செய்’ என்ற கட்டளை அதில் தொனித்து நிற்க நிலம் பார்த்தாள் இளையவள். பல்லவ குமாரன் குழம்பிய சித்தத்தோடு போய்விட்டான்.

 

Leave a Reply

error: Content is protected !!